அஜ ஏகாதசி

“ஓ ! ஜனார்தனா! பத்ரபாதமாதம் (ஆகஸ்டு – செப்டம்பர்) கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயரென்ன அதன் பயன் என்ன என்று கூறுங்கள்” என்று கேட்டார் யுதிஷ்டிரர்.
“ஓ யுதிஷ்டிரா! இந்த பாபம் தீர்க்கும் ஏகாதசி அஜஏகாதசி எனப்படும். ரிஷிகேசரை வழிபட்டு இந்த ஏகாதசி விரதம் இருப்பதால் நம் பாபம் நீங்கும். கேட்பவரும் தங்கள் பாபம் நீங்கப்பெறுவர். இதைவிட சிறந்த ஒருநாள் பூலோகத்தில் மற்றும் மேலோகத்தில் இல்லை.
முற்காலத்தில் வாய்மை உடைய அரிச்சந்திரன் என்ற அரசர் இருந்தார். அவருக்கு சந்திரமதி என்ற மனைவியும் லோகிதாசன் என்ற மகனும் இருந்தனர். விதியின் பயனாக அவர் தன்நாட்டையும் இழந்து மனைவியையும், மகனையும் விற்கவும், புலையனிடம் அடிமைப்பட்டு அரிச்சந்திரன் சுடுகாட்டை காவல் காக்கவும் நேரிட்டது.
சோமரசம் மற்ற பானங்களுடன் கலந்தாலும் தன்மதிப்பை இழப்பதில்லை, அதுபோல் அவர் தாழ்ந்த பணியில் இருந்தாலும் தன் வாய்மையைக் கைவிடவில்லை. இவ்வாறாக பல ஆண்டுகள் சென்றன. தன் நிலைமை எப்போது மாறுமோ என்று துயரம் அடைந்தார் அரிச்சந்திரன். ஒருமுறை கௌதமரிஷியைக் கண்டு “மற்றவர்களுக்கு உதவுவதற்காக பிராமணர்கள் படைக்கப்பட்டனர் போலும் என்று மகிழ்ந்து, அவரைப் பணிந்து தன் பாபம் தீர்க்க வேண்டினார்”. கௌதமரிஷி அவரின் பரிதாபமான கதையைக் கேட்டு எப்படி ஒரு உயர்ந்த மனிதன் பிணத்தின் உடையை எடுக்கும் கீழான நிலைக்கு தள்ளப்பட்டார் என்று நினைத்தார். அவருக்கு உதவ நினைத்து, “ஓ மகாராஜா! பத்ரபாத மாதம் கிருஷ்ணபட்சம் வரும் ஏகாதசி அஜ ஏகாதசி அல்லது ஆனந்தா ஏகாதசி என்று அழைக்கப்படும். இந்த ஏகாதசி அன்று முழுமையான விரதம் இருப்பதால் எல்லாபாவமும் நீங்கும். இன்னும் ஏழுநாட்களில் வரும் இந்த ஏகாதசி அன்று விரதம் இருந்தால் தற்போது வரையிலான எல்லா பாவமும் நீங்கும். உன் புண்ணியத்தால் தான் நீ என்னை சந்திக்க நேரிட்டது. உனக்கு நல்ல எதிர்காலம் அமையும்” என்று கூறி மறைந்தார்.
அரிச்சந்திரன் முனிவர் கூறியபடி மேலான இந்த ஏகாதசி விரதம் கடைபிடித்து தன் நாட்டையும், இறந்த தன் மகன், மனைவியையும் மீண்டும் அடைந்து, தேவதுந்துபி முழங்க, தன் சுற்றத்தாருடன் தேவலோகம் அடைந்தார்.
ஓ! பாண்டவா! இந்த விரதம் இருப்பவர் தன் பாபம் நீங்கப் பெறுவதோடு, குதிரைதானம் செய்வதால் கிடைக்கும் பயனையும் அடைவர்” என்று கூறினார்.
இதுவே பத்ரபாத கிருஷ்ணபட்ச ஏகாதசி அல்லது அஜ ஏகாதசி விரத மகிமை என்று பிரம்மவைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

