அத்தியாயம் – 4
கம்ச மன்னனின் அக்கிரமங்கள்
பதம் 10.4.1
ஸ்ரீ-சுக உவாச:
பஹிர்-அந்த:-புர-த்வார: ஸர்வா: பூர்வவத் ஆவ்ருதா:
ததோ பால-த்வனிம் ஸ்ருத்வா க்ருஹ-பாலா: ஸமுத்திதா:

ஸ்ரீ-சுக:உவாச—ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்; பஹி:-அந்த:-புர-த்வார:—வீட்டின் உள்ளும், புறமும் இருந்த கதவுகள்; ஸர்வா:—அனைத்தும்; பூர்வ-வத்—முன்போல்; ஆவ்ருதா:—மூடிக்கொண்டன; தத:—அதன்பிறகு; பால-த்வனிம்—பிறந்த குழந்தையின் அழுகுரல்; ஸ்ருத்வா—கேட்டு; க்ருஹ-பாலா:—வீட்டுவாசிகள், குறிப்பாக காவலர்கள்; ஸமுத்திதா:—விழித்துக் கொண்டனர்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய பரீட்சித்து மகாராஜனே, வீட்டின் உள்ளும் புறமும் இருந்த கதவுகள் முன்போல் மூடிக்கொண்டன. அதன்பிறகு, வீட்டு வாசிகள், குறிப்பாக காவற்காரர்கள் பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு படுக்கையிலிருந்து விழித்தெழுந்தனர்.

பதம் 10.4.2
தே து தூர்ணம் உபவ்ரஜய தேவக்யா கர்ப-ஜன்ம தத்
ஆசக்யுர் போஜ-ராஜாய யத் உத்விக்ன: ப்ரதீக்ஷதே

தே—எல்லாக் காவலர்களும்; து—உண்மையில்; தூர்ணம்—மிகவிரைவாக; உப-வ்ரஜ்ய—(அரசன்) முன் சென்று; தேவக்யா:—தேவகியின்; கர்ப-ஜன்ம—கர்ப்பத்திலிருந்து பிறந்ததை; தத்—அது (குழந்தை); ஆசக்யு:—கூறினர்; போஜ-ராஜாய—போஜராஜனான கம்சனிடம்; யத்—யாரின்; உத்விக்ன—மிகவும் கவலையுடன்; ப்ரதிக்ஷதே—(குழந்தையின் பிறப்பிற்காக) காத்திருந்தான்.

அதன்பிறகு, எல்லா காவற்காரர்களும் போஜராஜனான கம்சனை விரைவில் அணுகி, தேவகிக்குக் குழந்தை பிறந்த செய்தியை அறிவித்தனர். இச்செய்திக்காக மிகவும் கவலையுடன் காத்திருந்த கம்சன், உடனே காரியத்தில் இறங்கினான்.

பதம் 10.4.3
ஸ தல்பாத் தூர்ணம் உத்தாய காலோ ‘யம் இதி விஹ்வல:
ஸூதீ-க்ருஹம் அகாத் தூர்ணம் ப்ரஸ்கலன் முக்த-மூர்தஜ:

ஸ:—அவன் (கம்சன்); தல்பாத்—படுக்கையிலிருந்து; தூர்ணம்—வேகமாக; உத்தாய—எழுந்து; கால: அயம்—என் அந்திம காலம் இதோ வந்துவிட்டது; இதி—இவ்விதமாக; விஹ்வல:—கவலையுடன்; ஸூதீ-க்ருஹம்—பிரசவ விடுதிக்கு; அகாத்—சென்றான்; தூர்ணம்—தாமதமின்றி; ப்ரஸ்கலன் முக்த-மூர்த-ஜ:—தலைவிரி கோலமாக.

“என்னைக் கொல்லப் பிறக்கவிருந்த பரம கால-தத்துவமான காலன் இதோ பிறந்துவிட்டது” என்றெண்ணியபடி, கம்சன் படுக்கையிலிருந்து உடனே எழுந்தான். இவ்வாறு கவலைக்குள்ளான கம்சன், தலைவிரி கோலமாக, குழந்தை பிறந்துள்ள இடத்தை நோக்கி உடனே சென்றான்.

பதம் 10.4.4
தம் ஆஹ ப்ராதரம் தேவி க்ருபணா கருணம் ஸதீ
ஸ்னுஷேயம் தவ கல்யாண ஸ்த்ரியம் மா ஹந்தும் அர்ஹஸி

தம்—கம்சனிடம்; ஆஹ—கூறினாள்; ப்ராதரம்—அவளது சகோதரன்; தேவி—தாய் தேவகி; க்ருபணா—உதவியற்றவளாக; கருணம்—பரிதாபகரமாக; ஸதீ—கற்புடையவளான; ஸ்னுஷா–இயம்தவ—இக்குழந்தை உங்கள் மருமகள் ஆகப் போகிறவள்; கல்யாண—மங்களகரமானவரே; ஸ்த்ரியம்—ஒரு பெண்ணை; மா—அல்ல; ஹந்தும்—கொல்ல; அர்ஹஸி—நீங்கள் தகுந்தவர்.

நிராதரவான தேவகி பரிதாபகரமாக கம்சனிடம் முறையிட்டாள்: அன்பிற்குரிய சகோதரரே, உங்களுக்கு எல்லா நன்மையும் உண்டாகட்டும். இப்பெண்னை உங்கள் மருமகளாக ஏற்றுக் கொண்டு, இவளை விட்டுவிடுங்கள். உண்மையில் ஒரு பெண்னைக் கொல்வது உங்களுக்கு அழகல்ல.

பதம் 10.4.5
பஹவோ ஹிம்ஸிதா ப்ராத: சிசவ: பாவகோபமா:
த்வயா தைவ-நிஸ்ருஷ்டேன புத்ரிகைகா ப்ரதீயதாம்

பஹவ:—பல; ஹிம்ஸிதா:—பொறாமையால் கொன்றீர்கள்; ப்ராத:—அன்புள்ள சகோதரரே; சிசவ:—சிசுக்களை; பாவக-உபமா:—ஒளியிலும், அழகிலும் தீக்கு நிகரானவர்கள்; த்வயா—உங்களால்; தைவ-நிஸ்ருஷ்டேன—விதிப்படி; புத்ரிகா—மகளை; ஏகா—ஒரு; ப்ரதீயதாம்—உங்களுடைய பரிசாக எனக்குக் கொடுங்கள்.

அன்புள்ள சகோதரரே, விதிவசத்தால், தீப்போல் பிரகாசமாகவும், அழகாகவும் விளங்கிய பல குழந்தைகளை நீங்கள் முன்பே கொன்று விட்டீர்கள், தயவுசெய்து இந்த மகளையும் கொன்றுவிடாமல், இவளை உங்களது பரிசாக எனக்குக் கொடுங்கள்.

பதம் 10.4.6
நன்வ் அஹம் தே ஹி அவரஜா தீனா ஹத-ஸுதா ப்ரபோ
தாதும் அர்ஹஸி மந்தாயா அங்கேமாம் சரமாம் ப்ரஜாம்

நனு—ஆயினும்; அஹம்—நான்; தே—உங்கள்; ஹி—உண்மையில்; அவரஜா—தங்கை; தீனா—இரங்கத்தக்கவள்; ஹத-ஸுதா—எல்லாக் குழந்தைகளையும் இழந்துள்ள; ப்ரபோ—பிரபுவே; தாதும் அர்ஹஸி—(ஏதேனும் பரிசை) நீங்கள் கொடுக்கத் தகுதியுடையவர்; மந்தாயா:—இரங்கத்தக்கவளான எனக்கு; அங்க—அன்புள்ள சகோதரரே; இமாம்—இந்த; சரமாம்—கடைசி; ப்ரஜாம்—குழந்தையை.

என் சகோதரரே, பிரபு, நான் என் குழந்தைகளையெல்லாம் இழந்து பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கிறேன். ஆனால் நான் உங்களுடைய தங்கை என்பதால், இந்த கடைசி குழந்தையை ஒரு பரிசாக எனக்கு நீங்கள் அளிப்பது உங்களுக்கு மேன்மையைத் தரும்.

பதம் 10.4.7
ஸ்ரீ-சுக உவாச
உபகுஹ்யாத்மஜாம் ஏவம் ருதத்யா தீன-தீனவத்
யாசிதஸ் தாம் வினிர்பர்தஸ்ய ஹஸ்தாத் ஆசிச்சிதே கல:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; உபகுஹ்ய—அணைத்துக்கொண்டு; ஆத்மஜாம்—தன் மகளை; ஏவம்—இவ்விதமாக; ருதத்யா—அழுது கொண்டிருந்த தேவகியால்; தீன-தீன-வத்—ஆதரவற்றவள் போல் மிகவும் இரங்கத்தக்க வகையில்; யாசித:—வேண்டிக் கொண்டதும்; தாம்—அவளை (தேவகியை); வினிர்பர்தஸ்ய—தண்டித்து; ஹஸ்தாத்—அவரது கரங்களிலிருந்து; ஆசிச்சிதே—குழந்தையை பலவந்தமாகப் பிரித்தான்; கல:—மிகக் கொடூரமான கம்சன்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: தன் மகளை அணைத்தபடி பரிதாபகரமாக அழுது கொண்டிருந்த தேவகி, குழந்தையைக் கொடுத்துவிடும்படி மன்றாடினாள். ஆனால் அவன் இரக்கமற்றவனாக இருந்ததால், அவளைத் தண்டித்தது மட்டுமல்லாமல், அவளது கைகளிலிருந்த குழந்தையைப் பலவந்தமாகப் பிடுங்கியும் கொண்டான்.

பதம் 10.4.8
தாம் க்ருஹீத்வா சரணயோர் ஜாத-மாத்ராம் ஸ்வஸு: ஸுதாம்
அபோதயச் சிலா-ப்ருஷ்டே ஸ்வார்தோன்மூலித-ஸெளஹ்ருத:

தாம்—குழந்தையை; க்ருஹீத்வா—பிடுங்கி; சரணயோ:—இரு கால்களைப் பற்றி; ஜாத-மாத்ராம்—புத்திளம் குழந்தையை; ஸ்வஸு—அவனது தங்கையின்; ஸுதாம்—மகளை; அபோதயத்—அடித்தான்; சிலா-ப்ருஷ்டே—ஒரு பாறையின் மேல்; ஸ்வ-அர்த்த-உன்மூலித—தீவிர சுயநலத்தின் காரணத்தால் விட்டொழித்தான்; ஸௌஹ்ருத:—நட்பை அல்லது குடும்ப உறவுகளை.

தீவிர சுயநலத்தின் காரணத்தால், தன் தங்கையுடனிருந்த எல்லா உறவுமுறைகளையும் துண்டித்துக் கொண்டவனும், முழங்காலிட்டு அமர்ந்திருந்தவனுமான கம்சன், புத்திளம் குழந்தையை அதன் கால்களால் பற்றித் தூக்கி ஒரு பாறைமேல் அடிக்க முயன்றான்.

பதம் 10.4.9
ஸா தத்-தஸ்தாத் ஸமுத்பத்ய ஸத்யோ தேவி அம்பரம் கதா
அத்ருஸ்யதானுஜா விஷ்ணோ: ஸாயுதாஷ்ட-மஹாபுஜா

ஸா—அப்பெண்குழந்தை; தத்-ஹஸ்தாத்—கம்சனின் கையிலிருந்து; ஸமுத்பத்ய—நழுவி மேலே சென்று; ஸத்ய:—உடனே; தேவீ—ஒரு தேவதையின் உருவில்; அம்பரம்—ஆகாயத்தில்; கதா—சென்று; அத்ருஸ்யத—காணப்பட்டாள்; அனுஜா—தங்கை; விஷ்ணோ:—பரமபுருஷரின்; ஸஆயுதா—ஆயுதங்களுடன்; அஷ்ட—எட்டு; மஹா-புஜா—பலம் பொருந்திய கைகளுடன்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தங்கையும், யோக-மாயா தேவியுமான அக்குழந்தை, கம்சனின் கைகளிலிருந்து நழுவிச் சென்று, ஆயுதங்களை ஏந்திய எட்டு கரங்களுடன், துர்கா தேவியாக ஆகாயத்தில் தோன்றினாள்.

பதங்கள் 10.4.10 – 10.4.11
திவ்ய-ஸ்ரக்-அம்பராலேப-ரத்னாபரண-பூஷிதா
தனு:-சூலேஷு-சர்மாஸி-சங்க-சக்ர-கதா-தரா

ஸித்த-சாரண-கந்தர்வைர்அப்ஸர:-கின்னரோரகை:
உபாஹ்ருதோரு-பலிபி: ஸ்தூயமானேதம் அப்ரவீத்

திவ்ய-ஸ்ரக்-அம்பர-ஆலேப—பிறகு அவள் சந்தனக் குழப்புடனும், மலர் மாலைகளுடனும், அழகிய ஆடையுடனும் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு தேவதையின் ரூபத்தை ஏற்றாள்; ரத்ன-ஆபரண-பூஷிதா—இரத்தின ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தாள்; தனு:-சூல-இஷு-சர்ம-அஸி—வில், சூலம், அம்புகள், கேடயம் மற்றும் வாள் ஆகியவற்றுடன்; சங்க-சக்ர-கதா-தரா—விஷ்ணுவின் ஆயுதங்களை (சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை) ஏந்தியபடி; ஸித்த-சாரண-கந்தர்வை:—சித்தர், சாரணர் மற்றும் கந்தர்வர்களால்; அப்ஸர:-கின்னர-உரகை:—மேலும் அப்ஸரஸ்கள், கின்னரர்கள் மற்றும் உரகர்களால்; உபாஹ்ருத-உரு-பலிபி:—எல்லா வகையான அன்பளிப்புகளையும் அவளுக்காகக் கொண்டு வந்த; ஸ்தூயமானா—புகழப்பட்ட; இதம்—இச்சொற்கள்; அப்ரவீத்—அவள் கூறினாள்.

துர்கா தேவி மலர் மாலைகளாலும், சந்தனக் குழம்பாலும், விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவள் தன் கரங்களில் வில், சூலம், அம்புகள், கேடயம், வாள், சங்கு, சக்கரம் மற்றும் கதை ஆகியவற்றை ஏந்தியிருந்தாள். மேலும் அப்ஸரஸ்கள், கின்னரர்கள், உரகர்கள், சித்தர்கள், சாரணர்கள் மற்றும் கந்தர்வர்கள் முதலானவர்களால் எல்லா வகையான காணிக்கைகளாலும் வழிபடப்பட்ட அவள் பின்வருமாறு பேசினாள்.

பதம் 10.4.12
கிம் மயா ஹதயா மந்த ஜாத: கலு தவாந்த-க்ருத்
யத்ர க்வ வா பூர்வ-சத்ருர் மா ஹிம்ஸி: க்ருபணான் வ்ருதா

கிம்—என்ன பயன்; மயா—என்னை; ஹதயா—கொல்வதில்; மந்த—மூடனே; ஜாத:—பிறந்து விட்டார்; கலு—உண்மையாகவே; தவ-அந்த-க்ருத்—உன்னைக் கொல்லப் போகிறவர்; யத்ர க்வ வா—வேறொரு இடத்தில்; பூர்வ-சத்ரு:—உன்னுடைய பூர்வ எதிரி; மா—வேண்டாம்; ஹிம்ஸி:—கொல்ல; க்ருபணான்—நிராதரவான மற்ற குழந்தைகளை; வ்ருதா—தேவையின்றி.

மூட்டாள் கம்சனே, என்னைக் கொல்வதால் என்ன பயன்? உன்னுடைய பூர்வ எதிரியும், நிச்சயமாக உன்னைக் கொல்லப்போகிறவருமான பரமபுருஷர், முன்பே வேறொரு இடத்தில் பிறந்துவிட்டார். எனவே தேவையின்றி மற்ற குழந்தைகளைக் கொல்ல வேண்டாம்.

பதம் 10.4.13
இதி ப்ரபாஷ்ய தம் தேவீ மாயா பகவதி புவி
பஹு-நாம-நிகேதேஷு பஹு-நாமா பபூவ ஹ

இதி—இவ்வாறு; ப்ரபாஷ்ய—கூறி; தம்—கம்சனிடம்; தேவீ—தூர்கா தேவி; மாயா—யோகமாயை; பகவதீ—பரமபுருஷரைப் போல் எல்லையற்ற சக்தியுடைய; புவி—பூமியில்; பஹு-நாம—வெவ்வேறு பெயர்களை; நிகேதேஷு—வெவ்வேறு இடங்களில்; பஹு-நாமா—வெவ்வேறு பெயர்களை; பபூவ—ஆனாள்; ஹ—உண்மையில்.

கம்சனிடம் இவ்வாறு பேசியபின், யோகமாயையான துர்காதேவி, வாரணாஸி போன்ற பல்வேறு இடங்களில் தோன்றி, அன்னபூரணி, துர்கை, காளி மற்றும் பத்ரை முதலான வெவ்வேறு நாமங்களால் போற்றப்பட்டாள்.

பதம் 10.4.14
தயாபிஹிதம் ஆகர்ண்ய கம்ஸ: பரம விஸ்மித:
தேவகீம் வஸுதேவம் ச விமுச்ய ப்ரஸ்ரிதோ ‘ப்ரவீத்

தயா—துர்கா தேவியால்: அபிஹிதம்—பேசப்பட்ட வார்த்தைகளை; ஆகர்ண்ய—கேட்ட; கம்ஸ:—கம்சன்; பரம-விஸ்மித:—மிகவும் ஆச்சரியமடைந்தான்; தேவகீம்—தேவகியை; வஸுதேவம் ச—மற்றும் வசுதேவரை; விமுச்ய—உடனே விடுவித்து; ப்ரஸ்ரித:—மிகவும் பணிவுடன்; அப்ரவீத்—பின்வருமாறு பேசினான்.

துர்கா தேவியின் வார்த்தைகளைக் கேட்டு கம்சன் பெரும் ஆச்சரியமடைந்தான். இவ்வாறாக தங்கை தேவகியையும், மைத்துனர் வசுதேவரையும் அணுகி, அவர்களைத் தளைகளிலிருந்து உடனே விடுவித்த கம்சன், பின்வருமாறு மிகவும் பணிவுடன் பேசினான்.

பதம் 10.4.15
அஹோ பகினி அஹோ பாம மயா வாம் பத பாப்மனா
புருஷாத இவாபத்யம் பஹவோ ஹிம்ஸிதா ஸுதா:

அஹோ—அந்தோ; பகினி—அன்புத் தங்கையே; அஹோ—அந்தோ; பாம—அன்பு மைத்துனரே; மயா—என்னால்; வாம்—உங்களின்; பத—உண்மையில்; பாப்மனா—பாவச் செயல்களின் காரணத்தால்; புருஷ-அத:—ஓர் இராட்சஸன்; இவ—போல்; அபத்யம்—குழந்தை; பஹவ:—பல; ஹிம்ஸிதா—கொல்லப்பட்டனர்; ஸுதா:—மகன்கள்.

ஐயோ தங்கையே! ஐயோ மைத்துனரே! உண்மையில் நான் பெரும் பாவியாவேன். தன்னுடைய சொந்தக் குழந்தையையே தின்னும் இராட்சஸனைப் போல், உங்களுக்குப் பிறந்த பல குழத்தைகளை நான் கொன்றுவிட்டேன்.

பதம் 10.4.16
ஸ த்வ் அஹம் த்யக்த-காருண்யஸ்
த்யக்த-ஜ்ஞாதி-ஸுஹ்ருத் கல:
கான் லோகான் வை கமிஷ்யாமி
ப்ரஹ்ம-ஹேவ ம்ருத: ஸ்வஸன்

ஸ:—அந்த நபர் (கம்சன்); து—உண்மையில்; அஹம்—நான்; த்யக்த-காருண்ய:—சிறிதும் இரக்கமின்றி; த்யக்த-ஜ்ஞாதி-ஸுஹ்ருத்—என் உறவினர்களும் நண்பர்களும் என்னால் உதாசீனப்படுத்தப்பட்டனர்; கல:—இரக்கமற்ற; கான் லோகான்—எந்த உலகங்களுக்கு; வை—உண்மையில்; கமிஷ்யாமி—செல்வேன்; ப்ரஹ்ம-ஹா இவ—பிராமணனைக் கொலை செய்தவன் போல்; ம்ருத: ஸ்வஸன்—மரணத்திற்குப் பிறகோ அல்லது சுவாசிக்கும் பொழுதோ.

இரக்கமற்றவனாகவும் கொடூரமானவனாகவும் இருந்த காரணத்தால், என்னுடைய எல்லா உறவினர்களையும் நண்பர்களையும் நான் கைவிட்டேன். எனவே, பிராமணனைக் கொன்ற ஒருவனைப்போல், மரணத்திற்குப் பின் அல்லது சுவாசிக்கும் பொழுதே எந்த லோகத்திற்கு நான் செல்லப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.

பதம் 10.4.17
தைவம் அபி அன்ருதம் வக்தி ந மர்த்யா ஏவ கேவலம்
யத்-விஸ்ரம்பாத் அஹம் பாப: ஸ்வஸுர் நிஹத்வாஞ் சிசூன்

தைவம்—தெய்வம்; அபி—கூட; அன்ருதம்—பொய்யுரைக்கிறது; வக்தி—கூறுகின்றனர்; ந—இல்லை; மர்த்யா:—மனிதர்கள்; ஏவ—நிச்சயமாக; கேவலம்—மட்டும்; யத்-விஸ்ரம்பாத்—அந்த அசரீரி வாக்கை நம்பியதால்; அஹம்—நான்; பாப:—பெரும் பாவியான; ஸ்வஸு:—என் தங்கையின்; நிஹத்வான்—கொன்றேன்; சிசூன்—பல குழந்தைகளை,

ஐயோ! மனிதர்கள் மட்டுமல்ல, தெய்வம்கூட சிலசமயங்களில் பொய் சொல்லுகிறதே! பெரும் பாவியான நான் தெய்வ வாக்கை நம்பி என் தங்கையின் பல குழந்தைகளைக் கொன்றுவிட்டேனே.

பதம் 10.4.18
மா சோசதம் மஹா-பாகாவ் ஆத்மஜான் ஸ்வ-க்ருதம் புஜ:
ஜாந்தவோ ந ஸதைகத்ர தைவாதீனாஸ் ததாஸதே

மா சோசதம்—(நடந்து முடிந்ததற்காக) தயவுசெய்து கவலைப்பட வேண்டாம்; மஹா-பாகௌ—ஆன்மீகத்தில் அறிவும், அதிர்ஷ்டமும் உடைய நீங்கள்; ஆத்மஜான்—உங்களுடைய மகன்களுக்காக; ஸ்வ-க்ருதம்—அவர்களின் சொந்த செயல்களின் காரணத்தால் மட்டுமே; புஜ:—துன்புறுபவர்கள்; ஜாந்தவ:—எல்லா ஜீவராசிகளும்; ந—இல்லை; ஸதா—எப்பொழுதும்; ஏகத்ர—ஒரே இடத்தில்; தைவ-அதீனா:—பகவானின் கட்டுப்பட்டில் உள்ளவர்கள்; ததா—ஆகையால்; ஆஸதே—வாழ.

சிறந்த ஆத்மாக்களே, உங்கள் குழந்தைகள் தங்களுடைய சொந்த துரதிர்ஷ்டத்தையே அனுபவித்திருக்கிறார்கள், எனவே தயவுகூர்ந்து அவர்களுக்காக வருத்தப்பட வேண்டாம். எல்லா ஜீவராசிகளும் பரமனின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்கள் எப்பொழுதுமே இணைந்து வாழ்வது சாத்தியமல்ல.

பதம் 10.4.19
புவி பௌமானி பூதானி யதா யாந்தி அபயாந்தி ச
நாயம் ஆத்மா ததைதேஷு விபர்யேதி யதைவ பூ:

புவி—உலகில்; பௌமானி—மண்ணிலிருந்து செய்யப்படும் பாணை போன்ற பௌதிக பாத்திரங்கள் அனைத்தும்; பூதானி—உற்பத்தி செய்யப்படுபவை; யதா—போல்; யாந்தி—(உருவில்) தோன்றுகின்றன; அபயாந்தி—(உடைந்து அல்லது மண்ணுடன் கலந்து} மறைந்து போகின்றன; ச—மேலும்; ந—இல்லை; அயம் ஆத்மா—ஆத்மா அல்லது ஆன்ம சொரூபம்; தத்தா—அதுபோல்; ஏதேஷு—(பௌதிக மூலப்பொருட்களாலான) இவற்றிற்கிடையில்; விபர்யேதி—மாற்றமடைகிறது அல்லது உடைந்து போகிறது; யதா—போல்; ஏவ—நிச்சயமாக; பூ:—பூமி.

இவ்வுலகில் பாத்திரங்களும், பொம்மைகளும், மற்ற பொருட்களும் தோன்றி, உடைந்து, பிறகு மண்ணுடன் கலந்து மறைந்து போவதை நாம் காண்கிறோம். அதுபோலவே, பந்தப்பட்ட எல்லா ஜீவராசிகளின் உடல்களும்கூட அழிக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் மண் எப்படி மாறாமலும், அழியாமலும் இருக்கிறதோ, அது போலவே ஜீவராசிகளும் மாறாமலும், அழியாமலும் இருக்கின்றன (ந ஹன்யதே ஹன்யமானே சரீரே).

பதம் 10.4.20
யதானேவம்-விதோ பேதோ யத ஆத்ம-விபர்யய:
தேஹ-யோக-வியோகௌ ச ஸம்ஸ்ருதிர் ந நிவர்ததே

யதா—போல்; அன்-ஏவம்-வித:—உடலில் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், ஆத்மாவின் மாறாத தன்மையைப் பற்றியும், ஆத்ம தத்துவத்தைப் பற்றியும்) அறியாத ஒருவனின்; பேத:—உடலுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள வேறுபாட்டை; யத:—எதன்காரணத்தால்; ஆத்ம-விபர்யய:—தான் இந்த உடல் என்ற முட்டாள்தனமான அறிவு; தேஹ-யோக-வியோகௌ ச—மேலும் இது வெவ்வேறு உடல்களுக்கிடையில் தொடர்புகளையும், பிரிவுகளையும் ஏற்படுத்துகிறது; ஸம்ஸ்ருதி:—பந்தப்பட்ட வாழ்வின் தொடர்ச்சி; ந—இல்லை; நிவர்ததே—மாறுகிறது.

உடல் மற்றும் ஆத்மாவின் உண்மையான ஆதார நிலையை அறியாதவன், தேகாபிமானத்தில் அதிக பற்றுக் கொள்கிறான். இதன் விளைவாக உடலிலும், அதன் உற்பத்திப் பொருட்களிலும் ஏற்படும் பற்றின் காரணத்தால், குடும்பம், சமூகம் மற்றும் தேசம் ஆகியவற்றுடனான சேர்க்கையாலும், பிரிவாலும் பாதிக்கப்படுவதை அவன் உணர்கிறான். இது தொடரும்வரை, ஒருவனது பௌதிக வாழ்வும் தொடர்கிறது (இல்லையெனில் அவன் முக்தியடைந்தவனாக இருப்பான்).

பதம் 10.4.21
தஸ்மாத் பத்ரே ஸ்வ-தனயான் மயா வ்யாபாதிதான் அபி
மானுசோச யத: ஸர்வ: ஸ்வ-க்ருதம் விந்ததே ‘வச:

தஸ்மாத்—எனவே; பத்ரே—எனதன்புத் தங்கையே (உனக்கு மங்களம்); ஸ்வ-தனயான்—உன் சொந்த மகன்களுக்கு; மயா—என்னால்; வ்யாபாதிதான்—துரதிர்ஷ்டவசமாக கொல்லப்பட்டனர்; அபி—என்றாலும்; மா அனுசோச—கவலைப்பட வேண்டாம்; யத:—ஏனெனில்; ஸர்வ:—அனைவரும்; ஸ்வ-க்ருதம்—ஒருவரது சொந்த கர்ம பலன்கள்; விந்ததே—துன்புறுகிறான் அல்லது இன்புறுகிறான்; அவச:—கடவுளின் கட்டுப்பாட்டின் கீழ்.

எனதன்புள்ள தங்கையே, உனக்கு மங்களம் உண்டாகட்டும். கடவுளின் கட்டுப்பாட்டின் கீழ் அனைவரும் தங்களது சொந்த செயல்களின் நல்ல, தீய பலன்கள் அனுபவிக்கின்றனர். எனவே, துரதிர்ஷ்டவசமாக உன்னுடைய மகன்கள் எங்களால் கொல்லப்பட்டனர் என்றாலும், தயவுசெய்து அவர்களுக்காக நீ வருந்த வேண்டாம்.

பதம் 10.4.22
யாத் ததோ ‘ஸ்மீ ஹந்தாஸ்மீ-
இதி ஆத்மானம் மன்யதே ‘ஸ்வ-த்ருக்
தாவத் தத்-அபிமானி அக்ஞோ
பாத்ய-பாதகதாம் இயாத்

யாவத்—அதுவரை; ஹத: அஸ்மி—(பிறரால்) நான் இப்பொழுது கொல்லப்படுகிறேன்; ஹந்தா அஸ்மி—(பிறரை) கொன்றவன் நானே; இதி—இவ்வாறு; ஆத்மானம்—நானே; மன்யதே—என்று கருதுகிறான்; அ-ஸ்வ-த்ருக்—(தேகாபிமானம் எனும் இருளின் காரணத்தால்) தன்னைக் கண்டுகொள்ளாத ஒருவன்; தாவத்—அதுவரை; தத்-அபிமானீ—தன்னை கொல்லப்படுபவனாகவோ அல்லது கொல்பவனாகவோ கருதுபவன்; அக்ஞ:—மூடனொருவன்; பாத்ய-பாதகதாம்—சில பௌதிகச் செயல்களை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள; இயாத்—தொடர்கிறான்.

தன்னுணர்வு பெறாத காரணத்தால் தேகாபிமானத்திலுள்ள ஒருவன், “நான் கொல்லப்படுகிறேன்” அல்லது “என் எதிரிகளை நான் கொன்றுவிட்டேன்” என்ற எண்ணத்தில், இருளில் அழுந்திக் கிடக்கிறான். மூடனொருவன், தன்னைக் கொல்பவனென்றோ, கொல்லப்படுபவனென்றோ கருதும்வரை, பௌதிகக் கட்டுப்பாடுகளுக்கு அவன் தொடர்ந்து பொறுப்பாளியாக இருக்கிறான். இதன் விளைவாக இன்பத்தையும் துன்பத்தையும் அவன் அனுபவிக்கிறான்.

பதம் 10.4.23
க்ஷமத்வம் மம தௌராத்ம்யம் ஸாதவோ தீன-வத்ஸலா:
இதி உக்த்வாஸ்ரு-முக: பாதெள ஸ்யால: ஸ்வஸ்ரோர் அதாக்ரஹீத்

க்ஷமத்வம்—தயவுசெய்து மன்னித்து விடுங்கள்; மம—என்; தௌராத்ம்யம்—அக்கிரமங்களை; ஸாதவ:—நீங்களிருவம் சிறந்த சாதுக்கள்; தீன-வத்ஸலா:—மேலும் குறுகிய மனமுடைய அற்பர்களிடம் மிகவும் அன்புடையவர்கள்; இதி உக்த்வா—இதைச் சொல்லி; அஸ்ரு-முக:—அவன் முகம் கண்ணீரால் நிறைந்தது; பாதௌ—பாதங்களை; ஸ்யால:—அவரது மைத்துனனான கம்சன்; ஸ்வஸ்ரோ:—அவனது தங்கை மற்றும் மைத்துனரின்; அத—இவ்வாறு; அக்ரஹீத்—பற்றினான்.

“எனதன்புள்ள தங்கையே, மைத்துனரே, நீங்களிருவரும் சிறந்த சாதுக்கள் என்பதால், இத்தகைய ஏழை மனம் படைத்த என்னிடம் தயவுசெய்து கருணை காட்டுங்கள், என்னுடைய அக்கிரமங்களை மன்னித்தருளுங்கள்” என்று மன்றாடிய கம்சன், வருத்தத்துடன் கண்களில் கண்ணீர் ததும்ப தேவகி, வசுதேவரின் பாதங்களில் விழுந்தான்.

பதம் 10.4.24
மோசயாம் ஆஸ நிகடாத் விஸ்ரப்த: கன்யகா-கிரா
தேவகீம் வஸுதேவம் ச தர்சயன் ஆத்ம-ஸெளஹ்ருதம்

மோசயாம் ஆஸ—கம்சன் அவர்களை விடுதலை செய்தான்; நிகடாத்—அவர்களது விலங்குகளிலிருந்து; விஸ்ரப்த:—முழு நம்பிக்கை கொண்டு; கன்யகா-கிரா—துர்கா தேவியின் வார்த்தைகளில்; தேவகீம்—தன் தங்கை தேவகியிடம்; வஸுதேவம் ச—மற்றும் தன் மைத்துனரான வசுதேவரிடம்; தர்சயன்—முழுமையாகக் காட்டி; ஆத்ம-ஸௌஹ்ருதம்—அவனது குடும்ப உறவை.

துர்காதேவியின் வார்த்தைகளில் முழு நம்பிக்கை கொண்ட கம்சன், தேவகியையும், வசுதேவரையும் உடனடியாக விலங்குகளிலிருந்து விடுவிப்பதன் மூலமாக, தன் குடும்ப பாசத்தை வெளிப்படுத்தினான்.

பதம் 10.4.25
ப்ராது: ஸமனுதப்தஸ்ய க்ஷாந்த-ரோஷா ச தேவகீ
வ்யஸ்ருஜத் வஸுதேவஸ் ச ப்ரஹஸ்ய தம் உவாச ஹ

ப்ராது:—அவளது சகோதரனான கம்சனிடம்; ஸமனுதப்தஸ்ய—அவன் வருத்தப்பட்டதால்; க்ஷாந்த-ரோஷா—கோபம் தணிந்தாள்; ச—கூட; தேவகீ—கிருஷ்ணரின் தாய் தேவகி; வ்யஸ்ருஜத்—விட்டாம்; வஸுதேவ: ச—வசுதேவரும்; ப்ரஹஸ்ய—புன்னகையுடன்; தம்—கம்சனுக்கு; உவாச—கூறினார்; ஹ—முன்னர்.

விதியின் செயல்களை விளக்கிய தன் சகோதரன் உண்மையாகவே வருத்தப்பட்டதைக் கண்ட தேவகி, கோபம் தணிந்தவளானாள். அவ்வாறே, வசுதேவரும் தம் கோபத்தை விட்டார். புன்னகையுடன் அவர் கம்சனிடம் பின்வருமாறு கூறினார்.

பதம் 10.4.26
ஏவம் ஏதன் மஹா-பாக யதா வதஸி தேஹினாம்
அஜ்ஞான-ப்ரபவாஹம்-தீ: ஸ்வ-பரேதி பிதா யத:

ஏவம்—ஆம், இது சரிதான்; ஏதத்—நீர் கூறியது; மஹா-பாக—சிறந்த பராக்கிரமசாலியே; யதா—போல்; வதஸி—நீர் பேசுகிறீர்; தேஹினாம்—ஜட உடல்களை ஏற்கும்) ஜீவராசிகளைப் பற்றி; அக்ஞான-ப்ரபவா—அறியாமையின் ஆதிக்கத்தால்; அஹம்-தீ:—இதுதான் என் விருப்பம்; (பொய்அகங்காரம்); ஸ்வ-பரா இதி—இது வேறொருவரின் விருப்பம்; பிதா—வேறுபாடு; யத:—இத்தகைய ஒரு தேகாபிமானத்தின் காரணத்தால்.

சிறந்த பராக்கிரமசாலியான கம்சா, அறியாமையின் ஆதிக்கத்தினால்தான் ஒருவன் ஜட உடலையும், தேகாபிமானமெனும் அகங்காரத்தையும் ஏற்றுக்கொள்கிறான். இந்த தத்துவத்தைப் பற்றி நீ கூறியது சரிதான், தன்னுணர்வு பெறாத தேகாபிமானத்திலுள்ள மனிதர்கள் “இது வேறொருவருடையது” என்றும் வேற்றுமை பாராட்டுகின்றனர்.

பதம் 10.4.27
சோக-ஹர்ஷ-பய-த்வேஷ-லோப-மோஹ-மதான்விதா:
மிதோ க்னந்தம் ந பஸ்யந்தி பாவைர் பாவம் ப்ருதக்-த்ருச:

சோக—வருத்தம்; ஹர்ஷ—மகிழ்ச்சி; பய—பயம்; த்வேஷ—பொறாமை; லோப—பேராசை; மோஹ—மோஹம்; மத—மதம்; அன்விதா:—கொண்டுள்ளவர்கள்; மித:—ஒருவரையொருவர்; க்னந்தம்—கொல்வதில் ஈடுபட்டுள்ளனர்; ந பஸ்யந்தி—காண்பதில்லை; பாவை:—இத்தகைய வேறுபடுத்தலின் காரணத்தால்; பாவம்—பரமபுருஷருடன் சம்பந்தப்பட்டுள்ள சூழ்நிலை; ப்ருதக்-த்ருச:—அனைத்தையும், பகவானின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிந்திருப்பதாகக் காண்பவர்கள்.

வேறுபடுத்திக் காணும் பார்வையை உடையவர்கள் வருத்தம், மகிழ்ச்சி, பயம், பொறாமை, பேராசை, மோகம் மற்றும் மதம் ஆகிய பௌதிகக் குணங்களில் ஊறிக் கிடக்கின்றனர். பழமையானவரும், பரம காரணமுமான பரமபுருஷரைப் பற்றிய அறிவு அவர்களுக்கில்லை என்பதால், உடனடியான காரணத்தினால் இயக்கப்படும் அவர்கள், அதை வெல்வதில் சுறுசுறுப்பாக உள்ளனர்.

பதம் 10.4.28
ஸ்ரீ-சுக உவாச
கம்ஸ ஏவம் ப்ரஸன்னாப்யாம் விசுத்தம் ப்ரதிபாஷித:
தேவகீ-வஸுதேவாப்யாம் அனுஜ்ஞாதோ ‘விசத் க்ருஹம்

ஸ்ரீ-சுக: உவாச:—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; கம்ஸ:—கம்ச மன்னன்; ஏவம்—இவ்வாறு; ப்ரஸன்னாப்யாம்—பெரிதும் சமாதானமடைந்த; விசுத்தம்—தூய்மையுடன்; ப்ரதிபாஷித:—விடையளிக்கப்பட்டு; தேவகீ-வஸுதேவாப்யாம்—தேவகி மற்றும் வசுதேவரால்; அனுக்ஞாத:—உத்தரவு பெற்று; அவிசத்—புகுந்தான்; க்ருஹம்—தன் சொந்த அரண்மனைக்குள்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: மிகவும் சமாதானமடைந்த தேவகி மற்றும் வசுதேவரால் மனப்பூர்வமாக இவ்வாறு கூறப்பட்டதும், அதனால் திருப்தியடைந்த கம்சன் அவர்களது அனுமதியுடன் தன் அரண்மனைக்குள் புகுந்தான்.

பதம் 10.4.29
தஸ்யாம் ராத்ரியாம் வ்யதீதாயாம் கம்ஸு ஆஹுய மந்த்ரிண:
தேப்ய ஆசஷ்ட தத் ஸர்வம் யத் உக்தம் யோக-நித்ரயா

தஸ்யாம்—அந்த; ராத்ரியாம்—இரவு; வ்யதீதாயாம்—கடந்ததும்; கம்ஸ:—கம்ச மன்னன்; ஆஹூய—அழைத்து; மந்த்ரிண:—எல்லா மந்திரிகளையும்; தேப்ய:—அவர்களுக்கு; ஆசஷ்ட—அறிவித்தான்; தத்—அந்த; ஸர்வம்—அனைத்தையும்; யத் உக்தம்—(கம்சனைக் கொல்லப் போகிறவர் வேறெங்கோ பிறந்துவிட்டார் என்பதைப் பற்றி) பேசப்பட்டதை; யோக-நித்ரயா—யோகமாயையான துர்கா தேவியால்.

அன்றிரவு கழிந்ததும், கம்சன் தன் மந்திரிகளை அழைத்து (தன்னைக் கொல்லப் போகிறவர் வேறொரு இடத்தில் பிறந்துவிட்டார் என்று) யோகமாயையால் கூறப்பட்ட அனைத்தையும் அவர்களுக்கு அறிவித்தான்.

பதம் 10.4.30
ஆகர்ணய பர்துர் கதிதம் தம் ஊகர் தேவ-சத்ரவ:
தேவான் ப்ரதி க்ருதாமர்ஷா தைதேயா நாதி-கோவிதா:

ஆகர்ணய—கேட்டபின்; பர்து:—தங்கள் தலைவனின்; கதிதம்—வார்த்தைகளை அல்லது கூற்றை; தம் ஊக:—அவனுக்கு பதிலுரைத்தனர்; தேவ-சத்ரவ:—தேவர்களின் பகைவர்களான அசுரர்கள் அனைவரும்; தேவான் ப்ரதி—தேவர்களிடம்; க்ருத-அமர்ஷா:—பொறாமை கொண்ட; தைதேயா:—அசுரர்கள்; ந—அல்லாத; அதி-கோவிதா:—காரியங்களை நிறைவேற்றுவதில் நிபுணர்கள்.

தேவர்களின் பகைவர்களும், தங்களது நடவடிக்கைகளில் அவ்வளவு திறமையற்றவர்களுமான பொறாமை கொண்ட அசுரர்கள், தங்களது தலைவனின் கூற்றைக் கேட்டபின், பின்வருமாறு கம்சனுக்கு அறிவுரை கூறினர்.

பதம் 10.4.31
ஏவம் சேத் தர்ஹி போஜேந்ர புர-க்ராம-வ்ரஜாதிஷு
அனிர்தசான் நிர்தசாம்ஸ் ச ஹனிஷ்யாமோ ‘த்ய வை சிசூன்

ஏவம்—இவ்வாறாக; சேத்—அது அப்படியானால்; தர்ஹி—பிறகு; போஜ-இந்த—போஜ ராஜனே; புர-க்ராம-வ்ரஜ-ஆதிஷு—எல்லா நகரங்களிலும், கிராமங்களிலும் மற்றும் ஆயர்பாடிகளிலும் உள்ள; அனிர்தசான்—பத்து நாட்களுக்கும் குறைவான வயதுடையவர்களை; நிர்தசான்: ச—மற்றும் வெறும் பத்து நாட்களுக்கு மேல் உள்ளவர்கள்; ஹனிஷ்யாம:—நாம் கொன்று விடுவோம்; அத்ய—இன்றுமுதல்; வை—உண்மையில்; சிசூன்-இத்தகைய எல்லாக் குழந்தைகளையும்.

அது அப்படியானால், போஜ ராஜனே, எல்லாக் கிராமங்களிலும், நகரங்களிலும், ஆயர்பாடிகளிலும் பிறந்துள்ள பத்து நாட்களுக்குட்பட்ட மற்றும் பத்து நாட்களுக்கு மேற்பட்ட எல்லாக் குழந்தைகளையும் இன்று முதல் நாம் கொன்றுவிட வேண்டும்.

பதம் 10.4.32
கிம் உத்யமை: கரிஷ்யந்தி தேவா: ஸமர-பீரவ:
நித்யம் உத்விக்ன-மனஸோ ஜ்யா-கோஷைர் தனுஷஸ் தவ

கிம்—என்ன; உத்யமை:—அவர்களுடைய முயற்சிகளால்; கரிஷ்யந்தி—செய்வார்கள்; தேவா:—தேவர்கள் எல்லோரும்; ஸமர-பீரவ:—போரிட அஞ்சும்; நித்யம்—எப்பொழுதும்; உத்விக்ன-மனஸ:—குழம்பிய மனங்களுடன்; ஜ்யா-கோஷை:—நாணோசையால்; தனுஷ:—வில்லினுடைய; தவ—உங்களது.

தேவர்கள் எப்பொழுதும் உமது வில்லின் நாணோசையைக் கேட்டு அச்சத்திற்கு உள்ளாகின்றனர். அவர்கள் போரிட அஞ்சி எப்பொழுதும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எனவே, உமக்குத் தீங்கிழைக்கும். முயற்சிகளைக் கொண்டு அவர்களால் என்னதான் செய்துவிட முடியும்?

பதம் 10.4.33
அஸ்யதஸ் தே சர-வ்ராதைர் ஹன்யமானா: ஸமன்தத:
ஜிஜீவிஷவ உத்ஸ்ருஜ்ய பலாயன-பரா யயு:

அஸ்யத:—உங்களுடைய அம்புகளால் துளைக்கப்பட்டு; தே—உங்களுடைய; சர-வ்ராதை:—அம்புக் கூட்டங்களினால்; ஹன்யமானா:—கொல்லப்பட்டு; ஸமன் தத:—இங்குமங்கும்; ஜிஜீவிஷவ:—வாழ விரும்பி; உத்ஸ்ருஜ்ய—போர்க்களத்தைக் கைவிட்டு; பலாயன-பரா:—தப்பியோட எண்ணி; யயு:—(போரைத் துறந்து) அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

எல்லாப் பக்கங்களிலும் உம்மால் செலுத்தப்பட்ட அம்புக் கூட்டங்களினால் துளைக்கப்பட்ட அவர்களில் சிலர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பி, போர்களத்திலிருந்து தப்பியோடினர்.

பதம் 10.4.34
கேசித் ப்ராஞ்ஜலயோ தீனா ஸ்யஸ்த-சாஸ்தரா திவெளகஸ:
முக்த-கச்ச-சிகா: கேசித் பீதா: ஸ்ம இதி வாதின:

கேசித்—அவர்களில் சிலர்; ப்ராஞ்ஜலய:—உங்களை மகிழ்விப்பதற்காகவே கரம் கூப்பினார்; தீனா:—பரிதாபகரமானவர்கள்; ன்யஸ்த-சாஸ்த்ரா:—எல்லா ஆயுதங்களையும் இழந்து; திவௌகஸ:—தேவர்கள்; முக்த-கச்ச-சிகா:—அவர்களது கேசம் அவிழ்ந்தும், ஆடைகள் களைந்தும்; கேசித்—அவர்களில் சிலர்; பீதா:—நாங்கள் பீதி அடைந்துள்ளோம்; ஸ்ம—அப்படி ஆயினர்; இதி வாதின:—அவர்கள் இவ்வாறு பேசினர்.

தோற்கடிக்கப்பட்டு, ஆயுதங்களையெல்லாம் இழந்த தேவர்களில் சிலர், போரைத் துறந்து கூப்பிய கரங்களுடன் உம்மைப் போற்றினர். மற்றும் சிலர் அவிந்த ஆடைகளுடனும், கேசத்துடனும். உமது முன்வந்து, “பிரபு, உம்மிடம் நாங்கள் மிகவும் அச்சம் கொண்டுள்ளோம்” என்று கூறினர்.

பதம் 10.4.35
ந த்வம் விஸ்மருத-சஸ்த்ராஸ்த்ரான் விரதான் பய-ஸம்வ்ருதான்
ஹம்ஸி-அன்யாஸக்த-விமுகான் பக்ன-சாபான் அயுத்யத:

ந—இல்லை; த்வம்—மாட்சிமையுடைய நீங்கள்; விஸ்மருத-சஸ்த்ர-அஸ்த்ரான்—ஆயுதப் பிரயோகத்தை மறந்தவர்கள்; விரதான்—இரதங்கள் இல்லாமல்; பய-ஸம்வ்ருதான்—பயத்தால் குழம்பிப் போய்; ஹம்ஸி—கொன்றீர்கள்; அன்ய—ஆஸக்த-விமுகான்—போரிடமல்லாது வேறொரு விஷயத்தில் பற்றுக் கொண்டவர்கள்; பக்ன-சாபான்—அவர்களது விற்கள் முறிந்து; அயுத்யத:—அதனால் போர் செய்யாதவர்கள்.

தேவர்கள் தங்கள் இரதங்களை இழக்கும்பொழுதும், ஆயுதப் பிரயோகத்தை மறக்கும்பொழுதும், அச்சத்திற்குள்ளாகும் பொழுதும் அல்லது போரில்லாமல் வேறொன்றில் பற்றுக்கொள்ளும் பொழுதும், அல்லது அவர்களது விற்கள் முறிந்து போரிடும் திறமையை இழக்கும் பொழுதும் மாட்சிமையுடைய நீர் அவர்களைக் கொன்றதில்லை.

பதம் 10.4.36
இம் க்ஷேம-சூரைர் விபுதைர் அஸம்யுக-விகத்தனை:
ரஹோ ஜுஷா கிம் ஹரிணா சம்புனா வா வனௌகஸா
கிம் இந்ரேணால்ப-வீர்யேண ப்ரஹ்மணா வா தபஸ்யதா

கிம்—அஞ்சுவதற்கு என்ன இருக்கிறது; க்ஷேம—போர்த் திறமையில் பஞ்சம் ஏற்பட்டுள்ள இடத்தில்; சூரை—தேவர்களால்; விபுதை:—இத்தகைய சக்திவாய்ந்த நபர்களால்; அஸம்யுக-விகத்தனை:—போருக்கு வெளியில் பேசப்படும் பயனற்ற தற்பெருமைப் பேச்சால்; ரஹு:-ஜுஷா—இதயத்திற்குள் தனிமையான ஓரிடத்தில் வாழ்பவர்; கிம்ஹரிணா—பகவான் விஷ்ணுவிற்கு அஞ்ச வேண்டியது என்ன இருக்கிறது; சம்புனா—சிவபெருமானிடமிருந்து (என்ன பயம் வேண்டிக்கிடக்கிறது); வா—அல்லது; வன-ஓகஸா—காட்டில் வாழும்; கிம் இந்ரேண—இந்திரனிடம் என்ன பயம்; அல்ப-வீர்யேண—(உங்களுடன் போரிடும் வீரியம் இல்லாததால்) அவர் சிறிதும் சக்திசாலியல்ல; ப்ரஹ்மணா—மேலும் பிரம்மனிடம் அஞ்சுவதற்கு என்ன இருக்கிறது; வா—அல்லது; தபஸ்யதா—எப்பொழுதும் தியானத்தில் ஈடுபட்டுள்ள.

தேவர்கள் போர்க்களத்திற்கு வெளியில் வீணான தற்பெருமை பேசுகின்றனர். போரில்லாத இடத்தில்தான் அவர்களால் தங்களுடைய வீரத்தைக் காட்ட முடியும். எனவே இத்தகைய தேவர்களிடம் நாம் அஞ்சுவதற்கு எதுவுமில்லை. பகவான் விஷ்ணுவைப் பொறுத்தவரை அவர் யோகிகளின் இதயங்களுக்குள் ஏகாந்த வாசம் செய்கிறார். சிவபெருமானைப் பொறுத்தவரை, அவர் காட்டிற்குச் சென்றுவிட்டார். மேலும் பிரம்மதேவரோ, எப்பொழுதும் தவங்களிலும் தியானத்திலும் ஈடுபட்டிருக்கிறார். இந்திரன் முதலான மற்ற தேவர்களோ சக்தியற்றவர்களாக உள்ளனர். எனவே நீர் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை.

பதம் 10.4.37
ததாபி தேவா: ஸாபத்ன்யான் நோபேக்ஷ்யா இதி மன்மஹே
ததஸ் தன்-மூல-கனனே நியுங்க்ஷ்வாஸ்மான் அனுவ்ரதான்

ததா அபி—என்றாலும்; தேவா:—தேவர்கள்; ஸாபத்ன்யாத்—பகையின் காரணத்தால்; ந உபேக்ஷ்யா:—அலட்சியம் செய்யக் கூடாது; இதிமன்மஹே—இதுதான் எங்களுடைய கருத்து; தத:—எனவே; தத்-மூல-கனனே—அவர்களை வேருடன் அழிக்க; நீயுங்க்ஷ்வ—ஈடுபடுத்துங்கள்; அஸ்மான்—எங்களை; அனுவ்ரதான்—உங்கள் சொற்படி நடக்கச் சித்தமாக உள்ள.

எனினும், தேவர்களின் பகையின் காரணத்தால், அவர்களை அலட்சியப்படுத்தக்கூடாது என்பது எங்களது அபிப்பிராயம். எனவே, உமது சொற்படி நடக்க நாங்கள் சித்தமாக இருப்பதால், அவர்களை வேருடன் அழிக்க, எங்களை அவர்களுடனான போரில் ஈடுபடுத்துங்கள்.

பதம் 10.4.38
யதாமயோ ‘ங்கே ஸமுபேக்ஷிதோ ந்ருபிர்
ந சக்யதே ரூட பதஸ் சிகித்ஸிதும்
யதேந்ரிய-க்ராம உபேக்ஷிதஸ் ததா
ரிபுர் மஹான் பத்த-பலோ ந சால்யதே

யதா—போல்: ஆமய:—ஒரு நோய்; அங்கே—உடலிலுள்ள; ஸமுபேக்ஷித்:—அலட்சியம் செய்ததால்; நீருபி:—மக்களால்; ந சக்யதே—முடியாது; ரூட-பத:—அது கடுமையாகிவிட்டால்; சிகித்ஸிதும்—சிகிச்சை செய்யப்பட வேண்டிய; யதா—மேலும் அதுபோல்; இந்ரிய—க்ராம—புலன்கள்; உபேக்ஷித:—துவக்கத்திலேயே கட்டுப்படுத்தாத; ததா—அது போலவே; ரிபு: மஹான்—பெரும் எதிரி; பத்த-பல:—அவன் பலசாலி ஆகிவிட்டால்; ந—இல்லை; சால்யதே—கட்டுப்படுத்த முடியும்.

துவக்கத்தில் அலட்சியப்படுத்தப்படும் ஒரு நோய் எப்படி கடுமையாகி, அதைக் குணப்படுத்துவது சாத்தியமற்றதாகிறதோ, அல்லது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாத புலன்களை எப்படி பிறகு அடக்க முடியாதோ, அதுபோலவே, துவக்கத்தில் அலட்சியம் செய்யப்படும் ஒரு பகைவன் பிறகு வெல்ல முடியாதவன் ஆகிவிடுவான்.

பதம் 10.4.39
மூலம் ஹி விஷ்ணுர் தேவானாம் யத்ர தர்ம: ஸனாதன:
தஸ்ய ச ப்ரஹ்மா-கோ-விப்ராஸ் தபோ யஜ்ஞா: ஸ-தக்ஷிணா:

மூலம்—ஆதாரம்; ஹி—உண்மையில்; விஷ்ணு:—பகவான் விஷ்ணுவாவார்; தேவானாம்—தேவர்களின்; யத்ர—எங்கு; தர்ம:—சமயக் கொள்கைகள்; ஸனாதன:—ஐதிகமான அல்லது நித்தியமான; தஸ்ய—இந்த (ஆதாரத்தின்); ச—கூட; ப்ரஹம—பிராமணப் பண்பாடு; கோ—பசு பராமரிப்பு; விப்ரா:—பிராமணர்கள்; தப:—தவம்; யக்ஞா:—யாகங்கள் செய்தல்; ஸ-தக்ஷிணா:—சரியான தட்சிணையுடன்.

எங்கெல்லாம் சமயக் கொள்கைகளும், வேதப் பண்பாடும், வேதங்களும், பசுப் பராமரிப்பும், பிராமணர்களும், தவங்களும் மற்றும் சரியான தட்சிணையுடன் கூடிய யாகங்களும் உள்ளனவோ, அங்கெல்லாம் வாழ்பவரும், வழிபடப்படுபவருமான விஷ்ணுவே தேவர்களுக்கெல்லாம் ஆதாரமாவார்.

பதம் 10.4.40
தஸ்மாத் ஸர்வாத்மனா ராஜன் ப்ராஹ்மணான் ப்ரஹ்ம-வாதின:
தபஸ்வினோ யக்ஞ-சீலான் காஸ் ச ஹன்மோ ஹவிர்-துகா:

தஸ்மாத்—எனவே; ஸர்வ-ஆத்மனா—எல்லா வகையிலும்; ராஜன்—அரசே; ப்ராஹ்மணான்—பிரமணர்கள்; ப்ரஹ்ம வாதின:—விஷ்ணுவை மையமாகக் கொண்டுள்ள பிராமண பண்பாட்டைப் பராமரிக்கும்; தபஸ்வின:—தபஸ்விகள்; யக்ஞ-சீலான்—யாகம் செய்வதில் ஈடுபட்டுள்ளவர்கள்; கா: ச—பசுக்களையும், அவற்றைப் பராமரிப்பவர்களையும்; ஹன்ம—நாங்கள் கொன்று விடுகிறோம்; ஹவி:-துகா:—எதிலிருந்து யாக நிவேதனத்திற்குரிய நெய் பெறப்படுகிறதோ, அந்த பாலை அவை அளிப்பதால்.

எனவே, எல்லா வகையிலும் உமது சொற்படி நடக்கும் நாங்கள், வேள்விகளில் ஈடுபட்டுள்ள வேத பிராமணர்களையும், எதிலிருந்து யாகப் பொருளான நெய் பெறப்படுகிறதோ, அந்த பாலைக் கொடுக்கும் பசுக்களையும் கொன்று விடுகிறோம்.

பதம் 10.4.41
விப்ரா காவஸ் ச வேதாஸ் ச தப: ஸத்யம் தம: சம:
ஸ்ரத்தா தயா திதிக்ஷா ச க்ரதவஸ் ச ஹரேஸ் தனு:

விப்ரா:—பிராமணர்கள்; காவ: ச—மற்றும் பசுக்கள்; வேதா: ச—மற்றும் வேத ஞானம்; தப:—தவம்; ஸத்யம்—உண்மை; தம:—புலனடக்கம்; சம:—மனவடக்கம்; ஸ்ரத்தா—நம்பிக்கை; தயா—கருணை; திதிக்ஷா—பொறுமை; ச—மேலும்; க்ரதவ: ச—மற்றும் யாகங்கள்; ஹரே: தனூ:—பகவான் விஷ்ணுவினுடைய உடலின் வெவ்வேறு அங்கங்களாகும்.

பிராமணர்கள், பசுக்கள், வேத அறிவு, தவம், உண்மை, மனம் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்துதல், நம்பிக்கை, கருணை, பொறுமை மற்றும் யாகங்கள் ஆகியவை பகவான் விஷ்ணுவின் உடலின் வெவ்வேறு அங்கங்களாகும்

பதம் 10.4.42
ஸ ஹி ஸர்வ-ஸுராத்யக்ஷோ ஹி அஸுர-த்விட் குஹா-சய:
தன்-மூலா தேவதா: ஸர்வா சேஸ்வரா: ஸ-சதுர்-முகா:
அயம் வை தத்-வதோபாயோ யத் ரிஷீணாம் விஹிம்ஸனம்

ஸ:—அவர் (பகவான் விஷ்ணு); ஹி—உண்மையில்; ஸர்வ-ஸுர-அத்யக்ஷ:—தேவர்களுக்கெல்லாம் தலைவர்; ஹி—உண்மையில்; அஸுர-த்விட்—அசுரர்களின் பகைவர்கள்; குஹா-சய:—அவர்தான் எல்லோருடைய இதயங்களிலும் உள்ள பரமாத்மாவாவார்; தத்-மூலா:—அவரது தாமரைப் பாதங்களில் புகலிடம் ஏற்று; தேவதா:—தேவர்கள் வாழ்கின்றனர்; ஸர்வா:—அவர்கள் அனைவரும்; ஸ-ஈஸ்வரா:—சிவபெருமான் உட்பட; ஸ-சது:-முகா:—மற்றும் நான்கு முகங்களுடைய பிரம்மதேவரும்; அயம்—இதுதான்; வை—உண்மையில்; தத்-வத-உபாய:—அவரைக் (விஷ்ணுவை) கொல்வதற்கான ஒரே வழி; யத்—எது; ரிஷீனாம்—மாமுனிவர்கள், புண்ணிய புருஷர்கள், அல்லது வைஷ்ணவர்களின்; விஹிம்ஸனம்—எல்லா வகையான அடக்குமுறை அட்டூழியங்களாலும் நசுக்குதல்.

அனைவரது இதய மத்தியிலும் பரமாத்மாவாக உள்ள பகவான் விஷ்ணுவே அசுரர்களின் முடிவான எதிரியாவார். எனவே அவர் அஸுர்-த்விட் எனப்படுகிறார். அவரே அனைத்து தேவர்களுக்கும் தலைவர். ஏனெனில், சிவபெருமான் மற்றும் பிரம்மதேவர் உள்பட எல்லாத் தேவர்களும் அவரது பாதுகாப்பில்தான் உள்ளனர். சிறந்த புண்ணிய புருஷர்களும், முனிவர்களும், வைஷ்ணவர்களும் கூட அவரையே நம்பியுள்ளனர். எனவே வைஷ்ணவர்களைத் துன்புறுத்துவதே விஷ்ணுவைக் கொல்வதற்குரிய ஒரே வழியாகும்.

பதம் 10.4.43
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் துர்மந்த்ரிபி: கம்ஸ: ஸஹ ஸம்மந்த்ரிய துர்மதி:
ப்ரஹ்ம-ஹிம்ஸாம் ஹிதம் மேனே கால-பாசாவ்ருதோ ‘ஸுர:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறாக; துர்மந்த்ரிபி:—அவனது கெட்ட மந்திரிகள்; கம்ஸ:—கம்ச மன்னன்; ஸஹ—உடன்; ஸம்மந்த்ரிய—நன்கு ஆலோசித்தபின்; துர்மதி:—நல்லறிவற்ற; ப்ரஹ்ம-ஹிம்ஸாம்—பிராமண ஹிம்சையை; ஹிதம்—சிறந்த வழியாக; மேனே—ஏற்றான்; கால-பாச-வ்ருத:—யமராஜனின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருப்பதால்; ஆஸுர:—அவன் ஓர் அசுரன் என்பதால்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறாக, யமராஜனின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவனும், நற்புத்தி இல்லாதவனுமான கம்சன், ஓர் அசுரன் என்பதால், தன்னுடைய கெட்ட மந்திரிகளின் உபதேசங்களைக் கருத்திற்கொண்டு, தனது சொந்த நல்லதிர்ஷ்டத்தை அடைவதற்கு பிராமணர்களையும். சாதுக்களையும் துன்புறுத்துவதுதான் ஒரே வழி என்று முடிவு செய்தான்.

பதம் 10.4.44
ஸந்திஸ்ய ஸாது-லோகஸ்ய கதனே கதன-ப்ரியான்
காம-ரூப-தரான் திக்ஷு தானவான் க்ருஹம் ஆவிசத்

ஸந்திஸ்ய—அனுமதியளித்தபின்; ஸாது-லோகஸ்ய—சாதுக்களின்; கதனே—துன்புறுத்துவதில்; கதன-ப்ரியான்—பிறரைத் துன்புறுத்துவதில் வல்லவர்களான அசுரர்களுக்கு; காம-ரூப-தரான்—தங்கள் விருப்பம் போல் எந்த ரூபத்தையும் ஏற்கக் கூடியவர்கள்; திஷூ—எல்லாக் திசைகளிலும்; தானவான்—அசுரர்களுக்கு; க்ருஹம் ஆவிசத்—கம்சன் தன் சொந்த அரண்மனைக்குள் புகுந்தான்.

கம்சனின் ஆட்களான இந்த அசுரர்கள். பிறரைத் துன்புறுத்துவதில் குறிப்பாக வைஷ்ணவர்களைத் துன்புறுத்துவதில் வல்லவர்களும், விரும்பிய ரூபத்தை ஏற்கக் கூடியவர்களுமாவர். எல்லா இடங்களுக்கும் சென்று சாதுக்களைத் துன்புறுத்தும்படி, இந்த அசுரர்களுக்கு அனுமதியளித்த பின், கம்சன் தன் அரண்மனைக்குள் புகுந்தான்.

பதம் 10.4.45
தே வை ரஜ:-ப்ரக்ருதயஸ் தமஸா மூட-சேதஸ:
ஸதாம் வித்வேஷாம் ஆசேருர் ஆராத் ஆகத ம்ருத்யவ:

தே—அசுர மந்திரிகள் அனைவரும்; வை—உண்மையில்; ரஜ:-ப்ரக்ருத்ய:—ரஜோ (தீவிர) குணம் நிரம்பிய; தமஸா—அறியாமைக் குணம் நிரம்பிய; மூட-சேதஸ:—மூடர்கள்; ஸதாம்—சாதுக்களின்; வித்வேஷம்—துன்புறுத்தலை; ஆசேரு:—நிறைவேற்றினர்; ஆராத்-ஆகத-ம்ருத்யவ:—மரணம் சமீபித்து அவர்களைக் கைப்பற்றி விட்டதால்.

யார் தீவிர மற்றும் அறியாமைக் குணங்கள் நிரம்பியவர்களாக உள்ளனரோ, யாருக்காக மரணம் நெருங்கிக் காத்திருக்கிறதோ, அந்த அசுரர்கள், தங்களுக்கு நல்லது எது கெட்டது எது என்பதை அறியாமல், சாதுக்களைத் துன்புறுத்தத் துவங்கினர்.

பதம் 10.4.46
ஆயு: ஸ்ரியம் யசோ தர்மம் லோகான் ஆசிஷ ஏவ ச
ஹந்தி ஸ்ரேயாம்ஸி ஸர்வாணி பும்ஸோ மஹத் அதிக்ரம:

ஆயு:—ஆயுள்; ஸ்ரியம்—அழகு; யச:—புகழ்; தர்மம்—மதம்; லோகான்—உயர் கிரகங்களுக்கு ஏற்றம் பெறுதல்; ஆசிஷ:—ஆசீர்வாதங்கள்; ஏவ—உண்மையில்; ச—மற்றும்; ஹந்தி—அழித்துவிடுகிறது; ஸ்ரேயாம்ஸி—வரங்களையும்; ஸர்வாணி—எல்லா; பும்ஸ:—ஒரு நபரின்; மஹத்-அதிக்ரம்:—சான்றோர்களுக்கெதிரான அத்துமீறல்கள்.

அன்புள்ள அரசே, ஒருவன் சிறந்த ஆத்மாக்களைத் துன்புறுத்தும் பொழுது, நீண்ட ஆயுள், அழகு, புகழ், மதம், ஆசீர்வாதங்கள் மற்றும் உயர் கிரகங்களுக்கு ஏற்றம் பெறுதல், ஆகிய அவனது எல்லா வரங்களும் அழிந்துவிடும்.


ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “கம்ச மன்னனின் அக்கிரமங்கள்” எனும் தலைப்பை கொண்ட நான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare