19. மதனமோகன் கோயில்

நோக்கங்கள் :

நோக்கம் 1: மதன-மோகனர் விக்ரஹத்தின் தோற்றமும் முக்கியத்துவமும் குறித்து அறிதல்.

நோக்கம் 2: மதன் மோகனர் விக்ரஹத்தின் தெய்வீக வரலாற்றை புரிந்துகொள்வது.

நோக்கம் 3: ஸ்ரீல ப்ரபுபாதரின் போதனைகள் அடிப்படையில் ராதா மதன-மோகனர் கோவிலின் ஆன்மீக முக்கியத்துவத்தை அறிதல்.

நோக்கம் 4: மதன மோகனர் விக்ரஹம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்ட வரலாறு பற்றி அறிதல்.

நோக்கம் 5: மதன மோகனர் விக்ரஹம் கரௌலிக்கு மாற்றப்பட்ட வரலாறும், அங்கு தொடரும் வழிபாடும், மரபும் பற்றி அறிதல்.

நோக்கம் 1: மதன-மோகனர் விக்ரஹத்தின் தோற்றமும் முக்கியத்துவமும் குறித்து அறிதல்.

ஸ்ரீல க்ருஷ்ணதாஸ் கவி ராஜர் அருளிய பிரார்த்தனை:

“அனைவருக்கும் அருள் புரிபவர்களான ஸ்ரீமதி ராதா ராணி மற்றும் மதனமோகனருக்கு மகிமை உண்டாகுக! நான் வழிகாட்டல் இல்லாதவனும், அறிவிலனும் ஆகினும், அவர்கள் எனது வழிகாட்டிகள்; அவர்களது தாமரைப் பாதங்களை நான் சரணடைகிறேன்” (சைத்தன்ய சரிதாம்ருதம் – ஆதி லீலா 1.15)

மதன-மோகனர் விக்ரஹத்தின் வரலாறு:

மதன-மோகனரின் மூல விக்ரஹம் முதலில் மதன கோபால் என அறியப்பட்டிருந்தது.

மதன-மோகன் என்பது “காம தேவனையே மயக்கவல்லவர்” (“one who can even enchant Cupid.”) என்பதைக் குறிக்கிறது.

இந்த விக்ரஹம் கண்ணனின் பேரன் வஜ்ரநாபரால் உருவாக்கப்பட்டது. ஆனால் பல வருடங்களுக்கு பிறகு இந்த விக்ரஹம் காணாமல் போனது.

ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர், பிருந்தாவனத்திற்கு விஜயம் செய்தபோது, ஒரு பழைய ஆலமரத்தின் அடியில் இந்த மதன-மோகனரின் மூல விக்ரஹத்தை மீண்டும் கண்டுபிடித்தார்.

அவர் இந்த விக்ரஹம் தனது பஜனை செய்யும் இடமான (Advaita Vata)அத்வைத ஆலமரத்தின் அடியில் கண்டுபிடித்தார். இந்த இடம், மதன-மோகனரின் கோவில் உள்ள மலைக்குக் கீழே இருக்கிறது.

பின்னர், அவர் இந்த விக்ரஹத்தை தனது சீடரான புருஷோத்தம சௌபே என்பவரிடம் வழிபாட்டிற்காக ஒப்படைத்தார். சௌபே அவர்கள் பின்னர் இந்த விக்ரஹத்தை சனாதன கோஸ்வாமிக்கு அளித்தார்.
மதன-மோஹனருடன் சேர்ந்து ஸ்ரீமதி ராதாராணியும், லலிதாதேவியும் வழிபடப்படுகிறார்கள். அவர்களை வ்ருந்தாவனத்திற்கு அனுப்பியது மகாராஜா பிரதாபருத்ரரின் மகன் புருஷோத்தம ஜனா ஆவார். ஸனாதன கோஸ்வாமி மறைந்த பிறகு, கிருஷ்ணதாஸ் என்பவர் மதன-மோகனரின் வழிபாட்டை கவனித்தார்.

அத்வைத ஆலமரம் – ஸ்ரீ அத்வைத பிரபு மதன் மோகனரை
கண்டெடுத்த இடம்

மதன-மோகனரின் விக்ரஹம் இடமாற்றமும் ஆன்மீக முக்கியத்துவமும்

மூல மதனமோகன் விக்ரஹம், 1670ஆம் ஆண்டு முகலாய பேரரசர் ஔரங்கசீப் தனது படைகளை வ்ருந்தாவனத்தை தாக்கிய போது, வ்ருந்தாவனாத்திலிருந்து ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டது. மதனமோகனின் மூல விக்ரஹம், இடுப்புக்கு கீழ் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் முற்றிலும் ஒத்ததாக கூறப்படுகிறது. இந்த விக்ரஹம் தற்போது கரௌலியில் இருக்கிறது, இது ஜெய்ப்பூரின் தென்கிழக்கில், ராஜஸ்தானில் அமைந்துள்ள நகரமாகும்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு அரச குமாரி, கரௌலி இளவரசருடன் திருமணம் செய்தபோது, அவரது வேண்டுகோளின் பேரில், விக்ரஹத்தை ஜெய்ப்பூரிலிருந்து கரௌலிக்கு மாற்றினர்.

ராஜா கோபால சிங்க் (1725–1759 ஆண்டு காலத்தில் ஆட்சி செய்தவர்), இந்த விக்ரஹத்தை ஜெய்ப்பூர் மன்னரான தம் மைத்துனரிடமிருந்து பெற்ற பின், அதற்கு கரௌலியில் ஒரு கோவிலைக் கட்டினார்.

பதினாறாம் நூற்றாண்டில், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் நேரடி சீடர்களான வ்ருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகள் (Six Goswamis), கௌடிய வைஷ்ணவப் பாரம்பரியத்தில் மிகவும் முக்கியமான மூன்று விக்ரஹங்களை நிறுவினர்:
● ஸ்ரீ மதன மோகன் – சம்பந்தம் (பக்தனும் பகவானும் கொண்ட உறவு)
● ஸ்ரீ கோவிந்தஜி – அபிதேயம் (அந்த உறவை வளர்க்கும் வழி)
● ஸ்ரீ கோபிநாத் – ப்ரயோஜனம் (பூரணமான ஆன்மீக இலக்கு)

சைதன்ய சரிதாம்ருதம் (ஆதி 1.19)-ல் கூறப்படுவது:
“வ்ருந்தாவனத்தில் உள்ள இந்த மூன்று விக்ரஹங்களும் கௌடிய வைஷ்ணவர்களின் மனதுடனும் உயிருடனும் இரண்டர கலந்துவிட்டனர்.”

அவை கிருஷ்ணரின் எல்லா திருவுருவங்களிலும் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை; மற்றும் அவற்றைப் பார்ப்பதன் மூலமாகவே ஜீவாத்மாக்கள் எல்லா மங்களங்களையும் பெற முடியும்.
கரௌலியில் உள்ள ஸ்ரீ ராதா மதன் மோகன் கோவிலின்மூல மூர்த்திகள்: ஸ்ரீமதி ராதா தேவி (வலப்புறம்), கிருஷ்ணர் (நடுவில்), லலிதா கோபி (இடப்புறம்).

நோக்கம் 2: மதன் மோகனர் விக்ரஹத்தின் தெய்வீக வரலாற்றை புரிந்துகொள்வது.

மதன் மோகன் விக்ரஹத்தின் வரலாறு:

ஸனாதன கோஸ்வாமி, தினமும் மதுராவிற்கு சென்று, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சப்பாத்தி பெற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்தினார்.
ஒரு நாள், அவர் கனவில் மதன-மோகனர் வந்து கூறினார்:

“நான் மதுராவில் ஒரு பிராமணனின் வீட்டில் இருக்கிறேன். நீ அங்கு சென்று பிச்சை எடு.”
அடுத்த நாள், ஸனாதனர் அந்த பிராமணனின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் மதன-மோகனரை, அந்த பிராமணனின் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அந்த பிராமணன், மதன-மோகனரை தன் மகனாகவே எண்ணி நடத்தினார்.

சனாதனரின் கண்முன், சௌபே விக்ரஹத்தைத் தன் குழந்தையைப் போல் திட்டத் தொடங்கினார்.
“நான் கொடுக்கிற உணவை நீ என் சாப்பிடவில்லை?”:
(இது வாத்ஸல்ய பாவம்—பகவானை தன் பிள்ளையாகவே கருதி காட்டும் பாசம்.)

இதை கண்ட ஸனாதன கோஸ்வாமி, அந்த பிராமணனை கண்டித்தார் மற்றும் விக்ரஹத்தை எவ்வாறு விதிமுறைகளுடன் வழிபட வேண்டும் என்று விளக்கிக் கூறினார்.

அதன்பிறகு, மதன-மோகனர் ஸனாதன கோஸ்வாமிக்குக் கனவில் தோன்றி கூறினார், “அவர் அந்த பிராமணனின் வீட்டில் ஒரு குழந்தையாகவே இருந்து மகிழ்ந்ததாகவும் ஆனால் இப்போது பிராமணர் பல விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திய பிறகு, தான் மகிழ்ச்சியாக இல்லை.” என்று கூறினார்.

அதே நேரம், மதன-மோகனர் அந்த பிராமணனுக்கும் கனவில் தோன்றி கூறினார்:
“உனக்கு பல பிள்ளைகள் இருக்கிறார்கள். என்னை ஸனாதன கோஸ்வாமிக்கே கொடுத்து விடு.”

அடுத்த நாள் சனாதனர் அந்த பிராமணரைச் சந்தித்தார் மற்றும் அவரை திட்டியதற்காக மன்னிப்புக் கேட்டார். அந்த பிராமணர், மதன-மோகனரை ஸனாதன கோஸ்வாமிக்குக் கொடுத்தார்.

ஆனால் ஸனாதனர், தக்கபடியான உணவுகளை நிவேதனமாக வழங்க முடியாததால், மதன் மோகனை கொண்டு செல்ல முடியாது என்று கூறினார்.

அதற்கு மதன் மோகன், “எனக்கு வழங்கப்படுகிற எதையும் நான் ஏற்றுக்கொள்வேன்” என்று பதிலளித்தார்.

தினமும் “அங்கக் கடி” (Anga Kadi) மதன மோகனுக்கு நிவேதனமாக வழங்கப்படுகிறது. ஸனாதன கோஸ்வாமி பிச்சை எடுக்க மதுராவுக்குச் செல்வார். அவர் அங்கு கோதுமை மாவும் கொள்ளுவையும் பெற்று வருவார். அவர் மாவை தண்ணீரில் கலந்து சிறிய உருண்டைகளாக உருவாக்கி, அவற்றை சமைப்பார். பின்னர் அந்த உருண்டைகளை மதன மோகனுக்கு நிவேதனமாக வழங்குவார். இன்றும் அத்தகைய உணவுப் பொருள்களே மதன மோகனருக்கு நிவேதனமாக வழங்கப்படுகிறது.

ஒருநாள் ஸனாதனர் எப்போதும் போல உலர்ந்த சப்பாத்திகளை மதன மோகனருக்கு நிவேதனமாக வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது மதன-மோகனர் கேட்டார்: “இன்னும் சிறிது உப்பு கொடுக்க முடியுமா?”

இதைச் செய்ய ஸனாதனருக்கு எதிர்ப்பேதும் இல்லை, ஆனால் அவர் பிரஜாவாசிகள் என்ன சொல்வார்கள் என்ற கவலையில் இருந்தார்.

“ஒரு துறவியானவர் எங்களிடம் உப்பு போன்று ஓர் ஆடம்பரத்தை ஏன் கேட்கிறார்? அவர் துறவறம் பின்பற்றவில்லைவா?” என மக்கள் சொல்லக்கூடும் என நினைத்தார்.

அதனால் ஸனாதனர் பதிலளித்தார்: “இப்போது உப்பைக் கேட்கிறாய்; நாளை இனிப்பும் கேட்பாய். எனக்குப் பல எழுத்துப் பணிகள் இருக்கின்றன. தயவு செய்து இந்த சப்பாத்திகளையே ஏற்றுக்கொள்.”

இந்த நிலையை உணர்ந்த மதன மோகன், இந்தச் சூழ்நிலையைச் சரிசெய்ய தன் மாயையையும் அற்புத சக்தியையும் பயன்படுத்த முடிவு செய்தார்.

அடுத்த நாளே, யமுனை நதியின் ஒரு ஆழமற்ற பகுதியில் ஒரு வணிகரின் படகு சிக்கிக்கொண்டிருப்பதை பிரஜாவின் மக்கள் கண்டனர்.

அந்தப் படகு முழுவதும் உப்பால் நிரம்பியிருந்தது!
இது ஸ்ரீகிருஷ்ணரின் திட்டப்படி நடந்தது—மதன-மோகனரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில்!

நோக்கம் 3: ஸ்ரீல ப்ரபுபாதரின் போதனைகள் அடிப்படையில் ராதா மதன-மோகனர் கோவிலின் ஆன்மீக முக்கியத்துவத்தை அறிதல்.

ஸ்ரீல சனாதன கோஸ்வாமி ஒரு சிறந்த ஆன்மீக ஆசானாகக் கருதப்படுகிறார், ஏனெனில் அவர் ஒரு ஜீவாத்மாவிற்க்கு மதன மோகனரின் தாமரைப் பாதங்களில் அடைக்கலம் பெற உதவுகிறார். ஒரு மனிதன், பரமாத்மாவுடன் தன் உறவைக் மறந்துபோனதால் வ்ருந்தாவனத்தில் பயணிக்க கூட இயலாவிட்டாலும், ஸனாதன கோஸ்வாமியின் கிருபையால் வ்ருந்தாவனில் தங்குவதற்கும், ஆன்மீக நன்மைகள் அனைத்தையும் பெறுவதற்குமான போதுமான வாய்ப்பு கிடைக்கும். இது கூட மதன மோகனரின் சிறப்பானக் கிருபையாகும்.

சைதன்ய சரிதாம்ருதத்தில், ஸ்ரீ கிருஷ்ணதாஸ் கவிராஜர், முதலில் மதன மோகன் விக்ரஹத்திற்கு (சனாதன கோஸ்வாமியின் அர்ச்சனை விக்ரஹம்) நமஸ்காரம் செய்கிறார்., ஏனெனில் இந்த மதன மோகன் தான், நம்மை ஶ்ரீ கிருஷ்ண பக்தி சிந்தனையில் முன்னேற உதவி புரிவார்.

மதன-மோகனருடன், ரூப கோஸ்வாமியின் கோவிந்த தேவ் விக்ரஹம், மதுபண்டிதரின் கோபிநாதர் விக்ரஹம் போன்றவை ஸ்ரீ சைதன்ய மகா பிரபுவை பின்பற்றுபவர்களின் உயிரும் ஆத்மாவுமாக இருக்கின்றன.

இந்த மூன்று விக்ரஹங்கள்:

●மதன- மோகனர் – சம்பந்த தத்துவம் (பகவானுடன் உள்ள நமது உறவை உணர்த்துவது)
● கோவிந்த தேவ் – அபிதேய தத்துவம் (பகவானுக்கு சேவை செய்வது)
● கோபிநாதர் – ப்ரயோஜன தத்துவம் (இறுதி இலக்கு – கிருஷ்ண-ப்ரே மை)

ஸ்ரீல ப்ரபுபாதர் கூறுகையில் :

இந்த மூன்று விக்ரஹங்களும் மிகத் தெளிவான, தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளன.
மதன-மோகனரின் வழிபாடு என்பது, நாம் மறந்துவிட்ட பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணருடன் உள்ள உறவை மீண்டும் நிலை நிறுத்துவதை பற்றி கூறுகிறது.

ஆன்மீக வாழ்வின் ஆரம்பத்தில், நாம் மதன-மோகனரையே முதலில் வழிபட வேண்டும், ஏனெனில் அவர் தான் நம்மை ஈர்த்து, இந்த உலக அனுபவங்களுக்கான ஆசையை அழிக்கிறார். இது புதிய பக்தர்களுக்குத் தேவையான உறவாகும்.

பின்னர், ஒருவர் பரமாத்மாவைத் தீவிரமான பற்றுடன் சேவை செய்ய விரும்பும் போது, அவர் ஆன்மீக சேவை நிலைக்கேற்ப கோவிந்தரை வழிபடுகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றும் பிற பக்தர்களின் கிருபையால் ஒருவர் பக்திசேவையில் பரிபூரணத்தையே அடையும் போது, அவர் ஸ்ரீ கிருஷ்ணரை கோபிஜன வல்லபர் (கோபிநாதர்) எனப் பாராட்டத் தொடங்குகிறார்.

மதன-மோகனரின் வழிபாட்டை நிறுவிய ஸனாதன கோஸ்வாமி,
சைதன்ய மகாபிரபுவின் பரம்பரையில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறார்.

அவர் ஸம்பந்த ஞானத்தின் பிரதிநிதி – அதாவது, ஸ்ரீ கிருஷ்ணருடன் நம்முடைய சரியான பக்தி உறவைப் பற்றிய ஞானத்தை அளிக்கின்றவர் ஆவார்.

நோக்கம் 4: மதன மோகனர் விக்ரஹம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்ட வரலாறு பற்றி அறிதல்.

மதன-மோகனர் விக்ரஹம் பிருந்தாவனத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டது, வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றது.

முகலாயப் பேரரசர்களான அக்பர், ஜஹங்கீர், மற்றும் ஷாஜஹான் ஆகியோர், தங்கள் ஆட்சிக்குள் உள்ள வைஷ்ணவர்களுக்கு எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை — உண்மையில், அவர்களுக்கு மனைகள், நிலங்கள், மற்றும் நிதியுதவிகளும் அளித்தனர்.

ஆனால் ஔரங்கசீப்பின் ஆட்சி முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. தடைச்சட்டங்களை பிறப்பித்தார். அழிவுகளை ஏற்படுத்தினார். 1669 ஆம் ஆண்டு, “அனைத்து இந்து கோவில்களையும் இடித்து அழிக்க வேண்டும்” எனும் உத்தரவை வெளியிட்டார்.

இது தொடர்பான விவாதங்கள் இன்னும் சில இடங்களில் உள்ள போதும், அவரது ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற கோவில் தகராறுகள் பரவலாக நிகழ்ந்தன என்பது சரித்திரத்தில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்த அழிவுகளால் பாதிக்கப்பட்ட முக்கிய வைஷ்ணவ கோவில்கள்:
● ராதா–மதன-மோகனர் கோவில்
● ராதா–கோவிந்தர் கோவில்
● ராதா–கோபிநாதர் கோவில்
● ராதா–வல்லபா கோவில்
● ஸ்ரீ கோவர்தனநாதர் கோவில்
● ஸ்ரீ கேசவ தேவா கோவில் (மதுராவில், ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார ஸ்தலம்)

இந்த மூல விக்ரஹங்கள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன.
அவை முதலில் ராதாகுண்டா, காம்யவன போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த மாற்றங்கள் 18ஆம் நூற்றாண்டில் நடந்தன.
ஜெய்ப்பூரில் விக்ரஹங்களின் வருகை குறித்து அந்த காலத்து அரண்மனை ஆவணங்களில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது:

● விக்ரஹங்கள் முதலில் ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள கும்ஹேர் நகரின் மன்னர் ராஜா பதன் சிங்கின் ராஜ்யத்தைக் கடந்து சென்றன.

● பின்னர், 1742 CE க்கும் பௌர்ணமி, திங்கட்கிழமை(அக்டோபர்/ நவம்பர் ) ஜெய்ப்பூரை அடைந்தன.
ஜெய்ப்பூர் மன்னர், அந்த நகரின் ஸ்ரீ ஸ்ரீ சீதா-ராமர் கோவிலின் வளாகத்தில் அந்த விக்ரஹங்களை தரிசித்து, அவற்றை பாதல் மஹாலுக்கு(Badal Mahal) கொண்டு சென்றார், அங்கு விக்ரஹங்கள் நிரந்தரமாக நிறுவப்பட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. ஆனால், அது நடைமுறையில் அமையவில்லை.

நோக்கம் 5: மதன-மோகனர் விக்ரஹம் கரௌலிக்கு மாற்றப்பட்ட வரலாறும், அங்கு தொடரும் வழிபாடும் மரபும் பற்றி அறிதல்.

ஜெய்ப்பூர் பாரம்பரியத்தின் படி, கரௌலி மன்னர் ராஜா கோபால் சிங்கிற்கு, ஸ்ரீகிருஷ்ணர் தாமே தோன்றி, ஜெய்ப்பூரில் தற்காலிகமாக இருக்கும் மதன-மோகனரின் விக்ரஹத்தை, ஶ்ரீ கிருஷ்ணரின் இராஜ்யமான கரௌலிக்கு அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்.

ராஜா கோபால் சிங்க், மதன-மோகனர் தமது அரண்மனையில் அரியணை ஏற வேண்டும் என விரும்பினார். மேலும், ஜெய்ப்பூர் மன்னரின் மகளாகிய தனது மனைவி, மதன-மோகனரை மிகுந்த பாசத்துடன், தம்மைப் போலவே ஆழமான பக்தியுடன் நேசித்தார். அதன்படி, ராஜா கோபால் சிங்க் ஜெய்ப்பூருக்குச் சென்று, ஜெய் சிங்க் II-ன் மகனான மாதோ சிங்க் I உடன் சந்தித்து, மதன மோகனரை கரெளவுலிக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார், ஏனெனில் இது ஸ்ரீ கிருஷ்ணரின் சொந்த விருப்பம் எனத் தெரிவித்தார்.

அதற்குப் பதிலாக மாதோ சிங்க், “உங்களது வார்த்தைகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் மதன மோகனருக்கு உண்மையாகவே அங்கு செல்ல விருப்பமுள்ளது என்பதை எவ்வாறு நாங்கள் நம்ப முடியும்? அதற்காக நாங்கள் உங்களுக்கு ஒரு சோதனை அளிக்கிறோம். நீங்கள் அந்த சோதனையைத் தேர்ச்சி பெற்றால், மதன மோகன்ஜி உங்களுடன் கரௌலிக்கு பயணிப்பார்.” என கூறினார்

சோதனை என்னவெனில்:
மாதோ சிங்க், ராஜா கோபால் சிங்கின் கண்களை துணியால் மூடினார்.
பின்னர், அவரை கோவிலுக்குள் அழைத்துச் சென்று, “இங்கே ஸ்ரீ கிருஷ்ணரின் பல விக்ரஹங்கள் உள்ளன. உங்களால் இந்த அறையில் முதலில் மதன-மோகனரின் விக்ரஹத்தை சரியாகத் தொட முடிந்தால், அவரை கரௌலிக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும்.” என்றார்.
அந்த நேரத்தில், மிகப் பெரிய கூட்டம் கோவிலில் கூடியிருந்தது.

மன்னர் கண்களை மூடிய நிலையில், மதன-மோகனரை அடையாளம் காண்பாரா? என்று அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஜெய்ப்பூர் அரச மாளிகையின் உறவினர்கள், அமைச்சர்கள், நகர மக்கள் அனைவரும் அங்கு வந்திருந்தனர்.


இறுதியில், ராஜா கோபால் சிங்க், நேராக மதன-மோகனரின் அருகே சென்று,
அவரது திருவடிகளைத் தொட்டு வணங்கினார்.
அங்கே கூடியிருந்த அனைவரும் அவரது பக்தியைப் பாராட்டினர்.

“ஜய மதன-மோகனா!”” என்று ஒலி எழுந்தது.
இதையடுத்து, ஜெய்ப்பூர் மன்னர், மதன-மோகனரின் விக்ரஹத்தை கரௌலிக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கினார்.

மேலே கூறிய வரலாற்று நிகழ்வுகளுக்குப் பின்புலமாக, இன்னொரு நுட்பமான ஆன்மீக காரணமும் சொல்லப்பட்டு வருகிறது:

பாரம்பரியமாக கூறப்படுவது என்னவென்றால், கோவிந்தரும் கோபிநாதரும் ஜெய்ப்பூரை மிகவும் நேசித்தனர். அங்கே அவர்களுக்கான பூஜை முறைகள் வ்ருந்தாவனத்தில் செய்வதை விட மேலாக நடைபெற்றன. ஆனால், மதன மோகனரோ, பிரஜ் மண்டலத்தின் நினைவுகளில் முழுமையாக மூழ்கியிருந்தார் என்று கூறப்படுகிறது.

கரௌலி, என்பது பிரஜா சாரௌசி கோஷா (Braja Chaurasi Kosha) எனப்படும் பிரஜ் மண்டல சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவே அமைந்துள்ளது. இது பிரஜா மண்டலத்தை முழுமையாக சுற்றி செல்லும் வருடாந்திர யாத்திரையின் ஓர் அங்கமாகும். புனித நிலங்களின் புனித உருவமைப்பை (sacred geography) அறிந்தவர்கள் இவ்விஷயத்தைப் புரிந்து கொள்வார்கள்.

மதன மோகனர் – கரௌலி

மதன-மோகனரின் கரௌலி கோவிலில் உள்ள பூஜாரிகள் கூறுவதாவது:

ராஜா கோபால் சிங்க் கனவில், மதன-மோகனர் அவரிடம்
“நான் பிரஜாவுக்கு திரும்ப விரும்புகிறேன்” என்று கூறினார்.
ஆனால் விழித்ததும், ராஜா உணர்ந்தார்: கரௌலி, ராஜஸ்தானில் இருப்பினும்,
அது பிரஜ மண்டலத்தின் பகுதியாகவே வருகின்றது.
இதனால், அவர் உறுதியாகவும், மனஅமைதியோடும், தன் அன்புடைய பகவானை அங்கே வழிபடத் துவங்கினார்.
இது மட்டுமல்லாது, ஸ்ரீல சனாதன கோஸ்வாமியின் “ப்ரிஹத் பாகவதாம்ருதம்” (Brihad-bhagavatamrita) நூலில், மதன கோபாலா எனப்படும் சனாதனரின் ஆராதனை விக்ரஹம் முக்கிய பாத்திரமாக இடம்பெற்றுள்ளது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare