அத்தியாயம் – 14
பகவான் கிருஷ்ணரை பிரம்மதேவன் வழிபடுதல்
பதம் 10.14.1 : பிரம்மதேவன் கூறினார்: போற்றுதற்குரிய பகவானே! நீரே முழுமுதற் கடவுளும், வணங்குதற்குரிய தெய்வமும் ஆவீர். அதனால் உம்மை மகிழ்விப்பதற்காக எனது பணிவான வந்தனங்களையும், பிரார்த்தனைகளையும் உனக்கு நான் அர்ப்பணிக்கின்றேன். ஓ ஆயர் குலத்தலைவனின் மைந்தனே, வானில் தவழும் மேகத்தினைப் போல் உமது உன்னத உடல் கருநீல வண்ணமுடையதாக இருக்கின்றது. நீர் அணிந்திருக்கும் ஆடையோ மின்னலைப் போன்று ஒளி வீசுகின்றது. உமது முகத்தின் எழில், உமது செவிகளில் தொங்கும் குன்றிமணிக் குண்டலங்களினாலும், தலையில் சூடியிருக்கும் மயிலிறகினாலும் மேலும் அதிகரிக்கின்றது. வனத்திலுள்ள மலர்களினாலான மாலையினை அணிந்துகொண்டு, நிலை மேய்க்கும் கோலினையும், ஊதும் கொம்பு மற்றும் புல்லாங்குழலினையும், ஒரு கவளம் உணவினையும் நீர் உமது கரங்களில் ஏந்திக்கொண்டு மிக்க அழகுடன் காட்சி தருகின்றீர்.

பதம் 10.14.2 : போற்றுதற்குரிய பகவானே, உமது பக்தர்களின் இச்சைகளை நிறைவேற்றுவதற்காகத் தோன்றி, எனக்குக் கருணை காட்டியிருக்கும் உமது உன்னத உடலின் சக்தியினை அளவிடுவதற்கு என்னாலோ அல்லது பிறராலோ நிச்சயம் முடியாது. எனது மனம் உலகியலிலிருந்து முற்றிலும் விலகியிருந்த போதிலும்கூட, என்னால் உமது சுயவடிவத்தினை அறிந்து கொள்ள முடியவில்லை. பிறகு என்னால் எவ்வாறு நீர் உமக்குள் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆனந்தத்தினை அறிய முடியும்?

பதம் 10.14.3 : யாவர் தமது நிலைநிறுத்தப்பட்டச் சமுதாய நிலைகளில் இருக்கும் பொழுதே யூக அறிவு முறைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, தமது உடல், உள்ளம், சொல்லுடன் அனைத்து மரியாதைகளையும் உமக்கும், உமது செயல்களுக்கும் அர்ப்பணித்து, உம்மாலும், உமது தூய பக்தர்களாலும் அருளிச் செய்யப்பட்ட சரிதங்களிடத்துத் தமது வாழ்வினை ஒப்படைக்கின்றனரோ, அவர்கள், மூவுலகங்களிலும் அவராலும் வெல்ல முடியாதவராக நீர் இருந்தபோதிலும், உமது மேலாண்மையினை நிச்சயம் வெல்வர்.

பதம் 10.14.4 : போற்றுதற்குரிய பகவானே! உமக்குச் செய்யும் பக்தித் தொண்டே ஆத்ம உணர்வு பெறுவதற்கான சிறந்த வழியாகும். யாரேனும் ஒருவன் இப்பாதையினைப் புறக்கணித்து யூக ஞானத்தினை வளர்ப்பதில் ஈடுபடுவானென்றால், அவன் மிகுந்த தொல்லைக்கு ஆளாவதோடு தான் விரும்பிய பலனையும் அடைவதில்லை. வெறும் உமியைக் குத்துபவனுக்கு அரிசி கிடைக்காதது போல் கற்பனா யூகம் செய்பவனால் ஆத்ம உணர்வு பெறமுடியாது. அவன் அடையக் கூடியது துன்பம் ஒன்றேயாகும்.

பதம் 10.14.5 : எல்லாம் வல்ல பகவானே! இவ்வுலகில் பல யோகிகள் தமது முயற்சிகள் அனைத்தையும் உமக்கு ஈடுபடுத்துவதோடு தங்களது அறச்செயல்களை நம்பிக்கையுடன் நிறைவேற்றியும் பக்தித் தொண்டு எனும் நிலையினை அடைந்தனர். உம்மைப் பற்றிக் கேட்டல், ஜெபித்தல் என்னும் முறைகளினால் நிறைவு செய்யப்பட்ட பக்தித் தொண்டின் மூலம் அவர்கள் உம்மை உணர்ந்தனர் என்பதோடு, குற்றமற்றவரே, அவர்களால் உம்மை எளிதில் சரணடைந்து உமது உயர்ந்த இருப்பிடத்தை அடையவும் முடிந்தது.

பதம் 10.14.6 : எனினும் பக்தி இல்லாதவரால் உமது முழு வடிவத்தினை ஒருக்காலும் உணர முடியாது. இருந்தபோதிலும் அவர்கள் தமது இதயத்தில் இருக்கும் பரமாத்மாவுடன் நேரடி உணர்வினை வளர்த்துக் கொள்வதின் மூலம், உமது விரிவான அருவ பிரம்மத்தினை உணர்வது அவர்களுக்குச் சாத்தியமாகும். இதனைக்கூட அவர்கள், பெளதிக வேறுபாட்டுக் கருத்துக்கள் அனைத்திலுமிருந்து தமது மனம் மற்றும் புலன்களைத் தூய்மை செய்தும், புலன்மீதான பற்றினை ஒழித்த பிறகுமே அடைகின்றனர். இதன் பின்னரே உமது அருவத் தன்மையானது அவர்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது.

பதம் 10.14.7 : ஒரு காலத்தில் கற்றறிந்த அறிஞர்களோ அல்லது விஞ்ஞானிகளோ பூமியிலுள்ள அணுக்கள் எல்லாவற்றையும் பனித்துளியின் கூறுகளையும், சூரியனிலிருந்தும், நட்சத்திரங்களிலிருந்தும் வீசும் ஒளிக்கதிர்களிலுள்ள அணுத்திரள்களையும் கூட எண்ணுகின்ற திறன் பெறுவர். அவர்களில் யாரால், அனைத்து உயிர்களின் நன்மைக்காகவும் இப்பூமிக்கு இறங்கி வந்திருக்கும் முழுமுதற் கடவுளை உம்மிடமிருக்கும் அளவற்ற உன்னத குணங்களை எண்ண முடியும்?

பதம் 10.14.8 : போற்றுதற்குரிய பகவானே! உமது அளவற்ற கருணை வேண்டி நம்பிக்கையுடன் காத்திருப்பவன், அக்காலக் கட்டத்தில் தான் செய்த முன்னைய பாவங்களின் பலன்களைப் பொறுமையுடன் அனுபவித்துக் கொண்டும், தனது மனம், வாக்கு, காயத்தினால் உமக்கு மரியாதையுடன், தனது வணக்கங்களையும் அர்ப்பணித்துக் கொண்டிருந்தானென்றால் அவன் நிச்சயம் விடுதலை பெறுவதற்குத் தகுதியுடையனாவான். ஏனெனில் அவ்விடுதலையானது அவனுக்கு மரபுவழியாக வரும் உரிமையாகி விடுகிறது.

பதம் 10.14.9 : போற்றுதற்குரிய பகவானே! எனது அநாகரிகமான அருவருக்கத்தக்க நடத்தையினைப் பாரும். அளவற்றவராகவும், ஆதிபரமாத்மாவாகவும் இருக்கும் நீர், மாயாசக்திகளின் தலைவர்களைக் கூட மயங்கச் செய்யும் சக்தியுடையவராளீர், இருந்தும் உமது பலத்தைச் சோதிப்பதற்காக உம்மை மறைப்பதற்கு எனது மாயா சக்தியை நான் பயன்படுத்த முயன்றேன். உம்மோடு ஒப்பிடுவதற்கு நான் யார்? பெரு நெருப்பிற்கு முன்னே சிறு நெருப்புப் பொறி போன்றவன் நான்.

பதம் 10.14.10 : ஆகையினால், ஓ குற்றமற்றவரே! எனது குற்றங்களை மன்னித்தருள்வீராக. நான் ரஜோ குணத்தில் பிறந்த மூடனாவேன். அதனால்தான் உமது மேலாண்மையிலிருந்து சுதந்திரம் உடைய நெறியாளனாக என்னை நான் கருதிக் கொண்டேன். எனது கண்கள் அறியாமை இருளில் குருடாகிப் போனதினால் இப்பிரபஞ்சத்தின் பிறப்பற்ற படைப்பாளனாக என்னை நான் நினைத்துவிட்டேன். நான் உமது தொண்டன் ஆதலினால் உமது கருணைக்கு உரியவன் என்பதை நீர் அருள்கூர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பதம் 10.14.11 : எனது கையினால் அளந்தால் ஏழடி உயரமிருக்கும் சிறிய பொருளாகிய நான் யார்? ஜட இயற்கை, பௌதிகச் சக்தி. ஆணவம், ஆகாயம், காற்று, நீர், நிலம் போன்றவற்றினால் ஒரு பானை போன்றிருக்கும் பிரபஞ்சத்துடன் நான் இணைக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் உமது மகிமை என்ன? சாளரங்களின் வழியே பறந்துவரும் தூசிகள் போன்று எண்ணற்ற பிரபஞ்சங்கள் உமது உடலிலுள்ள ரோமக் கால்களின் வழியே மிதந்து செல்கின்றன.

பதம் 10.14.12 : ஒ, பகவான் அதோக்ஷஜரே! தனது கருப்பையினுள் இருக்கும் குழந்தை தன்னைக் கால்களினால் உதைப்பதை ஓர் அன்னை குற்றமாகக் கருதுவாளா? பல்வேறு தத்துவ ஞானிகளால் உண்மையென்றும், பொய்யென்றும் தீர்மானிக்கப்படும் எதுவும் உமது உதரத்திற்கு வெளியே இருக்கின்றதா?

பதம் 10.14.13 : போற்றுதற்குரிய பகவானே, மூவுலகங்களும் இறுதியில் ஊழி வெள்ளத்தில் மூழ்கும்பொழுது, உமது அம்சாவதாரமான நாராயணர் அவ்வெள்ளத்தின் மேல் பள்ளி கொண்டிருப்பாரென்றும், அப்போது அவரது நாபியிலிருந்து தோன்றும் தாமரை மலரிலிருந்து பிரம்மதேவன் பிறப்பார் என்றும் கூறப்படுகிறது. உண்மையில் இவ்வார்த்தைகள் பொய்மையன்று. நான் உம்மிடமிருந்து பிறக்கவில்லையா என்ன?

பதம் 10.14.14 : ஓ, பரமநெறியாளரே, உடல் பெற்ற உயிர்கள் அனைத்திலும் நீரே பரமாத்மாவாகவும், படைக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் நீரே நித்திய சாட்சியாகவும் இருப்பதினால் நீர் ஆதி நாராயணர் இல்லையா? உண்மையில் பகவான் நாராயணர் உமது விரிவாவார். அவர் நாராயணர் என்றழைக்கப்படுவதன் காரணம் அவரே பிரபஞ்சத்தின் ஆதி வெள்ளத்திற்கு ஆதாரமாக இருக்கின்றார். அவர் சத்தியமானவர் ஆவார். ஏனெனில் அவர் உமது மாயா சக்தியின் படைப்பல்லர்.

பதம் 10.14.15 : போற்றுதற்குரிய பகவானே, இப்பிரபஞ்சம் முழுவதற்கும் அடைக்கலமாக விளங்கும் உமது உன்னத உடல், வெள்ளத்தின் மீது உண்மையில் இருக்க, நான் தேடியபோது நீர் ஏன் எனது கண்களுக்குக் காணப்படவில்லை? மேலும் எனது இதயத்தினுள்ளும் உம்மை நான் நன்கு காண முடியாதவனாக இருந்த போதிலும், நீர் ஏன் உம்மை திடீரென்று வெளிப்படுத்தினீர்?

பதம் 10.14.16 : போற்றுதற்குரிய பகவானே! இந்த அவதாரத்தில், மாயையினைக் கட்டுப்படுத்தும் உயர்நெறியாளர் நீர் ஒருவரே என்பதை நீர் நிரூபித்திருக்கின்றீர். இப்போது நீர் இப்பிரபஞ்சத்தில் இருந்த போதிலும், இப்பிரபஞ்சப் படைப்பு முழுவதும் உமது உன்னத உடலினுள்ளேயே இருக்கின்றது-இவ்வுண்மையினை, உமது அன்னை யசோதைக்கு, உமது வயிற்றினுள் இருக்கும் பிரபஞ்சத்தினை நீர் காட்சிப்படுத்தியதின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றீர்!

பதம் 10.14.17 : நீர் உள்ளிட்ட இப்பிரபஞ்சம் உமது வயிற்றினுள் எப்படி வெளிப்பட்டதோ, அதே பிரபஞ்சம், அதே வடிவத்தில்தான் இப்போது புறத்தேயும் வெளிப்பட்டிருக்கிறது. உமது கற்பனைக்கெட்டாத சக்தியினாலன்றி மேலே கூறியது எவ்வாறு நடை பெறக்கூடும்?

பதம் 10.14.18 : நீர் இன்று உம்மையும், உமது கற்பனைக்கெட்டாத சக்தியினால் படைக்கப்பட்ட இத்தோற்றங்களையும் இன்று எனக்குக் காண்பிக்கவில்லையா? முதலில் நீர் தனியாகத் தோன்றினீர். பிறகு நீர் உம்மை பிருந்தாவனத்தில் உள்ள கன்றுகளாகவும், உமது நண்பர்களான ஆயர்குலச் சிறுவர்களாகவும் தோன்றச் செய்தீர். அடுத்து நீர் சம எண்ணிக்கையுடைய சதுர்ப்புஜ விஷ்ணு வடிவங்களாகத் தோன்றினீர். இவ்வடிவங்கள் அனைத்தும் நான் உள்ளிட்ட உயிர்கள் அனைவராலும் வணங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அதன் பிறகு நீர் சம எண்ணிக்கையுடைய முழுப் பிரபஞ்சங்களாகத் தோன்றினீர். இப்போது நீர் இறுதியில், இரண்டற்ற ஒன்றும், அளவற்றதுமான உமது பரம முழுமெய்ப்பொருள் வடிவத்திற்குப் திரும்பியுள்ளீர்.

பதம் 10.14.19 : உமது உண்மையான உன்னத நிலையினை அறியாதவர்களுக்கு நீர், உமது கற்பனைக்கெட்டாத சக்தியின் விரிவினால் உம்மால் தோற்றுவிக்கப்பட்ட பெளதிக உலகின் ஒரு பாகமாக காட்சியளிக்கின்றீர். இவ்வாறு பிரபஞ்சப் படைப்பில் நீர் என்னைப் போல் (பிரம்மதேவனாக) தோன்றுகின்றீர், அதனைக் காப்பதில் உம்மைப்போல் (விஷ்ணுவாக) தோன்றுகின்றீர், அதனை அழிப்பதில் நீர், முக்கண்ணனாகத் (சிவபெருமானாக) தோன்றுகின்றீர்.

பதம் 10.14.20 : ஓ பகவானே, ஓ பரம படைப்பாளரே, எஜமானரே, நீர் பெளதிகப் பிறப்பு எடுத்ததில்லை. இருந்தும் நம்பிக்கையற்ற அசுரர்களின் வீண் பெருமையினை அழித்து, உமது பக்தர்களுக்குக் கருணை காட்ட வேண்டும் என்பதற்காக நீர், தேவர்களிடத்தும், முனிவர்களிடத்தும், மனிதர்களிடத்தும், விலங்குகளிடத்தும், ஏன் நீர்வாழ் உயிர்களிடத்தும் கூடப் பிறப்பெடுக்கின்றீர்.

பதம் 10.14.21 : ஓ பரம்பொருளே! ஓ முழுமுதற் கடவுளே! ஓ பரமாத்மாவே! ஓ யோகேஸ்வரரே! உமது லீலைகள் இம்மூவுலகங்களிலும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆயினும் உமது ஆன்மீகச் சக்தியை நீர் எங்கே, எவ்வாறு, எப்பொழுது பயன்படுத்தி இவ்வெண்ணற்ற லீலைகளை நிகழ்த்துகின்றீர் என்பதை யாரால் அறியக் கூடும்? உமது ஆன்மீகச் சக்தி எவ்வாறு செயல்படுகிறது என்பது ஒருவராலும் அறிந்து கொள்ள முடியாது.

பதம் 10.14.22 : ஆகையினால் ஒரு கனவைப் போன்ற இப்பிரபஞ்சமானது இயற்கையில் பொய்ம்மையேயாகும், இருந்தபோதிலும் அது மெய்யாகத் தோன்றுகிறது. இவ்வாறு அது ஒருவனது உணர்வினை மறைத்து மீண்டும் மீண்டும் ஒருவனைத் துன்பத்திற்காளாக்குகிறது; இப்பிரபஞ்சம் உண்மைபோல் தோன்றுகிறது. ஏனென்றால் இது உமது மாயா சக்தியினின்று தோன்றுகிறது. உமது அளவற்ற உன்னத வடிவங்களோ முற்றிலும் நித்திய ஆனந்தமும், ஞானமும் நிறைந்தவையாக இருக்கின்றன.

பதம் 10.14.23 : நீர் ஒருவரே பரமாத்மா, ஆதி முழுமுதற் கடவுள், முழு மெய்ப்பொருள்-சுயமாகத் தோன்றியவர், ஆரம்பமும், முடிவும் அற்றவர் ஆவீர். நீர் நித்தியர், குற்றமற்றவர், பரிபூரணர், பகையற்றவர், பெளதிக விஷயங்களிலிருந்து விடுதலை பெற்றவரும் ஆவீர். உமது ஆனந்தத்திற்கு எந்த விதமானத் தடையுமில்லை. அதுபோல் பெளதிக மாசுக்களுடன் உமக்கு எந்தவிதமான தொடர்புமில்லை. உண்மையில் நீர் அழிவற்ற அமரத்துவ அமிர்தம் ஆவீர்.

பதம் 10.14.24 : சூரியனைப் போன்ற ஆன்மீக குருவிடமிருந்து, ஞானத்தின் தெளிந்த பார்வை பெற்றிருப்பவனால் உம்மை, ‘இவ்வாறு அனைத்து ஆத்மாக்களினுள்ளும் ஆத்மாவாக விளங்கும் பரமாத்மாவாகப் பார்க்க முடியும். மேலும் உமது ஆதி வடிவத்தினை அறிந்து கொண்டவர்கள் மாயா மலிந்த வாழ்க்கைக் கடலினைக் கடக்கும் திறனுடையோராகின்றனர்.

பதம் 10.14.25 : ஒரு கயிற்றினைத் தவறாகப் பாம்பென்று கருதுவோன் அச்சமடைகிறான். எனினும் அது கயிறுதான் பாம்பல்ல என்று உணர்ந்து கொண்டபின் அச்சந்தவிர்க்கிறான். அதுபோல் உம்மை எல்லா ஆத்மாக்களிலும் இருக்கும் பரமாத்மாவாக அறிந்துகொள்ளாதவனுக்கு பரந்து பட்ட மாயா பௌதிக வாழ்க்கை உண்டாகிறது. ஆனால் உம்மைப் பற்றிய ஞானமோ அவ்வாழ்க்கை நீங்குவதற்குக் காரணமாகிறது.

பதம் 10.14.26 : பெளதிகத்தளை மற்றும் பௌதிக விடுதலை என்னும் இரு கருத்துக்களும் அறியாமையின் வெளிப்பாடுகளாகும். ஒருவன் தூய ஆத்மாவானது, ஜடத்திலிருந்து வேறானது மட்டுமல்ல; முழு உணர்வுடையதுமாகும் என்று சரியாகப் புரிந்துகொள்ளும்பொழுது, உண்மை ஞானத்தின் இலக்கிற்கு வெளியே இருந்த மேற்கூறிய கருத்துக்கள் உடனே மறைகின்றன. அச்சமயம், சூரியனது நோக்கில் இரவு மற்றும் பகலுக்கு எவ்வாறு முக்கியத்துவம் இல்லையோ அது போல் பந்தம், மற்றும் விடுதலைக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் இருப்பதில்லை.

பதம் 10.14.27 : நீர் மாயையிலிருந்து வெளிப்படும் ஏதோ ஓர் தோற்றமென்றும், உண்மையிலேயே ஆத்மாவாக இருக்கும் உம்மைப் பெளதிக உடலென்றும் கருதும் அறியாமை மிக்க மனிதர்கள் மூடத்தனத்தைச் சற்றுக் காண்பீராக. இம்மூடர்கள் பரமாத்மாவானது உமக்கு வெளியே தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று என்று முடிவு செய்கின்றனர்.

பதம் 10.14.28 : ஒ, எல்லையில்லாத பகவானே! தெய்வீக பக்தர்கள் உம்மிடமிருந்து எல்லாம் வேறாக இருக்கின்றன என்னும் எண்ணத்தைப் புறக்கணித்து தமது உடல்களினுள்ளேயே உம்மைத் தேடுகின்றனர். வேறுபாடு காணும் மனிதர்கள் தம் முன்னே கிடப்பது பாம்பு என்னும் மாயையிலிருந்து விடுபடும்வரை கயிற்றின் உண்மைத் தன்மையினை எங்ஙனம் போற்றுவர்?

பதம் 10.14.29 : போற்றுதற்குரிய பகவானே! உமது தாமரைத் திருவடிகளின் அணுவளவு கருணையினை ஒருவன் பெற்றால்கூட அவனால் உமது மகிமையினைப் புரிந்துகொள்ள முடியும். இதற்கு மாறாக வேதத்தினை நீண்ட நெடுங்காலமாகக் கற்றவர்களாக இருப்பினும், அவர்கள் உம்மை யூக அறிவினால் அறிய முயற்சிப்பார்களேயானால் அவர்களால் நிச்சயம் உம்மை அறிய முடியாது.

பதம் 10.14.30 : ஆகையினால் போற்றுதற்குரிய பகவானே! இப்பிறப்பில் நான் பிரம்மாவாக இருப்பினும் அல்லது மறுபிறப்பில் நான் எதுவாக பிறப்பினும் உமது பக்தர்களில் ஒருவனாக நான் எண்ணப்படும் பாக்கியம் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். நான் எப்பிறப்புப் பெற்றாலும், ஏன், விலங்காகப் பிறப்பினும் கூட உமது பக்தித்தொண்டில் மட்டுமே நான் ஈடுபட வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்.

பதம் 10.14.31 : ஓ, எல்லாம் வல்ல இறைவனே! பிருந்தாவனத்திலுள்ள பசுக்களும், கோபிகா ஸ்திரீகளும் எத்துணை பாக்கியசாலிகள். நீர் கன்றுகளைப் போன்றும், அவர்களது குழந்தைகளைப் போன்றும் உருமாறி, உமக்கு முழு திருப்தி ஏற்படும் வரையில் அவர்களின் முலைப்பால் என்னும் அமிர்தம் உண்டீர். ஆதிகாலந்தொட்டு, இன்று வரையிலும் செய்யப்படும் வேத வேள்விகள் கூட அத்துணை திருப்தியளித்ததில்லை.

பதம் 10.14.32 : ஓ, நந்த மகாராஜனும், விரஜ பூமியில் வசிப்போரும் எத்துணை பாக்கியசாலிகள்! அவர்களது அதிர்ஷ்டத்திற்கு அளவே இல்லை. ஏனென்றால் முழு மெய்ப்பொருளாகவும் பரமானந்தத்திற்கு ஆதாரமான பரப்பிரம்மமாக இருப்பவரும் அல்லவா அவர்களது நண்பனாக இருக்கின்றனர்.

பதம் 10.14.33 : பிருந்தாவனத்திலுள்ளோரின் பாக்கியமானது கற்பனைக்கும் எட்டாததாக இருந்தபோதிலும், சிவபெருமானின் தலைமையின் கீழ் பல்வேறு புலன்களுக்கும் ஆதிபத்தியத் தேவர்களாக விளங்கும் நாங்கள் பதினோரு தேவர்களும் மிகுந்த பாக்கியசாலிகளே ஆவோம், ஏனென்றால் பிருந்தாவனத்தைச் சேர்ந்த இப்பக்தர்களின் புலன்கள் என்னும் குவளைகளின் மூலமே நாங்கள் உமது தாமரைத் திருவடிகளிலிருந்து வரும் அமிர்தத்தினைத் தொடர்ந்து பருகிக் கொண்டிருக்கின்றோம்.

பதம் 10.14.34 : கோகுலத்தில் ஏதேனும் ஒன்றாக நான் பிறந்து அங்கு வசிப்போரின் தாமரைத் திருவடிகளிலுள்ள தூசி என் தலைமீது விழுமானால் அதுவே எனக்குப் பெரும் பாக்கியமாகும். அவர்களது உயிரும், ஆத்மாவாகவும் இருப்பவர் முழுமுதற் கடவுளான முகுந்தனே ஆவார். அவரது தாமரைத் திருவடிகளின் தூசியினை வேத மந்திரங்கள் இன்னும் தேடிக்கொண்டேயிருக்கின்றன.

பதம் 10.14.35 : எங்கும் உம்மைக் காண முடியும் என்பதைக் காட்டிலும், வேறு என்ன நன்மை பெறலாம் என்று சிந்திக்க முயன்றதின் விளைவினால் எனது மனம் குழப்பமுற்றது. எல்லா ஆசிகளின் உருவமாக நீரே விளங்குகின்றீர். அவ்வாசிகளை நீர் பிருந்தாவனத்திலுள்ள ஆயர்குலத்தினர்க்கே அருள்கின்றீர். பக்தையைப் போல் வேடமிட்டு வந்த பூதனாவிற்கும் அவளது உறவினர்க்கும் நீர் ஏற்கெனவே உம்மை அளித்துவிட ஏற்பாடு செய்திருந்தீர். ஆகையினால் தமது இல்லங்கள், செல்வம், நண்பர்கள், பாசமிக்க உறவினர்கள், உடல்கள், குழந்தைகள், மற்றும் தமது உயிர், மனம் எல்லாவற்றையும் உமக்கே அர்ப்பணித்திருக்கும் இப்பிருந்தாவனத்திலுள்ள பக்தர்களுக்கு அளிப்பதற்கு உம்மிடம் வேறு என்ன இருக்கிறது?

பதம் 10.14.36 : போற்றுதற்குரிய பகவான் கிருஷ்ணரே! மக்கள் உமது பக்தர்களாகாத வரையில் அவர்களது உலகியல் பற்றுக்களும், விருப்பங்களும் திருடர்களாகவும், அவர்களது இல்லங்கள் சிறைக் கொட்டடிகளாகவும், அவர்களது உறவினர்கள்மீது அவர்கள் கொண்ட பாசம் கால்நடை விலங்குகளாகவும் இருக்கும்.

பதம் 10.14.37 : ஓ, பிரபுவே, உலக வாழ்க்கையோடு உமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையென்ற போதிலும், உம்மைச் சரணடைந்திருக்கும் பல்வகை உயர்ந்த ஆனந்தங்களுக்காக நீர் இப்பூமிக்கு வந்து உலக வாழ்க்கையினைப் பாவனை செய்கின்றீர்.

பதம் 10.14.38 : சிலர் கூறுகின்றனர்: “கிருஷ்ணரைப் பற்றி எங்களுக்கு எல்லாம் தெரியும்” என்று அவர்கள் அவ்வாறே நினைக்கட்டும், என்னைப் பொருத்தவரையில் இவ்விஷயத்தைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆயினும் பகவானே, என்னால் ஒன்று மட்டும் கூறமுடியும். உமது வைபவங்கள் அனைத்தும் எனது மனம், வாக்கு, காயத்திற்கு அப்பாற்பட்டவை என்று.




பதம் 10.14.40 : போற்றுதற்குரிய பகவானே, நீர் தாமரை மலர் போன்றிருக்கும் விருஷ்ணி குலத்திற்கு இன்பம் அருளி, பூமியினை உடைய மகா சமுத்திரங்களாகவும், தேவர்களாகவும், அந்தணர்களாகவும், பசுக்களாகவும் விரிவடைந்திருக்கின்றீர். அதர்மத்தின் இருட்டினை அறவே நீக்கி இப்பூமியில் தோன்றிய அசுரர்களை எதிர்க்கின்றீர். ஓ, முழுமுதற் கடவுளே! இப்பிரபஞ்சம் இருக்கும் வரையிலும், சூரியன், ஒளி வீசும் வரையிலும் நான் எனது வந்தனங்களை உமக்கு அர்ப்பணிப்பேன்.

பதம் 10.14.41 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு வழிபாடு செய்து, பிரம்மதேவன் தனது போற்றுதற்குரிய பகவானான முழுமுதற் கடவுளை மும்முறை வலம் வந்து அவரது தாமரைத் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். பின்னர், இப்பிரபஞ்சத்தைப் படைப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பிரம்மதேவன் தனது இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றார்.

பதம் 10.14.42 : தனது புதல்வரான பிரம்மதேவன் செல்வதற்கு விடையளித்துவிட்டு முழுமுதற் கடவுள், ஒரு வருடத்திற்கு முன்பு எந்த இடத்தில் இருந்தனவோ, அதே இடத்தில் இருந்த கன்றுகளைத் தானும் தனது ஆயர்குல நண்பர்களும் முன்பு உணவருந்திய இடமான நதிக்கரைக்கு அவற்றை அழைத்து வந்தார்.

பதம் 10.14.43 : ஓ, மன்னனே, அவர்களது வாழ்வின் தெய்வமான பகவானைப் பிரிந்து ஒரு வருட காலம் ஆனபோதிலும், அவர்கள் பகவான் கிருஷ்ணரின் மாயா சக்தியினால் மறைக்கப்பட்டிருந்த காரணத்தினால், ஒரு வருட காலத்தினை அவர்கள் அரைக் கணமாகவே கருதினர்.

பதம் 10.14.44 : பகவானது மாயா சக்தியினால் குழப்பமுற்றிருப்போரின் மனம் உண்மையில் எதனைத்தான் மறப்பதில்லை? அம்மாயாசக்தியால் இப்பிரபஞ்சம் முழுவதும் நித்திய குழப்பத்தில் ஆழ்கிறது, இச்சூழ்நிலையின் மறதியினால் ஒருவன் தன்னையே அறிந்துகொள்ள முடியாதவனாகிறான்.

பதம் 10.14.45 : ஆயர்குலச் சிறுவர்கள் பகவான் கிருஷ்ணரிடம் கூறினர்: நீ மிக விரைவில் திரும்பி வந்துவிட்டாய். நீயின்றி ஓர் உருண்டை உணவு கூட நாங்கள் உண்ணவில்லை. இங்கே வந்து அமர்ந்து, வேறு சிந்தனை எதுவுமின்றி உனது உணவினை உண்பாயாக.

பதம் 10.14.46 : பிறகு பகவான் ஹிருஸீகேஸர் புன்னகையுடன், தனது ஆயர்குல நண்பர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினார். அவர்கள் காட்டிலிருந்து விரஜத்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபொழுது பகவான் கிருஷ்ணர் ஆயர்குலச் சிறுவர்களிடம் மடிந்துபோன அகாசுரன் என்னும் மலைப்பாம்பின் தோலினைக் காட்டினார்.

பதம் 10.14.47 : பகவான் கிருஷ்ணரின் உன்னத உடலானது மயிலிறகினாலும், மலர்களினாலும், காட்டிலுள்ள பிற அழகிய பொருட்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது புல்லாங்குழலிலிருந்து எழுந்த நாதம் மிக இனிமையாக ஒலித்தது. அவர் தனது கன்றுகளைப் பெயர் சொல்லி அழைத்தார். அவரது பெருமைகளை ஓதுவதின்மூலம் அவரது நண்பர்களான ஆயர்குலச் சிறுவர்கள் உலகம் முழுவதையும் புனிதப்படுத்தினர். இவ்வாறு பகவான் கிருஷ்ணர் நந்த மகாராஜாவின் ஆயர்பாடியினுள் வந்தாரென்றால் அவரது வரவு ஆயர்குலப் பெண்களின் கண்களுக்குப் பெருவிருந்தாகும்.

பதம் 10.14.48 : ஆயர்குலச் சிறுவர்கள் விரஜத்தை அடைந்தவுடன் அவர்கள் “கொடிய பாம்பினைக் கொன்று, இன்று கிருஷ்ணன் எங்களைக் காத்தான்” என்று பாடினர். அச்சிறுவர்களில் சிலர் கிருஷ்ணரை யசோதையின் மைந்தனென்றும், சிலர் நந்த மகாராஜாவின் மைந்தனென்றும் கூறினர்.

பதம் 10.14.49 : பரீக்ஷித்து மன்னர் கேட்டார் “ஓ, அந்தணரே, தங்களுக்குப் பிறந்த குழந்தைகளின்மீதும் காட்டாத பாசத்தை, அடுத்தவருக்குப் பிறந்த கிருஷ்ணரின் மீது ஆயர்குலப் பெண்களால் எவ்வாறு காட்ட முடிந்தது? இதனை அருள் கூர்ந்து விளக்குவீராக.”

பதம் 10.14.50 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஓ, மன்னனே, படைக்கப்பட்ட உயிர் ஒவ்வொன்றும் தம்மீதே அதிக பாசமுடையவையாக இருக்கின்றன. குழந்தைச் செல்வம் போன்று பிறவற்றின்மீது வைக்கும் பாசமானது தன்மீது வைக்கும் பாசத்தின் விளைவேயாகும்.

பதம் 10.14.51 : இக்காரணத்தினாலேயே, ஓ, அரசர்களிற் சிறந்தவனே, உடல் பெற்ற ஆத்மாவானது சுயநலமுடையதாக இருக்கின்றது. ஒருவன் தனது சொந்தமாகக் கருதும் மக்கள், செல்வம், வீடு போன்றவற்றைக் காட்டிலும் தனது உடல் மற்றும் ஆத்மாவின் மீதே அதிகப் பற்றுடையவனாக இருக்கின்றான்.

பதம் 10.14.52 : ராஜராஜனே! உண்மையில், தனது உடலையே தானாகக் கருதும் மனிதர்களுக்கு தனது உடல்மீது இருக்கும் பாசத்தைவிடத் தனது உடலுக்குச் சொந்தமான பொருட்களின் மீது அதிக பாசம் இருப்பதில்லை.

பதம் 10.14.53 : ஒருவன் தனது உடலை “நான்” என்று கருதுவதற்குப் பதிலாக “எனது” என்று கருதும் நிலையினை அடைந்தானென்றால்; அவன் தன்னைவிடத் தனது உடலின்மீது அதீத பாசம் வைக்கமாட்டான். உடலானது முதுமைக்கு ஆளாகிப் பயனற்றுப் போகும் எனினும், தொடர்ந்து வாழவேண்டும் என்னும் ஒருவனது ஆசை மட்டும் மிகவும் வலிமையுடையதாக இருக்கினறது.

பதம் 10.14.54 : ஆகையினால் உடல் பெற்ற உயிருக்கு தனது ஆத்மாவே மிகவும் பிரியத்திற்கு உரியதாக இருக்கின்றது. மேலும் இந்த ஆத்மாவின் திருப்திக்காகவே பெளதிகப் படைப்பின் அசையும் அசையா உயிர்கள் அனைத்தும் இருக்கின்றன.

பதம் 10.14.55 : அனைத்து உயிர்களிலும் கிருஷ்ணரே உண்மையான ஆத்மாவாக இருக்கின்றார் என்பதை நீ முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிரபஞ்சத்தின் நன்மைக்காக அவர் தனது தனிப்பெருங் கருணையினால் ஒரு சாதாரண மனிதனாக இங்கே தோன்றினார். அவர் இதனை அவர் தனது அகச்சக்தியின் ஆற்றலினாலேயே செய்தார்.

பதம் 10.14.56 : அசையும், அசையாத உயிர்கள் அனைத்திலும் காணப்படுபவர் ஸ்ரீ கிருஷ்ணரே என்று அறிந்து கொண்டவர்கள் முழுமுதற் கடவுளின் வெளிப்பட்ட வடிவங்களாவர். இவ்வாறு ஞானம் பெற்ற மனிதர்கள், பரமபுருஷ பகவான் கிருஷ்ணருக்கு அப்பால் உண்மை எதனையும் காண்பதில்லை.

பதம் 10.14.57 : பெளதிகப் பொருட்கள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது ஆதியும், புலனாகா வடிவமுடையதுமான ஜட இயற்கையேயாகும். சூக்குமமான அந்த ஜட இயற்கைக்கு ஆதாரமாக முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரே இருக்கின்றார். அதனால் அவரிடமிருந்து வேறானது என்று எது இருக்க முடியும்?

பதம் 10.14.58 : இப்பிரபஞ்சத்திற்கு ஆதாரமாகவும், முர என்னும் அசுரனைக் கொன்றதால் ‘முராரி’ என்று புகழப்படுபவருமான பகவானின் தாமரைத் திருவடிகளைப் படகாக ஏற்றுக் கொண்டோருக்கு உலகம் என்னும் கடலானது ஒரு கன்றுக்குட்டியின் குளம்படித் தடத்திலுள்ள நீருக்குச் சமமானதாகும். அவர்கள் அடைய விரும்பும் இலக்காக இருப்பது பௌதிகத் துன்பங்களற்ற “பரமபதம்” என்னும் வைகுண்டமேயன்றி, ஒவ்வொரு நிலையிலும் தோன்றும் ஆபத்துக்கள் அல்ல.

பதம் 10.14.59 : நீ வேண்டிக் கொண்டதற்கிணங்க, பகவான் ஹரியின் ஐந்தாவது வயதில் நிகழ்த்தப்பட்டு, அவரது ஆறாவது வயது வரை போற்றப் படாத அவரது செயல்களை முழுவதும் நான் உனக்கு விளக்கியுள்ளேன்.

பதம் 10.14.60 : அகாசுரனைக் கொன்றது, காட்டில் புல்தரையில் அமர்ந்து உணவு உண்டது, பகவானது உன்னதத் தோற்றங்களின் வடிவங்கள், பிரம்மதேவன் பகவானுக்குச் செய்த பிரார்த்தனைகள் போன்ற, பகவான் முராரி தனது நண்பர்களான ஆயர்குலச் சிறுவர்களுடன் சேர்ந்து நிகழ்த்திய லீலைகளைக் காதினால் கேட்போரும், ஒதுவோரும் தமது ஆன்மீக விருப்பங்கள் அனைத்தையும் எய்தப் பெறுவர்.

பதம் 10.14.61 : இவ்வாறு பிருந்தாவனத்திலுள்ள சிறுவர்கள் கண்ணாமூச்சி ஆடுதல், பாலங்கள் கட்டுதல், மந்திகளைப் போல் தாவித் திரிதல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டுத் தமது குழந்தைப் பருவத்தைக் கழித்தனர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare