காமிகா ஏகாதசி

ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து, யுதிஷ்டிர மஹாராஜா “பகவானே தங்களிடமிருந்து மேன்மையான ஆஷாட மாதம் வரும் தேவ சயனி ஏகாதசி பற்றியும் அதை எப்படி அனுஷ்டிப்பது என்பதையும் அறிந்து கொண்டேன்.
ஓ கோவிந்த தேவா இப்போது என் பணிவான வணக்கம். ஷ்ரவண மாதம் (ஜூலை – ஆகஸ்ட்), கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியின் சிறப்பு பற்றி அறிய விரும்புகிறேன் “.
ஸ்ரீ கிருஷ்ணர் உடனே “மஹாராஜாவே நான் கூறப்போகும் இந்த ஏகாதசி விரதம் இருப்பதால் பாபம் நீங்கும் என்பதால் கவனமுடன் கேட்பீராக. நாரத முனி ஒருமுறை பிரம்மதேவரிடம் தாமரைப் பூவில் உறைபவரே! ஷ்ரவண மாதம் கிருஷ்ண பட்சம் வரும் ஏகாதசியின் போது எந்த கடவுளை வணங்க வேண்டும். அதனால் வரும் பயன்கள் என்ன என்பது பற்றி அறிய விரும்புகிறேன் என்றார் “.
பிரம்மா, ” ஓ நாரத முனியே! காமிகா ஏகாதசி என்று அழைக்கப்படும் இந்த ஏகாதசி விரத மகிமையைக் கேட்பதால் குதிரையை தானம் செய்த பலன் பெறலாம். கதாதரன் என்று அழைக்கப்படும் நான்கு கரங்கள், சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை பூவை கையில் ஏந்தியவரும், ஶ்ரீதரா, மாதவா, மதுசூதனா என்றெல்லாம் அழைக்கப்படும் பகவானைத் தொழுவதால் பெரும் பேறு பெறலாம். ஒருவர் காசியிலும், நைமிசாரண்யத்திலும் அல்லது புஷ்கரத்திலும் (நான் இந்த பூமியில் வழிபடப்படும் ஒரே இடம்) குளித்தால் கிடைக்கக்கூடிய பலனை விட, அதிக பலன் பகவானை வழிபடுவதால் அடையலாம். ஆனால் காமிகா ஏகாதசி விரதம் இருந்து பகவானையும் வழிபடுபவர், பகவானை கேதார்நாத்தில் வழிபடுவதை விட, சூரிய கிரகணத்தின் போது குருக்ஷேத்ரத்தில் குளிப்பதை விட, பூமியை மரங்கள், நீர்நிலையுடன் தானம் செய்வதை விட, நான்கு வகை சாளக்கிராமம் கிடைக்கும் கண்டகியில் குளிப்பதை விட சிம்மமும், குருவும் சந்திக்கும் திங்கட்கிழமை வரும் பௌர்ணமியில் கோதாவரி நதியில் நீராடுவதை விட மிகவும் பயனை அடையலாம். இந்த காமிகா ஏகாதசி விரதம் பசுவையும் கன்றையும் தானம் செய்த பலன் தரக் கூடியது. இந்த நாளில் ஶ்ரீதரனை தொழுபவர், தேவர், கந்தர்வர், பன்னகர் மற்றும் நாகர்களால் ஆசிர்வதிக்கபடுவர். இந்த பாப உலகில் உழல்பவர், மற்றும் தாங்கள் செய்த பாவத்திற்கு அஞ்சுபவர் இந்த ஏகாதசி விரதம் இருப்பதால் நன்மை அடைவர்.
ஓ நாரத முனியே ஒருமுறை பகவான் ஶ்ரீஹரி இந்த காமிகா ஏகாதசி விரதம் இருப்பவர் எல்லா ஆன்மீக இலக்கியங்களையும் படிப்பதை விட அதிக பயன் பெறுவர் என்று கூறியுள்ளார். இந்த விரதம் இருப்பவர் யமனின் கோபத்திற்கு ஆளாக மாட்டார்கள், மேலும் பிறவியும் எடுக்க மாட்டார்கள், முற்காலத்தில் யோகிகளும் இதனால் பரமபதம் அடைந்து உள்ளனர்.
இந்தப் புனிதமான ஏகாதசி விரதம் கடுமையாக இருக்க வேண்டும். ஶ்ரீ ஹரியை துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஶ்ரீ ஹரியை ஒரு துளசி தளத்தால் அர்ச்சனை செய்யும் போது இருநூறு கிராம் தங்கத்தையும், எண்ணூறு கிராம் வெள்ளியையும் தானம் செய்யும் பலன் கிடைக்கிறது. பகவானை ஒரே ஒரு துளசியால் அர்ச்சனை செய்யும்போது, நவரத்தினங்கள் கொண்டு அர்ச்சிப்பதை விட மகிழ்ச்சி அடைகிறார். துளசியின் மஞ்சரி மொட்டு கொண்டு கேசவனை அர்ச்சனை செய்யும் போது எல்லா பிறவிப் பாபமும் நீங்கும். ஏகாதசி அன்று துளசியை பார்ப்பதால் பாபம் நீங்கும், ஸ்பரிசிப்பதால் எல்லா வகை நோயும் நீங்கும், துளசிக்கு நீர் ஊற்றுபவர் யமனைக் கண்டு பயப்பட வேண்டாம். ஏகாதசி அன்று துளசியை நடுபவர்கள் கிருஷ்ணரிடம் இருக்கும் பேறு பெறுவர். எனவே தினமும் துளசியை வழிபட வேண்டும்.
சித்ரகுபதனால் (எமதர்மனின் கணக்கன்) கூட துளசிக்கு பக்தியுடன் நெய் விளக்கு ஏற்றுபவர் அடையும் நன்மையை கணக்கிட முடியாது. எனவே இந்த ஏகாதசி அன்று நெய் விளக்கு ஏற்றுபவரின் முன்னோர்களும் பகவானின் பாத அமிர்தம் பருகுவர். இந்த நாளில் விளக்கு ஏற்றுபவர் ஒரு கோடி விளக்கு பிரகாசத்துடன் சூரிய பகவானின் இருப்பிடத்தை அடைவர். ஆகவே இந்த நாளில் முறையாக விரதம் இருந்து வழிபடுவர் தங்கள் பாபங்களில் இருந்து விடுபட்டு தங்கள் முன்னோருடன் தேவலோகம் அடைவது உறுதி”.
“யுதிஷ்டிரா, இதுவே பிரம்மதேவன் நாரத முனிக்கு காமிகா ஏகாதசி விரதம் பற்றி கூறிய செய்தியாகும். இந்தப் புனித நாளில் காமிகா ஏகாதசியின் பெருமையைக் கேட்பவர் ஒரு பிராமணனைக் கொன்ற பாபத்தினையும், கருவிலேயே குழந்தையைக் கொன்ற பாபத்தினையும் கூட தீர்த்து ஆன்மீக உலகத்திற்கு செல்வர்.
இதனால் ஒருவர் பிராமணனை அல்லது பிறரை தெரிந்தே கொலை செய்யலாம் என்று எண்ணக் கூடாது. தெரிந்து பாபம் செய்பவர் தண்டிக்கப் படுவது உறுதி. நம்பிக்கையோடு காமிகா ஏகாதசி பற்றி கேட்பவர் விஷ்ணு லோகம் ஆகிய வைகுண்டத்தை அடைவர்.
இதுவே பிரம்ம வைவர்த புராணத்தில் ஷ்ரவண கிருஷ்ண பட்ச ஏகாதசி – காமிகா ஏகாதசி – பற்றி கூறப்பட்டுள்ள செய்திகள் ஆகும்.

