அங்கண் நெடுமதிள்
(10 - ஆம் திருமொழி)
(1)
அங்கண் நெடு மதிள் புடை சூழ், அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும், விளக்கும் சோதி
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர், விளக்காய்த் தோன்றி
விண்முழுதும் உயக்கொண்ட வீரன் தன்னை
செங்கண் நெடுங் கருமுகிலை இராமன் தன்னைத்
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை, எம்பெருமான் தன்னை
என்று கொலோ! கண்குளிரக் காணும் நாளே
(2)
வந்து எதிர்ந்த தாடகை, தன் உரத்தைக் கீறி
வரு குருதி பொழிதர, வன்கணை ஒன்று ஏவி
மந்திரம் கொள் மறை முனிவன், வேள்வி காத்து
வல்லரக்கர் உயிர் உண்ட, மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர் நகைசேர், செழுந்தண் சோலைத்
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணிமணி ஆசனத்து இருந்த, அம்மான் தானே
(3)
செவ்வரி நற்கரு நெடுங்கண், சீதைக்கு ஆகிச்
சினவிடையோன் சிலை இறுத்து, மழுவாள் ஏந்தி
வெவ்வரி நற்சிலை வாங்கி, வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த, வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை, உயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எவ்வரி வெஞ்சிலைத், தடக்கை இராமன் தன்னை
இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே
(4)
தொத்து அலர் பூஞ்-சுரிகுழல், கைகேசி சொல்லால்
தொன்னகரம் துறந்து, துறைக் கங்கை தன்னைப்
பத்தி உடைக் குகன் கடத்த, வனம் போய்ப் புக்குப்
பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து
சித்திரகூடத்து இருந்தான் தன்னை – இன்று
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எத்தனையும் கண் குளிரக் காணப் பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே
(5)
அம்பொன்-நெடு மணிமாட, அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன் வாய்த், தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதை கேட்டு, மிதிலைச் செல்வி
உலகு உய்யத் திருவயிறு, வாய்த்த மக்கள்
செம்பவளத் திரள்வாய்த், தன் சரிதை கேட்டான்
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன் சரிதை, செவியால் கண்ணால்
பருகுவோம் – இன்னமுதம் மதியோம் அன்றே
(6)
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவப் பகையேறி, அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடுந்தோள், நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி
சென்று இனிது வீற்றிருந்த, அம்மான் தன்னைத்
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
என்றும் நின்றான், அவன் இவன் என்று ஏத்தி – நாளும்
இறைஞ்சுமினோ, எப்பொழுதும் தொண்டீர்! நீரே
** ஹரே கிருஷ்ணா **

