அத்தியாயம் – 12
அகாசுர வதம்
பதம் 10.12.1
ஸ்ரீ-சுக உவாச
க்வசித் வனாசாய மனோ ததத் வ்ரஜாத்
ப்ராத: ஸமுத்தாய வயஸ்ய-வத்ஸபான்
ப்ரபோதயஞ் ச்ருங்க-ரவேண சாருணா
வினிர்கதோ வத்ஸ-புரஹ்ஸரோ ஹரி:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; க்வசித்—ஒரு நாள்; வன-ஆசாய—காட்டில் வன போஜனத்தை அனுபவிப்பதில்; மன:—மனதை; ததத்—செலுத்தினர்; வ்ரஜாத்—மேலும் விரஜபூமியில் இருந்து வெளியேறினார்; ப்ராத:—அதிகாலையில்; ஸமுத்தாய—எழுந்து; வயஸ்ய-வத்ஸ-பான்—இடைச்சிறுவர்களையும், கன்றுகளையும்; ப்ரபோதயன்—அனைவரையும் எழுப்புவதற்கு, எழுந்து, அவர்களுக்கு அறிவித்து; ஸ்ருங்க-ரவேன—ஊது கொம்பை முழங்கி; சாருணா—மிகவும் அழகாக; வினிர்கத:—விரஜபூமியிலிருந்து வெளியேறினார்; வத்ஸ-புரஹ்ஸர:—அவரவர் பிரிவைச் சேர்ந்த கன்றுகள் முன்செல்ல; ஹரி:—பரமபுருஷர்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, ஒரு நாள் கிருஷ்ணர் தமது காலைச் சிற்றுண்டியை வனபோஜனமாக அனுபவிக்க முடிவு செய்தார். அதிகாலையிலேயே எழுந்துவிட்ட அவர், தம் கொம்பை ஊதி, அதன் இனிய ஓசையால் எல்லா இடைச்சிறுவர்களையும், கன்றுகளையும் எழுப்பினார். பிறகு கிருஷ்ணரும், சிறுவர்களும், அவரவர் கன்றுகளை முன்னே செல்லவிட்டு, விரஜபூமியிலிருந்து வனத்தை நோக்கிச் சென்றனர்.

பதம் 10.12.2
தேனைவ ஸாகம் ப்ருதுகா: ஸஹஸ்ரச:
ஸ்னிக்தா: ஸுசிக்-வேத்ர-விஷாண-வேணவ:
ஸ்வான் ஸ்வான் ஸஹஸ்ரோபரி-ஸங்க்யயான்விதான்
வத்ஸான் புரஸ்க்ருத்ய வினிர்யயுர் முதா

தேன—அவரை; ஏவ—உண்மையில்; ஸாகம்—சூழப்பட்டபடி; ப்ருதுகா:—சிறுவர்கள்; ஸஹஸ்ரச—ஆயிரக்கணக்கில்; ஸ்னிக்தா:—மிகவும் கவர்ச்சியான; ஸு—அழகிய; சிக்—சிற்றுண்டிப்பைகள்; வேத்ர—கன்றுகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய கம்புகள்; விஷாண—ஊது கொம்புகள்; வேணவ:—புல்லாங்குழல்கள்; ஸ்வான் ஸ்வான்—அவரவருக்குச் சொந்தமான; ஸஹஸ்ர-உபரி-ஸங்க்யயா அன்விதான்—ஆயிரத்துக்கும் அதிகமான; வத்ஸான்—கன்றுகள்; புர:-க்ருத்ய—முன் செல்ல; வினிர்யயு:—அவர்கள் வெளியேறினர்; முதா—பேரானந்தத்துடன்.

அப்பொழுது, ஆயிரக்கணக்கான இடைச் சிறுவர்கள் விரஜாபூமியிலுள்ள அவரவர் வீடுகளிருந்து வெளியேறி, ஆயிரக்கணக்கான கன்றுக் கூட்டங்கள் தங்கள் முன் செல்ல, அவற்றைப் பின்தொடர்ந்து சென்றபடி கிருஷ்ணருடன் சேர்ந்து கொண்டன. அச்சிறுவர்கள் மிகவும் அழகாக இருந்தனர். அவர்கள் உணவுப் பைகள், ஊது கொம்புகள், புல்லாங்குழல்கள் மற்றும் கன்றுகளை மேய்ப்பதற்கான கொம்புகள் ஆகியவற்றைத் தங்களிடம் வைத்திருந்தனர்.

பதம் 10.12.3
க்ருஷ்ண-வத்ஸைர் அஸங்க்யாதைர் யூதீ-க்ருத்ய ஸ்வ-வத்ஸகான்
சாரயந்தோ ‘ர்ப-லீலாபிர் விஜஹ்ருஸ் தத்ர தத்ர ஹ

க்ருஷ்ண—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; வத்ஸை:—கன்றுகளுடன்; அஸங்க்யா-தை:—எண்ணிலடங்காது; யூதீ-க்ருத்ய—அவற்றை ஒன்று கூட்டினர்; ஸ்வ-வத்ஸகான்—சொந்தக் கன்றுகளை; சாரயந்த:—செய்து; அர்ப லீலாபி:—இளமைப் பருவ லீலைகளால்; விஜஹ்ரு:—அனுபவித்தனர்; தத்ர தத்ர—இங்குமங்கும்; ஹ—உண்மையில்.

கிருஷ்ணர் இடைச் சிறுவர்களுடனும், ஒன்றுகூடிய அவர்களது எண்ணிலடங்காத கன்றுக் கூட்டங்களுடனும் வெளியே வந்தார். பிறகு எல்லாப் பையன்களும் காட்டில் மிகவும் சந்தோஷமாக விளையாடத் துவங்கினர்.

பதம் 10.12.4
ஃபல ப்ரபால-ஸ்தவக-ஸுமன:-பிச்ச-தாதுபி:
காச-குஞ்ஜா-மணி-ஸ்வர்ண-பூஷிதா அபி அபூஷயன்

ஃபல—காட்டுப் பழங்கள்; ப்ரபால—பச்சிலை; ஸ்தவக—கொத்துகள்; ஸுமன:—அழகிய மலர்கள்; பிச்ச—மயிலிறகுகள்; தாதுபி:—மிருதுவான, வண்ண தாதுப்பொருட்கள்; காச—ஒருவித நவரத்தினக்கல்; குஞ்ஜா—சிறிய சங்குகள்; மணி—முத்துக்கள்; ஸ்வர்ண—தங்கம்; பூஷிதா:—அலங்கரிக்கப்பட்டிருந்த போதிலும்; அபி அபூஷயன்—தங்கள் தாய்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தும், சிறுவர்கள் மேற்கூறிய பொருட்களால் தங்களை மேலும் அலங்கரித்துக் கொண்டனர்.

அப்பையன்கள் அனைவரும் நவரத்தினங்கள், சிறு சங்குகள், முத்து, தங்கம் முதலான ஆபரணங்களைக் கொண்டு தங்கள் தாய்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தனர். ஆயினும் காட்டிற்குள் சென்ற அவர்கள் பழங்கள், பச்சிலைகள், மலர்க் கொத்துகள், மயிலிறகுகள், மிருதுவான தாதுப் பொருட்கள் முதலியவைகளால் தங்களை மேலும் அலங்கரித்துக் கொண்டனர்.

பதம் 10.12.5
முஷ்ணந்தோ ‘ன்யோன்ய-சிக்யாதீன் ஞாதான் ஆராச் ச சிக்ஷிபு:
தத்ரத்யாஸ் ச புனர் தூராத் தஸந்தஸ் ச புனர் தது:

முஷ்ணந்த:—திருடி; அன்யோன்ய—ஒருவரிடமிருந்து மற்றொருவர்; சிக்ய-ஆதீன்—உணவுப் பைகளையும், மற்ற உடைமைகளையும்; ஞாதான்—பையின் சொந்தக்காரனால் அறிந்துகொள்ளப்படும் பொழுது; ஆராத் ச—தூரமான இடத்திற்கு; சிக்ஷிபு:—வீசினர்; தத்ரத்யா: ச—அந்த இடத்தில் இருப்பவர்களும்; புன: தூராத்—இன்னும் தூரத்தில் வீசினார்; ஹஸந்த: ச புன: தது:—அவர்கள் சொந்தக்காரனைக் கண்டபொழுது, அதை இன்னும் தூரத்தில் எறிந்து, சிரித்து மகிழ்ந்தனர். பையின் உரிமையாளன் அழுதபொழுது. அது திரும்பவும் அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இடைச் சிறுவர்கள் அனைவரும் ஒருவர் மற்றொருவரின் உணவுப் பையைத் திருடுவது வழக்கம். தன் பை திருடப்பட்டதை ஒருவன் அறியும்பொழுது, மற்ற பையன்கள் அதை தூரத்தில் எறிந்து விடுவார்கள். அங்குள்ளவர்கள் அதை இன்னும் தூரத்தில் எறிந்துவிடுவார்கள். பையின் உரிமையாளன் ஏமாற்றமடையும் பொழுது மற்ற பையன்கள் சிரிப்பார்கள், இதனால் பையை இழந்தவன் அழுவான், அதன்பிறகு பை அவனிடம் திரும்பிக் கொடுக்கப்படும்.

பதம் 10.12.6
யதி தூராம் கத: க்ருஷ்ணோ வன சோபேக்ஷணாய தம்
அஹம் பூர்வம் அஹம் பூர்வம் இதி ஸம்ஸ்ப்ருஸ்ய ரேமிரே

யதி—என்றால்; தூரம்—தூரமான ஓரிடத்திற்கு; கத:—சென்றார்; க்ருஷ்ண:—பரமபுருஷர்; வன-சோப—வனத்தின் அழகை; ஈக்ஷணாய—கண்டு ரசிப்பதற்காக; தம்—கிருஷ்ணரிடம்; அஹம்—நான்; பூர்வம்—முதலில்; அஹம்—நான்; பூர்வம்—முதலில்; இதி—இவ்வாறாக; ஸம்ப்ருஸ்ய—அவரைத் தொடுவதன் மூலம்; ரேமிரே—அவர்கள் வாழ்வை அனுபவித்தனர்.

சிலசமயங்களில் வனத்தின் அழகைக் காண்பதற்காக கிருஷ்ணர் தூரமான ஓரிடத்திற்குச் செல்வார். பிறகு மற்றெல்லாச் சிறுவர்களும், “நான்தான் முதலில் கிருஷ்ணனைத் தொடுவேன்! முதலில் கிருஷ்ணனை நான்தான் தொடுவேன்!” என்று கூறிக்கொண்டு அவருக்குத் துணையாக ஓடுவார்கள். இவ்விதமாக கிருஷ்ணரைத் திரும்பத் திரும்பத் தொட்டு விளையாடி அவர்கள் வாழ்வை அனுபவித்தனர்.

பதங்கள் 10.12.7 – 10.12.11
கேசித் வேணூன் வாதயந்தோ த்மாந்த: ஸ்ருங்காணி கேசன
கேசித் ப்ருங்கை: ப்ரகாயந்த: கூஜந்த: கோகிலை: பரே

விச்சாயாபி: ப்ரதாவந்தோ கச்சந்த: ஸாது-ஹம்ஸகை:
பகைர் உபவிசந்தஸ் ச ந்ருத்யந்தஸ் ச கலாபிபி:

விகர்ஷந்த: கீச-பாலான் ஆரோஹந்தஸ் ச தைர் த்ருமான்
விகுர்வந்தஸ் ச தை: ஸாகம் ப்லவந்தஸ் ச பலாசிஷு

ஸாகம் பேகைர் விலங்கந்த: ஸரித: ஸ்ரவ ஸம்ப்லுதா:
விஹஸந்த: ப்ரதிச்சாயா: சபந்தஸ் ச ப்ரதிஸ்வனான்

இத்தம் ஸதாம் ப்ரஹ்ம-ஸுகானுபூத்யா
தாஸ்யம் கதானாம் பர-தைவதேன
மாயாஸ்ரிதானாம் நர-தாரகேண
ஸாகம் விஜஹ்ரு: க்ருத-புண்ய-புஞ்ஜா:

கேசித்—அவர்களுள் சிலர்; வேணூன்—புல்லாங்குழல்களை; வாதயந்த:—வாசித்து; த்மாந்த:—ஊதி; ஸ்ருங்காணி—ஊது கொம்புகளை; கேசன—வேறொருவன்; கேசித்—யாரேனும் ஒருவன்; ப்ருங்கை:—வண்டுகளுடன்; ப்ரகாயந்த:—உடன் பாடியும்; கூஜந்த:—அதுபோல் ஒசையெழுப்பி; கோகிலை:—குயில்களுடன்; பரே—மற்றவர்கள்; விச்சாயாபி:—ஓடும் நிழல்களுடன்; ப்ரதா-வந்த:—யாரேனும் ஒருவன் பறவைகளின் பின்னால் தரையில் ஓடுவான்; கச்சந்த:—உடன்சென்று; ஸாது—அழகிய; ஹம்ஸகை:—அன்னங்களுடன்; பகை:—ஓரிடத்தில் அமர்ந்திருக்கும் கொக்குகளும்; உபவிசந்த: ச—அவற்றைப் போல் மௌனமாக அமர்ந்து; ந்ருத்யந்த: ச—மேலும் உடன் நாட்டியம் ஆடுவார்கள்; கலா பிபி:—மயில்களுடன்; விகர்ஷந்த:—கவர்வார்கள்; கீச-பாலான்—இளம் குரங்குகள்; ஆரோஹந்த: ச—மேலே ஏறிக் கொள்வார்கள்; தை:—குரங்குகளுடன்; த்ருமான்—மரங்கள்; விகுர்வந்த: ச—அவற்றைப் போலவே பாவனை செய்வார்கள்; தை:—குரங்குகளுடன்; ஸாகம்—அவற்றுடன்; ப்லவந்தஸ் ச—மேல் சறுக்கி; பலாசிஷு—மரங்களில்; ஸாகம்—அவற்றுடன்; பேகை:—தவளைகளுடன்; விளங்கந்த:—அவைகளைப் போல் குதிப்பார்கள்; ஸரித:—நீர்; ஸ்ரவ-ஸம்ப்லுதா:—நதி நீரில் நனைந்து; விஹஸந்த:—சிரிப்பார்கள்; ப்ரதிச்சாயா:—நிழல்களை; சபந்த: ச—கண்டனம் செய்தனர்; ப்ரதிஸ்வனான்—தங்களது எதிரொலிகளை; இத்தம்—இவ்வாறாக; ஸதாம்—ஆன்மீகிகளின்; ப்ரஹ்ம-ஸுக அனுபூத்யா—பிரம்ம-சுகத்திற்கு மூலமான கிருஷ்ணருடன் (கிருஷ்ணர் பரப்பிரம்மானவர். அவரிடமிருந்துதான் அவரது சுயப் பிரகாசம் தோன்றுகிறது); தாஸ்யம்—தொண்டு செய்வதை; கதானாம்—ஏற்றுக் கொண்டுள்ள பக்தர்களின்; பர-தைவதேன—பரமபுருஷன்; மாயா-ஆஸ்ரிதானாம்—ஜடசக்தியின் பிடியில் உள்ளவர்களுக்கு; நர-தாரகேண—ஒரு சாதாரண குழந்தையைப் போன்ற அவருடன்; ஸாகம்—உடன்; விஜஹ்கு:—இன்புற்றனர்; க்ருத-புண்ய-புஞ்ஜா:—ஒவ்வொரு பிறவியிலும் புண்ணிய பலன்களைச் சேகரித்துள்ள இச்சிறுவர்கள் அனைவரும்.

எல்லாச் சிறுவர்களும் வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள். சில சிறுவர்கள் புல்லாங்குழல்களை வாசித்தனர். மற்றவர்கள் கொம்புகளை ஊதினார். சிலர் வண்டுகளைப் போல் ரீங்காரம் செய்தனர். மற்றவர்கள் குயில்களைப் போல் கூவினர். சில சிறுவர்கள் நிலத்தில் தெரியும் பறவைகளின் நிழல்களைப் பின்தொடர்ந்து பறப்பது போல் பாவனை செய்வார்கள். சிலர் அன்னப் பறவைகளின் இனிய அசைவுகளையும் கவர்ச்சியான தோரணைகளையும் போல் ஒய்யார நடைபோட்டனர். சிலர் மௌனமாக அமர்ந்திருந்த கொக்குகளுடன் உட்கார்ந்திருந்தனர். சிலர் மயில்களைப்போல் நடனமாட முயன்றனர். சில சிறுவர்கள் மரங்களிலிருந்த இளம் குரங்குகளைக் கவர்ந்தனர். சிலர் குரங்குகளைப் போல் பாவனை செய்து மரங்களில் குதித்தனர். சிலர் குரங்குகளைப் போல் முகங்களைக் காட்டி, நையாண்டி செய்தனர் மற்றும் சிலர் கிளைக்குக் கிளை தாவினர். சில சிறுவர்கள் நீர் வீழ்ச்சிக்குச் சென்று, தவளைகளுடன் குதித்துச் சென்று நதியைக் கடந்தனர். அப்பொழுது நீரில் தெரியும் தங்கள் சொந்த பிரதி பிம்பத்தைக் கண்டு சிரிப்பார்கள். தங்கள் சொந்த எதிரொலியைக் கேட்டு அவர்கள் கண்டனம் செய்வார்கள். எல்லா இடைச்சிறுவர்களும் கிருஷ்ணருடன் இவ்வாறு விளையாடுவது வழக்கம். அந்த கிருஷ்ணர், எந்த பிரம்மத்துடன் கலந்துவிட ஞானிகள் விரும்புகிறார்களோ, அந்த பிரம்மஜோதியின் பிறப்பிடமாவார். நித்திய தொண்டை ஏற்றுக் கொண்டுள்ள பக்தர்களுக்கு அந்த கிருஷ்ணர் பரமபுருஷராவார். சாதாரண மனிதர்களுக்கு அவர் ஒரு சாதாரண குழந்தையாவார். இடைச்சிறுவர்கள் பல பிறவிகளில் புண்ணியச் செயல்களின் பலன்களைச் சேகரித்துள்ளதால், அவர்களால் பரமபுருஷ பகவானுடன் இவ்வாறு சகவாசம் கொள்ள முடிந்தது. அவர்களது பெரும் பாக்கியத்தை ஒருவரால் எப்படி விவரிக்க இயலும்?

பதம் 10.12.12
யத்-பாத-பாம்ஸுர் பஹு-ஜன்ம-க்ருச்ரதோ
த்ருதாத்மபிர் யோகிபிர் அபி அலப்ய:
ஸ ஏவ யத்-த்ருக்-விஷய: ஸ்வயம் ஸ்தித:
கிம் வர்ண்யதே திஷ்டம் அதோ வ்ரஜௌகஸாம்

யத்—யாருடைய; பாத-பாம்ஸு:—தாமரைப் பாதங்களின் தூசியை; பஹு-ஜன்ம—பல பிறவிகளில்; க்ருச்ரத:—யோகம், தியானம் போன்றவைகளைப் பயிலும் ஒரு மார்கமாக, கடும் தவங்களையும், விரதங்களையும் மேற்கொள்வதிலிருந்து; த்ருத-ஆத்மபி:—மனதை அடக்க முடிந்தவர்களால்; யோகிபி:—(ஞான-யோகிகள், ராஜ-யோகிகள், தியான-யோகிகள் போன்ற) இத்தகைய யோகிகளால்; அபி—உண்மையில்; அலப்ய:—அடையப்படமுடியாது; ஸ:—பரமபுருஷர்; ஏவ—உண்மையில்: யத்-த்ருக்-விஷய:—நேருக்கு நேராகத் தரிசிக்கும் பொருளாக ஆகியுள்ளார்; ஸ்வயம்—சுயமாக; ஸ்தித:—அவர்கள் முன் இருந்தார்; கிம்—என்ன; வர்ண்யதே—விவரிக்கப்பட முடியும்; திஷ்டம்—அதிர்ஷ்டத்தைப் பற்றி; அத:—எனவே; வ்ரஜ-ஒகஸாம்—விரஜபூமி என்ற பிருந்தாவனத்து வாசிகளின்.

யோகிகள், மிகக் கடினமான யமம், நியம், ஆஸனம், ப்ராணா யாமம் போன்றவைகளைப் பயின்று பல பிறவிகளில் கடும் தவங்களையும், விரதங்களையும் மேற்கொள்ளக் கூடும். எனினும், காலப்போக்கில் இந்த யோகிகள் மனதை அடக்குவதில் பூரணத்துவம் பெறும்பொழுது, பரமபுருஷரின் பத்ம பாதங்களிலிருந்து வரும் அணுவளவு தூசியைக் கூட இவர்களால் சுவைக்க முடிவதில்லை. அப்படியிருக்க, பரம்புருஷருடனேயே வாழ்ந்து, நேருக்கு நேராக அவரைத் தரிசித்த பிருந்தாவன வாசிகளின் பேரதிர்ஷ்டத்தைப் பற்றி நம்மால் எப்படி விவரிக்க முடியும்?

பதம் 10.12.13
அதாக-நாமாப்யபதன்-மஹாஸுரஸ்
தேஷாம் ஸுக-க்ரீடன-வீக்ஷணாக்ஷம:
நித்யம் யத்-அந்தர் நிஜ-ஜீவிதேப்ஸுபி:
பீதாம்ருதைர் அபி அமரை: ப்ரதீக்ஷ்யதே

அத—அதன்பிறகு; அக-நாம—அகன் என்ற சக்திவாய்ந்த ஓரசுரன்; அப்யபதத்—அங்கு தோன்றினான்; மஹா-அஸுர:—மிகப்பெரிய, மிகவும் சக்திவாய்ந்த அசுரன்; தேஷாம்—இடைச் சிறுவர்களின்; ஸுக-க்ரீடன—அவர்களது உன்னத லீலைகளின் இன்பத்தை; வீக்ஷண-அக்ஷம:—காண முடியாததால், இடைச்சிறுவர்களின் உன்னத ஆனந்தத்தை அவனால் சகித்துகொள்ள முடியவில்லை; நித்யம்—நிரந்தரமாக; யத்-அந்த:—அகாசுரனுடைய வாழ்வின் முடிவை; நிஜ-ஜீவித-ஈப்ஸுபி:—அகாசுரனின் தொல்லையின்றி வாழ; பீத-அம்ருதை: அபி—அவர்கள் தினமும் அமுதத்தைப் பருகிய போதிலும்; அமரை:—இத்தகைய தேவர்களால்; ப்ரதீக்ஷ்யதே—அவர்களாலும் எதிர்பார்த்துக் காத்திருக்கப்பட்டது (தேவர்களும் பேரசுரனான அகாசுரனின் மரணத்திற்காகக் காத்திருந்தனர்).

பரீட்சித்து மகாராஜனே, அதன்பிறகு அகாசுரன் என்ற சக்திவாய்ந்த ஓரசுரன் அங்கு தோன்றினான். தேவர்கள்கூட அவனது மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தேவர்கள் தினமும் அமிர்தத்தைப் பருகியபோதிலும் அவர்களும் அச்சக்திவாய்ந்த அசுரனுக்கஞ்சி அவனது மரணத்திற்காகக் காத்திருந்தனர். காட்டில் இடைச்சிறுவர்களால் அனுபவிக்கப்படும் உன்னத ஆனந்தத்தை அந்த அசுரனால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

பதம் 10.12.14
த்ருஷ்ட்வார்பகான் க்ருஷ்ண-முகான் அகாஸுர:
கம்ஸானுசிஷ்ட: ஸ பகீ-பகானுஜ:
அயம் து மே ஸோதர-நாச-க்ருத் தயோர்
த்வயோர் மமைனம் ஸ-பலம் ஹனிஷ்யே

த்ருஷ்ட்வா—கண்டபின்; அர்பகான்—இடைச்சிறுவர்கள் அனைவரும்; க்ருஷ்ண-முகான்—கிருஷ்ணரின் தலைமையிலான; அகாஸுர:—அகாசுரன் என்ற அசுரன்; கம்ஸ-அனுசிஷ்ட:—கம்சனால் அனுப்பப்பட்ட; ஸ:—அவன் (அகாசுரன்); பகீ-பக-அனுஜ:—பூதனை, பகாசுரன் ஆகியோரின் தம்பியான; அயம்—இந்த கிருஷ்ணன்; து—உண்மையில்; மே—எனது; ஸோதர-நாச-க்ருத்—என் தமையனையும், தமக்கையையும் கொன்றவனாவான்; தயோ:—என் தமையன் மற்றும் தமக்கைக்காக; த்வயோ:—அவ்விருவருக்காக; மம—எனது; ஏனம்—கிருஷ்ணனை; ஸ-பலம்—அவனது உதவியாளர்களான இடைச்சிறுவர்களுடன்; ஹனிஷ்யே—நான் கொன்றுவிடப் போகிறேன்.

கம்சனால் அனுப்பப்பட்ட அகாசுரன், பூதனைக்கும், பகாசுரனுக்கும் தம்பியாவான். எனவே கிருஷ்ணர் அங்கு எல்லா இடைச்சிறுவர்களுக்கும் தலைமை வகிப்பதைக் கண்ட அவன் பின்வருமாறு எண்ணினான், “இந்த கிருஷ்ணன் என் தமக்கையையும், தமையனையும் கொன்று விட்டான். எனவே அவர்களை திருப்திப்படுத்தும் பொருட்டு, இந்த கிருஷ்ணனையும், அவனது சகாக்களான மற்ற இடைச் சிறுவர்களையும் நான் கொன்றுவிடப் போகிறேன்.”

பதம் 10.12.15
ஏதே யதா மத்-ஸுஹ்ருதோஸ் திலாப:
க்ருதாஸ் ததா நஷ்ட-ஸமா வ்ரஜெளகஸ:
ப்ராணே கதே வர்ஷ்மஸு கா நு சிந்தா
ப்ரஜாஸவ: ப்ராண-ப்ருதோ ஹி யே தே

ஏதே—இந்த கிருஷ்ணனையும், அவனது சகாக்களான இடைச்சிறுவர்களையும்; யதா—அப்பொழுது; மத்-ஸுஹ்ருதோ:—என் தமையன் மற்றும் தமக்கையின்; தில-ஆப: க்ருதா:—எள்ளும், நீரும் கொண்ட கடைசிச் சிரார்த்தமாக இருக்கட்டும்; ததா—அப்பொழுது; நஷ்ட-ஸமா:—உயிரில்லாமல்; வ்ரஜ-ஒகஸ:—பிருந்தாவன வாசிகள் அனைவரும்; ப்ராணேகதே—உயிர் உடலைவிட்டு வெளியேற்றப்படும் பொழுது; வர்ஷமஸு—உடலைப் பொறுத்தவரை; கா—என்ன; நு—உண்மையில்; சிந்தா—எண்ணம்; ப்ரஜா-அஸவ:—தங்களுடைய சொந்த உயிரில் வைத்துள்ள அதே நேசத்தைத் தங்கள் குழந்தைகளிடமும் வைத்துள்ள அவர்கள்; ப்ராண-ப்ருத:—அந்த ஜீவராசிகள்; ஹி—உண்மையாகவே; யே தே—விரஜ வாசிகள் அனைவரும்.

அகாசுரன் எண்ணினான், “எப்படியாவது மறைந்த என் தமையன் மற்றும் தமக்கையின் ஆத்மாக்களுக்குக் கடைசியாக அளிக்கும் சிரார்த்தத்திற்குப் (எள்ளுக்கும், நீருக்கும்) பதிலாக, கிருஷ்ணனையும் அவனது சகாக்களையும் சிரார்த்தமாக அளித்துவிட வேண்டும். இதனால் இச் சிறுவர்களைத் தங்கள் உயிராக மதிக்கும் விரஜவாசிகள் தானாகவே இறந்துவிடுவார்கள். உயிர் இல்லையென்றால், உடலுக்கு அவசியமில்லை; ஆகையால் தங்கள் மகன்கள் இறந்துவிட்டால் விரஜவாசிகளும் தானாகவே இறந்து விடுவார்கள்.”

பதம் 10.12.16
இதி வ்யவஸ்யாஜகரம் ப்ருஹத் வபு:
ஸயோஜனாயாம-மஹாத்ரி-பீவரம்
திருத்வாத்புதம் வ்யாத்த-குஹானனம் ததா
பதி வ்யசேத கரஸனாசயா கல:

இதி—இவ்வாறு; வ்யவஸ்ய—முடிவு செய்து; ஆஜகரம்—மலைப் பாம்பு; ப்ருஹத் வபு:—மிகப்பெரிய உடல்; ஸ:—அகாசுரன்; யோஜன-ஆயாம—எட்டு மைல்கள் பரப்பளவுள்ள நிலத்தை அடைத்துக் கொண்டு; மஹா-ஆத்ரி-பீவரம்—ஒரு பெரிய மலைபோல் தடிப்பான; திருட்வா—இந்த ரூபத்தை ஏற்று; அத்பு-தம்—அற்புதமான; வ்யாத்த—பரப்பி; குஹா-ஆனனம்—ஒரு மலையிலுள்ள பெரிய குகையை ஒத்த வாயைப் பெற்றிருந்தான்; ததா—அப்பொழுது; பதி—சாலையில்; வ்யசேத—நிரப்பியபடி (படுத்திருந்தான்); கரஸன-ஆசயா—எல்லா இடைச்சிறுவர்களையும் விழுங்கிவிட வேண்டும் என்று எதிர்பார்த்து; கல:—பெரும் வஞ்சகனான.

இவ்வாறு முடிவு செய்தபின், வஞ்சகனான அந்த அகாசுரன் ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பின் உருவத்தை ஏற்றான். அது ஒரு மலையளவு பருமனுள்ளதாகவும், எட்டு மைல்கள் நீளமுள்ளதாகவும் இருந்தது. அற்புதமான அந்த மலைப்பாம்பின் உடலை ஏற்ற அவன், கிருஷ்ணரையும், அவரது சகாக்களான இடைச் சிறுவர்களையும் விழுங்கிவிடும் எண்ணத்துடன், ஒரு பெரிய மலைக்குகை போல் வாயைத் திறந்தபடி, சாலையில் படுத்திருந்தான்.

பதம் 10.12.17
தராதரோஷ்டோ ஜலதோத்தரோஷ்டோ
தரி-ஆனனாந்தோ கிரி-ஸ்ருங்க-தம்ஷ்ட்ர:
த்வாந்தாந்தர்-ஆஸ்யோ விததாத்வ-ஜிஹ்வ:
பருஷானில-ஸ்வாஸ-தவேக்ஷணோஷ்ண:

தரா—பூமியின் மேல்; அதர-ஓஷ்ட:—அவனுடைய கீழுதடு; ஜலத-உத்தர-ஓஷ்ட:—அவனுடைய மேலுதடு மேகங்களைத் தொட்டது; தரீ-ஆனன-அந்த:—அவனுடைய வாய் ஒரு மலைக் குகையைப்போல் அகலமாக விரிந்திருந்தது; கிரி-ஸ்ருங்க—ஒரு மலைச் சிகரம்போல்; தம்ஷ்ட்ர:—அவனுடைய பற்கள்; த்வாந்த-அந்த:-ஆஸ்ய:—அவனுடைய வாய்க்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இருட்டாக இருந்தது; விதத-அத்வ-ஜிஹ்வ:—அவனுடைய நாக்கு அகலமான வீதிபோல் இருந்தது; பருஷ-அனில-ஸ்வாஸ—அவனது சுவாசம் சூடான காற்று போல் வீசியது; தவ-ஈக்ஷண-உஷ்ண:—மேலும் அவனுடைய பார்வை தீச்சுடரைப் போல் இருந்தது.

அவனுடைய கீழுதடு தரைமேல் இருந்தது. அவனது மேலுதடு ஆகாயத்திலுள்ள மேகங்களைத் தொட்டுக்கொண்டு இருந்தது. அவனது வாயின் ஓரங்கள் ஒரு பெரிய மலைக்குகையின் இரு பக்கங்களை ஒத்திருந்தன. அவனது வாயின் நடுப்புறம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இருண்டு கிடந்தது. அவனது நாக்கு அகல வீதியை ஒத்திருந்தது. அவனது சுவாசம் உஷ்ணக் காற்றுபோல் வீசியது. மேலும் அவனது கண்கள் தீ போல் ஜொலித்தன.

பதம் 10.12.18
த்ருஷ்ட்வா தம் தாத்ருசம் ஸர்வே மத்வா வ்ருந்தாவன-ஸ்ரியம்
வ்யாத்தாஜகர-துண்டேன ஹி உத்ப்ரேக்ஷந்தே ஸ்ம லீலயா

த்ருஷ்ட்வா—கண்டு; தம்—அந்த அகாசுரன்; தாத்ருசம்—அந்த தோரணையில்; ஸர்வே—கிருஷ்ணரும், எல்லா இடைச் சிறுவர்களும்; மத்வா—என்று எண்ணினர்; வ்ருந்தாவனே-ஸ்ரியம்—பிருந்தாவனத்திலுள்ள ஓரழகிய சிலை; வ்யாத்த—பரந்திருந்த; அஜகர-துண்டேன—ஒரு மலைப்பாம்பின் வாய் ரூபத்துடன்; ஹி—உண்மையில்; உத்ப்ரேக்ஷந்தே—கவனிப்பது போல்; ஸ்ம—கடந்த காலத்தில்; லீலயா—லீலைகளுக்குரிய ஒரு பொருளாக.

ஒரு பெரிய மலைப்பாம்பை ஒத்திருந்த இந்த அசுரனின் அற்புத ரூபத்தைக் கண்ட சிறுவர்கள், இது பிருந்தாவனத்தின் ஓர் அழகிய காட்சிப் பொருள் என்று எண்ணினர். அதன்பிறகு, அது ஒரு பெரிய மலைப்பாம்பின் வாயை ஒத்திருப்பதுபோல் அவர்களுக்குத் தோன்றியது. அதாவது அது, தங்களுடைய லீலா சுகத்திற்காக ஒரு பெரிய மலைப் பாம்பின் வடிவில் செய்யப்பட்ட ஒரு சிலை என்றெண்ணி அச் சிறுவர்கள் அச்சமின்றி இருந்தனர்.

பதம் 10.12.19
அஹோ மித்ராணி கதத ஸத்வ-கூடம் புர: ஸ்திதம்
அஸ்மத்-ஸங்ரஸன வ்யாத்த-வ்யால-துண்டாயதே ந வா

அஹோ—ஓ; மித்ராணி—நண்பர்களே; கதத—நாம் தெரிந்து கொள்வோம்; ஸத்வ-கூடம்—உயிரற்ற மலைப்பாம்பு; புர: ஸ்திதம்—இது நம் அனைவர் முன்னிலையிலும் இருப்பது போல்; அஸ்மத்—நம்மனைவரையும்; ஸங்ரஸன—நம்மை மொத்தமாக விழுங்குவதற்காக; வ்யாத்த-வ்யால-துண்டா-யதே—மலைப்பாம்பு அதன் விரித்துள்ளது; ந வா—அது உண்மையா, அல்லவா.

சிறுவர்கள் கூறினர்: நண்பர்களே! இது உயிரற்ற ஒரு ஜந்துவா அல்லது நம் அனைவரையும் விழுங்குவதற்காகவே வாயை அகலமாகத்திறந்து வைத்துள்ள உயிருள்ள ஒரு மலைப்பாம்பா? தயவுசெய்து இச்சந்தேகத்தைப் போக்குங்கள்.

பதம் 10.12.20
ஸத்யம் அர்க-கராரக்தம் உத்தரா-ஹனுவத் கனம்
அதரா-ஹனுவத் ரோதஸ் தத்-ப்ரதிச்சாயயாருணம்

ஸத்யம்—இது உண்மையாகவே உயிருள்ள ஒரு மலைப்பாம்பு தான் என்று சிறுவர்கள் இப்பொழுது முடிவு செய்தனர்; அர்க-கர-ஆரக்தம்—சூரிய ஒளிபோல் தோன்றும்; உத்தரா-ஹனுவத் கனம்—மேலுதடுகளை ஒத்த மேகத்தின் மேல்; அதரா-ஹனுவத்—கீழுதடுகளை ஒத்த; ரோத:—பெரிய மேடு; தத்-ப்ரதிச்சாயயா—சூரிய ஒளியின் பிரதிபலிப்பால்; அருணம்—சிவந்த.

அதன்பிறகு, இவ்வாறு அவர்கள் முடிவு செய்தனர்: நண்பர்களே, இது நம்மையெல்லாம் விழுங்குவதற்காக இங்கு படுத்திருக்கும் ஒரு மிருகமே என்பதில் ஐய்யமில்லை. இதன் மேலுதடு சூரிய ஒளியால் சிவந்த ஒரு மேகத்தை ஒத்திருக்கிறது. இதன் கீழுதடு ஒரு மேகத்தின் சிவந்த நிழல்களை ஒத்திருக்கிறது.

பதம் 10.12.21
ப்ரதிஸ்பர்தேதே ஸ்ருக்கப்யாம் ஸவ்யாஸவ்யே நகோதரே
துங்க-ஸ்ருங்காலயோ ‘பி ஏதாஸ் தத்-தம்ஸ்ட்ராபிஸ் ச பஸ்யத

ப்ரதிஸ்பர்தேதே—ஒத்திருக்கிறது; ஸ்ருக்கப்யாம்—வாயின் ஓரங்களுடன்; ஸவ்ய-அஸவ்யே—இடமும், வலமும்; நக-உதரே—ஒரு மலையின் குகைகள்; துங்க-ஸ்ருங்க-ஆலய:—உயரமான மலைச் சிகரங்கள்; அபி—அது உண்மைதான் என்றாலும்; ஏதா: தத்-தம்ஸ்ட்ராபி:—அவை மிருகத்தின் பற்களை ஒத்திருக்கின்றன; ச—மேலும்; பஸ்யத—சற்று கவனியுங்கள்.

இடப்புறமும், வலப்புறமும் மலைக்குகைகளை ஒத்திருக்கும் இரு குழிகள் இதனுடைய வாயின் ஓரங்களாகும். மேலும் உயரமான மலைச் சிகரங்கள் இதன் பற்களாகும்.

பதம் 10.12.22
ஆஸ்த்ருதாயாம-மார்கோ ‘யம் ரஸனாம் பிரதிகர்ஜதி
ஏஷாம் அந்தர்-கதம் த்வாந்தம் ஏதத் அபி அந்தர்-ஆனனம்

ஆஸ்த்ருத-ஆயாம—அகலமும், நீளமும்; மார்க: அயம்—ஓர் அகல் வீதியை; ரஸனாம்—நாக்கு; ப்ரதிகர்ஜதி—ஒத்திருக்கிறது; ஏஷாம் அந்த:-கதம்—மலைகளின் உட்புறங்களில்; த்வாந்தம்—இருள்; ஏதத்—இந்த; அபி—உண்மையாகவே; அந்த:-ஆனனம்—வாயின் உட்புறம்.

இந்த மிருகத்தினுடைய நாக்கின் அகலமும் நீளமும் ஓர் அகல் வீதியை ஒத்திருக்கிறது. மேலும் இதனுடைய வாயின் உட்புறம், ஒரு மலைக் குகைபோல் மிகவும் இருட்டாக உள்ளது.

பதம் 10.12.23
தாவோஷ்ண-கர-வாதோ ‘யம் ஸ்வாஸவத் பாதி பஸ்யத
தத்-தக்த-ஸத்வ-துர்கந்தோ ‘பி அந்தர்-ஆமீஷ-கந்தவத்

தாவ-உஷ்ண-கர-வாத: அயம்—நெருப்பைப் போலவே வெளிவரும் சூடான சுவாசம்; ஸ்வாச-வத் பாதி பஸ்யத—இது எப்படி இதனுடைய சுவாசத்தை ஒத்திருக்கிறது என்பதை சற்று கவனியுங்கள்; தத்-தக்த-ஸத்வ—எரியும் பிணங்களின்; துர்கந்த:—துர்நாற்றம்; அபி—உண்மையில்; அந்த:-ஆமிஷ-கந்த-வத்—இது உள்ளிருந்து வரும் மாமிச நாற்றம் போலிருக்கிறது.

இதன் வாயிலிருந்து வரும் அனல் காற்று இதனுடைய சுவாசமாகும். இது பிணங்களைத் தின்றுள்ளதால், இதன் சுவாசம் எரியும் மாமிசத்தின் துர்நாற்றத்தைப் பரப்புகிறது.

பதம் 10.12.24
அஸ்மான் கிம் அத்ர க்ரஸிதா நிவிஷ்டான்
அயம் ததா சேத் பகவத் வினங்க்ஷயதி
க்ஷணாத் அனேனேதி பகாரி-உசன்-முகம்
வீக்ஷ்யோத்தஸந்த: கர-தாடனையர் யயு:

அஸ்மான்—நம் அனைவரையும்; கிம்—அல்லது; அத்ர—இங்கு; க்ரஸிதா—விழுங்கிவிடும்; நிவிஷ்டான்—நுழைய முயன்றுள்ள; அயம்—இந்தமிருகம்; ததா—அப்படி; சேத்—என்றால்; பக-வத்—பகாசுரனைப் போல்; வினங்க்ஷயதி—இவன் கொல்லப்படுவான்; க்ஷணாத்—உடனே; அனேனே—இந்த கிருஷ்ணனால்; இதி—இவ்விதமாக; பக-அரி-உசத்-முகம்—பகாசுரனின் எதிரியான கிருஷ்ணனின் அழகு முகத்தை; வீக்ஷ்ய—கண்டு; உத்தஸந்த:—உரக்க சிரித்து; கர-தாடனை:—கைத்தட்டலுடன்; யயு:—வாய்க்குள் புகுந்தனர்.

பிறகு சிறுவர்கள் கூறினர், “இந்த ஜீவராசி நம்மை விழுங்குவதற்காகவே வந்துள்ளதா? அப்படியானால், பகாசுரனைப் போல் இது உடனே கொல்லப்படும்.” இவ்விதமாக பகாசுரனின் எதிரியான கிருஷ்ணரின் அழகிய திருமுகத்தைக் கண்டு உரக்க சிரித்தபடி, கைகளைத் தட்டிக் கொண்டு, மலைப்பாம்பின் வாய்க்குள் அவர்கள் புகுந்தனர்.

பதம் 10.12.25
இத்தம் மிதோ ‘தத்யம் அதக்-ஞ-பாஷிதம்
ஸ்ருத்வா விசிந்த்யேதி அம்ருஷா ம்ருஷாயதே
ரக்ஷோ விதித்வாகில-பூத-ஹ்ருத்-ஸ்தித:
ஸ்வானாம் நிரோத்தும் பகவான் மனோ ததே

இத்தம்—இவ்விதமாக; மிதோ:—அல்லது மற்றொரு; அதத்யம்—உண்மையல்லாத ஒரு விஷயம்; அ-தத்-ஞ—அறிவில்லாமல்; பாஷிதம்—அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது; ஸ்ருத்வா—கிருஷ்ணர் அவர்கள் பேசுவதைக் கேட்டு; விசிந்த்ய—என்று நினைத்து; இதி—இவ்வாறு; அம்ருஷா—உண்மையாக; ம்ருஷாயதே—பொய்யான ஒரு பொருளைப் போல் காட்சியளிக்க முயலும் அது (உண்மையில் அந்த மிருகம் அகாசுரனாவான். ஆனால் அறிவுப் பற்றாக்குறையினால், அது ஒரு செத்த மலைப்பாம்பு என்று நினைத்தனர்); ரக்ஷ:—அவன் ஓரசுரன் (என்பதை கிருஷ்ணர் புரிந்து கொண்டார்); விதித்வா—அதையறிந்து; அகில-பூத-ஹ்ருத்-ஸ்தித:— அவர், எல்லா இடங்களிலும் எல்லோர் இதயங்களிலும் உள்ள அந்தர்யாமி என்பதால்; ஸ்வானாம்—அவரது சொந்த சகாக்களை; நிரோத்தும்—அவர்களைத் தடுக்க; பகவான்—பரமபுருஷர்; மன: ததே—எண்ணம் கொண்டார்.

எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக (அந்தர்யாமி) உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், செயற்கையான மலைப்பாம்பைப் பற்றி சிறுவர்கள் தங்களுக்கிடையில் பேசிக்கொண்டதைக் கேட்டார். உண்மையில் அகாசுரன் என்ற அசுரன்தான் மலைப் பாம்பாகத் தோன்றியுள்ளான் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இதையறிந்த கிருஷ்ணர், தம் சகாக்கள் அசரனின் வாய்க்குள் நுழைவதைத் தடுக்க விரும்பினார்.

பதம் 10.12.26
தாவத் ப்ரவிஷ்டாஸ் த்வ் அஸுரோதராந்தரம்
பரம் ந கீர்ணா: சிசவ: ஸ-வத்ஸா:
ப்ரதீக்ஷமாணேன பகாரி-வேசனம்
ஹத-ஸ்வ-காந்த-ஸ்மரணேன ரக்ஷஸா

தாவத்—இதற்கிடையில்; ப்ரவிஷ்டா:—எல்லோரும் பிரவேசித்தனர்; து—உண்மையில்; அஸுர-உதர-அந்தரம்—அப்பெரிய அசுரனின் வயிற்றுக்குள்; பரம்—ஆனால்; ந கீர்ணா—அவர்கள் விழுங்கப்படவில்லை; சிசவ:—சிறுவர்கள் அனைவரும்; ஸ—வத்ஸா:—அவர்களுடைய கன்றுகளுடன்; ப்ரதீக்ஷமாணேன—அவருக்காக அவன் காத்திருந்தான்; பக-அரி—பகாசுரனின் எதிரியான; வேசனம்—நுழைவை; ஹத-ஸ்வ-காந்த-ஸ்மரணேன—கிருஷ்ணர் இறந்தாலொழிய மரணமடைந்த தன் சொந்த உறவினர்கள் திருப்திடையமாட்டார்கள் என்பதைப் பற்றி அந்த அசுரன் நினைத்துக் கொண்டிருந்தான்; ரக்ஷஸா—அசுரனால்.

இதற்கிடையில், இடைச் சிறுவர்களைத் தடுத்து நிறுத்துவது பற்றி கிருஷ்ணர் யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுது, அவர்கள் அசுரனின் வாய்க்குள் நுழைந்தனர். ஆனால் அசுரன் அவர்களை விழுங்கிவிடவில்லை. ஏனெனில், கிருஷ்ணரால் கொல்லப்பட்ட தன் சொந்த உறவினர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த அவன், கிருஷ்ணரும் தன் வாய்க்குள் நுழைவதற்காகக் காத்திருந்தான்.

பதம் 10.12.27
தான் விக்ஷ்ய க்ருஷ்ண ஸகலாபய-ப்ரதோ
ஹி அனன்ய-நாதான் ஸ்வ-கராத் அவச்யுதான்
தீனாம்ஸ் ச ம்ருத்யோர் ஜடராக்னி-காஸான்
க்ருணார்திதோ திஷ்ட-க்ருதேன விஸ்மித:

தான்—அச்சிறுவர்கள் அனைவரும்; வீக்ஷ்ய—கண்டு; க்ருஷ்ண:—பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர்; ஸகல-அபய-ப்ரத:—அனைவருடைய அஞ்சாமைக்கும் பிறப்பிடமான; ஹி—உண்மையில்; அனன்ய-நாதான்—குறிப்பாக, கிருஷ்ணரைத் தவிர வேறு யாரையும் அறிந்திராத இடைச் சிறுவர்களுக்கு; ஸ்வ-கராத்—தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து; அவச்யுதான்—இப்பொழுது வெளியேறி; தீனான் ச—நிராதரவாக; ம்ருத்யோ: ஜடர-அக்னி-காஸான்—(பெரிய உடலை ஏற்றுள்ள அசுரனுக்குப் பெரும் பசி இருக்கவேண்டும் என்பதால்) மரண தேவனைப் போல் துணிவும், பசியும் கொண்ட அகாசுரனின் வயிறெனும் தீக்குள் சருகுபோல் நுழைந்த அவர்களனைவரும்; க்ருணா-அர்தித:—எனவே, காரணமற்ற கருணையினால் இரக்கங்கொண்டு; திஷ்ட-க்ருதேன—அவரது அந்தரங்க சக்தியின் ஏற்பாட்டினால்; விஸ்மித:—கணநேரம் அவரும் திகைப்புக்குள்ளானார்.

தம்மைத் தவிர வேறெவரையும் தங்கள் பிரபுவாக நினைத்தறியாத இடைச்சிறுவர்கள் தம் கையிலிருந்து நழுவி, மரண சொரூபமான அகாசுரனின் தீ போன்ற வயிற்றுக்குள் சருகுகளைப் போல் நுழைந்து விட்டதைக் கிருஷ்ணர் கண்டார். தம் நண்பர்களான இடைச்சிறுவர்களை விட்டுப் பிரிவதென்பது அவருக்கும் பொறுக்க முடியாததாக இருந்தது. எனவே, இது தமது அந்தரங்க சக்தியால் செய்யப்பட்ட ஏற்பாடு என்பதைக் கண்ட கிருஷ்ணர், கணப்பொழுது செய்வதறியாது திகைத்தார்.

பதம் 10.12.28
க்ருத்யம் கிம் அத்ராஸ்ய கலஸ்ய ஜீவனம்
ந வா அமீஷாம் ச ஸதாம் விஹிம்ஸனம்
த்வயம் கதம் ஸ்யாத் இதி ஸம்விசிந்த்ய
ஞாத்வாவிசத் துண்டம் அசேஷ-த்ருக் கரி:

க்ருத்யம் கிம்—என்ன செய்வது; அத்ர—இந்நிலையில்; அஸ்ய கலஸ்ய—விரோதம் கொண்ட இந்த அசுரனின்; ஜீவனம்—வாழ்கை; ந—இருக்கக்கூடாது; வா—அல்லது; அமீஷாம் ச—மேலும் ஒன்றுமறியாத; ஸதாம்—பக்தர்களின்; விஹிம்ஸனம்—மரணம்; த்வயம்—இரு செயல்களும் (அசுரனைக் கொல்லுதல் மற்றும் சிறுவர்களைக் காப்பாற்றுதல்); கதம்—எப்படி; ஸ்யாத்—சாத்தியமாகும்; இதி ஸம்விசிந்த்ய—விஷயத்தைப் பற்றி நன்கு ஆலோசித்து; ஞாத்வா—என்ன செய்வதென்பதை முடிவு செய்து; அவிசத்—புகுந்தார்; துண்டம்—அசுரனின் வாய்க்குள்; அசேஷ-த்ருக் ஹரி:—எல்லையற்ற சக்தியுடைய கிருஷ்ணரால் கடந்த, எதிர் மற்றும் நிகழ் காலங்களை அறிய முடிந்தது.

இப்பொழுது செய்ய வேண்டியது என்ன? அசுரனைக் கொல்வதும், பக்தர்களைக் காப்பதும் ஒரே சமயத்தில் எப்படி செய்யப்படக்கூடும்? கிருஷ்ணர் எல்லையற்ற சக்தியுடையவர் என்பதால், ஒரே சமயத்தில் சிறுவர்களைக் காப்பாற்றி, அசுரனையும் கொல்லக்கூடிய ஒரு புத்திசாலித்தனமான உபாயத்திற்காக காத்திருக்க முடிவு செய்தார். பிறகு அவர் அகாசுரனின் வாய்க்குள் புகுந்தார்.

பதம் 10.12.29
ததா கன-ச்சத தேவா பயாத் தா-ஹேதி சுக்ருசு:
ஜஹ்ருஷுர் யே ச கம்ஸாத்யா: கௌணபாஸ் த்வ் அக-பாந்தவா:

ததா—அச்சமயத்தில்; கன-சதா:—மேகங்களுக்குப் பின்னாலிருந்த; தேவா:—தேவர்கள் அனைவரும்; பயாத்—கிருஷ்ணர் அசுரனின் வாய்க்குள் புகுந்துவிட்ட காரணத்தால், அச்சத்திற்குள்ளாகி; ஹா-ஹா—ஜயோ, ஜயோ; இதி—இவ்விதமாக; சுக்ருசு:—அவர்கள் கதறினார்கள்; ஜஹ்ருஷு:—களிப்படைந்தனர்; யே—அவர்கள்; ச—கூட; கம்ஸ-ஆத்யா:—கம்சனும், மற்றவர்களும்; கௌணபா:—அசுரர்கள்; து—உண்மையில்; அக-பாந்தவா:—அகாசுரனின் நண்பர்கள்.

கிருஷ்ணர் அகாசுரனின் வாய்க்குள் புகுந்ததும் மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருந்த தேவர்கள் “ஐயோ ஐயோ” என்று கதறினார்கள், ஆனால் கம்சனையும் மற்ற அசுரர்களையும் போன்ற அகாசுரனின் நண்பர்கள் மிகவும் சந்தோஷமடைந்தார்கள்.

பதம் 10.12.30
தச் ச்ருத்வா பகவான் க்ருஷ்ணஸ் த்வ் அவ்யய: ஸார்ப-வத்ஸகம்
சூர்ணீ-சிகீர்ஷோர் ஆத்மானம் தரஸா வவ்ருதே கலே

தத்—ஹா-ஹா என்ற அந்த கூக்குரலை; ஸ்ருத்வா—கேட்ட; பகவான்—பரமபுருஷரான; க்ருஷ்ண:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; து—உண்மையில்; அவ்யய:—ஒருபோதும் வெல்ல முடியாத; ஸ-அர்ப-வத்ஸகம்—இடைச் சிறுவர்களுடனும், கன்றுகளுடனும்; சூர்ணி-சிகீர்ஷோ:—வயிற்றினுள் நொறுக்கிவிட விரும்பிய அந்த அசுரனின்; ஆத்மானம்—சுயமாக, தம்மை; தரஸா—மிக விரைவில்; வவ்ருதே—பெரிதாக்கினார்; கலே—தொண்டைக்குள்.

யாராலும் வெல்ல முடியாத பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர், மேகங்களுக்குப் பின்னாலிருந்து “ஐயோ! ஐயோ!” என்று தேவர்கள் கதறுவதைக் கேட்டார். உடனே, தங்களை நொறுக்கிவிட விரும்பிய அந்த அசுரனிடமிருந்து தம்மையும், தமது சொந்த சகாக்களான இடைச்சிறுவர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, அவர் அகரனின் தொண்டைக்குள் தமது உருவத்தை பெருக்கத் தொடங்கினார்.

பதம் 10.12.31
ததோ ‘திகாயஸ்ய நிருத்த-மார்கிணோ
ஹி உத்கீர்ண-த்ருஷ்டேர் ப்ரமதஸ் த்வ இதஸ் தத:
பூர்ணோ ‘ந்தர்-அங்கே பவனோ நிருத்தோ
மூர்தன் வினிர்பித்ய வினிர்கதோ பஹி:

தத:—வாய்க்குள் இருந்தபடியே அசுரனின் உடலைக் கொல்லும் நடவடிக்கையை கிருஷ்ணர் மேற்கொண்ட பிறகு; அதி-காயஸ்ய—தன்னுடைய உடலைப் பூதாகாரமாக பெருக்கிக் கொண்ட அப்பெரிய அசுரனின்; நிருத்த-மார்கிண:—வெளியே செல்லும் எல்லா துவாரங்களும் அடைக்கப்பட்டு, மூச்சுத் திணறிய காரணத்தால்; ஹி-உத்கீர்ண-த்ருஷ்டே:—அவனுடைய விழிகள் பிதுங்கின; ப்ரமத: து இத: தத:—விழிகள், அல்லது உயிர்க் காற்று இங்குமங்கும் அசைய; பூர்ண:—முழுமையாக நிரப்பினார்; அந்த:-அங்கே—உடலுக்குள்; பவன:—உயிர்க்காற்று; நிருத்த:—நிறுத்தப்பட்டதால்; மூர்தன்—தலை உச்சியிலுள்ள துவாரத்தை; வினிர்பித்ய—உடைத்துக் கொண்டு; வினிர்கத:—வெளியே சென்றது; பஹி:—வெளிப்புறமாக.

பிறகு, கிருஷ்ணர் தம் உடலின் அளவைப் பெருக்கியதால், அசுரன் தன் உடலை மிகப் பெரிய அளவிற்கு விரிவடையச் செய்தான். ஆயினும். சுவாசம் நின்று போய் அவன் மூச்சுத் திணறினான். அவனது விழிகள் இங்குமங்கும் சுழன்று, பிதுங்கின. ஆனால் அந்த அசுரனின் உயிர்க் காற்றினால் எந்தத் துவாரத்தின் மூலமாகவும் வெளியேற முடியாததால், இறுதியில் அது அவனது தலை உச்சியிலுள்ள ஒரு துவாரத்தின் வழியாக வெடித்து வெளியேறியது.

பதம் 10.12.32
தேனைவ ஸர்வேஷு பஹிர் கதேஷு
ப்ரானேஷு வத்ஸான் ஸுஹ்ருத: பரேதான்
த்ருஷ்ட்யா ஸ்வயோத்தாப்ய தத்-அன்வித: புனர்
வக்த்ரான் முகுந்தோ பகவான் வினிர்யயௌ

தேனை ஏவ—தலை உச்சியிலுள்ள துவாரத்தின் (ப்ரஹ்ம-ரந்ர) மூலமாக; ஸர்வேஷு—உடலுக்குள் இருந்த எல்லாக் காற்றும்; பஹி: கதேஷு—வெளியேறியதும்; ப்ராணேஷு—உயிர்ச்சக்தியுடன் உயிர்க்காற்றுகளும்; வத்ஸான்—கன்றுகள்; ஸுஹ்ருத:—இடைத் தோழர்கள்; பரேதான்—உள்ளேயே இறந்துவிட்ட அவர்கள் அனைவரையும்; திஷ்ட்யாஸ்வயா—கிருஷ்ணரின் பார்வையால்; உத்தாப்ய—அவர்களை உயிர்பெற்றெழச் செய்தார்; தத்-அன்வித்:—இவ்வாறு அவர்களால் பின்தொடரப்பட்டவராய்; புன:—மீண்டும்; வக்த்ராத்—வாயிலிருந்து; முகுந்த:—பரமபுருஷர்; பகவான்—ஸ்ரீ கிருஷ்ணர்; வினிர்யயௌ—வெளியேறினார்.

அசுரனின் உயிர் மூச்சு முழுவதும், அவனது தலை உச்சியிலிருந்த துவாரத்தின் வழியாக வெளியேறியதும், கிருஷ்ணர் இறந்து கிடந்த கன்றுகள் மீதும், இடைச்சிறுவர்கள் மீதும் தம் பார்வையைச் செலுத்தி அவர்களை உயிர்ப்பித்தார். பிறகு முக்தி அளிக்கக் கூடியவரான முகுந்தன் தம் நண்பர்களுடனும், கன்றுகளுடனும் அந்த அசுரனின் வாயிலிருந்து வெளிவந்தார்.

பதம் 10.12.33
பீனாஹி போகோத்திதம் அத்புதம் மஹஜ்
ஜ்யோதி: ஸ்வ-தாம்னா ஜ்வலயத் திசோ தச
ப்ரதீக்ஷ்ய கே ‘வஸ்திதம் ஈச-நிர்கமம்
விவேச தஸ்மின் மிஷதாம் திவௌகஸாம்

பீன—மிகப்பெரிய; அஹி-போக-உத்திதம்—பெளதிக சுகபோகங்களுக்குரியதான, அப்பாம்பின் உடலிலிருந்து வெளிப்பட்டு; அத்புதம்—மிகவும் அற்புதமான; மஹத் ஜ்யோதி:—கண் கூசச் செய்யும் பேரொளி; ஸ்வ-தாம்னா—அதன் சுயப்பிரகாசத்தினால்; ஜ்வலயத்—பிரகாசிக்கச் செய்து; திச:-தச—பத்துத் திசைகளையும்; ப்ரதீக்ஷ்ய—காத்திருந்து; கே—ஆகாயத்தில்; அவஸ்திதம்—தனியாக; ஈச-நிர்கமம்—பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர் வெளியேறும் வரை; விவேச—புகுந்தது; தஸ்மின்—கிருஷ்ணரின் உடலுக்குள்; மிஷதாம்—பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது; திவௌகஸாம்—எல்லாத் தேவர்களும்.

அந்த மலைப்பாம்பின் உடலிலிருந்து பிரம்மாண்டமான ஒரு பிரகாசமான ஒளி மேல்கிளம்பி, எல்லாத் திசைகளையும் பிரகாசமாக்கியது. பிறகு பிணத்தின் வாயிலிருந்து கிருஷ்ணர் வெளியில் வரும் வரை, அது ஆகாயத்தில் தனியாகக் காத்திருந்தது. அதன்பிறகு, தேவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, அந்த ஒளி கிருஷ்ணரின் உடலுக்குள் புகுந்தது.

பதம் 10.12.34
ததோ ‘திஹ்ருஷ்டா: ஸ்வ-க்ருதோ ‘க்ருதார்ஹணம்
புஷ்பை: ஸுகா அப்ஸரஸஸ் ச நர்தனை:
கீதை: ஸுரா வாத்ய-தராஸ் ச வாத்யகை:
ஸ்தவைஸ் ச விப்ரா ஜய-நிஹ்ஸ்வனைர் கணா:

தத:—அதன்பிறகு; அதி-ஹ்ருஷ்டா:—அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்து; ஸ்வ-க்ருத:—அவரவர் கடமைகளை; அக்ருத—செய்தனர்; அர்ஹணம்—பரமபுருஷரை வழிபடும் வடிவில்; புஷ்பை:—சுவர்க்கத்திலுள்ள; நந்த—கானகத்தில் விளையும் மலர்களைப் பொழிந்தும்; ஸு-கா:—சுவர்க்கலோக பாடகர்கள்; அப்ஸரஸ: ச—மேலும் சுவர்க்கலோக நடனமங்கைகள்; நர்தனை:—நர்த்தனமாடியும்; கீதை:—சுவர்க்கலோக பாடல்களைப் பாடியும்; ஸுரா:—தேவர்கள் அனைவரும்; வாத்ய-தரா: ச—மேள வாத்தியங்களை வாசித்தவர்கள்; வாத்யகை:—அவரவர் வாத்தியக் கருவிகளை வாசித்தும்; ஸ்தவை: ச—மேலும் பிரார்த்தனைகள் செய்தும்; விப்ரா:—பிராமணர்கள்; ஜய-நிஹ்ஸ்வனை:—பரமபுருஷரைப்போற்றிப் புகழ்ந்தும்; கணா:—அனைவரும்.

அதன்பிறகு அனைவரும் திருப்தியடைந்தனர். தேவர்கள் நந்த-கானகத்திலிருந்து மலர்களை பொழியத் துவங்கினார். சுவர்க்க லோக நடன மங்கைகள் நடனமாடத் துவங்கினர். புகழ்பெற்ற பாடகர்களான கந்தர்வர்கள் துதி பாடினர். மேள வாத்தியக்காரர்கள் தங்கள் மேளங்களைக் கொட்டினர். பிராமணர்கள் வேத மந்திரங்களை ஓதினார். இவ்விதமாக, சுவர்க்கத்திலும், பூமியிலும் உள்ள அனைவரும் பகவானை போற்றிப் புகழ்ந்து, தங்கள் சொந்தக் கடமைகளை ஆற்றத் துவங்கினர்.

பதம் 10.12.35
தத்-அத்புத-ஸ்தோத்ர-ஸுவாத்ய-கீதிகா-
ஜயாதி-நைகோத்ஸவ-மங்கள-ஸ்வனான்
ஸ்ருத்வா ஸ்வ-தாம்னோ ‘ந்தி அஜ ஆகதோ ‘சிராத்
த்ருஷ்ட்வா மஹீசஸ்ய ஜகாம விஸ்மயம்

தத்—மேலுலகங்களில் தேவர்களால் நிகழ்த்தப்பட்ட அவ்விழா; அத்புத—அற்புதமான; ஸ்தோத்ர—பிரார்த்தனைகள்; ஸு-வாத்ய—பெருமைக்குரிய மேள வாத்தியங்கள் மற்றும் பிற வாத்தியக் கருவிகளின் வாத்தியங்கள்; கீதிகா—சுவர்க்கலோகப் பாடல்கள்; ஜய-ஆதி—ஜய கோஷங்கள் போன்றவைகளை; ந-ஏக-உத்ஸவ—பகவானைத் துதிப்பதற்காகவே ஏற்பட்ட விழாக்கள்; மங்கள-ஸ்வனான்—அனைவருக்கும் மங்களமளிக்கும் தெய்வீக ஓசைகள்; ஸ்ருத்வா—இத்தகைய ஓசைகளைக் கேட்டு; ஸ்வ-தாம்னா—தனது வசிப்பிடத்திலிருந்து; அந்தி—அருகாமையில்; அஜ:—பிரம்மதேவர்; ஆகத:—அங்கு வந்து; அசிராத்—விரைவாக; த்ருஷ்ட்வா—கண்டு; மஹி—ஸ்தோத்திரத்தை; ஈசஸ்ய—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; ஜகாமவிஸ்மயம்—ஆச்சரியப்பட்டார்.

தன் கிரகத்திற்கு அருகில், இன்னிசைகளும் பாடல்களும், “ஜய” கோஷங்களும் சூழ, அற்புதமான விழா நிகழ்ந்து கொண்டிருப்பதைக் கேட்ட பிரம்மதேவர், அந்நிகழ்ச்சியைக் காண உடனடியாக கீழே இறங்கி வந்தார். இந்த அளவிற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துதித்துப் போற்றப்படுவதைக் கண்டு அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.

பதம் 10.12.36
ராஜன் ஆஜகரம் சர்ம கஷ்கம் வ்ருந்தாவனே ‘த்புதம் வ்ரஜேளகஸாம் பஹு-திதம் பபூவாக்ரீட-கஹ்வரம்

ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; ஆஜகரம் சர்ம—ஒரு பெரிய தோலாக மட்டுமே எஞ்சியிருந்த அகாசுரனின் உலர்ந்த உடல்; கஷ்கம்—அது முற்றிலும் உலர்ந்து போனதும்; வ்ருந்தாவனே அத்புதம்—பொருட்காட்சி நிலையத்திலுள்ள அற்புதமான ஒரு பொருளைப் போல்; வ்ரஜ-ஒகஸாம்—பிருந்தாவனவாசிகளுக்கு; பஹு-திதம்—பல நாட்களுக்கு, அல்லது நீண்ட காலத்திற்கு; பபூவ—ஆனது; ஆக்ரீட—விளையாடும் இடமாகவும்; கஹ்வரம்—ஒரு குகையாகவும்.

பரீட்சித்து மகாராஜனே, மலைப்பாம்பின் வடிவிலிருந்த அகாசுரனின் உடல் உலர்ந்து, பெரியதொரு தோல் மட்டுமே எஞ்சியிருந்தது. அப்போதும், அது பிருந்தாவன வாசிகளுக்கு ஓர் அற்புதமான காட்சிப்பொருளாக அமைந்தது. மேலும் மிகமிக நீண்ட காலத்திற்கு அது அப்படியே இருந்தது.

பதம் 10.12.37
ஏதத் கௌமாரஜம் கர்ம ஹரேர் ஆத்மாஹி-மோக்ஷணம்
ம்ருத்யோ: பௌகண்டகே பாலா த்ருஷ்வோசுர் விஸ்மிதா வ்ரஜே

ஏதத்—அகாசுரனையும், கிருஷ்ணரின் சகாக்களையும் மரணத்திலிருந்து காப்பாற்றிய இச்சம்பவம்; கௌமார-ஜம்-கர்ம—அவர்களது குமார பருவத்தில் (ஐந்து வயது இருக்கும் பொழுது) இயற்றப்பட்டது; ஹரே:—பரமபுருஷரின்; ஆத்ம—பக்தர்கள் பகவானின் இதயமும், ஆத்மாவுமாவர்; அஹி-மோக்ஷணம்—அவர்களது விடுதலையும், மலைப்பாம்பின் விடுதலையும்; ம்ருத்யோ:—தொடர்ந்து பிறப்பு, இறப்பெனும் வழியிலிருந்து; பௌகண்டகே—ஆறு வயதிலிருந்து துவங்கும் பருவம் (ஓராண்டுக்குப் பின்); பாலா:—எல்லாச் சிறுவர்களும்; த்ருஷ்ட்வா ஊசு:—ஓராண்டுக்குப் பின் உண்மையை வெளிப்படுத்தினர்; விஸ்மிதா:—அன்றுதான் நிகழ்ந்தது போல்; வ்ரஜே—பிருந்தாவனத்தில்.

கிருஷ்ணர் தம்மையும், தமது சகாக்களையும் மரணத்திலிருந்து காப்பாற்றி மலைப்பாம்பின் ரூபத்தை ஏற்றிருந்த அகாசுரனுக்கு முக்தியளித்த இச்சம்பவம், கிருஷ்ணருக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது நிகழ்ந்தது இச்சம்பவம். அன்றுதான் நிகழ்ந்ததுபோல் ஓராண்டுக்குப் பிறகே விரஜபூமியில் வெளிப்படுத்தப்பட்டது.

பதம் 10.12.38
நைதத் விசித்ரம் மனுஜார்ப-மாயின:
பராவராணாம் பரமஸ்ய தேவஸ:
அகோ ‘பி யத்-ஸ்பர்சன-தௌத-பாதக:
ப்ராபாத்ம-ஸாம்யம் த்வ் அஸதாம் ஸுதுர்லபம்

ந—இல்லை; ஏதத்—இது; விசித்ரம்—விசித்திரம்; மனுஜ-அர்ப-மாயி-ந:—நந்த மகாராஜனிடமும், யசோதையிடமும் கொண்ட இரக்கத்தின் காரணத்தால், அவர்களது மகனாகத் தோன்றிய கிருஷ்ணரின்; பர-அவராணாம்—எல்லாக் காரண, விளைவுகளின்; பரமஸ்ய-வேதஸ:—பரம சிருஷ்டிக் கர்த்தாவின்; அக:-அபி—அகாசுரன் கூட; யத்-ஸ்பர்சன—யாருடைய சிறிதளவு தொடர்பினாலேயே; தௌத-பாதக:—பெளதிக இருப்பின் எல்லா பாதங்களிலிருந்தும் விடுபட்டான்; ப்ராப—உயர்த்தப்பட்டான்; ஆத்ம-ஸாம்யம்—நாராயணரை ஒத்த அதேபோன்ற ஓருடலுக்கு; து—ஆனால்; அஸதாம் ஸுதுர்லபம்—களங்கப்பட்ட ஆத்மாக்களால் அடையப்படுவது சிறிதும் சாத்தியமில்லை (ஆனால் பரம புருஷரின் கருணையால் அனைத்தும் சாத்தியமாகக் கூடியதே).

கிருஷ்ணர் சகல காரணங்களுக்கும் காரணமாவார். மேலும், கீழும் உள்ள ஜட உலகங்களின் காரண, விளைவுகள் அனைத்தும், ஆதி ஈசுவராகிய பரமபுருஷராலேயே படைக்கப்படுகின்றன. கிருஷ்ணர் நந்த மகாராஜனுக்கும், யசோதைக்கும் மகனாகத் தோன்றியதற்கு அவரது அகாரணமான கருணையே காரணம். ஆகையால், எல்லையற்ற ஐசுவாரியத்தைக் காட்டுவது அவருக்குச் சிறிதும் அற்புதமான செயலல்ல. உண்மையில், பெரும் பாவியும், துஷ்டனுமான அகாசுரன்கூட, பகவானின் சகாக்களுள் ஒருவனாக உயர்த்தப்பட்டு, ஸாரூப்ய-முக்தியை அடைந்தான். பொதுவாக பெளதிக களங்கமுடையவர்களால் இந்நிலையை அடைய முடியாது.

பதம் 10.12.39
ஸக்ருத் யத்-அங்க-ப்ரதிமாந்தர்-ஆஹிதா
மனோமயீ பாகவதீம் ததெள கதிம்
ஸ ஏவ நித்யாத்ம-ஸுகானுபூதி-அபி-
வ்யுதஸ்த-மாயோ ‘ந்தர்-கதோ ஹி கிம் புன:

ஸக்ருத்—ஒருமுறை மட்டுமே; யத்—யாருடைய; அங்க-ப்ரதிமா—பரமபுருஷரின் ரூபம் (பல ரூபங்கள் உள்ளன, ஆனால் கிருஷ்ணர் மூலரூபமாவார்); அந்த:-ஆஹிதா—எப்படியாவது இதய மத்தியில் வைத்து; மன:-மயீ—கட்டாயத்தால் அவரைப் பற்றி நினைப்பதுகூட; பாகவதீம்—பகவானுக்கு பக்தித்தொண்டு செய்யத் தகுதியுடையது; ததௌ—கிருஷ்ணர் கொடுத்தார்; கதிம்—மிகச்சிறந்த கதியை; ஸ:—அவர் (பரம புருஷர்); ஏவ—உண்மையில்; நித்ய—எப்பொழுதும்; ஆத்ம—அனைத்து ஜீவராசிகளின்; ஸுக-அனுபூதி—அவரைப்பற்றி நினைக்கும் எவரும் உடனே உன்னத ஆனந்தத்தை அனுபவிக்கிறார்; அபிவ்யுதஸ்த-மாய:—ஏனெனில் அவரால் மாயை முழுமையாக அகற்றப்படுகிறது; அந்த:-கத:—அவர் எப்பொழுதும் இதய மத்தியில் இருக்கிறார்; ஹி—உண்மையில்; கிம் புன:—என்ன சொல்வது.

ஒரே ஒரு முறையாவது அல்லது வலுக்கட்டாயமாகவாவது, பரம புருஷரின் ரூபத்தைத் தன் மனத்திற்குள் ஒருவன் கொண்டு வருவானாயின், அவனால் அகாசுரனைப் போல் கிருஷ்ணரின் கருணையால் மிகவுயர்ந்த முக்தியை அடைய முடியும். அப்படியானால், பகவான் ஓர் அவதாரமாகத் தோன்றும் பொழுது, யாருடைய இதயத்திற்குள் அவர் பிரவேசிக்கிறாரோ அவர்களுடைய நிலையைப் பற்றி என்னவென்று சொல்வது? அல்லது யார் எல்லா ஜீவராசிகளுக்கும் உன்னத ஆனந்தத்தின் ஊற்றாக இருக்கிறாரோ, யாரால் மாயை முற்றிலும் அகற்றப்படுகிறதோ, அந்த பகவானின் தாமரைப் பாதங்களைப் பற்றி எப்பொழும் நினைப்பவர்களின் நிலையைப் பற்றி என்னவென்று சொல்வது?

பதம் 10.12.40
ஸ்ரீ-ஸூத உவாச
இத்தம் த்விஜ யாதவதேவ-தத்த:
ஸ்ருத்வா ஸ்வ-ராதுஸ் சரிதம் விசித்ரம்
பப்ரச்ச பூயோ ‘பி தத் ஏவ புண்யம்
வையாஸகிம் யன் நிக்ருஹீத-சேதா:

ஸ்ரீ-ஸூத: உவாச—ஸ்ரீ சூத கோஸ்வாமி நைமிஷாராண்ய வனத்தில் கூடியிருந்த முனிவர்களிடம் கூறினார்; இத்தம்—இவ்வாறாக; த்விஜா:—கற்றறிந்த பிராமணர்களே; யாதவ-தேவ-தத்த:—யாதவதேவரான கிருஷ்ணரால் பாதுகாக்கப்பட்ட பரீட்சித்து மகாராஜன் (அல்லது யுதிஷ்டிர மகாராஜன்); ஸ்ருத்வா—கேட்டு; ஸ்வ-ராது:—அவரது தாய் உத்தரையின் கர்ப்பத்தில் அவரைக் காப்பாற்றியவரான கிருஷ்ணரின்; சரிதம்—நடவடிக்கைகள்; விசித்ரம்—மிகவும் அற்புதமானவை; பப்ரச்ச—வினவினார்; பூய: அபி—மீண்டும்; தத் ஏவ—இத்தகைய செயல்களை; புண்யம்—எப்பொழுதும் புண்ணியச் செயல்களால் நிறைந்துள்ள அவை (ஸ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண: புண்ய-ஸ்ரவண-கீர்த்தன:—கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பது புண்ணியமாகும்); வையாஸகிம்—சுகதேவ கோஸ்வாமியிடம்; யத்—ஏனெனில்; நிக்ருஹீத-சேத:—பரீட்சித்து மகாராஜன் கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதில் ஏற்கனவே உறுதி கொண்டிருந்தார்.

ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: கற்றறிந்த முனிவர்களே, ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவ லீலைகள் மிகவும் அற்புதமானவை, தன்னைத் தன் தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றிய ஸ்ரீ கிருஷ்ணரின் அந்த லீலைகளைப்பற்றிக் கேட்டபின், பரீட்சித்து மகாராஜன் தன் மனதில் உறுதி கொண்டவராய், மீண்டும் அப்புண்ணியச் செயல்களைப் பற்றி சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்.

பதம் 10.12.41
ஸ்ரீ-ராஜோவாச
ப்ரஹ்மன் கலாந்தர-க்ருதம் தத்-காலீனம் கதம் பவேத்
யத் கௌமாரே ஹரி-க்ருதம் ஜகு: பௌகண்டகே ‘ர்பகா:

ஸ்ரீ-ராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் வினவினார்; ப்ரஹ்மன்—கற்றறிந்த பிராமணரே (சுகதேவ கோஸ்வாமியே); கால-அந்தர-க்ருதம்—கடந்த காலத்தில், (வேறொரு பருவத்தில்) (பால பருவத்தில்); தத்-காலீனம்—இப்பொழுது (பௌகண்ட பருவத்தில்) நடப்பது விவரிக்கப்படுகிறது; கதம் பவேத்—அதெப்படி சாத்தியமாகும்; யத்—எந்த லீலை; கௌமாரே—பால பருவத்தில்; ஹரி-க்ருதம்—கிருஷ்ணரால் செய்யப்பட்டது; ஜகு:—அவர்கள் விவரித்தனர்; பௌகண்டகே—(ஓராண்டுக்குப்பின்) பௌகண்ட பருவத்தில்; அர்பகா:—எல்லாச் சிறுவர்களும்.

பரீட்சித்து மகாராஜன் வினவினார்: மாமுனிவரே, கடந்தகால நிகழ்ச்சிகள் எப்படி தற்பொழுது நிகழ்பவையாக விவரிக்கப்படுகின்றன? பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அகாசுரனைக் கொன்ற இந்த லீலையை அவரது பால (கௌமார) வயதில் நிகழ்த்தினார். அப்படியானால் இச்சம்பவம் சமீபத்தில் அவரது பௌகண்ட வயதில் நிகழ்ந்ததாக சிறுவர்கள் விவரித்தது எப்படி சாத்தியமாகும்?

பதம் 10.12.42
தத் ப்ரூஹி மே மஹா-யோகின் பரம் கௌதூஹலம் குரோ
நூனம் ஏதத் தரேர் ஏவ மாயா பவதி நான்யதா

தத் ப்ரூஹி—எனவே தயவுகூர்ந்து அதை விளக்கியருளுங்கள்; மே—எனக்கு; மஹா-யோகின்—மகா யோகியே; பரம்—மிகவும்; கௌதூஹலம்—ஆவல்; குரோ—என் பிரபுவே, ஆன்மீக குருவே; நூனம்—இல்லையெனில்; ஏதத்—இச்சம்பவம்; ஹரே:—பரமபுருஷரின்; ஏவ—உண்மையில்; மாயா—மாயை; பவதி—ஆகிறது; ந அன்யதா—இதற்கு மேல் ஒன்றுமில்லாத.

மகா யோகியே, எனது ஆன்மீக குருவே, ஏன் இப்படி நிகழ்ந்ததென்று விளங்கியருளுங்கள், இதையறிய மிகவும் நான் ஆவலாக இருக்கிறேன். இது கிருஷ்ணரால் விளைந்த மற்றொரு மாயையே தவிர வேறொன்றுமில்லை என்று நான் நினைக்கிறேன்.

பதம் 10.12.43
வயம் தன்யதமா லோகே குரோ ‘பி க்ஷத்ர-பந்தவ
வயம் பிபாமோ முஹுஸ் த்வத்த: புண்யம் க்ருஷ்ண-கதாம்ருதம்

வயம்—நாங்கள் இருக்கிறோம்; தன்ய-தமா:—மிகவும் புகழப்படுபவர்களாக; லோகே—இவ்வுலகில்; குரோ—என் பிரபுவே, ஆன்மீக குருவே; அபி—என்றாலும்; க்ஷத்ர-பந்தவ:—க்ஷத்திரியர்களில் கடைப்பட்டவர்கள் (ஏனெனில் நாங்கள் க்ஷத்திரியர்களைப் போல் செயற்படவில்லை); வயம்—நாங்கள் உள்ளோம்; பிபாம:—பருகுகிறோம்; முஹு:—எப்பொழுதும்; த்வத்த:—உம்மிடமிருந்து; புண்யம்—புண்ணியமான; க்ருஷ்ண-கதா-அம்ருதம்—கிருஷ்ண-கதை எனும் அமுதத்தை.

என் பிரபுவே, ஆன்மீக குருவே, நாங்கள் க்ஷத்திரியர்களிலேயே கடைப்பட்டவர்கள் என்ற போதிலும், நாங்கள் புகழப்படுவதுடன் நன்மையும் அடைகிறோம். ஏனெனில் பரமபுருஷரின் புண்ணியச் செயல்களெனும் அமுதத்தை உம்மிடமிருந்து கேட்கும் வாய்ப்பினை நாங்கள் பெற்றுள்ளோம்.

பதம் 10.12.44
ஸ்ரீ-ஸூத உவாச
இத்தம் ஸ்ம ப்ருஷ்ட: ஸ து பாதராயணிஸ்
தத்-ஸ்மாரிதானந்த-ஹ்ருதாகிலேந்ரிய:
க்ருச்ராத் புனர் லப்த-பஹிர்-த்ருசி: சனை:
ப்ரத்யாஹ தம் பாகவதோத்தமோத்தம

ஸ்ரீ-ஸூத: உவாச—ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; இத்தம்—இவ்வாறாக; ஸ்ம—கடந்தகாலத்தில்; ப்ருஷ்ட:—அவரிடம் வினவியதும்; ஸ:—அவர்; து—உண்மையில்; பாதராயணி:—சுகதேவ கோஸ்வாமி; தத்—அவரால் (சுகதேவ கோஸ்வாமியால்); ஸ்மாரித-அனந்த—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நினைவு கூறப்பட்ட உடனேயே; ஹ்ருத—பரவச நிலையில் ஆழ்ந்தார்; அகில-இந்ரிய:—புறப்புலன்களின் இயக்கங்கள் எல்லாம்; க்ருச்ராத்—மிகவும் சிரமத்துடன்; ந புன:—மீண்டும்; லப்த-பஹி:-த்ருசி:—அவரது புற உணர்வை திரும்பப் பெற்றதும்; சனை:—மெதுவாக; ப்ரத்யாஹ—பதிலளித்தார்; தம்—பரீட்சித்து மகாராஜனுக்கு: பாகவத-உத்தம-உத்தம—பக்தர்களிலேயே மிகச் சிறந்தவரே மிகச்சிறந்த புண்ணிய புருஷரே (சௌனகரே).

சூத கோஸ்வாமி கூறினார்: முனிவர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையில் மிகச்சிறந்தவராகிய சௌனகரே, பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கேஸ்வாமியிடம் இவ்வாறு வினவியபொழுது, கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்களைத் தன் இதயத்தில் உடனே நினைவுகூர்ந்த சுகதேவ கோஸ்வாமி, புறப் புலன் இயக்கங்களுடனான தொடர்பை இழந்தவரானார். அதன்பிறகு, மிகவும் சிரமத்துடன் தனது புறப் புலன் உணர்வை திரும்பப்பெற்ற அவர், கிருஷ்ண-கதையைப் பற்றி பரீட்சித்து மகாராஜனிடம் பேசத் துவங்கினார்.


ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “அகாசுர வதம்” எனும் தலைப்பை கொண்ட பன்னிரெண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare