திருமாலை பாசுரம் – விரிவான விளக்கம்
பாசுரம் 1: காவலிற் புலனை வைத்து
கிருஷ்ணனே! நின் நாமத்தைக் கற்றேன்

காவலிற் புலனை வைத்துக் கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து *
நாவலிட்டுழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே *
மூவுலகு உண்டுமிழ்ந்த முதல்வ! நின்நாமம் கற்ற *
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மாநகருளானே!
பொருள்
காவலில் புலனை வைத்து —பஞ்சேந்திரியங்களையும் (ஐந்து புலன்களையும்) கட்டுக்குள் வைத்து; கலிதன்னைக் — பாவங்களை; கடக்கப் பாய்ந்து — வெகுதூரம் உதறித்தள்ளி; நாவலிட்டு — வெற்றிக் கூச்சலிட்டு; உழிதருகின்றோம் — கால்களை வைத்துத் திரிகின்றோம்; நமன் தமர் தலைகள் மீதே — யமதூதர்களின் தலைமேல்; மூவுலகு — மூன்று உலகங்களையும்; உண்டு — பிரளய காலத்தில் உண்டு; உமிழ்ந்த — பின் வெளிப்படுத்திய; முதல்வ! — முழு முதற்கடவுளே!; கற்ற — கற்றதனாலுண்டான; ஆவலிப் புடைமை கண்டாய் — செருக்கினாலே; அரங்க மாநகருளானே! — ஸ்ரீரங்கத்திலிருப்பவனே.
தொகுப்புரை:
ஸ்ரீ கிருஷ்ணரின் விரிவாக்கமான அரங்கநாதரே, ஆதிசேஷன் மீது பள்ளிகொள்ளும் ஸ்ரீரங்கத்து முழுமுதற் கடவுளே, கிருஷ்ணரே நீரே பழமையானவர்; மூன்று உலகங்களையும் விழுங்கி மீண்டும் உமிழ்ந்தவர். ஐம்புல அனுபவங்களால் வரும் சுகங்களை நாம் விரும்பவில்லை; இனி நாம் பாவம் செய்ய மாட்டோம். இனி யமதூதர்கள் எங்களை சிரமப்படுத்த முடியாது. ஏனெனில் உங்கள் திருநாமங்களை கற்றுக் கொண்டு ஜபிக்கிறோம். அதனால் நாங்கள் துணிவுடன் தைர்யமாக உள்ளோம்.

ஶ்ரீ அரங்கநாதர், ஶ்ரீ ரங்கம்
ஶ்ரீஅரங்கநாதப் பெருமாளை ஸ்ரீ கிருஷ்ணராகக் கருதுவதைப் பற்றி ஒரு குறிப்பு:
திருப்பாணாழ்வார் கலியுகத்தில் தோன்றினார்.காவிரி ஆற்றங்கரையில் ஒரு புறம் தான் வாழ்ந்த உறையூர் என்ற ஊரில் இருந்து அவர் காவிரி ஆற்றின் மறுபுறத்திலிருந்த ஶ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள அரங்கநாதப் பெருமாளை பற்றிப் பாடுவார். ஆனால் ஆற்றின் மறுபுறம் உள்ள அரங்கரின் கோயிலுக்குள் நுழையவே இல்லை. ஏனெனில் கோயிலில் இருக்கும் குறைவான ஞானம் கொண்ட அர்ச்சகர்கள் தூய பக்தர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டினர்.
ஒருநாள், அர்ச்சகர்களில் ஒருவர், திருப்பாணாழ்வார் மீது பாகவத அபச்சாரம் (சிறுக்கல்லை அவர் மீது எறிவதன் மூலமாக) செய்தார். அந்த அர்ச்சகர், அரங்கரின் கோவிலுக்கு சென்றபோது அரங்கநாதப் பெருமாள் தனது கருவறையை மூடிவிட்டு, திருப்பாணாழ்வாரை கோயிலுக்குள் அழைத்து வரும்படி அர்ச்சகருக்கு உத்தரவிட்டார். எனவே அர்ச்சகர் திருப்பாணாழ்வாரின் தாமரைப் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேட்டு ஆழ்வாரை தனது தோள்களில் அரங்கரின் கோவிலுக்கு சுமந்து சென்றார். அப்போதுதான் அரங்கநாதரை முதன்முதலில் நேரில் பார்த்த ஆழ்வார் அவரைப்போற்றி “அமலன் ஆதி பிரான்” என்ற பாசுரத்தைப் பாடினார். அதில் ஆழ்வார் அரங்கநாதப் பெருமாளை
“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன்……” என்று பாடினார். இது அரங்கநாதரை ஸ்ரீ கிருஷ்ணராகக் குறிக்கிறது.
ஆகவே, முழுமுதற் கடவுள் ஶ்ரீ கிருஷ்ணர் தான் திருவரங்கத்தில் உறையும் அரங்கநாதராக ஜீவாத்மாக்களுக்கு அருள்பாலிக்கிறார் என நாம் அறியலாம்.
விளக்கவுரை:
“காவலில் புலனை வைத்தல்” என்றால் ஜீவாத்மாக்கள், புலன்களை அடக்காமல் கட்டுப்பாடின்றி சஞ்சரிக்க விடுதல் என்பதாகும். இதனால் ஜீவாத்மாக்களுக்கு பலகுறைபாடுகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், பின் வரும் பாசுரத்தில் கூறப்படும் பயனை (அதாவது, யமதர்மராஜா மற்றும் அவரது தூதர்களின் தலைமேல் நடக்கும் சாதனை) அடைய முடியாது. இவ்வாறு புலன்களை கட்டுப்படுத்தாதவன், மனித உருவில் பிறந்த மிருகமாகவே விளங்குவான்.
மிருகங்கள் புலன்களில் கட்டுப்பாடு இல்லாதவையாக இருப்பதுபோல், மனிதனும் புலன்களை கட்டுப்படுத்தவில்லை என்றால் அவனும் மிருகமும் ஒன்று. அத்தகையவன் சாஸ்திரங்களில் கூறப்பட்ட ‘செய்ய வேண்டிய செயல்களைச் செய்யவும், தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்க்கவும்’ என்ற கட்டளைகளைப் (சாதனா பக்தி) பின்பற்ற முடியாது.
அப்படிப் பட்ட ஜீவாத்மா யமதர்மராஜாவை எப்படி கடந்து செல்ல முடிகிறது?
எம்பெருமான் முழு முதற்கடவுளின் மஹிமை மிக்க திருநாமங்களை சொல்லும் ஜீவாத்மாவின் தோஷங்கள் மற்றும் குற்றங்கள் நீங்கப்பெற்று யமனைத் தாண்டும் தகுதியும்,ஆற்றலையும் பெற்று யமதர்மராஜாவை கடந்து செல்ல முடிகிறது.
பாம்பு அல்லது தேள் போன்ற விஷம் வாய்ந்த உயிரினங்கள் கடித்தால், அதனால் ஏற்படும் விஷத்தை குறைப்பதற்காக எண்ணெய்க் குளியல் செய்யக் கூடாது, சில உணவுகள் தடுக்கப்படுகின்றன, தூங்க கூட அனுமதியில்லை என்பன போன்ற பல விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் அந்த விஷம் மீது மருந்தளிக்கத் திறனுடைய நிபுணர் ஒருவர், ‘நீ எந்த கட்டுப்பாடுகளும் கடைப்பிடிக்க வேண்டியதில்லை, என் மருந்து போதுமானது’ என்று கூறினால், அது எவ்வளவு வியப்பாக இருக்கும்?
அதேபோல், எம்பெருமானின் திருநாமங்களை (ஹரேகிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே) ஜபிப்பது, சம்சார சாகரத்தில் ஊறியுள்ள ஜீவாத்மாவின் விஷத்தை நீக்கி, அவனைத் தவறுகளிலிருந்து விடுவித்து, மன சாந்தியுடன் வாழும் வாழ்க்கையை அருளும் அற்புத மருந்தாகும்.
காவலில் புலனை வைத்து
“வைத்து” – இதன் பொருள், ஜீவாத்மா தன்னுடைய புலன்களைத் தவறுதலாகச் சஞ்சரிக்க அனுமதித்தான் என்பதை உணர்த்துகிறது; இதெல்லாம் அவன் அறியாமலோ அல்லது தவறுதலாகவோ நடந்தது இல்லை. அவன் அறிந்தே, தனது புலன்களைத் தவறான செயல்களில் ஈடுபட அனுமதித்தான்.
“காவலில்” என்றால் – “காவல் இல்லாதபடி” எனப் பொருள் கொள்ளவேண்டும். இதற்கு மாற்றாக, “காவலுடன்” என்ற பொருளைப் பொருத்தமாய்க் கொள்ளலாமா? மொழிபெயர்ப்புத் திறனுடைய அறிஞர்கள் கூறுவதாவது, இங்கு “காவல் இல்லாமை” என்ற பொருளே மேலானது. இது, விஷக் கடிக்கு மருந்தளிக்கக்கூடிய நிபுணர் ஒருவர், கடிக்கப்பட்ட நபருக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் தேவையில்லை என்று கூறும் சூழ்நிலையைப்போல். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அது சாதாரண நிலைதான்; ஆனால் அவற்றை நீக்கி வைத்தால், அதுவே சிறந்த சிகிச்சையாகும். அதே போல் இங்கும் “காவல் இல்லாமல் புலன்களை விட்டுவிடுதல்” என்பதுதான் சிறந்த விளக்கம்.
இப்போது, “காவலில் புலனை வைத்து” என்பதற்கு “புலன்களை அடக்கிவைத்தல்” என்ற இரண்டாவது பொருளைப் பார்ப்போம். புலன்களை அடக்குவதற்கான செயலானது எம்பெருமானின் திருநாமங்களைச் செப்புவதின் விளைவாகக் கிடைக்கும் பலன் ஆகும்.
அதாவது, ஒரு நாட்டில் அரசர் இல்லாத சமயத்தில், எல்லோரும் சட்டங்களை மீறி மனம் போன போக்கில் நடப்பார்கள் அல்லவா, அச்சமயத்தில் ஒரு புதிய அரசர் ஆட்சி பொறுப்பு ஏற்கும் போது, எல்லா குற்றவாளிகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறார்கள். இங்கு, திருநாமங்கள் தான் புதிய அரசர், புலன்கள் குற்றவாளிகள், அவர்களை அடக்குவது என்பது, அவற்றைச் சிறைப்படுத்தி ஒழுங்கமைக்கும் செயல் ஆகும்.
“காவலில் புலனை வைத்து” என்ற சொல்லுக்கு மூன்றாவது அர்த்தம் முழுமுதற் கடவுளின் திருநாமங்களை ஜபிப்பதால், தவறான பொருட்கள், செயல்கள் பக்கம் சஞ்சரிக்கின்ற புலன்களின் கவனமானது இப்போது அந்தப் புலன்களுக்கே உரிய பொருளின்பால் (சாஸ்திரம் ஏற்றுக்கொள்ளும் பொருளின்பால்) – அதாவது, எம்பெருமானின் திருமேனிப்பால் திரும்புகின்றன.
இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதை சில ஆதாரங்கள் மூலம் அறியலாம்.
ஸ்ரீமத் பாகவதம் 2.8.5: “கிருஷ்ணரைப் பற்றி நம்பிக்கையுடன் கேட்பவர்களுக்கு, அவர்களின் இதயங்களில் அவர் இருப்பதால், அனைத்து சந்தேகங்களையும் நீக்குகிறார். அவரைப் பற்றி கேட்பதும், ஜபிப்பதும் பக்திமிக்கதும் மற்றும் தூய்மைப்படுத்துவதும் ஆகும்.”
ஸ்ரீமத் பாகவதம்: பிருந்தாவனத்தைச் சேர்ந்த கோபியர்கள் கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையைக் கேட்டு, அவர்களின் புலன்கள் கிருஷ்ணரிடம் ஈர்க்கப்பட்டன. அதேபோல், நாம் கிருஷ்ணரின் நாமங்களை உச்சரிக்கும்போது, நமது புலன்கள் மாயையிலிருந்து விலகி, கிருஷ்ணரின் இனிமையான, தனிப்பட்ட வடிவத்தில் நிலை நிறுத்தப்படுகின்றன.
ஸ்ரீராமாயணத்தில்: எவரொருவர் ஸ்ரீராமரை தனது விழிகளால் தரிசிக்கிறாரோ, அவரது பார்வையாலும், மனதாலும் ஸ்ரீராமரால் ஈர்க்கப்படுகிறார். ஸ்ரீராமர் கவரும் ஆற்றல் கொண்டவர்—“த்ரிஷ்ட சித்த அபஹாரிணம்” எனப் புகழப்பட்டவர். அதேபோல, முழு முதற் கடவுளின் திருநாமங்களைச் செப்புவதால், புலன்கள் முழு முதற் கடவுளின் திருமேனிப்பாலே எப்போதும் நிலைக்கின்றன.
“கலி தன்னைக் கடக்க பாய்ந்து”
‘கலி’ என்றால் அடங்காத பாவங்கள். இவைதான் புலன்களை அடக்க முடியாத நிலைக்கு ஜீவனைக் கொண்டு வரும். கலி தன்னைக் கடக்க பாய்ந்து – இதன் பொருள், இப்பாவங்களை மட்டுமல்லாமல் அவற்றின் எல்லா நிழல்களையும் கூட அழித்து விடுதல் என பொருள்.
இங்கு “தன்னை” என்பது ‘கலிக்கு’ என குறிக்கும் சிறப்பு சொல். ஏனெனில், ‘கலி’ தான் ஜீவனை எம்பெருமானிடமிருந்து விலக்கி வைக்கும் மூலக் காரணம். அது தான் ஜீவனை இந்த உலக சுகங்களில் ஈடுபடச் செய்கிறது, மரணத்திற்கு பிறகு நரக வேதனையை அளிக்கிறது, தெய்வத்திற்கு விரோதமாக நடக்கச் செய்கிறது, உடலை ஆத்மா என்று தப்பாக எண்ணச் செய்கிறது (தேஹாபிமானம்), மேலும் பல அநித்ய காரியங்களில் தள்ளுகிறது.
“தன்னை” என்பது ஒரு பகைவரை குறிக்கிறது – அவன் தான் என்னை (ஆன்மாவை) கட்டுப்படுத்தி அரசாண்டவன், ஆனால் இப்போது அவனை வென்றுவிட்டேன் என்பதற்காக இந்தச் சொல் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“ச்” – அதாவது, தாண்டி நிற்க. எவ்வளவுக்கு தாண்டினேன்? உரையாசிரியர் கூறுவதாவது, அந்த ஜீவன் இப்போது ஸம்ஸாரத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத நிலைக்கு சென்றுவிட்டான். நித்யசூரிகள் போல, ஸம்ஸாரத்தின் தீமைகள் எதுவும் இவனைச் சேர முடியாதபடி.
முன்னதாக, “கலி” என்பதற்கு (1) பாவங்களின் தொகுப்பு, (2) பகைவர் எனவும் இரண்டு அர்த்தங்கள் தரப்பட்டன. இப்போது “கலி” என்பது ஒரு கால பரிமாணமாகக் (கால கட்டம்) கருதப்படுகிறது. இந்த நிலையில், “கடக்க” என்பதற்குப் பொருள் தாண்டுவது. அந்த நபர் இப்போது க்ருத யுகத்தில் இருப்பதை குறிக்கிறது. அவருக்கு கலியுகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை, மேலும் கலியிலிருந்து வெகு தூரமாக இருப்பதால், அதனால் பாதிக்கப்படவில்லை.
“பாய்ந்து” – அந்த நபர் எப்படி தாண்டினான்? சிறியத் திருவடி (ஹனுமான்) கடலைத் தாண்டி இலங்கையை அடைந்தது போல, கீழே எந்த இடத்தையும் தொடாமல் பறந்து சென்றது போல, இவ்வாழ்வாரும் பாவக் கடலை முழுவதுமாக பறந்து கடந்தார்.
“நின் நாமம் கற்ற”
ஜீவாத்மா, யமனையும் அவன் சூழ்ச்சியையும் எதிர்க்கும் திறமையைப் பெற்றது எம்பெருமானின் திருநாமங்களை கற்றதால் தான் என்பது உறுதியான உண்மை. அப்படியிருக்க, ஜீவாத்மா இங்கு ‘பாவக் கடலைத் தானே தாண்டினேன்’ என ஏன் சொல்கிறான்? அதற்கு காரணம், திருநாமங்களின் இயல்பு. திருநாமங்கள் பெரிய காரியங்களையே செய்தாலும், தாங்கள் எந்தப் பங்கு வகித்தோம் என்பதைக் வெளிக் காட்டாமல் பின்வாங்கி நிற்கின்றன. இது நம்முடைய பூர்வாசார்யர்கள் குறிப்பிடும் ‘இரா மாடம் ஊட்டுவாரைப்போலே’ என்ற ஒப்புமையைப் போன்றதாகும்.
அதில், ஒரு மகன் தாயுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி ஊர்சாவடிக்கு செல்கிறான். அத்தாய், மகனுக்குப் பசிக்குமே என்பதையும், நேரில் போனால் மகன் உணவைக் கொள்ளமாட்டானே என்பதையும் அறிந்து, உணவை அந்தச் சாவடி நடத்துபவரிடம் கொடுத்து தன்னுடய மகனுக்கு உணவளிக்க சொல்கிறாள். மறைந்து நின்று மகன் சாப்பிடுவதைக் கண்டு மகிழ்கிறாள். அதுபோல, திருநாமங்கள் எல்லா காரியத்தையும் செய்துவிட்டு, அதற்காகக் கௌரவம் எதையும் எடுத்துக் கொள்ளாமல், அந்த ஜீவனுக்கு நல்ல அனுபவம் (தானே செய்தான் போல் உணர்வு) கொடுக்கின்றன.
மற்றொரு விளக்கம் என்னவென்றால், திருநாமங்களை கற்றல் என்பதே அந்த ஜீவனுடைய முக்கிய ப்ரயோஜனமாகும்; ஆகையால், ‘நான் பாவக் கடலை தாண்டினேன்’ என்று கூறுவது தவறாகாது. மேலும், அவன் இன்னும் உடலோடு இந்த ஜட உலகத்தில் இருக்கின்றானாலும், எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணரின் விசேஷ கிருபையால், அவன் ஜட உலகத்தைக் கடந்து கோலோகத்தில் ஆனந்தம் அனுபவிப்பது போல் உணர்கிறான்.
“நாவலிட்டு உழி தருகிறோம்”
“நாவலோ நாவல்!” “ஆறையோ ஆறை!” என்று போர் வென்ற வீரர்கள் எழுப்பும் ஜெய கோஷங்களை இங்கு ஆழ்வார் கூறுகிறார். முன்பு யமனை பார்த்து அஞ்சியிருந்த ஆழ்வார், இப்போது எம்பெருமானின் திருநாமங்களை கற்ற பிறகு, யமனுக்கும் அவன் மனைவிக்கும் எதிராக ஓங்கி அழைத்து, “நான் உங்கள் தலைமேல் நடந்து செல்லப்போகிறேன்!” என அஞ்சாமல் உரைக்கிறார். யமன் என்பவர் ஜட உலகத்தில் பாவம் செய்தவர்களுக்கு தண்டனை அளிக்கும் அதிகாரியாக இருக்கிறார். ஆனால், எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களுக்கு முன்பு அவரும் செயலற்று விடுகிறார்.
இதுபோல கிஷ்கிந்தாவிலும் நடந்தது. அங்கே சுக்ரீவன், முன்பு தன்னைவிட வலிமையான அண்ணன் வாலிக்கு பயந்து, காட்டில் மறைந்து, ஒளிந்து வாழ்ந்தான். ஆனால், ஸ்ரீராமனுடன் நட்பு கொண்டப் பிறகு, வாலியின் அரண்மனைக்குச் சென்று அவனை சண்டைக்கு அழைத்தான். அங்கே, அவனுக்கு வலிமை மற்றும் பலத்தை அளித்தது முழுமுதற் கடவுளின் திருநாமம் மற்றும் நாமத்தினுடைய உரிமையாளர் (ஸ்ரீராமன்); இங்கே நாமமே அனைவருக்கும் வலிமை கொடுக்கும் .
உழி தருகிறோம் – ஆழ்வார், யமனையும் அவர் பரிவாரங்களையும் அஞ்சாமல் எதிரே இறுமாப்பாக நடந்துச் செல்கிறார். “சித்ரகுப்தன் வைத்த பாவக் கணக்கு புத்தகத்தை கொண்டு வாருங்கள்; அதை நான் எம்பெருமானின் திருநாமங்களால் கிழித்துப்போடுகிறேன்” என்கிறார்.
இங்கு ஏன் “தருகிறேன்” என்ற ஒருமை வார்த்தையை விட, “தருகிறோம்” என்ற பன்மை வார்த்தையை பயன்படுத்துகிறார்? ஒரு விளக்கம் என்னவென்றால் – திருநாமங்களை கற்ற பிறகு, ஆழ்வார் தன்னுடைய ஆத்ம தத்துவத்தில் பெருமிதம் அடைந்து, ‘நான் பலர் போலாகிவிட்டேன்’ என்று எண்ணுகிறார்.
மற்றொரு விளக்கம் என்னவென்றால் – எம்பெருமானின் திருநாமங்களின் மகிமையை மற்றவர்களுக்கும் போதித்து, அவர்களும் பகவானிடம் பகை உணர்வை விட்டுவிட்டு, எம்பெருமானை நாடி, ஆழ்வாருடன் சேர்ந்து பக்திசெயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இது ஹனுமான் தனியே, சீதையைத் தேடி கடல் கடந்து, லங்காவில் சிறு போரை நடத்தியது போன்று ஆகும். அவர் மட்டும் இலங்கையிலிருந்து பாரத தேசம்திரும்பினார். அப்போது அங்கு அவருடன் இருந்த அனைத்து வானரர்களும் ‘நாமும் போர் புரிந்தோம்’ என்று எண்ணி, கிஷ்கிந்தாவிற்கு திரும்பியபோது சுக்ரீவனின் மதுவனத்தை அழித்து விட்டு மகிழ்ந்தனர். அதுபோல், யமனின் மீது நடந்த ஒருவர் – தொண்டரடிப்பொடி ஆழ்வார் மட்டுமே ஆவார். ஆனால், அவருடைய சீடர்களும் தாங்களே செய்தது போல பெருமையுடன் நினைத்து மகிழ்கிறார்கள். இது ஒரு அரசனைத் தெரிந்த ஒருவன் காரணமாக, அவனுடைய உறவினர் அனைவரும் ஏற்படும் நன்மையை அனுபவிப்பது போலும் இருக்கிறது.
“நமன் தமர் தலைகள் மீது”

தொண்டரடிப்பொடி ஆழ்வார் மற்றும் யமன்
ஆழ்வார் தனக்கு மட்டும் அல்லாமல் பலரைத் திரட்டி வந்ததால், நடக்க ஒரே ஒரு தலை அவர்களுக்குப் போதாது பல தலைகள் வேண்டும் என எண்ணி, யமனுடைய ஊழியர்களையும் சேர்த்து அழைக்கிறார். இவ்வுலகில் மனிதர்கள் பாவங்களைச் செய்வார்கள், ஆதலால் அவர்கள் யமனை மகிழ்விக்க யமன் மற்றும் அவரது உதவியாளர் சித்ரகுப்தரின் பெயர்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு வைப்பார்கள், அவர்களை வணங்குவார்கள். ஆனால் இப்போது, எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமங்களை கற்ற பிறகு, ஆழ்வார் தன்னுடைய கால்களை அவர்களின் தலைகள்மீது வைக்கலாம் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.
இதிலேயே ஒரு அற்புதம் இருக்கிறது – யமனே என்ன நினைக்கிறான் என்றால், “எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமங்களை கற்றவருடைய பாதங்களுக்கு என் தலையைச் சமர்ப்பிப்பதற்காகத்தான் இந்தத் தலை எனக்கு கொடுக்கப்பட்டது” என்று எண்ணுகிறார். ஶ்ரீ கிருஷ்ணரின் திருநாமங்களின் மகிமையை அறிந்தவர் அவர்.
ஆழ்வார், எம்பெருமான் ஸ் ரீகிருஷ்ணரின் திருநாமங்களை கற்ற பிறகு, யமனும் அவருடைய பாட்டாளிகளும் தமது தலைகள்மீது ஆழ்வார் கால் வைக்க தயாராக இருப்பதாக எண்ணுகிறார். அதே நேரத்தில், யமனே தன் தலையை, திருநாமங்களை அறிந்த ஒருவரின் பாதங்களுக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்று விரும்புகிறான். இதற்க்கான ஆதாரத்தை பார்ப்போம்.
பிரமாணம் (ஆதாரம்): இத்தகைய எண்ணத்திற்கு ஆதாரமாக, புராணங்களிலிருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளது.
விஷ்ணு தர்மம் என்னும் சாஸ்திரத்தில், யமன் கீழ் கண்டவாறு சொல்லுகிறார்: “அமிதமான தோற்றமுடைய யஜ்ஞ வராஹ ரூபமான விஷ்ணுவை வணங்குகிறவர்களை நான் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.”
விஷ்ணு புராணத்தில், யமன், பாச கயிறு ஏந்திய தன் பணியாளரை நோக்கி, அவன் காதருகில் மெல்லச் சொல்கிறார்: “மதுசூதனனை சரணடைந்தவர்களை அருகே கூடச் செல்லாதே! நான் வைஷ்ணவர்களுக்கு எஜமானன் அல்லன், மற்ற எல்லா மனிதர்களுக்கே எஜமானன்.”
இதே பொருள், திருமழிசையாழ்வார் தமது நான்முகன்-திருவந்தாதி – பாசுரம் 68-இல் கூறுகிறார்:
“திரம்பேன்மின் காணீர் திருவடிதன் நாமம்…இரைந்தியும் சாதுவராய் போதுமின்கள் என்றான்…”
யமன், தமது பணியாளர்களை நோக்கி: “திருவடிகளின் நாமங்களைச் சொல்லுகிறவர்களுக்கு பணிவுடன் சேவை செய்து, அவர்களை விட்டு அமைதியாக விலகிச் செல்லுங்கள்” என்று கூறுகிறார்.
இதனால், யமனே வைஷ்ணவர்களிடம் அஞ்சுகிறார். அவர்களை வணங்கச் சொல்கிறார். யமனும், அவரது பணியாளர்களும், வைஷ்ணவர்களை எதுவும் செய்யமுடியாதவர்கள் என்று விளங்குகிறது.
குறிப்பு: கிருஷ்ணர், பலராமர், ராமர், நாராயணர், நரசிம்மர், விஷ்ணு, அரங்கநாதர் ஆகியோரை வழிபடுபவர்கள் வைஷ்ணவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
எல்லா பந்தப் பட்ட ஆத்மாக்களும், யமனையும், அவரது பணியாளர்களையும் கண்டு அஞ்சுகிறார்கள். ஆனால் இங்கு ஆழ்வார், தம்மிடம் யமனும் அவரது பணியாளர்களும் தமது தலைகளைக் கொடுத்து, தாம் அத்தலைகளின் மீது நடக்கவேண்டும் என்று அறிவிக்கிறார். இத்தனை தைரியம் அவருக்கு எங்கே இருந்தது?
இதை கண்டு முழுமுதற்கடவுள் ஆச்சரியப்படுகிறார்…”எப்படி இவ்வளவு தைரியம் உமக்கு ஆழ்வாரே?” என வினவுகிறார்.
அதற்கு ஆழ்வார் பதில் அளிக்கிறார்:
“மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வா”
“நான், தேவர்களுள் யாராவது ஒருவரை சரணடைந்திருந்தால், யமனை அஞ்சியிருக்க வேண்டி இருந்திருக்கும். ஆனால், நான் யாரை சரணடைந்திருக்கிறேன்? மூவுலகையும் விழுங்கி, பாதுகாத்து, பின்னர் மறுபடியும் வெளியிட்ட முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீகிருஷ்ணரான உம்மிடம் சரணடைந்திருக்கிறேன்.
உலக நாசத்தின் போது யமனும் நானும் ஒரே இடத்தில் — உங்கள் வயிற்றுக்குள் இருந்தோம். பிரபஞ்சத்தை நீங்கள் வெளியே விடும் போது, நாங்கள் இருவருமே மீண்டும் வெளியே வந்தோம். அதாவது, யமனும் நானும் சமமாயிருந்தோம்.
அந்த சமயம், எங்கள் இருவருக்கும் நீங்கள் எங்களை ஆட்சி செய்யும் தலைவராக இருந்தீர்கள் – அதனால் நீங்கள் எங்களின் ‘முதல்வர்’!”
எம்பெருமான் பின்னர் ஆழ்வாரை கேட்கிறார்: “நீர் என்னை சரணடைந்ததால் இத்தனை நன்மைகள் உண்டாயிற்றா?” என.
அதற்கு ஆழ்வார் பதிலளிக்கிறார்:
“நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை”
“ஆம் ,உமது திருநாமங்களை கற்றதாலே எனக்கு வந்த பெருமையும் தைரியமும் இது,” என்கிறார் ஆழ்வார். ஆனால், ஏன் “நின்” என்ற சொல்லை (உமது) குறிப்பாகப் பயன்படுத்துகிறார்?
பிறர் நாமங்களை கற்றிருந்தால் இத்தனை பெருமையும் பலனும் அவருக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அதனால் தான், இவை உமது (நின்) நாமங்கள் தான் என்பதை ஆழ்வார் வலியுறுத்துகிறார்.
பின், ஆழ்வார் தன்னை தூய தங்கம் (சொக்கத்தங்கம்) எனக் கூறுகிறார். அதேபோல, திருநாமங்களை ஆபரணத் தங்கமாகப் (ஆபரணத்தை வடிவமைக்க பயன்படுத்தும் தங்கம்) எடுத்துக் கொள்கிறார். தூய தங்கம் உயர்ந்தது தான். ஆனால் அதை உடலில் அணிகலன்களாக அணிய முடியாது. அதேபோல், திருநாமங்கள் தான், ஆழ்வாருக்கு மேன்மையானவை என்று அவர் எண்ணுகிறார்.
எம்பெருமான் பிரளயக் காலத்தில் ஆழ்வாரை தன் வயிற்றில் பாதுகாத்து, பின்னர் திரும்ப வெளிக்கொண்டு வருகிறார். ஆனால், திருநாமங்கள் சம்சார சாகரத்திலிருந்து ஆழ்வாரை காப்பாற்றுகின்றன; மேலும், மீண்டும் பிறவி எடுக்கும்படியாக இந்த உலகிற்குள் திரும்ப அனுப்புவதில்லை.
ஆனால், ஏன் அதை திருநாமம் என்று அழைக்கிறார், மந்திரம் என்று அழைக்காமல்?
மந்திரங்களைச் சொல்ல சில நிபந்தனைகள் இருக்கின்றன – கால நேரம், குளித்து சுத்தம் செய்த பிறகு, முக்குலத்தினரே (பிராமணர், க்ஷத்திரியர், வைசியர்) உச்சரிக்க முடியும். ஆனால், திருநாமங்களை யாரும், எப்போது வேண்டுமானாலும் கூறலாம். ஒருவன் நடக்கும்போது விழுந்துவிட்டால், தன்னையும் அறியாமல் “அம்மா!” என்று கூப்பிடுகிறான். அம்மாவை அழைப்பதற்கு குளித்திருக்கவேண்டும், கிழக்கே நோக்கி நிற்க வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை. அதேபோல, எம்பெருமானின் திருநாமங்களை கூறுவதற்கு எந்த விதமான சடங்குகளும் தேவைப்படவில்லை.
கற்ற:-“சொன்னான்” என்பதற்குப் பதிலாக “கற்றான் “என்று ஆழ்வார் பயன்படுத்துகிறார். திருநாமங்களையும் அதன் பெருமைகளையும் பற்றிய அறிவானது ஆழ்வாருக்கே தானாக வந்த ஒன்று அல்ல; ஒரு ஆசான் சொல்லிக் கொடுத்ததை அவர் கற்றுக் கொண்டார் என்பதைக் குறிக்கிறது. அந்த ஆசான் வேறு யாரும் அல்ல – முழு முதற் கடவுளே ஆவார்.
மற்றொரு விளக்கம் என்னவென்றால் – ஆழ்வார் அந்த தெய்வீக திருநாமங்களின் பொருளை முழுவதுமாக அறிந்து கொள்ளாமல், அவற்றின் ஒலிக்கும் ஓசையின் தன்மையை மட்டும் வைத்து ஜபித்து இருக்கலாம் என்பதாகும்.
ஆவலிப்புடைமை
ஆவலிப்பு என்பது பெருமை (மிகுந்த தைரியம், நம்பிக்கை).
உடமை என்பது வீடு, செல்வம், அல்லது பொருள் போன்றவற்றை உள்ளடக்கியது.
ஆழ்வார், எம்பெருமானின் திருநாமங்களை தாம் கற்றது என்பது குபேரனின் செல்வத்தைத் தான் பெற்றதற்கு சமம் என்று எண்ணுகிறார்.
கண்டாய் –
இங்கே ஆழ்வார், திருவரங்கனை நோக்கி வேண்டுகிறார். “உமது கண்களைத் திறந்து என்னைப் பாருங்கள்; உமது திருநாமங்களை கற்ற பிறகு நான் பெற்ற பெருமையை நீங்களே காணலாம்” என சொல்லுகிறார்.
விளக்கம்:
ஆழ்வாருக்கு, எம்பெருமானிடம் தன்னை விவரிக்கத் தேவையில்லை; பார்க்கும் பொழுதிலேயே அவர் தன்னை அறிந்து கொள்வார்.
ஆழ்வார் இப்போது தேனாகிய திருநாம மருந்தை பருகியுள்ளார், அப்படிப்பட்ட அவரைப் பார்க்கும்போது – மண்ணையும் மணலையும் அடக்கிய மூலோகத்தையும் உண்ட பெருமாளே,உமது முகம் அல்ல, ஆழ்வாரின் முகமே இப்போது மேலும் பிரகாசிக்கிறது! எம்பெருமானிடம் அப்பிரகாசத்தை காண சொல்லுகிறார் ஆழ்வார்.
அரங்க மாநகருளானே
இங்கு ஆழ்வார், அரங்கனை நினைவூட்டுகிறார்: “நீங்கள் பரமபதத்தை விட்டு விலகி, திருவரங்கத்தில் பள்ளிகொண்டு இருப்பது, உமது திருநாமங்களை ஒரு ஜீவாத்மாவாவது கற்கிறானா என்று காணவேதான். இப்போது உமது அந்த ஆசை நிறைவேறிவிட்டது.
ஏனெனில், தாங்கள் சத்தியசங்கல்பன், அதாவது நீங்கள் எண்ணியதைச் செய்யும் சக்தி கொண்டவன்.
மாநகர் என்பது திருவரங்கன் பூலோகத்தில் தனது இருப்பை நிறுவிய புனித இடம் ஸ்ரீரங்கம் என குறிக்கிறது. எப்படி ஒரு ராஜா தனது அரசவையில் வழங்கிய தீர்ப்பை பின்னர் மாற்ற முடியாதோ, அதேபோல திருவரங்கனும் ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆழ்வாரை ஆசீர்வதித்த பின், தன் அருளை அவரே விரும்பினாலும் திரும்ப பெற முடியாது.
மாநகருக்கு இன்னொரு பொருள் என்னவெனில், சம்பந்தப்பட்ட ஜீவாத்மாக்கள் இனிமேல் எம்பெருமானை விட வேறு யார் சிறந்தவர்கள் என வாதிக்காமல், எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணருக்கே கைங்கர்யம் (சேவை) செய்யும் இடம் என்பதாகும்.
முடிவாகச் சொல்வதென்றால், முன்பெல்லாம் யமனையும் அவர் கூட்டத்தாரையும் பார்த்தாலே பயந்திருந்த ஆழ்வார், எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களை கற்றதன் மூலம், இப்போது அந்த யமன் மற்றும் அவர் கூட்டத்தாரின் தலைகள்மேல் நடக்கக் கூடிய தைரியத்தைப் பெற்றார்.
திருநாமங்களின் பிரதான லட்சணம் என்னவென்றால், அவற்றைக் கற்றுக்கொண்டவரை பவித்திரமாக்குவது ஆகும்.
பாசுரம் 2: பச்சை மாமலை போல் மேனி
நின் பெயரைச் சொல்லுவதே பேரின்பம்


பச்சை மாமலை போல் மேனி பவள வாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரரேறே! ஆயர் தம் கொழுந்தே! என்னும் *
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகமாளும் *
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே!
பொருள்:
பச்சை — பச்சை; மாமலைபோல் — மலைபோல் பெரிய; மேனி — சரீரத்தையும்; பவளவாய் — பவளம் போல் சிவந்த அதரத்தையும்; கமல — செந்தாமரை போன்ற; செங்கண் — சிவந்த கண்களையும் உடைய; அச்சுதா! — அச்சுதனே!; அமரர் — நித்யஸுரிகளுக்கு; ஏறே! — தலைவனே!; ஆயர் தம் — ஆயர் குலத்திலுதித்த; கொழுந்தே! — வேந்தே!; என்னும் — என்று உன் நாமங்களை அழைக்கும்; இச்சுவை தவிர — இன் சுவையை விட்டு; யான் போய் — வெகு தூரம் போய்; இந்திர லோகம் — அந்தப் பரமபதத்தை; ஆளும் — ஆளுகின்ற; அச்சுவை — அநுபவத்தை; பெறினும் — அடைவதாயிருந்தாலும்; வேண்டேன் — அதனை விரும்பமாட்டேன்; அரங்கமாநகருளானே! — ஸ்ரீரங்கத்திலிருப்பவனே.
குறிப்பு: நித்யஸுரிகள் – ஆன்மீக உலகில் நிரந்தரமாக முழு முதற் கடவுள் ஶ்ரீ கிருஷ்ணருக்கு சேவை செய்துக் கொண்டு இருக்கும் ஜீவாத்மாக்கள் ஆவார்கள்.

தொகுப்புரை:
ஸ்ரீரங்கம் நகரில் தங்கியுள்ள எம்பெருமானே! உன் திருமேனி பசுமையான அழகிய மலைபோல உள்ளது; உனது கண்கள் சிவந்த தாமரை மலரை போலவும், உனது அதரங்கள் சிவந்த பவளத்தை போலவும் உள்ளது. நீ தேவர்களில் தலைவனாகவும், ஆயர்களின் குலத்தில் பிறந்த இளவரசனாகவும் உள்ளாய். தேவர்களின் தலைவனே, ஆயர்களின் இளவலே, தனது நிலையில் ஒருபோதும் மாற்றம் இல்லாதவர் (அச்சுதன்) என்று பல நாமங்களைக் கொண்டு உன்னைப் போற்றி வணங்கும் இன்பத்தையே நான் விரும்புகிறேன். எனக்கு பெரிய பரிசாக இந்தரனின் உலகை ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தாலும் கூட அதில் எனக்கு எந்த ஒரு விருப்பமும் இல்லை.
விளக்கவுரை:
ஆழ்வார், எம்பெருமானின் திருமேனியின் அழகிய அம்சங்களை விவரித்து, அவரது ஒவ்வொரு அங்கத்திலும் (உடற்கூறு) படிந்த தன் பார்வையை நீக்க முடியாமல் பகவான் மீது தனக்கு உள்ள ஆழ்ந்த ஈர்ப்பை வெளிப்படுத்துகிறார். இவ்வாறான தெய்வீக ரூபங்களை எல்லாம் அனுபவிக்கும் இன்பத்தை விட்டு, தான் ஆன்மீக உலகம் வர வேண்டும் என எம்பெருமான் எப்படி எதிர்பார்க்கிறார் என்று கேட்கிறாரார் ஆழ்வார்.
பச்சை மா மலை போல் மேனி –
எம்பெருமானின் திருமேனி பசுமை நிறமுடையதாகவும், ஒரு பசுமையான பெரிய மலையைப் போலவும் உள்ளது. இது கண்களுக்கும் மனதிற்கும் இன்பம் தருவதாகும். இந்த பசுமை, ஒரு குளிர்ச்சியைக் கொடுக்கும் தன்மை கொண்டது.
சமைத்த சூடான உணவில் கலந்துள்ள நெய், அந்த உணவு குளிரும் போது, அதன் மீது திரண்டு நிலைபெறுவது போல, எம்பெருமான் உடைய புனிதமான குணங்களும் அவன் திருமேனியில் ஆழத்தில் இருந்து எழுந்து மேலே சென்று, ஒரு பசுமை மிக்க மலை போல் வெளிப்படுகின்றன.

ஸ்ரீல ரூப கோஸ்வாமி
ஶ்ரீ கிருஷ்ணரின் அழகை ஸ்ரீல ரூப கோஸ்வாமி விவரிக்கிறார்: “அவரது புன்னகையை மட்டும் பார்த்தாலும், அல்லது அவரது கடைக்கண் பார்வையைக் கண்டாலும், வேறு ஒன்றை பார்ப்பது சாத்தியமில்லை.”
ஶ்ரீ கிருஷ்ணரின் உடலின் ஒவ்வொரு அங்கமும் ஆன்மாவை முழுமையாக கவரும் சக்தி கொண்டது. கிருஷ்ணரின் முழு வடிவத்தைக் காண முயற்சிக்கும் ஒரு பக்தரின் நிலையை கற்பனை செய்து பாருங்கள் – அவரது பார்வை, புன்னகை அல்லது அவரது தலைமுடியின் சுருள் என்று ஒவ்வொரு அம்சமும் மட்டுமே, அடுத்த அம்சத்திற்கு செல்ல முடியாத அளவுக்கு பக்தரின் மனதை மிகவும் கவர்ந்திழுக்கும் தன்மைக் கொண்டது.

ஸ்ரீ பில்வமங்கள தாகுரா பாடுவதை
ஶ்ரீகிருஷ்ணர் ரசித்தல்
ஸ்ரீ பில்வமங்கள தாகுராவின் கிருஷ்ண கர்ணாம்ருதா (பதம் 9): “கோபிகள் கிருஷ்ணரின் நெற்றியில் உள்ள கஸ்தூரி திலகம், மார்பில் உள்ள கௌஸ்துப ரத்தினம், அல்லது அவரது கையில் உள்ள புல்லாங்குழல் போன்ற ஒரு ஆபரணத்தையோ அல்லது அங்கத்தையோ பார்த்தாலும், அவர்கள் மிகவும் மயங்கிப் போகிறார்கள், அவர்களால் சரியாகப் பேசக்கூட முடியாது, பார்வையை விலக்கவும் முடியாது.” என சொல்லப்பட்டுள்ளது.
எம்பெருமானின் திருமேனி, மூன்று விதமான தாபங்களுக்கு நிவாரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜீவராசிகள் அனுபவிக்கும் மூன்று விதமான தாபங்கள் – ஆத்யாத்மிகம் (தன்னால் உண்டானது), ஆதிதைவிகம் (தெய்வீக காரணங்களால்), ஆதிபௌதிகம் (மற்ற உயிரினங்களால் ஏற்படும்).
• நாம் எம்பெருமானை அடைய முயற்சிக்கும் போது (பக்தி யோக பாதையில்), நம் ஐம்புலன்களையும் அவரது திருமேனியின் மீது ஒருமுகமாக திருப்புகிறோம். இதனால் அந்த புலன்கள் கையாளப்படக்கூடியவையாகி, நாம் பக்தி செய்ய உதவுகிறது.
அவரது திருமேனி சுபாஷ்ரயம் எனப்படும் — அதாவது நம் புலன்கள் தங்கும் ஒரு மங்களகரமான இடம்.
எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணரை அடைந்த பிறகு, நம்முடைய முயற்சியின் பலனை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்தால், எம்பெருமானின் திருமேனியே புருஷார்த்தம் — அனுபவிக்க வேண்டிய பொருள் அல்லது இலக்காக மாறுகிறது. இதனால்தான் அந்த பச்சை மலை “மா மலை” (மிக சிறந்த மலை) என சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது விளக்கப்படுகிறது.
மலை என்பது எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணரின் திருமேனிக்கான ஒரு உருவகம் ஆகும். அது எம்பெருமானின் திருமேனியின் உறுதியையும் வளர்ச்சியையும் மட்டுமே குறிக்கின்றது. ஆனால், ஒரு மலையைவிட எம்பெருமானின் திருமேனியும் அதில் தோன்றும் அனைத்தும், மங்களகரமான குணங்களும் உண்மையில் நமக்குப் பரிபூரணமான ஆனந்த அனுபவத்தையே அளிக்கின்றன.
மேனி – ஆழ்வார், எம்பெருமானின் திருமேனியையே நோக்கி, அதில் முழுமையாக மகிழ்ச்சியுடன் ஈடுபடுகிறார்.
விஷ்ணு புராணத்தில் கூறப்படுவது போல: “இச்சா க்ருஹீதாபி மதோரு தேஹ:”, அதாவது, எல்லா குணங்களாலும் நிரம்பிய எம்பெருமான், தனது திருமேனியின் ஒரு சிறிய பாகத்திலேயே இந்த முழு பிரபஞ்சத்தையும் தாங்கி, தாம் ஆசைப்படும் ரூபங்களில் தோன்றி அருளுகிறார்.
இதேபோல, பெரியாழ்வார் தனது திருமொழியில் (4-8-9) கூறுகிறார்: எம்பெருமான், மலை சிகரங்களின் மீது அமர்ந்து இருக்கும் கார்மேகங்களைப் போல் தோன்றுகிறார்;
நாம் கண்டு மகிழ, ஒரு குளத்தில் மலர் பூத்து இருக்கிறதைப் போல, அவர் தம்மை எளிமையாக வெளிப்படுத்துகிறார்.
அதேசமயம் அவர் ஒரு பரந்த பெருங்கடலைப் போன்றவர் ஆவார். பெருங்கடலை நாம் முழுமையாக அனுபவிக்க முடியாது, அதேபோல நம்மால் பகவானை முழுமையாக அறிந்துக்கொள்ளவோ அல்லது அனுபவிக்கவோ இயலாது.
மேலும், அவரின் திருமேனியின் நிறம், மயிலின் கழுத்து நிறத்தை ஒத்து உள்ளது. இங்கு மயில் ஒரு உவமானமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், ஒருவரால் மயிலை எத்தனை நேரம் பார்த்தாலும் அவருக்கு சலிப்பு ஏற்படாமல் பார்த்துக கொண்டு இருக்க முடியும். அதுபோல, ஒருவர் எம்பெருமானின் திருமேனியை கண்டால் அதன் அழகில் மயங்கி லயித்து விடுவார்.
பவளவாய் கமலச்செங்கண் –
எம்பெருமானின் திருமேனி ஒரு பெருங்கடலைப் போல என்றால், அந்த கடலுக்குள் வலையாடும் அலைகள் போல, அவரது திருமேனியின் தனித்தனி உறுப்புகள் தெய்வீக ஈர்ப்பை உண்டாக்குகின்றன.
இவ்வாறு முழுவதும் ஈர்க்கப்படும் நபராக, ஆழ்வார் முதலில் எம்பெருமானின் பவள வாய் பற்றி கூறுகிறார் – அதாவது சிவந்த பவளம் போல வாய் உள்ளது.
எப்படி பச்சை நிற மலை மீது ஒரு பவளம் அலங்காரம் போல் ஒளிர்ந்தால் அதன் அழகை அதிகரிக்குமோ, அதுபோல, எம்பெருமானின் பசுமை நிற மேனியை அவரது சிவந்த வாய் மேலும் அழகுபடுத்துகிறது.
இன்னொரு விளக்கம்:
பௌர்ணமி அன்று கடல், சந்திரனை கண்டதும் மகிழ்ச்சியில் அலைகளை உயர்த்தும்; அதுபோல, எம்பெருமான், தம் சந்திரன் போன்ற ஆஷ்ரிதர்கள் (அடியார்கள்) தம்மை தரிசிக்க வந்தபோது, மகிழ்ச்சியுடன் தம் வாய் மற்றும் கண்களால் அலை போல அன்பைக் காட்டுகிறார்.
கமலச்செங்கண் –
எம்பெருமானின் தரிசனத்தை காணும் ஜீவாத்மாக்கள் பகவானின் கடல் போன்ற திருமேனி, பவளம் போன்ற அழகிய திருஅதரங்களால் கவரப் படுகிறார்கள். ஆனாலும் சில ஜீவாத்மாக்கள் அதில் சிக்காமல் போய்விடுகின்றனர். அந்த ஜீவாத்மாக்களை அவருடைய கண்கள் பரிபூரணமாகக் கவர்ந்துவிடும். வாய் சொல்வதை கண்கள் முழுமைப்படுத்தும்.

விபீஷ்ண சரணாகதி
இராமாயணத்தில், ஸ்ரீராமர், வீபீஷணனை தம்மிடம் சரணாகதி செய்ய வந்தபோது, கடற்கரையில் அமைந்த கூடாரத்தில் அவரை வரவேற்கும்போது, சுக்ரீவன் மற்றும் அங்கு கூட இருந்தவர்கள் விபீஷணரை ஏற்க சம்மதிக்கும்படி அவர்களைத் சமாதானபடுத்த இராமர் நேரம் எடுத்துக்கொண்டதால் வீபீஷணரிடம், அவரை காத்திருக்க வைத்ததற்காக வருத்தப்பட்டார்.
அவர் பேசுவதால் மட்டும் இல்லாமல், தம் பார்வையாலும் வீபீஷணனை நெகிழ வைத்தார். எனவே, வார்த்தைகள் போதாத இடங்களில் கண்களே அந்த நெருக்கத்தை, பரிவு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.
எம்பெருமானின் கண்கள் அவரது உள்ளத்திலிருந்து வெளிப்படும் வாத்சல்யம் (தாய்மையை ஒத்த அன்பு), சௌசீல்யம் (எளிமை) போன்ற மங்களகரமான குணங்களை வெளிப்படுத்துகின்றன.
“கமலக்கண்” என்றே சொல்லி விட்டால் போதுமென்று தோன்றலாம். ஆனால் ஏன் செங்கண் என்று கூறினார்?
ஏனெனில், தாமரையானது அதன் மெல்லிய தன்மை, குளிர்ச்சி, சுகந்தம் ஆகியவற்றை மட்டும் குறிக்கக்கூடும். ஆனால், எம்பெருமானின் உள்மூல குணங்களை – வாத்சல்யம், சௌசீல்யம் போன்றவற்றை குறிக்கும் உவமானமாக தாமரையை கொள்ள இயலாது. இதனால்தான் “செம்” (அழகு வாய்ந்த) என்ற சிறப்புப் பெயருடன் “செங்கண்” என்று அழைக்கப்படுகின்றது.
அச்சுதா – மாற்றமில்லாதவர்.
முன் கூறிய உருவகங்கள் – மலை (திருமேனி), பவளம் (வாய்), தாமரை (கண்) – அனைத்தும் காலப்போக்கில் மாற்றமடையக்கூடியவை. ஆனால் எம்பெருமானுடைய திருமேனி மற்றும் அதன் தெய்வீக உறுப்புகள் எப்போதும் மாறாதவையாக இருக்கின்றன. புராணத்தில் கூறப்படுவது போல: ”…சதைக ரூப ரூபாய” – எப்போதும் ஒரே ரூபத்துடன் இருப்பவர்.
இதற்கு மற்றொரு விளக்கம் என்னவென்றால்: ஆழ்வார் இங்கு மங்களாசாசனம் செய்கிறார் – ஸ்ரீ கிருஷ்ணர் என்றும் மாறாதவர் என்று புகழ்ந்து பாடுகிறார்.
மூன்றாவது அர்த்தம்: எம்பெருமானால், தம் பவளவாய், செங்கண் அல்லது திருமேனியால் கவரப்படுகின்ற அன்புள்ள அடியார்களை ஒருபோதும் விலக்க முடியாது; அவர் அவர்களை விட்டு விடுவதில்லை என்பதே ஆகும்.
நாம் இதுவரை பார்த்தது: தொண்டரடிப்பொடி ஆழ்வார், எம்பெருமானின் முழு திருமேனியை (பச்சை மா மலை போல் மேனி) கொண்டாடியதையும், அதில் குறிப்பிட்ட சில தெய்வீக அங்கங்களை – பவள வாயும், கமலச் செங்கணும் – புகழ்ந்ததையும் பார்த்தோம். பின்னர், “அச்சுதா” என்று அவரை அழைத்து, அவர் ஒரு போதும் மாறாதவர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
அமரரேறே –
இது, முன்பே கூறப்பட்ட எம்பெருமானின் அழகை எப்போதும் அனுபவிக்கின்றவர்களை குறிக்கிறது. இங்கு “அமரர்” என்பது நித்யசூரிகள் – ஆன்மீக உலத்தில் எப்போதும் முழுமுதற்கடவுள் ஶ்ரீகிருஷ்ணருக்கு சேவை செய்யும் பரமபக்தர்களைக் குறிக்கிறது.
இவர்கள் எம்பெருமானின் தரிசனத்தை இடையறாது அனுபவிக்கிறவர்களாக இருந்தாலும், அந்த அனுபவத்தின் பரிபூரண நிலையை எட்டவில்லை – அதாவது, முழுமையாக அனுபவித்து முடிவை அடையவில்லை.
ஏனெனில், ஒருவேளை அவர்கள் அவரை முழுமையாக அனுபவித்து விட்டால், அவர்களின் நித்யசூரி நிலை என்பது நிலைக்காமல் போய்விடலாம். அவர்கள் பகவானுடன் ஐக்கியமாகிவிடலாம் . அதனால் அவர்கள் “அமரர்” எனப்படுகிறார்கள் – முடிவற்ற இறை அனுபவத்திலேயே வாழ்பவர்கள்.
எம்பெருமான் இவர்களின் ஏறு – அதாவது ஈஸ்வரன், தலைவன்.
இதையே ருக் வேதம் மற்றும் ஸாம வேதம் கூறுகின்றன: “சதா பஷ்யந்தி சூர்ய:” – நித்யசூரிகள் எப்போதும் ஶ்ரீ கிருஷ்ணரைக் காண்கிறார்கள், அனுபவிக்கிறார்கள்.
இங்கு கேள்வி எழுகிறது –
எம்பெருமான் என்றால், பிராட்டி (ஶ்ரீ ராதா ராணி), விச்வக்சேனர், திருவனந்தன், கருடன் ஆகியோர் மாத்திரமா அவரை அனுபவிக்கத் தகுதியுடையவர்கள்?
விச்வக்சேனர் – அவரது சேனை தலைவன்,
திருவனந்தன் – பரமபதத்தில் அவரது ஆசனமாக இருக்கும் ஆதிசேஷன்,
கருடன் – அவரது வாகனம்
இல்லையே… அவர் இன்னும் பலராலும் அனுபவிக்கப்படுபவர் ஆவார்.
ஆயர்தம் கொழுந்தே
எம்பெருமான், எல்லா மகத்தான மற்றும் உயர்ந்தவற்றின் எல்லையைக் குறிக்கும் அளவுக்கு பெரியவன் (அதாவது பரத்வம் என்ற குணம் உடையவன்). ஆனால் அதே நேரத்தில், மாடுகள் மற்றும் ஆயர்களுக்கும் எளிதாகக் கிடைக்கும் அளவுக்கு எளிமையாக இருப்பவன் – இதுவே சௌசீல்யம் (எளிமை) எனப்படும் குணம்.
இதன் பொருள் என்னவென்றால், கமலச்செங்கண் (அழகு), அச்சுதா (மாறாத தன்மை), அமரரேறே (பெருமை), மற்றும் ஆயர்தம் கொழுந்தே (எளிமை) போன்ற குணங்களை ஆழ்வார் வரிசையாக விளக்குகிறார்.
இந்த கூறுகளை வைத்து நாம் அறிந்து கொள்வது: மாடுகளிடையே விளையாடும் சிறுக்குழந்தை கிருஷ்ணர் தான் பரமாத்மா என்றும், அவரது சௌந்தரியம் (அழகு), பரத்வம் (மகத்துவம்) மற்றும் சௌசீல்யம் (எளிமை) ஆகியவை எல்லாம் ஒரே திருமேனியில் கலந்து விளங்குகின்றன என்றும் ஆழ்வார் உறுதியாகச் சொல்கிறார்.
என்னும் –
எம்பெருமான் ஆழ்வாரிடம் ஒரு கேள்வி எழுப்புகிறார்: “நீர் என் திருமேனியை (உடலழகை) கண்டு, என் குணங்களை எண்ணிப் பார்த்து உம் மனத்தில் இனிமை பெற்றீரா?”
அதற்கு ஆழ்வார் பதிலளிக்கிறார்: “இல்லை பகவானே, அதுவே இனிமையின் மூல காரணம் அல்ல; தங்களின் திருநாமங்களை உச்சரித்ததாலே தான் அந்த இனிமையை அடைந்தேன்!” என்கிறார்.
எனவே, “என்னும்” என்ற சொல், முந்தைய அனைத்து அடையாளங்களுக்கும் சேர்க்கப்பட வேண்டும்:
◦ பச்சை மா மலை போல் மேனி என்னும்,
◦ பவள வாய் என்னும்,
◦ கமலச் செங்கண் என்னும்,
◦ அச்சுதா என்னும்,
◦ அமரரேறே என்னும்,
◦ ஆயர்தம் குழந்தே என்னும்
• இப்படி ஒவ்வொரு திருநாமத்தையும் உச்சரித்தாலே, அதிலிருந்து இனிமை (அனுபவ ருசி) கிடைக்கிறது என்று ஆழ்வார் அடுத்து கூறுகிறார்.

ஹரே கிருஷ்ண மஹா மந்த்ரம்இச்சுவை தவிர –
இச்சுவை என்றால் – திருநாமங்களை உச்சரிப்பதால், நினைப்பதால் ஏற்படும் இன்ப ருசி, அமிர்தம் போன்ற இனிமை.இந்தத் திருநாமங்களின் சுவையை விட்டு வேறு ஏதாவது சுவையை நாடுவது நியாயமானதா என்று ஆழ்வார் கேட்கிறார்.
“நீயே உன் திருநாமங்களை உச்சரிக்கவில்லை, உன் பக்தர்களிடமிருந்து தான் நீ அவை கேட்டு அறிந்து கொண்டாய்; அதனால் உனக்கே அதன் உண்மையான இனிமை தெரியாது” என்று ஆழ்வார் எம்பெருமானிடம் கூறுகிறார்.
குறிப்பு: பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர்,சைதன்ய மஹாபிரபுவாகத் 530 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி தனது சொந்த நாமங்களை உச்சரித்தார்.

ஶ்ரீசைதன்ய மஹாபிரபு
நாம ஸங்கீர்த்தனம் செய்தல்எனவே தான் – இந்த இனிமையை விட்டு வேறெதற்கு போக வேண்டும்?
யான் –
“நான் தான் உன் திருநாமங்களை உச்சரிக்கத் தகுந்த நாவு உடையவன்” என்று ஆழ்வார் சொல்கிறார்.
மேலும் ஒரு விளக்கம் – “ஆன்மீக உலகம் செல்வதில் தாமதம் ஏற்படுவதை பொறுக்காத பொறுமை இல்லாதவன் நான் !” என்பதாகும்.
போய் –
“இங்கே ஸ்ரீரங்கத்திலேயே (அல்லது பிருந்தாவனம், மாயாபூர், மதுராபுரி, துவாரகை போன்ற புனித இடங்கள்) இருந்து உன்னை அனுபவிக்கலாம்;
அதற்குப் பதிலாக நீ என்னை பல மைல் தூரத்தில் உள்ள இடத்திற்கு அனுப்புகிறாய்” என்று ஆழ்வார் தெளிவாக கூறுகிறார்
இந்திர லோகம் –
இது ஸ்வர்க்கத்திலுள்ள இந்திரனின் உலகம் அல்ல, ஆன்மீக உலகம் தான் – எல்லா செல்வங்களையும் கொண்ட கோலோகம் எனும் பரமபதம். “இந்திர” என்ற சொல், வேதங்களின்படி, இறுதியாக எல்லா சொற்களும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை தான் குறிக்கின்றன. எனவே இங்கே “இந்திர” என்றால் ஸ்ரீகிருஷ்ணரையே குறிக்கும்.
ஆளும் –
எம்பெருமான் ஆழ்வாரிடம் கூறுகிறார்: “நீ வா – ஆன்மீக உலகத்தில் நீ உனக்குப் பிடித்தபடி ஆட்சி செய்யலாம்!” என்று. ஆனால் ஆழ்வார் என்ன சொல்கிறார்?
“அந்த நிலை கிடைத்தாலும் கூட, நான் இங்கே உன் திருநாமங்களைச் சொல்லும் இன்பத்தை விட்டுச் செல்ல விரும்பவில்லை!” என்று கூறி ஆன்மீக உலகம் வர மறுக்கிறார் ஆழ்வார்.
அச்சுவை –
இச்சுவை – அச்சுவை என்பது ஆன்மீக உலக அனுபவம் – இது வேதங்களின் மூலம் மட்டுமே அறியக்கூடியது.
ஆனால் இச்சுவை என்பது எம்பெருமானின் திருநாமங்களைச் சொல்லும் போது ஆழ்வார் நேரில் அனுபவிக்கும் இன்பம்.
ஒன்று வேதங்களைச் செவிமடுத்து, மற்றவர்களிடமிருந்து ஆழமாகக் கற்கவேண்டும்; மற்றொன்று தானாகக் கிடைக்கும் வகையிலானது. இதனால்தான், எளிதில் அனுபவிக்கக்கூடிய இச்சுவையை விட்டுவிட்டு, அச்சுவைக்கு ஏன் நான் விரும்ப வேண்டும்? என்கிறார் ஆழ்வார்.
பெறினும் வேண்டேன் –
எம்பெருமான் ஆழ்வாரிடம் கேட்கிறார்: “நீ இப்பொழுது ஆன்மீக உலகம் வேண்டாம் என்கிறாய், ஆனால் அது கிடைத்துவிட்டால், அதைக் கைவிட முடியாமல் விரும்பி விடுவாயே?”
அதற்கு ஆழ்வார் பதிலளிக்கிறார்: “அது எனக்கு கிடைத்தாலும் கூட – வேண்டேன்! அதை எனக்கு கொடுத்து நீயே பார்த்துவிடு – நான் அதை விரும்புகிறேனா இல்லையா என்று தெரிந்துகொள்ளலாம்!” என்கிறார்.
இதனால்தான் அவர் “பெறினும் வேண்டேன்” என்கிறார்.மேலும், ஏன் “வேண்டேன்” என்று சொல்கிறார், “உறாது” என்று சொல்லாமல்? ஏனென்றால், “உறாது” என்று சொன்னால், ஆன்மீக உலகத்தில் இருப்பவர்களின் ஆனந்த அனுபவத்தை (நித்யஸூரிகள் போன்றவர்களை) இழிவுபடுத்துவதாய் ஆகிவிடும். மேலும், ஆன்மீக உலகம் மிக உயர்ந்த இடம் என்ற வேதப் பிரமாணங்களை எதிர்த்துவிடும்.
ஸ்ரீ கிருஷ்ணரின் கோலோக பிருந்தாவனம் என்பது நித்யமான ஆனந்தத்தால் நிரம்பியதாகும் என்பதையும் ஆழ்வார் மதிக்கிறார். ஆனால், அனுபவிக்கக் கிடைக்கும் திருநாமச்சுவையை தானாக விட்டுச் செல்ல விரும்பவில்லை என்பதே அவரது நிலை.
“நிரஸ்தாதிசய ஆஹ்லாத ஸுக பாவைக லக்ஷணா |
பேஷஜம் பகவத் ப்ராப்தி ரேகாந் தாத்யந்திகீ மதா ||”
அதிகமான ஆனந்தத்தைத் தாண்டி நிறைந்த இன்பம், துக்கம் எதுவும் இல்லாத நிலை, சுகமே சாரமாயிருக்கும் நிலை, நிரந்தரமானது ஆகியவை – இவை அனைத்துக்கும் மருந்தாக கருதப்படுவது பகவானைப் பெறுவது மட்டுமே என்று கூறப்படுகிறது.
“பாலுக்கு புளிப்பு அல்லது கசப்பு இருக்கிறது” என்று யாராவது சொன்னால், அவரிடம் வாதம் செய்ய முடியும். ஆனால் யாராவது, “எனக்கு பால் வேண்டாம்” என்று சொன்னால், அவரிடம் பாலின் எந்த குணத்தைப்பற்றிப் பேச முடியும்?அதேபோல, ஆழ்வார் ஆன்மீக உலகம் வேண்டாம் என்று கூறுகிறார்.
“ஆன்மீக உலகம் வேண்டாம்” என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா?”
“அப்படி கூறியவர் ஹனுமான்!”. இது ஸ்ரீ இராமனிடம் ஹனுமான் சொன்ன வார்த்தை: ”…பாவோ நாந்யத்ர கச்சதி” (எனது மனம் வேறு எங்கும் செல்லாது – ஆன்மீக உலகத்தில் கூட இல்லாது).

அவர் கூறுவது: “எனது சிந்தனை எப்போதும் ஸ்ரீ இராமனிடமே; அவர் கூட நானாகவே இருத்தல் எனக்கு முக்கியம் – எனது எண்ணங்கள் ஸ்ரீவைகுந்தத்தில் இல்லை!” என்பதாகும்.
எம்பெருமான் ஆழ்வாருடன் பேசுகிறார்: “நீங்கள் பரமபதம் (ஆன்மீக உலகம்) வேண்டாம் என்று கூறுகிறீர்கள். இங்கே உங்களுக்கு இருக்கும் ஆதரவு என்ன?”
ஆழ்வார் பதில் கொள்கிறார்: “தாழ்ந்த உயிர்களான சம்சாரிகள் (பந்த பட்ட ஆத்மாக்கள்), உங்கள் அழகையும் (பச்சை மா மலை போல மேனி, பவள வாய், கமலச்செங்கண்) மற்றும் எளிமையையும் (ஆயர் தம் கொழுந்தே) அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தாங்கள் ஆன்மீக உலகத்தை விட்டு இங்கே வந்துள்ளீர்கள். அதற்கு நீங்கள் ஆத்மாக்களிடம் கொண்டுள்ள இந்த காரணமற்ற கருணையே மூலமாகும். இதுவே நான் இங்கேயே இருக்க ஆசைப் படும் காரணம் ஆகும்.
மேலும், நித்யசூரிகளே (ஆன்மீக உலகில் நிரந்தரமாக பகவானுக்கு தொண்டு செய்துக் கொண்டு இருக்கும் ஆன்மாக்கள்), பந்த படுத்த பட்ட ஆத்மாக்களுக்கு தாங்கள் வழங்கும் திவ்ய தரிசனத்தை அனுபவிக்க இங்கே வருகிறார்கள். அதனாலே என்னை ஏன் பகவானே ஆன்மீக உலகத்திற்க்கு அழைக்கின்றீர்கள்?”என்கிறார் ஆழ்வார்.
“முடிவாக, ஆன்மீக உலகத்தின் அனுபவம் கூட இங்கே தெய்வீக நாமங்களை சொல்லுவதால் கிடைக்கும் அனுபவத்தை விட ஒப்பிட முடியாது. உங்கள் தெய்வீக நாமங்களில் அவ்வளவு இனிமை இருக்கின்றது.”— என்று ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களை சொல்லுவதால் ஆத்மாவிற்க்கு கிடைக்கும் பேரின்பத்தை இப்பாசுரத்தின் மூலம் இயம்புகிறார் தொண்டரடிபொடிஆழ்வார்.
பாசுரம் 9: மற்றுமோர் தெய்வமுண்டே
கண்ணன் கழல்களைப் பணிக
முழுமுதற் கடவுள் ஶ்ரீகிருஷ்ணரின் பாதகமலங்கள்-ஜீவாத்மாக்கள்
நிரந்தரமான மகிழ்ச்சியுடன் சேவை செய்துக் கொண்டு
இருக்கவேண்டிய நிரந்தர வாசஸ்தலம்.


ஶ்ரீரங்கரின் திருவடிகள்
மற்றுமோர் தெய்வமுண்டே? மதியிலா மானிடங்காள் *
உற்ற போதன்றி நீங்கள் ஒருவனென்றுணர மாட்டீர் *
அற்ற மேலொன்றறீயீர் அவனல்லால் தெய்வமில்லை *
கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமின் நீரே.
பொருள்
மற்றும் — என்னால் சொல்லப்பட்டவனைத் தவிர; ஓர் தெய்வம் — சரணமடைய வேறு ஒரு தெய்வம்; உண்டே? — உண்டோ?; மதி இலா — தத்துவஞானம் இல்லாத; மானிடங்காள்! — மனிதர்களே!; உற்றபோது — ஆபத்து காலத்திலல்லாமல்; அன்றி — மற்ற காலத்தில்; ஒருவன் — ஒருவனே கடவுள்; என்று நீங்கள் — என்பதை நீங்கள்; உணர மாட்டீர் — அறியமாட்டீர்கள்; அற்றம் மேல் — சாஸ்திரங்களின் மறைபொருளை; ஒன்று அறியீர் — சிறிதும் அறியமாட்டீர்கள்; அவன் அல்லால் — அந்த எம்பெருமான் தவிர; தெய்வம் — சரணமடையக்கூடிய தெய்வம்; இல்லை — வேறு இல்லை; கற்றினம் மேய்த்த — கன்றுகளை மேய்த்த; எந்தை — கண்ணனுடைய; கழலிணை — இரண்டு திருவடிகளை; பணிமின் நீரே — நீங்கள் சரணமாகப் பற்றுங்கள்
தொகுப்புரை:
அறியாமை உடைய மக்களே! வேறோர் தேவன் உண்டோ? பெரும் சிரமத்தில் நீங்கள் இருந்தாலன்றி ஶ்ரீகிருஷ்ணர் ஒருவனே முழுமுதற் கடவுள் என்பதை அறிய இயலாது. ஒரு விஷயத்தை உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள்: அவனைத் தவிர வேறு தேவன் இல்லை. கன்றுகளை மேய்த்த எங்கள் தந்தையின் சிலம்புகள் அணிந்த திருவடிகளை வணங்குங்கள்.
விளக்கவுரை:
மற்றோர் தேவர் உண்டே? –
நான் பேசிக் கொண்டிருக்கும் பரம்பொருளைத் தவிர, மற்ற எவரும் பூரணமாய் அடையத்தக்கவர்களாக இருக்க முடியுமா? “நான்தான் அனைத்தையும் கட்டுப்படுத்துபவன்” என்று சிலர் கூறக்கூடுமென்றாலும், நம்மீது இயல்பான அன்பும், நேசிக்கும் தெய்வீக சிறப்பும் உடையவர் ஶ்ரீ கிருஷ்ணர் ஒருவரே மட்டுமே வேறு எயாரும் இல்லை.
ஶ்ரீ பகவத்கீதை 9.23-இல்: “யே த்வன்ய தேவதா பக்தா:….” வேறு தேவதைகளை நம்பிக்கையுடன் வழிபடுகிற பக்தர்கள், உண்மையில் என்னையே தவறான முறையில் வழிபடுகிறார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். இதை ஆதாரமாகக் கொண்டு, கண்ணன் தன்னையும் மற்ற தேவர்களையும் வேறுபடுத்தி காண்பிக்கிறார்; அதே போல், ஆழ்வாரும் இங்கு அதே வேறுபாட்டை நிலை நிறுத்துகிறார்.
மற்றோர் தேவரா? – மிகுந்த வறுமையில் வாழும் மக்கள் கூட ஒரு நாட்டின் குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள் அதைபோல கடவுளுக்கு உரிய சிறப்பு மிக்க தன்மைகள் இல்லாத போதிலும் சிலர் “தேவர்கள்” என அழைக்கப்படுகிறார்கள். ஆனால், உண்மையில் அவரகள் பரம்பொருள் ஶ்ரீ கிருஷ்ணருக்கே உரிய குணங்களைக் கொண்டவர்கள் அல்லர்.
உண்டே? – ஆழ்வார், “இவருக்குச் சமமான வேறு நபர் யாராவது உள்ளார்களா?” என்று கேட்கவில்லை, மாறாக வேறெவரும் கடவுளென்று அழைக்கத் தகுதி இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிடுகிறார்.
இன்னொரு பொருள்: “நமக்கு ஶ்ரீ கிருஷ்ணர் அல்லாமல் புகழ்பெற்றக் காப்பாளர்களாக வேறு யாரும் உள்ளார்களா?” என்று கேட்கிறார் ஆழ்வார்.
இதன் மூலம், ஜீவாத்மாக்களிடம் இரக்கம் காண்பித்து காப்பவர் ஒருவரே – அவர் எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணர் ஒருவரே என்பது வலியுறுத்தப்படுகிறது.
ஶ்ரீ கிருஷ்ணரின் எதிரிகளாக இருப்போரும், “இவர் தானே “எம்பெருமான், முழுமுதற் கடவுள் ” என்று தான் ஒப்புக்கொள்வார்கள். அவருக்கு இருக்கிற புகழ் அத்தனை பெரிது. ஶ்ரீகிருஷ்ணர் எல்லோருக்கும் பாதுகாவலராக இருக்கிறார் என்பது யாராலும் மறுக்க முடியாத சத்தியம்.
மதியிலா மானிடங்காள்!
ரிக் வேதம் (8.1.12.6) சொல்கிறது: த்ரீனி ஷத ஸஹஸ்ரான்யக்னிம் த்ரிம்ஶச்ச தேவ நவ சாஸபர்யன்
மூன்று ஆயிரத்து முப்பத்து ஒன்பது தேவர்கள் தன்னை வழிப்பட்டார்கள் என அக்னி தேவன் சொல்லுகிறார்.
இதனை மேற்கோளாகக் கொண்டு, ஸம்சாரிகள்(பந்தப் பட்ட ஜீவாத்மாக்கள்), ஆழ்வாரை கேட்டார்கள்:
“வேதங்களில் பல்வேறு தேவர்கள் வழிபடப்படுகின்றனர் என்று சொல்கிறபோது, மற்ற தேவர்கள் எவருக்கும் தெய்வீக குணங்கள் இல்லை என்று நீங்கள் எப்படி கூறுகிறீர்கள்?”
அதற்கு ஆழ்வார் பரிகாசத்துடன் கூறுகிறார்: “மதியிலா மானிடங்காள்!”
(வேத ஞானம் எனும் செல்வம் இல்லாதவர்கள்!)
இந்த சொற்கள் — ஆழ்வார் எத்தனை தேவர் இருந்தாலும், ஆயிரக்கணக்கான அக்கினியும், முப்பது தேவர்களையும், இன்னும் ஒன்பதையும் எத்தனையோ பேர் வணங்கினார்கள் தான், ஆனால் என்ன பயன்?” கேட்பது மட்டும் அல்லாமல்
இது, அந்த தேவர்களுக்கு தெய்வீக சக்தி இல்லை என்பதையும், யாரும் பரம்பொருள் அல்ல என்பதையும் பரிகாசம் செய்து காட்டும் சொற்களாகும்.

ஶ்ரீகிருஷ்ணரே முழுமுதற் கடவுள் ஆவார்.
எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணரின் பரத்துவத்தை நிலைநிறுத்த பின்வரும் பிரமாணங்கள் மேற்கோள் காட்டப் படுகிறது.
1. யஜுர் வேதம் 3.11.21: “ச்சதுரோத்தாரோ. யத் ர சம்பதம் கச்சந்திதேவஹ”
அக்னிஹோத்ரம், தர்ஷ பூர்ணமாசம் போன்ற பல கர்மாக்களைச் செய்யும் போது, அவை பெருமை பெறும் காரணம் என்னவென்றால், அந்த கர்மங்களில் தொடர்புடைய தேவர்கள், எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணரின் உடலின் பகுதியாக இருக்கிறார்கள். மேலும் அந்த தேவர்களின் உள்ளே பகவான் ஶ்ரீகிருஷ்ணர் அந்தர்யாமியாக எப்போதும் இருந்துக் கொண்டிருக்கிறார். அவர் அந்த கர்மாக்களை ஏற்கிறார். பகவான் ஶ்ரீகிருஷ்ணர் ஏற்பதால் அந்த கர்மாக்கள் பெருமையும், நிறைவும் பெறுகின்றன.
இதனால், மற்ற தேவர்கள் வழிபடப்படுவதற்கு காரணம், அவர்கள் தனிப்பட்ட பரத்துவம் கொண்டவர்கள் என்பதாலல்ல; அவர்களுள் உறையும் ஒரே பரமாத்மா — பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் இருக்கிறார் என்பதால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வீணாகத் தேடுகின்ற இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை – வேதம் முழுவதும் பரந்து கிடக்கும் ஒரே தெய்வம்: எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணர் மட்டுமே ஆவார்.
மேலும் இரு முக்கியமான ஸ்ருதி மற்றும் ஸ்மிருதி பிரமாணங்களை காண்போம்
1. ஸ்ரீ பகவத் கீதை 9.24: அஹம் ஹி ஸர்வ-யஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச
பொருள்: “எல்லா யாகங்களுக்கும் (யஜ்ஞங்களுக்கும்) நானே போக்தாவும் (பயனை அனுபவிப்பவனும்), நானே அதற்குப் பிரபுவும் (பயனளிப்பவனும்) ஆவேன். மற்ற தேவர்களை அடைய முயற்சிக்கின்றவர்கள் இதை உணராமல், என்னிடமிருந்து விலகுகிறார்கள்.”
இது, மற்ற தேவதைகளுக்குச் செய்யப்படும் யாகங்கள் கூட, உண்மையில் ஶ்ரீ கிருஷ்ணருக்கே செய்யப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.
2. தக்ஷ ஸ்மிருதி 355.4: யே யஜந்தி பித்ரூன் தேவாந் …
பொருள்: யாரெல்லாம் பித்ருக்களை (பூவுலகத் தலைமுறை முன்னோர்கள்), தேவர்களை, பிராமணர்களை, மற்றும் அக்னியை பூஜிக்கிறார்களோ, அவர்கள் ஶ்ரீ கிருஷ்ணரையே பூஜிக்கின்றனர்; ஏனெனில், அவரே இவர்கள் அனைவரிடத்திலும் அந்தர்யாமியாக இருக்கிறார்.
எனவே, ஸ்ருதி மற்றும் ஸ்மிருதிகளைப் பற்றிய அறிவு (எல்லாவற்றுள்ளும் அந்தர்யாமியாக இருக்கும் ஒரே நபர் முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் என்னும் அறிவு) இல்லாதவர்கள், துர்பாக்கியசாலிகள் என்றும் கருதப்படுகிறார்கள். இதை கேட்ட சம்சாரிகள், “எங்களுக்குத் ஞானத்தெளிவு இல்லாததால், தயவுசெய்து எங்களுக்கு விளக்கி வழி நடத்துங்கள்” என்று ஆழ்வாரிடம் யாசிக்கிறார்கள்.
“உற்ற போதன்று நீங்கள் ஒருவன் என்று உணரமாட்டீர்”
ஆழ்வார் பதிலளிக்கிறார்:
“நான் எவ்வளவு சொன்னாலும், பிரளயம் (பெருநாசம்) வரும் நாளில், நீங்களும், நீங்கள் வழிபடும் தேவர்களும், எம்பெருமானின் வாயில் விழுந்து நிறைவு பெரும் வரை, முழுமுதற் கடவுளாக, பரமாத்மாவாக இருப்பவர் எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் மட்டுமே என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள மாட்டடீர்கள்.”
ஒருவன் – ஈடு இணையற்றவன்; தனித்துவம் படைத்தவன்; உவமைக்கே அப்பாற்பட்டவனாகிய பரமாத்மா ஶ்ரீகிருஷ்ணர்.
உற்றபோது – பெருநீர்ப்பெருக்காகிய பிரளய காலத்தில்.
மற்றொரு விளக்கம்: நீங்கள் வழிபடும் தேவர்கள், ராவணன், ஹிரண்யன், பஸ்மாசுரன் போன்ற அசுரர்களால் அழிவடையும் சூழ்நிலையில் விழும் போதும், அவர்கள் தாங்களே எம்பெருமானிடம் “தப்பிக்கக் காப்பாற்று!” எனக் கூக்குரலிடும் அந்த நாழிகையில் தான் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் தான் உயர்ந்த இறைவன் என்று நீங்கள் உணர்வீர்கள்.
ஒருவன் என்று உணரமாட்டீர் –
மற்ற தேவர்களை வழிபடும் சாம்ஸாரிகளே, அவர்களுக்கு மாறாக எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணர் தான் உண்மையான கடவுள் என்பதை, துன்பம் வரும் நேரம் வரைக்கும் கூட நீங்கள் அறியமாட்டீர்கள் என்கிறார் ஆழ்வார்.
ஆழ்வார் இதைக் கொண்டு என்ன கூறுகிறார்?
மோட்சம் அளிக்கக்கூடிய பரமாத்மா எனும் எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணரிடம் ஆசை இல்லாமல், ஆத்மாவின் நலனில் அக்கறை இல்லாத சிறிய விருப்பங்களை நிறைவேற்றும் மற்ற தேவர்கள் மீது நேசமோ, பற்றோ வைத்து வாழும் சம்சாரிகளைப் (பந்தப்பட்ட ஜீவாத்மாக்கள்) பார்த்து ஆழ்வார் மனம் மிகுந்த சோகத்தில் ஆழ்கிறார்.
“அறமேல் ஒன்று அறியீர்”
அறம் என்பது மறைந்துள்ள அர்த்தங்களை குறிக்கிறது. ஸம்ஸாரிகளிடம் உள்ள அறியாமை, அவர்கள் வேதங்களின் வெளிப்படையான பொருள்களையே புரிந்து கொண்டு, அதன் ஆழமான உண்மை தத்துவங்களைப் கிரகித்துக் கொள்ள் முடியாததால் தான் ஏற்படுகிறது.
ஜிதந்தே ஸ்தோத்ரம் 1.7-ல் கூறப்படுகிறது: “வசஸாம் வாச்யமுத்தமம்”
மிகுந்த ஞானம் உள்ள மக்கள், (முமுக்ஷுகள்) எல்லா விளைவுகளுக்கும் மூலக்காரணம் நீயென்றும், எல்லா சொற்களுக்கும் உண்மையான அர்த்தமானவனும், எல்லோருக்கும் அடைய வேண்டிய உயர்ந்த இலக்கணமும் நீயென்றும் புரிந்துகொள்கிறார்கள்.
பகவத்கீதையில் (15.15) கிருஷ்ணர் கூறுகிறார்: “வேதைஶ்ச ஸர்வைர் அஹமேவ வேத்ய:” – எல்லா வேதங்களாலும் அறியப்படவேண்டியவனாக இருப்பவர் நானே.
“அவன் (ஐ) அல்லால் தெய்வமில்லை”
இங்கு ஆழ்வார் கூறுவதை “மற்ற தெய்வங்கள் இல்லை” என்று அர்த்தம் செய்வது அல்ல. மற்ற எந்தத் தெய்வங்களும் முழுமையான தெய்வீகத்துவம் உடையவர்கள் அல்ல. ஆழ்வார் வேறு தெய்வங்கள் இருக்கவே இல்லையென்று மறுப்பதில்லை.
ஏனெனில், தைத்ரியேய உபநிஷத்தில் (ஶீக்ஷாவல்லி 5.1): “ஸ ஆத்மா அங்காந்யன்ய தெய்வதா:” – அவன் தான் ஆத்மா, மற்ற தெய்வங்கள் அவனது உடலின்அங்கங்கள். மற்ற தேவர்கள் எல்லாம் அவருடைய ரூபமாகவும் உடலாகவும் உள்ளவர்கள்; அவர் தான் அவர்களுக்குள்ள ஆன்மா.
ஸ்ரீமத் பாகவதம் 1.3.28: க்ரிஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் – பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே உயர்ந்த இறைவன்.
முழுமையான மற்றும் இயல்பான தெய்வீக குணங்களை கொண்ட ஸ்ரீ கிருஷ்ணரே இருக்கும்போது, அவராலேயே கொடுக்கப்பட்ட சிறிது சிறிது தெய்வீக குணங்களை மட்டும் கொண்டுள்ள மற்ற தேவர்களிடம் சரணடைதல் முறையல்ல.
எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரை போல முழுமையான, ஸ்வரூப சித்தியான தெய்வீக குணங்களை உடையவர் மற்றொருவரில்லையென்று ஆழ்வார் உறுதியாகச் சொல்கிறார்.

பகவான்ஶ்ரீகிருஷ்ணரும்,பலராமரும்,பசுக்களையும் ,
கன்றுகளையும் மேய்த்தப் பிறகு அவைகளை மீண்டும்
இல்லத்திற்கு அழைத்துவரும் காட்சி.
“கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே”
ஆழ்வார் “கிருஷ்ணா” என்று அழைக்காமல், “கற்றினம் மேய்த்த” என்று குறிப்பிடுகிறார். இது அவனுடைய எளிமையையும், ஜீவாத்மாக்கள் அடைய எளிதாக இருப்பதையும் காட்டுகிறது. அதாவது பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகள் போன்ற தன்னை தானே காத்துக்கொள்ளும் திறன் இல்லாத ஜீவாத்மாக்களும் கூட எளிதாக அடையக் கூடிய வகையில் இருப்பவர்.
இங்கு “கறு” என்பது “கன்று” என்பதின் விகாரமாகும். அதாவது, கன்றுகளுக்கும், பசுக்களுக்கு மேய்ப்பர் போல ஸம்ஸாரிகளையும் பாதுகாக்கும் ஒருவன் தான் முழுமுதற் கடவுள் ஶ்ரீகிருஷ்ணர் ஆவார் என்று கூறுகிறார் ஆழ்வார்.
திருவாய்மொழி 10.3.10-இல்: “திவத்திலும் பசுநிறை மேய்ப்புவதில் இனிது”
ஶ்ரீ கிருஷ்ணர் கோலோகத்தில் இருப்பதைவிட பசுக்களுடன் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறார்.
திருமங்கையாழ்வாரும் திருநெடுந்தாண்டகம் 10-இல் கூறுகிறார்: “கன்று மேய்த்து இனிதுகந்த காலாய்” – கன்றுகளை மேய்த்ததில் மகிழ்ச்சியடைந்தவனே.
எந்தை – என் தந்தை. எனது ஆண்டவனும், அன்புமிகும் பாதுகாவலனுமானவர். ஆழ்வார் கூறுகிறார்: நான் எப்படி ஶ்ரீ கிருஷ்ணரால் ஈர்க்கப்பட்டு அவரை அடைந்தேனோ, அதுபோலவே மற்றவர்களும் ஶ்ரீ கிருஷ்ணரை அடையலாம். இவ்வாறு, எளிமையான எம்பெருமானைப் பணிந்து, அவனுடைய கழலிணையை தொழுதுகொள்ளுமாறு ஆழ்வார் அழைக்கிறார்.
கழலிணை பணிமின் நீரே – அவனுடைய திருவடிகளை பற்றிக் கொள்ளுங்கள். இங்கு “பணிமின்” என்ற சொல், “தொழுது கொள்ளுங்கள்”, “அடைக்கலம் ஆகுங்கள்” என்பதைக் குறிக்கிறது.
இதைத் தெளிவுபடுத்த, இளையப்பெருமாள் (லக்ஷ்மணன்) ஸ்ரீ இராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டம் 4.12-இல் சொல்கிறார்: “அஹமஸ்யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யமுபாகத:”
பிறப்பால் நான் அவனுடைய (இராமனுடைய) சகோதரன்; ஆனாலும், அவனுடைய குணங்களால் கவரப்பட்டு அவனுக்கு தாஸனாகியுள்ளேன்.
பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் ஶ்ரீ கிருஷ்ணர் அளிக்கும் அன்பு, எம்பெருமானுடைய எளிமையையும், பரிபூரண கருணையையும் காட்டுகிறது. இதனைக் கண்ட ஆழ்வார், நம்மையும் ஶ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளை பற்றிக்கொள்ளச் சொல்லுகிறார்.
மற்ற தெய்வங்களைப் போல் அல்லாமல், எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் தனது அனுபவங்களை, திருக்கைங்கர்யங்களை, பக்தர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இந்த விஷயம் கிருஷ்ண லீலைகளிலும் முழுமுதற் கடவுளின் மற்ற அவதாரங்களிலும் சுட்டிகாட்டப்படுகிறது. இந்திரன் போன்ற மற்ற தெய்வங்கள், தம்முடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில்லை.
எனவே, ஜீவாத்மாக்களே, “அந்த எளியதும், எல்லாம் அளிக்கும் திருவடிகளை, பரிசுத்தமும் பரம கருணை மிகுந்ததும் ஆகிய பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் கழலிணை, பணிந்து உய்வு அடையுங்கள் என ஆழ்வார் நம்மை அழைக்கிறார்.
ஹரே கிருஷ்ணா
பாசுரம் 4: நாட்டினான்
உலகம் உய்யத் திருவரங்கத்தைக் காட்டினான்

பகவான் ஶ்ரீகிருஷ்ணர்
எம்பெருமான் எழுந்தருளி இருக்கும்
திருவரங்கம்
நாட்டினான் தெய்வமெங்கும் நல்லதோரருள் தன்னாலே *
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் *
கேட்டிரே நம்பிமீர்காள்! கெருடவாகனனும் நிற்க *
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே
பொருள்
எங்கும் — எல்லாவிடங்களிலும்; தெய்வம் எங்கும் — தெய்வங்களை; நாட்டினான் — நிலைநிறுத்தினான்; உய்பவர்க்கு — வாழ விரும்புமவர்களுக்கு; நல்லது ஓர் — தனது ஒப்பற்றதொரு; அருள் தன்னாலே — கிருபையினால்; திருவரங்கம் — திருவரங்கத்தை; காட்டினான் — காண்பித்துக்கொடுத்தான்; உய்யும் வண்ணம் — வாழலாம்படி; நம்பிமீர்காள்! — நினைத்திருப்பவர்களே!; கேட்டிரே — கேட்டீர்களா?; கெருடவாகனனும் — கருடனை வாகனமாக உடைய; நிற்க — எம்பெருமான் இருக்கும்போது; சேட்டை தன் மடியகத்து — மூதேவியிடத்தில்; செல்வம் பார்த்து — செல்வம் பெற நினைத்து; இருக்கின்றீரே— நிற்கின்றீர்களே!
தொகுப்புரை:
முழுமுதற் கடவுள் ஶ்ரீ கிருஷ்ணர், தன் அருளால் எல்லா தேவர்களையும் உருவாக்கினான்; பிறவிகளை விட்டு விடுதலை பெற விரும்புவோருக்கு ஸ்ரீரங்கத்தை வழியெனக் காட்டினான். ஐயா நம்பீர்களே (பந்தப் பட்ட ஆத்மாக்களே)! கேளுங்கள் – கருடன் மீது இருக்கும் கிருஷ்ணன் இங்கே இருக்கிறான். ஆனால் நீங்கள் கெட்ட நடத்தை மூலம் கிடைக்கும் செல்வத்தை மட்டுமே நாடுகிறீர்கள்.
விளக்கவுரை:
நாட்டினான் — எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரின் பக்தர்கள், சுத்த சத்துவ குணம் அதிகமாக உள்ளவர்கள். அந்த குணத்தால் எழும் ஞானத்தினால் இயற்கையாகவே எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரிடம் சரணாகதி செய்கிறார்கள். ஆனால் ரஜோ குணமும் (ஆசை, காமம், கோபம் நிறைந்த குணம்) மற்றும் தமோ குணமும் (அறியாமை, சோம்பல், மயக்கம் போன்றவை) மேலோங்கியவர்களுக்கு அந்த ஞானம் இல்லாததால், அவர்கள் நேரடியாக எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரிடம் வருவதில்லை. இருப்பினும், அவர்கள் தங்கள் சுய இஷ்டத்தினால் உலக இன்பங்களில் முழுமையாக விழுந்துவிடாமல் இருக்க, எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணர் தாமாகவே ராஜஸ மற்றும் தாமஸ குணங்களை உடைய தேவர்களை முதலில் அணுகும்படியாக ஏற்பாடு செய்கிறார்.
காலப்போக்கில், சாத்வீக ஞானம் விழித்தெழும் போது, இந்த ஸம்ஸாரிகள் (பந்தப் பட்ட ஆத்மாக்கள்) எம்பெருமானுடைய மங்களமான குணங்களை உணரத் தொடங்கி, இறுதியில் அவரிடம் சரணாகதி அடைகின்றார்கள். இந்தக் காரணத்திற்காகத்தான் எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் பல தெய்வங்களை நியமித்துள்ளார்.
எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர்
ஜீவாத்மாக்களின் நலனுக்காக
மற்ற தெய்வங்களைப் படைத்தல்.
“நாட்டினான்” என்ற சொல்லுக்கு ஒரு பொருள் “நியமித்தவர்” அல்லது “நிறுவியவர்” என்பது. இன்னொரு விளக்கம் என்னவெனில், அந்த தெய்வங்களின் உள்ளே அந்தர்யாமியாக இருப்பதும், அவர்களுக்கு தேவையான ஆற்றலையும், செயல்பாட்டையும் அளிப்பதும் எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரே என்பதேயாகும். எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் இன்றி, அந்த தெய்வங்கள் ஒரு பற்றுக்கோல் இல்லாத தாவரக்கொடியின் ஆதரவில்லாத நிலை போன்று தான் இருக்கிறார்கள்.
எப்படி ஒரு கொடி, தாவரம் ஆரம்பத்தில் சிறிய குச்சியொன்றின் ஆதரவுடன் வளரத் தொடங்கி, பின்னர் ஒரு முழுமையான பந்தலின் ஆதரவால் செழித்து வளர்கிறதோ, அதேபோல் ராஜஸ மற்றும் தாமஸ குணங்கள் உடைய ஜீவாத்மாக்கள் ஆரம்பத்தில் மற்ற தெய்வங்களை ஆதரவாகக் கொண்டு, பின்னர் சாத்வீக ஞானம் வளர்ந்த பின்பு, எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரையே இறுதி ஆதரவாக இறுகப் பற்றிக்கொள்கிறார்கள்.
பகவத் கீதை 3.10: “படைப்பின் தொடக்கத்தில், அனைத்து உயிரினங்களின் இறைவன் (ஶ்ரீ கிருஷ்ணர்) மனிதர்களையும், தேவர்களையும், விஷ்ணுவுக்கான யாகங்களையும் அனுப்பினார்”
பகவத் கீதை 10.2: கிருஷ்ணர் கூறுகிறார் – “எல்லா விதத்திலும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் நானே மூல காரணம்”
மகாபாரதத்தின் மோக்ஷ-தர்மப் பகுதியில், கிருஷ்ணர் கூறுகிறார்: “சிவனும் மற்றவர்களும் என்னால் படைக்கப்பட்டவர்கள், ஆனால் அவர்கள் எனது மாயை சக்தியால் மயக்கமடைந்திருப்பதால், அவர்கள் என்னால் படைக்கப்பட்டவர்கள் என்பதை அவர்கள் அறியவில்லை”.
ஸ்ரீல பிரபுபாதர் எழுதுகிறார்: “படைப்பின் தொடக்கத்தில் பரம புருஷ நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மா இல்லை, சிவன் இல்லை, தண்ணீர் இல்லை, நெருப்பு இல்லை, சந்திரன் இல்லை, வானம் மற்றும் பூமி இல்லை, வானத்தில் நட்சத்திரங்கள் இல்லை, சூரியன் இல்லை” (மகா உபநிஷத் 1.2).
மகா உபநிஷத்தில், பரம புருஷரின் நெற்றியில் இருந்து சிவபெருமான் பிறந்தார் என்றும் கூறப்படுகிறது.
நாராயண உபநிஷத்: “நாராயணரிடமிருந்து பிரம்மா பிறக்கிறார், நாராயணரிடமிருந்து பிரஜாபதிகளும் பிறக்கிறார்கள். நாராயணரிடமிருந்து இந்திரன் பிறக்கிறார், நாராயணரிடமிருந்து எட்டு வசுக்கள் பிறக்கிறார்கள், நாராயணரிடமிருந்து பதினொரு ருத்ரர்கள் பிறக்கிறார்கள், நாராயணரிடமிருந்து பன்னிரண்டு ஆதித்யர்கள் பிறக்கிறார்கள்”.

இந்த நாராயணர்
ஶ்ரீகிருஷ்ணரின் விரிவாக்கம்
நாராயண உபநிஷத்: பிரம்மண்யோ தேவகி-புத்ர: “தேவகியின் மகன் கிருஷ்ணர், பரம புருஷர்” என்று கூறப்படுகிறது.

பரமபுருஷர் ஶ்ரீகிருஷ்ணர்
“தெய்வம் எங்கும்”
– எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், அய்யன், ஏழு மூர்த்தி, சப்த கன்னிகைகள், பிடாரி போன்ற பல தெய்வங்களை உருவாக்கினார்.
சம்ஸாரிகளில் (பந்தப்பட்ட ஆத்மாக்களில்) உள்ள பலவிதமான மனநிலை மற்றும் பிறவிகளை கொண்ட ஜீவாத்மாக்களும், மேலும் மிக தாழ்ந்த குணம் கொண்ட சண்டாளர் வரையிலும் — தெய்வங்களை அணுகும் வகையில், இந்த தெய்வங்கள் உள்ளன.
மகாபாரதம்: “விஷ்ணு என்பவர் பகவான் மஹேஸ்வரனின் உள்ளே இருக்கும் அந்தர்யாமி (பரமாத்மா) ஆவார்; அவருடைய அளவற்ற தேஜஸால் (தெய்வீக சக்தியால்) தான், திரிபுர அசுரர்களை அழிக்க தனுசுவை இழுத்து அம்பு எய்தப்பின் ஏற்பட்ட சிரமத்தை மஹேஸ்வரனால் தாங்க முடிந்தது.”
இது, மற்ற தெய்வங்களிடம் இருக்கும் ஆற்றலும், செயலும் எம்பெருமானால் வழங்கப்பட்டது என்பதைத் தெளிவாக விளக்குகிறது.
அதாவது, எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் மற்ற தெய்வங்களின் உள்ளே அந்தர்யாமியாக இருந்து, அவர்களை வழிபடுவோருக்கு (பந்தப் பட்ட ஆத்மாக்கள்) அவர்கள் விதிக்கேற்ப தேவைப்படும் பலன்களை பெறச் செய்கிறார்.
அவ்வாறு, எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் அந்த தெய்வங்களுக்குப் பெயரையும் புகழையும் அளிப்பவர். ஆனால், அவர் உண்மையில் விரும்புவது என்னவெனில், அனைத்து ஜீவாத்மாக்களும் (பந்தப்பட்ட ஆத்மாக்கள்) இறுதியில் தன்னை அடைந்து மோக்ஷத்தை பெற வேண்டும் என்பதே.
இந்த உயர்ந்த நோக்கத்தால் தான், எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், மற்ற தெய்வங்களை நியமித்து (நாட்டி) வைத்துள்ளார். மேலும், வேதங்களை மனிதர்களுக்கு அருளி, அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குகிறார். வேதங்களின் உதவியுடன், இந்த பந்தப்பட்ட ஆத்மாக்கள் மற்ற தெய்வங்களின் தாழ்ந்த நிலையையும், எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரின் பரம உயர்வையும் உணர்ந்து, இறுதியில் தன்னைச் சரணாகதி செய்வார்கள் என்பதே ஆகும்.

ஜீவாத்மாக்கள் எம்பெருமானிடம்
சரணாகதி செய்தல்
துரதிர்ஷ்டவசமாக, அதிகமான பாபங்களின் காரணமாக, பெரும்பாலான பந்தப் பட்ட ஆத்மாக்கள் மற்ற தெய்வங்களையேப் பற்றிக்கொண்டு விடுகிறார்கள்; எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரைப் பற்றி அவர்கள் பெரிதாக விருப்பமும், அக்கறையும் கொள்வது இல்லை.
இது, ஒருகொடித் தாவரம், வளரத் தொடங்கும் போது உதவிக்கு வைத்த சிறிய குச்சியையே என்றும் பற்றிக்கொண்டு, அதை விட்டு விட்டுப் பூரணமான பந்தலின் மேல் வளரும் வாய்ப்பை பயன்படுத்தாதது போன்று இருக்கிறது.
“நல்லதோர் அருள் தன்னாலே”
எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், தனது நல்லதொரு அருளால், பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு அர்த்தம் மிகுந்த உண்மையான நன்மை எது என்பதை அறிவிக்கிறார். இதன் மூலம், அவர்கள் எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரிடம் வர வழிவகுகிகிறார்.
“நல்லதோர் அருள்” என்பது மூன்று வகையான அருளாகப் பிரிக்கப்படுகிறது:
1. அருள் – எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், பந்தப்பட்ட ஆத்மாக்களின் “பலனை எதிர்பார்த்து செய்யும்” நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மற்ற தெய்வங்களை அணுகும் வாய்ப்பு அளிக்கிறார்.
இது அவருடைய பொதுவான அருள்.
2. ஓர் அருள் – இந்த பிற தெய்வங்கள் வழியாக தம்மை அடையச் செய்வதற்காக, எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் தனிப்பட்ட வகையில் வழிகாட்டும் அருள் அளிக்கிறார்.
இது அவருடைய தனிப்பட்ட அருள்.
3. நல்லதோர் அருள் – பந்தப்பட்ட ஆத்மாக்களின் தாழ்ந்த நிலையையும், ஆதரவற்ற நிலையயும் பார்த்து, எந்தவித காரணமுமின்றி, அவர்களுக்கு தம்மையே வழியாகவும், தம்மையே இலட்சியமாகவும் காட்டி, திருவரங்கத்தில் வெளிக்காட்டுகிறார்.
இது எம்பெருமானின் காரணமற்றக் கருணைக்கே உண்டான அருள்.
ஆளவந்தார் அவர்களின் ஸ்தோத்திர ரத்னம் (ஸ்லோகம் 48):
அபராத ஸஹஸ்ர பாஜனம் பதிதம் பீம மஹார்ணவோதரே |
அகதிம் ஷரணாகதம் ஹரே க்ருபயா கேவலம் ஆத்ம சாத்குரு ||
“அருள் ஒன்றின் அடிப்படையிலேயே, என்னை உமது சொத்தாக மாற்றுவாயாக. நானே ஆயிரக்கணக்கான பாவங்களுக்கு உரியவனாய், பயங்கரமான சம்ஸாரக் கடலில் வீழ்ந்தவனாய், தப்பிக்க எங்கு செல்லவும் வழியில்லாதவனாய் இருப்பவன், இப்போது உம்மிடம் சரணாகதியாக வந்துள்ளேன். ஓ ஹரே! கருணை கொண்டு, என்னை முழுமையாக உமதாக்குவாயாக.”
பந்தப் பட்ட ஆத்மாக்கள் தாங்கள் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ளனர் என்பதையும் உணராமல் இருக்கும்போது கூட, எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள் மேல் காட்டும் இந்த காரணமில்லாத அருளே “நல்லதோர் அருள்” என்று அழைக்கப்படுகிறது.
இந்த அருளின் காரணமாகத்தான், அவர் அடுத்ததாக திருவரங்கத்தைக் குறிப்பிட உள்ளார்.
அதேபோல், மற்ற தெய்வங்களை நியமித்ததும், இதே அருளின் வெளிப்பாடாகவே இருக்கிறது என்று ஆழ்வார் கூறுகிறார்.
அருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம்
எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், தன்னுடைய காரணமற்ற அருளினால், திருவரங்கத்திலே தன்னை வெளிப்படுத்தினார். யாரும் இவரைப் பிரார்த்தனை செய்து அழைக்கவில்லை.
பாலூட்டும் தாயின் முலைகளில், உள் வலி காரணமாக தானே பால் சொட்டுவது போல, எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரும், ஜீவாத்மாக்களின் பிரிவினால் தாங்க முடியாத வலியில், தன்னை திருவரங்கத்தில் தானாகவே வெளிக்காட்டுகிறார். ஒருவர் ஒரு மாணிக்கத்தை துணியில் மூடி நன்கு பாதுகாத்து, பின் அதை உரியவரிடம் அளிப்பது போல, எம்பெருமானும் திருவரங்கக் கோயிலில், தன்னைத் திறம்பட மூடி வைத்து, பின்னர் உணர வைக்கும் விதத்தில், தன்னையே அருளாக அளிக்கிறார்.
இவ்வாறு திருவரங்கத்தில் உறைவதன் மூலம், பந்தப் பட்ட ஆத்மாக்கள் தாங்கள் வழிபடும் மற்ற தெய்வங்களுக்கும், எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணருக்கும் உள்ள வித்தியாசத்தை உணர, எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் மட்டுமே உண்மையான ரட்சகர் என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறார்.
உய்பவர்க்கு
உயர்ந்த வாழ்க்கையை நாடுகிறவர்களுக்கு, எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் திருவரங்கத்தில் தன்னைத்தானே வெளிப்படுத்தினார். பந்தப் பட்ட ஆத்மாக்கள் எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரை வெளிப்படையாகத் தள்ளுபடி செய்யவில்லை என்றாலே போதுமானது.
உண்மையான வாழ்க்கையின் வழி, அவரிடம் சரணாகதி அடைவதே ஆகும். இங்கு உள்ளர்த்தமாக கூறப்படுவது – மற்ற தெய்வங்களை சரணடைவது, பிணைகளை விடுவிக்காமல், மேலும் மேலும் பிணைக்கும் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது.
உய்யும் வண்ணம்
மற்ற தெய்வங்களின் உள்ளே அந்தர்யாமியாக இருக்கும் எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரை, கர்மா (வேத ஆணைகளுக்கு ஏற்ப செய்யப் படுகின்ற யாகங்கள், ஹோமங்கள் போன்ற கிரியைகள்) மற்றும் உபாசனை (தியானம், விரதம், பக்தி வழிபாடு) ஆகியவைகளைப் பயன்படுத்தி வழிபடுவது, பந்தப்பட்ட ஆத்மாகள் மோட்சம் அடையக் கூடிய ஒரு வழியாக வேதங்கள் கூறுகின்றன.
ஆனால், இந்த வழி பிராமணர், சத்திரியர், வைசியர் என்ற முதல் மூன்று வர்ணத்தில் பிறந்தவர்களுக்கே உரியதாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, திருவரங்கத்துக்கு சென்று, எம்பெருமான் அரங்கநாதரையே வழியாகவும், எம்பெருமான் அரங்கநாதரையேப் பயனாகவும் ஏற்றுக்கொண்டு, அவரிடம் சரணாகதி செய்வது, எந்த வர்ணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைத்து பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கும் இயலக்கூடிய, அனைவருக்கும் சிறந்த, ஒரே, மிக எளிய மற்றும் உயர்ந்த மோட்ச மார்க்கமாக இருக்கிறது.
“கேட்டீரே நம்பிமீர்காள்”
உலக விஷயங்களில் முழுமையாக மூழ்கி, அதிலேயே திருப்தியாக இருக்கிற பந்தப்பட்ட ஆத்மாக்களை நோக்கி ஆழ்வார் கேட்கிறார்: “நான் சொல்வதைக் கேட்டுப் பாருங்களேன்?”
மற்றொரு பொருளாக, ஆழ்வார் இப்படியும் கேட்கிறார்: “எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரே நேரில் இருக்கிறபோது, நீங்கள் மற்ற தெய்வங்களைத் தேடித் தேடி திரிந்து, அதில் திருப்தி அடைகிறீர்களே – இப்போது என் சொல்லைக் கேட்டுப் பாருங்களேன்?”
இவர்கள், சதுரங்க ஆட்டத்தில் கவனம் முழுவதும் செலுத்திவிட்டு, வெளியுலகை மறந்து விடும் ஆட்கள் போல, உலகச் செயல்களில் முழுமையாக மூழ்கி, எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரை மறந்தவர்கள் ஆவார்கள். அதனால் ஆழ்வார் அவர்களின் தொடைகளில் தட்டி எழுப்புவது போல் விழிப்பூட்ட முயற்சிக்கிறார்.
“கருட வாகனனும் நிற்க”
வேதங்களின் சாக்ஷாத் ரூபமான கருடனை, வாகனமாகக் கொண்டிருக்கும் எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், ஜீவாத்மாக்களான நம் அனைவரும் அடைந்து உய்ய வேண்டிய பரம தத்துவம் என ஆழ்வார் அறிவுறுத்துகிறார். ஶ்ரீ கிருஷ்ணர், கருடன் மீது அமர்ந்து, சோர்வின்றிச் சுழலும் சுதர்சனச் சக்கரத்தை எப்போதும் வைத்திருக்கும் பிரபுவாகவும், அனைத்து மங்களங்களுக்கும் மூலமாக விளங்கும் மஹாலட்சுமியை தனது மார்பில் கொண்டவராகவும் இருக்கிறார்.
இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட, அவர் எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் என நாம் அறிந்து கொள்ளலாம்.
ஆனால், இந்த மூன்றும் ஒரே நபரில் நிறைந்து இருப்பதால், அவர் தான் நமக்கு வீடு பேறு தரும் ஒரே தெய்வம் என்பது தெளிவாகிறது.

கருடன் மீது ஆரோகணித்து
வரும் முழுமுதற் கடவுள்
“கருட வாகனனும் நிற்க” – எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், தம்மைச் சிறிதளவாவது நேசிக்கும் எந்த ஜீவனையும் அடைய, கருடனை அவசரமாக அழைத்து, “அவனை என்னிடம் கொண்டு வா” என்று ஆவலுடன் கூறுகிறார். அதாவது, தன்னிடம் சிறு இழை அன்பேனும் காட்டுகிறவரை நோக்கிச் செல்ல அவர் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்.
இங்கு “நிற்க” என்பதன் பொருள் – பந்தப் பட்ட ஆத்மாக்கள் தம்மை நோக்கி திரும்பும் நாளுக்காக எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் காத்திருக்கிறார். அவர் ஒரு பக்கமாய் நின்று, அவர்கள் எப்போது தன்னை நோக்கி வருவார்கள் என்று பரிபூரண காத்திருப்புடன் நிற்கிறார்.
இது, இராமாயணத்தில் சுமந்த்ரர், இராமன் கங்கை கரையை விட்டுச் செல்லும் நேரத்தில், அவனைத் தொடர்ந்து அந்த இடத்திலேயே உறுதியுடன் காத்திருந்தது போல இருக்கிறது.
மற்றொரு விளக்கம்: பந்தப்பட்ட ஆத்மாக்கள் மற்ற தெய்வங்களை நாடிச் செல்லும் வழியில், அவர்கள் கண் முன்னே நிற்கிற எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரைப் பாராமல், தவிர்த்துச் செல்லும் நிலையை ஆழ்வார் வர்ணிக்கிறார். எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணர், அவர்கள் அருகிலேயே நிற்பதையும், எவ்வித்திலாவது ஜீவாத்மாக்கள் தாங்களாகவே உணர்ந்து திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையோடும், பொறுமையோடும் காத்திருப்பதையும் இங்கு “நிற்க” என்ற சொல்லில் ஆழ்வார் கூறுகிறார்.
“சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே!”
ஓ பந்தப்பட்ட ஆத்மாக்களே, மூதேவியின் (ஐஸ்வர்யமற்ற தெய்வத்தின்) மடியில் செல்வம் கிடைக்கும் என எதிர்பார்த்தபடி, அவரிடம் செல்வத்திற்காகக் காத்திருப்பது போல, மற்ற தெய்வங்களிடமிருந்து மோட்சம் கிடைக்கும் என எதிர்பார்த்து நிற்கிறீர்கள்.
சம்ஸாரத்தில் இருந்து விடுதலை தரும் மோட்சத்தை, சம்ஸாரத்துக்கே பிணைக்கும் தாழ்ந்த பலன்களையே வழங்கக்கூடிய தெய்வங்களிடமிருந்து பெற முடிகிறதா?
அந்த செயல், தோல்வியில் வாழும் ஒருவரிடம் வெற்றியை நாடுவது, அல்லது, ஒரு துணி கூட இல்லாத ஒருவரிடம் ஆடை கேட்பது போல ஆகும்.
மோட்சம் என்பது, சுத்த சத்வ குணம் உடையவர்களால் மட்டுமே அடையக்கூடியது.
அதுபோல, ரஜோ மற்றும் தமோ குணம் மேலோங்கிய தெய்வங்கள்,அந்த மோட்சத்தைக் கொடுக்க இயலாதவர்களே. இந்தத் தெய்வங்கள் அறிவும், ஆற்றலும் கொண்டிருக்கலாம். ஆனால், எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரிடம் சரணாகதி செய்தவர்கள் வழிபடத் தகுதியில்லாத தெய்வங்கள் ஆவார்கள். அந்த தெய்வங்கள் ஒரு மன்னரின் கீழுள்ள ஊழியர்களைப் போன்றவர்கள் ஆவார்கள்.
ஹரே கிருஷ்ணா
பாசுரம் 14: வண்டினம் முரலும் சோலை
கடவுளைத் தொழாதவர்க்குச் சோறு தராதீர்

சோலைகள் சூழ்ந்த ஶ்ரீரங்கம்
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை *
கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை *
அண்டர் கோனமரும் சோலை அணி திருவரங்கமென்னா *
மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கிடுமினீரே.
பொருள்
வண்டினம் — வண்டுகள்; முரலும் — ரீங்கரிக்கும்; சோலை — சோலைகளை உடையதும்; மயிலினம் — மயில்கள்; ஆலும்— நடனம் ஆடும்; சோலை — சோலைகளை உடையதும்; கொண்டல் மீது — மேகங்கள் வந்து; அணவும் — அணைந்து நிற்கும்; சோலை — சோலைகளை உடையதும்; குயிலினம் கூவும் — குயில்கள் கூவும்; சோலை — சோலைகளை உடையதும்; அண்டர்கோன் — ஸ்ரீரங்கனாதன்; அமரும் — நித்தியவாசம் செய்யும்; சோலை — சோலைகளை; அணி — ஆபரணமாகவுடையதுமான; திருவரங்கம் — ஸ்ரீரங்கம்; என்னா — என்று சொல்லாத; மிண்டர் — நன்றியில்லாத மூர்க்கர்கள்; பாய்ந்து — மேல் விழுந்து; உண்ணும்சோற்றை — உண்ணும் சோற்றை; விலக்கி — தடுத்து; நீரே — நீங்கள்; நாய்க்குஇடுமின் — நாய்க்குப் போடுங்கள்
தொகுப்புரை:
அழகான திருவரங்கம் வனங்கள் சூழ்ந்த ஒரு இடம். அந்த வனங்களில் மலர்களைச் சுற்றி தேனீகள் கூட்டமாகதிரிகின்றன; மயில்கள் ஆடுகின்றன; மேகங்கள் மேலே நடமாடுகின்றன; குயில்கள் இனிமையாகப் பாடுகின்றன. தேவர்களின் அரசன் இந்திரனே வந்து அங்கே தங்கி இருக்கிறார். அத்தனை அழகும் ஆனந்தமும் நிரம்பிய திருவரங்கத்தைப் புகழாத கெட்ட மனிதர்கள் சாப்பிடும் உணவை, நாய்களுக்கு கொடுக்கவேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
விளக்கவுரை:
வண்டினம் முரலும் சோலை –
பக்தர்கள் புனித நதிகளில் ஸ்நானம் செய்து தூய்மை பெற விழைவது போல, தேனின் மிக்க இனிமைக்கு ஈர்க்கப்பட்ட தேனீகளும் அந்த தோட்டங்களில் கூட்டமாகச் சுற்றுகின்றன.
“முரலும்” என்றால் — தேனை முழுமையாக பருகியதால், தேனீகள் அமைதியாக இருக்க முடியாமல், இடையே நிற்காமல் சுழன்று சுழன்று ரீங்காரம் இருவருக்கிடையே ஆகும்.
இது, கோலோக பிருந்தாவனத்தில் இருக்கும் நித்யாத்மாக்கள் மற்றும் முக்தாத்மாக்கள், எம்பெருமானின் திருக்காட்சியில் மயங்கி, சாமவேதத்தை இனிமையான நாதத்தில் தொடர்ந்து பாடிக்கொண்டிருப்பதற்கு ஒப்பானது.
மயிலினம் ஆடும் சோலை –
பசுமைமிகு தோட்டங்களை பார்த்தும், தேனீகள் எழுப்பும் முரசு போன்ற சத்தத்தை கேட்டும், மயில்கள் அதை மழை மேகங்கள் வந்துவிட்டன என்று தவறாக நினைத்து, மழை வந்தது போல ஆனந்தத்தில் நடனமாடத் துவங்குகின்றன.
கொண்டல் மீது அணவும் சோலை –
தேனீகள் எழுப்பும் இனிமையான சத்தமும், திருவரங்கத்தின் பசுமைமிகு விரிந்த தோட்டங்களும் சேர்ந்து, மேகங்களை அது கடல் என்று நினைக்கச் செய்கின்றன. அதனால் மேகங்கள் மேலே அங்கங்கே மென்மையாக மிதந்து நிற்கின்றன.
வேறொரு அர்த்தத்தில் பார்த்தால், அந்த தோட்டங்கள் மேகங்கள் இருக்கும் இடத்திற்கு மேலே எழுந்து சென்றுவிட்டன என்றும் சொல்லலாம்.
நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை பற்றி திருமொழியில் (2.10.8) கூறியிருப்பது போல — “மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை”, அதேபோல திருவரங்கத்தின் தோட்டங்களும், மேகங்களை இது கடலோ என்று மயக்கத்தில் ஆழ்த்துகின்றன.இந்த இடத்தில், அந்த தோட்டங்கள் மேகங்களையும் மயில்களையும் மயக்கத்தில் ஆழ்த்துகின்றன என விவரிக்கப்பட்டுள்ளது.
குயிலினம் கூவும் சோலை –
வண்டுகள், மேகங்கள், மயில்கள் ஆகியவை அலைந்து திரியும் சூழ்நிலையில், குயில்கள் மட்டும் அந்த சோலைகளுக்குள் தங்கியபடியே, ஒன்றையொன்று கூவி அழைக்கும்.
இவ்வாறு, திருவரங்கத் தோப்புகள் விண்ணுலகும், புவியுலகும், அனைத்து உயிரினங்களின் உணர்வுகளும் கலந்த இசைக்கச்சேரி நடக்கும் இடமாக உள்ளது.
அண்டர்கோன் அமரும் சோலை –
பரமபதத்திலுள்ள நித்யசூரிகளின் அரசனாக இருக்கும் எம்பெருமான், இங்குள்ள தோப்புகளின் பரந்து விரிந்த அழகையும், இனிமையும் கண்டு, தன்னுடைய ஆட்சி, பதவிகளை எல்லாம் சில நேரம் மறந்துவிட்டு, இங்கே நிலையாகத் தங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
எம்பெருமான், ஶ்ரீகிருஷ்ணர், சம்சாரிகள்( பந்தப்பட்ட ஆத்மாக்கள்) அனைவருக்கும் சரணாகதி தருபவர் ஆவார். அவரைப் போலவே, இத்தலம் முழுமுதற் கடவுளான ஶ்ரீகிருஷ்ணர் ஜீவாத்மாக்களுக்காக அமைத்த சரணலயமாக மாறி உள்ளது.
இங்கு “அண்டர்” என்பது நித்யசூரிகள்; “அண்டர்கோன்” என்பது அவர்களின் ஆண்டவன் – பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கோலோகத்தை விட்டு இங்கே வந்திருக்கிறார் என்பது உணர்த்தப்படுகிறது.
சோலை அணி திருவரங்கம் –ஒரு வகையில், இத்தலத்தில் இருக்கின்ற சோலைகள், இந்தக் கோயிலுக்குச் தெய்வீக அலங்காரமாக இருக்கின்றன. வேறு ஒரு விளக்கம், திருவரங்கக் கோயில் தான் இந்த மானிட லோகத்திற்கு ஒரு அழகு சேர்க்கும் மந்திரமாய் விளங்குகிறது என்பதாகும்.
திருவங்கம் என்னா மிண்டர் –
இந்த திருத்தலத்தில் எம்பெருமான் நித்தியமாக இருக்கின்றார், அவர்களுக்காகவே. ஆனாலும், அந்தச் சம்பந்தப்பட்ட ஜீவர்கள் தங்கள் அறியாமையால், அந்த புனித ஸ்தலத்தின் பெயரையே கூட சொல்வதில்லை, உணர்ந்துகொள்வதில்லை.
“மிண்டர்” என்பது, அவர்கள் தாங்கள் எந்த நிலையிலிருக்கிறோம் என்பதையும், வரும் கடுமையான விளைவுகளையும் உணராதவர்களைக் குறிக்கிறது. நரகம், பிறவி சுழற்சி எல்லாம் அவர்களை இழுத்துக்கொண்டு போகும் நிலையிலும், அவர்கள் இன்னும் உலக ஆசைகளில் பற்றிக் கொண்டே இருக்கின்றனர்.

பத்ம புராணத்தில்பிருந்தாவனத்தைப் பற்றி “ஒரு முறையாவது பிருந்தாவனத்தை பக்தியுடன் நினைவு கூர்ந்தால், அவர் அனைத்து பாவங்களின் விளைவுகளிலிருந்தும் விடுபட்டு, கிருஷ்ணரின் தாமரை பாதங்களை அடைவார்.”இவ்வாறு கூறுகிறது.

பக்தி வேதாந்த சுவாமி ஶ்ரீல பிரபுபாதர்

பிருந்தாவனம்
ஸ்ரீல பிரபுபாதா துவாரகேசருக்கு எழுதிய கடிதம், அக்டோபர் 25, 1969: “ஒருவர் வெறுமனே பிருந்தாவனத்தைப் பற்றி நினைத்தால், அவர் பிருந்தாவனத்தில் வாழ்வதன் பலனைப் பெறுகிறார். பிருந்தாவனம் முற்றிலும் ஆன்மீகமானது.” என்று புனித ஸ்தலமான பிருந்தாவனத்தின் பெருமைகளை கூறுகிறார்.
பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கிடுமினீரே –
“திருவரங்கம்” என்ற திருநாமத்தைச் சொல்லாதவர்கள் நன்றி மறந்தவர்கள். அவர்கள் எம்பெருமானுக்கே உரியதைத் திருடி வாழ்கின்றார்கள்.
ஆழ்வார், அவர்களுக்குப் போகும் உணவை எடுத்து நாய்களுக்கு கொடுக்கச் சொல்கிறார். ஏனென்றால், நாய்கள் ஒரே ஒரு நற்செயலுக்கே என்றும் நன்றியைக் காட்டும்.
“நீரே” என்பது தர்மத்தில் நிலைத்து நிற்கும், நியாயமாக நடக்கும், நற்பண்புள்ள ஜீவாத்மாக்களை குறிக்கிறது. அவர்கள் தகுதி இல்லாதவர்களிடமிருந்து பொருளை எடுத்துச் தகுதியானவர்களுக்கு வழங்குவார்கள் — இது திருமங்கை ஆழ்வார் செய்த செயலைப் போல் இருக்கிறது.
ஹரே கிருஷ்ணா
பாசுரம் 19: குடதிசை முடியை வைத்து
பள்ளி கொண்டானைப் பார்த்தால் உடல் உருகும்

ஶ்ரீ அரங்கநாதர். ஶ்ரீரங்கம்
குட திசை முடியை வைத்துக் குண திசை பாதம் நீட்டி *
வட திசை பின்பு காட்டித் தென் திசையிலங்கை நோக்கி *
கடல் நிறக்கடவுளெந்தை அரவணைத்துயிலுமா கண்டு *
உடல் எனக்குருகுமாலோ? என்செய்கேன்? உலகத்தீரே!
பொருள்
குடதிசை — மேற்கு திக்கில்; முடியை வைத்து — தலையை வைத்தும்; குணதிசை — கிழக்குத்திக்கில்; பாதம் நீட்டி — பாதங்களை நீட்டியும்; வடதிசை — வடக்குத்திக்கிலே; பின்பு காட்டி — பின்னழகைக் காட்டியும்; தென் திசை — தெற்குத்திக்கில்; இலங்கை — இலங்கையை; நோக்கி — பார்த்துக்கொண்டும்; அரவணை — பாம்புப் படுக்கையில்; துயிலுமா — துயிலும் அழகை; கண்டு — கண்டு; உடல் எனக்கு — என் சரீரமானது; உருகுமாலோ! — உருகுகின்றது; என் செய்கேன் — என்ன செய்வேன் உலகத்தீரே! — உலகத்திலுள்ளவர்களே!; கடல் நிற — கடல் போன்ற நிறத்தையுடைய; கடவுள் — கடவுள்; எந்தை — எம்பெருமான்;
தொகுப்புரை:
என் தந்தை அரங்கன், கடல் நிறம் போலும் அழகுடையவர், ஆனந்த சேஷத்தில் உறங்குகிறார். அவர் தலை மேற்கு நோக்கி இருக்கிறது; பாதங்கள் கிழக்கை நோக்கி நீட்டப்பட்டுள்ளன; முதுகு வடக்குக்கு திரும்பியுள்ளது; முகம் தெற்கு திசையை பார்த்தவாறு,இலங்கையை நோக்கிஇருக்கிறது. முழுமுதற் கடவுள் இப்படி பள்ளிக்கொணடுஇருக்கும் நிலையில் நான் பார்க்கும்போது, என் உடல் உருகுகிறது. ஓ உலக மக்களே! நான் என்ன செய்ய முடியும்?
விளக்கவுரை:
குடதிசை முடியை வைத்து –
இரண்டு வரிகளில், ஆழ்வார் தன்னை யார் உருக வைத்தார் என்பதைக் கூறுகிறார். எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணர், புண்ணியங்கள் மற்றும் பாபங்கள் என இரண்டும் செய்த பந்த படுத்த பட்ட ஆத்மாக்களுக்கான வாசஸ்தலமாக பூமியை உருவாக்கினார். மேலும் பாபம் அதிகம் செய்த திர்யக் (மிருகம் போன்ற உயிர்கள்) மற்றும் ஸ்தாவர (நகராமல் இருக்கும் தாவரம் போன்ற உயிர்கள்) ஜீவராசிகளுக்கான இடமாகவும் பூமி அமைந்தது. புண்ணியம் அதிகம் செய்த தேவர்களுக்கு வானுலகத்தைக் கட்டமைத்தார்.
முன்னதாக ஆழ்வார், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற நான்கு திசைகளுக்கு எந்த பயனும் இல்லை என்று எண்ணினார். ஆனால் இந்த திசைகள் எல்லாம், பந்த படுத்த பட்ட ஆத்மாக்களுக்கு மோக்ஷ ஆசையை வளர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டன என இப்போது அவற்றின் பயனை உணருகிறார். உலகங்கள் ஜீவாத்மாக்கள் வாழ்வதற்கும், திசைகள் எம்பெருமானின் திருமுடியும், திருவடிகளும் வைப்பதற்க்காகவும், அதனைப் பார்த்து ஆத்மாக்கள் விடுதலையை விரும்புவதற்கும் தான் இருக்கின்றன.
குடதிசை முடியை வைத்து – எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணரின் விரிவாக்கமான அரங்கநாதர், நித்திய விபூதி (தெய்வீக உலகம்) மற்றும் லீலா விபூதி (பௌதிக உலகம்) என்ற இரண்டையும் தான் ஆள்வதைக் குறிக்கும் வகையில் கிரீடத்தை தன் தலையில் அணிந்து, தன் திருமுடியை மேற்குத் திசையில் வைத்துள்ளார்.
முழுமுதற் கடவுள்ஶ்ரீகிருஷ்ணர், மேற்கில் உள்ள ஆத்மாக்கள் பயனடையவே இவ்வாறு செய்துள்ளார் .
நம்மாழ்வார் திருவாய்மொழி 3.8.1ல் “முடியானே” என்று கூறி, எம்பெருமானைத் திருமுடி அணிந்தவராக அழைத்தார்.
குணதிசை பாதம் நீட்டி
நம்மாழ்வார், திருவாய்மொழி 3.8.1-ல் எம்பெருமானின் திருவடிகளை “மூவுலகும் தொழுதேத்தும் சிற் அடியான்” என்று புகழ்கிறார்.
– மூவுலகங்களும் வணங்கி போற்றும் அழகிய திருவடிகள். அந்தத் திருவடிகளை, அனைத்து உலகங்களுக்கும் சரணாகதியாக இருக்கும் பாதங்களை, எம்பெருமான் கிழக்கு திசையில் நீட்டினார். தன்னைக் கவர எம்பெருமான் தன் திருவடிகளை ஸ்ரீரங்கத்திற்க்கு கிழக்கு பகுதியில் உள்ள அவர் பிறந்த திருமண்டங்குடிக்கு நீட்டினார் என ஆழ்வார் கூறுகிறார்.
கிருஷ்ணாவதாரத்தின் போது, துரியோதனன் கிருஷ்ணரிடம் முதலில் உதவி கேட்டு மேற்கில் தலை வைத்து, பள்ளிக் கொண்டு இருந்த ஶ்ரீகிருஷ்ணரின் தலைமாட்டில் மேற்கு திசையில் அமர்ந்தான். அவனுக்கு பின்பு ஶ்ரீகிருஷ்ணரிடம் உதவுக் கேட்டு அவ்விடம் வந்த அர்ஜுனன் ஶ்ரீகிருஷ்ணரின் திருவடி இருந்த கிழக்கு திசையில் அமர்ந்தான்.முழுமுதற்கடவுளின் கருணையால் துரியோதனன் அமர்ந்த மேற்குத்திசையும் கூட உயரும் எனில், பாகவதன் அர்ஜுனன் அமர்ந்த கிழக்குத் திசை உறுதியாக உயரும் என்பது சொல்லவே வேண்டாம்.
அரங்கரின் அடியவரான ஆச்சாரியர் பராசர பட்டர் தமது சீடர்களிடம், “ஆளவந்தார் என்ற ஆச்சாரியர் அரங்கரை சேவிக்கும்போது, எப்போதும் எம்பெருமான் திருமுடிக்கருகே நின்றதேயில்லை.அந்த இடத்தை “துரியோதனனின் இடம்” எனக் கூறினார்.ஆனால், கிழக்குப் பக்கம் எம்பெருமானின் திருவடிக்கருகே, ஆளவந்தார் நின்று சேவிக்காத இடமேயில்லை” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வட திசை பின்பு காட்டி
பகவான் அரங்கரின் முன்புற அழகைக் காட்டிலும் பின்புற அழகு மிகவும் சிறப்பானது.எல்லா குணத்தினரையும் கவரக்கோடியது.
பாரத தேசத்தின் வடதிசையில் வாழ்பவர்கள், வேதங்கள் எழுதப்பட்டிருக்கும் கடினமான சமஸ்கிருத மொழியில் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.பெரும்பாலான வட மொழிகள் ஸமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளன. வேதங்களை ஸமஸ்கிருத மொழியில் அதிக முறை அரங்கர் செவிமடுத்துள்ளார்.அதனால் அவர்களுக்கு அழகு அதிகம் நிறைந்த பின்புறஅழகை காட்டி சயனித்து உள்ளார்.”பூர்வாங்காததிகபராங்க கலஹம்” – எம்பெருமானின் பின்புறம், அவரது முன்பக்கத்தைவிட அழகானது என்ற பழமொழியும் இதனை விளக்குகிறது.
இப்போது ஸமஸ்கிருத வேதங்களானது தூய தமிழ் மொழியில் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களாக உள்ளது.அதனால் அந்த தமிழ் வேதத்தை கேட்பதற்க்காக தென் திசை நோக்கி சயனித்து உள்ளார் முழு முதற் கடவுள் ஶ்ரீ கிருஷ்ணர் .
தென் திசை இலங்கை நோக்கி –

ஶ்ரீ இராமர் ,விபீஷ்ணருக்கு ஶ்ரீ ரங்கநாதரை
விமானத்துடன் வழங்குதல்
அனைத்து திசைகளிலும் எம்பெருமான் தன் தெய்வீக தேகத்தின் பகுதியை வைத்தார்.ஏனெனில் அந்தத் திசைகளில் உள்ளோர் உய்ய வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தார். ஆனால் தெற்குத் திசையை எதற்காக நோக்கினார் என்பது, பிற திசைகளுக்காக செய்ததைவிட வித்தியாசமானது – இதுசம்சாரிகளுக்கு( பந்தப்படுத்தப்பட்ட ஜீவாமாக்கள் )எப்போதும் எம்பெருமான் செய்யும் ஒரு தயாபூர்வ உதவியாக மட்டும் இல்லை, தன்னுடைய இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்காக அவர் எடுத்த நடவடிக்கையாகும்.
குலசேகராழ்வார், பெருமாள் திருமொழி 1.10-இல்,
“அன்பொடு தெந்திசை நோக்கிப் பள்ளிகொளும்” என்று, தெற்குத் திசையை அன்போடு நோக்கி பள்ளிக்கொள்ளும் எம்பெருமானைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தெற்குத் திசையில் இலங்கை உள்ளது. இலங்கையிலுள்ள தன்னிடம் சராணகதி செய்த பாகவதன் விபீஷணனை நோக்கி தனது கனிவான பார்வையை செலுத்துகிறார்.
பெரியாழ்வார், பெரியாழ்வார் திருமொழி 4.9.2-இல்,
“மன்னுடைய விபீடணற்கா மதிலிலங்கைத் திசை நோக்கி மலர்கண் வைத்த என்னுடைய திருவரங்கற்கு” என்று, தனது பக்தன் விபீடணனின் குறைகளை நீக்கி, இலங்கை அரசை அவனுக்கு தந்தபின், திருவரங்கத்தில் பள்ளிகொண்டு, எம்பெருமான் தனது மலர்ந்த கண்களை தெற்கே இலங்கையிலுள்ள தனது பக்தனை நோக்கி வைத்திருக்கிறார் எனக் கூறுகிறார். இது, குட்டியின் பசிக்கு பாலை ஊட்டி விட்டு, அதன் மகிழ்ச்சியான முகத்தை அன்போடு பார்ப்பதுபோல உள்ளது என்கிறார் ஆழ்வார்.
திருமங்கையாழ்வாரும், பெரிய திருமொழி 6.8.5-இல், “செல்வ விபீடணற்குவேராக. நல்லானாய்” என்று, அரங்கநாயகியால் ஆசீர்வதிக்கப்பட்ட விபீஷணனனிடம் எம்பெருமான் தனிப்பட்ட அன்பு கொண்டு உள்ளார்.
தன்னிடம் சரணாகதி செய்ய வந்தால் விபீடணனை ஏற்க வேண்டும் என்ற ஸ்ரீராமனை எதிர்த்து, சுக்ரீவன் தன்னுடைய சேனையுடன் சீதா மாதாவை இராவணனிடம் இருந்து காக்கும் பணியிலிருந்து விலகுவதாக மிரட்டும் போது, ஸ்ரீராமன் கூறினார்:
“நீயும் உன் சேனையும் விலகினாலும் பரவாயில்லை, ஆனால் என்னிடம் சரணடந்த விபீடணனை நான் விட்டு விடமாட்டேன்” என உறுதியாகக் கூறினார்.
இது, ஒரு பசு தன் வளர்ந்த கன்றுக்குட்டியை தன் கொம்பால், ஒதுக்கி வைத்து, புதிதாகப் பிறந்தகன்றுக் குட்டியைத் தீவிரமாகப் பாதுகாப்பதைப்போல் – ஸ்ரீராமனின் விபீஷணனிடம் உள்ள பாசம், சுக்ரீவனைவிட அதிகமானதென்று காட்டுகிறது.
கடல் நிறக்கடவுள் –
கோலோகத்தில் எப்போதும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவை செய்துக் கொண்டு இருக்கும் நித்யஸூரிகள் இடையறாது நாடும் எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணர், பந்தங்களினால் கட்டுண்ட ஆத்மாக்களை ஆவலோடு எதிர்நோக்கிக்கொண்டு இருக்கிறார்.
கடலை ஒத்த தெய்வீக வடிவம் அவருக்குண்டு – அந்த வடிவத்தைப் பார்ப்பவர் யாரும் அனுபவிக்கும் சோர்வைக் கழுவி எடுக்கும் சக்தி அதற்குண்டு. “கடல் நிறக்கடவுள்” என்பது, கடலின் அழகையே தாண்டும் எம்பெருமானின் திருமேனியின் அழகைச் சுட்டுகிறது. அவர் உடல் ஐம்பூதங்களால் ஆனது அல்ல – உபநிஷத்துகளால் வடிவமடைந்த அப்பிராக்ருதத் திருமேனி. அதனால்தான் அவர் “கடவுள்” என்று அழைக்கப்படுகிறார் – அதாவது, எல்லாவற்றையும் தாண்டியவன்.
எந்தை
இத்தகைய திருமேனியைக் கொண்டு எம்பெருமான் என்னை அடிமையாக்கினார். பகட்டு இச்சையிலும், ஆசைகளிலும் மூழ்கி பஞ்சேந்திரியங்களுக்கு (ஐந்து புலன்களுக்கு) அடிமை பட்டு உள்ள என்மாதிரி ஒருவனை கூட அரவணைக்கிறார் என்றால், நித்யஸூரிகளின் (கோலோகத்தில் எப்போதும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவை செய்துக் கொண்டு இருப்போர்) மனத்தையும் வென்றிருப்பதில் என்ன ஆச்சரியம்? உலக இன்பங்களில் மூழ்கிய என்னைப்போன்ற அடித் தரத்துள்ள உயிரையே தம் திருமேனியின் அழகால் கட்டிப்போட்டுவிட்டார் என்று கூறுகிறார் ஆழ்வார்.
அரவணைத்துயிலமா கண்டு
பொன்னில் பதிப்பதால் நவமணிக்கற்கான மதிப்பு மேலும் அதிகரிப்பது போல், ஆதிசேஷன் மீது பள்ளிகொள்ளும் போது எம்பெருமானின் வடிவம் அளவுகடந்த ஒப்பற்ற அழகைப் பெறுகிறது.
உடல் எனக்கு உருகுமாலோ
எம்பெருமான் ஆதிசேஷன் மீது சாய்ந்து இருக்கும் திருமேனியை பார்த்ததும், அதை ரசிப்பதற்குப் பதிலாக ஆழ்வாரின் உடல் உருக ஆரம்பித்தது.
ஸ்ரீ ராமானுஜர் சரணாகதி கத்யம் 12-ல்”பகவத்ஸ்வரூபதிரோதானகாரீம்” – பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் உடல் என்பது, பகவானின் யதார்த்த ஸ்வரூபத்தை மறைக்கும் வஸ்துவாகும் என்று கூறுகிறார்.
பிரம்ம சூத்திரம் 3.2.5-ல் “தேஹயோகாத்வா ஸோ’பி” – ஸ்தூல மற்றும் சூக்ஷ்ம தேகங்களுடன் கூடிய உறவினால் ஜீவாத்மாவின் உண்மையான இயல்பு தெரியாமல் போகிறது
இப்படி, ஆத்மாவின் ஞானத்தை மறைக்க வேண்டிய உடலே இப்போது எம்பெருமானின் திருமேனியைப் பார்த்து, பரம ஆனந்தத்தில் உருகி விடுகிறது! எனக் கூறப்படுகிறது
எனக்கு உருகுமாலோ – எம்பெருமானாரை சேவிக்க ஆழ்வாருடன் வந்த சம்சாரிகள் (பந்தப்பட்ட ஆத்மாக்கள்), “எங்களுக்கு எதுவும் ஆகவில்லையே, உடல் உருகவில்லை” என்று நிம்மதியாகக் கூற, ஆழ்வார் பதிலளிக்கிறார்: “பாருங்கள், என் உடல் உருகிகொண்டிருக்கிறது!”
என் செய்கேன் உலகத்தீரே
எம்பெருமானின் அழகை நேரில் பார்த்த பிறகும் தெளிவாக, கலங்காமல், சாந்தமாக நிற்கும் சம்சாரிகள்(பந்தப்பட்ட ஆத்மாக்களை) நோக்கி “உங்களைப் போல நிலைபெற்று நிற்க என்னால் முடியவில்லையே – நான் என்ன செய்ய முடியும்?” என ஆழ்வார் கேட்கிறார்.
தன் உடல் உருகும் நிலையில் ஆழ்வார், மற்ற ஆழ்வார்களிடம் உதவி கேட்கவும் முடியவில்லை. ஏனென்றால், அவர்களும் அதே நிலைமையில், எம்பெருமானின் பேரழகை பார்த்து உருகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு துளையுள்ள படகு மற்றொரு பெரிய துளையுள்ள படகை எப்படி காப்பாற்றும்? அதேபோல, ஏற்கனவே மூழ்கிக் கொண்டிருக்கும் மற்ற ஆழ்வார்களிடம் ஆதரவு பெற முடியாது.
ஆழ்வார், எம்பெருமானிடமாவது நேரடியாகக் உதவிக் கேட்கலாமா? முடியாது – ஏனென்றால், அவரின் வருத்தத்தின் காரணமே எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணர் தான்.
அதனால் எம்பெருமானிடம் “நீ என்னை வென்றுவிட்டாய்” என்று ஆழ்வார் நேரடியாகக் கூறினால், எம்பெருமானுக்கு அந்த வெற்றியில் அகந்தை வந்து விடுமோ என ஆழ்வார் கலங்கி தவிக்கிறார்.
எனவே, ஆழ்வார் சம்சாரிகளை (பந்தப்பட்ட ஆத்மாக்களை) நோக்கி கேட்கிறார்: “எப்படி நீங்கள், உடல்வாதம் ஏற்பட்டது போல், உறைந்து நின்று விடுகிறீர்கள். உங்களிடம் இருக்கும் அந்த மருந்தை — கண்ணீரற்ற நிலையை, உருகாத மனதை கொடுக்கும் மருந்தை என்னோடு கொஞ்சம் பகிர்ந்துகொள்ள முடியுமா? அதை உபயோகித்து நானும் உங்களைப்போல உடல் உருகாமல் உறுதியாக இருக்க முயற்சிக்கிறேன் என்கிறார் ஆழ்வார்.
ஹரே கிருஷ்ணா
பாசுரம் 20: பாயுநீர்
பள்ளிகொண்ட காட்சியே காட்சி!

ஆதிஷேச சயனத்தில் எம்பெருமான்
பள்ளிக்கொண்டு உள்ளக் காட்சி
பாயுநீர் அரங்கந்தன்னுள் பாம்பணைப்பள்ளிகொண்ட *
மாயனார் திருநன்மார்பும் மரகதவுருவும் தோளும் *
தூய தாமரைக்கண்களும் துவரிதழ் பவளவாயும் *
ஆயசீர்முடியும் தேசும் அடியரோர்க்ககலலாமே?
பொருள்
பாயு நீர் — பாயும் காவிரியால்; அரங்கந் தன்னுள் — சூழ்ந்த ஸ்ரீரங்கத்திலே; பாம்புஅணைப் — பாம்புப் படுக்கையில்; பள்ளிகொண்ட — சயனித்திருக்கும்; மாயனார் — மாயனான எம்பெருமானின்; திரு நன் — திருமகள் வாசம் செய்கின்ற; மார்வும் — மார்பும்; மரக — மரகத மணி போன்ற; உருவும் — வடிவழகும்; தோளும்— தோள்களும்; தூய — தூய்மையான; தாமரை — தாமரை மலர்போன்ற; கண்களும் — கண்களும்; துவர் இதழ் — துளிர் போன்ற அதரமும்; பவள வாயும் — பவளம் போன்ற சிவந்த வாயும்; ஆய சீர் முடியும் — அழகிய திருமுடியும்; தேசும் — தேஜஸ்ஸும்; அடியரோர்க்கு — அடியவர்களால்; அகலல் ஆமே? — இழக்கத் தகுமோ?
தொகுப்புரை:
காவேரி ஆறு கரையை மீறி ஓடும் திருவரங்கத்தில், ஆதிசேஷன் மீது பள்ளிக்கொண்டு இருக்கிறார் மாயவனான எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர். அவருடைய திருமேனி மரகத நிறத்தில் ஒளி பொருந்தியதாக உள்ளது.
அழகான, தெய்வீகமான மார்பு, வலிமை மிக்க தோள்கள், தூய மற்றும் மென்மையான தாமரை போன்ற கண்கள், அழகான பவள நிற உதடுகள், பிரகாசமாக ஜொலிக்கும் மயிர் என பல அழகுகள் உடையவராக இருக்கிறார்.
இவ்வளவு அழகு, கருணை, ஒளி, மகிமை நிறைந்த அவரது திரு உருவத்தை, அவரை மனதார நேசிக்கும் பக்தர்கள் எப்படி மறக்க முடியும்? என வினவுகிறார் ஆழ்வார்.
விளக்கவுரை:
பாயுநீர் அரங்கம் –
உயர்ந்த நிலப்பரப்பில் இருக்கும் இடங்களுக்குத் தண்ணீரை மேலேறச் செய்ய அணைகள் கட்டி தண்ணீரை வலுக்கட்டாயமாக மேலே ஏற்ற வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் எம்பெருமான் அரங்கநாதர் பள்ளிக் கொண்டுள்ள திருவரங்கம், இயற்கையிலேயே தாழ்வான இடத்தில் அமைந்துள்ளதால், அங்கே தண்ணீர் இயல்பாக பாய்ந்து ஓடுகிறது.
இங்கு “நீர்” என்பது தூய்மையும், தெளிவும் அளிக்கும் அனைத்து பொருட்களுக்கும் உருவகமாக பயன்படுத்தப்படுகிறது. திருவரங்கக் கோயில் இப்படிப்பட்ட தூய்மையான, புனிதமான பொருட்களின் கருவூலமாக விளங்குகிறது.
இதைப் போலவே, ஸ்ரீ இராமாயணத்தில், கீழ் வருமாறுக் கூறப்படுகிறது:
“அகர்தமமிதம் தீர்த்தம் பரத்வாஜ! நிஷாமய |
ரமணீயம் பிரசன்னாம்பு ஸன்மனுஷ்யமனோ யதா ||”
அதாவது: “ஓ பரத்வாஜா! இந்த தீர்த்தம் அழுக்கில்லாமல், அழகாகவும், தெளிவாகவும் உள்ளது. இது சீர்மிகு மனிதர்களின் மனதைப் போல உள்ளது”
எனவே, இங்கு நீர் என்பது, நல்லொழுக்கமுள்ள மக்களின் மனதைக் குறிக்கும் உருவகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
“தன்னுள் பாம்பணை”–
தனது மலரினும் மென்மையான திவ்ய திருமேனியை தண்ணீரின் ஈரத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் ஆதி சேஷனைக் கட்டிலாக விரித்து, அதன் மேல் பள்ளிக்கொண்டு உள்ளார்.
“பள்ளிகொண்ட மாயனார்” –
எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரது பள்ளிகொள்ளும் தோற்றம் மிக அபூர்வமானதும், ஆச்சரியமுமானதும் ஆகும்.

எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர்
சயனித்து இருக்கும் அழகு
இங்கு “மாயா” என்பது, அற்புதமானதும், ஆச்சரியமூட்டும் தன்மையையும் குறிக்கும். ஆதலால், “மாயனார்” என்று ஆழ்வார் கூறுவது, அற்புத அழகையும், ஆழமான பரம ரகசியத்தையும் உடைய எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் என்பதைச் சுட்டுகிறது.
திருநாள் மார்பும் –
ஸ்ரீகிருஷ்ணரின் மார்பில் ஶ்ரீ ராதா ராணி இருப்பதால் அவரது மார்பு அற்புதமானதாக அறியப்படும்.
அவரது மார்பின் மாபெரும் மகிமைக்கு காரணம் என்ன?
அதாவது, ஶ்ரீ ராதா ராணியின் செம்பஞ்சுகுழம்பு பூசப்பட்ட திருவடிச்சுவடுகள் அவர் மார்பில் உள்ளன. அவள் அணிந்து பின்னர் கழற்றி வைத்த பூமாலைகள் எப்போதும் அவர் மார்பில் உள்ளன.
இவைதான், எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், பரம்பொருள் (சிறந்த தெய்வம்) என்பதற்கான உறுதியான சாட்சிகளாக திகழ்கின்றன.
பராசர பட்டர், ஸ்ரீ குண ரத்ன கோசம் – ஸ்லோகம் 4ல் இவ்வாறு கூறுகிறார்:
“வேதாந்தாஸ் தத்த்வ சிந்தாம் முரபி துரசி யத்பாத சிஹ்னைஸ் தரந்தி”
– “எம்பெருமானின் மார்பில் உள்ள பிராட்டியின் திருவடி சுவடுகளைப் பார்த்து, வேதாந்திகள், யார் பரம பொருள் என்பது குறித்த தத்துவச் சிந்தனையை முடிவுக்கு கொண்டு வருகிறார்கள்”.
எனவே, திருநாள் மார்பு (ஸ்ரீவத்ஸம் -மகாலட்சுமியின் இருப்பிடம்) எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் பரம்பொருள் என்பதற்கான வெளிப்படையான அடையாளம் ஆகும். மாதவன் (லட்சுமியின் கணவர்) — ஶ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயர்.

கிருஷ்ணரின் மார்பின் வலது பக்கத்தில்
முக்கோண அடையாளமாக ஸ்ரீவத்ஸம்
மரகத உருவும் –
எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரின் திருமேனி மரகத நிறத்தில் ஒளிர்கிறது. அதன் குளிர்ந்த ஒளி, காண்பவர் கண்களுக்கு இதமான அமைதியைத் தருகிறது. அவர் திரு உருவம் தண்ணீரைப் போல குளிர்ச்சியும், தூய்மையும், அழகும் நிரம்பியதும் ஆக இருக்கிறது.
தோளும் –
எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணருடைய மார்பும் உருவும் பற்றிச் சொல்ல விளக்கங்கள் தேவைப்பட்டாலும், அவருடைய தோள்கள், விளக்கமே தேவைப்படாத அளவுக்கு சக்தியுடனும், வலிமையுடனும், சீருடனும் இருக்கின்றன.

கோவர்த்தன லீலை

கிருஷ்ணரின் தோளில் ஸ்ரீமதி ராதாராணி
சாய்ந்திருக்கும் காட்சி
எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரின் மார்பு மற்றும் திரு உருவத்தின் அழகில் மயங்கும் ஜீவாத்மாக்களுக்கு அவரின் இந்த தோள்கள் உறுதுணையாக, அவர்களை தாங்கும் ஆதரவாக உள்ளன.

ஶ்ரீராமரின் வலிமையான தோள்கள்
தூய தாமரைக் கண்களும் –
எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணருடைய தூய்மையும், கருணையும் நிறைந்த தாமரைப் போன்ற கண்கள், பிராட்டியையும் (ஶ்ரீராதாராணி), ஹிரண்யன் போன்ற அரக்கர்களையும் எந்த வேறுபாடும் இல்லாமல் அதே கருணையுடன் பார்ப்பவைகள் ஆகும்.

கருணை மிகுந்த பரம்பொருள்
இது ஏன் என்பதைப் சரியான பொருளில் நாம் புரிந்துகொள்ள வேண்டும் – அவரது கண்களில் இருக்கும் அளவில்லாதக் கருணை தான் இதற்குக் காரணம். அவர் எல்லாப் பிறவிகளிடமும் சமமாக அன்பை செலுத்துகிறார்.
இந்த உண்மையை பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் (அத்யாயம் 5, ஸ்லோகம் 29) இவ்வாறு விளக்குகிறார்:
“போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஶ்வரம் |
ஸுஹ்ருதம் ஸர்வபூதானாம் ஜ்ஞாத்வா மாம் ஶாந்திம்ருச்சதி ||”
இதன் பொருள், “எல்லா யாகங்கள் மற்றும் தவங்களின் பலனை ஏற்றுக்கொள்ளும், அனுபவிக்கும் உன்னதப் பரம்பொருளாகவும், எல்லா உலகங்களுக்கும் அதிபதியாகவும், எல்லா உயிர்களுக்கும் நண்பனாகவும் இருப்பவனாகிய என்னை உணர்கிறவன், சாந்தியையும் அமைதியையும் அடைகிறான்.”
மிகவும் அன்புடையவனாக, பகைவர் மற்றும் நண்பர் வேறுபாடின்றி நடக்கும் கருணை நிறைந்தவர் எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் என்பது இதிலிருந்து தெரிகிறது. இதுவே, அவருடைய தூய தாமரைக் கண்களின் சிறப்பு ஆகும்.
இவையே, அவரை எல்லோருக்கும் சமமான அருள் செய்பவர் என்பதை நமக்கு விளக்குகின்றது.
துவரிதழ் பவள வாயும் –
அவருடைய சிவப்பான உதடுகள், முருங்கை பூவின் இதழைப் போலவும், பவளம் போன்று ஒளிரும் பற்கள் கொண்ட வாயும் அழகாகச் சிரிக்கின்றது. பற்களின் சிவப்பு நிறம், உதடுகளின் சிவப்பின் பிரதிபலனாக தோன்றுகிறது.
சாந்தோக்ய உபநிஷத்தில் “அவாக்ய நாதர:” என கூறப்படுகிறது: அதாவது, ஒரு உன்னத பரமபதத்தில் இருக்கும் போது, அவர் யாரிடமும் பேசுவதில்லை, யாரையும் நோக்குவதும் இல்லை. அவ்வாறு மௌனத்தில் இருக்க வேண்டிய பரம்பொருள், எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், திருவரங்கத்தில் அரங்கநாதராக வெளிப்பட்டு, தம்மை சரண் அடைந்தவர்களுக்கு ஆறுதலாக சொற்கள் வழங்குகிறார் என்பதுதான் இங்கு முதல் பொருள்.
இன்னொரு விளக்கம்: துவரிதழ் என்பது முருங்கை மலரின் இதழ்களை குறிக்கும் எனவும் கொள்ளலாம்.
அதாவது, எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரின் உதடுகள் முருங்கை மலரின் இதழ்களையும் பவளத்தையும் போன்று உள்ளது. அந்த உதடுகள், தம்முடைய குற்றங்களை நினைத்து பயந்து நெருங்காமல் நின்று கொண்டிருக்கும் பந்தப்பட்ட ஆத்மாக்களை நோக்கி, “அஞ்சாதே” என்று கருணையுடன் புன்னகை சிந்துகின்றன, தைரியம் அளிக்கின்றன.
இவ்வாறு, அவர் புன்னகையுடன் அருள்புரிவதும்,அவரது வாயும் உதடுகளும் பரம தெய்வீக இனிமையை உடையவை என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆய சீர் முடியும் –
“ஆய” என்பது, நீண்ட காலமாகத் தயாராக இருந்து வந்தது என்பதைக் குறிக்கும்.
“சீர்” என்பது, மிகுந்த ஐஸ்வர்யமும், மகிமையும் உடையது என்பதைச் சொல்கிறது.
அதாவது, அவருடைய கிரீடம் (முடி), நீண்ட காலமாக தயாராக இருந்து, பெரும் செல்வச் சிறப்போடும், தெய்வீகச் சௌந்தரியத்தோடும் ஜொலிக்கிறது.
திருநாள் மார்பும் முதல் ஆய சீர் முடியும் வரை, எம்பெருமானுடைய திருமேனியின் ஒவ்வொரு பாகத்தின் அழகும், சிறப்பும் தனித்தனியாக ஆழ்வாரால் விளக்கப்பட்டுள்ளன.
தேசும் –
இந்தச் சொல்லில், முழு திருமேனியின் ஒருமித்த அழகு குறித்து குறிப்பிடப்படுகிறது.
அதாவது, அவருடைய ஒவ்வொரு பாகமும் தனித்தனியாக அழகுடையது என்பது மட்டுமல்லாமல், அவை அனைத்தும் சேர்ந்து ஒரு அற்புதமான பரம தெய்வீக சௌந்தர்யத்தைக் உருவாக்குகின்றன. இதுவே எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரின் முழுமையான உருவத்தின் சிறப்பு ஆகும்.
அடியரோர்க்கு அகலலாமே –
எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரின் திருமேனி அழகு, மகிமையைப் பார்த்தபோது, நம் போல் ஸ்வரூப ஞானம் உள்ளவர்களுக்கே, இங்கிருந்து விலகுவது சாத்தியமா? என ஆழ்வார் கேட்கிறார். அவ்வளவு அழகும், பரம சௌந்தர்யமும் நிறைந்த திருக்கோலத்தை அனுபவிக்காமல், அதை ரசிக்க முடியாத அளவுக்கு பாவம் மிகுந்தவர்கள், அல்லது, ‘நான்’, ‘என்னுடையது’ என கட்டுண்டவர்கள் மட்டுமே இங்கிருந்து விலகச் செல்வதற்குத் தகுதியுடையவர்கள்.

பகவான் ஶ்ரீகிருஷ்ணரின்
செளந்தர்ய ரூபம்
இங்கு “ஆமே” என்ற சொல்லை இறுதியில் பயன்படுத்துவதால் பந்தப்பட்ட ஆத்மாக்கள் கூட ஏற்றுக்கொள்வார்கள் – “ஆம், நீங்கள் எம்பெருமானின் அழகை தாண்டி போகவே முடியாது; அது சாத்தியமல்ல” என்று. இதன் மூலம், எம்பெருமானின் திருமேனியின் அற்புத அழகையும், அதை உணர்ந்து அனுபவிக்கும் ஆழ்வாரின் மிக ஆழமான பக்தியையும் நாம் காணலாம்.
அவர் திருமுடியின் அழகு, தங்கத்தின் ஒளி, சீரும், பெருமையும் நிறைந்ததாக இருக்கிறது. முந்தைய “ஆய சீர் முடியும்” என்ற சொல்லில் கூறுவது என்னவென்றால் இங்கு “ஆயம்” என்றால் தங்கம் எனப் பொருள்படுகிறது. இந்தச் சொல் சிறு உச்சரிப்பில் (சுருங்கி) “ஆய” என்று மாறுகிறது. அதனால், “ஆய சீர் முடியும்” என்பதன் பொருள்:
எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் தங்கம் போல ஜொலிக்கும், மிகுந்த மகிமை உடைய திருமுடி உடையவர் என்று விளங்குகிறது. அவர் திருமுடியின் அழகு, தங்கத்தின் ஒளி, சீரும், பெருமையும் நிறைந்ததாக இருக்கிறது.
ஹரே கிருஷ்ணா
பாசுரம் 21: பணிவினால் மனமதொன்றி
மனமே! சஞ்சலம் எதற்கு?

பொன்வேயப்பட்ட ஶ்ரீரங்கவிமானம்
பணிவினால் மனமதொன்றிப் பவள வாய் அரங்கனார்க்கு *
துணிவினால் வாழமாட்டாத் தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய் *
அணியனார் செம்பொனாய அருவரையனையகோயில் *
மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கலாமே?
பொருள்
பணிவினால் — பணிவாக இருந்து; மனமது ஒன்றி — கைங்கர்யருசியில் மனதை ஈடுபடுத்தி; பவள வாய் — சிவந்த வாயையுடைய; அரங்கனார்க்கு — எம்பெருமான் விஷயத்திலே; துணிவினால் வாழமாட்டா — துணிவுடன் வாழமுடியாத; தொல்லை நெஞ்சே! — துயரப்படும் மனமே; சொல்லாய் — நீயே சொல்லுவாய்; அணியின் ஆர் — பூர்ண அழகுடைய; செம்பொன்ஆய — செம்பொன்னாலே செய்யப்பட்ட; அருவரை — சிறந்த மேரு மலையை; அனையகோயில் — ஒத்த கோயிலில்; மணிஅனார் — நீலமணி போன்ற எம்பெருமான்; கிடந்தவாற்றை — துயிலும் அழகை; மனத்தினால் — மனதால்; நினைக்கல்ஆமே? — அளவிட்டு அறியக்கூடுமோ?
தொகுப்புரை:
“ஏ, துயரப்படும் என் இதயமே! முழுமுதற் கடவுள் ஶ்ரீகிருஷ்ணரின் அடியாராக இருந்து சேவை செய்யாமலும், அருள் நிறைந்த பக்தி இல்லாமலும், அரங்கன் எனும் பவளச்சிவப்பு நிற உதடுகளை உடைய முழுமுதற் கடவுளை நினைக்க முடியுமா? அழகான பொன்னால் பூசப்பட்ட அரங்கரின் கோயில், மேரு மலை போல உயர்ந்துள்ளது; அந்த கோயிலில், நீலநிறம் கொண்ட திருமேனி உடைய ஶ்ரீ கிருஷ்ணர் சாய்ந்து இருக்கிறார். அந்த அழகான காட்சியை ஜீவாத்மாவாக்களாகிய நாம் மனத்தில் நினைக்கலாமே”
விளக்கவுரை:
பணிவினால் மனமதொன்றி
“பணிவுடன் மனதை திருப்புவது” என்பது, ஜீவாத்மா முழுமுதற்கடவுளை வணங்க வேண்டிய உறுதியை எடுத்துக் கொள்வதை குறிக்கிறது. இது உலக விஷயங்களை விட்டு, மனதை எம்பெருமானைச் சார்ந்த விஷயங்களில் ஆழமாக ஈடுபடுத்துவதைக் குறிக்கும்.
இங்கு ‘ஒன்றி’ என்பதன் பொருள் – எம்பெருமானுடன் ஜீவாத்மாவின் மனமும் செயல்களும் ஒத்துப்போவதைக் குறிக்கும். ஜீவாத்மாவின் இயல்பான தன்மைப்படி, மற்ற கவலைகளை விட்டு, பகவான் விஷயங்களில் மனதைச் செலுத்துவதற்கான உறுதி இருக்க வேண்டும் என்பதே இதில் சொல்லப்படுகிறது. “ஆழ்வார் தன் மனதிடம் சொல்லுகிறார்: ‘மனம் ஒருமுகமாக இருத்தல் முக்கியம்’.
ஸ்ரீ கிருஷ்ணரை விட்டு வேறு யாரையாவது வணங்கினால், அவர்கள் அருள் செய்வார்களா தெரியாது. அப்படியே அவர்கள் அருள் செய்தாலும், அது நமக்கு நல்லதாக முடியும் என்று நம்பிக்கை இல்லை. ஆனால் ஜீவாத்மா, எம்பெருமானிடம் பணிவான முழு மனதுடன் செல்லும்போது மட்டுமே நிச்சயமான அருளும், பயனும் கிடைக்கும்.”
“இரண்டாக உடைந்துபோனாலும், நான் யாருக்கும் தலைவணங்க மாட்டேன். இதுவே என் பிறவியிலிருந்து வந்த குறை – என் இயல்பான குணம். ஒருவர் தம் இயல்பை விட்டுவிட முடியுமா?”-இது இராவணன் யுத்த காண்டத்தில் கூறும் வார்த்தைகள். தனது அகந்தையையும், வணங்க மறுக்கும் இயல்பையும் உணர்ந்தே சொல்லுகிறான் – ஆனால் அதை தவறு என்று ஏற்றுக்கொண்டும், அதிலிருந்து மாற முடியாதென நம்புகிறான்.
இராவணன் போல ‘நான் வணங்கமாட்டேன்’ என்ற முடிவை ஜீவாத்மாவாகிய நாம் மாற்றினால் மட்டும் போதும் – அதுவே ஶ்ரீ கிருஷ்ணருக்கு பெரிய விஷயம்.
பரலோகமும், பல அவதாரங்களையும் படைத்து, நம்மைத் தன்னிடம் ஈர்க்க ஏங்கிக் காத்திருக்கிற எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், ‘இப்போது நான் உன்னிடம் வரத் தயாராக இருக்கிறேன்’ என்று நாம் செய்யும் சிறிய சைகையைக்கூடப் தனக்கு போதுமானதாகக் கருதுகிறார்.
ஶ்ரீ கிருஷ்ணரை நாம் முழுமையாக வணங்கினாலும், அவரின் பலன் நமக்கு கிடைப்பது நாம் வணங்குவதால் அல்ல – அது ஜீவாத்மாக்களிடம் ஶ்ரீ கிருஷ்ணருக்கு இருக்கும் காரணமற்ற அருளால்தான். அப்படியானால், நாம் வணங்குவது நமக்குப் பயன் தரவில்லை என்றால், எவ்வாறு அது அவரது அருளுக்கு வழிகுக்கிறது?
அது நம் மனநிலையை வெளிப்படுத்தும்; அவருக்காக நமது மனம் மாறியது என்பதைச் சொல்லும். அந்த எண்ணம் மாற்றமே, ஶ்ரீ கிருஷ்ணரின் அருளுக்கு வாயிலாகிறது.”
“ஒருவர் மற்றொருவர் மேல் ஓங்கி அடிக்கும் வகையில் கையெழுப்பினாலே போதும் அடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அவர் அடிக்காமல் விட்டாலும், அந்த செயல் அவமானமிக்க செயலாக கருதப்படும்.
அதைப்போல, ஶ்ரீ கிருஷ்ணரின் அருகில் சென்று நாம் சிறிதளவாவது தலையை சாய்த்து வணங்கினோம் என்றால் கூட, வேறு பெரிய அளவில் பக்தி தொண்டு எதுவும் செய்யவில்லை என்றாலும்—அவர் அதை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்கிறார். ஶ்ரீ கிருஷ்ணரை அருள் செய்யத் தூண்டுவது, நம்முடைய அந்த மனநிலை, அந்த வணங்குவது போன்ற சின்ன சைகையே!”
ஸ்ரீல பிரபுபாதா:- “அன்புடனும் பணிவுடனும் வணக்கங்களைச் செலுத்தும் ஒரு உண்மையான பக்தர் கிருஷ்ணரின் கருணையை ஈர்த்து, இதயத்தைத் தூய்மைப்படுத்துகிறார்.”
இதன் மூலம், எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணரின் மனப்பான்மை எவ்வளவு கருணை நிறைந்தது என்பதையும், அவருடன் ஜீவாத்மாவாகிய நமக்கு உள்ள நித்திய ஸம்பதத்தை நினைவுபடுத்தும் வகையில் எடுத்துக்காட்டப் பட்டுள்ளது.
இந்த கருத்தை ஶ்ரீமத் இராமானுஜரின் மானசீக குருவான ஸ்ரீ ஆளவந்தார் அருளிய முழுமுதற் கடவுளைப் பற்றிய ஸ்லோகங்களின் தொகுப்பு நூல் ஸ்தோத்திர ரத்னம் – 28ஆம் ஸ்லோகத்தில் ஓர் அருமையான உண்மையை சொல்லுகிறார்:
‘அரங்கரே, யார் (ஜீவாத்மா) எப்போது, எந்த நிலைமையிலும், வணங்கும் முறை சரியாகத் தெரியாமலும், ஒரு முறைதான் உம்மை வணங்கினான் என்றாலும்—உன்னிடம் அஞ்சலி செய்தால், அந்த தருணத்தில் அவர் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி விடும். அதனால் கிடைக்கும் நன்மைகள் மட்டும் வளர்ந்து கொண்டே போகும்—ஒருபோதும் குறையவே மாட்டாது.’ என்கிறார். இதுதான் எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணர் கருணையின் பெருமை.
பகவான் நாம் பாசத்திலிருக்கிறோமா என்பதைக் காண்பதற்காக, அவன் நம்மிடம் எதிர்பார்ப்பது மிகச் சிறியது: ஒரு சின்ன வணக்க அஞ்சலி, ஒரு சிறிய சைகை, அவனை குறித்து ஒரு மனமாற்றம்.
அந்த ஒரு செயலை நாம் அதை முழுமையாகப் புரிந்து செய்யவில்லை என்றாலும்—அவர் நம் பாவங்களைச் சுட்டெரித்துவிடுகிறார். பிறகு அந்த ஜீவாத்மாவிற்க்கான நன்மைகளை வளர்த்துக்கொண்டு போகிறார். அந்த நன்மைகளின் அளவானது நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு இருக்கும். அவன் அருள் அவ்வளவு பெரிது!”
இதையே மஹாபாரதம் – சாந்தி பர்வம் 46.163-இல் வரும் ஸ்லோகத்தில் பார்க்கலாம். “ஏகோऽபி க்ருஷ்ணே ஸுக்ருத:ப்ரணாமோ தஷாஷ்வமேதா அவப்ருதேந துல்ய: |
தஷாஷ்வமேதீ புனரேதி ஜன்ம க்ருஷ்ண ப்ரணாமோ ந புனர்பவாய ||”
“ஒரு மனிதன் ஶ்ரீ கிருஷ்ணரை நோக்கி ஒரே ஒரு முறை, ஓரளவு மனமார வணங்கினாலும், அதன் பயன் பத்து அஸ்வமேத யாகங்களைச் செய்ததுடன் ஒப்பாகும். பத்து அஸ்வமேதங்களைச் செய்தவர் மறுபடியும் பிறப்பை அடைகிறார். ஆனால் ஒரே ஒருமுறை ஶ்ரீகிருஷ்ணரை ஆடி பணிந்தவர், மீண்டும் பிறவி எடுக்கவேண்டிய அவசியமில்லை. அந்த ஒரு வணக்கம் அவரை நித்தியமாகத் துக்கம் இல்லாத நிலைக்கு அழைத்துச் செல்லும்.” என மகாபாரத இதிகாசத்தில் கூறப் பட்டுள்ளது.
மேலும் இந்தக் கருத்து, கருட புராணம் 11.26-லும் விளக்கப்பட்டுள்ளது.
“அஞ்சலி: பரமா முத்த்ரா க்ஷிப்ரம் தேவப் ப்ரசாதிநீ”
இதன் பொருள் :
ஜீவாத்மா, எம்பெருமானுக்கு செய்யும் “அஞ்சலி” என்பது மிகவும் உயர்ந்த சைகையாகும். அது எம்பெருமானை மிகவும் விரைவில் மகிழ்விக்கக்கூடிய ஒன்று. இந்த சின்ன, ஆனாலும் உண்மையான—வணக்கச் சைகையால் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் மகிழ்ந்து, பந்தப்பட்ட ஜீவாத்மாக்கள் மேல் தன்னுடைய கருணையை பொழிவார். நம் மனதில் எம்பெருமானுக்காக வந்த நல்ல எண்ணத்தையும், பணிவும் காண்கிறவர் அவரே!”
பவளவாயுடைய அரங்கனார்க்கு

எம்பெருமானை விரும்ப தொடங்கும் சிறிய சுவையும் ஒருவர் காட்டினால் அதாவது, ஒருவர் சிறிதளவு பக்தி காட்டினால்கூட, அரங்கநாதர் அதை உடனே கவனிக்கிறார்.
அவர் தமது பவளம் போன்ற நிறத்தை உடைய உதடுகளால் அந்த நபர் அனுபவித்த எல்லா துன்பங்களுக்கும் ஆறுதல் அளிக்கிறார்.
எம்பெருமான், பக்தியுடன் தன்னை நாடுபவர்களுக்காக மிக அருகாமையில் திருவரங்கத்தில் கோவில் கொண்டு உள்ளார்.
துணிவினால் வாழமாட்டா
எம்பெருமானின் உன்னத தோற்றம் சேத்தனர்களிடம் (பந்தப்பட்ட ஜீவாத்மாக்கள்) பக்தியில் பணிவையும், உறுதியையும் விதைக்கிறது. அதனால் முழுமுதற் கடவுளை அனுபவிக்க முடிகிறது.
பவளவாய் அரங்கனார்க்கு மனமதொன்றி துணிவினால் வாழமாட்டா முன்பு ஜீவனுக்கு எம்பெருமானை அனுபவிக்கும் மன உறுதி, தைர்யம் ஏதுமில்லை, மிகுந்த தயக்கமாய் இருந்தது. ஆனால் இப்போது அவரை அனுபவிக்க மன உறுதி எனும் ஒரே ஒரு விஷயம் மட்டுமே போதும்.
மகாபாரதம், சாந்திபர்வம் 324.47-இல் கூறப்பட்டுள்ள வரி “வியவசாயாத் ஹ்ருதே, பிராமண! நாஸாதயதி தத் பரம்” –
“மன உறுதியின்றி, பிராமணனே! அந்த பரம்பொருளை ஒருவன் எட்ட முடியாது. உறுதியில்லாமல், பரம்பொருளான கிருஷ்ண பகவானை ஒருவரும் அடைய முடியாது, பிராமணனே!”
இதை சுருக்கமாகக் கூறினால்: “மன உறுதியே இல்லாமல், பரமத்தைக் கொள்பவர் இல்லை.” எம்பெருமானை அடைய வேண்டிய மார்க்கத்தில் தெளிவுடன் இருந்த ஜனகன், தன் ஆச்சாரியரான வேதவியாசரிடம், பகவானைப் பெற மன உறுதியே களங்கமற்ற சாதனமாகும் என்று கூறினார்.
தொல்லை நெஞ்சே
“மூட மனமே! நீ இவ்வளவு நாள் எம்பெருமானை அனுபவிக்கத் தவறியது, உனக்குப் பண்பு இல்லாமையால் அல்ல; உறுதி இல்லாமையால்தான்!” என்று தன் மனத்திற்கு எடுத்து உரைக்கிரார் ஆழ்வார்.
நீ சொல்லாய்
மனமே, இப்போது நீ ஒப்புக்கொள்ள வேண்டும் — இத்தனை நாள் எம்பெருமானை அனுபவிக்க முடியாமல் இருந்தது, உன் அறியாமையால்தான்.
இப்போது உனக்கு அந்த அறியாமை விலகியுள்ளது; இப்போது எம்பெருமானைச் சார்ந்த பகவத் விஷயங்களை அனுபவிக்க முடிகிறது.
மேலும் ஆழ்வார் ஜீவாத்மாவிடம், “இது அறியாமையின் விளைவே என்றே நீ உணர வேண்டும்” என சொல்கிறார்.
அணியினார் செம்பொனாய அருவரையனைய கோயில்
திருவரங்கத்தில் உள்ள கோவில், சிவப்பு நிற தங்கத்தால் ஆன மேரு மலைபோல அழகாக உள்ளது. இந்த கோவில், இந்த ஜீவசம்சாரத்துக்கு ஒரு அழகான அணி போல இருப்பதால், “அணியினார்” என்று அழைக்கப்படுவது மிகப் பொருத்தமே என்கிறார் ஆழ்வார். மேலும் இது சிவப்பு தங்கம் போல் தோன்றுவதால் “செம்பொனாய” என்பது பொருத்தமான பெயர் ஆகும். இந்த கோவில் ஒரு பெரிய மலை போல உறுதியாக நிற்பதால், உலகத்திற்கே அடித்தளமாக விளங்குகிறது. அதனால் “அருவரையனைய” சொற்றொடர் பொருத்தமாக உள்ளது.
மணியினார் கிடந்தவாற்றை
மேரு மலையை உடைத்துப் பார்த்தால், அது சுற்றிலும் பொங்கிப் பளிச்சென்று விரிந்து, நடுவில் ஒரு நீல மாணிக்கக் கல் தெரிந்தால், அது திருவரங்கக் கோவிலின் விமானத்தடியில் பள்ளிக் கொண்டு உள்ள முழுமுதற் கடவுளைப் போல இருக்கும்.
இந்த உவமையால், முழுமுதற் கடவுளின் அழகும், கோவிலின் மாட்சியும் எவ்வளவு அற்புதமானவை என்பதை ஆழ்வார் அழகாகக் காட்டுகிறார்.
கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கலாமே
எம்பெருமான் பள்ளிக் கொண்டு இருக்கும் அழகை தன் மனதால் முழுமையாக யாரும் எண்ணிக் கூற முடியுமா? அவரது இயல்பையும், நல்ல குணங்களையும் ஓரளவுக்கு நாம் புரிந்து சொல்லலாம். ஆனால், அவருடைய உருவ அழகு என்பது எத்தனை பார்த்தாலும் சலிக்காது, அளவிட முடியாதது என்று ஆழ்வார் சொல்லுகிறார்.
மனத்தைத் தாண்டி பார்க்கும் ஒரு சக்தி ஜீவனுக்கு இருந்தால் தான் அந்த அழகை உணர இயலும். ஆனால் நாம் நம் மனதின் எல்லைக்குள்ளேயே இருப்பதால், எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரின் எல்லைக்கடந்த அழகு நம்மால் அளவிட முடியாத அளவிற்கு உள்ளது.
ஹரே கிருஷ்ணா
பாசுரம் 29: ஊர் இலேன் காணியில்லை
உன்னைத் தவிர ரக்ஷகர் யார்?

திருவரங்கம்

ஶ்ரீஇராமர் கோவில் .அயோத்தி

பிருந்தாவனம்,மதுரா,பர்ஸானா
ஊர் இலேன் காணியில்லை உறவு மற்றொருவரில்லை *
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரமமூர்த்தி! *
காரொளி வண்ணனே! கண்ணனே! கதறுகின்றேன் *
ஆருளர்? களை கண்ணம்மா! அரங்க மாநகருளானே!
பொருள்
ஊர் — திவ்ய தேசங்கள் எதிலும்; இலேன்— பிறக்கவில்லை; காணி — கைங்கர்யத்துக்கு; இல்லை — என்னிடம் காணியில்லை; உறவு மற்று — உறவினரும்; ஒருவர்இல்லை — வேறொருவரும்இல்லை; பாரில் — இந்தப் பூமியிலே; நின் பாத மூலம் — உன் திருவடிகளையும்; பற்றிலேன் — பற்றாதவனாக இருக்கிறேன்; பரம மூர்த்தி!— பரம மூர்த்தியே!; காரொளி — கருத்த மேகம்; வண்ணனே! — போன்றவனே!; என் கண்ணனே! — என் கண்ணனே!; கதறுகின்றேன் — கதறுகின்றேன்; அரங்க மா நகருளானே! — அரங்க மா நகருளானே!; களைக்கண் — ஸ்வாமியே!; அம்மா! — உன்னை தவிர என்னைக் காக்க; ஆர் உளர்? — வேறு யார் இருக்கிறார்கள்
தொகுப்புரை:
நான் எந்த ஊரையும் சார்ந்தவன் அல்லன். எனக்கு ஒரு ஊரும் இல்லை, நிலமும் இல்லை. எனக்கென்று உறவுகள் எதுவும் இல்லை. இந்த பூமியிலே, மிக உயர்ந்த பெருமானான உன் திருவடிகளை நான் பூஜிக்கிறேன். கார்மேக நிறம் கொண்ட கண்ணனே, ஶ்ரீகிருஷ்ணரே உம்மை தவிர வேறு புகலிடம் எனக்கு இல்லை. வேறு எதையும் நான் அடைக்கலமாக அறியேன். என் ஒரே நம்பிக்கை தாங்கள் மட்டும் தான்!
ஶ்ரீகிருஷ்ணா! நான் உன்னை வேண்டி, உனக்காக அழுகிறேன். உன்னைத் தவிர எனக்கோர் துணையோ, தாயோ, ஆதாரமோ எவரும் இல்லை. திருவரங்கத்து ஆண்டவனே! என் துயரைத் தீர்க்க வா .நீயே என் தாய், நீயே என் கடவுள்! என்கிறார் ஆழ்வார்.
விளக்கவுரை:
ஊர் இலேன்
ஆழ்வார் தான் எந்த ஊரையும் சார்ந்தவன் இல்லை என்று சொல்லி ஆரம்பிக்கிறார். அதாவது, எம்பெருமான் இருக்கின்ற புனித தலங்களில் நான் வாழ்வதில்லையே என்று வருந்துகிறார்.
இங்கே “ஊர்” என்பது சாதாரண ஊரைச் சொல்லவில்லை; பிருந்தாவனம், மதுரா, துவாரகை, அயோத்தி (ஸ்ரீராமரின் அவதார ஸ்தலம்), ஸ்ரீரங்கம் போன்ற புனித தலங்களைத்தான் “ஊர்” என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
அவை எல்லாம் எம்பெருமான் அர்ச்சாவதாரமாக இருந்து பக்தர்களுக்கு தரிசனமளிக்கும் புனித தலங்கள் ஆகும்.
ஸ்ரீமத் பாகவதம் 10.1.28: மதுரா பகவான் யாத்ர நித்யம் சன்னிஹிதோ ஹரி – “மதுரா என்பது பரம புருஷ பகவான் ஹரி நித்தியமாக வசிக்கும் இடம்.”
பக்தி-ரஸாம்ருத-சிந்து 1.2.90: பக்தித் தொண்டின் ஐந்து சக்திவாய்ந்த அங்கங்களில் ஒன்று “மதுராவில் வசிப்பது”.
“கிருஷ்ணர் வாழ்ந்த மதுராவிலும் பிற புனிதத் தலங்களிலும் வாழ்வது, புனித நாமத்தை உச்சரிப்பது போலவே ஆன்மீக ரீதியாக சக்தி வாய்ந்தது” என்று ரூப கோஸ்வாமி கூறுகிறார்.
இங்கே “ஊர்” என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது, திருமாலை பாசுரத்தின் இப்பகுதியில், ஆழ்வார் தன்னிடம் எம்பெருமானை அடைய எந்த சாதனமும் (வழியும்) இல்லை என்ற விழிப்புணர்வைத் தெரிவிக்கிறார்.
“ஊர் இலேன்” என்று அவர் கூறுவது, தன்னை முக்திக்கு (விமோசனத்திற்கு) அழைக்கும் எந்த வழியிலும் இல்லை என உணர்கிறார் என்பதைக் குறிக்கிறது. அதனால், இங்கே “ஊர்” என்பது சாதாரண நகரம் அல்ல; முக்திக்கான ஒரு மார்க்கமாகவே (வழியாகவே) எடுத்துக்கொள்ள வேண்டும்.
இது, ஆழ்வார் தன்னை எல்லாவற்றையும் இழந்தவனாகக் கருதும் நிலையை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. பிருந்தாவனம் போன்ற புனித தலங்களில் வாழ்வது மிகப்பெரிய பக்தி வாய்ப்பு, மிக பெரும் பாக்கியம் என்று வலியுறுத்துகிறார் ஆழ்வார். ஏனெனில், அந்த புனித ஸ்தலங்களில் வாழ்வதே எம்பெருமானின் அருள் பெறும் வாய்ப்பு.
ஆழ்வார் சொல்கிறார் — நான் அந்த புனித இடங்களில் பிறந்திருந்தால், அந்த இடம் எம்பெருமானுக்கு இன்பம் தரும் இடமாயிருந்ததால், அவர் என்னைத் தயையுடன் ரட்சித்திருப்பார். ஆனால், எனக்கு அந்த உரிமையும் இல்லை என்றே ஆழ்வார் வருந்துகிறார்.
இதற்கு ஆதாரமாக சில பெரிய நூல்களும் இருக்கின்றன:
“கருட புராணம்” (அத்யாயம் 11) இப்படி கூறுகிறது: “தேஷோயம் ஸர்வ காமதுக்” —
அதாவது, முழுமுதற் கடவுள் அர்ச்சாவதரமாக வாழும் தலங்கள் எல்லாவற்றையும் தரக்கூடிய பாக்கிய ஸ்தலங்கள் ஆகும்.
அதேபோல், ஸ்ரீமத் இராமாயணத்தில் (ஆரண்ய காண்டம் 1.20) – தண்டகாரண்யத்தில் வாழும் முனிவர்கள் ஸ்ரீராமரிடம் கீழ் வருமாறு கூறுகிறார்கள்: “தே வயம் பவதா ரக்ஷ்யா, பவத் விஷய வாஸிந:” — “நாங்கள் உன் தேசத்தில் வாழும் மக்கள்; அதனால் நீயே எங்களை ரக்ஷிக்க வேண்டியவன்.” மேலும், ஸ்ரீராமாயணத்தில் (உத்தர காண்டம் 109.22) இவ்வாறு சொல்லப்படுகிறது: “நோச்வசத் தடயோத்யாயாம் ஸுசூக்ஷ்மமபி த்ருஷ்யதே; திர்யக் யோனி கதாஸ் சாந்யே ஸர்வே ராமானு வ்ரதா:”
அதாவது: “அயோத்யா நகரத்தில் ஒரு சின்ன உயிரினமும் காணவில்லை. அந்த நகரத்தில் உள்ள எல்லா உயிர்களும் (ஜந்துக்கள், பறவைகள், மற்ற உயிர்கள்) ஸ்ரீராமனைப் பின் தொடர்ந்து பரமபதத்தை அடைந்தார்கள்.
இவை எல்லாம் புனித தலங்களில் வாழ்வது எவ்வளவு பாக்கியம் என்பதை வலியுறுத்துகின்றன.
ஆழ்வார் “ஊர் இலேன்” என்று தொடங்கியதும், அவர் மனத்தில் தோன்றிய ஏக்கத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
புனித தலங்களில் பிறந்து வாழ்வது என்பது ஒரு பெரும் பாக்கியம். ஏனெனில், அந்த இடங்களில் எம்பெருமான் தானாகவே தங்கி, அங்கு வாழும் பக்தர்களுக்கு அருள் செய்கிறார். எம்பெருமான் இருக்கின்ற இடத்தில் வாழ்வதே ஜீவாத்மாவின் பாதுகாப்பிற்கும் பகவானின் கருணையை பெறுவதற்க்கும் வாய்ப்பு.
ஆனால், ஆழ்வார் தன்னை அந்த பாக்கியத்திற்கே உட்படாதவனாக நினைத்து வருந்துகிறார்: “நான் அந்த ஊர்களில் பிறக்கவில்லை; அப்படிப் பிறந்திருந்தால், எம்பெருமான் என்மேல் தயை கொள்ள ஏதுவாக இருந்திருக்கும்”.
காணி இல்லை
“காணி இல்லை” என்று ஆழ்வார் கூறுகிறார்.புனித தலங்களில் பிறக்கவில்லை என்றால் கூட, அந்த புனித தலத்துடன் தொடர்பு கொள்ள ஒரு வழியாக அந்த இடத்தில் காணி (நிலம்) வைத்திருப்பதும் இருக்கலாம்.
எம்பெருமான் கேட்கக் கூடும்: “அந்த திருக்கோவிலுக்காக ஏதாவது காணி வைத்திருக்கிறாயா? அந்த வழியாக உனக்கு என்மேல் உரிமை இருக்கிறதா?” என்று.
ஆனால் ஆழ்வார் வருந்தி கூறுகிறார்: “இல்லை! எனக்கு அப்படியொரு தொடர்பும் இல்லை.”
பழைய காலங்களில், கோவிலில் வேதம் ஓதுவதற்கோ, திருமாலை ஓதுவதற்கோ, மலர் மாலைச் செய்யவதற்கோ, வேறு திருக்கோவில் கைங்கர்யங்கள் (பணிகள்) செய்யவதற்கோ, காணிகள் (நிலங்கள்) நன்கொடையாக வழங்கப்பட்டன.
ஆனால், அதுபோல ஏதும் எனக்கு இல்லை என்று ஆழ்வார் வெளிப்படையாகச் சொல்கிறார்.
எம்பெருமான் கேட்கலாம்: “நீ புனித தலத்தில் பிறக்கவில்லை, காணி இல்லை என்றால் பரவாயில்லை. ஆனால் அங்கு இருப்பவர்களுடன் ஏதாவது உறவு இருக்கிறதா? நட்பாகட்டும், சம்பந்தமாகட்டும் – ஏதாவது உள்ளதா?”
ஆழ்வார் பதில் கூறுகிறார்: “எனக்கு அப்படிப்பட்ட எந்த உறவுமில்லை. அந்த புனித இடங்களில் இருப்பவர்களில் யாரும் என் சொந்தங்களோ, சற்று கூட அறிமுகமுள்ளவர்களோ இல்லையே. தூரத்து உறவுகளோ, பழகப் பழகிய நண்பர்களோ யாரும் இல்லை.”
புனித தலத்தில் யாராவது குடும்ப உறவுகள், நட்பு, அல்லது மந்திர சம்பந்தம், பண்டம பரிமாற்றம் போன்ற வழியிலாவது ஒரு தொடர்பு இருந்தால் கூட, அது ஒரு சான்று ஆகியிருக்கும்.
ஆனால், ஆழ்வார் சொல்லுகிறார்: “எனக்கு அப்படியொரு மனிதரே இல்லையே!” இது, ஆழ்வார் தன்னை, எம்பெருமானிடமும் அவர் கொலுவீற்றிருக்கும் புனித தலத்திற்க்கும் எந்தவிதமான உரிமையோ, தகுதியோ இல்லாதவனாக உணர்கிறார் என்பதை மிக நெகிழ்ச்சியாக வெளிப்படுத்துகிறது.
பாரில்
“நான் இப்பூமியில் வாழ்கிறேன்”—என ஆழ்வார் வருந்துகிறார்
இந்த பூமி என்பது சாதாரண இடம் அல்ல; இது நிறைய துன்பங்களும் சிக்கல்களும் நிறைந்த இடம். இங்கு வேஷமமும், போட்டியும், கவலையும் நிறைந்துள்ளது. இந்த உலக வாழ்க்கை கடுமையானது என்பதை ஆழ்வார் மிகவும் வேதனையுடன் கூறுகிறார்.
பகவத் கீதை 8.15-ல் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த பௌதீக உலகத்தை துக்காலயம் – துன்பங்களின் இடம் என்று விவரிக்கிறார்.
ஆன்மீக உலகம் (கோலோக பிருந்தாவனம் ) கவலையில்லாத, அமைதியான, மகிழ்ச்சி நிறைந்த இடம்.
ஸ்ரீமத் பாகவதம் 2.9.10: “அந்த ஆன்மீக உலகில், மாயையின் செல்வாக்கு இல்லை. அது பரம புருஷரின் வரம்பற்ற ஐஸ்வர்யங்களால் நிரம்பியுள்ளது, கட்டுண்ட மனதிற்கு அணுக முடியாதது.”

பிரம்ம-சம்ஹிதா 5.29 – கோலோக பிருந்தாவனத்தின் விளக்கம்: சிந்தாமணி-பிரகர-சத்மசு கல்ப-வ்ருக்ஷ
லக்ஷா வ்ருதேஷு சுரபிர் அபிபாலயந்தம்
லக்ஷ்மி-சஹஸ்ர-சத-சம்பிரம-சேவ்யமானம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
“நான் மூல இறைவனான கோவிந்தரை வணங்குகிறேன். அவர் தனது சொந்த வசிப்பிடமான கோலோகத்தில் வசிக்கிறார். அங்கு கட்டிடங்கள் ஆன்மீக ரத்தினங்களால் (சிந்தாமணி) ஆனவை. ஆசை மரங்கள் (கல்ப-வ்ருக்ஷங்கள்) வளர்கின்றன. மேலும் லட்சக்கணக்கான லட்சுமிகள் (கோபிகள்) அவருக்கு அன்புடனும் பயபக்தியுடனும் சேவை செய்கிறார்கள். அவர் சுரபி பசுக்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் பராமரிக்கிறார்.”

கோலோக பிருந்தாவனம்
நின் பாத மூலம் பற்றிலேன்
ஆழ்வார் வருத்தத்துடன் கூறுகிறார்: “நான் உன் திருவடிகளை பற்றிக்கொள்ளவும் முடியவில்லை.”
எம்பெருமானின் திருவடிகள் என்பது அடியார்கள் அடைக்கலம் அடையும் இடம். எங்கே போனாலும் பாதுகாப்பு கிடைக்காதபோது, போகவேண்டிய கடைசி இடம் – அதுதான் ஶ்ரீகிருஷ்ணரே நின் பாதம்.
ஸ்ரீராமாயணத்தில் (சுந்தர காண்டம் 38.33), காகாஸுரன் (ஒரு அரக்கன், காகம் வடிவத்தில் வந்தவன்) மிகக் கடுமையான பாவம் செய்தபோது, முப்பெரும் உலகங்களிலும் அடைக்கலம் கிடைக்காமல், இறுதியில் ஸ்ரீராமரின் திருவடிக்கே வந்து சரணாகதி கொண்டான். அப்போது ஸ்ரீராமன் அவனை மன்னித்தார், காப்பாற்றினார்.
ஆனால் ஆழ்வார் கூறுகிறார்: “அப்படி ஒரு மாபெரும் அருள் கொடுக்கின்ற திருவடிகளே எனக்கு இல்லை. அவைகளுடன் எனக்கு சம்பந்தமே இல்லை. அவற்றைப் பற்றிக்கொள்ளும் தகுதியே இல்லாதவனாக உள்ளேன்.”
இது, ஆழ்வார் தன்னை தாழ்ந்தவனாக எண்ணும் பக்தி நிலையை மிக நெகிழ்ச்சியாக வெளிக்காட்டும் பகுதி.
பரம மூர்த்தி
எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் ,”ஆழ்வாரே, உமக்கும் எனக்கும், என் திருவடிக்கும் எந்த தொடர்பிலும் இல்லை என்றால் நீர் என்னை அடைவதற்கே வாய்ப்பு இல்லையே?” என்று கேட்கிறார்.
ஆழ்வார் பதிலளிக்கிறார்: “நீயே பரம மூர்த்தி – எல்லாவற்றிற்கும் மேலான பரமனாய் இருக்கிறாய்! அப்படியிருப்பதனால், நீயே என்னைக் காப்பாற்ற வேண்டாமா?”
அதாவது,நீ எல்லோருக்கும் கடவுளாக இருக்கிறாயே, அப்படியிருந்தால் என்னை எப்படி விட்டுவிட முடியும்? நீயே இறைவன் (சேஷி), நாங்கள் உனக்கு அடிமை எனும் உறவை (சேஷபூதன்) ஜீவாத்மாக்களான நாங்கள் மறந்தாலும், நீயே எங்களுக்கு நினைவூட்ட வேண்டும்; நீயே உரிமையுடன் எங்களைத் திருத்தி, சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். உன்னை விட வேறொருவரும் இல்லாத அளவுக்கு உயர்ந்தவன் நீ! அதனால், எங்களை விட்டுவிடாமல், நீயே காப்பாற்ற வேண்டும் அதுதான் உனக்கு பெருமை!
காரொளி வண்ணனே!
நீ கருமேகத்தைப் போல ஒளி வீசும் அழகான வடிவம் கொண்டவன்!
ஏற்கனவே ஒரு பாசுரத்தில், எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணரின் அழகு அவரது பக்தர்களின் உள்ளத்தில் காதலையும், ஈர்ப்பையும் ஏற்படுத்துவதை ஆழ்வார் குறிப்பிடுகிறார். எம்பெருமான் என்ன செய்கிறார்?

ஶ்ரீ கிருஷ்ணர் முதலில், உயிர்களுக்குள் தன்னை அடையவேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறார். பிறகு, அந்த ஆசையை வளர்க்கும் வழியாக, தன் அழகையே ஒரு சாதனமாக ஆக்குகிறார். அதாவது, அவரது அழகே — அவரை அடைய ஒரு வழி!
ஆழ்வார் ஶ்ரீ கிருஷ்ணரின் அழகை ஏற்றுக் கொள்கிறார்: அவ்வளவு அழகு கொண்டவனாக இருக்கிறபோது, அவரை அடைய எந்தத் தடையுமில்லை! அவரைப் பற்றி நினைக்கும்போதே, அவரிடம் அடிமைபணி செய்யவேண்டும் என்ற உணர்வு பிறக்கிறது.
இதன் மூலம், அழகு – அருள் – அடைக்கலம் என்ற மூன்றையும் எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் தன்னிடம் இருந்து தோன்றவைத்து அதன் மூலம் பக்தனுக்கு தேவையான அனைத்தையும் எளிதில் தந்துவிடுகிறான் என்று ஆழ்வார் உணர்த்துகிறார்.
கண்ணனே
ஆழ்வார் எம்பெருமானை “கண்ணனே!” என அழைக்கிறார். அதாவது, ஸ்ரீ கிருஷ்ணனே! என உருக்கமாகப் புகழ்கிறார்.
இது ஏன் முக்கியமானது என்றால் —எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் உலகத்திற்கே தலைவனாக இருந்தாலும் சாதாரண மனிதராகப் பிறந்து, எல்லோருடனும் பழகும் எளிமை (சௌலப்யம்) மற்றும் அன்புடன் நெருக்கமாக இருக்கும் (சௌசீல்யம்) என்ற பண்புகளைத் தன்னுள் கொண்டிருந்தார்.
கண்ணனாக, தன் தாய், தந்தையுடன் வாழ்ந்தார். பசுக்களை மேய்த்தார், மனிதர்களுடன் சிரித்தார், பேசினார். அதனால் தான் பக்தர்கள் அவரை விரும்புகிறார்கள் –அவரின் இந்த எளிமையால் ஜீவாத்மாக்களால் நெருக்கமாக கண்ணனுடன் இருக்க முடிகிறது எனஆழ்வார் உணர்கிறார்.

அவன் மனிதராக அவதரித்து மக்களோடு நெருக்கமாக இருந்ததுதான் பக்தர்களின் மனத்தை வெல்லக் காரணமாக உள்ளது. இப்படிப்பட்ட குணங்களை உடைய ஶ்ரீகிருஷ்ணரை அடையாமல் இருக்க முடியுமா? என வினவுகிறார். எனவே ஜீவாத்மாக்கள், ஶ்ரீகிருஷ்ணரை நேசித்து முக்திக்கு செல்லும் பாதையை தவற விட முடியாது என்கிறார் ஆழ்வார்.
“கண்ணனாக, ஜீவாத்மாக்களுக்கு முழுமுதற் கடவுள் கொடுத்த அந்த நெருக்கம் ஒரு பெரிய அருள்” என ஆழ்வார் நன்றாக புரிந்துக் கொண்டார்.
கதறுகிறேன்
பக்தி யோகம் செய்யும் ஆழ்ந்த பக்தர்கள் போல, தாமும் எம்பெருமான் கண்ணனைப் பெறவேண்டுமென்ற ஆசையில் வேதனையுடன், ஆழ்வார் “கதறுகிறேன்” என ஏங்கி அழுகிறார். கண்ணன் தன்னைக் காக்க வேண்டும் என்றும், அவனுடைய அருளைப் பெறவேண்டும் என்று, ஆழ்வார் ஶ்ரீ கிருஷ்ணரை வருந்தி அழைக்கிறார்.
ஆருளர் களைகணே?
ஆழ்வார், ஶ்ரீ கிருஷ்ணரிடம் “நீ ஏன் என்னைக் காக்க தாமதிக்கிறாய்? ஒருவேளை, வேறு யாராவது என்னைக் காப்பார்கள் என நினைக்கிறாயா?” என்று கேட்கிறார். தன்னிடம் , தன்னை காத்துக் கொள்ள எந்த உதவியும், சாதனமும் இல்லாத தன் கையாலாகாத நிலையை உணர்ந்து, “இப்போது என்னை யார் காக்க முடியும்?” என்று ஆழ்வார் ஆழ்ந்த ஏக்கத்தில் கேள்வியெழுப்புகிறார். மேலும் தான் பிறப்பு, இறப்பு சுழற்சியிலிருந்து விடுபட தான் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த மார்க்கமும் கிடைக்காமல், ஒரே நம்பிக்கையாக எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரையே நோக்கி ஏங்கியபடி நிற்கிறார் ஆழ்வார்.
அம்மா
ஆழ்வார் இங்கு எம்பெருமானை மிகுந்த நெருக்கமும் பரிவும் கொண்டு “அம்மா” என்று அழைக்கிறார். இந்தச் சொல்லில் உள்ள தாழ்மையும், உருக்கமான உள் பாசமும், ஒரு ஆத்மாவின் முழுமையான சரணாகதியும் வெளிப்படுகிறது. “அம்மா” என்பது பொதுவாக அன்பு, பாதுகாப்பு, ஆதரவு ஆகியவற்றைத் தூண்டும் சொல். ஆனால் இங்கு, அது அதிபதி – உடைமையாளர் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டதாகும்.
ஆழ்வார் கேட்கிறார்: “நான் உன்னுடைய உடைமையே அல்லவா. அப்படியிருக்க, அந்த உடைமை அழிந்து விட்டால், அதனால் பாதிக்கப்படுவது நான் மட்டும் அல்ல; உன்னுடைய செல்வமும், பெருமையும் குறையப் பெறும் அல்லவா?”
இது சேஷ-சேஷி பாவனையின் (உடைமையும் ,உடைமையாளனும் என்ற பாவனை) நெருக்கமான விளக்கம்.
ஆழ்வார், தன்னை ஶ்ரீ கிருஷ்ணருடைய சேஷபூதன் (சொத்து) என்று நம்பியிருப்பதால், தன்னுடைய அழிவானது தனக்கு மட்டும் நேரும் பாதிப்பாக அல்லாமல், “இது உனக்கே இழப்பானது!” என்ற உணர்வுடனே எம்பெருமானிடம் எடுத்துக்கொள்கிறார்.
அதாவது,”ஶ்ரீகிருஷ்ணா, நீயே என் அதிபதி. நீ என்னைக் காக்க வேண்டியது உன் கடமை. நான் அழிந்துவிட்டால், அது என் இழப்பாக மட்டும் இல்லாமல், உன் செல்வத்திலே குறைபாடாகவே ஆகும். ஆகவே, என்னை விட்டுவைக்காமல், காக்க வேண்டும்” என்பதே ஆழ்வாரின் பரிவான உரை.
இவ்வாறு, “அம்மா” என்ற ஒரே சொல்லில், பாசமும், உருக்கமும், தர்மமும், தன்னலம் மறந்த ஆன்ம சிந்தனையும், எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணரை உருக வைக்கும் மெல்லிய வேதனையும் ஆழ்வார் உரைத்து நிறைகின்றார்.
அரங்கமா நகருளனே
1.அரங்கமா நகருள் — ஸ்தல மஹிமை “அரங்கம்” என்பது எம்பெருமானின் தானத் திருப்பதி. அதாவது முழுமுதற் கடவுளான ஶ்ரீகிருஷ்ணரின் விருப்பத்தால் உருவாகிய சிலை அமைந்துள்ள இடம் ஆகும். மனிதர்களால் திருமேனி செய்யப்பட்டு, அவர்களால் வழிப்படும் இடமல்ல அரங்கம். கோலோகத்தில் கோலகலமாக தங்கி இருக்கும் ஶ்ரீகிருஷ்ணர், ஜீவாத்மாக்கள் தன்னை எளிதில் அடைய வேண்டும் என்பதற்காக தானே திருவுருவமெடுத்து வந்த ஸந்நிதி — அதுவே திருவரங்கம்.
இது ஏனைய திவ்ய தேசங்களைவிட மேன்மை வாய்ந்தது. கண்ணனை பரமபதத்தைவிட இங்கு தான் எளிதில் காணமுடியும்” என்பதே இதன் சிறப்பு.
2. உளனே – எப்போதும் இருப்பவர் “உளனே” என்றால், இங்கே இருக்கிறாய், அல்லது – “எப்போதும் இருக்கிறாய்” என்றும் பொருள்.
“கண்ணா, நீ சில நேரம் மட்டும், அல்லது சிலருக்காக மட்டும் இல்லை; என்றும், யாருக்காகவும், என்னைப் போன்ற தகுதியற்றவர்களுக்காகவும் இருக்கிறாய் ” என்று கூறுகிறார் ஆழ்வார்..
இது எம்பெருமான் கண்ணனின் சௌலப்யம் (எளிதில் அணுகக்கூடிய தன்மை) மற்றும் நித்யஸந்நிதி (நித்தியமாக இருக்கிறதான அவன் இருப்பு) ஆகியவற்றைக் காட்டுகிறது.
“கண்ணா, நீ பரமன்; என் அதிபதி. நானோ, சிறியவன், தகுதியற்றவன். ஒருவேளை நீ தூரத்தில் இருந்திருந்தால், என் ஏக்கம், என் அழுகை எல்லாம் உள்ளுக்குள் அடக்கிக் கொண்டிருப்பேன். என் பிரார்த்தனயை கேட்காது இதுக்கலாம். ஆனால் நீ என்னை விட்டு விலகி இல்லையே! நீ இங்கு, அரங்கமா நகரிலே, என்னை போன்றவர்களை நோக்கிப் எதிர்பார்த்து தங்கி இருக்கிறாய். அப்படி இருக்க, நான் எப்படி மௌனமாக இருக்க முடியும்?” என்று ஆழ்வார் உருக்கமாகக் கூறுகிறார்.
“அரங்கமா நகருளனே” என்ற ஒரே வரியில்,
● எம்பெருமானின் ஸௌலப்யம்,
● பாசபரிவு,
● பெருமை,
● மற்றும் ஆழ்வாரின் அன்பும் ஏக்கமும் — அனைத்தும் இடம் பெற்றுள்ளன.
இது ஒரு சொற்றொடராக இருக்கலாம்; ஆனாலும், இது ஒரு அழுத்தமான பக்திப் பரவச உணர்வை எடுத்துரைக்கும் பாசுரத்தின்மிகமுக்கியமானசொல்லாகும்.
ஹரே கிருஷ்ணா
பாசுரம் 30: மனத்திலோர் தூய்மையில்லை
எனக்கு இனி என்ன கதி?

காவிரி நதி சூழ்ந்த ஶ்ரீரங்கநாதர் குடிகொண்டு
உள்ள திருவரங்கம்
மனத்திலோர் தூய்மையில்லை வாயிலோரின் சொலில்லை *
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன்வாளா *
புனத்துழாய் மாலையானே! பொன்னி சூழ் திருவரங்கா *
எனக்கினிக் கதியென் சொல்லாய்? என்னை ஆளுடைய கோவே!
பொருள்
மனத்தில் ஓர் — என் மனதில்; தூய்மைஇல்லை — தெளிவு சிறிதுமில்லை; வாயில் ஓர் — வாயிலே ஒரு; இன்சொல் இல்லை — இனிய பேச்சு இல்லை; சினத்தினால் — தேவையற்ற கோபத்தாலே; செற்றம் நோக்கி — பகைமை பாராட்டி; தீவிளி — கொடுமையான; விளிவன்வாளா — வார்த்தைகளைப் பேசுகிற நான்;புனத்துழாய் — நிலத்திலே வளரும் திருத்துழாயை; மாலையானே! — மாலையாக அணிந்தவனே!; பொன்னி சூழ் — காவேரியாலே சூழப்பட்ட; திருவரங்கா! — ஸ்ரீரங்கத்தில் இருப்பவனே!; என்னை ஆளுடைய — என்னை அடிமையாக்கி; கோவே! — கொண்டவனே!;; எனக்கு இனி — உன்னை சரண் அடைந்த பின்; என் கதி — எனக்கு என்ன கதி என்பதை; சொல்லாய்? — நீயே அருளிச் செய்ய வேண்டும்.
தொகுப்புரை:
“என் மனம் சுத்தமில்லையென்றே நான் உணர்கிறேன். என் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வருவதில்லை. எனக்கு சீறும் கோபம் அதிகம்; கோபத்தில் நான் கத்திக் கூறுவேன், கெட்ட வார்த்தைகள் பேசுவேன். பசுமையான துளசி மாலைகள் அணிந்தவனே, பொன்னி (காவேரி) நதியால் சூழப்பட்ட திருவரங்கத்தின் அதிபதியே! என்னுடைய கோபம், என் குறைகள் இவ்வளவு இருக்க, எனக்கு என்ன ஆகப்போகிறது? என் ஆண்டவனே, நீயே சொல்லு” என உரைக்கிறார் ஆழ்வார்.
விளக்கவுரை:
மனத்திலோர் தூய்மையில்லை
“மனத்திலோர் தூய்மையில்லை” என ஆழ்வார் தொடக்கமே தம்மைத் குறை கூறுவதில் இருந்து ஆரம்பிக்கிறார். தாம் எப்போதும் தூய்மையற்ற மனத்தையுடையவராக இருப்பதோடு, கடந்த காலத்திலும் ஒருபோதும் தூய்மையான மனம் தமக்கில்லை என உணர்ச்சி மிகுந்த தாபத்துடன் தெரிவிக்கிறார்.

ஶ்ரீ ரூப கோஸ்வாமி எழுதிய
உபதேசாமிருதம்
ஶ்ரீ ரூப கோஸ்வாமி எழுதிய உபதேசாமிருதம் ஸ்லோகம்1: “பேசுவதற்கான உந்துதல், மனதின் உந்துதல்கள், கோபத்தின் செயல்கள் மற்றும் நாக்கு, வயிறு மற்றும் பிறப்புறுப்புகளின் உந்துதல்களைப் பொறுத்துக்கொள்ளக்கூடிய ஒரு நிதானமான நபர் உலகம் முழுவதும் சீடர்களை உருவாக்கத் தகுதியுடையவர்.”
ஶ்ரீ விஷ்ணு புராணம் 1.4.41-இல் வரும் ஒரு முக்கியமான உபதேசம் இதனை ஆதரிக்கிறது:
“ஞானம் விஷ்ணுமயம் லோகம் யதா சம்பஶ்யதே முனி: | ததா விஷ்ணோ: பரம் ரூபம் ப்ரவி விக்தம் உபாஷ்னுதே ||”
அதாவது, யார் ஒருவரது மனம் தூய்மையாகி, உலகம் முழுவதும் விஷ்ணுவின் ஞானரூபம் கொண்டு நிரம்பி இருக்கிறது என்பதை உணர்கிறாரோ, அவர் தான் விஷ்ணுவின் பரம சுத்தமான ரூபத்தை அடையக்கூடியவர். ஆனால் இந்த ஞானத்தை ஜீவாத்மா பெறுவதற்கு ஒரே நிபந்தனை — தூய்மையான மனம்.
அதே போன்று, சாந்தோக்ய உபநிஷத் 3.13.7-இல் இவ்வாறுக் கூறப்படுகிறது:
“ந சக்ஷுஷா பஶ்யதி கஶ்சனைனம் | ந வாங் ஏனம் விஜாநாதி | மனஸா து ஏனம் விஜாநாதி ||”
அதாவது, ஜீவாத்மாக்கள், பரமாத்மாவை கண்களால் பார்க்க முடியாது; அவரை வாக்கால் பேசித் தெரிந்துக்கொள்ள முடியாது; ஜீவாத்மாக்கள் தங்கள் மனத்தின் தூய்மையால் மட்டுமே அவரை உணர முடியும்.
இதன் அடிப்படையில் ஆழ்வார் தம் நிலையைப் பார்த்து வருந்துகிறார்.
அவர் கூறுகிறார்:
● “மனத்தில் தூய்மையில்லை” — என் மனம் அழுக்கற்றதாக இல்லை.
● “அழுக்கற்றதாக இருந்ததேயில்லை” — ஒரு காலத்திலும் தூய்மையான மனம் எனக்கில்லை.
● “அழுக்கின் காரணிகள் அனைத்தும் என்னுள் மிக உள்ளன” — காமம், கோபம், பேராசை, மோகம், பித்தம், பொறாமை, பயம் போன்ற தீமைகள் ஒவ்வொன்றும் என்னை ஆட்கொண்டு விட்டன.
இவை அனைத்தும் ஆழ்வாருடைய அக நெஞ்சை கறை படிய செய்து விட்டன. இந்த மன நிலையோடு பரமாத்மாவை உணர முடியாது என்பதை அவர் ஏற்கின்றார். இவ்விதமான தாழ்மையான நிலை தான் உண்மையான பக்தியின் அடிப்படை. தன்னைத் தாழ்த்தி, தன்னை ஒவ்வொரு மூல காரண பாவங்களாலும் சூழப்பட்டவனாகக் கூறி, எம்பெருமானது திருவருளையே ஒரே திடமாக நாடுகிறார். ஆழ்வாரின் பாசுரங்கள் இவ்வாறு ஒரே நேரத்தில் தம் இயலாமையை ஒப்புக்கொண்டு, எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணரின் அருளுக்காகக் கதறி வழிபடுகின்ற உணர்வினை காட்டுகின்றன.
ஸ்ரீல பிரபுபாதா: கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் மனதை நிலைநிறுத்தும்போது மனோ-வேகம் (மனதின் உந்துதல்கள்) கட்டுப்படுத்தப்படுகிறது.
வாயிலோர் இன்சொல் இல்லை
எனும் இந்த வரியின் மூலம் ஆழ்வார் தம் குற்றங்களைக் கூறுவதைத் தொடர்ந்து, தம் வாயின் குற்றத்தையும் எடுத்துக்காட்டுகிறார்.
“வாயிலோர் இன்சொல் இல்லை” — எனது வாயால் பிறருக்குக் கூறும் ஒரு இனிய சொல்லும் இல்லை. மனம் தூய்மையற்றது என்பதை முந்தைய வரியில் (மனத்திலோர் தூய்மையில்லை) கூறிய ஆழ்வார், இப்போது தம் செயலில் (வாய் வழியாக வெளியிடும் சொற்களில்) இன்னும் ஒரு குற்றத்தைக் கூறுகிறார்.
இங்கு “இன்சொல்” என்பது ஒருபக்கம் மென்மை, பரிவு, அன்பு ஆகியவற்றைக் குறிக்கும்; மறுபக்கம், மற்றவரின் நலத்தை விரும்பி, அவர்களை மகிழ்விக்க, மனதுக்கு நிம்மதி தரும் சொற்கள் எனவும் பொருள் தருகிறது.
இங்கு “இன்சொல்” என்பதால்:
● பிறருடைய நலன் பற்றி அக்கறையுடன் விசாரித்தல்,
● பிறர் கேட்ட போது மென்மையாக பதில் கூறுதல்,
● அன்போடு நடந்து பேசுதல் போன்றவற்றை நோக்கமாகக் கொள்கிறார்.
ஆனால் ஆழ்வார் என்ன சொல்கிறார்?
● “ஒரு இன்சொல்லும் இல்லை”, அதாவது,
● நான் எவரையும் அன்புடன் அழைத்ததேயில்லை.
● எவருடைய நலனையும் விசாரித்ததேயில்லை.
● என் மீது அன்போடு நலம் விசாரித்தவர்களுக்கு, நான் அன்புடன் பதிலளித்ததேயில்லை.
○ என் சொற்கள் எப்போதும் கடுமையாகவும், சினத்தோடும், மரியாதையற்றவையாகவே இருந்திருக்கின்றன.
○ “நான் விரும்பும் உறவினரிடமும் கூட, என் சொற்கள் கடுமையானவை, கசப்பானவை, காயப்படுத்துவனவாகவே இருந்தன.”
இவ்வாறு ஆழ்வார் தம் வாக்கினது குற்றத்தை நேரடியாக ஒப்புக்கொள்கிறார். இது தம்மைத் தாழ்த்திக் கூறும் பரம பக்தியின் வெளிப்பாடாக இருக்கிறது.
பகவத் கீதை 17.15: அநுத்வேககரம் வாங்க்யம்ஸத்யம் பிரியஹிதம் ச யத் ஸ்வாத்யாயாப் யஸனம் சைவ வாங்மயம் தவ உச்யதே
இதன் பொருள்: மற்றவர்களுக்கு கலக்கம் தராத வார்த்தைகள், உண்மையுடனும், இனிமையுடனும், நன்மை பயக்கும் வகையிலும் பேசப்படும் பேச்சு, மேலும் வேதங்களைப் படித்து சாந்தமாக பயிலும் பழக்கம் —இவை அனைத்தும் வாக்குத் தவம் என அழைக்கப்படுகின்றன.
மற்றவர்களின் மனதை கலக்கம் அடையச் செய்வது போல ஒருவர் பேசக் கூடாது. ஒரு ஆசான் பேசும்போது, தன் மாணவர்களுக்கு உண்மையைக் கூறுவதில் தவறு இல்லை; ஆனால், தன் மாணவர்கள் அல்லாதவர்களுக்கு பேசும்போது அவர்கள் மனதை கலக்கச் செய்வதாக இருந்தால், அவர் பேசக்கூடாது. இது பேச்சுக்கான தவமாக கருதப்படுகிறது.
இதற்குப் பிறகு, அர்த்தமற்ற பேச்சும் இருக்கக்கூடாது. ஆன்மிகச் சூழலில் பேசும்போது, புனித நூல்கள் ஆதரிக்கின்றவற்றைப் பற்றித்தான் பேச வேண்டும். ஒருவர் பேசும் போது, உடனே அது வேத நூல்கள் அல்லது ஆகமங்கள் போன்ற சாஸ்திர ஆதாரத்துடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில், அந்தப் பேச்சு செவிக்கு இனிமையாகவும் இருக்க வேண்டும்.
இத்தகைய உரையாடல்களால், உயர்ந்த பயனும் கிடைக்கும்; மனித சமுதாயமே உயர்வு பெறும். வேதநூல்கள் முடிவில்லாத ஒரு வளமாகும்; அதைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும். இதுவே பேச்சின் தவம் என்று அழைக்கப்படுகிறது.
இதன் மூலம் ஆழ்வார் தம் குற்றங்களை இரண்டு வரிகளில் சுருக்குகிறார்:
1. தூய்மை இல்லாத மனம்
2. இனிமை இல்லாத பேச்சு
இந்த இரண்டு வரிகளால், ஆழ்வார் தம்முடைய அகப்பிழைகள், செயற்பிழைகள், மரபு வழிப் பாவங்கள் ஆகிய அனைத்தையும் சுருக்கமாகத் தொகுத்து விடுகிறார்.இதுவே பெரிய குற்றங்களை உணர்ந்து, அதை எம்பெருமானிடம் ஒப்புக்கொண்டு, அருளைத்தேடும் ஏக்கத்துடன் ஏங்கி நிற்பதற்கான உண்மைத் திருக்குறிப்பு ஆகும்.
ஸ்ரீல பிரபுபாதா:- பேசும் செயல்முறையை முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரை மகிமைப்படுத்துவதினால் நாக்கு பகவானின் பெயர், வடிவம், குணங்கள் மற்றும் லீலைகளைப் போற்ற முடியும்.
சினத்தினால் செற்றம்நோக்கி
என்ற வரியைத் தொடர்ந்து, ஆழ்வார் தம் குற்றங்கள் வெறும் தூய்மையற்ற மனம், கடுமையான சொற்கள் என்பதிலேயே முடிவடைவதில்லை என்பதை விளக்குகிறார்.
தன்னைவிட சிறந்தவர்களாகவோ, நற்குணங்கள் உடையவர்களாகவோ உள்ளவர்கள் என்றே தெரிந்தும், அவர்களை நோக்கிச் சினம் கொண்டு, காரணமே இல்லாமல் தீங்கு செய்ய நினைத்தவர் தான் என்கிறார். அவர் அவர்களை வெறுப்போடும், கோபமோடும் பார்ப்பதாக (“சினத்தினால் செற்றம் நோக்கி”) கூறுகிறார்.
இச்சொற்களில் —
● “சினம்” என்பது உள்ளார்ந்த தீவிரமான கோபம்
● “செற்றம்” என்பது பகைமை, விரோத உணர்வும் அதிலிருந்து தோன்றும் பார்வையும் ஆகும்
அவர் பார்வையே, மற்றவர்கள் மனதைத் தளரச் செய்யும் அளவுக்கு தீய சக்தியுடனும் பகை உணர்வுடனும் நிரம்பியதாக இருந்தது என ஆழ்வார் வலியுறுத்துகிறார்.

ஸ்ரீல பிரபுபாதா: -ஒருவர் தனக்கு ஏற்படும் அனைத்து அவமானங்களையும் பொறுத்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும், ஆனால் கிருஷ்ணரையோ அல்லது அவரது தூய பக்தரையோ நிந்திக்கும்போது, ஒரு உண்மையான பக்தன் கோபமடைந்து, குற்றவாளிகளுக்கு எதிராக நெருப்பைப் போல நடந்து கொள்கிறான்.
தீ விளி விளிவன்
இங்கு ஆழ்வார் கூறுகிறார் —”என் பகைமை பார்வையிலே மட்டும் அல்ல; என் வாயிலிருந்து வரும் சொற்களும் தீயைப் போல எரிவதாயின.”
“தீ விளி விளிவன்” என்பது:
● தீ = எரியும் நெருப்பு
● விளி = கூச்சல், ஆத்திரம் மிகுந்த கத்தல் அல்லது கடுமையான வார்த்தை
● விளிவன் = சொல்லுகிறவன், வெளிப்படுத்துகிறவன்
“நான் தீயைப் போல எரியும் சொற்கள் பேசுகிறவன்” அல்லது”என் வார்த்தைகள் நெருப்பாக எரிந்து, எவரது உள்ளத்தையும் சிதைக்கும்”. இங்கு ஆழ்வார் தம் வார்த்தைகளின் தாக்கத்தை கூறுகிறார்.
அதாவது,”நான் பேசும் வார்த்தைகள் ஒருவரின் உள்ளத்தையே சுட்டெரிக்கும் அளவுக்கு கொடுமை மிகுந்தவை. என் பகைமை சொற்களிலும் வெளிப்படும்.” இவ்வாறு தம் குற்றங்களை மேலும் ஆழமாக, சினமுடன், உள்ளார்ந்த வருத்தத்தோடு ஒப்புக்கொள்கிறார்.
வாளா
என்ற வரிக்கு உரிய விளக்கம்: ஆழ்வார் இங்கு தமது செயல்களை பரிசு அல்லது பலன் எதிர்பார்க்காமல் செய்கிறார் என்று கூறுகிறார். அவர் கூறுவது: “நான் பிறருக்கு தீங்கு விளைவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், அது என்னை எந்தவொரு வெகுமதி அல்லது இலாபத்திற்கும் ஈர்க்காது.”
அதாவது, அவர்:
● தமது செயல்களில் எதுவும் சாதனை அல்லது பரிசு கிடைக்க எதிர்பார்க்கவில்லை.
● பிறருக்கு நஷ்டம் ஏற்படுத்துவதில் மட்டுமே மகிழ்ச்சி பெறுகிறார்.
● அவர் இது போன்ற செயல்களில் எந்தவொரு சரியான காரணம் அல்லது லாபத்தை தேடவில்லை.
● ஆழ்வார், தன் செயல்களில் எந்தப் பரிசையும் அல்லது பலனையும் எதிர்பார்க்காமல், பிறருக்கு கஷ்டம் கொடுப்பதிலேயே மகிழ்ச்சி அடையும் என்று தன்னைப் பற்றி சொல்லுகிறார்.
புனம் துழாய் மாலையானே
ஆழ்வார் தன் குற்றங்களை ஒப்புக்கொள்வதோடு, “எம்பெருமானை நான் விட்டுவிட முடியாது” என்கிறார். ஏனெனில்:
● எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணர், ஜீவாத்மாக்களுக்கு கொடுத்த வாக்குறுதியான “என் பக்தர்களை நான் பாதுகாப்பேன்” என்பதின் மீது ஆழ்வார் உறுதியாக உள்ளார் — “ஜீவாத்மா குற்றங்களோடு இருந்தும், அவன் பக்தனாக இருக்கின்றான் என்பதின் அடிப்படையில் எம்பெருமானுக்கு அவன் ஒருபகுதி ஆகின்றான்.
● எம்பெருமானின் “துழாய் மாலை” (புனம் துழாய் மாலை) என்பது அவர் பக்தர்களை பாதுகாக்கும் குணத்தை விளக்குகிறது. அவர் சூடும் இந்த மாலை, பக்தர்களுக்கு அவர் கொடுக்கும் அருளைக் குறிக்கிறது.
● ஆழ்வார் கூறுகிறார், எம்பெருமானின் பாதுகாப்பை இழக்க முடியாது, ஏனெனில் அவர் பக்தர்களை பாதுகாப்பதாக உறுதி அளித்துள்ளார்.
“புனம்” என்பது அந்த துழாயின் (துளசியின்) இயற்கை நிலம், அதேபோல எம்பெருமானின் துழாய் மாலை, ஜீவனுக்கு அவர் கொடுக்கும் பாதுகாப்பு மற்றும் அருளின் சின்னமாக நம்பிக்கை அளிக்கின்றது.
பொன்னி சூழ் திருவரங்கா
திருவரங்கம், திருக்காவேரி ஆற்றால் சூழப்பட்டுள்ள திருத்தலம். எம்பெருமான் ஜீவாத்மாக்கள் தன்னை தரிசிக்க மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய இடத்தில் தங்கியிருக்கிறார் என்பது தம் மீதுள்ள கருணையின் மேலும் ஒரு அடையாளம். இத்தலத்தில் எம்பெருமான் தன் கோயிலில் அழகாக, அனைத்து ஜீவாத்மாக்களும் தன்னை எளிதாக அடையக் கூடிய இடத்தில் தங்கியிருக்கிறார்.
“திருக்காவேரி ஆற்றால் சூழப்பட்ட திருவரங்கத்திலிருக்கும் எம்பெருமான், தன்னைப் போன்ற தாழ்ந்தவனுக்கும் எளிதில் அடையக்கூடியவனாக அருகில் இருப்பது மிகப் பெரும் பாக்கியம்” என ஆழ்வார் நன்றியுடன் கூறுகிறார்.
எனக்கு
இங்கு ஆழ்வார், தாம் சொன்ன அனைத்து குற்றங்களும், தாழ்வும் இருந்த போதும், நேரடியாக எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணரை நோக்கி உரையாடுகிறார்.
“எனக்கு” என்று கூறி, தம் குற்றங்களைக் கண்டப் பிறகும், தம்மைத் திருத்தி அருள வேண்டும் என்று எம்பெருமானை நேரடியாக அழைக்கிறார். அதாவது, தன்னை நிராகரிக்காமல், அன்புடனும் பரிவுடனும் ஏற்க வேண்டுகிற ஒரு அடியாரின் பாசமான அழைப்பு இந்த வார்த்தையில் உள்ளது.
இனி
இவ்வார்த்தையின் மூலம், ஆழ்வார் தம் பகவானின் அருளுக்கு தன் தகுதியின்மை முழுமையாக உணர்ந்து, தன்னை காத்துக்கொள்வதற்கான சக்தியும் வழியும் இல்லாத நிலையில், தம்மை முழுமையாக எம்பெருமானின் கரங்களில் ஒப்படைக்கிறார்.
“இனி எனக்கு எந்த தகுதியும் இல்லை; என்னை நான் காக்க இயலாது. ஆகையால், இனி என்னைக் காப்பது உமது பொறுப்பு” என ஆழ்வார் எம்பெருமானை நேரடியாகத் தேடி சரணாகதி செய்கிறார். இது, ஒரு அடியன் தன் எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த பின், இறுதியாக எம்பெருமானையே முழுமையாக நம்பும் நிரந்தர சரணாகதியை குறிக்கிறது.
இது, பரமபக்தி மற்றும் சரணாகதி என்ற உயர்ந்த நிலையை வெளிப்படுத்தும் அருமையான வார்த்தை ஆகும்.
கதி என் சொல்லாய்
“என் கதி என்ன என்பதை நீயே சொல்ல வேண்டும்”
இவ்வரியில். ஆழ்வார், தாம் அனுபவித்த தாழ்வையும், தம் செயல்களின் தீமையையும் ஒப்புக்கொண்டு, “நான் பல பேர் மனம் உடைக்கக் காரணமானவன்; என்னால் என்னை உயர்த்திக்கொள்ள முடியாது. ஆனால், நீ பரமாத்மாவாகிய இறைவன்! எனவே, என் கதி என்ன என்பதை நீயே சொல்ல வேண்டும், எனக்குக் காட்ட வேண்டும்.” என்கிறார்.
இங்கு அவர்:
● தன் தகுதியின்மையை ஏற்கிறார்,
● ஆனாலும் எம்பெருமானின் கருணையை நம்பி, தன்னை மீட்கும் வழியைத் எம்பெருமானே சொல்ல வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறார்.
● தாமே மீட்கப்பட இயலாது என்பதை உணர்ந்து, அதற்கான வழியைக் காட்டும் ஒரே ஆதாரம் எம்பெருமான் மட்டுமே என்பதை ஏற்றுக்கொள்கிறார்.
ஆழ்வார் இதுவரை கூறியுள்ள அனைத்துப் பாவங்களும் —மனத்தின் அசுத்தம், கடுமையான பேச்சு, கோபம், துன்பம் கொடுக்கும் சொற்கள், காரணமில்லாத பகைமை —இவை அனைத்தும் தம்மை இருண்ட நிலையிலேயே வைத்திருக்கின்றன.
இதையெல்லாம் உணர்ந்து, அவர் கூறுகிறார்: “இப்போது என் உய்வுக்கான வழி என்ன என்பது எனக்குத் தெரியாது என்று எனக்குத் தெரியும். என் கதி எது என்பதை நீயே கூற வேண்டும். நான் கூற இயலாத நிலையில் இருக்கிறேன்; நீயே என் குரு, என் ரட்சகர், என் ஈசன். என் வாழ்வில் என்ன செய்யவேண்டும், எப்படிப் பிழைப்பது, எப்படிப் பிழையை மாற்றுவது என்று நீயே சொல்ல வேண்டும்.”
இது ஒரு முழுமையான சரணாகதியின் வெளிப்பாடு.

ஜீவாத்மாவின் முழுமையான சரணாகதி
ஜீவாத்மாவின் முழுமையான சரணாகதி ஆழ்வார் இவ்வரியில் காட்டுவது:
● ஒரு பக்தன் தன் நிலையைக் கைவிட்டு,
● தன்னுடைய பாவங்களை ஒப்புக்கொண்டு,
● அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஆசையுடன்,
● தம்முடைய கதி என்பது எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிற முடிவுக்கு வருகிறார்.
“கதி என் சொல்லாய்” என்பது ஏதேனும் ஒரு வழியைக் காட்டச் சொல்லுதல் அல்ல. இது ஒரு அன்பும், தாழ்மையும் நிரம்பிய உளமார்ந்த வேண்டுகோள். என் வாழ்க்கையின் அர்த்தம், என் உயிரின் நோக்கம், என் பரமபொருள் — இவை அனைத்தையும் நீயே சொல்ல வேண்டும், எனக்கு அருள வேண்டும்”. இது போல ஒரு மனநிலையை பெரிய பக்தர்கள் பலரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
என்னை ஆளுடைய கோவே
இந்த வரியை ஆழ்வார் மிகப் பெரிய அழுத்தத்துடன் கூறுகிறார். இங்கு அவர் தம்மை காப்பாற்ற கடமைப் பட்டுள்ளவர் எம்பெருமான் தான் என்பதைக் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீமத் பாகவதம் 10.31 கோபியர்கள் கூறுகிறார்கள்: “உன் புல்லாங்குழல் எங்கள் இதயங்களைக் கொள்ளையடித்து விட்டது, கிருஷ்ணா. நீ இப்போது எங்களுக்குச் சொந்தமானவன்.”
இது பரமபக்தி, சரணாகதி, மற்றும் ஸம்பந்த பிரமானம் (உறவுச் சான்று) ஆகியவற்றின் முழுமையான உரைமொழி. ஆழ்வார், தாம் எவ்வளவோ குற்றங்களைச் செய்திருப்பதையும், தாம் காப்பாற்றத்தக்கவரல்ல என்ற உண்மையையும் ஏற்கின்றார். ஆனால் அதனுடன் கூடிய ஒரு மிக முக்கியமான உரிமையையும் எம்பெருமானிடம் வலியுறுத்துகிறார்:
● நீயே என்னை ஆளும் உரிமையுடையவன்,
● நானும் உன் அடிமை,
● இந்த உறவு நித்தியமானது — பிறவிப் பிறவியாக நீயும் நானும் இப்படித்தான். எனவே, என்னைப் பாதுகாப்பது உன் கடமை.
இந்த முறையில், ஆழ்வார் தம் மீதுள்ள எம்பெருமானின் உரிமையை முன்வைத்து, தம் மீட்பு என்பது தம்மால் அடைய பட வேண்டியதல்ல; எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரால் அளிக்கப்பட வேண்டியது என்ற முடிவுக்கு வருகிறார்.
ஹரே கிருஷ்ணா
பாசுரம் 34: உள்ளத்தே உறையும்
எனது நினைவை நீ அறிவாய்!

எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர்
அனைத்து ஜீவாத்மாக்களின்
மனத்தின் உள்ளே உறைதல்
உள்ளத்தேயுறையும் மாலை உள்ளுவானுணர்வொன்றில்லா *
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு *
உள்ளுவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்தறிதியென்று *
வெள்கிப்போயென்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே.
பொருள்:
உள்ளத்தே — மனதில்; உறையும் — எப்பொழுதும் கூடவே இருக்கும்; மாலை — எம்பெருமானாகிய உன்னை; உள்ளுவான்— சிந்திப்பதற்கு உறுப்பான; உணர்வு ஒன்று இல்லா — அறிவு சிறிதும் இல்லாத; கள்ளத்தேன் நானும் — கள்ளனாகிய நானும்; தொண்டாய் — உனக்கு கைங்கர்யம் செய்பவன் போல்; தொண்டுக்கே — அந்தக் கைங்கர்யத்துக்கு உரிய; கோலம் பூண்டு — வேஷங்களை அணிந்து இருந்தாலும்; உள்ளுவார் — சிந்திப்பவர்கள்; உள்ளிற்று எல்லாம் — சிந்திப்பது எல்லாவற்றையும்; உடன் இருந்து — நீ கூடவேயிருந்து; அறிதி என்று — அறிகின்றாயென்று; நான் என்னுள்ளே — நான் எனக்குள்ளே; வெள்கிப்போய் — மிகவும் வெட்கப்பட்டடு; விலவு அற — விலாப்பக்கத்து எலும்பு முறியும்படி; சிரித்திட்டேனே! — சிரித்தேன்.
தொகுப்புரை:
எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், என் மனதில் இருக்கின்றார். ஆனால் அவர் இருக்கின்றாரென்று என்னால் உணர முடியவில்லை. நான் பக்தனாக நடித்து, சேவை செய்வதுபோல் காட்டிக்கொண்டு, உண்மையில் ஒரு திருடனைப் போல இருக்கின்றேன். எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரே, நீங்கள் அனைத்து ஜீவாத்மாக்க்களின் உள்ளேயும், உங்களை நினைப்பவர்களின் மனங்களிலும் இருப்பீர்கள் என்றும், அவர்கள் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதையும் அறிந்திருக்கின்றீர்கள் என்றும் நான் உணர்ந்த போது, எனக்கு, என்செயலை நினைத்து, மிகுந்த வெட்கம் ஏற்பட்டது. அப்போது என் விலா எலும்புகள் தாங்க முடியாமல் முறிந்து விடுமோ என எண்ணும் அளவிற்கு நான் என்னை நினைத்துச் சிரித்து விட்டேன் என்கிறார் ஆழ்வார்.
விளக்கவுரை:
உள்ளத்தே –
இங்கு, எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், நம் உள்ளத்தில் — எல்லா எண்ணங்களும் தோன்றும் மையத்தில் — உறைகிறார் என்பதை முதலில் ஆழ்வார் சிந்திக்கிறார். எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் வெளியில் இருந்தால், அவர் கண்களுக்கு புலப்படும் செயல்களையே அறிந்திருப்பார். ஆனால், நம் உள்ளத்தில் இருக்கின்ற காரணத்தால் நம் சிந்தனைகளும், எண்ணங்களும், மனத்திலே நடக்கும் அனைத்தும் அவருக்குத் தெளிவாகத் தெரியும். அதனால், அவரிடம் ஏதும் மறைக்க இயலாது; ஏமாற்றவே முடியாது.
பகவத் கீதை 18.61: “ஈஸ்வர சர்வ பூதானம் ஹ்ருத்-தேஷே ’ர்ஜுன திஷ்டதி” – பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அனைவரின் இதயத்திலும் இருக்கிறார்.
எவர் எப்படி இருக்கிறார்களோ, அவருடைய உள்ளத்திற்க்கு அது தெளிவாகத்தெரியும். ஆழ்வார் இதை உணர்ந்தவுடன், தம்முடைய போலி பக்தியை நினைத்து வெட்கப்படுகிறார் – அதுவே “உள்ளத்தே” என்ற சொல்லின் உட்கருத்து ஆகும்.
உறையும் –
எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் நம் மனத்தில் ஒரு கணம் கூட விலகாமல், நிரந்தரமாக நம் உள்ளத்தில் இருப்பதால், நாம் எப்போதும் அவரது பார்வையின் கீழ் இருக்கிறோம். ஒரு நொடி கூட அவர் விலகியிருந்தால், நாம் நம் இஷ்டப்படி சில செயல்களைச் செய்யும் சுதந்திரம் இருக்கலாம்.
ஆனால், அவர் தொடர்ந்து உறைகிறபடியால், நாம் ஏமாற்றம், சூழ்ச்சி, போலி பக்தி போன்றவை செய்யவே முடியாது என்று இங்கு ஆழ்வார் வலியுறுத்துகிறார்.

பகவான் ஶ்ரீகிருஷ்ணர்
பரமாத்மாவாக
இதன் மூலம், ஆழ்வார் பகவானது உள்ளுறையும் தன்மை, அதன் மூலம் வரும் தன்னைத் திருத்தும் நிலை இவற்றைச் சுட்டிக்காட்டுகிறார். அதுவே “உறையும்” என்ற சொல்லின் உள்ளர்த்தம் ஆகும்.
மாலை –
இங்கு ஆழ்வார் “மால்” (எல்லாவற்றையும் விட உயர்ந்தவர்) என எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரைக் குறிக்கிறார். இது, அவரை விட உயர்ந்தவன் எவரும் இல்லை என்பதைக் கூறுகிறது.
ஸ்ரீ பிரம்மா-சம்ஹிதா 5.1
ஈஸ்வர பரம கிருஷ்ணா சத் சித் ஆனந்த-விக்ரஹ
அனாதிர் ஆதிர் கோவிந்தா சர்வ காரண காரணம்
“கோவிந்தன் என்று அழைக்கப்படும் கிருஷ்ணரே முழுமுதற் கடவுள். அவருக்கு நித்தியமான பேரின்ப ஆன்மீக உடல் உள்ளது. அவரே அனைத்திற்கும் பிறப்பிடம். அவருக்கு வேறு எந்தப் பிறப்பிடமும் இல்லை, அவரே அனைத்து காரணங்களுக்கும் முதன்மையான காரணம்”.
ஜீவாத்மா, உடலுக்குள் இருந்தாலும், தன்னைப் பற்றி முழுமையாகத் அறியாது. தன்னைச் சுற்றிய நிகழ்வுகளையும் ஜீவாத்மாவினால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. ஆனால், எம்பெருமான் மட்டும் தான், எல்லா உள்ளங்களையும் அறிந்து, அவைகளை நிர்வகிக்கவும், இயக்கவும் வல்லவர். அதனால்,அவரை ஏமாற்றுவது, மறைப்பது, அல்லது வஞ்சிக்க முயற்சிப்பது எல்லாம் அர்த்தமற்றது.
ஆழ்வார் இதை உணர்ந்து, “மால்” என்ற சொல்லை உபயோகித்து, அவர் பரிபூரண ஞானமும், சகலத்திலும் அதிகாரமும் உடைய ஒரே பரம்பொருள் என வலியுறுத்துகிறார்.
உள்ளுவான் உணர்வு இல்லா –
ஆழ்வார் இங்கு தனது அறியாமையை உணர்ந்து புலம்புகிறார். “எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், என் உள்ளத்தில் அந்தர்யாமியாக (பரமாத்மாவாக) உறைகிறார் என்பதை உணரக்கூடிய அடிப்படையான ஞானம் கூட எனக்கில்லை “ என்று வருந்துகிறார்.

அந்தர்யாமியான எம்பெருமான்
ஶ்ரீகிருஷ்ணர்
ஆழ்வார், எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரை மட்டும் அறியாததில்லை – தானும், தன்னை அறியாத நிலை. அதாவது, ஜீவாத்மா என்ற தன்னுடைய உண்மையான இயல்பையும், உடலுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள வித்தியாசத்தையும் புரிந்துகொள்ளாத மிகுந்த அறியாமை நிலையை இங்கு குறிக்கிறார்.
மேலும், ஆத்மா எதற்காக இருக்கின்றது? – எம்பெருமானுக்கு சேவை செய்யவே இருக்கின்றது என்பதை உணர்வதும் இல்லை. அதனால் தான், “உள்ளுவான் உணர்வு இல்லா” எனச் சொல்வதன் மூலம், தாம் தம்மை நம்பி சுற்றும் ஒருவனாக, ஆன்மிக அறியாமையால் முழுமையாக மூடப்பட்டவர் என்பதை ஆழ்வார் வெளிப்படுத்துகிறார்.
பகவத் கீதை 18.61:
ப்ரக்ருதே க்ரியாமானி குணை கர்மாணி சர்வச
அஹங்கார விமூடாத்மா கர்தாஹம் இதி மந்யதே
“பொய்யான அகங்காரத்தின் தாக்கத்தால் குழப்பமடைந்த ஆன்மீக ஆன்மா, ஜட இயற்கையின் மூன்று குணங்களால் உண்மையில் செய்யப்படும் செயல்களைச் செய்பவராகத் தன்னைக் கருதுகிறது”.
கள்ளத்தேன் –
ஆழ்வார் இங்கு தன்னைப் பற்றி கவலையுடன், “நான் போலியாக நடிப்பவன். மூடர்கள் நடுவில் இருந்தால், நான் பாவமற்றவன் மற்றும் குற்றமில்லாதவன் போல் நடிக்கிறேன்; பண்டிதர்களோடு இருந்தால், என்னை தாழ்மையான பக்தராக காட்டிக்கொள்கிறேன்” என்று ஒப்புக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
அதாவது, எந்த சூழலிலும் உண்மையல்லாத முகங்களை போட்டுக் கொண்டு, மனதில் வேறொரு நயவஞ்சனையோடு, தன்னை மெய்யான பக்தனாக காட்ட முயல்வதாகக் கூறுகிறார்.
இவை எல்லாம் நடக்கும்போதும், உள்ளுக்குள் எல்லாவற்றையும் அறிந்த சாட்சியாக எம்பெருமான் இருந்தும், அவரை விட்டு விலகி, தன்னுடைய மாயையையும், கபடத்தையும் தொடர்ந்ததாக கூறுகிறார். இதையே ஆழ்வார், ஒரே சொல்லில் — “கள்ளத்தேன்” — என மிகுந்த மன வலியுடன் சுட்டிக்காட்டுகிறார்.
நானும் தொண்டாய் –
ஆழ்வார் இங்கு, தமக்கு எந்த சிறப்பும், சாத்வீகமான குணங்களும் இல்லையென்பதை உணர்ந்த பிறகும், தன்னைப் பற்றி எண்ணி மேலும் வருந்துகிறார்: “நான் எம்பெருமானுக்குத் தொண்டு செய்யத் தகுதியானவனாக இருந்தும், அந்த தொண்டுகளைச் செய்ததில்லை” என்கிறார்.
ஒரு சுயஞானம் உடைய ஜீவாத்மா, அதாவது தன்னை கடை நிலை ஆத்மா என்றும், எம்பெருமான்ஶ்ரீகிருஷ்ணர் தான் பரம்பொருள் என்றும் அறிந்தவன், தன்னுடைய இயல்பான கடமையாகத் தொண்டு செய்ய வேண்டியவனாக இருக்கிறான். ஆனால், அந்த இயல்பான சேவையையே செய்யாமல் இருந்ததற்காக, ஆழ்வார் தன்னைத் தாழ்வாக எண்ணுகிறார்.
இதைப்போல், ஸ்ரீராமாயணத்தில் ,“யஷ்ச ராமம் ந பஷ்யேது யம் ச ராமோ ந பஷ்யதி நிந்திதாஹ ஸர்வ லோகேஷு ஸ்வாத்மா அபி ஏனம் விகர்ஹதே”
அதாவது,“ராமரைப் பார்க்காதவனையும், ராமரால் பார்க்கப்படாதவனையும் எல்லா மக்களும் பழி சுமத்தினர். அப்படிப்பட்டவன் அதற்காகத் தன்னைத்தானே பழி சுமத்திக் கொள்வான்” எனக் கூறப்படுகிறது
இந்த நெஞ்சரிக்கும் உணர்வை, ஆழ்வார் தம்முடைய தொண்டு செய்யாத குற்ற உணர்வுடன், “நானும் தொண்டாய்” என்ற வார்த்தையில் தன்னையே வெறுக்கிற அளவுக்கு வெளிப்படுத்துகிறார்.
தொண்டுக்கே கோலம் பூண்டு –
ஆழ்வார் இங்கு மிக ஆழமான உள்ள உணர்ச்சியுடன் தம்மைத் தாமே குற்றம் சொல்லிக்கொள்கிறார்.
“நான் எம்பெருமானிடம் உண்மையாக பக்தியுள்ளவன் அல்ல, ஆனால் வெளிப்புறமாக அதைப் போல வேடமிட்டேன்” என்கிறார்.

வெளிப்புற தோற்றத்தில் பக்தர் போல
தோன்றினாலும், உள்ளே புலன் இன்ப ஆசைகளில்
லயித்து இருக்கும் ஜீவாத்மா.
ஆழ்வார், தான் உண்மையான தொண்டனாக இல்லையென்றும், பக்தி உணர்வின்றி திருநாம (திலக்) சின்னங்களை மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அணிந்து, தொண்டனாகவே காட்சியளித்தாகவும், தான் எம்பெருமானின் திருநாமங்களைச் சொன்னதாகவும், அவரது இனிமையைப் பாடியதாகவும், ஆனால் அவை மனத்தில் உண்மை உணர்ச்சியின்றி, வாயால் மட்டும் சொன்ன வார்த்தைகளே என்றும். மேலும், தான் திருநாமங்களைச் சொன்னதினால் பயப்பட வேண்டிய மரணத்தை கூட வென்று விட்டதாகவும், பிறரிடம் தானொரு மஹான் என்ற தவறான எண்ணத்தை உருவாக்க, நடித்துக் கொண்டு இருந்ததாகவும் சொல்லுகிறார்.
இதையெல்லாம் ஆழ்வார் ஒரே சொற்றொடரில் “தொண்டுக்கே கோலம் பூண்டு” என்று சொல்கிறார். அதாவது, “தொண்டனாக நடித்து, தொண்டனுக்கே உரிய அழகையும் தன்மையும் காட்டினேன். ஆனால் அதற்குரிய உண்மை உள்ளக பக்தி என்னிடமில்லை. அப்போதும் கூட நாடகம் போல் நடித்தேன்” என்கிறார்.
இது ஆழ்வாரின் “தன்னை அறிதலின்” உச்ச நிலையை காட்டும் வசனம்.
உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று ஆழ்வார் இங்கு மிகுந்த உணர்வுடன் சொல்கிறார்: “நான் மாயையுடன் உழன்று வந்த எல்லா இடங்களிலும், நீ என்னுடன் இருந்தே, என் ஒவ்வொரு எண்ணத்தையும், ஏமாற்று செயல்களையும் தெளிவாக அறிந்து கொண்டாய் எம்பெருமானே” என்கிறார்.
எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், தன் உள்ளத்தில் அந்தர்யாமியாக உறைகின்றதால், தான் ஒரு சிந்தனையையும் மறைக்க முடியாது. அதனால், அவரை ஏமாற்ற முயன்றது முட்டாள்தனமான காரியம். எம்பெருமானின் அறிவை அறிய முடியாதவனாக, தாம் நடந்து கொண்டதை நினைத்து ஆழ்வார் வருந்துகிறார்.
பகவத் கீதை 3.6: கபடம் பற்றி கிருஷ்ணர்
“கர்ம-இந்திரியாணி ஸம்யம்ய யா ஆஸ்தே மனாஸா ஸ்மரன் இந்திரியார்தான் விமூடாத்மா மித்யாச்சாரஹ் ச உச்யதே”
“புலன்களை வெளிப்புறமாகக் கட்டுப்படுத்தி, மனதளவில் புலன்களின் மீது நிலைத்திருப்பவர் போலி (மித்யாச்சாரி) என்று அழைக்கப்படுகிறார்.”
வெள்கிப் போய் –
தாம் செய்த வஞ்சனைகள், கபடச் செயல்கள் அனைத்தையும் எம்பெருமான் அறிந்திருந்தார் என்பதை உணரும்போது, ஆழ்வார் மிகுந்த வெட்கத்தில் முழ்குகிறார். அவர் தன் தலையை உயர்த்த முடியாமல், அவமானத்தால் தலைதாழ்த்தி, எம்பெருமானின் முன்னிலையிலிருந்து ஓட முயல்கிறார்.
எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், தம்மை மன்னிக்கமாட்டார் என்ற பயமும் கலந்து, தானே தன் நிலையைக் கண்டு வெட்கப்படுகிறார் ஆழ்வார்.

முழு முதற்கடவுளின் முன்
தன் தவறை உணர்ந்த ஜீவாத்மா
சரணடைதல்.
“நான் எந்த இடத்திற்குச் சென்றாலும், அவர் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாது” என்பதும் தாமே புரிந்து கொள்கிறார் ஆழ்வார்.
வெள்கிப் போய் என்பது, பொய்யான நடிப்பு விலகி, உண்மையை உணர்ந்த பின் வரும் உள் வெட்கமும், பரிதாபமும் பக்தனின் உள்ளத்தில் எப்படி எழுகின்றது என்பதை ஆழ்வார் காட்டும் வாக்கியம் ஆகும்.
என்னுயிரே நான் –
ஆழ்வார் இங்கு சொல்கிறார்: “இந்த உலகம் என் முட்டாள்தனத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாது; என் செயல்களின் அறிவிலித்தனத்தை அவர்கள் உணரமாட்டார்கள். எனவே, அவர்கள் என் கூட சிரிக்க முடியாது. எம்பெருமானும் என் கூட சிரிப்பதில்லை, ஏனென்றால் நான் அவனிடமிருந்து ஓட முயற்சிக்கிறேன்”.
இந்நிலையில், தன்னைத் தானே சிந்தித்துப் பார்த்தபோது, தாம் செய்த வஞ்சனையும், மாயைக்கு உட்பட்டு செய்த செயல்களும், அந்தர்யாமியான எம்பெருமானிடம் இருந்து ஓட முயற்சித்ததும் ஏமாற்று செயல் என உணர்கிறார்.
விலவறச் சிரித்திட்டேனே –
தாம் செய்த முட்டாள்தனத்தை உணர்ந்த பின், அதைக் குறித்து ஆழ்வார் மிக மோசமாக, ஒட்டுமொத்தமாக, தன் விலா வலிக்கச் சிரிக்கிறார். அது, ஒருவன் பூமாலையும், அலங்காரங்களையும் அணிந்து, தீயில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்வது போல ஆகும்.
ஆழ்வார் தாம் பக்தி வேடம் போட்டு, தன் செயல்கள் எல்லாம் தெரிந்திருக்கும் எம்பெருமானிடம் வஞ்சனை செய்ததை அறிந்துக் கொண்டு, அது மிகவும் முட்டாள்தனமான காரியமென உணர்கிறார்.
ஆழ்வாரின் இந்த சிரிப்பு என்பது சாதாரண சிரிப்பல்ல. தம்முடைய உண்மை நிலையை உணர்ந்து வரும் வெட்கச் சிரிப்பு அது. அர்ஜுனனுக்குத் தோன்றிய சிரிப்பைப் போல. பகவான் கிருஷ்ணர் சரம ச்லோகம் (பகவத் கீதை 18.66: சர்வ தர்மான் பரித்யஜ்ய) சொல்வதற்கு முன், பேசிய மற்ற வழிகள் எவ்வளவு கடினம், நம்மால் முடியாதவை என்பதை உணர்ந்து “விலவறச் சிரித்திட்டேனே” என, ஆழ்வார் தம்முடைய அவலம், அறிவழிவு, மிகையான மனப் பாரம் ஆகியவற்றால் வெட்கப்பட்டு சிரிக்கிறார்.
ஹரே கிருஷ்ணா
பாசுரம் 38: மேம்பொருள் போகவிட்டு
நானும் வேஷம் போடவேண்டுமா?

மேம்பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து *
ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலன அக த்தடக்கி *
காம்புறத்தலைசிரைத்து உன்கடைத்தலையிருந்து * வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனலரங்கத்தானே!
பொருள்
மேம் பொருள் — உலகவிஷயங்களை; போக விட்டு — முற்றும் போகவிட்டு; மெய்ம்மையை — ஆத்மஸ்வரூபத்தை; மிக உண்ர்ந்து — உள்ளபடி அறிந்து; ஆம் பரிசு — பகவத் கைங்கர்யத்தை; அறிந்துகொண்டு — தெரிந்து கொண்டு; ஐம்புலன் — ஐந்து இந்திரியங்களையும்; அகத்து — தன் உணர்வு இன்றி; அடக்கி — தம்முள்ளே அடக்கி; காம்பு — அதனால் ஏற்பட்ட பற்று; அற — அகலும்படி; தலை சிரைத்து — தலைச் சுமையை நீக்கி; உன் கடைத்தலை— உன் வாசலில்; இருந்து — காவல் புரிந்து; வாழும் சோம்பரை — வாழும் பக்தர்களை; உகத்தி போலும் — உகக்குமவன் அல்லையோ நீ சூழ் புனல் — காவிரி சூழ்ந்த; அரங்கத்தானே — திருவரங்கத்துப் பெருமானே!
தொகுப்புரை:
நீர் சூழ்ந்த திருவரங்கத்தின் ஆண்டவரே, பக்தர்கள் தங்கள் செல்வத்தை விட்டுவிட்டு, தங்களின் தெய்வீக உண்மையை உணர்ந்து, ஆன்மாவின் இயல்பு உமக்கு சேவை செய்வதென்பதை அறிந்து, ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, அதனால் ஏற்பட்ட பற்று அகலும்படி தங்களின் தலைகணத்தை விட்டொழித்து, தாங்களே தங்களை பாதுகாக்க வேண்டியது எனும் பொறுப்பையும் விட்டுவிட்டு, உமது வாசலில் தங்கி வாழும் பக்தர்களை விரும்புபவர் தானே நீங்கள்.
விளக்கவுரை:
மேம்பொருள் என்ற சொல்லுக்கு மூன்று விதமான அர்த்தங்கள் உள்ளன. அவை:
1. மேலோட்டமாக உள்ள பொருள்; மேலே தோன்றும், வெளிப்படையான பொருள் —உடல் என்பது வெளிப்படையானது; உள்ளார்ந்த ஆத்மாவைக் காட்டாது, மேலோட்டமாக தோன்றும் வஸ்துவாக மட்டுமே இருக்கிறது.
2. எல்லா இடங்களிலும் பரவி இருப்பது போல் தோன்றும் பொருள் — உடல் ஒரு இடத்தில் இருப்பது போன்று தெரிந்தாலும், அதனுடன் தொடர்புடைய ஆசைகள், தொடர்புகள், செல்வம் முதலியவை பல இடங்களில் பரவி கிடக்கின்றன.
3. பெருமையை ஏற்படுத்தும் பொருள்—உடல் மற்றும் அதனைச் சார்ந்த தோற்றம், உடை, செல்வம் ஆகியவை ஒருவருக்குப் புகழ் அல்லது பெருமை தருவதாக எண்ணப்படுகின்றன.
இந்த மூன்றிலும், உடலை பிரதானமாகக் கொண்டு அனைத்து பொருட்களையும் குறிக்கும் வகையில் மேம்பொருள் என்ற சொல் பயன்படுகிறது.
1. மேலோட்டமாக உள்ள பொருளாக –எம்பெருமானைப் பற்றிய ஞானம் பிறக்கும் நேரத்தில், இந்த உடல் ஒரு, மதிப்பற்ற பொருளாகத் தோன்றுகிறது.
ஒரு ஜீவாத்மா உடலை அனுபவிக்கத் தொடங்கும் போது, அது வெளிப்படையாக இனிமையாகத் தோன்றலாம்; ஆனால் ஆழ்ந்த சிந்தனையில் உணரும்போது, அதில் எந்த உண்மையான இனிமையும் இல்லையென்பது தெளிவாகிறது.
அதனால், உடல் என்பது மேலோட்டமான இனிமை தரும் — உண்மையில் பொருளற்ற — பொருள் (மேம்பொருள்) எனக் கருதப்படுகிறது.
2. எல்லா இடங்களிலும் பரவி இருப்பது போல் தோன்றும் பொருள் —

முக்குணங்களினால் ( ஶ்ரீகிருஷ்ணரின் மாயை)
ஜீவாத்மா ஆட்டுவிக்கப்படுதல்
பகவத் கீதையில் (7.14) சொல்லப்பட்டுள்ளது: “தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே”
எனது இந்த தெய்வீகமான மாயை — சத்வ, ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களால் ஆனது — கடக்க மிகவும் கடினமானது. ஆனால் என்னிடம் சரணாகதி புரியும் ஆத்மா, இந்த மாயையை எளிதாகத் தாண்டிவிடுகிறார்கள்.
உடல் ஆன்மாவுடன் மிக நெருங்கிய முறையில் கலந்து போய் விடுவதால், அந்த உடல் ஆன்மாவிற்கு ஒரு தேவர் (தேவன்) அல்லது மனுஷ்யன் (மனிதன்) எனும் அடையாளத்தை உடல் உருவாக்குகிறது.இந்த மாயையான உடல், அனைத்து இடங்களிலும் பரவி இருப்பது போல — அதாவது உண்மையானது போல — தோன்றுவதால், இது பரவலாக உள்ள பொருள் (மேம்பொருள்) என அழைக்கப்படுகிறது.
3. பெருமையை ஏற்படுத்தும் பொருளாக –இந்த உடல், ஒருவர் மற்றவர்களைவிட மேலானவர் என்று நினைக்க வைக்கும் வகையில் மாயை உருவாக்குகிறது. தான் அனைத்தையும் அறிந்திருப்பது போன்ற தவறான அகந்தையையும் தருகிறது. அதனால், உடல் என்பது பொய்யான பெருமையை உருவாக்கும் பொருள் (மேம்பொருள்) எனக் கருதப்படுகிறது.
எனவே, மேம்பொருள் என்பது உடலை மட்டுமின்றி, அதனுடன் தொடர்புடைய எல்லா ஜடப்பொருட்களையும் குறிக்கிறது.
போகவிட்டு
– இது முற்றிலும் விடுவதைக் குறிக்கிறது; சின்னச் சின்ன மிச்சம் மீதமில்லாமல் விடுதல்.ஒருவர் பெளதீக உடலோடு இருக்கும் வரை, அதனை முழுமையாகத் துறக்க முடியாது.
உடலும், உடலைச் சுற்றிய ஜடப்பொருட்களும், மானிடனுடைய உன்னதமான ப்ரயோஜனம் (புருஷார்த்தம்) அல்ல என உணரும் போது மட்டுமே, அதனை முழுமையாக விட்டு விட்டான் என்று கூறலாம்.
உடலுக்கும் ஆன்மாவுக்கும் இடையே உருவாகியுள்ள இந்த தொடர்பு, எம்பெருமான் ஆக்கியது. அதனை ஜீவாத்மா தனக்குத் தானே துண்டிக்க முடியாது.
ஸ்ரீ விஷ்ணு புராணம் 7.11-இல் கூறப்படுகிறது: உடல் தான் ஆத்மா எனும் எண்ணமும், உடலைச் சார்ந்த பொருட்கள் எனது சொத்து என்பது போன்ற எண்ணமும் —இவை இரண்டும் தான் ஸம்ஸார மரம் வளருவதற்கான இரு விதமான விதைகள்.
இதன் மூலமாக, உடலைத் தானாகவும், ஜடப்பொருட்களைத் தன்னுடையதாகவும் எண்ணும் மனநிலைதான் ஸம்ஸாரத்தின் காரணமாக இருக்கிறது என்பதை நாம் உணரலாம்.
உடலோடு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஜடப் பொருட்களோடு இருக்கும் பொய்யான அடையாளத்தைத் துறக்க, “உடல் என்பது ஆத்மா அல்ல” என்பதும், “ஆத்மா என்பது எம்பெருமானையே சார்ந்தது” என்பதுமாகிய ஞானத்தை ஜீவாத்மாக்கள் வளர்க்க வேண்டும். இந்த உணர்வே போகவிட்டு என அழைக்கப்படுகிறது.
இத்தகைய உணர்வை ஜனகன் போன்ற உயர் அறிவுடைய மகான்களே அடைந்தனர்.
இங்கே ஒரு ஒப்புமை கூறப்படுகிறது: ஒரு நல்ல மரமும் ஒரு கெட்ட மரமும் நெருக்கமாக பின்னிப்பிணைந்திருக்கும்போது, அவற்றை பிரிப்பது மிகவும் கடினமாகும். அதில் கெட்ட மரத்தை அகற்ற வேண்டும் என்றால், அதன் தோலை சீவி, பெருங்காயம் பூசி, அது உலரும்படிசெய்வார்கள்.
அதேபோல், உடலோடு உள்ள பற்றை அகற்ற வேண்டும் என்றால், அஹங்காரம் (உடலை ஆத்மா எனும் பொய்யான அடையாளம்) மற்றும் ஸ்வாதந்த்ரியம் (தான் சுதந்திரமானவன் எனும் எண்ணம்) ஆகிய எண்ணங்களை அகற்ற வேண்டியது அவசியம்.
மெய்ம்மையை மிக உணர்ந்து
–இங்கே “மெய்” என்பது ஆத்மாவைக் குறிக்கிறது. “மெய்” என்பது ஆத்மாவைக் குறிக்குமா? ஆம், குறிக்கிறது. ஏனெனில், தைத்திரிய உபநிஷத்தில் (ஆனந்தவல்லி – 6) கூறப்படுகிறது: “சத்யம் ச அநிர்தம் ச சத்யமபவத்”—-மிக உயர்ந்த பரம்பொருள் என்பது சத்யமும், அநிர்தமுமானதுமாகவே இருந்து, முடிவில் சத்யமாகவே நிறைந்தது.
இங்கு, அசித் (உணர்வில்லாதது – ஜடம்) என்பது பொய்யாக (அனர்த்தம் ) கருதப்படுகிறது;சித் (உணர்வுள்ளது – ஆத்மா) என்பது மெய்யாக (சத்யம்) கருதப்படுகிறது. ஏனெனில் சித் என்பது தனது சுய இயல்பில் எந்த மாற்றத்தையும் அடையாதது.
அதனால், இங்கு ஆழ்வார், மாற்றமின்றி நிலைக்கும் ஆத்மாவின் உண்மையான இயல்பையே “மெய்” என்று குறிப்பிடுகிறார்.
மிக உணர்ந்து
–இது ஆத்மாவின் உண்மையான இயல்பை ஆழமாக உணர்வதை குறிக்கிறது. உடலே ஆத்மா என்று நம்பும் லெளகீகவாதிகள்/ நாஸ்திகர்கள் போலவோ, ஆத்மா சுதந்திரமானது என்று நம்பும் பூர்வ மீமாம்ஸகர்கள் போலவோ அல்லாமல், ஆத்மா என்பது: – சுய பிரகாசமுடையது,
– நித்யமானது (எப்போதும் நிலைத்தது),
– எப்போதும் ஞானத்துடன் கூடியது,
– பரமாத்மாவைப் போல அல்லாத, சிறிய அணு அளவு உடையது,
– எப்போதும் முழுமுதற் கடவுள் ஶ்ரீகிருஷ்ணரை சார்ந்தது.
இந்த வகையில், ஆத்மாவை உணர்வதையே “மிக உணர்ந்து” என்று கூறப்படுகிறது.
ஆம்பரிசறிந்து கொண்டு
–உடலும், அதனுடன் தொடர்புடைய பொருட்களும் பயனற்றவை என்பதை உணர்ந்த பிறகு, ஆத்மாவின் உண்மையான இயல்பை உணர்ந்தவுடன் வரும் முடிவே பகவத் கைங்கரியம் (எம்பெருமானுக்குச் சேவை) ஆகும்.
இங்கு ஆம்பரிசு என்பது பயன் அல்லது பலனைக் குறிக்கிறது. ஆத்மாவுக்கான உண்மையான பலன் என்பது — எம்பெருமானுக்குச் சேவை செய்வதே. ஏனெனில், இவ்வாறான சேவையே அதன் உண்மையான உணவாகவும், வளர்ச்சிக்கான ஊட்டமாகவும் இருக்கிறது.
மாற்றுப் பிறவிகளில் (மனிதர்கள், விலங்குகள், அல்லது தேவர்கள் போன்றவை) ஒவ்வொன்றிலும் வளர்ச்சிக்கு காரணமானவை மாறுபடுகின்றன.
ஆத்மாவுக்குப் பொருந்தும் வளர்ச்சி என்னவெனில் அது எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணரின் சேவகன் என்பதை உணர்ந்து, எம்பெருமானுக்குச் சேவையாற்றும் புத்தியைப் பெற்று, அவனுடைய சேவையிலே ஈடுபடுவதும் தான் ஆகும்.
அறிந்து கொண்டு –ஆழ்வார், ஆத்மாவின் உண்மையான இயல்பை உணர்வதை, செல்வத்தை கைவிடுவதுடன் ஒப்பிடுகிறார்.
ஒவ்வொரு உயிரினத்திற்கும், செல்வம் என்பது உடல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பௌதிகப் பொருட்களை துறக்க வேண்டும் என்ற உணர்வு, மற்றும் ஆத்மா எம்பெருமானைச் சார்ந்தது என்பதும், அவருக்கு சேவை செய்வதே அதன் உன்னதமான நோக்கமாகும் என்பதை உணர்வதுதான். இந்த ஞானம் ஏற்படும் போது, வேறு எந்த உபாயமும் தேவையில்லை.
மேம்பொருள், மெய்ம்மையை, ஆம்பரிசு போன்ற சொற்கள் நேரடியாக உடல், ஆத்மா, சேவை என்பதைக் குறிக்கவில்லை என்றாலும், ஆழ்வார் அவற்றை உவமையாகப் பயன்படுத்தி, இவையனைத்தையும் வெளிப்படுத்துகிறார்.
ஐம்புலன் அகத்தடக்கி
– ஐந்து புலன்களையும் கட்டுப்படுத்துவது. இதைப் பார்த்து, “முன்பு பாசுரத்தில் கூறப்பட்ட மேம்பொருள் போகவிட்டு என்றால் உடலும் உடலைச் சுற்றிய பொருட்களையும் துறக்க வேண்டும் என்பதே அல்லவா, அப்புறம் ‘ஐம்புலன் அகத்தடக்கி’ என்றால் இது ஏற்கனவே சொன்னதையே மீண்டும் கூறுவது அல்லவா?” எனக் கேட்கலாம்.
இல்லை. இங்கே, ஆழ்வார் ஒரு மெல்லிய, ஆழ்ந்த விஷயத்தைக் கூறுகிறார் — எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணருக்கு சேவை செய்யும் சமயத்திலும், ஜீவாத்மா தன் ஐம்புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஏனெனில்,ஜீவாத்மா தான் ஶ்ரீகிருஷ்ணருக்கு சேவை செய்வதால் ஏற்படும் ஆனந்தம் கூட, தனது சந்தோஷத்திற்காக அல்லாமல், எம்பெருமானின் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே இருக்க வேண்டும். உண்மையான புருஷார்த்தம் என்பது, ஜீவன், தனக்கு இன்பம் கொடுக்க சேவை செய்வதல்ல, சேவை செய்யும் போதும், ஐம்புலன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதையே ஆழ்வார் நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். ஏனெனில், சேவை செய்வதில் ஈடுபடும்போது தோன்றும் ஆனந்தம் கூட தனது சொந்த இன்பத்திற்காக இருக்கக்கூடாது. அது முழுமையாக எம்பெருமானுக்கான இன்பம் மட்டும் கொடுக்கவே இருக்க வேண்டும். இதுவே இங்கு உள்ள ஆழ்ந்த பொருள்.
சுருக்கமாக, உண்மையான புருஷார்த்தம் என்பது, தனது சந்தோஷத்திற்காகச் செய்கிற சேவையல்ல, எம்பெருமானுக்கே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காக செய்யப்படும் சேவையே ஆகும்.
இந்த பாசுரத்தின் மீதமுள்ள இரண்டு வரிகளில், உபாயத்வம் (எம்பெருமானை அடையும் வழி) பற்றிய விளக்கமும், பகவத் கீதை 18.66 ஶ்லோகத்தின் பொருளும் எவ்வாறு இதில் அடங்கியுள்ளன என்பதை நாம் ஆய்வு செய்வோம்.
காம்பறைத் தலை சிறைத்து
–இந்த சொற்றொடரின் ஆழ்ந்த பொருள், முடியை வேருடன் வெட்டுவது போலவே, வேறு உபாயங்கள் (கர்ம யோகம், ஞான யோகம் போன்றவை) மீது ஏற்படும் சார்பு மற்றும் நம்பிக்கையை முற்றிலும் துண்டிப்பதைக் குறிக்கிறது. அதாவது, மற்ற எந்த உபாயத்திற்கும் இடம் கொடுக்காமல், ஏகமாக எம்பெருமானையே உபாயமாக ஏற்க வேண்டும்.
தலை சிறைத்து என்பது, தன்னுடைய முயற்சி, அறிவு, பக்தி போன்றவற்றால் நாமே நம்மை காப்பாற்ற முடியும் என்று எண்ணும் மனநிலையை, அதாவது உபாயமாக கருதும் கருவிகளை விலக்குவது. ஏனெனில் அவை, ஒருவர் எம்பெருமானையே ஒரே முக்தி உபாயமாகப் பார்ப்பதைத் தடுக்கின்றன.
ஆழ்வார் இங்கு “முடியை வெட்டுவது” என்ற உவமையை கொண்டு, தன்னைத் தானே காக்க முடியும் என்ற அகம்பாவம் மற்றும் பெருமிதம் ஆகியவற்றை வெட்டித் தொலைக்க வேண்டும் என்று நமக்குச் சொல்லுகிறார். ஆழ்வார் ஏன் “முடி”யைப் பற்றிக் கூறுகிறார்? முடி என்பது பொதுவாக ஒரு நபரின் அழகையும், பெருமையும் காட்டும் ஒரு கூறாகக் கருதப்படுகிறது. இது மனிதருக்கு அகம்பாவம், சுயமரியாதை, மதிப்புணர்வு போன்றவற்றைத் தரக்கூடியது.
பழைய காலங்களில், அரசன் ஒருவருடைய தலைமுடியை பறிக்கச் சொன்னால், அது அவருடைய மரியாதையை தாழ்த்துவதற்காக செய்யப்படும் செயல். அந்த செயல், “நீ மிகவும் முக்கியமானவர் இல்லை” என்ற உணர்வை ஏற்படுத்தும். இதே போல், சந்நியாசிகள் மற்றும் தபஸ்விகள் தங்கள் முடியை முற்றிலும் களைவதன் மூலம், உலகப்பற்றும், அகம்பாவமும் ஆகியவற்றைத் துறக்கின்றனர்.
அதனால் தான், இங்கே ஆழ்வார், மற்ற உபாயங்களை நம்பி வருகிற சுயமேன்மைக்கும், தன்னம்பிக்கைக்கும் எதிராக, முடியை வெட்டும் உவமையை பயன்படுத்துகிறார். இது, “நம்மை நாமே காக்கக்கூடியவர்” என்ற எண்ணத்திலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்பதைக் காட்டும் ஒரு ஆழ்ந்த உவமை ஆகும்.

பகவத் கீதை 18.66: சரம ஶ்லோகத்தில், ஆரம்பப் பகுதியில் உள்ள, “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய….
எம்பெருமானை இறுதி உபாயமாக ஏற்கும் முன், மற்ற அனைத்து உபாயங்களையும் துறக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. அதே பொருளைத் தான், ஆழ்வார் கூடுதல் உவமையாக, “காம்பறைத் தலை சிறைத்து” என்ற சொற்றொடியில் கூறுகிறார் —அது, மற்ற அனைத்து உபாயங்களையும் முழுமையாகத் துறப்பதை குறிக்கிறது.
உன் கடைத்தலை இருந்து
– எம்பெருமானின் பாதங்களில் முழுமையாக சரணடைதல் என்ற கருத்தைக் குறிக்கிறது, இதுவே சரணடையும் ஆன்மாவின் உண்மையான குறிக்கோளாகும்.
இங்கு கடைத்தலை என்றால் வாசல் அல்லது வாசலின் முன் எனப் பொருள் கொள்ளலாம்.ஆழ்வார் இங்கே அந்த திருவடிகளை நேரடியாகச் சொல்லாமல்,”கடைத்தலை” என்று ஏன் கூறுகிறார்?
அதற்கான காரணம், அவருடைய தாழ்வு உணர்வு காரணமாக, எம்பெருமானின் திருவடிகளை அணுக அவருக்கு தகுதி இல்லை என்று அவர் நினைக்கிறார். ஆனால், எம்பெருமானை விட்டு விலக முடியாத நிலையிலும், அவர் திருவடிகளுக்கு அருகில் இருந்தும் அணுக மனதில்லை. அதனால்தான் “கடைத்தலை இருந்து” என்று கூறப்படுகிறது.
முழு முதற்கடவுள் ஶ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளின் அருமையை ஸ்ரீமத் பாகவதம் 1.8.31 — குந்தி தேவி அருளிய பிரார்த்தனையிலும் அறியலாம்.
ஸ்ரீமத் பாகவதம் 1.8.31: “நமஸ்தே பங்கஜாங்க்ரயே” – “நினது தாமரை போன்ற திருவடிகளுக்கு என் வணக்கம், ஹே பகவானே!”
இது குந்தி தேவி இறுதியாக அருளும் சரணாகதி: பக்தர்களின் பாதுகாவலனாகிய பகவானின் திருவடிகளில் புகலிடம் பெறுவதற்கான பரிபூரண சமர்ப்பணம்.
ஶ்ரீல ப்ரபுபாதர் விளக்கம் (SB 1.8.31 பூர்வ உரை): “பொதுவாக, ஜன்ம மரண சந்ததி போன்ற பந்தங்களில் இருந்து விடுதலை பெற விரும்பும் யாவரும், பகவானின் திருவடிகளை வணங்கவேண்டும். அந்த திருவடிகளை எல்லா மஹா முனிகளும், பரம பக்தர்களும் வணங்குகின்றனர்…”
“ஒரு ஸம்ஸாரி (பிறப்பு இறப்பு சுழற்ச்சியில் உள்ள பந்தப்பட்ட ஜீவாத்மா), தனது உடலை தான் என நினைப்பவன், தன் வாசலில் வளர்க்கும் தன் செல்ல வளர்ப்பு நாயின் மீது பேரன்பை செலுத்துகிறான். அந்த நாய் அவரின் வாசலிலேயே தங்குகிறது, அது அவன் கொடுப்பதையும் சாப்பிடுகிறது, அவன் எவ்வளவு அன்புடன் அதை பார்த்துக் கொள்கிறான்!
அப்போது, எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், “அவரது வாசலில் அடைக்கலம் வேண்டி தஞ்சம் புகுந்து நிற்கும் அவருடைய அடியார்களுக்குத் எவ்வளவு அதிகமான பாசம் காட்டுவார்?”,
ஸ்ரீல ரூப கோஸ்வாமி தனது உயர் பதவி, சொத்துகள் அனைத்தையும் துறந்தார். எம்பெருமானின் சேவைக்கு முழுமையாக அர்ப்பணித்து, அவர் வாழ்க்கையின் இறுதிவரை பிருந்தாவனத்தில் தங்கி, எம்பெருமானுக்கு சேவை செய்யதார்.
“இருந்து” என்ற சொல், எம்பெருமானின் திருவடிகளில் நிலைத்திருப்பதையும், உறுதியையும், சரணடைதலையும் குறிக்கிறது.
ஹரே கிருஷ்ண மகாமந்திரம்: ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே. ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே – “ஓ ராதா! ஓ கிருஷ்ணா! ஓ இறைவனின் உன்னத சக்தியே! உன் அன்பான சேவையில் என்னை ஈடுபடுத்திக் கொள்.”
ஒரு குழந்தை தனது தாய்க்காக அழுவது போல, பக்தர்,ஹரே கிருஷ்ண மகாமந்திரத்தை மனதார ஜபிக்கிறார், பிராட்டி (ஶ்ரீராதாராணி) ஆன்மாவை கிருஷ்ணரின் பாதங்களுக்கு கொண்டு வருகிறார்.

தைத்திரிய உபநிஷத ஆனந்தவல்லி 7.2 கூறுகிறது: ஒரு மனிதன், ஸம்ஸாரத்தின் பயத்திலிருந்து விடுபட, எம்பெருமானின் மீது ஆராதனையாகிய பக்தியை அடைகின்ற போது, அவர் பௌதிக ரூபமற்ற, சொற்பொருளால் விளக்க முடியாத பரமாத்மாவை பற்றிய அன்பினால் ஸம்ஸாரத்திலிருந்து பயம் இல்லாமல், அச்சம் இல்லாமல் மாறுவார்.அதேபோல், எம்பெருமானிடம் தஞ்சம் புகும் ஸம்சாரி பயத்திலிருந்து விடுபட்டு வாழ்வான்.
வாழும்
– ஜீவன் எம்பெருமானே,அடைவதற்கான சாதனம் என ஒரு முறை எடுத்துக்கொண்டவுடன், எம்பெருமானுடைய சேவையிலேயே வாழ்வது உண்மையான செழிப்பாகி விடுகிறது. மற்றொரு விளக்கம் என்னவெனில், எம்பெருமானையே சாதனமாகக் கொண்டு வாழ்வதே செழிப்பாகும்.
சோம்பரை உகத்தி போலும்
– எம்பெருமானின் திருமுகத்தில் உள்ள சந்தோஷத்தைப் பார்த்து, ஆழ்வார் வியக்கிறார். அவர் எம்பெருமானை நோக்கி, “நீங்கள் தங்களையே காக்கும் பொறுப்பைத் துறந்து, தங்களின் சுய பாதுகாப்பு செய்வதற்க்கு கூட சோம்பலாக இருப்பவர்களைப் பார்த்து உங்கள் மனம் இவ்வளவு மகிழ்ச்சியடையுமா?”
வாழும் சோம்பர் என்பது தங்களைப் பற்றி கவலைப்படாமல், அனைத்தையும் எம்பெருமானுக்கு மட்டுமே அர்ப்பணித்து வாழும் மக்களை குறிக்கிறது. இந்த மக்கள் சாஸ்திரங்களில் கூறிய வழிகளைக் கடைப்பிடிப்பார்கள், அவர்களுக்கான பயனுக்காக அல்லாமல், எம்பெருமானுக்கு சேவையாக கடைப்பிடிப்பார்கள்.
எதிராக, கெடும் சோம்பர் என்பது சோம்பல் அல்லது சாஸ்திரங்களுக்கு நம்பிக்கை இல்லாததால் இந்த கடமைகளை புறக்கணித்து தங்களையே அழித்து கொள்ளும் மனிதர்களை குறிக்கிறது. இப்படிப் பொறுப்புகளை தவிர்ப்பவர்களை மாறுபடுத்தும் வகையில், ஆழ்வார் வாழும் சோம்பர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அது எம்பெருமானை முழுமையாக நம்பி, அவருக்காக மட்டும் வாழும் மனிதர்களை குறிக்கிறது. இவர்கள் எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு செய்யும் ஆராதனைகள் தங்களின் சுயநலத்திற்க்கு அல்ல. அவர்கள் எம்பெருமானிடம் கொண்டுள்ள பக்தியின் காரணமாக செய்கிறார்கள்.
உகத்தி போலும் –எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், கோலோகத்தில், நித்யசூரிகளின் பக்தி சேவையை எப்படி ஆனந்தத்துடன் அனுபவிக்கிறாரோ அதேபோல வாழும் சோம்பர்களின் சேவையையும் அப்படிப்பட்ட ஆனந்தத்துடன் அனுபவித்து மகிழ்ச்சி அடைவதை இவ்வார்த்தை மூலம் உணர்த்திகிறார் ஆழ்வார்.
எம்பெருமான் ஆழ்வாரிடம் கேட்கிறார்: “இந்த அளவுக்கு, நான் சோம்பலாக உள்ள, தன் பாதுகாப்பை விட்டுவிட்ட இந்த மனிதர்களை இன்பமாக அனுபவிக்கிறேன் என்று நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?”
ஆழ்வார் சூழ்புனல் அரங்கத்தானே
என பதில் அளிக்கிறார். ஶ்ரீ கிருஷ்ணரே திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) வந்து ஆதிசேஷன் மீது படுத்து இருக்கிறார். மேலலோட்டமாகக் பார்க்கையில், திருவரங்கத்தின் அழகான நதிகள் மற்றும் பசுமைச் சூழலைக் காரணமாகக் கொண்டு, எம்பெருமான் இங்கே உறைகிறார் போல் தோன்றலாம். ஆனால், ஆழ்வாரின் ஆழ்ந்த பார்வையில், அவர் இங்கு படுத்திருப்பது ஒரு ஆழ்ந்தக் காரணத்துக்காக, அதாவது முழுமையாக எம்பெருமானை மட்டுமே நம்பி, அவரிடம் பக்தி பிரார்த்தனை செய்யும் பக்தர் (வாழும் சோம்பர்) ஒருவரின் வருகையை எதிர்ப்பார்த்து அவர் காத்திருக்கிறார்.

எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணரே
ஜீவாத்மாக்களின் ஒரேஉபாயம்.
“காம்பறைத் தலை சிறைத்து” என்ற சொற்றொடரில், சரம ஸ்லோகத்தின் முதல் பகுதியான “சர்வதர்மான் பரித்யஜ்ய” என்பதற்கான அர்த்தம் காணப்படுகிறது. அதாவது, எம்பெருமானை ஒரே உபாயமாக ஏற்க முன்பாக, மற்ற அனைத்து உபாயங்களையும் முழுமையாகக் கைவிடுதல்.
“சூழ்புனல் அரங்கத்தானே உன் கடைத்தலை” இது, எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரின் திருக்குணங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒருவர் அவரது சரணாகதிக்கு தேர்ந்தெடுக்கபட வேண்டிய தெய்வம் முழுமுதற் கடவுள் ஶ்ரீ கிருஷ்ணரே என்பதை உணர்த்துகிறது.
● 1.சௌசீல்யம் (ஏற்றத்தாழ்வின்றி நட்பு பாராட்டும் தன்மை),
● 2.சௌலப்யம் (எளிதாக அணுகக்கூடிய தன்மை),
● 3.வாத்ஸல்யம் (பிழைகளைப் பொறுத்து, நன்மைகளை மட்டுமே காணும் பாசம்),
● 4.சுவாமித்துவம் (கடவுள்களுக்கெல்லாம் தலைமையேற்கும் சிறப்பு)
எனும் எம்பெருமானின் திருக்குணங்களை “ஶ்ரீ கிருஷ்ணா” என்ற சொல்லில் அடக்கமாகக் கூறுகிறார்கள்.
முழுமுதற் கடவுள் ஶ்ரீகிருஷ்ணரின் இந்த திருகுணங்களை விரிவாக கீழ்வருமாறு காண்போம்.
1.சௌசீல்யம் (ஏற்றத்தாழ்வின்றி நட்பு பாராட்டும் தன்மை),
முதன்மையாக இது “சௌ” + “சீல்யம்” என்ற இரு பாகங்களால் உருவானது.
“சௌ” என்பது சுலபம், எளிதாக கிடைக்கும், சுகமாக அணுகக்கூடிய என்று அர்த்தம்.
“சீல்யம்” என்பது குணம், பழக்கம், என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. கிருஷ்ண அவதாரத்தில் அதிகமாக வெளிப்படுகிறது.
ஶ்ரீகிருஷ்ணர் தம்முடைய பெரிய பாவனைகளிலும், தெய்வீக அதிகாரத்திலும் இருந்தும், எப்போதும் ஜீவாத்மாக்களின் அருகில் இருக்கிறார். அவரது தன்மை எளிதாக அணுகக்கூடியது, ஜீவாத்மாக்களுக்கு நண்பனாகவும் சகோதரனாகவும் இருப்பதாக உணர வைக்கும். பக்தர் அல்லாதவர்கள் கூட எளிதில் அணுக கூடிய வகையில் இருப்பவர்.
மகாபாரத யுத்தத்தில் தனக்கு ஆதரவு வேண்டி தீயவனான துரியோதனன் ஶ்ரீகிருஷ்ணர் அணுகும் வகையில் அவர் எளிதில் அணுக கூடிய வகையில் இருந்தார்.
2.செளலப்யம்(எளிமை)
செளலப்யம் = ஸுலபம் (எளிதாகக் கிடைக்கும்) + பவம் (நிலை). செளலப்யம் என்பது உயர்ந்தவராக இருந்தாலும் அதனால் பெருமை இல்லாமல், அனைவரும் அவரை எளிதாக அணுகி, அவருடன் தொடர்பு கொள்ள முடியுமெனும் தன்மை.
ஸ்ரீ கிருஷ்ணர், பரமபுருஷன் என்ற உயர்ந்த நிலையுடன் இருப்பவர். ஆனாலும், கோபர்களுடன் விளையாடினார், கோபிகைகளுடன் ஆடினார், அர்ஜுனனுக்கு நண்பனாக, நந்தகோபருக்கு மகனாக, பாண்டவர்களுக்கு தூதனாகவும் இருந்தார். இவை எல்லாம் செளலப்யத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

செளலப்யம் என்றால்
1. எவரும், எப்போது வேண்டுமானாலும் அணுகக்கூடிய தன்மை
அவன் உயர்ந்த பரம்பொருள் என்றாலும், சாதாரண ஒரு கிராமத்து பெண் கூட அவனருகில் பேசத் துணிகிறாள் (கோபிகைகள்).
2. தன்னுடைய மகிமையை மறைத்து, அருகிலிருப்பது போல் நடந்து கொள்வது
○ பரபிரம்மம் என்ற உயர்ந்த நிலை இருக்க, அதை வெளிக்காட்டாமல், அன்புள்ள சகோதரன், நண்பன், பாசமிகு குரு என்றவாறு இருப்பது.
3. மனிதர்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வது
○ பக்தர்களுக்கு எளிதாக அருள்புரிவது.
சௌசீல்யம் vs செளலப்யம்:
● சௌசீல்யம் = பெரியவர், கீழ்தட்டினர் கூட அணுகும் போது, அவர்களை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார். சௌசீல்யம் என்பது அந்த அணுகும் விதத்தில் உள்ள அன்பும், ஏற்றுக்கொள்ளும் தன்மையும்.
● செளலப்யம் = அவரை அணுகவே மிகவும் எளிது. அவர் தாமாகவே நமக்கருகில் வருகிறார். செளலப்யம் என்பது அந்நிலையை அடைய வேண்டிய முயற்சி குறைவாகவே இருப்பது.
பொருள்:-
சௌலப்யம்: யோகிகள் தவம் செய்தாலும் காண முடியாத எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர், தாயின் பாசத்தால் ஒரு குழந்தையாக முடிச்சில் கட்டப்படுகிறார்!
விளக்கம்:
இங்கு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் ஒரு சாதாரணக் குழந்தை போன்று யசோதாவின் கட்டிலில் கட்டுண்டு நிற்கிறார். இது அவரது சௌலப்யம் (எளிதில் அணுகக்கூடிய தன்மை), மாயையின் மறைவு, மற்றும் பக்தியின் அதி நிலை என்பதை விளக்குகிறது.
இராமாயணத்தில் ஸ்ரீ ராமர், ஒரு சக்ரவர்த்தி குலத்தில் பிறந்தாலும் வனத்தில் தவம் செய்யும் முனிவர்களுடன் அன்பாகப் பழகினார்.
3.வாத்ஸல்யம் (பிழைகளைப் பொறுத்து, நன்மைகளை மட்டுமே காணும் பாசம்),
வாத்ஸல்யம் என்ற சொல், ஸம்ஸ்கிருதத்தில் “வத்ஸ” (கன்று அல்லது குட்டி) என்பதிலிருந்து உருவானது. இதன் அடிப்படைப் பொருள், கன்றிடம் தாய்ப்பசு கொண்டிருக்கிற அன்பு போன்றது. இந்தக் கோணத்தில், வாத்ஸல்யம் என்பது ஒருவர் குறைகளைப் பொறுத்து, அவரது நன்மைகள் மட்டுமே பார்ப்பது போன்ற ஒரு உயர்ந்த அன்பும் கருணையும் கொண்ட மனநிலையை குறிக்கிறது.
“எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணர், தனது பக்தர்களின் குறைகளைப் பாராமல், சிறு நற்குணங்களையே பெரிதாகக் கொண்டு அவர்களை ஏற்கும் தன்மை”. கிருஷ்ண அவதாரத்தில் அதிகமாக வெளிப்படுகிறது. பாண்டவர்கள், அவர்களின் மனைவி திரவுபதி, தன் பால்ய நண்பன் குசேலர் ஆகியோரிடம் அப்படி ஒரு அபரிமிதமான அன்பை அவர் வெளிப்படுத்தினார். பாண்டவர்களிலும் கூட அர்ச்சுனனிடம் அவர் காட்டியது இன்னும் மேலான அன்பு. போர்க்களத்தில் அவன் குற்ற உணர்ச்சியில் தவித்தபோது, அது குற்றமல்ல என்பதையும், உண்மையான பொருளின் சிறப்பையும் உணர்த்தியவர், கிருஷ்ணர்.
வாத்ஸல்யத்தின் சிறப்பு விளக்கம்:
1. பிழைகளைப் பொறுத்தல்: வாத்ஸல்யம் உள்ளவர், மற்றவர்களின் தவறுகளை மிகையாக எடுத்துக்கொள்ளார்.
அவர்:
● குறைகளை மறைத்து விடுவார்.
● குறைகளை ஒதுக்கி வைத்து நன்மைகளைப் பெரிதுபடுத்துவார்.
● “இவன் இதை இப்படிச் செய்தாலும், நெஞ்சம் நல்லதுதான்” என்று கருதுவார்.
2. நன்மைகளை மட்டுமே காணும் பாசம் (குண மாத்ர திருஷ்டி): வாத்ஸல்யம் என்பது பாசத்தின் ஒரு உயர்ந்த நிலை. இதில்:
● ஒருவரின் நல்லவை மட்டுமே மனதில் பதியும்.
● சிறு நல்ல செயல்களைக்கூட பெரிதாக மதிக்கும் மனநிலை வளர்கிறது.
● குறைகள் மறைந்து, அவருடைய இயல்பிலுள்ள நல்லத் தன்மைகள் மட்டுமே வலியுறுத்தப்படுகின்றன.
பகவத்கீதை 9.30 – ஸ்லோகம் தமிழில்:
அப்பி சேத் சுதுராசாரோ பஜதே மாம் அநன்யபாக் |
ஸாதுரேவ ச மந்தவ்ய: சம்யக் வியவசிதோ ஹி ச: ||
எவ்வளவு மோசமான நடத்தையுடையவனாக (தீய பழக்கங்களுடன்) இருந்தாலும், அவன் என்னையே தவிர வேறு யாரையும் நினையாது, முழுமையாக, என்னையே (பகவான் ஶ்ரீ கிருஷ்ணரையே) பக்தியுடன் வழிபடுகிறானாயின், அவன் பக்தனாகவே கருதப்பட வேண்டும்.
ஏனெனில், அவன் தீர்மானம் தூய்மையானது மற்றும் நிலைத்ததுவாகும்.
சுருக்கமாக பகவான் சொல்கிறார்: “என்னை முழுமையாக சரணடைந்து வரும் பக்தனின் முன்னைய பாவங்களை நான் காண்பதில்லை; அவன் பக்தியில் உறுதியாக இருப்பதால், அவனை நான் நல்லவனாகவே கருதுகிறேன்.”
இது பகவானுடைய வாத்ஸல்யம். நம்முடைய தவறுகளைக் கவனிக்காமல், நம்முடைய பாசத்திற்கும் பக்திக்கும் முக்கியத்துவம் கொடுப்பது.
4. சுவாமித்துவம் (கடவுள்களுக்கெல்லாம் தலைமையேற்கும் சிறப்பு)
“சுவாமித்துவம்” என்பது “ஸ்வாமி” என்பதிலிருந்து வரும். ஸ்வாமி என்றால் உரிமை உடையவர், ஆட்சி செய்யும் பேராண்மை உடையவர், எல்லாவற்றிலும் தலைவனாக இருப்பவர் என்பதாகும். இந்த குணத்தின் அடிப்படையில், பரமாத்மா ஶ்ரீ கிருஷ்ணரே ஸ்வாமி. நம்மை உருவாக்கியவர், நம்மை காத்து நடத்தும் தலைவர், கடவுள்களுக்கெல்லாம் தலைவர், நம்மை முழுமையாக நிர்வகிக்கிற உரிமையுள்ள நாயகன் என்று பொருள்.
சுவாமித்துவம் என்பது ஈஷ்வரனின் ஒரு முக்கியமான கல்யாண குணம். இதில், இறைவன்,பூமி, அக்னி, ஆகாசம், வாயு, அக்னி முதலான பஞ்ச பூதங்களுக்கும், சர்வ ஜீவராசிகளுக்கும்,பிரம்மா முதல் ஒரு புழு வரை உள்ள எல்லா உயிர்களுக்கும், மோக்ஷம் பெறும் பரமபத வாசிகளுக்கும், தம் பரமபதத்துக்கும், லீலை விபவத்திற்கும் (ஜட உலகம்) சுவாமி (உரிமை உடையவன், நாயகன்) என்பதே உண்மை.
ஒரு மன்னனுக்கே அவரது நாட்டில் உள்ள எல்லாரும் கீழ்ப்படிவது போல், பரமபுருஷனான ஶ்ரீ கிருஷ்ணருக்கே ஸர்வ ஜீவாத்மாக்களும் அடங்கியிருக்கின்றன. நாம் யார் என்பதைவிட, நம் மீது உரிமை உள்ளவர் யார் என்பதுதான் முக்கியம். அதுதான் சுவாமித்துவம். அவர் நம் உரிமையாளர், நாம் அவருடைய சேஷபூதர்கள் (அடிமை).

ஶ்ரீகிருஷ்ணரே எல்லாருக்கும் தலைவன் – சுவாமித்துவம்.
முழுமுதற்கடவுள் ஶ்ரீகிருஷ்ணரின் சுவாமித்துவம்
பகவத்கீதையில் “சுவாமித்துவம்” (அவர் நம்முடைய இறைவன், நாயகன்) குறித்த எடுத்துக்காட்டுகள்:
பகவத்கீதையில் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய ஸ்வாமித்வத்தைக் (தலைமை, பரமாதிகாரம், உரிமை) பல இடங்களில் விளக்கியுள்ளார். கீழே முக்கியமான சில சுலோகங்கள்:
1. பகவத் கீதை 9.10 – மாயையை இயக்கும் உரிமையாளர்
மயாத்யக்ஷேண பிரக்ருதி சூயதே ச சராசரம் |
ஹேது நாநேன கௌந்தேய ஜகத் விபரி வர்ததே ||
“என் மேற்பார்வையின் கீழ் தான் இந்த பிரக்ருதி (மாயை) இயக்கப்படுகிறது. இந்த உலகின் தோற்றமும், நிலையும், அழிவும் அனைத்தும் எனது கட்டுப்பாட்டில் தான் நடக்கின்றன.”
இது ஸ்வாமித்வத்தின் வெளிப்பாடு. இறைவன் மாயைக்கும் உரிமையாளர், உலகை இயக்கும் அதிகாரம் உடையவர் என்பது இங்கு கூறப்படுகிறது.
2. பகவத் கீதை 5.29 – எல்லாருக்கும் சுவாமி நானே
போக்தாரம் யஜ்ஞதபஸாம் சர்வலோகமஹேஶ்வரம் |
ஸுஹ்ருதம் ஸர்வபூதானாம் ஞ்யாத்வா மாம் ஶாந்திம் ருச்சதி ||
“எல்லா யாகங்களுக்கும், தவங்களுக்கும் அனுபவிப்பவர் நானே. எல்லா லோகங்களுக்கும் நாயகனும் நானே. எல்லா ஜீவராசிகளுக்கும் நன்மை விரும்பும் நண்பனும் நானே. இதனை உணர்ந்தவனுக்கு தான் சாந்தி கிட்டும்.”
இங்கே ஸ்வாமித்வம் மூன்றாக இருக்கிறது :
1. போக்தா – அனுபவிப்பவர் (உரிமையாளர்)
2. மஹேஶ்வர – சர்வலோக ஸ்வாமி (எல்லா உலகங்களுக்கும் நாயகன்)
3. ஸுஹ்ருத் – நம்மை நன்மை விரும்பும் நண்பர்
3. பகவத் கீதை 7.7 – என்னை விட உயர்ந்தவன் இல்லை
மத்த: பரதரம் நாந்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய |
மயி ஸர்வமிதம் ப்ரோகம் ஸூத்ரே மணிகணா இவ ||
“தனஞ்சயா (அர்ஜுனா)! என்னை விட உயர்ந்த யாரும் இல்லை. எல்லாப் பொருட்களும் என் கீழ் கட்டுப்பட்டவை – மணியை போல் நூலில் கட்டப்பட்டிருக்கின்றன.”
இது ஸ்வாமித்வத்தின் உச்சம். ஸ்ரீ கிருஷ்ணர் மட்டும் தான் எல்லாவற்றுக்கும் மேலான அதிகாரி – ஸ்வாமி என்பதைக் கூறுகிறது.
4. பகவத் கீதை 10.8 – சுவாமி என்று அறிந்து பரமபக்தி
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: சர்வம் ப்ரவர்ததே |
இதி மத்த்வா பஜந்தே மாம் புதா பாவ சமன்விதா: ||
“என்னாலே தான் எல்லாம் தோன்றுகிறது. என்னிடமிருந்தே எல்லாம் விரிகிறது. இதை உணர்ந்த புத்திசாலிகள், என்னை இறைவனாக (ஸ்வாமியாக) பக்தியுடன் பரிபூரணமாக சேவிக்கிறார்கள்.”
ஸ்வாமித்வம் உணர்வு → பக்தியில் லயிக்கிறது.
5. பகவத் கீதை 18.66 – சரணாகதி & சுவாமித்துவம்
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச: ||
“நீ உன் எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு, என்னை மட்டும் சரணாகதி கொள். நான் உன்னை பாவங்களில் இருந்து காப்பாற்றுவேன். கவலைப்படாதே.”
இங்கே, நம்மை காப்பாற்றும் உரிமையாளர், ஸ்வாமி ஶ்ரீகிருஷ்ணர் மட்டுமே! நாம் செய்ய வேண்டியது, அவரிடம் சரணாகதி கொடுப்பது மட்டுமே.
சுருக்கமாக:-பகவத்கீதையில் சுவாமித்துவம்:
● ஸ்ரீ கிருஷ்ணர் நம்மை படைத்தவனர் (7.7, 10.8)
● ஸ்ரீ கிருஷ்ணர் நம்மை இயக்கும் தலைவர் (9.10)
● ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு நாயகன், உரிமையாளர் (5.29)
● ஸ்ரீ கிருஷ்ணர் நம்மை காப்பவர் (18.66)

ஶ்ரீ ராதாராணியுடன் ஶ்ரீகிருஷ்ணர்
உன்-“உன்” என்ற சொல்லில் (உன் கடைத்தலை) பிராட்டியின் (ஸ்ரீ ராதாராணி ) இருப்பும், அவரால் வெளிப்படும் தயையும் உள்ளடங்கியுள்ளது.
இப்பாசுரத்தில், ஒரு ஜீவாத்மா, மற்ற எல்லா உபாயங்களையும் விட்டு, எம்பெருமானே (ஶ்ரீகிருஷ்ணர்) ஒரே உபாயம், ஒரே பயன் என நம்பி, அவருடைய திருவடிகளை மட்டும் அடைக்கலமாகக் கொண்டு, பூரண சரணாகதி செய்துவிடும் நிலையில் இருப்பதையே “இருந்து வாழும் சோம்பரை” என்று ஆழ்வார் புகழ்கிறார்.
இவர்கள் சோம்பேறிகள் அல்ல; தங்கள் பாதுகாப்பைத் தாங்களே செய்யலாம் என்ற எண்ணத்தையே விட்டுவிட்டு, எம்பெருமானிடம் முழுமையாக அடைந்த உண்மையான பக்தர்கள்.எம்பெருமானின் சௌசீல்யம், சௌலப்யம், வாத்ஸல்யம், ஸ்வாமித்வம் போன்ற கருணைத் தன்மைகள், அவரை அடைவோருக்கு துணை நிற்கின்றன.
பிராட்டி (ஸ்ரீ ராதாராணி), இவ்வரணத்தில் ஒரு நுட்பமான பங்கு வகித்து, ஜீவனுக்கும் எம்பெருமானுக்கும் இடையே கருணை பாலமாக இருக்கிறார்.திருவரங்கத்தில் எம்பெருமான், இப்படிப் பூரண சரணாகதியுடன் வரும் “வாழும் சோம்பரை” எதிர்பார்த்து, பேரன்புடன் காத்திருக்கிறார்.
ஹரே கிருஷ்ணா
பாசுரம் 41: வானுளாரறியலாகா
அடியவர் உண்டு மிஞ்சிய சேடமே (பிரசாதமே) சிறந்தது

வானுளாரறியலாகா வானவா என்பராகில் *
தேனுலாம் துளபமாலைச் சென்னியாய் என்பராகில் *
ஊனமாயினகள் செய்யும் ஊனகாரகர்களேலும் *
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே.
பொருள்
வானுளார் — தேவர்களாலும்; அறியல் ஆகா — அறியமுடியாத பரமாத்மனை; ஊனம் ஆயினகள் — கீழான செயல்களை; செய்யும் — செய்பவர்களாயும்; ஊன — பிறரை கொண்டு கீழான செயல்களை; காரகர்களேலும் — செய்விப்பவர்களாயிருந்த போதிலும்; வானவா — பரமபதத்திலிருப்பவனே!; என்பர் ஆகில் — என்று சொல்லுவார்களாகில்; தேனுலாம் — தேன் ஒழுகும்; துளப மாலை — திருத்துழாய் மாலையை; சென்னியாய் — தலையில் அணிந்தவனே!; என்பர் ஆகில் — என்று சொல்லுவார்களாகில்; போனகம் செய்த — அவர்கள் சாப்பிட்ட; சேடம் — மிச்ச பிரசாதத்தை; தருவரேல் — கொடுப்பாராகில்; புனிதம் அன்றே — அதுவே புனிதமாகும்.
தொகுப்புரை:
அவர்கள் (ஜீவாத்மாக்கள்) மிகவும் பயங்கரமானவர்களாக இருந்தாலும், பிறரையும் அத்தகைய பயங்கரச் செயல்களில் ஈடுபடுத்துகிறவர்களாக இருந்தாலும், அவர்கள் “தேவர்களாலும் முழுமையாக அறிய முடியாத இறைவனே!” என்றும் “தேனீக்கள் ரீங்காரமிடும் துளசி மாலையை அணிந்த ஆண்டவரே!” என்று அரங்கனை அழைத்தாலே போதும். அவர்கள் சாப்பிட்ட பிறகு விட்ட எச்சிலும், அது எனக்கு எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணரின் புனிதமான பிரசாதமாகி விடுகிறது.
விளக்கவுரை:
வானுலார் அறியலாகா வானவா
— பரமபதமாகிய கோலோகத்தில் எப்போதும் நிலையாகவே இருப்பவர், பிரம்மர் மற்றும் தேவர்களாலும் அறிய முடியாதவர். எவ்வாறு பூமி மட்டத்தில் இருந்துசிறிது உயர்ந்த தளத்தில் உட்கார்ந்தாலும் வானத்தில் உள்ள விண்மீன்களை தெளிவாக காண இயலாதோ, அது போல் சத்தியலோகம் போன்ற உயர் உலகங்களில் இருப்பவர்கள் கூட கோலோக நாதனான ஶ்ரீ கிருஷ்ணரின் ஸ்வரூபத்தைத் (தோற்றத்தைக்) அறிய முடியாது. இவர்களிடம் அதிகமான ஞானமும், சக்தியும் இருந்தாலும் கோலோகத்தை அடைய முடியாது.
இங்கு “அகா” என்ற சொல் “சாத்யமே அல்ல” என்பதைக் குறிக்கிறது. வேறொரு விளக்கம்: அது “செய்யக் கூடாது” என்ற அர்த்தத்தையும் தருகிறது. எப்படியெனில், சண்டாளன் வேத சடங்குகள் நடக்கும் இடத்திற்கு செல்லத் தடைப்பட்டிருப்பது போலவே, இந்த தேவர்கள் கோலாகத்திற்கு செல்லத் தடைசெய்யப் பட்டிருக்கின்றனர். ஆனால், பக்தர்கள் தங்களுடைய தவ வலிமையால் அல்லாது, அந்த ஶ்ரீ கிருஷ்ணரின் அருளாலே அவரை அறிந்து வழிபட முடிகின்றது.
ஸ்ரீ பகவத்கீதை 16.14-ல் கூறப்பட்டுள்ளதுபோல், “நானே கடவுள்” என்று எண்ணுகிறவர்கள், உண்மையான கடவுளான ஶ்ரீ கிருஷ்ணரை உணரவும், அறியவும் முடியாது. மக்கள் எப்படி கடல்களை கப்பல்களில் கடக்கிறார்களோ, அதுபோல் பக்தர்கள் ஸம்ஸாரக் கடலை கண்ணன் என்னும் கப்பலின் உதவியுடன் கடக்கிறார்கள். ஒருவர் எவ்வளவு சிறந்த நீந்துபவராக இருந்தாலும், தனித்தே கடலை நீந்தி கடக்க முடியாது. அதுபோல, எந்த உயிரினமும் தங்கள் சொந்த முயற்சியினால் மட்டுமே எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரை அறிய முடியாது; அவரின் அருள் இல்லாமல் யாராலும் அவரை அடைய இயலாது.
பரத முனிவரின் சரணாகதி லக்ஷண வாக்கியம்-படி: எந்தவொரு மாற்று வழியினாலும் அடைய முடியாத பொருளை, மிகுந்த நம்பிக்கையுடன், “நீயே என் ஒரே ஆதாரம்” எனக் கொண்டு, அதனை அடைய வேண்டிக்கொள்ளும் செயல் — இதுவே சரணாகதி ஆகும்.
முழுமையாக எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணரிடம் சரணடைந்தவர்கள், எம்பெருமான் ஸம்ஸாரத்திலிருந்து விலகி இருக்கின்றவன் என்றும், சுத்த சத்த்வம் எனும் தூய்மைமிக்க தத்துவத்தால் ஆன தெய்வீகத் திருமேனியையுடையவன் என்றும் உணர்ந்து, அவரே உயர்ந்த சாதனமாக இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.
என்பராகில்
— தைத்ரிய ஸம்ஹிதை 7.5.3-இல் கூறப்படும் “மன: பூர்வோ வாகுத்தர:” என்ற வாக்கியத்தின்படி, மனத்தில் முதலில் தோண்றிய எண்ணம் பின்னர் பேச்சின் மூலமாக வெளிப்படுகிறது. இதேபோல், “வானுலார் அறியலாகா வானவா” எனும் வார்த்தைகள், எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரிடம் மனதார சரணடைந்த ஒருவரிடமிருந்து உருவாகின்றன.
அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை 37.30-இலும், இப்படிப்பட்டவர்கள் எம்பெருமானைத் தம்முடைய சாதனமாக இருக்க வேண்டும் என வேண்டுகிறார்கள் என்பது தெளிவாகக் கூறப்படுகிறது.
ஆகில் — ஆழ்வார் இங்கு மனிதர்கள் தங்களை தாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிடுவது எவ்வளவு கடினம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
தேனுலாம் துளபமாலைச் சென்னியா
— தேன் சொட்டும் துளசி மாலையை அணிந்துள்ள தெய்வீகச் சுடரே! துளசி என்பது தாவரங்களில் மிகச் சிறந்ததாக மதிக்கப்படும் ஒன்று. துளசி தேவி பக்தி பெற ஆசிர்வதிக்கிறார். அந்த துளசி மாலையை அணிந்திருப்பது, எம்பெருமானுடைய தலைசிறந்த தன்மையை, தேவர்கள் மத்தியில் அவருடைய மேன்மையை, எடுத்துக்காட்டுகிறது.
தேனுலாம் துளபமாலை என அவர் வர்ணிக்கப்படுவது, அவருடைய இனிமையும், ஆனந்தத் தன்மையும் மிகுதியாக இருப்பதைக் குறிப்பது. இதனால், அவரே எல்லா உயிர்களும் அடையவேண்டிய உயர்ந்த பொருளாக இருக்கிறார் என்பதும் உறுதியாகிறது.
என்பராகில்
— முன்னதாக இந்தச் சொல் எம்பெருமான் தாமே சாதனமாக இருக்க வேண்டும் என வேண்டும் பொருளில் பயன்படுத்தப்பட்டது. இங்கு அது எம்பெருமான் தாமே பெறவேண்டிய பொருளாக (உபேயம்) இருக்க வேண்டும் எனும் வேண்டுதலைக் குறிக்கிறது.
ஆகில் — ஜீவாத்மாக்கள் மற்ற எல்லா இலட்சியங்களையும் விலக்கி, எம்பெருமானையே உன்னதமான இலக்காக ஏற்றுக் கொள்வது மிக மிக அரிதானது. ஶ்ரீகிருஷ்ணர் தாமும் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறும் “ஸ மஹாத்மா ஸுதுர்லபஹ்” என்ற ஸ்லோகத்தின் மூலம் இதையே வலியுறுத்துகிறார் — இப்படிப்பட்ட உயர்ந்த மனப்பான்மையுடையவர்கள் மிக அபூர்வம்.
ஊனமாயினைகள் செய்யும்
— தங்கள் பசியை தீர்க்கும் பொருட்டு பிற உயிர்களுக்கு வேதனை கொடுக்கும் ஜீவாத்மாக்கள் மிகத் தாழ்ந்தவர்கள்; உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆடுகள், மாடுகளை கட்டிப் போட்டு, நடு இராத்திரியிலும் அவர்களை வெட்டி, அந்த இறைச்சியை ஆசைபட்டவர்களுக்கு வழங்குகிறார்கள்.
இதைப் பார்க்கும்போது, பிற உயிர்கள் காப்பாற்றுவதற்காகத் தம்முடைய சரீரத்தையே அர்ப்பணித்த சிபி சக்ரவர்த்தி போன்ற தயைமிக்க மன்னர்களுக்கு இவர்கள் முழுமையான எதிர்மாறானவர்கள் என்பதே தெளிவாகிறது.
ஊன காரகர்கள்
— இவர்கள் இத்தகைய வெறுக்கத்தக்க கீழ்த்தர செயல்களில் ஈடுபட்டு பாவிகள் ஆகிறது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் இச்செயல்களில் ஈடுபடச் செய்வதால், பாவத்தை பரப்பும் காரியத்திலும் ஈடுபடுகிறார்கள். காரகர்கள் என்றால், பிறரை எந்தவொரு செயலிலும் ஈடுபடச் செய்பவர்கள்.
ஊனம் என்பது தாழ்ந்த, நிந்திக்கத்தக்க செயல்களை குறிக்கும். இத்தகைய செயல், எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரின் உயர்ந்த நிலையை உணர்ந்தவர்கள் செய்யமாட்டார்கள் என்பதால், இவர்கள் இந்தக் கீழ்மையான செயல்களைச் செய்தது அவர்கள் ஆன்மிகமாக விழித்தெழுவதற்கு முன், அறியாமையிலேயே செய்ததாகக் கொள்ளலாம்.
ஏலும்
— இவர்கள் முன்னதாக இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், உண்மையான ஞானத்தைப் பெற்றபிறகு, அந்தப் பழக்கங்களை நிறுத்தி விடுகிறார்கள். உண்மையை உணர்ந்தபிறகு, வேறு யாராவது வேதனைப்படுவதைப் பார்த்தால், அவர்களது பாட்டை உணர்ந்து, தங்களுக்கே ஏற்பட்டதைப்போல் தாமும் துன்பம் அனுபவித்து, கூடவே மயங்கி விழும் நிலைக்கும் வருகிறார்கள்.
ஸ்ரீ அத்வைத ஆச்சாரியரின் இரக்கம்: “கலியுகத்தில் ஆன்மாக்கள் படும் துன்பத்தைக் கண்டு, ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர் மிகவும் நெகிழ்ச்சியடைந்தார். புலன் இன்பம், நாத்திகம் மற்றும் கிருஷ்ணரை மறப்பதில் மட்டுமே மூழ்கியிருந்த மக்களின் நிலையைக் கண்டு அவர் துக்கமடைந்தார்.”
இத்தகைய ஆழ்ந்த கருணையுடையவர்கள், பிறருக்கு வேதனை ஏற்படுத்தினால், அது அவர்களுக்கே நன்மை தரும் பொருட்டு தான் என அறியலாம்.
நாரத முனி சாபம்: ஒரு முறை, நாரத முனி குபேரனின் மகன்களை மரங்களாக மாற சபித்தார். ஆனால் அவரால் தான், குபேரனின் மகன்கள் கிருஷ்ணரால் விடுவிக்கப்பட்டனர். உண்மையில் சாபம் அவர்களுக்கு உயர்ந்த பலனை இறுதியில் அளித்தது. ஜீவாத்மாக்களுக்கு துன்பம் அளிப்பதும், இறுதியில் அவர்களின் நன்மைக்காகத்தான் என்பது வெளிப்படுகிறது.
போனகம்
— இது உணவைக் குறிக்கும். இந்த பக்தர்கள் (ஶ்ரீ கிருஷ்ணரை பற்றிய உண்மையான ஞானம் பெற்றோர்) எம்பெருமானை விட மேலும் ஆதரவு அளிப்பவர்களாக இருப்பதால், எம்பெருமானைப் பற்றிக் கூறப்படும் “அமுது செய்து” என்பதுபோல், இந்த ஞானிகள் பற்றிப் பேசும்போது ஆழ்வார் “போனகம் செய்து” என்றார். ஏனெனில், அவர்கள் மேலானவர்கள் என்பதையும், அதற்கேற்ற உயர்ந்த சொல்லே இல்லாத நிலையையும் இது காட்டுகிறது.
செய்த சேடம்
— இது பக்தர்கள் உணவுண்ட பிறகு மீதமுள்ள உணவைக் குறிக்கிறது.
ஶ்ரீமத் பாகவதம் 1.5.25:
மகாஜனர்களில் (பெரிய பக்தர்களில்) ஒருவரான நாரத மகரிஷி தனது பூர்வீக வாழ்க்கையில் பணிவிடை செய்யும் பணிப்பெண்ணின் மகனாக பிறந்தார். “ஒரு சமயம், ஒருமுறை மட்டும், நான் பக்தி வேதாந்தர்கள் அனுமதியுடன், அவர்கள் உண்ட உணவின் மீதத்தை உண்டேன். அந்த ஒரு செயலில், என் எல்லா பாவங்களும் உடனடியாக நீங்கின. அதனால், என் மனம் தூய்மையடைந்தது. அந்த நேரத்தில் தான், பரம்பொருள் ஶ்ரீகிருஷ்ணரிடம் நிலைத்திருக்கும் மகான்களின் இயல்பு எனக்கும் கிடைத்தது” என்று நாரதர் தனக்கு பக்தி மார்க்கத்தில் செல்ல வாய்ப்பு கிடைத்ததை வியாசருக்கு சொன்னார். இதன் மூலம் பக்தர்கள் உண்ட உணவின் மீதத்தின் பெருமையை அறியலாம்.
தருவாரேல்
— இப்படிப்பட்ட பெரியதும், அபூர்வமானதுமான ஶ்ரீ கிருஷ்ணனின் பிரசாதத்தை ஒருவர் பெற்றால்…
புனிதம் அன்றே
— இந்த பக்தர்கள் உண்ட உணவின் மீதமுள்ள பகுதியை ஒருவர் பருகினாலே, உடனே அவர் புனிதராவார். இது ஒரு குளிகை (தடவியவுடன் இரும்பை பொன்னாக்கும் மந்திரக் கல்) போன்று — தொடுதல் மட்டுமே போதும், உடனே பவித்திரம் ஏற்படுகிறது. இதற்காக வேறு ஒரு உடலை எதிர்பார்க்க வேண்டியதில்லை, வேறு ஒரு காலத்தையோ இடத்தையோ எதிர்நோக்க வேண்டியதில்லை.
விஹகோஷம் எனும் ஒரு புனித நூலில் கூறப்படுகிறது: நாராயணனில் நிலைத்த நம்பிக்கையுடன் வாழும் ஒருவரின் ஒவ்வொரு செயலும், எம்பெருமானுக்கான ஆராதனையாகும். அவர் பேசும் ஒவ்வொரு சொல்லும் ஜபமாகும்; அவர் செய்வது தியானமாகும்; அவர் பார்வையிடுவது தியானத்தின் ஒருவகையாகும்; அவர் பாதம் தொட்ட நீர் தீர்த்தமாகும்; அவர் உண்ட உணவின் மீதமுள்ளதைப் உண்பது மிகப் புனிதமானதாகும்; அவர் சொல்வது எல்லாம் மந்திரமாகும்; அவர் தொடும் எல்லாம் தூய்மையானதாகும்.எம்பெருமானுடைய பிரசாதம் புனிதமாவதாக இருந்தால், அவரது பக்தர்களின் பிரசாதம் அதைவிடவும் பவித்திரமளிக்கக் கூடியதாக இருக்கிறது.
ஹரே கிருஷ்ணா
பாசுரம் 44: பெண்ணுலாம் சடையினானும்
ஆனைக்கு அன்று அருள் செய்தாயே!

கஜேந்திரமோட்ச லீலை
பெண்ணுலாம் சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான் *
எண்ணிலாவூழியூழி தவஞ்செய்தார் வெள்கி நிற்ப *
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன்றருளையீந்த
கண்ணறா * உன்னையென்னோ? களைகணாக் கருதுமாறே.
பொருள்
பெண்உலாம் — கங்காநதியை; சடையினானும் — சடையிலுடையவனான சிவனும்; பிரமனும் — பிரமனும்; உன்னைக் காண்பான் — உன்னைக் காண; எண் இலா ஊழி ஊழி — எண்ணமுடியாத காலம்; தவம் செய்தார் — தவம் செய்து; வெள்கி நிற்ப — வெட்கமடைந்து தலை கவிழ்ந்து நிற்க; விண்உளார் — நித்யஸூரிகளும்; வியப்ப வந்து — ஆச்சரியப்படும்படி; ஆனைக்கு — முதலை வாயிலகப்பட்ட ஆனைக்கு; அன்று அருளை ஈந்த — அன்று அருள் செய்தருளிய; கண்ணறா! — ரக்ஷகனே! என் விஷயத்தில் தயை இல்லாதவனே!; உன்னை களைகணா — உன்னை தஞ்சமாக; கருதுமாறே! என்னோ? — எவ்விதம் கருத முடியும்?
தொகுப்புரை:
ஜடையில் கங்கைக்கு இடம் கொடுத்த சிவனும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் இருந்த நான்முக பிரமனும் உம்மை காண முடியாமல் வெட்கப்பட்டார்கள். ஆனால் நீங்கள், தாங்களாகவே வந்து கஜேந்திரனுக்கு தயை செய்தீர்கள்; இந்த செய்கை ஆகாயத்தில் இருந்த தேவர்களையே ஆச்சரியப்படச் செய்தது. அரங்கரே,இவ்வுலகம் உன்னை பாதுகாப்பிற்காகத் தேடுவது ஆச்சரியம் இல்லை.
விளக்கவுரை:
பெண்ணுலாம் சடையானானும்
— தன் அகன்ற ஜடா முடியில் மேலுலகத்தில் இருந்து வந்த கங்கைக்கு இடம் கொடுத்து, சரியாகப் பாயச் செய்த பெருமை உடையவர் சிவன்.இங்கு ஒரு சிந்தனை எழுகிறது — கங்கை சடையில் அடக்கி வைத்திருப்பது போன்ற செய்கையாலே மட்டும், சர்வேஸ்வரனை காண இயலுமா?
பிரமனும்
— பிரம்மனே, அந்த சிவனையும் உருவாக்கியவர் ஆவார்.
ஸ்ரீ இராமாயணம், யுத்த காண்டம் (117.3) இல் கீழ்வருமாறுக் கூறப்படுகிறது
“கர்தா ஸர்வஸ்ய லோகஸ்ய ப்ரஹ்மா ப்ரஹ்மவிதாம் வர:”
அதாவது, “இவை எல்லா உலகங்களையும் உருவாக்கியவன், பிரம்மத்தைப் பற்றிய அறிவில் முதன்மை பெற்றவரும் பிரம்மன் தான்.”
அவ்வாறான பிரம்மன் ஒரு பள்ளி ஆசிரியரைப் போல உயிர்களுக்கு ஞானம் அளிக்கிற பெருமையுடன் இருக்கிறார். எம்பெருமானின் நாபியிலிருந்து தோன்றிய தாமரைப்பூவில் இருந்தபோதிலும், தன் முயற்சியால்,ஶ்ரீ கிருஷ்ணரின் திவ்ய திருவடிகளை பிரம்மன் காண இயலவில்லை. ஶ்ரீ கிருஷ்ணரின் அருளால் மட்டுமே எம்பெருமானை ,பிரம்மன் காண முடிந்தது.

மகாபாரதம், ஸபாபர்வம் (14.8) இல் கூறப்படுகிறது: பிரம்மன், தாமரைப்பூ சுடரின் உள்ளே பிறந்தவர், எண்ணற்ற யுகங்களின் தொடர்ச்சியில் விஷ்ணுவை வழிபட்டு, பின்னர் பரம்பொருள் எம்பெருமானின் அருளினால் அனைத்து உலகங்களையும் ஆண்டவர்.
உன்னைக் காண்பான்
— என்று எவராவது எண்ணினாலும், அது எளிதல்ல.
தைத்திரிய உபநிஷத் இல் கூறப்படுகிறது: “யதோ வாசோ நிவர்தந்தே…”
அதாவது: “உனது குணங்களை விவரிக்க முயன்ற வேதங்களே பின்னடைந்து விட்டன!”அந்த அளவுக்கு, எம்பெருமானின் மஹிமையை, அவனின் பரிசுத்த குணங்களை, வேதங்கள் கூட முழுமையாக அளக்க முடியவில்லை. ஒரே ஒரு குணத்தையே கூடசரியாக விவரிக்க முடியாமல், மௌனமாகி விட்டன.
நித்தியசூரிகள் எப்போதும் எம்பெருமான் அருகில் அவரது திருகமலப் பாதங்களுக்கு சேவை செய்து கொண்டு இருந்து அனுபவிக்கின்றவர்களாயினும் — உம்மை முழுமையாக அறிந்து கொள்ள இயலாமல், அவரவரால் அனுபவிக்கப்படுகிற அளவிற்கு மட்டுமே உம்மை ரசிக்க முடிகிறது; உம்முடைய எல்லை எவராலும் அறிய முடியாதது. இதுவே, உம்மை அறியும்போது வரும் ஆச்சர்யமும், பரமானந்த அனுபவமும் ஆகும்.
காண்பான்
– நான் அவரைக் காணும் போது மட்டுமே, அவரிடமிருந்து பயனை பெற முடியும்.அவர் தானாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்தால், மற்றவர்கள், தங்களின் சிறந்த அறிவு அல்லது ஆற்றலை கொண்டு, அவரை தங்கள் சக்தியால் காண முடியாது.
தைத்திரிய உபநிஷத் நாராயணவல்லி 1.10-இல் கூறப்படுகிறது:
“நா ஸந்திர்ஷே திஷ்டதி ரூபம் அஸ்ய ந சக்ஷுஷா பஷ்யதி கஷ்சனேனம்”
அதாவது, அவனுடைய ரூபம் அப்படி உள்ளது, அது எமது கண்களால் காண முடியாது; யாரும் அவரை தனது கண்களால் காணவில்லை.
ரிக் வேதத்தில் இதேபோல் கூறப்படுகிறது: “நா மாம் ஸசக்ஷுர் அபிவீக்ஷதே தம்” – அவனுடைய ரூபம் இந்த சதையினால் ஆன கண்களால் பார்ப்பதற்கு இயலாது.
விஷ்ணு தர்மத்தில் கூறப்படுகிறது: “நா மாம்ஸ சக்ஷுஷா தர்ஷ்டும் பிரம்மபூத: ச சக்யதே” – அவர் (முழுமுதற் கடவுள்ஶ்ரீகிருஷ்ணர் ) இந்த சதையினால் ஆன ஜீவாத்மாக்களின் கண்களுக்கு அரிதாகவே காணப்படுகிறார்.
இதனாலேயே, வேதஸாஸ்திரங்கள்,”எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் எளிதில் காண இயலாதவர்” என மிகுந்த உறுதியாக கூறுகின்றன:
எண்ணிலா உழி உழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
– பல காலமாக, எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரை காண நீடித்த தவங்களைச் செய்தவர்களும், இறுதியில் வெட்கத்துடன் அவர்களுடைய தவத்தை நிறுத்திக் கொள்கிறார்கள். “நாம் இத்தனை நாட்கள் தவம் செய்த தேவாதிதேவன் இன்னும் வரவில்லையே!” என்று நினைத்து வருந்துகிறார்கள். ஹிரண்யன், ராவணன் போன்றவர்களும், மற்ற தேவர்கள் கூட, அந்த பரமன் ஸ்ரீ கிருஷ்ணரை அடைவதற்காகத் தவம் செய்கிறார்கள்.
பத்மத்தில் பிறந்த பிரம்மன், ஆயிரக்கணக்கான கோடி ஆண்டுகளுக்கு சமமான காலத்திற்கு தவம் செய்து, பின்னர் மூவுலகுக்கும் அதிபதியாகும் அந்த அதிகாரத்தை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
“வெள்கி நிற்பா” — இதன் கருத்து என்னவென்றால், முதலையின் வாயில் சிக்குண்ட கஜேந்திரன் என்ற யானை செய்த சரணாகதியை ஏற்று எம்பெருமான் ஶ்ரீகிருஷ்ணர் நேராக சென்று மோட்சம் கொடுத்தை அறிந்து, அவ்வளவு காலம் தவம் செய்து முடிவில் வெட்கம் அடைந்தவர்கள் ஆயினர். “இவ்வளவு ஆண்டு தவம் செய்வதற்குப் பதிலாக, ஒரு முதலையால் இழுத்துக் கொள்ளப்பட்டு விட்டால் நன்றாக இருந்திருக்கும்!” என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.
ஏனெனில், விஷ்ணு தர்மம் (69.47) இல் கூறப்படுகிறது:
“பரமாபதம் ஆபன்னோ மனஸா அசிந்தயத் ஹரிம் ஸ து நாகவர: ஸ்ரீமான் நாராயண பராயண: ||
“மேலும்
ஶ்ரீமத் பாகவதம் 6.17.28 இல்
நாராயண பரா: ஸர்வே ந குதஸ்சன பிப்யதி
ஸ்வர்காபவர்க நரகேஷு அபி துல்யார்த்த தர்ஷின:
“நாராயண பராயணர்கள் எந்த நிலையிலும் பயப்படுவதில்லை. அவர்களுக்கு சுவர்க்கம், மோட்சம், நரகம் — அனைத்தும் சமம்; ஏனெனில் அவர்கள் பகவானின் சேவையிலேயே முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.”
இந்த ஸ்லோகம், நாராயண பராயணர்களின் உயர்ந்த நிலையை விளக்குகிறது. அவர்கள் எந்த நிலையிலும் பயப்படுவதில்லை, அவர்களுக்கு சுவர்க்கம், மோட்சம், நரகம் — அனைத்தும் சமம்; ஏனெனில் அவர்கள் பகவானின் சேவையிலேயே முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.
மிகப் பெரும் ஆபத்தில் சிக்கிய கஜேந்திரன் (யானை), பரம் பொருளை மனத்தில் நினைத்து, நாராயணனை ஒரே துணையாக கொண்டவனாக — பாக்கியசாலியாக — பரமபதத்தையே அடைந்தான். எம்பெருமானிடம் முழுமையான சரணாகதியே உயர்ந்த மார்க்கம் என்பதை இது தெளிவாகக் கூறுகிறது.
விண்ணுளார் வியப்ப வந்து
–நித்யசூரிகளும், பிரம்மன் போன்ற தேவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். ஏனெனில், எம்பெருமான் அவர்கள் எல்லோரையும் புறக்கணித்து, ஒரு மிருகத்தின் (யானையின்) சரணாகதியை ஏற்க, தனது திவ்ய வஸ்திரம் அலைப்பாய்ந்தும், கூந்தல் சிதறியும், மிருகத்திற்காக இறங்கி வந்து, தயை காட்டியதைக் கண்டு வியந்தார்கள். எம்பெருமானின் எளிமை அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
பராசரப்பட்டர், தனது ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் (2.57) இல் இவ்வாறு வர்ணிக்கிறார்: “கஜேந்திரனின் வேதனை குரலைக் கேட்டவுடன், எம்பெருமான் அழகிய ஆபரணங்களை அணியாமலேயே, உடனே கருடன் ஏறிச் சென்று, அவனைக் காப்பதற்காகச் செய்த உமது அவசரத்தை நான் வணங்குகிறேன்.”
இதனால்தான் நித்யசூரிகளே வியக்க, எம்பெருமான் தனது பரமபரத்துவத்தை விட்டு இறங்கி வந்து, சாதாரணமாகவும், எளிமையாகவும் அருள் செய்கிறார் என்பது நிலையாகப் புரிகிறது. விச்வக்சேனர் தம் கரத்தை நீட்டிய போதும், அதைப் பற்றிக் கொள்ளாமல், உங்களுக்காக கொண்டு வந்த மாணிக்க பாதுகைகளை அணியாமல், உங்களது திருமகளிர் ‘இதென்ன இது!’ எனக் குழப்பமடைய, உடனே புறப்பட்டீர்.
இங்கு “வெள்கி நிற்பா” என்றவாறு லஜ்ஜையுடன் நிற்கும் தேவர்கள் மற்றும் பிரம்மனை, “விண்ணுளார்” என்பதன் மூலம் வேறுபடுத்துகிறார்.
“விண்ணுளார்” என்பது நித்யசூரிகள் ஆகும். அவர்கள் எப்போதும் எம்பெருமானுக்கு சேவை செய்து அவரின் பெருமையை நுகர்ந்து மகிழ்வோர்களாக இருப்பதால், அவர்கள் பரம்பொருளின் செயலால் ஆச்சரியப்படுகிறார்கள்;
“வந்து” – கஜேந்திரன் தவிக்கிற ஏரிக்கரைக்கு வந்து சேர்ந்தார் என்பதைக் குறிக்கிறது.இங்கு, “சென்று” என்பதற்குப் பதிலாக “வந்து” எனப் பயன்படுத்தியதன் மூலம், அங்கு இருக்கிற பக்தனின் இடம்தான், என் இடம் என்று எம்பெருமான் கருதுவதை அழகாகத் தெரிவிக்கிறார்.
ஆனைக்கு
– பிரம்மன் மற்றும் பிற தேவர்கள் தேவர் குலத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும், கஜேந்திரன் ஒரு மிருகமாகப் பிறந்தவனாக இருந்தாலும், அதை எதையும் பொருட்படுத்தாமல், தன் பக்தன் ஆபத்தில் இருந்த காரணத்துக்காக மட்டும், எம்பெருமான் அவனை காப்பதற்கே முனைந்தார்.
ஸ்ரீ பகவத்கீதை 9.31-இல் தன் பக்தனைப்பற்றி கூறுகிறார்:
க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஶஷ்வச்-சாந்திம் நிகச்சதி
கௌந்தேய பிரதிஜானி ஹி ந மே பக்த: ப்ரணஷ்யதி
பொருள்: அவன் விரைவில் தர்மநெறியில் நிலைபெற்று, நிலையான அமைதியை அடைகிறான். அர்ஜுனனே! “என் பக்தர் ஒருபோதும் அழிவதில்லை என்பதை நீ துணிவுடன் அறிவிப்பாக” என முழுங்குகிறார் முழுமுதற் கடவுள் ஶ்ரீ கிருஷ்ணர் .
பக்தனை காப்பது என்பது எம்பெருமான் கிருஷ்ணரின் வெகு இயல்பானக் கடமை என்பதை ஆழ்வார் சொல்வதை இதன் மூலம் நாம் அறியலாம்.
அன்று
– அதாவது, கஜேந்திரன் தனது பலம் ,தனக்குப் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த நாளில்.
கஜேந்திரன் நிலத்தைக் குறி வைத்து முதலையை இழுக்கின்றான்; முதலை நீருக்குள் யானையை இழுக்கின்றது. இவ்விருவரும் சமமான போராட்டத்தை ஆயிரம் திவ்ய (தேவர்கள்) வருடங்கள் தொடர்ந்தனர். கஜேந்திரன் தன்னைத் தானே காக்க முயன்றதும், பிரம்மனும் தன் சொந்த முயற்சியால் இறைவனைக் காண முயன்றார். இரண்டும் சுய ப்ரயத்தனமே, ஆனால் எந்தவொரு பயனும் தராதது.
அதனால் தான், அன்று – கஜேந்திரன், தன்னை முழுமையாகச் சரணடைவதற்குத் தீர்மானித்த நாளில், அவனை எம்பெருமான் தயையுடன் காத்தார். கஜேந்திரன் முதலில் தன்னை தானே காக்க முயன்றான். ஆனால், அவன் தனது முயற்சிகளை கைவிட்டு சரணாகதி செய்ததினால் தான், பிரம்மன் முதலானோரையும் விட உயர்ந்த நிலைக்கு சென்றான் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று, நீங்கள் ஒரு யானையை, முதலை வாயில் சிக்கிக் கொண்டிருந்த நிலையிலே, கருணையுடன் காப்பாற்றினீர்கள். இன்று நான் ஐம்புலன்கள் (காது/ஒலி, கண்/பார்வை, நாக்கு/சுவை, மூக்கு/வாசனை, தோல்/ஸ்பரிசம்) எனும் முதலைகளால் சிக்குண்டு தவிக்கிறேன். எனக்கும் கருணை செய்ய வேண்டும். யானை ஆயிரம் ஆண்டுகள் சிக்கித் தவித்தது; எது ஆரம்பம் என கணக்கிட இயலாத காலத்திலிருந்து நான் இதே துன்பத்தில் இருக்கிறேன்.
கஜேந்திரன் ஒரு சிறிய குளத்தின் கரையில் சிக்கினான்; நான் பிறப்பு இறப்பு எனும் பரந்து விரிந்த சமுத்ரத்தில் சிக்கியுள்ளேன். கஜேந்திரன் அனுபவித்த துன்பத்தைக் காட்டிலும், ஆழ்வார் அனுபவிக்கும் துன்பம் பெரிது. எனவே, எம்பெருமான் அவர்மேலும் இன்னும் அதிகமான கருணையைக் கொடுக்க வேண்டும் என்பதாகும்.
அருளையீன்ற
– அருள் என்பது தயை அல்லது கருணை. எம்பெருமான் செய்த அருள் செயல் என்னவென்றால்: முதலை வாயிலிருந்து கஜேந்திரனை விடுவித்தல், அவனது காயப்பட்ட காலில் மெதுவாக தொடுதல், தன் மேல் ஆடையை அவன் மீது போட்டு சிகிச்சை செய்தல், அவன் தந்த மலரை தன் திருவடிகளில் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை ஆகும். அதேபோலவே, ஐம்புலன்களால் ஏற்படும் துன்பங்களிலிருந்து ஆழ்வாரையும் விடுவித்து, இந்நாள் வரையிலும் வீணாகிவிட்ட காலத்தை ஈடு கொடுக்க, எம்பெருமான், ஆழ்வாரை தன் சேவகராகப் பணி செய்ய வைத்து, அவருக்கு மன அமைதி அளிக்க வேண்டும் என்பது குறிக்கப்படுகிறது.
கண்ணுறா – பார்வையற்றவன் என்று பொருள்.
“நீங்கள் எனது குறைகளைப் பொருட்படுத்தாமலே எனக்குத் துணை நின்றீர்கள்”, என்ற உணர்வில், எம்பெருமானுக்கு கண்கள் இல்லையென்று ஆழ்வார் மகிழ்ச்சியுடன் சொல்கிறார் — இது நிந்தை ஸ்துதி எனப்படும். குறை சொல்வது போல் சொன்னாலும் அது புகழ்ச்சி ஆகும்.
இது எம்பெருமான் மிகுந்த நியாய உணர்வுடையவர் என்பதைச் சுட்டுகிறது —தன்னைத் தானே (ஜீவாத்மா)காக்க முயல்கிறவர்களைப் புறக்கணித்து, தன்னை (ஜீவாத்மா)முழுவதுமாகத் தியாகித்து எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரை ஒரே சரணமாகக் கொள்பவர்களுக்கு எதுவும் எதிர்பார்க்காமல் அருள் செய்து காக்கிறவர் என்கிறது. இது அவரது ஆழ்ந்த பொறுப்புணர்ச்சியை காட்டுகிறது.
ஆழ்வார் வியப்புடன் எண்ணுகிறார்: “இந்த உலகம் எம்பெருமான் இப்படி ஒரு தன்மையுடையவர் என்பதை அறியாதது எத்தனை வேதனைக்குரியது!”. ஒருவன் தன்னை காக்கும் முயற்சியை விட்டு விட்டு, எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரையே ஆதாரமாகக் கொள்வதாலேயே, எம்பெருமான் அவனுக்கு தலை வணங்க தயாராய் இருப்பவர் என்பதை உலகம் அறியாமல் இருப்பது தான் உண்மையான இழப்பாகும்.
உன்னை என்னோ களைக்கணாக் கருதுமாறே
–எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரை உலகம் முழுவதற்குமான பாதுகாவலர் என்று கருதுகிறவர்கள், அவர் எல்லோரையும் காக்கிறவர் என்று பழுதாக நினைக்கிறார்கள். ஏனென்றால், எம்பெருமான் தன்னை மட்டும் ஒரே சரணமாகவே எண்ணுவோரையே காக்கிறவர்;
ஜிதந்தே ஸ்தோத்திரம் (1.2) –”தேவானாம் தானவானாச சாமான்யம் ஆதி தைவதம்” – தேவர்கள், அசுரர்கள் என இருவகையினருக்கும் எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் ஒரே தெய்வம் என்று கூறினாலும், முதலை போன்றவர்களை அழித்து, யானையைப் போன்றவர்களை காக்கிறார். அப்பொழுது, அவரை எல்லோருக்கும் பாதுகாவலர் என்று உண்மையில் கூறலாமா? இதுவும், “நிந்தை ஸ்துதி” எனப்படும்.
தூற்றுவது போல் தோன்றினாலும், எம்பெருமானது உயர்ந்த தர்மத்திற்க்கு ஏற்ற நடத்தையை புகழ்வதாகவே நம்மால் கொள்ளப்படும்.
ஹரே கிருஷ்ணா
பாசுரம் 45:வளவெழும் தவளமாட
என் கவிதைகள் எம்பிரானுக்கு இனிக்கும்

ஶ்ரீஅரங்கநாதர் .ஶ்ரீரங்கம்
வளவெழும் தவளமாட மதுரை மாநகரந் தன்னுள் *
கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்கமாலை *
துவளத் தொண்டாய தொல்சீர்த் தொண்டரடிப்பொடி சொல் *
இளைய புன் கவிதையேலும் எம்பிறார்கினியவாறே.
பொருள்:
வளம் எழும் — அழகிய; தவள மாட — வெண்ணிற மாடங்களையுடைய; மதுரைமா நகரம் தன்னுள் — வடமதுரையில்; கவள மால் — குவலயாபீடமென்னும்; யானை கொன்ற— யானையைக் கொன்ற; கண்ணனை — கண்ணனை!; அரங்கமாலை — ரங்கநாதனை!; துவள — துளஸிமாலை; தொண்டு ஆய — கைங்கர்யத்தில் ஈடுபட்டவரும்; தொல்சீர் — நிலை நின்றவருமான; தொண்டரடிப்பொடி — தொண்டரடிப்பொடியாழ்வார்; சொல் — அருளிச் செய்த; இளைய புன் — எளிய குறைகளையுடைய; கவிதையேலும் — பாசுரங்களாக இருந்தாலும்; எம்பிராற்கு — பெரிய பெருமாளுக்கு; இனியவாறே! — இனிமையானதே!
தொகுப்புரை:
வெண்ணிற மாடங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய அரண்மனைகளைக் கொண்ட நகரமான மதுராவில்,(வட மதுரையில்) கம்சனால் செழிப்பாக வளர்க்கப்பட்ட வலிமையான குவலயாபீட யானையை ஶ்ரீ கிருஷ்ணர் அழித்தார். அந்த ஶ்ரீ கிருஷ்ணர் திருவரங்கத்தில் உறைகிறார். அவருக்கு துளசி மாலையை செய்து கொடுக்கும் கைங்கர்யம் செய்யும் தொண்டரடிபொடிஆழ்வார் இயற்றிய அரங்கரின் எளியப் பாசுரங்களை பக்தர்கள் பாராயணம் செய்தால், அவர்கள் அவருடைய இனிய பக்தர்களாக மாறுவார்கள்.
விளக்கவுரை:
வளவெழும் தவளமாட
– இதன் பொருள், வெள்ளிப்போன்ற வெண்மையான நிறம் கொண்ட உயரமான அழகிய மாடங்களால் அலங்கரிக்கப்பட்ட நகரம் மதுராபுரி (வடமதுரை) ஆகும்.
ஆழ்வார் இங்கு வடமதுரையின்(மதுரா) அழகை விவரிக்கிறார் — அந்த நகரில் கண்ணன் பிறந்தபோது இருந்த அலங்காரங்களை, தாமே வார்த்தைகளால் காட்சிப்படுத்திக் கொண்டு கூறுகிறார். அந்த ஊரில் விழா காரணமாக கம்சன் அலங்காரம் செய்திருந்தான் என்பது உணரப்படுகிறது.
‘வளம்’ என்பது அழகு எனப் பொருள்; ‘எழும்’ என்பது மிகுதியைக் குறிக்கும்; ‘தவள ‘ என்பது வெண்மை அல்லது வெள்ளி நிறத்தைக் குறிக்கும்.
அதனால், “வளவெழும் தவழமாட” என்ற சொற்றொடர், மிகுந்த அழகுடனும் வெண்மையுடனும் பொலிவூட்டும் மாடமாளிகைகள் அமைந்த நகரம் மதுராபுரி நகரம் (வட மதுரை) எனப் பொருள்படுகிறது.
மதுரை மாநகரம் தன்னுள் – பெரிய வட மதுரை (மதுரா) நகரத்தின் உள்ளே.
வடமதுரை நகரத்தின் பெருமைக்கு என்ன காரணம்? தொடக்கத்தில், எம்பெருமானர் ஶ்ரீ கிருஷ்ணர், வாமன அவதாரம் எடுத்த போது, அங்கு ஶ்ரீ வாமனரின் ஆசிரமம் இருந்தது. அதன் பின்னர், அது ஸ்ரீ ஸத்ருக்னன் என்பவரின் தலைநகரமாக மாறியது. கடைசியாக, அது ஶ்ரீகிருஷ்ணர் பிறந்த ஊர் ஆனது.
“கோலோகம்” என்பது பரமபதமாகவும், திரு இன்பத்தின் நிலையாகவும் சொல்லப்படுகிறது. கோலாகம், எப்போதும் மங்கள ஜோதி பிரகாசித்து கொண்டே இருப்பது போலவே ஒளிர்கிறது. கோலோகத்தில் எப்போதும் உள்ள பிரகாசம் ஒரு விகாரமாக இருக்கலாம் என்று சிலரும் கருதலாம்.
ஆனால் மதுரை, குறிப்பாக வடமதுரை, கண்ணன் பிறந்த புனித பட்டணமாக விளங்குகிறது. அதே நேரத்தில், இந்த உலகம் — ஸம்சாரம் — முழுவதும் அறியாமையால் சூழப்பட்ட இருள் போன்றது. இப்படிப்பட்ட இருளில், ஒரு சிறிய விளக்கே பெரும் ஒளியாகும், பயனுள்ளதாகும். அதேபோல், ஶ்ரீ கிருஷ்ணர் பிறந்த வடமதுரை(மதுரா), பக்தர்களுக்கு ஒளியூட்டும் விளக்காக விளங்குகிறது.
இதனால்தான்:
● வடமதுரை(மதுரா), எம்பெருமானின் அவதாரத் திருப்பாடலாக, இந்நிலையில் மிகுந்த பொருள் வாய்ந்ததாக இருக்கிறது.
● கோலோகம் என்றும் நிலைத்திருக்கும்போதும், இவ்வுலகில் பக்தர்களை வழிநடத்தும் வடமதுரையின் (மதுரா) முக்கியத்துவம் சிறந்ததாக இருக்கிறது.
● இரவில் ஒரு விளக்கின் தேவை எவ்வளவு அவசியமோ, அதுபோலவே சம்சார இருட்டில் ஶ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் ஏற்பட்ட இடமான வடமதுரை (மதுரா) மிகவும் பயனுள்ளதும், பரிசுத்தமுமானதும் ஆகும்.
சுருக்கமாக, வடமதுரை (மதுரா), எம்பெருமானின் அவதாரத்தால், இகழக்கூடிய சம்சார உலகிலும் ஒரு மேன்மையான புனிதத்தலமாக விளங்குகிறது. இவ்வுலகில் வாழும் அறியாமை நிறைந்த ஜீவாத்மாகளுக்கு அது கோலாகத்தை விட சிறந்ததாய் தோன்றுகிறது — ஏனெனில் அது அவர்களை வெளிச்சம் நோக்கி அழைத்துச் செல்கிறது.

ஶ்ரீகிருஷ்ணரின் லீலை-
குவளயாபீட யானையை அழித்தல்.
கவளமால் யானை கொன்ற கண்ணனை
— ஶ்ரீ கிருஷ்ணரை கொல்வதற்க்காக, குவலயாபீடம் என்ற மிகப் பெரிய யானைக்கு அதன் கோபத்தை தூண்டுவதற்காக உணவை பெரிய கவளம், கவளமாக கொடுத்து வளர்க்கப் பட்டதை இங்கே குறிப்பிடப் படுகிறது.
ஶ்ரீகிருஷ்ணர் யானையோடு புரிந்த லீலைகளை எண்ணுகிறார் ஆழ்வார். அதாவது “ஆனைக்கன்று அருளை ஈந்த” (கஜேந்திரன் என்ற யானைக்கு மோட்சம் என்ற கருணையைப் புரிந்தவர்) என்றும் , இங்கு “யானைகொன்ற” (குவலயாபீட யானையை வதைத்தவர்) என கூறுகிறார். இந்த இரு லீலைகள் “தேவானாம் தான வானாம் ச” என்ற ஸ்லோகத்தின் பொருளை அதாவது தன் பக்தர்களையும், விரோதிகளையும் சமமாக நடத்தும் ஶ்ரீ கிருஷ்ணரின் உன்னத குணத்தை நமக்கு காட்டுகிறது.
ஶ்ரீ கிருஷ்ணர் குறிப்பாய் குவலயாபீடம் யானை போன்ற எதிரிகளை அழித்து, ஊரார் மகிழும்படி தன்னை பிரகடனம் செய்தார்; அதேபோல், அரங்கர் பாவங்களை அழித்து, ஆழ்வார் எம்பெருமானை அனுபவிக்கும் பாதையில் தடைகளை நீக்கினார். மேலும் ஆழ்வார் தம்மை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க தன்னையேக் கொடுத்தார்.
கண்ணனை
—ஆண்டாள் தன் திருப்பாவை 25-ஆம் பாசுரத்தில் கூறியபடி, “ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர”.
அவன் ஒரிடத்தில் இரவில் பிறந்து அப்போதே மற்றொரு இடத்துக்குப் போய், பிறகு வேறு ஒருத்தி அவரைப் பேணி வளர்த்தார். பின்னர் பிறந்த இடத்துக்கே திரும்பி, எல்லாரும் காணும் படியாக வெளிப்பட்டு, கம்ஸன் உள்ளிட்ட விரோதிகளை அழித்தார். இந்த மகத்துவத்தை ஆழ்வார் மகிழ்ந்து பாடுகிறார்.
அரங்கமாலை
— ஆழ்வார் அந்த ஶ்ரீகிருஷ்ணர் அவதாரத்திற்கு பிறகு பிறந்தார். அந்த ஶ்ரீகிருஷ்ணர், பின்னர் அரங்கராக ஆழ்வாரின் எதிரிகளின் கொட்டத்தை அடக்கினார்.
மாலை — தன் பக்தர்களிடம் தீவிரமான பிரியத்தை கொண்டவர். தன் பக்தர்களின் எதிரிகளை அழித்து, தன்னை அவர்களின் அனுபவத்திற்கு அர்ப்பணிப்பதை, தன் தனிப்பட்ட நன்மை என்று கருதுபவர் ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார்.
துளவத் தொண்டாய — துளசிக்கு சேவை செய்வோன்.
அதாவது ஆழ்வார் துளசி மற்றும் துளசிச் செடிக்கு உயர்ந்த சேவை செய்வதை அறிகிறோம். எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு சேவை செய்வது புருஷார்த்தம் (ஜீவாத்மாக்களின் உயரிய குறிக்கோள்). ஆனால் எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களுக்கு சேவை செய்வது புருஷார்த்தத்தின் உச்சம் எனக் கருதப்படுகிறது. அதை “எல்லை நிலம்”, என பூர்வாசாரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இங்கே “துளசி” என்ற சொல் அனைத்து பக்தர்களையும் குறிக்கின்றது.
துளசிக்கு சேவை செய்வது என்பது அனைத்து பக்தர்களுக்கும் சேவை செய்யும் அளவிற்கு சமம். அனைத்து பக்தர்களுக்கு சேவை செய்யும்போது அபசாரம் (தீமை) நிகழ வாய்ப்பு இருக்கக்கூடும். ஆனால், துளசிக்கு அப்படி எந்த அபசாரமும் இருப்பதில்லை.
தொல்சீர்
—எம்பெருமானுக்கு அடிமையாய் இருப்பது (பகவத் சேஷத்துவம்) மிக உயர்ந்தது தான். ஆனால், அந்த உயர்ந்த நிலையின் எல்லை என்பது — அவரை நேசிக்கும் வைஷ்ணவர்களுக்கு (பக்தர்களுக்கு) சேவை செய்வது (பாகவத சேஷத்துவம்).
“துளவத் தொண்டாய” என்று கூறுவதன் மூலம், எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு துழாய் மாலை கட்டிப்போடும் சேவையை அவர் குறிப்பிடுகிறார். அதேபோல், “தொல்சீர்” என்று சொல்லுவதால், அந்த சேவையின் மிக உயர்ந்த நிலையான வைஷ்ணவர்களுக்கு செய்யும் சேவையை (அதாவது எம்பெருமானின் அடியார்களுக்கு செய்யும் சேவை) குறிக்கிறார்.

தொண்டரடிப்பொடிஆழ்வார்
தொண்டரடிப்பொடி சொல்
— பக்தர்களுக்கு செய்யும் சேவையை தனது தலையாயக் கடமையாகக் கொண்டவர் ஆழ்வார். அதனால்,”தொண்டரடிப்பொடி” என்ற நாமத்தால் அழைக்கப்படுகிறார். இதிலிருந்து அவரது அடையாளம் ஞானம், ஆனந்தம், அல்லது பகவத்சேஷத்வம் (எம்பெருமானுக்கே உடைமை) என்பவைகளால் வரையறுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. ஏனெனில், நம்முடைய சாஸ்திரங்கள் ஆத்மாவை ஞானம், ஆனந்தம், மற்றும் சேஷபூதனாகவே (எப்போதும் எம்பெருமானுக்கே சேவை செய்யும் இயல்புடையவன்) என வரையறுக்கின்றன.
ஆனால், ஆழ்வார், பாகவத சேஷத்வமே (எம்பெருமானின் பக்தர்களுக்குச் சேவை செய்வது) அவருடைய உண்மையான அடையாளமாக அவர் எடுத்துக்கொள்கிறார்.

ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு

சைதன்ய சரிதாமிர்தம் புத்தகம்
சைதன்ய சரிதாமிர்தம், மத்திய-லீலா 13.80: கோபி பர்து: பாத கமலயோர் தாச தாசானு தாச:
“நான் கோபியர்களின் இறைவனான ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களின் அடியாரின் அடியாரின் அடியான் மட்டுமே” என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகிறார்.
அதுபோலத்தான், ஆழ்வார் “தொண்டரடிப்பொடி”, அதாவது எம்பெருமானின் தொண்டர்களின் பாதத் தூசியென்பதாகத் தன்னை அடையாளப் படுத்தி கொண்டார்.
இளைய புன் கவிதையேலும்
– இந்தப் பாசுரங்களில் பயன்படுத்தப்படும் சொற்கள் இளமையானவை என்று, அதாவது முழுமையாகத் தேர்ந்தெடுக்கப்படாதவை, அனுபவ குறைவால் ஏற்படும் குறைபாடுகள் உள்ளதாக ஆழ்வார் சொல்கிறார். இதற்கெல்லாம் காரணம், உண்மையில் இவற்றில் எந்தக் குறையும் இல்லாவிட்டாலும், அவர் தனது தாழ்மையை வெளிப்படுத்துவதற்காகத்தான் இவ்வாறு கூறுகிறார்.
எம் பிறார்க்கு இனியவாறே
– “என் சொற்கள் எம் பெருமான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு இனிமையாக இருக்கவில்லயா? ” என்று எண்ணுகிறார் ஆழ்வார்.
முன்னால் பார்த்தது போல, “கிம் ம்ருஷ்டம் ஸூத வசனம்”” (கேட்க இனிமையானது எது? – ஒருவரது குழந்தையின் மழலைச்சொற்கள்), என்பதைச் சுட்டிக் காட்டி, ஆழ்வார் “என் மூடத்தனமான சொற்களால் எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு ஆனந்தம் ஏற்பட்டதென்றால் அதில் என்ன ஆச்சரியம்?” என ஆழ்வார் வியக்கிறார். ஒரு குழந்தையின் உளறல் (மழலை வார்த்தைகள்) குழந்தையின் தந்தைக்குப் பிரியமாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.
அதைப்போலவே, ஸ்தோத்ர ரத்னம் 46ஆம் ஸ்லோகத்தில் ஆளவந்தார்: “ஓ எம்பெருமானே! உம்மையே என்றும் பின்பற்றும் ஒருவனாக, மனத்தில் பிற எல்லா ஆசைகளும் முழுமையாக அகன்று அமைதியானவனாய், உமக்கு மட்டும் என்றும், அகந்தையில்லா தூய்மையாய் சேவை செய்யும் அடியனாக, உம்மை மகிழ்விக்கிறவனாக நான் எப்போது வாழ்வேன்? உம்மை பெற்ற வாழ்க்கையால் (ஶ்ரீகிருஷ்ணரை உடைய வாழ்க்கையால்) நான் எப்போது பூரணமான மகிழ்ச்சியை அடைவேன்?”
இது பக்தனின் பரம அபிலாஷையாக — எப்போதும் எம்பெருமானை பின்பற்றி, பிற ஆசைகள் இல்லாமல், பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு, அவரை மகிழ்விப்பதே புருஷார்த்தம் என்கிறார்.
எனவே, எம்பெருமானுக்கு சந்தோஷத்தை உண்டாக்குவதே ஒரு பந்தப்பட்ட ஜீவாத்மாவின் பிறப்பின் முக்கியக் காரணம் என்பது விளங்குகிறது.
மற்ற ஆழ்வார்களைப் போல அல்லாமல், இந்த ஆழ்வார் தன் இறுதி பாசுரத்தில், இப்பாசுரங்களைப் பாடுவோருக்குக் கிடைக்கும் பலனைச் சொல்லவில்லை. ஏனென்றால், இங்கே பலனாகக் கொள்ளப்படுவது எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் அடையும் சந்தோஷம் மட்டுமே ஆகும்.
ஆழ்வார் திருமாலை என்னும் சொல் மாலையை கட்டி சமர்ப்பித்ததால் எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் மகிழ்ந்தது போலவே, இப்பாசுரங்களைப் படிக்கிறவர்கள் இருந்தாலும், அவர்களாலும் எம்பெருமான் ஶ்ரீ கிருஷ்ணர் மகிழ்வார்.

முழுமுதற் கடவுள் ஶ்ரீகிருஷ்ணரின் திருகமலப் பாதங்கள்
** ஹரே கிருஷ்ணா **

