அத்தியாயம் – 6
பிரம்மதேவன் சிவபெருமானை அமைதிப்படுத்துதல்
பதங்கள் 4.6.1 – 4.6.2 : சிவபெருமானின் வீரர்கள் வைத்திருந்த திரிசூலம், வாள் போன்ற ஆயுதங்களினால் காயமுற்றுத் தோல்வியடைந்த வேள்விச் சாலையின் உறுப்பினர்களும் அனைத்துத் தேவர்களும் மிகுந்த அச்சத்துடன் பிரம்ம தேவனை அணுகினார்கள். அவருக்குத் தங்கள் வந்தனங்களைத் தெரிவித்து வேள்விச் சாலையில் நிகழ்ந்த அனைத்துச் சம்பவங்களையும் விளக்கமாகக் கூறத் தொடங்கினர்.

பதம் 4.6.3 : பிரம்ம தேவனும், விஷ்ணுவும் தக்கனின் வேள்விச் சாலையில் நடைபெறப் போகும் நிகழ்ச்சிகளை முன்னரே அறிந்து கொண்டதினால் அவர்கள் அவ்வேள்வியில் கலந்து கொள்ளவில்லை.

பதம் 4.6.4 : வேள்வியில் கலந்து கொண்ட உறுப்பினர்களும், தேவர்களும் நடைபெற்ற அனைத்தையும் பிரம்ம தேவனிடம் கூறிய பின்னர் பிரம்ம தேவன் பதில் கூறினார். வணங்கத் தக்க சிறந்தவரை நிந்தித்து அவரது திருவடித் தாமரைகளிடத்துக் குற்றமிழைத்த பின்னர் ஒரு வேள்வியினைச் செய்வதின் மூலம் நீங்கள் மகிழ்ச்சியுற முடியவே முடியாது.

பதம் 4.6.5 : சிவபெருமானை வேள்வியில் கலந்துகொள்ள விடாது புறக்கணித்ததின் மூலம் அவரது திருவடித் தாமரைகளினிடத்து மிகப் பெரியக் குற்றத்தினைப் புரிந்திருக்கின்றீர்கள். அதனால் நீங்கள் அனைவரும் எவ்வித மனக் கிலேசமுமின்றி அவரைச் சரணடைந்து, அவரது தாமரைத் திருவடிகளில் விழுந்து வருந்தினால் நிச்சயம் அவர் மகிழ்ச்சியடைவார்.

பதம் 4.6.6 : பிரம்மதேவன் அவர்களிடம், சிவபெருமான் எல்லா உலகங்களையும் அவற்றை நிர்வகிப்பவர்களையும் நொடிப்பொழுதில் அழித்துவிடக் கூடிய ஆற்றல் மிக்கவராவார் என்றும், அவர் சமீபத்தில் இறந்த அவரது மனைவியின் துக்கத்தினாலும், தக்கனின் கொடிய வார்த்தைகளினாலும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆகையினால் அவரைச் சரணடைந்து அவரின் மன்னிப்பை வேண்டுவதே தேவர்களுக்கு நன்மையளிக்கும் என்றும் அறிவுறுத்துகிறார்.

பதம் 4.6.7 : தானே, இந்திரனோ அல்லது வேள்விச் சாலையில் கூடியிருந்தவர்களோ, அனைத்து முனிவர்களோ, யாருமே சிவபெருமானின் சக்தி என்னவென்பதனை அறியாதவர்களே! அப்படியிருக்க அவரது திருவடித் தாமரைகளிடத்துக் குற்றம் செய்யும் துணிவு யாருக்கு வரும்? பிரம்மதேவன் கூறினார்.

பதம் 4.6.8 : இவ்வாறு தேவர்கள், பிதாக்கள், உயிர்களின் தலைவர்கள் அனைவருக்கும் அறிவுரை வழங்கிய பிரம்மதேவன் பிறகு அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமான் வசிக்கின்ற கயிலாய மலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

பதம் 4.6.9 : சிவபெருமானின் இருப்பிடமாகிய கயிலாய மலைகளுடன் பல்வேறு வகையான மூலிகைகளும், தாவரங்களும் நிறைந்து, வேத மந்திரங்களும், தெய்வீக யோகப் பயிற்சிகளும் உடைய புனிதமான இடமாகும். பிறப்பினால் தேவர்களாகி அனைத்து தெய்வீக சக்திகளையும் உடையர்களுக்கெல்லாம் அதுவே தலைமையகமாக விளங்குகிறது. இவர்களைத் தவிர பிற உயிர்களான கின்னரர்கள், கந்தர்வர்கள் தங்கள் அழகிய மனைவியரான அப்சரஸுகள் அல்லது தேவதைகளுடன் இணைந்து அங்கே வாழ்கின்றனர்.

பதம் 4.6.10 : கயிலாய மலையானது பல்வேறு வகையான உயர்ந்த வைர, வைடூரியங்களினாலும், கனிமப் பொருட்களினாலும் நிறைந்து பல்வேறு வகையான மரம், செடி, கொடிகளையுடையதாகும். அம்மலை முகடுகளில் பல்வேறு வகையான மானின் கூட்டங்கள் நிறைந்து அழகு செய்யும்.

பதம் 4.6.11 : அங்கே ஏராளமான அருவிகள் உண்டு. அழகிய குகைகள் பல உண்டு. அவற்றினுள் சித்தர்களின் எழிலார்ந்த மனைவியர்கள் காணப்படுவர்.

பதம் 4.6.12 : கயிலாய மலையில் எப்போதும் இசைநயத்துடன் கூடிய மயிலின் அகவலும் தேனீக்களின் ரீங்காரமும் கேட்டுக்கொண்டேயிருக்கும். குயில்கள் எப்போதும் பாடிக்கொண்டேயிருக்கும். மற்றப் பறவைகள் தங்களுக்குள் கலகல என்று ஓசையெழுப்பும்.

பதம் 4.6.13 : அங்குள்ள மரங்கள் தங்கள் உயர்ந்த நிலைகள் என்னும் கரங்களினால் இனிய பறவைகளை அழைப்பது போல் தோன்றும். அங்கு யானைகள் கூட்டங்கூட்டமாக அசைந்து செல்வது, கயிலாய மலையும் அவற்றுடன் சேர்ந்து அசைந்து செல்வது போல் காட்சிதரும். அருவிகளின் இனிய ஒலியினைக் கயிலாய மலையே எழுப்புகிறதோ என்று கூடத் தோன்றும்.

பதங்கள் 4.6.14 – 4.6.15 : அக்கயிலாய மலை முழுவதும் பல்வேறு வகையான மரங்கள் நிறைந்திருக்கும். அவற்றில் சிலவற்றின் பெயர்களை இங்கு பார்ப்போம் மந்தாரம், பாரிஜாதம், சரலம், தமாலம், தாலம், கோவிதாரம், ஆச்சனம், அர்சுனம், அம்ர ஜாதி (மாமரம்), கதம்பம், தூவி கதம்பம், நாகம், புன்னாகம், சண்பகம், பாடலம், அசோகம், பகுலம், குந்தம், மற்றும் குறபகம் என்பவையாகும். அம்மலை முழுதுமே நறுமணமுடைய மகரந்தத்தினை உடைய மலர்கள் பூத்திருக்கும்.

பதம் 4.6.16 : மேலும் அம்மலையில் பொன்னிறத் தாமரைமலர், இலவங்கம், மாலதீ, குப்ஜம் மல்லிகை மற்றும் மாதவி ஆகிய அழகான மரங்கள் வளர்ந்திருக்கும்.

பதம் 4.6.17 : கயிலாய மலை மேலும், கதம், பலா, சூவரம், ஆலமரம், பிலக்ஷம், நியக்ரேஷம், மற்றும் பெருங்காயம் தயாரிப்பதற்கு உதவும் மரம் போன்றவைகளினால் அணி செய்யப்பட்டிருந்தது. அங்கு கமுகு, பூர்ஜபத்திரம் ராஜபூகம், பேரிக்காய் போன்ற பல மரங்களும் இருந்தன.

பதம் 4.6.18 : அங்கே மா, பிரியாலம், மதுகம் மற்றும் இங்குதம் போன்ற பல மரங்கள் இருந்தன. இவை தவிர மூங்கில், மற்றும் கல் மூங்கில் போன்ற மரங்களினாலும் அம்மலை அழகு செய்யப்பட்டிருந்தது.

பதங்கள் 4.6.19 – 4.9.20 : அங்கு குமுதம், உத்பவம் மற்றும் சதபத்திரம் போன்ற பல்வகை தாமரை மலர்கள் பூத்திருந்தன. அவ்வனம் ஓர் அழகிய சோலையாகக் காட்சியளித்தது. ஏரிகளின் கரைகளின்மேல் பல்வேறு வகையான பறவைகள் இனிய ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன. மேலும் அங்கே மான், மந்தி, பன்றி, சிங்கம், ருக்ஷம் சல்யகம், காட்டுப்பசு, காட்டுக்கழுதை, புலி, கலைமான், காட்டெருமை போன்ற பல்வேறு வகையான விலங்குகள் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்தன.

பதம் 4.6.21 : அங்கு கர்ணாந்திரம், ஏகபதம், அஸ்வாஸ்யம், விருகம் மற்றும் கஸ்தூரி என்னும் நறுமணப் பொருளைத் தன்னுடலில் வைத்திருக்கும் கஸ்தூரி மான்கள் போன்ற பல்வேறு வகையான மான் கூட்டங்கள் இருந்தன. இவை தவிர அம்மலையிலிருந்த சிறு ஏரிகளின் கரைகளில் வாழைமரங்கள் பல நிறைந்தது அலங்கரித்தன.

பதம் 4.6.22 : அம்மலையில் அலகநந்தம் என்னும் ஓர் ஏரி இருக்கிறது. அந்த ஏரியில்தான் சதீ நீராடுவது வழக்கம். அந்த ஏரி புண்ணியம் வாய்ந்ததாகும். கயிலாய மலையின் எழிற்கோலத்தினைக் கண்ட அனைத்துத் தேவர்களும் அதன் சிறந்த வனத்தினைக் கண்டு மிகுந்த வியப்படைந்தனர்.

பதம் 4.6.23 : இவ்வாறு தேவர்கள் “நறுமணம் நிறைந்த” என்று பொருள் தரும் சௌகந்திகம் என்னும் வனத்தில் அற்புத எழில் வாய்ந்த அலகா என்னும் பகுதியைக் கண்டனர். இவ்வனம் சௌகந்திகம் என்றழைக்கப்படுவதற்குக் காரணம் அங்கு தாமரை மலர்கள் மிக அதிகமாகப் பூத்திருந்ததேயாகும்.

பதம் 4.6.24 : அவர்கள் நந்தா மற்றும் அலகநந்தா என்னும் பெயருடைய இரண்டு நதிகளையும் கண்டனர். இவ்விரு நதிகளும் முழுமுதற் கடவுளான கோவிந்தனின் திருவடித் தாமரைகளின் தூசியினால் புனிதமடைந்தவைகளாகும்.

பதம் 4.6.25 : எனதன்பான க்ஷத்தா என்னும் விதுரனே, வானத்துத் தேவமகளிர் புஷ்பக விமானங்களில் தங்கள் கணவர்களுடன் அந்த நதிகள் இருக்கும் இடத்திற்கு வந்து கலந்து மகிழ்ந்த பிறகு நீரினுள் இறங்கி தங்கள் கணவர்களின் மீது நீரினை வாரியிறைத்து விளையாடி மகிழ்வார்.

பதம் 4.6.26 : தேவமகளிர் நீராடும்பொழுது அவர்கள் உடலில் இருந்த குங்குமமும் மஞ்சளும் நீரில் கலந்து அந்நீர் மஞ்சள் வண்ணமும், நறுமணமும் பெறும். அங்கு நீராடுவதற்குத் தங்கள் துணையானப் பெண் யானைகளுடன் ஆண் யானைகளும் வரும். அவை தாகம் கொள்ளாதிருந்தும் அந்நீரைப் பருகும்.

பதம் 4.6.27 : தேவலோகத்தைச் சேர்ந்தவர்களின் புஷ்பக விமானங்கள், பொன், மணி, முத்து போன்ற மதிப்புமிக்க ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். தேவலோக வாசிகள் மின்னலினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மேகங்களைப் போல் தோன்றுவர்.

பதம் 4.6.28 : இவ்வாறு தேவர்கள் பறந்து வரும்பொழுது பல்வண்ண மலர்களும், கனிதரும் மரங்களும், கற்பகவிருட்சங்களும் நிறைந்திருக்கும் சௌகந்திக வனத்தினைக் கடந்து சென்றனர். அவ்வாறு அவ்வனத்தினைக் கடந்து செல்கையில் அவர்கள் யக்ஷேஸ்வரத்தின் பகுதிகளையும் கண்டனர்.

பதம் 4.6.29 : அத்தெய்வீக வனத்தில் கழுத்தில் சிவப்பு வண்ணம் கொண்ட பறவைகள் தேனீக்களின் ரீங்காரத்தோடு போட்டி போட்டிக் கொண்டு இனிய குரலில் பாடிக் கொண்டிருந்தன. அந்த ஏரிகள் உறுதியான தண்டினை உடைய தாமரை மலர்களினாலும், ஒலியெழுப்பிக் கொண்டு அங்குமிங்கும் ஓடும் அன்னக் கூட்டங்களினாலும் மிக்க எழில் வாய்ந்ததாக இருந்தன.

பதம் 4.6.30 : இவ்வழகிய இயற்கைச் சூழ்நிலைகளினால் நிலையின்றி காட்டு யானைகள் கூட்டங் கூட்டமாக சந்தன மரங்களுக்கிடையில் திரிந்து கொண்டிருக்கும். அங்கு வீசும் சுகமான தென்றல் காற்றில் மனதைப் பறிகொடுக்கும் தேவமகளிர் மீண்டும் கலவியின்பத்தை நாடுவர்.

பதம் 4.6.31 : குளிக்கும் இடமான படித்துறையும் அதன் படிக்கட்டுக்களும் வைடூரியங்களினால் கட்டப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர். நீர் முழுவதும் தாமரை மலர்களினால் நிறைந்திருந்தது. இதுபோன்ற ஏரிகளைக் கடந்து செல்லும்பொழுது தேவர்கள் ஓரிடத்தினை அடைந்தனர். அங்கு ஒரு பெரிய ஆலமரம் இருந்தது.

பதம் 4.6.32 : அந்த ஆலமரம் எண்ணூறு மைல்கள் உயரமும் அதன் கிளைகள் அறுநூறு மைல்கள் சுற்றளவிற்குப் பரந்தும் விரிந்தும் இருந்தன. அம்மரத்தின் இனிய நிழல் சீதோஷ்ண நிலையினை நிரந்தரமாகக் குளிர்ச்சியடையச் செய்தது. இவ்வாறிருந்தும் அங்கு பறவைகளின் ஒலி என்பதே இல்லை.

பதம் 4.6.33 : அம்மரத்தின் கீழ் சிவபெருமான் அமர்ந்திருப்பதைத் தேவர்கள் கண்டனர். அவரது கோலம் தெய்வீக யோகிகளுக்கு நிறைவினையும், அனைத்து மக்களுக்கும் இரட்சிப்பு அளிக்கும் தன்மை வாய்ந்ததாக இருந்தது. காலத்தின் நித்திய அமைதியினைப் போன்று விளங்கிய அவரது தோற்றம் அவர் தனது ஆத்திரத்தினை விட்டொழித்தவராகக் காட்சி தந்தது.

பதம் 4.6.34 : சிவபெருமானைச் சுற்றி குஹ்யகர்களின் தலைவராகிய தெய்வீக அருள் பெற்ற குபேரனும் முன்னரே முக்தி அடைந்த அவரது நான்கு குமாரர்களும் அமர்ந்திருந்தனர். சிவபெருமான் தெய்வீக அமைதியுடையவராக விளங்கினார்.

பதம் 4.6.35 : சிவபெருமான் புலன்கள், ஞானம், பலன்தரும் செயல்கள், மனநிறைவினை அடைவதற்குரிய பாதை போன்றவற்றின் தலைவரைப் போல வீற்றிருப்பதைத் தேவர்கள் பார்த்தனர். இப்பிரபஞ்சம் முழுவதற்குமே அவர் நண்பராக விளங்கினார். அனைவரிடத்தும் அவர் கொண்ட அன்பின் விளைவாக மிகுந்த மங்கலமுடையவராகவும் விளங்கினார்.

பதம் 4.6.36 : அவர் ஒரு மான் தோலின் மீதமர்ந்து எல்லாவிதமானத் தவங்களையும் மேற்கொண்டிருந்தார். உடல் முழுதும் திருநீறு அணிந்திருந்ததினால் அவர் மாலை நேர மேகத்தினைப் போன்று காட்சியளித்தார். தலைமுடியில் சந்திரனது இளம்பிறையினை அடையாளமாக அணிந்திருந்தார்.

பதம் 4.6.37 : தர்ப்பைப்புல்லினால் செய்யப்பட்ட பாயின் மீது அமர்ந்து கொண்டு, நாரதர் உள்ளிட்ட அங்கு குழுமியிருந்தவர்களிடம் அவர் உரையாடிக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக அவர் நாரத முனிவரிடம் முழுமெய்ப்பொருளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்.

பதம் 4.6.38 : அவர் தனது இடது காலை வலது தொடையின் மீது இட்டும், இடது கரத்தினை இடது தொடையின் மீது வைத்தும் காட்சி தந்தார். தனது வலது கையில் உருத்திராட்ச மாலையினை வைத்திருந்தார். இவ்வாறு அமர்ந்திருக்கும் நிலை வீராசனம் எனப்படும். அவர் வீராசன நிலையில் அமர்ந்து தனது விரலினை தர்க்க முத்திரையில் வைத்திருந்தார்.

பதம் 4.6.39 : அனைத்து முனிவர்களும், இந்திரன் தலைமையின் கீழுள்ள அனைத்துத் தேவர்களும் கூப்பிய கரங்களுடன் சிவபெருமானுக்குத் தங்கள் வந்தனங்களை அர்ப்பணித்தனர். சிவபெருமான் இடையில் காவியுடை தரித்து யோக சமாதியில் ஆழ்ந்திருந்தார். அவரது தோற்றம் அனைத்து முனிவர்களைக் காட்டிலும் மிகவும் உயர்வானதாகக் காட்சியளித்தது.

பதம் 4.6.40 : சிவபெருமானின் திருவடித் தாமரைகளோ தேவர்களாலும் அசுரர்களாலும் துதிக்கப்படுகின்றன. அத்தனை மேன்மை மிக்கவராக அவர் இருந்தும் தேவர்களுடன் சேர்ந்து பிரம்மதேவனும் வருகைபுரிந்ததைக் கண்டவுடன் விரைந்து எழுந்து, பிரம்மதேவனின் திருவடித் தாமரைகளை, எவ்வாறு வாமனதேவர் காச்யப முனிவருக்குத் தனது மரியாதைமிக்க வந்தனங்களைத் தெரிவித்தாரோ அதுபோன்று, சிவபெருமானும் தனது தலை தாழ்ந்து அவரது திருவடித் தாமரைகளைத் தொட்டு வணங்கித் தனது மரியாதையினைத் தெரிவித்தார்.

பதம் 4.6.41 : சிவபெருமானுடன் அமர்ந்திருந்த நாரதர் உள்ளிட்ட அனைத்து முனிவர்களும் தமது மரியாதைக்குரிய வந்தனங்களைப் பிரம்ம தேவனுக்குச் சமர்ப்பித்தனர். இவ்வாறு அனைவராலும் வணங்கப்பட்டப் பிறகு புன்னகையுடன் பிரம்மதேவன் சிவபெருமானிடம் கூறத் தொடங்கினர்.

பதம் 4.6.42 : பிரம்மதேவன் கூறினார்: எனதன்பிற்குரிய சிவபெருமானே, நீரே பௌதீகத் தோற்றம் அனைத்தையும் நெறிப்படுத்துபவர் என்பதும், பிரபஞ்சத்தை ஈன்றெடுத்த அம்மையப்பன் என்பதும், அப்பிரபஞ்சத் தோற்றத்தினையும் கடந்த பரப்பிரம்மம் என்பதையும் நான் நன்கறிவேன். நான் உம்மை இவ்வாறே அறிகிறேன்.

பதம் 4.6.43 : எனதன்பான பகவானே! உமது சுயவிரிவினால் நீரே இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிக்கவும் செய்கின்றீர், எதுபோலென்றால் சிலந்தி எவ்வாறு தனது மெல்லிய வலையினைப் படைத்துக் காத்து அழிக்கின்றதோ அது போன்று.

பதம் 4.6.44 : எனதன்பிற்குரிய பகவானே! தாங்கள் அறிமுகப்படுத்திய வேள்விகளுக்கு தக்கனைச் செயல் முதல்வராக்கினீர். இதன்மூலம் ஒருவன் தர்மச் செயல்களின் நன்மைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பயன்களைப் பெறலாம். தங்கள் ஒழுங்குமுறை விதிகளின் கீழ் நான்கு வகையான வர்ணாஸ்ரம தர்மங்கள் மதிக்கப்படுகின்றன. ஆகையினால் அந்தணர்கள் இம்முறையினைக் கடுமையாகப் பின்பற்ற உறுதி மேற்கொண்டுள்ளனர்.

பதம் 4.6.45 : அவரவர் செய்யும் புண்ணியச் செயலுக்குத் தகுந்தாற்போல் அவர்களுக்கு தேவலோகமோ ஆன்மீக வைகுந்த லோகமோ அல்லது அருவ பிரம்ம ஜோதியில் கலத்தலையோ நீர் விதிக்கின்றீர். இதுபோன்று பாவிகளுக்கு அதிபயங்கரமும், கொடூரமும் நிறைந்த பல்வேறு நரகங்கள் கிடைக்குமாறு செய்கின்றீர். இதற்கு முற்றிலும் நேர்மாறாகவும் சிலர் சொர்க்கமோ நரகமோ அடையுமாறும் செய்கின்றீர். இதன் காரணம் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கின்றது.

பதம் 4.6.46 : எனது அன்பிற்குரிய பகவானே, தமது வாழ்வினையே உமது திருவடித் தாமரைகளில் அர்ப்பணித்து, நீரே பரமாத்வாக எல்லா உயிர்களிடத்தும் விளங்குகிறீர் என்று கருதி பக்தர்கள் யாரிடத்தும் வேறுபாடு காணாதிருப்பார். இது போன்றவர்கள் எல்லோரையும் சரி சமமாக நடத்துபவர். அவர்கள் சினத்தினால், எல்லாவற்றையும் வேறுபாடாகப் பார்க்கும் விலங்குகளாக மாறமாட்டார்கள்.

பதம் 4.6.47 : எல்லாவற்றிலும் வேற்றுமை காண்பவர்கள் பலன்தரும் செயல்களின் மீது பற்றுடையோராகவும், சிறு மதியினராகவும், பிறர் உயர்வு கண்டு அழுக்காறுடைய மனத்தினராகி அவர்களைக் கடுஞ்சொற்களால் காயப்படுத்துப்பவராகவும் உள்ளனர். அவர்கள் ஏற்கெனவே தெய்வவிதியால் கொல்லப்பட்டோராவர். ஆகையினால் அவர்கள் மீண்டும் உம் போன்ற தன்னேரில்லாதவர்களினால் கொல்லப்பட வேண்டிய தேவையில்லாதவர்கள்.

பதம் 4.6.48 : எனது அன்பான பகவானே, சில இடங்களில் லோகாயதவாதிகள் முழுமுதற் கடவுளின் கடப்பதற்கரிய மாயா சக்தியினால் மிக்க குழப்பமுற்று சிலநேரங்களில் தவறு செய்கின்றனர். ஆனால் இதனைத் தெய்வீக அருளாளர்கள் தங்கள் கருணையினால் கடுமையாகக் கருதுவதில்லை. அவர்கள் மாயையினால் பாதிக்கப்பட்டு இதனைச் செய்கின்றனர் என்று அறிந்து கொண்டிருப்பதினால் அதற்கெதிராக இவர்கள் தங்கள் சக்தியினைக் காட்டுவதில்லை.

பதம் 4.6.49 : எனதன்பான பகவானே, முழுமுதற் கடவுளின் வெல்வதற்கரிய மாயா சக்தியின் பாதிப்பினால் நீர் குழப்பமடைவதே கிடையாது. ஆகையினால் எல்லாம் அறிந்த நீர் அதே மாயா சக்தியினால் குழப்பமுற்றவர்களிடமும், பலன் தரும் செயல்களின் மீது மிகவும் பற்றுடையோர்களிடமும் கருணையுடனும், இரக்கத்துடனும் நடந்து கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

பதம் 4.6.50 : எனது அன்பிற்குரிய பகவானே, வேள்வியின் அவிர்பாகத்தினைப் பெறும் பங்குதாரர் நீர்; வேள்வியின் பயனைக் கொடுப்பவரும் நீரே. அங்கிருந்த தீய புரோகிதர்கள் உமக்குரிய அவிர்பாகத்தினை அளிக்கவில்லை. ஆதலினால் எல்லாவற்றையும் நீங்கள் அழித்தீர்கள். இப்போது அவ்வேள்வி நிறைவேறாமல் இருக்கிறது. எனவே நீர் தேவையானதைச் செய்து உமக்குரிய அவிர்ப்பாகத்தினைப் பெறுவீராக.

பதம் 4.6.51 : எனதன்பான பகவானே, உமது அளவற்ற கருணையினால் வேள்வியின் தலைவரான தக்கன் மீண்டும் உயிர் பெறவும் பகன் இழந்த தன் கண்களை மீண்டும் பெறவும், பிருகு முனிவர் தன் மீசையினையும் பூஷன் தன் பற்களையும் மீண்டும் பெறவேண்டும்.

பதம் 4.6.52 : ஓ, சிவபெருமானே உமது கருணையினால், உமது வீரர்களினால் உடற்குறைவுபட்ட தேவர்களும், புரோகிதர்களும் தங்கள் காயங்களில் இருந்து குணமடைதல் வேண்டும்.

பதம் 4.6.53 : ஓ, வேள்வியினை அழித்தவரே, வேள்வியில் உமக்குரிய அவிர்பாகத்தினைப் பெற்று உமது கருணையினால் அவ்வேள்வியினை நிறைவேற்றி வைப்பீராக.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare