ரமா ஏகாதசி

யுதிஷ்டிரர் கிருஷ்ணரிடம், “ஓ! ஜனார்த்தனா! கார்த்திகை மாதம் (அக்டோபர்- நவம்பர்) கிருஷ்ண பட்ச ஏகாதசியின் பெயர், அதைக் கடை பிடிக்கும் முறை, அதனால் அடையும் பயன் பற்றி கூறவும்” என்றார் .

“அரசர்களில் சிங்கம் போன்றவரே! நான் கூறுவதை கவனமுடன் கேட்பீராக. கார்த்திகை கிருஷ்ண பட்ச ஏகாதசியின் பெயர் ரமா ஏகாதசி ஆகும்.   நம் பாபம் நீக்கி,  நம்மை ஆன்மீக உலகுக்கு அழைத்துச் செல்லக் கூடிய இந்த ஏகாதசி மிகவும் சிறந்தது.

முன்பொரு காலத்தில் இந்திரனுடைய நண்பனும், யமன், வருணன், விபீடனனின் (இராவணனின் தம்பி) நண்பனாகவும் இருந்த முசகுந்தன் என்ற அரசன் இருந்தான்.  முசகுந்தன் வாய்மை தவறாது, எனக்கும் தொண்டு செய்து வந்தான்.   மதக் கோட்பாடுகள் தவறாது ஆட்சி செய்ததால் எந்த இடையூறும் இன்றி வாழ்ந்தான்.  முசகுந்தனுக்கு சந்திரபாகா என்ற நதியின் பெயருடைய ஒரு மகள் இருந்தாள். அவளை சந்திரசேனரின் மகன் ஷோபனாவுக்கு மணம் செய்து கொடுத்தார்.

ஒரு நாள், ஷோபனா தனது மாமனார் அரண்மனைக்கு ஏகாதசி நாளில் விஜயம் செய்தார். இந்த வருகை ஷோபனாவின் மனைவி சந்திரபாகாவை மிகவும் கவலையடையச் செய்தது, ஏனென்றால் அவளுடைய கணவர் உடல் ரீதியாக மிகவும் பலவீனமானவர் மற்றும் ஒரு நாள் உண்ணாவிரதத்தினை தாங்க முடியாதவர்.

சந்திரபாகா கணவனிடம், தன் தந்தை ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பதில் மிகவும் கண்டிப்பானவர் என்றும், ஏகாதசிக்கு முந்தைய நாள் தசமி அன்று முரசு அறைந்து, “ஶ்ரீ ஹரியின் புனித நாள் ஏகாதசி அன்று யாரும் உணவு உண்ண கூடாது,” என்று கூறுவார் என்பதை எடுத்துக் கூறினாள்.  என் தந்தையின் ராஜ்ஜியத்தில் மனிதர்களும், குதிரை யானை போன்ற மிருகங்கள் கூட ஏகாதசி அன்று உண்பதில்லை. யானை, குதிரைகளுக்குக் கூட தானியம், புல், நீர்  வழங்கப்பட மாட்டாது என்றும் கூறினாள். “இளவரசர் ஷோபனா, “புனித ஏகாதசி நாளில் விரதம் இருக்க முடிவு செய்துள்ளேன். என் விதி என்னவாக இருந்தாலும், அது நிச்சயம் நிறைவேறும்” என்றார். இவ்வாறு முடிவெடுத்து, ஷோபனா ஏகாதசியன்று விரதம் இருக்க முயன்றார்.  ஆனால் அவர் அதிக பசி மற்றும் தாகத்தால், தாங்கமுடியாமல் கலங்கினார். உண்மையில், துவாதசி அன்று சூரியன் உதித்தபோது, இளவரசர் ஷோபனா இறந்துவிட்டார். முசகுந்த மன்னர் தனது மருமகனின் இறுதிச் சடங்குகளைக் கவனித்தார். ஆனால் தன்  மகளிடம் உடன்கட்டை ஏறக் கூடாது என்று கூறிவிட்டார்.   சந்திரபாகாவும் இறுதிச் சடங்குகள் செய்துவிட்டு, தனது தந்தையின் வீட்டில் தொடர்ந்து வாழ்ந்தார்.

ரமா ஏகாதசி விரதமிருந்து ஷோபனா உயிரை விட்டதால், அவன் மந்திராசல மலையை அரசாள தகுதி பெற்றான்.  அந்த நாடு தேவர்களின்  நாட்டைப் போல் ஒளி வீசியது. சுவரும் தூண்களும் தங்கத்தால் செய்யப் பட்டு மாணிக்க கற்களும், வைரமும் பதிக்கப்பட்டு இருந்தது.   வெண் கொற்றக் குடையின் கீழ் அரியாசனத்தில் ஷோபனா அமர்ந்ததும் பணியாளர்கள் சாமரம் வீச, அழகிய கிரீடமும், அட்டிகை மின்ன, வங்கியும், கங்கணமும் கைகளை அலங்கரிக்க வீற்று இருந்தான். கந்தர்வர்கள் பாட, அப்சரஸ் ஆட, இரண்டாம் இந்திரனைப் போல் இருந்தான்.

ஒரு முறை முசகுந்தன் நாட்டில் இருந்து சோம ஷர்மா தீர்த்த யாத்திரை செய்து ஷோபனாவின் நாட்டை அடைந்தான். பார்த்த உடனே அவருக்கு ஷோபனா தன் அரசனின் மருமகன் எனத் தெரிந்தது.  சோம ஷர்மா வருவதைப் பார்த்து ஷோபனா தன் அரியாசனத்தில் இருந்து எழுந்து வந்து வரவேற்றான். பணிவுடன் அவனைத் தொழுது தன் மாமனார், மனைவி மற்றும் நாட்டின் வளம் குறித்துக் கேட்டான். சோமஷர்மா எல்லோரும் நலமாக இருப்பதாகவும், ஷோபனாவை பார்த்தது ஆச்சரியமாக இருப்பதாகவும், எப்படி அவன் இவ்வளவு அழகிய நகரத்தை அடைந்தான் என்றும் கேட்டான்.

ஷோபனா தான் ரமா ஏகாதசி விரதம் இருந்து இறந்ததால், இந்த தற்காலிக ஜட உலகின் மகிழ்ச்சியை அடைந்ததாகக் கூறினான். மேலும் நிரந்தர தீர்வு கிடைக்க அவன் நாட்டிற்குத் திரும்பி சந்திரபாகாவை சந்தித்து சோம ஷர்மா பார்த்த எல்லாவற்றையும் எடுத்துக் கூறும்படியும், தூய்மையான ஒரு பிராமணன் எடுத்துச் சொல்வதால் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றும் கூறினான்.  

சோம ஷர்மா கூறியதைக் கேட்ட சந்திரபாகா கணவன் மகிழ்ச்சியாக இருப்பதை அறிந்து மிக மகிழ்ச்சியுடன் தான் கேட்பது கனவா அல்லது நிஜமா என்று கேட்டாள்.

சோமஷர்மா தான் கண்ட தேவலோகத்தி்னை ஒத்த நகரம் எப்போது வேண்டுமானாலும் மறைந்து விடும் என்றும் கூறினான். சந்திரபாகா சோம ஷர்மாவிடம் தன்னை கணவனிடம் அழைத்துச் செல்லும்படியும், தான் கணவனை காண விரும்புவதாகவும், தான் இவ்வளவு நாட்கள் இருந்த ஏகாதசி விரதத்தின் பயனால் அந்த நகரத்தை நிரந்தரமாக்க முடியும் என்றும் சொன்னாள். சோம ஷர்மா சந்திரபாகாவை அங்கு அழைத்துச் சென்றான். வழியில், மந்திராசல மலை அடிவாரத்தில், வாம தேவரின் ஆசிரமத்தை அடைந்து தன் நிலையைப் பற்றி கூறினாள்.   வாமதேவர் வேத மந்திரம் ஜபித்து அர்க்கிய நீரை சந்திரபாகாவின் மேல் தெளித்து விட அவள் ஆழ்நிலைக்குச் சென்றாள்.

தொடர்ந்து பயணம் செல்ல, தன் மனைவி வருவதை தொலைவில் கண்டான் ஷோபனா. தன் அரியணையில் அருகே அமரச் செய்தான். சந்திரபாகா தன் கணவனிடம்” பதிகுருவே! நான் கூறுவதை கேட்பீராக. எட்டு வயது முதல் நான் ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைத்த பயனை தங்களுக்குத் தருகிறேன். தங்கள் நாடு மேலும் மேலும் ஊழிக் காலம் வரை வளரும்,” என்று கூறினாள். “ஓ யுதிஷ்டிரா! இவ்வாறு சந்திரபாகா எல்லா அணிகளும் அணிந்து, புலனறிவுக்கு அப்பாற்பட்ட உருவத்துடன், தன் கணவனுடன் இனிதே வாழ்ந்தாள்.

இவ்வாறு ரமா ஏகாதசி விரதம் இருந்ததால், காமதேனுவிடம் கிடைக்கும் பயன் போன்று, மந்திராசல மலையில் எல்லா மகிழ்ச்சியும் பெற்று வாழ்ந்தான். இதுவே ரமா ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்” என்று கிருஷ்ணர் கூறினார்.

மேலும் மக்கள் மாதத்தின் கிருஷ்ணபட்ச ஏகாதசி,  சுக்லபட்ச ஏகாதசி என  எந்த பாகுபாடும் இன்றி கடை பிடிக்க வேண்டும். அவ்வாறு விரதம் இருப்பதால் இவ்வுலகில் எல்லா நலனும் பெற்று, வைகுந்தம் அடைவர்.   பிராமணரைக்  கொன்ற பாபத்தில் இருந்தும் விடுபடுவர்.

வெள்ளைப் பசுவும், கருப்பு பசுவும் கொடுக்கும் பால் வெள்ளையாக இருப்பது போல், கிருஷ்ண பட்ச சுக்ல பட்ச ஏகாதசியால் அடையும் பலன் மாறாது.  பிறப்பு, இறப்பு சுழற்சியில் இருந்து மக்களை விடுவிக்கும். இந்த ஏகாதசி விரதம் பற்றி கேட்பவர் பாவங்களில் இருந்து விடுபட்டு வைகுந்தம் அடைவர்.

இதுவே பிரம்ம வைவர்த்த புராணத்தில் கூறப்பட்ட கார்த்திகை மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி விரதம் பற்றிய செய்திகள் ஆகும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare