மாணிக்கம் கட்டி
மாணிக்கம் கட்டி
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தானே தாலேலோ
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கண் கருமுகிலே தாலேலோ
தேவகி சிங்கமே தாலேலோ
ஓதக் கடலில் ஒளிமுத்தின் ஆரமும்
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்
மா தக்க வென்று வருணன் விடுதந்தான்
சோதிச் சுடர் முடியாய் தாலேலோ
சுந்தரத் தோளனே தாலேலோ
கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்
கோனே அழேல் அழேல் தாலேலோ
குடந்தைக் கிடந்தானே தாலேலோ
கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள்
நச்சுமுலை உண்டோய் தாலேலோ.
நாராயணா அழேல் தாலேலோ
** ஹரே கிருஷ்ணா **

