அத்தியாயம் – 4
சதீ தன் உடலைத் துறத்தல்
பதம் 4.4.1 : மைத்ரேய முனிவர் கூறினார்: சதீயிடம் பேசிய பிறகு சிவபெருமான் அவள் எம்முடிவும் எடுக்க வொண்ணாது திண்டாடுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்: தனது உறவினர்களைக் காணவேண்டும் என்னும் அளவுகடந்த ஆவல் ஒருபுறமும், சிவபெருமானின் எச்சரிக்கை மறுபுறமும் நெருக்க இவற்றிற்கிடையில் அமைதியற்ற மனத்தினளாய் ஒரு ஊஞ்சலைப் போல் அவ்வறையின் உள்ளும் வெளியும் அலைந்து கொண்டிருந்தாள்.

பதம் 4.4.2 : பாசத்தோடு தனது உறவினர்களைக் காணத் தனது தந்தையின் இல்லத்திற்குச் செல்லுவதற்குரிய விருப்பத்துக்கு எதிரான தடையினால் சதீயின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. அழுகையும் விம்மலும் கொண்டு அவள் தன் கீர்த்தி பெற்றக் கணவனை நோக்கினாள். அப்பார்வை சிவபெருமானைத் தூள் தூளாக்கப்பட்ட தன்மை உடையதாயிருந்தது.

பதம் 4.4.3 : அதன்பின்னர் தனது உடலில் பாதியினைப் பாசமுடன் தனக்களித்தத் தன் கணவரான சிவபெருமானை விட்டு சதீ பிரிந்தாள். சினத்தினாலும் இழப்பினாலும் அவளுக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியது. இவ்வாறு அவள் தன் தந்தையின் இல்லத்திற்குச் சென்றாள். அவளது புத்தியற்ற இச்செயல் பெண்களுக்கேயுரிய மென்மையினால் விளைந்ததாகும்.

பதம் 4.4.4 : சதீ தனியாகவும் மிகவும் வேகமாகவும் அங்கிருந்து வெளியே செல்வதைக் கண்ட மணிமான், மதன் மற்றும் அவர்களின் கீழுள்ள ஆயிரக்கணக்கான அவரது பக்தர்கள், யட்சர்கள் துணைவர அவரது வாகனமான நந்தியுடன் அவளைப் பின் தொடர்ந்தனர்.

பதம் 4.4.5 : சிவபெருமானின் பக்தர்கள் சதீயிடம் அவளது செல்லக் கிளியினை அவள் கரங்களில் கொடுத்து அவளை ஒரு காளை மாட்டின் மீது அமரச் செய்தனர். அவர்கள் தாமரை மலர், கண்ணாடி மற்றும் இதுபோன்ற அழகு சாதனங்களை எடுத்துக்கொண்டு மிகப் பெரிய வெண்கொற்றக்குடையினை அவள் தலைக்கு மேல் பிடித்து கொண்டனர். சங்கு, துந்துபி, எக்காளம் போன்ற இசைக் கருவிகளுடன் கூடிய இசைக்குழுவினர் பின் தொடர அவர்கள் அனைவரும் ஆரவாரத்துடன் அரச ஊர்வலம் போல் சென்றனர்.

பதம் 4.4.6 : அவள் வேள்வி நடைபெறும் தனது தந்தையின் இல்லத்தை அடைந்து, எல்லோரும் வேத மந்திரங்கள் முழங்கிக் கொண்டிருந்த வேள்விச் சாலைக்குச் சென்றாள். அங்கே மகா முனிவர்கள், அந்தணர்கள் மற்றும் தேவர்கள் வீற்றிருந்தனர். மேலும் அங்கே பலியிடப்படும் விலங்குகளும் அதுபோல் களிமண்ணால் செய்யப்பட்டக் கலசங்களும், கற்களும், தங்கமும், புல்லும், தோலும் வேள்விக்குரிய பிற பொருட்களும் நிரம்பியிருந்தன.

பதம் 4.4.7 : சதீ தன் அடியவர்களுடன் வேள்விச் சாலையினுள் நுழைந்த பொழுது தட்சன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக அங்கிருந்த யாரும் அவளை வரவேற்கவில்லை. ஆனால் அவளது தாயும், சகோதரிகளும் கண்ணீர் நிறைந்த விழிகளுடனும், மகிழ்ச்சியுடனும் அவளை வரவேற்று இனிமையாக உரையாடினர்.

பதம் 4.4.8 : தனது தாயினாலும், சகோதரிகளினாலும் அவள் வரவேற்கப்பட்டும் அவள் அவர்களிடம் ஒன்றும் பேசவில்லை, அழகானப் பரிசுப் பொருட்களும், அமர்வதற்கு இருக்கையும் அளிக்கப்பட்டும் அவள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. அவளது தந்தை அவளை வரவேற்கவோ உபசார மொழிகள் கூறவோ இல்லை என்பதுவே அதற்குக் காரணமாகும்.

பதம் 4.4.9 : வேள்விச் சாலையினைப் பார்த்த சதீ அங்கே தன் கணவரான சிவபெருமானுக்குரிய அவிர்பாகம் இல்லாதிருப்பதனைக் கண்டாள். சிவபெருமானை அவ்வேள்விக்குத் தன் தந்தையான தட்சன் அழைக்காததோடு அவரது மேன்மைமிக்க மனைவியானத் தன்னை அவர் வரவேற்காததினையும் அடுத்து அவள் உணர்ந்து கொண்டாள். இதனால் எழுந்த ஆத்திரத்தின் விளைவாக அவள் தனது தந்தையை எரித்து விடுவதைப்போல் பார்த்தாள்.

பதம் 4.4.10 : சிவபெருமானின் அடியவர்களும், பூத கணங்களும் தட்சனைத் தாக்கி அழிப்பதற்குத் தயாரானபொழுது சதீயின் கட்டளையினால் அவர்கள் தடுக்கப்பட்டனர். அவள் மிகுந்த ஆத்திரத்துடனும், வருத்தத்துடனும் வேள்வியின் பலன்தரும் செயல்களையும், இத்தேவையற்ற துன்பமிக்க வேள்விகளால் அதீத ஆணவமுற்ற மனிதர்களையும் கண்டிக்கத் தொடங்கினாள். குறிப்பாகத் தன் தந்தையினையே அவள் அனைவரின் முன்னிலையிலும் கண்டித்துப் பேசினாள்.

பதம் 4.4.11 : தேவி கூறினாள்: உயிர்கள் அனைத்தினும் போற்றுதலுக்குரியவர் சிவபெருமான். அவருக்குப் பகையே கிடையாது. நெருங்கிய அன்பர்களும் இல்லை. எதிரிகளும் இல்லை. எல்லாப் பகைகளில் இருந்தும் விடுதலை பெற்ற அவ்வுலகளாவிய ஒருவரிடம் உம்மைத் தவிர வேறு யார் காழ்ப்புணர்ச்சி கொள்வர்?

பதம் 4.4.12 : இரு பிறப்பாளனாகிய தட்சனே உம்மைப் போன்ற மனிதரே அடுத்தவர்களிடம் மிக எளிதில் குறை காண்பர். சிவபெருமானோ மற்றவர்களிடம் குறை காணாததோடு, அவர்களிடம் ஏதேனும் சிறிய நல்ல குணம் இருந்ததென்றால் அதனை மிகவும் பெரிதுபடுத்திப் போற்றுவார். தீவினை வயத்தால் அம்மகாத்மாவிடம் குற்றம் காண்கிறீர்.

பதம் 4.4.13 : அழியக்கூடிய உடலினையே ஆத்மாவாக ஏற்றுக் கொண்ட மனிதர்கள் மகாத்மாக்களைத் தூற்றுவதையே எப்பொழுதும் தங்கள் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர் என்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. லோகாயதவாதியிடம் இருக்கும் இக்காழ்ப்புணர்ச்சி மிகவும் நல்லதுதான். அதனால்தானே அவர்கள் கீழே விழுகின்றனர். மகாத்மாக்களின் பாததூசியே அவர்களை அழித்துவிடும்.

பதம் 4.4.14 : சதீ தொடர்ந்து கூறினாள்: எனது அன்பான தந்தையே, நீர் சிவபெருமான் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டதின் மூலம் மிகப்பெரியத் தவறைச் செய்திருக்கிறீர். ‘சி’ மற்றும் ‘வ’ என்னும் இரண்டெழுத்துக்களுடைய சிவ என்னும் நாமம் ஒருவரது எல்லாப் பாவங்களையும் நீக்குகிறது. அவரது ஆணைகள் புறக்கணிக்கப்பட முடியாதவை. சிவபெருமான் எப்போதும் தூய்மையானவர். அவர் மீது உம்மைத் தவிர வேறு யாராலும் காழ்ப்புணர்ச்சி கொள்ள முடியாது.

பதம் 4.4.15 : மூவுலகிலும் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் நண்பரான சிவபெருமானிடம் நீர் காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கிறீர். சாதாரண மனிதனின் எல்லா விருப்பங்களையும் அவர் நிறைவேற்றுகிறார். அவரது திருவடித் தாமரைகளையே நினைத்துக் கொண்டிருக்கும் காரணத்தினால் அவர் பேரானந்தத்தை நாடும் உயர்ந்த சான்றோர்களுக்கும் கூட அருள் வழங்குகிறார்.

பதம் 4.4.16 : சிவபெருமான் என்னும் பெயருடையவர் மிகவும் அமங்கலமானவர் என்று உம்மைக் காட்டிலும் உயர்ந்தவரான பிரம்மதேவன் போன்றவர்களுக்குத் தெரியாது என்று நீர் நினைக்கின்றீரா? அவர் சுடுகாட்டுப் பேய்களுடன் தொடர்புடையவர்; அவரது தலையிலுள்ள ஜடா முடிகள் அவர் உடல் எங்கும் பரந்திருக்கும்; சுடுகாட்டுச் சாம்பலை உடல் முழுவதும் பூசி, மண்டையோடுகளை மாலையாக அணிந்திருப்பவர். இது போன்ற அமங்கலச் சின்னங்கள் அனைத்தும் அவரிடம் இருந்தாலும் பிரம்மதேவன் போன்ற மிக உயர்ந்தவர்கள் கூட சிவபெருமானது திருவடித் தாமரைகளில் இருந்து விழும் மலர்களைத் தம் தலைமீது வைத்து அவரைப் பெருமைப்படுத்துகின்ற உண்மை நீர் அறியாததா?

பதம் 4.4.17 : சதீ தொடர்ந்து கூறினாள்: சமய நெறியாளரையும், ஈசனையும் பொறுப்பற்ற தன்மையில் ஒருவன் நிந்திக்கும்போது அவனைத் தண்டிக்க இயலாதவன் தன் கைகளினால் இரு செவிகளையும் மூடிக் கொண்டு அவ்விடத்தை விட்டு விலக வேண்டும். ஆனால் அவனைக் கொல்லும் வலிமை ஒருவனுக்கு உண்டென்றால், தூற்றியவனின் நாவினைத் துண்டித்து அவனைக் கொல்வதோடு தானும் தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்.

பதம் 4.4.18 : ஆகையினால் சிவபெருமானை நிந்தித்த உம்மால் தரப்பட்ட பயனற்ற எனதுடலை இனிமேலும் நான் சுமந்து கொண்டிருக்கமாட்டேன். நஞ்சு கலந்த உணவை உண்டவனுக்குச் சிறந்த சிகிச்சை வாந்தியெடுத்தலேயாகும்.

பதம் 4.4.19 : பிறரைக் குறை கூறுவதைக் காட்டிலும் தனது பணி முறைகளின் வழியே நடத்தல் நன்றாம். தாங்கள் பின்பற்றுவதற்குத் தேவையில்லை என்பதால் மகாமுனிவர்கள் சிலசமயம் வேதங்கள் கூறும் ஒழுங்கு முறை விதிகளைப் புறக்கணிக்கின்றனர். இது சாதாரண மனிதர்கள் பூமியின் மேற்பரப்பில் நடந்து செல்ல தேவர்கள் வானத்தில் சஞ்சரிப்பது போன்றதாகும்.

பதம் 4.4.20 : வேதங்களில் இரண்டுவிதமான செயல்களுக்கு வழி முறைகள் உள்ளன. உலக இன்பத்தில் பற்றுடையோரின் செயல்கள் மற்றும் உலக இயல்பினைத் துறந்தவர்களின் செயல்கள் என்று. இவ்விரண்டு விதமான செயல்களையும் கவனிக்கும்பொழுது வெவ்வேறு விதமான அடையாளங்களுடன் கூடிய இரண்டு வகையான மனிதர்கள் இருக்கின்றனர் என்று தெரிகிறது. இரண்டு விதமான செயல்களையும் ஒரே மனிதரிடம் காண விரும்பினால் அது முரண்பாடாகும். ஆனால் உன்னத நிலையில் இருக்கும் ஒருவனால் இவ்விரண்டு விதமான செயல்களும் புறக்கணிக்கப்படலாம்.

பதம் 4.4.21 : எனதருமைத் தந்தையே, எங்களிடம் இருக்கும் செல்வவளம் உங்களாலும் உங்களைப் புகழ்வோராலும் கற்பனையில் கூடக் காண முடியாததாகும். நீங்கள் எல்லாம் வேள்விகளில் அர்ப்பணிக்கப்படும் உணவினை உண்டு உங்கள் உடல் தேவைகளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற பெரிய வேள்விகளைச் செய்யும் பலன்தரும் செயல்களில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். நாங்கள் நினைத்தால் எங்கள் செல்வ வளத்தினை வெளிப்படுத்த முடியும். அது துறவிகள் மற்றும் தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள் போன்ற சான்றோர்களினால் மட்டுமே அடையக் கூடியதாகும்.

பதம் 4.4.22 : நீர் சிவபெருமானின் திருவடித் தாமரைகளிடத்து குற்றம் புரிந்தவர் ஆவீர். தீவினைப் பயனால் உமக்கு நான் பிறந்திருக்கிறேன். உடலினால் நமக்குள் ஏற்பட்ட சொந்தத்தினை நான் அவமானமாகக் கருதுகிறேன். மேலும் மிகவுயர்ந்த சான்றோரின் திருவடித் தாமரையினிடத்துக் குற்றம் புரிந்த ஒருவரிடமிருந்து பிறந்த எனது உடலை மாசுடையது என்று கருதி என்னை நானே நிந்தித்துக் கொள்ளுகிறேன்.

பதம் 4.4.23 : நமது குடும்ப உறவின் காரணமாக சிவபெருமான் என்னைத் தாட்சாயணீ என்று அழைக்கும் பொழுது நான் துக்கமுறுவேன். உடனே எனது மகிழ்ச்சியும், புன்னகையும் என்னிடமிருந்து மறைந்து விடும். ஒரு பையினைப் போலிருக்கும் எனது உடல் உங்களுக்குப் பிறந்ததை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன். ஆகையினால் இவ்வுடலை நான் துறப்பேன்.

பதம் 4.4.24 : மைத்ரேய முனிவர் விதுரரிடம் கூறினார்: ஓ பகைவரை அழிக்கும் விதுரரே! தட்சனுடன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த சதீ அவ்வேள்விச்சாலையின் தரையில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்தாள். காவி நிற உடை அணிந்து, தண்ணீரில் தன்னைத் தூய்மை செய்து, கண்களை மூடித் தெய்வீக யோக நிலையோடு தன்னை இணைத்துக் கொண்டாள்.

பதம் 4.4.25 : முதற்கண் அவள் தேவையான நிலையில் அமர்ந்தாள். பின்னர் உயிர்க்காற்றை (உதான வாயுவை) உந்திச் சுழியின் அருகில் சமமான நிலையில் வைத்தாள். இவ்வாறு உயிர்க்காற்றைப் புத்தியுடன் கலந்து இதயத்திற்குக் கொண்டு வந்து பின்னர் படிப்படியாக நுரையீரல் பாதையில் நிறுத்தி அங்கிருந்து புருவங்களின் மத்திக்குக் கொண்டு வந்தாள்.

பதம் 4.4.26 : மகா முனிவர்களினாலும், தேவர்களினாலும் வணங்கப்படும் சிவபெருமான் சதீயின் மீது கொண்ட அன்பின் விளைவாக அவளது உடலுக்குத் தன் இடப்பாகத்தை இருப்பிடமாகத் தந்து மரியாதை செய்தார். அப்படிப்பட்ட உடலை தனது தந்தையின் மீது கொண்ட ஆத்திரத்தினால் அழிக்க எண்ணி அதனுள் இருக்கும் நெருப்புக் காற்றை தியானித்தாள் சதீ.

பதம் 4.4.27 : உலகனைத்திற்கும் ஞான குருவாக விளங்கும் தனது கணவரான சிவபெருமானின் திருவடித் தாமரைகளின் மீது தன் சிந்தையனைத்தையும் செலுத்தி சதீ தியானித்தாள். அதனால் அவள் தனது பாவங்கள் எல்லாம் நீங்கி முற்றிலும் தூய்மை பெற்றாள். மேலும் அவள் அக்கினியைத் தியானித்து அதன் மூலம் எழுந்த தீப்பிழம்பில் தனது உடலைத் துறந்தாள்.

பதம் 4.4.28 : சதீ ஆத்திரத்தினால் தனது உடலை அழித்தபோது இப்பிரபஞ்சம் முழுவதும் ஓர் ஆரவார ஒலி ஏற்பட்டது. மிகவுயர்ந்த தேவரான சிவபெருமானின் துணைவியான சதீ இம்முறையில் ஏன் தன் உடலைத் துறக்க வேண்டும்?

பதம் 4.4.29 : பிரஜாபதியாகவும் அனைத்து உயிர்களின் பாதுகாவலனாகவும் இருந்த தட்சன் கற்புக்கரசியும் உயர்ந்த ஆன்மாவாகவும் விளங்கிய தன் மகளான சதீயிடம் அவமரியாதையாக நடந்து கொண்டது வியத்தற்குரியதே. தனது தந்தை தன்னைப் புறக்கணித்ததின் காரணமாகவே அவள் தனது உடலைத் துறந்தாள்.

பதம் 4.4.30 : தட்சன் இவ்வாறு கல்நெஞ்சுக்காரராக விளங்கியமையால் அவர் ஓர் அந்தணராக இருக்கவே தகுதியற்றவரானார். மேலும் தனது மகளிடம் குற்றமிழைத்ததினாலும், அவளை மரணத்தினின்று காப்பாற்றாமையினாலும், முழுமுதற் கடவுளிடம் காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தமையாலும் தட்சன் உலகம் முழுவதும் பெரும் பழியினைத் தேடிக் கொண்டார்.

பதம் 4.4.31 : சதீ தானாகவே தனது உயிரை மாய்த்துக் கொண்ட அற்புதத்தினை எண்ணி மக்களெல்லாம் வியந்து பேசிக் கொண்டிருந்த பொழுது, அவளோடு வந்த சிவபெருமானின் சேவகர்கள் தட்சனைக் கொல்வதற்காகத் தங்கள் ஆயுதங்களை ஏந்தினர்.

பதம் 4.4.32 : அவர்கள் தாக்குவதற்கு வேகமாக வருவதைக் கண்டு அதன் அபாயத்தினை உணர்ந்த பிருகு முனிவர் வேள்வித் தீயின் தென்திசையில் வேள்விப் பொருட்களை அர்ப்பணித்து வேள்வியினைச் சீர்குலைக்க எண்ணுவோரை அழிக்கும் யசுர் வேத மந்திரங்களை உச்சாடனம் செய்யலானார்.

பதம் 4.4.33 : பிருகு முனிவர் வேள்வித் தீயில் அர்க்கியப் பொருட்களை அர்ப்பணித்தவுடன் அதிலிருந்து ரிபுக்கள் என்றழைக்கப்படும் ஆயிரக்கணக்கான தேவர்கள் தோன்றினர். அவர்கள் அனைவருமே பலமிக்கவர்கள். இச்சக்தியினை அவர்கள் திங்கட் கடவுளான சோமனிடம் இருந்து பெற்றவர்களாவர்.

பதம் 4.4.34 : ரிபுத் தேவர்கள் வேள்வித்தீயில் எரிகொள்ளிகளினால் பேய்களையும், குஹ்யகர்களையும் தாக்கத் தொடங்கியவுடன் சதீயின் காவலர்கள் அனைவரும் பல்வேறு திசைகளில் சிதறி ஓடி மறைந்தனர். இவையெல்லாம் பிரம்ம தேஜஸ் என்னும் அந்தண ஆற்றலினாலேயே நிகழ்ந்தது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare