மோஹினி ஏகாதசி

வைகாசிமாத, சுக்லபட்ச ஏகாதசியின் பெயர்என்ன? அதை எப்படி முறையாக அனுஷ்டிப்பது, என யுதிஷ்டிரர் கேட்டதற்கு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பதில் கூறினார்,” தர்மராஜன் மகனே! முன்பு, வசிஷ்டர், ராமருக்குக் கூறியதை உமக்கு விளக்குகிறேன். கவனமாகக் கேட்பீராக”.
இராமர் வசிஷ்ட முனியிடம், “நம் பாபங்களைத் தீர்க்கக்கூடிய விரதங்களில் மிகச்சிறந்தவற்றைப் பற்றி கூறுங்கள். நான் நீண்ட நாட்களாக சீதையைப் பிரிந்து வாடுகிறேன். எனவே என் துயர் தீரவழி கூறுங்கள்,” என்றுகேட்டார்.
வசிஷ்டர் கூறுகிறார், “ஞானம்நிறைந்த ராமா. உம்முடைய நாமத்தை நினைத்தாலே, இந்தப் பிறவிப்பெருங்கடலை எளிதாகக் கடந்துவிடலாம். அப்படியிருக்க, நீங்கள் கேட்டது, இந்த உலகமக்களின் விருப்பத்திற்காக, என்பதை அறிவேன். இப்பொழுது, இந்த ஜட உலகைத் தூய்மைப்படுத்தும், விரதமுறைப் பற்றி சொல்கிறேன்”. ராமா, வைகாசி மாதம் சுக்லபட்ச ஏகாதசி (துவாதசி அன்று வருகிறது) ஆகும். இது மோகினி ஏகாதசி என்றும், அழைக்கப்படுகிறது. நம் பாபம் தீர்க்கக் கூடிய, இந்த விரதம், உலகமாயையில் இருந்து நம்மை விடுவிக்கிறது. எனவே, பாபங்களில் இருந்தும், மாயை மற்றும் துயரங்களில் இருந்தும், விடுவிக்கக்கூடிய இந்த ஏகாதசி விரதத்தை, முறையாக அனுஷ்டிப்பது, சிறந்தது. இராமா, இந்த ஏகாதசியின் பெருமையைக் கேட்பவர் பாவங்கள் விலகிவிடும்.
சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள அழகிய நாடு, பத்ராவதி. இதை, யுதிமன் ஆண்டு வந்தான். அவன், சந்திரவம்சத்தில் தோன்றிய, நியாயவான் மற்றும் பேரறிவுபடைத்தவன். அவனது நாட்டில், உணவு தானியங்களும், பெருஞ் செல்வம் படைத்த, தனபாலன், என்ற வணிகன் வாழ்ந்தான். அவன் சிறந்த பக்திமான் ஆவான். அவன், ஏரிகள் பல தோண்டி, அழகான தோட்டங்களை நிறுவி, பல புனிதத் தளங்களையும் நிறுவினான். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பக்தனான அவனுக்கு, சுமனா, த்யுதிமான், மேதாவி,சுக்ரிதி, த்ருஷ்தபுத்தி என்ற ஐந்து மகன்கள் இருந்தனர் .
இதில் த்ருஷ்தபுத்தி கீழான நங்கைகளுடனும், தாழ்ந்தவருடனும் இருக்க விரும்பினான். மனமகிழ்ச்சிக்கு உரிய தகாத உறவு, சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டான். அவன் தேவர்களையும், கடவுளையும், குடும்பப் பெரியவர்களையும், அவமதித்தான். த்ருஷ்தபுத்தி, தன் தந்தையின் செல்வத்தை, தகாத உணவை உண்பதிலும், மது அருந்துவதிலும் செலவிட்டான். ஒரு நாள், விலைமாது ஒருத்தியுடன், தோளில் கைபோட்டு நடந்த த்ருஷ்தபுத்தியை, தனபாலன், வீட்டை விட்டு துரத்தினார். உறவினரும் அவனை ஒதுக்கிவிட்டனர். அவனிடம் இருந்த நகைகள் விற்றுத் தீர்ந்துவிட்டதும், விலைமாதுவும் அவனை விட்டுவிலகி அவமதித்தாள். த்ருஷ்தபுத்தி, எங்கு செல்வது, எப்படி வாழ்வது, என்று அறியாமல் திருடத் தொடங்கினான். காவலர்கள், அவனைப் பிடித்துச் சென்று, அவன் யார் என்பதை அறிந்ததும், விட்டு விட்டனர். இப்படி பலமுறை நடந்த பின்னர், பொறுக்க முடியாமல் அவனைப் பிடித்து அடித்து, கைது செய்தனர். நாட்டை விட்டுத் தன் தந்தையின் உதவியால், த்ருஷ்தபுத்தி, காட்டிற்குள் தப்பி ஓடினான். பசி, தாகம், மற்றும் துன்பத்துடன் அடர்ந்த காட்டில் சுற்றித் திரிந்தான். பசி பொறுக்காமல், தன்தோளில் இருந்த வில், அம்புகளால் சிங்கம், பன்றி, மான், நரிகளையும், சகோரப்பறவை, மயில், புறாக்களையும், வேட்டையாடினான். ஏற்கனவே செய்த பாபத்தால், பாபக்கடலில் உழன்று கொண்டிருந்தவன், மேலும், மேலும் பாபம் செய்தான்.
பரிதாபத்திற்குரிய த்ருஷ்தபுத்தி, செய்த சிறு புண்ணியத்தால், வைசாக மாதத்தில், கௌண்டின்ய முனியின் ஆசிரமத்தை அடைந்தான். மகரிஷி கங்கையில் குளித்துவிட்டு, ஈரம் சொட்ட சொட்ட வந்தபோது, அச்சிறு துளிகளைத் தொடும் பேரு பெற்றான், த்ருஷ்தபுத்தி. உடனே அவனுடைய பாபம் குறைந்து அறியாமையில் இருந்து விடுபட்டான். “ஓ பிராமணரே! நான் செய்த பாபத்தால் கீழான நிலையில் உள்ளேன். இதிலிருந்து விடுபட எளிய வழிகளை சொல்வீர்” என்றான்.
மகரிஷி “மகனே! நான் சொல்வதை கவனமுடன் கேள். இந்த வைசாக மாத சுக்ல பட்சத்தில் வரக்கூடிய மோகினி ஏகாதசி, சுமேருமலையைப் போன்று பரந்த நம் பாபங்களைக்கூடத் தீர்க்கக்கூடியது. அன்று முறைப்படி விரதம் இருந்தால், உன்னுடைய எல்லா பாபங்களும் தீர்ந்து போகும். நான் சொல்லும் முறைப்படி விரதம் இருந்தால், ஏழுபிறவி துன்பமும் மறையும்.
முனிவர் கூறிய முறைப்படி மகிழ்ச்சியுடன் மோகினி ஏகாதசி விரதம் இருந்து, தன்னுடைய பாவங்களிலிருந்து விடுபட்டுப், புனிதமான உருவம் அடைந்து, விஷ்ணுவின் வாகனமான கருடனில் ஏறி, வைகுண்டம் அடைந்தான்.
“ஓ இராம பிரானே! மோகினி ஏகாதசி விரதம் இருந்தால், பாபங்கள் எல்லாம் விலகிவிடும். ஜடவுலக பொருட்களின் மீது உள்ள பற்றை விளக்க, ஏகாதசி விரதம் போல், வேறெந்த, சிறந்த, எளிமையான வழிமுறையும் இவ்வுலகில் இல்லை ” .
இறுதியாகக் கிருஷ்ணர் சொல்கிறார், “யுதிஷ்டிரா, புண்ணிய இடத்திற்கு செல்வதாலும், தானம் செய்வதாலும் கிடைக்கும் பயன், மோகினி ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் பயனில், பதினாறில் ஒரு பங்காகும். ஓராயிரம் பசுக்களை தானம் அளித்த பயனைக் காட்டிலும், மோகினி ஏகாதசி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன், பல மடங்கு உயர்ந்தது. மேலும், மோஹினி ஏகாதசிப் பற்றிக் கேட்பவரும், படிப்பவர்கள் கூட, நற்பலன்களை அடைகின்றனர் “.
இதுவே, கூர்ம புராணத்தில் உள்ள, வைசாக மாத மோகினி ஏகாதசி விரதப் பயனாகும்.
குறிப்பு:
இது துவாதசி அன்று வந்தாலும், ஏகாதசி என்றே அழைக்கப்படுவதாக, வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் கருடபுராணத்தில்(1:15.6) நாரதமுனியிடம் பிரம்மர்கூறுகிறார்,” இது தசமியும் ஏகாதசியும் இருக்கக்கூடிய அன்று செய்யக்கூடாது. முழுமையாக ஏகாதசி, ஏகாதசி துவாதசி கலந்து அல்லது ஏகாதசி, துவாதசி, த்ரையோதசி கலந்து இருக்கக்கூடிய நாட்களில் அனுஷ்டிக்க வேண்டும். மேலும் இது பற்றி ஹரிபக்தி விலாசம், வைஷ்ணவ ஸ்ம்ரிதிசாஸ்திரம் மற்றும் ஶ்ரீலபக்தி சித்தாந்த சரஸ்வதி தாகுர் பிரபுபாதரின் நவத்வீபபஞ்சிகா முகவுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

