அத்தியாயம் – 2
கர்ப்பத்திலிருந்த பகவானுக்கு தேவர்களின்
பிரார்த்தனைகள்
பதங்கள் 10.2.1 — 10.2.2
ஸ்ரீ-சுக உவாச
ப்ரலம்ப-பக-சாணூர-த்ருணாவர்த-மஹாசனை:
முஷ்டிகாரிஷ்ட-த்விவித-பூதனா-கேசி-தேனுகை:

அன்யைஸ் சாஸுர-பூபாலைர் பாண-பௌமாதிபிர் யுத:
யதூனாம் கதனம் சக்ரே பலீ மாகத-ஸம்ஸ்ரய:

ஸ்ரீசுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ப்ரலம்ப—பிரலம்பன் என்ற அசுரனால்; பக—பகன் என்ற அசுரனால்; சாணூர—சாணூரன் என்ற அசுரனால்; த்ருணாவர்த—திருணாவர்த்தன் என்ற அசுரனால்; மஹாசனை:—அகாசுரனால்; முஷ்டிக்—முஷ்டிகன் என்ற அசுரனால்; அரிஷ்ட—அரிஷ்டன் என்ற அசுரனால்; த்விவித—துவிவிதன் என்ற அசுரனால்; பூதனா—பூதனையால்; கேசி—கேசியால்; தேனுகை:—தேனுகனால்; அன்யை: ச—மற்றும் பலரால்; அஸுர-பூபாலை:—பூமியிலுள்ள அசுர மன்னர்களால்; பாண—பாண ராஜனால்; பெளம—பௌமாசுரனால்; ஆதிபி:—மற்றும் பிறராலும்; யுத:—உதவி செய்யப்பட்டு; யதூனாம்—யது வம்ச அரசர்களின்; கதனம்—துன்புறுத்தலை; சக்ரே—எப்பொழுதும் செய்து வந்தான்; பலீ—மிகவும் சக்தி வாய்ந்த; மாகத-ஸம்ஸ்ரய:—மகத ராஜனான ஜராஸந்தனுடைய பாதுகாப்பின் கீழ்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார். மகத ராஜனான ஜராஸந்தனுடைய பாதுகாப்பின் கீழ், சக்திவாய்ந்த கம்சன், யது வம்ச அரசர்களைத் துன்புறுத்தத் துவங்கினான். இவ்விஷயத்தில் அவன், பிரலம்பன், பகன், சாணூரன், திருணாவர்தன், அகாசுரன், முஷ்டிகன், அரிஷ்டன், துவிவதன், பூதனை, கேசி, தேனுகன், பாணாசுரன், நரகாசுரன் மற்றும் பூமியிலுள்ள பல அசுர மன்னர்கள் ஆகியோரின் உதவியைப் பெற்றான்.

பதம் 10.2.3
தே பீடிதா நிவிவிக: குரு-பஞ்சால-கேகயான்
சால்வான் விதர்பான் நிஷதான் விதேஹான் கோசலான் அபி

தே—அவர்கள் (யது வம்ச மன்னர்கள்); பீடிதா:—துன்புறுத்தப்பட்டு; நிவிவிக:—(ராஜ்யங்களில்) புகுந்தனர், அல்லது தஞ்சமடைந்தனர்; குரு-பஞ்சால—குருக்களாலும், பஞ்சாலர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நாடுகள்; கேகயான்—கேகயர்களின் நாடுகள்; சால்வான்—சால்வர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நாடுகள்; விதர்பான்—விதர்பர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நாடுகள்; நிஷதாம்—நிஷதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நாடுகள்; விதேஹான்—விதேக நாடு; கோசலான் அபி—மற்றும் கோசலர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நாடுகள்.

அசுர மன்னர்களால் துன்புறுத்தப்பட்ட யாதவர்கள் தங்களுடைய சொந்த ராஜ்யங்களை விட்டு, குரு, பாஞ்சாலம், கேகயம், சால்வம், விதாபம், நிஷதம், விதேகம், மற்றும் கோசலம் முதலான நாடுகளில் புகுந்தனர்.

பதங்கள் 10.2.4 — 10.2.5
ஏகே தம் அனுருந்தானா ஞாதய: பர்யுபாஸதே
ஹதேஷு ஷட்ஸு பாலேஷு தேவக்யா அனுக்ரஸேனினா

ஸப்தமோ வைஷ்ணவம் தாம யம் அனந்தம் ப்ரசக்ஷதே
கர்போ பபூவ தேவக்யா ஹர்ஷ-சோக-விவர்தன:

ஏகே—அவர்களில் சிலர்; தம்—கம்சனிடம்; அனுருந்தானா:—அவனுடைய கொள்கையை அப்படியே பின்பற்றி; ஞாதய:—உறவினர்கள்; பர்யுபாஸதே—அவனுக்கு உடன்படத் துவங்கினார்; ஹதேஷு—கொல்லப்பட்டு; ஷட்ஸு—ஆறு; பாலேஷு—குழந்தைகள்; தேவக்யா:—தேவகிக்குப் பிறந்த; அனுக்ரஸேனினா—உக்ரசேனரின் மகனால் (கம்சனால்); ஸப்தம்:—ஏழாவது; வைஷ்ணவம்—பகவான் விஷ்ணுவின்; தாம—ஓர் அம்சம்; யம்—யாரிடம்; அனந்தம்—என்று; ப்ரசக்ஷதே—புகழப்படுகிறார்; கர்ப:—கர்பம்; பபூவ—இருந்தது; தேவக்யா:—தேவகியின்; ஹர்ஷ-சோக-விவர்தன:—இன்பத்தையும், துன்பத்தையும் வளர்ப்பதுபோல்.

அவர்களது உறவினர்களில் சிலர் மட்டும் கம்சனுக்குக் கட்டுப்பட்டு அவனுக்குச் சேவை செய்து கொண்டிருந்தார்கள். உக்ரசேனரின் மகனான கம்சன், தேவகியின் ஆறு மகன்களையும் கொன்ற பிறகு, கிருஷ்ணரின் ஓர் அம்சம் ஏழாவது குழந்தையாக அவளது கர்ப்பத்தில் புகுந்து, அவளது இன்பத்தையும், துன்பத்தையும் வளர்த்தது. அந்த அம்சம் மாமுனிவர்களால் அனந்தன் என்று புகழப்படுகிறது. அவர் கிருஷ்ணரின் இரண்டாவது சதுரங்க-அம்சத்தைச் சேர்ந்தவராவார்.

பதம் 10.2.6
பகவான் அபி விஸ்வாத்மா விதித்வா கம்ஸஜம் பயம்
யதூனாம் நிஜ-நாதானாம் யோகமாயாம் ஸமாதிசத்

பகவான்—பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர்; அபி—மேலும்; விஸ்வாத்மா—அனைவருக்கும் பரமாத்மாவான; விதித்வா—யதுக்களின் மற்றும் அவரது மற்ற பக்தர்களின் நிலையை அறிந்து; கம்ஸ-ஜம்—கம்சனின் காரணத்தால்; பயம்—பயம்; யதூனாம்—யதுக்களின்; நிஜ-நாதானாம்—பரமபுருஷரைத் தங்களது உயர்ந்த புகலிடமாக ஏற்றுக் கொண்டவர்கள்; யோகமாயாம்—கிருஷ்ணரின் ஆன்மீக சக்தியான யோகமாயையிடம்; ஸமாதிசத்—பின்வருமாறு உத்தரவிட்டார்.

தமது அந்தரங்க பக்தர்களான யாதவர்களைக் கம்சனின் தாக்குதலிலிருந்து காப்பதற்காக பரம ஆத்மாவான (விஸ்வாத்மா) பரமபுருஷர் யோக-மாயையிடம் பின்வருமாறு உத்தரவிட்டார்.

பதம் 10.2.7
கச்சா தேவி வ்ரஜம் பத்ரே கோப-கோபிர் அலங்க்ருதம்
ரோஹிணீ வஸுதேவஸ்ய பார்யாஸ்தே நந்த-கோகுலே
அன்யாஸ் ச கம்ஸ-ஸம்விக்னா விவரேஷு வஸந்தி ஹி

கச்ச—இப்பொழுது செல்; தேவி—அகில லோகங்களாலும் பூஜிக்கப்படுபவளே; வ்ரஜம்—விரஜ பூமிக்கு (ஆயர்பாடிக்கு); பத்ரே—ஜீவராசிகளுக்கு மங்களம் அருள்பவளே; கோபி-கோபி:—பசுக்களாலும், இடையர்களாலும்; அலங்க்ருதம்—அலங்கரிக்கப்பட்டுள்ள; ரோஹிணீ—ரோகிணி என்ற; வஸுதேவஸ்ய—கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின்; பார்யா—மனைவிகளுள் ஒருத்தி; ஆஸ்தே—வாழ்கிறாள்; நந்த-கோகுலே—கோகுலம் எனும் நந்த மகாராஜனின் கிராமத்தில் (கோடிக்கணக்கான பசுக்கள் பராமரிக்கப்படும் இடம்); அன்யா: ச—மற்றும் பிற மனைவிகளும்; கம்ஸ-ஸம்விக்னா:—கம்சனுக்கஞ்சி; விவரேஷு—தனிமையான இடங்களில்; வஸந்தி—வாழ்கின்றனர்; ஹி—உண்மையில்.

பகவான் யோகமாயைக்கு உத்தரவிட்டார்: தேவி, அகில லோகங்களாலும் பூஜிக்கப்படும் என் சக்தியே, அனைத்து ஜீவராசிகளுக்கும் மங்களம் அருளும் சுபாவம் கொண்டவளே, பல இடையர்களும், அவர்களது மனைவிகளும் வாழும் ஆயர்பாடிக்குச் செல், பல பசுக்களால் அழகு பெற்று விளங்கும் அந்த இடத்திலுள்ள நந்த மகாராஜனின் வீட்டில், வசுதேவரின் மனைவியான ரோகிணி வசிக்கிறாள். வசுதேவரின் பிற மனைவிகள் கூட கம்சனுக்கஞ்சி மாறுவேடத்தில் அங்கு வசித்து வருகின்றனர். அங்கு நீ செல்ல வேண்டும்.

பதம் 10.2.8
தேவக்யா ஜடரே கர்பம் சேஷாக்யம் தாம மாமகம்
தத் ஸன்னிக்ருஷ்ய ரோஹிண்யா உதரே ஸன்னிவேசய

தேவக்யா:—தேவகியின்; ஜடரே—கருப்பையில்; கர்பம்—கர்ப்பம்; சேஷ-ஆக்யம்—கிருஷ்ணரின் அம்சமான சேஷன் எனப்படும்; தாம—பூரண அம்சம்; மாமகம்—என்னுடைய; தத்—அவரை; ஸன்னிக்ருஷ்ய—கவர்ந்து; ரோஹிண்யா:—ரோஹிணியின்; உதரே—கருவிற்குள்; ஸன்னிவேசய—சிரமமின்றி மாற்றிவிடு.

தேவகியின் கருப்பைக்குள், சங்கர்ஷணர் அல்லது சேஷன் எனப்படுபவர் பூரண அம்சமாக இருக்கிறார். அவரைச் சிரமமின்றி ரோகிணியின் கருப்பைக்கு மாற்றிவிடு.

பதம் 10.2.9
அதாஹம் அம்ச-பாகேன தேவக்யா: புத்ரதாம் சுபே
ப்ராப்ஸ்யாமி த்வம் யசோதாயாம் நந்த-பத்ன்யாம் பவிஷ்யஸி

அத—எனவே; அஹம்—நான்; அம்ச-பாகேன—எனது பூரண அம்சத்தினால்; தேவக்யா:—தேவகியின்; புத்ரதாம்—மகன்; சுபே—சர்வ மங்களம் பொருந்திய யோகமாயையே; ப்ராப்ஸ்யாமி—நான் ஆவேன்; த்வம்—நீ; யசோதாயாம்—தாய் யசோதையின் கருப்பையில்; நந்த-பத்ன்யாம்—நந்த மகாராஜனின் மனைவியில்; பவிஷ்யஸி—கூட தோன்ற வேண்டும்.

சர்வ மங்களம் பொருந்திய யோகமாயையே, நான் பிறகு என்னுடைய முழுமையான ஆறு ஐசுவரியங்களுடன் தேவகியின் மகனாகத் தோன்றுவேன். நீ நந்த மகாராஜனின் மனைவியான, தாய் யசோதையின் மகளாகத் தோன்றுவாய்.

பதம் 10.2.10
அர்சிஷ்யந்தி மனுஷ்யாஸ் த்வாம் ஸர்வ-காம-வரேஸ்வரீம்
தூபோபஹார-பலிபி: ஸர்வ-காம-வர-ப்ரதாம்

அர்சிஷ்யந்தி—பூஜிப்பார்கள்; மனுஷ்யா:—மனித சமூகத்தினர்; த்வாம்—உம்மை; ஸர்வ-காம-வர-ஈஸ்வரீம்—எல்லா பௌதிக ஆசைகளையும் நிறைவேற்றும் தேவர்களில் மிகச் சிறந்தவளாக நீ இருப்பதால்; தூப—தூபத்தால்; உபஹார—வெகுமானங்களால்; பலிபி:—பலியிடுவதன் மூலமாக செய்யப்படும் வெவ்வேறு வகையான வழிபாடுகளால்; ஸர்வ-காம—எல்லா பௌதிக ஆசைகளின்; வர—வரங்களையும்; ப்ரதாம்—அளிக்கக்கூடியவள்.

சாதாரண மனிதர்கள், மிருக பலிகளால் பல்வேறு பொருட்களுடன் உன்னை ஆடம்பரமாக வழிபடுவார்கள். ஏனெனில், எல்லோருடைய பௌதிக ஆசைகளையும் நிறைவேற்றுவதில் நீ உயர்ந்தவளாக இருக்கிறாய்.
பதங்கள் 10.2.11 — 10.2.12
நாமதேயானி குர்வந்தி ஸ்தானானி ச நரா புவி
துர்கேதி பத்றகாளீதி விஜயா வைஷ்ணவீதி ச

குமுதா சண்டிகா மாதவீ கன்யகேதி ச
மாயா நாராயணீசானீ சாரதேதி அம்பிகேதி ச

நாமதேயானி—வெவ்வேறு நாமங்களை; குர்வந்தி—அளிப்பார்கள்; ஸ்தானானி—வெவ்வேறு இடங்களில்; ச—மேலும்; நரா:—பௌதிக சுக போகங்களில் ஆர்வம் உள்ளவர்கள்; புவி—பூமியில்; துர்கா இதி—துர்கை என்ற பெயர்; பத்ரகாளீ இதி—பத்ரகாளி எனும் பெயர்; விஜயா—விஜயா என்ற பெயர்; வைஷ்ணவி இதி—வைஷ்ணவி என்ற பெயர்; ச—மற்றும்; குமுதா—குமுதா என்ற பெயர்; சண்டிகா—சண்டிகா எனும் பெயர்; க்ருஷ்ணா—கிருஷ்ணா எனும் பெயர்; மாதவீ—மாதவி எனும் பெயர்; கன்கயகா இதி—கன்யகா அல்லது கன்யாகுமாரி எனும் பெயர்; ச—மேலும்; மாயா—மாயா எனும் பெயர்; நாராயணீ—நாராயணி எனும் பெயர்; ஈசானீ—ஈசானி எனும் பெயர்; சாரதா—சாரதா எனும் பெயர்; இதி—இவ்வாறாக; அம்பிகா—அம்பிகா எனும் பெயர்; இதி—கூட; ச—மேலும்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பின்வருமாறு கூறி மாயாதேவியை ஆசீர்வதித்தார்: பூமியிலுள்ள வெவ்வேறு இடங்களில், துர்கை, பத்ரகாளி, விஜயா, வைஷ்ணவி, குமுதா, சண்டிகா, கிருஷ்ணா, மாதவி, கன்யகா, மாயா, நாராயணி, ஈசாணி, சாரதா மற்றும் அம்பிகா முதலான வெவ்வேறு நாமங்களை மக்கள் உனக்குச் சூட்டுவார்கள்.

பதம் 10.2.13
கர்ப ஸங்கர்ஷணாத் தம் வை ப்ராஹு: ஸங்கர்ஷணம் புவி
ராமேதி லோக-ரமணாத் பலபத்ரம் பலோச்ரயாத்

கர்ப-ஸங்கர்ஷணாத்—அவர் தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றப்படுவார் என்பதால்; தம்—அவரை (ரோகிணியின் மகனை); வை—உண்மையில்; ப்ராஹு:—மக்கள் அழைப்பார்கள்; ஸங்கர்ஷணம்—சங்கர்ஷணர் என்ற பெயரால்; புவி—உலகில்; ராம இதி—ராமர் என்றும் அவர் அழைக்கப்படுவார்; லோக-ரமணாத்—பொதுமக்கள் பக்தர்களாவதற்கு உதவும்பொருட்டு அவர்களிடம் விசேஷ கருணையைப் பொழிவதால்; பலபத்ரம்—பலபத்ரர் என்றும் அவர் அழைக்கப்படுவார்; பல-உச்ரயாத்—மிகவும் அதிகமான தேக பலத்தின் காரணத்தால்.

ரோகிணியின் புதல்வர், தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றப்பட்டதால் சங்கர்ஷணர் என்றும் புகழப்படுவார். கோகுல வாசிகளையெல்லாம் திருப்திப்படுத்தும் திறமை உடையவராக இருப்பதால் அவர் ‘ராம’ என்று அழைக்கப்படுவார். அவருக்குள்ள மிகவும் அதிகமான தேகபலத்தின் காரணத்தால் அவர் பலபத்ரா என்று அழைக்கப்படுவார்.

பதம் 10.2.14
ஸந்திஷ்டைவம் பகவதா ததேதி ஓம் இதி தத்-வச:
ப்ரதிக்ருஹ்ய பரிக்ரம்ய காம் கதா தத் ததாகரோத்

ஸந்திஷ்டா—உத்தரவிடப்பட்டதும்; ஏவம்—இவ்வாறு; பகவதா—பரமபுருஷரால்; ததா இதி—அப்படியே ஆகட்டும்; ஓம்—ஓம் என்ற மந்திரம் சொல்லி உறுதிமொழி கூறுதல்; இதி—இவ்வாறாக; தத் வக:—அவரது வார்த்தைகளை; ப்ரதிக்ருஹ்ய—உத்தரவை ஏற்று; பரிக்ரம்ய—அவரை வலம் வந்தபின்; காம்—பூமிக்கு; கதா—உடனே அவள் சென்றாள்; தத்—உத்தரவை, பரமபுருஷரால் அளிக்கப்பட்டபடி; ததா—அப்படியே; அகரோத்—நிறைவேற்றினாள்.

பரமபுருஷரால் இவ்வாறு கட்டளையிடப்பட்ட யோகமாயை, உடனே ஓம் எனும் வேத மந்திரத்தை உச்சரித்து, ‘அப்படியே ஆகட்டும்‘ என்று உறுதி கூறி அதற்குச் சம்மதித்தாள். இவ்விதமாக அவள் பகவானை வலம் வந்து, பூமியிலுள்ள நந்த கோகுலம் என்ற இடத்திற்குச் சென்று, உத்தரவிடப்பட்டபடி அனைத்தையும் செய்து முடித்தாள்.

பதம் 10.2.15
கர்பே ப்ரணீதே தேவக்யா ரோஹிணீம் யோக-நித்ரயா
அஹோ விஸ்ரம்ஸிதோ கர்ப இதி பௌரா விகக்ருக:

கர்பே ப்ரணீதே—கருப்பையிலிருந்து கர்ப்பம் கொண்டு போகப்பட்டதும்; தேவக்யா:—தேவகியின்; ரோஹிணீம்—ரோகிணியின் கருப்பைக்கு; யோக-நித்ரயா—யோகமாயை எனும் ஆன்மீக சக்தியால்; அஹோ—ஜயோ; விஸ்ரம்ஸித்:—கரைந்துவிட்டது; கர்ப:—கர்பம்; இதி—இவ்வாறாக; பௌரா:—அரண்மனை வாசிகள் அனைவரும்; விகக்ருக:—வருந்தினர்.

தேவகியின் குழந்தை, யோகமாயையால் ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றப்பட்டதும், தேவகியின் கர்ப்பம் கலைந்துவிட்டது போல் காணப்பட்டது. இவ்விதமாக “ஐயோ! தேவகி குழந்தையை இழந்து விட்டாளே!” என்று அரண்மனை வாசிகள் அனைவரும் புலம்பினர்.

பதம் 10.2.16
பகவான் அபி விஸ்வாத்மா பக்தானாம் அபயங்கர:
ஆவிவேசாம்ச-பாகேன மன ஆனகதுந்துபே:

பகவான்—பரமபுருஷர்; அபி—கூட; விஸ்வாத்மா—ஜீவராசிகளின் பரமாத்மா; பக்தானாம்—அவரது பக்தர்களின்; அபயம் கர:—பயத்தின் காரணங்களை எப்பொழுதும் கொல்லும்; ஆவிவேச—புகுந்தார்; அம்ச-பாகேன—மறைந்துள்ள அவரது சகல ஐசுவரியங்களுடனும் (ஷட்-ஐசுவர்ய-பூரண); மன:—மனதில்; ஆனகதுந்துபே:—வசுதேவரின்.

இவ்வாறாக எல்லா ஜீவராசிகளிலும் பரமாத்மாவாக இருப்பவரும், தமது பக்தர்களின் பயத்தையெல்லாம் போக்குபவருமான பரமபுருஷர், முழு ஐசுவரியங்களுடன் வசுதேவரின் மனதில் புகுந்தார்.

பதம் 10.2.17
ஸ பிப்ரத் பௌருஷம் தாம ப்ராஜமானோ யதா ரவி:
துராஸதோ ‘திதுர்தர்ஷோ பூதானாம் ஸம்பபூவ ஹ

ஸ:—அவர் (வசுதேவர்); பிப்ரத்—தாங்கினார்; பௌருஷம்—பரமபுருஷர் தொடர்பான; தாம—ஆன்மீக பிரகாசத்தை; ப்ராஜமான—ஒளியூட்டிக் கொண்டு; யதா—போல்; ரவி:—சூரிய ஒளி; துராஸத:—காண்பதற்குக்கூட மிகக் கடினமான, புலன் உணர்வால் புரிந்து கொள்ளக் கடினமான; அதிதுர்தர்ஷ:—அணுகுவதற்கு மிகக் கடினமானவராக; பூதானாம்—அனைத்து ஜீவராசிகளாலும்; ஸம்பபூவ—அவர் ஆனார்; ஹ—உண்மையில்.

பரமபுருஷரின் உருவத்தைத் தமது இதய மத்தியில் சுமக்கும் அதே சமயம், உன்னதமாகப் பிரகாசிக்கும் பகவானின் ஒளியை வசுதேவர் தாங்கியதால், அவர் சூரியனைப் போல் பிரகாசிப்பவரானார். எனவே அவர் காண்பதற்கும், புலன் உணர்வின் மூலமாக அணுகுவதற்கும் மிகவும் கடினமானவரானார். உண்மையில், கம்சனைப் போன்ற பயங்கரமானவர்களுக்கும், மற்றெல்லா ஜீவராசிகளுக்கும் கூட அவர் அணுகப்பட முடியாதவராகவும், காணப்பட முடியாதவராகவும் இருந்தார்.

பதம் 10.2.18
ததோ ஜகன்-மங்களம் அச்யுதாம்சம்
ஸமாஹி தம் சூர-ஸுதேன தேவீ
ததார ஸர்வாத்மகம் ஆத்ம-பூதம்
காஷ்டா யதானந்த-கரம் மனஸ்த:

தத:—அதன்பிறகு; ஜகத்-மங்களம்—எல்லாப் பிரபஞ்சங்களிலுள்ள ஜீவராசிகளுக்கும் மங்களகரமான; அச்யுத-அம்சம்—எவை பரமபுருஷரின் எல்லா அம்சங்களிலும் முழுமையாக உள்ளனவோ, அந்த ஆறு ஐசுவரியங்களையும் ஒருபோதும் இழக்காதவரான பரமபுருஷர்; ஸமாஹிதம்—முழுமையாக மாற்றப்பட்டு; சூர-ஸுதேன—சூரசேனரின் மகனான வசுதேவரால்; தேவீ—தேவகிதேவி; ததார—தாங்கினாள்; ஸர்வ-ஆத்மகம்—அனைவருக்கும் பரமாத்மாவான; ஆத்ம-பூதம்—எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணமான; காஷ்டா—கிழக்கு; யதா—போலவே; ஆனந்த-கரம்—மகிழ்ச்சிகரமான (சந்திரன்); மனஸ்த:—மனதில் வைக்கப்பட்டதால்.

அதன்பிறகு, எல்லாப் பிரபஞ்சங்களுக்கும் மங்களம் அளிப்பவரும், பூரண ஐசுவரியங்கள் உடையவருமான பரமபுருஷர், அவரது அம்சங்களால் தொடரப்பட்டவராய், வசுதேவரின் மனதிலிருந்து தேவகியின் மனதிற்கு மாற்றப்பட்டார். இவ்வாறாக, வசுதேவரால் தன்னிடம் சேர்ப்பிக்கப்பட்டவரும், அனைவருக்கும் மூல உணர்வாக இருப்பவரும், எல்லாக் காரணங்களுக்கும் காரணமானவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைத் தன் இதய மத்தியில் தேவகி தரித்தாள். உதிக்கும் சந்திரனைத் தாங்குவதால் கீழ்வானம் அழகு பெற்று விளங்குவதுபோல், தேவகியும் அழகு பெற்று விளங்கினாள்.

பதம் 10.2.19
ஸ தேவகீ ஸர்வ-ஜகன்-நிவாஸ-
நிவாஸ-பூதா நிதராம் ந ரேஜே
போஜேந்ர-கேஹே ‘க்னி-சிகேவ ருத்தா
ஸரஸ்வதீ ஞான-கலே யதா ஸதீ

ஸா தேவகீ—அந்த தேவகி; ஸர்வ-ஜகத்-நிவாஸ—எல்லாப் பிரபஞ்சங்களையும் பராமரிப்பவரான (மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி) பரமபுருஷரின்; நிவாஸ:-பூதா—தேவகியின் கருப்பை இப்பொழுது வசிப்பிடமாயிற்று; நிதராம்—விரிவாக; ந—இல்லை; ரேஜே—ஒளிமயமாகியது; போஜேந்ர-கேஹே—கம்சனுடைய வீட்டின் எல்லைக்குள்: அக்னி-சிகா இவ—தீச்சுடர்களைப்போல்; ருத்தா—மறைக்கப்பட்ட; ஸரஸ்வதீ—அறிவு; ஞான-கலே—அறிவைப் பெற்றிருந்தும் அதை விநியோகிக்க முடியாத ஞான-கலன் என்ற ஒருவன்; யதா—அல்லது அதற்கொப்பாக; ஸதீ—இருக்கும்.

கம்சனின் வீட்டில் சிறைப்பட்ட தேவகி, சகல காரணங்களுக்கும் காரணமும், உலகிற்கெல்லாம் உறைவிடமுமாகிய பரமபுருஷருக்கு, உறைவிடமானாள். சிறைப்பட்டிருந்த காரணத்தால், குடத்தில் வைத்த விளக்குபோலும், அறிவைப் பெற்றிருந்தும் மனித சமூகத்தின் நன்மைக்காக அதை உலகிற்கு வினியோகிக்க முடியாத வஞ்சகனிடத்தில் சேர்ந்த கல்விபோலும் தேவகி காணப்பட்டாள்.

பதம் 10.2.20
தாம் வீக்ஷ்ய கம்ஸ: ப்ரபயாஜிதாந்தராம்
விரோசயந்தீம் பவனம் சுசி-ஸ்மிதாம்
ஆஹைஷ மே ப்ராண-ஹரோ ஹரிர் குஹாம்
த்ருவம் ஸரிதோ யன் ந புரேயம் ஈத்ருசீ

தாம்—அவளை (தேகியை); வீக்ஷ்ய—கண்டபின்; கம்ஸ:—அவளது தமயனான கம்சன்; ப்ரபயா—அவளது அழகு மற்றும் வசியம் ஆகியவற்றின் அதிகரிப்புடன்; அஜித-அந்தராம்—அஜிதர் எனப்படும் பகவான் விஷ்ணுவைத் தனக்குள் வைத்திருந்ததால்; விரோ சயந்தீம்—பிரகாசப்படுத்தி; பவனம்—வீட்டின் சூழ்நிலையை; ஸுசி-ஸ்மிதாம்—புன்னகையுடனும், தேஜசுடனும் விளங்கிய; ஆஹ—தனக்குள் கூறிக் கொண்டான்; ஏஷ:—இந்த (பரமபுருஷர்); மே—எனது; ப்ராண-ஹர:—என்னைக் கொல்லப்போகும்; ஹரி:—பகவான் விஷ்ணு; குஹாம்—தேவகியின் கர்ப்பத்தில்; த்ருவம்—சந்தேகமின்றி; ஸ்ரித:—உறைவிடம் கொண்டுள்ளார்; யத்—என்பதால்; ந—இருக்கவில்லை; புரா—முன்பு; இயம்—தேவகி; ஈத்ருசீ—இதுபோல்.

தேவகியின் கர்ப்பத்தில் பரமபுருஷர் இருந்ததால், தான் சிறைப்பட்டிருந்த இடம் முழுவதையும் அவள் ஒளிமயமாக்கினாள். அவள் மகிழ்ச்சியாகவும், தூய்மையாகவும், புன்னகையுடனும் விளங்குவதைக் கண்ட கம்சன் பின்வருமாறு எண்ணினான், “இப்பொழுது அவளுடைய கர்ப்பத்தில் இருக்கும் பரமபுருஷரான விஷ்ணு என்னைக் கொல்லப்போவது நிச்சயம், ஏனெனில் இதற்குமுன் தேவகி இவ்வளவு பிரகாசமாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்பட்டதேயில்லை”.

பதம் 10.2.21
கிம் அத்ய தஸ்மின் கரணீயம் ஆக மே
யத் அர்த-தந்த்ர ந விஹந்தி விக்ரமம்
ஸ்த்ரியா: ஸ்வஸுர் குருமத்யா வதோ ‘யம்
யச: ஸ்ரியம் ஹந்தி அனுகூலம் ஆயு:

கிம்—என்ன; அத்ய—இப்பொழுது, உடனே; தஸ்மின்—இந்நிலையில்; கரணீயம்—செய்யவேண்டிய; ஆக—தாமதமின்றி; மே—என் கடமை; யத்—என்பதால்; அர்த-தந்தர:—சாதுக்களைக் காத்து, அசுரர்களைக் கொல்வதில் உறுதி கொண்டுள்ள பரமபுருஷர்; ந—மாட்டார்; விஹந்தி—கைவிட; விக்ரமம்—அவரது வீரியத்தை; ஸ்த்ரியா:—ஒரு பெண்ணின்; ஸ்வஸு:—என் தங்கையின்; குரூ-மத்யா:—குறிப்பாக அவள் கர்பவதியாய் இருக்கும் பொழுது; வத: அயம்—கொல்வது; யச:—புகழ்; ஸ்ரியம்—செல்வம்; ஹந்தி—அழிந்துவிடும்; அனுகூலம்—நிரந்தரமாக; ஆயு:—மற்றும் ஆயுளும்.

கம்சன் எண்ணினான்: இப்பொழுது என் கடமையென்ன? தமது நோக்கத்தை (பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்) அறிந்துள்ள பரமபுருஷர் அவரது வீரியத்தைக் கைவிடமாட்டார். தேவகி ஒரு பெண்ணாகவும், என் தங்கையாகவும் இருப்பதுடன், இப்பொழுது கர்ப்பவதியாகவும் இருக்கிறாள். அவளை நான் கொன்றால், என் கீர்த்தியும், செல்வமும், ஆயுளும் அழிக்கப்பட்டுவிடும் என்பதில் ஐய்யமில்லை.

பதம் 10.2.22
ஸ ஏஷ ஜீவன் கலு ஸம்பரேதோ
வர்தேத யோ ‘த்யந்த-ந்ருசம்ஸிதேன
தேஹே ம்ருதே தம் மனுஜா: சபந்தி
கந்தா தமோ ‘ந்தம் தனு-மானினோ த்ருவம்

ஸ:—அவன்; ஏஷ:—பொறாமையுடைய அவன்; ஜீவன்—உயிர் வாழும்பொழுது; கலு—கூட; ஸம்பரேத:—இறந்தவனாவான்; வர்தேத—தொடர்ந்து வாழ்கிறான்; ய:—எவனொருவன்; அத்யந்த—மிகவும்; ந்ருசம்ஸிதேன—கொடூரமான செயல்களைச் செய்வதால்; தேஹேம்ருதே—உடல் அழியும் பொழுது; தம்—அவனை; மனுஜா:—மனித சமூகம்; சபந்தி—கண்டனம் செய்கிறது; கந்தா—அவன்செல்வான்; தம: அந்தம்—நரக வாழ்வுக்கு; தனு-மானின்:—தேகாபிமானத்தில் உள்ள ஒருவனின்; த்ருவம்—சந்தேகமின்றி.

மிகவும் கொடூரமான ஒருவன் உயிர்வாழும் பொழுதே இறந்துவிட்டவனாகக் கருதப்படுகிறான். ஏனெனில் அவன் உயிர்வாழும் பொழுதும், இறந்த பிறகும், எல்லோரும் அவனைத் தூற்றுவார்கள். தேகாபிமானத்திலுள்ள ஒருவன் இறந்தபிறகு, அந்ததமம் என்ற நரகத்திற்கு அனுப்பப்படுவான் என்பது நிச்சயம்.

பதம் 10.2.23
இதி கோரதமாத் பாவாத் ஸன்னிவ்ருத்த: ஸ்வயம் ப்ரபு:
ஆஸ்தே ப்ரதீக்ஷம்ஸ் தஜ்-ஜனம் ஹரேர் வைரானுபந்த-க்ருத்

இதி—இவ்வாறு (மேற்குறிப்பிட்டபடி சிந்தனை செய்து); கோர-தமாத் பாவாத்—தன் தங்கையைக் கொல்வதெப்படி என்ற மிகக் கொடூரமான சிந்தனையிலிருந்து; ஸன்னிவ்ருத்த:—விலகியிருந்தான்; ஸ்வயம்—தானாக யோசித்து; ப்ரபு:—முழுஅறிவில் இருந்தவன் (கம்சன்); ஆஸ்தே—இருந்தான்; ப்ரதீக்ஷன்—சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான்; தத்-ஜனம்—அவர் பிறக்கும்வரை; ஹரே:—பரமபுருஷரான ஹரியின்; வைர-அனுபந்த-க்ருத்—இத்தகைய விரோதத்தைத் தொடர உறுதி கொண்டு.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு நிதானமாக யோசித்த கம்சன், பரமபுருஷரிடம் உள்ள விரோதத்தைத் தொடர உறுதி கொண்டிருந்தபோதிலும், தன் தங்கையைக் கொல்லும் பாதகச் செயலிலிருந்து விலகியிருந்தான். பகவான் பிறக்கும்வரை காத்திருந்து பிறகு தேவையானதைச் செய்வோம் என்று அவன் முடிவுசெய்தான்.

பதம் 10.2.24
ஆஸீன: ஸம்விசம்ஸ் திஷ்டன் புஞ்ஜான: பர்யடன் மஹீம்
சிந்தயானோ ஹ்ரிஷீகேசம் அபஸ்யத் தன்மயம் ஜகத்

ஆஸீன:—தனது ஓய்வறையில் அல்லது அரியாசனத்தில் சுகமாக அமர்ந்திருக்கும் பொழுது; ஸம்விசன்—அல்லது படுக்கையில் படுத்திருக்கும் பொழுது; திஷ்டன்—அல்லது எங்கு இருக்கும் பொழுதும்; புஞ்ஜான:—உண்ணும் பொழுது; பர்யடன்—நடமாடும் பொழுது; மஹீம்—பூமியில் இங்கும் அங்குமாக; சிந்தையான:—எப்பொழுதும் விரோதத்துடன் எண்ணி; ஹ்ரிஷீகேசம்—அனைத்தையும ஆள்பவரான பரமபுருஷரையே; அபஸ்யத்—கண்டான்; தத்-மயம்—அவரையன்றி (கிருஷ்ணரையன்றி) வேறெதையும் கொண்டிராத; ஜகத்—முழு உலகையும்.

தன் அரியாசனத்திலோ ஒய்வறையிலோ அமர்ந்திருக்கும் பொழுதும், தன் படுக்கையில் படுத்திருக்கும் பொழுதும், உண்ணும் பொழுதும், உறங்கும் பொழுதும், பூமியில் சஞ்சரிக்கும் பொழுதும், உண்மையில் எந்த இடத்தில் இருந்தபொழுதும், கம்சன் தன் பகைவரும், பரமபுருஷருமான ரிஷீகேசரை மட்டுமே கண்டான். அதாவது சர்வ வியாபகமுடைய தன் எதிரியைப் பற்றியே சிந்தித்த கம்சன், அனுகூலமற்ற முறையில் கிருஷ்ண உணர்வை உடையவனானான்.

பதம் 10.2.25
ப்ரஹ்மா பவஸ் ச தத்ரைத்ய முனிபீர் நாரதாதிபி:
தேவை: ஸானுசரை: ஸாகம் கீர்பிர் வ்ருஷணம் ஜடயன்

ப்ரஹ்மா—நான்கு தலைகளுடைய உயர்ந்த தேவர்; பவ: ச—மற்றும் சிவபெருமான்; தத்ர—அங்கு; ஏத்ய—வந்து சேர்ந்து; முனிபி:—மாமுனிவர்களால் பின்தொடரப்பட்டு; நாரத-ஆதிபி:—நாரதராலும், மற்றவர்களாலும்; தேவை:—மேலும் இந்திரன், சந்திரன் மற்றும் வருணன் போன்ற தேவர்களாலும்; ஸ-அனுசரை:—அவர்களது ஆதரவாளர்களுடன்; ஸாகம்—மொத்தமா; கீர்பி:—அவர்களது உன்னத பிரார்த்தனைகளால்; வ்ருஷணம்—அனைவருக்கும் அருள்புரியக்கூடிய பரமபுருஷரை; ஜடயன்—மகிழ்வித்தனர்.

நாரதர், தேவலர் மற்றும் வியாசர் போன்ற மாமுனிவர்களாலும், இந்திரன், சந்திரன் மற்றும் வருணன் போன்ற பிற தேவர்களாலும் பின் தொடரப்பட்ட பிரம்மதேவரும், சிவபெருமானும் கண்ணுக்குத் தெரியாமல் தேவகியின் அறைக்கு வந்து, அனைவருக்கும் அருள்பாலிப்பவரான பரமபுருஷரை மரியாதையுடன் வணங்கி, அவரை மகிழ்விப்பதற்காக அவரைத் துதித்தனர்.

பதம் 10.2.26
ஸத்ய-வரதம் ஸத்ய-பரம் த்ரி-ஸத்யம்
ஸத்யஸ்ய யோனிம் நிஹிதம் ச ஸத்யே
ஸத்யஸ்யே ஸத்யம் ருத-ஸத்ய-நேத்ரம்
ஸத்யாத்மகம் த்வாம் சரணம் ப்ரபன்னா:

ஸத்ய-வ்ரதம்—தமது சபதத்திலிருந்து ஒருபோதும் விலகாதவரான பரமபுருஷர்; ஸ்தய-பரம்—(ஸ்ரீமத் பாகவத்தின் துவக்கத்தில் ஸத்யம் பரம் தீமஹி என்று கூறப்பட்டிருப்பது போல்) பரம சத்தியமானவர்; த்ரி-ஸ்த்யம்—பிரபஞ்ச தோற்றத்திற்கு முன்பும், அது பரமாரிக்கப்படும் பொழுதும், அது அழிக்கப்பட்ட பிறகும் கூட, அவர் பரம சத்தியமாகவே இருக்கிறார்; ஸத்யஸ்ய—பரம சத்தியமான கிருஷ்ணரிலிருந்து தோன்றும், அவரைச் சார்ந்துள்ள அனைத்து உண்மைகளின்; யோனிம்—காரணம்; நிஹிதம்—நுழைகிறார்; ச—மேலும்; ஸத்யே—இந்த ஜட உலகைப்படைக்கும் காரணப் பொருட்களில் (மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் எனும் ஐந்து மூலப் பொருட்களில்); ஸத்யஸ்ய—உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்படும் அனைத்திலும்; ஸத்யம்—பகவான்தான் மூல உண்மையாவார்; ருத-ஸத்ய-நேத்ரம்—இன்பமூட்டும் உண்மைகளுக்கெல்லாம் அவர்தான் மூலமாவார் (ஸுனேத்ரம்); ஸத்ய-ஆத்மகம்—பகவான் சம்பந்தமான அனைத்தும் உண்மையே (ஸச்-சித்-ஆனந்த: அவரது உடலும் உண்மை, அவரது அறிவும் உண்மை, மற்றும் அவரது இன்பமும் உண்மை); த்வாம்—பகவானே, தங்களிடம்; சரணம்—பூரண சரணாகதி அடைகிறோம்; ப்ரபன்னா:—நாங்கள் முற்றிலும் உங்களுடைய பாதுகாப்பின் கீழ் இருக்கிறோம்.

தேவர்கள் பின்வருமாறு துதி செய்தனர்: பகவானே! உங்களால் முடிவு செய்யப்படுவன எல்லாம் முற்றிலும் சரியானவையும், யாராலும் தடுக்க முடியாதவையுமாகும். எனவே எப்பொழுதும் பரிபூர்ணமாக விளங்கும் உங்களுடைய சபத்திலிருந்து நீங்கள் விலகுவதேயில்லை. பிரபஞ்சத் தோற்றத்தின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய மூன்று நிலைகளிலும் உங்கள் கை இருப்பதால், நீங்கள் பரம சத்தியமாவீர், உண்மையில், சத்திய சீலராக இல்லாத ஒருவரால் உங்களுடைய அனுகிரகத்தைப் பெறமுடியாது என்பதால், அதைக் கபடமுள்ளவர்களால் அடைய முடியாது, படைப்பிலுள்ள எல்லாப் பொருட்களிலும் நீங்கள் இயக்கச் சக்தியாக, நிஜ உண்மையாக விளங்குகிறீர்கள். எனவேதான் நீங்கள் அந்தர்யாமீ (அகச்சக்தி) எனப்படுகிறீர்கள். நீங்கள் அனைவருக்கும் சமமானவர். உங்களுடைய உபதேசங்கள் எல்லாக் காலங்களிலும் அனைவருக்கும் பொருந்தக் கூடியனவாகும். எல்லா உண்மைகளுக்கும் நீங்களே ஆரம்பம். எனவே நாங்கள் வணக்கத்துடன் உங்களிடம் சரணடைகிறோம். எங்களைக் காத்து அருள்புரிய வேண்டும்.

பதம் 10.2.27
ஏகாயனோ ‘ஸெள த்வி-ஃபலஸ் த்ரி-மூலஸ்
சது-ரஸ: பஞ்ச-வித ஷட் ஆத்மா
ஸப்த-த்வக் அஷ்ட-விடபோ நவாக்ஷோ
தச-சதீ த்வி-ககோ ஹி ஆதி-வ்ருக்ஷ:

ஏக-அயன:—சாதாரண ஒரு ஜீவராசியின் உடல் பெளதிக மூலப் பொருட்களையே சார்ந்துள்ளது; அஸௌ—அந்த; தீவி-ஃபல:—இவ்வுடலில் நாம் கருமத்தினால் விளையும் பெளதிக இன்பதுன்பத்திற்கு உட்பட்டிருக்கிறோம்; த்ரி-மூல:—எதை ஆதாரமாகக் கொண்டு உடல் உருவாக்கப்படுகின்றதோ, அந்த மூன்று வேர்களை (சத்வம், ரஜஸ், தமஸ் எனும் மூன்று குணங்களை) உடைய; சது: ரஸ:—நான்கு ரஸங்கள், அல்லது சுவைகள்; பஞ்ச-வித:—ஐந்து அறிவு திரட்டும் புலன்களை (கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு மற்றும் தோல்) கொண்டுள்ள; ஷட்-ஆத்மா—ஆறு சூழ்நிலைகள் (துக்கம், மாயை, முதுமை, மரணம், பசி மற்றும் தாகம்); ஸப்த-த்வக்—(தோல், இரத்தம், சதை, கொழுப்பு, எழும்பு, தசை மற்றும் விந்து ஆகிய) ஏழு உறைகளைக் கொண்டுள்ள; அஷ்ட-விடப:—எட்டு கிளைகள் (மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் எனும் இந்த ஸ்தூல பொருட்கள் மற்றும் மனம், புத்தி மற்றும் அகங்காரம் எனும் மூன்று சூட்சுமப் பொருட்கள்; நவ-அக்ஷ:—ஒன்பது துவாரங்கள்; தச-சதீ—ஒரு மரத்தின் இலைகளை ஒத்த பத்து வகையான உயிர்க்காற்றுகள்; த்வி-கக:—இரு பறவைகள் (தனிப்பட்ட ஆத்மா மற்றும் பரமாத்மா); ஹி—உண்மையில்; ஆதி-வ்ருக்ஷ:—இதுதான் ஆதி மரமாகும் (அதாவது தனிப்பட்ட உடலை அல்லது பிரபஞ்ச உடலைக் குறிக்கும் பௌதிக உடலின் அமைப்பு).

உடலை (மொத்த உடலும், தனிப்பட்ட உடலும் ஒரே கூட்டுப் பொருட்களால் ஆனவை என்பதால்), “ஆதி விருட்சம்” (மூலமரம்) என்று அழைக்கலாம். நிலமெனும் ஜட இயற்கையை முழுமையாகச் சார்ந்துள்ள இம்மரத்திலிருந்து இருவகையான பழங்கள் வருகின்றன. ஒன்று இன்பம் மற்றது துன்பம். மரத்திற்குக் காரணம், அதன் மூன்று வேர்களாக உள்ள சத்வம், ரஜஸ், தமஸ் எனும் மூன்று ஜட இயற்கைக் குணங்களுடன் உள்ள சம்பந்தமாகும், தேக சுகத்திற்கு நான்கு சுவைகள் உள்ளன—மதப்பற்று, பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்வு மற்றும் மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு). இவை ஆறு சூழ்நிலைகளுக்கு மத்தியில், ஜந்து, அறிவுப் புலன்களால் அறியப்படுகின்றன. அந்த ஆறு சூழ்நிலைகள் வருத்தம், மாயை, முதுமை, மரணம், பசி மற்றும் தாகம் என்பனவாகும். மரத்தை மூடியுள்ள மரப்பட்டையைப் போல் உள்ள ஏழு உறைகள், தோல், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, எலும்புத் தசை மற்றும் விந்து என்பவையாகும். மேலும் மரத்தின் எட்டு கிளைகளாக இருப்பவை. ஐந்து ஸ்தூலப் பொருட்களும், மூன்று சூட்சுமப் பொருட்களுமாகும்—மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி மற்றும் பொய் அகங்காரம். மரமெனும் உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன. கண்கள், காதுகள், நாசித் துவாரங்கள், வாய், மலத்துவாரம் மற்றும் புறப்பாலுறுப்புகள், மேலும் பத்து இலைகள், உடலிலுள்ள பத்து காற்றுகளாகும், மரமெனும் இவ்வுடலில் இரு பறவைகள் உள்ளன. ஒன்று தனிப்பட்ட ஆத்மா, மற்றது பரமாத்மா.

பதம் 10.2.28
த்வம் ஏக ஏவாஸ்ய ஸத: ப்ரஸூதிஸ்
த்வம் ஸன்னிதானம் த்வம் அனுக்ரஹஸ் ச
த்வன்-மாயயா ஸம்வ்ருத-சேதஸஸ் த்வாம்
பஸ்யந்தி நானா ந விபஸ்சிதோ யே

த்வம்—(பகவானே) நீங்கள்; ஏக:—இரண்டற்ற ஒன்றாக இருப்பதால், சகலமும் நீங்களே; ஏவ—உண்மையில்; அஸ்ய ஸத:—இப்பொழுது காணப்படும் இப்பிரபஞ்சத் தோற்றத்தின்; ப்ரஸூதி:—மூலபிறப்பிடம்; தவம்—பகவானாகிய நீங்கள்; ஸன்னிதானம்—அனைத்தும் அழியும் பொழுது, இத்தகைய எல்லாச் சக்திகளின் பரிபாலனம்; த்வம்—பகவானாகிய தாங்கள்; அனுக்ரஹ: ச—மற்றும் காப்பவர்; த்வத்-மாயயா—உங்களுடைய மாயையான புறச்சக்தியால்; ஸம்வ்ருத-சேதஸ:—இத்தகைய மாயா சக்தியால் புத்தி கவரப்பட்டுள்ளவர்கள்; த்வாம்—உங்களை; பஸ்யந்தி—காண்கிறார்கள்; நானா—பல வகையான; ந—இல்லை; விபஸ்சித:—கற்றறிந்த பண்டிதர்கள் அல்லது பக்தர்கள்; யே—அவர்கள்.

பகவானே! பலவிதமான படைப்புக்களுடன் மூல மரமாகத் தோன்றியுள்ள இந்த ஜட உலகிற்குத் தாங்களே மூல பிறப்பிடமாவீர். இந்த ஜட உலகைக் காப்பவரும் தாங்களே. அழிவுக்குப்பின் தங்களுக்குள்ளேயே அனைத்தும் பரிபாலிக்கப்படுகின்றன. உங்களுடைய புறச்சக்தியால் மறைக்கப்பட்டுள்ளவர்களால் இத்தோற்றத்திற்குப் பின்னால் நீங்களிருப்பதைக் காண முடியாது. இவர்களுடைய பார்வை கற்றறிந்த பக்தர்களுடைய பார்வையல்ல.

பதம் 10.2.29
பிபர்ஷி ரூபாணி அவ போத ஆத்மா
க்ஷேமாய லோகஸ்ய சராசரஸ்ய
ஸத்வோபபன்னானி ஸுகாவஹானி
ஸதாம் அபத்ராணி முஹு: கலானாம்

பிபர்ஷி—நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்; ரூபாணி—மச்சம், கூர்மம், வராஹம், ராமர், நரசிம்மர் முதலான பல்வேறு ரூபங்களை; அவபோத: ஆத்மா—வெவ்வேறு அவதாரங்களை உடையவராக இருந்தும், தாங்கள் பரிபூரண ஞானமுடைய பரமனாகவே விளங்குகிறீர்கள்; க்ஷேமாய—எல்லோருடைய நன்மைக்காக, குறிப்பாக பக்தர்களுடைய நன்மைக்காக; லோகஸ்ய—அனைத்து ஜீவராசிகளின்; சர-அசரஸ்ய—அசைவன, அசையாதன ஆகிய; ஸத்வ-உபபன்னானி—இத்தகைய அவதாரங்களெல்லாம் திவ்யமானவை (ஸுத்த-ஸத்வ); ஸுக-அவஹானி—உன்னத ஆனந்தம் நிரம்பிய; ஸதாம்—பக்தர்களின்; அபத்ராணி—அமங்களத்தை அல்லது அழிவை; முஹு:—திரும்பத் திரும்ப; கலானாம்—பக்தர்கள் அல்லாதவர்களின்.

பகவானே! எப்பொழுதும் முழு அறிவுடன் விளங்கும் தாங்கள், எல்லா ஜீவராசிகளுக்கும் நல்லதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவதற்காக, பௌதிக சிருஷ்டியிலிருந்து வேறுபட்ட பல்வேறு உன்னத அவதாரங்களில் தோன்றுகிறீர்கள். இத்தகைய அவதாரங்களில் தோன்றும் பொழுது, சிறந்த சமயப் பற்றுள்ள பக்தர்களுக்கு நீங்கள் இன்பமளிக்கிறீர்கள், பக்தரல்லாதவர்களை அழித்து விடுகிறீர்கள்.

பதம் 10.2.30
த்வய் அம்புஜாக்ஷாகில-ஸத்வ-தாம்னி
ஸமாதீனாவேசித-சேதஸைகே
த்வத்-பாத-போதேன மஹத்-க்ருதேன
குர்வந்தி கோவத்ஸ-பதம் பவாப்திம்

த்வியி—உங்களில்; அம்புஜ-அக்ஷ—தாமரைக் கண்களையுடைய பகவானே; அகில-ஸத்வ-தாம்னி—யாரிடமிருந்து அனைத்தும் தோன்றுகின்றனவோ, யாரில் எல்லாச் சக்திகளும் உறைகின்றனவோ, அவர் எல்லா வாழ்வினங்களுக்கும் மூல காரணமாவார்; ஸமாதினா—(பரம புருஷரான உங்களுடைய சிந்தனையில்) இடையறாத தியானத்தாலும், உண்மையாக ஆழ்ந்துவிடுவதாலும்; ஆவேசித—முற்றிலும் ஆழ்ந்துள்ள, முற்றிலும் ஈடுபட்டுள்ள; சேதஸா—ஆனால் இத்தகைய ஒரு மனநிலையால்; ஏகே—எப்பொழுதும் உங்களுடைய தாமரைப் பாதங்களைச் சிந்திப்பதெனும் ஒரே மார்க்கம்; த்வத்-பாத-போதேன—உங்களுடைய தாமரைப் பாதங்களைப் போன்ற இத்தகைய ஒரு படகில் ஏறிக்கொள்வதன் மூலம்; மஹத்-க்ருதேன—மிகவும் சக்தி வாய்ந்த மூல இருப்பென்று கருதப்படுவதாகிய அல்லது மகாஜனங்களால் நிறைவேற்றப்படுவதாகிய அச்செயலால்; குர்வந்தி—அவை ஆக்குகின்றன; கோவத்ஸ-பதம்—ஒரு கன்றின் குளம்படி போன்ற; பவ-அப்திம்—பெரிய அறியாமைக் கடல்.

கண்களையுடைய பகவானே, எல்லா உலகிற்கும் உறைவிடமாகிய உங்களுடைய தாமரைப் பாதங்களில் மனதைப் பதித்து, அப்பாதங்களை அறியாமைக் கடலைக் கடப்பதற்குரிய படகாக ஏற்றுக் கொள்வதன் மூலமாக ஒருவன் மகாஜனங்களின் (சிறந்த ஞானிகள், முனிவர்கள் மற்றும் பக்தர்களின்) அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவனாகிறான். இந்த எளிய முறையைக் கொண்டு ஒரு கன்றின் குளம்படியைச் சுலபமாக கடந்துவிடுவது போல், அறியாமைக் கடலை ஒருவரால் கடந்து விட முடியும்.

பதம் 10.2.31
ஸ்வயம் ஸமுத்தீர்ய ஸுதுஸ்தரம் த்யுமன்
பவார்ணவம் பீமம் அதப்ர-ஸௌஹ்ருதா:
பவத்-பதாம்போருஹ-நாவம் அத்ர தே
நிதாய யாத்: ஸத்-அனுக்ரஹோ பவான்

ஸ்வயம்—சுயமாக; ஸமுத்தீர்ய—பூரணமாகக் கடக்கும்; ஸு-துஸ்தரம்—கடப்பதற்கு மிகக் கடினமான; த்யுமன்—சூரியனைப் போல் தோன்றி, இவ்வுலகின் அறியாமை இருளை அகற்றும் பகவானே; பவ-அர்ணவம்—அறியாமைக் கடல்; பீமம்—மிகக் கொடூரமான; அதப்ர-ஸௌஹ்ருதா:—வீழ்ந்த ஆத்மாக்களிடம் இடையறாத நட்புக் கொண்டுள்ள பக்தர்கள்; பவத்-பத-அம்போருஹ—உங்களுடைய தாமரைப் பாதங்கள்; நாவம்—கடப்பதற்குரிய படகு; அத்ர—இவ்வுலகில்; தே—அவர்கள் (வைஷ்ணவர்கள்); நிதாய—விட்டுச் சென்று; யாதா:—இறுதி இலக்கான வைகுண்டத்திற்கு; ஸத்-அனுக்ரஹ:—பக்தர்களிடம் எப்பொழுதும் அன்பும், இரக்கமும் கொண்டுள்ள; பவாஸ்—தாங்கள்.

பகவானே! பிரகாசிக்கும் சூரியனை ஒத்த நீங்கள் உங்களுடைய பகதர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு எப்பொழுதும் தயாராக இருக்கின்றீர். எனவே நீங்கள் ஒரு கற்பக மரம் (வாஞ்சா-கல்பதரு) என்று அறியப்படுகிறீர்கள். ஆசாரியர்கள் பயங்கரமான அறியாமைக் கடலைக் கடப்பதற்கு உங்களுடைய பத்ம பாதங்களில் முழுமையாகச் தஞ்சமடைந்து, பிறவிக் கடலைக் கடக்கும்பொழுது, எந்த முறையினால் அவர்கள் கடந்தனரோ அதை மண்ணுலகிலேயே விட்டுச் செல்கின்றனர். உங்களுடைய பிற பக்தர்களிடம் நீங்கள் மிகவும் கருணை கொண்டிருப்பதால், அவர்களுக்கு உதவும் பொருட்டு இம்முறையை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்.

பதம் 10.2.32
யே ‘ன்யே ‘ரவிந்தாக்ஷ விமுக்த-மானினஸ்
த்வய் அஸ்த-பாவாத் அவிசுத்த-புத்தய:
ஆருஹ்ய க்ருச்ரேண பரம் பதம் தத:
பதந்தி அதோ ‘நாத்ருத-யுஷ்மத்-அங்ரய:

யே அன்யே—எவரும், அல்லது மற்ற அனைவரும்; அரவிந்த அக்ஷ—தாமரைக்கண்களை உடையவரே; விமுக்த-மானின:—பௌதிக களங்கத்தின் பந்தத்திலிருந்து தாங்கள் விடுபட்டிருப்பதாக தவறாக எண்ணிக் கொண்டு; தவயி—உங்களிடம்; அஸ்ட-பாவத்—பலவிதமான மனக்கற்பனைகளைச் செய்த போதிலும், உங்களது தாமரைப் பாதங்களைப் பற்றி அதிகமான தகவலை அறியாத அல்லது விரும்பாத; அவிசுத்த-புத்தய:—புத்தி இன்னும் தூய்மையடையாமல், வாழ்வின் நோக்கத்தை அறியாதிருப்பவர்கள்; ஆருஹ்ய—அடைகின்றனர் என்றாலும்; க்ருச்ரேண—கடுந்தவங்களையும், விரதங்களையும், உழைப்பையும் மேற்கொள்வதன் மூலமாக; பரம் பதம்—மிக உயர்ந்த நிலையான; (அவர்களுடைய கற்பனைக்கேற்ப); தத:—அந்நிலையிலிருந்து; பதந்தி—அவர்கள் விழுகின்றனர்; அத:—மீண்டும் பௌதிக இருப்பிற்குள்; அனாத்ருத—பக்தி செய்வதை அலட்சியப்படுத்தி; யுஷ்மத்—உங்களுடைய; அங்ரய:—தாமரைப் பாதங்களுக்கு.

(பகவானின் தாமரைப் பாதங்களில் எப்பொழுதும் புகலிடம் தேடும் பக்தர்கள் ஒருபுறமிருக்க, பக்தரல்லாதவர்களும் முக்தியடைவதற்கு வேறுபட்ட முறைகளை ஏற்றுக்கொண்டுள்ள மற்றவர்களும் உள்ளனர். இவர்கள் கதி என்னவாகும் என்று ஒருவர் கேட்கக்கூடும். இக்கேள்விக்குப் பதிலாக பிரம்மதேவரும், பிற தேவர்களும் இவ்வாறு கூறினர்:) தாமரைக்கண்களையும் உடைய பகவானே, மிக உயர்ந்த நிலையை அடையக் கடுந்தவங்களையும், விரதங்களையும் ஏற்றுக் கொண்டுள்ள பக்தரல்லாதவர்கள், தாங்கள் முக்தியடைந்துவிட்டதாக எண்ணிக் கொண்ட போதிலும், அவர்களுடைய புத்தி தூய்மையற்றதாகவே உள்ளது. உங்களுடைய தாமரைப் பாதங்களை அவர்கள் அலட்சியப்படுத்துவதால் உயர்ந்த நிலையில் இருப்பதாக மனக்கற்பனை செய்யும் தங்களுடைய நிலையிலிருந்து அவர்கள் கீழே விழுகின்றனர்.

பதம் 10.2.33
ததா ந தே மாதவ தாவகா: க்வசித்
ப்ரஸ்யந்தி மார்காத் த்வயி பத்த-ஸௌஹ்ருதா:
த்வயாபிகுப்தா விசாந்தி நிர்பயா
வினாயகானீகப-மூர்தஸுப்ரபோ

ததா—அவர்களைப் (பக்தரல்லாதவர்களைப்) போல்; ந—மாட்டார்கள்; தே—அவர்கள் (பக்தர்கள்); மாதவ—ஸ்ரீதேவியின் கணவரான பகவானே; தாவகா:—பக்தி மார்கத்தைப் பின்பற்றும் பக்தர்கள்; க்வசித்—எந்த சூழ்நிலையிலும்; ப்ரஸ்யந்தி—விழுந்துவிட; மார்காத்—பக்தி மார்க்கத்திலிருந்து; த்வயி—உங்களுக்கு; பத்த-ஸௌஹ்ருதா:—உங்களது தாமரைப் பாதங்களில் முழுமையாக பற்றுக் கொண்டிருப்பதால்; த்வயி—உங்களால்; அபிகுப்தா:—எல்லா ஆபத்துகளிலிருந்தும் எப்பொழுதும் பாதுகாக்கப்படுகின்றனர்; விசரந்தி—அவர்கள் செல்கின்றனர்; நிர்பயா:—பயமின்றி; வினாயக-அனீகப்—பக்தி மார்கத்திற்கு எதிராகத் தடைகளை ஏற்படுத்தும் எதிரிகள்; மூர்தஸு—அவர்களது தலைகளின் மேல்; ப்ரபோ—பகவானே.

ஓ மாதவா, ஸ்ரீதேவியின் பதியாகிய பரமபுருஷரே, உங்களிடம் பூரண அன்பு கொண்டுள்ள பக்தர்கள் சிலசமயங்களில் பக்தி மார்க்கத்திலிருந்து விழ நேர்ந்தாலும், அவர்களை நீங்கள் காப்பாற்றுவதால், அவர்கள் பக்தரல்லாதவர்களைப் போல் வீழ்வதில்லை. இவ்வாறாக அவர்கள் எதிரிகளின் தடைகளை அச்சமின்றிக் கடந்து, பக்தித் தொண்டில் தொடர்ந்து முன்னேறுகின்றனர்.

பதம் 10.2.34
ஸத்வம் விசுத்தம் ஸ்ரயதே பவான் ஸ்திதௌ
சரீரிணாம் ஸ்ரேய-உபாயனம் வபு:
வேத-க்ரியா-யோக-தப:-ஸமாதிபிஸ்
தவார்ஹணம் யேன ஜன: ஸமீஹதே

ஸத்வம்—இருப்பை; விசுத்தம்—மூன்று ஜட இயற்கைக் குணங்களுக்கு மேற்பட்ட உன்னதமான; ஸ்ரயதே—ஏற்கிறீர்கள்; பவான்—பகவானாகிய நீங்கள்; ஸ்திதௌ—இந்த ஜட உலக பராமரிப்பின்போது; சரீரிணாம்—அனைத்து ஜீவராசிகளையும்; ஸ்ரேய:—மேலான மங்களத்தின்; உபாயனம்—நன்மைக்காக; வபு:—ஓர் உன்னத உருவம் அல்ல உடல்; வேத-க்ரியா—வேத வழிமுறைகளுக்கு ஏற்புடைய சடங்குகளால்; யோக—பக்தியைப் பயில்வதனால்; தப:—தவங்களினால்; ஸமாதிபி:—உன்னத இருப்பில் ஆழ்ந்துவிடுவதனால்; தவ—உங்களுடைய; அர்ஹணம்—வழிபாடு; யேன—இத்தகைய செயல்களால்; ஜன:—மனித சமூகம்; ஸமீஹதே—(அதன் கடமை உணர்ச்சியை உங்களுக்கு) அளிக்கிறது.

பகவானே, உலகைப் பராமரிக்கும் காலத்தில், ஜட இயற்கைக் குணங்களுக்கு அப்பாற்பட்ட பல உன்னத உடல்களை தாங்கள் வெளிப்படுத்துகிறீர்கள். இவ்வாறு தோன்றும்பொழுது, வேதச் சடங்குகள், அஷ்டாங்க-யோகம், தவ விரதங்கள் மற்றும் ஆழ்ந்த, நிலையான சமாதி போன்ற வேதச் செயல்களை இயற்றும் முறையைப் போதிப்பதன் மூலமாக ஜீவன்களுக்கு எல்லா நல்லாசிகளையும் நீங்கள் அருளுகிறீர்கள். இவ்வாறாக வேதக் கொள்கைகளால் நீங்கள் ஆராதிக்கப்படுகிறீர்கள்.

பதம் 10.2.35
ஸத்வம் ந சேத் தாதர் இதம் நிஜம் பவேத்
விக்ஞானம் அக்ஞான-பிதாபமார்ஜனம்
குண-ப்ரகாசைர் அனுமீயதே பவான்
ப்ரகாசதே யஸ்ய ச யேன வா குண:

ஸத்வம்—உன்னதமான, சுத்த-ஸத்வம்; ந—இல்லை; சேத்—என்றால்; தாத:—எல்லாச் சக்திகளுக்கும் களஞ்சியமே, எல்லாக் காரணங்களுக்கும் காரணமே; இதம்—இந்த; நிஜம்—சுயமான, ஆன்மீகமான; பவேத்—இருந்திருக்கக்கூடும்; விக்ஞானம்—உன்னத அறிவு; அக்ஞான-பிதா—பௌதிக குணங்களின் அறியாமையைப் போக்கும்; அபமார்ஜனம்—முற்றிலும் அழித்து; குண-ப்ரகாசை:—இத்தகைய உன்னத அறிவை விழிப்புறச் செய்வதால்; அனுமீயதே—தோன்றுகிறது; பவான்—பகவானாகிய தாங்கள்; ப்ரகாசதே—வெளிப்படுத்துகிறீர்கள்; யஸ்ய—யாருடைய; ச—மேலும்; யேன—எதனால்; வா—அல்லது; குண:—குணம் அல்லது புத்தி.

எல்லாக் காரணங்களுக்கும் காரணமான பகவானே, உங்களுடைய உன்னத உடல் ஜட இயற்கைக் குணங்களுக்கு மேற்பட்டதாக இல்லாதிருக்குமானால், ஜடத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாட்டை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது. ஜடஇயற்கையை ஆளும் உங்களது உன்னத உருவின் இருப்பால் வசீகரிக்கப்பட்டாலொழிய, உங்களது உன்னத இயற்கையை அறிவது மிகக் கடினம்.

பதம் 10.2.36
ந நாம-ரூபே குண-ஜன்ம-கர்மபிர்
நிரூபிதவ்யே தவ தஸ்ய ஸாக்ஷிண:
மனோ-வசோப்யாம் அனுமேய-வர்த்மனோ
தேவ க்ரியாயாம் ப்ரதியந்தி அதாபி ஹி

ந—இல்லை; நாம-ரூபே—நாமமும், ரூபமும்; குண—குணங்களுடன்; ஜன்ம—தோற்றம்; கர்மபி:—செயல்கள் அல்லது லீலைகள்; நிரூபிதவ்யே—ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட முடியவில்லை; தவ—உங்களுடைய; தஸ்ய—அவரது; ஸாக்ஷிண:—நேரடிப் பார்வையாளரான; மன:—மனதின்; வசோப்யாம்—வார்த்தைகள்; அனுமேய—கற்பனையான எண்ணம்; வர்த்மன:—வழி; தேவ—பகவானே; க்ரீயாயாம்—பக்திச் செயல்களில்; ப்ரதியந்தி—அவர்கள் உணர்கின்றனர்; அத அபி—எனினும்; ஹி—உண்மையில் (பக்தர்களால் உங்களை உணர்ந்தறிய முடியும்).

பகவானே! வெறும் மனக் கற்பனையில் ஈடுபடுபவர்களால் உங்களுடைய உன்னத நாமமும், உருவமும் அறியப்படுவதில்லை. பக்தித்தொண்டால் மட்டுமே உங்களுடைய நாமம், ரூபம் மற்றும் குணங்கள் ஆகியவற்றை அறிய முடியும்.

பதம் 10.2.37
ஸ்ருண்வன் க்ருணன் ஸம்ஸ்மரயம்ஸ ச சிந்தயன்
நாமானி ரூபாணி ச மங்களானி தே
க்ரியாஸுயஸ் த்வச்-சரணாரவிந்தயோர்
ஆவிஷ்ட-சேத ந பவாய கல்பதே

ஸ்ருண்வன்—இடையறாது பகவானைப் பற்றிக் கேட்டல் (ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ); க்ருணன்—(பகவானின் புனித நாமத்தையும் அவரது செயல்களையும்) ஜபித்தல் அல்லது பாடுதல்; ஸம்ஸ்மரயன்—நினைத்தல் (பகவானின் தாமரைப் பாதங்களையும் அவரது ரூபத்தையும் சிந்தித்தல்); ச—மேலும்; சிந்தயன்—(பகவானின் உன்னத செயல்களைப் பற்றி) ஆழ்ந்து சிந்தித்தல்; நாமானி—அவரது உன்னத நாமங்களை; ரூபாணி—அவரது உன்னத ரூபங்களை; ச—கூட; மங்களானி—உன்னதமானவை என்பதால் மங்களகரமான; தே—பகவானாகிய உங்களது; க்ரியாஸு—பக்தித் தொண்டில் ஈடுபடுவதில்; ய:—யாரொருவன்; த்வத்-சரண-அரவிந்தயோ:—உங்களுடைய தாமரைப் பாதங்களில்; ஆவிஷ்ட-சேதா:—(இத்தகைய செயல்களில்) முற்றிலும் ஆழ்ந்துவிட்ட பக்தன்; ந—இல்லை; பவாய—பௌதிக படித்தரத்திற்க்கு; கல்பதே—தகுதியுடையவன்.

உங்களுடைய தாமரைப் பாதங்களில் தங்களுடைய மனங்களை முழுமையாகப் பதித்துள்ளவர்களும், உன்னதமான உங்களுடைய நாம, ரூபங்களைப் பற்றி இடையறாது கேட்டு, பாடி, ஆழ்ந்து சிந்திப்பவர்களும், பிறர் அவற்றை நினைவுகூறும்படிச் செய்பவர்களுமான பக்தர்கள், பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருக்கும் பொழுதுகூட உன்னத படித்தரத்தில் நிலை பெற்றவர்களாக உள்ளனர். எனவே அவர்களால் பரமபுருஷரை அறிய முடியும்.

பதம் 10.2.38
திஷ்ட்யா ஹரே ‘ஸ்யா பவத: பதோ புவோ
பாரோ ‘பனீதஸ் தவ ஜன்மனேசிது:
திஷ்டயாங்கிதாம் த்வத்-பதகை: ஸுசோபனைர்
த்ரக்ஷ்யாம காம் த்யாம் ச தவானுகம்பிதாம்

திஷ்ட்யா—அதிர்ஷ்டவசத்தால்; ஹரே—பகவானே; அஸ்யா:—இதன் (உலகின்); பவத:—பகவானாகிய உங்களின்; பத:—இடத்தின்; புவ:—இந்த மண்ணில்; பார:—அசுரர்களால் உண்டாக்கப்பட்ட பாரம்; அபனீத:—இப்பொழுது அகற்றப்பட்டது; தவ—பகவானாகிய உங்களின்; ஜன்மனா—ஓர் அவதாரமாகத் தோன்றியதன் மூலம்; ஈசிது:—அனைத்தையும் ஆள்பவரான நீங்கள்; திஷ்டயா—மேலும் அதிர்ஷ்டத்தால்; அங்கிதாம்—குறிக்கப்பட்ட; த்வத்-பதகை:—உங்களுடைய தாமரைப் பாதங்களால்; ஸு-சோபனை:—சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகிய குறிகளால் உன்னதமாக அலங்கரிக்கப்பட்டுள்ள; த்ரக்ஷ்யாம—நிச்சயமாக நாங்கள் கவனிப்போம்; காம்—இந்த பூமியில்; த்யாம் ச—சுவர்க்கத்திலும் கூட; தவ அனுகம்பிதாம்—எங்களிடம் உங்களுக்குள்ள காரணமற்ற கருணையினால்.

பகவானே, இந்த பூமியிலுள்ள பெரிய அசுர பாரம் உங்களுடைய தோற்றத்தால் உடனே அகற்றப்பட்டு விடுகிறது. எனவே நாங்கள் பாக்கியசாலிகள். உண்மையில், உங்களுடைய தாமரைப் பாதங்களை அலங்கரிக்கும் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகிய சின்னங்களை, இம்மண்ணுலகிலும், சுவர்க்க லோகங்களிலும் எங்களால் காண முடியும் என்பதால், நாங்கள் பாக்கியசாலிகள் என்பதில் ஐய்யமில்லை.

பதம் 10.2.39
ந தே ‘பவஸ்யேச பவஸ்ய காரணம்
வினா வினோதம் பத தர்கயாமஹே
பவோ நிரோத: ஸ்திதிர் அபி அவித்யயா
க்ருதா யதஸ் த்வய் அபயாஸ்ரயாத்மனி

ந—இல்லை; தே—பகவானாகிய உங்களின்; அபவஸ்ய—சாதாரண ஜீவராசியைப் போல் பிறப்பு, இறப்பு அல்லது பராமரிப்பு ஆகியவற்றிற்கு உட்படாதவரின்; ஈச—பரமபுருஷரே; பவஸ்ய—உங்களுடைய தோற்றத்தின் அல்லது பிறப்பின்; காரணம்—காரணம்; வினா—இல்லாமல்; வினோதம்—லீலைகள் (என்று சொல்லப்பட்ட போதிலும், எக்காரணத்தினாலும் நீங்கள் இவ்வுலகிற்கு வரும்படி கட்டாயப்படுத்தப்படுவதில்லை); பத—எனினும்; தர்கயாமஹே—எங்களால் தர்க்கம் செய்ய முடியாது (ஆனால் அவை உங்களுடைய லீலைகள் என்பதை மட்டும் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்); பவ:—பிறப்பு; நிரோத:—மரணம்; ஸ்திதி:—பராமரிப்பு; அபி—கூட; அவித்யயா—மாயையான புறச் சக்தியால்; க்ருதா:—செய்யப்படும்; யத:—ஏனெனில்; த்வயி—உங்களுக்கு; அபய-ஆஸ்ரய—அனைவருக்கும் அச்சமற்ற புகலிடமாக விளங்குபவரே; ஆத்மனி—சாதராண ஜீவராசியின்.

பரமபுருஷரே, நீங்கள் கர்ம பந்தத்தினால் இவ்வுலகில் தோன்றும் ஒரு சாதாரண ஜீவராசியல்ல. எனவே, இவ்வுலகில் நீங்கள் தோன்றுவதற்கு அல்லது பிறப்பதற்கு, உங்களுடைய இன்பச் சக்தியைத் (லீலையை) தவிர வேறு காரணமில்லை. அதைப்போலவே, உங்களுடைய ஒரு பாகமாக உள்ள ஜீவராசிகள், உங்களது புறச்சக்தியினால் நடத்தப்படும்பொழுது தவிர, பிறப்பு, இறப்பு, முதுமை போன்ற துன்பங்களுக்கு ஆளாகவேண்டிய காரணமில்லை.

பதம் 10.2.40
மத்ஸ்யாஸ்வ-கச்சப-ந்ருஸிம்ஹ-வராஹ-ஹம்ஸ
ராஜன்ய-விப்ர-விபுதேஷு க்ருதாவதார:
த்வம் பாஸி நஸ் த்ரி-புவனம் ச யதாதுனேச
பாரம் புவோ ஹர யதூத்தம வந்தனம் தே

மத்ஸ்ய—மச்சாவதாரம்; அஸ்வ—குதிரை அவதாரம்; கச்சப—ஆமை அவதாரம்; ந்ருஸிம்ஹ:—நரசிம்ம அவதாரம்; வராஹ—பன்றி அவதாரம்; ஹம்ஸ—அன்னப்பறவை அவதாரம்; ராஜன்ய—பகவானக ராமச்சந்திரராகவும், மற்ற க்ஷத்திரியர்களாகவும் தோன்றிய அவதாரங்கள்; விப்ர—வாமண தேவரைப் பிராமணர்களாகத் தோன்றிய அவதாரங்கள்; விபுதேஷு—தேவர்களுக்கிடையில்; க்ருத-அவதார:—அவதாரங்களாகத் தோன்றினீர்கள்; த்வம்—பகவானாகிய நீங்கள்; பாஸி—தயவுகூர்ந்து காப்பாற்றுங்கள்; ந:—எங்களையும்; த்ரி-புவனம் ச—மூவுலகங்களையும்; யதா—மற்றும்; அதுனா—இப்பொழுது; ஈச—பரமபுருஷரே; பாரம்—பாரத்தை; புவ:—பூமியின்; ஹர—தயவு செய்து குறையுங்கள்; யதூத்தம—யதுக்களில் சிறந்தவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே; வந்தனம் தே—உங்களுக்கு எங்களுடைய வந்தனம்.

பரமபுருஷரே! உங்களது கருணையினால் உலகைக் காப்பாற்றுவதற்காக முன்பு நீங்கள் மீனாகவும், குதிரையாகவும், ஆமையாகவும், நரசிம்மதேவராகவும், பன்றியாகவும், அன்னப் பறவையாகவும், பகவான் இராமசந்திரராகவும், பரசுராமராகவும், தேவராகவும் மற்றும் வாமன தேவராகவும் அவதாரங்களை ஏற்றீர்கள். இப்பொழுது உங்களுடைய கருணையினால் இவ்வுலகிலுள்ள தொல்லைகளைக் குறைக்க மீண்டும் எங்களை காப்பாற்றி அருளுங்கள் யாதவ சிரேஷ்டரே, கிருஷ்ணா நாங்கள் மரியாதையுடன் எங்களுடைய வணக்கங்களை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

பதம் 10.2.41
திஷ்ட்யாம்ப தே குக்ஷி-கத: பர: புமான்
அம்சேன ஸாக்ஷாத் பகவான் பவாய ந:
மாபூத் பயம் போஜ-பதேர் முமூர்ஷோர்
கோப்தா யதூனாம் பவிதா தவாத்மஜ:

திஷ்ட்யா—அதிர்ஷ்டத்தால்; அம்ப—தாயே; தே—உங்களுடைய; குக்ஷி-கத:—கர்ப்பத்தில்; பர:—பரமனான; புமான்—பரமபுருஷர்; அம்சேன—அவரது எல்லா சக்திகளுடனும், எல்லா அங்க உறுப்புகளுடனும்; ஸாக்ஷாத்—நேரடியாக; பகவான்—பரமபுருஷர்; பவாய—மங்களத்திற்காக; ந:—எங்கள் அனைவரின்; மா அபூத்—ஒருபோதும் வேண்டாம்; பயம்—அச்சப்பட; போஜ-பதே:—போஜ வம்சத்து அரசனான கம்சனிடமிருந்து; முமூர்ஷோ:—பகவானால் கொல்லப்படுவதென்று முடிவு செய்துவிட்ட; கோப்தா:—காவலர்; யதூனம்—யது வம்சத்தின்; பவிதா—ஆவார்; தவ ஆத்மஜ:—உங்கள் புதல்வர்.

தாயே தேவகி, உங்களுடைய நல்லதிர்ஷ்டத்தாலும், எங்களுடைய நல்லதிர்ஷ்டத்தாலும், பரமபுருஷர் பலதேவரைப் போன்ற அவரது எல்லா அம்சங்களுடனும் இப்பொழுது உங்களுடைய கர்ப்பத்தில் தோன்றியிருக்கிறார். உங்களது நித்திய புதல்வரான கிருஷ்ணர், யது வம்சம் முழுவதற்கும் காவலராக விளங்குவார்.

பதம் 10.2.42
ஸ்ரீ-சுக: உவாச
இதி அபிஷ்டூய புருஷம் யத்-ரூபம் அனிதம் யதா
ப்ரஹ்மேசானெள புரோதாய தேவா: ப்ரதியயுர் திவம்

ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்விதமாக; அபிஷ்டூய—பிரார்த்தனைகள் செய்து; புருஷம்—பரமபுருஷரிடம்; யத்-ரூபம்—யாருடைய ரூபம்; அனிதம்—உன்னத தன்மையுடைய; யதா—போன்ற; ப்ரஹ்ம—பிரம்மதேவர்; ஈசானௌ—மற்றும் சிவபெருமான்; புரோதாய—அவர்களை முன் நிறுத்தி; தேவா:—எல்லாத் தேவர்களும்; ப்ரதியயு:—திரும்பினர்; திவம்—அவர்களுடைய சுவர்க்க லோக வசிப்பிடங்களுக்கு.

இவ்வாறு பரமபுருஷராகிய பகவான் விஷ்ணுவிடம் பிரார்த்தனைகளைச் செய்தபின், பிரம்மதேவரையும், சிவபெருமானையும் தலைமையாகக் கொண்ட எல்லா தேவர்களும், சுவர்க்க லோகங்களில் உள்ள அவரவர் வசிப்பிடங்களுக்குத் திரும்பினார்.


ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “கர்ப்பத்திலிருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தேவர்களின் பிரார்த்தனைகள்” எனும் தலைப்பை கொண்ட இரண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare