அத்தியாயம் – 12
அகாசுர வதம்
பதம் 10.12.1 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, ஒரு நாள் கிருஷ்ணர் தமது காலைச் சிற்றுண்டியை வனபோஜனமாக அனுபவிக்க முடிவு செய்தார். அதிகாலையிலேயே எழுந்துவிட்ட அவர், தம் கொம்பை ஊதி, அதன் இனிய ஓசையால் எல்லா இடைச்சிறுவர்களையும், கன்றுகளையும் எழுப்பினார். பிறகு கிருஷ்ணரும், சிறுவர்களும், அவரவர் கன்றுகளை முன்னே செல்லவிட்டு, விரஜபூமியிலிருந்து வனத்தை நோக்கிச் சென்றனர்.

பதம் 10.12.2 : அப்பொழுது, ஆயிரக்கணக்கான இடைச் சிறுவர்கள் விரஜாபூமியிலுள்ள அவரவர் வீடுகளிருந்து வெளியேறி, ஆயிரக்கணக்கான கன்றுக் கூட்டங்கள் தங்கள் முன் செல்ல, அவற்றைப் பின்தொடர்ந்து சென்றபடி கிருஷ்ணருடன் சேர்ந்து கொண்டன. அச்சிறுவர்கள் மிகவும் அழகாக இருந்தனர். அவர்கள் உணவுப் பைகள், ஊது கொம்புகள், புல்லாங்குழல்கள் மற்றும் கன்றுகளை மேய்ப்பதற்கான கொம்புகள் ஆகியவற்றைத் தங்களிடம் வைத்திருந்தனர்.

பதம் 10.12.3 : கிருஷ்ணர் இடைச் சிறுவர்களுடனும், ஒன்றுகூடிய அவர்களது எண்ணிலடங்காத கன்றுக் கூட்டங்களுடனும் வெளியே வந்தார். பிறகு எல்லாப் பையன்களும் காட்டில் மிகவும் சந்தோஷமாக விளையாடத் துவங்கினர்.

பதம் 10.12.4 : அப்பையன்கள் அனைவரும் நவரத்தினங்கள், சிறு சங்குகள், முத்து, தங்கம் முதலான ஆபரணங்களைக் கொண்டு தங்கள் தாய்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தனர். ஆயினும் காட்டிற்குள் சென்ற அவர்கள் பழங்கள், பச்சிலைகள், மலர்க் கொத்துகள், மயிலிறகுகள், மிருதுவான தாதுப் பொருட்கள் முதலியவைகளால் தங்களை மேலும் அலங்கரித்துக் கொண்டனர்.

பதம் 10.12.5 : இடைச் சிறுவர்கள் அனைவரும் ஒருவர் மற்றொருவரின் உணவுப் பையைத் திருடுவது வழக்கம். தன் பை திருடப்பட்டதை ஒருவன் அறியும்பொழுது, மற்ற பையன்கள் அதை தூரத்தில் எறிந்து விடுவார்கள். அங்குள்ளவர்கள் அதை இன்னும் தூரத்தில் எறிந்துவிடுவார்கள். பையின் உரிமையாளன் ஏமாற்றமடையும் பொழுது மற்ற பையன்கள் சிரிப்பார்கள், இதனால் பையை இழந்தவன் அழுவான், அதன்பிறகு பை அவனிடம் திரும்பிக் கொடுக்கப்படும்.

பதம் 10.12.6 : சிலசமயங்களில் வனத்தின் அழகைக் காண்பதற்காக கிருஷ்ணர் தூரமான ஓரிடத்திற்குச் செல்வார். பிறகு மற்றெல்லாச் சிறுவர்களும், “நான்தான் முதலில் கிருஷ்ணனைத் தொடுவேன்! முதலில் கிருஷ்ணனை நான்தான் தொடுவேன்!” என்று கூறிக்கொண்டு அவருக்குத் துணையாக ஓடுவார்கள். இவ்விதமாக கிருஷ்ணரைத் திரும்பத் திரும்பத் தொட்டு விளையாடி அவர்கள் வாழ்வை அனுபவித்தனர்.

பதங்கள் 10.12.7 – 10.12.11 : எல்லாச் சிறுவர்களும் வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள். சில சிறுவர்கள் புல்லாங்குழல்களை வாசித்தனர். மற்றவர்கள் கொம்புகளை ஊதினார். சிலர் வண்டுகளைப் போல் ரீங்காரம் செய்தனர். மற்றவர்கள் குயில்களைப் போல் கூவினர். சில சிறுவர்கள் நிலத்தில் தெரியும் பறவைகளின் நிழல்களைப் பின்தொடர்ந்து பறப்பது போல் பாவனை செய்வார்கள். சிலர் அன்னப் பறவைகளின் இனிய அசைவுகளையும் கவர்ச்சியான தோரணைகளையும் போல் ஒய்யார நடைபோட்டனர். சிலர் மௌனமாக அமர்ந்திருந்த கொக்குகளுடன் உட்கார்ந்திருந்தனர். சிலர் மயில்களைப்போல் நடனமாட முயன்றனர். சில சிறுவர்கள் மரங்களிலிருந்த இளம் குரங்குகளைக் கவர்ந்தனர். சிலர் குரங்குகளைப் போல் பாவனை செய்து மரங்களில் குதித்தனர். சிலர் குரங்குகளைப் போல் முகங்களைக் காட்டி, நையாண்டி செய்தனர் மற்றும் சிலர் கிளைக்குக் கிளை தாவினர். சில சிறுவர்கள் நீர் வீழ்ச்சிக்குச் சென்று, தவளைகளுடன் குதித்துச் சென்று நதியைக் கடந்தனர். அப்பொழுது நீரில் தெரியும் தங்கள் சொந்த பிரதி பிம்பத்தைக் கண்டு சிரிப்பார்கள். தங்கள் சொந்த எதிரொலியைக் கேட்டு அவர்கள் கண்டனம் செய்வார்கள். எல்லா இடைச்சிறுவர்களும் கிருஷ்ணருடன் இவ்வாறு விளையாடுவது வழக்கம். அந்த கிருஷ்ணர், எந்த பிரம்மத்துடன் கலந்துவிட ஞானிகள் விரும்புகிறார்களோ, அந்த பிரம்மஜோதியின் பிறப்பிடமாவார். நித்திய தொண்டை ஏற்றுக் கொண்டுள்ள பக்தர்களுக்கு அந்த கிருஷ்ணர் பரமபுருஷராவார். சாதாரண மனிதர்களுக்கு அவர் ஒரு சாதாரண குழந்தையாவார். இடைச்சிறுவர்கள் பல பிறவிகளில் புண்ணியச் செயல்களின் பலன்களைச் சேகரித்துள்ளதால், அவர்களால் பரமபுருஷ பகவானுடன் இவ்வாறு சகவாசம் கொள்ள முடிந்தது. அவர்களது பெரும் பாக்கியத்தை ஒருவரால் எப்படி விவரிக்க இயலும்?

பதம் 10.12.12 : யோகிகள், மிகக் கடினமான யமம், நியம், ஆஸனம், ப்ராணா யாமம் போன்றவைகளைப் பயின்று பல பிறவிகளில் கடும் தவங்களையும், விரதங்களையும் மேற்கொள்ளக் கூடும். எனினும், காலப்போக்கில் இந்த யோகிகள் மனதை அடக்குவதில் பூரணத்துவம் பெறும்பொழுது, பரமபுருஷரின் பத்ம பாதங்களிலிருந்து வரும் அணுவளவு தூசியைக் கூட இவர்களால் சுவைக்க முடிவதில்லை. அப்படியிருக்க, பரம்புருஷருடனேயே வாழ்ந்து, நேருக்கு நேராக அவரைத் தரிசித்த பிருந்தாவன வாசிகளின் பேரதிர்ஷ்டத்தைப் பற்றி நம்மால் எப்படி விவரிக்க முடியும்?

பதம் 10.12.13 : பரீட்சித்து மகாராஜனே, அதன்பிறகு அகாசுரன் என்ற சக்திவாய்ந்த ஓரசுரன் அங்கு தோன்றினான். தேவர்கள்கூட அவனது மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தேவர்கள் தினமும் அமிர்தத்தைப் பருகியபோதிலும் அவர்களும் அச்சக்திவாய்ந்த அசுரனுக்கஞ்சி அவனது மரணத்திற்காகக் காத்திருந்தனர். காட்டில் இடைச்சிறுவர்களால் அனுபவிக்கப்படும் உன்னத ஆனந்தத்தை அந்த அசுரனால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

பதம் 10.12.14 : கம்சனால் அனுப்பப்பட்ட அகாசுரன், பூதனைக்கும், பகாசுரனுக்கும் தம்பியாவான். எனவே கிருஷ்ணர் அங்கு எல்லா இடைச்சிறுவர்களுக்கும் தலைமை வகிப்பதைக் கண்ட அவன் பின்வருமாறு எண்ணினான், “இந்த கிருஷ்ணன் என் தமக்கையையும், தமையனையும் கொன்று விட்டான். எனவே அவர்களை திருப்திப்படுத்தும் பொருட்டு, இந்த கிருஷ்ணனையும், அவனது சகாக்களான மற்ற இடைச் சிறுவர்களையும் நான் கொன்றுவிடப் போகிறேன்.”

பதம் 10.12.15 : அகாசுரன் எண்ணினான், “எப்படியாவது மறைந்த என் தமையன் மற்றும் தமக்கையின் ஆத்மாக்களுக்குக் கடைசியாக அளிக்கும் சிரார்த்தத்திற்குப் (எள்ளுக்கும், நீருக்கும்) பதிலாக, கிருஷ்ணனையும் அவனது சகாக்களையும் சிரார்த்தமாக அளித்துவிட வேண்டும். இதனால் இச் சிறுவர்களைத் தங்கள் உயிராக மதிக்கும் விரஜவாசிகள் தானாகவே இறந்துவிடுவார்கள். உயிர் இல்லையென்றால், உடலுக்கு அவசியமில்லை; ஆகையால் தங்கள் மகன்கள் இறந்துவிட்டால் விரஜவாசிகளும் தானாகவே இறந்து விடுவார்கள்.”

பதம் 10.12.16 : இவ்வாறு முடிவு செய்தபின், வஞ்சகனான அந்த அகாசுரன் ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பின் உருவத்தை ஏற்றான். அது ஒரு மலையளவு பருமனுள்ளதாகவும், எட்டு மைல்கள் நீளமுள்ளதாகவும் இருந்தது. அற்புதமான அந்த மலைப்பாம்பின் உடலை ஏற்ற அவன், கிருஷ்ணரையும், அவரது சகாக்களான இடைச் சிறுவர்களையும் விழுங்கிவிடும் எண்ணத்துடன், ஒரு பெரிய மலைக்குகை போல் வாயைத் திறந்தபடி, சாலையில் படுத்திருந்தான்.

பதம் 10.12.17 : அவனுடைய கீழுதடு தரைமேல் இருந்தது. அவனது மேலுதடு ஆகாயத்திலுள்ள மேகங்களைத் தொட்டுக்கொண்டு இருந்தது. அவனது வாயின் ஓரங்கள் ஒரு பெரிய மலைக்குகையின் இரு பக்கங்களை ஒத்திருந்தன. அவனது வாயின் நடுப்புறம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இருண்டு கிடந்தது. அவனது நாக்கு அகல வீதியை ஒத்திருந்தது. அவனது சுவாசம் உஷ்ணக் காற்றுபோல் வீசியது. மேலும் அவனது கண்கள் தீ போல் ஜொலித்தன.

பதம் 10.12.18 : ஒரு பெரிய மலைப்பாம்பை ஒத்திருந்த இந்த அசுரனின் அற்புத ரூபத்தைக் கண்ட சிறுவர்கள், இது பிருந்தாவனத்தின் ஓர் அழகிய காட்சிப் பொருள் என்று எண்ணினர். அதன்பிறகு, அது ஒரு பெரிய மலைப்பாம்பின் வாயை ஒத்திருப்பதுபோல் அவர்களுக்குத் தோன்றியது. அதாவது அது, தங்களுடைய லீலா சுகத்திற்காக ஒரு பெரிய மலைப் பாம்பின் வடிவில் செய்யப்பட்ட ஒரு சிலை என்றெண்ணி அச் சிறுவர்கள் அச்சமின்றி இருந்தனர்.

பதம் 10.12.19 : சிறுவர்கள் கூறினர்: நண்பர்களே! இது உயிரற்ற ஒரு ஜந்துவா அல்லது நம் அனைவரையும் விழுங்குவதற்காகவே வாயை அகலமாகத்திறந்து வைத்துள்ள உயிருள்ள ஒரு மலைப்பாம்பா? தயவுசெய்து இச்சந்தேகத்தைப் போக்குங்கள்.

பதம் 10.12.20 : அதன்பிறகு, இவ்வாறு அவர்கள் முடிவு செய்தனர்: நண்பர்களே, இது நம்மையெல்லாம் விழுங்குவதற்காக இங்கு படுத்திருக்கும் ஒரு மிருகமே என்பதில் ஐய்யமில்லை. இதன் மேலுதடு சூரிய ஒளியால் சிவந்த ஒரு மேகத்தை ஒத்திருக்கிறது. இதன் கீழுதடு ஒரு மேகத்தின் சிவந்த நிழல்களை ஒத்திருக்கிறது.

பதம் 10.12.21 : இடப்புறமும், வலப்புறமும் மலைக்குகைகளை ஒத்திருக்கும் இரு குழிகள் இதனுடைய வாயின் ஓரங்களாகும். மேலும் உயரமான மலைச் சிகரங்கள் இதன் பற்களாகும்.

பதம் 10.12.22 : இந்த மிருகத்தினுடைய நாக்கின் அகலமும் நீளமும் ஓர் அகல் வீதியை ஒத்திருக்கிறது. மேலும் இதனுடைய வாயின் உட்புறம், ஒரு மலைக் குகைபோல் மிகவும் இருட்டாக உள்ளது.

பதம் 10.12.23 : இதன் வாயிலிருந்து வரும் அனல் காற்று இதனுடைய சுவாசமாகும். இது பிணங்களைத் தின்றுள்ளதால், இதன் சுவாசம் எரியும் மாமிசத்தின் துர்நாற்றத்தைப் பரப்புகிறது.

பதம் 10.12.24 : பிறகு சிறுவர்கள் கூறினர், “இந்த ஜீவராசி நம்மை விழுங்குவதற்காகவே வந்துள்ளதா? அப்படியானால், பகாசுரனைப் போல் இது உடனே கொல்லப்படும்.” இவ்விதமாக பகாசுரனின் எதிரியான கிருஷ்ணரின் அழகிய திருமுகத்தைக் கண்டு உரக்க சிரித்தபடி, கைகளைத் தட்டிக் கொண்டு, மலைப்பாம்பின் வாய்க்குள் அவர்கள் புகுந்தனர்.

பதம் 10.12.25 : எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக (அந்தர்யாமி) உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், செயற்கையான மலைப்பாம்பைப் பற்றி சிறுவர்கள் தங்களுக்கிடையில் பேசிக்கொண்டதைக் கேட்டார். உண்மையில் அகாசுரன் என்ற அசுரன்தான் மலைப் பாம்பாகத் தோன்றியுள்ளான் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இதையறிந்த கிருஷ்ணர், தம் சகாக்கள் அசரனின் வாய்க்குள் நுழைவதைத் தடுக்க விரும்பினார்.

பதம் 10.12.26 : இதற்கிடையில், இடைச் சிறுவர்களைத் தடுத்து நிறுத்துவது பற்றி கிருஷ்ணர் யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுது, அவர்கள் அசுரனின் வாய்க்குள் நுழைந்தனர். ஆனால் அசுரன் அவர்களை விழுங்கிவிடவில்லை. ஏனெனில், கிருஷ்ணரால் கொல்லப்பட்ட தன் சொந்த உறவினர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த அவன், கிருஷ்ணரும் தன் வாய்க்குள் நுழைவதற்காகக் காத்திருந்தான்.

பதம் 10.12.27 : தம்மைத் தவிர வேறெவரையும் தங்கள் பிரபுவாக நினைத்தறியாத இடைச்சிறுவர்கள் தம் கையிலிருந்து நழுவி, மரண சொரூபமான அகாசுரனின் தீ போன்ற வயிற்றுக்குள் சருகுகளைப் போல் நுழைந்து விட்டதைக் கிருஷ்ணர் கண்டார். தம் நண்பர்களான இடைச்சிறுவர்களை விட்டுப் பிரிவதென்பது அவருக்கும் பொறுக்க முடியாததாக இருந்தது. எனவே, இது தமது அந்தரங்க சக்தியால் செய்யப்பட்ட ஏற்பாடு என்பதைக் கண்ட கிருஷ்ணர், கணப்பொழுது செய்வதறியாது திகைத்தார்.

பதம் 10.12.28 : இப்பொழுது செய்ய வேண்டியது என்ன? அசுரனைக் கொல்வதும், பக்தர்களைக் காப்பதும் ஒரே சமயத்தில் எப்படி செய்யப்படக்கூடும்? கிருஷ்ணர் எல்லையற்ற சக்தியுடையவர் என்பதால், ஒரே சமயத்தில் சிறுவர்களைக் காப்பாற்றி, அசுரனையும் கொல்லக்கூடிய ஒரு புத்திசாலித்தனமான உபாயத்திற்காக காத்திருக்க முடிவு செய்தார். பிறகு அவர் அகாசுரனின் வாய்க்குள் புகுந்தார்.

பதம் 10.12.29 : கிருஷ்ணர் அகாசுரனின் வாய்க்குள் புகுந்ததும் மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருந்த தேவர்கள் “ஐயோ ஐயோ” என்று கதறினார்கள், ஆனால் கம்சனையும் மற்ற அசுரர்களையும் போன்ற அகாசுரனின் நண்பர்கள் மிகவும் சந்தோஷமடைந்தார்கள்.

பதம் 10.12.30 : யாராலும் வெல்ல முடியாத பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர், மேகங்களுக்குப் பின்னாலிருந்து “ஐயோ! ஐயோ!” என்று தேவர்கள் கதறுவதைக் கேட்டார். உடனே, தங்களை நொறுக்கிவிட விரும்பிய அந்த அசுரனிடமிருந்து தம்மையும், தமது சொந்த சகாக்களான இடைச்சிறுவர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, அவர் அகரனின் தொண்டைக்குள் தமது உருவத்தை பெருக்கத் தொடங்கினார்.

பதம் 10.12.31 : பிறகு, கிருஷ்ணர் தம் உடலின் அளவைப் பெருக்கியதால், அசுரன் தன் உடலை மிகப் பெரிய அளவிற்கு விரிவடையச் செய்தான். ஆயினும். சுவாசம் நின்று போய் அவன் மூச்சுத் திணறினான். அவனது விழிகள் இங்குமங்கும் சுழன்று, பிதுங்கின. ஆனால் அந்த அசுரனின் உயிர்க் காற்றினால் எந்தத் துவாரத்தின் மூலமாகவும் வெளியேற முடியாததால், இறுதியில் அது அவனது தலை உச்சியிலுள்ள ஒரு துவாரத்தின் வழியாக வெடித்து வெளியேறியது.

பதம் 10.12.32 : அசுரனின் உயிர் மூச்சு முழுவதும், அவனது தலை உச்சியிலிருந்த துவாரத்தின் வழியாக வெளியேறியதும், கிருஷ்ணர் இறந்து கிடந்த கன்றுகள் மீதும், இடைச்சிறுவர்கள் மீதும் தம் பார்வையைச் செலுத்தி அவர்களை உயிர்ப்பித்தார். பிறகு முக்தி அளிக்கக் கூடியவரான முகுந்தன் தம் நண்பர்களுடனும், கன்றுகளுடனும் அந்த அசுரனின் வாயிலிருந்து வெளிவந்தார்.

பதம் 10.12.33 : அந்த மலைப்பாம்பின் உடலிலிருந்து பிரம்மாண்டமான ஒரு பிரகாசமான ஒளி மேல்கிளம்பி, எல்லாத் திசைகளையும் பிரகாசமாக்கியது. பிறகு பிணத்தின் வாயிலிருந்து கிருஷ்ணர் வெளியில் வரும் வரை, அது ஆகாயத்தில் தனியாகக் காத்திருந்தது. அதன்பிறகு, தேவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, அந்த ஒளி கிருஷ்ணரின் உடலுக்குள் புகுந்தது.

பதம் 10.12.34 : அதன்பிறகு அனைவரும் திருப்தியடைந்தனர். தேவர்கள் நந்த-கானகத்திலிருந்து மலர்களை பொழியத் துவங்கினார். சுவர்க்க லோக நடன மங்கைகள் நடனமாடத் துவங்கினர். புகழ்பெற்ற பாடகர்களான கந்தர்வர்கள் துதி பாடினர். மேள வாத்தியக்காரர்கள் தங்கள் மேளங்களைக் கொட்டினர். பிராமணர்கள் வேத மந்திரங்களை ஓதினார். இவ்விதமாக, சுவர்க்கத்திலும், பூமியிலும் உள்ள அனைவரும் பகவானை போற்றிப் புகழ்ந்து, தங்கள் சொந்தக் கடமைகளை ஆற்றத் துவங்கினர்.

பதம் 10.12.35 : தன் கிரகத்திற்கு அருகில், இன்னிசைகளும் பாடல்களும், “ஜய” கோஷங்களும் சூழ, அற்புதமான விழா நிகழ்ந்து கொண்டிருப்பதைக் கேட்ட பிரம்மதேவர், அந்நிகழ்ச்சியைக் காண உடனடியாக கீழே இறங்கி வந்தார். இந்த அளவிற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துதித்துப் போற்றப்படுவதைக் கண்டு அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.

பதம் 10.12.36 : பரீட்சித்து மகாராஜனே, மலைப்பாம்பின் வடிவிலிருந்த அகாசுரனின் உடல் உலர்ந்து, பெரியதொரு தோல் மட்டுமே எஞ்சியிருந்தது. அப்போதும், அது பிருந்தாவன வாசிகளுக்கு ஓர் அற்புதமான காட்சிப்பொருளாக அமைந்தது. மேலும் மிகமிக நீண்ட காலத்திற்கு அது அப்படியே இருந்தது.

பதம் 10.12.37 : கிருஷ்ணர் தம்மையும், தமது சகாக்களையும் மரணத்திலிருந்து காப்பாற்றி மலைப்பாம்பின் ரூபத்தை ஏற்றிருந்த அகாசுரனுக்கு முக்தியளித்த இச்சம்பவம், கிருஷ்ணருக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது நிகழ்ந்தது இச்சம்பவம். அன்றுதான் நிகழ்ந்ததுபோல் ஓராண்டுக்குப் பிறகே விரஜபூமியில் வெளிப்படுத்தப்பட்டது.

பதம் 10.12.38 : கிருஷ்ணர் சகல காரணங்களுக்கும் காரணமாவார். மேலும், கீழும் உள்ள ஜட உலகங்களின் காரண, விளைவுகள் அனைத்தும், ஆதி ஈசுவராகிய பரமபுருஷராலேயே படைக்கப்படுகின்றன. கிருஷ்ணர் நந்த மகாராஜனுக்கும், யசோதைக்கும் மகனாகத் தோன்றியதற்கு அவரது அகாரணமான கருணையே காரணம். ஆகையால், எல்லையற்ற ஐசுவாரியத்தைக் காட்டுவது அவருக்குச் சிறிதும் அற்புதமான செயலல்ல. உண்மையில், பெரும் பாவியும், துஷ்டனுமான அகாசுரன்கூட, பகவானின் சகாக்களுள் ஒருவனாக உயர்த்தப்பட்டு, ஸாரூப்ய-முக்தியை அடைந்தான். பொதுவாக பெளதிக களங்கமுடையவர்களால் இந்நிலையை அடைய முடியாது.

பதம் 10.12.39 : ஒரே ஒரு முறையாவது அல்லது வலுக்கட்டாயமாகவாவது, பரம புருஷரின் ரூபத்தைத் தன் மனத்திற்குள் ஒருவன் கொண்டு வருவானாயின், அவனால் அகாசுரனைப் போல் கிருஷ்ணரின் கருணையால் மிகவுயர்ந்த முக்தியை அடைய முடியும். அப்படியானால், பகவான் ஓர் அவதாரமாகத் தோன்றும் பொழுது, யாருடைய இதயத்திற்குள் அவர் பிரவேசிக்கிறாரோ அவர்களுடைய நிலையைப் பற்றி என்னவென்று சொல்வது? அல்லது யார் எல்லா ஜீவராசிகளுக்கும் உன்னத ஆனந்தத்தின் ஊற்றாக இருக்கிறாரோ, யாரால் மாயை முற்றிலும் அகற்றப்படுகிறதோ, அந்த பகவானின் தாமரைப் பாதங்களைப் பற்றி எப்பொழும் நினைப்பவர்களின் நிலையைப் பற்றி என்னவென்று சொல்வது?

பதம் 10.12.40 : ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: கற்றறிந்த முனிவர்களே, ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவ லீலைகள் மிகவும் அற்புதமானவை, தன்னைத் தன் தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றிய ஸ்ரீ கிருஷ்ணரின் அந்த லீலைகளைப்பற்றிக் கேட்டபின், பரீட்சித்து மகாராஜன் தன் மனதில் உறுதி கொண்டவராய், மீண்டும் அப்புண்ணியச் செயல்களைப் பற்றி சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்.

பதம் 10.12.41 : பரீட்சித்து மகாராஜன் வினவினார்: மாமுனிவரே, கடந்தகால நிகழ்ச்சிகள் எப்படி தற்பொழுது நிகழ்பவையாக விவரிக்கப்படுகின்றன? பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அகாசுரனைக் கொன்ற இந்த லீலையை அவரது பால (கௌமார) வயதில் நிகழ்த்தினார். அப்படியானால் இச்சம்பவம் சமீபத்தில் அவரது பௌகண்ட வயதில் நிகழ்ந்ததாக சிறுவர்கள் விவரித்தது எப்படி சாத்தியமாகும்?

பதம் 10.12.42 : மகா யோகியே, எனது ஆன்மீக குருவே, ஏன் இப்படி நிகழ்ந்ததென்று விளங்கியருளுங்கள், இதையறிய மிகவும் நான் ஆவலாக இருக்கிறேன். இது கிருஷ்ணரால் விளைந்த மற்றொரு மாயையே தவிர வேறொன்றுமில்லை என்று நான் நினைக்கிறேன்.

பதம் 10.12.43 : என் பிரபுவே, ஆன்மீக குருவே, நாங்கள் க்ஷத்திரியர்களிலேயே கடைப்பட்டவர்கள் என்ற போதிலும், நாங்கள் புகழப்படுவதுடன் நன்மையும் அடைகிறோம். ஏனெனில் பரமபுருஷரின் புண்ணியச் செயல்களெனும் அமுதத்தை உம்மிடமிருந்து கேட்கும் வாய்ப்பினை நாங்கள் பெற்றுள்ளோம்.

பதம் 10.12.44 : சூத கோஸ்வாமி கூறினார்: முனிவர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையில் மிகச்சிறந்தவராகிய சௌனகரே, பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கேஸ்வாமியிடம் இவ்வாறு வினவியபொழுது, கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்களைத் தன் இதயத்தில் உடனே நினைவுகூர்ந்த சுகதேவ கோஸ்வாமி, புறப் புலன் இயக்கங்களுடனான தொடர்பை இழந்தவரானார். அதன்பிறகு, மிகவும் சிரமத்துடன் தனது புறப் புலன் உணர்வை திரும்பப்பெற்ற அவர், கிருஷ்ண-கதையைப் பற்றி பரீட்சித்து மகாராஜனிடம் பேசத் துவங்கினார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare