அமலாகி ஏகாதசி

மந்தாதா அரசர் ஒரு முறை வசிஷ்டரிடம், ” என்னை ஆன்மீக முன்னேற்றம் அடையச் செய்யும் ஒரு விரதம் பற்றி கூறுங்கள்” என்றார்.
வசிஷ்டர் அரசரிடம், “விரதங்களில் சிறந்ததும், ஏராளமான செல்வத்தை வழங்கக் கூடியதும், பாவங்களில் இருந்து விடுவிப்பதும், முக்தியைத் தரக் கூடியதும், ஆயிரம் பசுக்களை தூய பிராமணனுக்கு தானம் செய்த பலனை தரக் கூடியதும் ஆன அமலாகி ஏகாதசி பற்றி கூறுகிறேன். ஒரு முறை வேடன் ஒருவன் உயிர்களைக் கொன்று பிழைப்பு நடத்துபவனாக இருந்தாலும், இந்த ஏகாதசி விரதம் இருந்து முக்தி அடைந்தது பற்றி கூறுகிறேன், கேட்பீராக”.
“விதேஷி நாட்டில், வைஸ்யர், பிராமணர், க்ஷத்திரியர் மற்றும் சூத்திரர் சமமான வேதம் அறிந்து வலிமை மற்றும் அறிவில் சமமாக மதிக்கப்பட்டனர். ஒருவரும் நாத்திகராகவோ, தவறு செய்பவராகவோ இல்லாததால் வேத மந்திரம் எப்போதும் முழங்கியது. சோம அல்லது சந்திர வம்சத்து அரசன் பாசபிந்துகன் ஆட்சி செய்தான். சித்ரரதா என்றும் அழைக்கப் பட்ட அவர் நேர்மையானவர் மற்றும் மதப் பற்று மிகுந்தவர். பத்தாயிரம் யானை பலம் மிக்கவர் ஏராளமான செல்வமும், ஆறு வேதப் பிரிவுகளில் தேர்ந்தவரும் ஆவார்.
சித்ரரதருடைய ஆட்சியில் எல்லோரும் தங்கள் தர்மங்களை முறைப்படி பின்பற்றினர்.
ஏழையோ கஞ்சனோ இன்றி, வெள்ளம், வறட்சி, நோய் இன்றி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். மன்னரும், மக்களும் சிவனையும், விஷ்ணுவையும் வணங்கி மாதம் இருமுறை ஏகாதசி விரதம் இருந்து வந்தனர். இவ்வாறு விதேஷி நாட்டு மக்கள் புலனின்பம் தவிர்த்து பகவான் ஹரியிடம் சரணடைந்து மிக மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் . பங்குனி மாதத்தில் ஒரு முறை துவாதசி திதியுடன் கூடிய அமலாக்கி ஏகாதசி வந்தது. மன்னரும் மக்களும் முறைப்படி விரதம் இருந்தனர்.
காலையில் எழுந்து குளித்து அமலாகி மரம்(நெல்லி) உள்ள விஷ்ணுவின் கோவிலுக்கு மன்னரும் மக்களும் சென்றனர். முதலில் அரசரும் குருமார்களும் மரத்திற்கு பந்தலிட்டு, தங்கம், வைரம், முத்து, பவளம், தூபம் காண்பித்து குடம் நீர் விட்டனர். பரசுராமரிடம், “ரேணுகாவின் மைந்தனே! இந்த மரத்தடியில் வந்து நாங்கள் அளித்த பொருட்களை ஏற்று எங்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்” என்று வேண்டினர். பின்னர் மரத்திடம், “பிரம்மாவின் வம்சமே! பாபம் தரும் செயல்களை அழித்துவிடு, இராமர் உன்னைத் தொழுத பெருமை உடைய நீ எங்கள் பாபங்களை மன்னித்து விடு,” எனு வேண்டினர்..
மன்னரும் மக்களும் முறைப்படி விரதம் இருந்தனர். அப்பொழுது தான் கொலை பாபம் செய்யும் வேடன் இந்த ஏகாதசி விரதம் பார்க்க நேரிட்டது. இரவு முழுதும் விழித்து அவன் மன்னரும் மற்றவரும் செய்யும் பூஜையைக் கண்டான். அழகான இந்த விளக்குகள் அலங்கரித்த கானகத்தில் நடப்பது என்ன? பீடத்தின் மீது குடத்தில் நீர் வைத்து வழிபடுவதையும், தாமோதரன் உருவத்தையும் கண்டான். மறு நாள் சூரிய உதயத்தில் மன்னரும் மக்களும் தங்கள் நாடு திரும்ப, வேடனும் தன் வீடு திரும்பி உணவு உண்டான். சிறிது நாட்களுக்கு பின் இறந்த போது, ஏகாதசிப் பூஜை செய்ததன் பலனாக மிகப் பெரும் மன்னராக யானை, குதிரை, தேர், காலாட்படைக்கு அதிபதியாக ஜெயந்தி நாட்டின் அரசன் விதுரதனின் மகன் வசுரதனாக பிறந்தான். வசுரதன் சூரியனைப் போன்ற பேரொளியுடன், சந்திரனை போன்ற சக்தியுடன் விஷ்ணுவை போன்ற வலிமையுடன் பூமியை போன்ற மன்னிப்புடன் விளங்கினான். வேத அறிவு மிக்க அவர் விஷ்ணுவின் பக்தித் தொண்டில் ஈடுபட்டார்.
அரசாட்சியை திறமையாகச் செய்தவர் தன் நாட்டு மக்களை தன் குழந்தை போல் பார்த்துக் கொண்டார். பல்வேறு யாகங்கள் செய்து தன் நாட்டு மக்களின் குறைகளையும் தீர்த்தார்.
ஒரு முறை வேட்டைக்குச் சென்ற அவர் வழி தவறி திரிந்து ஒரு மரத்தடியில் தன் கையை தலையணையாக வைத்து படுத்தார். அங்கு வந்த நாடோடி பழங்குடியினர் அரசரிடம் தங்கள் பகைமை தீர அவரை எப்படி தீர்க்கலாம் என்று விவாதித்தனர். அரசர் தங்கள் தாய், தந்தை, மாமன், மச்சான், பேரன், மருமகன் எல்லோரையும் அழித்த காரணத்தால் தாங்கள் அனாதையாக திரிவதாக கூறினார்கள். இதைக் கூறியபடி கூர்மையான ஈட்டி, கத்தி, கயிறு, அம்பு போன்ற ஆயுதங்களால் அரசரை தாக்கினர். ஆனால் அரசர் எந்த ஆயுதத்தாலும் தாக்கப் படாமல் இருந்தார். விரைவில் அந்தப் புலையர்கள் தங்கள் மதி இழந்து வலுவிழந்து மயங்கி விழுந்தனர். அவர்கள் அதிர்ச்சி உற அரசரின் உடலில் இருந்து ஒரு அழகிய பெண் தோன்றினாள். அவள் பேரழகுடன், ஒளி வீசும் ஆபரணங்கள், மணம் வீசும் மாலை அணிந்து கண்களில் கோபக் கனல் பறக்க இருந்தாள். தன் கையில் இருந்த சக்கரத்தால் அந்த புலையர்கள் எல்லோரையும் கொன்று குவித்தாள். அரசர் கண் விழித்ததும் தன்னை காக்க அவர்களை எதிர்த்தது யார் என்று யோசித்தார். அப்போது அசரீரி தோன்றி பகவான் விஷ்ணுவே அவரை காத்ததாக தெரிவித்தது. சுயநலம் இன்றி எல்லோரையும் காக்கும் கேசவனின் குணத்தால் ஈர்க்கப்பட்டு தன் நாடு திரும்பி இந்திரனைப் போல் இனிதாக தன் நாட்டை ஆண்டான்.
வசிஷ்டர் மந்தாதாவிடம் “இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பகவான் கிருஷ்ணரின் வைகுந்தத்தை அடைவர்” என்ற உண்மையை எடுத்துக் கூறினார்..
இதுவே பங்குனி, சுக்ல பட்ச ஏகாதசி அல்லது அம்லாகி ஏகாதசியின் சிறப்பாகும் என்று பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பு:
அமலாகி மரம் இல்லாவிட்டால் துளசி செடிக்கு தீபம் வைத்து வழிபடலாம்.

