ப.கீ 1.1
த்ருதராஷ்ட்ர உவாச
தர்ம-க்ஷேத்ரே குரு-க்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:
மாமகா: பாண்டவாஷ் சைவ கிம் அகுர்வத ஸஞ்ஜய
திருதராஷ்ட்ர உவாச – மாமன்னர் திருதராஷ்டிரர் கூறினார்; தர்ம-க்ஷேத்ரே – தர்ம க்ஷேத்திரத்தில்; குரு-க்ஷேத்ரே – குருக்ஷேத்திரதில்; ஸமவேதா: – ஒன்று கூடிய; யுயுத்ஸவ: – போர் புரியும் விருப்பத்துடன்; மாமகா: – என்னுடையவர்கள் (என் மகன்கள்); பாண்டவா: – பாண்டுவின் மகன்கள்; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; கிம் – என்ன; அகுர்வத – செய்தனர்; ஸஞ்ஜய – சஞ்ஜயனே.
திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்சயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும், பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?
ப.கீ 1.2
ஸஞ்ஜய உவாச
த்ருஷ்ட்வா து பாண்டவானீகம் வ்யூடம் துர்யோதனஸ் ததா
ஆசார்யம் உபஸங்கம்ய ராஜா வசனம் அப்ரவீத்
ஸஞ்ஜய: உவாச – சஞ்ஜயன் கூறினான்; த்ருஷ்ட்வா – பார்த்த பின்; து —ஆனால்; பாண்டவ-அனீகம் — பாண்டவர்களின் போர் வீரர்கள்; வ்யூடம் – வியூகமாய் அணிவகுக்கப்பட்டிருந்த; துர்யோதன: – அரசன் துரியோதனன்; ததா — அந்த நேரத்தில்; ஆசார்யம் – ஆச்சாரியர்; உபஸங்கம்ய – அணுகி; ராஜா – மன்னன்; வசனம் – வார்த்தைகள்; அப்ரவீத் — பேசினான்.
சஞ்ஜயன் கூறினான்: மன்னரே, பாண்டுவின் மகன்களால் அணிவகுக்கப்பட்ட படையை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரியோதனன் தன் ஆச்சாரியரை அணுகிப் பின்வருமாறு கூறினான்.
ப.கீ 1.3
பஷ்யைதாம் பாண்டு-புத்ராணாம் ஆசார்ய மஹதீம் சமூம்
வ்யூடாம் த்ருபத-புத்ரேண தவ ஷிஷ்யேண தீமதா
பஷ்ய — பாருங்கள்; ஏதாம் – இந்த; பாண்டு-புத்ராணாம் – பாண்டுவின் புதல்வர்கள்; ஆசார்ய – ஆச்சாரியரே; மஹதீம் – மாபெரும்; சமூம் – போர்ப் படைகள்; வ்யூடாம் — அணிவகுக்கப்பட்ட; த்ருபத-புத்ரேண – துருபதரின் புதல்வனால்; தவ – உமது; ஷிஷ்யேண — சீடன்; தீ-மதா – மிகவும் புத்திசாலி.
ஆச்சாரியரே, துருபத குமாரனான உங்கள் புத்திசாலி சீடனால் நேர்த்தியாக அணிவகுக்கப்பட்ட, பாண்டு புத்திரர்களின் மாபெரும் படையைப் பாருங்கள்.
ப.கீ 1.4
அத்ர ஷூரா மஹேஷ் வாஸா பீமார்ஜுன-ஸமா யுதி
யுயுதானோ விராடஷ் ச த்ருபதஷ் ச மஹா-ரத:
அத்ர — அங்கு; ஷூரா: – வீரர்கள்; மஹா-இஷு-ஆஸா – பலமுள்ள வில்லாளிகள்; பீம-அர்ஜுன — பீமனுக்கும் அர்ஜுனனுக்கும்; ஸமா: — சமமான; யுதி போரில்; யுயுதான — யுயுதானன்; விராட: – விராடன்; ச – மேலும்; த்ருபத: — துருபதன்; ச – மற்றும்; மஹா-ரத: – மாபெரும் வீரர்.
அந்தச் சேனையில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமான வில்லாளிகள் பலரும் இருக்கின்றனர். யுயுதானன், விராடன், துருபதன் போன்ற மாபெரும் வீரர்கள் உள்ளனர்.
ப.கீ 1.5
த்ருஷ்டகேதுஷ் சேகிதான: காஷிராஜஷ் ச வீர்யவான்
புருஜித் குந்திபோஜஷ் ச ஷைப்யஷ் ச நர-புங்கவ:
த்ருஷ்டகேது: – திருஷ்டகேது; சேகிதான: – சேகிதானன்; காஷிராஜ: – காசிராஜன்; ச – மேலும்; வீர்ய-வான் — பலமிக்க; புருஜித் – புருஜித்; குந்திபோஜ – குந்திபோஜன்; ச – மேலும்; ஷைப்ய: – ஷைப்யன்; ச – மேலும்; நர-புங்கவ — மனித சமுதாயத்தின் சிறந்த வீரர்கள்.
மேலும், திருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன், புருஜித், குந்திபோஜன், ஷைப்யன் போன்ற சிறந்த பலமிக்க போர் வீரர்கள் பலரும் உள்ளனர்.
ப.கீ 1.6
யுதாமன்யுஷ் ச விக்ராந்த உத்தமௌஜாஷ் ச வீர்யவான்
ஸெளபத்ரோ த்ரௌபதேயாஷ் ச ஸர்வ ஏவ மஹா-ரதா:
யுதாமன்யு: – யுதாமன்யு; ச – மேலும்; விக்ராந்த: – பலமுள்ள; உத்தமௌஜா: – உத்தமௌஜன்; ச- மேலும்; வீர்ய-வான் — பலமிக்க; ஸௌபத்ர: — சுபத்ரையின் புதல்வன்; த்ரௌபதேயா: – திரௌபதியின் புதல்வர்கள்; ச – மேலும்; ஸர்வே – எல்லா; ஏவ – நிச்சயமாக; மஹா-ரதா – மாபெரும் ரத வீரர்கள்.
வீரனான யுதாமன்யு, பலமுள்ள உத்தமௌஜன், சுபத்ரையின் புதல்வன் மற்றும் திரௌபதியின் குமாரர்களும் இருக்கின்றனர். இப்படை வீரர்கள் அனைவரும் மாபெரும் ரத வீரர்கள்.
ப.கீ 1.7
அஸ்மாகம் து விஷிஷ்டா யே தான் நிபோத த்விஜோத்தம
நாயகா மம ஸைன்யஸ்ய ஸம்க்ஞார்தம் தான் ப்ரவீமி தே
அஸ்மாகம் – நம்முடைய; து – ஆனால்; விஷிஷ்டா – விசேஷ பலமுள்ள; யே – யார்; தான் — அவர்களை; நிபோத – கவனியுங்கள்; த்விஜ-உத்தம – பிராமணரில் சிறந்தவரே; நாயகா: – நாயகர்கள்; மம – என்னுடைய; ஸைன்யஸ்ய – படை வீரர்களின்; ஸம்ஜ்ஞார்தம் — அறிவதற்காக; தான் — அவர்கள்; ப்ரவீமி — கூறுகிறேன்; தே- உங்களிடம்.
ஆனால், பிராமணரில் சிறந்தவரே, தாங்கள் தெரிந்து கொள்வதற்காக எனது சேனையை வழிநடத்தும் தகுதி வாய்ந்த நாயகர்களைப் பற்றியும் தங்களிடம் கூறுகிறேன்.
ப.கீ 1.8
பவான் பீஷ்மஷ் ச கர்ணஷ் ச க்ருபஷ் ச ஸமிதிம் ஜய:
அஷ்வத்தாமா விகர்ணஷ் ச ஸெளமதத்திஸ் ததைவ ச
பவான் – தாங்கள்; பீஷ்ம – பாட்டனார் பீஷ்மர்; ச – மற்றும்; கர்ண: – கர்ணன்; ச – மேலும்; க்ருப – கிருபாசாரியர்; ச – மேலும்; ஸமிதிம்-ஜய: – போரில் எப்போதும் வெற்றி பெறும்; அஷ்வத்தாமா — அஷ்வத்தாமன்; விகர்ண: – விகர்ணன்; ச – மேலும்; ஸௌமதத்தி: – சோமதத்தனின் குமாரன்; ததா – மேலும்; ஏவ – நிச்சயமாக; ச – மற்றும்.
மரியாதைக்குரிய தாங்கள், பீஷ்மர், கர்ணன், கிருபாசாரியர், அஷ்வத்தாமன், விகர்ணன் மற்றும் சோமதத்தனின் குமாரனான பூரிஷ்ரவன் முதலியோர், போரில் எப்போதும் வெற்றி காண்பவர்களே.
ப.கீ 1.9
அன்யே ச பஹவ: ஷூரா மத் அர்தே த்யக்த-ஜீவிதா:
நானா-ஷஸ்த்ர-ப்ரஹரணா: ஸர்வே யுத்த-விஷாரதா:
அன்யே – பிறர்; ச – மேலும்; பஹவ: – பெரும் எண்ணிக்கையில்; ஷூரா: – மாவீரர்கள்; மத்-அர்தே – எனக்காக; த்யக்த-ஜீவிதா: – உயிரை விடத் தயாராக; நானா – பல்வேறு; ஷஸ்த்ர — ஆயுதங்கள்; ப்ரஹரணா: – உடைய; ஸர்வே — அவர்களெல்லாம்; யுத்த-விஷாரதா – யுத்தத்தில் வல்லுநர்கள்.
எனக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய எண்ணற்ற மாவீரர்கள் பலரும் உள்ளனர். யுத்தத்தில் வல்லுநர்களான அவர்கள் அனைவரும் பலவிதமான ஆயுதங்களுடன் தயாராக உள்ளனர்.
ப.கீ 1.10
அபர்யாப்தம் தத் அஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்
பர்யாப்தம் த்விதம் ஏதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்
அபர்யாப்தம் – அளக்கவியலாத; தத் — அந்த; அஸ்மாகம் — நமது; பலம் – பலம்; பீஷ்ம – பாட்டனாரான பீஷ்மரால்; அபிரக்ஷிதம் – சிறப்பாய் பாதுகாக்கப்பட்ட; பர்யாப்தம் – அளவிடக்கூடிய; து – ஆனால்; இதம் – இவையனைத்தும்; ஏதேஷாம் – பாண்டவர்களின்; பலம் – பலம்; பீம – பீமனால்; அபிரக்ஷிதம் – கவனமாய் பாதுகாக்கப்பட்ட.
பாட்டனார் பீஷ்மரால் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட நமது பலம் அளக்கவியலாதது. ஆனால், பீமனால் கவனமாக பாதுகாக்கப்பட்ட பாண்டவ சேனையோ அளவிடக்கூடியதே.
ப.கீ 1.11
அயனேஷு ச ஸர்வேஷு யதா-பாகம் அவஸ்திதா:
பீஷ்மம் ஏவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி
அயனேஷு — முக்கியப் போர் முனைகளில்; ச – மேலும்; ஸர்வேஷு – எங்கும்; யதா-பாகம் — பலவிதங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளபடி; அவஸ்திதா: – இருந்தபடியே; பீஷ்மம் – பாட்டனார் பீஷ்மருக்கு; ஏவ – நிச்சயமாக; அபிரக்ஷந்து — பாதுகாப்பளிக்க வேண்டும்; பவந்த: – நீங்கள்; ஸர்வே – அனைவரும்; ஏவ ஹி – நிச்சயமாக.
படை அணிவகுப்பின் நுழைவாயிலில் தத்தமது போர் முனைகளில் இருந்தபடியே நீங்கள் அனைவரும் பாட்டனார் பீஷ்மருக்கு முழுப் பாதுகாப்பளிக்க வேண்டும்.
ப.கீ 1.12
தஸ்ய ஸஞ்ஜனயன் ஹர்ஷம் குரு-வ்ருத்த: பிதாமஹ:
ஸிம்ஹ-நாதம் வினத் யோச்சை: ஷங்கம் தத்மௌ ப்ரதாபவான்
தஸ்ய – அவனது; ஸஞ்ஜனயன் — அதிகரிக்கின்ற; ஹர்ஷம் – மகிழ்ச்சி; குரு-வ்ருத்த – குரு வம்சத்தின் முதியவர் (பீஷ்மர்); பிதாமஹ: – பாட்டனார்; ஸிம்ஹ-நாதம் – சிங்கத்தைப் போன்ற கர்ஜனை ஒலி; வினத்ய – அதிர்வடைந்து; உச்சை: – மிக சத்தமாக; ஷங்கம் – சங்கு; தத்மௌ – ஊதினார்; ப்ரதாப-வான் — பெரும் வீரர்.
பின்னர், குரு வம்சத்தின் மாபெரும் வீரரும் பாட்டனாருமான பீஷ்மர், தனது சங்கை சிங்க கர்ஜனை போன்று உரக்க ஊதி துரியோதனனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்.
ப.கீ 1.13
தத: ஷங்காஷ் ச பேர்யஷ் ச பணவானக-கோமுகா:
ஸஹஸைவாப்யஹன்யந்த ஸ ஷப்தஸ் துமுலோ (அ)பவத்
தத: – அதன் பிறகு; ஷங்கா: – சங்குகள், ச – மேலும், பேர்ய – மத்தளங்கள்; ச – மேலும்; பணவ-ஆனக – தாரைகளும் முரசுகளும்; கோ-முகா – கொம்புகள்; ஸஹஸா – உடனே; ஏவ – நிச்சயமாய்; அப்யஹன்யந்த – ஒரே சமயத்தில் ஒலித்தன; ஸ: – அந்த; ஷப்த: — ஒருமித்த சப்தம்; துமுல: – கிளர்ச்சி; அபவத் — உண்டாயிற்று.
அதன்பின், சங்குகள், மத்தளங்கள், முரசுகள், கொம்புகள், தாறைகள் என அனைத்தும் ஒரே சமயத்தில் முழங்க, அப்பேரொலி மிகவும் பயங்கரமாக இருந்தது.
ப.கீ 1.14
தத: ஷ்வேதைர் ஹயைர் யுக்தே மஹதி ஸ்யந்தனே ஸ்திதௌ
மாதவ: பாண்டவஷ் சைவ திவ்யௌ ஷங்கௌ ப்ரதத்மது:
தத: – அதன் பிறகு; ஷ்வேதை: – வெண்மையான, ஹயை: – குதிரைகள்; யுக்தே – பூட்டிய; மஹதி – மிகச்சிறந்த; ஸ்யந்தனே – ரதத்தில்; ஸ்திதௌ – நிலைபெற்ற; மாதவ – கிருஷ்ணர் (செல்வத் திருமகளின் கணவர்); பாண்டவ: -அர்ஜுனன் (பாண்டுவின் மகன்); ச – மேலும்; ஏவ – நிச்சயமாய்; திவ்யௌ – தெய்வீக; ஷங்கௌ – சங்குகளை; ப்ரதத்மது: – முழங்கினர்.
மறுதரப்பில், வெள்ளைக் குதிரைகள் பூட்டிய மிகச்சிறந்த ரதத்தில் அமர்ந்திருந்த பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்களது தெய்வீக சங்குகளை முழங்கினர்.
ப.கீ 1.15
பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேஷோ தேவதத்தம் தனஞ்ஜய:
பௌண்ட்ரம் தத்மௌ மஹா-ஷங்கம் பீம-கர்மா வ்ருகோதர:
பாஞ்சஜன்யம் – பாஞ்சஜன்யம் எனும் சங்கு; ஹ்ருஷீக-ஈஷ: – ரிஷிகேசர் (பக்தர்களின் புலன்களை வழிநடத்தும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்); தேவதத்தம் – தேவதத்தம் எனும் சங்கு; தனம்-ஜய: – தனஞ்ஜயன் (செல்வத்தை வெல்பவனான அர்ஜுனன்); பௌண்ட்ரம் — பௌண்ட்ரம் எனும் சங்கு; தத்மௌ – முழங்கினார்கள்; மஹா-ஷங்கம் – அச்சமூட்டும் சங்கு; பீம-கர்மா – வீர தீரச் செயல்களைப் புரிபவனான; வ்ருக-உதர: – பெருந்தீனிக்காரன் (பீமன்).
பகவான் கிருஷ்ணர் பாஞ்சஜன்யம் எனும் தனது சங்கை முழங்கினார்; அர்ஜுனன் தேவதத்தம் எனும் சங்கையும், பெருந்தீனிக்காரனும் வீர தீர சாகசங்களைப் புரிபவனுமான பீமன் பௌண்ட்ரம் எனும் அச்சமூட்டும் சங்கையும் முழங்கினர்.
ப.கீ 1.16 – 1.18
அனந்தவிஜயம் ராஜா குந்தீ-புத்ரோ யுதிஷ்டிர:
நகுல: ஸஹதேவஷ் ச ஸுகோஷ-மணிபுஷ்பகௌ
காஷ்யஷ் ச பரமேஷ் வாஸ: ஷிகண்டீ ச மஹா-ரத:
த்ருஷ்டத்யும்னோ விராடஷ் ச ஸாத்யகிஷ் சாபராஜித:
த்ருபதோ த்ரௌபதேயாஷ் ச ஸர்வஷ: ப்ருதிவீ- பதே
ஸெளபத்ரஷ் ச மஹா-பாஹு: ஷங்கான் தத்மு: ப்ருதக் ப்ருதக்
அனந்த-விஜயம் — அனந்த விஜயம் எனும் சங்கு; ராஜா – ராஜா; குந்தீ-புத்ர: – குந்தியின் புதல்வன்; யுதிஷ்டிர: – யுதிஷ்டிரன்; நகுல: – நகுலன்; ஸஹ தேவ: – சகாதேவன்; ச – மேலும்; ஸூகோஷ-மணிபுஷ்பகௌ – சுகோஷம்; மணிபுஷ்பகமென்ற பெயருடைய சங்குகள்; காஷ்ய: – காசி (வாரணாசி) மன்னன்; ச – மற்றும்; பரம-இஷு ஆஸ: — பெரும் வில்லாளி; ஷிகண்டீ – சிகண்டி; ச – மற்றும்; மஹா-ரத: – ஆயிரக்கணக்கானவர்களுடன் தனியாக நின்று போரிடக் கூடியவன்; த்ருஷ்டத்யும்ன: — திருஷ்டத்யும்னன் (துருபத மன்னனின் குமாரன்); விராட: – விராடன் (பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த போது இடமளித்த இளவரசன்); ச – மற்றும்; ஸாத்யகி: – சாத்யகி (யுயுதானன் பகவான் கிருஷ்ணனின் தேரோட்டி); ச – மேலும்; அபராஜித – என்றும் வெல்ல முடியாத; த்ருபத: – பாஞ்சால மன்னன் துருபதன்; த்ரௌபதேயா: – திரௌபதியின் புதல்வர்கள்; ச – மேலும்; ஸர்வஷ: – எல்லாரும்; ப்ருதிவீ-பதே – அரசனே; ஸௌபத்ர: – அபிமன்யு (சுபத்ரையின் மகன்); ச – மேலும்; மஹா-பாஹு – பெரும் பலம் பெற்ற; ஷங்கான் — சங்குகள்; தத்மு: – முழங்கினர்; ப்ருதக் ப்ருதக் – ஒவ்வொருவரும் தனியாக.
குந்தியின் புதல்வரான மன்னர் யுதிஷ்டிரர் அனந்த விஜயம் எனும் சங்கையும், நகுலனும் சகாதேவனும் சுகோஷம், மணிபுஷ்பகம் எனும் சங்குகளையும் முழங்கினர். பெரும் வில்லாளியான காசிராஜன், பெரும் வீரரான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வெல்லவியலாத சாத்யகி, துருபதன், திரௌபதியின் புதல்வர்கள் மற்றும் மாவீரனான சுபத்ரையின் மகனைப் போன்ற பலரும் தத்தமது சங்குகளை முழ்கினார்கள், மன்னரே.
ப.கீ 1.19
ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயானி வ்யதாரயத்
நபஷ் ச ப்ருதிவீம் சைவ துமுலோ (அ)ப்யனுநாதயன்
ஸ: – அந்த; கோஷ: – முழக்கம்; தார்தராஷ்ட்ராணாம் — திருதராஷ்டிரருடைய பிள்ளைகளின்; ஹ்ருதயானி – இதயங்கள்; வ்யதாரயத் – சிதறின; நப: – வானம்; ச – மேலும்; ப்ருதிவீம் – பூமி; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; துமுல: – நடுங்கின; அப்யனுநாதயன் — எதிரொலியால்.
பல்வேறு சங்கொலிகளின் முழக்கம் பேரொலியாக எழுந்து பூமியும் வானமும் நடுங்குமாறு எதிரொலிக்க; திருதராஷ்டிரரின் மகன்களுடைய இதயங்கள் சிதறிப் போயின.
ப.கீ 1.20
அத வ்யவஸ்திதான் த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ரான் கபி-த்வஜ:
ப்ரவ்ருத்தே ஷஸ்த்ர-ஸம்பாதே தனுர் உத்யம்ய பாண்டவ:
ஹ்ருஷீகேஷம் ததா வாக்யம் இதம் ஆஹ மஹீ-பதே
அத: – அதன் பின்; வ்யவஸ்திதான் – நிலைபெற்ற; த்ருஷ்ட்வா — பார்த்து; தார்தராஷ்ட்ரான் — திருதராஷ்டிரரின் புதல்வர்கள்; கபி-த்வஜ: – அனுமானின் கொடியைக் தாங்கியவன்; ப்ரவ்ருத்தே – ஈடுபடத் தயாராக; ஷஸ்த்ர-ஸம்பாதே – அம்புகள் எய்ய; தனு: – வில்; உத்யம்ய — எடுத்து; பாண்டவ — பாண்டுவின் மகன் (அர்ஜுனன்); ஹ்ருஷீகேஷம் – பகவான் கிருஷ்ணரிடம்; ததா –அச்சமயத்தில்; வாக்யம் — வார்த்தைகள்; இதம் – இவ்வாறு; ஆஹ – கூறினான்; மஹீபதே — மன்னரே.
அச்சமயத்தில், அனுமானின் கொடியைத் தாங்கிய தேரில் அமர்ந்திருந்த பாண்டுவின் மகன் அர்ஜுனன், தனது வில்லை ஏந்தி அம்புகள் எய்யத் தயாரானான். மன்னரே, அணிவகுக்கப்பட்ட படையில் திருதராஷ்டிரரின் மைந்தர்களைக் கண்டவுடன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கி அர்ஜுனன் பின்வருமாறு கூறினான்.
ப.கீ 1.21 – 1.22
அர்ஜுன உவாச
ஸேனயோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபயமே (அ)ச்யுத
யாவத் ஏதான் நிரீக்ஷே (அ)ஹம் யோத்து காமான் அவஸ்தி தான்
கைர் மயா ஸஹ யோத்தவ்யம் அஸ்மின் ரண-ஸமுத்யமே
அர்ஜுன: உவாச – அர்ஜுனன் கூறினான்; ஸேனயோ: – சேனைகளுக்கு; உபயோ: – இரண்டு; மத்யே – மத்தியில்; ரதம் – தேர்; ஸ்தாபய — தயவுசெய்து நிறுத்துங்கள்; மே – என்னுடைய; அச்யுத – வீழ்ச்சியடையாதவரே; யாவத் – முடிந்தவரை; ஏதான் – இவர்களை எல்லாம்; நிரீக்ஷே — பார்க்கும்படி; அஹம் – நான்; யோத்து-காமான் – சண்டையிட விருப்பம் கொண்டுள்ள; அவஸ்திதான் — போர்க்களத்தில் அணிவகுத்துள்ள; கை — யாருடன்; மயா – என்னால்; ஸஹ – இணைந்து; யோத்தவ்யம் — சண்டையிட வேண்டும்; அஸ்மின் – இந்த; ரண — போர்; ஸமுத்யமே – முயற்சியில்.
அர்ஜுனன் கூறினான்: வீழ்ச்சியடையாதவரே, போர் புரியும் ஆவலுடன் இங்கே கூடியுள்ளவர்களில், எவர்களோடு நான் இந்த மாபெரும் போரில் ஈடுபட வேண்டும் என்பதைப் பார்க்கும்படி, தயவுசெய்து எனது ரதத்தை இரு சேனைகளுக்கு மத்தியில் நிறுத்தவும்.
ப.கீ 1.23
யோத்ஸ்யமானான் அவேக்ஷே (அ)ஹம் ய ஏதே (அ)த்ர ஸமாகதா:
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர் யுத்தே ப்ரிய-சிகீர்ஷவ:
யோத்ஸ்யமானான் — போர் புரியப்போகிறவர்கள்; அவேக்ஷே – நான் பார்க்கட்டும்; அஹம் – நான்; யே – யார்; ஏதே – அவர்கள்; அத்ர – இங்கே; ஸமாகதா: – கூடியுள்ள; தார்தராஷ்ட்ரஸ்ய — திருதராஷ்டிரரின் மகனை; துர்புத்தே – கெட்ட புத்தியுடைய; யுத்தே – போரில்; ப்ரிய – நன்மை; சிகீர்ஷவ: – விரும்பி.
கெட்ட புத்தியுடைய, திருதராஷ்டிரரின் மகனை மகிழ்விக்கும் விருப்பத்தோடு; இங்கு போர் புரிய வந்திருப்பவர்களை நான் பார்க்க வேண்டும்.
ப.கீ 1.24
ஸஞ்ஜய உவாச
ஏவம் உக்தோ ஹ்ருஷீகேஷோ குடாகேஷேன பாரத
ஸேனயோர் உபயோர் மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம்
ஸஞ்ஜய உவாச – சஞ்ஜயன் கூறினான்; ஏவம் – இவ்வாறு; உக்த: — அழைத்து; ஹ்ருஷீகேஷ: — பகவான் கிருஷ்ணர்; குடாகேஷேன – அர்ஜுனனால்; பாரத – பரத குலத்தோனே; ஸேனயோ: – சேனைகளின்; உபயோ — இருதரப்பு; மத்யே – மத்தியில்; ஸ்தாபயித்வா — நிறுத்தி; ரத:-உத்தமம் – உத்தம ரதம்.
சஞ்ஜயன் கூறினான்: பரத குலத்தவரே, அர்ஜுனன் இவ்வாறு கூறியவுடன்; பகவான் கிருஷ்ணர் அவனது உத்தம ரதத்தை இருதரப்பு சேனைகளுக்கு மத்தியில் கொண்டு நிறுத்தினார்.
ப.கீ 1.25
பீஷ்ம-த்ரோண-ப்ரமுகத: ஸர்வேஷாம் ச மஹீ-க்ஷிதாம்
உவாச பார்த பஷ்யைதான் ஸமவேதான் குரூன் இதி
பீஷ்ம – பாட்டனார் பீஷ்மர்; த்ரோண — ஆச்சாரியர் துரோணர்; ப்ரமுகத – முன்னிலையில்; ஸர்வேஷாம் – எல்லா; ச – மற்றும்; மஹீ-க்ஷிதாம் – உலகத்தலைவர்கள்; உவாச – கூறினார்; பார்த: – பிருதாவின் மகனே; பஷ்ய – பார்; ஏதான் – எல்லோரையும்; ஸமவேதான் – கூடியுள்ள; குரூன் – குரு வம்சத்தினர்; இதி – இவ்வாறு.
பீஷ்மர், துரோணர், மற்றும் உலகத் தலைவர்களின் முன்னிலையில் “பார்த்தா, இங்கு கூடியிருக்கும் குரு வம்சத்தினரைப் பார்” என்று பகவான் கூறினார்.
ப.கீ 1.26
தத்ராபஷ்யத் ஸ்திதான் பார்த: பித்ரூன் அத பிதாமஹான்
ஆசார்யான் மாதுலான் ப்ராத்ரூன் புத்ரான் பௌத்ரான் ஸகீம்ஸ் ததா
ஷ்வஷுரான் ஸுஹ்ருதஷ் சைவ ஸேனயோர் உபயோர் அபி
தத்ர – அங்கே; அபஷ்யத் – காண முடிந்தது; ஸ்திதான் – நின்று கொண்டு; பார்த – அர்ஜுனன்; பித்ரூன் – தந்தையர்; அத – மேலும்; பிதாமஹான் – பாட்டனார்கள்; ஆசார்யான் — ஆச்சாரியர்கள்; மாதுலான் — மாமாக்கள்; ப்ராத்ரூன் — சகோதரர்கள்; புத்ரான் – மகன்கள்; பௌத்ரான் – பேரன்கள்; ஸகீன் – நண்பர்கள்; ததா – கூட; ஷ்வஷுரான் — மாமனார்கள்; ஸுஹ்ருத: – நலன் விரும்பிகள்; ச – மற்றும்; ஏவ – நிச்சயமாக; ஸேனயோ: – சேனைகளின்; உபயோ: – இருதரப்பிலும்; அபி – உட்பட.
போர்க்களத்தின் இருதரப்புச் சேனைகளின் நடுவே நின்றபடி, தந்தைமார்கள், பாட்டனார்கள், ஆச்சாரியர்கள், மாமன்கள், சகோதரர்கள், மகன்கள், பேரன்கள், நண்பர்கள், மாமனார்கள், மற்றும் பல நலன் விரும்பிகளும் கூடியிருப்பதை அர்ஜுனனால் பார்க்க முடிந்தது.
ப.கீ 1.27
தான் ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வான் பந்தூன் அவஸ்திதான்
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதன் நிதம் அப்ரவீத்
தான் — அவர்கள் அனைவரையும்; ஸமீக்ஷ்ய – கண்டபின்; ஸ: – அவன்; கௌந்தேய: – குந்தியின் மகன்; ஸர்வான் – எல்லாவித; பந்தூன் – உறவினர்கள்; அவஸ்திதான் — நிலைபெற்ற; க்ருபய — கருணையுடன்; பரயா – உயர்ந்த; ஆவிஷ்ட: – மூழ்கி; விஷீதன் – கவலை கொண்டு; இதம் –இவ்வாறாக; அப்ரவீத் – கூறினான்.
குந்தி மகனான அர்ஜுனன் பலதரப்பட்ட நண்பர்களையும் உறவினர்களையும் பார்வையிட்டபோது, கருணையில் மூழ்கி இவ்வாறு கூறினான்.
ப.கீ 1.28
அர்ஜுன உவாச
த்ருஷ்ட்வேமம் ஸ்வ-ஜனம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்
ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஷுஷ்யதி
அர்ஜூன உவாச – அர்ஜுனன் கூறினான்; த்ருஷ்ட்வா — பார்த்தபின்; இமம் — இவர்கள் எல்லோரையும்; ஸ்வ-ஜனம் — உறவினர்கள்; க்ரிஷ்ண – கிருஷ்ணரே; யுயுத்ஸும் — போரிடும் எண்ணத்துடன்; ஸமுபஸ்திதம் — கூடியுள்ள; ஸீதந்தி – நடுங்குகிறது; மம – எனது; காத்ராணி – உடல் அங்கங்கள்; முகம் — வாய்; ச – மேலும்; பரிஷுஷ்யதி – உலர்கிறது.
அர்ஜுனன் கூறினான்: எனதன்பு கிருஷ்ணரே, போரிடும் உணர்வுடன் என் முன் கூடியுள்ள எனது நண்பர்களையும் உறவினர்களையும் கண்டு என் உடல் அங்கங்கள் நடுங்கி, வாய் உலர்வதை உணர்கிறேன்.
ப.கீ 1.29
வேபதுஷ் ச ஷரீரே மே ரோம–ஹர்ஷஷ் ச ஜாயதே
காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத் த்வக் சைவ பரிதஹ்யதே
வேபது: – உடல் நடுக்கம்; ச – மற்றும்; ஷரீரே – உடலில்; மே – எனது; ரோம – ஹர்ஷ: – மயிர்க்கூச்சம் ச – மேலும்; ஜாயதே – உண்டாகிறது; காண்டீவம் – காண்டீபம் (அர்ஜுனனின் வில்); ஸ்ரம்ஸதே – நழுவுகிறது; ஹஸ்தாத் – கையிலிருந்து; த்வக் – தோல்; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; பரித-ஹ்யதே – எரிகின்றது.
என் உடல் முழுவதும் நடுங்குகின்றது, மயிர்க்கூச்செறிகின்றது, என் வில்லான காண்டீபம் கையிலிருந்து நழுவுகின்றது, தோல் எரிகின்றது.
ப.கீ 1.30
ந ச ஷக்னோம்-யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மன:
நிமித்தானி ச பஷ்யாமி விபரீதானி கேஷவ
ந – இல்லை; ச – மேலும்; ஷக்னோமி – என்னால் முடிய; அவஸ்தாதும் – இருக்க; ப்ரமதி – மறக்கின்றது; இவ – போல; ச – மேலும்; மே – எனது; மன: – மனம்; நிமித்தானி – சகுனங்கள்; ச – மேலும்; பஷ்யாமி – காண்கிறேன்; விபரீதானி – விபரீதமான; கேஷவ – கேசி என்ற அரக்கனை அழித்தவரே (கிருஷ்ணரே).
இனியும் என்னால் இங்கு நிற்க முடியாது. என் மனம் குழம்பி என்னையே மறக்கின்றேன். கேசி என்ற அரக்கனை அழித்தவரே, கிருஷ்ணரே, கெட்ட சகுனங்களையே நான் காண்கிறேன்.
ப.கீ 1.31
ந ச ஷ்ரேயோ (அ)னுபஷ்யாமி ஹத்வா ஸ்வ-ஜனம் ஆஹவே
ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகானி ச
ந – இல்லை; ச – மற்றும்; ஷ்ரேய: – நன்மை; அனுபஷ்யாமி – நான் காண்பது;ஹத்வா – கொன்று; ஸ்வ-ஜனம் — சொந்த உறவினர்கள்; ஆஹவே – போரில்; ந – இல்லை; காங்க்ஷே – விரும்பிகிறேன்; விஜயம் – வெற்றி; க்ரு-0ழஷ்ண – கிருஷ்ணரே; ந – இல்லை; ச – மேலும்; ராஜ்யம் – இராஜ்யம்; ஸுகானி — அதன் இன்பம்; ச – மற்றும்.
சொந்த உறவினரை இப்போரில் கொல்வதால் என்ன நன்மை வருமென்பதை என்னால் காண முடியவில்லை. எனதன்பு கிருஷ்ணரே, இதில் பெறக்கூடிய வெற்றியையோ இராஜ்யத்தையோ இன்பத்தையோ நான் விரும்பவில்லை.
ப.கீ 1.32 – 1.35
கிம் நோ ராஜ்யேன கோவிந்த கிம் போகைர் ஜீவிதேன வா
ஏஷாம் அர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா: ஸுகானி ச
த இமே (அ)வஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ் த்யக்த்வா தனானி ச
ஆசார்யா: பிதர: புத்ராஸ் ததைவ ச பிதாமஹா:
மாதுலா: ஷ்வஷுரா: பௌத்ரா: ஷ்யாலா: ஸம்பந்தினஸ் ததா
ஏதான் ந ஹந்தும் இச்சாமி க்னதோ (அ)பி மதுஸூதன
அபி த்ரைலோக்ய-ராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீ-க்ருதே
நிஹத்ய தார்தராஷ்ட்ரான் ந: கா ப்ரீதி: ஸ்யாஜ் ஜனார்தன
கிம் – என்ன பலன்; ந: – நமக்கு; ராஜ்யேன – ஆட்சியினால்; கோவிந்த – கிருஷ்ணரே; கிம் – என்ன; போகை — இன்பம்; ஜீவிதேன – வாழ்வதால்; வா –அல்லது; யேஷாம் – யாருக்காக; அர்தே – பொருட்டாக; காங்க்ஷிதம் – விரும்பி; ந: – நம்மால்; ராஜ்யம் – ஆட்சி; போகா – உலகின்பம்; ஸுகானி -எல்லா மகிழ்வும்; ச – மற்றும்; தே – அவர்களெல்லாம்; இமே – இந்த; அவஸ்திதா: – நிலைபெற்ற; யுத்தே – இப்போர்க்களத்தில்; ப்ராணான் –உயிர்களை; த்யக்த்வா – விட்டு; தனானி – செல்வங்களை; ச – மேலும்; ஆசார்ய: – ஆச்சாரியர்கள்; பிதா: – தந்தையர்; புத்ரா: – மகன்கள்; ததா –மட்டுமின்றி; ஏவ – நிச்சயமாக; ச – மேலும்; பிதாமஹா – பாட்டனார்கள்; மாதுலா: – தாய் மாமன்கள்; ஷ்வஷுரா: – மாமனார்கள்; பௌத்ரா: – பேரன்கள்; ஷ்யாலா: – மைத்துனன்கள்; சம்பந்தின: – உறவினர்கள்; ததா – உடன்; ஏதான் – இவர்களெல்லாம்; ந – என்றுமில்லை; ஹந்தும் – கொல்ல; இச்சாமி – எனக்கு விருப்பம்; க்னத: – கொல்லப்படுவதால்; அபி – கூட; மதுஸுதன – மது என்ற அரக்கனைக் கொன்றவரே (கிருஷ்ணரே); அபி – ஆனாலும் கூட; த்ரை-லோக்ய – மூவுலகிற்குள்; ராஜ்யஸ்ய – ஆட்சிக்காக; ஹேதோ: – மாற்றத்தில்; கிம் நு – சொல்வதற்கு என்ன இருக்கின்றது; மஹீ-க்ருதே – நாட்டிற்காக; நிஹத்யா – கொலை புரிந்து; தார்தராஷ்ட்ரான் – திருதராஷ்டிரரின் புதல்வர்கள்; ந: – நமது; கா – என்ன; ப்ரீதி: – இன்பம்; ஸ்யாத் – இருக்கப் போகிறது; ஜனார்தன – எல்லா உயிர்களையும் பாதுகாப்பவரே.
கோவிந்தனே, ஆட்சி, மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கையையே கூட யாருக்காக நாம் விரும்புகிறோமோ, அவர்களே இப்போர்க்களத்தில் அணிவகுத்திருக்க, அவற்றை அடைவதால் என்ன பலன் வரப் போகின்றது? மதுசூதனரே, ஆச்சாரியர்கள், தந்தையர், பிள்ளைகள், பாட்டனார்கள், மாமன்கள், மாமனார்கள், பேரன்கள், மைத்துனர்கள், மற்றும் இதர உறவினர்கள் அனைவரும் தங்கள் வாழ்வையும் செல்வத்தையும் இழக்கத் தயாராக என்முன் நின்றிருக்க, அவர்கள் என்னைக் கொல்லலாம் என்ற பட்சத்திலும் நான் ஏன் அவர்களைக் கொல்ல விரும்ப வேண்டும்? உயிர்களையெல்லாம் காப்பவரே, இந்த பூமி ஒருபுறமிருக்கட்டும், மூவுலகம் கிடைப்பதாயினும், நான் இவர்களுடன் போர் செய்யத் தயாராக இல்லை. திருதராஷ்டிரரின் மகன்களைக் கொல்வதால் நாம் எவ்வித ஆனந்தத்தை அனுபவிக்கப் போகிறோம்?
ப.கீ 1.36
பாபம் ஏவாஷ்ரயேத் அஸ்மான் ஹத்வைதான் ஆததாயின:
தஸ்மான் நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ரான் ஸ-பாந்தவான்
ஸ்வ-ஜனம் ஹி கதம் ஹத்வா ஸுகின: ஸ்யாம மாதவ
பாபம் — பாவங்கள்; ஏவ – நிச்சயமாக; ஆஷ்ரேயேத் – வந்தடையும்; அஸ்மான் — நம்மை; ஹத்வா – கொல்வதால்; ஏதான் – இவர்களையெல்லாம்; ஆததாயின — அக்கிரமக்காரர்கள்; தஸ்மாத் – அதனால்; ந – என்றுமில்லை; அர்ஹா: – தகுதியுடைய; வயம் – நாம்; ஹந்தும் — கொல்ல; தார்தராஷ்ட்ரான் – திருதராஷ்டிரரின் மகன்கள்; ஸபாந்தவான் – நண்பர்களுடன்; ஸ்வ-ஜனம் – உறவினர்கள்; ஹி – நிச்சயமாக; கதம் – எவ்வாறு; ஹத்வா — கொல்வதால்; ஸுகின: – மகிழ்ச்சி; ஸ்யாம – நாம் அடைவோம்; மாதவ – செல்வத் திருமகளின் நாயகரே (கிருஷ்ணரே).
இத்தகைய அக்கிரமக்காரர்களைக் கொல்வதால் நமக்கு பாவமே வந்து சேரும். எனவே, திருதராஷ்டிரர் மகன்களையும் நமது நண்பர்களையும் கொல்லுதல் நமக்குச் சரியானதல்ல. அதிர்ஷ்ட தேவதையின் கணவரே, கிருஷ்ணரே, நமது சொந்த உறவினரைக் கொலை செய்துவிட்டு நாம் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும்? இதனால் நமக்கென்ன லாபம்?
ப.கீ 1.37 – 1.38
யத் யப் யேதே ந பஷ்யந்தி லோபோபஹத-சேதஸ:
குல-க்ஷய-க்ருதம் தோஷம் மித்ர-த்ரோஹே ச பாதகம்
கதம் ந க்ஞேயம் அஸ்மாபி: பாபாத் அஸ்மான் நிவர்திதும்
குல-க்ஷய-க்ருதம் தோஷம் ப்ரபஷ்யத்பிர் ஜனார்தன
யதி — இருந்தால்; அபி – கூட; ஏதே – அவர்கள்; ந – இல்லை; பஷ்யந்தி — பார்க்க; லோப – பேராசையால்; உபஹத – வெல்லப்பட்ட; சேதஸ: – இதயங்கள்; குல-க்ஷய – குலத்தை அழிப்பதில்; க்ருதம் — செய்த; தோஷம் — தீங்கு; மித்ர-த்ரோஹே – நண்பர்களுக்கு துரோகம்; ச – மேலும்; பாதகம் – பாவ விளைவுகள்; கதம் – ஏன்; ந – இல்லை; ஜ்ஞேயம் – இதை அறிய; அஸ்மாபி – நம்மால்; பாபாத் – பாவங்களிலிருந்து; அஸ்மாத் – இவர்கள்; நிவர்திதும் — விடுபட; குல-க்ஷய – குலநாசத்தால்; க்ருதம் – செய்த; தோஷம் – குற்றம்; ப்ரபஷ்யத்பி: — காணக் கூடியர்களால்; ஜனார்தன – கிருஷ்ணரே.
ஜனார்தனரே, பேராசையால் இதயத்தை இழந்த இம்மனிதர்கள், நண்பர்களுக்கு துரோகம் செய்வதையும் குலநாசம் செய்வதையும் பாவம் என்று அறியவில்லை. ஆனால் அவற்றைக் குற்றம் என்று அறிந்த நாம், ஏன் இப்பாவச் செயல்களில் ஈடுபட வேண்டும்?
ப.கீ 1.39
குல-க்ஷயே ப்ரணஷ்யந்தி குல-தர்மா: ஸநாதனா:
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்னம் அதர்மோ– (அ)பிபவத் யுத
குல-க்ஷயே – குலத்தை அழிப்பதில்; ப்ரணஷ்யந்தி — அழிவடைகிறது; குல-தர்மா – குல தர்மங்கள்; ஸநாதனா: – நித்தியமான; தர்மே – தர்மத்தில்; நஷ்டே — நஷ்டத்தில்; குலம் – குலம்; கிருத்ஸ்னம் — மொத்தமாக; அதர்ம: – அதர்மம்; அபிபவதி – மாற்றமடைகிறது; யுத – கூறப்படுகின்றது.
குலம் அழிவடைவதால் நித்தியமான குல தர்மம் கெடுகின்றது. இதனால் வம்சத்தில் மீந்திருப்பவர்கள் அதர்மங்களில் ஈடுபடுவார்கள்.
ப.கீ 1.40
அதர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குல-ஸ்த்ரிய:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ண-ஸங்கர:
அதர்ம – அதர்மம்; அபிபவாத் – உச்சமடைவதால்; க்ரிஷ்ண – கிருஷ்ணரே; ப்ரதுஷ்யந்தி — களங்கமடைந்தனர்; குல-ஸ்தரிய – குடும்பப் பெண்கள்; ஸ்த்ரீஷு – பெண்மை; துஷ்டாஸு – களங்கமடைவதால்; வார்ஷ்ணேய – விருஷ்ணி குலத்தவரே; ஜாயதே – இவ்வாறாகிறது; வர்ண-ஸங்கர: – தேவையற்ற சந்ததி.
கிருஷ்ணரே, குலத்தில் அதர்மம் தலையெடுக்கும்போது, குடும்பப் பெண்கள் களங்கமடைகின்றனர்; பெண்மையின் சீரழிவால், விருஷ்ணி குலத்தவரே, தேவையற்ற சந்ததி உண்டாகிறது.
ப.கீ 1.41
ஸங்கரோ நரகாயைவ குல-க்நானாம் குலஸ்ய ச
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்த-பிண்டோதக-க்ரியா:
ஸங்கர: – அத்தகு தேவையற்ற ஜனம்; நரகாய – நரக வாழ்விற்கு; ஏவ – நிச்சயமாக; குல-க்நானாம் – குலநாசம் செய்தவர்களின்; குலஸ்ய – குடும்பத்தின்; ச – மேலும்; பதந்தி – இழிவடைகின்றன; பிதர: – முன்னோர்; ஹி – நிச்சயமாக; ஏஷாம் – அவர்களின்; லுப்த – நின்று; பிண்ட – பிண்டம்; உதக – நீர்; க்ரியா: – கருமம்.
தேவையற்ற ஜனத்தொகைப் பெருக்கம், குடும்பத்திற்கும் குடும்பப் பண்பாட்டை அழிப்போருக்கும் நிச்சயமாக நரக நிலையை ஏற்படுத்துகிறது. அதுபோன்ற சீர்குலைந்த குலங்களின் முன்னோர்கள் வீழ்ச்சியடைகின்றனர்; ஏனெனில், அவர்களுக்கு பிண்டமும் நீரும் அளிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் நடப்பதில்லை.
ப.கீ 1.42
தோஷைர் ஏதை: குல-க்நானாம் வர்ண-ஸங்கர–காரகை:
உத்ஸாத்யந்தே ஜாதி-தர்மா: குல–தர்மாஷ் ச ஷாஷ்வதா:
தோஷை: – இதுபோன்ற தோஷங்களால்; ஏதை: – இவையெல்லாம்; குல-க்நானாம் – குலநாசம் செய்தவர்; வர்ண-ஸங்கர – தேவையற்ற குழந்தைகள்; காரகை: – செய்பவர்களால்; உத்ஸாத்யந்தே – அழிவுக்குக் காரணமாக; ஜாதி- தர்மா: – ஜாதி தர்மம்; குல-தர்மா – குல தர்மம்; ச – மேலும்; ஷாஷ்வதா — நித்தியமான.
குடும்பப் பண்பாட்டை அழித்து, தேவையற்ற குழந்தைகளைத் தோற்றுவிக்கும் தீயவர்களின் செயல்களால், அனைத்து வித ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் அழிவுறுகின்றன.
ப.கீ 1.43
உத்ஸன்ன–குல–தர்மாணாம் மனுஷ்யாணாம் ஜனார்தன
நரகே நியதம் வாஸோ பவதீத்-யனுஷுஷ்ரும
உத்ஸன்ன – கெடுக்கப்பட்ட; குல-தர்மாணாம் – குல தர்மத்தை உடையவரின்; மனுஷ்யாணாம் — அத்தகு மனிதர்; ஜனார்தன – கிருஷ்ணரே; நரகே – நரகத்தில்; நியதம் – எப்போதும்; வாஸ: – இருப்பு; பவதி – ஆகின்றது; இதி – இவ்வாறாக; அனுஷுஷ்ரும – சீடப் பரம்பரை வாயிலாகக் கேட்டுள்ளேன்.
மக்களைக் காக்கும் கிருஷ்ணரே, குல தர்மத்தைக் கெடுப்பவர் எப்போதும் நரகத்தில் வாழ்வதாக நான் சீடப் பரம்பரை வாயிலாகக் கேட்டுள்ளேன்.
ப.கீ 1.44
அஹோ பத மஹத் பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்
யத் ராஜ்ய-ஸுக-லோபேன ஹந்தும் ஸ்வ-ஜனம் உத்யதா:
அஹோ – ஐயகோ; பத – என்ன வினோதம்; மஹத் – பெரும்; பாபம் – பாவங்கள்; கர்தும் – செய்ய; வ்யவஸிதா – முடிவு செய்தோம்; வயம் – நாம்; யத் – அதனால்; ராஜ்ய-ஸுக-லோபேன – ராஜ்ஜிய சுகத்திற்கான பேராசையால் உந்தப்பட்டு; ஹந்தும் — கொலை செய்ய; ஸ்வ-ஜனம் – உறவினர்; உத்யதா: – முயற்சி.
ஐயகோ! மாபெரும் பாவங்களைச் செய்ய நாம் துணிந்துள்ளோமே, ராஜ்ஜிய சுகத்தை அனுபவிக்கும் ஆசையால் உந்தப்பட்டு, சொந்த உறவினர்களையும் கொல்ல முனைந்து விட்டோம்.
ப.கீ 1.45
யதி மாம் அப்ரதீகாரம் அஷஸ்த்ரம் ஷஸ்த்ர-பாணய:
தார்தராஷ்ட்ரா ரணே ஹன்யுஸ் தன் மே க்ஷேமதரம் பவேத்
யதி – இருப்பினும்; மாம் – என்னிடம்; அப்ரதீகாரம் – எதிர்ப்பின்றி; அஷஸ்த்ரம் – ஆயுதமின்றி; ஷஸ்த்ர பாணய: — ஆயுதமுடையோர்; தார்தராஷ்ட்ரா: — திருதராஷ்டிரரின் மகன்கள்; ரணே – போர்க்களத்தில்; ஹன்யு: – கொல்லட்டும்; தத் – அது; மே – எனக்கு; க்ஷேம-தரம் — அதிக நன்மை பயப்பதாக; பவேத் – ஆகிவிடும்.
ஆயுதமின்றியும் எதிர்த்துப் போரிடாமலும் இருக்கின்ற என்னை, ஆயுதம் தாங்கிய திருதராஷ்டிரரின் மகன்கள் போரில் கொன்றால், அது எனக்கு அதிக நன்மையைக் கொடுக்கும்.
ப.கீ 1.46
ஸஞ்ஜய உவாச
ஏவம் உக்த்வார்ஜுன: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஷத்
விஸ்ருஜ்ய ஸ-ஷரம் சாபம் ஷோக-ஸம்விக்ன-மானஸ:
ஸஞ்ஜய: உவாச – சஞ்ஜயன் கூறினான்; ஏவம் – இவ்வாறாக; உக்த்வா – சொல்லி; அர்ஜுன: – அர்ஜுனன்; ஸங்க்யே — போர்க்களத்தில்; ரதோ – ரதத்தின்; பஸ்த – இருக்கையில்; உபாவிஷத் – மீண்டும் அமர்ந்தான்; விஸ்ருஜ்ய – தனியே எறிந்து; ஸ-ஷரம் – அம்புகளுடன்; சாபம் – வில்; ஷோக – சோகத்தால்; ஸம்விக்ன — துன்பப்பட்டு; மானஸ: – மனதிற்குள்.
சஞ்ஜயன் கூறினான்: போர்க்களத்தில் இவ்வாறு பேசிய அர்ஜுனன், தனது வில்லையும் அம்புகளையும் ஒருபுறம் எறிந்து விட்டு ரதத்தில் அமர்ந்துவிட்டான். அவனது மனம் சோகத்தால் மூழ்கியுள்ளது.

