அத்தியாயம் -4

உன்னத அறிவு
ப.கீ 4.1
ஸ்ரீ-பகவான் உவாச
இமம் விவஸ்வதே யோகம் பரோக்தவான் அஹம் அவ்யயம்
விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இக்ஷ்வாகவே (அ)ப்ரவீத்

ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; இமம் – இதை; விவஸ்வதே – சூரியதேவனுக்கு; யோகம் — பரமனுடன் ஒருவனது உறவு பற்றிய விஞ்ஞானம்; ப்ரோக்தவான் – உபதேசித்தேன்; அஹம் – நான்; அவ்யயம் – அழிவற்ற; விவஸ்வான் – விவஸ்வான் (சூரிய தேவனின் பெயர்); மனவே – மனித குலத்தின் தந்தைக்கு (வைவஸ்வத என்னும் பெயர் கொண்டவர்); ப்ராஹ – கூறினார்; மனு: – மனித குலத்தின் தந்தை; இக்ஷ்வாகவே – இக்ஷவாகு மன்னனுக்கு; அப்ரவீத் – கூறினார்.

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: அழிவற்ற இந்த யோக விஞ்ஞானத்தை நான் சூரியதேவனான விவஸ்வானுக்கு உபதேசித்தேன். விவஸ்வான் மனித குலத் தந்தையான மனுவுக்கும், மனு, இக்ஷ்வாகு மன்னனுக்கும் இதனை முறையே உபதேசித்தனர்.

ப.கீ 4.2
ஏவம் பரம்பரா-ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது:
ஸ காலேனேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப

ஏவம் – இவ்வாறாக; பரம்பரா — சீடத்தொடரில்; ப்ராப்தம் – பெறப்பட்டு வந்த; இமம் – இவ்விஞ்ஞானம்; ராஜ-ருஷய: – புனித மன்னர்கள்; விது: — அறியப்பட்டது; ஸ: – அவ்வறிவு; காலேன – காலப்போக்கில்; இஹ – இவ்வுலகில்; மஹதா – மிகச்சிறந்த; யோக: — பரத்துடனான ஒருவனது உறவு பற்றிய விஞ்ஞானம்; நஷ்ட: – சிதைந்துவிட்டது; பரந்தப – எதிரிகளை ஒடுக்கும் அர்ஜுனா.

உன்னதமான இவ்விஞ்ஞானம் சீடர்களின் சங்கிலித் தொடர் மூலமாகப் பெறப்பட்டு, அவ்வாறே புனிதமான மன்னர்களால் உணரப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அத்தொடர் விட்டுப்போகவே, இவ்விஞ்ஞானம் மறைந்துவிட்டதை போலத் தோன்றுகின்றது.

ப.கீ 4.3
ஸ ஏவாயம் மயா தே (அ)த்ய யோக: ப்ரோக்த: புராதன:
பக்தோ (அ)ஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேதத் உத்தமம்

ஸ: – அதே; ஏவ – நிச்சயமாக; அயம் — இது; மயா — என்னால்; தே — உனக்கு; அத்ய – இன்று; யோக: – யோக விஞ்ஞானம்; ப்ரோக்த: – சொல்லப்படுகிறது; புராதன: – மிகவும் பழைய; பக்த: – பக்தர்; அஸி – நீ இருக்கிறாய்; மே – எனது; ஸகா – நண்பன்; ச – மேலும்; இதி – எனவே; ரஹஸ்யம் – இரகசியம்; ஹி – நிச்சயமாக; ஏதத் – இந்த; உத்தமம் – உத்தமம்.

பரமனுடன் உறவு கொள்வதைப் பற்றிய அதே பழம்பெரும் விஞ்ஞானத்தை நான் இன்று உனக்கு எடுத்துரைத்துள்ளேன்; ஏனெனில், நீ எனது பக்தனும் நண்பனுமாதலால் இந்த விஞ்ஞானத்தின் உத்தம இரகசியத்தை உன்னால் புரிந்துகொள்ள முடியும்.

ப.கீ 4.4
அர்ஜுன உவாச
அபரம் பவதோ ஜன்ம பரம் ஜன்ம விவஸ்வத:
கதம் ஏதத் விஜானீயாம் த்வம் ஆதௌ ப்ரோக்தவான் இதி

அர்ஜுன உவாச — அர்ஜுனன் கூறினான்; அபரம் – பிற்காலத்தைச் சேர்ந்தது; பவத: – தங்களது; ஜன்ம – பிறப்பு; பரம் – உயர்ந்தது; ஜன்ம – பிறப்பு; விவஸ்வத: – சூரியதேவனுடைய; கதம் – எவ்வாறு; ஏதத் — இதை; விஜானீயாம் — நான் புரிந்துகொள்வது; த்வம் – தாங்கள்; ஆதௌ — ஆரம்பத்தில்; ப்ரோக்தவான் — உபதேசித்ததை; இதி – இவ்வாறாக.

அர்ஜுனன் வினவினான்: சூரியதேவனான விவஸ்வான் பிறப்பால் தங்களைவிடப் பெரியவர். தாங்கள் அவருக்கு இவ்விஞ்ஞானத்தை ஆரம்பத்திலேயே உபதேசித்தீர்கள் என்பதை எவ்வாறு நான் புரிந்துகொள்வது?

ப.கீ 4.5
ஸ்ரீ பகவான் உவாச பஹூனி மே வ்யதீதானி ஜன்மானி தவ சார்ஜுன
தான்-யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப

ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; பஹூனி – பற்பல; மே – என்னுடைய; வ்யதீதானி — கடந்துச் சென்றுவிட்டன; ஜன்மானி – பிறவிகள்; தவ – உன்னுடையவையும்; ச – மேலும்; அர்ஜுன — அர்ஜுனனே; தானி — அவற்றை; அஹம் – நான்; வேத: – அறிவேன்; ஸர்வாணி – முழுமையாக; ந – இல்லை; த்வம் – நீ; வேத்த – அறிய; பரந்தப – எதிரிகளை தவிக்கச் செய்பவனே.

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: நானும் நீயும் பற்பல பிறவிகளைக் கடந்துள்ளோம். என்னால் அவை எல்லாவற்றையும் நினைவுகொள்ள முடியும்; ஆனால், எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே! அஃ;து உன்னால் முடியாது.

ப.கீ 4.6
அஜோ (அ)பி ஸன்ன் அவ்யயாத்மா பூதானாம் ஈஷ்வரோ (அ)பி ஸன்
பரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாம்-யாத்ம- மாயயா

அஜ: – பிறப்பற்றவன்; அபி – இருப்பினும்; ஸன் – அவ்வாறு; அவ்யய – அழிவற்ற; ஆத்மா – உடல்; பூதானாம் – பிறப்பவரெல்லாம்; ஈஷ்வர: – முழுமுதற் கடவுள்; அபி – இருந்தும்; ஸன் – அவ்வாறிருந்தும்; ப்ரக்ரு’திம் — உன்னத உருவில்; ஸ்வாம் – என்னுடைய; அதிஷ்டாய – அவ்வாறு நிலைபெற்று; ஸம்பவாமி – நான் தோன்றுகிறேன்; ஆத்ம-மாயயா — எனது அந்தரங்க சக்தியால்.

நான் பிறப்பற்றவனாக இருந்தாலும், எனது திவ்யமான உடல் அழிவற்றதாக இருந்தாலும், உயிர்வாழிகள் அனைவருக்கும் நானே இறைவனாக இருந்தாலும், நான் எனது சுயமான திவ்ய உருவில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகின்றேன்.

ப.கீ 4.7
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்-யஹம்
யதா: யதா — எப்பொதெல்லாம் எங்கெல்லாம்; ஹி – நிச்சியமாக; தர்மஸ்ய – தர்மத்தின்; க்லோனி: – சீர்குலைவு; பவதி – ஏற்படுகின்றதோ; பாரத – பரத குலத் தோன்றலே; அப்யுத்தானம் — ஆதிக்கம்; அதர்மஸ்ய — அதர்மத்தின்; ததா: – அச்சமயத்தில்; ஆத்மானம் – சுயமாக; ஸ்ருஜாமி – தோன்றுகின்றேன்; அஹம் – நான்.

எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன்.

ப.கீ 4.8
பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே

பரித்ராணாய — காப்பதற்காக; ஸாதூனாம் — பக்தர்களை; விநாஷாய – அழிப்பதற்காக; ச – மற்றும்; துஷ்க்ருதாம் – துஷ்டர்களை; தர்ம – தர்மத்தின் கொள்கைகளை; ஸம்ஸ்தாபன-அர்தாய – மீண்டும் நிலை நிறுத்த; ஸம்பவாமி – நான் தோன்றுகிறேன்; யுகே யுகே — யுகந்தோறும்.

பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்.

ப.கீ 4.9
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத: த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி ஸோ (அ)ர்ஜுன
ஜன்ம – பிறப்பு; கர்ம – செயல்; ச – மேலும்; மே – எனது; திவ்யம் — திவயமானது; ஏவம் – இவ்வாறாக; ய: – எவனொருவன்; வேத்தி – அறிகிறானோ; தத்த்வத: – உண்மையில்; தீயக்த்வா — நீத்தபின்; தேஹம் – இந்த உடலை; புன: – மீண்டும்; ஜன்ம – பிறப்பு; ந – இல்லை; ஏதி – அடைவது; மாம் – என்னிடம்; ஏதி – வந்தடைகிறான்; ஸ: — அவன்; அர்ஜுன — அர்ஜுனனே.

எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட பின், மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகின்றான்.

ப.கீ 4.10
வீத-ராக-பய-க்ரோதா மன் மயா மாம் உபாஷ்ரிதா:
பஹவோ க்ஞான-தபஸா பூதா மத்-பாவம் ஆகதா:

வீத – விடுபட்டு; ராக – பற்றுதல்; பய – பயம்; க்ரோதா: – கோபம்; மத்-மயா – முழுதும் என்னில்; மாம் – என்னில்; உபாஷ்ரிதா: – முழுக்க நிலைபெற்று; பஹவ: -பலர்; ஜ்ஞான – ஞானம்; தபஸா — தவத்தால்; பூதா: – தூய்மைபெற்று; மத்-பாவம் – என் மீதான திவ்யமான அன்பினை; ஆகதா: – அடைந்துள்ளனர்.

பற்றுதல், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டு, முழுதும் என்னில் லயித்து, என்னை சரணடைந்த பற்பல நபர்கள் என்னைப் பற்றிய அறிவால் இதற்கு முன் தூய்மையடைந்துள்ளனர். இவ்வாறாக, அவர்கள் எல்லாரும் என் மீது திவ்யமான அன்புடையவர்களாயினர்.

ப.கீ 4.11
யே யதா மாம் ப்ரபதயந்தே தாம்ஸ் ததைவ பஜாம்-யஹம்
மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யா: பார்த ஸர்வஷ:

யே – எல்லாரும்; யதா – எவ்வாறு; மாம் – என்னிடம்; ப்ரபத்யந்தே — சரணடைகின்றனரோ; தான் – அவர்களிடம்; ததா – அவ்வாறே; ஏவ – நிச்சியமாக; பஜாமி — பலனளிக்கின்றேன்; அஹம் – நான்; மம – எனது; வர்த்ம – பாதை; அனுவர்தந்தே — பின்பற்றுகின்றனர்; மனுஷ்யா: – எல்லா மனிதர்களும்; பார்த – பிருதாவின் மகனே; ஸர்வஷ: – எல்லாவிதத்திலும்.

என்னிடம் சரணடைவதற்கு ஏற்றாற் போல, நான் அனைவருக்கும் பலனளிக்கின்றேன். பிருதாவின் மகனே, எல்லா விதத்திலும் அனைவரும் என் வழியையே பின்பற்றுகின்றனர்.

ப.கீ 4.12
காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:
க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர் பவதி கர்ம-ஜா

காங்க்ஷந்த: — விரும்பும்; கர்மணாம் — பலன்நோக்குச் செயல்களில்; ஸித்திம் —பக்குவம்; யஜந்தே – அவர்கள் யாகங்களால் வழிபடுகின்றனர்; இஹ – இந்த ஜட உலகில்; தேவதா: – தேவர்கள்; க்ஷிப்ரம் – வெகு விரைவில்; ஹி – நிச்சயமாக; மானுஷே – மனித சமுதாயத்தில்; லோகே – இவ்வுலகினுள்; ஸித்தி: – வெற்றி; பவதி — அடைக்கின்றனர்: கர்ம-ஜா – பலன்நோக்குச் செயல்களால்.

பலன் தரும் செயல்களில் வெற்றியை விரும்பும் இவ்வுலக மனிதர்கள் தேவர்களை வழிபடுகின்றனர். இவ்வுலகில் இத்தகு செயல்களுக்கு விரைவில் பலன்கள் கிடைப்பது உண்மையே.

ப.கீ 4.13
சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம-விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்த்-யகர்த்தாரம் அவ்யயம்

சாது:-வர்ண்யம் — மனித சமுகத்தின் நான்கு பிரிவுகள்; மயா – என்னால்; ஸ்ருஷ்டம் – படைக்கப்பட்டன; குண — குணம்; கர்ம – செயல்; விபாகஷ: – பிரிவுகளாய்; தஸ்ய – அதன்; கர்தாரம் — தந்தையாக; அபி – இருந்தும்; மாம் – நான்; வித்தி – நீ அறிவாயாக; அகர்தாரம் – செய்யாதவனாக; அவ்யயம் – மாறுதலற்ற.

மூன்றுவித இயற்கை குணங்களுக்கும் அவற்றின் செயல்களுக்கும் ஏற்ப, மனித சமூகத்தின் நால்வகைப் பிரிவுகள் என்னால் ஏற்படுத்தப்பட்டன. இம்முறையைப் படைத்தவன் நானேயாயினும் மாற்றமற்ற என்னைச் செயல்களுக்கு அப்பாற்பட்டவனாக அறிந்துகொள்.

ப.கீ 4.14
ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்ம-பலே ஸ்ப்ருஹா
இதி மாம் யோ (அ)பிஜானாதி கர்மபிர் ந ஸ பத்யதே

ந – இல்லை; மாம் – என்னை; கர்மாணி – எல்லாவிதமான செயல்கள்; லிம்பந்தி – பாதிப்பது; ந – இல்லை; மே – எனது; கர்ம-பலே — பலன்நோக்குச் செயல்களில்; ஸ்ப்ருஹா – ஆவல்; இதி – இவ்வாறாக; மாம் – என்னை; ய: – எவனொருவன்; அபிஜானாதி — அறிகின்றானோ; கர்மபி: – அத்தகைய செயலின் விளைவுகளால்; ந – இல்லை; ஸ: – அவன்; பத்யதே – பந்தப்படுவது.

என்னைப் பாதிக்கும் செயல் எதுவும் இல்லை; செயல்களின் பலன்களை நான் விரும்புவதும் இல்லை. என்னைப் பற்றிய இவ்வுண்மையை அறிபவனும் செயல்களின் விளைவுகளால் பந்தப்படுவதில்லை.

ப.கீ 4.15
ஏவம் க்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைர் அபி முமுக்ஷுபி:
குரு கர்மைவ தஸ்மாத் த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம்

ஏவம் – இவ்விதமாக; ஜ்ஞாத்வா – நன்கறிந்து; க்ரு’தம் – செய்தனர்: கர்ம – செயல்; பூர்வை: – முந்தைய அதிகாரிகளால்; அபி – உண்மையில்: முமுக்ஷுபி: – முக்தி பெற்றவர்; குரு – செய்வாயாக: கர்ம – நியமிக்கப்பட்ட கடமைகள்; ஏவ — நிச்சயமாக; தஸ்மாத் – எனவே; த்வம் – நீ; பூர்வை: – முன்னோரால்; பூர்வ-தரம் – முற்காலத்தில்; க்ரு’தம் — செய்யப்பட்டதுபோல்.

முற்காலத்தில் விடுதலை பெற்ற ஆத்மாக்கள் எல்லாரும், என்னுடைய உன்னத இயற்கையை உணர்ந்தவண்ணம் செயல்பட்டனர். எனவே, அவர்களது அடிச்சுவட்டைப் பின்பற்றி நீயும் உனது கடமைகளைச் செய்ய வேண்டும்.

ப.கீ 4.16
கிம் கர்ம கிம் அகர்மேதி கவயோ (அ)ப்யத்ர மோஹிதா:
தத் தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ் க்ஞாத்வா மோக்ஷ்யஸே (அ)ஷுபாத்

கிம் – எது; கர்ம – செயல்; கிம் – எது; அகர்ம – செயலற்றது; இதி – என்று; கவய: – அறிவுடையோர்; அபி – கூட; அத்ர — இவ்விஷயத்தில்; மோஹிதா: – குழம்பியுள்ளனர்; தத் – அதை; தே – உனக்கு; கர்ம – செயல்; ப்ரவக்ஷ்யாமி – நான் விளக்குகிறேன்: யத் – எதை; ஜ்ஞாத்வா – அறிவதால்; மோக்ஷ்யஸே – நீ முக்தியடைவாய்; அஷுபாத் — துரதிர்ஷ்டத்திலிருந்து.

அறிவுடையோரும் எது கர்மா (செயல்), எது அகர்மா (செயலின்மை) என்பதில் குழம்புகின்றனர். கர்மா என்பது என்ன என்பதை நான் இப்போது உனக்கு விளக்குகிறேன். இதை அறிவதால் எல்லா துரதிர்ஷ்டத்திலிருந்தும் நீ விடுதலை பெறுவாய்.

ப.கீ 4.17
கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:
அகர்மணஷ் ச போத்தவ்யம் கஹனா கர்மணோ கதி:

கர்மண – செயலின்; ஹி – நிச்சயமாக; அபி – கூட; போத்தவ்யம் – அறியப்படவேண்டும்; போத்தவ்யம் – அறியப்படவேண்டும்; ச – மேலும்; விகர்மண: – தடை செய்யப்பட்ட செயல்கள்; அகர்மண: – செயலின்மை; ச -மேலும்; போத்தவ்யம் – அறியப்படவேண்டும்; கஹனா – மிகக் கடினம்; கர்மண: – செயலின்; கதி: — நுழைதல்.

செயல்களின் நுணுக்கங்களை உணர்வது மிகக் கடினம். எனவே, கர்மா (செயல்) என்பது என்ன, விகர்மா (தடை செய்யப்பட்ட செயல்) என்பது என்ன, அகர்மா (செயலின்மை) என்பது என்ன என்பதை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

ப.கீ 4.18
கர்மண்-யகர்ம ய: பஷ்யேத், அகர்மணி ச கர்ம ய: ஸ புத்திமான் மனுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்ன-கர்ம-க்ருத் பொருள் கர்மணி – செயலில்; அகர்ம – செயலின்மை: ய: – யாரொருவன்; பஷ்யேத் – காண்கிறானோ; அகர்மணி – செயலின்மையில்: ச – மேலும்; கர்ம – பலன் நோக்குச் செயல்களை; ய: – யாரொருவன்; ஸ: – அவன்; புத்தி-மான் – அறிவாளி; மனுஷ்யேஷு – மனித சமுதாயத்தில்; ஸ: – அவன்; யுக்த: – உன்னத நிலையில் உள்ளான்; க்ருத்ஸ்ன-கர்ம-க்ரு’த் – எல்லாச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும்,

கர்மாவில் அகர்மாவையும், அகர்மாவில் கர்மாவையும் காண்பவனே மனிதரில் அறிவுடையவனாகிறான். எல்லாவிதச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவன் உன்னத நிலையில் நிலைபெற்றுள்ளான்.

ப.கீ 4.19
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காம-ஸங்கல்ப-வர்ஜிதா:
க்ஞானாக்னி-தக்த-கர்மாணம் தம் ஆஹு: பண்டிதம் புதா:

யஸ்ய — எவனது; ஸர்வே – எல்லாவிதமான; ஸமாரம்பா: – முயற்சிகள்; காம – புலனுகர்ச்சிக்கான ஆசையின் அடிப்படையில்; ஸங்கல்ப – மனஉறுதி; வர்ஜிதா: – இல்லாமலிருக்கிறதோ; ஜ்ஞான — பக்குவமான அறிவு எனும்; அக்னி – நெருப்பால்; தக்த – எரிக்கப்பட்டு; கர்மாணம் — எவனது செயல்; தம் — அவனை: ஆஹு: – கூறுகின்றனர்; பண்டிதம் – பண்டிதன்; புதா: – அறிந்தவர்கள்.

யாருடைய முயற்சிகள் அனைத்தும் புலனுகர்ச்சியிலிருந்து விடுபட்டுள்ளதோ, அவன் பண்டிதனாக அறியப்படுகிறான். அத்தகையவன், பக்குவமான அறிவு என்னும் நெருப்பால் செயல்களின் விளைவுகளைச் சுட்டெரித்தவன் என்று சாதுக்களால் கருதப்படுகிறான்.

ப.கீ 4.20
த்யக்த்வா கர்ம-பலாஸங்கம் நித்ய-த்ருப்தோ நிராஷ்ரய:
கர்மண்-யபிப்ரவ்ருத்தோ (அ)பி நைவ கிஞ்சித் கரோதி ஸ:

த்யக்த்வா – துறந்து; கர்ம-பல-ஆஸங்கம் – பலன்களின் மீதான பற்றை: நித்ய — எப்போதும்; த்ரு’ப்த: – திருப்தியுற்று; நிராஷ்ரய: – எதையும் சாராமல்; கர்மணி – செயலில்; அபிப்ரவ்ரு’த்த: – முழுமையாக ஈடுபட்டு; அபி — இருந்தும்; ந – இல்லை; ஏவ – நிச்சயமாக; கிஞ்சித் – ஏதும்; கரோதி – செய்வது; ஸ: – அவன்.

தனது செயல்களின் பலன்களின் மீதான எல்லாப் பற்றுதலையும் துறந்து, எப்போதும் திருப்தியுற்று சுதந்திரமாக விளங்கும் அவன், எல்லாவிதச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் எந்தச் (பலன் நோக்குச்) செயலையும் செய்வதில்லை.

ப.கீ 4.21
நிராஷீர் யத-சித்தாத்மா த்யக்த-ஸர்வ-பரிக்ரஹ:
ஷாரீரம் கேவலம் கர்ம குர்வன் நாப்னோதி கில்பிஷம்

நிராஷீ: – பலனுக்கான விருப்பமின்றி; யத – கட்டப்படுத்தப்பட்ட; சித்த-ஆத்மா – மனமும் அறிவும்; த்யக்த — துறந்து; ஸர்வ — எல்லா; பரிக்ரஹ: – சொத்துரிமை எண்ணம்; ஷாரீரம் – உடலை ஆத்மாவுடன் தக்கவைத்துக் கொள்ள; கேவலம் – மட்டுமே; கர்ம – செயல்; குர்வன் — செய்வதால்; ந – என்றுமில்லை; ஆப்னோதி – ஏற்பது: கில்பிஷம் – பாவ விளைவுகளை.

இத்தகு உணர்வுடையோன் மனமும் அறிவும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தனது சொத்துக்களின் மீதான உரிமையுணர்வுகளையெல்லாம் துறந்து, வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே செயலாற்றுகின்றான். இவ்வாறு செயல்படுவதால், அவன் பாவ விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லை.

ப.கீ 4.22
யத்ருச்சா-லாப-ஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:
ஸம: ஸித்தாவ் அஸித்தெள ச க்ருத்வாபி ந நிபத்யதே

யத்ருச்சா – தானாக; லாப – லாபத்தில்; ஸந்துஷ்ட: – திருபதியுற்று; த்வந்த்வ – இருமை; அதீத: — கடந்து; விமத்ஸர: – பொறாமையிலிருந்து விடுபட்டு; ஸம: – நிலையாக; ஸித்தௌ – வெற்றில்; அஸித்தௌ – தோல்வியில்; ச – கூட; க்ருத்வா — செயலாற்றி; அபி – இருப்பினும்; ந – இல்லை; நிபத்யதே -பாதிக்கப்படுவது.

எவனொருவன் தானாக வரும் இலாபத்தில் திருப்தியடைந்து, இருமையிலிருந்து விடுபட்டு, பொறாமையற்று, வெற்றி தோல்விகளில் நிலைத்துச் செயலாற்றுகின்றானோ, அவன் செயல்களைச் செய்யும்போதிலும் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.

ப.கீ 4.23
கத-ஸங்கஸ்ய முக்தஸ்ய க்ஞானாவஸ்தி-த-சேதஸ:
யக்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே

கத-ஸங்கஸ்ய – ஜட இயற்கை குணங்களில் பற்றுதல் கொள்ளாமல்; முக்தஸ்ய – முக்தி பெற்ற; ஜ்ஞான-அவஸ்தித – ஞானத்தில் நிலைபெற்று; சேதஸ: – எவனது அறிவு; யஜ்ஞாய – யாகத்தின் (கிருஷ்னரின்) திருப்திக்காக; ஆசரத: – செயலாற்றி; கர்ம – செயல்; ஸமக்ரம் – பூரணத்தில்; ப்ரவிலீயதே – முழுமையாக கலந்துவிடுகிறான்.

ஜட இயற்கை குணங்களில் பற்றற்று, திவ்ய ஞானத்தில் நிலைபெற்றவனின் செயல், முழுமையாக உன்னதத்தில் கலந்து விடுகின்றது.

ப.கீ 4.24
ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர் ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணா ஹுதம்
ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம் பரஹ்ம-கர்ம-ஸமாதினா
ப்ரஹ்ம – இயற்கையில் ஆன்மீகமான; அர்பணம் – அர்ப்பணம்; ப்ரஹ்ம – பரமன்; ஹவி: – நெய்; ப்ரஹ்ம – ஆன்மீக; அக்னௌ – நெருப்பு என்னும் முடிவில்; ப்ரஹ்மணா – ஆன்மீக ஆத்மாவால்; ஹுதம் – கொடுக்கப்படுவது; ப்ரஹ்ம – ஆன்மீக உலகம்; ஏவ — நிச்சியமாக; தேன – அவனால்; கந்தவ்யம் – அடையப்படுவது; ப்ரஹ்ம – ஆன்மீக; கர்ம – செயல்களில்; ஸமாதினா —ஸமாதியில்.

கிருஷ்ண உணர்வில் முழுமையாக ஆழ்ந்திருப்பவன், நிச்சியமாக ஆன்மீக உலகை அடைவான்; ஏனெனில், அவன் ஆன்மீக செயல்களுக்காகத் தன்னை முழுமையாக சமர்ப்பித்துள்ளான். பிரம்மனை இலக்காகக் கொண்ட இச்செயல்கள் அதே ஆன்மீக இயற்கையின் மூலம் அர்ப்பணிக்கப்படுவதாகும்.

ப.கீ 4.25
தைவம் ஏவாபரே யக்ஞம் யோகின: பர்யுபாஸதே
ப்ரஹ்மாக்னாவ் அபரே யக்ஞம் யக்ஞேனைவோபஜுஹ்வதி

தைவம் – தேவர்களை வழிபடுவதில்; ஏவ – இதுபோன்று; அபரே – மற்ற சிலர்; யஜ்ஞம் – யாகங்கள்; யோகின – யோகிகள்; பர்யுபாஸதே – சீராக வணங்குகின்றனர்; ப்ரஹ்ம – பூரண உண்மை; அக்னௌ – நெருப்பில்; அபரே – வேறு சிலர்; யஜ்ஞம் – யாகம்; யஜ்ஞேன – யாகத்தால்; ஏவ – இவ்வாறு; உபஜுஹ்வதி — அளிக்கின்றனர்.

சில யோகிகள் பல்வேறு யாகங்களை அர்ப்பணிப்பதன் மூலம் தேவர்களை பக்குவமாக வழிபடுகின்றனர். சிலர் பரபிரம்மன் எனும் நெருப்பில் யாகங்களை அர்ப்பணிக்கின்றனர்.

ப.கீ 4.26
ஷ்ரோத்ராதீனீந்த்ரியாண்-யன்யே ஸம்யமாக்னிஷு ஜுஹ்வதி
ஷப்தாதீன் விஷயான் அன்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி

ஷ்ரோத்ர-ஆதீனி — கேட்கும் முறையைப் போன்ற; இந்த்ரியாணி — புலன்கள்; அன்யே – பிறர்; ஸம்யம – அடக்கத்தால்; அக்னிஷு – நெருப்பில்; ஜுஹ்வதி – அர்ப்பணிக்கின்றனர்; ஷப்த-ஆதீன் — சப்தம் முதலான; விஷயான் – புலனுகர்ச்சிப் பொருள்கள்; அன்யே – பிறர்; இந்த்ரிய — புலன்களின்; அக்னிஷு- நெருப்பில்; ஜுஹ்வதி – அர்ப்பணிக்கின்றனர்.

மனக் கட்டுப்பாடு என்னும் நெருப்பில் சிலர் (களங்கமற்ற பிரம்மசாரிகள்) புலன்களையும் கேட்கும் முறையையும் அர்ப்பணிக்கின்றனர். மற்றும் சிலர் (ஒழுக்கமான குடும்பஸ்தர்கள்) புலன்கள் என்னும் நெருப்பில் புலனுகர்ச்சிப் பொருள்களை அர்ப்பணிக்கின்றனர்.

ப.கீ 4.27
ஸர்வாணீந்த்ரிய-கர்மாணி ப்ராண-கர்மாணி சாபரே
ஆத்ம-ஸம்யம-யோகாக்னௌ ஜுஹ்வதி க்ஞான-தீபிதே

ஸர்வாணி – எல்லா; இந்த்ரிய — புலன்கள்; கர்மாணி — செயல்கள்; ப்ராண-கர்மாணி – உயிர் மூச்சின் செயல்கள்; ச – மேலும்; அபரே – சிலர்; ஆத்ம-ஸம்’யம — மனதை அடக்கி; யோக – இணைப்பு முறை; அக்னௌ – நெருப்பில்; ஜுஹ்வதி – அர்ப்பணிக்கின்றனர்; ஜ்ஞான-தீபிதே – தன்னுணர்விற்கான உந்துதலால்.

மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் தன்னுணர்வை அடைய விரும்புவோர், புலன்களின் இயக்கங்களையும் பிராணனின் இயக்கங்களையும், அடக்கப்பட்ட மனமெனும் நெருப்பில் அர்ப்பணிக்கின்றனர்.

ப.கீ 4.28
த்ரவ்ய-யக்ஞாஸ் தபோ-யக்ஞா யோக-யக்ஞாஸ் ததாபரே
ஸ்வாத்யாய-க்ஞான-யக்ஞாஷ் ச யதய: ஸம்ஷித-வ்ரதா:

த்ரவ்ய-யஜ்ஞா: – உடைமைகளைத் துறக்கும் யாகம்; தப:-யஜ்ஞா: – தவங்களின் யாகம்; யோக-யஜ்ஞா: – அஷ்டாங்க யோக யாகம்; ததா: – இவ்வாறாக; அபரே – பிறர்: ஸ்வாத்யாய – வேதங்களைப் பயிலும் யாகம்; ஜ்ஞான-யஜ்ஞா: – உன்னத அறிவில் முன்னேறும் யாகம்; ச – மற்றும்; யதய: – அறிவொளி பெற்றோர்; ஸம்’ஷித-வ்ரதா: – கடும் விரதங்களை மேற் கொண்டவர்.

கடும் விரதங்களை ஏற்றுக் கொண்டு, சிலர் தங்களது உடமைகளை தியாகம் செய்வதால் ஞான ஒளிபெறுகின்றனர், மற்றவர்களோ, கடுமையான தவங்கள், அஷ்டாங்க யோகப் பயிற்சி, அல்லது உன்னத ஞானத்தில் முன்னேற்றம் பெறுவதற்காக வேதங்களைக் கற்றல் ஆகிய முறைகளால் ஞான ஒளி பெறுகின்றனர்.

ப.கீ 4.29
அபானே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணே (அ)பானம் ததாபரே
ப்ராணாபான-கதீ ருத்த்வா ப்ராணாயாம-பராயணா:
அபரே நியதாஹாரா: ப்ராணான் ப்ராணேஷு ஜுஹ்வதி

அபானே – கீழ்நோக்கி இயங்கும் வாயுவில்; ஜுஹ்வதி — அர்ப்பணிக்கின்றனர்; ப்ராணம் – வெளிச்செல்லும் வாயு; ப்ராணே – வெளிச்செல்லும் வாயுவில்; அபானம் – கீழ்நோக்கிச் செல்லும் வாயு; ததா – மேலும் கூட; அபரே – வேறு சிலர்; ப்ராண – வெளிச்செல்லும் வாயு; அபான – கீழ்நோக்கிச் செல்லும் வாயு; கதீ – இயக்கம்; ருத்த்வா – அடக்கி; ப்ராண-ஆயாம – சுவாசக் காற்றை நிறுத்துவதால் அடையும் ஸமாதி; பராயணா: – ஈடுபடுகின்றனர்; அபரே – சிலர்; நியத — கட்டுப்படுத்தி; ஆஹாரா – உண்ணுதல்; ப்ராணான் — வெளிச்செல்லும் வாயு; ப்ராணேஷு — வெளிச்செல்லும் வாயுவில்: ஜுஹ்வதி — அர்ப்பணிக்கின்றனர்.

ஸமாதியில் இருப்பதற்காக சுவாசக் கட்டுப்பாட்டுப் பயிற்சிகளில் ஈடுபாடு கொண்டுள்ள சிலர், உட்சுவாசத்தில் வெளிச் சுவாசத்தின் இயக்கத்தையும், வெளிச் சுவாசத்தில் உட்சுவாசத்தின் இயக்கத்தையும் நிறுத்தும் முறையைப் பயின்று, இறுதியில் சுவாசத்தை முழுமையாக அடக்கி ஸமாதியில் நிலைபெறுகின்றனர். வேறு சிலர், உணவுக்கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வெளிச்சுவாசத்தையே யாகமாக அர்ப்பணிக்கின்றனர்.

ப.கீ 4.30
ஸர்வே (அ)ப்யேதே யக்ஞ-விதோ யக்ஞ-க்ஷபித-கல்மஷா:
யக்ஞ-ஷிஷ்டாம்ருத-புஜோ யாந்தி ப்ரஹ்ம ஸனாதனம்

ஸர்வே – எல்லா; அபி – வேறாகத் தோன்றினும்; ஏதே – இவை; யஜ்ஞ-வித: — யாகங்களின் நோக்கத்தை உணர்ந்தவர்க்கு; யஜ்ஞ-க்ஷபித – யாகங்களினால் தூய்மைப்படுத்தப்பட்டு; கல்மஷா: – பாவ விளைவுகளிலிருந்து; யஜ்ஞ-ஷிஷ்ட – இத்தகு யாகங்களைச் செய்வதன் விளைவால்; அம்ரு’த-புஜ: – அத்தகு அமுதத்தைப் பருகியவர்; யாந்தி – அணுகுகின்றனர்; ப்ரஹ்ம – பரமன்; ஸநாதனம் – நித்தியமான சூழ்நிலை.

யாகத்தின் பொருளை அறிந்து செயல்படும் இவர்கள் அனைவரும், பாவ விளைவுகளிலிருந்து தூய்மை பெற்று, இத்தகு யாகங்களின் பலன்களை அமுதமாகப் பருகி, பரமமான நித்திய நிலையை நோக்கி முன்னேறுகின்றனர்.

ப.கீ 4.31
நாயம் லோகோ (அ)ஸ்த்-யயக்ஞஸ்ய குதோ (அ)ன்ய: குரு-ஸத்தம

ந – என்றுமில்லை; அயம் – இந்த; லோக: – உலகம்; அஸ்தி – இருக்கிறது; அயஜ்ஞஸ்ய – யாகங்களைச் செய்யாமல் இருப்பவனுக்கு; குத: – எங்கே; அன்ய: – மற்ற; குரு-ஸத்தம – குருக்களில் சிறந்தோனே.

குருவம்சத்தில் சிறந்தவனே, எவரும் யாகங்களின்றி இவ்வுலகிலோ இவ்வாழ்விலோ மகிழ்ச்சியுடன் வாழ முடியாது: மறு உலகைப் பற்றி என்ன கூற முடியும்?

ப.கீ 4.32
ஏவம் பஹு-விதா யக்ஞா விததா ப்ரஹ்மணோ முகே
கர்ம-ஜான் வித்தி தான் ஸர்வான் ஏவம் க்ஞாத்வா விமோக்ஷ்யஸே

ஏவம் – இவ்வாறு; பஹு-விதா – பல்வகையான; யஜ்ஞா: – யாகங்கள்; விததா: – பரந்துள்ளன; ப்ரஹ்மண: – வேதங்களின்; முகே – வாயினால்; கர்ம-ஜான் – செயலினால் பிறந்த; வித்தி – நீ அறிய வேண்டும்; தான் – அவை; ஸர்வான் – எல்லாம்; ஏவம் – இவ்வாறாக; ஜ்ஞாத்வா – அறிந்து; விமோக்ஷ்யஸே – நீ முக்தியடைவாய்.

பலதரப்பட்ட இந்த யாகங்கள் அனைத்தும் வேதங்களில் அங்கீகரிக்கப்பட்டவை, இவை பல்வேறு விதமான செயல்களிலிருந்து பிறந்தவை. இவற்றை இவ்விதமாக அறிவதால் நீ முக்தியடைவாய்.

ப.கீ 4.33
ஷ்ரேயான் த்ரவ்ய-மயாத் யக்ஞாஜ் க்ஞான-யக்ஞ: பரந்தப
ஸர்வம் கர்மாகிலம் பார்த க்ஞானே பரிஸமாப்யதே

ஷ்ரேயான் – சிறந்தது; த்ரவ்ய-மயாத் – பௌதிக உரிமைகளின்; யஜ்ஞாத் – யாகத்தைவிட; ஜ்ஞான-யஜ்ஞ: – ஞான யாகம்; பரந்தப — எதிரிகளைத் தவிக்கச் செய்வோனே; ஸர்வம் – எல்லா; கர்ம – செயல்கள்: அகிலம் — மொத்தமாக; பார்த – பிருதாவின் மகனே; ஜ்ஞானே – ஞானத்தில்; பரிஸமாப்யதே – முற்றுப் பெறுகின்றன.

எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே, ஞான யாகம் பொருள்களை யாகம் செய்வதை விடச் சிறந்தது. பிருதாவின் மகனே, அது மட்டுமின்றி, எல்லாச் செயல்களின் யாகமும் தெய்வீக ஞானத்திலேயே முற்றுப்பெறுகின்றன.

ப.கீ 4.34
தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஷ்னேன ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே க்ஞானம் க்ஞானினஸ் தத்த்வ-தர்ஷின:

தத் – பல்வேறு யாகங்களின் அந்த ஞானம்; வித்தி – புரிந்துகொள்ள முயற்சி செய்; ப்ரணிபாதேன – ஆன்மீக குருவை அணுகி; பரிப்ரஷ்னேன — அடக்கமான கேள்விகளால்; ஸேவயர – சேவை செய்வதால்; உபதேக்ஷ்யந்தி — அவர்கள் உபதேசிப்பர்; தே – உனக்கு: ஜ்ஞானம் – ஞானத்தை; ஜ்ஞானின: – தன்னுணர்வடைந்தோர்; தத்த்வ – உண்மையை; தர்ஷின: – கண்டோர்.

ஆன்மீக குருவை அணுகி உண்மையை அறிய முயற்சி செய். அடக்கத்துடன் அவரிடம் கேள்விகள் கேட்டு அவருக்குத் தொண்டு செய். உண்மையைக் கண்டவர்களான தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.

ப.கீ 4.35
யஜ் க்ஞாத்வா ந புனர் மோஹம் ஏவம் யாஸ்யஸி பாண்டவ
யேன பூதான்யஷேஷாணி த்ரக்ஷ்யஸ் யாத்மன் யதோ மயி

யத் – எதை; ஜ்ஞாத்வா – அறிவதால்; ந – என்றுமில்லை; புன: – மீண்டும்: மோஹம் – மயக்கம்; ஏவம் – இது போன்ற; யாஸ்யஸி – நீ செல்வாய்; பாண்டவ – பாண்டுவின் மகனே; யேன – எதனால்; பூதானி – உயிர்வாழிகள்; அஷேஷாணி – எல்லா; த்ரக்ஷ்யஸி – நீ காண்பாய்; ஆத்மனி – பரமாத்மாவில்; அத உ – அல்லது வேறு விதமாகச் சென்னால்; மயி – என்னில்.

இவ்வாறு தன்னுணர்வடைந்த ஆத்மாவிடமிருந்து உண்மை ஞானத்தைப் பெற்றபின், நீ மீண்டும் மயக்கத்தில் விழ மாட்டாய். ஏனெனில், இந்த ஞானத்தின் மூலம், எல்லா உயிரினங்களையும் பரமனின் பாகமாக, வேறு விதமாகக் கூறினால் என்னுடையதாக நீ காண்பாய்.

ப.கீ 4.36
அபி சேத் அஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாப-க்ருத்-தம:
ஸர்வம் க்ஞான-ப்லவேனைவ வ்ருஜினம் ஸந்தரிஷ்யஸி

அபி – கூட; சேத் – ஆயின்; அஸி – நீ; பாபேப்ய: – பாவிகளில்; ஸர்வேப்ய: – எல்லாரிலும்; பாப-க்ரு’த்-தம: – பெரும் பாவி; ஸர்வம் – அவ்வெல்லா பாவ விளைவுகளையும்; ஜ்ஞான-ப்லவேன – உன்னதமான ஞானம் என்னும் படகால்; ஏவ – நிச்சயமாக; வ்ருஜினம் – துன்பக் கடல்; ஸந்தரிஷ்யஸி – நீ முழுதும் கடந்து விடுவாய்.

பாவிகளில் எல்லாம் பெரும் பாவியாக நீ கருதப்பட்டாலும் உன்னதமான ஞானமெனும் படகில் நீ நிலைபெற்றுவிட்டால், உன்னால் துன்பக் கடலைக் கடந்துவிட முடியும்.

ப.கீ 4.37
யதைதாம்ஸி ஸமித்தோ (அ)க்னிர் பஸ்ம-ஸாத் குருதே (அ)ர்ஜுன
க்ஞானாக்னி: ஸர்வ-கர்மாணி பஸ்ம-ஸாத் குருதே ததா

யதா – போல; ஏதாம்’ஸி – விறகு; ஸமித்த – எரிகின்ற; அக்னி: – நெருப்பு; பஸ்ம-ஸாத் – சாம்பல்; குருதே – மாற்றுவது; அர்ஜுன —அர்ஜுனா; ஜ்ஞான-அக்னி: – ஞான நெருப்பு: ஸர்வ-கர்மாணி — பௌதிகச் செயல்களின் எல்லா விளைவுகளையும்; பஸ்ம-ஸாத் – சாம்பலாக; குருதே — அது மாற்றுகின்றது; ததா – அதுபோலவே.

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு விறகை சாம்பலாக்குவதைப் போல, அர்ஜுனா, ஞான நெருப்பானது ஜடச் செயல்களின் விளைவுகளை எல்லாம் சாம்பலாக்கிவிடுகின்றது.

ப.கீ 4.38
ந ஹி க்ஞானேன ஸத்ருஷம் பவித்ரம் இஹ வித்யதே
தத் ஸ்வயம் யோக-ஸம்ஸித்த: காலேனாத்மனி விந்ததி

ந – இல்லை; ஹி – நிச்சியமாக; ஜ்ஞானேன – ஞானத்துடன்; ஸத்ரு’ஷம் – ஒப்பிடுகையில்; பவித்ரம் – புனிதமானது; இஹ – இவ்வுலகில்; வித்யதே— இருக்கின்றது; தத் — அது; ஸ்வயம் — தானே; யோக – பக்தியில்; ஸம்’ஸித்த: – பக்குவமடைந்தவன்; காலேன — காலப்போக்கில்; ஆத்மனி – தன்னில்; விந்ததி – அனுபவிக்கிறான்.

இவ்வுலகில் உன்னத ஞானத்தைப் போலச் சிறந்ததும், தூய்மையானதும் வேறொன்றும் இல்லை. இத்தகு ஞானமே எல்லா யோகங்களின் முற்றிய பழமாகும். பக்தித் தொண்டின் பயிற்சியினால் இதனை அடைந்தவன், காலப்போக்கில் இந்த ஞானத்தை தன்னில் அனுபவிக்கிறான்.

ப.கீ 4.39
ஷ்ரத்தாவாங் லபதே க்ஞானம் தத்-பர: ஸம்யதேந்த்ரிய:
க்ஞானம் லப்த்வா பராம் ஷாந்திம் அசிரேணாதிகச்சதி

ஷ்ரத்தா-வான் — நம்பிக்கையுடையோன்; லபதே – அடைகிறான்; ஜ்ஞானம் – ஞானம்; தத்-பர: – அதில் மிகுந்த பற்று கொண்டு; ஸம்யத – கட்டுப்படுத்தப்பட்ட; இந்த்ரிய – புலன்கள்; ஜ்ஞானம் – ஞானம்; லப்த்வா – அடைந்ததால்; பராம் – பரம; ஷாந்திம் – அமைதி; அசிரேண – வெகு விரைவில்; அதிகச்சதி – அடைகிறான்.

உன்னத ஞானத்திற்காகத் தன்னை அர்ப்பணித்து புலன்களை அடக்கக்கூடிய நம்பிக்கையுடைய மனிதன், அந்த ஞானத்தை அடையத் தகுதி வாய்ந்தவனாவான். அதனை அடைந்தபின், வெகு விரைவில் பரம ஆன்மீக அமைதியை அவன் அடைகிறான்.

ப.கீ 4.40
அக்ஞஷ் சாஷ்ரத்ததானஷ் ச ஸம்ஷயாத்மா வினஷ்யதி
நாயம் லோகோ (அ)ஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஷயாத்மன:

அஜ்ஞ: – தரமான சாஸ்திர ஞானம் இல்லாத முட்டாள்; ச – மேலும்; அஷ்ரத்ததான: – சாஸ்திரங்களில் நம்பிக்கையற்ற; ச – மேலும்; ஸம்’ஷய – சந்தேகங்கள்; ஆத்மா – ஒருவன்; வினஷ்யதி – வீழ்ச்சியடைகிறான்; ந – என்றுமில்லை; அயம் — இந்த; லோக: – உலகம்; அஸ்தி — இருக்கிறது; ந – என்றுமில்லை; பர – மறுவாழ்வில்: ந – இல்லை; ஸுகம் – இன்பம்; ஸம்’ஷய – சந்தேகம்; ஆத்மன: – மனிதனின்.

ஆனால், சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை; அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். சந்தேகம் கொள்ளும் ஆத்மாவிற்கு இவ்வுலகிலோ மறு உலகிலோ இன்பம் இல்லை.

ப.கீ 4.41
யோக-ஸன்ன்யஸ்த-கர்மாணம் க்ஞான-ஸஞ்சின்ன-ஸம்ஷயம்
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்னந்தி தனஞ்ஜய

யோக – கர்ம யோகத்தில் செய்யப்படும் பக்தித் தொண்டினால்; ஸன்ன்யஸ்த – துறந்தவன்; கர்மாணம் – செயல்களின் பலன்களை; ஜ்ஞான – ஞானத்தினால்; ஸஞ்சின்ன – துண்டித்துவிடு; ஸம்’ஷயம் – சந்தேகங்கள்; ஆத்ம-வந்தம் – தன்னில் நிலைபெற்று; ந – என்றுமில்லை; கர்மாணி – செயல்கள்; நிபத்னந்தி – கட்டுப்படுத்துகின்றன; தனஞ்ஜய – செல்வத்தை வெல்வோனே.

எவனொருவன் தனது செயல்களின் பலனைத் துறந்து பக்தித் தொண்டில் ஈடுபடுகின்றானோ, எவனொருவனது சந்தேகங்கள் உன்னத ஞானத்தால் நீக்கப்பட்டுவிட்டனவோ, அவன் தன்னில் நிலை பெற்றிருப்பது உறுதி. செல்வத்தை வெல்வோனே, இவ்வாறாக அவன் செயல்களின் விளைவுகளால் பந்தப்படுவதில்லை.

ப.கீ 4.42
தஸ்மாத் அக்ஞான-ஸம்பூதம் ஹ்ருத்-ஸ்தம் க்ஞானாஸினாத்மன:
சித்த்வைனம் ஸம்ஷயம் யோகம் ஆதிஷ்டோத்திஷ்ட பாரத

தஸ்மாத் – எனவே; அஜ்ஞான-ஸம்பூதம் – அறியாமையினால் பிறந்த; ஹ்ருத்- ஸ்தம் – இதயத்தில் நிலைபெற்றுள்ள; ஜ்ஞான – ஞானம்; அஸினா —ஆயுதத்தால்; ஆத்மன: – தனது; சித்த்வா — துண்டித்து; ஏனம் — இந்த; ஸம்ஷயம் – சந்தேகம்; யோகம் — யோகத்தில்; ஆதிஷ்ட – நிலைபெற்று; உத்திஷ்ட – போரிட எழு; பாரத – பரத குலத் தோன்றலே.

எனவே, அறியாமையால் உன் இதயத்தில் எழுந்த ஜயங்கள் ஞானமெனும் ஆயுதத்தால் அழிக்கப்பட வேண்டும். யோக கவசம் பூண்டு, பரத குலத்தவனே, எழுந்து போர் புரிவாயாக.


Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare