அத்தியாயம் – 3
சிவபெருமானுக்கும் சதீக்கும் இடையே நடந்த உரையாடல்
பதம் 4.3.1 : மைத்ரேயர் தொடர்ந்தார்: இவ்வாறாக மாமனாரான தட்சனுக்கும், மருமகனான சிவபெருமானுக்கும் இடையில் நிலவிய பதற்றநிலை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தது.

பதம் 4.3.2 : அனைத்து முன்னோர்களின் அதிபதியாக தட்சனைப் பிரம்ம தேவன் நியமித்ததினால் தட்சன் கர்வமிக்கவரானார்.

பதம் 4.3.3 : வாஜபேயம் என்னும் வேள்வியினைத் தொடங்கிய தட்சன் பிரம்ம தேவனின் ஆதரவின் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதன்பிறகு அவர் பிரகஸ்பதி ஸவம் என்னும் பெரிய வேள்வியினைச் செய்தார்.

பதம் 4.3.4 : வேள்வி நடைபெற்றபொழுது, ஏராளமான பிரம்ம ரிஷிகள், மகாமுனிவர்கள், பித்ருதேவதைகள், மற்றும் தேவர்கள் அனைவரும் அணிமணிகளினால் நன்கு அலங்கரிக்கப்பட்ட தங்கள் மனைவிகளுடன் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர்.

பதங்கள் 4.3.5 – 4.3.7 : வானில் பறந்து வந்துகொண்டிருந்த தேவமகளிர் தட்சன் நடத்தும் மிகப்பெரிய வேள்வியினைப் பற்றித் தங்களுக்குள் பேசிக் கொண்டது அவரது புதல்வியான கற்புக்கரசி சதீயின் செவிகளில் விழுந்தது. ஒளிமிகுந்த கண்களுடனும், கண்ணைப்பறிக்கும் ஆடைகளுடனும் முத்து, பவளம், வைரம் போன்றவை பதித்தக் காதணிகளும், பதக்கங்களுடன் கூடிய கழுத்தணிகளும் அணிந்து கொண்டு அழகுமிகு தேவமகளிர் தட்சனின் வேள்வியில் கலந்து கொள்வதற்காக தனது இல்லத்தின் மேலாக வானில் பறந்து செல்வதைக் கண்ட சதீ உணர்ச்சிவயப்பட்டவளாக, பூதகணங்களின் தலைவரான தனது கணவனை அணுகி கீழ்க்கண்டவாறு பேசலானாள்.

பதம் 4.3.8 : சதீ கூறினாள்: அன்பிற்குரிய சிவபெருமானே! தங்கள் மாமனார் இப்போது பெரும் வேள்வியினைச் செய்து கொண்டிருக்கின்றார். அதில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட அனைத்துத் தேவர்களும் அங்கே போய்க் கொண்டிருக்கின்றனர். தாங்கள் விரும்பினால் நாமும் அங்கே செல்லலாம்.

பதம் 4.3.9 : எனது சகோதரிகள் அனைவரும் தங்கள் கணவன்மார்களுடன் தங்கள் உறவினர்களைக் காண்பதற்காக நிச்சயம் இவ்வேள்வியில் கலந்து கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன். நானும் எனது தந்தை எனக்குச் சீதனமாகத் தந்த ஆபரணங்களினால் என்னை அலங்கரித்துக் கொண்டு தங்களுடன் சேர்ந்து அங்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

பதம் 4.3.10 : அங்கே தனது சகோதரிகள், எனது அன்னையின் சகோதரிகள் மற்றும் அவர்களது கணவர்கள், என் மீது பாசமுள்ள உறவினர்கள் அனைவரும் இருப்பர். அங்கே சென்றால் அவர்களை ஒரு சேரக் காண இயலும், மேலும் அங்கே பறந்து கொண்டிருக்கும் வண்ணக் கொடிகளையும், முனிவர்கள் செய்யும் வேள்விச் சடங்குகளையும் கூடக் காண இயலும். எனவே இங்கே செல்வதற்கு நான் அதிகம் விரும்புகிறேன்.

பதம் 4.3.11 : இந்த உலகமானது ஜட இயற்கையின் முக்குணங்களின் எதிரெதிர் செயல் விளைவினால் அல்லது பரமபுருஷ பகவானின் புறச் சக்தியினால் வந்த வியத்தகு படைப்பாகும். இவ்வுண்மை நீங்கள் அறியாததல்ல. ஆனால் நானோ இதையெல்லாம் அறிய முடியாத ஏழைப் பெண். மெய்யறிவில் நான் தேர்ச்சி பெற்றவள் அல்ல. ஆகையினால் எனது பிறந்த இடத்தினை மீண்டும் ஒருமுறை காண்பதற்கு விழைகிறேன்.

பதம் 4.3.12 : ஓ, பிறப்பிலியே, ஓ, நீலகண்டரே, எனது உறவினர்கள் மட்டுமல்ல, மற்றப் பெண்களும் ஆடை, அணிமணிகளினால் தங்களை அலங்கரித்துக் கொண்டு தங்கள் கணவர்களுடனும், நண்பர்களுடனும் அங்கே சென்று கொண்டிருக்கின்றனர். வெண்மை நிற அன்னப்பறவைகளைப் போல் வானில் பறக்கும் அவர்களது விமானக்கூட்டங்கள் பார்ப்பதற்கு எத்துணை ரம்மியமாக இருக்கிறது!

பதம் 4.3.13 : தேவர்களில் சிறந்தவரே! தனது தந்தையின் இல்லத்தில் ஒரு விழா நடக்கப்போவதைக் கேள்விப்பட்டப் பிறகும் கூட ஒரு மகளின் உடல் எவ்வாறு துடிக்காதிருக்கும்? நம்மை அழைக்கவில்லையே என்று நீங்கள் நினைக்கலாம், அழைப்பில்லாவிட்டால் கூட ஒருத்தி தனது கணவன், நண்பன், குரு மற்றும் தந்தையின் இல்லத்திற்குச் செல்வதில் எந்தவிதத் தவறும் இல்லை.

பதம் 4.3.14 : என்றும் அழியாத சிவபெருமானே, என்மீது கருணை கொண்டு எனது விருப்பத்தினை நிறைவேற்றுங்கள். தங்கள் உடலில் பாதியினை எனக்களித்துள்ளீர்கள். என்னிடத்தில் கருணை கொண்டு எனது வேண்டுகோளினை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.

பதம் 4.3.15 : மைத்ரேய மாமுனிவர் கூறினார்: கைலாய மலையின் அதிபதியான சிவபெருமான் தனது மனைவியின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு புன்னகையுடன் பதில் கூறினார். ஆனாலும் அவர் தட்சன் உலகப்பிரஜாபதிகளின் முன்னர் தன்னைப் பற்றிக் கூறிய இதயத்தைக் கிழிக்கும், வஞ்சின மொழிகளையும் நினைத்துக் கொண்டார்.

பதம் 4.3.16 : மேன்மைமிகு பகவான் பதில் கூறினார்: எனது அன்பிற்குரிய அழகான மனைவியே, அழைப்பில்லாமலேயே ஒருவன் தன்னுடைய நண்பனின் இல்லத்திற்குப் போகலாம் என்று நீ கூறியது முற்றிலும் உண்மையே. அதுவும் அவன் உடலின் அடையாளம் காரணமாக தனது விருந்தினனிடம் குற்றம் கண்டு, அதன் மூலம் அவனிடம் சினம் கொள்ளாதவனாக இருக்கும்பொழுது மட்டுமே.

பதம் 4.3.17 : கல்வி, தவம், செல்வம், அழகு, இளமை மற்றும் குடிப்பிறப்பு என்னும் ஆறு குணங்களும் உயர்ந்தோர்க்குரியனவாக இருந்த போதிலும் அவற்றைப் பெற்றுவிட்டோம் என்னும் கர்வத்தினால் ஒருவர் கருத்துக்குருடர் ஆகிறார். அதனால் அவர் தனது நற்குணங்களை இழக்கிறார். மேலும் மிகச் சிறந்த மகாத்மாக்களின் பெருமைகளைக் கூட அவர்களால் பாராட்ட முடிவதில்லை.

பதம் 4.3.18 : அவர் உறவினராயிருந்தாலும் அல்லது நண்பராயிருந்தாலும் அவர் மனநிலை குலைந்து, வரும் விருந்தினரை முகம் திரிந்து ஆத்திரத்துடன் நோக்கக் கூடியவராயின் அவரது இல்லத்திற்கு ஒருவரும் செல்லக்கூடாது.

பதம் 4.3.19 : சிவபெருமான் தொடர்ந்து கூறினார்: பகைவனது வில்லில் இருந்து வந்து தாக்கிய அம்பு ஒருவனுக்கு ஏற்படுத்தும் துன்பத்தினைக் காட்டிலும், அன்பில்லாத உறவினரின் சுடு சொற்கள் ஏற்படுத்தும் துன்பம், இரவும் பகலும் ஒருவனை வருத்திக் கொண்டே இருக்கும்.

பதம் 4.3.20 : பால் போன்று வெண்மை நிறமுடைய மனைவியே! தட்சன் தனது புதல்விகளிலேயே உன்னிடந்தான் அதிக அன்பு வைத்திருக்கிறார் என்பதை நான் நன்கறிவேன். ஆனாலும் எனது மனைவியாக நீ இருப்பதினால் அங்கு உனக்கு உரிய மரியாதை கிடைக்காது. என்னோடு கொண்டிருக்கும் தொடர்பினால் நீ வருந்த வேண்டி இருக்கும்.

பதம் 4.3.21 : வீண் ஆணவம் கொண்டு மனத்திலும், புத்தியிலும் அமைதியற்றிருப்போர் தன்னை உணர்ந்தோரின் பெருமையினைப் பெறார். தன்னை உணரும் நிலைக்கு உயர முடியாத அசுரர்கள் முழுமுதற் கடவுளிடம் காழ்ப்புணர்ச்சி கொள்வது போன்று தன்னை உணர்ந்த ஞானிகளிடத்தும் காழ்ப்புணர்ச்சி கொள்வர்.

பதம் 4.3.22 : எனது அன்பிற்குரிய இளம் மனைவியே, நண்பர்களும், உறவினர்களும் ஒருவருக்கொருவர் எழுந்து நின்று வரவேற்கவும், வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும், வந்தனங்களைத் தெரிவிக்கவும் செய்கின்றனர். ஆனால் மிகவும் உன்னத நிலையினை அடைந்தவர்களும், புத்திமான்களும், அவ்வுடலினுள் இருக்கும் பரமாத்மாவிற்குத் தங்கள் மரியாதைகளைத் தெரிவிப்பார்களேயன்றி தனது உடலை மட்டுமே அறிந்த ஒருவருக்கல்ல.

பதம் 4.3.23 : எப்போதும் நான் கிருஷ்ண உணர்வினில் பகவான் வாசுதேவருக்கு எனது வணக்கங்களைப் படைக்கிறேன். கிருஷ்ண உணர்வு என்பது தூய்மையானது. அதில்தான் வாசுதேவர் என்றறியப்படும் முழுமுதற் கடவுள் எந்தவித மறைப்புமின்றி வெளிப்படுகிறார்.

பதம் 4.3.24 : ஆகையினால் உன்னைப் பெற்றெடுத்ததின் மூலம் உன் உடலை வளர்த்தவராக இருந்தாலும் நீ அவரைப் பார்ப்பதற்காகச் செல்லக்கூடாது. ஏனெனில் அவரும் அவரது அடியவர்களும் என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளனர். வணங்கத்தக்கவளே, நான் ஏதும் அறியாதவனாக இருந்தும் அவரது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மிகக் கொடிய வார்த்தைகளினால் என்னை அவமதித்தார் என்பது நீ அறிந்ததுதானே!

பதம் 4.3.25 : இவ்வறிவுரைகள் அனைத்தையும் புறக்கணித்து நீ அங்கே போக முடிவு செய்தால், உனது எதிர்காலம் நன்றாயிராது. நீ மிகவும் மரியாதைக்குரியவள், அப்படியிருக்க உனது உறவினர்கள் உன்னை அவமதித்தார்கள் என்றால், அவ்வவமதிப்பானது மரணத்திற்கு இணையானது ஆகும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare