அத்தியாயம் – 4
இரண்யகசிபு பிரபஞ்சத்தை
பீதியடையச் செய்தல்
பதம் 7.4.1 : நாரதமுனி தொடர்ந்து கூறினார்: பிரம்ம தேவர் இரண்யகசிபுவின் கடுந்தவங்களால் மிகவும் திருப்தியடைந்தார். ஆகவே வரங்கள் வேண்டப்பட்ட பொழுது, அத்தகைய வரங்களை அடைவது மிகவும் அரிது என்றாலும், அவற்றை அவர் அருளினார்.

பதம் 7.4.2 : பிரம்மதேவர் கூறினார்: இரண்யகசிபுவே, நீ கேட்டுள்ள இந்த வரங்களை அடைவது பெரும்பாலான மனிதர்களுக்கு மிகக் கடினமாகும். ஆயினும் மகனே, பொதுவாக இவ்வரங்கள் யாருக்கும் கிடைக்காதவை என்றாலும், இவற்றை நான் உனக்கு அளிக்கிறேன்.

பதம் 7.4.3 : பிறகு பொய்க்காத வரங்களை அளிப்பவரான பிரம்மதேவர், அசுரர்களில் சிறந்தவனான இரண்யகசிபுவால் பூஜிக்கப்பட்டும், சிறந்த முனிவர்களாலும், சாதுக்களாலும் போற்றப்பட்டும், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பதம் 7.4.4 : இவ்வாறு பிரம்மதேவரால் ஆசீர்வதிக்கப்பட்டு, ஒளிமயமான பொன்னிற மேனியைப் பெற்ற அசுரனான இரண்யகசிபு, தன் சகோதரனின் மரணத்தைத் தொடர்ந்து நினைவிற்கொண்டதால், பகவான் விஷ்ணுவிடம் பகைமை கொண்டவனானான்.

பதங்கள் 7.4.5 – 7.4.7 : இரண்யகசிபு முழு பிரபஞ்சத்தையும் கைப்பற்றியவனானான். உண்மையில் சக்தி வாய்ந்த அந்த அசுரன், மனிதர்கள், கந்தர்வர்கள், கருடர்கள், மகா ஸர்பங்கள், சித்தர்கள், சாரணர்கள், வித்யாதரர்கள்,மாமுனிவர்கள், யமராஜன், மனுக்கள், யக்ஷர்கள், இராட்சஸர்கள், பிசாசுகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மற்றும் பேய், பூதங்களின் தலைவர்கள் ஆகியோரின் கிரகங்கள் உட்பட, மேல், மத்திய, கீழ் ஆகிய மூவுலகங்களையும் வெற்றி கொண்டான். எங்கெல்லாம் ஜீவராசிகள் உள்ளனவோ அவ்வெல்லாக் கிரகங்களின் அதிபதிகளையும் அவன் வெற்றி கொண்டு தன் வசமாக்கிக் கொண்டான். எல்லோருடைய உலகங்களையும் வெற்றி கொண்ட அவன், அவர்களுடைய சக்திகளையும், செல்வாக்குகளையும் பறித்துக் கொண்டான்.

பதம் 7.4.8 : எல்லா ஐசுவரியங்களையும் பெற்றிருந்த இரண்யகசிபு, தேவர்களால் அனுபவிக்கப்படுவதும், புகழ்பெற்ற நந்தவன தோட்டத்துடன் கூடியதுமான சுவர்க்கத்தில் வாழத் துவங்கினான். உண்மையில் சுவர்க்க ராஜனான இந்திரனின் செல்வம் கொழிக்கும் அரண்மனையில் அவன் வாழ்ந்தான். தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் நேரடியாக வடிக்கப்பட்டிருந்த அந்த அரண்மனை, முழு பிரபஞ்சத்தின் அதிர்ஷ்ட தேவதையே அங்கு வாழ்ந்ததுபோல் அழகாக வடிக்கப்பட்டிருந்தது.

பதங்கள் 7.4.9 – 7.4.12 : தேவேந்திரனுடைய மாளிகையின் படிக்கட்டுகள் பவளத்தால் செய்யப்பட்டிருந்தன. தரையோ விலைமதிப்பற்ற மரகதக் கற்கள் பதிக்கப்பட்டதாகவும், சுவர்கள் பளிங்குக் கற்களால் செய்யப்பட்டவையாகவும், தூண்கள் வைடூர்ய கற்களால் செய்யப்பட்டவையாகவும் இருந்தன. அற்புதமான விதானங்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆசனங்கள் சிவப்புக் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பால் நுரையைப் போன்ற வெண்மையான பட்டு மஞ்சம் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அழகிய பற்களுடனும், அதி அற்புதமான முகங்களுடனும் கூடிய அரண்மனைப் பெண்கள், தங்களுடைய கொலுசுகள் இனிமையான ஒலிக்க, அரண்மனையில் இங்கு மங்கும் நடந்துகொண்டும் நவரத்தினங்களில் தெரிந்த தங்களுடைய சொந்த அழகிய பிரதிபலிப்புகளைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் மிகவும் துன்புறுத்தப்பட்ட தேவர்களோ மிகவும் வருத்தத்துடன், அவனுக்கு அடிபணிந்து அவனுடைய பாதங்களில் வணங்க வேண்டியிருந்தது. அவனும் காரணமின்றி அந்த தேவர்களை மிகவும் கடுமையாக தண்டித்துக் கொண்டிருந்தான். இவ்வாறாக இரண்யகசிபு அந்த அரண்மனையில் வாழ்ந்து கொண்டு, அனைவரையும் தனது கொடுங்கோல் ஆட்சிக்கு உட்படுத்தி வந்தான்.

பதம் 7.4.13 : அரசே, இரண்யகசிபு எப்பொழுதும் கடுமையான நாற்றமுடைய மதுபானங்களையும், கள்ளையும் குடித்து போதையேறியவனாக இருந்ததால், தாமிரம் போன்ற அவனது கண்கள் எப்பொழுதும் போதையால் சுழன்று கொண்டிருந்தன. இவ்வாறு வெறுக்கத்தகுந்தவனாக இருந்தும், அஷ்டாங்க யோக நிலையில் கடுந்தவங்களை அவன் புரிந்திருப்பதால், மும்மூர்த்திகளான பிரம்மதேவர், சிவபெருமான், பகவான் விஷ்ணு ஆகியோரைத் தவிர மற்றனைவரும் அவனை திருப்திப்படுத்தும் பொருட்டு, தங்களுடைய சொந்த கைகளால் பல்வேறு காணிக்கைகளைக் கொண்டு வந்து நேரடியாக அவனை வழிபட்டனர்.

பதம் 7.4.14 : பாண்டு வம்சத்தவரான யுதிஷ்டிர மகாராஜனே, தனது சொந்த தவ வலிமையினால் தேவேந்திரனின் அரியாசனத்தில் அமர்ந்திருந்த இரண்யகசிபு, மற்றெல்லா கிரக வாசிகளையும் அடக்கியாண்டான். விஸ்வாவஸு, தும்புரு ஆகிய இரு கந்தவர்களும், நானும், வித்யாதரர்களும், அப்ஸரஸ்களும் மற்றும் முனிவர்களும், மீண்டும் மீண்டும் அவனை துதித்துப் போற்றினோம்.

பதம் 7.4.15 : வர்ணாஸ்ரம கொள்கைகள் உறுதியாகப் பின்பற்றியவர்களால், சிறந்த காணிக்கைகளுடன் கூடிய யக்ஞங்களால் வழிபடப்பட்ட இரண்யகசிபு, தேவர்களுக்குச் சேர வேண்டிய அவிர்பாகங்களை அவர்களுக்குக் கொடுக்காமல் தானே ஏற்றுக் கொண்டான்.

பதம் 7.4.16 : ஏழு தீவுகளைக் கொண்ட மண்ணுலகும், இரண்யகசிபுவிடம் அச்சம் கொண்டிருப்பது போல், பூமி உழுது பயிரிடப்படாமலேயே உணவுத் தானியங்களைக் கொடுத்தது. இவ்வாறாக அது ஆன்மீக உலகிலுள்ள சுரபியைப் போன்ற பசுக்களை அல்லது சுவர்க்கத்தைச் சேர்ந்த காமதேனுவை ஒத்திருந்தது. பூமி போதுமான உணவுத் தானியங்களை அளித்தது. பசுக்களோ ஏராளமான பாலை அளித்தன. மேலும் ஆகாயமோ பலவகையான அற்புத விஷயங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பதம் 7.4.17 : பிரபஞ்சத்திலுள்ள பல்வேறு சமுத்திரங்களும், உபநிதிகளும், சமுத்திரங்களின் மனைவியரோடு ஒப்பிடப்படும் நதிகளும் அவற்றின் அலைகளால் மோதி எடுத்து வந்து பலவகையான இரத்தினங்களையும், மணிகளையும் இரண்யகசிபுவின் உபயோகத்திற்காக அளித்தன. இச்சமுத்திரங்கள் உப்புநீர், கரும்புச்சாறு, மது, நெய், பால்,தயிர்,மற்றும் இனிப்புநீர் ஆகியவற்றைக் கொண்டவையாகும்.

பதம் 7.4.18 : மலைகளுக்கு இடையிலுள்ள பள்ளத்தாக்குகள் இரண்யகசிபுவுக்கு இன்பமூட்டும் விளையாட்டு மைதானங்களாயின. அவனுடைய செல்வாக்கினால் எல்லா மரங்களும், செடிகளும் எல்லாப் பருவ காலங்களிலும் பழங்களையும், மலர்களையும் ஏராளமான உற்பத்தி செய்தன. பிரபஞ்சத்தின் மூவேறு இலாக்காக்களின் தலைவர்களான இந்திரன், வாயு, அக்னி ஆகியோரின் கடமைகளை நீரூற்றுதல், உலர்த்துதல் மற்றும் எரித்தல் ஆகியவை எல்லாம் அம்மூன்று தேவர்களின் உதவியின்றி இரண்யகசிபுவால் தனியாகவே நடத்தப்பட்டன.

பதம் 7.4.19 : இரண்யகசிபு எல்லாத் துறைகளையும் ஆளும் சக்தியைப் பெற்றிருந்த போதிலும், தன்னால் இயன்ற அளவு எல்லாவகையான புலன் நுகர்வுகளையும் அனுபவித்த போதிலும், திருப்தியடையாதவனாகவே இருந்தான். ஏனெனில், அவன் தன் புலன்களை அடக்குவதற்குப் பதிலாக, அவற்றிற்கு அடிமையாகி இருந்தான்.

பதம் 7.4.20 : இவ்வாறாக இரண்யகசிபு தன் ஐசுவரியங்களில் மிகவும் செருக்குக் கொண்டவனாகவும், அதிகாரப்பூர்வமான சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ள சட்ட திட்டங்களை மதிக்காதவனாகவும் நீண்ட காலத்தைக் கழித்தான். எனவே அவன் பிராமண சிரேஷ்டர்களான நான்கு குமாரர்களின் சாபத்திற்குள்ளானான்.

பதம் 7.4.21 : லோக பாலகர்கள் உட்பட அனைவரும், இரண்யகசிபுவின் கொடுங்கோல் ஆட்சியின் காரணத்தால் கடுந்துன்பத்திற்கு ஆளாயினர். பயந்துபோய் கலக்கமடைந்திருந்த அவர்கள் வேறு புகலிடத்தைக் காணாதவர்களாய், இறுதியில் பரமபுருஷராகிய ஸ்ரீ விஷ்ணுவைச் சரணடைந்தனர்.

பதங்கள் 7.4.22 – 7.4.23 : “எந்த திசையில் பரமபுருஷர் இருக்கிறாரோ, எங்கு துறவு வாழ்விலுள்ள பரிசுத்த ஆத்மாக்களாகிய புண்ணிய புருஷர்கள் செல்கிறார்களோ, எங்கு சென்ற பிறகு அவர்கள் திரும்பி வருவதேயில்லையோ, அந்த திசைக்கு எங்களுடைய பணிவான வணக்கங்களை நாங்கள் சமர்ப்பிக்கிறோம்” என்ற தியானத்துடன், பல்வேறு கிரகங்களின் அதிதேவதைகள் அனைவரும் உறக்கமின்றி, தங்களுடைய மனங்களை முற்றிலும் அடக்கி, காற்றை மட்டுமே சுவாசித்துக் கொண்டு, ரிஷிகேசரை வழிபடத் துவங்கினர்.

பதம் 7.4.24 : பிறகு, பௌதிக கண்களுக்குப் புலப்படாத ஒரு ரூபத்திலிருந்து, உன்னதமான ஓர் அசிரீரி அவர்கள் முன் எழுந்தது. மேகத்தின் ஒலி போன்ற அந்த வாக்கு மனதிலிருந்து பயத்தைப் போக்கி உற்சாகமளிப்பதாக இருந்தது.

பதங்கள் 7.4.25-7.4.26 : பகவானின் அசிரீரி பின்வருமாறு ஒலித்தது: கல்விமான்களில் சிறந்தவர்களே அஞ்ச வேண்டாம்! உங்களுக்கு நலம் உண்டாகட்டும். என்னைப் பற்றி கேட்டும், பாடியும், என்னிடம் பிரார்த்தனைகள் செய்தும் என்னுடைய பக்தர்களாகுங்கள். ஏனெனில், இவை அனைத்து ஜீவராசிகளுக்கும் நிச்சயமாக சிறந்த வரங்களை அளிக்கக் கூடியவையாகும். இரண்யகசிபுவின் எல்லாச் செயல்களையும் நான் அறிவேன். அவற்றை மிக விரைவில் நான் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவேன். தயவு செய்து அதுவரை பொறுமையுடன் காத்திருங்கள்.

பதம் 7.4.27 : எப்போது பரமபுருஷரைப் பிரதிநிதிக்கும் தேவர்களிடமும், சகல ஞானத்தையும் அளிக்கும் வேதங்களிடமும், பசுக்களிடமும், பிராமணர்களிடமும், வைஷ்ணவர்களிடமும், சமயக் கோட்பாடுகளிடமும் இறுதியாக பரமபுருஷராகிய என்னிடமும் துவேஷம் வளர்கிறதோ, அப்போது அவன் அவனுடைய நாகரீகத்துடன் விரைவில் நாசமடைவான்.

பதம் 7.4.28 : இரண்யகசிபு, தன் சொந்த மகனும், சாந்தனும், நிதானமானவனும் பகைவரற்றவனும், சிறந்த பக்தனுமான பிரகலாதனை பரிகாசம் செய்து துன்புறுத்தும் பொழுது, பிரம்மாவின் வரங்களைப் பெற்றவனாக இருப்பினும், அவனை உடனடியாக நான் கொன்றுவிடுவேன்.

பதம் 7.4.29 : மாமுனிவரான நாரதர் தொடர்ந்து கூறினார்: அனைவருக்கும் ஆன்மீக குருவாகிய பரமபுருஷர், சுவர்க்க லோகங்களில் வாழ்ந்த அனைத்து தேவர்களுக்கும் இவ்வாறு உறுதியளித்ததும், அவர்கள் தங்களுடைய பணிவான வணக்கங்களை அவருக்குச் செலுத்திவிட்டு, அசுரனான இரண்யகசிபு இப்பொழுது கிட்டத்தட்ட இறந்துவிட்டவனாவான் என்ற நம்பிக்கையுடன் திரும்பிச் சென்றனர்.

பதம் 7.4.30 : இரண்யகசிபுவுக்குச் சிறந்த தகுதிகளைக் கொண்ட அற்புதமான புத்திரர்கள் நால்வர் இருந்தனர். அவர்களுள் பிரகலாதன் சிறந்தவராவார். உண்மையில் பிரகலாதன் பரமபுருஷரின் ஒரு தூய பக்தர் என்பதால் அவர் உன்னத குணங்களுக்கெல்லாம் இருப்பிடமாக விளங்கினார்.

பதங்கள் 7.4.31 – 7.4.32 : (இரண்யகசிபுவின் மகனான பிரகலாத மகாராஜனின் குணங்கள் இங்கு விவரிக்கப்படுகின்றன) அவர் சீரிய ஒழுக்கம் உடையவராகவும், பரம சத்தியத்தைப் புரிந்து கொள்வதில் உறுதி கொண்டவராகவும் இருந்த காரணத்தால், அவர் பண்பாடு மிக்க, தகுதியிடைய ஒரு பிராமணராக இருந்தார். மேலும் அவர் புலன்களையும் மனதையும் வென்றவராக இருந்தார். பரமாத்மாவைப் போல், அனைத்து ஜீவராசிகளிடமும் அன்புடையவராகவும், அனைவருக்கும் உற்ற நண்பராகவும் இருந்தார். மரியாதைக்குரியவர்களிடம் ஓர் எளிய தொண்டனைப் போலவும், ஏழைகளிடம் ஒரு தந்தையைப் போலவும், சமமானவர்களிடம் சகோதர அன்பு உடையவராகவும் அவர் நடந்துக் கொண்டார். அவர் தமது ஆசான்களையும், குருமார்களையும், தன்னைவிட வயதில் மூத்த தெய்வச் சகோதரர்களையும். பரமபுருஷருக்குச் சமமானவர்களாக பாவித்தார். அவர் நல்ல கல்வி, செல்வம், அழகு, உயர்பிறப்பு, முதலியவைகளைப் பெற்றிருந்தும், அவற்றினால் எழக் கூடிய இயற்கைக்கு விரோதமான செருக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டவராக இருந்தார்.

பதம் 7.4.33 : பிரகலாத மகாராஜன் ஓர் அசுர குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், அசுர சுபாவம் சிறிதும் இல்லாமல், பகவான் விஷ்ணுவின் சிறந்த பக்தராக விளங்கினார். மற்ற அசுரர்களைப் போல் வைஷ்ணவர்களிடம் அவர் விரோதம் கொண்டதேயில்லை. அவர் ஆபத்தில் கலங்காத சித்தமுடையவராகவும், வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ள பலன் கருதும் செயல்களில் நேரடியாகவே, மறைகமாகவோ விருப்பமில்லாதவராகவும் இருந்தார். உண்மையில் பௌதிகமானவை எல்லாம் பயனற்றவை என்று அவர் கருதியதால், பௌதிக ஆசைகள் சிறிதும் இல்லாதவராக இருந்தார். அவர் எப்பொழுதும் தமது புலன்களையும், பிராணனையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் மாறாத புத்தியையும், உறுதியையும் உடையவராக இருந்ததால், எல்லா காம இச்சைகளையும் அவரால் அடக்க முடிந்தது.

பதம் 7.4.34 : அரசே, பிரகலாத மகாராஜனின் நற்குணங்கள் இன்றும் கற்றறிந்த சாதுக்களாலும், வைஷ்ணவர்களாலும் புகழப்படுகின்றன. எல்லா நற்குணங்களும் பரமபுருஷரில் எப்பொழுதும் இருப்பது போலவே, அவை பகவத் பக்தரான பிரகலாத மகாராஜனிடமும் என்றென்றும் உள்ளன.

பதம் 7.4.35 : யுதிஷ்டிர மகாராஜனே, சாதுக்களையும், பக்தர்களையும் புகழ்ந்து பேசப்படும் எந்த ஒரு சபையிலும், அசுரர்களின் பகைவர்களான தேவர்கள் கூட, பிரகலாத மகாராஜனை ஒரு சிறந்த பக்தருக்கு உதாரணமாக எடுத்துக் கூறும்போது, உம்மைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா!

பதம் 7.4.36 : பிரகலாத மகாராஜனின் எண்ணற்ற உன்னத குணங்களை யாரால் பட்டியல் போட முடியும்? அவருக்கு வாசுதேவரிடம் (வசுதேவரின் புத்திரர்), அதாவது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் உறுதியான நம்பிக்கையும், தூய பக்தியும் இருந்தது. முற்பிறவியில் அவர் செய்து வந்த பக்தித் தொண்டின் காரணத்தால் இயற்கையாகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவருக்குப் பற்றுதல் இருந்தது. அவரது நற்குணங்களை எண்ணிக் கணக்கிட முடியாது அவர் ஒரு மகாத்மா என்பதையே அவை நிருபிக்கின்றன.

பதம் 7.4.37 : பிரகலாத மகாராஜன் தமது குழந்தைப் பருவத்தின் துவக்கத்திலிருந்தே, குழந்தைத் தனமான விளையாட்டுப் பொருட்களில் விருப்பற்றவராக இருந்தார். உண்மையில் அவற்றை ஒரேயடியாக விட்டுவிட்ட அவர், கிருஷ்ண உணர்வில் முழுமையாக ஆழ்ந்து மௌனமாகவும், ஜடமாகவும் இருந்தார். அவரது மனது சதா கிருஷ்ண உணர்வினால் பாதிக்கப்பட்டிருந்தால், புலன் நுகர்வுச் செயல்களில் முழுமையாக ஆழ்ந்துள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதை அவரால் புரிந்து கொள்ள இயலவில்லை.

பதம் 7.4.38 : பிரகலாத மகாராஜன் எப்பொழுதும் கிருஷ்ணரைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தார். இவ்விதமாக, எப்பொழுதும் பகவானால் ஆரத் தழுவப்பட்டிருந்த அவர் உட்கார்ந்திருத்தல், நடத்தல், சாப்பிடுதல், குடித்தல், படுத்தல், பேசுதல் முதலான உடல் தேவைகளெல்லாம் எப்படித் தானாகவே நிறைவேற்றப்பட்டன என்பதை உணரவில்லை.

பதம் 7.4.39 : கிருஷ்ண உணர்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினால், அவர் சில சமயங்களில் அழுவார், சில சமயங்களில் சிரிப்பார், சில சமயங்களில் ஆனந்தத்தை வெளிப்படுத்துவார். மற்றும் சில சமயங்களில் உரக்க பாடுவார்.

பதம் 7.4.40 : பிரகலாத மகாராஜன் சில சமயங்களில் பரம புருஷரைக் கண்டதும் மிகவும் கவலையுடன் உரக்கக் கூவி அழைப்பார். சில சமயங்களில் மகிழ்ச்சியால் வெட்கத்தை இழந்து பரவசத்துடன் ஆடத் துவங்குவார். மற்றும் சில சமயங்களில், கிருஷ்ணரின் சிந்தனையில் முழுமையாக ஆழ்ந்து, தன்னைக் கிருஷ்ணராகவே பாவித்து அவருடைய லீலைகளைச் செய்வார்.

பதம் 7.4.41 : சில சமயங்களில் அவர் பகவானுடைய தாமரைக் கரங்களின் ஸ்பரிசத்தை உணர்ந்தவராய், ஆனந்தப் பரவசமடைந்து. மெய்சிலரிக்க, அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட, அசைவின்றி மௌனமாக இருப்பார்.

பதம் 7.4.42 : பிரகலாத மகாராஜன், பௌதிகமான எதனுடனும் எவ்வித தொடர்பும் கொண்டிராத பக்குவமான தூய பக்தர்களுடன் கொண்டிருந்த சகவாசத்தின் காரணத்தால், இடையறாது பகவானின் பாத சேவையில் ஈடுபட்டிருந்தார். ஆன்மீக முன்னேற்றம் அடையாதவர்கள், பூரண பரவச நிலையிலிருந்த அவரது தேக அம்சங்களைக் கண்டதால் தூய்மையடைந்தனர். அதாவது, பிரகலாத மகாராஜன் அவர்களுக்கு உன்னத ஆனந்தத்தை அருளினார்.

பதம் 7.4.43 : யுதிஷ்டிர மகாராஜனே, இந்த மகா பாக்கியசாலியான பிரகலாதன் தன் சொந்த மகனாக இருந்த போதிலும், அசுரனான இரண்யகசிபு அவரைச் சித்ரவதை செய்தான்.

பதம் 7.4.44 : புதிஷ்டிர மகாராஜன் கூறினார்: தேவர்களுக்கிடையில் மிகச் சிறந்த முனிவரே, ஆன்மீக குருமார்களில் தலைசிறந்தவரே, பிரகலாதர் தன் சொந்த மகனாக இருந்தும், மிகச் சிறந்த தூய பாகவதரான அவருக்கு இரண்யகசிபு எவ்வாறு இவ்வளவு அதிகமான தொல்லைகளைக் கொடுத்தான்? இவ்விசயத்தைப் பற்றி தங்களிடமிருந்து அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.

பதம் 7.4.45 : ஒரு தாயும், தந்தையும், தங்கள் குழந்தைகளிடம் எப்பொழுதும் அன்பு கொண்டுள்ளனர். அக்குழந்தைகள் கீழ்ப்படியாது நடக்கும் பொழுது, பெற்றோர்கள் அக்குழந்தைகளின் நன்மைக்காக அவர்களைக் கண்டிக்கின்றனர். அது அவர்களிடம் உள்ள பகையால் அல்ல. பிரகலாத மகாராஜனின் தந்தையான இரண்யகசிபு இத்தகைய ஒரு சிறப்புடைய மகனை எவ்வாறு தண்டித்தான்? நான் அறிய ஆவலாக இருப்பது இதைத்தான்.

பதம் 7.4.46 : யுதிஷ்டிர மகாராஜன் தொடர்ந்து வினவினார்: கீழ்ப்படியும் குணமும், நன்னடத்தையும், தன் தந்தையிடம் மரியாதையும் உள்ள சிறப்புமிக்க ஒரு மகனிடம் ஒரு தந்தை இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்வது எப்படி சாத்தியமாகும்? பிராமணரே, என் பிரபுவே, பாசமுள்ள ஒரு தந்தை, மேன்மைமிக்க தன் மகனைக் கொல்லும் நோக்கத்துடன் சித்திரவதை செய்யவும் துணிந்ததை இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. தயவு கூர்ந்து இதுதொடர்பான எங்களது சந்தேகங்களைப் போக்கியருள வேண்டுகிறேன்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare