பூ நிலாய ஐந்துமாய்
(திருமழிசை ஆழ்வார்)
திருச்சந்தவிருத்தம்
பூ நிலாய ஐந்துமாய்ப் – புனற்கண் நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய்ச் – சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாயது ஒன்றுமாகி – வேறுவேறு தன்மையாய்
நீ நிலாய, வண்ணம் நின்னை – யார் நினைக்க வல்லரே?
நீ நிலாய, வண்ணம் நின்னை – யார் நினைக்க வல்லரே?
ஆறும் ஆறும் ஆறுமாய் – ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர், இரண்டு மூன்றும் – ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு, ஞானம் ஆகி – மெய்யினோடு பொய்யுமாய்
ஊறொடு ஓசையாய ஐந்தும் – ஆய ஆய மாயனே!
ஊறொடு ஓசையாய ஐந்தும் – ஆய ஆய மாயனே!
ஆதியான வானவர்க்கும் – அண்டம் ஆய அப்புறத்து
ஆதியான வானவர்க்கும் – ஆதியான ஆதி நீ
ஆதியான வான வாணர் – அந்த காலம், நீ உரைத்து
ஆதியான காலம் நின்னை – யாவர் காண வல்லரே!
ஆதியான காலம் நின்னை – யாவர் காண வல்லரே!
சொல்லினால் தொடர்ச்சி நீ – சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது – தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க – நீ படைக்க, வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க – நின் குணங்கள், சொல்ல வல்லரே?
சொல்லினால் சுருங்க – நின் குணங்கள், சொல்ல வல்லரே?
ஏகமூர்த்தி மூன்று மூர்த்தி – நாலு மூர்த்தி நன்மைசேர்
போகமூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி – எண்ணில் மூர்த்தியாய்
நாகமூர்த்தி சயனமாய் – நலங்கடல் கிடந்து மேல்
ஆகமூர்த்தி, ஆய வண்ணம் – என் கொல்? ஆதிதேவனே!
ஆகமூர்த்தி, ஆய வண்ணம் – என் கொல்? ஆதிதேவனே!
** கடைந்த பாற்கடல் கிடந்து – காலநேமியைக் கடிந்து *
உடைந்த வாலி, தன் தனக்கு – உதவ வந்த இராமனாய் **
மிடைந்த ஏழ் மரங்களும் – அடங்க எய்து * வேங்கடம்
அடைந்த மால பாதமே – அடைந்து நாளும் உய்ம்மினோ
அடைந்த மால பாதமே – அடைந்து நாளும் உய்ம்மினோ
வெய்ய ஆழி சங்கு தண்டு – வில்லும் வாளும் ஏந்து சீர்க் கைய *
செய்ய போதில் மாது – சேரும் மார்ப! நாதனே ! **
ஐயிலாய ஆக்கைநோய் – அறுத்து வந்து, நின் அடைந்து *
உய்வது ஓர், உபாயம் நீ – எனக்கு நல்க வேண்டுமே
உய்வது ஓர், உபாயம் நீ – எனக்கு நல்க வேண்டுமே
மறம் துறந்து, வஞ்சம் மாற்றி – ஐம்புலன்கள் ஆசையும்
துறந்து நின் கண் ஆசையே – தொடர்ந்து நின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேரிடர்ச் சுழிக்கணின்று நீங்குமா
மறந்திடாது மற்று எனக்கு – மாய! நல்க வேண்டுமே.
மறந்திடாது மற்று எனக்கு – மாய! நல்க வேண்டுமே.
அத்தனாகி அன்னையாகி – ஆளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து – நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் – புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி? – ஏழை நெஞ்சமே!
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி? – ஏழை நெஞ்சமே!
** ஹரே கிருஷ்ணா **

