அபரா ஏகாதசி

ஸ்ரீ யுதிஷ்டிர மகாராஜா, “ஓ ஜனார்தனா, ஜ்யேஷ்ட மாதத்தின் (மே-ஜூன்) தேய்பிறை  பதினைந்து நாட்களில் (கிருஷ்ண பக்ஷ) ஏற்படும் ஏகாதசியின் பெயர் என்ன? இந்தப் புனித நாளின் மகிமைகளை விவரிக்கவும் ” என்று வேண்டினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், “ஓ ராஜா, இந்த ஏகாதசி மிகவும் உயர்ந்ததாகவும், சிறப்பானதாகவும் இருப்பதால், மிகப்பெரிய பாவங்களைக் கூட அதன் தூய்மையால் அழிக்க முடியும்” என விளக்க ஆரம்பித்தார்.

ஓ புனித ராஜா!  அளவற்ற நன்மையளிக்கும் இந்த ஏகாதசியின் பெயர், அபரா ஏகாதசி. இந்த புனித நாளில் எவரெல்லாம் விரதத்தைக் கடைபிடிக்கிறார்களோ அவர் பிரபஞ்சம் முழுவதும் பிரபலமடைகிறார். மிகப்பெரிய பாவங்கள் கூட அபரா ஏகாதசியைக் கடைபிடிப்பதன் மூலம் முற்றிலுமாக அழிக்கப்படும்.

அபரா ஏகாதசி கதை சுருக்கம் :

அம்பரீஷன் எனும் மன்னன் திருமாலின் அதிதீவிர பக்தன்.  வருடம் முழுவதும் தவறாமல் ஏகாதசி விரதமிருந்து, விஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்து, அருளைப் பெற்று வந்தான்.  ஒருமுறை மன்னன் ஏகாதசி விரதமிருந்து, அதை முடிக்கும் தறுவாயில், துர்வாச முனிவர் அங்கு வந்துவிட்டார். விரத வேளையிலும் துர்வாச முனிவரை ஓடிச்சென்று வரவேற்ற மன்னன், அவரை உணவருந்த அழைத்தான். முனிவரும், அம்பரீஷனின் வேண்டுகோளை ஏற்று, நதியில் நீராடிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால், நீராடப்போன துர்வாச முனிவர், குறித்த நேரத்துக்குள் திரும்பி வரவில்லை. யாருக்கும் காத்திருக்காத காலம், அப்போது துர்வாச முனிவருக்கும் காத்திருக்காமல், விரைந்து ஓடியது. விரத காலம் முடிவதற்குள் மன்னன் விரதத்தை முடித்து, உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், விரதபங்கம் ஏற்பட்டுவிடும். இத்தனை வருடங்களாகத், தொடர்ந்து கடைப்பிடித்து வரும், ஏகாதசி விரதத்தின் பலனைப் பெறமுடியாமல் போய்விடும். இதனால், மன்னன் பெருமாளை நினைத்தபடியே, துளசி தீர்த்தத்தை அருந்தி, தனது உபவாசத்தை முடித்துக்கொண்டார்.

இதைத் தனது  ஞான சக்தியால் அறிந்த துர்வாசர், கடும் கோபம் கொண்டு, தனது தலைமுடியைப் பிடுங்கி, ஆயுதமாக்கி எறிந்தார். அது பூதமாக மாறி, மன்னனைத் துரத்தத் தொடங்கியது. மன்னன், பெருமாளின் பாதங்களைச் சரணடைந்தான். பெருமாள், தன் பக்தனைக் காக்க, சக்கராயுதத்தை ஏவினார். சக்கராயுதம், துர்வாச முனிவர் ஏவிய பூதத்தை அழித்துவிட்டு, அவரையும் விரட்டியது. வேறு வழியில்லாமல், பெருமாளிடமே சரணடைந்தார் துர்வாசர்.

பெருமாள், “என் பக்தனுக்கே நான் அடிமை. என் பக்தன் உன்னை மன்னித்தால் நானும் உன்னை மன்னிக்கிறேன்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். துர்வாசரும், அம்பரீஷனிடம் சென்று, மன்னிப்பு கேட்டார். மன்னன், சக்கரத்தாழ்வாரிடம் வேண்டி, அவரைக் காப்பாற்றினான். அன்றைய தினத்தில், அம்பரீஷன் மேற்கொண்ட விரதம்தான், அபரா ஏகாதசி விரதம். அந்த விரதம், அவனைக் காப்பாற்றியதுடன், அளவற்ற செல்வத்தையும், புகழையும் கொண்டு வந்து சேர்த்தது.

பெருமாள் பக்தனைத் தாக்க, பூதத்தை ஏவிய தனது பாவத்தை, துர்வாச முனிவரும், அபரா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு, போக்கிக்கொண்டார்.

அபரா ஏகாதசி விரத மகிமை:

இந்த அபரா ஏகாதசி விரதமானது பாவங்களை அழிப்பதுடன் அளவில்லாத செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். மங்காத பேரும், புகழும் கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் புஷ்கரில் மூன்று முறை நீராடுவது, சூரியன் மகர ராசியில் நுழையும்போது பிரயாகையில் குளிப்பது, காசியில் சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பது, கயா என்னுமிடத்தில் திருமாலின் பாதங்களில் சரணடைவது, குரு சிம்ம ராசியில் நுழையும்போது கௌதமி நதியில் நீராடுவது போன்றவற்றை மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்களை விடவும் அதிக பலன்களைத் தரக்கூடியது இந்த அபரா ஏகாதசி விரதம். இந்த அபரா ஏகாதசி, மரத்தை வெட்டி வீழ்த்தும் கூர்மையான ஆயுதத்தைப் போன்று, நம் பாவங்களையும் வெட்டி வீழ்த்தும் தன்மை வாய்ந்தது. 

பொய் சாட்சியம் அளிப்பது, மிகப் பெரிய பாவம். மற்றொருவரை பொய்யாக அல்லது கிண்டலாக புகழ்பவன், தராசில் எடை போடும்பொழுது ஏமாற்றுபவன், தனது வர்ணாசிரமத்தின் கடமைகளை நிறைவேற்றத் தவறியவன், மற்றவர்களை ஏமாற்றுபவன், போலி ஜோதிடன், மோசடி கணக்காளர் மற்றும் தவறான ஆயுர்வேத மருத்துவர், இவர்களுடைய பாவங்கள் எல்லாம் நிச்சயமாக பொய் சாட்சியம் அளிப்பதை போலவே மோசமான பாவச்செயல்கள் ஆகும். அவர்கள் அனைவரும் கட்டாயாமாக நரகத்தின் தண்டனைகளை அனுபவித்தே ஆக வேண்டும். ஆனால் அப்பேர் பட்டவர்கள் கூட இந்த எளிய விரதமான அபரா ஏகாதசியைக் கடைப்பிடிப்பதன் மூலம், தங்கள் பாவத்தின் வினைகளிலிருந்து முற்றிலும் விடுபடுலாம்.

தங்கள் க்ஷத்திரிய தர்மத்திலிருந்து நழுவிய அரசன், போர்க்களத்திலிருந்து புறமுதுகுக் காட்டி தப்பி ஓடுய வீரர்கள் பெரும் பாவிகளாகி,  கொடூரமான நரகத்திற்குச் செல்வார்கள். ஆனால், அத்தகைய வீழ்ச்சியடைந்த க்ஷத்ரியர் கூட, அபரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தால், அந்த மாபெரும் பாவத்தின் வினையிலிருந்து விடுபட்டு சொர்க்கத்திற்குச் செல்லலாம். ஒரு சீடர் அவருடைய ஆன்மீக குருவிடமிருந்து பெறக் கூடிய எல்லா ஆன்மீக ஞானத்தை உபதேசமாகப் பெற்றுக் கொண்டப்பின், குரு நிந்தனை செய்த பாவத்தைக்கூட  இந்த அபரா ஏகாதசி விரதமிருந்தால் அவருடைய அந்த மாபெரும் பாவம் நீங்கி முக்தி அடைவார்” என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கினார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare