அத்தியாயம் –6
தியான யோகம்
ப.கீ 6.1
ஸ்ரீ-பகவான் உவாச
அனாஷ்ரித: கர்ம-பலம் கார்யம் கர்ம கரோதி ய:
ஸ ஸன்ன்யாஸீ ச யோகீ ச ந நிரக்னிர் ந சாக்ரிய:

ஸ்ரீ-பகவான் உவாச – பகவான் கூறினார்; அநாஷ்ரித: – அடைக்கலமின்றி; கர்ம-பலம் – செயலின் பலன்; காரியம் – கடமை; கர்ம – செயல்; கரோதி – செய்பவன்; ய: — எவனொருவன்; ஸ: – அவன்; ஸந்ந்யாஸீ – துறவி; ச – மேலும்; யோகீ: – யோகி; ச – மேலும்; ந – இல்லை; நி: – இல்லாத; அக்னி: — நெருப்பு; ந – இல்லை; ச – மேலும்; அக்ரிய: – கடமையின்றி.

புருஷோத்தமரான முழுமுதற்கடவுள் கூறினார்: செயலின் பலன்களில் பற்றற்று, கடமைக்காகச் செயலாற்றுபவனே சந்நியாசியும் உண்மையான யோகியுமாகிறானே தவிர, வேள்வி நெருப்பை மூட்டாதவனும் செயலற்றவனுமல்ல.

ப.கீ 6.2
யம் ஸன்ன்யாஸம் இதி ப்ராஹுர் யோகம் தம் வித்தி பாண்டவ
ந ஹ்ய-ஸன்ன்யஸ்த-ஸங்கல்போ யோகீ பவதி கஷ்சன

யம் — எது; ஸந்ந்யாஸம் – துறவு; இதி – இவ்வாறாக; ப்ராஹு: – கூறுகின்றனரோ; யோகம் – பரத்துடன் இணைத்தல்; தம் — அதை; வித்தி – நீ அறிய வேண்டும்; பாண்டவ – பாண்டுவின் மகனே; ந – என்றுமில்லை: ஹி -நிச்சயமாக; அஸன்ன்யஸ்த — துறக்காமல்; ஸங்கல்ப: – சுய திருப்திக்கான விருப்பம்; யோகீ – யோகி; பவதி — ஆவது; கஷ்சன — எவருமே.

பாண்டுவின் மகனே, புலனுகர்ச்சிக்கான இச்சைகளைத் துறக்காத எவனுமே யோகியாக முடியாது என்பதால், துறவு என்று அழைக்கப்படுவதும், யோகமும் (பரமனுடன் தொடர்பு கொள்ளுதலும்) ஒன்றே என்பதை நீ அறிய வேண்டும்.

ப.கீ 6.3
ஆருருக்ஷோர் முனேர் யோகம் கர்ம காரணம் உச்யதே
யோகாரூடஸ்ய தஸ்யைவ ஷம: காரணம் உச்யதே

ஆருருக்ஷோ: – யோகத்தைத் தொடங்கியவன்; முனே: – முனிவனின்; யோகம் – அஷ்டாங்க யோகம்; கர்ம – செயல்; காரணம் – காரணம்; உச்யதே -கூறப்படுகின்றது; யோக – அஷ்டாங்க யோகம்; ஆரூடஸ்ய – அடைந்தவன்; தஸ்ய – அவனது; ஏவ – நிச்சயமாக; ஷம: – எல்லா பௌதிகச் செயல்களின் துறவு; காரணம் — காரணம்; உச்யதே – கூறப்படுகின்றது.

அஷ்டாங்க யோக முறையின் புது மாணவனுக்கு, செயலே, ‘வழி’யாகக் கூறப்படுகின்றது. ஆனால் யோகத்தில் முன்னேறியவனக்கு, ஜடச் செயல்களைத் துறத்தலே, ‘வழி’யாகக் கூறப்படுகின்றது.

ப.கீ 6.4
யதா ஹி னேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்-வனுஷஜ்ஜதே
ஸர்வ-ஸங்கல்ப-ஸன்ன்யாஸீ யோகாரூடஸ் ததோச்யதே

யதா – எப்போது; ஹி – நிச்சயமாக; ந – இல்லை; இந்த்ரிய-அர்தேஷு – புலனுகர்ச்சியில்; ந – என்றுமில்லை; கர்மஸு – பலன்நோக்குச் செயல்களில்; அனுஷஜ்ஜதே – தேவைப்படுவதற்கான அவசியம்; ஸர்வ-ஸங்கல்ப — எல்லா பௌதிக இச்சைகளையும்; ஸந்நியாஸீ – துறப்பவன்; யோக-ஆரூட: – யோகத்தில் உயர்ந்தவன்; ததா — அப்போது; உச்யதே – கூறப்படுகிறான்.

எப்போது ஒருவன் பலன்நோக்குச் செயல்களிலும் புலனுகர்ச்சியிலும் ஈடுபடாமல், எல்லா பௌதிக ஆசைகளையும் துறந்த நிலையில் உள்ளானோ, அப்போது அவன் யோகத்தில் உயர்ந்தவனாகக் கூறப்படுகிறான்.

ப.கீ 6.5
உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவஸாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துர் ஆத்மைவ ரிபுர் ஆத்மன:

உத்தரேத் – விடுதலை செய்ய வேண்டும்; ஆத்மனா — மனதால்; ஆத்மானம் – கட்டுண்ட ஆத்மா; ந – என்றுமில்லை; ஆத்மானம் – கட்டுண்ட ஆத்மா; அவஸாதயேத் — இழிநிலையை அடையச் செய்ய; ஆத்மா – மனம்; ஏவ — நிச்சயமாக; ஹி – ஐயமின்றி; ஆத்மன: – கட்டுண்ட ஆத்மாவின்; பந்து: – நண்பன்; ஆத்மா – மனம்; ஏவ – நிச்சயமாக; ரிபு: – எதிரி; ஆத்மன: – கட்டுண்ட ஆத்மாவின்.

மனதின் உதவியுடன் ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டுமேயொழிய தாழ்த்திக் கொள்ளக்கூடாது. மனமே கட்டுண்ட ஆத்மாவின் நண்பனும் எதிரியுமாவான்.

ப.கீ 6.6
பந்துர் ஆத்மாத்மனஸ் தஸ்ய யேனாத்மைவாத்மனா ஜித:
அனாத்மனஸ் து ஷத்ருத்வே வர்தேதாத்மைவ ஷத்ரு-வத்

பந்து: — நண்பன்; ஆத்மா – மனம்; ஆத்மன: – ஜீவனின்; தஸ்ய – அவனது; யேன — எதனால்; ஆத்மா — மனம்; ஏவ – நிச்சயமாக; ஆத்மனா — ஜீவனால்; ஜித: – வெல்லப்பட்ட; அனாத்மன: – மனதைக் கட்டுப்படுத்தத் தவறியவனின்; து – ஆனால்; ஷத்ருத்வே – விரோதத்தினால்; வர்தேத – அமைகின்றது; ஆத்மா ஏவ – அந்த மனமே; ஷத்ரு-வத் – விரோதியாக.

மனதை வென்றவனுக்கு மனமே சிறந்த நண்பனாகும்; ஆனால் அவ்வாறு செய்யத் தவறியவனுக்கோ, அதுவே மிகப்பெரிய விரோதியாகும்.

ப.கீ 6.7
ஜிதாத்மன: ப்ரஷாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித:
ஷீதோஷ்ண-ஸுக-து: கேஷு ததா மானாபமானயோ

ஜித-ஆத்மன: – மனதை வென்றவனின்; ப்ரஷாந்தஸ்ய – மனதின் மீதான கட்டுப்பாட்டினால் சாந்தியடைந்தவன்; பரம-ஆத்மா — பரமாத்மா; ஸமாஹித: – முழுமையாய் அடையப்பட்டு; ஷீத – குளிர்; உஷ்ண – வெப்பம்; ஸுக — சுகம்; து:கேஷு — துக்கத்திலும்; ததா — மேலும்; மான – மானம்; அபமானயோ: – அவமானத்திலும். மனதை வென்றவன், அமைதியை அடைந்துவிட்டதால், பரமாத்மா அவனுக்கு ஏற்கனவே அடையப்பட்டுவிடுகின்றார். அத்தகு மனிதனுக்கு இன்ப துன்பம், குளிர் வெப்பம், மான அவமானம் எல்லாம் சமமே. ப.கீ 6.8
க்ஞான-விக்ஞான-த்ருப்தாத்மா கூட-ஸ்தோ விஜிதேந்த்ரிய:
யுக்த இத்-யுச்யதே யோகீ ஸம-லோஷ்ட்ராஷ்ம-காஞ்சன:

ஜ்ஞான – பெற்ற ஞானத்தாலும்; விஜ்ஞான – உணர்ந்த ஞானத்தாலும்; திருப்த — திருப்தியுற்ற; ஆத்மா – ஆத்மா; கூட-ஸ்த: – ஆன்மீகத்தில் நிலைத்து; விஜித-இந்த்ரிய: – புலனடக்கத்துடன்; யுக்த: – தன்னுணர்வுக்குத் தக்கவனாய்; இதி – இவ்வாறாக; உச்யதே — கூறப்படுகிறது; யோகீ – யோகி; ஸம – சமநிலை கொண்டவன்; லோஷ்ட்ர – கூழாங்கற்கள்; அஷ்ம – கற்கள்; காஞ்சன: – தங்கம்.

ஒருவன் ஞானத்தினாலும், விஞ்ஞானத்தினாலும் (அனுபவ ஞானத்தினாலும்) முழு திருப்தியடையும்போது, அவன் தன்னுணர்வில் நிலைபெற்றவன் என்றும், யோகி என்றும் அழைக்கப்படுகிறான். அத்தகையோன் உன்னதத்தில் நிலைபெற்று தன்னடக்கத்துடன் உள்ளான். கூழாங்கற்களோ, கற்களோ, தங்கமோ, அவன் அனைத்தையும் சமமாகக் காண்கிறான்.

ப.கீ 6.9
ஸுஹ்ருன்-மித்ரார்-யுதாஸீன- மத்யஸ்த -த்வேஷ்ய-பந்துஷு
ஸாதுஷ்-வபி ச பாபேஷு ஸம-புத்திர் விஷிஷ்யதே

ஸு-ஹ்ருத் – இயற்கையான நலன் விரும்பி; மித்ர – நண்பர்கள்; அரி – விரோதிகள்; உதாஸீன – நடுநிலையில் இருப்போன்; மத்யஸ்த: – சமாதானம் செய்வோர்; த்வேஷ்ய – பொறாமை கொண்டோர்; பந்துஷு — உறவினர்கள் அல்லது நலன் விரும்பிகள்; ஸாதுஷு – சாதுக்களிடமும்; அபி — அதுபோன்றே; ச – மேலும்; பாபேஷு – பாவிகளிடமும்; ஸம-புத்தி: – சம புத்தியுடையவன்; விஷிஷ்யதே – மிகவும் முன்னேறியவன்.

நேர்மையான நலன் விரும்பிகள், பாசத்துடன் நன்மை செய்வோர், நடுநிலை கொண்டோர், சமாதானம் செய்வோர், பொறாமை கொண்டோர், நண்பர்கள், எதிரிகள், சாதுக்கள், பாவிகள் என அனைவரையும் சமமான மனதுடன் நடத்துபவன், மேலும் முன்னேறியவனாக கருதப்படுகிறான்.

ப.கீ 6.10
யோகீ யுஞ்ஜீத ஸததம் ஆத்மானம் ரஹஸி ஸ்தித:
ஏகாகீ யத-சித்தாத்மா நிராஷீர் அபரிக்ரஹ:

யோகீ – ஆன்மீகவாதி; யுஞ்ஜீத – கிருஷ்ண உணர்வில் கவனம் செலுத்த வேண்டும்; ஸததம் — எப்போதும்; ஆத்மானம் – தன்னை (உடல், மனம் ஆன்மாவினால்); ரஹஸி – தனியிடத்தில்; ஸ்தித: – இவ்வாறு நிலைபெற்று; ஏகாகீ – தனியே; யத-சித்த-ஆத்மா — எப்போதும் மனதில் கவனமாக; நிராஷீ: -வேறு எதனாலும் கவரப்படாமல்; அபரிக்ரஹ: – உரிமை உணர்விலிருந்து விடுபட்டு.

யோகியானவன் தனது உடல், மனம் மற்றும் ஆத்மாவினை பரமனின் தொடர்பில் எப்போதும் ஈடுபடுத்த வேண்டும்; அவன் தனிமையான இடத்தில் தனியே வசித்து, மனதை கவனத்துடன் எப்போதும் கட்டுப்படுத்த வேண்டும். அவன் உரிமையுணர்வுகளிலிருந்தும் ஆசைகளிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும்.

ப.கீ 6.11 – 6.12
ஷீசௌ தேஷே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரம் ஆஸனம் ஆத்மன:
நாத்-யுச்ச்ரிதம் நாதி-நீசம் சைலாஜின-குஷோத்தரம்

தத்ரைகாக்ரம் மன: க்ருத்வா யத-சித்தேந்த்ரிய-க்ரிய:
உபவிஷ்யாஸனே யுஞ்ஜ்யாத் யோகம்-ஆத்ம-விஷுத்தயே

ஷுசௌ – தூய்மையான; தேஷே — இடத்தில்; ப்ரதிஷ்டாப்ய — அமைத்த; ஸ்திரம் – நிலையான; ஆஸனம் – ஆசனத்தில்; ஆத்மன: – தன்னையே சார்ந்து; ந – அல்லாத; அதி – மிக; உச்ச்ரிதம் – உயரமோ; ந – அல்லாத; அதி – மிக; நீசம் – தாழ்வோ; சைல-அஜின – மென்மையான துணியும், மான் தோலும்; குஷ – தர்ப்பைப்புல்; உத்தரம் — மூடி; தத்ர — இவற்றின் மேல்; ஏக-அக்ரம் – ஒருமுகமான; மன: – மனதோடு; க்ருத்வா – இவ்வாறு அமர்ந்து; யத-சித்த – மனதை அடக்கி; இந்த்ரிய – புலன்கள்; க்ரிய: – செயல்கள்; உபவிஷ்ய — அமர்ந்து; ஆஸனே — ஆசனத்தில்; யுஞ்ஜ்யாத் – பயில வேண்டும்; யோகம் — யோகப்பயிற்சியை; ஆத்ம — இதயத்தை; விஷுத்தயே – தூய்மைப்படுத்துவதற்காக.

யோகத்தைப் பயில, தனிமையான இடத்திற்குச் சென்று, நிலத்தில் தர்பைப்புல்லைப் பரப்பி, அதனை மான் தோலாலும் மென்மையான துணியினாலும் மறைக்க வேண்டும். இந்த ஆசனம் மிக உயரமாகவோ, தாழ்வாகவோ இல்லாமல் புனிதமான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். பின்னர், இதன்மேல் ஸ்திரமாக அமர்ந்து, மனம், புலன்கள் மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தி, இதயத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக யோகியானவன் யோகத்தைப் பயில வேண்டும்.

ப.கீ 6.13 – 6.14
ஸமம் காய-ஷிரோ-க்ரீவம் தாரயன்ன் அசலம் ஸ்திர:
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திஷஷ் சானவலோகயன்

ப்ரஷாந்தாத்மா விகத-பீர் ப்ரஹ்மசாரி-வ்ரதே ஸ்தித:
மன: ஸம்யம்ய மச்-சித்தோ யுக்த ஆஸீத மத்-பர:

ஸமம் — நேராக; காய – உடல்; ஷிர: – தலை; க்ரீவம் — கழுத்து; தாரயன் — நிறுத்தி; அசலம் – அசையாமல்; ஸ்திர – ஸ்திரமாக; ஸம்ப்ரேக்ஷ்ய – பார்வை; நாஸிக – மூக்கின்; அக்ரம் – நுனியில்; ஸ்வம் — தனது; திஷ: – எல்லா திசைகளில்; ச – மேலும்; அனவலோகயன் — பார்க்காமல்; ப்ரஷாந்த — கிளர்ச்சியின்றி; ஆத்மா – மனம்; விகத-பீ: – பயமின்றி; ப்ரஹ்மசாரி-வ்ரதே – பிரம்மசரிய விரதத்துடன்; ஸ்தித: – நிலையுற்று; மன: – மனதை; ஸம்’யம்ய – முழுமையாக அடக்கி; மத் – என்னிடம் (கிருஷ்ணரிடம்); சித்த: – மனதை ஒருமுகப்படுத்தி; யுக்த: – உண்மையான யோகி; ஆஸீத – அமர வேண்டும்; மத் – என்னை; பர: – இறுதி இலட்சியம்.

தனது உடல், கழுத்து மற்றும் தலையை நேராக வைத்தமர்ந்து நாசி நுனியை ஸ்திரமாக நோக்க வேண்டும். இவ்வாறாக, கிளர்ச்சியற்ற, அடக்கப்பட்ட மனதோடு, பயமின்றி, பிரம்மச்சரிய விரதத்துடன், இதயத்தினுள் உள்ள என்மீது தியானம் செய்து, என்னையே வாழ்வின் இறுதிக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

ப.கீ 6.15
யுஞ்ஜன்ன் ஏவம் ஸதாத்மானம் யோகீ நியத-மானஸ:
ஷாந்திம் நிர்வாண-பரமாம் மத்-ஸம்ஸ்தாம் அதிகச்சதி

யுஞ்ஜன் — பயிற்சி செய்து; ஏவம் – மேற்கூறியபடி; ஸதா — இடையறாது; ஆத்மானம் – உடல் மனம் மற்றும் ஆத்மா; யோகீ – யோகி; நியத-மானஸ: – கட்டுப்பட்ட மனதுடன்; ஷாந்திம் – அமைதி; நிர்வாண-பரமாம் – ஜட இருப்பின் முடிவு; மத்-ஸம்’ஸ்தாம் – ஆன்மீக வானை (இறைவனின் திருநாட்டை); அதிகச்சதி — அடைகிறான்.

இவ்வாறாக, உடல், மனம் மற்றும் செயல்களை இடையறாது கட்டுப்படுத்தப் பழகிய யோகி, தனது ஒழுங்குபடுத்தப்பட்ட மனதுடன் பௌதிக வாழ்வைக் களைந்து இறைவனின் திருநாட்டை (கிருஷ்ண லோகத்தை) அடைகிறான்.

ப.கீ 6.16
நாத்-யஷ்னதஸ் து யோகோ (அ)ஸ்தி ந சைகாந்தம் அனஷ்னத:
ந சாதி-ஸ்வப்ன-ஷீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுன

ந – என்றுமில்லை; அதி – மிக அதிகமாக; அஷ்னத: – உண்பவனின்; து – ஆனால்; யோக: – பரத்துடன் இணைவு; அஸ்தி – அமைகிறது; ந – இல்லை; ச – மேலும்; ஏகாந்தம் – எதையுமே; அனஷ்னத: – உண்ணாமல் விரதம் இருப்பவன்; ந – இல்லை; ச – மேலும்; அதி – மிக அதிகமாக; ஸ்வப்ன-ஷீலஸ்ய – உறங்குபவன்; ஜாக்ரத: – அதிகமாக விழித்திருப்பவன்; ந – இல்லை; ஏவ – என்றும்; ச – மேலும்; அர்ஜுன — அர்ஜுனா.

அர்ஜுனா, எவனொருவன் மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக உண்கின்றானோ, மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக உறங்குகின்றானோ, அத்தகையோன் யோகியாவதற்கான வாய்ப்பே இல்லை.

ப.கீ 6.17
யுக்தாஹார-விஹாரஸ்ய யுக்த-சேஷ்டஸ்ய கர்மஸு
யுக்த-ஸ்வப்னாவபோதஸ்ய யோகோ பவதி து:க-ஹா

யுக்த — நெறிப்படுத்தப்பட்ட; ஆஹார – உணவுமுறை; விஹாரஸ்ய – கேளிக்கை; யுக்த – நெறிப்படுத்தப்பட்ட; சேஷ்டஸ்ய – பராமரிப்பிற்காக உழைப்பவனின்; கர்மஸு — கடமைகளை ஆற்றுவதில்; யுக்த – நெறிப்படுத்தப்பட்ட; ஸ்வப்ன-அவபோதஸ்ய — உறக்கமும், விழிப்பும்; யோக: – யோகப் பயிற்சி; பவதி — ஆகின்றது; து:க-ஹா – துன்பங்களை நீக்கி.

உண்ணுதல், உறங்குதல், உழைத்தல், கேளிக்கை ஆகிய பழக்கங்களை நெறிப்படுத்தியவன், யோகப் பயிற்சியின் மூலமாக எல்லாத் துன்பங்களையும் பெருமளவில் நீக்கிவிட முடியும்.

ப.கீ 6.18
யதா வினியதம்’ சித்தம் ஆத்மன்-யேவாவதிஷ்டதே
நிஸ்ப்ருஹ: ஸர்வ-காமேப்யோ யுக்த இத்-யுச்யதே ததா

யதா – எப்போது; விநியதம் – முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டு; சித்தம் – மனமும் அதன் இயக்கங்களும்; ஆத்மனி – உன்னதத்தில்; ஏவ – நிச்சயமாக; அவதிஷ்டதே – நிலைபெறுகின்றது; நிஸ்ப்ரு’ஹ: – ஆசை இல்லாத; ஸர்வ — எல்லாவித; காமேப்ய – பெளதிக புலனுகர்ச்சி; யுக்த: – யோகத்தில் நிலைபெற்று; இதி – இவ்வாறு; உச்யதே – கூறப்படுகின்றது; ததா — அவ்வேளையில்.

யோகியானவன், யோகப் பயிற்சியின் மூலமாக தனது மனதின் செயல்களை ஒழுங்குபடுத்தி, எல்லா ஜட ஆசைகளிலிருந்தும் விடுபட்டு, உன்னதத்தில் நிலைபெறும்போது, யோகத்தில் நன்கு நிலைபெற்றவனாகக் கூறப்படுகின்றான்.

ப.கீ 6.19
யதா தீபோ நிவாத-ஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகினோ யத-சித்தஸ்ய யுஞ்ஜதோ யோகம் ஆத்மன:

யதா – எவ்வாறு; தீப: – தீபம்; நிவாத-ஸ்த: – காற்று வீசாத இடத்தில்; ந – இல்லை; இங்கதே – அசைவது; ஸா – இந்த; உபமா — ஒப்பீடு; ஸ்ம்ரு’தா – கருதப்படுகின்றது; யோகின: – யோகியின்; யத-சித்தஸ்ய — கட்டுப்படுத்தப்பட்ட மனதை உடையவன்; யுஞ்ஜத: – இடையறாது ஈடுபடுத்தப்படுகிறது; யோகம் தியானத்தில்; ஆத்மன: – தெய்வீகத்தின்.

காற்று வீசாத இடத்திலுள்ள தீபம், அசையாமல் இருப்பதைப் போல, மனதை அடக்கிய யோகியும், திவ்யமான ஆத்மாவின் மீதான தனது தியானத்தில் எப்போதும் ஸ்திரமாக உள்ளான்.

ப.கீ 6.20 – 6.23
யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோக-ஸேவயா
யத்ர சைவாத்மனாத்மானம் பஷ்யன்ன்-ஆத்மனி துஷ்யதி

ஸுகம் ஆத்யந்திகம் யத் தத் புத்தி-க்ராஹ்யம் அதீந்த்ரியம்
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஷ் சலதி தத்த்வத:

யம் லப்த்வா சாபரம் லாபம்’ மன்யதே நாதிகம் தத:
யஸ்மின் ஸ்திதோ ந து:கேன குருணாபி விசால்யதே

தம் வித்யாத் து:க -ஸம்யோக- வியோகம் யோக-ஸம்க்ஞிதம்

யத்ர — அத்தகு நிலையில்; உபரமதே – நிறுத்து (உன்னத ஆனந்தத்தை உணர்வதால்); சித்தம் – மனதின் செயல்கள்; நிருத்தம் – ஜடத்திலிருந்து விலகி; யோக-ஸேவயா – யோகப் பயிற்சியால்; யத்ர – எதில்; ச – மேலும்; ஏவ நிச்சயமாக; ஆத்மனா — தூய மனதால்; ஆத்மானம் – ஆத்மா; பஷ்யன் — நிலையை உணர்ந்து; ஆத்மனி – ஆத்மாவில்; துஷ்யதி – ஒருவன் திருப்தி அடைகிறான்; ஸுகம் – இன்பம்; ஆத்யந்திகம் – பரம; யத் – எதில்; தத் — அது; புத்தி – அறிவு; க்ராஹ்யம் — ஏற்கக்கூடிய; அதீந்த்ரியம் – திவ்யமான; வேத்தி – அறிகிறான்; யத்ர – எதில்; ந – என்றுமில்லை; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; அயம் – அவன்; ஸ்தித: – நிலைபெற்று; சலதி — அசைவது; தத்த்வத: – உண்மையிலிருந்து; யம் — எதை; லப்த்வா — அடைவதால்; ச – மேலும்; அபரம் – வேறொன்றை; லாபம் – இலாபமாக; மன்யதே – கருதுவது; ந – என்றுமில்லை; அதிகம் – அதிகம்; தத: – அதைவிட; யஸ்மின் – எதில்; ஸ்தித: – நிலைபெற்று ; ந – என்றுமில்லை; து:கேன – துன்பங்களால்; குருணா அபி – மிகக் கடினமானதாயினும் கூட; விசால்யதே – பாதிக்கப்படுவது; தம் — அது; வித்யாத் – நீ அறிய வேண்டும்; து:க-ஸம்’யோக — ஜடத் தொடர்பின் துயரங்கள்; வியோகம் – புறக்கணிப்பு; யோக-ஸம்ஜ்ஞிதம் – யோகத்தின் ஆழ்நிலை எனப்படுகிறது.

ஸமாதி என்றழைக்கப்படும் பக்குவநிலையில், மனம் யோகப் பயிற்சியின் மூலமாக, ஜட செயல்களிலிருந்து முழுமையாக விலக்கப்படுகிறது. தூய மனதால் தன்னைக் கண்டு, தன்னில் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஒருவனிடம் உள்ள திறனிலிருந்து இப்பக்குவ நிலையை உணரலாம். அந்த இன்பநிலையில், அவன் திவ்யமான புலன்களின் மூலம் எல்லையற்ற திவ்யமான ஆனந்தத்தை அனுபவிக்கிறான். இவ்வாறு நிலைபெற்றவன், உண்மையிலிருந்து என்றும் வழுவுவதில்லை, இதைவிட உயர்ந்த இலாபம் ஏதுமில்லை என்று நினைக்கிறான். அத்தகு நிலையில் அமைந்தவன், மாபெரும் துயரங்களுக்கு மத்தியிலும் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை. இதுவே ஜடத் தொடர்பினால் எழும் எல்லாத் துன்பங்களிலிருந்தும் பெறப்படும் உண்மையான விடுதலையாகும்.
ப.கீ 6.24
ஸ நிஷ்சயேன யோக்தவ்யோ யோகோ (அ)நிர்விண்ண-சேதஸா
ஸங்கல்ப-ப்ரபவான் காமாம்ஸ் த்யக்த்வா ஸர்வான் அஷேஷத:
மனஸைவேந்த்ரிய-க்ராமம் வினியம்ய ஸமன்தத:

ஸ: – அந்த; நிஷ்சயேன — திடமான மனுவுறுதியுடன்; யோக்தவ்ய: – பயிற்சி செய்யப்பட வேண்டும்; யோக: – யோகம்; அநிர்விண்ண-சேதஸா – சிறிதும் மாற்றமின்றி; ஸங்கல்ப – மனக் கற்பனைகளினால்; ப்ரபவான் – பிறந்த; காமான் – ஜட ஆசைகளை; த்யக்த்வா — துறந்து; ஸர்வான் – எல்லா; அஷேஷத: – முழுமையாக; மனஸா — மனதால்; ஏவ – நிச்சயமாக; இந்த்ரிய-க்ராமம் – புலன்கள் முழுவதும்; விநியம்ய – நெறிப்படுத்தி; ஸமந்தத: – எல்லா பக்கங்களிலிருந்தும். யோகப் பயிற்சியில் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் பாதையிலிருந்து பிறழாமலும் ஈடுபட வேண்டும். மனக் கற்பனையால் பிறந்த எல்லா ஜட ஆசைகளையும் துறந்து, எல்லா பக்கங்களிலிருந்தும் அனைத்துப் புலன்களையும் மனதால் அடக்க வேண்டும். ப.கீ 6.25
ஷனை: ஷனைர் உபரமேத் புத்த்யா த்ருதி-க்ருஹீதயா
ஆத்ம-ஸம்ஸதம் மன: க்ருத்வா ந கிஞ்சித் அபி சிந்தயேத்

ஷனை: – மெல்ல; ஷனை: – மெல்ல; உபரமேத் – விலகியிருக்க வேண்டும்; புத்த்யா — புத்தியால்; தரு’தி-க்ரு’ஹீதயா – உறுதியுடன் மேற்கொண்டு; ஆத்ம- ஸம்’ஸ்தம் – ஆத்மாவில் நிலைபெற்று; மன: – மனம்; க்ருத்வா – உருவாக்கி; ந – இல்லை; கிஞ்சித் — எதுவும்; அபி – கூட; சிந்தயேத் – சிந்தனை செய்ய.

வலுவான நம்பிக்கையுடன் கூடிய புத்தியின் மூலம், படிப்படியாக ஸமாதியில் நிலைபெற வேண்டும். இவ்வாறு மனம் தன்னில் மட்டுமே நிலைப்படுத்தப்பட்டு வேறெதையும் சிந்திக்காமல் இருக்க வேண்டும்.

ப.கீ 6.26
யதோ யதோ நிஷ்சலதி மனஷ் சஞ்சலம் அஸ்திரம்
ததஸ் ததோ நியம்யைதத் ஆத்மன்-யேவ வஷம் நயேத்

யத: யத: – எங்கெல்லாம்; நிஷ்சலதி – மிகவும் கிளர்ச்சியடைகின்றதோ; மன: – மனம்; சஞ்சலம் – சஞ்சலம்; அஸ்திரம் – ஸ்திரமின்றி; தத: தத: – அங்கிருந்து; நியம்ய – ஒழுங்குப்படுத்தி; ஏதத் – இந்த; ஆத்மனி – ஆத்மாவில்; ஏவ – நிச்சயமாக; வஷம் – கட்டுப்பாட்டில்; நயேத் – கொண்டு வர வேண்டும்.

மனம் தனது சஞ்சலமான நிலையற்ற தன்மையால் எங்கெல்லாம் சஞ்சரிக்கின்றதோ, அங்கிருந்தெல்லாம் மனதை இழுத்து மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

ப.கீ 6.27
ப்ரஷாந்த-மனஸம் ஹ்யேனம் யோகினம்’ ஸுகம் உத்தமம்
உபைதி ஷாந்த-ரஜஸம் ப்ரஹ்ம-பூதம் அகல்மஷம்

ப்ரஷாந்த – அமைதியான (கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளில் நிலை நிறுத்திய); மனஸம் – மனம்; ஹி – நிச்சயமாக; ஏனம் – இந்த; யோகினம் – யோகி; ஸுகம் — சுகம்; உத்தமம் – உத்தமம்; உபைதி – அடைகிறான்; ஷாந்த-ரஜஸம் – ரஜோ குணம் சாந்தப்படுத்தப்பட்ட; ப்ரஹ்ம-பூதம் – பிரம்மனுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும் முக்தி; அகல்மஷம் – எல்லா பழைய களங்களிலிருந்தும் விடுபெற்று.

என் மீது மனதை நிறுத்திய யோகி நிச்சயமாக உத்தம சுகம் எனும் உயர் பக்குவத்தை அடைகிறான். ரஜோ குணத்தைக் கடந்த அவன், பிரம்மனிடம் உள்ள தனது குண ஒற்றுமையை உணர்வதன் மூலம் தனது முந்தைய செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபடுகிறான்.

ப.கீ 6.28
யுஞ்ஜன்ன் ஏவம் ஸதாத்மானம் யோகீ விகத-கல்மஷ:
ஸுகேன ப்ரஹ்ம-ஸம்ஸ்பர்ஷம் அத்யந்தம் ஸுகம் அஷ்னுதே

யுஞ்ஜன் — யோகப் பயிற்சியில் ஈடுபட்டு; ஏவம் – இவ்வாறாக; ஸதா – எப்போதும்; ஆத்மானம் – ஆத்மாவில்; யோகீ – பரமாத்மாவுடன் தொடர்புடையவன்; விகத: — விடுதலை; கல்மஷ: – எல்லா ஜடக் களங்கங்கள்; ஸுகேன — திவ்யமான சுகத்தில்; ப்ரஹ்ம-ஸம்’ஸ்பர்ஷம் – பிரம்மனுடன் நித்திய தொடர்பு கொண்டிருப்பதால்; அத்யந்தம் – உன்னதமான; ஸுகம் — சுகத்தை; அஷ்னுதே – அடைகிறான்.

இவ்வாறாக, சுயக் கட்டுப்பாடுடைய யோகி, இடைவிடாத யோகப் பயிற்சியினால், எல்லா ஜடக் களங்கத்திலிருந்தும் விடுபட்டு, இறைவனின் திவ்யமான அன்புத் தொண்டில் பக்குவமான சுகத்தின் உன்னத நிலையை அடைகிறான்.

ப.கீ 6.29
ஸர்வ-பூத-ஸ்தம் ஆத்மானம் ஸர்வ-பூதானி சாத்மனி
ஈக்ஷதே யோக-யுக்தாத்மா ஸர்வத்ர ஸம-தர்ஷன:

ஸர்வ-பூத-ஸ்தம் – எல்லா உயிர்களிலும் உள்ள; ஆத்மானம் – பரமாத்மா; ஸர்வ – எல்லா; பூதானி – உயிர்களும்; ச – மேலும்; ஆத்மனி – ஆத்மாவில்; ஈக்ஷதே — பார்ப்பவன்; யோக-யுக்த-ஆத்மா – கிருஷ்ண உணர்வில் இணைக்கப்பட்டவன்; ஸர்வத்ர – எங்கும்; ஸம-தர்ஷன: – சமமாகக் காண்கிறான்.

உண்மை யோகி, என்னை எல்லா உயிர்களிலும், எண்ணில் எல்லா உயிர்களையும் காண்கிறான். உண்மையில், தன்னுணர்வுடையவன் பரம புருஷரான என்னையே எங்கும் காண்கிறான்.

ப.கீ 6.30
யோ மாம் பஷ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஷ்யதி
தஸ்யாஹம் ந ப்ரணஷ்யாமி ஸ ச மே ந ப்ர்ணஷ்யதி

ய: – யாராயினும்; மாம் – என்னை; பஷ்யதி – காண்கிறானோ; ஸர்வத்ர — எங்கும்; ஸர்வம் – எதிலும்; ச – மேலும்; மயி — என்னில்; பஷ்யதி — காண்கிறான்; தஸ்ய – அவனுக்கு; அஹம் – நான்; ந – இல்லை; ப்ரணஷ்யாமி – இழந்துபோவது ஸ: – அவன்; ச – மேலும்; மே – எனக்கு; ந – இல்லை; ப்ரணஷ்யதி — இழப்பது.

என்னை எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் என்னிலும் காண்பவன் என்னை ஒருபோதும் இழப்பதில்லை. நானும் அவனை ஒருபோதும் இழப்பதில்லை.

ப.கீ 6.31
ஸர்வ-பூத-ஸ்திதம் யோ மாம் பஜத்-யேகத்வம் ஆஸ்தித:
ஸர்வதா வர்தமானோ (அ)பி ஸ யோகீ மயி வர்ததே

ஸர்வ-பூத-ஸ்திதம் – எல்லாரது இதயத்திலும் உறைந்துள்ள; ய: -எவனொருவன்; மாம் – எனக்கு; பஜதி — பக்தியுடன் சேவை செய்கிறானோ; ஏகத்வம் – ஒருமையில்; ஆஸ்தித: – நிலைபெற்று; ஸர்வதா – எல்லா விதங்களிலும்; வர்தமான: – நிலைபெற்று; அபி – இருந்தும்; ஸ: – அவன்; யோகீ-ஆன்மீகி; மயி – என்னில்; வர்ததே – நிலைக்கிறான்.

பரமாத்மாவின் தொண்டில் ஈடுபடும் அத்தகு யோகி, நானும் பரமாத்மாவும் ஒருவரே என்பதை அறிந்து, எல்லா சூழ்நிலைகளிலும் எப்போதும் என்னில் நிலைக்கிறான்.

ப.கீ 6.32
ஆத்மௌபம்யேன ஸர்வத்ர ஸமம் பஷ்யதி யோ (அ)ர்ஜுன
ஸுகம்’ வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத:

ஆத்ம – ஆத்மா; ஔபம்யேன — ஒப்பீட்டால்; ஸர்வத்ர – எங்கும்; ஸமம் -சமத்துவம்; பஷ்யதி – காண்கிறான்; ய: – எவனொருவன்; அர்ஜுனா – அர்ஜுனனே; ஸுகம் – சுகம்; வா – அல்லது; யதி – ஆனால்; வா – அல்லது; து:கம் – துக்கம்; ஸ: – அத்தகு; யோகீ – யோகி; பரம: – பரம; மத: – கருதப்படுகிறான்.

அர்ஜுனா, எவனொருவன் எல்லா உயிர்களுடைய சுக துக்கங்களை தன்னுடன் ஒப்பிட்டுக் காண்கிறானோ, அவன் பரம யோகியாகக் கருதப்படுகிறான்.

ப.கீ 6.33
அர்ஜுன உவாச
யோ (அ)யம் யோகஸ் த்வ்யா ப்ரோக்த: ஸாம்யேன மதுஸூதன
ஏதஸ்யாஹம் ந பஷ்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம்

அர்ஜுன: உவாச – அர்ஜுனன் கூறினான்; ய: அயம் – இம்முறை; யோக: -யோகம்; த்வயா – உம்மால்; ப்ரோக்த: – விவரிக்கப்பட்ட; ஸாம்யேன —பொதுவாக; மது-ஸூதன – மது எனும் அரக்கனை அழித்தவரே; ஏதஸ்ய – இதன்; அஹம் – நான்; ந – இல்லை; பஷ்யாமி – பார்க்க; சஞ்சலத்-வாத் – சஞ்சலத்தினால்; ஸ்திதிம் – சூழ்நிலை; ஸ்திராம் – ஸ்திரமான

அர்ஜுனன் கூறினான்: மதுசூதனரே, மனம் நிலையற்றதும் அமைதியற்றதும் ஆனதால், நீங்கள் இப்போது கூறிய யோக முறையானது நடைமுறைக்கு ஒத்துவராததாகவும் தாங்க முடியாததுமாகத் தோன்றுகிறது.

ப.கீ 6.34
சஞ்சலம் ஹி மன: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோர் இவ ஸு-துஷ்கரம்

சஞ்சலம் – சஞ்சலமானது; ஹி – நிச்சியமாக; மன: – மனம்; க்ரு‘ஷ்ண — கிருஷ்ணரே; ப்ரமாதி – கிளர்ச்சி கொள்வது; பல-வத் – பலமானது; த்ருடம் — அடங்காதது; தஸ்ய – நான்; அஹம் – நான்; நிக்ரஹம் – அடக்குவது; மன்யே – எண்ணுகிறேன்; வாயோ: – வீசும் காற்றை; இவ – போல; ஸு-துஷ்கரம் – கடினமானது.

கிருஷ்ணா, மனம் அமைதியற்றதும், குழப்பம் நிறைந்ததும், அடங்காததும், சக்தி மிகுந்ததுமாயிற்றே. வீசும் காற்றை அடக்குவதைவிட மனதை அடக்குவது கடினமானதாக எனக்குத் தோன்றுகின்றது.<
br> ப.கீ 6.35
ஸ்ரீ-பகவான் உவாச
அஸம்ஷயம் மஹா-பாஹோ மனோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே

ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; அஸம்ஷயம் – சந்தேகமின்றி; மஹா-பாஹோ – பலம் பொருந்திய புயங்களை உடையவனே; மன: – மனம்; துர்நிக்ரஹம் – அடக்கக் கடினமானது; சலம் – சஞ்சலமானது; அப்யாஸேன — பயிற்சியினால்; து – ஆனால்; கௌந்தேய – குந்தியின் மகனே; வைராக்யேண – பற்றின்மையினால்; ச – மேலும்; க்ரு’ஹ்யதே – கட்டுப்படுத்தக்கூடியது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: பலம் பொருந்திய புயங்களை உடைய குந்தியின் மகனே, அமைதியற்ற மனதை அடக்குவது சந்தேகமின்றி மிகவும் கடினமே. ஆனால், தகுந்த பயிற்சியினாலும் பற்றின்மையாலும் அது சாத்தியமாகும்.

ப.கீ 6.36
அஸம்யதாத்மனா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி:
வஷ்யத்மனா து யததா ஷக்யோ (அ)வாப்தும் உபாயத:

அஸம்யதா – கட்டுப்படாத; ஆத்மனா – மனதால்; யோக: – தன்னுணர்வு; துஷ்ப்ராப: – அடைவது கடினமாகிறது; இதி – இவ்வாறாக; மே – எனது; மதி: — அபிப்பிராயம்; வஷ்ய – கட்டுப்பட்ட; ஆத்மனா — மனதால்; து – ஆனால்; யததா – முயற்சி செய்கையில்; ஷக்ய: – நடைமுறையில்; அவாப்தும் — அடைவதற்கு; உபாயத: — சரியான வழி

கட்டுப்படாத மனதைக் கொண்டவனுக்கு தன்னை உணர்தல் கடினமானச் செயலாகும். ஆனால் மனதைக் கட்டுப்படுத்தி, சரியான வழியில் முயல்பவனுக்கு வெற்றி நிச்சயம். இதுவே என் அபிப்பிராயம்.

ப.கீ 6.37
அர்ஜுன உவாச
அயதி: ஷ்ரத்தயோபேதோ யோகாச் சலித-மானஸ:
அப்ராப்ய யோக-ஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி

அர்ஜுன: உவாச – அர்ஜுனன் கூறினான்; அயதி: – வெற்றியடையாத ஆன்மீகி; ஷ்ரத்தயா – நம்பிக்கையுடன்; உபேத: – ஈடுபட்ட; யோகாத் – யோகப் பாதையிலிருந்து; சலித – விலகிய; மானஸ: – அத்தகு மனம் உடையவன்; அப்ராப்ய — அடையத் தவறிய; யோக-ஸம்’ஸித்திம் — யோகத்தின் உயர் பக்குவநிலையை; காம் – எந்த; கதிம் — கதியை; க்ரு’ஷ்ண – கிருஷ்ணரே; கச்சதி – அடைகிறான்.

அர்ஜுனன் வினவினான்: கிருஷ்ணா, தன்னுணர்வுப் பாதையினை நம்பிக்கையுடன் ஆரம்பத்தில் மேற்கொண்டு, பிறகு உலக எண்ணங்களினால் அதனை நிறுத்திவிடுபவன், யோகத்தின் பக்குவ நிலையை அடைவதில்லை. அத்தகு வெற்றியடையாத ஆன்மீகியின் கதி என்ன?

ப.கீ 6.38
கச்சின் னோபய-விப்ரஷ்டஷ் சின்னாப்ரம் இவ நஷ்யதி
அப்ரதிஷ்டோ மஹா-பாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி

கச்சித் – எதிலும்; ந – இல்லாமல்; உபய – இரண்டில்; விப்ரஷ்ட: – விலகி; சின்ன – சிதறிய; அப்ரம் – மேகம்; இவ – போல; நஷ்யதி – அழிகிறான்; அப்ரதிஷ்ட – எந்த நிலையிலும் இன்றி; மஹா-பாஹோ – பலம் பொருந்திய புயங்களை உடைய கிருஷ்ணரே; விமூட: – மயங்கிய; ப்ரஹ்மண: – ஆன்மீக; பதி – பாதையில்.

பலம் பொருந்திய புயங்களை உடைய கிருஷ்ணரே, ஆன்மீகப் பாதையிலிருந்து மயங்கிய அத்தகு மனிதன், ஆன்மீகத்திலும் வெற்றியடையாமல் பௌதிகத்திலும் வெற்றியடையாமல், சிதறிய மேகம் போன்று எங்கும் இடமின்றி அழிந்து விடுவதில்லையா?

ப.கீ 6.39
ஏதன் மே ஸம்ஷயம் க்ருஷ்ண சேத்தும் அர்ஹஸ்-யஷேஷத:
த்வத்-அன்ய: ஸம்ஷயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே

ஏதத் – இதுவே; மே – எனது; ஸம்’ஷயம் – சந்தேகம்; க்ருஷ்ண – கிருஷ்ணரே; சேத்தும் — களைய; அர்ஹஸி – உம்மை வேண்டுகிறேன்; அஷேஷத: – முழுமையாக; த்வத் – உங்களைவிட; அன்ய – வேறு எவரும்; ஸம்’ஷயஸ்ய – சந்தேகத்தை; அஸ்ய – இந்த; சேத்தா – நீக்குபவர்; ந – ஒருபோதும் இல்லை; ஹி – நிச்சயமாக; உபபத்யதே – காண்பதற்கு.

கிருஷ்ணா, இதுவே என் சந்தேகம். இதை முழுமையாகத் தீர்க்குமாறு உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். உம்மையன்றி இந்த சந்தேகத்தை நீக்கக்கூடிய வேறு எவரையும் நான் காணவில்லை.

ப.கீ 6.40
ஸ்ரீ-பகவான் உவாச
பார்த நைவேஹ நாமுத்ர வினாஷஸ் தஸ்ய வித்யதே
ந ஹி கல்யாண-க்ருத் கஷ்சித் துர்கதிம் தாத கச்சதி

ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; பார்த — பிருதாவின் மகனே; ந ஏவ – என்றுமே அவ்வாறில்லை; இஹ – இப்பௌதிக உலகில்; ந – என்றுமில்லை; அமுத்ர – மறுவாழ்வில்; விநாஷ: – அழிவு; தஸ்ய – அவனது; வித்யதே – இருக்கிறது; ந – என்றுமில்லை; ஹி – நிச்சயமாக; கல்யாண்-க்ரு’த் – நற்செயல்களில் ஈடுபட்டவன்; கஷ்சித் – எவனும்; துர்கதிம் – இழிநிலையை; தாத – என் நண்பன்; கச்சதி – அடைவது.

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பிருதாவின் மகனே, நற்செயல்களில் ஈடுபட்ட ஆன்மீகி இவ்வுலகிலோ பரவுலகிலோ அழிவை அடைவதில்லை. என் நண்பனே, நன்மையைச் செய்பவன் தீமையை அடைவதேயில்லை.

ப.கீ 6.41
ப்ராப்ய புண்ய-க்ருதாம் லோகான் உஷித்வா ஷாஷ்வதீ: ஸமா:
ஷு சீனாம் ஸ்ரீமதாம் கேஹே யோக-ப்ரஷ்டோ (அ)பிஜாயதே
ப்ராப்ய — அடைந்த பிறகு; புண்ய-க்ரு’தாம் – புண்ணியங்களைச் செய்தவர்களின்; லோகான் — லோகங்களில்; உஷித்வா – வாழ்ந்த பிறகு; ஷாஷ்வதீ: – பற்பல; ஸமா – வருடங்கள்; ஷுசீனாம் – நல்லோரின்; ஸ்ரீ-மதாம் – செல்வந்தரின்; கேஹே – இல்லத்தில்; யோக-ப்ரஷ்ட: – தன்னுணர்வுப் பாதையிலிருந்து வீழ்ந்தவன்; அபிஜாயதே – பிறவி எடுக்கின்றான்.

வெற்றியடையாத யோகி, புண்ணிய ஆத்மாக்களின் லோகங்களில் பற்பல வருடங்கள் அனுபவித்தபின், நல்லோரின் குடும்பத்தில், அல்லது பெரும் செல்வந்தரின் குடும்பத்தில் பிறக்கின்றான்.

ப.கீ 6.42
வா யோகினாம் ஏஅத வ குலே பவதி தீமதாம்
ஏதத் தி துர்லபதரம் லோகே ஜன்ம யத் ஈத்ருஷம்

அத வா – அல்லது; யோகினாம் – கற்றறிந்த யோகிகளின்; ஏவ – நிச்சயமாக; குலே – குலத்தில்; பவதி – பிறக்கிறான்; தீ-மதாம் – பெரும் அறிவுடையோர்; ஏதத் – இந்த; ஹி – நிச்சயமாக; துர்லப-தரம் – மிகவும் அரிது: லோகே – இவ்வுலகில்; ஜன்ம – பிறவி; யத் – அந்த; ஈத்ரு’ஷம் – இதுபோன்ற.

அல்லது (நீண்ட கால யோகப் பயிற்சிக்குப் பின் வெற்றி அடையாதவர்) அறிவில் சிறந்து விளங்கும் ஆன்மீகிகளின் குலத்தில் பிறப்பது உறுதி. இத்தகு பிறவி நிச்சயமாக இவ்வுலகில் மிக அரிதானதாகும்.

ப.கீ 6.43
தத்ர தம் புத்தி-ஸம்யோகம் லபதே பௌர்வ-தேஹிகம்
யததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குரு-நந்தன

தத்ர — அதன்பின்; தம் – அந்த; புத்தி-ஸம்’யோகம் — அத்தகு புத்துணர்வு; லபதே – அடைகிறான்; பௌர்வ-தேஹிகம் — முந்தைய உடலிலிருந்து; யததே – முயல்கிறான்; ச – மேலும்; தத: – அதன்பின்; பூய: – மீண்டும்; ஸம்’ஸித்தௌ – பக்குவத்திற்காக; குரு-நந்தன – குரு மைந்தனே.

குரு மைந்தனே, அத்தகு பிறவியை அடைபவன், தனது முந்தைய பிறவியின் திவ்ய உணர்வினை மீண்டும் பெற்று, பூரண வெற்றியை அடைவதற்காக, அந்நிலையிலிருந்து மேலும் முன்னேற்றமடைய முயல்கிறான்.

ப.கீ 6.44
பூர்வாப்யாஸேன தேனைவ ஹ்ரியதே ஹ்யவஷோ (அ)பி ஸ:
ஜிக்ஞாஸுர் அபி யோகஸ்ய ஷப்த-ப்ரஹ்மாதிவர்ததே

பூர்வ – பூர்வ; அப்யாஸேன — பயிற்சியால்; தேன — அதனால்; ஏவ – நிச்சயமாக; ஹ்ரியதே – கவரப்படுகிறான்; ஹி — உறுதியாக; அவஷ: – இயற்கையாக; அபி — மேலும்; ஸ: – அவன்; ஜிஜ்ஞாஸு: – அறிய விரும்பி; அபி – கூட; யோகஸ்ய — யோகத்தின்; ஷப்த-ப்ரஹ்ம — சாஸ்திரங்களின் சடங்குக் கொள்கைகள்; அதிவர்ததே – உயர்கிறான்.
தனது பூர்வ ஜன்ம திவ்ய உணர்வின் காரணத்தால், யோகத்தின் கொள்கைகளை நாடாமலேயே, அவன் அவற்றால் இயற்கையாகக் கவரப்படுகிறான். அத்தகைய ஆர்வமுடைய ஆன்மீகி, எப்பொழுதும் சாஸ்திரங்களின் சடங்குகளிலிருந்து உயர்ந்து நிற்கிறான்.

ப.கீ 6.45
பரயத்நாத் யதமானஸ் து யோகீ ஸம்ஷுத்த -கில்பிஷ:
அனேக-ஜன்ம-ஸம்ஸித்தஸ் ததோ யாதி ப்ராம் கதிம்

ப்ரயத்நாத் – கடுமையான பயிற்சியால்; யதமான – முயற்சி செய்பவன்; து — மேலும்; யோகீ – அத்தகு ஆன்மீகி; ஸம்’ஷுத்த — கழுவப்பட்டு; கில்பிஷ: – எல்லாவித பாவங்களும்; அநேக – அநேக; ஜன்ம – ஜன்மங்கள்; ஸம்ஸித்த: – இவ்வாறு பக்குவத்தையடைந்த; தத: – பின்; யாதி – அடைகிறான்; பராம் – பரம்; கதிம் – கதியை.

மேலும், முன்னேற்றம் பெறுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடும் யோகி, எல்லா களங்கங்களிலிருந்தும் தூய்மை பெற்று, இறுதியில் அனேக ஜன்மங்கள் பயின்ற பிறகு, பரம கதியை அடைகிறான்.

ப.கீ 6.46
தபஸ்விப்யோ (அ)திகோ யோகீ க்ஞானிப்யோ (அ)பி மதோ (அ)திக:
கர்மிப்யஷ் சாதிகோ யோகீ தஸ்மாத் யோகீ பவார்ஜுன

தபஸ்விப்ய: – தவம் புரிபவனைவிட; அதிக – சிறந்தவன்; யோகீ – யோகி; ஜ்ஞானிப்ய: – ஞானியைவிட; அபி – மேலும்; மத: – கருதப்படுகிறான்; அதிக: – சிறந்தவனாக; கர்மிப்ய: – பலன்நோக்கிச் செயல்படுபவனைவிட; ச – மேலும்; அதிக: – சிறந்தவனாக; யோகீ – யோகி; தஸ்மாத் – எனவே; யோகீ – யோகி; பவ – ஆவாயாக; அர்ஜுன – ஓ அர்ஜுனா.

தவம்புரிபவன், ஞானி, மற்றும் பலனை எதிர்பார்த்து செயல்படுபவனைக் காட்டிலும், யோகி சிறந்தவனாவான். எனவே, அர்ஜுனா, எல்லாச் சூழ்நிலைகளிலும் யோகியாக இருப்பாயாக.

ப.கீ 6.47
யோகினாம் அபி ஸர்வேஷாம் மத்-கதேனாந்தர்-ஆத்மனா
ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத:

யோகினாம் – யோகிகளில்; அபி – மேலும்; ஸர்வேஷாம் – எல்லாவித; மத்-கதேன – என்னில் நிலைத்த, எப்போதும் என்னையே எண்ணிக் கொண்டுள்ள; அந்த:-ஆத்மனா – தனக்குள்; ஷ்ரத்தா-வான் – முழு நம்பிக்கையுடன்; பஜதே – திவ்யமான அன்புத் தொண்டு புரிகிறான்; ய: – எவனொருவன்; மாம் — எனக்கு (முழுமுதற் கடவுளுக்கு); ஸ: – அவன்; மே – என்னால்; யுக்த-தம: – மிகச்சிறந்த யோகியாக; மத: – கருதப்படுகிறான்.

மேலும், எல்லா யோகிகளுக்கு மத்தியில், எவனொருவன் பெரும் நம்பிக்கையுடன் எப்போதும் என்னில் நிலைத்து, தன்னுள் என்னை எண்ணி, எனக்கு திவ்யமான அன்புத் தொண்டு புரிகின்றானோ, அவனே யோகத்தில் என்னுடன் மிகவும் நெருங்கியவனும் எல்லாரையும் விட உயர்ந்தவனும் ஆவான். இதுவே எனது அபிப்பிராயம்.


Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare