அத்தியாயம் – 18
தேவேந்திரனைக் கொல்வதெனும்
திதியின் சபதம்
பதம் 6.18.1
ஸ்ரீ-சுக உவாச
ப்ருஷ்னிஸ் து பத்னீ ஸவிது: ஸாவித்ரீம் வ்யாஹ்ருதிம் த்ரயீம்
அக்னீஹோத்ரம் பசும் ஸோமம் சாதுர்மாஸ்யம் மஹா-மகான்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ப்ருஷ்ணி:—ப்ருஷ்ணி; து—பிறகு; பத்னீ—மனைவி; ஸவிது:—சவிதாவின்; சாவித்ரீம்—சாவித்ரி; வ்யாஹ்ருதிம்—வியாகிருதி; த்ரயீம்—திரயி; அக்னிஹோத்ரம்—அக்னிஹோத்ரன்; பசும்—பசு; சோமம்—சோமன்; சாதுர்மாஸ்யம்—சாதுர்மாஸ்யன்; மஹா-மகான்—ஐந்து மகாயக்ஞர்கள்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: சவிதா, அதிதியின் பன்னிரண்டு மகன்களில் ஐந்தாவது மகனாவான். அவனது மனைவியான விருஷ்னி, சாவித்ரி, வியாகிருதி, திரயி என்ற மூன்று புதல்விகளையும், அக்னிஹோத்ரன், பசு, சோமன், சாதுர்மாஸ்யன் என்ற மகன்களையும், ஐந்து மகாயக்ஞர்களையும் பெற்றாள்.

பதம் 6.18.2
ஸித்திர் பகஸ்ய பார்யாங்க மஹிமானம் விபும் ப்ரபும்
ஆசிஷம் ச வராரோஹாம் கன்யாம் ப்ராஸூத ஸுவ்ரதீம்

ஸித்தி:—சித்தி; பகஸ்ய—பகினிம்; பார்யா—மனைவியான; அங்க—அரசே; மஹிமானம்—மஹிமா; விபும்—விபு; ப்ரபும்—பிரபு; ஆசிஷம்—ஆசி; ச—மேலும்; வராரோஹாம்—மிகவும் அழகான; கன்யாம்—மகளை; ப்ராஸூத—பெற்றாள்; ஸு-வ்ரதாம்—குணவதியான.

அரசே, அதிதியின் ஆறாவது மகனாகிய பகனின் மனைவியான சித்தி, மஹிமா, விபு, பிரபு என்ற மூன்று மகன்களையும், ஆசி என்ற மிகவும் அழகிய ஒரு மகளையும் பெற்றாள்.

பதங்கள் 6.18.3 – 6.18.4
தாது: குஹூ: ஸினீவாலீ ராகா சானுமதிஸ் ததா
ஸாயம் தர்சம் அத ப்ராத: பூர்ணமாஸம் அனுக்ரமாத்

அக்னீன் புரீஷ்யான் ஆதத்த க்ரியாயாம் ஸமனந்தர:
சர்ஷணீ வருணஸ்யயாஸீத் யஸ்யாம் ஜாதோ ப்ருகு: புன:

தாது:—தாதாவின்; குஹூ:—குஹூ; ஸினீவாலி—சினிவாலீ; ராகா—ராகா; ச—மற்றும்; அனுமதி:—அனுமதி; ததா—கூட; ஸாயம்—சாயம்; தர்சம்—தர்சன்; அத—மற்றும்; ப்ராத:—பிராதன்; பூர்ணமாஸம்—பூர்ணமாசன்; அனுக்ரமாத்—முறையே; அக்னீன்—அக்னி தேவர்களை; புரீஷ்யான்—புரீஷ்யர்கள் எனப்படும்; ஆதத்த—பெற்றாள்; க்ரியாயாம்—கிரியாவில்; ஸமனந்தர:—அடுத்த மகனான விதாதா; சர்ஷணீ—சர்ஷணி; வருணஸ்ய—வருணனுக்கு; ஆஸீத்—இருந்தான்; யஸ்யாம்—யாரிடத்தில்; ஜாத:—பிறந்தார்; ப்ருகு:—பிருகு; புன:—மீண்டும்.

அதிதியின் ஏழாவது மகனான தாதாவிற்கு குஹு, சினிவாலீ, ராகா, அனுமதி என்ற நான்கு மனைவிகள் இருந்தனர். இந்த மனைவிகள் முறையே சாயம், தர்சன், பிராதன், பூர்ணமாசன் என்ற நான்கு மகன்களைப் பெற்றனர். அதிதியின் எட்டாவது மகனான விதாதாவின் மனைவி கிரியா எனப்பட்டாள். அவள் மூலமாக புரீஷ்யர்கள் என்ற ஐந்து அக்னி தேவர்களை விதாதா பெற்றார். அதிதியின் ஒன்பதாவது மகனான வருணனின் மனைவி சர்ஷணீ. பிரம்மாவின் புத்திரரான பிருகு அவளது கர்ப்பத்தில் மீண்டும் பிறந்தார்.

பதம் 6.18.5
வால்மீகிஸ் ச மஹா-யோகி வால்மீகாத் அபவத் கில
அகஸ்த்யஸ் ச வஸிஷ்டஸ் ச மித்ரா-வருணயோர் ரிஷீ

வால்மீகி:—வால்மீகி; ச—மற்றும்; மஹா-யோகீ—மகாயோகியான; வல்மீகாத்—ஓர் எறும்புப் புற்றிலிருந்து; அபவத்—பிறந்தார்; கில—உண்மையில்; அகஸ்த்ய:—அகஸ்தியர்; ச—மற்றும்; வஸிஷ்ட: ச—வசிஷ்டரும்; மித்ரா-வருணயோ:—மித்தரனுக்கும், வருணனுக்கும்; ரிஷீ—இரு ரிஷிகளும்.

வருணனுடைய விந்தின் மூலமாக ஓர் எறும்புப் புற்றிலிருந்த, மகாயோகியான வால்மீகி பிறந்தார். பிருகுவும் வால்மீகியும் வருணனின் பிரத்தியேக புத்திரர்களாவர். ஆனால் அகஸ்தியரும், வசிஷ்டரும், வருணன் மற்றும் அதிதியின் பத்தாவது மகனான மித்திரன் ஆகியோரின் பொதுவான மகன்களாவர்.

பதம் 6.18.6
ரேத: ஸிஷிசது: கும்பே உர்வஸ்யா: ஸன்னிதௌ த்ருதம்
ரேவத்யாம் மித்ர உத்ஸர்கம் அரிஷ்டம் பிப்பலம் வ்யதாத்

ரேத:—விந்துவை; ஸஷிசது:—வெளிப்படுத்தினார்; கும்பே—ஒரு மண்குடத்தில்; உர்வஸ்யா:—ஊர்வசியின்; ஸன்னிதௌ—முன்னிலையில்; த்ருதம்—பறந்த; ரேவத்யாம்—ரேவதியில்; மித்ர:—மித்திரன்; உத்ஸர்கம்—உத்சர்கன்; அரிஷ்டம்—அரிஷ்டன்; பிப்பலம்—பிப்பலன்; வ்யதாத்—பெற்றார்.

தேவலோக மங்கையான ஊர்வசியைப் பார்த்ததும் மித்திரனும், வருணனும் விந்தை வெளிப்படுத்தினர். அதை அவர்கள் ஒரு மண் குடத்தில் பத்திரப்படுத்தி வைத்தனர். பிறகு அக்குடத்திலிருந்து அகஸ்தியர், வஸிஷ்டர் என்ற இரு மகன்கள் தோன்றினர். எனவே அவர்கள் மித்திரனுக்கும், வருணனுக்கு பொதுவான மகன்களாவர். மித்திரன் தனது மனைவியான ரேவதியின் கர்பத்தில் உத்சர்கன், அரிஷ்டன், பிப்பலன் என்ற மூன்று மகன்களைப் பெற்றார்.

பதம் 6.18.7
பௌலோம்யாம் இந்ர ஆதத்த த்ரீன் புத்ரான் இதி ந: ஸ்ருதம்
ஜயந்தம் ரிஷபம் தாத த்ருதீயம் மீடுஷம் ப்ரபு:

பௌலோம்யாம்—பௌலோமியில் (சசீதேவியில்); இந்ர:—இந்திரன்; ஆதத்த—பெற்றார்; த்ரீன்—மூன்று; புத்ரான்—மகன்களை: இதி—என்று; ந:—நம்மால்; ஸ்ருதம்—கேட்கப்பட்டது; ஜயந்தம்—ஜயந்தன்; ரிஷபம்—ரிஷபர்; தாத—அரசே; த்ருதீயம்—மூன்று; மீடுஷம்—மீடுஷன்; ப்ரபு:—பிரபு.

பரீட்சித்து மகாராஜனே, சுவர்க்க ராஜனும், அதிதியின் பதினொன்றாவது மகனுமான இந்திரன், தன் மனைவி பௌலோமியின் கர்பத்தில் ஜயந்தன், ரிஷபன், மீடுஷன் என்ற மூன்று மகன்களைப் பெற்றார் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

பதம் 6.18.8
உருக்ரமஸ்ய தேவஸ்ய மாயா-வாமன-ரூபிண:
கீர்த்தெள பத்ன்யாம் ப்ருஹச்லோகஸ் தஸ்யாஸன் ஸௌபகாதய:

உருக்ரமஸ்ய—உருக்ரமரின்; தேவஸ்ய—பகவான்; மாயா—அவரது அந்தரங்க சக்தியால்; வாமன-ரூபிண:—ஒரு குள்ள ரூபத்தைப் பெற்று; கீர்த்தௌ—கீர்த்தியிடம்; பத்ன்யாம்—அவரது மனைவியான; ப்ருஹச்லோக:—பிருஹத்ஸ்லோகர்; தஸ்ய—அவருக்கு; ஆஸன்—இருந்தனர்; ஸௌபக-ஆதய:—சௌபகர் முதலான மகன்கள்.

பலவித சக்திகளை உடையவரான பரமபுருஷர், தமது சுய சக்தியினால், குள்ளமான ஒரு ரூபத்தில் உருக்ரமராக, அதிதியின் பன்னிரண்டாவது மகனாகத் தோன்றினார். அவர் தமது மனைவியான கீர்த்தியின் கர்பத்தில் பிருஹத்ஸ்லோகர் என்ற ஒரு மகனைப் பெற்றார். பிருஹதஸ்லோகருக்கு செளபகர் முதலான பல மகன்கள் இருந்தனர்.

பதம் 6.18.9
தத்-கர்ம-குண-வீர்யாணி கஸ்யபஸ்ய மஹாத்மன:
பஸ்சாத் வக்ஷ்யாமஹே ‘தித்யாம் யதைவாவததார ஹ

தத்—அவருடைய; கர்ம—செயல்களையும்; குண—குணங்களையும்; வீர்யாணி—சக்தியையும்; கஸ்யபஸ்ய—கஸ்யபரின் மகனான; மஹா-ஆத்மன:—சிறந்த ஆத்மாவான; பஸ்சாத்—பிறகு; வக்ஷ்யாமஹே—நான் விவரிப்பேன்; அதித்யாம்—அதிதியிடத்தில்; யதா—எவ்வாறு; ஏவ—நிச்சயமாக; அவததார—அவதரித்தார் என்பதை; ஹ—உண்மையில்.

பிறகு (ஸ்ரீமத் பாகவதத்தின் எட்டாவது காண்டத்தில்), உருக்ரமரான பகவான் வாமனதேவர் எவ்வாறு சிறந்த முனிவரான கஸ்யபரின் மகனாகத் தோன்றி, மூன்றடிகளால் மூவுலகங்களையும் அளந்தார் என்பதை நான் விவரிப்பேன். அவர் புரிந்த அசாதாரணமான செயல்களையும், அவரது குணங்களையும், அவரது சக்தியையும், எப்படி அதிதியின் கர்பத்திலிருந்து அவர் பிறந்தார் என்பதையும் கூட நான் விவரிப்பேன்.

பதம் 6.18.10
அத கஸ்யப-தாயாதான் தைதேயான் கீர்த்தயாமி தே
யத்ர பாகவத: ஸ்ரீமான் ப்ரஹ்ராதோ பலிர் ஏவ ச

அத—இப்பொழுது; கஸ்யப-தாயாதான்—கஸ்யபரின் மகன்களை; தைதேயான்—திதியிலிருந்து பிறந்த; கீர்த்தயாமி—நான் விவரிக்கப்போகிறேன்; தே—உமக்கு; யத்ர—எங்கு; பாகவத:—சிறந்த பக்தரான; ஸ்ரீ-மான்—புகழ்பெற்ற; ப்ரஹ்ராத:—பிரகலாதரை; பலி:—பலியை; ஏவ—நிச்சயமாக; ச—கூட.

இப்பொழுது, கஸ்யபரால் பெறப்பட்டு அசுரர்களாக மாறிய திதியின் மகன்களைப் பற்றி நான் விவரிக்கப்போகிறேன். இந்த அசுர குடும்பத்தில் சிறந்த பக்தரான பிரகலாத மகாராஜன் தோன்றினார். அதே குடும்பத்தில் பலி மகாராஜனும் தோன்றினார். அசுரர்கள் திதியின் கர்பத்திலிருந்து பிறந்தவர்கள் என்பதால், தைத்தியர்கள் என்று அறியப்படுகின்றனர்.

பதம் 6.18.11
திதேர் த்வாவ் ஏவ தாயாதெள தைத்ய-தானவத-வந்திதௌ ஹிரண்யகசிபுர் நாம ஹிரண்யக்ஷஸ் ச கீர்த்திதௌ

திதே:—திதியின்; த்வௌ—இரண்டு; ஏவ—நிச்சயமாக; தாயாதௌ—மகன்கள்; தைத்ய-தானவ—தைத்திய, தானவர்களால்; வந்திதெள—பூஜிக்கப்பட்டனர்; ஹிரண்யகசிபு:—இரண்யகசிபு; நாம—என்ற பெயருடைய; ஹிரண்யாக்ஷ:—இரண்யாக்ஷன்; ச—கூட; கீர்த்திதௌ—அறியப்பட்டனர்.

முதலில் திதியின் கர்பத்திலிருந்து இரண்யகசிபு, இரண்யாக்ஷன் என்ற இரு மகன்கள் பிறந்தனர். மிகவும் சக்திசாலிகளான அவ்விருவரும் தைத்தியர்களாலும், தானவர்களாலும் பூஜிக்கப்பட்டனர்.

பதங்கள் 6.18.12 – 6.18.13
ஹிரண்யகசிபோர் பார்யா கயாதுர் நாம் தானவீ
ஜம்பஸ்ய தனயா ஸாது ஸுஷுவே சதுர: ஸுதான்

ஸம்ஹ்ராதம் ப்ராக் அனுஹ்ராதம் ஹ்ராதம் ப்ரஹ்ராதம ஏவ ச
தத்-ஸ்வஸா ஸிம்ஹிகா நாம ராஹும் விப்ரசிதோ ‘க்ரஹீத்

ஹிரண்யகிசிபோ:—இரண்யகசிபுவின்; பார்யா—மனைவி; கயாது:—கயாது; நாம—என்ற பெயருடைய; தானாவீ—தனுவின் வம்சத்தவளும்; ஜம்பஸ்ய—ஜம்பனின்; தனயா—மகளுமாவாள்; ஸா—அவள்; து—உண்மையில்; ஸுஷுவே—பெற்றாள்; சதுர:—நான்கு; சுதான்—மகன்களை; ஸம்ஹ்ராதம்—சம்ஹலாதன்; ப்ராக்—முதலில்; அனுஹ்ராதம்—அனுஹலாதன்; ஹ்ராதம்—ஹலாதன்; ப்ரஹ்ராதம்—பிரகலாதன்; ஏவ—கூட; ச—மேலும்; தத்-ஸ்வஸா—அவனுடைய சகோதரி; ஸிம்ஹிகா—சிம்ஹிகா; நாம—என்ற பெயருடைய; ராஹும்—ராகு; விப்ரசித:—விப்ரசித்திடமிருந்து; அக்ரஹீத்—பெற்றாள்.

இரண்யகசிபுவின் மனைவி கயாது எனப்பட்டாள். அவள் ஜம்பனின் மகளும், தனுவின் வம்சத்தவளுமாவாள். அவள் வரிசையாக சம்ஹலாதன், அனுஹலாதன், ஹலாதன் மற்றும் பிரகலாதன் என்ற நான்கு மகன்களைப் பெற்றாள். இந்நால்வரின் சகோதரி சிம்ஹிகா எனப்பட்டாள். அவள் விப்ரசித் என்ற அசுரனை மணந்து, ராகு என்ற மற்றொரு அசுரனைப் பெற்றாள்.

பதம் 6.18.14
சிரோ ‘ஹராத் யஸ்ய ஹரிஸ் சக்ரேண பிபதோ ‘ம்ருதம்
ஸம்ஹ்ராதஸ்ய க்ருதிர் பார்யா-ஸூத பஞ்சஜனம் தத:

சிர:—தலையை; அஹரத்—வெட்டினார்; யஸ்ய—யாருடைய; ஹரி:—ஹரி; சக்ரேண—சக்கரத்தால்; பிபத:—குடித்த; அம்ருதம்—அமிர்தத்தை; ஸம்ஹ்ராதஸ்ய—சம்ஹலாதனின்; க்ருதி:—கிருதி; பார்யா—மனைவியான; அஸூத—பெற்றாள்; பஞ்சஜனம்—பஞ்சஜனனை; தத:—அவனிடமிருந்து.

ராகு மாறுவேடத்தில், தேவர்களுக்கிடையில் அமிர்தத்தைப் பருகிக் கொண்டிருக்கும் பொழுது, பரமபுருஷர் அவனது தலையைத் துண்டித்தார். சம்ஹலாதனின் மனைவியின் பெயர் கிருதி சம்ஹலாதனுடனான சேர்க்கையால் கிருதி பஞ்சஜனன் என்ற ஒரு மகனைப் பெற்றாள்.

பதம் 6.18.15
ஹ்ராதஸ்ய தமனிர் பார்யா-ஸூத வாதாபிம் இல்வளம்
யோ ‘கஸ்த்யாய து அதிதயே பேசே வாதாபிம் இல்வள:

ஹ்ராதஸ்ய—ஹலாதனின்; தமனி:—தமனி; பார்யா—மனைவி; அஸூத—பெற்றாள்; வாதாபிம்—வாதாபி; இல்வளம்—இல்வளன்; ய:—எவன்; அகஸ்த்யாய—அகஸ்தியருக்கு; து—ஆனால்; ஆதிதயே—அவனுடைய விருந்தாளியாகிய; பேசே—சமைத்தான்; வாதாபிம்—வாதாபியை; இல்வள:—இல்வளன்.

ஹலாதனுடைய மனைவியின் பெயர் தமனி. அவன் வாதாபி, இல்வளன் என்ற இரு மகன்களைப் பெற்றாள். அகஸ்திய முனிவர் இல்வளனின் விருந்தாளியாக வந்தபொழுது, இல்வளன் செம்மறிக்கடாவின் உருவிலிருந்த வாதாபியைச் சமைத்து அவருக்கு விருந்தளித்தான்.

பதம் 6.18.16
அனுஹ்ராதஸ்ய-ஸூர்யாயாம் பாஷ்கலோ மஹிஷஸ் ததா
விரோசனஸ் து ப்ராஹ்ராதிர் தேவ்யாம் தஸ்யாபவத் பலி:

அனுஹ்ராதஸ்ய—அனுஹலாதனின்; ஸூர்யாயாம்—சூரியாவின் மூலமாக; பாஷ்கல:—பாஷ்கலன்; மஹிஷ:—மஹிஷன்; ததா—கூட; விரோசன:—விரோசனன்; து—உண்மையில்; ப்ரஹ்ராதி:—பிரகலாதரின் மகன்; தேவ்யாம்—அவரது மனைவியின் மூலமாக; தஸ்ய—அவனுக்கு; அபவத்—இருந்தான்; பலி:—பலி.

அனுஹலாதனின் மனைவியின் பெயர் சூர்யா. அவள் பாஷ்கலன், மஹிஷன் என்ற இரு மகன்களைப் பெற்றாள். பிரகலாதருக்கு விரோசனன் என்ற ஒரு மகன் இருந்தான். அவனது மனைவி பலி மகாராஜனைப் பெற்றாள்.

பதம் 6.18.17
பாண-ஜ்யேஷ்டம் புத்ர-சதம் அசனாயாம் ததோ ‘பவத்
தஸ்யானுபாவம் ஸுஸ்லோக்யம் பஸ்சாத் ஏவாபிதாஸ்யதே

பாண-ஜ்யஷ்டம்—பாணனை மூத்தவனாகக் கொண்டு; புத்ர-சதம்—நூறு மகன்களை; அசனாயாம்—அசனாவின் மூலமாக; தத:—அவரிடமிருந்து; அபவத்—இருந்தனர்; தஸ்ய—அவருடைய; அனுபாவம்—நடத்தை; ஸு—ஸ்லோக்யம்—புகழத்தக்க; பஸ்சாத்—பிறகு; ஏவ—நிச்சயமாக; அபிதாஸ்யதே—விவரிக்கப்படும்.

அதன்பிறகு, பலி மகாராஜன் அசனாவின் கர்பத்தில் நூறு மகன்களைப் பெற்றான். இந்த நூறு மகன்களுள் பாணன் மூத்தவனாவான். பலி மகாராஜனின் புகழுக்குரிய செயல்கள் பிறகு (எட்டாவது காண்டத்தில்) விவரிக்கப்படும்.

பதம் 6.18.18
பாண ஆராத்ய கிரிசம் லேபே தத்-கண-முக்யதாம்
யத்-பார்ஸ்வே பகவான் ஆஸ்தே ஹி அத்யாபி புர-பாலக:

பாண:—பாணன்; ஆராத்ய—வழிபட்டு; கிரிசம்—சிவபெருமானை; லேபே—அடைந்தான்; தத்—அவருடைய (சிவபெருமானின்); கண-முக்யதாம்—கணங்களுள் முக்கியமானவனாக; யத்-பார்ஸ்வே—யாருக்குப் பக்கத்தில்; பகவான்—சிவபெருமான்; ஆஸ்தே—இருக்கிறார்; ஹி—எதனால்; அத்ய—இப்பொழுது; அபி—கூட; புர-பாலக:—நகரத்தைக் காப்பவர்.

பாணன் சிவபெருமானுடைய சிறந்த உபாசகன் என்பதால், அவன் புகழ்பெற்ற சில கணங்களுள் ஒருவனானான். இப்பொழுது கூட, சிவபெருமான் பாணனின் பக்கத்திலேயே எப்பொழுதும் நின்றபடி அவனுடைய தலைநகரைக் காக்கிறார்.

பதம் 6.18.19
மருதஸ் ச திதே: புத்ராஸ் சத்வாரிம்சன் நவாதிகா:
த ஆஸன் அப்ரஜா: ஸர்வே நீதா இந்ரேண ஸாத்மதாம்

மருத:—மருக்கள்; ச—மற்றும்; திதே:—திதியின்; புத்ரா:—மகன்கள்; சத்வாரிம்சத்—நாற்பது; நவ-அதிகா:—ஒன்பது அதிகமான; தே—அவர்கள்; ஆசன்—இருந்தனர்; அப்ரஜா:—மகன்கள் இல்லாதவர்களான; ஸர்வே—எல்லோரும்; நீதா:—கொண்டுவரப்பட்டனர்; இந்ரேண—இந்திரனால்; ஸ-ஆத்மதாம்—தேவர்களின் அந்தஸ்துக்கு.

நாற்பத்தொன்பது மருத்தேவர்கள் கூட திதியின் கர்பத்திலிருந்து பிறந்தனர். அவர்களுள் எவருக்கும் மகன்களில்லை. அவர்கள் திதிக்குப் பிறந்தவர்கள் என்றாலும், இந்திரன் அவர்களுக்கு தேவர்களின் அந்தஸ்தை அளித்தார்.

பதம் 6.18.20
ஸ்ரீ-ராஜோவாச
கதம் த ஆஸுரம் பாவம் அபோஹ்யௌத்பத்திகம் குரோ
இந்ரேண ப்ராபிதா: ஸாத்ம்யம் கிம் தத் ஸாது க்ருதம் ஹி தை:

ஸ்ரீ-ராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் கூறினார்; கதம்—ஏன்; தே—அவர்கள்; ஆசுரம்—அசுர; பாவம்—மனோபாவத்தை; அபோஹ்யம்—விட்டுவிட்டு; ஒளத்பத்திகம்—பிறப்பின் காரணத்தால்; குரோ—பிரபுவே; இந்ரேண—இந்திரனால்; ப்ராபிதா:—மாற்றப்பட்டனர்; ஸ-ஆத்ம்யம்—தேவர்களான; கிம்—ஒருவேளை; தத்—ஆகவே; ஸாது—புண்ணிய செயல்கள்; க்ருதம்—செய்யப்பட்ட; ஹி—உண்மையில்; தை:—அவர்களால்.

பரீட்சித்து மகாராஜன் வினவினார்: பிரபுவே, நாற்பத்தொன்பது மருத்களும் அவர்களது பிறப்பின் காரணத்தால், அசுர மனப்பான்மை உடையவர்களாக இருந்திருக்க வேண்டும். சுவர்க்க ராஜனான இந்திரன் ஏன் அவர்களைத் தேவர்களாக மாற்றினார்? அதற்காக அவர்கள் செய்த புண்ணிய கருமம் என்ன?

பதம் 6.18.21
இமே ஸ்ரத்தததே ப்ரஹ்மன் ரிஷயோ ஹி மயா ஸஹ
பரிக்ஞானாய பகவம்ஸ் தன் நோ வ்யாக்யாதும் அர்ஹஸி

இமே—இவர்கள்; ஸ்ரத்தததே—ஆர்வமாக உள்ளோம்; ப்ரஹ்மன்—பிராமணரே; ரிஷய:—முனிவர்கள்; ஹி—நிச்சயமாக; மயா ஸஹ—என்னுடன்; பரிக்ஞானாய—அறிய; பகவன்—சிறந்த ஆத்மாவே; தத்—ஆகவே; ந:—எங்களுக்கு; வ்யாக்யாதும் அர்ஹஸி—விளக்கியருளுங்கள்.

அன்புள்ள பிராமணரே நானும் என்னுடன் இங்குள்ள எல்லா பிராமணர்களும் இதைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறோம். ஆகவே, சிறந்த ஆத்மாவே, இதன் காரணத்தை எங்களுக்கு விளக்கியருள வேண்டும்.

பதம் 6.18.22
ஸ்ரீ-ஸூத உவாச
தத் விஷ்ணுராதஸ்ய ஸ பாதராயணிர்
வசோ நிசம்யாத்ருதம் அல்பம் அர்த்தவத்
ஸபாஜயன் ஸன் நிப்ருதேன சேதஸா
ஜகாத ஸத்ராயண ஸர்வ-தர்சன:

ஸ்ரீ-ஸூத: உவாச—ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; தத்—அந்த; விஷ்ணுராதஸ்ய—பரீட்சித்து மகாராஜனின்; ஸ:—அவர்; பாதராயணி:—சுகதேவ கோஸ்வாமி; வச:—வார்த்தைகளை; நிசம்ய—கேட்டு; ஆத்ருதம்—மரியாதையான; அல்பம்—சுருக்கமான; அர்த்த-வத்—அர்த்த புஷ்டியுள்ள; ஸபாஜயன் ஸன்—புகழ்ந்து; நிப்ருதேன சேதஸா—பெரு மகிழ்ச்சியுடன்; ஜகாத—பதிலளித்தார்; ஸத்ராயண—செளகரே; ஸர்வ-தர்சன:—எல்லாம் அறிந்தவரான.

ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: மாமுனிவர் சௌனகரே, கேட்கத் தகுந்த முக்கிய விஷயங்களைப் பற்றி பரீட்சித்து மகாராஜன் மரியாதையுடனும், சுருக்கமாகவும், பேசியதைக் கேட்டு, எல்லாம் அறிந்த சுகதேவ கோஸ்வாமி, பெருமகிழ்ச்சியுடன் அவரது முயற்சியைப் புகழ்ந்து பின்வருமாறு பதிலளித்தார்.

பதம் 6.18.23
ஸ்ரீ-சுக உவாச
ஹத-புத்ரா திதி: சக்ர-பார்ஷ்ணி-க்ராஹேண விஷ்ணுனா
மன்யுனா சோக-தீப்தேன ஜ்வலந்தீ பர்யசிந்தயத்

ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஹத-புத்ரா—தன் புத்திரர்களை இழந்த; திதி:—திதி; சக்ர-பார்ஷ்ணி-க்ராஹேண—இந்திரனுக்கு உதவிய; விஷ்ணுனா—பகவான் விஷ்ணுவால்; மன்யுனா—கோபத்துடன்; சோக-தீப்தேன—சோகத்தினால் கிளறப்பட்டு; ஜ்வலந்தீ—கொழுந்து விட்டெரியும்; பர்யுசிந்தயத்—சிந்திக்கலானாள்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இந்திரனுக்கு உதவும் பொருட்டு, பகவான் விஷ்ணு, இரு சகோதரர்களான இரண்யாக்ஷனையும், இரண்யகசிபுவையும் கொன்றார். அவர்கள் கொல்லப்பட்டு சோகத்தினால் உண்டான கொழுந்து விட்டெரியும் கோபத்துடன் திதி பின்வருமாறு சிந்திக்கலானாள்.

பதம் 6.18.24
கதா நு ப்ராத்ரு-ஹந்தாரம் இந்ரியாராமம் உல்பணம்
அக்லின்ன-ஹ்ருதயம் பாபம் காதயித்வா சயே ஸுகம்

கதா—எப்பொழுது; நு—உண்மையில்; ப்ராத்ரு-ஹந்தாரம்—சகோதரர்களைக் கொன்றவனை; இந்ரிய-ஆராமம்—புலன் நுகர்வில் மிகவும் பிரியமுள்ளவனும்; உல்பணம்—கொடியவனும்; அக்லின்ன-ஹ்ருதயம்—நெஞ்சில் ஈரமற்றவனும்; பாபம்—பாவியுமான; காதயித்வா—கொல்லும்படி செய்து; சயே—நான் படுப்பேன்; ஸுகம்—சுகமாக.

பகவான் விஷ்ணுவின் மூலமாக, இரு சகோதர்களான இரண்யாக்ஷனையும், இரண்யகசிபுவையும் கொன்றவனும், புலன்நுகர்வில் உழல்பவனும், கொடியவனும், நெஞ்சில் ஈரமில்லாதவனும், பாவியுமான இந்திரனை மடியச் செய்து நான் எப்பொழுது சுகமாகப் படுப்பேன்?

பதம் 6.18.25
க்ருமி-விட்-பஸ்ம-ஸம்க்ஞாஸீத் யஸ்யேசாபிஹிதஸ்ய ச
பூத-த்ருக் தத்-க்ருதே ஸ்வார்த்தம் கிம் வேத நிரயோ யத:

க்ருமி—புழுக்கள்; விட்—மலம்; பஸ்ம—சாம்பல்; ஸம்க்ஞா—பெயர்; ஆஸீத்—ஆகிறது; யஸ்ய—எதன் (உடலின்); ஈச-அபிஹிதஸ்ய—அரசனென்று அழைக்கப்பட்டாலும்; ச—கூட; பூத-த்ருக்—மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பவன்; தத்-க்ருதே—அதற்காக; ஸ்வ-அர்த்தம்—தன் சுய நலத்திற்காக; கிம் வேத—அவனுக்குத் தெரியுமா; நிரய:—நரகத்தில் உள்ள தண்டனை; யத:—எதிலிருந்து.

அரசர்களென்றும், பெரிய தலைவர்களென்றும் அறியப்படுபவர்களின் உடல்கள் இறந்த பிறகு, புழுக்களாகவோ, மலமாகவோ அல்லது சாம்பலாகவோ மாறுகின்றன. ஒருவன் இத்தகைய ஒருடலைப் பராமரிக்கும் பொருட்டு, மற்றவர்களிடம் பொறாமை கொண்டு அவர்களைக் கொல்வானாயின், அவன் வாழ்வின் உண்மையான நலனை அறிந்தவனாவானா? நிச்சயமாக அதை அவன் அறிய மாட்டான். ஏனெனில், பிற ஜீவராசிகளிடம் பொறாமை கொண்டவன் நரகத்திற்குச் செல்வது நிச்சயம்.

பதம் 6.18.26
ஆசாஸானஸ்ய தஸ்யேதம் த்ருவம் உன்னத்த-சேதஸ:
மத-சோஷக இந்ரஸ்ய பூயாத் யேன ஸுதோ ஹி மே

அசாஸானஸ்ய—என்றெண்ணி; தஸ்ய—அவனுக்கு; இதம்—இது (உடல்); த்ருவம்—நித்தியமானது; உன்னத்த-சேதஸ:—கட்டுப்பாடற்ற மனமுடைய; மத-சோஷக:—மதத்தைப் போக்கக்கூடிய; இந்தரஸ்ய—இந்திரனின்; பூயாத்—வருவானாக; யேன—எதனால்; ஸுத:—ஒரு மகன்; ஹி—நிச்சயமாக; மே—என்னுடைய.

திதி நினைத்தாள்: இந்திரன் தனது உடலை நித்தியமானது என்று கருதுவதால், கட்டுப்பாடில்லாதவனாக ஆகிவிட்டான். எனவே இந்திரனின் மதத்தை அகற்றக்கூடிய ஒரு மகனை நான் பெற விரும்புகிறேன். இதில் எனக்கு உதவக்கூடிய ஏதேனும் வழியை நான் மேற்கொண்டாக வேண்டும்.

பதங்கள் 6.18.27 – 6.18.28
இதி பாவேன ஸா பர்துர் ஆசசாராஸக்ருத் ப்ரியம்
சுஸ்ரூஷயானுராகேன ப்ரஸ்ரயேண தமேன ச

பக்த்யா பரமயா ராஜன் மனோக்ஞைர் வல்கு-பாஷிதை:
மனோ ஜக்ராஹ பாவ-க்ஞா ஸஸ்மிதாபாங்க-வீக்ஷணை:

இதி—இவ்வாறு; பாவேன—அந்த நோக்கத்துடன்; ஸா—அவள்; பர்து:—கணவனின்; ஆசசார—செய்தாள்; ஆஸக்ருத்—இடையறாது; ப்ரியம்—பிரியமான செயல்களை; சுஸ்ரூஷயா—சேவையாலும்; அனுராகேண—அன்பினாலும்; ப்ரஸ்ரயேண—அடக்கத்தினாலும்; தமேன—புலனடக்கத்தாலும்; ச—கூட; பக்த்யா—பக்தியாலும்; பரமயா—சிறந்த; ராஜன்—அரசே; மனோக்ஞை:—கவர்ச்சியான; வல்கு-பாஷிதை:—இனிய சொற்களாலும்; மன:—அவரது மனதை; ஜக்ராஹ—தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாள்; பாவ-க்ஞ:—அவரது சுபாவத்தை அறிந்து; ஸ-ஸ்மித—புன்னகையுடன் கூடிய; அபாங்க-வீக்ஷணை:—பார்வைகளால்.

(இந்திரனைக் கொல்ல ஒரு மகனைப் பெறும் விருப்பத்துடன்) இவ்வாறு சிந்தித்த திதி, தனது இனிய நடத்தையினால் கஸ்யபரைத் திருப்திப்படுத்தும் வகையில் செயற்பட்டாள். அரசே, திதி கஸ்யபரின் உத்தரவுகளை அவர் விருப்பம் போல் எப்பொழுதும் மிகவும் விசுவாசத்துடன் நிறைவேற்றி வந்தாள். திதி சேவையினாலும், அன்பினாலும், அடக்கத்தினாலும், கட்டுப்பாட்டினாலும், கணவனை திருப்திப்படுத்தும் இனிய வார்த்தைகளாலும், புன்னகைகளாலும், பார்வைகளாலும் அவரது மனதைக் கவர்ந்து, அவரைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தாள்.

பதம் 6.18.29
ஏவம் ஸ்த்ரியா ஜடீபூதோ வித்வான் அபி மனோக்ஞயா
பாடம் இதி ஆஹ விவசோ ந தச் சித்ரம் ஹி யோஷிதி

ஏவம்—இவ்வாறு; ஸ்த்ரியா—அந்த பெண்ணால்; ஜடீபூத:—மயக்கப்பட்டு; வித்வான்—மிகவும் கற்றறிந்தவராகவும்; அபி—இருந்தபோதிலும்; மனோக்ஞயா—சிறந்த நிபுணராகவும்; பாடம்—ஆம்; இதி—என்று; ஆஹ—கூறினார்; விவச:—அவளது கட்டுப்பாட்டின் கீழ்; ந—இல்லை; தத்—அதை; சித்ரம்—ஆச்சரியமானது; ஹி—நிச்சயமாக; யோஷிதி—ஒரு பெண்ணின் விஷயத்தில்.

கஸ்யப முனிவர் கற்றறிந்த பண்டிதராக இருந்தும், அவர் திதியின் செயற்கையான நடத்தையினால் மயக்கப்பட்டு, அவளது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டார். எனவே அவளுடைய விருப்பங்களை நிறைவேற்றுவதாக அவளுக்கு உறுதியளித்தார். ஒரு கணவனின் இத்தகைய உறுதிமொழி சிறிதும் ஆச்சரியமானதல்ல.

பதம் 6.18.30
விலோக்யைகாந்த-பூதானி பூதானி ஆதௌ ப்ரஜாபதி:
ஸ்த்ரியம் சக்ரே ஸ்வ-தேஹார்தம் யயா பும்ஸாம் மதிர் ஹ்ருதா

விலோக்ய—கண்டு; ஏகாந்த-பூதானி—பற்றில்லாமல் இருப்பதை; பூதானி—ஜீவராசிகள்; ஆதெள—ஆரம்பத்தில்; ப்ரஜாபதி:—பிரம்ம தேவர்; ஸ்த்ரியம்—பெண்ணை; சக்ரே—படைத்தார்; ஸ்வ-தேஹ—அவனது உடலின்; அர்தம்—சரி பாதியான; யயா—யாரால்; பும்ஸாம்—மனிதர்களின்; மதி:—மனம்; ஹ்ருதா—அபகரிக்கப்பட்டது.

பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் தந்தையான பிரம்மதேவர், படைப்பின் துவக்கத்தில் அனைத்து ஜீவராசிகளும் பற்றில்லாமல் இருப்பதைக் கண்டார். ஜனத் தொகையை அதிகரிக்கும் பொருட்டு, பிறகு அவர், பெண்ணின் நடத்தை புருஷனின் மனதை அபகரிப்பதாக இருப்பதால், புருஷனுடைய உடலின் சரிபாதியிலிருந்து பெண்ணைப் படைத்தார்.

பதம் 6.18.31
ஏவம் கஸ்ரூஷிதஸ் தாத பகவான் கஸ்யப: ஸ்த்ரியா
ப்ரஹஸ்ய பரம-ப்ரீதோ திதிம் ஆஹபினந்ய ச

ஏவம்—இவ்வாறு; கஸ்ரூஷித:—சேவை செய்யப்பட்ட; தாத—பிரியமானவரே; பகவான்—சக்திவாய்ந்த; கஸ்யப:—கஸ்யபர்; ஸ்த்ரியா—அந்த பெண்ணால்; ப்ரஹஸ்ய—புன்னகை செய்து; பரம-ப்ரீத:—மிகவும் மகிழ்ந்து; திதிம்—திதியிடம்; ஆஹ—கூறினார்; அபிநந்ய—அங்கீகரித்து; ச—கூட.

பிரியமானவரே, மிகவும் சக்திவாய்ந்தவரான கஸ்யப முனிவர். தன் மனைவி திதியின் அன்பான நடத்தையினால் மிகவும் மகிழ்ந்து, புன்னகை செய்து, அவளிடம் பின்வருமாறு பேசலானார்.

பதம் 6.18.32
ஸ்ரீ-கஸ்யப உவாச
வரம் வரய வாமோரு ப்ரீதஸ் தே ‘ஹம் அனிந்திதே
ஸ்த்ரியா பர்தரி ஸுப்ரீதே க: காம இஹ சாகம:

ஸ்ரீ-கஸ்யப: உவாச—கஸ்யப முனிவர் கூறினார்; வரம்—வரத்தை; வரய—கேள்; வாமோரு—அழகிய பெண்ணே; ப்ரீத:—மகிழ்ந்தேன்; தே—உன்னிடம்; அஹம்—நான்; அநிந்திதே—குற்றம் காண முடியாத பெண்ணே; ஸ்த்ரியா:—பெண்ணுக்கு; பர்தரி—கணவன்; ஸு-ப்ரீதே—திருப்தியடையும் பொழுது; க:—எது; காம:—விருப்பம்; இஹ—இங்கு; ச—மேலும்; அகம்:—அடைவதற்குக் கடினமான.

கஸ்யப முனிவர் கூறினார்: அழகிய பெண்ணே, குற்றங்காண முடியாதவளே, உன்னுடைய நடத்தையால் நான் மிகவும் மகிழ்ந்தேன். எனவே வேண்டிய வரத்தை நீ கேட்கலாம். ஒரு கணவன் திருப்தியடைந்தால் அவனது மனைவியால் இவ்வுலகிலோ, அடுத்ததிலோ அடைவதற்குக் கடினமான ஆசை என்ன உள்ளது?

பதங்கள் 6.18.33 – 6.18.34
பதிர் ஏவ ஹி நாரீணம் தைவதம் பரமம் ஸ்ம்ருதம்
மானஸ: ஸர்வ-பூதானாம் வாஸுதேவ: ஸ்ரிய: பதி:

ஸ ஏவ தேவதா-லிங்கைர் நாம-ரூப-விகல்பிதை:
இஜ்யதே பகவான் பும்பி: ஸ்த்ரீபிஸ் ச பதி-ரூப-த்ருக்

பதி:—கணவன்; ஏவ—உண்மையில்; ஹி—நிச்சயமாக; நாரீணாம்—பெண்களின்; தைவதம்—தேவன்; பரமம்—உயர்ந்த; ஸ்ம்ருதம்—என்று கருதப்படுகிறான்; மானஸ:—இதயத்திலுள்ள; ஸ்ர்வ-பூதானாம்—எல்லா ஜீவராசிகளின்; வாஸுதேவ:—வாசுதேவர்; ஸ்ரிய:—ஸ்ரீ தேவியின்; பதி:—கணவர்; ஸ:—அவர்; ஏவ—நிச்சயமாக; தேவதா-லிங்கை:—தேவர்களின் ரூபங்களால்; நாம—பெயர்கள்; ரூப—ரூபங்கள்; விகல்பிதை:—அடையப்பட்ட; இஜ்யதே—வழிபடப்படுகிறார்; பகவான்—பரமபுருஷர்; பும்பி:—மக்களால்; ஸ்த்ரீபி:—பெண்களால்; ச—மற்றும்; பதி ரூப-த்ருக்—கணவனின் ரூபத்தில்.

ஒரு பெண்ணுக்குத் தன் கணவனே கண் கண்ட தெய்வமாவான். ஸ்ரீதேவியின் கணவரும், பகவான் வாசுதேவருமான பரமபுருஷர் எல்லோருடைய இதயங்களிலும் இருக்கிறார். அவர் தேவர்களின் பல்வேறு பெயர்கள் மற்றும் ரூபங்களின் மூலமாக கருமிகளால் வழிபடப்படுகிறார். அதுபோலவே, ஒரு பெண்ணின் வழிபாட்டுக்குரியவன் என்ற முறையில், ஒரு கணவன் பகவானைப் பிரதிநிதிக்கிறான்.

பதம் 6.18.35
தஸ்மாத் பதி-வ்ரதா நார்ய: ஸ்ரேயஸ்-காமா: ஸுமத்யமே
யஜந்தே ‘நன்ய-பாவேன பதிம் ஆத்மானம் ஈஸ்வரம்

தஸ்மாத்—எனவே; பதி-வ்ரதா:—பதிவிரதைகளான; நார்ய:—பெண்கள்; ஸ்ரேய-காமா:—நேர்மையுள்ள; ஸு-மத்யமே—மெல்லிய இடை படைத்தவளே; யஜந்தே—வழிபடுகின்றனர்; அநன்ய-பாவேன—பக்தியுடன்; பதிம்—கணவனை; ஆத்மானம்—பரமாத்மா; ஈஸ்வரம்—பரமபுருஷரின் பிரதிநிதி.

அன்பான மனைவியே, உனது இடை மெல்லியதாக இருப்பதால் உன்னுடைய உடல் மிகவும் அழகாக காணப்படுகிறது. நேர்மையுள்ள ஒரு பெண் பதிவிரதையாகவும், கணவனின் சொற்படி நடப்பவளாகவும் இருக்க வேண்டும். அவள் தன் கணவனை வாசுதேவரின் ஒரு பிரதிநிதியாக எண்ணி மிகவும் பக்தியுடன் அவரைப் பூஜிக்க வேண்டும்.

பதம் 6.18.36
ஸோ ‘ஹம் த்வயார்சிதோ பத்ரே ஈத்ருக்-பாவேன பக்தித:
தம் தே ஸம்பாதயே காமம் அஸதீனாம் ஸுதுர்லபம்

ஸ:—அப்படிப்பட்டவன்; அஹம்—நான்; த்வயா—உன்னால்; அர்சித:—பூஜிக்கப்பட்டேன்; பத்ரே—நற்குணமுள்ள பெண்ணே; ஈத்ருக்-பாவேன—இந்த விதத்தில்; பக்தித:—பக்தியுடன்; தம்—அந்த; தே—உன்னுடைய; ஸம்பாதயே—நிறைவேற்றுவேன்; காமம்—ஆசையை; அஸதீனாம்—பதிவிரதையல்லாத பெண்களுக்கு; ஸு-துர்லபம்—கிடைக்கக் கூடியதல்ல.

நற்குணமுள்ள என் மனைவியே, நீ என்னைப் பரமபுருஷரின் ஒரு பிரதிநிதியாகப் பாவித்து பக்தி சிரத்தையுடன் பூஜித்ததால், பதிவிரதையல்லாத மனைவிகளுக்குக் கிடைக்க முடியாத உன் விருப்பங்களை நிறைவேற்றி, உனக்கு நான் சன்மானம் அளிக்க போகிறேன்.

பதம் 6.18.37
திதிர் உவாச
வரதோ யதி மே ப்ஹ்மன் புத்ரம் இந்ர-ஹணம் வ்ருணே
அம்ருத்யும் ம்ருத-புத்ராஹம் யேன மே காதிதெள ஸுதெள

திதி: உவாச—திதி கூறினாள்; வர-த:—வரமளிப்பவரான; யதி—என்றால்; மே—எனக்கு; ப்ரஹ்மன்—சிறந்த ஆத்மாவே; புத்ரம்—ஒரு புத்திரனை; இந்ர-ஹணம்—இந்திரனை கொல்லக்கூடிய; வ்ருணே—நான் வேண்டுகிறேன்; அம்ருத்யும்—மரணமற்ற; ம்ருத-புத்ரா—யாருடைய மகன்கள் இறந்து விட்டனரோ; அஹம்—நான்; யேன—யாரால்; மே—எனது; காதிதெள—கொல்லப்படுவதற்குக் காரணமானவர்கள்; ஸுதௌ—இரு மகன்கள்.

திதி பதிலுரைத்தாள்: சிறந்த ஆத்மாவாகிய என் கணவரே, நான் என் மகன்களை இழந்து விட்டேன். தாங்கள் எனக்கு ஒரு வரம் கொடுக்க விரும்பினால், இந்திரனைக் கொல்லக்கூடிய மரணமற்ற ஒரு மகனை நான் வேண்டுகிறேன். ஏனெனில், இந்திரன் விஷ்ணுவின் உதவியுடன் என் இரு மகன்களான இரண்யாக்ஷனையும், இரண்யகசிபுவையும் கொன்று விட்டான்.

பதம் 6.18.38
நிசம்ய தத்-வசோ விப்ரோ விமனா: பர்யதப்யத
அஹோ அதர்ம: ஸுமஹான் அத்ய மே ஸமுபஸ்தித:

நிசம்ய—கேட்டு; தத்-வச:—அவளது வார்த்தைகளை; விப்ர:—அந்த பிராமணர்; விமனா:—துக்கப்பட்டு; பர்யதப்யத—புலம்பினார்; அஹோ—ஜயகோ; அதர்ம:—அதர்மம்; ஸு-மஹான்—மிகப் பெரிய; அத்ய—இன்று; மே—எனக்கு; ஸமுபஸ்தித:—வந்திருக்கிறதே.

திதியின் வேண்டுகோளைக் கேட்ட கஸ்யப முனிவர் மிகவும் துக்கப்பட்டு, “ஐயகோ, இப்பொழுது இந்திரனைக் கொல்லும் பாவச் செயலின் அபாயம் எனக்கு வந்திருக்கிறதே” என்று புலம்பினார்.

பதம் 6.18.39
அஹோ அர்த்தேந்ரியாராமோ யோஷின்-மய்யேஹ மாயயா
க்ருஹீத-சேதா: க்ருபண: பதிஷ்யே நரகே த்ருவம்

அஹோ—ஐயோ; அர்த்த-இந்ரிய-ஆராம:—பௌதிக சுகத்தில் மிகவும் பற்றுக் கொண்டு; யோஷித்-மய்யா—ஒரு பெண்ணின் உருவில்; இஹ—இங்கு; மாயயா—மாயா சக்தியால்; க்ருஹீத-சேதா:—என் மனம் வசீகரிக்கப்பட்டு; க்ருபண:—துர்பாக்கியசாலியான; பதிஷ்யே—நான் விழுவது; நரகே—நரகத்தில்; த்ருவம்—நிச்சயம்.

கஸ்யப முனிவர் எண்ணினார்: ஐயோ, நான் இப்பொழுது பெளதிக சுகத்தில் அதிக பற்றுக் கொண்டவனாக ஆகிவிட்டேன். இதைச் சாதகமாகக் கொண்டு, என் மனம், ஒரு பெண்ணின் (என் மனைவியின்) உருவிலுள்ள பரமபுருஷரின் மாயா சக்தியால் வசீகரிக்கப்பட்டது. ஆகவே துரதிர்ஷ்டசாலியான நான் நரகத்தை நோக்கிச் சரிவது நிச்சயம்.

பதம் 6.18.40
கோ ‘திக்ரமோ ‘நுவர்தந்த்யா: ஸ்வபாவம் இஹ யோஷித:
திங் மாம் பதாபுதம் ஸ்வார்தே யத் அஹம் து அஜிதேந்ரிய:

க:—எது; அதிக்ரம—குற்றம்; அனுவர்தந்த்யா:—பின்பற்றி, ஸ்வ-பாவம்—அவள் சுபாவம்; இஹ—இங்கு; யோஷித—பெண்ணின்; திக்—நிந்தனை; மாம்—எனக்கு; பத—ஐயோ; அபுதம்—பரிச்சயமில்லாதவன்; ஸ்வ-அர்தே—எனக்கு நன்மையளிப்பதில்; யத்—ஏனெனில்; அஹம்—நான்; து—நிச்சயமாக; அஜித-இந்ரிய—என் புலன்களைக் கட்டுப்படுத்த முடியாமல்.

என் மனைவியான இவள், தன் சுபாவத்திற்குத் தகுந்த உபாயத்தைப் பின்பற்றினாள். எனவே இவள் குற்றாஞ்சாட்டப்பட வேண்டியவள் அல்ல, ஆனால் நான் ஒரு ஆண். ஆகவே பழியெல்லாம் எனக்குத்தான்! என் புலன்களை என்னால் கட்டுப்படுத்த இயலாததால், எனக்கு எது நல்லது என்ற விஷயத்தில் நான் சிறிதும் பரிச்சயம் இல்லாதவனானேன்.

பதம் 6.18.41
சரத்-பத்மோத்ஸவம் வக்த்ரம் வசஸ் ச ஸ்வரணாம்ருதம்
ஹ்ருதயம் க்ஷுர-தாராபம் ஸ்த்ரீணாம் கோ வேத சேஷ்டிதம்

சரத்—இலையுதிர் காலத்தில்; பத்ம—தாமரை; உத்ஸவம்—மலரும்; வக்த்ரம்—முகம்; வச:—வார்த்தைகள்; ச—மேலும்; ஸ்வரண—செவிக்கு; அம்ருதம்—ஆனந்தத்தை அளித்து; ஹ்ருதயம்—இதயம்; க்ஷுர-தாரா—கத்தியின் முனை; ஆபம்—போல்; ஸ்த்ரீணாம்—பெண்களின்; க:—யார்; வேத—அறிவார்; சேஷ்டிதம்—செயல்களை.

ஒரு பெண்ணின் முகமானது, இலையுதிர் காலத்தில் மலரும் தாமரைபோல் கவர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கிறது. அவளது வார்த்தைகள் மிகவும் இனிமையாகவும், செவிக்கு இன்பமளிப்பவையாகவும் இருக்கின்றன. ஆனால் ஒரு பெண்ணின் இதயத்தை நாம் ஆராய்வோமானால், அது கத்தியின் முனைபோல் மிகவும் கூர்மையானது என்பதைப் புரிந்து கொள்வோம். இச்சூழ்நிலைகளில் ஒரு பெண்ணின் செயல்களை யாரால் புரிந்து கொள்ள இயலும்?

பதம் 6.18.42
ந ஹி கஸ்சித் ப்ரிய: ஸ்த்ரீணாம் அஞ்சஸா ஸ்வாசிஷாத்மனாம்
பதிம் புத்ரம் ப்ராதரம் வா க்னந்தி அர்த்தே காதயந்தி ச

ந—இல்லை; ஹி—நிச்சயமாக; கஸ்சித்—எவருமே; ப்ரிய:—பிரியமானவர்கள்; ஸ்த்ரீணாம்—பெண்களுக்கு; அஞ்சஸா—உண்மையில்; ஸ்வ-ஆசிஷா—அவர்களுடைய சுய நலத்திற்காக; ஆத்மனாம்—மிகவும் பிரியமானவர்; பதிம்—கணவனை; புத்ரம்—மகனை; ப்ராதரம்—சகோதரனை; வா—அல்லது; க்னந்தி—அவர்கள் கொன்றுவிடுவார்கள்; அர்த்தே—தங்கள் சுயநலத்திற்காக; காதயந்தி—கொல்லப்படும்படி செய்வார்கள்; ச—கூட.

பெண்கள் தங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, எல்லோரிடமும் மிகவும் பிரியமானவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களுக்குப் பிரியமானவர்கள் ஒருவருமில்லை. பெண்கள் அதிக பக்தி சிரத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டியவர்கள். ஆனால் தங்களுடைய சுய நலன்களுக்காக அவர்கள் தங்களுடைய கணவன்களையும், மகன்களையும், சகோதரர்களையும் கூட கொல்லவோ, அல்லது கொல்லப்படும்படி செய்யவோ தயங்கமாட்டார்கள்.

பதம் 6.18.43
ப்ரதிஸ்ருதம் ததாமீதி வசஸ் தன் ந ம்ருஷா பவேத்
வதம் நார்ஹதி சேந்ரோ ‘பி தத்ரேதம் உபகல்பதே

ப்ரதிஸ்ருதம்—வாக்களித்த; ததாமி—நான் கொடுப்பேன்; இதி—என்று; வச:—கூற்று; தத்—அந்த; ந—இல்லை; ம்ருஷா—பொய்; பவேத்—இருக்கலாம்; வதம்—கொல்வது; ந—இல்லை; அர்ஹதி—பொருத்தமாக இருக்கிறது; ச—மேலும்; இந்திர:—இந்திரன்; அபி—கூட; தத்ர—அந்த விஷயத்தில்; இதம்—இது; உபகல்பதே—பொருத்தமாக இருக்கிறது.

நான் அவளுக்கு ஒரு வரமளிப்பதாக வாக்களித்திருக்கிறேன். அதை என்னால் மீற முடியாது. ஆனால் இந்திரன் கொல்லப்படத்தகுந்தவரல்ல. இச்சூழ்நிலையில் நான் கொண்டிருக்கும் தீர்வு மிகவும் சரியானதாகும்.

பதம் 6.18.44
இதி ஸஞ்சிந்த்ய பகவான் மாரீச: குருநந்தன
உவாச கிஞ்சித் குபித ஆத்மானம் ச விகர்ஹயன்

இதி—இவ்வாறு; ஸஞ்சிந்த்ய—எண்ணி; பகவான்—மிகவும் சக்திவாய்ந்த; மாரீச:—கஸ்யப முனிவர்; குரு-நந்தன—குரு வம்சத்தவரே; உவாச—கூறினார்; கிஞ்சித்—சிறிது; குபித:—கோபமடைந்து; ஆத்மானம்—தன்னையே; ச—மேலும்; விகர்ஹயன்—நொந்து கொண்டார்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கஸ்யப முனிவர் இவ்வாறு சிந்தித்து, சிறிது கோபமடைந்தார். குரு வம்சத்தவரான பரீட்சித்து மகாராஜனே, அவர் தன்னையே நொந்து கொண்டு திதியிடம் பின்வருமாறு கூறலானார்.

பதம் 6.18.45
ஸ்ரீ-கஸ்யப உவாச
புத்ராஸ் தே பவிதா பத்ரே இந்ர-ஹாதேவ-பாந்தவ:
ஸம்வத்ஸரம் வரதம் இதம் யதி அக்ஞோ தாரயிஷ்யஸி

ஸ்ரீ-கஸ்யப: உவாச—கஸ்யப முனிவர் கூறினார்; புத்ர:—மகன்; தே—உன்னுடையவனாக; பவிதா—இருப்பான்; பத்ரே—நற்பண்புள்ளவளே; இந்ர-ஹா—இந்திரனைக் கொல்பவனாக, அல்லது இந்திரனைப் பின்பற்றுபவனாக; அதேவ-பாந்தவ:—அசுரர்களின் நண்பன் (அல்லது தேவ-பாந்தவ:—தேவர்களின் நண்பன்); ஸம்வத்ஸரம்—ஓராண்டு காலம்; வ்ரதம்—விரதத்தை; இதம்—இந்த; யதி—என்றால்; அஞ்ச:—முறையாக; தாரயிஷ்யஸி—நிறைவேற்றப் போகிறாய்.

கஸ்யப முனி கூறினார்: நற்குணப் பெண்ணே, இந்த விரதம் சம்பந்தமான என் உபதேசங்களைக் குறைந்தது ஓராண்டு காலத்திற்கு நீ பின்பற்றுவாயானால், உன்னால் இந்திரனைக் கொல்லக் கூடிய ஒரு மகனை நிச்சயமாகப் பெறமுடியும். ஆனால், வைஷ்ணவக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதெனும் இந்த விரதத்திலிருந்து நீ விலகுவாயானால், இந்திரனுக்குச் சாதகமான ஒரு மகனை நீ பெறுவாய்.

பதம் 6.18.46
திதிர் உவாச
தாரயிஷ்யே வ்ரதம் ப்ரஹ்மன் ப்ரூஹி கார்யாணி யானி மே
யானி சேஹ நிஷித்தானி ந வ்ரதம் க்னந்தி யானி உத

திதி: உவாச—திதி கூறினாள்; தாரயிஷ்யே—நான் ஏற்றுக் கொள்கிறேன்; வ்ரதம்—விரதத்தை; ப்ரஹ்மன்—பிராமணரே; ப்ரூஹி—தயவு செய்து கூறுங்கள்; கார்யாணி—செய்யப்பட வேண்டியது; யானி—எது; மே—எனக்கு; யானி—எது; ச—மற்றும்; இஹ—இங்கு; நிஷித்தானி—செய்யக்கூடாதது; ந—இல்லை; வ்ரதம்—விரதத்தை; க்னந்தி—உடைப்பது; யானி—எது; உத—கூட.

ததி பதிலுரைத்தாள்; பிராமணரே, நான் உங்களுடைய அறிவுரையை ஏற்று இந்த விரதத்தைப் பின்பற்றுகிறேன். நான் செய்ய வேண்டியது எது, செய்யக் கூடாதது எது, என் விரதத்தை முறியடிக்காதது எது என்பதையெல்லாம் இப்பொழுது எனக்கு தெளிவாக விவரிக்க வேண்டுகிறேன்.

பதம் 6.18.47
ஸ்ரீ-கஸ்யப உவாச
ந ஹிம்ஸ்யாத் பூத-ஜாதானி ந சபேன் நான்ருதம் வதேத்
ந சிந்யான் நக-ரோமாணி ந ஸ்ப்ருசேத் யத் அமங்கலம்

ஸ்ரீ-கஸ்யப: உவாச—கஸ்யப முனிவர் கூறினார்; ந ஹிம்ஸ்யாத்—இம்சிக்கக் கூடாது; பூத-ஜாதானி—ஜீவராசிகளை; ந சபேத்—சபிக்கக் கூடாது; ந—கூடாது; அன்ருதம்—பொய்; வதேத்—பேசவேண்டும்; ந சிந்யாத்—வெட்டக்கூடாது; நக-ரோமாணி—நகங்களையும், உரோமத்தையும்; ந ஸ்ப்ருசேத்—தொடக்கூடாது; யத்—எது; அமங்கலம்—அமங்கலமானதோ.

கஸ்யப முனிவர் கூறினார்: அன்பு மனைவியே, இவ்விரதத்தை அனுஷ்டிப்பதற்கு, யாரையும் இம்சிக்கக்கூடாது; யாரையும் சபிக்கக் கூடாது; பொய்யுரைக்கக்கூடாது; நகங்களையும் உரோமத்தையும் வெட்டக்கூடாது; எலும்பு, மண்டையோடு போன்ற அமங்கலப் பொருட்களைத் தொடக்கூடாது.

பதம் 6.18.48
நாப்ஸு ஸ்னாயான் ந குப்யேத ந ஸம்பாஷேத துர்ஜனை:
ந வஸுதாதெளத-வாஸ: ஸ்ரஜம் ச வித்ருதாம் க்வசித்

ந—கூடாது; அப்ஸு—நீரில்; ஸ்னாயத்—குளிக்க வேண்டும்; ந குப்யேத—கோபிக்கக்கூடாது; ந ஸம்பாஷேத—பேசக் கூடாது; துர்ஜனை:—துர்நடத்தை உள்ளவர்களோடு; ந வஸீத—அணியக் கூடாது; அதௌத-வாஸ:—சுத்தம் செய்யாத துணிமணிகளை; ஸ்ரஜம்—மலர்மாலையை; ச—மற்றும்; வித்ருதாம்—ஏற்கனவே அணியப்பட்ட; க்வசித்—ஒருபோதும்.

கஸ்யப முனி தொடர்ந்து கூறினார்: எனதன்புள்ள மனைவியே, நீரில் இறங்கி குளிக்க கூடாது; கோபித்தல் கூடாது; துர் நடத்தை உள்ளவர்களோடு பேசவோ அல்லது உறவாடவோ கூடாது; சுத்தம் செய்யாத துணிகளை அணியக் கூடாது; ஏற்கனவே அணியப்பட்ட மலர் மாலையை அணியக் கூடாது.

பதம் 6.18.49
நோச்சிஷ்டம் சண்டிகான்னம் ச ஸாமிஷம் வ்ருஷலாஹ்ருதம்
புஞ்ஜீதோதக்யயா த்ருஷ்டம் பிபேன் நாஞ்ஜலினா து அப:

ந—கூடாது; உச்சிஷ்டம்—ஒருவர் சாப்பிட்டு மிஞ்சிய உணவை; சண்டிகா-அன்னம்—காளி தேவிக்கு (சண்டிகைக்கு) படைக்கப்பட்டதும்; ச—மேலும்; ஸ-ஆமிஷம்—மாமிசம் கலந்துமான; வ்ருஷலா-ஆஹ்ருதம்—ஒரு சூத்திரனால் கொண்டுவரப்பட்டதை; புஞ்ஜீத—சாப்பிடக்கூடாது; உதக்யயா—மாதப்போக்குள்ள ஒரு பெண்ணால்; த்ருஷ்டம்—பார்க்கப்பட்டதை; பிபேத் ந—பருகக் கூடாது; அஞ்ஜலினா—கைகளினால் ஏந்தி; து—கூட; அப:—நீரை.

உண்டு மிஞ்சிய உணவை சாப்பிடக்கூடாது; காளி தேவிக்கு (துர்கைக்கு) படைக்கப்பட்டதை சாப்பிடக்கூடாது மாமிசத்தால் அல்லது மீனால் அசுத்தமடைந்த உணவை சாப்பிடக்கூடாது; ஒரு சூத்திரனால் கொண்டுவரப்பட்ட அல்லது தொடப்பட்ட எதையும் சாப்பிடக்கூடாது; மாதப் போக்குள்ள பெண்ணால் பார்க்கப்பட்ட எதையும் சாப்பிடக்கூடாது கைகளினால் ஏந்தி நீரைப் பருக்கூடாது.

பதம் 6.18.50
நோச்சிஷ்டாஸ்ப்ருஷ்ட-ஸலிலா ஸந்யாயாம் முக்த-மூர்தஜா
அனர்சிதாஸம்யத-வாக் நஸம்வீதா பஹிஸ் சரேத்

ந—கூடாது; உச்சிஷ்டா—உண்ட பின்; அஸ்ப்ருஷ்ட-ஸலிலா—கழுவாமலும்; ஸந்யாயாம்—பொழுது சாயும் நேரத்திலும்; முக்த-மூர்தஜா—அவிழ்ந்த கேசத்துடனும்; அனர்சிதா—ஆபரணம் இல்லாமலும்; அஸம்யத-வாக்—வாக்கை அடக்காமலும்; ந—கூடாது; அஸம்வீதா—மூடிக்கொள்ளாமலும்; பஹி:—வெளியில்; சரேத்—செல்ல வேண்டும்.

சாப்பிட்ட பிறகு, உனது வாயையும், கை கால்களையும் கழுவாமல் நீ வெளியில் செல்லக்கூடாது. பொழுது சாயும் நேரத்திலும், அவிழ்ந்த கேசத்துடனும், ஆபரணங்களால் நன்கு அலங்கரித்துக் கொள்ளாமலும், வாக்கை அடக்காமலும், உடலை நன்கு மறைத்துக் கொள்ளாமலும் நீ வெளியில் செல்லக் கூடாது.

பதம் 6.18.51
நாதௌத-பாதாப்ரயதா நார்த்ர-பாதா உதக்-சிரா:
சயீத நாபராங் நான்யைர் ந நக்னா ந ச ஸந்யயோ:

ந—கூடாது; அதௌத-பாதா—கால்களைக் கழுவாமலும்; அப்ரயதா—அசுத்தமாகவும்; ந—கூடாது; அர்த்ர-பாதா—ஈரக் கால்களுடனும்; உதக்-சிரா:—வடக்கில் தலைவைத்தோ; சயீத—படுக்க; ந—கூடாது; அபராக்—மேற்கில் தலைவைத்தோ; ந—கூடாது; அன்யை:—மற்ற பெண்களுடனோ; ந—கூடாது; நக்னா—நிர்வாணமாகவோ; ந—கூடாது; ச—மேலும்; ஸந்யயோ:—சூரிய உதயத்தின் போதோ அல்லது சூரிய அஸ்தமனத்தின் போதோ.

கால்களைக் கழுவாமலும், அசுத்தமாகவும், ஈரக் கால்களுடனும், வடக்கிலோ மேற்கிலோ தலை வைத்தும், நிர்வாணமாகவும், மற்ற பெண்களுடனும், சூரிய உதயத்தின் போதும், சூரிய அஸ்தமனத்தின் போதும் நீ சயனிக்கக் கூடாது.

பதம் 6.18.52
தெளத-வாஸா கசிர் நித்யம் ஸர்வ-மங்கல-ஸம்யுதா
பூஜயேத் ப்ராதராசாத் ப்ராக் கோ-விப்ராஞ் ஸ்ரியம் அச்யுதம்

தௌத-வாஸா—சுத்தமான ஆடையணிந்து; கசி:—பரீசுத்தமாகவும்; நித்யம்—எப்பொழுதும்; ஸர்வ-மங்கள—மங்களப் பொருட்களால்; ஸம்யுதா—அலங்கரிக்கப்பட்டும்; பூஜயேத்—ஒருவன் பூஜிக்க வேண்டும்; ப்ராத:-அசாத் ப்ராக்—காலையில் சாப்பிடுவதற்கு முன்; கோ-விப்ரான்—பசுக்களையும், பிராமணர்களையும்; ஸ்ரியம்—லஷ்மி தேவியையும், அச்யுதம்—பரம புருஷரையும்.

சுத்தமான ஆடையணிந்து, எப்பொழுதும் பரிசுத்தமாகவும், மஞ்சள், சந்தனம் முதலான மங்களப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு, காலையில் சாப்பிடுவதற்கு முன்பாக பசுக்களையும், பிராமணர்களையும், லக்ஷ்மி தேவியையும், பரமபுருஷரையும் பூஜிக்க வேண்டும்.

பதம் 6.18.53
ஸ்த்ரியோ வீரவதீஸ் சார்சேத் ஸ்ரக்-கந்த-பலி-மண்டனை:
பதிம் சார்ச்யோபதிஷ்டேத த்யாயேத் கோஷ்ட-கதம் ச தம்

ஸ்த்ரிய:—பெண்களை; வீர-வதீ:—(கணவன்களும், மகன்களும் உள்ள) சுமங்கலி; ச—மேலும்; அர்சேத்—அவள் பூஜிக்க வேண்டும்; ஸ்ரக்—மாலைகள்; கந்த—சந்தனம்; பலி—காணிக்கைகள்; மண்டனை:—மற்றும் ஆபரணங்களால்; பதிம்—கணவனை; ச—மேலும்; ஆர்ச்ய—வழிபட்டு; உபதிஷ்டேத—துதிக்க வேண்டும்; த்யாயேத்—தியானிக்க வேண்டும்; கோஷ்ட-கதம்—கருவில் இருப்பவராக; ச—கூட; தம்—அவரை.

இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் ஒரு பெண் சுமங்கலிப் பெண்களை மலர் மாலைகளாலும், சந்தனத்தாலும், ஆபரணங்களாலும், மற்ற பொருட்களாலும் பூஜிக்க வேண்டும். கர்பவதியான மனைவி தன் கணவனைத் துதித்து அவரை வழிபட வேண்டும். மேலும் தன் கணவனே கர்பத்தில் புகுந்திருப்பதாக எண்ணி அவரைத் தியானிக்க வேண்டும்.

பதம் 6.18.54
ஸம்வத்ஸரம் பும்ஸவனம் வ்ரதம் ஏதத் அவிப்லுதம்
தாரயிஷ்யஸி சேத் துப்யம் சக்ர-ஹா பவிதா ஸுத:

ஸம்வத்ஸரம்—ஓராண்டு காலத்திற்கு; பும்ஸவனம்—பும்ஸவனம் என்ற; வ்ரதம்—விரதத்தை; ஏதத்—இந்த; அவிப்லுதம்—தவறின்றி; தாரயிஷ்யஸி—நீ செய்வாய்; சேத்—என்றால்; துப்யம்—உனக்கு; சக்ர-ஹா—இந்திரனைக் கொல்லும்; பவிதா—உண்டாவான்; ஸுத:—ஒரு மகன்.

கஸ்யப முனிவர் தொடர்ந்து கூறினார்: பும்ஸவனம் என்ற இந்த விரதத்தைத் தவறுதலின்றி குறைந்தது ஒரு வருஷத்திற்கு நீ அனுஷ்டித்தால், உனக்கு இந்திரனைக் கொல்லக்கூடிய ஒரு மகன் பிறப்பான். ஆனால் இந்த விரத அனுஷ்டானத்தில் தவறு ஏற்படுமானால், உன் மகன் இந்திரனுக்கு நண்பனாகி விடுவான்.

பதம் 6.18.55
பாடம் இதி அப்யுபேத்யாத திதீ ராஜன் மஹா-மனா:
கஸ்யபாத் கர்பம் ஆதத்த வ்ரதம் சாஞ்ஜோ ததார ஸா

பாடம்—சரி; இதி—என்று; அப்யுபேத்ய—ஒப்புக் கொண்டு; அத—பிறகு; திதி:—திதி; ராஜன்—அரசே; மஹா-மனா:—மகிழ்ச்சியுடன்; கஸ்யபாத்—கஸ்யபரிடமிருந்து; கர்பம்—விந்துவை; ஆதத்த—பெற்று; வ்ரதம்—விரதத்தை; ச—மேலும்; அஞ்ஜ:—முறையாக; ததார—அனுஷ்டிக்கலானாள்; ஸா—அவள்.

பரீட்சித்து மகாராஜனே, கஸ்யபரின் மனைவியான திதி, “சரி, உங்களுடைய ஆலோசனைப்படியே அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன்” என்று கூறி, பும்ஸவனம் என்ற இப்புனிதச் சடங்கை அனுஷ்டிப்பதாக ஒப்புக்கொண்டாள். பெரு மகிழ்ச்சியுடன் கஸ்யபரிடமிருந்து விந்துவைப் பெற்று கர்பவதியான அவள், ஒழுங்காக அந்த விரதத்தை அனுஷ்டிக்கலானாள்.

பதம் 6.18.56
மாத்ரு-ஷ்வஸுர் அபிப்ராயம் இந்ர ஆஜ்ஞாய மானத சுஸ்ரூஷணேனாஸ்ரம-ஸ்தாம் திதிம் பர்யசரத் கவி:

மாத்ரு-ஸ்வஸு:—அவரது சிற்றன்னையின்; அபிப்ராயம்— நோக்கத்தை; இந்ர:—இந்திரன்; ஆஜ்ஞாய—அறிந்து; மான-த—அனைவருக்கும் மரியாதையளிக்கும் பரீட்சித்து மகாராஜனே; சுஸ்ரூஷணேன—பணிவிடை; ஆஸ்ரம-ஸ்தாம்—ஓர் ஆசிரமத்தில் வாழ்ந்துவந்த; திதிம்—திதிக்கு; பர்யசரத்—செய்தார்; கவி:—தன் சுய நலனை நினைவிற்கொண்டு.

அனைவருக்கும் மரியாதை அளிப்பவரான அரசே, திதியின் நோக்கத்தை அறிந்த இந்திரன், தனது சுய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளத் திட்டமிட்டார். அவர் தற்காப்பே இயற்கையின் முதல் சட்டம் என்ற நியாயத்தைப் பின்பற்றி, திதியின் விரதத்தை முறியடிக்க விரும்பினார். இவ்வாறாக, ஓர் ஆசிரமத்தில் வசித்துவந்த தன் சிற்றன்னையான திதியின் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

பதம் 6.18.57
நித்யம் வனாத் ஸுமனஸ: ஃபல-மூல-ஸமித்-குசான்
பத்ராங்குர-ம்ருதோ ‘பஸ் ச காலே கால உபாஹரத்

நித்யம்—தினமும்; வனாத்—காட்டிலிருந்து; ஸுமனஸ:—மலர்கள்; ஃபல—பழங்கள்; மூல—கிழங்குகள்; ஸமித்—யாகக் குச்சிகள்; குசான்—தர்ப்பைப் புல்; பத்ர—இலைகள்; அங்குர—முளைகள்; ம்ருத:—மண்; அப:—நீர்; ந—கூட; காலே காலே—சரியான நேரத்தில்; உபாஹரத்—கொண்டு வந்தார்.

இந்திரன் தினமும் பழங்கள், மலர்கள், கிழங்குகள், யாகக் குச்சிகள் ஆகியவற்றைக் காட்டிலிருந்து கொண்டு வந்தும், தர்பைப்புல், இலைகள், முளைகள், மண், நீர் ஆகியவற்றைச் சரியான நேரத்தில் கொண்டு வந்தும் தன் சிற்றனைக்குச் சேவை செய்யலானார்.

பதம் 6.18.58
ஏவம் தஸ்யா வ்ரத-ஸ்தாயா வ்ரத-ச்சித்ரம் ஹரிர் ந்ருப
ப்ரேப்ஸு: ப்ரயசரஜ் ஜிஹ்மோ ம்ருக-ஹேவ ம்ருகாக்ருதி:

ஏவம்—இவ்வாறு; தஸ்யா:—அவளுடைய; வ்ரத-ஸ்தாயா:—சிரத்தையுடன் விரதத்தைப் பின்பற்றிய; வ்ரத-சித்ரம்—விரத அனுஷ்டானத்தில் ஒரு குற்றத்தை; ஹரி:—இந்திரன்; ந்ருப—அரசே; ப்ரேப்ஸு:—கண்டுபிடிக்க விரும்பி; ப்ரயசரத்—சேவை செய்தார்; ஜிஹ்ம:—வஞ்சமாக; ம்ருக-ஹா—ஒரு வேடன்; இவ—போல்; ம்ருக-ஆக்ருதி:—ஒரு மானின் உருவில்.

பரீட்சித்து மகாராஜனே, ஒரு மானைப் பிடிக்க விரும்பும் வேடன், மானின் தோலால் உடலை மூடிக் கொண்டு, மானைப் போல் ஆகி, மானுக்குச் சேவை செய்கிறான். அதுபோலவே, இந்திரனும் திதியின் மகன்களிடம் மனதில் பொறாமை கொண்டிருந்தார் என்றாலும், வெளித் தோற்றத்தில் நட்புடையவர் போல், நம்பிக்கையூட்டும் வகையில் திதிக்கு சேவை செய்து வந்தார். திதியின் விரத அனுஷ்டானத்தில் ஏதேனும் குற்றத்தைக் கண்டு பிடித்ததும் அவளை வஞ்சித்து விட வேண்டும் என்பதே இந்திரனின் நோக்கம். தன்னைப்பற்றிய இரகசியம் வெளிப்பட்டுவிடாமல் இருப்பதற்காக மிகவும் கவனமாக அவளுக்கு அவர் சேவை செய்யலானார்.

பதம் 6.18.59
நாத்யகச்சத் வ்ரத-ச்சித்ரம் தத் பரோ ‘த மஹீ-பதே
சிந்தாம் தீவ்ராம் கத: சக்ர: கேன மே ஸ்யாச் சிவம் து இஹ

ந—இல்லை; அத்யகச்சத்—கண்டுபிடிக்க முடிந்தது; வ்ரத-சித்ரம்—விரத அனுஷ்டானத்தில் ஒரு குற்றத்தையும்; தத்-பர:—அதைச் செய்வதில்; அத—அதன்பிறகு; மஹீ-பதே—உலகின் தலைவரே; சிந்தாம்—கவலை; தீவ்ராம்—அதிக; கத:—அடைந்தார்; சக்ர:—இந்திரன்; கேன—எவ்வாறு; மே—எனது; ஸ்யாத்—இருக்க முடியும்; சிவம்—நலம்; து—பிறகு; இஹ—இங்கு.

உலகின் நாயகரே, அவளிடம் எந்த குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியாத இந்திரன், “எனக்கெவ்வாறு நன்மை ஏற்படக் கூடும்?” என்று எண்ணியவாறு, கவலையில் முழ்கினார்.

பதம் 6.18.60
ஏகதா ஸா து ஸந்யாயாம் உச்சிஷ்டா வ்ரத-கர்சிதா
அஸ்ப்ருஷ்ட-வாரி-அதௌதாங்ரி: ஸுஷ்வாப விதி-மோஹிதா

ஏகதா—ஒருசமயம்; ஸா—அவள்; து—ஆனால்; ஸந்யாயாம்—சந்தியா வேளையில்; உச்சிஷ்டா—சாப்பிட்ட பிறகு; வ்ரத—விரதத்தினால்; கர்சிதா—பலவீனமடைந்தும், மெலிந்தும்; அஸ்ப்ருஷ்ட—தொடாமல்; வாரி—நீரை; அதௌத—கழுவாமல்; அங்ரி:—கால்களை; ஸுஷ்வாப—உறங்கிவிட்டாள்; விதி—விதிவசமாக; மேஹிதா—மதிமயங்கி.

விரத அனுஷ்டானத்தை உறுதியாகப் பின்பற்றியதன் காரணத்தால், மெலிந்து பலவீனமடைந்திருந்த திதி ஒரு சமயம் சாப்பிட்ட பிறகு, துரதிர்ஷ்டவசமாக வாயையும், கை கால்களையும் கழுவாமல், சந்தியா வேளையில் உறங்கி விட்டாள்.

பதம் 6.18.61
லப்த்வா தத்-அந்தரம் சக்ரோ நித்ராபஹ்ருத-சேதஸ:
திதே: ப்ரவிஷ்ட உதரம் யோகேசோ யோக-மாயயா

லப்த்வா—கண்டுபிடித்து; தத்-அந்தரம்—அதன்பிறகு; சக்ர:—இந்திரன்; நித்ரா—உறக்கத்தினால்; அபஹ்ருத-சேதஸ:—உணர்விழந்த; திதே:—திதியின்; ப்ரவிஷ்ட:—புகுந்தார்; உதரம்—கர்பத்தினுள்; யோக-ஈச:—யோகேசுவரரான; யோக—யோக சித்திகளின்; மாயயா—சக்தியால்.

யோக சக்திகளையெல்லாம் (அணிமா, லகிமா போன்ற சித்திகளை) பெற்றிருந்த இந்திரன், அவளிடம் இந்த குற்றத்தைக் கண்டு பிடித்ததும், அவள் ஆழ்ந்த உறக்கத்தில் நினைவில்லாமல் இருந்த பொழுது, அவளது கர்பத்தினுள் புகுந்தார்.

பதம் 6.18.62
சகர்த்த ஸப்ததா கர்பம் வஜ்ரேண கனக-ப்ரபம்
ருதந்தம் ஸப்ததைகைகம் மா ரோதிர் இதி தான் புன:

சகர்த்த—வெட்டினார்; ஸப்த-தா—ஏழு துண்டுகளாக; கர்பம்—கருவை; வஜ்ரேண—வஜ்ராயுதத்தால்; கனக-ப்ரபம்—பொன் நிறமான; ருதந்தம்—அழுத; ஸப்த-தா—ஏழு துண்டுகளாக; ஏக-ஏகம்—ஒவ்வொன்றையும்; மா ரோதீ:—அழாதே; இதி—என்று; தான்—அவற்றை; புன:—மீண்டும்.

திதியின் கர்ப்பத்தினுள் புகுந்த இந்திரன், தனது வஜ்ராயுதத்தால் பொன்நிறமான கருவை ஏழு துண்டுகளாக வெட்டினார். ஏழு இடங்களில், ஏழு ஜீவன்கள் அழத்துவங்கின. அவைகளை, “அழ வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே அவை ஒவ்வொன்றையும் மீண்டும் ஏழு துண்டுகளாக வெட்டினார்.

பதம் 6.18.63
தம் ஊசு: பாட்யமானஸ்தே ஸர்வே ப்ராஞ்சலயோ ந்ருப
கிம் ந இந்ர ஜிகாம்ஸஸி ப்ராதரோ மருதஸ் தவ

தம்—அவரிடம்; ஊசு:—கூறினர்; பாட்யமானா:—துக்கமடைந்து; தே—அவர்கள்; ஸர்வே—எல்லோரும்; ப்ராஞ்ஜலய:—கூப்பிய கரங்களுடன்; ந்ருப—அரசே; கிம்—ஏன்; ந:—எங்களை; இந்திர—இந்திரனே; ஜிகாம்ஸஸி—கொல்ல விரும்புகிறீர்; ப்ராதர:—சகேதர்களான; மருத:—மருத்கள்; தவ—உமது.

அரசே, மிகவும் துக்கமடைந்த அவர்கள் கூப்பிய கரங்களுடன், “இந்திரனே, நாங்கள் உமது சகோதர்களான மருத்கள். எங்களை ஏன் கொல்ல முயற்சிக்கிறீர்கள்?” என்று கூறினர்.

பதம் 6.18.64
மா பைஷ்ட ப்ராதரோ மஹ்யம் பூயம் இதி ஆஹ கெளசிக:
அனன்ய-பாவான் பார்ஷதான் ஆத்மனோ மருதாம் கணான்

மா பைஷ்ட—அஞ்ச வேண்டாம்; ப்ராதர:—சகோதரர்கள்; மஹ்யம்—என்; பூயம்—நீங்கள்; இதி—இவ்வாறு; ஆஹ—கூறினார்; கெளசிக:—இந்திரன்; அனன்ய-பகவான்—அர்பணித்துக் கொண்ட; பார்ஷதான்—ஆதரவாளர்கள்; ஆத்மன:—அவருடைய; மருதாம் கணான்—மருத் கணங்கள்.

உண்மையில் அவர்கள் தன்னிடம் விசுவாசம் கொண்ட தனது ஆதரவாளர்கள் என்பதைக் கண்ட இந்திரன் அவர்களிடம், “நீங்களனைவரும் எனது சகோதர்களென்றால், இனிமேல் என்னிடம் அச்சம் கொள்வதற்கு எதுவுமில்லை” என்று கூறினார்.

பதம் 6.18.65
ந மமார திதேர் கர்ப: ஸ்ரீனிவாஸானு கம்பயா
பஹுதா குலிச-க்ஷுண்ணோ த்ரௌணி-அஸ்த்ரேண யதா பவான்

ந—இல்லை; மமார—மரணமடைய; திதே:—திதியின்; கர்ப:—கர்ப்பம்; ஸ்ரீனிவாஸ—லக்ஷ்மி தேவியின் வசிப்பிடமான பகவான் விஷ்ணுவின்; அனுகம்பயா—கருணையால்; பஹு-தா—பல துண்டுகளாக; குலிச—வஜ்ராயுதத்தால்; க்ஷுண்ண:—வெட்டிய; த்ரௌணி—அஸ்வத்தாமனின்; அஸ்த்ரேண—ஆயுதத்தால்; யதா—எவ்வாறு; பவான்—நீர்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரத்தினால் நீர் எரிக்கப்பட்ட பொழுது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உமது தாயின் கர்பத்தினுள் புகுந்து உம்மைக் காப்பாற்றினார். அதுபோலவே, ஒரு கரு இந்திரனின் வஜ்ராயுதத்தால் நாற்பத்தொன்பது துண்டுகளாக வெட்டப்பட்ட போதிலும், அவையனைத்தும் பரமபுருஷரின் கருணையால் காப்பாற்றப்பட்டன.

பதங்கள் 6.18.66 – 6.18.67
ஸக்ருத் இஷ்டவாதி-புருஷம் புருஷோ யாதி ஸாம்யதாம்
ஸம்வத்ஸரம் கிஞ்சித் ஊனம் தித்யா யத் ததாரிர் அர்சித:

ஸஜூர் இந்ரேண பஞ்சாசத் தேவாஸ் தே மருதோ ‘பவன்
வ்யபோஹ்ய மாத்ரு-தோஷம் தே ஹரிணா ஸோம-பா: க்ருதா:

ஸக்ருத்—ஒரு தடவை; இஷ்ட்வா—வழிபட்ட; ஆதி-புருஷம்—ஆதிபுருஷரை; புருஷ:—ஒருவன்; யாதி—செல்கிறான்; ஸம்யதாம்—பகவானுடைய அதே தேக அம்சங்களைப் பெற்று; ஸம்வத்ஸரம்—ஒரு வருடம்; கிஞ்சித் ஊனம்—சிறிதளவு குறைந்த; தித்யா—திதியால்; யத்—ஏனெனில்; ஹரி:—பகவான் ஸ்ரீ ஹரி; அர்சித:—பூஜிக்கப்பட்டார்; ஸஜூ:—உடன்; இந்ரேண—இந்திரன்; பஞ்சாசத்—ஐம்பது; தேவா:—தேவர்கள்; தே—அவர்கள்; மருத:—மருத்கள்; அபவன்—ஆயினர்; வ்யபோஹ்ய—அகற்றிவிட்டு; மாத்ரு-தோஷம்—தங்கள் தாயின் குற்றத்தை; தே—அவர்கள்; ஹரிணா—பகவான் ஸ்ரீ ஹரியால்; ஸோம-பா:—சோம-ரஸம் குடிப்பவர்களாக; க்ருதா:—செய்யப்பட்டனர்.

மூல முழுமுதற் கடவுளை ஒரே ஒரு தடவை வழிபட்டவன் கூட, ஆன்மீக உலகிற்கு உயர்த்தப்பட்டு, விஷ்ணுவின் அதே தேக அம்சங்களைப் பெறும் நன்மையை அடைகிறான். திதி கிட்டத்தட்ட ஓராண்டு காலத்திற்கு ஒரு சிறந்த விரதத்தை அனுஷ்டித்து பகவான் விஷ்ணுவை வழிபட்டாள். அவளது இத்தகைய ஆத்ம பலத்தினால் நாற்பத்தொன்பது மருத்கள் பிறந்தனர். அவ்வாறிருக்க, மருத்கள் திதியின் கர்பத்தில் பிறந்தும் பரமபுருஷரின் கருணையால் தேவர்களுக்குச் சமமானவர்கள் ஆனது எவ்வாறு ஆச்சரியமானதாகும்?

பதம் 6.18.68
திதிர் உத்தாய தத்ருசே குமாரான் அனல-ப்ரபான்
இந்ரேண ஸஹிதான் தேவீ பர்யதுஷ்யத் அனிந்திதா

திதி:—திதி; உத்தாய—எழுந்ததும்; தத்ருசே—கண்டாள்; குமாரான்—குழந்தைகளை; அனல-ப்ரபான்—நெருப்பைப் போல் பிரகாசமான; இந்ரேண ஸஹிதான்—இந்திரனுடன்; தேவீ—அந்த தேவி; பர்யுதுஷ்யத்—மகிழ்ச்சியடைந்தாள்; அனிந்திதா—தூய்மையடைந்தால்.

பரமபுருஷரை வழிபட்டதால் திதி முற்றிலும் தூய்மையடைந்தாள். படுக்கையிலிருந்து அவள் எழுந்ததும், இந்திரனுடன் நாற்பத்தொன்பது மகன்கள் இருப்பதைக் கண்டாள். இந்த நாற்பத்தொன்பது மகன்களும் நெருப்புபோல் பிரகாசமாகவும், இந்திரனுடன் நட்பு கொண்டவர்களாகவும் இருக்கக் கண்ட திதி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

பதம் 6.18.69
அதேந்ரம் ஆஹ தாதாஹம் ஆதித்யானாம் பயாவஹம்
அபத்யம் இச்சந்தி அசரம் வரதம் ஏதத் ஸுதுஷ்கரம்

அத—அதன்பிறகு; இந்ரம்—இந்திரனிடம்; ஆஹ—கூறினாள்; தாத—பிரிய மகனே; அஹம்—நான்; ஆதித்யானாம்—ஆதித்தியர்களுக்கு; பய-ஆவஹம்—பயமளிக்கும்; அபத்யம்—ஒரு மகனை; இச்சந்தீ—விரும்பி; அசரம்—அனுஷ்டித்தேன்; வ்ரதம்—விரதத்தை; ஏதத்—இந்த; ஸு-துஷ்கரம்—மிகக் கடினமான.

அதன்பிறகு திதி இந்திரனிடம் கூறினாள்: பிரிய மகனே, பன்னிரண்டு ஆதித்தியர்களான உங்களைக் கொல்லக்கூடிய ஒரு மகனைப் பெறுவதற்காகவே கடினமாக இந்த விரதத்தை நான் அனுஷ்டித்தேன்.

பதம் 6.18.70
ஏக: ஸங்கல்பித: புத்ர: ஸப்த ஸப்தாபவன் கதம்
யதி தே விதிதம் புத்ர ஸத்யம் கதய மா ம்ருஷா

ஏக:—ஒரு; ஸங்கல்பித:—வேண்டப்பட்டான்; புத்ர:—மகன்; ஸப்த ஸப்த—நாற்பத்தொன்பது பேர்; அபவன்—வந்திருப்பது; கதம்—எப்படி; யதி—என்றால்; தே—உன்னால்; விதிதம்—அறியப்பட்டது; புத்ர—மகனே; ஸத்யம்—உண்மையை; கதய—கூறு; மா—(பேச) வேண்டாம்; ம்ருஷா—பொய்களை.

நான் ஒரே ஒரு மகனைத்தான் வேண்டினேன். ஆனால் இப்பொழுது நாற்பத்தொன்பது பேர்கள் இருப்பதைப் பார்க்கிறேன். இது எவ்வாறு நிகழ்ந்தது? மகனே இந்திரா, உனக்குத் தெரியுமானால், என்னிடம் உண்மையைக் கூறு. பொய்யுரைக்க முயலாதே.

பதம் 6.18.71
இந்திர உவாச
அம்ப தே ‘ஹம் வ்யவஸிதம் உபதார்யாகதோ ‘ந்திகம்
லப்தாந்தரோ ‘ச்சிதம் கர்பம் அர்த்த-புத்திர் ந தர்ம-த்ருக்

இந்திர: உவாச—இந்திரன் கூறினார்; அம்ம—தாயே; தே—உங்களுடைய; அஹம்—நான்; வ்யவஸிதம்—விரதத்தை; உபதார்ய—அறிந்து; ஆகத:—வந்தேன்; அந்திகம்—அருகில்; லப்த—கண்டுபிடித்து; அந்தர:—ஒரு குற்றத்தை; அச்சிதம்—நான் வெட்டினேன்; கர்பம்—கருவை; அர்த்த-புத்தி:—சுயநலம் கொண்டு; ந—இல்லாது; தர்ம-த்ருக்—சமய நோக்குடையவனாக.

இந்திரன் பதிலளித்தார்: தாயே, நான் சுய நலத்தினால் குருடாக்கப்பட்ட காரணத்தினால், சமயப் பார்வையை இழந்தவனானேன். நீங்கள் ஆன்மீக வாழ்வை மேற்கொண்டு ஒரு மிகச் சிறந்த விரதத்தை அனுஷ்டிப்பதை அறிந்து, நான் உங்களிடம் ஏதேனும் ஒரு குற்றத்தைக் கண்டுபிடிக்க விரும்பினேன். அத்தகைய ஒரு குற்றத்தைக் கண்டுபிடித்ததும், நான் உங்களுடைய கர்பத்தினுள் புகுந்து, கருவைத் துண்டு துண்டாக வெட்டினேன்.

பதம் 6.18.72
க்ருத்தோ மே ஸப்ததா கர்ப ஆஸன் ஸப்த குமாரகா:
தே ‘பி சைகைகசோ வ்ருக்ணா: ஸப்ததா நாபி மம்ரிரே

க்ருத்த:—வெட்டப்பட்டு; மே—என்னால்; ஸ்ப்த-தா—ஏழாக; கர்ப:—கரு; ஆஸன்—ஆயிற்று; ஸப்த—ஏழு; குமாரகா:—குழந்தைகள்; தே—அவர்கள்; அபி—இருப்பினும்; ச—கூட; ஏக-ஏகஸ:—ஒவ்வொன்றும்; வ்ருக்ணா:—வெட்டப்பட்டு; ஸப்த-தா—ஏழாக; ந—இல்லை; அபி—இருந்தும்; மம்ரிரே—இறந்தனர்.

முதலில் நான் கர்பத்திலிருந்த குழந்தையை ஏழாக வெட்டினேன். அவை ஏழு குழந்தைகளாயின. பிறகு ஏழு குழந்தைகளில் ஒவ்வொன்றையும் மீண்டும் ஏழு ஏழு துண்டுகளாக வெட்டினேன். ஆனால் பரமபுருஷரின் கருணையால் அவர்களில் எவரும் இறக்கவில்லை.

பதம் 6.18.73
ததஸ் தத் பரமாஸ்சர்யம் வீக்ஷ்ய வ்யவஸிதம் மயா
மஹாபுருஷ-பூஜாயா: ஸித்தி: காபி ஆனுஷங்கிணீ

தத:—பிறகு; தத்—அது; பரம-ஆஸ்சர்யம்—மிகவும் ஆச்சரியம்; வீக்ஷ்ய—கண்டு; வ்யவஸிதம்—அது முடிவு செய்யப்பட்டது; மயா—என்னால்; மஹா-புருஷ—பகவான் விஷ்ணுவின்; பூஜாயா:—வழிபாட்டின்; ஸித்தி:—பலன்; காபி—சில; ஆனுஷங்கிணீ—இரண்டாந்தரமான.

அருமைத் தாயே, நாற்பத்தொன்பது மகன்களும் உயிரோடு இருந்ததைக் கண்டு உண்மையாகவே நான் ஆச்சரியமடைந்தேன். இது, பகவான் விஷ்ணுவை வழிபட்டு, அவருக்கு தினமும் நீங்கள் பக்தித் தொண்டு செய்து வந்ததன் இரண்டாந்தரமான பலன் என்ற முடிவுக்கு நான் வந்தேன்.

பதம் 6.18.74
ஆராதனம் பகவத ஈஹமானா நிராசிஷ:
யே து நேச்சந்தி அபி பரம் தே ஸ்வார்த்த-குசலா: ஸ்ம்ருதா:

ஆராதனம்—வழிபடுவதில்; பகவத:—பரமபுருஷரை; ஈஹமானா:—விருப்பம் கொண்டுள்ளவர்கள்; நிராசிஷ:—பௌதிக ஆசைகள் இல்லாமல்; யே—எவர்கள்; து—உண்மையில்; ந இச்சந்தி—விரும்புவதில்லை; அபி—கூட; பரம்—முக்தியை; தே—அவர்கள்; ஸ்வ-அர்த்த—சொந்த நலனில்; குசலா:—நிபுணர்கள்; ஸ்ம்ருதா:—என்று கருதப்படுகின்றனர்.

பரமபுருஷரை வழிபடுவதில் மட்டுமே ஈடுபாடு கொண்டுள்ளவர்கள், பகவானிடமிருந்து பெளதிகமான எதையும் விரும்புவதில்லை. அவர்கள் முக்தியைக்கூட விரும்புவதில்லை என்றாலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுடைய எல்லா ஆசைகளையும் நிறைவேற்றுகின்றார்.

பதம் 6.18.75
ஆராத்யாத்ம-ப்ரதம் தேவம் ஸ்வாத்மானம் ஜகத்-ஈஸ்வரம்
கோ வ்ருணீத குண-ஸ்பர்சம் புத: ஸ்யான் நரகே ‘பி யத்

ஆராத்ய—வழிபட்டபின்; ஆத்ம-ப்ரதம்—தன்னையே கொடுப்பவரான; தேவம்—பகவானை; ஸ்வ-ஆத்மானம்—மிகப் பிரியமானவை; ஜகத்-ஈஸ்வரம்—ஜகதீஸ்வரருமான; க:—யார்; வ்ருணீத—தேர்ந்தெடுப்பார்; குண-ஸ்பர்சம்—பெளதிக சுகத்தை; புத:—புத்திசாலி; ஸ்யாத்—இருக்கிறதோ; நரகே—நரகத்தில்; அபி—கூட; யத்—எது.

பரமபுருஷரின் ஒரு தொண்டனாவதே எல்லா நோக்கங்களுக்கும் முடிவான இலக்காகும். புத்திசாலியான ஒருவன், மிகப் பிரியமானவரும், தமது பக்தர்களுக்குத் தம்மையே கொடுப்பவருமான பகவானுக்கே சேவை செய்வானாயின், கிடைக்கக் கூடிய பெளதிக சுகத்தை அவனால் எவ்வாறு விரும்ப முடியும்?

பதம் 6.18.76
தத் இதம் மம தெளர்ஜன்யம் பாலிசஸ்ய மஹீயஸி
க்ஷந்தும் அர்ஹஸி மாதஸ்த்வம் திஷ்ட்யா கர்போ ம்ருதோத்தித:

தத்—அதை; இதம்—இந்த; மம—என்னுடைய; தெளர்ஜன்யம்—தீய செயலை; பாலிசஸ்ய—ஒரு முட்டாள்; மஹீயஸி—மாதருள் சிறந்தவளே; க்ஷந்தும் அர்ஹஸி—தயவு செய்து மன்னியுங்கள்; மாத:—தாயே; த்வம்—நீங்கள்; திஷ்ட்யா—அதிர்ஷ்டவசத்தால்; கர்ப:—கர்பத்திலிருந்த குழந்தை; ம்ருத—கொல்லப்பட்டு; உத்தித:—உயிர் பெற்றது.

தாயே, பெண்களுள் சிறந்தவளே, நான் ஒரு முட்டாள். நான் செய்த பிழைகளையெல்லாம் பொறுத்தருள வேண்டும். உங்களுடைய பக்தித் தொண்டினால், உங்களுடைய நாற்பத்தொன்பது மகன்களும் எந்த சேதமும் இல்லாமல் பிறந்துள்ளார். ஓர் எதிரியாக அவர்களை நான் கண்டதுண்டமாக வெட்டினேன். ஆனால் உங்களுடைய பக்தித் தொண்டின் காரணத்தால் அவர்கள் இறக்கவில்லை.

பதம் 6.18.77
ஸ்ரீ-சுக உவாச
இந்ரஸ் தயாப்யனுக்ஞாத: சுத்த-பாவேன துஷ்டயா
மருத்பி: ஸஹ தாம் நத்வா ஜகாம த்ரி-திவம் ப்ரபு:

ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இந்ர:—இந்திரன்; தயா—அவளால்; அப்யனுக்ஞாத:—அனுமதிக்கப்பட்டு; சுத்த-பாவேன—நன்னடத்தையால்; துஷ்டயா—திருப்தியடைந்தாள்; மருத்பி: ஸஹ—மருத்களுடன்; தாம்—அவளுக்கு; நத்வா—வணக்கம் செலுத்திவிட்டு; ஜகாம—சென்றார்; த்ரி-திவீம்—சுவர்க்க லோகங்களுக்கு; ப்ரபு:—அந்த பிரபு.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இந்திரனின் நன்னடத்தையால் திதி மிகவும் திருப்தியடைந்தாள். பிறகு இந்திரன் தனது சிற்றன்னைக்கு வணக்கம் செலுத்திவிட்டு, அவளது அனுமதியுடன், தன் சகோதரர்களான மருத்களுடன் சுவர்க்க லோகங்களுக்குச் சென்றார்.

பதம் 6.18.78
ஏவம் தே ஸர்வம் ஆக்யாதம் யன் மாம் த்வம் பரிப்ருச்சஸி
மங்கலம் மருதாம் ஜன்ம கிம் பூய: கதயாமி தே

ஏவம்—இவ்வாறு; தே—உமக்கு; ஸர்வம்—எல்லாவற்றையும்; ஆக்யாதம்—விவரித்தேன்; யத்—எதை; மாம்—என்னை; த்வம்—நீர்; பரிப்ருச்சஸி—கேட்டீரோ; மங்களம்—மங்களகரமான; மருதாம்—மருத்களின்; ஜன்ம—பிறப்பு; கிம்—எது; பூய:—மேலும்; கதயாமி—நான் கூறுகிறேன்; தே—உமக்கு.

பரீட்சித்து மகாராஜனே, உமது கேள்விக்கு, குறிப்பாக மருத்களைப் பற்றிய தூய, மங்களகரமான இந்த வர்ணனையைப் பற்றிய உமது கேள்விகளுக்கு என்னால் முடிந்தவரை நான் பதிலளித்தேன். இப்பொழுது நீர் தொடர்ந்து கேட்கலாம். நானும் தொடர்ந்து விவரிக்கிறேன்.


ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “தேவேந்திரனைக் கொல்வதெனும் திதியின் சபதம்” எனும் தலைப்பை கொண்ட பதினெட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare