அத்தியாயம் – 13
பூரணத்துவம் அடைந்தவரின் நடத்தை
பதம் 7.13.1 : ஸ்ரீ நாரத முனிவர் கூறினார்: ஆத்ம ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் திறமையுடைய ஒருவன் எல்லா பெளதிகத் தொடர்புகளையும் துறந்து விட்டு, உடலை ஒரு வசிப்பிடமாக மட்டுமே வைத்துக் கொண்டு, ஒவ்வொரு கிராமத்திலும் ஓரிரவை மட்டுமே கழித்துக் கொண்டு, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பிரயாணம் செய்ய வேண்டும். இவ்வாறு உடல் தேவைகளுக்காக எதையும் சார்ந்திராமல், ஒரு சந்நியாசி உலகம் முழுவதிலும் பிரயாணம் செய்ய வேண்டும்.

பதம் 7.13.2 : துறவு வாழ்வை ஏற்றுள்ள ஒருவர், உடலை மறைப்பதற்குரிய ஓர் ஆடையைக் கூட தவிர்க்க முயல வேண்டும். அவர் எதையேனும் அணிவாரானால், அது இடுப்புத் துணி மட்டுமாகவே இருக்க வேண்டும். தேவை இல்லையென்றால் அவர் ஒரு தண்டத்தைக் கூட ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஒரு சந்நியாசி தண்டத்தையும் கமண்டலத்தையும் தவிர வேறெதையும் உடன் எடுத்துச் செல்லக் கூடாது.

பதம் 7.13.3 : பூரண ஆத்ம திருப்தியுடைய சந்நியாசி, வீடு வீடாகப் பிச்சையெடுத்து வாழ வேண்டும். அவர் எந்த மனிதரையோ, இடத்தையோ சார்ந்திராமல், அனைத்து ஜீவராசிகளின் நலம் விரும்பும் ஒரு நண்பராகவே எப்பொழுதும் இருக்க வேண்டும். இவ்வாறாக அவர் ஓர் அமைதியான கலப்படமற்ற நாராயண பக்தராக இருந்து கொண்டு, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சஞ்சரிக்க வேண்டும்.

பதம் 7.13.4 : ஒரு சந்நியாசி, எப்பொழுதும் பரமபுருஷரை அனைத்திலும் வியாபித்திருப்பவராகவும், இப்பிரபஞ்சம் உட்பட்ட அனைத்தும் பரம புருஷரையே சார்ந்திருப்பதாகவும் காண முயல வேண்டும்.

பதம் 7.13.5 : உணர்வற்ற நிலையிலும், உணர்வுள்ள நிலையிலும், அவ்விரண்டிற்கும் இடையில் இருக்கும் பொழுதும், அவன் ஆத்மாவை அறிய முயன்று, அதிலேயே முழுமையாக நிலைபெற்றிருக்க முயற்சிக்க வேண்டும். இவ்விதமாக, பந்தப்பட்ட நிலையும் விடுதலையடைந்த நிலையும் வெறும் மாயையே என்பதை அவன் உணர வேண்டும். இத்தகைய ஓர் உயர்ந்த அறிவுடன், அனைத்திலும் ஊடுருவிப் பரவியுள்ள பூரண உண்மையை மட்டுமே அவன் காண வேண்டும்.

பதம் 7.13.6 : ஜட உடல் நிச்சயமாக அழியக் கூடியது. ஒருவனுடைய வாழ்நாள் எவ்வளவு என்பதும் நிச்சயமில்லை என்பதால், வாழ்வோ சாவோ இரண்டுமே போற்றத்தக்கதல்ல. மாறாக, ஜீவராசியானவன் எதில் தோன்றி மறைகிறானோ அந்த நித்தியமான காலத்தத்துவத்தை மட்டுமே ஒருவன் கவனிக்க வேண்டும்.

பதம் 7.13.7 : காலத்தை வீணடிக்கும் இலக்கியங்களை, அதாவது ஆன்மீக நன்மையைத் தராத இலக்கியங்களை நிராகரிக்க வேண்டும். ஒருவன் ஆசிரியர் தொழிலை, வாழ்க்கைத் தேவைகளைச் சம்பாதிக்கும் ஓர் உபாயமாக பாவிக்கக் கூடாது. மேலும் ஒருவன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதையும் விட்டுவிட வேண்டும்.

பதம் 7.13.8 : ஒரு சந்நியாசி பல சீடர்களைத் திரட்டுவதற்காக பெளதிக நன்மைகளின் கவர்ச்சிகளைப் பற்றி எடுத்துரைக்கக் கூடாது. தேவையில்லாமல் பல புத்தகங்களை அவர் படிக்கக் கூடாது. அவர் ஜீவனோபாயத்திற்காக சொற்பொழிவுகளை நிகழ்த்தக் கூடாது. அவர் அனாவசியமாக பெளதிக செல்வங்களை அதிகரிக்கவும் முயற்சி செய்யக் கூடாது.

பதம் 7.13.9 : உண்மையாகவே ஆன்மீக உணர்வில் முன்னேறியுள்ள, அமைதியும், சமநிலையும் உள்ள ஒருவன், திரிதண்டம், கமண்டலம் போன்ற ஒரு சந்நியாசியின் சின்னங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தேவைக்கேற்ப சிலசமயங்களில் அந்த அடையாளச் சின்னங்களை அவன் ஏற்றுக் கொள்ளலாம். சிலசமயங்களில் அவற்றை அவன் விலக்கியும் விடலாம்.

பதம் 7.13.10 : ஒரு சந்நியாசி அல்லது சாது மனித சமுதாயத்தின் பார்வைக்குத் தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமல் இருக்கக்கூடும். ஆனால் நடத்தையில் அவரது நோக்கம் வெளிப்படுகிறது. மனித சமுதாயத்திடம் அவர் தன்னை ஒரு அமைதியற்ற குழந்தைப் போல் காட்டிக் கொள்ள வேண்டும். அவர் சிந்தனைமிக்க சிறந்த பேச்சாளராக இருப்பினும், தன்னை ஒரு ஊமையாக காட்டிக் கொள்ள வேண்டும்.

பதம் 7.13.11 : இதற்கு ஒரு வரலாற்று உதாரணமாக, கற்றறிந்த முனிவர்கள் பிரகலாத மகாராஜனுக்கும், ஒரு மலைப்பாம்பைப் போல் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பெருந்துறவிக்கும் இடையில் நிகழ்ந்த பண்டைக் காலத்து உரையாடலைப் பற்றிய கதையைக் கூறுகின்றனர்.

பதங்கள் 7.13.12 – 7.13.13 : பரமபுருஷருக்கு மிகவும் பிரியமுள்ள சேவகரான பிரகலாத மகாராஜன் துறவிகளின் இயற்கையை ஆராய்ந்து அறியும் பொருட்டு, தனது அந்தரங்க சகாக்கள் சிலருடன் ஒருசமயம் பிரபஞ்சத்தை சுற்றி வரச் சென்றார். இவ்வாறாக அவர் காவேரி நதிக்கரையை அடைந்தார். அருகில் சஹ்யம் என்ற ஒரு மலை இருந்தது. அங்கு ஆன்மீகத்தில் மிகவும் முன்னேறிய சிறந்த துறவியொருவர் அழுக்கும், புழுதியும் படிந்த உடலுடன் தரையில் படுத்திருப்பதைக் கண்டார்.

பதம் 7.13.14 : அத்துறவியின் செயல்களாலோ அவரது தேக அம்சங்களாலோ, அவரது வார்த்தைகளாலோ அல்லது அவரது வர்ணாஸ்ரம நிலையின் அடையாளங்களாலோ, அவர் தாங்கள் அறிந்திருந்த அதே நபர்தானா என்பதை மக்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.

பதம் 7.13.15 : முன்னேற்றமடைந்த பக்தராகிய பிரகலாத மகாராஜன், ஒரு மலைப் பாம்பின் ஜீவனோபாய முறையை ஏற்றுக் கொண்டிருந்த அத்துறவியை முறையாகப் பூஜித்து வணங்கினார். இவ்வாறு அத்துறவியை வழிபட்டு, அவரது தாமரைப் பாதங்களில் தன் தலையைத் தொட்டு வணங்கிய பிரகலாதர், அவரைப் பற்றி அறியும் பொருட்டு பின்வருமாறு மிகவும் அடக்கத்துடன் வினவினார்.

பதங்கள் 7.13.16 – 7.13.17 : அத்துறவி மிகவும் பருமனாக இருப்பதைக் கண்டு பிரகலாதர் பின்வருமாறு கூறினார்: ஐயா, உங்களுடைய ஜீவனோபாயத்திற்காக எவ்வித முயற்சியையும் நீங்கள் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் சுகபோகங்களை அனுபவிக்கும் ஒரு பௌதிகவாதியின் உடலைப் போன்ற ஒரு பருத்த உடலை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஒரு செல்வந்தன் வேலை எதுவும் செய்யாமல் உண்டும், உறங்கியும் வாழ்க்கையைக் கழிப்பதால் மிகவும் பருத்தவனாக ஆகிறான் என்பதை நான் அறிவேன்.

பதம் 7.13.18 : பிராமணரே, ஆத்ம ஞானத்தில் முழுமை பெற்றவராகிய நீங்கள் செய்யக்கிடப்பது எதுவுமில்லை என்பதால், கீழே இவ்வாறு படுத்துக்கிடக்கிறீர்கள். புலன்களை அனுபவிப்பதற்கு உங்களிடம் பணம் இல்லை என்பதும் தெளிவாகிறது. அப்படியிருக்க உங்களுடைய உடல் இவ்வளவு பருமனாக ஆனது எவ்வாறு? என்னுடைய வேள்வி விவேகமற்றதாக இல்லையெனில், இது எவ்வாறு நிகழ்ந்தது என்று விவரிக்க வேண்டுகிறேன்

பதம் 7.13.19 : மதிப்புற்குரிய தாங்கள் எல்லா வகையிலும் கற்றறிந்தவராகவும், நிபுணராகவும், அறிவாளியாகவும் காணப்படுகிறீர்கள். இதயத்தை மகிழ்விக்கும் மிகவும் இனிமையான வார்த்தைகளைப் பேசக்கூடியவர். பொதுமக்கள் பலன் கருதும் செயல்களில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்தும், செயலற்றவராக இங்கு நீங்கள் படுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

பதம் 7.13.20 : நாரதமுனி தொடர்ந்து கூறினார்: தைத்திய ராஜனான பிரகலாத மகாராஜனால் இவ்வாறு கேள்வி கேட்கப்பட்ட பொழுது, அவரது அமுது போன்ற வார்த்தைகளின் பொலிவால் வசீகரிக்கப்பட்ட அத்துறவி, பிரகலாதரின் கேள்விகளுக்குப் பின்வருமாறு பதில் கூறலானார்.

பதம் 7.13.21 : துறவியான பிராமணர் கூறினார்: அசுரர்களில் சிறந்தவரும், முன்னேற்றமும், நாகரீகமும் அடைந்த மனிதர்களால் அங்கீகரிக்கப்பட்டவருமான பிரகலாத மகாராஜனே, உங்களுடைய ஞான திருஷ்டியின் மூலமாக வாழ்வின் வெவ்வேறு நிலைகளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இந்த ஞான திருஷ்டியினால் ஒரு மனிதனின் குணங்களைக் கண்டறிந்து, பொருட்களை ஏற்பது மற்றும் விலக்குவதன் பலன்களை உள்ளபடி தெளிவாக அறிந்திருக்கிறீர்கள்.

பதம் 7.13.22 : எல்லா ஐசுவரியங்களையும் முழுமையாகப் பெற்றவரும், பரம புருஷருமாகிய பகவான் நாராயணர், தூய பக்தர் என்ற காரணத்தினால் உங்களுடைய இதயத்தில் மேலோங்கி இருக்கிறார். சூரியன் பிரபஞ்ச இருளைப் போக்குவது போல், பகவான் அறியாமை இருளை முழுமையாகப் போக்கிவிடுகிறார்.

பதம் 7.13.23 : அரசே, நீங்கள் எல்லாம் அறிந்தவராக இருந்தும், என்னிடம் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். வேத வல்லுணர்களிடமிருந்து நான் கேட்டு அறிந்ததற்கேற்ப அவற்றிற்கு விடையளிக்க நான் முயற்சி செய்கிறேன். இவ்விஷயத்தில் நான் மௌனமாக இருக்க முடியாது. ஏனெனில் தன்னை புனிதப்படுத்திக் கொள்ள விரும்பும் ஒருவன் உங்களைப் போன்ற ஒருவரிடம் பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

பதம் 7.13.24 : என்னுடைய திருப்தியடையாத பெளதிக ஆசைகளின் காரணத்தால், நான் இயற்கைச் சட்டங்களின் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டேன். இவ்வாறாக நான் வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டவனாய், பல்வேறு உயிரினங்களின் வாழ்வுக்காகப் போராடிக் கொண்டிருந்தேன்.

பதம் 7.13.25 : விரும்பத்தகாத பெளதிக புலன் நுகர்வின் காரணத்தால், காலப்போக்கில் எனது கருமங்களால் விளைந்த பரிணாமத்தின் மூலமாக இந்த மனித ரூபத்தை நான் பெற்றேன். இந்த மனித ரூபத்தினால் என்னைச் சுவர்க்க லோகங்களுக்கோ, முக்திக்கோ, தாழ்ந்த உயிரினங்களுக்கோ அல்லது மீண்டும் மனிதப் பிறவிக்கோ அழைத்துச் செல்ல முடியும்.

பதம் 7.13.26 : மனித உருவிலுள்ள இவ்வாழ்வில், பாலுறவு சுகத்திற்காக ஓர் ஆணும் பெண்ணும் இணைகின்றனர். ஆனால் அவர்களில் ஒருவரும் மகிழ்ச்சியாக இல்லை என்பதுதான் அனுபவப்பூர்வமான உண்மை. ஆகவே இத்தகைய முரணான பலன்களைக் கண்டு, பெளதிக செயல்களில் பங்கேற்பதை நான் நிறுத்திவிட்டேன்.

பதம் 7.13.27 : ஜீவராசிகளுக்குரிய உண்மையான வாழ்வுமுறை, உண்மையான ஆன்மீக ஆனந்தத்தை அனுபவிப்பதாகும். பெளதிக செயல்களை எல்லாம் நிறுத்திவிடும் பொழுதுதான் இந்த ஆனந்தத்தை ஒருவனால் அடையமுடியும். பெளதிக புலனின்பம் வெறும் கற்பனையே ஆகும். ஆகவே இவ்விஷயத்தைக் கருத்திற் கொண்டுதான் நான் எல்லா பௌதிக செயல்களையும் நிறுத்திவிட்டு இங்கு படுத்துக் கொண்டிருக்கிறேன்.

பதம் 7.13.28 : இவ்வாறாக உடலுக்குள் வாழும் பந்தப்பட்ட ஜீவாத்மா தன்னை உடலுடன் அடையாளப்படுத்திக் கொள்வதால், தனது உண்மையான சுயநலத்தை மறந்து விடுகிறான். உடல் பெளதிகமானது என்பதால் அவன் இயற்கையாகவே ஜட உலகின் பலதரப்பட்ட நிலைகளால் கவரப்பட்டு, பௌதிக வாழ்வின் துன்பங்களை அனுபவிக்கிறான்.

பதம் 7.13.29 : அறியாமையின் காரணத்தால், புல்லால் மூடப்பட்டுள்ள கிணற்றுக்குள் இருக்கும் நீரைக் காண முடியாமல் ஒரு மான் நீரைத் தேடி வேறு எங்கோ ஓடுகிறது. அதுபோலவே, ஜட உடலால் மூடப்பட்டுள்ள ஜீவராசி தனக்குள் இருக்கும் மகிழ்ச்சியை காண முடியாமல், ஜட உலகில் மகிழ்ச்சியைத் தேடி அலைகிறான்.

பதம் 7.13.30 : ஜீவராசியானவன் மகிழ்ச்சியடையவும், துன்பங்களுக்கான காரணங்களிலிருந்து விடுபடவும் முயற்சி செய்கிறான். ஆனால் ஜீவராசிகளின் பல்வேறு உடல்கள் ஜட இயற்கையின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதால், வெவ்வேறு உடல்களில் அவன் போடும் திட்டங்களெல்லாம் இறுதியில் ஒவ்வொன்றாகத் தோல்வியடைகின்றன.

பதம் 7.13.31 : பெளதிக செயல்கள் எப்பொழுதும் அத்யாத்மிகம், அதிதைவிகம் மற்றும் அதிபௌதிகம் என்ற மூன்றுவித துன்ப நிலைகளின் கலப்படத்தைக் கொண்டுள்ளன. ஆகவே இத்தகைய செயல்களால் ஒருவன் சிறிதளவு வெற்றியை அடைந்த போதிலும், இந்த வெற்றியால் என்ன நன்மை? அவன் இன்னமும் பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய் ஆகியவற்றிற்கும், தனது கர்ம விளைவுகளுக்கும் உட்பட்டவனாகவே இருக்கிறான்.

பதம் 7.13.32 : அந்த பிராமணர் தொடர்ந்து கூறினார்: தன் புலன்களுக்கு அடிமையான ஒரு செல்வந்தன், பொருள் சேர்ப்பதில் பேராசை கொண்டு, அதிக செல்வமிருந்தும் எல்லாப் பக்கங்களிலிருந்து வரும் பயத்தின் காரணத்தால், தூக்கமின்மையால் அவதிப்படுவதை உண்மையாகவே நான் காண்கிறேன்.

பதம் 7.13.33 : பெளதிக செல்வாக்கும், செல்வமும் உள்ளவர்களாகக் கருதப்படுபவர்கள், அரசாங்க சட்டம், திருடர்கள், மோசக்காரர்கள், எதிரிகள், குடும்ப அங்கத்தினர்கள், மிருகங்கள், பறவைகள், தானம் யாசிப்பவர்கள், தவிர்க்க முடியாத காலத்தத்துவம் மற்றும் தாங்கள் ஆகியவற்றினால் எப்பொழுதும் கவலை நிறைந்தவர்களாய், மாற்றமுடியாத அச்சத்திற்கு உள்ளாகின்றனர்.

பதம் 7.13.34 : மனித சமுதாயத்திலுள்ள அறிவாளிகள் வருத்தம், மாயை, பயம், கோபம், பற்று, ஏழ்மை, மற்றும் அனாவசியமான உழைப்பு ஆகியவற்றிற்கு மூலகாரணமாக இருப்பதை விட்டுவிட வேண்டும். அனாவசியமான கெளரவத்திலும், பணத்திலும் உள்ள ஆசையே இவற்றிற்கெல்லாம் மூலகாரணம்.

பதம் 7.13.35 : ஒருவன் எப்படி சிறிதளவு மட்டுமே சேகரிப்பதிலும், அசையாமல் ஒரே இடத்தில் இருப்பதிலும் திருப்தியடைய வேண்டும் என்ற விஷயத்தில் பின்பற்றத்தக்க உபதேசங்களைக் கொடுக்கும் தேனீயும், மலைப்பாம்பும் மிகச் சிறந்த ஆன்மீக ஆசான்களாக விளங்குகின்றன.

பதம் 7.13.36 : வண்டுகளிடமிருந்து, பொருள் சேர்ப்பதில் பற்றற்றவனாக இருக்க நான் கற்றுக்கொண்டேன். பணமானது தேனைப் போன்றது என்ற போதிலும், ஒருவன் உரிமையாளனைக் கொன்று பணத்தை அவனிடமிருந்து அபகரித்துச் சென்றுவிடக் கூடும்.

பதம் 7.13.37 : நான் எதையுமே அடைய முயற்சி செய்வதில்லை. ஆனால் தானாகவே கிடைப்பதைக் கொண்டு திருப்தியடைகிறேன். எனக்கு எதுவுமே கிடைக்காத சமயத்திலும், ஒரு மலைப்பாம்பைப் போல் சலனமின்றி பொறுமையாக இருந்துகொண்டு, பல நாட்களுக்கு இவ்வாறு படுத்துக் கொண்டிருக்கிறேன்.

பதம் 7.13.38 : சிலசமயங்களில் மிகக் குறைவாகவும், சிலசமயங்களில் மிகவும் அதிகமாகவும் நான் சாப்பிடுகிறேன். சிலசமயங்களில் உணவு சுவைமிக்கதாகவும், சிலசமயங்களில் சுவையற்றதாகவும் இருக்கும். சிலசமயங்களில் அலட்சியமாக உணவு கொடுக்கப்படும். சிலசமயங்களில் பகலிலும், சிலசமயங்களில் இரவிலும் நான் சாப்பிடுவேன். இவ்வாறாக சுலபமாகக் கிடைப்பதையே நான் சாப்பிடுகிறேன்

பதம் 7.13.39 : என்னுடைய விதியின்படி சணல் துணி, பட்டு, பருத்தி, மரவுரி அல்லது மான்தோல் ஆகியவற்றுள் எது கிடைக்கிறதோ, அதையே உடலை மூடிக்கொள்ள நான் உபயோகிக்கிறேன். அதைக் கொண்டு நான் சஞ்சலமில்லாமல் முழு திருப்தியடைகிறேன்.

பதம் 7.13.40 : சிலசமயம் தரையிலும், சிலசமயம் இலைகள், புல் அல்லது கற்களின் மேலும், சிலசமயம் சாம்பல் குவியலின் மேலும், அல்லது சிலசமயம் பிறருடைய விருப்பத்தினால், ஓர் அரண்மனையில் தலையணைகளுடன் கூடிய முதல் தரமான ஒரு படுக்கையிலும் நான் படுத்துக் கொள்கிறேன்.

பதம் 7.13.41 : பிரபுவே, சிலசமயம் நான் நன்றாக நீராடி, என் உடல் முழுவதிலும் சந்தனம் தடவி, மலர் மாலை அணிந்து, நல்ல ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு ஓர் அரசனைப் போல் யானையின் மேல் அல்லது தேரின்மேல் அல்லது குதிரையின் மேல் பிரயாணம் செய்கிறேன். ஆனால் சிலசமயம் பேய் பிடித்தவன் போல் நிர்வாணமாகப் பிரயாணம் செய்கிறேன்.

பதம் 7.13.42 : வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு மனநிலைகளில் இருக்கின்றனர். ஆகவே அவர்களைப் புகழ்வதோ அல்லது இகழ்வதோ என் வேலையல்ல. அவர்களுடைய நலனை மட்டுமே நான் விரும்புகிறேன். அவர்கள் பரமாத்மாவுடன், அல்லது பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணருடன் ஒன்றிவிட சம்மதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

பதம் 7.13.43 : வெறும் மனக்கற்பனையான நல்லதையும், கெட்டதையும் ஒன்றே என்று ஏற்றுக் கொண்டு, அவற்றை மனதில் அர்ப்பணித்துவிட வேண்டும். பிறகு அந்த மனதைப் பொய் அகங்காரத்தில் அர்ப்பணிக்க வேண்டும். பொய் அகங்காரத்தை மொத்த பெளதிக சக்தியில் அர்ப்பணிக்க வேண்டும். இதுவே பொய்யான பாகுபாட்டை எதிர்த்துப் போரிடும் முறையாகும்.

பதம் 7.13.44 : பெளதிக வாழ்வு மாயையானது என்பதை, கற்றறிந்த ஒருவன் உணரவேண்டும். இது தன்னுணர்வின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். நிஜமாகவே உண்மையைக் கண்டுள்ள தன்னுணர்வு பெற்ற ஒருவன், தன்னுணர்வில் நிலைபெற்றவனாய், எல்லா பெளதிக செயல்களிலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும்.

பதம் 7.13.45 : பிரகலாத மகாராஜனே, நீங்கள் நிச்சயமாகத் தன்னுணர்வு பெற்ற ஓர் ஆத்மாவும், பரமபுருஷரின் ஒரு பக்தருமாவீர். நீங்கள் பொது ஜனங்களின் அபிப்பிராயத்தைப் பற்றியோ, பெயரளவேயான சாஸ்திரங்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. இந்த காரணத்திற்காகத்தான் எனது தன்னுணர்வைப் பற்றிய வரலாற்றைத் தயக்கமின்றி உமக்கு நான் விவரித்தேன்.

பதம் 7.13.46 : நாரத முனி தொடர்ந்து கூறினார்: அசுர வேந்தனான பிரகலராத மகாராஜன் அத்துறவியிடமிருந்து இவ்வுபதேசங்களைக் கேட்ட பிறகு பூரணத்துவம் பெற்ற ஒருவரின் (பரமஹம்சரின்) கடமை என்னவென்பதைப் புரிந்து கொண்டார். இவ்வாறாக அவர் அத்துறவியைச் சரிவர பூஜித்த பிறகு, அவரிடம் அனுமதி பெற்ற தனது இல்லம் திரும்பினார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare