அத்தியாயம் – 18
மன்னர் யயாதி தன் இளமையை
திரும்பப் பெறுதல்
பதம் 9.18.1
ஸ்ரீ-சுக உவாச
யதிர் யயாதி: ஸம்யாதிர் ஆயதிர் வியதி: க்ருதி:
ஷட் இமே நஹுஷஸ்யாஸன் இந்ரியாணீவ தேஹின:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; யதி:—யதி; யயாதி:—யயாதி; ஸம்யாதி:—சம்யாதி; ஆயதி:—ஆயதி; வியதி:—வியதி; க்ருதி:—கிருதி; ஷட்—ஆறு; இமே—அவர்களனைவரும்; நஹுஷஸ்ய—மன்னர் நகுஷரின்; ஆஸன்—ஆகும்; இந்ரியாணி—(ஆறு) புலன்கள்; இவ—போல்; தேஹின:—உடல்பெற்ற ஓராத்மாவின்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: உடல்பெற்ற ஆத்மாவிற்கு ஆறு புலன்கள் இருப்பது போல், நகுஷ மன்னருக்கு யதி, யயாதி, சம்யாதி, ஆயதி, வியதி மற்றும் கிருதி என்ற ஆறு மகன்கள் இருந்தனர்.

பதம் 9.18.2
ராஜ்யம் நைச்சத் யதி: பித்ரா தத்தம் தத்-பரிணாமவித்
யத்ர ப்ரவிஷ்ட: புருஷ ஆத்மானம் நாவபுத்யதே

ராஜ்யம்—இராஜ்யத்தை; நஐச்சத்—ஏற்றுக்கொள்ளவில்லை; யதி:—மூத்தமகனான யதி; பித்ரா—அவரது தந்தையால்; தத்தம்—அளிக்கப்பட்ட; தத்-பரிணாம-வித்—ஓர் அரசனைப் போல் சக்திவாய்ந்தவனாக ஆவதன் பலனை அறிந்து; யத்ர—எதில்; ப்ரவிஷ்ட:—புகுந்தபின்; புருஷ:—இத்தகைய ஒருவன்; ஆத்மானம்—தன்னுணர்வை; ந—இல்லை; அவபுத்யதே—முக்கியமாக ஏற்று அதைப் புரிந்து கொள்வான்.

அரச பதவியில் அல்லது தலைமை அரசாங்கப் பதவியில் புகுந்தவனால் தன்னுணர்வின் பொருளை அறிய முடியாது. இதையறிந்த நகுஷரின் மூத்த மகனான யதி, தன் தந்தையால் அளிக்கப்பட்ட இராஜ்யத்தை ஏற்க மறுத்துவிட்டார்.

பதம் 9.18.3
பிதரி ப்ராம்சிதே ஸ்தானாத் இந்ராண்யா தர்ஷணாத் த்விஜை:
ப்ராபிதே ‘ஜகரத்வம் வை யயாதிர் அபவன் ந்ருப:

பிதரி—அவருடைய தந்தை; ப்ரம்சிதே—விழும்படி செய்யப்பட்டார்; ஸ்தானாத்—சுவர்க்க லோகங்களிலிருந்து; இந்ராண்யா:—இந்திரனின் மனைவியான சச்சியிடம்; தர்ஷணாத்—குற்றம் புரிந்ததால்; த்விஜை:—(பிராமணர்களிடம் முறையிட்டபின்) அவர்களால்; ப்ராபிதே—இழிவடைந்ததால்; அஜகரத்வம்—ஒரு பாம்பின் வாழ்வுக்கு; வை—உண்மையில்; யயாதி:—யயாதி என்ற மகன்; அபவத்—ஆனார்; ந்ருப:—அரசர்.

யயாதியின் தந்தையான நகுஷர் இந்திரனின் மனைவி சசியைத் தொந்தரவு செய்த காரணத்தால், சசி அகஸ்தியரிடமும், மற்ற பிராமணர்களிடமும் புகார் செய்தாள். இப்புனித பிராமணர்களும் நகுஷரை, சுவர்க்க லோகங்களிலிருந்து விழுந்து, ஒரு மலைப்பாம்பின் நிலைக்கு இழிவடையும்படி சபித்தனர். இதன் விளைவாக யயாதி அரசரானார்.

பதம் 9.18.4
சதஸ்ருஷ்வ் ஆதிசத் திக்ஷு ப்ராத்ரூன் ப்ராதா யவீயஸ:
க்ருத-தாரோ ஜுகோபோர்வீம் காவ்யஸ்ய வ்ருஷபர்வண:

சதஸ்ருஷு—நான்கையும்; ஆதிசத்—ஆள அனுமதித்தார்; திக்ஷு—திசைகள்; ப்ராத்ரூன்—நான்கு சகோதர்கள்; ப்ராதா—யயாதி; யவீயஸ:—இளைய; க்ருத-தார:—மணந்தார்; ஜுகோப—ஆண்டார்; ஊர்வீம்—உலகை; காவ்யஸ்ய—சுக்ராசார்யரின் மகளை; வ்ருஷபர்வண:—விருஷபர்வாவின் மகளை.

யயாதி மகாராஜனுக்கு நான்கு தம்பிகள் இருந்தனர். இந்நால்வரும் நான்கு திசைகளை ஆள அவர் அனுமதித்தார். யயாதி, சுக்ராசார்யரின் மகள் தேவயானியையும், விருஷபர்வாவின் மகள் சர்மிஷ்டையையும் மணந்து கொண்டு உலகை ஆண்டுவந்தார்.

பதம் 9.18.5
ஸ்ரீ-ராஜோவாச
ப்ரஹ்மர்ஷிர் பகவான் காவ்ய க்ஷத்ர-பந்துஸ் ச நாஹுஷ:
ராஜன்ய-விப்ரயோ: கஸ்மாத் விவாஹ: ப்ரதிலோமக:

ஸ்ரீ-ராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் வினவினார்; ப்ரஹ்ம-ரிஷி:—பிராமணர்களில் சிறந்தவர்; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்த; காவ்ய:—சுக்ராசாரியர்; க்ஷத்ர-பந்து:—க்ஷத்திரிய பிரிவைச் சேர்ந்தவர்; ச—மேலும்; நாஹுஷ:—யயாதி மகாராஜன்; ராஜன்ய-விப்ரயோ:—ஒரு பிராமணர் மற்றும் ஒரு க்ஷத்ரியரின்; கஸ்மாத்—எப்படி; விவாஹ:—விவாக உறவு; ப்ரதிலோமக:—வழக்கமான கட்டுப்பாட்டு விதிகளுக்கெதிரான.

பரீட்சித்து மகாராஜன் கூறினார்: சுக்ராசாரியர் மிகவும் சக்திவாய்ந்த ஒரு பிராமணர். யயாதி மகாராஜனோ ஒரு க்ஷத்திரியர். எனவே க்ஷத்திரிய குலத்திற்கும், பிராமண குலத்திற்கும் இடையிலான இந்த பிரதிலோம விவாகம் எப்படி ஏற்பட்டது என்பதை அறிய நான் ஆவலாக உள்ளேன்.

பதங்கள் 9.18.6 – 9.18.7
ஸ்ரீ-சுக உவாச
ஏகதா தானவேந்ரஸ்ய சர்மிஷ்டா நாம கன்யகா
ஸகீ-ஸஹஸ்ர-ஸம்யுக்தா குரு-புத்ரியா ச பாமினீ

தேவயான்யா புரோத்யானே புஷ்பித-த்ரும-ஸங்குலே வ்யசரத் கல-கீதாலி-நலினீ-புலினே ‘பலா

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏகதா—ஒரு சமயம்; தானவ-இந்ரஸ்ய—விருஷபர்வாவின்; சர்மிஷ்டா—சர்மிஷ்டை; நாம—என்ற பெயருடைய; கன்யக—ஒரு மகள்; ஸகீ-ஸஹஸ்ர-ஸம்யுக்தா—ஆயிரக்கணக்கான தோழிகளால் சூழப்பட்டபடி; குரு-புத்ரியா—குரு சுக்ராசாரியரின் மகளான; ச—மேலும்; பாமினீ—மிகச் சுலபமாக கோபப்படுபவள்; தேவயான்யா—தேவயானியுடன்; புர-உத்யானே—அரண்மனைத் தோட்டத்தினுள்; புஷ்பித—மலர்கள் நிறைந்த; த்ரும—நல்ல மரங்கள்; ஸங்குலே—அடர்ந்த; வ்யசரத்—நடந்து சென்றார்; கல-கீத—இனிய ஓசைகளுடனும்; அலி—வண்டுகளுடனும்; நலினீ—தாமரைகளுடனும் கூடிய; புலினே—இத்தகைய ஒரு தோட்டத்தில்; அபலா—கபடமற்ற.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஒருநாள், விருஷபர்வாவின் மகளும், இயற்கையாகவே கோபமான சுபாவம் உள்ளவளும், ஆனால் கபடமற்றவளுமான சர்மிஷ்டை, சுக்ராசாரியரின் மகளான தேவயானியுடனும், ஆயிரக்கணக்கான தோழிகளுடனும் அரண்மனைத் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள். அத்தோட்டம் தாமரைகளாலும், பூமரங்களாலும் மற்றும் பழ மரங்களாலும் அடர்ந்திருந்தது. மேலும் இனிமையாகப் பாடும் பறவைகளும், வண்டுகளும் அங்கு வசித்து வந்தன.

பதம் 9.18.8
தா ஜலாசயம் ஆஸாத்ய கன்யா: கமல-லோசனா:
தீரே ன்யஸ்ய துகூலானி விஜஹ்ரு: ஸிஞ்சதீர் மித:

தா:—அவர்கள்; ஜல-ஆசயம்—ஒரு குளத்தருகில்; ஆஸாத்ய—வந்து; கன்யா:—எல்லாப் பெண்களும்; கமல-லோசனா:—தாமரை இதழ்கள் போன்ற கண்களையுடைய; தீரே—கரையில்; ன்யஸ்ய—வைத்துவிட்டு; துகூலானி—அவர்களுடைய ஆடைகளை; விஜஹ்ரு:—விளையாடத் துவங்கினார்கள்; ஸிஞ்சதீ:—நீரை வாரி இறைத்துக் கொண்டு; மித:—ஒருவர் மேலொருவர்.

தாமரைக் கண்களையுடைய அந்த இளம் பெண்கள் ஒரு குளத்தருகில் வந்ததும் அதில் குளித்து மகிழ விரும்பினார்கள். இவ்வாறாக தங்கள் ஆடைகளைக் கரையில் வைத்துவிட்டுச் சென்ற அவர்கள், ஒருவர் மேலொருவர் நீரை வாரி இறைத்துக் கொண்டு விளையாடத் துவங்கினர்.

பதம் 9.18.9
வீக்ஷ்ய வ்ரஜந்தம் கிரிசம் ஸஹ தேவ்யா வ்ருஷ-ஸ்திதம்
ஸஹஸோத்தீர்ய வாஸாம்ஸி பர்யதுர் வ்ரீடிதா: ஸ்த்ரிய:

வீக்ஷ்ய—கண்டு; வ்ரஜந்தம்—கடந்து செல்வதை; கிரிசம்—சிவபெருமான்; ஸஹ—உடன்; தேவ்யா—சிவபெருமானின் மனைவி, பார்வதி; வ்ருஷ-ஸ்திதம்—அவரது எருதின் மேலமர்ந்து; ஸஹஸா:—விரைவாக; உத்தீர்ய—நீரிலிருந்து வெளியேறி; வாஸாம்ஸி—ஆடைகளை; பர்யது:—உடலில் அணிந்து கொண்டனர்; வ்ரீடிதா:—வெட்கப்பட்டு; ஸ்த்ரிய:—அந்த இளமங்கைகள்.

நீரில் விளையாடிக் கொண்டிருந்த அம்மங்கைகள் திடீரென்று சிவபெருமான் மனைவி பார்வதியுடன் தன் எருதின்மேல் அமர்ந்தபடி கடந்து செல்வதைக் கண்டனர். நிர்வாணமாக இருந்ததால் வெட்கத்திற்குள்ளான அப்பெண்கள் விரைவாக நீரிலிருந்து வெளியேறி, தங்களுடைய ஆடைகளால் தங்களை மூடிக்கொண்டனர்.

பதம் 9.18.10
சர்மிஷ்டாஜானதீ வாஸோ குரு-புத்ரியா: ஸமவ்யயத்
ஸ்வீயம் மத்வா ப்ரகுபிதா தேவயானிதம் அப்ரவீத்

சர்மிஷ்டா—விருஷபர்வாவின் மகள்; அஜானதீ—அறியாமல்; வாஸ:—ஆடையை; குரு-புத்ரியா:—குரு புத்திரியான தேவயானியின்; ஸமவ்யயத்—அணிந்து கொண்டாள்; ஸ்வீயம்—தன்னுடையதென்று; மத்வா—எண்ணி; ப்ரகுபிதா—வெறுப்பும், கோபமும் கொண்டு; தேவயானீ—சுக்ராசாரியரின் மகள் தேவயானி; இதம்—இதை; அப்ரவீத்—கூறினாள்.

சர்மிஷ்டை அறியாமல், தேவயானியின் உடையைத் தன்னுடையது என்றெண்ணி அணிந்து கொண்டாள். இதனால் கோபமடைந்த தேவயானி பின்வருமாறு கூறினாள்.

பதம் 9.18.11
அஹோ நிரீக்ஷ்யதாம் அஸ்யா தாஸ்யா: கர்ம ஹி அஸாம்ப்ரதம்
அஸ்மத்-தார்யம் தருதவதீ சுனீவ ஹவிர் அத்வரே

அஹோ—ஐயோ; நிரீக்ஷ்யதாம்—பாருங்கள்; அஸ்யா:—இவளின் (சர்மிஷ்டையின்); தாஸ்யா:—நமது பணிப்பெண்ணைப் போல்; கர்ம—செயல்களை; ஹி—உண்மையில்; அஸம்ப்ரதம்—எந்த மரியாதையும் இல்லாமல்; அஸ்மத்-தார்யம்—எனக்குரிய ஆடையை; த்ருதவதீ—இவள் அணிந்து கொண்டாள்; சுனீ இவ—ஒரு நாய் போல்; ஹவி:—நெய்யை; அத்வரே—வேள்வியில் நிவேதனம் செய்வதற்குரிய.

ஐயோ! பணிப்பெண்ணான இந்த சர்மிஷ்டையின் செயலைப் பாருங்கள். வேள்வியில் உபயோகிப்பதற்கென உள்ள நெய்யைப் பறித்துச் செல்லும் ஒரு நாயைப் போல், எந்த மரியாதையையும் பொருட்படுத்தாமல், என்னுடைய ஆடையை இவள் அணிந்து கொண்டாள்.

பதங்கள் 9.18.12 – 9.18.14
யைர் இதம் தபஸா ஸ்ருஷ்டம் முகம் பும்ஸ: பரஸ்ய யே
தார்யதே யைர் இஹ ஜ்யோதி: சிவ: பந்தா: ப்ரதர்சித:

யான் வந்தந்தி உபதிஷ்டந்தே லோக-நாதா: ஸுரேஸ்வரா:
பகவான் அபி விஸ்வாத்மா பாவன: ஸ்ரீ-நிகேதன:

வயம் தத்ராபி ப்ருகவ: சிஷ்யோ ‘ஸ்யா ந: பிதாஸுர:
அஸ்மத்-தார்யம் த்ருதவதீ சூத்ரோ வேதம் இவாஸதீ

யை:—எவர்களால்; இதம்—இந்த முழு பிரபஞ்சமும்; தபஸா—தவத்தால்; ஸ்ருஷ்டம்—படைக்கப்பட்டதோ; முகம்—முகம்; பும்ஸ:—பரமபுருஷரின்; பரஸ்ய—உன்னதமான; யே:—எவர்கள்; தார்யதே—எப்பொழுதும் பிறக்கிறதோ; யை:—எவர்களால்; இஹ—இங்கு; ஜ்யோதி:—பரமபுருஷரின் பிரகாசமான பிரம்மஜோதி; சிவ:—மங்களகரமான; பந்தா:—வழி; ப்ரதர்சித:—கற்பிக்கப்படுகிறது; யான்—எவர்களுக்கு; வந்தந்தி—பிரார்த்தனைகள் செய்கின்றனர்; உபதிஷ்டந்தே—மதித்துப் பின்பற்றுகிறார்கள்; லோக-நாதா:—வெவ்வேறு கிரகங்கள் ஆள்பவர்கள்; ஸுர-ஈஸ்வரா:—தேவர்கள்; பகவான்—பரமபுருஷர்; அபி—கூட; விஸ்வ-ஆத்மா—பரமாத்மாவும்; பாவன:—தூய்மைப்படுத்துபவரும்; ஸ்ரீ-நிகேதன:—லக்ஷ்மியின் கணவரும்; வயம்—நாங்கள்; தத்ர-அபி—மற்ற பிராமணர்களையும் கூட மிஞ்சியவர்களாவோம்; ப்ருகவ:—பிருகு வம்சத்தவர்களான; சிஷ்ய:—சீடர்; அஸ்ய:—இவளின்; ந:—எங்களுடைய; பிதா—தந்தை; அஸுர:—அசுர குலத்தைச் சேர்ந்த; அஸ்மத்-தார்யம்—எங்களால் உடுத்தப்பட வேண்டியதை; த்ருதவதீ—இவள் அணிந்து கொண்டாள்; சூத்ர:—ஒரு பிராமணரல்லாத தொழிலாளி; வேதம்—வேதங்கள்; இவ—போல்; அஸதீ—நெறிதவறிய.

நாங்கள், பரமபுருஷரின் முகமாக ஏற்றுக் கொள்ளப்படும் தகுதி பெற்ற பிராமணர்களுக்கு இடையில் உள்ளவர்களாவோம். பிராமணர்கள் தங்கள் தவத்தினால் முழு பிரபஞ்சத்தையும் படைத்துள்ளனர். அவர்கள் பரமபுருஷரை எப்பொழுதும் தங்கள் இதயத்தின் ஆழத்தில் வைத்துள்ளனர். அவர்கள் நல்லதிர்ஷ்டத்திற்கான வழியை, வேதப் பண்பாடு எனும் வழியைக் கற்பித்துள்ளனர். இவ்வுலகில் வழிபடத்தக்கவர்களாக இருப்பவர்கள் அவர்கள் மட்டுமே என்பதால், அவர்கள் லோக பாவகர்களான தேவர்களாலும், பரமாத்மாவும், தூய்மைப்படுத்துபவரும், லக்ஷ்மிதேவியின் கணவருமான பரம புருஷராலும் கூட துதிக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றனர். மேலும் நாங்கள் பிருகு வம்சத்தில் வந்திருப்பதால், இன்னும் அதிக மரியாதைக்கு உரியவர்களாவோம். அப்படியிருந்தும், அசுர குலத்தைச் சேர்ந்த இவளது தந்தை எங்களுடைய சீடர் என்ற போதிலும், வேத அறிவுக்குப் பொறுப்பேற்கும் ஒரு சூத்திரனைப் போல், இவள் என் உடையை உடுத்திக் கொண்டாள்.

பதம் 9.18.15
ஏவம் க்ஷிபந்தீம் சர்மிஷ்டா குரு-புத்ரீம் அபாஷத
ருஷா ஸ்வஸந்தி உரங்கீவ தர்ஷிதா தஷ்ட-தச்சதா

ஏவம்—இவ்வாறு; க்ஷிபந்தீம்—தண்டிக்கப்பட்ட; சர்மிஷ்டா—விருஷபர்வரின் மகள்; குரு-புத்ரீம்—குரு சுக்ராசாரியரின் மகளிடம்; அபாஷத—கூறினாள்; ருஷா—மிகவும் கோபங்கொண்டு; ஸ்வஸந்தீ—பெருமூச்சு விட்டபடி; உரங்கீ இவ—ஒரு பாம்பு போல்; தர்ஷிதா—அடிபட்ட; தஷ்ட-தத்-சதா—உதட்டைத் தன் பற்களால் கடித்துக் கொண்டு.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இப்படி கடுமையான வார்த்தைகளால் திட்டப்பட்ட சர்மிஷ்டை கடுங்கோபமடைந்தாள். அவள் பாம்பு போல் பெருமூச்சு விட்டபடி உதட்டைத் தன் பற்களால் கடித்துக்கொண்டு, சுக்ராசாரியரின் மகளிடம் பின்வருமாறு பேசலானாள்.

பதம் 9.18.16
ஆத்ம-வ்ருத்தம் அவிக்ஞாய கத்தஸே பஹு பிக்ஷுகி
கிம் ந ப்ரதீக்ஷஸே ‘ஸ்மாகம் க்ருஹான் பலிபுஜோ யதா

ஆத்ம-வ்ருத்தம்—ஒருவரது சொந்த நிலையை; அவிக்ஞாய—அறியாமல்; கத்தஸே—நீ பிதற்றுகிறாய்; பஹு—அதிகமாக; பிக்ஷுகி—பிச்சைக்காரி; கிம்—உண்டா; ந—இல்லையா; ப்ரதீக்ஷஸே—நீ காத்திருக்கிறாய்; அஸ்மாகம்—எங்கள்; க்ருஹான்—வீட்டில்; பலிபுஜ—காக்கைகள்; யதா—போல்.

பிச்சைக்காரி, நீ உன் நிலையை அறியாததால் அதிகமாகப் பிதற்றுகிறாய். நீங்கள் எல்லோரும் எங்கள் வீட்டில் காக்கைகள் போல் வாழ்க்கைத் தேவைகளுக்காக காத்திருக்கவில்லையா?

பதம் 9.18.17
ஏவம்-விதை: ஸுபருஷை: க்ஷிப்த்வாசார்ய-ஸுதாம் ஸதீம்
சர்மிஷ்டா ப்ராக்ஷிபத் கூபே வாஸஸ் சாதாய மன்யுனா

ஏவம்-விதை:—இத்தகைய; ஸு-பருஷை:—இரக்கமற்ற வார்த்தைகளால்; க்ஷிப்த்வா—தண்டித்தபின்; ஆசார்ய-ஸுதாம்—சுக்ராசாரியரின் மகளான; ஸதீம்—தேவயானியை; சர்மிஷ்டா—சர்மிஷ்டை; ப்ராக்ஷிபத்—(அவளை) தள்ளினாள்; கூபே—ஒரு கிணற்றினுள்; வாஸ:—ஆடைகளை; ச—மேலும்; ஆதாய—பறித்துக் கொண்டு; மன்யுனா—கோபத்தால்.

குரு புத்திரியான தேவயானியை இத்தகைய இரக்கமற்ற வார்த்தைகளால் சர்மிஷ்டை அவமதித்து, கோபத்தால் அவளுடைய ஆடைகளைப் பறித்துக் கொண்டு அவளைக் கிணற்றில் தள்ளினாள்.

பதம் 9.18.18
தஸ்யாம் கதாயாம் ஸ்வ-க்ருஹம் யயாதிர் ம்ருகயாம் சரன்
ப்ராப்தோ யத்ருச்சயா கூபே ஜலார்தீ தாம் ததர்ச ஹ

தஸ்யாம் கதாயாம்—அவள் சென்ற பொழுது; ஸ்வ-க்ருஹம்—அவளது வீட்டிற்கு; யயாதி:—மன்னர் யயாதி; ம்ருகயாம்—வேட்டையாடிக்கொண்டு; சரன்—சஞ்சரித்தபடி; ப்ராப்த:—அடைந்தார்; யத்ருச்சயா—தற்செயலாக; கூபே—கிணற்றுக்குள்; ஜல-அர்தீ—நீர் பருக விரும்பி; தாம்—அவளை (தேவயானியை); ததர்ச—கண்டார்; ஹ—உண்மையில்.

தேவயானியைக் கிணற்றில் தள்ளியபின் சர்மிஷ்டை தன் வீடு திரும்பினாள். இதற்கிடையில், வேட்டையாடுவதில் ஈடுபட்டிருந்த மன்னர் யயாதி, நீர் பருக கிணற்றுக்குச் சென்று தற்செயலாக அந்த தேவயானியைக் கண்டார்.

பதம் 9.18.19
தத்வா ஸ்வம் உத்தரம் வாஸஸ் தஸ்யை ராஜா விவாஸஸே
க்ருஹீத்வா பாணினா பாணிம் உஜ்ஜஹார தயா-பர:

தத்வா—கொடுத்து; ஸ்வம்—தனது சொந்த; உத்தரம்—மேல்; வாஸ:—ஆடையை; தஸ்யை—அவளுக்கு (தேவயானிக்கு); ராஜா—அந்த அரசர்; விவஸஸே—அவள் நிர்வாணமாக இருந்ததால்; க்ருஹீத்வா—பிடித்து; பாணினா—தன் கையால்; பாணிம்—அவளது கையை; உஜ்ஜஹார—தூக்கிவிட்டார்; தயா-பர:—மிகவும் அன்பு கொண்டு.

தேவயானி கிணற்றில் நிர்வாணமாக இருப்பதைக் கண்ட மன்னர் யயாதி, உடனே தன் மேலாடையை அவளுக்குக் கொடுத்தார். அவளிடம் மிகவும் அன்பு கொண்ட அவர் தன் கையால் அவளது கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார்.

பதங்கள் 9.18.20 – 9.18.21
தம் வீரம் ஆஹௌசனஸீ ப்ரேம-நிர்பரயா கிரா
ராஜம்ஸ் த்வயா க்ருஹீதோ மே பாணி: பர-புரஞ்ஜய

ஹஸ்த-க்ராஹோ ‘பரோ மா பூத் க்ருஹீதாயாஸ் த்வயா ஹி மே
ஏஷ ஈச-க்ருதோ வீர ஸம்பந்தோ நௌ ந பௌருஷ:

தம்—அவரிடம்; வீரம்—யயாதி; ஆஹ—கூறினார்; ஒளசனஸீ—உசனா கவியான சுக்ராசாரியரின் மகள்; ப்ரேம-நிர்பரயா—அன்பு நிறைந்த; கிரா—இத்தகைய சொற்களால்; ராஜன்—அரசே; த்வயா—உம்மால்; க்ருஹீத:—ஏற்கப்பட்டது; மே—என்; பாணி:—கை; பர-புரஞ்ஜய—பிறருடைய இராஜ்யங்களைக் கைப்பற்றுபவரான; ஹஸ்த-க்ராஹ:—என் கரம் பிடித்தவர்; அபர:—மற்றொருவன்; மா—வேண்டாம்; பூத்—ஆக; க்ருஹீதாயா:—கைபிடிப்பவன்; த்வயா—உம்மால்; ஹி—உண்மையில்; மே—எனக்கு; ஏஷ—இந்த; ஈச-க்ருத:—தெய்வ அருளால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்; வீர—சிறந்த வீரரே; ஸம்பந்த:—சம்பந்தம்; நௌ—நம்முடைய; ந—இல்லை; பௌருஷ:—மனிதனால் செய்யப்பட ஒன்று.

தேவயானி அன்பும் பாசமும் நிறைந்த சொற்களால் மன்னர் யயாதியிடம் பின்வருமாறு கூறினாள்: சிறந்த வீரரே, அரசே, பகைவர்களின் நகரங்களை வெல்பவரே, என் கரம் பற்றியதால் என்னை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொண்டீர்கள். மற்றொருவன் என்னைக் கைப்பிடிக்க வேண்டாம். ஏனெனில், கணவன் மனைவி என்ற நம்முடைய இந்த சம்பந்தம் இறையருளால் கூட்டிவைக்கப்பட்டதாகும், எந்தவொரு மனிதனாலும் அல்ல.

பதம் 9.18.22
யத் இதம் கூப-மக்னாயா பவதோ தர்சனம் மம
ந ப்ராஹ்மணோ மே பவிதா ஹஸ்த-க்ராஹோ மஹா-புஜ
கசஸ்ய பார்ஹஸ்பத்யஸ்ய சாபாத் யம் அசபம் புரா

யத்—காரணத்தினால்; இதம்—இந்த; கூப-மக்னாயா:—கிணற்றில் விழுந்த; பவத:—உங்களின்; தர்சனம்—சந்திப்பு; மம—என்னுடன்; ந—இல்லை; ப்ராஹ்மண:—ஒரு தகுதியுள்ள பிராமணர்; மே—எனது; பவிதா—ஆவார்; ஹஸ்த-க்ராஹ:—கணவர்; மஹா-புஜ—பெருந்தோள் படைத்தவரே; கசஸ்ய—கசனின்; பார்ஹஸ்பத்யஸ்ய—கற்றறிந்த பிராமணரான தேவகுரு பிருஹஸ்பதியின் மகனான; சாபாத்—சாபத்தால்; யம்—அவனை; அசபம்—நான் சபித்தேன்; புரா—முன்னோரு சமயம்.

கிணற்றில் விழுந்ததால் உம்மை நான் சந்தித்தேன். உண்மையில், இது தெய்வத்தின் ஏற்பாடாகும். கற்றறிந்த பண்டிதரான பிருஹஸ்பதியின் மகனான கசனை நான் சபித்தபின், நான் ஒரு பிராமணரைக் கணவராக அடையமாட்டேன் என்று அவனும் என்னைச் சபித்தான். எனவே பெருந்தோள் படைத்தவரே, நான் ஒரு பிராமணருக்கு மனைவியாவது சாத்தியமில்லை.

பதம் 9.18.23

யயாதிர் அனபிப்ரேதம் தைவோபஹ்ருதம் ஆத்மன:
மனஸ் து தத்-கதம் புத்வா ப்ரதிஜக்ராஹ தத்-வச:

யயாதி:—யயாதி மகாராஜன்; அனபிப்ரேதம்—விரும்பவில்லை; தைவ-உபஹ்ருதம்—விதியின் ஏற்பாட்டினால் விளைந்தது; ஆத்மன:—அவரது அந்தரங்க விருப்பம்; மன:—மனம்; து—ஆயினும்; தத்-கதம்—அவளால் கவரப்பட்டு; புத்வா—இத்தகைய புத்தியுடன்; ப்ரதிஜக்ராஹ—ஏற்றுக் கொண்டார்; தத்-வச:—தேவயானியின் வார்த்தைகளை.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இத்தகைய ஒரு திருமணம் சாஸ்திரங்களுக்கு ஏற்புடையதல்ல என்பதால் மன்னர் யயாதி அதை விரும்பவில்லை. ஆயினும், அது விதியின் ஏற்பாடு என்பதாலும், தேவயானியின் அழகால் கவரப்பட்டதாலும், அவளது வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொண்டார்.

பதம் 9.18.24
கதே ராஜனி ஸா தீரே தத்ர ஸ்ம ருததீ பிது:
ன்யவேதயத் தத: ஸர்வம் உக்தம் சர்மிஷ்டயா க்ருதம்

கதே ராஜனி—அரசர் திரும்பிச் சென்றபின்; ஸா—அவள் (தேவயானி); தீரே—கற்றறிந்த; தத்ர ஸ்ம—தன் வீடு திரும்பி; ருததீ—அழுது கொண்டே; பிது:—தன் தந்தையின் முன்; ன்யவேதயத்—தெரிவித்தாள்; தத:—அதன்பிறகு; ஸர்வம்—அனைத்தையும்; உக்தம்—குறிப்பிடப்பட்ட; சர்மிஷ்டயா—சர்மிஷ்டையால்; க்ருதம்—செய்யப்பட்ட.

அதன்பிறகு, கற்றறிந்த அந்த அரசர் தன் அரண்மனைக்குத் திரும்பியதும், அழுது கொண்டே தன் வீடு திரும்பிய தேவயானி, சர்மிஷ்டையின் காரணத்தால் நிகழ்ந்தவற்றையெல்லாம் தன் தந்தையான சுக்ராசாரியரிடம் கூறினாள். அவள் கிணற்றில் தள்ளப்பட்டு அரசரால் காப்பாற்றப்பட்டதைக் கூறினாள்.

பதம் 9.18.25
துர்மனா பகவான் காவ்ய: பௌரோஹித்யம் விகர்ஹயன்
ஸ்துவன் வ்ருத்திம் ச காபோதீம் துஹித்ரா ஸ யயௌ புராத்

துர்மனா:—மிகவும் மழிச்சியற்றவராக; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்த; காவ்ய:—சுக்ராசாரியர்; பௌரோஹித்யம்—புரோகிதர் தொழிலை; விகர்ஹயன்—வெறுத்து; ஸ்துவன்—போற்றி; வ்ருத்திம்—தொழிலை; ச—மேலும்; காபோதீம்—வயலிலிருந்து தானியம் சேகரிக்கும்; துஹித்ரா—அவரது மகளுடன்; ஸ:—அவர் (சுக்ராசாரியர்); யயௌ—சென்றார்; புராத்—அவரது சொந்த வசிப்பிடத்திலிருந்து.

நிகழ்ந்ததை தேவயானியிடமிருந்து கேட்ட சுக்ராசாரியரின் மனம் மிகவும் வேதனைப்பட்டது. அவர் புரோகிதத் தொழிலை வெறுத்து, உஞ்ச-வருத்தியை (வயலில் தானியங்களைச் சேகரிப்பதை) துதித்துக் கொண்டு, தன் மகளுடன் வீட்டை விட்டுச் சென்றார்.

பதம் 9.18.26
வ்ருஷபர்வா தம் ஆஜ்ஞாய ப்ரத்யனீக-விவக்ஷிதம்
குரும் ப்ரஸாதயன் மூர்த்னா பாதயோ: பதித: பதி

வ்ருஷபர்வா—அசுர ராஜன்; தம் ஆஜ்ஞாய—சுக்ராசாரியரின் நோக்கத்தை அறிந்த; ப்ரத்யனீக—ஏதோ சாபம்; விவக்ஷிதம்—கொடுக்க விரும்பி; குரும்—அவரது குரு சுக்ராசாரியரை; ப்ரஸாதயத்—அவர் உடனே திருப்திப்படுத்தினார்; மூர்த்னா—அவரது தலையால்; பாதய:—பாதங்களில்; பதித:—விழுந்து; பதி—வழியில்.

மன்னர் விருஷபர்வர், சுக்ராசாரியர் தன்னைத் தண்டிக்கவோ அல்லது சபிக்கவோதான் வந்து கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார். இதனால், அவர் தன் வீட்டிற்கு வருமுன்பாக, விருஷபர்வர்
வெளியில் சென்று, வழியில் தன் குருவின் பாதங்களில் விழுந்து அவரை திருப்திப்படுத்தி, அவரது கடுங்கோபத்தைத் தடுத்தார்.

பதம் 9.18.27
க்ஷணார்த-மன்யுர் பகவான் சிஷ்யம் வ்யாசஷ்ட பார்கவ:
காமோ ‘ஸ்யா: க்ரியதாம் ராஜன் நைனாம் த்யக்தும் இஹோத்ஸஹே

க்ஷணே-அர்த—சில நொடிகள் மட்டுமே நீடித்தது; மன்யு:—அவரது கோபம்; பகவான்—மிகவும் சக்திவாய்ந்தவரான; சிஷ்யம்—அவரது சீடரான விருஷபர்வரிடம்; வ்யாசஷ்ட—கூறினார்; பார்கவ:—பிருகு வம்சத்தவரான சுக்ராசாரியர்; காம:—விருப்பத்தை; அஸ்யா:—இந்த தேவயானியின்; க்ரியதாம்—தயவுசெய்து நிறைவேற்றுவீராக; ராஜன்—அரசே; ந—இல்லை; ஏனாம்—இப்பெண்ணை; த்யக்தும்—கைவிட; இஹ—இவ்வுலகில்; உத்ஸஹே—என்னால் முடியும்.

சுக்ராசாரியர் சில நொடிகள் கோபங்கொண்டார் என்றாலும், விருஷபர்வரால் திருப்திப்படுத்தப்பட்டு அவரிடம் பின்வருமாறு கூறினார். அரசே, இவ்வுலகில் என் மகளான இவளை என்னால் கைவிடவோ, அலட்சியப்படுத்தவோ முடியாது. எனவே தயவு செய்து இந்த தேவயானியின் விருப்பத்தை நிறைவேற்றுவீராக.

பதம் 9.18.28
ததேதி அவஸ்திதே ப்ராஹ தேவயானி மனோகதம்
பித்ரா தத்தா யதோ யாஸ்யே ஸானுகா யாது மாம் அனு

ததா இதி—மன்னர் விருஷபர்வர் சுக்ராசாரியரின் திட்டத்திற்குச் சம்மதித்த பொழுது; அவஸ்திதே—சூழ்நிலை இவ்வாறு சமாதானம் செய்யப்பட்டதும்; ப்ராஹ—கூறினாள்; தேவயானீ—சுக்ராசாரியரின் மகள்; மனோகதம்—அவளது விருப்பத்தை; பித்ரா—தந்தையால்; தத்தா—கொடுக்கப்பட்டாலும்; யத:—யாருக்கு; யாஸ்யே—நான் செல்வேன்; ஸ-அனுகா—அவளது தோழிகளுடன்; யாது—செல்ல வேண்டும்; மாம் அனு—என் தோழியாக அல்லது பணிப் பெண்ணாக.

சுக்ராசாரியரின் வார்த்தைகளைக் கேட்ட விருஷபர்வர் தேவயானியின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டு அவளது வார்த்தைக்களுக்காகக் காத்திருந்தார். தேவயானியும் பிறகு பின்வருமாறு தன் விருப்பத்தைக் கூறினாள்: “என் தந்தையின் உத்தரவுப்படி எப்பொழுது நான் விவாகம் செய்து கொள்கிறனோ, அப்பொழுது இந்த சர்மிஷ்டை அவளது தோழிகளுடன் என் பணிப்பெண்ணாக என்னுடன் வரவேண்டும்”.

பதம் 9.18.29
பித்ரா தத்தா தேவயான்யை சர்மிஷ்டா ஸானுகா ததா
ஸ்வானாம் தத்-ஸங்கடம் வீக்ஷய தத்-அர்தஸ்ய ச கெளரவம்
தேவயானீம் பர்யசரத் ஸ்த்ரீ-ஸஹஸ்ரேண தாஸவத்

பித்ரா—தந்தையால்; தத்தா—கொடுக்கப்பட்ட; தேவயான்யை—தேவயானியிடம்; சர்மிஷ்டா—சர்மிஷ்டை; ஸ-அனுகா—அவளது தோழிகளுடன்; ததா—அப்பொழுது; ஸ்வானாம்—தானாகவே; தத்—அந்த; ஸங்கடம்—ஆபத்தான நிலைமையை; வீக்ஷய—பார்த்து; தத்—அவரிடமிருந்து; அர்தஸ்ய—நன்மையின்; ச—கூட; கௌரவம்—பெருமை; தேவயானீம்—தேவயானிக்கு; பர்யசரத்—பணிவிடை செய்தாள்; ஸ்த்ரீ-ஸஹஸ்ரேண—ஆயிரக்கணக்கான மற்ற பெண்களுடன்; தாஸ-வத்—ஓர் அடிமை போல்.

சுக்ராசாரியரின் அதிருப்தி ஆபத்தைக் கொண்டுவரும் என்பதை அறிந்த விருஷபர்வர், அவரது திருப்தி பௌதிக இலாபத்தைக் கொண்டுவரும் என்பதையும் சரியாக எண்ணிப்பார்த்தார். எனவே அவர் சுக்ராசாரியரின் உத்தரவை நிறைவேற்றி, ஓரடிமைபோல் அவருக்குச் சேவை செய்தார். அவர் தன் மகள் சர்மிஷ்டையை தேவயானியிடம் கொடுத்தார். அவளும், ஆயிரக்கணக்கான மற்ற பெண்களுடன் ஓர் அடிமைபோல் தேவயானிக்குப் பணிவிடை செய்தாள்.

பதம் 9.18.30
நாஸுஷாய ஸுதாம் தத்வா ஸஹ சர்மிஷ்டயோசனா
தம் ஆஹ ராஜஞ் சர்மிஷ்டாம் ஆதாஸ் தல்பே ந கர்ஹிசித்

நாஸுஷாய—நகுஷ வம்சத்தைச் சேர்ந்த மன்னர் யயாதியிடம்; ஸுதாம்—அவரது மகளை; தத்வா—விவாகம் செய்து வைத்து; ஸஹ—உடன்; சர்மிஷ்டயா—விருஷபர்வரின் மகளும், தேவயானியின் பணிப்பெண்ணுமான சர்மிஷ்டை; உசனா—சுக்ராசாரியர்; தம்—அவரிடம் (யயாதி); ஆஹ—கூறினார்; ராஜன்—அரசே; சர்மிஷ்டாம்—விருஷபர்வரின் மகளான சர்மிஷ்டையை; ஆதா:—அனுமதிக்க; தல்பே—உமது படுக்கையில்; ந—வேண்டாம்; கர்ஹிசித்—ஒருபோதும்.

சுக்ராசாரியர் தேவயானியை யயாதிக்குத் திருமணம் செய்து வைத்து, சர்மிஷ்டையை அவளுடன் அனுப்பினார். ஆனால் அவர், “அரசே, இப்பெண் சர்மிஷ்டையை உம்முடன் உமது படுக்கையில் படுக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது” என்று அரசரை எச்சரித்தார்.

பதம் 9.18.31
விலோக்யௌசனஸீம் ராஜஞ் சர்மிஷ்டா ஸுப்ரஜாம் க்வசித்
தம் ஏவ வவ்ரே ரஹஸி ஸக்யா: பதிம் ருதெள ஸதீ

விலோக்ய—கண்டதால்; ஒளசனஸீம்—சுக்ராசாரியரின் மகளான தேவயானியை; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; சர்மிஷ்டா—விருஷபர்வரின் மகள்; ஸு-ப்ரஜாம்—நல்ல குழந்தைகளையுடைய; க்வசித்—ஒருசமயம்; தம்—அவரை (யயாதியை); ஏவ—உண்மையில்; வவ்ரே—வேண்டினாள்; ரஹஸி—தனிமையான ஓரிடத்தில்; ஸக்யா:—அவளது தோழியின்; பதிம்—கணவரை; ருதௌ—பொருத்தமான (ருது) காலத்தில்; ஸதீ—அந்த நிலையில் இருந்த.

பரீட்சித்து மகாராஜனே, தேவயானி ஒரு நல்ல மகனுடன் இருப்பதைக் கண்ட சர்மிஷ்டை, ஒரு சமயம் கருத்தரிக்க ஏற்ற சமயத்தில் மன்னர் யயாதியை அணுகினாள். தனிமையான ஓரிடத்தில், தன் தோழி தேவயானியின் கணவரான அந்த அரசரிடம், தனக்கும் ஒரு மகனைக் கொடுக்கும்படி வேண்டினாள்.

பதம் 9.18.32
ராஜ-புத்ரியார்திதோ ‘பத்யே தர்மம் சாவேக்ஷ்ய தர்மவித்
ஸ்மரஞ் சுக்ர-வச: காலே திஷ்டம் ஏவாப்யபத்யத

ராஜ-புத்ரியா—ஓர் அரச குமாரியாக இருந்த சர்மிஷ்டையால்; அர்தித:—வேண்டிக்கொள்ளப்பட்டு; அபத்யே—ஒரு மகனுக்காக; தர்மம்—சமயக் கொள்கைகளையும்; ச—அத்துடன்; அவேக்ஷ்ய—ஆழ்ந்து யோசித்து; தர்ம-வித்—சமயக் கொள்கைகளை அறிந்த; ஸ்மரன்—எண்ணிப்பார்த்து; சுக்ர-வச:—சுக்ராசாரியரின் எச்சரிக்கையையும்; காலே—காலப்போக்கில்; திஷ்டம்—சூழ்நிலையை அனுசரித்து; ஏவ—உண்மையில்; அப்யபத்யத—சர்மிஷ்டையின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார்.

அரசகுமரியான சர்மிஷ்டை தனக்கு ஒரு மகன் வேண்டுமென்று மன்னர் யயாதியை வேண்டியதால், சமயக் கொள்கைகளை நன்கு அறிந்திருந்த அவர் அவளது விருப்பத்தை நிறைவேற்றச் சம்மதித்தார். அவர் சுக்ராசாரியரின் எச்சரிக்கையை எண்ணிப் பார்த்தார். எனினும், இச்சேர்க்கை பரமனின் விருப்பம் என்றெண்ணி சர்மிஷ்ட்டையுடன் உடலுறவு கொண்டார்.

பதம் 9.18.33
யதும் ச துர்வஸும் சைவ தேவயானீ வ்யஜாயத
த்ருஹ்யும் சானும் ச பூரம் ச சர்மிஷ்டா வார்ஷபர்வணீ

யதும்—யது; ச—மற்றும்; துர்வஸும்—துர்வசு; ச ஏவ—மேலும்; தேவயானீ—சுக்ராசாரியரின் மகள்; வ்யஜாயத—பெற்றெடுத்தாள்; த்ருஹ்யும்—துருஹ்யன்; ச—மற்றும்; அனும்—அனு; ச—தவிரவும்; பூரும்—பூரு; ச—கூட; சர்மிஷ்டா—சர்மிஷ்டை; வார்ஷபர்வனீ—வார்ஷபர்வரின் மகளான.

யது, துர்வசு என்ற புத்திரர்களை தேவயானி பெற்றாள். விருஷபர்வரின் மகளான சர்மிஷ்டை துருஹ்யன், அனு, பூரு என்பவர்களைப் பெற்றாள்.

பதம் 9.18.34
கர்ப-ஸம்பவம் ஆஸுர்யா பர்துர் விக்ஞாய மானினீ
தேவயானீ பிதுர் கேஹம் யயௌ க்ரோத-விமூர்சிதா

கர்ப-ஸம்பவம்—கரு; ஆஸுர்யா:—சர்மிஷ்டையின்; பர்து:—தன் கணவருடையது; விக்ஞாய—(பிராமண ஜோதிடர்களிடமிருந்து) அறிந்து; மானினீ—மிகவும் அகம்பாவம் கொண்டு; தேவயானீ—சுக்ராசாரியரின் மகள்; பிது:—தன் தந்தையின்; கேஹம்—வீட்டிற்கு; யயௌ—சென்றாள்; க்ரோத-விமூர்சிதா—கோபத்தினால் ஆவேசம் கொண்டு.

சர்மிஷ்டையிடம் தோன்றிய கரு தன் கணவருடையது என்பதையறிந்த கர்வமுள்ள தேவயானி கோபத்தினால் ஆவேசமடைந்து, தன் தந்தையின் வீடு சென்றாள்.

பதம் 9.18.35
ப்ரியாம் அனுகத: காமீ வசோபிர் உபமந்த்ரயன்
ந ப்ரஸாதயிதும் சேகே பாத-ஸம்வாஹனாதிபி:

ப்ரியாம்—தன் பிரிய மனைவியை; அனுகத:—தொடர்ந்து சென்று; காமீ—அதிக காம இச்சையுள்ள; வசோபி:—நல்வார்த்தைகளால்; உபமந்த்ரயன்—சமாதானப்படுத்தியும்; ந—இல்லை; ப்ரஸாதயிதும்—சமாதானப்படுத்த; சேகே—முடிந்தது; பாத-ஸம்வாஹன-ஆதிபி:—அவளது பாதங்களைப் பிடித்து வருடுவதுதால் கூட.

அதிக காம இச்சையுள்ள யயாதி மகாராஜன் தன் மனைவியைப் பின்தொடர்ந்து சென்று, இனிய வார்த்தைகளைப் பேசியும், அவளது பாதங்களைப் பிடித்துவிட்டும் அவளை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் எந்த வழியினாலும் அவளை அவரால் சமாதானப்படுத்த முடியவில்லை.

பதம் 9.18.36
சுக்ரஸ் தம் ஆஹ குபித ஸ்த்ரீ-காமான்ருத-பூருஷ
த்வாம் ஜரா விசதாம் மந்த விரூப-கரணீ ந்ருணாம்

சுக்ர:—சுக்ராசாரியர்; தம்—அவரிடம் (மன்னர் யயாதியிடம்); ஆஹ—கூறினார்; குபித:—அவரிடம் கடுங்கோபங்கொண்டு; ஸ்த்ரீ-காம—பெண்ணாசை கொண்டவனே; அன்ருத-பூருஷ—பொய்யனே; த்வாம்—உனக்கு; ஜரா—மூப்பு; விசதாம்—புகுந்து கொள்ளட்டும்; மந்த—மூடனே; விரூப-கரணீ—கெடுக்கும்; ந்ருணாம்—மனிதர்களின் உடல்களை.

கடுங்கோபங் கொண்ட சுக்ராசாரியர் அரசரை நோக்கி, “பொய்யனான மூடனே, பெண்களிடம் மயங்கியவனே! நீ பெரும் தவறிழைத்தாய். எனவே அழகைக் கெடுக்கும் மூப்பு உன்னிடம் புகுந்து கொள்ளட்டும்” என்று சபித்தார்.

பதம் 9.18.37
ஸ்ரீ-யயாதிர் உவாச
அத்ருப்தோ ‘ஸ்மி அத்ய காமானாம் ப்ரஹ்மன் துஹிதரி ஸ்ம தே
வ்யத்யஸ்யதாம் யதா-காமம் வயஸா யோ ‘பிதாஸ்யதி

ஸ்ரீ-யயாதி: உவாச—மன்னர் யயாதி கூறினார்; அத்ருப்த:—திருப்தியடையவில்லை; அஸ்மி—நான்; அத்ய—இன்றுவரை; காமானாம்—என் காம இச்சைகளை திருப்திப்படுத்த; ப்ரஹ்மன்—கற்றறிந்த பிராமணரே; துஹிதரி—உமது புத்திரியுடனான; ஸ்ம—முன்பு; தே—உமது; வ்யத்யஸ்யதாம்—மாற்றிக் கொள்ளலாம்; யத-காமம்—நீர் காம இச்சை கொண்டிருக்கும்வரை; வயஸா—இளமையுடன்; ய: அபிதாஸ்யதி—தன் இளமையை உமது மூப்புடன் மாற்றிக் கொள்ளச் சம்மதிப்பவனின்.

மன்னர் யயாதி கூறினார், “வழிபாட்டுக்குரிய கற்றறிந்த பிராமணரே, உமது மகளிடம் நான் கொண்ட காம இச்சைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை. “அதற்கு சுக்ராசாரியர் பதிலளித்தார், “தன் இளமையை உமக்களிக்கச் சம்மதிக்கும் ஒருவனுடன் உமது முதுமையை நீர் மாற்றிக் கொள்ளலாம்.”

பதம் 9.18.38
இதி லப்த-வ்யவஸ்தான: புத்ரம் ஜ்யேஷ்டம் அவோசத
யதோ தாத ப்ரதீச்சேமாம் ஜராம் தேஹி நிஜம் வய:

இதி—இவ்வாறு; லப்த-வ்யவஸ்தான:—தன் முதுமையை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்று; புத்ரம்—அவரது மகனிடம்; ஜ்யேஷ்டம்—மூத்த; அவோசத—அவர் வேண்டினார்; யதோ—யதுவே; தாத—என் பிரிய மகன்; ப்ரதீச்ச—அன்புடன் ஏற்றுக்கொள்; இமாம்—இந்த; ஜராம்—முதுமையை; தேஹி—கொடு; நிஜம்—உன் சொந்த; வய:—இளமையை.

சுக்ராசாரியரிடமிருந்து இவ்வரத்தைப் பெற்ற யயாதி, தன் மூத்த மகனிடம், “என் பிரிய மகனே யது, என் மூப்பை நீ ஏற்றுக்கொண்டு, உனது இளமையை எனக்குக் கொடுப்பாயா?” என்று வேண்டினார்.

பதம் 9.18.39
மாதாமஹ-க்ருதாம் வத்ஸ ந த்ருப்தோ விஷயேஷ்வ் அஹம்
வயஸா பவதீயேன ரம்ஸ்யே கதிபயா: ஸமா:

மாதாமஹ-க்ருதாம்—உன் தாய் வழி பாட்டனாரான சுக்ராசாரியரால் கொடுக்கப்பட்ட; வத்ஸ—பிரிய மகனே; த—இல்லை; த்ருப்த:—திருப்தியடைய; விஷயேஷு—விஷய சுகமான உடலுறவு வாழ்வில்; அஹம்—நான்; வயஸா—வயதால்; பவதீயேன—உன்னுடைய; ரம்ஸ்யே—நான் சிற்றின்ப வாழ்வை; கதிபயா:—சில; ஸமா:—ஆண்டுகள்.

பிரிய மகனே, என் சிற்றின்ப இச்சைகளில் நான் இன்னும் திருப்தியடையவில்லை. என்னிடம் உனக்கு அன்பு இருக்குமானால், உன் தாய்வழி பாட்டனாரால் கொடுக்கப்பட்ட மூப்பை நீ ஏற்றுக் கொண்டு, உன் இளமையை எனக்குக் கொடுத்தால் இன்னும் சில ஆண்டுகள் நாள் வாழ்வை அனுபவிப்பேன்.

பதம் 9.18.40
ஸ்ரீ-யதுர் உவாச
நோத்ஸஹே ஜரஸா ஸ்தாதும் அந்தரா ப்ராப்தயா தவ
அவிதித்வா ஸுகம் க்ராம்யம் வைத்ருஷ்ண்யம் நைதி பூருஷ:

ஸ்ரீ—யது: உவாச—யயாதியின் மூத்த மகனான யது கூறினான்; ந உத்ஸஹே—எனக்கு உற்சாகமில்லை; ஜரஸா—உமது முதுமையில்; ஸ்தாதும்—தொடர்ந்து இருக்க; அந்தரா—இளமையாக இருக்கும் பொழுது; ப்ராப்தயா—ஏற்றுக்கொண்டீர்; தவ—உமது; அவிதித்வா—அனுபவிக்காமல்; ஸுகம்—சுகத்தை; க்ராம்யம்—பெளதிக அல்லது தேகாந்திர; வைத்ருஷ்ண்யம்—பெளதிக சுகத்தில் அலட்சியம்; ந—மாட்டான்; ஏதி—அடைய; பூருஷ:—ஒருவன்.

யது பதிலளித்தார்: தந்தையே, நீங்களும் முன்பு வாலிபராக இருந்தவர் தான். இப்பொழுது நீங்கள் முதுமையை அடைந்துவிட்டீர்கள் ஆனால் உங்களுடைய முதுமையை நான் ஏற்க மாட்டேன். ஏனெனில், பெளதிக சுகத்தை அனுபவித்தாலொழிய ஒருவனால் துறவு வாழ்வை ஏற்க முடியாது.

பதம் 9.18.41
துர்வஸுஸ் சோதித: பித்ரா த்ருஹ்யுஸ் சானுஸ் ச பாரத
ப்ரத்யாசக்யுர் அதர்மக்ஞா ஹி அனித்யே நித்ய-புத்தய:

துர்வஸு:—மாதறொரு மகனான துர்வசுவையும்; சோதித—வேண்டினார்; பித்ரா—தந்தையால்; த்ருஹ்யு:—மற்றொரு மகனான துருஹ்யு; ச—மற்றும்; அனு:—மற்றொரு மகனான அனு; ச—கூட; பாரத—பரீட்சித்து மகாராஜனே; ப்ரத்யாசக்யு:—ஏற்க மறுத்து விட்டனர்; அதர்ம-க்ஞா:—அவர்கள் சமயக் கொள்கைகளை அறிந்திருந்ததால்; ஹி—உண்மையில்; அ-நித்யே—அநித்தியமான இளமையை; நித்ய-புத்தய:—நித்தியமானது என்றெண்ணி.

பரீட்சித்து மகாராஜனே, யயாதி அவ்வாறே தன் மகன்களான துர்வசு, துருஹ்யு, அனு ஆகியோரிடம் அவர்களுடைய இளமைக்குப் பதிலாக தன் முதுமையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். ஆனால் அவர்கள் தர்மத்தை அறியாதவர்கள் என்பதால், நிலையற்ற இளமையை நிலையானது என்றெண்ணி தங்கள் தந்தையின் உத்தரவை ஏற்க மறுத்து விட்டனர்.

பதம் 9.18.42
அப்ருச்சத் தனயம் பூரும் வயேஸோனம் குணாதிகம்
ந த்வம் அக்ரஜவத் வத்ஸ மாம் ப்ரத்யாக்யாதும் அர்ஹஸி

அப்ருச்சத்—வேண்டினார்; தனயம்—மகனை; பூரும்—பூரு என்ற; வயஸா—வயதால்; ஊனம்—இளையவன் என்றாலும்; குண-அதிகம்—குணத்தால் மற்றவர்களைவிட சிறந்தவனான; ந—இல்லை; த்வம்—நீ; அக்ரஜ-வத்—உன் தமையன்களைப் போல்; வத்ஸ—பிரிய மகனே; மாம்—என்னை; ப்ரத்யாக்யாதும்—மறுக்க; அர்ஹஸி—செய்ய வேண்டும்.

மன்னர் யயாதி பிறகு, இம்மூன்று சகோதர்களுக்கும் இளையவனும், ஆனால் அதிக தகுதியுடையவனுமான பூருவிடம், “பிரிய மகனே, உன் தமையன்களைப் போல், நீ உத்தரவை மீறுபவனாக இருக்காதே, ஏனெனில் அது உன் கடமையல்ல.” என்று வேண்டிக் கொண்டார்.

பதம் 9.18.43
ஸ்ரீ-பூருர் உவாச
கோ நு லோகே மனுஷ்யேந்ர பிதுர் ஆத்ம-க்ருத: புமான்
ப்ரதிகர்தும் க்ஷமோ யஸ்ய ப்ரஸாதாத் விந்தரே பரம்

ஸ்ரீ-பூரு: உவாச—பூரு கூறினான்; க:—எவன்; நு—உண்மையில்; லோகே—இவ்வுலகில்; மனுஷ்ய-இந்ர—மனிதர்களில் சிறந்தவரே; பிது:—தந்தை; ஆத்ம-க்ருத:—இவ்வுடலைக் கொடுத்த; புமான்—ஒருவன்; ப்ரதிகர்தும்—பிரதி உபகாரம் செய்ய; க்ஷம:—முடியும்; யஸ்ய—எவரின்; ப்ரஸாதாத்—கருணையால்; விந்தரே—ஒருவன் அனுபவிக்கமுடியுமோ; பரம்—உயர்ந்த வாழ்வை.

பூரு பதிலளித்தான்: மனிதரில் சிறந்தவரே, இவ்வுலகில் யார்தான் தன் தந்தையிடம் பட்ட கடனை அடைக்க இயலும்? தன் தந்தையின் கருணையால் ஒருவன் மனித ரூபத்தைப் பெறுகிறான். அந்த மனித ரூபத்தைக் கொண்டு, ஒருவனால் பரமபுருஷரின் ஒரு சகாவாக ஆகமுடியும்.

பதம் 9.18.44
உத்தமஸ் சிந்திதம் குர்யாத் ப்ரோக்த-காரீது மத்யம: அதமோ ‘ஸ்ரத்தயா குர்யாத் அகர்தோச்சரிதம் பிது:

உத்தம:—உத்தமமானவன்; சிந்திதம்—தந்தையின் எண்ணத்தை அறிந்து; குர்யாத்—அதற்கேற்ப செயற்படுபவன்; ப்ரோக்த-காரீ—தந்தையின் உத்தரவைக் கேட்டு செயற்படுபவன்; து—உண்மையில்; மத்யம:—மத்தியமன்; அதம:—அதமன்; அஸ்ரத்தயா—சிரத்தையின்றி; குர்யாத்—செயற்படுபவன்; அகர்தா—செய்ய மறுப்பவன்; உச்சரிதம்—மலத்துக் கொப்பானவன்; பிது:—தந்தையின்.

தந்தையின் எண்ணத்தை அறிந்து அதற்கேற்ப செயற்படுபவன் உத்தமன். தந்தையின் உத்தரவைக் கேட்டு செயற்படுபவன் மத்தியமன். தந்தையின் உத்தரவைக் கேட்டு சிரத்தையின்றி செயற்படுபவன் அதமன். ஆனால் தந்தையின் உத்தரவை நிறைவேற்ற மறுப்பவன் தந்தையின் மலத்துக்கொப்பானவன்.

பதம் 9.18.45
இதி ப்ரமுதித: பூரு: ப்ரத்யக்ருஹ்ணாஜ் ஜராம் பிது:
ஸோ ‘பி தத்-வயஸா காமான் யதாவஜ் ஜுஜுஷே ந்ருப

இதி—இவ்வாறு; ப்ரமுதித:—மகிழ்ச்சியுடன்; பூரு—பூருரு; ப்ரத்யக்ருஹ்ணாத்—ஏற்றுக் கொண்டான்; ஜராம்—முதுமையை; பிது:—தன் தந்தையின்; ஸ:—அத்தந்தை (யயாதி); அபி—கூட; தத்-வயஸா—அவருடைய மகனின் இளமையால்; காமான்—இச்சைகளையெல்லாம்; யதா-வத்—தேவைக்கேற்ப; ஜுஜுஷே—அனுபவிக்கலானார்; ந்ருப—பரீட்சித்து மகாராஜனே.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக, பரீட்சித்து மகாராஜனே, பூரு என்ற மகன், தன் தந்தையான யயாதியின் முதுமையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். யயாதியும் தன் மகனின் இளமையைப் பெற்றுக்கொண்டு, தேவைக்கேற்ப இந்த ஜட உலகை அனுபவித்தார்.

பதம் 9.18.46
ஸப்த-த்வீப-பதி: ஸம்யக் பித்ருவத் பாலயன் ப்ரஜா:
யதோபஜோஷம் விஷயாஞ் ஜுஜுஷே ‘வ்யாஹதேந்ரிய

ஸப்த-த்வீப-பதி:—ஏழு தீவுகளைக் கொண்ட முழு உலகிற்கும் எஜமானர்; ஸம்யக்—முற்றிலும்; பித்ரு-வத்—ஒரு தந்தையைப் போலவே; பாலயன்—ஆண்டுவந்தார்; ப்ரஜா:—பிரஜைகளை; யதா-உபஜோஷம்—அவர் விரும்பிய அளவுக்கு; விஷயான்—பௌதிக சுகத்தை; ஜுஜுஷே—அனுபவித்தார்; அவ்யாஹத—இடையூறின்றி; இந்ரிய:—அவரது புலன்களுக்கு.

அதன்பிறகு, ஏழு தீவுகளைக் கொண்ட முழு உலகிற்கும் அரசரான மன்னர் யயாதி, ஒரு தந்தைபோல் பிரஜைகளை ஆண்டு வந்தார். அவர் தன் மகனின் இளமையை எடுத்துக் கொண்டதால் அவரது புலன்கள் பழுதற்றவையாக இருந்தன. மேலும் அவர் விரும்பிய அளவுக்கு பெளதிக சுகத்தை அனுபவித்தார்.

பதம் 9.18.47
தேவயானி அபி அனுதினம் மனோ-வாக்-தேஹ-வஸ்துபி:
பிரேயஸ: பரமாம் ப்ரீதிம் உவாஹ ப்ரேயஸீ ரஹ:

தேவயாவி—யயாதி மகாராஜனின் மனைவி; அபி—கூட; அனுதினம்—அனுதினமும்; மன:-வாக்—மனதாலும், வார்த்தைகளாலும்; தேஹ—உடலாலும்; வஸ்துபி—தேவையான எல்லாப் பொருட்களாலும்; ப்ரேயஸ:—அவளது பிரிய கணவனின்; பரமாம்—உன்னதமான; ப்ரீதிம்—ஆனந்தத்தை; உவாஹ—நிறைவேற்றினாள்; ப்ரேயஸீ—அவளது கணவனுக்குப் பிரியமுள்ள; ரஹ:—தனிமையில், எந்த தொல்லையும் இல்லாமல்.

யயாதி மகாராஜனின் பிரியமுள்ள மனைவியான தேவயானி, தனிமையான இடங்களில், தன் மனம், வார்த்தைகள், உடல் மற்றும் வேறுபல பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு, தன் கணவனுக்கு எப்பொழுதும் இயன்றளவு அதிகமான உன்னத ஆனந்தத்தைக் கொண்டு வந்தாள்.

பதம் 9.18.48
அயஜத் யக்ஞ-புருஷம் க்ரதுபிர் பூரி-தக்ஷிணை:
ஸர்வ-தேவமயம் தேவம் ஸர்வ-வேதமயம் ஹரிம்

அயஜத்—வழிபட்டார்; யஜ்ஞ-புருஷம்—யக்ஞ புருஷரான பகவானை; க்ரதுபி:—பல்வேறு யாகங்களைச் செய்வதன் மூலம்; பூரி-தக்ஷிணை:—பிராமணர்களுக்கு ஏராளமான காணிக்கைகளைக் கொடுத்து; ஸர்வ-தேவ-மயம்—சகல தேவர்களுக்கும் இருப்பிடமான; தேவம்—பரமபுருஷரை; ஸர்வ-வேத-மயம்—சகல வேத ஞானத்திற்கும் முடிவான இலக்காகிய; ஹரிம்—பரமபுருஷரான பகவானை.

அனைத்து தேவர்களுக்கும் இருப்பிடமும், அனைத்து வேத ஞானத்தின் இலக்கும். பரமபுருஷருமான ஸ்ரீ ஹரியை மகிழ்விக்கும் பொருட்டு, மன்னர் யயாதி பல்வேறு யக்ஞங்களைச் செய்து, பிராமணர்களுக்கு ஏராளமான காணிக்கைகளைக் கொடுத்தார்.

பதம் 9.18.49
யஸ்மின் இதம் விரசிதம் வ்யோம்னீவ ஜலதாவலி:
நானேவ பாதி நாபாதி ஸ்வப்ன-மாயா-மனோரத:

யஸ்மின்—யாருக்குள்; இதம்—இப்பிரபஞ்சத் தோற்றம் முழுவதும்; விரசிதம்—படைக்கப்பட்ட; வ்யோம்னி—ஆகாயத்தில்; இவ—போல்; ஜலத-ஆவலி:—மேகங்கள்; நானா இவ—பலவகைப்பட்டிருப்பது போல்; பாதி—தோற்றுவிக்கப்படுகிறது; ந ஆபாதி—மறைக்கப்படுகிறது; ஸ்வப்ன-மாயா—கனவு போன்ற மாயை; மன:-ரத:—மனதினால் உண்டாக்கப்பட்ட கற்பனையாகும்.

பிரபஞ்ச தோற்றத்தைப் படைத்தவரும், பரமபுருஷருமான வாசுதேவன், மேகங்களைத் தாங்கியுள்ள ஆகாயம் போல், சர்வ வியாபகமுள்ளவராக தம்மை வெளிப்படுத்துகிறார். சிருஷ்டி அழிக்கப்படும் பொழுது, அனைத்தும் பரமபுருஷரான விஷ்ணுவுக்குள் ஒடுங்கிவிடுவதால் பலவகைப்பட்ட நிலை மறைந்துவிடுகிறது.

பதம் 9.18.50
தம் ஏவ ஹ்ருதி வின்யஸ்ய வாஸுதேவம் குஹாசயம்
நாராயணம் அணீயாம்ஸம் நிராசீர் அயஜத் ப்ரபும்

தம் ஏவ—அவரை மட்டுமே; ஹ்ருதி—இதயத்தில்; வின்யஸ்ய—வைத்து; வாஸுதேவம்—பகவான் வாசுதேவர்; குஹ-ஆசயம்—எல்லோருடைய இதயங்களிலும் இருப்பவரான; நாராயணம்—நாராயணர், அல்லது நாராயணரின் ஓர் அம்சமானவர்; அணீயாம்ஸம்—எல்லா இடங்களிலும் இருப்பினும் பெளதிக கண்களுக்குப் புலப்படாதவர்; நிராசீ:—யயாதி, பெளதிக ஆசைகளின்றி; அயஜத்—வழிபட்டார்; ப்ரபும்—பரமபுருஷரை.

நாராயணராக எல்லோர் இதயங்களிலும் இருப்பவரும், எங்கும் பரவியிருப்பினும் பெளதிக கண்களுக்குப் புலப்படாதவருமான பரம புருஷரை யயாதி மகாராஜன் பௌதிக ஆசைகளின்றி வழிபட்டார்.

பதம் 9.18.51
ஏவம் வர்ஷ-ஸஹஸ்ராணி மன:-ஷஷ்டைர் மன:-ஸுகம்
விததானோ ‘பி நாத்ருப்யத் ஸார்வ-பௌம: கத்-இந்ரியை:

ஏவம்—இவ்விதமாக; வர்ஷ-ஸஹஸ்ராணி—ஆயிரம் ஆண்டுகளுக்கு; மன:-ஷஷ்டை:—மனதாலும், ஐந்து அறிவு திரட்டும் புலன்களாலும்; மன:-ஸுகம்—மனதால் உண்டாக்கப்படும் நிலையற்ற சுகம்; விததான:—நிறைவேற்றினார்; அபி—என்றாலும்; ந அத்ருப்யத்—திருப்தியடைய இயலவில்லை; ஸார்வ-பௌம:—அவர் முழு உலகிற்கும் அரசர் என்றாலும்; கத்-இந்ரியை:—தூய்மையற்ற புலன்களைப் பெற்றுள்ள காரணத்தால்.

தூய்மையடையாத புலன்களைத் (கத்—இந்ரிய) தூய்மைப்படுத்துவதற்கு ஒருவன் தன் புலன்களையும், மனதையும் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுத்த வேண்டும். ஸர்வோபாதி-விணிர் முக்தம்-தத்-பரத்வேன நிர்மலம். ஒருவன் எல்லா வகையான பட்டம் பதவிகளிலிருந்தும் விடுபட வேண்டும். ஒருவன் தன்னை பெளதிக உலகுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும் பொழுது அவனுடைய புலன்கள் தூய்மையற்றவையாக உள்ளன. ஆனால் ஒருவன் ஆன்மீகத் தன்னுணர்வு பெற்று, தன்னை பகவத் பக்தனாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பொழுது, அவனுடைய புலன்கள் உடனே தூய்மையடைகின்றன. தூய்மையடைந்த புலன்களை பகவத் தொண்டில் ஈடுபடுத்துவதற்கு பக்தி என்று பெயர். ஹ்ரிஷீகேண ஹ்ரிஷீகேச-ஸேவனம் பக்திர் உச்யதே. ஒருவன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு புலன்களை அனுபவிக்கக் கூடும். ஆனால் தன் புலன்களை அவன் தூய்மைப்படுத்தாவிட்டால் அவனால் மகிழ்ச்சியடைய முடியாது.


ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “மன்னர் யயாதி தன் இளமையை திரும்பப் பெறுதல்” எனும் தலைப்பை கொண்ட பதினெட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare