அத்தியாயம் – 8
கர்போதகசாயி விஷ்ணுவிலிருந்து பிரம்மாவின் தோற்றம்
பதம் 3.8.1 : மைத்ரேய மாமுனிவர் விதுரரிடம் கூறினார்: பூரு மகாராஜனின் அரச பரம்பரையினர் பரம புருஷரிடம் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்பதால், அவர்கள் தூய பக்தர்களுக்குத் தொண்டு செய்யும் தகுதியுடையவர்களாவர், நீரும் அதே குடும்பத்தில் பிறந்தவர்தான். என்ன ஆச்சரியம் உமது முயற்சியினால் பகவானின் உன்னத லீலைகள் ஒவ்வொரு வினாடியும் புதிது புதிதாக மாறிக் கொண்டிருக்கின்றன.

பதம் 3.8.2 : மிகக்குறைந்த இன்பத்திற்காக பொருந்துன்பங்களில் சிக்கிக் கொண்டுள்ளவர்களின் நன்மைக்காக, மாமுனிவர்களிடம் பரமபுருஷரால் நேரடியாக பேசப்பட்ட பாகவத புராணத்தைப் பற்றி இப்பொழுது நான் பேச ஆரம்பிக்கப் போகிறேன்.

பதம் 3.8.3 : சில காலங்களுக்கு முன், பாலக முனிவர்களில் தலைமையானவரான சனத் குமாரர் மற்ற மாமுனிவர்களால் சூழப்பட்டவாறு, உம்மைப் போலவே பரமபுருஷரான வாசுதேவனைப் பற்றிய உண்மைகளை அறிய விரும்பி, பிரபஞ்சத்தின் அடியில் அமர்ந்துள்ள பகவான் சங்கர்ஷணரிடம் விசாரணைகள் செய்தார்.

பதம் 3.8.4 : அச்சமயத்தில் பகவான் சங்கர்ஷணர், பகவான் வாசுதேவனென்று கற்றோரால் மதிப்பிடப்படும், தமது பரமபுருஷரை தியானித்துக் கொண்டிருந்தார். ஆனால் கற்றறிந்த மாமுனிவர்களின் முன்னேற்றத்திற்காக, தமது தாமரை போன்ற கண்களை லேசாகத் திறந்து பேசத் துவங்கினார்.

பதம் 3.8.5 : முனிவர்கள் மிகவுயர்ந்த கிரகங்களிலிருந்து கங்கை நீரின் மூலமாக தாழ்ந்த பிரதேசத்திற்கு வந்ததால், அவர்களுடைய ஜடா முடி நனைந்திருந்தது. அவர்கள் பகவானின் தாமரைப் பாதங்களைத் தொட்டனர். அப்பாதங்கள், நல்ல கணவன்களை விரும்பும் ஸர்ப ராஜனின் புதல்விகளால் அநேக உபகரணங்களைக் கொண்டு வழிபடப்படுகின்றன.

பதம் 3.8.6 : பகவானின் உன்னத லீலைகளை அறிந்திருந்த சனத் குமாரர் முதலான நான்கு குமாரர்கள், முழு அன்புடனும், பாசத்துடனும், தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் சமமான ராகத்துடன் பகவானை போற்றிப் புகழ்ந்தனர். அப்பொழுது பகவான் சங்கர்ஷணர், தமது ஆயிரக்கணக்கான உயர்த்திய தலைகளின் மேலுள்ள பிரகாசிக்கும் கற்களிலிருந்து ஒளியை பரப்பத் துவங்கினார்.

பதம் 3.8.7 : இவ்வாறாக துறவு வாழ்வின் விரதத்தை முன்பே ஏற்றுக்கொண்டிருந்த மாமுனிவரான சனத் குமாரருக்கு, பகவான் சங்கர்ஷணர் ஸ்ரீமத் பாகவதத்தின் பொருளை பற்றி பேசினார். சாங்க்யாயன முனிவரால் விசாரணை செய்யப்பட்ட சனத் குமாரரும், ஸ்ரீமத் பாகவதத்தை சங்கர்ஷணரிடமிருந்து தாம் கேட்டது போலவே விளக்கிக் கூறினார்.

பதம் 3.8.8 : ஆன்மீகிகளில் தலைமையானவரான சாங்க்யாயன மாமுனிவர், ஸ்ரீமத் பாகவதத்திற்கேற்ப பகவானின் மகத்துவங்களை விவரிக்கும் பொழுது, எனது ஆன்மீக குருவான பராசர முனிவரும், பிருகஸ்பதியும் அவர் பேசுவதைக் கேட்க நேர்ந்தது.

பதம் 3.8.9 : முன் சொல்லப்பட்டது போல், புலஸ்திய மாமுனிவரின் அறிவுரைப்படி, பராசர மாமுனிவர், தலைமைப் புராணத்தை (பாகவதத்தை) எனக்கு உபதேசித்தார். அருமைப் புதல்வரே, எப்பொழுதும் என்னிடம் விசுவாசமுள்ள ஆதரவாளராக நீர் இருப்பதால், நான் கேட்டதை உமக்கு விவரிக்கப் போகிறேன்.

பதம் 3.8.10 : மூவலகங்களும் நீருக்குள் மூழ்கிக்கிடந்த அச்சமயத்தில், கர்போதகசாயி விஷ்ணு மட்டும் தனியாக, தமது பாம்புப் படுக்கையான அனந்தனின் மேல் சயனித்திருந்தார், புறச் சக்தியின் செயல்களிலிருந்து விடுபட்டு, தமது சொந்த அந்தரங்க சக்திக்குள் அவர் உறங்குவதாகக் காணப்பட்ட போதிலும், அவரது கண்கள் முழுமையாக மூடிக் கொண்டிருக்கவில்லை.

பதம் 3.8.11 : விறகுக் கட்டையில் தீயின் பலம் இருப்பதைப் போலவே, பசுவான் எல்லா ஜீவராசிகளையும் அவர்களுடைய சூட்சும உடல்களில் மூழ்கடித்தபடி, பிரளய நீருக்குள் இருந்தார். அவர் காலம் எனப்படும் தமது சுய ஊக்கமூட்டும் சக்தியின் மூலமாக பிரளய நீருக்குள் சயனத்திருந்தார்.

பதம் 3.8.12 : பகவான் அவரது அந்தரங்க சக்தியில் நாலாயிரம் யுக சக்கரங்களுக்கு சயனித்திருந்தார். மேலும் அவரது புறச் சக்தியினால் நீருக்குள் அவர் உறங்குவது போல் காணப்பட்டார். கால சக்தியால் இயக்கப்படும் ஜீவராசிகள் அவர்களது பலன் நோக்குக் கருமங்களைத் தொடர்ந்து விருத்தி செய்து கொள்வதற்காக வெளியில் வந்த பொழுது, பகவான் தமது உன்னத உடல் நீலநிறமாக இருப்பதைக் கண்டார்.

பதம் 3.8.13 : எதன் மீது பகவானின் கவனம் பதிக்கப்பட்டதோ, அந்த சிருஷ்டிக்குரிய சூட்சுமப் பொருளானது, பௌதிக ரஜோ குணத்தினால் கிளர்ச்சியடையச் செய்யப்பட்டது. இதன் விளைவாக, சூட்சும வடிவத்திலிருந்த சிருஷ்டி அவரது வயிற்றை துளைத்துச் சென்றது.

பதம் 3.8.14 : இவ்வாறு துளைத்துச் சென்ற, ஜீவராசிகளுடைய கருமங்களின் மொத்த உருவானது, பரமபுருஷரான விஷ்ணுவிலிருந்து உற்பத்தியான தாமரை மொக்கின் வடிவத்தை ஏற்றது. மேலும் பகவானின் பரம விருப்பத்தினால், அது சூரியனைப் போல் அனைத்தையும் ஒளிமயமாக்கியதுடன், பரந்த பிரளய நீரையும் வற்றச் செய்தது.

பதம் 3.8.15 : அப்பிரபஞ்ச தாமரைக்குள் பகவான் விஷ்ணு தாமாகவே பரமாத்மாவாகப் புகுந்தார். இவ்வாறு ஜட இயற்கைக் குணங்களால் அது கருவுறச் செய்யப்பட்ட போது, யாரை சுயம்பு என்று நாம் அழைக்கிறோமோ அந்த வேத புருஷர் உற்பத்தியானார்.

பதம் 3.8.16 : தாமரையிலிருந்து பிறந்த பிரம்மா, அத்தாமரையின் வட்டத்திலேயே இருந்த போதிலும், அவரால் உலகைக் காண முடியவில்லை. எனவே அவர் விண்வெளி முழுவதையும் சுற்றி வலம் வந்தார். இவ்வாறு தமது கண்களை எல்லாத் திசைகளிலும் திருப்பும்பொழுது, நான்கு திசைகளுக்கேற்ப நான்கு தலைகளை அவர் பெற்றார்.

பதம் 3.8.17 : அத்தாமரைக்குள் இருந்த பிரம்ம தேவரால், படைப்பையோ, தாமரையையோ அல்லது தன்னையோ முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. யுக முடிவில் ஊழிக்காற்றானது, நீரையும், தாமரையையும் பெரும் வட்டங்களில் சுழற்றத் துவங்கியது.

பதம் 3.8.18 : அறியாமையிலிருந்த பிரம்ம தேவர் சிந்தித்தார்; இத்தாமரையின் மேலுள்ள நான் யார்? இந்தாமரை எங்கிருந்து முளைத்தது? கீழ்ப் புறத்தில் ஏதாவது இருக்க வேண்டும். அதிலிருந்து தான் இத்தாமரை வளர்ந்திருக்கிறது. அப்பொருள் நீருக்குள் இருக்க வேண்டும்.

பதம் 3.8.19 : பிரம்ம தேவர் இவ்வாறு சிந்தித்தபடி, தாமரைத் தண்டினுள் உள்ள குழாய் வழியாக நீருக்குள் புகுந்தார். ஆனால் தண்டினுள் புகுந்து விஷ்ணுவின் நாபிக்கருகில் சென்ற பிறகும். வேரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பதம் 3.8.20 : விதுரரே, தம் இருப்பைப் பற்றி இவ்வாறு ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது, விஷ்ணுவின் கரத்திலுள்ள நித்திய சக்கரமும், மரணத்திற்கொப்பான பயத்தை ஜீவராசியின் மனதில் உற்பத்தி செய்வதுமான, முடிவான காலத்தை பிரம்மா அடைந்தார்.

பதம் 3.8.21 : அதன்பிறகு, விரும்பிய நோக்கத்தை அடைய முடியாததால், தம் ஆராய்ச்சியை நிறுத்திக் கொண்ட அவர், தாமரையின் உச்சிக்குத் திரும்பி வந்தார். இவ்வாறு எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திய அவர், தம் மனதை பரமபுருஷர் மீது பதியச் செய்தார்.

பதம் 3.8.22 : பிரம்மாவின் நூறு ஆண்டுகளின் முடிவில், அவரது தியானம் பூர்த்தியான பொழுது, தேவையான அறிவை அவர் விருத்தி செய்து கொண்டார். அதன் பயனாக, யாரை பெரு முயற்சி செய்தும் தன்னால் முன்பு காண முடியவில்லையோ, அப்பரமனை தம் இதயத்தில் அவரால் காண முடிந்தது.

பதம் 3.8.23 : நீரின்மேல் ஒரு பிரம்மாண்டமான தாமரை போன்ற வெள்ளைக் கட்டிலாக சேஷ நாகத்தின் உடல் இருப்பதையும், அதில் பரமபுருஷர் தனியாக சயனித்திருப்பதையும் பிரம்மாவால் காண முடிந்தது. அச்சூழ்நிலை முழுவதும், சேஷ நாகத்தின் படத்தை அலங்கரிக்கும் இரத்தினங்களின் ஒளிக்கதிர்களால் பிரகாசப்படுத்தப் பட்டிருந்தது. அப்பிரகாசம் அப்பிரதேசங்களின் இருளை முழுமையாக அகற்றியது.

பதம் 3.8.24 : பகவானுடைய உன்னத உடலின் காந்தி பவள மலையின் அழகையும் ஏளனம் செய்வதாக இருந்தது. பவள மலை, சாயங்கால வானத்தினால், உடை போல் நன்கு அலங்கரிக்கப்படுகிறது. ஆனால் பகவானின் மஞ்சள் நிற ஆடை அதன் அழகையும் ஏளனம் செய்தது. மலை உச்சியில் தங்கம் இருக்கிறது. ஆனால் இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பகவானின் கிரீடம் அதை ஏளனம் செய்வதாக இருந்தது. மலர்களின் அழகுக் காட்சியுடன் கூடிய மலையிலுள்ள நீர்வீழ்ச்சிகள், மூலிகைகள் முதலானவை மாலைகள் போல் காணப்பட்டன. ஆனால் இரத்தினங்களாலும், முத்துக்களாலும், துளசி இலைகளாலும், மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பகவானின் பிரம்மாண்டமான உடலும், அவரது கரங்களும், கால்களும், மலையின் தோற்றத்தையும் ஏளனம் செய்தன.

பதம் 3.8.25 : நீளத்திலும், அகலத்திலும் அளவற்றதாக இருந்த அவரது உன்னத உடல், மேல், மத்திய மற்றும் கீழ் ஆகிய மூன்று கிரக அமைப்புக்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அவரது உடல் இணையற்ற ஆடை அணிகலன்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டு சுயப் பிரகாசம் கொண்டதாக இருந்தது.

பதம் 3.8.26 : பௌதிக களங்கமற்ற பக்தித் தொண்டினால் அடையப்படும் சன்மானங்களுக்கெல்லாம் மூல பிறப்பிடமாகிய தமது தாமரைப் பாதங்களை பகவான் உயர்த்திக் காட்டியருளினார். இத்தகைய சன்மானங்கள் அவரைத் தூய பக்தியுடன் வழிபடுபவர்களுக்கென உள்ளவையாகும். நிலவைப் போன்ற அவரது பாத நகங்களிலிருந்து வெளிப்பட்ட உன்னதமான கதிர்களின் பிரகாசம், ஒரு தாமரையின் இதழ்களைப் போல் காட்சியளித்தது.

பதம் 3.8.27 : மேலும் பக்தர்களின் தொண்டை ஏற்ற அவர், தமது அழகிய புன்னகையால், அவர்களது துன்பத்தைத் துடைத்தார். குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது முகமானது, அவரது மூக்கு மற்றும் புருவங்களின் அழகாலும், அவரது உதடுகளிலிருந்து வெளிப்பட்ட கதிர்களாலும் பிரகாசித்ததால் மிகவும் இன்பமூட்டுவதாக இருந்தது.

பதம் 3.8.28 : அன்பிற்குரிய விதுரரே பகவானின் இடை, கடம்ப மலரின் குங்குமப் பொடியையொத்த மஞ்சள் நிற ஆடையால் மூடப்பட்டு, நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒர் இடைக் கச்சையால் சூழப்பட்டிருந்தது. அவரது மார்பு ஸ்ரீவத்ஸம் என்ற குறியாலும், அளவற்ற மதிப்புடைய ஓர் ஆரத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பதம் 3.8.29 : சந்தன மரம் நறுமணமுள்ள மலர்களாலும், கிளைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளதைப் போலவே, பகவானின் உடல் மதிப்புயர்ந்த இரத்தினங்களாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவர் புற ஆதாரமில்லாத மரமாகவும், பிரபஞ்சத்திலுள்ள மற்றனைவருக்கும் இறைவனாகவும் இருந்தார். மேலும் சந்தன மரமொன்று பல பாம்புகளால் மூடப்பட்டிருப்பது போலவே, பகவானின் உடலும் அனந்ததேவரின் படங்களால் மூடப்பட்டிருந்தது.

பதம் 3.8.30 : ஒரு பெரிய மலையைப் போல், அசையும், அசையாத ஜீவராசிகளுக்கெல்லாம் உறைவிடமாக பகவான் நிற்கிறார். பகவானாகிய அனந்த தேவர் அவரது நண்பரென்பதால், அவர் பாம்புகளின் நண்பராவரார். ஒரு மலைக்கு ஆயிரக்கணக்கான தங்கச் சிகரங்கள் இருப்பதைப் போலவே, ஆயிரக்கணக்கான தங்கக் கிரீடங்களைக் கொண்ட அனந்த நாகத்தின் படங்களுடன் பகவான் காணப்படுகிறார்; ஒரு மலை சிலசமயங்களில் இரத்தினங்கள் நிறைந்ததாக இருப்பதைப் போலவே, பகவானின் உன்னத உடலும் மதிப்புயர்ந்த இரத்தினங்களால் முற்றிலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒருமலை சிலசமயங்களில் சமூத்திர நீரில் மூழ்கிக்கிடப்பதைப் போலவே, பகவானும் சிலசமயங்களில் பிரளய நீரில் மூழ்கிக் கிடக்கிறார்.

பதம் 3.8.31 : இவ்வாறாக, மலையின் வடிவிலிருந்த பகவானைப் பார்த்த பிரம்ம தேவர், அவரைப் பரமபுருஷரான ஹரி என்று முடிவு செய்தார், மார்பின் மேலிருந்த மலர் மாலை இனிய வேத கானங்களால் பகவானின் பெருமைகளைப் பாடியதையும், மிகவும் அழகுடன் விளங்கியதையும் அவர் கண்டார். சண்டை செய்வதற்குரிய சுதர்சன சக்கரத்தால் அவர் பாதுகாக்கப்பட்டிருந்தார், சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு முதலியவைகளால் அவரை அணுக முடியவில்லை.

பதம் 3.8.32 : இவ்வாறாக, பிரபஞ்ச கதியை நிர்ணயிப்பவரான பிரம்ம தேவர், பகவானைக் கண்ட அதே சமயத்தில், படைப்பின் மீதும் பார்வையைச் செலுத்தினார். பிரம்மதேவர் பசுவான் விஷ்ணுவின் நாபியிலுள்ள ஏரியையும், தாமரையையும் மட்டுமல்லாமல் பிரளய நீரையும், உலர்த்தும் காற்றையும், ஆகாயத்தையும் கூட கண்டார். அனைத்தும் அவரது காட்சிக்குத் தென்பட்டன.

பதம் 3.8.33 : இவ்வாறு ரஜோ குணத்தினால் தூண்டிவிடப்பட்ட பிரம்ம தேவர், படைப்பைச் செய்ய ஆவல் கொண்டார். பரமபுருஷரால் சுட்டிக் காட்டப்பட்டவையான, படைப்பிற்குரிய ஐந்து காரணங்களைக் கண்டபின், சிருஷ்டிக்கும் மனோபாவத்திற்கேற்ற வழியில், தமது பணிவான பிரார்த்தனைகளை அவர் செய்யத் துவங்கினர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare