அத்தியாயம் – 5
நந்த மகாராஜனும் வசுதேவரும் சந்தித்தல்
பதங்கள் 10.5.1 — 10.5.2 :சுகதேவ கோஸ்வாமி கூறினார்: நந்த மகாராஜன் இயல்பாகவே மிகவும் தயாள குணமுடையவராக இருந்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது மகனாகத் தோன்றியபொழுது அவர் ஆனந்தத்தில் மூழ்கிப்போனார். எனவே, குளித்து தம்மைத் தூய்மை செய்துகொண்டு, நன்கு உடுத்திக் கொண்ட பின், வேத மந்திரங்களை ஓதத் தெரிந்த பிராமணர்களை அழைத்து ஒதச் செய்தார். பின், வேத விதிமுறைகளுக்கேற்ப, தமது புத்தினம் குழந்தைக்கு வேதமுறைப்படி பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தேவர்கள் மற்றும் பிதுருக்களின் வழிபாட்டுக்குரிய ஏற்பாடுகளையும் அவர் செய்தார்.

பதம் 10.5.3 : நந்த மகாராஜன் துணியாலும், ஆபரணங்களாலும் முழுமையாக அலங்கரிக்கப்பட்ட இருபது லட்சம் பசுக்களை பிராமணர்களுக்கு தானம் செய்தார். மேலும் இரத்தினங்களாலும், தங்க ஜரிகையால் அலங்கரிக்கப்பட்ட துணியாலும் மூடப்பட்டிருந்த ஏழு தானியக் குன்றுகளையும்கூட அவர்களுக்கு அவர் தானம் செய்தார்.


பதம் 10.5.4 : அரசே, காலத்தின் போக்கினால் நிலமும் மற்ற பௌதிக உடைமைகளும் தூய்மையடைகின்றன; குளிப்பதால் உடல் தூய்மையடைகிறது; மேலும் சுத்தம் செய்வதால் அசுத்தமான பொருட்கள் தூய்மையடைகின்றன; சம்ஸ்காரத்தினால் (தூய்மைச் சடங்கு) பிறப்பு தூய்மையடைகின்றது; தவத்தினால் புலன்கள் தூய்மையடைகின்றன; மேலும் பிராமண வழிபாட்டாலும், தானத்தாலும் பௌதிக உடைமைகள் தூய்மையடைகின்றன. போதுமென்ற மன நிலையால் மனது தூய்மையடைகிறது; மேலும் தன்னுணர்வினால், அல்லது கிருஷ்ண உணர்வினால் ஆத்மா தூய்மையடைகிறது.

பதம் 10.5.5 : பிராமணர்கள் ஓதிய மங்களகரமான வேத மந்திரங்கள், அவற்றின் அதிர்வுகளினால் சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தின. புராணங்களைப் போன்ற பழைய சரித்திரங்களைப் பாடுவதில் நிபுணர்கள், அரச குடும்பங்களின் சரித்திரங்களைப் பாடுவதில் நிபுணர்கள் மற்றும் பொதுப் பாடகர்கள் ஆகிய அனைவரும் பாடினர். பாடகர்கள் பாடும் பொழுது, பேரிகைகளும் துந்துபிகளும் பக்கவாத்தியமாக இசைத்தன.

பதம் 10.5.6 : நந்த மகாராஜனின் வசிப்பிடமான விரஜபுரம், பலவகையான தோரணங்களாலும், கொடிகளாலும் முழுமையாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வெவ்வேறு இடங்களில் பலவகையான மலர் மாலைகளாலும், துண்டுத் துணிகளாலும், மாவிலைகளாலும் வாயில்கள் செய்யப்பட்டிருந்தன. முற்றங்களும், சாலைகளுக்கருகிலுள்ள வாயில்களும், மற்றும் வீடுகளின் அறைகளுக்குள்ளும் உள்ள அனைத்தும் நன்கு பெருக்கி நீரினால் கழுவப்பட்டிருந்தன.

பதம் 10.5.7 : பசுக்களும், காளைகளும், கன்றுகளும், மஞ்சள் தைலம் மற்றும் பலவகையான தாதுப் பொருட்கள் ஆகியவற்றின் கலவையைக் கொண்டு நன்றாக பூசப்பட்டிருந்தன. அவற்றின் தலைகள் மயிலிறகுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும், அவைமாலைகள் அணிவிக்கப்பட்டு, துணிகளாலும், தங்க ஆபரணங்களாலும் மூடப்பட்டிருந்தன.

பதம் 10.5.8 : பரீட்சித்து மகாராஜனே, இடையர்கள் விலையுயர்ந்த ஆபரணங்களுடனும் மேல் சட்டை மற்றும் தலைப்பாகை போன்ற துணிமனிகளுடனும் செல்வச் சிறப்புடன் ஆடை அணிந்திருந்தனர், இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்கள் பல்வேறு பரிசுகளைக் கைகளில் ஏந்தியபடி, நந்த மகாராஜனின் வீட்டை அணுகினர்.

பதம் 10.5.9 : தாய் யசோதை ஓர் ஆண் குழந்தையை ஈன்றிருப்பதைக் கேள்விப்பட்ட இடையர்களின் மனைவிகளான கோபியர்கள் தகுதியான ஆடைகள், ஆபரணங்கள், கண்களுக்குரிய மை போன்றவைகளால் தங்களை மிகவும் நன்றாக அலங்கரித்துக் கொள்ளத் துவங்கினர்.

பதம் 10.5.10 : தாமரை போன்ற அவர்களுடைய முகங்கள் அசாதாரண அழகுடன் விளங்க, புதிதாக மலர்ந்த குங்குமப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த இடையர்களின் மனைவிகள், தங்கள் கைகளில் பரிசுப் பொருட்களுடன் தாய் யசோதையின் வீட்டிற்கு விரைந்தனர். இயற்கையான அழகின் காரணத்தால், அவர்கள் நிறைந்த இடைகளையும் மார்பகங்களையும் பெற்றிருந்தனர். விரைந்து சென்ற அவர்களது மார்பகங்கள் அசைந்தாடின.

பதம் 10.5.11 : கோபியர்களின் செவிகளில், இரத்தினங்கள் பதித்த தோடுகள் பிரகாசமாக ஜொலித்தன. கழுத்துகளில் தங்கப் பதக்கங்கள் தொங்கின. அவர்களது கைகள் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவர்களது ஆடைகள் பலவித வண்ணங்கள் உடையவையாய் இருந்தன. மேலும் அவர்களது கூந்தல்களிலிருந்து ஏராளமான மலர்கள் வீதியில் விழுந்தன. இவ்வாறாக கோபியர்கள் நந்த மகாராஜனின் வீட்டிற்குச் செல்லும்பொழுது, அசைந்தாடிய அவர்களது தோடுகளும். மார்பகங்களும், மாலைகளும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன.

பதம் 10.5.12 : இடையர்களின் மனைவிகளும், புதல்விகளும், “நீ விரஜ மன்னனாகி, அதன் வாசிகளை நீண்ட காலத்திற்குக் காத்தருள வேண்டும்” என்று கூறி, புத்திளம் குழந்தையான கிருஷ்ணரை ஆசீர்வதித்தனர். பிறகு பிறப்பற்ற பரமபுருஷரின் மீது, மஞ்சள் பொடி, தைலம் மற்றும் நீர் ஆகியவை அடங்கிய கலவையைத் தெளித்து பிரார்த்தனைகள் செய்தனர்.

பதம் 10.5.13 : பிரபஞ்சத் தோற்றத்தின் எஜமானரும், சர்வ வியாபகமுடையவரும், எல்லையற்றவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பொழுது நந்த மகாராஜனின் தோட்டத்திற்கு வந்திருப்பதால், இப்பெரும் விழாவைக் கொண்டாடும் வகையில் பலவிதமான வாத்தியக்கருவிகள் ஒலித்தன.

பதம் 10.5.14 : இடையர்கள் சந்தோஷத்துடன் தயிர், கட்டிப்பால், வெண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கொண்ட கலவையை ஒருவர் மீதொருவர் தெளித்தும், வெண்ணெயை ஒருவர் மீதொருவர் வீசியும், தடவியும் மகிழ்ந்தனர்.

பதங்கள் 10.5.15 — 10.5.16 : பரந்த மனப்பான்மையுள்ள நந்த மகாராஜன். பகவான் விஷ்ணுவைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன், இடையர்களுக்கு ஆடை ஆபரணங்களையும், பசுக்களையும் தானம் செய்தார். இவ்வாறாக தம் சொந்த மகனின் நிலையை அவர் எல்லா விஷயங்களிலும் முன்னேறச் செய்தார். ஸூதர்கள், மாகதர்கள், வந்திகள் முதலான எல்லா தொழிற் பிரிவினர்களுக்கு அவரவர் தகுதிமுறைகளுக்கேற்ப தான தருமங்களைச் செய்து, ஒவ்வொருவரது விருப்பங்களையும் அவர் திருப்திப்படுத்தினார்.

பதம் 10.5.17 : பெரும் பாக்கியசாலியும், பலதேவரின் தாயுமான ரோகிணி, நந்த மகாராஜனாலும், யசோதையாலும் கௌரவிக்கப்பட்டாள், இவ்வாறாக அவளும் தன்னை அட்டிகை, மாலை மற்றும் பிற ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். விழாவில் விருந்தினர்களாக வந்திருந்த பெண்களை வரவேற்பதற்காக அவள் சுறுசுறுப்பாக இங்குமங்கும் நடமாடினாள்.

பதம் 10.5.18 : பரீட்சித்து மகாராஜனே, நந்த மகாராஜனின் வீடு, பரமபுருஷருக்கும் அவரது உன்னத குணங்களுக்கும் நித்திய வசிப்பிடமாகும். எனவே இயல்பாகவே அது எல்லா செல்வச் சிறப்புகளையும் கொண்டிருந்தது, மேலும் அங்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தோன்றிய நாளிலிருந்து, அது அதிர்ஷ்ட தேவதையின் லீலைகளுக்குரிய இடமாயிற்று.

பதம் 10.5.19 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார். அதன்பிறகு குரு வம்சத்தின் சிறந்த காவலரான பரீட்சித்து மகாராஜனே! கோகுலத்தைப் பாதுகாக்கும் பணிக்கு உள்ளூர் இடையர்களை நியமித்த நந்த மகாராஜன், கம்ச மன்னனுக்கு வருடாந்தர வரியைச் செலுத்துவதற்காக மதுராபுரிக்குச் சென்றார்.

பதம் 10.5.20 : தமது அன்புச் சகோதரரும், நண்பருமான நந்த மகாராஜன் மதுராவிற்கு வந்திருப்பதையும். வரிகளைக் கட்டி முடிந்தது என்பதையும் கேள்விப்பட்ட வசுதேவர், நந்த மகாராஜனின் வசிப்பிடத்திற்குச் சென்றார்.

பதம் 10.5.21 : வசுதேவர் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட நந்த மகாராஜன், அன்பும், பாசமும் மேலிட்டவராய், தம் உயிரே திரும்பி வந்ததுபோல் மகிழ்த்தார். திடீரென்று வசுதேவர் அங்கு நிற்பதைக் கண்ட அவர் எழுந்து, இரு கரங்களாலும் அவரைத் தழுவிக் கொண்டார்.

பதம் 10.5.22 : பரீட்சித்து மகாராஜனே! நந்த மகாராஜனால் இவ்வாறு கௌரவித்து, வரவேற்கப்பட்ட வசுதேவர், அமைதியாக அமர்ந்து, தமது இரு மகன்களிடம் கொண்ட தீவிர அன்பின் காரணத்தால், அவர்களைப் பற்றி விசாரித்தார்.

பதம் 10.5.23 : அன்புச் சகோதரரான நந்த மகாராஜரே, வயதான பருவத்திலும் உங்களுக்கு மகப்பேறு இல்லை. இனிமேல் ஒரு மகனைப் பெறுவதற்கும் வாய்ப்பில்லை. எனவே. இப்பொழுது நீங்கள் ஒரு மகனைப் பெற்றிருப்பது, உங்களுக்குக் கிடைத்துள்ள பெரும் அதிர்ஷ்டத்தின் ஓர் அடையாளமாகும்.

பதம் 10.5.24 : உங்களை நான் காண்பதுவும் நல்லதிர்ஷ்டத்தினால்தான். இவ்வாய்ப்பை பெற்றுள்ள நாம் மீண்டும் பிறவி எடுத்திருப்பதாக உணர்கிறேன். இவ்வுலகில் நாம் வாழ்ந்தாலும், நெருங்கிய நண்பர்களையும், பிரியமுள்ள உறவினர்களையும் இந்த ஜட உலகில் சந்திப்பதென்பது மிகவும் கடினமாகும்.

பதம் 10.5.25 : பலவித பலகைகளும், குச்சிகளும் சேர்ந்திருக்க முடியாமல், ஒரு நதியினுடைய அலைகளின் வேகத்தால் அடித்துச் செல்லப்படுகின்றன. அதுபோலவே, நண்பர்களுடனும். உறவினர்களுடனும் நாம் நெருங்கிய உறவு கொண்டிருந்த போதிலும். கடந்த காலத்தில் நாம் செய்த பலவகையான செயல்களினாலும் காலத்தின் அலைகளினாலும் நம்மால் இணைந்திருக்க முடிவதில்லை.

பதம் 10.5.26 : அன்பிற்குரிய சிநேகிதரான நந்த மகாராஜரே, உங்கள் நண்பர்களுடன் நீங்கள் வாழும் இடத்திலுள்ள காடு, பசுக்களுக்கு அனுகூலமாக உள்ளதா? அங்கு நோயோ, அசௌகரியமோ இருக்காது என நம்புகிறேன். அந்த இடம் நீரும், புல்லும், மற்ற தாவரங்களும் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

பதம் 10.5.27 : உங்களாலும், உங்கள் மனைவி யசோதையாலும் பராமரிக்கப்படும் என் மகன் பலதேவன் உங்களிருவரையும் அவனது தாய், தந்தையராகக் கருதுகிறான். அவன் தன் உண்மையான தாயான ரோகிணியுடன் உங்கள் வீட்டில் மிகவும் அமைதியாக வாழ்கிறானா?

பதம் 10.5.28 : ஒருவரது நண்பர்களும், உறவினர்களும் நல்ல நிலையில் இருக்கும் பொழுது, அவரது இறையுணர்வு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலன்நுகர்வு ஆகியவை, வேத இலக்கியங்களில் விவரிக்கப்பட்டு உள்ளதுபோல், நன்மை பயக்கக்கூடியவை ஆகின்றன. அப்படியல்லாமல், ஒருவரது நண்பர்களும் உறவினர்களும் துன்பத்தில் இருப்பார்களானால், இம்மூன்றும் எந்த மகிழ்ச்சியையும் அளிக்காது.

பதம் 10.5.29 : நந்த மகாராஜன் கூறினார்: அந்தோ, தேவிக்குப் பிறந்த உம்முடைய பல குழந்தைகளை கம்ச மன்னன் கொன்றுவிட்டான். மேலும் அனைவருக்கும் இளையவளான உமது ஒரே மகளும் சுவர்க்க லோகங்களுக்கும் சென்று விட்டாள்.

பதம் 10.5.30 : ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாக விதியால் ஆளப்படுகிறான். அந்த விதிதான் ஒருவனது கர்ம பலன்களை நிர்ணயிக்கிறது. அதாவது, கண்ணுக்கு தெரியாத விதியின் காரணத்தால்தான் ஒருவனுக்கு ஒரு மகன் அல்லது மகள் இருக்கின்றாள், மேலும் மகன் அல்லது மகன் இல்லையென்றால், அதற்கும் கண்ணுக்குப் புலப்படாத விதியே காரணம், விதிதான் அனைவரையும் ஆளும் முடிவான சக்தியாகும். இதையறிந்தவன் ஒருபோதும் குழப்பமடைவதில்ல.

பதம் 10.5.31 : வசுதேவர் நந்த மகாராஜனிடம் கூறினார்: இப்பொழுது, அன்புச் சகோதரரே, கம்சனுக்கு வருடாந்தர வரிகளைச் செலுத்திவிட்டீர்கள், என்னையும் பார்த்துவிட்டீர்கள் என்பதால், இனிமேலும் பல நாட்களுக்கு இந்த இடத்தில் இருக்க வேண்டாம். கோகுலத்தில் ஏதேனும் தொல்லைகள் விளையக்கூடும் என்பதை நானறிவேன் என்பதால், உடனே திரும்பிச் செல்வது நல்லது.

பதம் 10.5.32 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: வசுதேவர் நந்த மகாராஜனுக்கு இவ்வாறு அறிவுரை கூறியதும். நந்த மகாராஜனும், அவரது சகாக்களான இடையர்களும் வசுதேவரிடம் அனுமதி பெற்றபின், தங்கள் எருதுகளை மாட்டு வண்டிகளுடன் பிணைத்து, கோகுலத்தை நோக்கிப் புறப்பட்டனர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare