அத்தியாயம் – 1
சுத்யும்ன மகராஜன் ஒரு பெண்ணாக மாறுதல்
பதம் 9.1.1
ஸ்ரீ-ராஜோவாச
மன்வந்தராணி ஸர்வாணி த்வயோக்தானி ஸ்ருதானி மே
வீர்யாணி அனந்த-வீர்யஸ்ய ஹரேஸ் தத்ர க்ருதானி ச

ஸ்ரீ-ராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் கூறினார்; மன்வந்தராணி—பல்வேறு மனுக்களின் ஆட்சிக் காலங்களைப் பற்றிய அனைத்தையும்; ஸர்வாணி—அவை அனைத்தும்; த்வயா—தங்களால்; உக்தானி—விளக்கப்பட்டன; ஸ்ருதானி—கேள்விப்படப்பட்ட; மே—என்னால்; வீர்யாணி —அற்புதச் செயல்கள்; அனந்த-வீர்யஸ்ய—எல்லையற்ற சக்தி படைத்தவரான பரமபுருஷ பகவானின்; ஹரே:—பரமபுருஷரான ஹரியின்; தத்ர—அந்த ‘மன்வந்தர’ ஆட்சிக் காலங்களில்; க்ருதானி—செய்யப்பட்டவை; ச—கூட.

பரீட்சித்து மகாராஜன் கூறினார்: என் பிரபுவே சுகதேவ கோஸ்வாமி, தாங்கள் பல்வேறு மனுக்களின் ஆட்சிக் காலங்களைப் பற்றிய அனைத்தையும் தெளிவாக விளக்கினீர்கள். மேலும் அந்த ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்த, எல்லையற்ற ஆற்றல் படைத்தவரான பரமபுருஷ பகவானின் அற்புதமான செயல்களைப் பற்றியும் விளக்கினீர்கள். இவைகளைப் பற்றிய அனைத்தையும் தங்களிடமிருந்து கேட்க நான் அதிர்ஷ்டம் உள்ளவனாக இருந்திருக்க வேண்டும்.

பதங்கள் 9.1.2 – 9.1.3
யோ’சௌ ஸத்யவ்ரதோ நாம ராஜர்ஷிர் த்ரவிடேஸ்வர:
ஞானம் யோ ‘தீத-கல்பாந்தே லேபே புருஷ-ஸேவயா

ஸ வை விவஸ்வத: புத்ரோ மனுர் ஆஸீத் இதி ஸ்ருதம்
த்வத்தஸ் தஸ்ய ஸுதா: ப்ரோக்தா இக்ஷ்வாகு-ப்ரமுகா ந்ருபா:

ய: அஸௌ—என அறியப்பட்டவர்; ஸத்யவ்ரத—சத்தியவிரதன்; நாம—எனும் பெயருடைய; ராஜ-ரிஷி:—ராஜரிஷி; த்ரவிட-ஈஸ்வர:—திராவிட நாடுகளை ஆண்ட; ஞானம்—அறிவு; ய:—யாரொருவர்; அதீத-கல்ப-அந்தே—கடந்த மனுவின் ஆட்சிக்காலத்தின் முடிவில்; அல்லது கடந்த யுகத்தின் முடிவில்; லேபே—பெற்றார்; புருஷ-ஸேவயா—பரமபுருஷருக்குத் தொண்டு செய்வதன் வாயிலாக; ஸ:—அவர்; வை—உண்மையில்; விவஸ்வத:—விவஸ்வானின்; புத்ர:—மகன்; மனு: ஆஸீத்—வைவஸ்வத மனுவானார்; இதி—இவ்வாறாக; ஸ்ருதம்—ஏற்கனவே நான் கேட்டிருக்கிறேன்; த்வத்த:—தங்களிடமிருந்து; தஸ்ய—அவரது; ஸுதா:—மகன்கள்; ப்ரோக்தா:—விளக்கப்பட்டது; இக்ஷ்வாகு-ப்ரமுகா:—இக்ஷ்வாகு முதலான; ந்ருபா:—பல அரசர்கள்.

சத்தியவிரதன் திராவிட தேசத்தின் சீரிய மன்னராவார். அவர் கடந்த யுகத்தின் முடிவில் பரமபுருஷரின் கருணையால் ஆன்ம ஞானத்தைப் பெற்றார். பிறகு அவர், அடுத்த மன்வந்தரத்தில் (மனுவின் ஆட்சிக் காலத்தில்), விவஸ்வானின் மகனான வைவஸ்வத மனுவானார். இந்த அறிவை நான் தங்களிடமிருந்து பெற்றேன். தாங்கள் ஏற்கனவே விளக்கியதைப்போல், இக்ஷ்வாகுவைப் போன்ற மன்னர்கள் அவருடைய புத்திரர்களாக இருந்தனர் என்பதையும் நான் அறிவேன்.

பதம் 9.1.4
தேஷாம் வம்சம் ப்ருதக் ப்ரஹ்மன் வம்சானுசரிதானி ச
கீர்த்தயஸ்வ மஹா-பாக நித்யம் சுஸ்ரூஷதாம் ஹி ந:

தேஷாம்—அவ்வெல்லா அரசர்களின்; வம்சம்—வம்சங்களையும்; ப்ருதக்—தனித்தனியாக; ப்ரஹ்மன்—பிறந்த பிராமணரே (சுகதேவ கோஸ்வாமி); வம்ச-அனுசரிதானி ச—வம்ச சரித்திரங்களையும்; கீர்த்தயஸ்வ—அன்புடன் விவரிக்க வேண்டும்; மஹா-பாக—மகா பாக்கியசாலியே; நித்யம்—நித்தியமாக; சுஸ்ரூஷதாம்—உங்களுடைய சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள்; ஹி—உண்மையில்; ந:—எங்களின்.

மகா பாக்கியசாலியும், சிறந்த பிராமணருமான சுகதேவ கோஸ்வாமியே, அவ்வெல்லா அரசர்களின் வம்சங்களையும், வம்ச சரித்திரங்களையும் தனித்தனியாக எங்களுக்கு விளக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். ஏனெனில், இத்தகைய விஷயங்களைத் தங்களிடமிருந்து கேட்பதில் நாங்கள் எப்பொழுதும் ஆவலுள்ளவர்களாக இருக்கிறோம்.

பதம் 9.1.5
யே பூதா யே பவிஷ்யாஸ் ச பவந்தி அத்யதனாஸ் ச யே
தேஷாம் ந: புண்ய-கீர்த்தீனாம் ஸர்வேஷாம் வத விக்ரமான்

யே—அவர்கள் அனைவரைப் பற்றியும்; பூதா:—ஏற்கனவே தோன்றியிருப்பவர்கள்; யே—அவர்கள் அனைவரைப் பற்றியும்; பவிஷ்யா:—எதிர்காலத்தில் தோன்றவிருப்பவர்கள்; ச—மேலும்; பவந்தி—இருப்பவர்கள்; அத்யதனா:—இப்போது; ச—மேலும்; யே—அவர்கள் அனைவரைப் பற்றியும்; தேஷாம்—அவர்கள் அனைவரின்; ந:—எங்களுக்கு; புண்ய-கீர்த்தீனாம்—புண்ணியவான்களும், புகழ் பெற்றவர்களுமான; ஸர்வேஷாம்—அவர்கள் அனைவரைப் பற்றியும்; வத—அன்புடன் விளக்க வேண்டும்; விக்ரமான்—திறமைகளைப் பற்றி.

வைவஸ்வத மனுவின் வம்சத்தில் ஏற்கனவே தோன்றியவர்கள், எதிர்காலத்தில் தோன்றவிருப்பவர்கள் மற்றும் இப்போது தோன்றி இருப்பவர்கள் ஆகியோர் உட்பட, இவ்வம்சத்தில் பிறந்துள்ள எல்லா புகழ்பெற்ற அரசர்களின் ஆற்றல்களைப் பற்றியும் அன்புடன் எங்களுக்குக் கூறுவீராக.

பதம் 9.1.6
ஸ்ரீ-ஸூத உவாச
ஏவம் பரீக்ஷிதா ராஜ்ஞா ஸதஸி ப்ரஹ்ம-வாதினாம்
ப்ருஷ்ட: ப்ரோவாச பகவான் சுக: பரம-தர்ம-வித்

ஸ்ரீ-ஸூத: உவாச—ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்விதமாக; பரீக்ஷிதா—பரீட்சித்து மகாராஜனால்; ராஜ்ஞா—அரசரால்; ஸதஸி—கூட்டத்தில்; ப்ரஹ்ம-வாதினாம்—வேத ஞானத்தில் நிபுணர்களான மாமுனிவர்களின்; ப்ருஷ்ட:—கேட்டுக் கொள்ளப்பட்டு; ப்ரோவாச—பதிலளித்தார்; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்த; சுக:—சுகதேவ கோஸ்வாமி; பரம-தர்ம-வித்—பரதர்மத்தைக் கற்றறிந்த மேதை.

சூத கோஸ்வாமி கூறினார்: மதக் கொள்கைகளை அறிந்தவர்களில் மிகச்சிறந்தவரான சுகதேவ கோஸ்வாமியிடம், வேத வல்லுனர்களின் கூட்டத்தில், இவ்வாறு பரீட்சித்து மகாராஜனால் விண்ணப்பிக்கப்பட்டதும், அவர் பேசுவதற்குத் தயாரானார்.

பதம் 9.1.7
ஸ்ரீ-சுக உவாச
ஸ்ரூயதாம் மானவோ வம்ச: ப்ராகர்யேன பரந்தப
ந சக்யதே விஸ்தரதோ வக்தும் வர்ஷ-சதைர் அபி

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸ்ரூயதாம்—என்னிடமிருந்து கேளுங்கள்; மானவ: வம்ச:—மனு வம்சத்தை; ப்ராகர்யேண—இயன்றளவு விரிவாக; பரந்தப—எதிரிகளை அடக்கக் கூடிய அரசே; ந—இல்லை; சக்யதே—ஒருவரால் இயலும்; விஸ்தரத:—மிகவும் விரிவாக; வக்தும்—பேச; வர்ஷ-சதை: அபி—நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு அவர் அப்படிச் செய்தாலும்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: எதிரிகளை அடக்குபவரான அரசே, மனு வம்சத்தைப் பற்றி இப்போது என்னிடமிருந்து மிகவும் விவரமாகக் கேளும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகக் கூறினாலும், அதைப்பற்றிய அனைத்தையும் ஒருவரால் கூறி முடிக்க முடியாது என்றபோதிலும், என்னால் இயன்றளவு அதை நான் விளக்குகிறேன்.

பதம் 9.1.8
பராவரேஷாம் பூதானாம் ஆத்மா ய: புருஷ: பர:
ஸ ஏவாஸீத் இதம் விஸ்வம் கல்பாந்தே ‘ன்யன் ந கிஞ்சன

பர-அவரேஷாம்—வாழ்வின் உயர்ந்த அல்லது தாழ்ந்த நிலைகளில் உள்ள அனைத்து ஜீவராசிகளின்; பூதானாம்—ஜட உடல்களை ஏற்றுள்ள அவர்களின் (பந்தப்பட்ட ஆத்மாக்கள்); ஆத்மா—பரமாத்மா; ய:—இருக்கும் ஒருவர்; புருஷ:—பரமபுருஷர்; பர:—தெய்வீகமான; ஸ:—அவர்; ஏவ—உண்மையில்; ஆஸீத்—இருந்தார்; இதம்—இந்த; விஸ்வம்—பிரபஞ்சம்; கல்ப-அந்தே—யுகமுடிவில்; அன்யத்—வேறெதுவும்; ந—இல்லை; கிஞ்சன—எவ்விதமான பொருளும்.

வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் உயர்ந்தும், தாழ்ந்தும் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவாகிய உன்னத பரமபுருஷர் மட்டுமே யுகத்தின் முடிவில் எஞ்சியிருந்தார். அப்போது, தோற்றுவிக்கப்பட்ட இப்பிரபஞ்சமோ அல்லது வேறெதுவோ இருக்கவில்லை. ஆனால் அவர் மட்டுமே இருந்தார்.

பதம் 9.1.9
தஸ்ய நாபே: ஸமபவத் பத்ம-கோஷோ ஹிரண்மய:
தஸ்மின் ஜக்ஞே மஹாராஜ ஸ்வயம்பூஸ் சதுர்-ஆனன:

தஸ்ய—அவரின் (பரமபுருஷ பகவான்); நாபே:—நாபியிலிருந்து; ஸமபவத்—உற்பத்தியானது; பத்ம-கோஷ:—ஒரு தாமரை; ஹிரண்மய:—தங்க நிறம், அல்லது ‘ஹிரண்மய’ எனப்படும்; தஸ்மின்—அந்த தங்கத் தாமரையின் மீது; ஜக்ஞே—தோன்றினார்; மஹாராஜ—மகாராஜனே; ஸ்வயம்பூ:—சுயமாகத் தோன்றுபவர், அல்லது ஒரு தாய் இல்லாமலேயே பிறப்பவர்; சது:-ஆனன:—நான்கு தலைகளுடன்.

பரீட்சித்து மகாராஜனே, பரமபுருஷ பகவானின் நாபியிலிருந்து உற்பத்தியான ஒரு தங்கத் தாமரையின் மீது, நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவர் பிறந்தார்.

பதம் 9.1.10
மரீசிர் மனஸஸ் தஸ்ய ஜக்ஞே தஸ்யாபி கஸ்யப:
தாக்ஷாயண்யாம் ததோ ‘தித்யாம் விவஸ்வான் அபவத் ஸுத:

மரீசி:—மாமுனிவரான மரீசி; மனஸ: தஸ்ய—பிரம்ம தேவரின் மனதிலிருந்து; ஜக்ஞே—பிறந்தார்; தஸ்ய அபி—மரீசியிலிருந்து; கஸ்யப:—கஸ்யபர் (பிறந்தார்); தாக்ஷாயண்யாம்—தட்ச மகாராஜனுடைய மகளுக்கு; தத:—அதன்பிறகு; அதித்யாம்—அதிதிக்கு; விவஸ்வான்—விவஸ்வான்; அபவத்—பிறந்தார்; ஸுத:—ஒரு மகன்.

பிரம்ம தேவரின் மனதிலிருந்து மரீசி பிறந்தார். மரீசியினுடைய விந்தின் மூலமாக, தட்சனின் புத்திரிக்கு கசியபர் தோன்றினார். கசியபரின் மூலமாக அதிதிக்கு விவஸ்வான் பிறந்தார்.

பதங்கள் 9.1.11 – 9.1.12
ததோ மனு: ஸ்ராத்ததேவ: ஸம்க்ஞாயாம் ஆஸ பாரத
ஸ்ரத்தாயாம் ஜனயாம் ஆஸ தச புத்ரான் ஸ ஆத்மவான்

இக்ஷ்வாகு-ந்ருக-சர்யாதி-திஷ்ட-த்ருஷ்ட-கரூஷகான்
நரிஷ்யந்தம் ப்ருஷத்ரம் ச நபகம் ச கவிம் விபு:

தத:—விவஸ்வானிலிருந்து; மனு: ஸ்ராத்ததேவ:—சிராத்ததேவர் எனும் மனு; ஸம்ஜ்ஞாயாம்—சம்ஞாவுக்கு (விவஸ்வானின் மனைவி); ஆஸ—பிறந்தார்; பாரத—பாரத வம்சத்தில் சிறந்தவரே; ஸ்ரத்தாயாம்—சிரத்தைக்கு (சிராத்ததேவரின் மனைவி); ஜனயாம் ஆஸ—பெற்றார்; தச—பத்து; புத்ரான்—மகன்களை; ஸ:—அந்த சிராத்த தேவர்; ஆத்மவான்—அவரது புலன்களை வென்று; இக்ஷ்வாகு-ந்ருக-சர்யாதி-திஷ்ட- த்ருஷ்ட-கரூஷகான்—இக்ஷ்வாகு, நிரகன், சர்யாதி, திஷ்டன், த்ருஷ்டன் மற்றும் கரூஷகன் எனப்படும்; நரிஷ்யந்தம்—நரிஷ்யந்தன்; ப்ருஷத்ரம் ச—மற்றும் பிருஷத்ரன்; நபகம் ச—மற்றும் நபகன்; கவிம்— கபி; விபு:—சிறந்த.

பாரத வம்சத்தில் மிகச் சிறந்தவரான மகாராஜனே, விவஸ்வானுக்கு சம்ஞாவின் மூலமாக சிராத்ததேவ மனு பிறந்தார். புலன்களை வென்றவரான சிராத்ததேவ மனு, அவரது மனைவியான சிரத்தையின் மூலமாக பத்து மகன்களைப் பெற்றெடுத்தார். இம்மகன்களின் பெயர்கள் இக்ஷ்வாகு, நிரகன், சர்யாதி, திஷ்டன், த்ருஷ்டன், கரூஷகன், நரிஷ்யந்தன், பிருஷத்ரன், நபகன் மற்றும் கவி என்பனவாகும்.

பதம் 9.1.13
அப்ரஜஸ்ய மனோ: பூர்வம் வஸிஷ்டோ பகவான் கில
மித்ரா-வருணயோர் இஷ்டிம் ப்ரஜார்தம் அகரோத் விபு:

அப்ரஜஸ்ய—மகனற்ற அவரின்; மனோ:—மனுவின்; பூர்வம்—முன்பு; வஸிஷ்ட:—மாமுனிவரான வஸிஷ்டர்; பகவான்—சக்திவாய்ந்த; கில—உண்மையில்; மித்ரா-வருணயோ:—மித்ரா மற்றும் வருணன் எனும் தேவர்களின்; இஷ்டிம்—ஒரு யாகம்; ப்ரஜா-அர்தம்—புத்திரர்களைப் பெறுவதற்காக; அகரோத்—நிறைவேற்றினார்; விபு:—மிகச்சிறந்தவர்.

மனுவிற்கு முதலில் மகன்கள் இல்லை. ஆகவே, மித்ரா மற்றும் வருணன் ஆகிய தேவர்களை திருப்திப்படுத்தி, அவருக்கு ஒரு மகனை பெற்றுத் தருவதற்காக, ஆன்மீக அறிவில் மிகவும் முதிர்ந்தவரான மாமுனிவர் வஸிஷ்டர் ஒரு யாகத்தை நடத்தினார்.

பதம் 9.1.14
தத்ர ஸ்ரத்தா மனோ: பத்னீ ஹோதாரம் ஸமயாசத
துஹித்ரர்தம் உபாகம்ய ப்ரணிபத்ய பயோவ்ரதா

தத்ர—அந்த யாகத்தில்; ஸ்ரத்தா—சிரத்தை; மனோ:—மனுவின்; பத்னீ—மனைவி; ஹோதாரம்—யாகமியற்றும் புரோகிதரிடம்; ஸமயாசத—முறைப்படி வேண்டிக்கொண்டாள்; துஹித்ரு-அர்தம்—ஒரு மகளுக்காக; உபாகம்ய—அருகில் வந்து; ப்ரணிபத்ய—வணங்கி; பய: விரதா—பாலை மட்டுமே பருகுவதெனும் விரதத்தை அனுஷ்டித்த.

அந்த யாகத்தின்போது, பாலை மட்டுமே பருகி உயிர்வாழும் விரதத்தை மேற்கொண்டிருந்த மனுவின் மனைவியான சிரத்தை யாகத்தை நடத்தும் புரோகிதரை அணுகி, அவரை வணங்கி, தனக்கு ஒரு மகன் வேண்டுமென்று வேண்டிக் கொண்டாள்.

பதம் 9.1.15
ப்ரேஷிதோ ‘த்வர்யுணா ஹோதா வ்யசரத் தத் ஸமாஹித:
க்ருஹீதே ஹவிஷி வாசா வஷட்-காரம் க்ருணன் த்விஜ:

ப்ரேஷித:—யாகத்தை நிறைவேற்றும்படி கூறப்பட்டதால்; அத்வர்யுணா—அவரது சார்பாக செயற்படும் புரோகிதரால்; ஹோதா—யாக நிவேதனங்களுக்கு பொறுப்பேற்றுள்ள புரோகிதர்; வ்யசரத்—நடத்தினார்; தத்—அதை (யாகத்தை); ஸமாஹித:—மிகவும் கவனத்துடன்; க்ருஹீதே ஹவிஷி—முதல் நிவேதனத்திற்காக நெய்யை எடுத்து; வாசா—மந்திரத்தை உச்சரித்து; வஷட்-காரம்—’வஷட்’ எனும் சொல்லுடன் துவங்கும் மந்திரத்தை; க்ருணன்—உச்சரித்து; த்விஜ:—பிராமணர்.

“இப்போது யாகத்தில் நிவேதனம் செய்யவும்” என்று தலைமைப் புரோகிதர் கூறியதும், யாகப் பொறுப்பை ஏற்றிருந்தவர் நிவேதனம் செய்வதற்காக நெய்யை எடுத்தார். பிறகு மனுவினுடைய மனைவியின் விண்ணப்பத்தை அவர் நினைவிற்கொண்டு, வஷட் எனும் சொல்லை உச்சரித்து யாகத்தை நிறைவேற்றினார்.

பதம் 9.1.16
ஹோதுஸ் தத்-வ்யபிசாரேண கன்யேலா நாம ஸாபவத்
தாம் விலோக்ய மனு: ப்ராஹ நாதிதுஷ்டமனா குரும்

ஹோது:—புரோகிதரின்; தத்—யாகத்தின்; வ்யபிசாரேண—அந்த அத்துமீறலால்; கன்யா—ஒரு மகள்; இலா—இளை; நாம—எனும் பெயர் கொண்ட; ஸா—அந்த மகள்; அபவத்—பிறந்ததை; தாம்—அவளுக்கு; விலோக்ய—கண்டு; மனு:—மனு; ப்ராஹ—கூறினார்; ந—இல்லை; அதிதுஷ்டமனா:—மிகவும் திருப்தியடைந்தார்; குரும்—அவரது குருவிடம்.

ஒரு புத்திரனை பெறுவதற்காகத்தான் மனு அந்த யாகத்தைத் துவங்கினார். ஆனால் மனுவின் மனைவியால் புரோகிதர் வழி திருப்பப்பட்டதால், இளை எனும் பெயர் கொண்ட ஒரு மகள் பிறந்தாள். மகளைக் கண்ட மனு மிகவும் அதிருப்தி அடைந்து, தமது குருவான வஸிஷ்டரிடம் பின்வருமாறு கூறினார்.

பதம் 9.1.17
பகவன் கிம் இதம் ஜாதம் கர்ம வோ ப்ரஹ்ம-வாதினாம்
விபர்யயம் அஹோ கஷ்டம் மைவம் ஸ்யாத் ப்ரஹ்ம-விக்ரியா

பகவன்—பிரபுவே; கிம் இதம்—என்ன இது; ஜாதம்—பிறந்துள்ளது; கர்ம—பலன் நோக்குக் கருமங்கள்; வ:—உங்கள் அனைவரின்; ப்ரஹ்ம-வாதினாம்—வேத மந்திரங்களை உச்சரிப்பதில் நிபுணர்களான உங்களின்; விபர்யயம்—திசை மாற்றம்; அஹோ—அந்தோ; கஷ்டம்—துன்பம்; மா ஏவம் ஸ்யாத்—அது அப்படி இருந்திருக்கக் கூடாது; ப்ரஹ்ம-விக்ரியா—வேத மந்திரங்களுக்கு எதிரான இச்செயல்.

பிரபுக்களே, நீங்கள் அனைவரும் வேத மந்திரங்களை உச்சரிப்பதில் நிபுணர்கள். அப்படி இருக்கும்போது, விருப்பத்திற்கு எதிரான பலன் எப்படி கிடைத்தது? இது வருந்தத்தக்க ஒரு விஷயம். வேத மந்திரங்களின் பலன்களில் இத்தகைய நேர் எதிரான ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கக் கூடாது.

பதம் 9.1.18
யூயம் ப்ரஹ்ம-விதோ யுக்தாஸ் தபஸா தக்த-கில்பிஷா:
குத: ஸங்கால்ப-வைஷ்ம்யம் அன்ருதம் விபுதேஷ்வ் இவ

யூயம்—உங்கள் அனைவரின்; ப்ரஹ்ம-வித:—பரம சத்தியத்தைப் பற்றி பூரணமாக அறிந்துள்ள; யுக்தா:—சுயக்கட்டுப்பாடு மற்றும் சமமான மனநிலை; தபஸா—தவத்தாலும், எளிமையாலும்; தக்த-கில்பிஷா:—எல்லா வகையான பெளதிக களங்கங்களும் எரிக்கப்பட்டுவிட்டதால்; குத:—பிறகு எப்படி; ஸங்கல்ப-வைஷம்யம்—மனஉறுதியில் முரண்பாடு; அன்ருதம்—பொய்யான வாக்குறுதி, பொய்யான கூற்று; விபுதேஷு—தேவர்களின் சமூகத்தில்; இவ—அல்லது.

நீங்கள் அனைவரும் சுயக் கட்டுப்பாடு உள்ளவர்களும், சமமான மனநிலை கொண்டவர்களும், பரம சத்தியத்தை அறிந்தவர்களும் ஆவீர். தவத்தாலும், விரத்தாலும் நீங்கள் எல்லா பௌதிக களங்கத்திலிருந்தும் முழுவதுமாக தூய்மை அடைந்திருக்கிறீர்கள். உங்களுடைய வார்த்தைகள், தேவர்களுடையதைப் போல், ஒரு போதும் ஏமாற்றத்தை அளிக்காதவையாகும். பிறகு எப்படி உங்களுடைய மனவுறுதி தோல்வியடைந்தது ?

பதம் 9.1.19
நிசம்ய தத் வசஸ் தஸ்ய பகவான் ப்ரபிதாமஹ:
ஹோதுர் வ்யதிக்ரமம் ஞாத்வா பபாஷே ரவி-நந்தனம்

நிசம்ய—கேட்பின்; தத் வச:—அவ்வார்த்தைகளை; தஸ்ய—அவரது (மனு); பகவான்—மிகவும் சக்தி வாய்ந்தவரான; ப்ரபிதாமஹ:—முப்பாட்டனாரான வஸிஷ்டரின்; ஹோது:-வ்யதிக்ரமம்—’ஹோதா’ புரோகிதரின் முரண்பாட்டை; ஞாத்வா—அறிந்து; பபாஷே—பேசினார்; ரவி-நந்தனம்—சூரியதேவனின் புதல்வரான வைவஸ்வத மனுவிடம்.

மனுவின் இச்சொற்களைக் கேட்டபின், மிகவும் சக்திவாய்ந்த முப்பாட்டனாராகிய வஸிஷ்டர், புரோகிதரின் முரண்பாடான செயலைப் புரிந்து கொண்டார். இவ்வாறாக அவர் சூரியதேவனின் புதல்வரிடம் பின்வருமாறு பேசினார்.

பதம் 9.1.20
ஏதத் ஸங்கல்ப-வைஷ்ம்யம் ஹோதுஸ் தே வ்யபிசாரத
ததாபி ஸாதயிஷ்யே தே ஸீப்ரஜாஸ்த்வம் ஸ்வ- தேஜஸா

ஏதத்—இந்த; ஸங்கல்ப-வைஷம்யம்—நோக்கத்தில் முரண்பாடு; ஹோது:—புரோகிதரின்; தே—உமது; வ்யபிசாரத:—நியமிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து விலகியதிலிருந்து; ததா அபி—இருப்பினும்; ஸாதயிஷ்யே—நான் நிறைவேற்றுவேன்; தே—உங்களுக்கு; ஸு-ப்ரஜாஸ்த்வம்—ஒரு நல்ல மகனை; ஸ்வ-தேஜஸா—எனது சுய சக்தியினால்.

உமது புரோகிதர்கள் மூல நோக்கத்திலிருந்து விலகியதுதான் நோக்கத்தில் ஏற்பட்ட முரண்பாட்டுக்குக் காரணம். ஆயினும், எனது சொந்த திறமையினால் உங்களுக்கு ஒரு நல்ல புதல்வனை நான் அளிக்கப் போகிறேன்.

பதம் 9.1.21
ஏவம் வ்யவஸிதோ ராஜன் பகவான் ஸ மஹா-யசா:
அஸ்தௌஷீத் ஆதி-புருஷம் இளாயா: பும்ஸ்த்வ-காம்யயா

ஏவம்—இவ்வாறு; வ்யவஸித:—முடிவுசெய்து; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; பகவான்—மிகவும் சக்திவாய்ந்தவரான; ஸ:—வஸிஷ்டர்; மஹா-யசா:—மிகவும் புகழ்பெற்றவருமான; அஸ்தௌஷீத்—பிரார்த்தனைகள் செய்தார்; ஆதி-புருஷம்—பரமபுருஷராகிய பகவான் விஷ்ணுவிடம்; இளாயா:—இளையை; பும்ஸ்த்வ-காம்யயா—ஓர் ஆணாக மாற்றிவிட.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, மிகவும் சக்திவாய்ந்தவரும், புகழ்பெற்றவருமான வஸிஷ்டர் இம்முடிவைச் செய்தபின், இளையை ஓர் ஆணாக மாற்றிவிடுவதற்காக பரமபுருஷரான விஷ்ணுவிடம் பிரார்த்தனைகள் செய்தார்.

பதம் 9.1.22
தஸ்மை காம-வரம் துஷ்டோ பகவான் ஹரிர் ஈஸ்வர:
ததாவ் இளாபவத் தேன ஸுத்யும்ன: புருஷர்ஷப:

தஸ்மை—அவருக்கு (வஸிஷ்டருக்கு); காம-வரம்—விரும்பிய வரத்தை; துஷ்ட:—திருப்தியடைந்து; பகவான்—பரமபுருஷர்; ஹரி: ஈஸ்வர:—பரம ஆளுனராகிய பகவான்; ததௌ—அளித்தார்; இளா—இளை எனும் பெண்; அபவத்—ஆனாள்; தேன—இந்த வரத்தினால்; ஸுத்யும்ன:—சுத்யும்னன் எனும் பெயர் கொண்ட; புருஷ-ரிஷப:—ஒரு நல்ல ஆணாக.

பரம ஆளுனரான பரமபுருஷ பகவான், வஸிஷ்டரிடம் திருப்தியடைந்து, அவருக்கு அவர் விரும்பிய வரத்தை அளித்தார். இவ்வாறாக இளை, சுத்யும்னன் எனும் பெயர் கொண்ட ஓர் அழகிய ஆணாக மாற்றப்பட்டாள்.

பதங்கள் 9.1.23 – 9.1.24
ஸ ஏகதா மஹாராஜ விசரன் ம்ருகயாம் வனே
வ்ருத: கதிபயாமாத்யைர் அஸ்வம் ஆருஹ்ய ஸைந்தவம்

ப்ரக்ருஹ்ய ருசிரம் சாபம் சராம்ஸ் ச பரமாத்புதான்
தம்சிதோ ‘நும்ருகம் வீரோ ஜகாம திசம் உத்தராம்

ஸ:—சுத்யும்னன்; ஏகதா—ஒரு சமயம்; மஹாராஜ—பரீட்சித்து மகாராஜனே; விசரன்—பிரயாணம் செய்து; ம்ருகயாம்—வேட்டையாட; வனே—காட்டில்; வ்ருத:—சூழப்பட்டு; கதிபய—சில; அமாத்யை:—மந்திரிகளால் அல்லது சகாக்களால்; அஸ்வம்—ஒரு குதிரை மீது; ஆருஹ்ய—சவாரி செய்து; ஸைந்தவம்—சிந்து பிரதேசத்தில் பிறந்த; ப்ரக்ருஹ்ய—கையில் ஏந்தியவாறு; ருசிரம்—அழகிய; சாபம்—வில்; சரான் ச—மற்றும் அம்புகளையும்; பரம-அத்புதான்—அதி அற்புதமான, அசாதாரணமான; தம்சித:—கவசம் அணிந்து; அனும்ருகம்—மிருகங்களின் பின்னால்; வீர:—வீரன்; ஜகாம—நோக்கிச் சென்றார்; திசம்-உத்தராம்—வடக்கு திசையை.

பரீட்சித்து மகாராஜனே, ஒரு சமயம் வீரரான அந்த சுத்யும்னன், சில மந்திரிகளாலும், சகாக்களாலும் சூழப்பட்டவராய், சிந்துபிரதேசத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு குதிரைமீது சவாரி செய்து, வேட்டையாட காட்டிற்குச் சென்றார். அவர் கவசம் அணிந்திருந்ததுடன், அம்புகளாலும், விற்களாலும் அலங்கரிக்கப்பட்டு, மிகவும் அழகாகவும் இருந்தார். மிருகங்களைப் பின் தொடர்ந்து செல்லும் வேளையில், காட்டின் வடக்குப் பகுதியை அவர் அடைந்தார்.

பதம் 9.1.25
ஸுகுமார-வனம் மேரோர் அதஸ்தாத் ப்ரவிவேச ஹ
யத்ராஸ்தே பகவான் சர்வோ ரமமாண: ஸஹோமயா

ஸுகுமார-வனம்—சுகுமாரம் எனப்படும் வனத்தில்; மேரோ: அதஸ்தாத்—மேரு மலையின் அடிவாரத்தில்; ப்ரவிவேச ஹ—அவர் புகுந்தார்; யத்ர—எங்கு; ஆஸ்தே—இருந்தாரோ; பகவான்—மிகவும் சக்திவாய்ந்த (தேவர்); சர்வ:—சிவபெருமான்; ரமமாண:—இன்பத்தில் ஈடுபட்டுள்ள; ஸஹ உமயா—அவரது மனைவி உமாவுடன்.

வட திசையிலுள்ள மேரு மலையின் அடிவாரத்தில், சுகுமாரம் எனப்படும் வனம் ஒன்றுள்ளது. அங்கு உமாவுடன் சிவபெருமான் எப்பொழுதும் இன்பத்தில் ஈடுபட்டிருந்தார். அக்காட்டினுள் சுத்யும்னன் புகுந்தார்.

பதம் 9.1.26
தஸ்மின் ப்ரவிஷ்ட ஏவாஸௌ ஸுத்யும்ன: பர-வீர-ஹா
அபஸ்யத் ஸ்த்ரியம் ஆத்மானம் அஸ்வம் ச வடவாம் ந்ருப

தஸ்மின்—அந்த காட்டில்; ப்ரவிஷ்ட:—நுழைந்ததும்; ஏவ—உண்மையில்; அஸௌ—அவர்; ஸுத்யும்ன:—இளவரசரான சுத்யும்னன்; பர-வீர-ஹா—அவரது எதிரிகளை நன்கு அடக்கக் கூடியவரான; அபஸ்யத்—கண்டார்; ஸ்த்ரியம்—பெண்ணாகவும்; ஆத்மானம்—தான்; அஸ்வம் ச—மற்றும் தன் குதிரை; வடவாம்—ஒரு பெண் குதிரையாகவும்; ந்ருப—பரீட்சித்து மகாராஜனே.

பரீட்சித்து மகாராஜனே, எதிரிகளை அடக்குவதில் வல்லவரான சுத்யும்னன் காட்டிற்குள் நுழைந்தவுடனேயே, அவர் ஒரு பெண்ணாக மாறியதையும், அவரது குதிரை ஒரு பெண் குதிரையாக மாறிவிட்டதையும் கண்டார்.

பதம் 9.1.27
ததா தத்-அநுகா: ஸர்வே ஆத்ம-லிங்க விபர்யயம்
த்ருஷ்ட்வா விமனஸோ ‘பூவன் வீக்ஷமாணா: பரஸ்பரம்

ததா—அதைப்போலவே; தத்-அநுகா:—சுத்யும்னனின் சகாக்கள்; ஸர்வே—அவர்களனைவரும்; ஆத்ம-லிங்க-விபர்யயம்—அவர்களுடைய (ஆண்) இனம் எதிரான இனமாக மாறிவிட்டதை; த்ருஷ்ட்வா—கண்டு; விமனஸ:—வருத்தம்; அபூவன்—அடைந்தனர்; வீக்ஷமாணா:—பார்த்துக்கொண்டனர்; பரஸ்பரம்—ஒருவரையொருவர்.

அவரைப் பின் தொடர்ந்தவர்களும், தங்களுடைய இனம் எதிரினமாக மாறிவிட்டதைக் கண்டு வருத்தம் தோய்ந்த முகத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

பதம் 9.1.28
ஸ்ரீ-ராஜோவாச
கதம் ஏவம் குணோ தேச: கேன வா பகவன் க்ருத:
ப்ரஸ்னம் ஏனம் ஸமாசக்ஷ்வ பரம் கௌதூஹலம் ஹி ந:

ஸ்ரீ-ராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் கூறினார்; கதம்—எப்படி; ஏவம்—இந்த; குண:—தன்மை; தேச:—தேசம்; கேன—ஏன்; வா—அல்லது; பகவன்—மிகவும் சக்திவாய்ந்தவரே; க்ருத:—அது அப்படி செய்யப்பட்டது; ப்ரஸ்னம்—கேள்வி; ஏனம்—இந்த; ஸமாசக்ஷ்வ—நிதானமாக ஆலோசித்து கூறுங்கள்; பரம்—மிகவும்; கௌதூஹலம்—ஆவல்; ஹி—உண்மையில்; ந:—எங்கள்.

பரீட்சித்து மகாராஜன் கூறினார்: மிகவும் சக்திவாய்ந்த பிராமணரே, இந்த இடம் ஏன் இவ்வளவு சக்திவாய்ந்ததாக உள்ளது? இதை இவ்வளவு சக்திவாய்ந்ததாக மாற்றியவர் யார்? இதைப்பற்றி கேட்டறிய நான் மிகவும் ஆவலாக இருப்பதால், தயவுசெய்து இக்கேள்விக்கு பதில் கூறுங்கள்.

பதம் 9.1.29
ஸ்ரீ-சுக உவாச
ஏகதா கிரிசம் த்ரஷ்டும் ரிஷயஸ் தத்ர ஸுவ்ரதா:
திசோ விதிமிராபாஸா: குர்வந்த: ஸமுபாகமம்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏகதா—ஒரு சமயம்; கிரிசம்—சிவபெருமானை; த்ரஷ்டும்—காண; ரிஷய:—சிறந்த முனிவர்கள்; தத்ர—அந்த காட்டில்; ஸு-வ்ரதா:—ஆத்ம சக்தியில் மிகவும் உயர்ந்த; திச:—எல்லாத் திசைகளும்; விதிமிர-ஆபாஸா:—எல்லாவிதமான இருளையும் போக்கி; குர்வந்த:—அவ்வாறு செய்து; ஸமுபாகமம்—வந்து சேர்ந்தனர்.

சுகதேவ கோஸ்வாமி பதில் கூறினார்: ஒரு சமயம், ஆன்மீக கட்டுப்பாட்டு விதிகளை முறையாகப் பின்பற்றிய சிறந்த முனிவர்கள், தங்களது உடல்களின் சுயப்பிரகாசத்தினால் எல்லாத் திசைகளின் இருளையும் போக்கியவாறு, அவ்வனத்தில் சிவபெருமானை காணச் சென்றனர்.

பதம் 9.1.30
தான் விலோக்யாம்பிகா தேவீ விவாஸா வ்ரீடிதா ப்ருசம்
பர்துர் அங்காத் ஸமுத்தாய நீவீம் ஆசு அத பர்யதாத்

தான்—எல்லா முனிவர்களையும்; விலோக்ய—அவர்களைக் கண்டு; அம்பிகா—அம்பிகை (துர்கை); தேவீ—தேவி; விவாஸா—அவள் நிர்வாணமாக இருந்ததால்; வ்ரீடிதா—வெட்கமடைந்து; ப்ருசம்—மிகவும்; பர்து:—அவளது கணவரின்; அங்காத்—மடியிலிருந்து; ஸமுத்தாய—எழுந்து; நீவீம்—ஸ்தனங்களை; ஆசு அத—மிக விரைவாக; பர்யதாத்—துணியால் மூடிக்கொண்டாள்.

அம்பிகை நிர்வாணமாக இருந்ததால், மாமுனிவர்களைக் கண்டு மிகவும் வெட்கமடைந்தவளாய், உடனே தம் கணவரின் மடியிலிருந்து எழுந்து, தன் ஸ்தனங்களை மூடிக்கொள்ள முயன்றாள்.

பதம் 9.1.31
ரிஷயோ ‘பி தயோர் வீக்ஷ்ய ப்ரஸங்கம் ரமமாணயோ:
நிவ்ருத்தா: ப்ரயயுஸ் தஸ்மான் நர-நாராயணாஸ்ரமம்

ரிஷய:—பெரும் முனிவர்கள் அனைவரும்; அபி—கூட; தயோ:—அவர்கள் இருவரின்; வீக்ஷ்ய—கண்டு; ப்ரஸங்கம்—பாலுறவு விவகாரத்தில் ஈடுபாட்டை; ரமமாணயோ:—அப்படி அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள்; நிவ்ருத்தா:—முன்னேறிச் செல்வதை நிறுத்திக் கொண்டனர்; ப்ரயயு:—உடனே புறப்பட்டனர்; தஸ்மாத்—அந்த இடத்திலிருந்து; நர-நாராயண-ஆஸ்ரமம்—நர-நாராயணரின் ஆசிரமத்திற்கு.

சிவபெருமானும், பார்வதியும் உடலுறவு விவகாரங்களில் ஈடுபட்டிருப்பதைக் கண்ட பெரும் முனிவர்கள் அனைவரும் முன்னேறிச் செல்வதை உடனடியாக நிறுத்திக்கொண்டு, நர—நாராயணரின் ஆசிரமத்தை நோக்கிப் புறப்பட்டனர்.

பதம் 9.1.32
தத் இதம் பகவான் ஆஹ ப்ரியாயா: ப்ரிய-காம்யயா
ஸ்தானம் ய: ப்ரவிசேத் ஏதத் ஸ வை யோஷித் பவேத் இதி

தத்—காரணத்தால்; இதம்—இந்த; பகவான்—சிவபெருமான்; ஆஹ—கூறினார்; ப்ரியாயா:—அன்பிற்குரிய அவரது மனைவியின்; ப்ரிய-காம்யயா—சந்தோஷத்திற்காக; ஸ்தானம்—இடத்தில்; ய—யாரொருவர்; ப்ரவிசேத்—பிரவேசிப்பாரோ; ஏதத்—இங்கு; ஸ:—அவர்; வை—உண்மையில்; யோஷித்—பெண்ணாக; பவேத்—ஆகிவிடுவார்; இதி—இவ்வாறாக.

அக்காரணத்தினால், தமது மனைவியை சந்தோஷப்படுத்துவதற்காகவே, சிவபெருமான் பின்வருமாறு கூறினார், “இந்த இடத்திற்குள் நுழையும் எந்த ஆணும் உடனே ஒரு பெண்ணாக மாறிவிடுவார்.

பதம் 9.1.33
தத ஊர்த்வம் வனம் தத் வை புருஷா வர்ஜயந்தி ஹி
ஸா சானுசர-ஸம்யுக்தா விசசார வனாத் வனம்

தத: ஊர்த்வம்—அன்றுமுதல்; வனம்—வனம்; தத்—அந்த; வை—குறிப்பாக; புருஷா:—ஆண்கள்; வர்ஜயந்தி—நுழைவதில்லை; ஹி—உண்மையில்; ஸா—பெண் வடிவிலிருந்த சுத்யும்னன்; ச—மேலும்; அநுசர-ஸம்யுக்தா—அவரது சகாக்கள் புடைசூழ; விசசார—நடந்தார்; வனாத் வனம்—வனத்தினுள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு.

அன்று முதல், எந்த ஆணும் அந்த வனத்திற்குள் புகுந்ததில்லை. ஆனால் இப்போது ஒரு பெண்ணாக உருமாற்றப்பட்ட சுத்யும்ன மகாராஜன், தனது சகாக்களுடன் ஒரு வனத்திலிருந்து மற்றொன்றிற்கு நடக்க ஆரம்பித்தார்.

பதம் 9.1.34
அத தாம் ஆஸ்ரமாப்யாசே சரந்தீம் ப்ரமதோத்தமாம்
ஸ்த்ரீபி: பரிவ்ருதாம் வீக்ஷ்ய சகமே பகவான் புத:

அத—இவ்விதமாக; தாம்—அவள்; ஆஸ்ரம-அப்யாசே—அவரது ஆசிரமத்திற்கு அருகில்; சரந்தீம்—சுற்றித்திரியும்; ப்ரமதா-உத்தமாம்—காமத்தைத் தூண்டும் அழகிய மங்கையரில் மிகச்சிறந்தவள்; ஸ்த்ரீபி—மற்ற பெண்களால்; பரிவ்ருதாம்—சூழப்பட்டவளாய்; வீக்ஷ்ய—அவளைக்கண்டு; சகமே—பாலுறவு கொள்ள விரும்பினார்; பகவான்—மிகவும் சக்திவாய்ந்தவரான; புத:—சந்திரனின் புத்திரனும், புதன் எனப்படும் கிரகத்திற்கு அதிபதியுமான புதன்.

சுத்யும்னன், காம இச்சையைத் தூண்டும் அழகிய மங்கையரில் மிகச் சிறந்தவளாக உருமாற்றப்பட்டு, மற்ற பெண்களால் சூழப்பட்டிருந்தார். அழகுமிக்க இப்பெண் தனது ஆசிரமத்திற்கு அருகில் சுற்றித் திரிவதைக் கண்ட சந்திர குமாரனான புதன், உடனே அவளை அனுபவிக்க விரும்பினார்.

பதம் 9.1.35
ஸாபி தம் சகமே ஸுப்ரூ: ஸோமராஜ-ஸுதம் பதிம்
ஸ தஸ்யாம் ஜனயாம் ஆஸ புரூரவஸம் ஆத்மஜம்

ஸா—ஒரு பெண்ணாக உருமாறிய சுத்யும்னன்; அபி—கூட; தம்—(புதன்); சகமே—பாலுறவை விரும்பினாள்; ஸு-ப்ரூ:—மிகவும் அழகிய; ஸோமராஜ-ஸூதம்—சோமராஜ புத்திரரான; பதிம்—அவளது கணவனாக; ஸ:—அவர் (புதன்); தஸ்யாம்—அவள் மூலமாக; ஜனயாம் ஆஸ—பெற்றார்; புரூரவஸம்—புரூரவஸ் என்ற; ஆத்ம-ஜம்—ஒரு மகனை.

அழகு மங்கையாகிய அவளும் சோமராஜ புத்திரரான புதனைத் தன் கணவனாக அடைய விரும்பினாள். இவ்வாறாக புதன் அவளிடத்தில் புரூரவஸ் என்ற மகனைப் பெற்றார்.

பதம் 9.1.36
ஏவம் ஸ்த்ரீத்வம் அனுப்ராப்த: ஸுத்யும்னோ மானவே ந்ரூப:
ஸஸ்மார ஸ குலாசார்யம் வஸிஷ்டம்-இதி சுஸ்ரும

ஏவம்—இவ்வாறு; ஸ்த்ரீத்வம்—பெண்தன்மை; அனுப்ராப்த:—அவ்வாறு அடைந்து; ஸுத்யும்ன:—சுத்யும்னன் என்ற ஆண்; மானவ:—மனு புத்திரர்; ந்ருப:—அரசர்; ஸஸ்மார—நினைத்தார்; ஸ:—அவர்; குல-ஆசார்யம்—குல குருவான; வஸிஷ்டம்—சக்திமிக்க வசிஷ்டர்; இதி சுஸ்ரும—என்ற (நம்பத் தகுந்த ஆதாரங்களிலிருந்து) நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு பெண் தன்மையடைந்த, மனு புத்திரராகிய சுத்யும்ன மகாராஜன் தனது குலகுருவாகிய வசிஷ்டரை நினைத்துக் கொண்டார் என்பதை நம்பத்தகுந்த ஆதாரங்களிலிருந்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பதம் 9.1.37
ஸ தஸ்ய தாம் தசாம் த்ருஷ்ட்வா க்ருபயா ப்ருச-பீடித:
ஸுத்யும்னஸ்யாசயன் பும்ஸ்த்வம் உபாதாவத சங்கரம்

ஸ:—அவர், வசிஷ்டர்; தஸ்ய—சுத்யும்னனின்; தாம்—அந்த; தசாம்—நிலையை; த்ருஷ்ட்வா—கண்டு; க்ருபயா—மனமிரங்கி; ப்ருச-பீடித:—மிகவும் வருந்தி; ஸுத்யும்னஸ்ய—சுத்யும்னனின்; ஆசயன்—விரும்பி; பும்ஸ்த்வம்—ஆண்மையை; உபாதாவத—வழிபடத் துவங்கினார்; சங்கரம்—சிவபெருமானை.

சுத்யுமனனின் பரிதாபமான அந்நிலையைக் கண்ட வசிஷ்டர் மிகவும் வருந்தினார். சுத்யுமனன் தனது ஆண்மையை திரும்பப் பெறுவதற்காக, வசிஷ்டர் மீண்டும் சங்கரரை (சிவபெருமான்) வழிபடத் துவங்கினார்.

பதங்கள் 9.1.38 – 9.1.39
துஷ்டஸ் தஸ்மை ஸ பகவான் ரிஷயே ப்ரியம் ஆவஹன்
ஸ்வாம் ச வாசம் ருதாம் குர்வன் இதம் ஆஹ விசாம்பதே

மாஸம் புமான் ஸ பவிதா மாஸம் ஸ்த்ரீ தவ கோத்ரஜ:
இத்தம் வ்யவஸ்தயா காமம் ஸுத்யும்னோ ‘வது மேதினீம்

துஷ்ட—திருப்தியடைந்ததால்; தஸ்மை—வசிஷ்டரிடம்; ஸ:—அவர் (சிவபெருமான்); பகவான்—மிக சக்திவாய்ந்த; ரிஷயே—அந்த மாமுனிவரை; ப்ரியம் ஆவஹன்—அவரை திருப்திப்படுத்துவதற்காகவே; ஸ்வாம் ச—அவரது சொந்த; வாசம்—வார்த்தையை; ரிதாம்—உண்மையான; குர்வன்—காப்பாற்றி; இதம்—இதை; ஆஹ—கூறினார்; விசாம்பதே—பரீட்சித்து மகாராஜனே; மாஸம்—ஒரு மாதம்; புமான்—ஆண்; ஸ:—சுத்யும்னன்; பவிதா—ஆவான்; மாஸம்—மற்றொரு மாதம்; ஸ்த்ரீ—பெண்; தவ—உமது; கோத்ர-ஜ:—சீடப்பரம்பரையில் பிறந்துள்ள சீடன்; இத்தம்—இவ்விதமாக; வ்யவஸ்தயா—கட்டுப்பாட்டுடன்; காமம்—விருப்பப்படி; ஸுத்யும்ன:—சுத்யும்ன ராஜன்; அவது—ஆளலாம்; மேதினீம்—உலகை.

பரீட்சித்து மகாராஜனே, சிவபெருமான் வசிஷ்டரிடம் திருப்தியடைந்தார். எனவே அவரை மகிழ்விக்கவும், தமது சொந்த மனைவியான பார்வதிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவும், சிவபெருமான் அம்முனிவரிடம் பின்வருமாறு கூறினார்: “உமது சீடனான சுத்யும்னன் ஒரு மாதம் ஆணாகவும், ஒரு மாதம் பெண்ணாகவும் இருக்கட்டும். இவ்வாறு இஷ்டப்படி அவன் உலகை ஆளலாம்”.

பதம் 9.1.40
ஆசார்யானுக்ரஹாத் காமம் லப்த்வா பும்ஸ்த்வம் வ்யவஸ்தயா
பாலயாம் ஆஸ ஜகதீம் நாப்யனந்தன் ஸ்ம தம் ப்ரஜா:

ஆசார்ய-அனுக்ரஹாத்—ஆன்மீக குருவின் கருணையால்; காமம்—விரும்பிய; லப்த்வா—அடைந்து; பும்ஸ்த்வம்—ஆண்மையை; வ்யவஸ்தயா—சிவபெருமானின் இந்த ஏற்பாட்டால்; பாலயாம் ஆஸ—அவர் ஆண்டார்; ஜகதீம்—முழு உலகையும்; ந அப்யனந்தன் ஸ்ம—திருப்தியடையவில்லை; தம்—அரசரிடம்; ப்ரஜா:—பிரஜைகள்.

சிவபெருமானின் வார்த்தைகளுக்கேற்ப, குருவின் அனுக்கிரகத்தினால், ஆண்மையைத் திரும்பப்பெற்ற சுத்யும்னன் ஒன்றுவிட்ட மாதங்களில் உலகை இவ்வாறு ஆண்டு வந்தார். ஆனால் பிரஜைகள் இதில் திருப்தியடையவில்லை.

பதம் 9.1.41
தஸ்யோத்கலோ கயோ ராஜன் விமலன் ச த்ரய: ஸுதா:
தக்ஷிணா-பத-ராஜானோ பபூவுர் தர்ம-வத்ஸலா:

தஸ்ய—சுத்யும்னனின்; உத்கல:—உத்கலன் என்ற; கய:—கயன் என்ற; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; விமல: ச—மற்றும் விமலன்; த்ரய:—மூன்று; ஸுதா:—மகன்கள்; தக்ஷிணா-பத—உலகின் தென் பகுதியின்; ராஜான:—அரசர்கள்; பபூவு:—ஆயினர்; தர்ம-வத்ஸலா:—தர்மவான்களான.

அரசே, சுத்யும்னனுக்கு உத்கலன், கயன், விமலன் என்ற மூன்று குமாரர்கள் இருந்தனர். அவர்கள் தட்சிணா-பதத்தின் அரசர்களாயினார்.

பதம் 9.1.42
தத: பரிணதே காலே ப்ரதிஷ்டான-பதி: ப்ரபு:
புரூரவஸ உத்ஸ்ருஜ்ய காம் புத்ராய கதோ வனம்

தத:—அதன்பிறகு; பரிணதே காலே—காலம் கனிந்ததும்; ப்ரதிஷ்டான-பதி:—இராஜ்யத்தின் எஜமானர்; ப்ரபு:—மிகவும் சக்தி வாய்ந்த; புரூரவஸே—புரூரவஸ்ஸிடம்; உத்ஸ்ருஜ்ய—ஒப்படைத்து; காம்—உலகை; புத்ராய—அவருடைய குமாரனிடம்; கத:—புறப்பட்டார்; வனம்—வனத்திற்கு.

அதன்பிறகு, காலம் கனிந்ததும், போதிய அளவு முதுமையை அடைந்த உலகப் பேரரசரான சுத்யும்னன், இராஜ்யம் முழுவதையும் தன் மகனான புரூரவஸ்ஸிடம் ஒப்படைத்துவிட்டு வனம் சென்றார்.


ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “சுத்யும்ன மகாராஜன் ஒரு பெண்ணாக மாறுதல்” எனும் தலைப்பை கொண்ட ஒன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare