அத்தியாயம் – 14
ஜட இயற்கையின் முக்குணங்கள்
பதம் 14.1
ஸ்ரீ-பகவான் உவாச
பரம் பூய: ப்ரவக்ஷ்யாமி க்ஞானானாம் க்ஞானம் உத்தமம்
யஜ் க்ஞாத்வா முனய: ஸர்வே பராம் ஸித்திம் இதோ கதா:

ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; பரம் – தெய்வீகமான; பூய: – மீண்டும்; ப்ரவக்ஷ்யாமி – கூறுவேன்; ஜ்ஞானானாம் – எல்லா ஞானங்களிலும்; ஜ்ஞானம் – ஞானம்; உத்தமம் – உயர்ந்ததான; யத் – எதை; ஜ்ஞாத்வா – அறிவதால்; முனய: – முனிவர்கள்; ஸர்வே – எல்லா; பராம் – தெய்வீகமான; ஸித்திம் – பக்குவத்தை; இத: – இவ்வுலகிலிருந்து; கதா: -அடைந்தனர்.

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எல்லா ஞானங்களிலும் உயர்ந்ததான இந்த பரம ஞானத்தை நான் உனக்கு மீண்டும் கூறுகின்றேன். இதனை அறிந்த முனிவர்கள் அனைவரும் தெய்வீகமான பக்குவ நிலையை அடைந்துள்ளனர்.

பதம் 14.2
இதம் க்ஞானம் உபாஷ்ரித்ய மம ஸாதர்ம்யம் ஆகதா:
ஸர்கே (அ)பி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச

இதம் – இந்த; ஜ்ஞானம் – ஞானம்; உபாஷ்ரித்ய – அடைக்கலம் கொண்டு; மம – எனது; ஸாதர்ம்யம் – அதே இயற்கையை; ஆகதா: – அடைகின்றனர்; ஸர்கே அபி – படைப்பிலும்; ந – என்றுமில்லை; உபஜாயந்தே – பிறப்பது; ப்ரலயே – பிரளயத்தில்; ந – இல்லை; வ்யதந்தி — தொல்லையுறுவது; ச – மேலும்.

இந்த ஞானத்தில் நிலைபெறுவதால், ஒருவன் என்னைப் போன்ற தெய்வீக இயற்கையை அடைய முடியும். இவ்வாறு நிலைபெற்றபின், அவன் படைப்பின்போது பிறப்பதோ, பிரளயத்தின்போது தொல்லையுறுவதோ இல்லை.

பதம் 14.3
மம யோனிர் மஹத் ப்ரஹ்ம தஸ்மின் கர்பம் ததாம்-யஹம்
ஸம்பவ: ஸர்வ-பூதானாம் ததோ பவதி பாரத


மம – எனது; யோனி: – கருவறை; மஹத் – மொத்த ஜட இருப்பு; ப்ரஹ்ம – பிரம்மன்; தஸ்மின் – அதில்; கர்பம் – கர்ப்பத்தை; ததாமி – படைப்பது; அஹம் – நானே; ஸம்பவ: – சாத்தியமாக்குவது; ஸர்வ-பூதானாம் — எல்லா உயிர்வாழிகளின்; தத: – அதன் பின்; பவதி – ஆகின்றன; பாரத – பரதனின் மைந்தனே.

பரதனின் மைந்தனே, பிரம்மன் எனப்படும் மொத்த ஜட வஸ்துக்களும் ஒரு கருவறையாகும். அந்த பிரம்மனை கருவுறச் செய்து, அனைத்து ஜீவாத்மாக்களின் பிறப்பினையும் நானே சாத்தியமாக்குகின்றேன்.

பதம் 14.4
ஸர்வ-யோனிஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா:
தாஸாம் ப்ரஹ்ம மஹத் யோனிர் அஹம் பீஜ ப்ரத: பிதா


ஸர்வ-யோனிஷு – எல்லா உயிரினங்களிலும்; கௌந்தேய – குந்தியின் மகனே; மூர்தய: – உருவங்கள்; ஸம்பவந்தி – தோன்றுகின்றன; யா: – எவை; தாஸாம் – அவற்றில்; ப்ரஹ்ம – உன்னதமான; மஹத் யோனி: – ஜட வஸ்துக்களின் கருவறை; அஹம் – நான்; பீஜ-ப்ரத: – விதை அளிக்கின்ற; பிதா – தந்தை.

குந்தியின் மைந்தனே, எல்லா உயிரினங்களும் இவ்வுலகில் பிறப்பினால் சாத்தியமாக்கப்படுகின்றன. மேலும், நானே விதை அளிக்கும் தந்தை என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

பதம் 14.5
ஸத்த்வம் ரஜஸ் தம இதி குணா: ப்ரக்ருதி – ஸம்பவா:
நிபத்னந்தி மஹா-பாஹோ தேஹே தேஹினம் அவ்யயம்

ஸத்த்வம் – ஸத்வ குணம்; ரஜ: – ரஜோ குணம்; தம: – தமோ குணம்; இதி – இவ்வாறு; குணா: – குணங்கள்; ப்ரக்ரு’தி – ஜட இயற்கை; ஸம்பவா: – உண்டாக்கப்பட்ட; நிபத்னந்தி — கட்டுப்பாட்டிற்கு உள்ளாக்குகின்றன; மஹா-பாஹோ – பலம் பொருந்திய புஜங்களை உடையவனே; தேஹே – இந்த உடலில்; தேஹினம் – உயிர்வாழி; அவ்யயம் — நித்தியமான.

ஜட இயற்கை, ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய முக்குணங்களால் ஆனது. பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, நித்தியமான உயிர்வாழி, இயற்கையின் தொடர்பில் வரும்போது, இந்த குணங்களினால் கட்டுப்படுத்தப் படுகின்றான்.

பதம் 14.6
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஷகம் அனாமயம்
ஸுக-ஸங்கேன பத்னாதி க்ஞான-ஸங்கேன சானக

தத்ர – அவற்றில்; ஸத்தவம் – ஸத்வ குணம்; நிர்மலத்வாத் – ஜடவுலகில் மிகவும் தூய்மையாக இருப்பதால்; ப்ரகாஷகம் – பிரகாசப்படுத்துகின்ற; அனாமயம் – பாவ விளைவுகள் ஏதுமில்லாத; ஸுக – இன்பத்தின்; ஸங்கேன – தொடர்பினால்; பத்னாதி — பந்தப்படுத்துகின்றது; ஜ்ஞான – ஞானத்தின்; ஸங்கேன – தொடர்பினால்; ச – மேலும்; அனக – பாவமற்றவனே.

பாவமற்றவனே, மற்றவற்றைவிட தூய்மையானதான ஸத்வ குணம், பிரகாசப்படுத்துவதாகவும் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிப்பதாகவும் அமைகின்றது. இந்த குணத்தில் நிலைபெற்றவர்கள் இன்பத்தின் தொடர்பினாலும் ஞானத்தின் தொடர்பினாலும் பந்தப்பட்டுள்ளனர்.

பதம் 14.7
ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணா-ஸங்க-ஸமுத்பவம்
தன் நிபத்னாதி கௌந்தேய கர்ம ஸங்கேன தேஹினம்

ரஜ: – ரஜோ குணம்; ராக-ஆத்மகம் – ஆசை அல்லது காமத்தினால் பிறந்த; வித்தி – அறிவாய்; த்ரு’ஷ்ணா – ஏக்கத்துடன்; ஸங்க – தொடர்பு; ஸமுத்பவம் – உண்டானது; தத் – அது; நிபத்னாதி – பந்தப்படுத்துகிறது; கௌந்தேய – குந்தியின் மகனே; கர்ம-ஸங்கேன – பலன்நோக்குச் செயலின் தொடர்பினால்; தேஹினம் – உடலை உடையவன்.

குந்தியின் மகனே, எல்லையற்ற ஆசையாலும் ஏக்கத்தாலும் பிறந்த ரஜோ குணத்தின் காரணத்தினால், உடலையுடைய உயிர்வாழி, பௌதிக பலன்நோக்குச் செயல்களால் பந்தப்படுகின்றான்.

பதம் 14.8
தமஸ் த்வக்ஞான-ஜம் வித்தி மோஹனம் ஸர்வ-தேஹினாம்
ப்ரமாதாலஸ்ய நித்ராபிஸ் தன் நிபத்னாதி பாரத

தம: – தமோ குணம்; து – ஆனால்; அஜ்ஞான-ஜம் – அறியாமையினால் பிறந்த; வித்தி – அறிவாய்; மோஹனம் – மயக்கம்; ஸர்வ-தேஹினாம் — உடல்களையுடைய எல்லாரின்; ப்ரமாத – பைத்தியக்காரத்தனம்; ஆலஸ்ய – சோம்பல்; நித்ராபி: – உறக்கம்; தத் – அது; நிபத்னாதி – பந்தப்படுத்துகின்றது; பாரத – பரதனின் மைந்தனே.

பரதனின் மைந்தனே, அறியாமையினால் பிறந்த தமோ குணம் உடலையுடைய எல்லா உயிர்வாழிகளையும் மயக்குகின்றது. கட்டுண்ட ஆத்மாவை பந்தப்படுத்தக்கூடிய, பைத்தியக்காரத்தனம், சோம்பல், உறக்கம் ஆகியவை இந்த குணத்தின் விளைவுகளாகும்.

பதம் 14.9
ஸத்த்வம் ஸுகே ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பாரத
க்ஞானம் ஆவ்ருத்ய து தம: ப்ரமாதே ஸஞ்ஜயத்-யுத

ஸத்த்வம் – ஸத்வ குணம்; ஸுகே – இன்பத்தில்; ஸஞ்ஜயதி – பந்தப்படுத்துகின்றது; ரஜ: – ரஜோ குணம்; கர்மணி – பலன்நோக்குச் செயல்களினால்; பாரத – பரதனின் மைந்தனே; ஜ்ஞானம் – ஞானம்; ஆவ்ரு’த்ய – கவரப்பட்ட; து – ஆனால்; தம: – தமோ குணம்; ப்ரமாதே – பித்தத்தில்; ஸஞ்ஜயதி — பந்தப்படுத்துகின்றது; உத – கூறப்படுகின்றது.

பரதனின் மைந்தனே, ஸத்வ குணம் இன்பத்தினாலும், ரஜோ குணம் செயல்களின் பலன்களினாலும் கட்டுப்படுத்துகின்றன; ஞானத்தை மறைக்கும் தமோ குணம், பைத்தியக்காரத்தனத்தினால் பந்தப்படுத்துகின்றது.

பதம் 14.10
ரஜஸ் தமஷ் சாபிபூய ஸத்த்வம் பவதி பாரத
ரஜ: ஸத்த்வம் தமஷ் சைவ தம: ஸத்த்வம் ரஜஸ் ததா

ரஜ: – ரஜோ குணம்; தம: – தமோ குணம்; ச – மேலும்; அபிபூய – அடக்கி; ஸத்த்வம் – ஸத்வ குணம்; பவதி – முக்கியமானதாகின்றது; பாரத – பரதனின் மைந்தனே; ரஜ: – ரஜோ குணம்; ஸத்த்வம் — ஸத்வ குணம்; தம: – தமோ குணம்; ச – மேலும்; ஏவ – அதுபோல; தம: – தமோ குணம்; ஸத்த்வம் – ஸத்வ குணம்; ரஜ: – ரஜோ குணம்; ததா – இவ்வாறு.

பரதனின் மைந்தனே, ஸத்வ குணம், சில சமயஙகளில் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்கடித்து மேலோங்குகின்றது. சில சமயங்களில் ரஜோ குணம், ஸத்வ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்கடிக்கின்றது. மேலும் இதர சமயங்களில் தமோ குணம், ஸத்வ குணத்தையும் ரஜோ குணத்தையும் தோற்கடிக்கின்றது. இவ்வாறு உயர்நிலைக்கான போட்டி எப்போதும் நிலவுகின்றது.

பதம் 14.11
ஸர்வ-த்வாரேஷு தேஹே (அ)ஸ்மின் ப்ரகாஷ உபஜாயதே
க்ஞானம் யதா ததா வித்யாத் விவ்ருத்தம் ஸத்த்வம் இத்-யுத

ஸர்வ-த்வாரேஷு – எல்லாக் கதவுகளிலும்; தேஹே அஸ்மின் – இந்த உடலில்; ப்ரகாஷ: – பிரகாசம்; உபஜாயதே – விருத்தியாகின்றது; ஜ்ஞானம் – ஞானம்; யதா – எப்போது; ததா – அப்போது; வித்யாத் – அறிய முடியும்; விவ்ரு’த்தம் – அதிகமாகி; ஸத்த்வம் – ஸத்வ குணம்; இதி உத – இவ்வாறு கூறப்படுகின்றது.

உடலின் எல்லாக் கதவுகளும் ஞானத்தால் பிரகாசிக்கும்போது ஸத்வ குணத்தின் தோற்றத்தை அனுபவிக்க முடியும்.

பதம் 14.12
லோப: ப்ருவ்ருத்திர் ஆரம்ப: கர்மணாம் அஷம: ஸ்ப்ருஹா
ரஜஸ்-யேதானி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப

லோப: – பேராசை; ப்ரவ்ரு’த்தி: – செயல்; ஆரம்ப: – முயற்சி; கர்மணாம் – செயல்களில்; அஷம: – கட்டுப்பாடற்ற; ஸ்ப்ரு’ஹா – ஆசை; ரஜஸி – ரஜோ குணத்தில்; ஏதானி – இவையெல்லாம்; ஜாயந்தே – வளர்கின்றன; விவ்ரு’த்தே – கூடுதலாக இருக்கும் போது; பரத-ருஷப – பரத குலத்தின் தலைவனே.

பரத குலத் தலைவனே, ரஜோ குணம் அதிகரிக்கும்போது, பெரும் பற்றுதல், பலன்நோக்குச் செயல்கள், தீவிர முயற்சி, கட்டுப்பாடற்ற ஆசை, மற்றும் ஏக்கத்தின் அறிகுறிகள் வளர்கின்றன.

பதம் 14.13
அப்ரகாஷோ (அ)ப்ரவ்ருத்திஷ் ச ப்ரமாதோ மோஹ ஏவ ச
தமஸ்-யேதானி ஜாயந்தே விவ்ருத்தே குரு-நந்தன

அப்ரகாஷ: – இருள்; அப்ரவ்ரு’த்தி: – செயலற்றதன்மை; ச – மேலும்; ப்ரமாத: – பைத்தியக்காரத்தனம்; மோஹ: – மயக்கம்; ஏவ – நிச்சயமாக; ச – மேலும்; தமஸி – தமோ குணத்தின்; ஏதானி – இவையெல்லாம்; ஜாயந்தே – தோன்றுகின்றன; விவ்ரு’த்தே – வளரும்போது; குரு-நந்தன – குருவின் மைந்தனே.

குருவின் மைந்தனே, தமோ குணம் அதிகரிக்கும்போது, இருள், செயலற்ற தன்மை, பைத்தியக்காரத்தனம், மற்றும் மயக்கமும் தோன்றுகின்றன.

பதம் 14.4
யதா ஸத்த்வே ப்ரவ்ருத்தே து ப்ரலயம் யாதி தேஹ-ப்ருத்
ததோத்தம-விதாம் லோகான் அமலான் ப்ரதிபத்யதே


யதா — எப்போது; ஸத்த்வே – ஸத்வ குணம்; ப்ரவ்ரு’த்தே – வளர்ச்சி பெற்று; து – ஆனால்; ப்ரலயம் – அழிவு; யாதி – செல்கின்றான்; தேஹு-ப்ரு’த் – உடலையுடைய; ததா – அச்சமயத்தில்; உத்தம-விதாம் – உத்தம சாதுக்களின்; லோகான் – உலகங்களை; அமலான் – தூய்மையான; ப்ரதிபத்யதே – அடைகின்றான்.

ஸத்வ குணத்தில் மரணமடையும்போது, ஒருவன் உன்னத சாதுக்கள் வசிக்கும் தூய்மையான உயர் லோகங்களை அடைகின்றான்.

பதம் 14.15
ரஜஸி ப்ரலயம் கத்வா கர்ம-ஸங்கிஷு ஜாயதே
ததா ப்ரலீனஸ் தமஸி மூட-யோனிஷு ஜாயதே

ரஜஸி – ரஜோ குணத்தில்; ப்ரலயம் – அழிவு; கத்வா – அடைந்து; கர்ம-ஸங்கிஷு – பலன்நோக்குச் செயல்களில் ஈடுபடுபவர்களின் தொடர்பில்; ஜாயதே – பிறக்கின்றான்; ததா – அதுபோல; ப்ரலீன: – அழிக்கப்பட்டு; தமஸி – தமோ குணத்தில்; மூட-யோனிஷு – மிருக இனங்களில்; ஜாயதே – பிறக்கின்றான்.

ரஜோ குணத்தில் மரணமடையும் போது, ஒருவன் பலன்நோக்குச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களின் மத்தியில் பிறக்கின்றான். தமோ குணத்தில் மரணமடையும் போதோ, அவன் மிருக இனத்தில் பிறவியெடுக்கின்றான்.

பதம் 14.16
கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் பலம்
ரஜஸஸ்து பலம் து:கம் அக்ஞானம் தமஸ: பலம்

கர்மண: – செயலின்; ஸுக்ரு’தஸ்ய – புண்ணிய; ஆஹு: – கூறப்படுகின்றது; ஸாத்த்விகம் — ஸத்வ குணத்தில்; நிர்மலம் – தூய்மைப்படுத்தப்பட்ட; பலம் – விளைவு; ரஜஸ: – ரஜோ குணத்தின்; து – ஆனால்; பலம் — விளைவு; து:கம் – துக்கம்; அஜ்ஞானம் – அறியாமை; தமஸ: – தமோ குணத்தின்; பலம் – விளைவு.

புண்ணியச் செயல்களின் விளைவுகள் தூய்மையானவை, அவை ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் ரஜோ குணத்தில் செய்யப்படும் செயல்கள் துக்கத்திலும், தமோ குணத்தில் செய்யப்படும் செயல்கள் முட்டாள்தனத்திலும் முடிகின்றன.

பதம் 14.17
ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே க்ஞானம் ரஜஸோ லோப ஏவ ச
ப்ரமாத-மோஹௌ தமஸோ பவதோ (அ)க்ஞானம் ஏவ ச

ஸத்த்வாத் – ஸத்வ குணத்திலிருந்து; ஸஞ்ஜாயதே – வளர்கின்றது; ஜ்ஞானம் — ஞானம்; ரஜஸ: – ரஜோ குணத்திலிருந்து; லோப: – பேராசை; ஏவ – நிச்சயமாக; ச – மேலும்; ப்ரமாத – பைத்தியக்காரத்தனம்; மோஹௌ – மயக்கம்; தமஸ: – தமோ குணத்திலிருந்து; பவத: – வளர்கின்றது; அஜ்ஞானம் – அறியாமை; ஏவ – நிச்சயமாக; ச – மேலும்.

ஸத்வ குணத்திலிருந்து உண்மை ஞானம் விருத்தியாகின்றது; ரஜோ குணத்திலிருந்து பேராசை விருத்தியாகின்றது; மேலும் தமோ குணத்திலிருந்தோ முட்டாள்தனம், பைத்தியக்காரத் தனம், மற்றும் மயக்கமும் விருத்தியாகின்றன.

பதம் 14.18
ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வ-ஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா:
ஜகன்ய-குண-வ்ருத்தி-ஸ்தா அதோ கச்சந்தி தாமஸா:

ஊர்த்வம் – மேல்நோக்கி; கச்சந்தி – செல்கின்றனர்; ஸத்த்வ-ஸ்தா: – ஸத்வ குணத்தில் நிலைபெற்றவர்கள்; மத்யே – நடுவில்; திஷ்டந்தி – தங்குகின்றனர்; ராஜஸா: – ரஜோ குணத்தில் நிலைபெற்றவர்கள்; ஜகன்ய – வெறுக்கத்தக்க; குண – குணம்; வ்ரு’த்தி-ஸ்தா: – எவரது தொழில்; அத: – கீழே; கச்சந்தி — செல்கிறார்கள்; தாமஸா: – தமோ குணத்தில் இருப்பவர்கள்.

ஸத்வ குணத்தில் நிலைபெற்றவர்கள் படிப்படியாக உயர் லோகங்களுக்கு மேல்நோக்கிச் செல்கின்றனர்; ரஜோ குணத்தில் இருப்பவர்கள் பூவுலகங்களில் வாழ்கின்றனர்; மேலும், வெறுக்கத்தக்கதான தமோ குணத்தில் இருப்பவர்கள் நரக லோகங்களுக்குக் கீழ்நோக்கிச் செல்கின்றனர்.

பதம் 14.19
நான்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டானுபஷ்யதி
குணேப்யஷ் ச பரம் வேத்தி மத்-பாவம் ஸோ (அ)திகச்சதி


ந – இல்லை; அன்யம் – தவிர; குணேப்ய: – குணங்களை; கர்தாரம் – செய்பவன்; யதா: – எப்போது; த்ரஷ்டா – காண்பவன்; அனுபஷ்யதி – முறையாகக் காண்கிறான்; குணேப்ய – இயற்கை குணங்களிலிருந்து; ச – மேலும்; பரம் – தெய்வீகமான; வேத்தி — அறிபவன்; மத்-பாவம் — எனது ஆன்மீக இயற்கைக்கு; ஸ: – அவன்; அதிகச்சதி – உயர்வு பெறுகின்றான்.

எல்லாச் செயல்களிலும், இயற்கையின் குணங்களைத் தவிர வேறு கர்த்தா யாரும் இல்லை என்பதையும், பரம புருஷர் இந்த இயற்கை குணங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதையும் அறிந்து முறையாகக் காண்பவன், எனது ஆன்மீக இயற்கையை அடைகின்றான்.

பதம் 14.20
குணான் ஏதான் அதீத்ய த்ரீன் தேஹீ தேஹ-ஸமுத்பவான்
ஜன்ம-ம்ருத்யு-ஜரா-து:கைர் விமுக்தோ (அ)ம்ருதம் அஷ்னுதே

குணான் – குணங்கள்; ஏதான் – இவையெல்லாம்; அதீத்ய – கடந்து; த்ரீன் — மூன்று; தேஹீ – உடலை உடையவன்; தேஹ – உடல்; ஸமுத்பவான் – படைக்கப்பட்ட; ஜன்ம – பிறப்பு; ம்ரு’த்யு – இறப்பு; ஜரா – முதுமை; து:கை – துன்பங்கள்; விமுக்த: – விடுபட்டு; அம்ரு’தம் – அமிர்தம்; அஷ்னுதே – அனுபவிக்கின்றான்.

உடலை உடையவன், ஜடவுடலுடன் தொடர்புடைய இந்த மூன்று குணங்களிலிருந்து உயர்வு பெற முயலும்போது, பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் இவற்றின் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று, இந்த வாழ்விலேயே அமிர்தத்தை சுவைக்க முடியும்.

பதம் 14.21
அர்ஜுன உவாச
கைர் லிங்கைஸ் த்ரீன் குணான் ஏதான் அதீதோ பவதி ப்ரபோ
கிம் ஆசார: கதம் சைதாம்ஸ் த்ரீன் குணான் அதிவர்ததே

அர்ஜுன: உவாச – அர்ஜுனன் கூறினான்; கை: – எவற்றால்; லிங்கை: – அறிகுறிகள்; த்ரீன் – மூன்று; குணான் – குணங்கள்; ஏதான் – இவையெல்லாம்; அதீத: – உயர்ந்து; பவதி — ஆகின்றான்; ப்ரபோ – எம்பெருமானே; கிம் – என்ன; ஆசார: – நடத்தை; கதம் – எவ்வாறு; ச – மேலும்; ஏதான் – இந்த; த்ரீன் — மூன்று; குணான் – குணங்கள்; அதிவர்ததே – உயர்கின்றான்.

அர்ஜுனன் வினவினான்: எம்பெருமானே, இந்த மூன்று குணங்களைக் கடந்தவனை அறிவதற்கான அறிகுறிகள் யாவை? அவனது நடத்தைகள் யாவை? இயற்கை குணங்களிலிருந்து அவன் உயர்வு பெறுவது எவ்வாறு?

பதம் 14.22 – 14.25
ஸ்ரீ-பகவான் உவாச
ப்ரகாஷம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹம் ஏவ ச பாண்டவ
ந த்வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தானி ந நிவ்ருத்தானி காங்க்ஷதி
உதாஸீன-வத் ஆஸீனோ குணைர் யோ ந விசால்யதே
குணா வர்தந்த இத்-யேவம் யோ (அ)வதிஷ்டதி நேங்கதே
ஸம-து:க-ஸுக: ஸ்வ-ஸ்த: ஸம-லோஷ்டாஷ் ம-காஞ்சன:
துல்ய-ப்ரியாப்ரியோ தீரஸ் துல்ய-நிந்தாத்ம-ஸம்ஸ்துதி:
மானாபமானயோஸ் துல்யஸ் துல்யோ மித்ராரி-பக்ஷயோ:
ஸர்வாரம்ப-பரித்யாகீ குணாதீத: ஸ உச்யதே

ஸ்ரீ-பகவான் உவாச: – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; ப்ரகாஷம் – பிரகாசம்; ச – மேலும்; ப்ரவ்ரு’த்திம் – பற்றுதல்; ச – மேலும்; மோஹம் – மயக்கம்; ஏவ ச – அதுவும்; பாண்டவ – பாண்டுவின் மகனே; ந த்வேஷ்டி – வெறுப்பதில்லை; ஸ்ம்ப்ரவ்ரு’த்தானி — வளர்ச்சி பெற்றிருந்தாலும்; ந நிவ்ருத்தானி — வளர்ச்சியை நிறுத்துவதில்லை; காங்க்ஷதி – விருப்பங்கள்; உதாஸீனவத் – நடுநிலையைப் போல; ஆஸீன: – நிலைபெற்று; குணை: – குணங்களால்; ய: – எவனொருவன்; ந – இல்லை; விசால்யதே – கிளர்ச்சியுறுவது; குணா: – குணங்கள்; வர்தந்தே – செயல்படுகின்றன; இதி ஏவம் – இவ்வாறு அறிந்து; ய: – எவனொருவன்; அவதிஷ்டதி – நிலைக்கின்றான்; ந – என்றுமில்லை; இங்கதே – சலனமான; ஸம – சமமாக; து:க – துன்பத்திலும்; ஸுக: – இன்பத்திலும்; ஸ்வ-ஸ்த: – தன்னில் நிலைபெற்று; ஸம – சமமாக; லோஷ்ட – மண்கட்டி; அஷ்ம – கல்; காஞ்சன: – தங்கம்; துல்ய – சமநோக்கத்துடன்; ப்ரிய – பிரியமான; அப்ரிய – பிரியமற்ற; தீர: – திடமாக; துல்ய – சமமாக; நிந்தா – இகழ்ச்சி; ஆத்ம-ஸம்’ஸ்துதி: – சுயப்புகழ்ச்சி; மான – மானம்; அபமானயோ: – அவமானம்; துல்ய: – சமமாக; துல்ய: – சமமாக; மித்ர – நண்பன்; அரி – எதிரி; பக்ஷயோ: – கட்சிகளில்; ஸர்வ – எல்லா; ஆரம்ப: – முயற்சி; பரித்யாகீ – துறவி; குண-ஆதீத: – ஜட இயற்கையின் குணங்களிலிருந்து உயர்ந்தவனாக; ஸ: – அவன்; உச்யதே – கூறப்படுகின்றான்.

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பாண்டுவின் மைந்தனே, பிரகாசம், பற்றுதல், மயக்கம் ஆகியவை தோன்றியிருக்கும்போது அவற்றை வெறுக்காதவனும், அவை மறைந்திருக்கும்போது அவற்றிற்காக ஏக்கமடையாதவனும்; இயற்கை குணங்களின் விளைவுகளுக்கு மத்தியில் ஸ்திரமாக, சஞ்சலமின்றி, நடுநிலையில், அப்பாற்பட்டு இருப்பவனும், குணங்களே செயல்படுகின்றன என்பதை அறிபவனும்; தன்னில் நிலைபெற்று இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவனும்; மண்ணையும் கல்லையும் பொன்னையும் சமமாகக் காண்பவனும்; பிரியமானவற்றிலும் பிரியமற்றவற்றிலும் சமநிலை உடையவனும்; திடமானவனும், புகழ்ச்சி இகழ்ச்சி, மானம் அவமானம் ஆகியவற்றில் சமமாக நிலை பெற்றவனும், நண்பனையும் எதிரியையும் சமமாக நடத்துபவனும்; எல்லா பலன்நோக்குச் செயல்களையும் துறந்தவனுமான மனிதன் இயற்கை குணங்களைக் கடந்தவனாகக் கூறப்படுகின்றான்.

பதம் 14.26
மாம் ச யோ (அ)வ்யபிசாரேண பக்தி-யோகேன ஸேவதே
ஸ குணான் ஸமதீத்யைதான் ப்ரஹ்ம-பூயாய கல்பதே

மாம் – என்னிடம்; ச – மேலும்; ய: – எவனொருவன்; அவ்யபிசாரேண – தவறின்றி; பக்தி-யோகேன – பக்தித் தொண்டால்; ஸேவதே – தொண்டு புரிகின்றானோ; ஸ: – அவன்; குணான் – ஜட இயற்கைக் குணங்களை; ஸமதீத்ய – கடந்து; ஏதான் – இவையெல்லாம்; ப்ரஹ்ம பூயாய – பிரம்மன் நிலைக்கு உயர்த்தப்படுகிறான்; கல்பதே – ஆகின்றான்.

எந்தச் சூழ்நிலையிலும் தவறாமல், எனது பூரண பக்தித் தொண்டில் ஈடுபடுபவன், ஜட இயற்கையின் குணங்களை உடனடியாகக் கடந்து, பிரம்மன் நிலைக்கு வந்தடைகின்றான்.

பதம் 14.27
ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹம் அம்ருதஸ்யாவ்யயஸ்ய ச
ஷாஷ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச

ப்ரஹ்மண: – அருவ பிரம்மஜோதியின்; ஹி – நிச்சயமாக; ப்ரதிஷ்டா – ஆதாரம்; அஹம் – நானே; அம்ரு’தஸ்ய – மரணமற்ற; அவ்யயஸ்ய – அழிவற்ற; ச – மேலும்; ஷாஷ்வதஸ்ய – நித்தியமான; ச – கூட; தர்மஸ்ய – தர்மத்தின்; ஸுகஸ்ய – இன்பத்தின்; ஐகாந்திகஸ்ய – இறுதி; ச – மேலும்.

மேலும், மரணமற்றதும், அழிவற்றதும், நித்தியமானதும், இறுதி இன்பத்தின் தர்மமுமான அருவ பிரம்மனின் ஆதாரம் நானே.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare