தேவசயானி ஏகாதசி

மேன்மை பொருந்திய யுதிஷ்டிர மஹாராஜா கேட்டார், ” ஓ கேசவா. ஆஷாட மாதம் சுக்ல பட்சத்தில் வரக் கூடிய ஏகாதசி (June – July) பற்றியும், அப்போது வணங்க வேண்டிய தேவதை, விரதம் மேற்கொள்ளும் முறை பற்றியும் கூறுவீராக”.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதில் கூறுகிறார்,” ஓ பூமியின் பாதுகாப்பாளர் அவர்களே, பிரம்மதேவர் தன் மகன் நாரதருக்கு சொன்ன வரலாற்று சிறப்பு மிக்க கதையை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன், கேட்பீராக”.
ஒரு முறை நாரதர் தன் தந்தையிடம்,” ஆஷாட மாதம் சுக்ல பட்சம் வரக்கூடிய ஏகாதசி பெயர் என்ன? அதனை எப்படி முறைப்படி செய்து பகவானை திருப்தி செய்வது என்பது பற்றி கூறுவீர்” என்று கேட்டார்.
பிரம்மா கூறினார், உரையாற்றுவதில் சிறந்தவரே, ரிஷிகளில் சிறந்தவரே, சிறந்த விஷ்ணு பக்தரே, இந்த விடை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஶ்ரீ ஹரிக்கு பிரியமான இந்த ஏகாதசியை விட சிறந்தது வேறு இல்லை.
இந்த ஆஷாட சுக்ல ஏகாதசி மிகக் கீழான பாபத்தையும் போக்கக் கூடியது. இந்த ஏகாதசி விரதம் பாபங்களை எல்லாம் போக்கி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும். இதை அனுஷ்டிக்கத் தவறினால் நரகம் உறுதி. ஆஷாட சுக்ல ஏகாதசி பத்ம ஏகாதசி என்றும் அழைக்கப்படும். முழுமுதற் கடவுள் ரிஷிகேசரை மகிழ்ச்சிப் படுத்த இந்த ஏகாதசி விரதம் உதவும்.
நாரத மகரிஷியே கேட்பீராக, இந்த ஏகாதசியி்ன் வரலாற்றுப் பெருமை ஓலைச்சுவடிகளில் பொறிக்கப் பட்டுள்ளது. இதைப் பற்றி கேட்பது மூலமே ஒருவர் பாபங்களில் இருந்து விடுபட்டு, தடங்கல் ஏதும் இன்றி ஆன்மீகப் பாதையில் பயணிக்க முடியும்.
முன்னொரு காலத்தில் சூரிய வம்சத்தில் மந்தாதர் என்று சொல்லக் கூடிய சிறந்த அரசர் இருந்தார். அவர் மிகவும் நேர்மையானவர். அவர் தன் நாட்டு மக்களை குடும்பத்தை போல் கவனித்துக் கொண்டார். அவருடைய பக்தி, மதப்பற்று காரணமாக வறட்சி, கொள்ளை நோய்கள் என எந்தத் தொந்தரவும் இன்றி செல்வத்துடன் மக்கள் வாழ்ந்தனர். மன்னரின் கருவூலம் தீய வழியில் ஈட்டிய செல்வம் ஏதும் இன்றி, மன்னர் இனிதாக அரசாண்டார்.
ஒருமுறை ஏதோ பாபத்தால் மூன்று ஆண்டுகள் வறட்சி ஏற்பட்டது. இதனால் தானியங்கள் கிடைக்காத நிலையில் வேத முறைப்படி தங்கள் முன்னோருக்கும், தேவர்களுக்கும் எதுவும் சமர்ப்பிக்கவோ, வேதம் படிக்கவோ இயலவில்லை.
அவர்கள் இறுதியாக மன்னரைப் பணிவுடன் அணுகி, “எங்கள் நலனில் அக்கறை கொண்ட அரசே, தங்கள் உதவியை நாடி வந்துள்ளோம். இவ்வுலகில் எந்தப் பொருளுக்கும் உயிர் வாழ நீர் மிக முக்கியம். அந்த நீருக்கு நரா என்று வேதங்களில் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே தான் நீரில் துயிலும் பகவானுக்கு நாராயணன் என்று பெயர். நீரின்றி முத்து, மனிதன் மற்றும் மாவு இருக்க முடியாது. முத்துக்களின் சிறப்பு அதன் பிரகாசம் அது நீரினாலேயே ஏற்படுகிறது. மனிதர் இயங்கக் காரணமான உயிரணுவில் நீரே மூலம். மாவினை நீருடன் சேர்த்துப் பிசைந்தால் மட்டுமே ரொட்டி மற்றும் வேறு தின்பண்டமாக செய்ய இயலும். எனவே நீரை ஜல நாராயணர் என்றும் கூறுவோம். மேகமாகிய தன் நிலையிலிருந்து மழையாகப் பொழிந்து எல்லா உயிரும் வாழச் செய்கிறார்.
அரசே இந்த வறட்சியால் தானியங்கள் இன்றி மக்கள் இறக்கின்றனர் அல்லது நாட்டை விட்டு செல்கின்றனர். இதனால் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதைத் தடுத்து நாங்கள் மகிழ்ச்சியாக வாழ வழி சொல்லுங்கள்” என்று கேட்டனர். அதற்கு அரசர், “தானியங்கள் முழு உண்மைப் பொருளாக திகழக் கூடியவை. தானியங்களில் உறையும் பிரம்மன் எல்லா பொருளையும் வாழச் செய்கிறான். மறை நூல்களில் வறட்சிக்கு அரசன் பிழையே காரணம் என்று சொல்லப் பட்டுள்ளது. நான் மிகத் தீவிரமாக தியானித்துப் பார்த்தும் பிழை ஏதும் தெரியவில்லை. உங்களுக்காக மறுபடியும் முயற்சிக்கிறேன் என்று கூறி தவத்திற் சிறந்த முனிவர்களைத் தேடி பஞ்சம் தீர வழியை வினவி காடு மேடாக சுற்றித் திரிந்தார்.
இறுதியாக தவ வலிமையில சிறந்த அங்கீரச முனியை அடைந்தனர். அங்கீரச முனி தன் ஆசிரமத்தில் இரண்டாம் பிரம்மனைப் போல் அமர்ந்து இருந்தார். அரசர் மாந்தாதா முனிவர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து குதிரையில இருந்து இறங்கி, தன் பணிவான வணக்கங்களை அவர்களுக்குத் தெரிவித்தார். தன் இரு உள்ளங்கைகளையும் ஏந்தி முனிவரின் ஆசிகளை வேண்டினார். முனிவர் மகிழ்ந்து புனிதமான மந்திரங்களை உபதேசித்தார். பின்னர் நாட்டின் முக்கிய ஏழு தூண்கள் யாவை என்று வினவினார். 1. அரசர், 2. மந்திரிகள், 3. கருவூலம் 4. படைகள், 5. கூட்டாளிகள் 6. பிராமணர்கள், 7. மக்களுக்காக நடத்தப்படும் யாகங்களும், மக்களுடைய தேவைகளும். இந்த ஏழைப் பற்றியும் கூறிய அரசர் முனிவரின் மகிழ்ச்சியை பற்றி வினவினார்.
முனிவர் அரசரின் நிலை பற்றியும் இந்த கானகத்தில் மேற்கொண்ட பயணத்திற்கான காரணம் பற்றியும் அறிந்தார். அரசர் முனிவரிடம், ” முனிவரே, வேத முறைப்படி இந்த நாட்டை நான் ஆள்கிறேன், ஆனால் வரட்சிக்கான காரணம் தெரியவில்லை. என் மக்கள் இதிலிருந்து மீண்டு வர தங்கள் உதவி தேவை” என்றார்.
முனிவர், “யுகங்களில் சிறந்த இந்த சத்யயுகத்தில் தர்மம் தன் நான்கு கால்களில் நிற்கிறது. (உண்மை, எளிமை, இரக்கம், தூய்மை) இந்த யுகத்தில் பிராமணர்கள் குடிகளுள் சிறந்தவராக கருதப் பட்டனர். எல்லோரும் தங்கள் கடமைகளை செய்தனர், தகுதியுடையவர்களும், சாதுக்களுமே வேத முறைப்படி தியானம், தவம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிறந்த அரசே உன் அரசாங்கத்தில் தகுதியில்லாத ஒருவன் (முறையாக ஆரம்பம் இல்லாத, பயிற்சி இல்லாத) தவம், தியானம் செய்கிறான். இதுவே வறட்சிக்குக் காரணம். அவனை நீ கொலை செய்து தண்டிப்பதன் மூலம், உன் நாட்டின் சாபம் தீர்ந்து பழைய நிலையை அடையும்” என்றார்.
உடனே அரசர், “நான் எப்படி தியானம் தவம் செய்யும் ஒருவரை தண்டிக்க முடியும் வேறு உபாயம் வழங்கி என்னை வழி நடத்த வேண்டும்” என்று பணிவுடன் கேட்டார்.
ஆங்கீரச முனிவர் உடனே,” ஆஷாட மாதத்தில் வரக்கூடிய சுக்ல ஏகாதசி விரதம் நீ அனுஷ்டிக்க வேண்டும்.
இது சயன ஏகாதசி (பத்ம ஏகாதசி) என்று வழங்கப்படும். இதை அனுஷ்டித்தால் மழையும், அதனால் பயிரும் விளைந்து நாடு பழைய வளத்தை அடையும். இது ஒருவரின் வாழ்வில் தடையை நீக்கி நல்வழிப்படுத்தும். நீ மட்டுமன்றி, உன் சொந்தமும் மக்களும் எல்லோரும் இந்த ஏகாதசி விரதம் இருக்கும் போது உன் தேசம் பழைய நிலையை அடையும்” என்றார்.
இதைக் கேட்டு அரசன் தன் பணிவு கலந்த வணக்கத்தை முனிவருக்கு சமர்ப்பித்து விட்டு நாடு திரும்பினார். அரசர் பத்ம ஏகாதசியின்போது தன் எல்லா பிரஜைகளையும், பிராமணர், வைஷ்யர், க்ஷத்ரியர் மற்றும் சூத்திரரை கட்டாயம் விரதம் அனுஷ்டிக்க செய்தார். இதனால் முனிவர் கூற்றுப்படி நாட்டில் வறட்சி நீங்கி மழை பொழிந்து தானியங்கள் ஏராளம் விளைந்து நாடு செழித்தது.
ரிஷிகேசருடைய பெருங்கருணையால் மந்தாதருடைய நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வளமாக வாழ்ந்தனர்.
எனவே ஓ நாரதரே, யார் ஒருவர் இந்த ஏகாதசி விரதத்தை முறையாக செய்கிறார்களோ, அவர்கள் முக்தி அடைவது உறுதி. பத்ம ஏகாதசி விரதம் பற்றி கேட்பவர் மற்றும் படிப்பவர் தங்கள் பாபங்கள் நீங்கி நன்மை அடைவர். இந்த ஏகாதசி தேவசயனி ஏகாதசி அல்லது விஷ்ணு சயனி ஏகாதசி ( விஷ்ணு தன் தேவர்களுடன் உறங்கச் செல்லும் நாள்) என்றும் கூறப்படும். மேலும் இந்த ஏகாதசி முடிந்து தேவோத்தானி ஏகாதசி (உத்தான ஏகாதசி கார்த்திகை (Oct – Nov) (ஹரிபோதினி, பிரபோதினி)) வரை வேறு விசேஷங்கள் எதுவும், செய்யக் கூடாது. ஏனெனில் தக்ஷினாயணம் வரை தேவர்கள் தூங்கும் காலம் ஆதலால் விரத தலத்திற்கு வர இயலாது. யுதிஷ்டிர மஹாராஜா முக்தி வேண்டுபவர்கள் இந்த ஏகாதசி விரதம் கண்டிப்பாக இருக்க வேண்டும் ஏனெனில் சாதுர்மாச விரதமும் அன்று தான் தொடங்குகிறது.
இதுவே ஆஷாட சுக்ல ஏகாதசி, பத்ம ஏகாதசி அல்லது தேவசயனி ஏகாதசியின் சிறப்பாகும். இது பவிஷ்ய உத்தர புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.

