3. ஹவா மஹால்

நோக்கங்கள்:
நோக்கம்1: ஹவா மஹாலின் தனித்துவமான கட்டிடக்கலை அம்சங்களை ஆராய்ந்து அறிதல்.
நோக்கம்2: ஹவா மஹால் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சூழலும், அதற்குப் பின்னிருந்த நோக்கமும் பற்றி அறிதல்.
நோக்கம்1: ஹவா மஹாலின் தனித்துவமான கட்டிடக்கலை அம்சங்களை ஆராய்ந்து அறிதல்
ஹவா மஹால் சிட்டி பேலஸ் வளாகத்தின் ஒரு பகுதியாகும். இது அனைவருக்கும் பரிச்சையமான ஒரு முக்கியமான இடம் ஆகும். இது கீழே உள்ள தெருக்களை பார்க்கும் வகையில் அடுக்குகளாக அமைக்கப்பட்ட சிறிய ஜன்னல்கள் கொண்ட கட்டிடமாகத் திகழ்கிறது.
மகாராஜா பிரதாப் சிங், 1799ஆம் ஆண்டு இந்த விசித்திரமான ஐந்து மாடி பிரமிட் வடிவமைப்புள்ள கட்டிடத்தை கட்டினார். இந்த தனித்துவமான வடிவமைப்புடைய கட்டடத்தின் மேற்புற மூன்று மாடிகள் ஒவ்வொன்றும் வெறும் ஒரு அறை கொண்டவை.ஆனால் கீழ்ப்பகுதிகளில் ஒன்றுடன் ஒன்று இணைந்த அறைகள் மற்றும் உட்புற முற்றங்கள் உள்ளன.
953 சல்லடை ஜன்னல்கள், துளையிடப்பட்ட திரைகள் மற்றும் நீட்டிய பால்கனிகள் இணைந்து அமைந்த குறுகிய முகப்புத் தோற்றம், இந்த காற்றோட்டக் கட்டிடத்துக்கு ஒரு நுட்பமான அழகை வழங்குகிறது; ஆனால் இது உண்மையில் அரண்மனையின் பின்புறமாகும்.அரச குடும்பத்துப் பெண்கள் சிறிய ஜன்னல்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்து விழா ஊர்வலங்களைக் காண அனுமதிப்பதே இதன் நோக்கமாகும் .இதன் மூலம் இவர்கள் மற்றவர்களின் பார்வையில் படாமல் வெளி நிகழ்ச்சிகளை பார்த்து அனுபவிக்க முடியும்.
தேன்கூடு போல் அமைந்த, அழகாக செதுக்கப்பட்ட ஜன்னல்கள் அரண்மனை முழுவதும் காற்றோட்டம் ஏற்படச் செய்கின்றன, இதனால் இது கோடை காலத்துக்கு ஏற்ற சிறந்த அரண்மனையாகத் திகழ்கிறது . இது அருகிலுள்ள சிட்டி பேலஸுக்கு ஒரு நீட்டிப்பாக கட்டப்பட்டது.
நோக்கம்2: ஹவா மஹால் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சூழலும், அதற்குப் பின்னிருந்த நோக்கமும் பற்றி அறிதல்
1799ஆம் ஆண்டில், கச்வாஹா ராஜ்புத்திர அரசரான சவாய் ப்ரதாப் சிங், மஹாராஜா சவாய் ஜெய் சிங்கின் பேரன், ராயல் சிட்டி பேலஸுக்கு ஒரு நீட்டிப்பு கட்ட உத்தரவிட்டார். அந்த நேரத்தில் பர்தா (முகத்திரை) நடைமுறை கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. ராஜ்புத் அரச குடும்பத்துப் பெண்கள் மற்றவர்களால் பார்க்கப்படக் கூடாது மற்றும் பொதுவிடங்களில் தோன்றக்கூடாது என விதிமுறைகள் இருந்தன.
ஹவா மஹல் கட்டப்பட்டதன் மூலம், அரச குடும்பத்துப் பெண்கள் தெருவில் நடைபெறும் தினசரி நிகழ்வுகளையும், அரச ஊர்வலங்களையும் மற்றவர்களின் பார்வையில் படாமல் அனுபவிக்க முடிந்தது.
கட்டிடக்கலை:
ஐந்து மாடிகளாக அமைந்த இந்த அரண்மனை, சவாய் ப்ரதாப் சிங் பகவான் கிருஷ்ணருடைய பக்தர் ஆதலால் பகவானின் கிரீட வடிவில் கட்டப்பட்டிருக்கிறது.
மொத்தமாக 953 சிறிய ஜன்னல்கள் (casements) கொண்ட இந்த மஹலில், ஒவ்வொன்றும் சிறிய சல்லடை வடிவிலான இளஞ்சிவப்பு நிற ஜன்னல்களாகவும், பால்கனிகளாகவும் அமைந்துள்ளன. ஹவா மஹாலின் சாளரங்களின் மேற்பகுதியில் மற்றும் முகப்பின் ஓரங்களில், வெளியே நீட்டப்பட்டு தொங்கும் போலத் தோன்றும் கல்/மணற்கல் அலங்காரங்கள் உள்ளன. இவையே hanging cornices எனப்படுகிறது.
இது கோடையில் குளிர்ந்த காற்று உள்ளே வர ஏதுவாக இருப்பதால் மஹால் குளிர்ச்சியாகவும் காற்றோட்டமானதாகவும் இருக்கிறது..
இவ்வளவு ஜன்னல்கள் இருந்த போதிலும் ஒவ்வொன்றும் ஒரு சிறிய அளவிளான துளையாக (peep hole) உள்ளது. இதனால் அரச குடும்பத்துப் பெண்கள் வெளியுலகத்தாரால் பார்க்கப்படாமல் இருக்க முடிந்தது.
மேல் மாடிகளில் மூன்று முக்கியமானவை:
விச்சித்ர மந்திர் – இதில் மஹாராஜா பகவான்ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டார்.
ப்ரகாஷ் மந்திர் – இருபுறமும் திறந்த பால்கனிகள் கொண்டது.
ஹவா மந்திர் – காற்றோட்டமான பகுதியாக அமைந்து இருக்கிறது.
மேல் மாடிகளுக்கு படிக்கட்டுகள் இல்லாமல் சாய்வு வழிகள் (ramps) மட்டுமே உள்ளன. இவை அரச குடும்பத்துப் பெண்கள் பயணிக்கும் பல்லக்குகளுக்காக உருவாக்கப்பட்டவை.
சரத்கால விழாக்கள் (Sharad celebrations) முதலாவது மாடியில் உள்ள ஷரத் மந்திர்ரில் நடைபெற்றன. இரண்டாவது மாடியில் உள்ள ரதன் மந்திர்ரில் காணக்கூடிய வண்ணமயமான கண்ணாடி வேலைப்பாடுகள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.
நுழைவாயில் மற்றும் வெளிப்புற அமைப்பு:
சிட்டி பேலஸின் பக்கவழியாக ஹவா மஹலுக்குள் ஒரு பிரம்மாண்டமான கதவு வழியாக நுழைகிறோம். இது ஒரு பெரிய உள்ளரங்கத்திற்கு அழைத்துச் செல்கிறது . இதன் மூன்று பக்கங்களில் இரண்டுமாடி கட்டடங்கள் உள்ளன, மற்றும் கிழக்கு பக்கத்தில் ஹவா மஹால் கட்டிடம் உள்ளது.
இந்த உள்ளரங்கத்திலேயே ஒரு பண்டைய தொல்லியல் அருங்காட்சியகம் (archaeological museum) அமைந்துள்ளது.
ஒவ்வொரு அறையின் மையத்திலும் அமைக்கப்பட்டுள்ளசிறிய நீரூற்று (fountain).அறைகளில் காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன.
மேல்மாடிகள்:
ஹவா மஹாலின் கடைசி இரண்டு மாடிகளுக்கும் ரேம்புகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும்.
இம்மஹால் தற்போது இராஜஸ்தான் அரசின் தொல்லியல் துறை (Archaeological Department of Government of Rajasthan) கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஹவா மஹால் -மேல்நோக்குப் பார்வை
ஹவா மஹால் – உட்புறத் தோற்றம்
ஹவா மஹாலில் இருந்து ஜந்தர் மந்தர் தோற்றம்
ஹவா மஹால் – நுழைவாயில் தோற்றம்
ஹவா மஹால் – குதிரை சவாரி
ஹவா மஹாலின் தோற்றம்

