அத்தியாயம் – 2
மனு புத்திரர்களின் வம்சங்கள்
பதம் 9.2.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அதன்பிறகு, அவரது மகனான சுத்யும்னன் வானப்பிரஸ்த வாழ்வை ஏற்பதற்கு வனம் சென்றதும், இன்னும் அதிக மகன்களைப் பெற விரும்பிய வைவஸ்வத மனு (சிராத்ததேவர்), யமுனைக் கரையில் நூறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார்.

பதம் 9.2.2 : பிறகு, மகன்களைப் பெறும் இவ்விருப்பத்துடன், சிராத்ததேவர் எனப்படும் மனு, தேவர்களின் இறைவனான பரமபுருஷ பகவானை வழிபட்டார். இவ்வாறு அவருக்கொப்பான பத்து மகன்களை அவர் பெற்றார். அவர்களுள் இக்ஷ்வாகு மூத்தவராவார்.

பதம் 9.2.3 : இம்மகன்களில் பிருஷத்ரன் என்பவர், தன் ஆன்மீக குருவின் கட்டளைப்படி பசுக்களைப் பாதுகாத்து வந்தார். பசுக்களுக்குப் பாதுகாப்பளிக்க இரவு முழுவதும் அவர் வாளேந்தி நிற்பார்.

பதம் 9.2.4 : ஒருசமயம் இரவில், மழை பெய்யும்பொழுது, ஒரு புலி பசுத் தொழுவத்தினுள் நுழைந்தது. புலியைக் கண்டதும் படுத்திருந்த பசுக்கள் பீதியுடன் எழுந்து இங்குமங்கும் சிதறியோடின.

பதங்கள் 9.2.5 – 9.2.6 : மிகவும் வலிமையுள்ள அப்புலி பசுவைப் பற்றியதும், அது துன்பத்துடனும், அச்சத்துடனும் அலறியது. அந்த அலறலைக் கேட்ட பிருஷத்ரன் உடனே அவ்வோசையைப் பின்தொடர்ந்து கையில் வாளேந்திச் சென்றார். ஆனால் நட்சத்திரங்கள் மேகங்களால் மறைக்கப்பட்டிருந்ததால், பசுவைப் புலி என்றெண்ணி, தவறுதலாக பெரும் வலிமையுடன் பசுவின் தலையைத் துண்டித்துவிட்டார்.

பதம் 9.2.7 : வாள் நுனியால் புலியின் காது வெட்டப்பட்டதால், அப்புலி பீதியடைந்து சாலையில் இரத்தம் சிந்தியவாறு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

பதம் 9.2.8 : எதிரியை வெல்லும் திறமையுடைய பிருஷத்ரன், இரவில் தன்னால் கொல்லப்பட்டது புலி என்று நினைத்தார். ஆனால் காலையில் தான் கொன்றது பசு என்பதையறிந்து மிகவும் கவலைப்பட்டார்.

பதம் 9.2.9 : பிருஷத்ரன் அறியாமல் பாவம் செய்திருந்த போதிலும், அவரது குலகுருவான வசிஷ்டர் பின்வருமாறு கூறி அவரைச் சபித்தார்: “அடுத்த பிறவியில் உன்னால் ஒரு க்ஷத்திரியனாக முடியாது. பசுவைக் கொன்றதால் நீ ஒரு சூத்திரனாகப் பிறப்பாய்”.

பதம் 9.2.10 : வீரரான பிருஷத்ரன் தன் ஆன்மீக குருவால் இவ்வாறு சபிக்கப்பட்டபோது, அச்சாபத்தை அவர் கூப்பிய கரங்களுடன் ஏற்றுக் கொண்டார். பிறகு, புலன்களை அடக்கிய அவர், மாமுனிவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டார்.

பதங்கள் 9.2.11 – 9.2.13 : அதன்பிறகு, எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட பிருஷத்ரன், மன அமைதி பெற்று, தன் புலன்களைக் கட்டுப்படுத்தினார். பகவானின் கருணையால் உடலையும், ஆத்மாவையும் இணைத்து வைத்திருப்பதற்கு, கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைந்தும், பௌதிக சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமலும், யாரிடமும் பாரபட்சமில்லாமலும் இருந்த அவர், உன்னத பரமாத்மாவும், பெளதிக களங்கமற்றவரும், பரமபுருஷ பகவானுமாகிய வாசுதேவனிடம் முழு கவனத்தையும் செலுத்தினார். இவ்வாறு மனதைப் பரமபுருஷரிடம் பதித்து, ஆத்ம ஞானத்தில் பூரண திருப்தியடைந்த பிருஷத்ரன், பகவானின் தூய பக்தித் தொண்டை அடைந்து, செவிடனைப் போலவும், ஊமையைப் போலவும், குருடனைப் போலவும், பெளதிகச் செயல்களில் பற்றில்லாதவராய், உலக முழுவதிலும் பிரயாணம் செய்ய ஆரம்பித்தார்.

பதம் 9.2.14 : இந்த மனோநிலையுடன் சிறந்ததொரு துறவியாக மாறிய பிருஷத்ரன், வனத்தில் புகுந்த பொழுது, கொழுந்து விட்டெரியும் ஒரு காட்டுத் தீயைக் கண்டார். தனது உடலை தீயில் எரித்து விடுவதற்கு இச்சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார். இவ்வாறாக அவர் பரலோகமான ஆன்மீக உலகை அடைந்தார்.

பதம் 9.2.15 : மனுவின் இளைய புத்திரரான கவி, பெளதிக சுகபோகங்களை அனுபவிக்க விரும்பாததால், பூரண வாலிபத்தை அடையுமுன்பே இராஜ்யத்தைத் துறந்தார். சுயப்பிரகாசம் கொண்டவரான பரமபுருஷரை இதயத்தில் எப்பொழுதும் தியானித்தவாறு, நண்பர்கள் புடை சூழ வனம் சென்ற அவர் இறுதியில் பூரணத்துவம் அடைந்தார்.

பதம் 9.2.16 : மற்றொரு மனு புத்திரரான கரூஷரிலிருந்து காரூஷ வம்சம் வந்தது. இது ஒரு க்ஷத்திரிய வம்சமாகும். காரூஷ க்ஷத்திரியர்கள் வடதிசையைச் சேர்ந்த அரசர்களாவர். சிறந்த தர்மவான்களாக விளங்கிய அவர்கள், பிராமண பண்பாட்டைப் பாதுகாத்த புகழுக்குரியவர்களாவர்.

பதம் 9.2.17 : திருஷ்டன் என்ற மனு புத்திரனிலிருந்து தார்ஷ்டம் என்று அழைக்கப்பட்ட க்ஷத்திரிய வம்சம் வந்தது. இந்த வம்சத்தினர் இவ்வுலகில் பிராமணர்களின் நிலையை அடைந்தனர். பிறகு, நிருகன் என்ற மனு புத்திரனிலிருந்து சுமதி வந்தார். சுமதியிலிருந்து பூதஜோதியும், பூதஜோதியிலிருந்து வசுவும் வந்தனர்.

பதம் 9.2.18 : வசுவின் மகன் பிரதீகன், அவரது மகன் ஓகவான், ஒகவானின் மகனும் ஓகவான் என்றே அழைக்கப்பட்டார். அவரது மகள் ஓகவதி. அவளை சுதர்சனன் மணந்தார்.

பதம் 9.2.19 : நரிஷ்யந்தரிலிருந்து சித்ரசேனன் என்ற மகன் வந்தார். அவரிலிருந்து ரிக்ஷன் என்ற மகன் வந்தார். ரிக்ஷனிலிருந்து மீட்வானும், மீட்வானிலிருந்து பூர்ணனும், பூர்ணனிலிருந்து இந்ரசேனனும் வந்தனர்.

பதம் 9.2.20 : இந்ரசேனனிலிருந்து வீதிஹோத்ரனும், வீதிஹோத்ரனிலிருந்து சத்யஸ்ரவனும், சத்யஸ்ரவனிலிருந்து உருஸ்ரவனும், உருஸ்ரவனிலிருந்து தேவதத்தனும் வந்தனர்.

பதம் 9.2.21 : தேவதத்தனிலியிருந்து அக்னிவேஸ்யன் என்ற ஒரு மகன் வந்தார். அவர் அக்னி தேவனேயாவார். புகழ்பெற்ற மகானாகிய இப்புதல்வர் கானீனன் என்றும் ஜாதூகர்ண்யன் என்றும் பிரசித்தி பெற்றவராவார்.

பதம் 9.2.22 : ராஜனே, அக்னிவேஸ்யனிலிருந்து ஆக்னிவேஸ்யாயனம் என்ற பிராமண வம்சம் ஒன்று வந்தது. இதுவரை நான் நரிஷ்யந்தரின் வம்சத்தைப் பற்றி விளக்கினேன். இப்பொழுது திஷ்ட வம்சத்தைப் பற்றி விவரிக்கப் போகிறேன். தயவுசெய்து என்னிடமிருந்து கேளும்.

பதங்கள் 9.2.23 – 9.2.24 : திஷ்டனுக்கு நாபாகன் என்ற ஒரு மகன் இருந்தார். பிறகு விவரிக்கப்படவிருக்கும் நாபாகனிலிருந்து வேறுபட்டவரான இந்த நாபாகன் ஒரு வைசியரானார். நாபாகனின் மகன் பலந்தனன் எனப்பட்டார். பலந்தனனின் மகன் வத்சப்ரீதி. அவரது மகன் பிராம்சு. பிராம்சுவின் மகன் பிரமதி. பிரமதியின் மகன் கனித்ரன். கனித்ரனின் மகன் சாக்ஷுஷன். அவரது மகன் விவிம்சதி.

பதம் 9.2.25 : விவிம்சதியின் மகன் ரம்பன். அவரது மகன் மிகச் சிறந்தவரும், சமயப் பற்றுள்ளவருமான கனீநேத்ர மகாராஜனாவார். அரசே, கனிநேத்ரனின் மகன் கரந்தம மகாராஜனாவார்.

பதம் 9.2.26 : கரந்தமனிலிருந்து அவீக்ஷித்து என்ற மகன் வந்தார். அவீக்ஷித்திலிருந்து சக்கவர்த்தியாக இருந்த மருத்தன் என்ற மகன் வந்தார். மகாயோகியும், அங்கிர புத்திரருமான சம்வர்தர் மருத்தனை யாகம் செய்வதில் ஈடுபடுத்தினார்.

பதம் 9.2.27 : மருந்த ராஜனின் யாகப் பொருட்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்ததால் அவை அழகாக இருந்தன. உண்மையில், அவருடைய யாகத்துடன் வேறெந்த யாகத்தையும் ஒப்பிட முடியாது.

பதம் 9.2.28 : அந்த யாகத்தின்போது அதிகமான சோம-ரசத்தை உண்ட இந்திர தேவன் மதிமயக்கமடைந்தார். பிராமணர்கள் அதிகமான நன்கொடைகளைப் பெற்று திருப்தியடைந்தனர். காற்றுக்களைக் கட்டுப்படுத்தும் பற்பல தேவர்கள் அந்த யாகத்திற்கான உணவு வகைகளை அளித்தனர். விஸ்வேதேவர்கள் சபா உறுப்பினர்களாக இருந்தனர்.

பதம் 9.2.29 : மருத்தனின் மகன் தமன். தமனின் மகன் ராஜ்யவர்தனன். ராஜ்யவர்தனனின் மகன் சுத்ருதி. அவரது மகன் நரன்.

பதம் 9.2.30 : நரனின் மகன் கேவலன். அவரது மகன் துந்துமான். அவரது மகன் வேகவான். வேகவானின் மகன் புதன். புதனின் மகன் திருணபிந்து. இவர் இம் மண்ணுலகிற்கு அரசரானார்.

பதம் 9.2.31 : அலம்புழை, அப்ஸரஸ்களிலேயே மிகச் சிறந்தவளாகவும், உயர்ந்த தகுதிபெற்ற மங்கையாகவும் இருந்தாள். இதேபோன்ற தகுதியுடைய திருணபிந்துவை அவள் தன் கணவனாக ஏற்றாள். சில மகன்களையும், இலவிளை என்ற ஒரு மகளையும் அவள் பெற்றெடுத்தாள்.

பதம் 9.2.32 : சிறந்த மகானும், மகா யோகியுமான விஸ்ரவர் அவரது தந்தையிடமிருந்து உன்னத அறிவைப் பெற்றார். பிறகு, பணம் கொடுப்பவரான குபேரன் என்ற புகழ்பெற்ற ஒரு மகனை, இலவிளையின் மூலமாக அவர் பெற்றார்.

பதம் 9.2.33 : திருணபிந்துவுக்கு விசாலன், சூன்யபந்து, தூம்பரகேது என்ற மூன்று மகன்கள் இருந்தனர். இம்மூவரில் விசாலன் என்பவர் ஒரு வம்சத்தை உண்டாக்கியதுடன், வைசாலி என்ற ஓர் அரண்மனையையும் கட்டினார்.

பதம் 9.2.34 : விசாலனின் மகன் ஹேமசந்திரன் எனப்பட்டார். அவரது மகன் தூம்ராக்ஷன். அவரது மகன் சம்யமன். இவரது மகன்கள் தேவஜன் மற்றும் கிருசாஸ்வன் ஆகியோராவர்.

பதங்கள் 9.2.35 – 9.2.36 : கிருசாஸ்வரின் மகனான சோமதத்தன் அஸ்வமேத யாகங்களைச் செய்து பரமபுருஷரான விஷ்ணுவை திருப்திப்படுத்தினார். பரம புருஷரை வழிபட்டதால், சிறந்த அஷ்டாங்க யோகிகள் வாழத்தகுந்த கிரகத்தை அவர் அடைந்தார். சோமத்தனின் மகன் சுமதி. அவரது மகன் ஜனமேஜயன். விசால வம்சத்தில் தோன்றிய இந்த அரசர்கள் அனைவரும் திருணபந்து மகாராஜனின் புகழுக்குரிய நிலையை நன்கு காப்பாற்றி வந்தனர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare