பகவத் கீதை – பாடத் தொகுப்பு, அத்யாயம் 9, ஸ்லோகம் 1 (பொருளுரை)
குறிக்கோள்
ஒன்பதாம் அத்யாயம் ஏன் மிகவும் ரகசியமான அறிவு (ராஜ-வித்யா, ராஜ-குஹ்யம்) எனக் கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல்; மேலும், பொறாமையற்ற பக்தர்களின் சங்கத்தில் செய்யப்படும் தூய பக்தி சேவை, எவ்வாறு ஒருவரை விடுதலைக்கும் , கிருஷ்ணரை பரமபுருஷ பகவானாக உணரும் தளத்திற்குக் கொண்டு செல்கிறது என்பதை அறிதல்.
பொருளுரை
ஒரு பக்தர் பரமபுருஷ பகவானைப் பற்றிய செய்திகளை மேலும் மேலும் கேட்கும்போது, அவர் ஆன்மிக ஒளி பெறுகிறார்.
இவ்வாறு கேட்பதற்கான முறை – ஸ்ரவணம் ஸ்ரீமத் பாகவதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. “பரமபுருஷ பகவானைப் பற்றிய செய்திகள் அபார சக்திகளால் நிரம்பியவை; பக்தர்களிடையே பரமபுருஷரைப் பற்றிய விஷயங்கள் விவாதிக்கப்படும் போது, அந்த சக்திகள், உணரப்படுகின்றன”.
இந்த உணர்வு, மனக் கற்பனையாளர்கள் அல்லது கல்வி அறிஞர்கள் கூட்டத்தினாலும் பெறப்படமுடியாது. ஏனெனில், இது அனுபவத்தால் உணரப்படும் அறிவு.
பக்தர்கள் எப்போதும் பரமபுருஷ பகவானின் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கின்றனர். கிருஷ்ண சிந்தனையில் ஈடுபடும் ஒவ்வொரு ஜீவாத்மாவின் மனநிலையும், நேர்மையும் பகவானால் அறியப்படுகிறது.
அத்தகைய ஒருவருக்கு, பக்தர்களின் சங்கத்தில் ஸ்ரீகிருஷ்ண விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்ள தேவையான புத்தியை பகவான் வழங்குகிறார்.
ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய விவாதம் மிகுந்த சக்தியுடையது.
ஒரு பாக்கியசாலி அத்தகைய சத்சங்கத்தைப் பெற்று, அந்த அறிவை உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள முயன்றால், அவர் நிச்சயமாக ஆன்மிக உணர்வில் முன்னேறுவார்.
அர்ஜுனனைத் தனது சக்திவாய்ந்த சேவையில் மேலும் மேலும் உயர்த்துவதற்காக, கிருஷ்ணர் இவ்வொன்பதாம் அத்யாயத்தில், இதற்கு முன் வெளிப்படுத்தியதை விடவும் மிகவும் ரகசியமான விஷயங்களை விளக்குகிறார்.
பகவத் கீதையின் முதலாம் அத்யாயம் முழு நூலுக்கும் ஒரு முன்னுரையாக உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் அத்யாயங்களில் கூறப்படும் ஆன்மிக அறிவு “இரகசியமானது” என அழைக்கப்படுகிறது.
ஏழாம் மற்றும் எட்டாம் அத்யாயங்களில் பக்தி சேவையை நேரடியாகச் சார்ந்த விஷயங்கள் விளக்கப்படுவதால், அவை மிக இரகசியமானவை எனக் கூறப்படுகின்றன.
ஆனால், ஒன்பதாம் அத்யாயத்தில் விவரிக்கப்படும் விஷயங்கள் கலப்படமற்ற, தூய பக்தி சேவையை பற்றியவை. எனவே இதுவே மிக மிக இரகசியமானது. கிருஷ்ணரைப் பற்றிய இந்த மிக மிக இரகசியமான அறிவில் நிலைபெற்றவர் இயல்பாகவே பெளதிகத்தை கடந்தவர்; அவர் பெளதிக உலகத்தில் இருந்தாலும், பெளதிக துன்பங்களை அனுபவிப்பதில்லை.
பக்தி ரசாமிருத சிந்துவில், பரமபுருஷ பகவானுக்கு அன்பான சேவை செய்ய உண்மையாக விரும்பும் ஒருவர், பெளதிக நிலையில் இருந்தாலும் முக்தி அடைந்தவராகவே கருதப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், பகவத் கீதையின் பத்தாம் அத்யாயத்தில், அத்தகைய சேவையில் ஈடுபட்டவர் முக்தி அடைந்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்.
இப்போது, இந்த முதலாவது ஸ்லோகம் மிக முக்கியத்துவம் கொண்டது.
“இதம் ஞானம்” என்ற சொற்கள், தூய பக்தி சேவையை குறிக்கின்றன.
அந்த பக்தி சேவை ஒன்பது வகை செயல்களால் அமைந்துள்ளது: ஶ்ரவணம் (கேட்டல்), கீர்த்தனம் (பாடுதல்), ஸ்மரணம் (பகவனை நினைவில் கொள்ளுதல்), பாதசேவனம் (சேவை செய்தல்), அர்ச்சனம் பக்தி செய்தல், வந்தனம் (பிரார்த்தனை), தாஸ்யம் (அடிபணிந்து கீழ்ப்படிதல்), ஸக்யம் (நட்பு பேணுதல்), ஆத்மநிவேதனம் (முழு சரணாகதி).
இந்த ஒன்பது பக்தி செயல்களைப் பயிற்சி செய்வதன் மூலம், ஒருவர் கிருஷ்ண சிந்தனை நிலைக்கு உயர்கிறார். அப்போது, மனம் பெளதிக மாசுகளிலிருந்து தூய்மையடைந்து, கிருஷ்ண அறிவியலை(தத்துவ விஞ்ஞானத்தை) உணர முடியும்.
ஒரு ஜீவாத்மா பெளதிகமானவன் அல்ல என்பதை வெறும் அறிவால் புரிந்துகொள்வது மட்டும் போதுமானதல்ல. அது ஆன்மீக உணர்வின் ஆரம்பமாக இருக்கலாம்; ஆனால் “நான் இந்த உடல் அல்ல” என்பதை உணர்ந்த பின்பு, உடலின் செயல்கள் மற்றும் ஆன்மீக உணர்வில் நிலைபெற்றவரின் செயல்கள் ஆகியவற்றின் வித்தியாசத்தைத் தெளிவாக அறிய வேண்டும்.
ஏழாம் அதிகாரத்தில் பரம புருஷோத்தமனுடைய ஐஸ்வர்யமிக்க சக்தி, அவருடைய பல்வேறு சக்திகள், கீழ்நிலை மற்றும் உயர்நிலை பிரகிருதிகள், மேலும் இம்முழு பெளதிக வெளிப்பாடு ஆகியவை ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளன. இப்போது ஒன்பதாம் அத்யாயத்தில், பகவானுடைய மகிமைகள் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.
இந்த ஸ்லோகத்தில் உள்ள “அனசூயவே” என்ற சம்ஸ்கிருதச் சொல் மிகவும் முக்கியமானது. பெரும்பாலான விளக்கவுரையாளர்கள், அவர்கள் மிகுந்த பாண்டித்யம் உடையவர்களாக கிருஷ்ணரிடம் பொறாமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பகவத் கீதைக்குத் தவறான விளக்கவுரை அளிக்கிறார்கள். கிருஷ்ணரிடம் பொறாமை கொண்டிருப்பதால், அவர்களின் விளக்கங்கள் பயனற்றவையாகின்றன.
பகவானின் பக்தர்கள் அளிக்கும் விளக்கவுரைகளே அங்கீகாரம் பெற்றவை. கிருஷ்ணரிடம் பொறாமை கொண்ட ஒருவர், பகவத் கீதையை விளக்கவோ அல்லது ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய முழுமையான அறிவை அளிக்கவோ முடியாது.
ஸ்ரீகிருஷ்ணரின் குணங்களை அறியாமல் விமர்சிப்பவன் முட்டாள் ஆவான்.
எனவே, அத்தகைய விளக்கவுரைகள் மிகுந்த கவனத்துடன் தவிர்க்கப்பட வேண்டும். கிருஷ்ணர் பரமபுருஷ பகவான், தூய தெய்வீக புருஷர் என்பதை உணர்ந்தவர்களுக்கு இந்த அத்யாயங்கள் மிகுந்த பயன் அளிக்கும்.
நோக்கங்கள்
- கேட்டல் மற்றும் ஜபித்தல் ஆகியவற்றை பக்தர் சங்கத்தில் செய்வதின் மதிப்பை உணர்தல்.
- பகவானுடைய உபதேசங்கள் வெறும் யூக அறிவாக அல்லாமல் திவ்ய சக்தி நிறைந்தவையாகும் என்பதை உணருதல்.
- அறிவுரைகள் படிப்படியாக பகவத் கீதையில் வெளிப்படுவதைப் புரிந்து கொள்ளுதல்.
- ஏன் ஒன்பதாம் அத்யாயம் ராஜ-வித்யா, ராஜ-குஹ்யம், மிக மிக இரகசியமானது என அழைக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
- இந்த அத்யாயத்தின் சாரம் தூய பக்தி சேவையே என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
- பந்தப்பட்ட நிலையில் இருந்தாலும், உண்மையான பக்தியில் ஈடுபடுவோர் முக்தியடைந்தவர்களாகக் கருதப்படுவதை அறிதல்.
- “இதம் ஞானம்” என்பது ஒன்பது பக்தி சேவையின் செயல்முறைகளைக் குறிக்கிறது என்பதை அறிதல்.
- “நான் இந்த உடல் அல்ல” என்ற உணர்வு ஆன்மீகப் பயணத்தின் ஆரம்பமே; உண்மையான உணர்வு பக்தி சேவையில் ஈடுபடுதலே என்பதைப் புரிந்து கொள்ளுதல்.
- ஏழாம் மற்றும் எட்டாம் அத்தியாயங்களில் கூறப்பட்ட பகவானுடைய சக்திகளும் ஐஸ்வர்யங்களும் ஒன்பதாம் அத்தியாயத்தின் உபதேசங்களுடன் இணைத்து காணுதல்.
- இப்போது இவ்வத்தியாயத்தில் பகவானின் உன்னத மகிமைகள் வெளிப்படுகின்றன என்பதை உணர்தல்.
- “அனசூயவே” – என்ற சொல்லின் பொருள், பகவானிடத்தில் பொறாமையற்ற நிலை என்பதை உணர்தல் .
- பகவானிடத்து பொறாமை கொண்ட பண்டிதர்கள் கீதையின் உண்மைப் பொருளை மாற்றி விளக்கி, ஆன்மீகத் தேடலில் உள்ளவர்களை வழித்தவறச் செய்யலாம் என்பதை கவனமாக அறிதல்.
- முறையான சீடப்பரம்பரையில் வந்த பக்தர்களின் விளக்கவுரைகளே அதிகாரப்பூர்வமானவை என்பதை ஏற்றுக்கொள்ளுதல்.
- கிருஷ்ணரை பரமபுருஷ பகவானாக ஏற்றுக்கொள்வதே உண்மையான தகுதி என்பதை உணர்தல்.
முக்கிய குறிப்புகள்
- பக்தர்களின் சங்கத்தில் கேட்பதுதான் உணர்தலுக்கு திறவுகோல்.
- பக்தி இல்லாமல் மனக்கற்பனையும் பாண்டித்தியமும்(அறிவார்ந்த தேர்ச்சி) ஸ்ரீகிருஷ்ணரை வெளிப்படுத்த முடியாது.
- பகவத் கீதை தன் அறிவை படிப்படியாக வெளிப்படுத்தி, இறுதியில் ஒன்பதாம் அத்தியாயத்தில் உச்ச நிலையை அடைகிறது.
- பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயம் ராஜவித்யா–ராஜகுஹ்யம் என அழைக்கப்படுகிறது — அதாவது, பரம உயர்ந்ததும் மிக இரகசியமானதும் ஆன அறிவு.
- தூய பக்தி சேவையே இவ்வத்யாயத்தின் சாரம்.
- பக்தி சேவையில் ஈடுபட்டிருந்தால் கட்டுண்ட பக்தர் கூட முக்தியடைந்தவராகக் கருதப்படுகிறார்.
- “இதம் ஞானம்” = ஒன்பது வகை பக்தி செயல் முறைகள்.
- ஆன்மீக உணர்வு வெறும் “நான் உடல் அல்ல” என்ற கருத்தில் முடிவடையக் கூடாது; அது பக்தி செயல்பாட்டில் வெளிப்பட வேண்டும்.
- முந்தைய அத்யாயங்கள் பகவானுடைய சக்திகள் மற்றும் ஐஸ்வர்யங்களைப் பற்றி கூறின; இப்போது அவருடைய பரம மகிமைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
- “அநஸூயவே” என்பது பகவானிடத்து எந்தவிதப் பொறாமையும் இல்லாத தூய்மையான மனப்பாங்கைக் குறிக்கிறது; அதுவே இம்மிக இரகசியமான அறிவை ஏற்கும் உண்மையான தகுதியாகும்.
- பொறாமை கொண்ட அறிஞர்கள் தவறான விளக்கவுரைகளை வழங்குகிறார்கள். அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
- பக்தர்களின் விளக்கவுரைகளே உண்மையானவை.
- ஸ்ரீகிருஷ்ணர் பரம புருஷோத்தமன் என்பதை மனமாற ஏற்றுக்கொள்ளும் போது தான் ஆன்மீக அறிவின் உண்மைப் பலன் கிடைக்கிறது.

