அத்தியாயம் – 8
துருவ மகாராஜா வனம் செல்லுதல்
பதம் 4.8.1 : மைத்ரேய மாமுனிவர் கூறினார்: சனக மகாராசாவின் மிகச் சிறந்த நான்கு குமாரர்களும், மற்றும் நராதர், ரிபு, ஹம்ஸர், அருணி, யதி போன்ற பிரம்ம தேவனின் புதல்வர்களும் இல்லற வாழ்க்கை நீங்கி “ஊர்த்வ ரேதா” அல்லது தவறிழைக்காத பிரம்மச்சாரியம் எனப்படும் நைஷ்டிக பிரம்மச்சாரிகளாக வாழ்ந்தனர்.

பதம் 4.8.2 : பிரம்ம தேவனின் மற்றொரு புதல்வன் அதர்மம் ஆவான். அவன் மனைவியின் பெயர் மிருஷா. அவர்கள் இருவருக்கும் இரு அசுரர்கள் பிறந்தனர். ஒருவன் பெயர் தம்பம் அல்லது மோசடியாகும். மற்றொருவன் பெயர் மாயா அல்லது ஏமாற்று ஆகும். இவ்விரு அசுரர்களும் வாரிசுகள் ஏதும் இல்லாத நிர்ருதி என்னும் அசுரனால் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

பதம் 4.8.3 : மைத்ரேயர் விதுரரிடம் கூறினார்: ஓ மகாத்மா விதுரனே, தம்பவிற்கும் மாயாவிற்கும் பேராசையும், சூழ்ச்சியும் பிறந்தனர். அவர்கள் இணைப்பில் குரோதமும் (ஆத்திரம்) இம்சையும் (காழ்ப்பு) பிறந்தனர். இவர்கள் இருவர் இணைந்ததில் கலியும் அவன் சகோதரி துருக்தியும் (கடுஞ்சொல்) பிறந்தனர்.

பதம் 4.8.4 : ஓ, நல்லோரிற் சிறந்தோனே, கலியும் கடுஞ்சொல்லும் இணைந்து மிருத்யுவையும் (மரணம்) பீதியையும் (அச்சம்) பெற்றெடுத்தன. மிருத்யுவும், பீதியும் இணைந்து யாதனாவையும் (மிகுந்தவலி) நிரயத்தையும் (நரகம்) பெற்றெடுத்தனர்.

பதம் 4.8.5 : எனதன்பிற்குரிய விதுரனே: இங்கு அழிவிற்கானக் காரணங்களை நான் சுருக்கமாக விளக்கியிருக்கிறேன். இதனை ஒருவன் மூன்று முறை கேட்டான் என்றால் அவன் புண்ணியம் அடைவதோடு அவனது ஆத்மாவின் மலநீக்கமும் பெறுவான்.

பதம் 4.8.6 : மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: ஒ, குருகுலத்தில் சிறந்தோனே. இப்பொழுது நான் முழுமுதற் கடவுளினுடைய இயல்பின் ஓர் பகுதியாக அவதரித்த சுவாயம்புவ மனுவின் சந்ததியினரைப் பற்றி உனக்கு விளக்கப் போகிறேன்.

பதம் 4.8.7 : சுவாயம்புவ மனு தன் மனைவி சதரூபாவினிடத்தில் இரு மைந்தர்களைப் பெற்றெடுத்தான். அவர்களின் பெயர் உத்தானபாதன் மற்றும் பிரியவரதன் என்பதாகும். அவர்கள் இருவரும் முழுமுதற் கடவுளான வாசுதேவரின் முக்கிய அம்சத்தின் சந்ததியினர்; ஆதலினால், குடிமக்களைக் காப்பதற்கும் இவ்வுலகை ஆள்வதற்கும் அவர்கள் மிகவும் தகுதியுடையோராக விளங்கினர்.

பதம் 4.8.8 : அரசன் உத்தானபாதனுக்கு சுனீதி மற்றும் சுருசி என்று இரு மனைவியர். சுருசி என்பாளிடம் மன்னன் மிகுந்த அன்பு பாராட்டினான். ஆனால் துருவன் என்னும் மைந்தனை ஈன்ற சுனீதியிடமோ அவன் அவ்வாறிருக்கவில்லை.

பதம் 4.8.9 : முன்னொரு காலத்தில் மன்னர் உத்தானபாதன் சுருசிக்குப் பிறந்த தன் மைந்தன் உத்தமனைத் தன் மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு துருவ மகாராஜாவும் மன்னரின் மடி மீது ஏற முயற்சித்தார். ஆனால் மன்னர் அதனை விரும்பவில்லை. அவனது அனைத்துப் பாவச் செயல்களின் பலன்களையும் அவன் அனுபவிக்க நேரிடும். ஆனால் ஒருவன் பகவானைச் சரணடைந்து அவனது வாழ்வினைப் பகவானது பக்தித் தொண்டிற்கு அர்ப்பணித்தான் என்றால் அவன் பகவானின் நேரடிப் பாதுகாப்பினைப் பெறுவான். அப்படிப்பட்டவன் தனது பாவச் செயல்களினால் துன்புறுவதோ அல்லது அறிந்தோ அறியாமலோ பாவத்திற்குரியச் செயல்களின் மீது ஆசை வைப்பதோ இல்லை.

பதம் 4.8.10 : குழந்தையாக இருந்த துருவ மகாராஜா தன் தந்தையின் மடிமீது ஏற முயன்றதைக் கண்டு அவர் தந்தையின் மற்றொரு மனைவியும், அவரது சிற்றன்னையுமான சுருசி அவர்மீது மிக்க வெறுப்பு அடைந்தாள். மேலும் அவள் மன்னருக்குக் காதில் விழுமாறு மிகுந்த கர்வத்துடன் பேச ஆரம்பித்தாள்.

பதம் 4.8.11 : அரசி சுருசி துருவ மகாராஜாவின் முன்னிலையில் கூறினாள்: எனதன்புக் குழந்தையே, மன்னரின் மடியின் மீதோ அல்லது அரியணையிலோ அமர்வதற்குரிய தகுதி உனக்கில்லை. உண்மையில் நீ கூட மன்னரின் மைந்தன்தான் என்றாலும் நீ என் வயிற்றில் பிறக்காததினால் மன்னரின் மடிமீது அமரும் தகுதி உனக்கில்லை.

பதம் 4.8.12 : எனதன்புப் பாலகனே, நீ என் வயிற்றிலல்லாது அடுத்தவளுக்குப் பிறந்தவன் என்பதை இன்னும் உணரவில்லை. ஆகையினால் உனது முயற்சியானது தோல்விக்குரிய ஒன்றாகும் என்பதை நீ புரிந்துகொள். நீ ஒரு விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்காக முயற்சிக்கின்றாய், அதனை நிறைவேற்றுவது மிகவும் கடினமாகும்.

பதம் 4.8.13 : மன்னரின் அரியணையை அடையவேண்டும் என்று நீ விரும்பினால், நீ கடுமையான தவங்களை மேற்கொள்ள வேண்டும். முதலில் நீ முழுமுதற் கடவுளான நாராயணரைத் திருப்திப்படுத்த வேண்டும். அதன்பின் உனது பக்தியினால் உன்மீது அவர் கருணை புரிந்தார் என்றால் நீ அடுத்த பிறவியில் என் வயிற்றில் பிறப்பாய்.

பதம் 4.8.14 : மைத்ரேய முனிவர் தொடர்ந்து கூறினார்: எனதன்பிற் சிறந்த விதுரனே, கம்பினால் தாக்குண்ட பாம்பு எத்தனை வேகமாகச் சீறுமோ அதுபோல் தன் சிற்றன்னையின் கடுஞ்சொற்களினால் தாக்கப்பட்ட துருவ மகாராஜா மிகுந்து வந்த சினத்தினால் பெருமூச்சுவிட்டார். இத்தனை நடந்தும் தன் தந்தை ஒன்றுமே செய்யாது அமைதியாக இருத்தலைக் கண்டு அவர் அவ்விடம் விட்டகன்று தன் அன்னையிடம் சென்றார்.

பதம் 4.8.15 : இளைய பாலகனாகிய துருவ மகாராஜா தன் உதடுகள் நடுங்க கேவிக்கேவி அழுதுக்கொண்டே தன் அன்னையிடம் சென்றார். அரசி சுனீதி தன் குழந்தையை அள்ளி எடுத்து என்ன நடந்தது என்று கேட்க மாளிகையில் உள்ள அனைவரும் நடந்ததை அவளுக்கு எடுத்துக் கூறி சுருசியின் கடுஞ்சொற்களையும் கூறினர். இதைக் கேள்வியுற்ற சுனீதி மிகவும் வருத்தமுற்றாள்.

பதம் 4.8.16 : நடந்த நிகழ்ச்சியினை சுனீதியினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. காட்டுத்தீயில் எரிந்து போகும் காய்ந்த சருகுகளைப் போல் சோகத் தீயினால் சுனீதியும் சுடப்பட்டாள். தன் சக கிழத்தியின் வார்த்தைகளை நினைத்து சொந்தாமரை மலரில் இருக்கும் பனித்துளிகளைப் போல் அவள் முகம் எனும் அழகான தாமரையில் கண்ணீர் முத்துக்கள் உருண்டோடின. அவள் கூறினாள்.

பதம் 4.8.17 : அத்துயர் மிகுந்த சூழ்நிலைக்கு மாற்றுக் காண்பதறியாது அவளும் நெடுமூச்செறிந்தாள். வேறு வழி இல்லாத நிலையில் அவள் தன் மைந்தனிடம் கூறினாள்: “எனதன்பு மகனே பிறருக்குக் கேடு வர வேண்டுமென்று ஒருபோதும் நினையாதே. கெடுவான் கேடு நினைப்பான் என்பது முன்னோர் கூற்று.”

பதம் 4.8.18 : சுனீதி கூறினாள்: என்னுயிரே, சுருசி இவ்வாறு பேசியதற்கெல்லாம் காரணம் உன் தந்தையாகிய மன்னர் என்னைத் தன் மனைவியாக, ஏன் ஒரு வேலைக்காரியாகக் கூடக் கருதுவதில்லை என்பதேயாகும். அவர் என்னை ஏற்றுக்கொள்ளவே கூசினார். ஆகையினால் ஒரு நல்வினையற்றவள் வயிற்றில் மகனாகப் பிறந்து அவள் மார்பில் பால் குடித்து வளர்ந்திருக்கின்றாய், என்பது உண்மைதான் கண்ணே!

பதம் 4.8.19 : எனதன்புக் குழந்தாய், உனது தந்தையின் மற்றொரு மனைவியான சுருதி என்னதான் கடுமையாகப் பேசியிருந்த போதிலும் அத்தனையும் உண்மைதான் மகனே. ஆகையினால் நீயும் உத்தமனைப்போல் அவர் மடியில் அமரவேண்டும் என்று விரும்பினால் உன் சிற்றன்னை சுருசி கூறிய அறிவுரைகளை உடனே செயற்படுத்துவாயாக. எவ்விதத் தாமதமுமின்றி முழுமுதற் கடவுளின் பத்மபாதங்களை வணங்குவதில் முழு மூச்சுடன் ஈடுபடுவாயாக.

பதம் 4.8.20 : சுனீதி தொடர்ந்து கூறினாள்: முழுமுதற் கடவுள் எண்ணுவதற்கரிய உயர்ந்தவராவார். அவரது திருவடித் தாமரைகளை வழிபட்டதனாலேயே உனது கொள்ளுத் தாத்தாவான பிரம்மதேவன் இப்பிரபஞ்சத்தினைப் படைப்பதற்குரிய தகுதியினைப் பெற்றார். அவர் பிறப்பற்றவராகவும் உயிர்க்குலம் அனைத்திற்கும் தலைவராக விளங்குவது போன்ற மேன்மை நிலை எய்தியதற்கும் காரணம் முழுமுதற் கடவுளின் கருணையேயாகும். முழுமுதற் கடவுள் மனதினை அடக்கி, உயிர்க்காற்றை ஒழுங்குபடுத்தும் முறையினால் சிறந்த யோகிகளாலும் வணங்கப்படுகின்றார்.

பதம் 4.8.21 : சுனீதி தன் மகனிடம் அறிவிக்கிறாள்: உனது தாத்தாவான சுவாயம்புவ மனு மிகப்பெரிய வேள்விகளுடன் தானதர்மங்கள் செய்து இடையறாத பக்தியுடன் முழுமுதற் கடவுளைத் துதித்துத் திருப்திப்படுத்தினார். இவ்வழியில் செயல்பட்டே அவர் பௌதீக இன்பங்களில் மிகப் பெரிய வெற்றியும் பிறகு முக்தியும் பெற்றார். இவையெல்லாம் தேவர்களை வணங்குவதினால் பெறக்கூடியவை அன்று.

பதம் 4.8.22 : ஆரூயிர் செல்வ, தனது பக்தர்களிடம் மிகுந்த அன்புடைய முழுமுதற் கடவுளை நீயும் சரணடைதல் வேண்டும். பிறப்பு இறப்பின் சுழற்சியிலிருந்து விடுதலை பெற விரும்புபவர்களும் பக்தித்தொண்டின் மூலம் பகவானின் திருவடித் தாமரைகளை எப்போதும் சரண் அடைகின்றனர். உனக்குரிய அதர்மத்தினை நிறைவேற்றுவதின் மூலம் தூய்மை பெற்று முழுமுதற் கடவுளை உனது உள்ளத்தில் நிலைபெறச் செய்து ஒரு கணமும் தொய்வின்றி எப்போதும் அவரது தொண்டில் ஈடுபடுவாயாக.

பதம் 4.8.23 : என்னுயிர் துருவனே, என்னைப் பொறுத்தமட்டில் செந்தாமரை மலர் போல் சிவந்திருக்கும் விழிகளுடைய முழுமுதற் கடவுள் ஒருவரைத் தவிர உனது துன்பத்தினை துடைப்பவர்கள் வேறு யாரையும் நான் காண்கிறேன். பிரம்ம தேவன் போன்ற சிறந்த தேவர்கள் கூட அதிர்ஷ்ட தேவதையின் கருணையினை நாடுகின்றனர். ஆனால் அத்தேவதையோ கையில் தாமரை மலருடன் முழுமுதற் கடவுளுக்குச் சேவை செய்வதற்காக எப்போதும் ஆயத்தமாக இருக்கிறாள்.

பதம் 4.8.24 : மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: துருவ மகாராஜாவின் அன்னையான சுனீதி கூறிய அறிவுரைகள் அவர் விரும்பிய குறிக்கோளினை நிறைவேற்றுவதற்கானதாகும். ஆகையினால் அவர் ஆழ்ந்த சிந்தனைக்குப்பிறகு, புத்திசாலித்தனத்துடனும், மாறாத உறுதியுடனும் தனது தந்தையின் அரண்மனையை விட்டு வெளியேறினார்.

பதம் 4.8.25 : மாமுனிவர் நாரதர் இச் செய்தியினைக் கேள்வியுற்றார். மேலும் துருவ மகாராஜாவின் அனைத்துச் செயல்களையும் புரிந்து கொண்டு அவர் வியப்பில் ஆழ்ந்துவிட்டார். அவர் துருவ மகாராஜாவை அடைந்து அவர் தலைமீது தன் புனிதக் கைகளை வைத்துப் பின்வருவனவற்றைக் கூறலானார்.

பதம் 4.8.26 : எத்தனை அதிசயமானவர்கள் இந்தச் சக்திமிக்கச் சத்திரியர்கள்! தங்கள் மானத்திற்கு ஒரு சிறு ஊறு நேர்ந்தாலும் கூட அவர்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் இச்சிறுவனோ ஒரு சிறு குழந்தை ஆயினும் தன் மாற்றாந்தாயின் கடுஞ்சொற்களை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பதம் 4.8.27 : நாரத முனிவர் துருவனிடம் கூறினார்: அன்பிற்குரிய புத்திரனே, நீயோ வேடிக்கையிலும் விளையாட்டிலும் ஆர்வமுள்ள ஒரு சிறுவன். உன்னை அவமானப்படுத்திய வார்த்தைகளினால் நீ ஏன் இத்தனை பாதிக்கப்பட்டாய்?

பதம் 4.8.28 : அன்பார்ந்த துருவனே, உனது மான உணர்ச்சியானது சீர்குலைக்கப்பட்டது என்று நீ நினைத்தால், அதற்காக நீ அதிருப்தி அடைவதற்கான காரணங்கள் ஏதுமில்லை. இதுபோன்ற மனக் குறையானது மாயையின் மற்றொரு குணமாகும். ஒவ்வொரு உயிரும் தனது முன்வினைச் செயலினால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகையினால் தான் மகிழ்வதற்கோ அல்லது துன்புறுவதற்கோ பல்வகை வேறுபாடுகளுடைய வாழ்க்கை அமைந்துள்ளது.

பதம் 4.8.29 : முழுமுதற் கடவுளின் செயற்பாடுகள் மிகவும் வியக்கத்தக்கவையாகும். அவரது விருப்பத்தின் பேரில் நன்மையோ தீமையோ எதுவரினும் புத்தியுடையோன் அவரது செயற்பாட்டினை ஏற்றுக் கொண்டு நிறைவடைதல் வேண்டும்.

பதம் 4.8.30 : இப்பொழுது நீ முழுமுதற்கடவுளின் கருணையினைப் பெறவேண்டும் என்பதற்காக உன் அன்னையின் ஆலோசனையின் பேரில் யோகமுறை தியானத்தை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளாய். ஆனால் எனது கருத்தின்படி சாமான்ய மனிதனால் இது போன்ற கடுமையான தவங்களைச் செய்ய முடியாது. முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவது மிகவும் கடினமானதாகும்.

பதம் 4.8.31 : நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: இம்முறையினைப் பற்பலப் பிறப்புகளில் முயன்றும், உலக மாசுக்களில் பற்றில்லாதிருந்தும், தம்மை யோக சமாதியில் வைத்திருந்தும் இது போன்ற பல்வேற துறவு நெறிகளைக் கடைப்பிடித்தும் கூட தெய்வீக யோக சித்தர்களினால் கடவுள் உணர்வுப் பாதையின் முடிவினைக் காண இயலாது போயிற்று.

பதம் 4.8.32 : இக்காரணத்தினால் எனதன்புக் குழந்தாய்! நீ இம்முயற்சியில் இறங்க வேண்டாம் அது வெற்றியடையாது. நீ உனது இருப்பிடத்திற்குத் திருப்பிச் செல்லுதல் நலம். நீ வளர்ந்து பெரியவனானதும் பகவானது அருளினால் இதுபோன்ற யோக முறைகளைச் செய்வதற்கு உனக்கு வாய்ப்புக் கிட்டலாம். அப்போது நீ இதனைச் செய்வாயாக.

பதம் 4.8.33 : இன்பமோ, துன்பமோ எப்படிப்பட்ட வாழ்க்கையாயினும் ஒருவன் திருப்தியடையப் பழகிக் கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டுமே பகவானின் விருப்பத்திற்கேற்றவாறே அருளப்படுகிறது. இவ்வழியில் ஒருவன் தொடர்ந்து முன்னேறினால் அவன் அறியாமை இருட் கடலினை மிக எளிதாகக் கடந்து விடலாம்.

பதம் 4.8.34 : உலக வாழ்வில் ஒவ்வொருவரும் பின்வருமாறு நடத்தல் வேண்டும். தன்னைவிடத் தகுதியில் உயர்ந்த ஒருவனைச் சந்திக்கும் பொழுது மகிழ்ச்சியடைய வேண்டும் தன்னை விடத் தகுதி குறைந்தவனைச் சந்திக்கும் பொழுது அவனிடம் கருணை காட்ட வேண்டும். தனக்கு இணையான ஒருவனைச் சந்திக்கும்பொழுது அவனிடம் நட்புக் கொள்ள வேண்டும். இவ்வழியில் நடந்தால் ஒருவன் உலகின் கொடிய துன்பங்களினால் பாதிக்கப்பட மாட்டான்.

பதம் 4.8.35 : துருவ மகாராஜா கூறினார்: எனது பெருமதிப்பிற்குரிய நாரத முனிவரே, இன்ப துன்பம் என்னும் பௌதீக நிலையினால் உள்ளம் பாதிக்கப்பட்ட மனிதன் மன அமைதி பெறுவதற்கு நீர் கூறிய அறிவுரைகள் மிகவும் சிறந்தவையாகும். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் அறியாமையினால் மூடப்பட்டிருக்கிறேன். ஆகையினால் உமது இத்தத்துவம் என் மனதைத் தொடவில்லை.

பதம் 4.8.36 : அன்பிற்குரிய சான்றோரே, உமது அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு அத்துணைப் பணிவுடையவன் அல்லன் நான். ஆனால் இது எனது குற்றமன்று. இது நான் சத்திரிய குலத்தில் பிறந்ததின் விளைவு. தனது அம்பினுங் கொடிய வார்த்தைகளினால் எனது மாற்றாந்தாய் என் உள்ளத்தைக் கிழித்துவிட்டாள். ஆகையினால் உமது மதிப்பு மிக்க அறிவுரைகள் எனது உள்ளத்தில் நிற்கவில்லை.

பதம் 4.8.37 : ஓ, கற்றறிந்த அந்தணரே, எனது தந்தையரும் அவர் முந்தையரும், மூன்று உலகங்களில் உள்ள யாராலுமே அடைய முடியாத மேன்மையான உயர்ந்த நிலையினை அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்கு நீர் சம்மதித்தீரென்றால் எனது வாழ்க்கை லட்சியத்தினை நான் அடைவதற்கு, நான் பின்பற்றக் கூடிய நேரிய வழியினை எனக்கு உரைத்தருள்வீராக.

பதம் 4.8.38 : மரியாதைக்குரிய நாரத முனிவரே, நீர் பிரம்மதேவனின் மதிப்பு மிக்க மைந்தன் ஆவிர். இப்பிரபஞ்சம் முழுவதின் நன்மைக்காக உமது இனிய வீணையினை இசைத்துக் கொண்டே நீர் பயணம் செய்கின்றீர். இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிர்களின் நன்மைக்காகச் சுழலும் சூரியனைப் போன்றவர் நீங்கள்.

பதம் 4.8.39 : மிகச் சிறந்த சான்றோரான நாரத முனிவர், துருவ மகாராஜாவின் வார்த்தைகளைக் கேட்டு அவர் மீது மிகவும் கருணையுடையவராக ஆனார். தனது அளவற்ற கருணையினை அவருக்கு அருள வேண்டும் என்பதற்காக கீழ்வரும் தேர்ந்த உபதேசத்தினை அவர் அருளினார்.

பதம் 4.8.40 : மகாமுனிவர் நாரதர் துருவமகாராஜாவிடம் கூறினார்: முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டுப் பாதையில் தொடர்வாயாக என்று உன் அன்னை சுனீதியினால் உனக்கருளப்பட்ட உபதேசம் உனக்கு மிகவும் பொருத்தமானதாகும். ஆகையினால் முழுமூச்சுடன் நீ பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுவாயாக.

பதம் 4.8.41 : தர்மநெறி, பொருள்வளம், புலனுகர்ச்சி மற்றும் முக்தி என்னும் நான்கு கொள்கைகளின் பலன்களை விரும்பும் ஒருவன் முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அவரது தாமரைத் திருவடிகளை வணங்குவதினால் இவற்றின் மீதுள்ள விருப்பம் நிறைவேறும்.

பதம் 4.8.42 : ஆகையினால் அன்புப் புதல்வனே, உனக்கு அனைத்து மங்கலங்களும் உண்டாவதாக. யமுனை நதியின் கரைக்கருகில் மதுவனம் என்றொரு சோலை இருக்கிறது. அங்கு சென்று உன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வாயாக. அங்கு ஒருவன் செல்கிறான் என்றால் அவன் முழுமுதற் கடவுளின் அருகில் செல்கிறான் என்று பொருள். ஏனென்றால் இறைவன் எப்போதும் அங்கேதான் இருப்பார்.

பதம் 4.8.43 : நாரத முனிவர் கூறினார்: காளிந்தீ எனப்படும் யமுனை நதியின் நீரில் ஒரு நாளைக்கு மூன்று முறை நீ நீராட வேண்டும். ஏனென்றால் அது மங்கலமும் புனிதமும் தெளிவும் உடையது ஆகும். நீராடிய பிறகு நீ அட்டாங்க யோகத்திற்குரிய ஒழுங்குமுறை விதிகளைச் செய்தல் வேண்டும். பிறகு உனது ஆசனத்தில் சரியான நிலையில் அமைதியுடன் அமர்ந்து கொள்ள வேண்டும்.

பதம் 4.8.44 : உனது ஆசனத்தில் அமர்ந்த பிறகு மூன்று வகையான சுவாசப் பயிற்சிகளைச் செய்தல் வேண்டும். இவ்வாறு படிப்படியாக உயிர்க்காற்று, மனம், மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து ஜட மாசுக்களில் இருந்தும் முற்றிலும் உன்னை விடுவித்துக் கொண்டு மிகுந்த பொறுமையுடன் முழுமுதற் கடவுளைத் தியானிக்கத் தொடங்க வேண்டும்.

பதம் 4.8.45 : பகவானின் வடிவழகு இங்கே விவரிக்கப் பெற்றுள்ளது. பகவானின் முகம் அழகும், இனிமையும், அமைதியும் வாய்ந்தது. அவரைக் காணும் பக்தர்களுக்கு அவரது தோற்றம் ஒருபோதும் மகிழ்ச்சியளிக்காமல் இருந்ததில்லை, மேலும் அவர்கள் வேண்டும் வரங்களை அள்ளி வழங்குவதற்கு அவர் எப்போதும் ஆயத்தமாகவே இருக்கிறார். அவரது இரு விழிகளும் ஒளி பொருந்தியவை. புருவங்களோ வில் போன்றன. அவரது கூரிய நேரான நாசியும் அகன்ற நெற்றியும் மிகவும் அழகுடையன. தேவர்கள் அனைவரினும் அவர் அழகில் மிகச் சிறந்தவராவார்.

பதம் 4.8.46 : நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: பகவானின் வடிவம் எப்போதும் இளமையானது. அவரது அனைத்து அங்கங்களும் சிறு தவறுமின்றி மிகச் சரியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அவரது விழிகளும், இதழ்களும் காலை இளம்பரிதியினைப் போல் தோன்றும். சரணடையும் ஆத்மாவிற்கு அவர் அடைக்கலம் தர எப்போதும் தயாராகவே இருக்கின்றார். அவரைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற ஒருவன் அனைத்து மங்கலங்களையும் அடைகிறான். சரணடையும் ஆத்மாவைத் தாங்கிக் கொள்பவராக பகவானே விளங்குகிறார். ஏனெனில் அவர் கருணையின் கடலன்றோ!

பதம் 4.8.47 : பகவானைப் பற்றி மேலும் விளக்குகையில் அவர் தன் மார்பில் ஸ்ரீ வத்ஸ அடையாளம் என்னும் அதிர்ஷ்ட தேவதை உறையும் இடத்தினை உடையவர். அவரது உடல் வண்ணமோ கருநீலம் ஆகும். பகவான் ஒரு புருஷர் ஆவார். அவர் மலர்களை மாலையாகத் தொகுத்து அணிந்திருப்பார். மேலும் அவர் நித்தியமாக நான்கு கரங்களை உடையவர். அவற்றில் அவர் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரினைத் தாங்கியிருப்பார்.

பதம் 4.8.48 : முழுமுதற் கடவுளான வாசுதேவரின் முழு உடலுமே அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. அவர் பொன்னாலான தலைக் கிரீடமும், கழுத்தில் அட்டிகையும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பார். அவரது கழுத்தில் கௌத்துப மாலை அணி செய்யும். மஞ்சள் வண்ண பட்டுப் பீதாம்பரத்தினை அவர் ஆடையாக அணிந்திருப்பார்.

பதம் 4.8.49 : பகவான் தன் இடுப்பில் சிறு சிறு தங்கமணிகளினாலான ஒட்டியாணம் அணிந்திருப்பார். அவர் கால்களை பொற்சலங்கைகள் அணி செய்யும். அவரது உடல் வண்ணம் அனைத்தும் கண்களைக் கவர்ந்து இனிமை செய்யும். அவர் எப்போதும் சாந்தியும், அமைதியும் தவழ்கின்ற உருவுடையவர். ஆதலினால் அவரைக் காண்பது கண்ணிற்கும் மனதிற்கும் இனிமை செய்யும்.

பதம் 4.8.50 : உண்மையான யோகியர் தமது இதயத் தாமரை இதழ்களின் அடுக்கின் மீது நிற்கும் பகவானின் உன்னதத் தோற்றத்தினைத் தியானம் செய்வர். அவரது தாமரைத் திருவடிகளின் விரல் நகங்கள் பொன்னைப் போல் மின்னும் தன்மையன.

பதம் 4.8.51 : பகவான் எப்போதும் புன்னகை புரிந்து கொண்டேயிருப்பார், அவர் தனது பக்தனைக் கருணையுடன் பார்க்கும் வடிவத்தினையே ஒரு பக்தன் சிந்தனையில் காணவேண்டும். இவ்வழியிலேயே தியானிப்பவன் அனைத்து வரங்களும் அருளும் முழுமுதற் கடவுளைக் காண வேண்டும்.

பதம் 4.8.52 : சர்வ மங்கலம் பொருந்திய பகவானது வடிவத்தில் மீது மனதைச் செலுத்தி இவ்வழியில் தியானம் செய்பவன் வெகு விரைவில் ஜட மாசுக்கள் அனைத்தினின்றும் விடுதலை பெறுகிறான். மேலும் பகவானைத் தியானிப்பவன் அந்நிலையிலிருந்து ஒருக்காலும் கீழே இறங்குவதில்லை.

பதம் 4.8.53 : ஓ, அரச புத்திரனே! இத்தியான முறைக்குரிய மந்திரத்தைப் பற்றி இப்பொழுது உனக்கு நான் சொல்லப் போகிறேன். இம்மந்திரத்தினை மிக மிக எச்சரிக்கையுடன் ஏழு இரவுகள் தொடர்ந்து ஒருவன் உச்சாடனம் செய்வான் என்றால் வானில் பறந்து செல்லும் சித்தி பெற்ற மானிடர்களை அவன் காண்பான்.

பதம் 4.8.54 : ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்பது பகவான் கிருஷ்ணரை வழிபடுவதற்குரிய பன்னிரெண்டெழுத்து மந்திரம் ஆகும். ஒருவன் பகவானின் வடிவத்தினை (மூர்த்தத்தினை) பிரதிஷ்டை செய்து ஆதாரப்பூர்வ விதிமுறைகளின்படி மலர்களையும், கனிகளையும் உணவுப் பொருட்களையும் நிவேதனம் செய்து இம்மந்திரத்தை ஜெபித்தல் வேண்டும். ஆனால் இது காலதேச வர்த்தமானங்களுக்கேற்றாற் போல் செய்யப்படுதல் வேண்டும்.

பதம் 4.8.55 : பகவானை வழிபடுவதற்கு ஒருவன், சுத்தமான நீர், தூய மலர் மாலைகள், கனிகள், மலர்கள் மற்றும் காய்கள் போன்று காடுகளில் கிடைப்பதைப் பயன்படுத்தலாம். அல்லது அருகம்புல்லையும், அரும்புகளையும் மொட்டுக்களையும் அல்லது மரப்பட்டைகளையும் முடிந்தால் முழுமுதற் கடவுளுக்கு மிகவும் விருப்பமான துளசி இலைகளையும் கூடப் பயன்படுத்தலாம்.

பதம் 4.8.56 : மண், நீர், மரம், உலோகம் போன்றவற்றினால் செய்யப்பட்ட பகவானின் மூர்த்தம் கூட வழிபடுவதற்குரியதே. கானகத்தில் ஒருவன் மண்ணும், நீரும் கொண்டு செய்யப்பட்ட பகவான் மூர்த்தத்தினை மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கேற்ப வழிபடுதல் வேண்டும். முற்றிலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட பக்தன் தெளிவுடனும், அமைதியுடனும் இருந்து காடுகளில் கிடைக்கும் கனிகளையும், காய்களையும், கந்த மூலங்களையும் உண்டு திருப்தியடைதல் வேண்டும்.

பதம் 4.8.57 : அன்புத் துருவனே, மூர்த்தத்தினை வழிபட்டு மந்திரங்களை ஒரு நாளைக்கு மூன்று முறை ஓதுவதோடு, முழுமுதற் கடவுளின் பரம விருப்பத்தினால் அவரது சுயச் சக்திகளின் மூலம் வெளிப்படும் பல்வேறு அவதாரங்களின் உன்னதமான செயல்களையும் நீ தியானித்தல் வேண்டும்.

பதம் 4.8.58 : ஒருவன் முந்தைய ஆச்சாரியர்களின் காலடிகளைப் பின்பற்றி குறிப்பிடப்பட்டுள்ள சாதனங்களுடன் முழுமுதற் கடவுளை வழிபட வேண்டும். அல்லது மந்திரங்களுக்கும் தனக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லாத முழுமுதற் கடவுளை மந்திரங்களை உச்சரித்துத் தன் இதயத்தினுள் வழிபட வேண்டும்.

பதங்கள் 4.8.59 – 4.8.60 : இவ்வாறு ஒருவன் பகவானுக்குரிய பக்தித் தொண்டினை உளப்பூர்வமாகவும், உண்மையாகவும் தனது மனம், வார்த்தை, உடலினால், பக்தி முறைகளுக்குரிய செயல்களில் தன்னை இணைத்துக் கொண்டு பக்தித் தொண்டு புரிவதில் ஈடுபடுவான் என்றால் அவன் விருப்பத்திற்கேற்ப பகவான் அவனை ஆசீர்வதிப்பார். ஒரு பக்தன் பௌதீகத் தர்மநெறி, பொருளாதார வளர்ச்சி, புலன் நுகர்ச்சி அல்லது பௌதீக உலகிலிருந்து விடுதலை போன்றவற்றை விரும்பினாலும் அவனுக்கு அவை அருளப்படும்.

பதம் 4.8.61 : முக்தியடைய வேண்டும் என்று ஒருவன் உளப்பூர்வமாக நினைத்தான் என்றால் அவன் ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரமும் தன்னை மறந்த ஆனந்தத்தின் உயர்நிலையில் ஆழ்ந்து, உன்னத அன்புத் தொண்டில் உறுதியுடன் இருத்தல் வேண்டும். மேலும் புலனுகர்ச்சிக்கான அனைத்துச் செயல்களிலிருந்தும் விலகி அவன் தனியே இருத்தல் வேண்டும்.

பதம் 4.8.62 : மன்னர் மைந்தனான துருவ மகாராஜா நாரத முனிவரால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டபின் அவர் தனது ஆன்மீக குருவான நாரதரை மூன்று முறை சுற்றி வலம் வந்து தன் மரியாதைக்குரிய வந்தனங்களைச் செலுத்தினார். பிறகு அவர் பகவான் கிருஷ்ணரின் திருவடித் தாமரைகளின் தடங்களை எப்போதும் பெற்று மிகவும் மங்கலம் கொண்டதாயிருக்கும் மதுவனத்தை நோக்கிச் சென்றார்.

பதம் 4.8.63 : துருவ மகாராஜா பக்தித்தொண்டு இயற்றுவதற்காக மதுவனக் காட்டிற்குச் சென்றபிறகு நாரத முனிவர் அரண்மனையில் மன்னர் எந்நிலையில் இருக்கிறார் என்பதைக் காண விரும்பினார். நாரத முனிவர் அரண்மனைக்கு வந்தவுடன் மன்னர் அவருக்குத் தன் மரியாதைக்குரிய வந்தனங்களைச் செலுத்தி அவரை நன்கு வரவேற்றார். தனக்குரிய இருக்கையில் வசதியாக அமர்ந்து கொண்டவுடன் நாரத முனிவர் பேசத் தொடங்கினார்.

பதம் 4.8.64 : மாமுனிவர் நாரதர் கேட்டார்: எனதன்பான மன்னனே, உனது முகமோ களையிழந்து மிகவும் வாடிக் காணப்படுகிறது. நீண்ட நேரமாக நீ எதையோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது என்ன காரணம்? உனது தர்மநெறி, பொருளாதார வளர்ச்சி மற்றும் புலனுகர்ச்சிக்கான பாதையினைப் பின்பற்றுவதில் ஏதேனும் இடையூறு நேர்ந்ததா?

பதம் 4.8.65 : மன்னர் பதில் கூறினார்: ஓ, அந்தணரிற் சிறந்தோரே, நான் எனது மனைவியின் மீது அளவு கடந்த மோகம் அடைந்து அடிமையானதினால் இழிந்த கீழ்நிலை பெற்று ஐந்து வயதே நிரம்பிய எனது மகனிடம் கூடக் கருணையின்றி நடந்து கொண்டேன். அவன் ஓர் மகாத்மாகவும், சிறந்த பக்தனாகவும் விளங்கிய போதிலும் அவனையும் அவன் அன்னையையும் இங்கிருந்து துரத்திவிட்டேன்.

பதம் 4.8.66 : எனதன்பிற்குரிய அந்தணரே! எனதருமை மைந்தனின் முகம் செந்தாமரை மலர் போல் எழில் வாய்ந்ததாகும். அவனது துன்பமயமான நிலையினை நான் நினைத்துப் பார்க்கின்றேன். அவன் இப்பொழுது பாதுகாப்பின்றி பசியினால் வருந்திக் கொண்டிருப்பான். மேலும் அவன் காட்டில் எங்கேயாவது மயங்கி வீழ்ந்திருக்கலாம் அல்லது அவனது உடலைத் தின்பதற்காக ஓநாய்களினால் தாக்கப்பட்டிருக்கலாம்.

பதம் 4.8.67 : அந்தோ எனது மனைவியினால் நான் எவ்வாறு அடக்கியாளப்பட்டேன்! எனது கொடுமையினைச் சற்றுக் கற்பனை செய்யுங்கள்! அன்பினாலும் பாசத்தினாலும் குழந்தை என் மடியின் மீது அமர்வதற்கு முயன்றான். அவனை நான் தூக்கவோ அல்லது கொஞ்சவோயில்லை. எத்துணைக் கல் நெஞ்சன் நான் என்பதைச் சற்று நினைத்துப் பாருங்கள்.

பதம் 4.8.68 : மாமுனிவர் நாரதர் பதில் கூறினார்: எனதன்பார்ந்த அரசனே, உனது மைந்தனைப் பற்றித் துயருறுதல் வேண்டா. அவன் முழுமுதற் கடவுளால் நன்கு பாதுகாக்கப்பட்டிருக்கிறான். அவனது செல்வாக்கை நீ அறிவாய்! அவனது புகழ் முன்னமேயே இவ்வுலகமெங்கணும் விரிந்து பரந்திருக்கிறது.

பதம் 4.8.69 : அன்பிற்குரிய அரசனே, உனது மைந்தன் மிகவும் தேர்ந்தவன். அவனது செயல்கள் மாமன்னர்களாலும், முனிவர்களாலும் கூடச் செய்வதற்கரியவை. கூடிய விரைவில் அவன் தன் இலட்சியத்தை நிறைவேற்றி மீண்டும் இல்லம் திரும்புவான். உனது புகழை அவன் இவ்வுலகமெங்கணும் பரப்புவான் என்பதையும் நீ புரிந்து கொள்ள வேண்டும்.

பதம் 4.8.70 : மைத்ரேய மகான் கூறினார்: நாரத முனிவரால் அறிவுறுத்தப்பட்ட மன்னர் உத்தானபாதன் பரந்து விரிந்திருக்கும் தனது பேரரசினையும், தேவதையினைப் போன்ற அதன் வளங்களையும் கவனிப்பதை விடுத்து தனது மைந்தன் துருவனைப் பற்றி மட்டுமே நினைக்கத் தொடங்கினான்.

பதம் 4.8.71 : துருவ மகாராஜா மதுவனத்தை அடைந்தவுடன் யமுனை நதியில் நீராடி அன்றிரவு மிகுந்த கவனத்துடனும், ஒழுங்குடனும் விரதம் இருந்தார். அதன் பிறகு நாரத முனிவர் கூறியபடி முழுமுதற் கடவுளை வழிபடுவதில் ஈடுபட்டார்.

பதம் 4.8.72 : துருவ மகாராஜா முதல் ஒரு மாதம் தனது உயிரைக் காத்துக் கொள்வதற்காக மூன்று நாட்களுக்கொரு முறை கனிகளையும், கொட்டைகளையும் உண்டார். இவ்வாறு அவர் முழுமுதற் கடவுளை வழிபடுவதில் முன்னேறினார்.

பதம் 4.8.73 : துருவ மகாராஜா, இரண்டாவது மாதத்தில் ஆறு நாட்களுக்கு ஒரு முறை காய்ந்த புற்களையும், இலைகளையும் உண்டு தனது வழிபாட்டினைத் தொடர்ந்தார்.

பதம் 4.8.74 : மூன்றாவது மாதம் ஒன்பது நாட்களுக்கொருமுறை தண்ணீரை மட்டுமே அருந்தினார். இவ்வாறு அவர் தெய்வீகப் பண்களினால் வணங்கப்படும் முழுமுதற் கடவுளை முற்றிலும் சமாதி நிலையில் இருந்து வழிபட்டார்.

பதம் 4.8.75 : நான்காவது மாதத்தில் துருவ மகாராஜா தனது மூச்சினைக் கட்டுப்படுத்துவதில் வல்லமை பெற்றார். அதனால், அவர் பன்னிரெண்டு நாட்களுக்குகொருமுறை காற்றை மற்றுமே சுவாசித்து வாழ்ந்தார். இவ்வழியில் அவர் தனது நிலையில் உறுதியாக இருந்து முழுமுதற் கடவுளை வழிபட்டார்.

பதம் 4.8.76 : ஐந்தாவது மாதத்தில் அரசகுமாரன் துருவ மகாராஜா தனது மூச்சினைக் கட்டுப்படுத்தி எந்த வித அசைவுமின்றி ஒரு தூணைப் போன்று ஒற்றைக் காலில் நின்று தனது மனத்தினை முற்றிலும் பரம் பிரம்மத்தின் மீது ஊன்றி வழிபட்டார்.

பதம் 4.8.77 : அவர் புலன்களையும் அதற்குரிய நுகர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி வேறெதிலும் தன் கவனம் சிதறாது தன் மனதினை முழுமுதற் கடவுளின் மேல் நிலைநிறுத்தி வழிபாடு செய்தார்.

பதம் 4.8.78 : துருவ மகாராஜா இவ்வாறு அனைத்து உயிர்களின் நாயகராகவும், பௌதீகப் படைப்புகளின் மூலாதாரமாகவும் விளங்குகின்ற முழுமுதற் கடவுளைப் பற்றிக் கொண்டவுடன் மூன்று லோகங்களும் நடுங்கத் தொடங்கின.

பதம் 4.8.79 : அரசகுமாரரான துருவ மகாராஜா ஒற்றைக் காலில் நேராக நிலைத்து நின்றதினால் அவரது கால் பெருவிரலின் அழுத்தத்தினால் பூமியின் ஒரு பகுதி கீழ் நோக்கி இறங்கியது. இது யானையினைச் சுமந்து செல்லும் படகு யானையின் ஒவ்வொரு காலடி அழுத்தத்தினால் படகு இடமும், வலமும் அலைப்புண்டது போல் இருந்தது.

பதம் 4.8.80 : துருவ மகாராஜா நடைமுறையில் விஸ்வாத்மாவான விஷ்ணுவைப் போன்று கனமானவராக மாறினார். அவரது ஆழ்ந்த தியானத்தினாலும் அவர் தனது உடலிலுள்ள துவாரங்கள் அனைத்தையும் மூடியதினாலும் முழு பிரபஞ்சமும் சுவாசிக்க முடியவில்லை. அதனால் எல்லா உலகங்களிலும் உள்ள அனைத்து சிறந்த தேவர்களும் மூச்சுதிணறுலுக்குள்ளாகி முழுமுதற் கடவுளிடம் சரண் புகுந்தனர்.

பதம் 4.8.81 : தேவர்கள் கூறினார்: போற்றுதலுக்குரிய பகவானே, அசைகின்ற, அசையாத அனைத்து உயிர்ப்பொருட்களுக்கும் நீரே புகலிடமாக விளங்குகின்றீர். அனைத்து உயிர்களின் மூச்சும் நின்று திணறலுக்காளாகியுள்ளனர் என்பது நாங்கள் உணர்கிறோம். இதுபோன்று நிகழ்வினை நாங்கள் அனுபவித்ததே இல்லை. சரணடையும் ஆத்மாக்கள் அனைத்திற்கும் நீரே இறுதிப் புகலிடமாக விளங்குவதினால் நாங்கள் உம்மைச் சரணடைந்தோம், இவ்வபாயத்திலிருந்து காத்தருள்வீராக.

பதம் 4.8.82 : முழுமுதற் கடவுள் பதில் கூறினார்: அன்பான தேவர்களே, இதனால் நீங்கள் மனக்குழப்பம் அடையத் தேவையில்லை. இப்போது எனது நினைவில் முற்றிலும் ஆழ்ந்திருக்கும் துருவன் என்னும் மன்னன் உத்தானபாதனது மைந்தன் கொண்ட திட சங்கல்பம் மற்றும் கடுமையான தவத்தின் விளைவினாலேயே இது நேர்ந்தது. பிரபஞ்சத்தின் சுவாசத்தினையே அவன் தடுத்து நிறுத்தியிருக்கிறான். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக உங்கள் இருப்பிடங்களை அடைவீராக. நான் இச்சிறுவனின் கடுமையான தவங்களை நிறுத்துவேன். அதன் மூலம் நீங்கள் அனைவரும் இச்சூழலிலிருந்து காப்பாற்றப்படுவீர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare