பைமி (ஜயா) ஏகாதசி

யுதிஷ்டிரர்,” பகவான் கிருஷ்ணரே! எல்லா புகழும் உங்களுக்கே! நீங்களே அனைத்து உயிருக்கும் மூலாதாரமாக விளங்குகிறீர். நீங்களே படைத்தல், காத்தல், அழித்தல் தொழில் செய்து எல்லாவற்றிற்கும் ஆதாரமாக விளஙகுகிறீர்.
பகவானே மக மாதம் கிருஷ்ண பட்ச, ஷட்டில ஏகாதசி பற்றி கூறினீர்கள். தற்போது சுக்ல பட்ச ஏகாதசியின் பெயர், அனுசரிக்கும் முறை ஆகியன பற்றி கூறுவீர்” என்றார்.
“மக மாதம், சுக்ல பட்ச ஏகாதசி ஜய ஏகாதசி என்று வழங்கப்படும். இது எல்லா ஆன்மாக்களுக்கும் விடுதலையை தேடி தரக் கூடியது. இந்த ஏகாதசி விரதம் இருப்பதால் புண்ணியம் கிடைப்பதோடு பிசாசுகளாக திரியவும் மாட்டார்கள். இந்த ஏகாதசியினால் பிறப்பு மற்றும் இறப்பற்று இருக்க, பத்ம புராணத்தில் இருந்து சிறந்த ஒரு எடுத்துக் காட்டு கூறுகிறேன்.
நீண்ட நாட்களுக்கு முன், தேவர்கள் மகிழ்ச்சியாக வாழ, இந்திரன் தேவலோகத்தை ஆட்சி புரிந்தான். பாரிஜாத மலர் நிறைந்த நந்தவனத்தில், நினைத்த போது அம்ருதம் உண்டு ஐம்பது மில்லியன் அப்சரஸ் சூழ்ந்து நடனமாட, இசைக் கலைஞர்கள் புஷ்பதந்தன் தலைமையில் பாட்டிசைக்க இந்திரன் இருந்தான். முதன்மை இசைக் கலைஞன் சித்ரசேனன், தன் மனைவி மாலினி மற்றும் மகன் மால்யவானுடன் இருந்தான். புஷ்பவதி என்ற அப்சரஸ் மால்யவானிடம் மயங்கினாள். அழகிய உருவம், ஒளி வீசும் சந்திர வதனம், காது வரை நீண்ட கண்கள், வில் போன்ற புருவத்தால் மன்மத பாணம் வீச மால்யவான் மயங்கினான். மயக்கத்தால் கட்டுண்ட இருவராலும் தேவர்கள் முன்னிலையில் ஆடவோ பாடவோ முடியவில்லை.
உச்சரிப்பும் தாளமும் தவற, இந்திரன் உடனே அதற்கான காரணத்தை அறிந்து கொண்டான். கோபத்துடன், “முட்டாள்களே! யாரிடம் நடிக்கிறீர்கள். பிசாசுகளாக மாறி பூமியில் பிறந்து இதன் பலனை அனுபவியுங்கள் ” என்று சாபம் இட்டார்.
இருவரும், அழகிய நந்தவனத்திலிருந்து, இருண்ட இமாலய மலையின், ஒரு பகுதிக்கு தள்ளப்பட்டார்கள். இந்திரன் சாபத்தால், நுகர்தல், சுவை மற்றும் தொடுதல் உணர்ச்சி இழந்து, மதிப்பிழந்து, குளிரில் நடுங்கிக் கொண்டு, தூக்கம் இழந்து வருந்தினர். இங்கும் அங்கும் திரிந்து, குளிரில் நடுங்கி, மேலும் மேலும் துன்பம் அடைந்தனர். மயிர்க் கூச்சத்துடன், பற்கள் நடுங்க, பயத்திலும் குளிரிலும் நடுங்கி ஒரு குகையில் பதுங்கினர்.
மால்யவான் புஷ்பவதியிடம், “இவ்வாறு பிசாசு உரு கொள்ள நாம் என்ன பாபம் செய்தோம். நரகத்தை விடக் கொடிய துன்பம் அனுபவிக்க நாம் என்ன தவறு செய்தோம்” என்று வருந்திக் கூறினான். அவர்கள் செய்த புண்ணியத்தால் அன்று பைமி அல்லது ஜய ஏகாதசி என்பதை அறியாமலே நீரும் உணவும் தவிர்த்து, முழு உபவாசம் இருந்து, ஒரு அரச மர நிழலில் இரவு முழுதும் கிடந்தனர். இவ்வாறு, அறியாமல் செய்த விரதப் பயனால், துவாதசி பொழுது விடிந்ததும், அவர்கள் தங்கள் பிசாசு உருவம் நீங்கி அழகிய உருவம், ஆடை, ஆபரணம் பெற்றனர். அவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தபோது, புஷ்பக விமானம் ஒன்று வந்தது. அவர்கள் அதில் ஏறி, அமராவதி என்ற இந்திரனின் தலைநகர் அடைந்த போது, தேவ கணங்கள் புகழ்ந்து இசை பாட, நேராக இருவரும், இந்திரன் முன், பணிவுடன் தங்கள் வணக்கத்தை சமர்ப்பித்தனர். இந்திரன் ஆச்சர்யத்துடன், அவர்கள் சாபத்தில் இருந்து எவ்வாறு மீண்டனர் என வினவினான். மால்யவான், “கிருஷ்ணரின் பெரும் கருணையாலும், ஜய ஏகாதசி விரதம் இருந்ததாலும் (அஜ்நாத சுக்ரிதி – அறியாமல் விரதமிருந்தாலும் என்று கூறுகிறது) மீண்டதாக கூறினான்..
கேசவனை வணங்கி நீங்கள் ஏகாதசி விரதம் இருந்ததால், நானும் உங்களை வணங்குகிறேன். நீங்கள் தூய்மையாக மாறியதை அறிகிறேன். இது போல் விரதம் இருப்பவர்கள், என்னால் வணங்கப்படுவார்கள். மேலும், அவர்கள் இருவரும், இந்திரலோகத்தில் அனைத்து உரிமைகளையும் அடைந்தனர்.
எனவே யுதிஷ்டிரா, இந்த ஜய ஏகாதசி விரதம் இருப்பவர் அனைத்துவித பாவத்தில் இருந்தும் விடுபடுவர். தான, தருமம், புனித நதிகளில் நீராடிய பயன் போன்றவை அடைந்து பல கோடி யுகங்கள் இனிதே வாழ்வர். இந்த ஏகாதசி பற்றி கேட்பவர் அக்னி வளர்த்து சாம வேதம் சொல்லிய பலனை அடைவர்.
இதுவே மக மாத சுக்ல பட்ச, ஜய ஏகாதசி பற்றி பவிஷ்ய உத்தர புராணத்தில் கூறப் பட்ட செய்தி ஆகும்.
* ஏகாதசி பற்றி குறிப்பு: மற்ற விரதங்களை அனுசரிக்காமல் இருந்தாலும் இந்த விரதம் மட்டும் இருப்பவர் நேரிடையாக விஷ்ணுவின் லோகம் அடைவர்.

