சித்திரை (சைத்ர) மாதம் – கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை பாபமோசினி ஏகாதசியாக கொண்டாடுவர். பாபவிமோசனி ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம்.
அர்ஜூனன், பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணரிடம்,” மதுசூதனா! ஒவ்வொரு ஏகாதசி விரத மஹாத்மிய கதைகளைக் கேட்டு, மனம் ஆனந்தத்தால் உற்சாகம் அடைவதுடன் மற்ற ஏகாதசி மஹாத்மிய கதைகளையும் அறிந்து கொள்ள ஆவல் மேலிடுகிறது.
ஸ்ரீ கிருஷ்ணா, கோபாலா!, தாங்கள் கிருபை புரிந்து சித்திரை (சைத்ர) மாதம், கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி விரத மஹாத்மியத்தை பற்றிக் கூற வேண்டுகிறேன். அந்த ஏகாதசி, எந்தப் பெயரால் அழைக்கப்படுகின்றது, அன்று எந்த தெய்வத்திற்கு பூஜை ஆராதனை செய்ய வேண்டும், விரதம் அனுஷ்டிப்பதற்கான விதிமுறை, இவற்றைப் பற்றி தாங்கள் கருணையுடன் விஸ்தாரமாக எடுத்துரைக்க வேண்டும்,” என்று வேண்டி நின்றான்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜூனனின் வேண்டுகோளுக்கு இணங்கி, “பாண்டு நந்தனா! ஒரு சமயம் ப்ருத்வியை (பூமி) ஆண்ட ராஜா மாந்தாதா, ரிஷி லோமசரிடம் இதே கேள்வியை கேட்டான். ராஜனின் கேள்விக்கு லோமச ரிஷி அளித்த பதிலை அப்படியே உனக்குக் கூறுகிறேன் கேள் ” என்று கூறி சொல்லத் துவங்கினார்.
தர்மத்தின் மறைபொருளை (உள்ளார்ந்த இரகசியம் அறிந்த ஞானவானான) மாந்தாதா, ரிஷி லோமசரிடம், “மஹரிஷி!, மனிதர்கள் தங்களது பாபத்திலிருந்து விமோசனம் பெற இயலுமா.? முடியும் என்றால் எவ்விதம் அது சாத்தியமாகும். தயவுசெய்து மனிதர்கள் அனைவரும் எளிதில் தங்களது பாபங்களிலிருந்து விடுதலைப் பெற ஏதுவாக, ஏதேனும் சரளமான உபாயத்தைக் கூறி அருள வேண்டுகிறேன்.” என்றான். அதற்கு லோமச ரிஷி,” ராஜன், சைத்ர (சித்திரை) மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியானது, பாபமோசினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால், மனிதர்களின் சர்வ பாபங்களும் அழியப் பெறுவதுடன், நற்கதியும் கிட்டுகிறது. உனக்கு பாபமோசினி ஏகாதசி விரத மஹாத்மிய கதையைக் கூறுகிறேன் கவனமாக் கேள் என்றார்.
பழங்காலத்தில் “சைத்திர ரத்” என்னும் பெயர் கொண்ட அழகிய வனம் ஒன்று இருந்தது. அது அப்சரஸ் சுந்தரிகள், கந்தர்வ கின்னரர் இவர்கள் கூடி ஆனந்தமாக பொழுதைக் கழிக்கும் இடமாக இருந்து வந்தது. அங்கு ஒவ்வொரு வினாடியும், வசந்தகால கொண்டாட்டம் போல், கழிந்துவந்தது. அங்கு எக்கணமும் விதவித மலர்கள் பூத்தவண்ணமிருந்தது. சில சமயம் கந்தர்வக் கன்னிகள், சில நேரங்களில் தேவேந்திரன் மற்ற தேவர்களுடன் அங்கு உள்ளாசமாக கிரீடை புரியும் இடமாக அது அமைந்திருந்தது. இத்தனை உள்ளாசக் கொண்டாட்டங்கள் நடந்துவரும் இடமாக விளங்கினாலும், ரிஷி, முனிவர்கள் தவம் செய்யும் வனமாகவும் இருந்தது. அப்பேற்பட்ட வனத்தில் சிவபெருமானின் மீது மிகுந்த பிரேமையும், பக்தியும் கொண்ட மேதாவி என்னும் பெயர் கொண்ட ரிஷி ஒருவர் நெடுந்தவத்தில் ஆழ்ந்திருந்தார்.
வனத்திற்கு வரும் அனேக அப்சரஸ்கள், அவரைக் கண்டு மோகம் கொண்டு மயக்க விரும்பினாலும், அவருடைய நெடுங்காலத் தவ வலிமை, நெருப்பு வளையம் போல் அவரை யாரும் நெருங்க விடாமல் காத்து வந்தது. மஞ்சுகோஷா என்னும் பெயர் கொண்ட அப்சரஸ் அவரைக் கண்டு மயங்கி மோகம் கொண்டாள். ஆனால், மற்ற அப்சரஸ்கள் போல் அவர் அருகில் சென்றுவிடாமல், அவர் தவத்தில் ஆழ்ந்திருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் குடில் அமைத்து தினமும் அவர் கண் பார்வை படும் இடமாக அமர்ந்து வீணை இசையுடன் தன் மதுரமான குரலில் கானம் பாடி அவரை மயக்கும் முயற்சியில் ஈடுபட்டாள்.
அதேநேரம் காமதேவனும், சிவபக்தரான ரிஷி மேதாவின் தவத்தை வெற்றிகொள்ள இதுவே சரியான தருணம் என்று தன் முயற்சியை ஆரம்பித்தான். மஞ்சுகோஷா அப்சரஸின் புருவத்தை வில்லாவாகவும், மயக்கும் பார்வையை வில்லின் நாணாகவும், கண்களை கணைகளாகவும், மன்மத கணைகளால் தாக்கப்பட்ட ரிஷியின் இலக்காக அப்ஸரஸைக் கொண்டு ரிஷியின் தவத்தை பங்கம் செய்யத் தயாரானான். அக்கால கட்டத்தில் ரிஷி மேதாவி வாலிப பருவத்தினராகவும், திடகாத்திர தேக ஆரோக்கியத்துடனும் விளங்கினார். பொன்னிற மேனியில், வெள்ளை நிற பூணூல் துலங்க, முனிவர்களுக்கான தண்டத்தை கையிலேந்தி அவர் மற்றொரு மன்மதனைப் போல் விளங்கினார்.
அப்சரஸ் மஞ்சுகோஷாவின் மயக்கும் குரலில் பாடப்பட்ட கானத்தின் இனிமை, அவள் அணிந்த அணிகலன்களில் பதிக்கப்பட்ட மணிகளின் ஓசை, வீணையின் இசை நயம், அனைத்தும் ஒருசேர முனிவரைக் கவர்ந்தது. அவர் கண்களைத் திறந்து, எதிரே, சற்று தூரத்தில் அமர்ந்து, கானம் பாடிக்கொண்டிருந்த அப்சரஸ் மஞ்சுகோஷாவைக் கண்டார்.
அக்கணம், மன்மதன் தன் பாணங்களை விட, முனிவர், மஞ்சுகோஷாவின் மீதான மையலில் தன்னிலை மறந்து, கண்மூடாமல் அவள் அழகில் வியந்து நின்றார். மன்மதனின் பிடியில் சிக்கிய முனிவர், பகல்-இரவு என்ற நேரம் போவது அறியாமல் பல நாட்கள் மஞ்சுகோஷாவுடன் காதல் லீலையில் ஆழ்ந்திருந்தார். ஒரு நாள் மஞ்சுகோஷா முனிவரிடம், “முனிவரே, வெகுநாட்கள் ஆகிவிட்டது நான் ஸ்வர்க்கலோகம் செல்வதற்கு அனுமதி கொடுங்கள்”.
மஞ்சுகோஷாவின் வார்த்தைகளைக் கேட்டு, “சுந்தரி, சந்தியா காலத்தில்தானே வந்தாய். அதற்குள் என்ன அவசரம்.? சூரிய உதயத்தில் செல்லலாம்” என்றார். முனிவரின் பதிலைக் கேட்டு மஞ்சுகோஷாவும், முனிவருடன் நீண்ட நாட்கள், நேரம் போவது அறியாமல், பொழுதைக் கழித்தனர்.
ஒருநாள் மஞ்சுகோஷா முனிவரிடம், “தேவரீர், எனது இல்லம் இருக்கும் ஸ்வர்க்கலோகம் செல்ல அனுமதி அளிக்க வேண்டும்” என்று வேண்டினாள். அதற்கு முனிவர்,” சுந்தரி, இன்னும் நேரம் ஆகவில்லை அதற்குள் என்ன அவசரம்? இன்னும் சற்று நேரம் பொறுத்திரு” என்றார்.
முனிவரின் பதிலைக் கேட்டு மஞ்சுகோஷா, “ரிஷியே, தங்களின் இரவு முடிவே இல்லாததாக இருக்கிறது. நாம் இருவரும் ஒன்றாக வாழ ஆரம்பித்து எத்தனை வருடகாலம் ஆகிவிட்டது என்பதை நினைத்துப் பாருங்கள். அப்படி இருக்கையில், நான் இன்னும் என் இல்லத்திற்குச் செல்லாமல், தங்களுடன் இன்னும் அதிக நாள் இருப்பது உசிதமா, என்பதை நீங்களே யோசித்து சொல்லுங்கள்.” என்றாள்.
மஞ்சுகோஷாவின் “எத்தனை வருடகாலம்” என்ற வார்த்தைகளைக் கேட்டு முனிவருக்கு காலத்தைப் பற்றி விழிப்புணர்வு உண்டாயிற்று. தான் எத்தனை வருடகாலம் மஞ்சுகோஷாவுடன் கழித்துள்ளோம் என்பதை சிந்தித்துப் பார்க்க ஆரம்பித்தார். அப்போதுதான், அவர் சிற்றின்பத்தில், தான், ஐம்பத்தேழு வருடங்களை கழித்திருக்கிறோம் என்னும் ஞானோதயம் உண்டாயிற்று. மஞ்சுகோஷா, அவருக்கு, தன்னை அழிக்கவந்த காலனின் சொரூபமாகத் தோன்றினாள். அழகினால் தன்னை மயக்கி, தன் தவத்தைக் கலைத்து, இத்தனை வருடகாலம் சிற்றின்பத்தில் தன்னை ஆழ்த்திய மஞ்சுகோஷாவின் மீது அவருக்கு அளவில்லாக் குரோதமும், கோபமும் உண்டாயிற்று. உதடுகள் துடிதுடிக்க உடல் பலவீனத்தால் நடுநடுங்க ஆக்ரோஷத்துடன்,” வஞ்சகி! தவத்தைக் கலைத்தப் பாதகி, மகாபாபி, துராசாரி நீ பிசாசினியாகக் கடவது.” என்று சபித்தார்.
முனிவரின் சாபத்தால் பிசாசினியாக மாறிய மஞ்சுகோஷா மிகவும் வருத்தத்துடன், “முனிவரே! என்மீதுள்ள கோபத்தை விட்டுவிட்டு சாந்தமடையுங்கள். தயவுசெய்து, இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்கான வழியைக் கூறி அருளுங்கள். சாதுக்களின் சத்சங்கம் நற்பலனை அளிக்கவல்லது என்று சான்றோர் கூறியுள்ளனர். நான் தங்களுடன் பல ஆண்டுகள் கழித்துள்ளேன். ஆகையால் குரோதத்தை விட்டொழித்துக் கருணையுடன் எனக்கு நல்வழி காட்டுங்கள். இல்லையெனில் மஞ்சுகோஷா, முனிவர் மேதாவியுடன் பல ஆண்டு காலம் வாழ்ந்தும், நற்பலன் ஏதும் கிட்டாது, பிசாசினியாக மாறினாள் என்ற அவப்பெயர்தான் மிஞ்சும்” என்று வேண்டினாள்.
மஞ்சுகோஷாவின் வார்த்தைகளைக் கேட்ட முனிவரும், சாந்தத்துடன் சிந்திக்கலானார். இதனால், தனக்கு ஏற்படப்போகும் அபகீர்த்தியைப் பற்றிய பயமும் உண்டாயிற்று. இறுதியில் மஞ்சுகோஷாவிடம், “நீ இழைத்தத் தீங்கு மன்னிக்க முடியாதது. இருந்தாலும், என் சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்கான வழியைக் கூறுகின்றேன் கேள். சித்திரை(சைத்ர) மாதம், கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி திதி பாபமோசினி ஏகாதசி என்று அழைக்கப்படுகின்றது. அன்று, விரத விதி முறைப்படி, உபவாசத்துடன் விரதம் அனுஷ்டித்தால் நீ பாபத்திலிருந்து விடுதலை பெறலாம்” என்றார்.
பிறகு மஞ்சுகோஷாவிற்கு, விரத விதிமுறைகளையும், அவற்றை எப்படி அனுஷ்டிப்பது என்பதனையும் எடுத்துரைத்தார். பிறகு, தன் தவறுக்கான பிராயச்சித்தம் தேடி, தன் தந்தை ச்யவன ரிஷியின் ஆசிரமத்திற்கு சென்று, தந்தையின் முன் நின்றார். மகன் மேதாவியைக் கண்ட ச்யவன முனிவர், அவரிடம், “மகனே, உனக்கு என்னவாயிற்று? தவத்தின் பலன் எல்லாம் அழிந்ததுடன், பிரம்மனுக்கு நிகரான உன் தேஜஸ்ஸூம் இழந்து காணப்படுகிறாயே?” என்று வினவினார்.
வெட்கத்தால் தலைகுனிந்து நின்ற முனிவர், ”தந்தையே! நான் ஒரு அப்ஸரஸின் அழகில் மயங்கி, அவளுடன் சிற்றின்பத்தில் ஐம்பத்தேழு ஆண்டுகளை இழந்து மஹாபாபம் புரிந்துள்ளேன். அதன் காரணமாக என் தவ வலிமை, தேஜஸ் அனைத்தையும் இழந்து நிற்கிறேன். தாங்கள்தான் கருணை கூர்ந்து இந்த மகாபாபத்திலிருந்து முக்தி பெறுவதற்கான உபாயத்தைக் கூறவேண்டும்” என்றார்.
இதைக்கேட்ட ச்யவன ரிஷி, “மைந்தனே, மேதாவி! நீ . சித்திரை(சைத்ர) மாதம், கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி திதி, பாபமோசினி ஏகாதசி விரதத்தை, பக்தி சிரத்தையுடன், விதிப்பூர்வமாக உபவாசமிருந்து அனுஷ்டித்தால், உன்னுடைய சகல பாவங்களும் அழிந்து மேன்மைப் பெறுவாய்”. தந்தையின் வார்த்தைக்கு ஏற்ப, மேதாவி முனிவரும், பாப விமோசினி ஏகாதசி நாளன்று விதிப்பூர்வமாக, உபவாசத்துடன் விரத்ததை அனுஷ்டித்தார். பாபமோசினி ஏகாதசி விரத பிரபாவத்தால், அவரின் அனைத்துப் பாபங்களும் அழிந்து, தான் இழந்த அனைத்தையும் பெற்றார். மஞ்சுகோஷாவும், மேதாவி முனிவர் அருளியபடி, பாபமோசினி ஏகாதசி விரத்ததை அனுஷ்டித்து, அதன் புண்ணிய பலனால் பிசாசினி ரூபத்திலிருந்து விடுதலை பெற்று, அழகிய ரூபத்துடன் ஸ்வர்க்கலோகம் சென்றாள்.
லோமச ரிஷி, ராஜனிடம், “ஹே ராஜன்! பாபமோசினி ஏகாதசி விரத்ததின் பிரபாவத்தால் அனைத்துப் பாபங்களும் அழியப்பெறுகின்றன. பாபமோசினி ஏகாதசி விரத மஹாத்மியத்தை படிப்பதாலும் அல்லது கேட்பதாலும் ஓராயிரம் பசுக்களை (கோ தானம்) தானம் செய்த புண்ணிய பலன் கிட்டுகிறது. இவ்விரத்ததை விதிபூர்வத்துடன் அனுஷ்டிப்பதால், பிரம்மஹத்தி (பிராமணனைக் கொன்ற பாவம்), தங்கம் திருடுவதால் உண்டாகும் பாபம், மதுபானம் அருந்துவதால் ஏற்படும் பாபம், அகம்பாவத்துடன் நடப்பதால் உண்டாகும் பாபம் போன்ற கொடிய பாபங்கள் அழியப்பெறுவதுடன், இறுதியில் மோட்சப் பிராப்தியும் கிட்டுகிறது” என்றார்.

