பால் வடியும் முகம்
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் னுள்ளம்
பரவச மிக வாகுதே கண்ணா
நீலக்கடல் போலும் நிறத்தழகா கண்ணா
எந்தன்நெஞ்சம் குடிகொண்ட அன்றுமுதல் இன்றும்
எந்தப் பொருள் கண்டும் சிந்தனை செலா தொழிய
வான முகட்டில் சற்று மனம் வந்துநோக்கினும்
உன் மோன முகம் வந்துதோணுதே
தெளிவான தண்ணீர்த் தடத்தில் சிந்தனை மாறினும்
உன் சிரித்த முகம் வந்து காணுதே
கானக்குயில் குரலில் கருத்தமைந்திடினும் அங்கும்
உன் கானக் குழலோசை மயக்குதே
கருத்த குழலொடு நிறத்த மயில் சிர
கிருத்தி அமைத்த திறத்திலே
கான மயிலோடும் மோனக்குயில் பாடும்
நீல நதியோடும் வனத்திலே
குரல் முதலெழிலசை குழைய வருமிசையில்
குழலொடு மிளிரிளங் கரத்திலே
காளிங்க சிரத்திலே கதித்த பதத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகள் இரு நளினமான சலனத்திலே
என் மனத்தை இருத்திக் கனவு நனவினொடு
பிறவி பிறவி தொறும் கனிந்துருக வரந்தருக பரங்கருணை

