ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தின்
உன்னத மகிமை

எது மஹாமந்திரம்?

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

மேலே காணப்படும் பதினாறு வார்த்தைகள் அடங்கிய மந்திரமே மஹாமந்திரம் ஆகும்.

மஹாமந்திரத்தை உருவாக்கியது யார்?

இம்மஹாமந்திரம் கலி சந்தரண உபநிஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மந்திரம் என்றால் என்ன?

‘மன்’ என்றால் மனம். ‘திரா’ என்றால் விடுவிப்பது. மந்திரம் என்றால் மனதை துன்பங்களிலிருந்து விடுவிப்பது என்று பொருள்.

மஹாமந்திரம் – ஒரு விளக்கம்

அனைத்து மந்திரங்களுக்கும் பெரிய மந்திரமே மஹாமந்திரம். சாதாரண மந்திரங்கள் குறிப்பிட்ட துன்பத்திலிருந்து மனதை விடுவிக்கும். ஆனால் மஹாமந்திரம் எல்லா துன்பங்களிலிருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி கொண்டதாகும்.

ஜபம் என்றால் என்ன?

பகவானின் நாமங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தினசரி விடாது உச்சரித்து வருவதே ஜபம் எனப்படுகிறது.

ஜபயோகம் என்றால் என்ன?

பகவானின் நாமங்களை தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் உச்சரிப்பதன் மூலம் இறைவனுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்துவதே ஜபயோகம் ஆகும்.

மஹாமந்திர ஜப யோகம் செய்ய விதிமுறை என்ன?

இந்த ஜப யோகத்திற்கு எந்தவிதமான கடுமையான விதிமுறைகளும் இல்லை.

யார் சொல்லலாம்? எப்போது சொல்லலாம்?

ஜாதி, மதம், இன, மொழி பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் மஹாமந்திரத்தை சொல்லலாம்.

வேத சாஸ்த்திரத்தில் ஹரி நாமத்தின் உன்னத மஹிமை

பிரம்மாண்ட, பத்ம புராணம்

  • 1000 விஷ்ணு நாமங்கள் : 1 ராம நாமம்.
  • 3 ராம நாமங்கள் : 1 கிருஷ்ண நாமம்.
  • ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தில் 4 கிருஷ்ண நாமங்கள் உள்ளது.
  • 4 கிருஷ்ண நாமங்கள் : 4 x 3 ராம நாமங்கள் = 12 ராம நாமங்கள்.
  • ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தில் 4 ராம நாமங்கள் உள்ளது.
  • 1 ஹரே கிருஷ்ண மஹாமந்திரம் : 16 ராம நாமங்கள் (12 + 4)
  • 16 ராம நாமங்கள் : 16 x 1000 விஷ்ணு நாமங்கள் = 16,000 விஷ்ணு நாமங்கள்.
  • 1 ஹரே கிருஷ்ண மஹாமந்திரம் : 16,000 விஷ்ணு நாமங்கள்.
  • 1 மாலை; 108 மணிகள் ஆகையால் 1 மாலை ஜபம் செய்தால் : 108 x 16,000 விஷ்ணு நாமங்கள் = 17,28,000 விஷ்ணு நாமங்கள்.
  • 16 மாலைகள் ஜபம் செய்தால் 16 x 17,28,000 = 2,76,48,000 விஷ்ணு நாமங்கள் சொல்லும் பலன்.

கருட புராணத்தில்

“ஒரு சிங்கம் கர்ஜிக்கும் போது, சிறு விலங்குகள் பயந்து ஓடுவது போல், பகவானின் நாமங்களை அநாதரவான நிலையிலோ, விருப்பமின்றியோ எப்படி உச்சரித்தாலும், ஒருவருடைய பாவ விளைவுகள் உடனே அவரை விட்டு நீங்குகின்றன” என்று கூறப்படுவது, ‘சர்வ பாவ நிவாரணி பகவானின் நாமமே’ என்பதை உறுதிப் படுத்துகிறது.

ப்ருஹன் நாரதீய புராணம்

ஹரேர் நாம ஹரேர் நாம
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரேர் நாமைவ கேவலம்
கலௌ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ நாஸ்தி
ஏவ கதிர் அன்யதா

மொழிபெயர்ப்பு: இந்தக் கலியுகத்தின் உபாதைகளில் இருந்து விடுபட, ஹரியின் நாமத்தை ஜபிப்பதைத் தவிர வேறு கதியில்லை, வேறு கதியில்லை.

கலி சந்தரன உபநிஷதம்

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

இதி ஷோடஷகம் நாம் நாம் கலி கல்மஷ நாஷனம்
நாத பரதரோ பாய சர்வ வேதேஷு திருஷ்யதே

மொழிபெயர்ப்பு: கலி யுகத்தின் கெட்ட விளைவுகளை முறியடிக்க ஒரே வழி இந்த 16 நாமங்களே. பிறவிப் பெருங்கடலைக் கடக்க இப்புனித நாமங்களை உச்சாடனம் செய்வதை தவிர வேறு வழி இல்லை. இதுவே அனைத்து வேதங்களின் முடிவாகும்.

சைதன்ய சரிதாம்ருதா (ஆதி லீலை 7.73-74)

கிருஷ்ண மந்த்ரே ஹைதே ஹபே சம்சார மோசன
கிருஷ்ண நாம ஹைதே பாபே கிருஷ்ணேர சரண
நாம வினு கலி காலே நாஹீ ஆர தர்ம
ஸர்வ மந்த்ர சார நாம ஏய் ஷாஸ்த்ர மர்ம

மொழிபெயர்ப்பு: கிருஷ்ண நாமத்தை உச்சரிப்பதால் பௌதிக வாழ்விலிருந்து எளிதாக விடுதலை பெற முடியும். உண்மையில், ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதால் பகவானின் தாமரைத் திருவடிகளை எளிதாகக் காண இயலும். இக்கலி யுகத்தில் திருநாமத்தை உச்சரிப்பதைத் தவிர வேறு எந்த தர்மமும் இல்லை. இதுவே எல்லா வேத மந்திரங்களின் சாரமாகும். இதுவே எல்லா சாஸ்திரங்களின் பொருளாகும்.

பகவத் கீதை

பதம் 9.14

ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஷ் ச த்ருட-வ்ரதா:
நமஸ்யந்தஷ் ச மாம் பக்த்யா நித்ய-யுக்தா உபாஸதே

மொழிபெயர்ப்பு: எப்போதும் எனது புகழை கீர்த்தனம் செய்து கொண்டு, திடமான உறுதியுடன் முயன்று கொண்டு, எனக்கு வந்தனை செய்தபடி, இந்த மகாத்மாக்கள் பக்தியுடன் நித்தியமாக என்னை வழிபடுகின்றனர்.

பதம் 10.25

மஹர்ஷீணாம் ப்ருகுர் அஹம் கிராம் அஸ்ம்-யேகம் அக்ஷரம்
யக்ஞானாம் ஜப-யக்ஞோ (அ)ஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய:

மொழிபெயர்ப்பு: மகா ரிஷிகளில் நான் பிருகு; சப்தங்களில் நான் திவ்யமான ஓம்காரம்; யாகங்களில் நான் திருநாம ஜபம்; அசையாதனவற்றில் நான் இமயமலை.

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம் – பதம் 1.1.14

ஆபன்ன: ஸம்ஸ்ருதிம் கோராம்யன் நாம விவசோ க்ருணன்
தத: ஸத்யோ விமுச்யேத யத் பிபேதி ஸ்வயம் பயம்

மொழிபெயர்ப்பு: பயமே சொரூபமானதும் கூட கிருஷ்ணரின் புனித நாமத்தைக் கண்டு அஞ்சுகிறது. அத்தகைய புனித நாமத்தை அறியாமல் உச்சரிப்பதாலும் கூட, பிறப்பு இறப்பெனும் சூழலில் சிக்கிக் கிடக்கும் ஜீவ ராசிகள் உடனே விடுவிக்கப்படுகின்றன.

ஸ்ரீமத் பாகவதம் – பதம் 6.2.14

ஸாங்கேத்யம் பாரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேலனம் ஏவ வா
வைகுண்ட – நாம – க்ரஹணம் அசேஷாக – ஹரம் விது:

மொழிபெயர்ப்பு: பகவானின் புனித நாமத்தை ஒருவன் (வேறொன்றைக் குறிப்பதற்காக) மறைமுகமாகவோ, விளையாட்டாகவோ, இசை விருந்தாகவோ அல்லது அலட்சியமாகவோ ஜபித்திருந்தால் கூட, அவன் எண்ணற்ற பாவ விளைவுகளிலிருந்து உடனே விடுவிக்கப்படுகிறான். எல்லா வேத வல்லுணர்களாலும் இது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீமத் பாகவதம் – பதம் 6.2.18

அஞ்ஞானாத் அதவா ஞானாத் உத்தமஸ்லோக – நாம யத்
ஸங்கீர்திதம் அகம் பும்ஸோ தஹேத் ஏதோ யதானல:

மொழிபெயர்ப்பு: நெருப்பு எவ்வாறு காய்ந்த சருகுகளை எரித்து சாம்பல் ஆக்குகிறதோ, அவ்வாறு அறிந்தோ அறியாமலோ ஜபிக்கப்படும் பகவானின் புனித நாமம் கூட ஒருவனுடைய எல்லாப் பாவ விளைவுகளையும் எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது.

ஸ்ரீமத் பாகவதம் – பதம் 6.3.22

ஏதாவான் ஏவ லோகே ‘ஸ்மின் பும்ஸாம் தர்ம: பர: ஸ்ம்ருத:
பக்தி – யோகோ பவகதி தன் நாம க்ரஹணாதிபி:

மொழிபெயர்ப்பு: பகவானின் புனித நாம ஜபத்திலிருந்து துவங்கும் பக்தித் தொண்டுதான், மனித சமுதாயத்திலுள்ள ஜீவராசிக்கு முடிவான சமயக் கோட்பாடாகும்.

ஸ்ரீமத் பாகவதம் – பதம் 6.3.23

நாமோச்சாரண-மாஹாத்ம்யம் ஹரே: பஸ்யத புத்ரகா:
அஜாமிளோ ’பி யேனைவ ம்ருத்யு-பாசாத் அமுச்யத

மொழிபெயர்ப்பு: என் மகன்களுக்கு நிகரான பிரியமுள்ள சேவகர்களே, பகவானுடைய புனித நாம ஜபத்தின் மகத்துவத்தைப் பாருங்கள். மகாபாவியான அஜாமிளன், பகவானின் புனித நாமத்தை உச்சரிக்கிறோம் என்பதை அறியாமலேயே, பகவானின் நாமத்தைச் சொல்லி தன் மகனை அழைத்தான். ஆயினும், பகவானின், புனித நாமத்தை ஜபித்ததால் பகவான் நாராயணரை அவன் நினைத்துக் கொண்டான். இவ்வாறாக மரணத்தின் கயிறுகளிலிருந்து அவன் உடனே காப்பாற்றப்பட்டான்.

ஸ்ரீமத் பாகவதம் – பதம் 6.3.26

ஏவம் விம்ருஸ்ய ஸுதியோ பகவதி அனந்தே
ஸர்வாத்மனா விதததே கலு பாவ–யோகம்
தே மே ந தண்டம் அர்ஹந்தி அத யதி அமீஷாம்
ஸ்யாத் பாதகம் தத் அபி ஹத்தி உருகாய வாத:

மொழிபெயர்ப்பு: ஆகவே, இவ்விஷயங்களையெல்லாம் கருத்திற் கொண்டுதான், புத்திசாலிகள், தங்களுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில், எல்லோருடைய இதயங்களிலும் உறைபவரும், எல்லாக் கல்யாண குணங்களுக்கும் உறைவிடமுமான பகவானின் புனித நாமத்தை ஜபிப்பதெனும் பக்தித்தொண்டைப் பின்பற்றுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தண்டனைக்குரிய என் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களல்ல. பொதுவாக அவர்கள் பாவங்கள் புரிவதில்லை. ஆனால் தவறுதலாகவோ அல்லது பிரமையினாலோ சில சமயங்களில் அவர்கள் பாவம் செய்ய நேரிட்டாலும், அவர்கள் எப்பொழுதும் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பதால், பாவ விளைவுகளிலிருந்து காப்பாற்றப்படுகின்றனர்.

ஸ்ரீமத் பாகவதம் – பதம் 6.3.29

ஜிஹ்வா ந வக்தி பகவத் – குண – நாமதேயம்
சேதஸ் ச ந ஸ்மரதி தச் – சரணாரவிந்தம்
க்ருஷ்ணாய நோ நமதி யச் – சிர ஏகதாபி
தான் ஆனயத்வம் அஸதோ ‘க்ருத விஷ்ணு க்ருத்யான்

மொழிபெயர்ப்பு: அன்புத் தொண்டர்களே, எந்த பாவிகள் ஸ்ரீ கிருஷ்ணரின் புனித நாமத்தையும், குணங்களையும் பாட தங்கள் நாவை உபயோகிப்பதில்லையோ, யாருடைய இதயங்கள் ஒரு முறையேனும் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை நினைக்கவில்லையோ, மேலும் யாருடைய தலைகள் ஒரு முறையேனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முன் வணங்கவில்லையோ அவர்களை மட்டும் என்னிடம் கொண்டு வாருங்கள். பகவான் விஷ்ணுவுக்குச் செய்ய வேண்டிய மனித வாழ்வின் ஒரே கடமையைச் செய்யாதவர்களை என்னிடம் அனுப்புங்கள். இத்தகைய மூடர்களையும், அயோக்கியர்களையும் என்னிடம் அழைத்து வாருங்கள்.

ஸ்ரீமத் பாகவதம் – பதம் 6.3.31

தஸ்மாத் ஸங்கீர்த்தனம் விஷ்ணோர் ஜகன் மங்கலம் அம்ஹஸாம்
மஹதாம் அபி கௌரவ்ய வித்தி ஜகாந்திக – நிஷ்க்ருதம்

மொழிபெயர்ப்பு: சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, பகவானின் புனித நாம ஜபமானது, கொடிய பாவங்களின் விளைவுகளைக் கூட வேரறுக்க வல்லது. ஆகவே, சங்கீர்த்தன இயக்கத்தின் நாம சங்கீர்த்தனமே முழு பிரபஞ்சத்திலும் மிகவும் மங்களகரமான செயலாகும். இதை நீர் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் மற்றவர்களும் இதை முக்கியமாக எடுத்துக் கொள்வார்கள்.

ஸ்ரீமத் பாகவதம் – பதம் 6.3.32

ஸ்ருண்வதாம் க்ருணதாம் வீர்யாணி உத்தாமானி ஹரேர் முஹு:
யதா ஸுஜாதயா பக்த்யா சுத்யேன் நாத்மா வ்ரதாதிபி:

மொழிபெயர்ப்பு: பகவானின் புனித நாமத்தையும், அவரது செயல்களைப் பற்றியும் இடைவிடாது கேட்டுக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பவனால், இதயத்திலுள்ள அழுக்கை அகற்றிவிடக்கூடிய தூய பக்தித் தொண்டின் படித்தரத்தைச் சுலபமாக அடைந்துவிட முடியும். விரதங்களை அனுஷ்டிப்பதாலும், வேதச் சடங்குகளை நிறைவேற்றுவதாலும் மட்டுமே இத்தகைய தூய்மையை ஒருவனால் அடைய முடியாது.

ஸ்ரீமத் பாகவதம் – பதம் 12.3.51

கலேர் தோஷ-நிதே ராஜன் அஸ்தி ஹி ஏகோ மஹான் குண:
கீர்த்தனாத் ஏவ க்ருஹ்ணஸ்ய முக்த-ஸங்க: பரம் வ்ரஜேத்

மொழிபெயர்ப்பு: அரசே, இக்கலியுகம் கடலளவு குற்றங்கள் நிறைந்தது என்றாலும், இந்த யுகத்தில் ஒரு நல்ல குணமும் இருக்கவே செய்கிறது; ஹரே கிருஷ்ண மகா-மந்திரத்தை உச்சரிப்பதாலேயே, ஒருவனால் பௌதிக பந்தத்திலிருந்து விடுபட்டு உன்னத இராஜ்யத்திற்கு ஏற்றம் பெற முடியும்.

ஸ்ரீமத் பாகவதம் – பதம் 12.3.52

க்ருதே யத் த்யாயதோ விஷ்ணும் த்ரேதாயாம் யஜதோ மகை:
த்வாபரே பரிசர்யாயாம் கலௌ தத் தரி-கீர்த்தனாத்

மொழிபெயர்ப்பு: சத்திய-யுகத்தில் தியானத்தினாலும், திரேதா-யுகத்தில் யக்ஞங்களினாலும், துபாபர-யுகத்தில் பகவானின் தாமரைப் பாதங்களுக்குத் தொண்டு புரிவதிலும் அடையப்படக் கூடிய அதே பலனை, இக்கலியுகத்தில் ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தை உச்சரிப்பதாலேயே அடைந்துவிட முடியும்.

முற்றிலும் விஞ்ஞானப் பூர்வமானது

ஐம்புலன்களில் ஒன்றுக்கு மேற்பட்ட புலன்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஈர்க்கப்படுமானால், மனமும் தானாகவே அதில் குவிய ஆரம்பிக்கும்.

உதாரணமாக ஒருவர் ரேடியோவை விட, டிவியில் அதிக ஈடுபாடு காட்டுவது இயல்பு. ஏனெனில் டிவியில் பார்த்தல், கேட்டல் ஆகிய இருபுலன்களும் ஈர்க்கப்படுகின்றன. ஆனால் ரேடியோவில் கேட்கும் புலன் மட்டும் ஈர்க்கப்படுகின்றது.

மஹாமந்திர ஜப யோகாவில் வாய் பகவான் நாமத்தைக் கூற, காது பகவான் நாமத்தைக் கேட்க, கைகள் துளசி மாலையைத் தொட, கண்கள் பகவான் திருவுருவை தரிசனம் செய்ய, மூக்கு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்கள் மற்றும் அகர்பத்தி இவற்றின் மணத்தை நுகர ஐம்புலன்களும் ஒருசேர பகவானிடம் ஈர்க்கப்படுகின்றன. மேலும் பகவானிடம் ஈர்க்கப்படும் இச்சுவை, வேறு எல்லா சுவைகளையும் விட மிக உயர்வான சுவை, ஆகையால் நிரந்தரமாக மனம், பகவானிடம் ஒன்றுகிறது. இவ்வாறாக, மஹாமந்திர ஜப யோகம் முற்றிலும் விஞ்ஞானப் பூர்வமானது.

** ஹரே கிருஷ்ணா ** 

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare