அத்தியாயம் – 4
விதுரர் மைத்ரேயரை தேடிச் செல்லுதல்
பதம் 3.4.1 : பிறகு, பிராமணர்களின் அனுமதி பெற்று போஜனம் செய்தபின், அவர்கள் அனைவரும் (விருஷ்ணி, போஜ வம்சத்தினர்), சாதத்தால் செய்யப்பட்ட மதுவை அருந்தி, அறிவிழந்து, இதயத்தைப் பிளக்கும் வசை மொழிகளைப் பேச ஆரம்பித்தனர்.

பதம் 3.4.2 : மூங்கில்களின் உராய்வினால் அழிவு ஏற்படுவதைப் போல், சூரிய அஸ்தமனத்தின் போது உண்டான குடிபோதையின் தோஷத்தால் மதிகெட்ட அவர்களுக்கு அழிவு ஏற்பட்டது.

பதம் 3.4.3 : இவ்வாறாக தமது அந்தரங்க சக்தியினால் (தமது குடும்பத்தின்) முடிவை முன்னறிந்த பகவான் கிருஷ்ணர், சரஸ்வதி நதிக்கரைக்குச் சென்று, ஆசமனம் செய்து, ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.

பதம் 3.4.4 : தம்மிடம் சரணடைந்தவர்களின் துன்பங்களை பகவான் அழித்துவிடுகிறார். எனவே தம் குடும்பத்தை அழித்துவிட விரும்பிய அவர், பத்ரிகாசிரமத்திற்குச் சென்றுவிடும்படி முன்பே என்னிடம் கூறினார்.

பதம் 3.4.5 : அரிந்தமரே (விதுரரே), (வம்சத்தை அழித்துவிடப் போகும்) பகவானின் விருப்பத்தை நான் அறிந்திருந்தபோதிலும், அவருடைய தாமரைப் பாதங்களின் பிரிவைத் தாங்கிக் கொள்வது எனக்குச் சாத்தியமல்ல என்பதால், அவரைப் பின்தொடர்ந்து சென்றேன்.

பதம் 3.4.6 : இவ்வாறு பின்தொடர்ந்து சென்ற நான், எனது இரட்சகரும் தலைவரும், ஸ்ரீதேவியின் புகலிடமுமான அவர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்), சரஸ்வதி நதிக்கரையை புகலிடமாகக் கொண்டு, ஆழ்ந்த சிந்தனையுடன் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

பதம் 3.4.7 : பகவானின் உடல் கருமை நிறம் கொண்டது என்ற போதிலும், அது நித்தியத் தன்மையும், பூரண ஆனந்தமும், அறிவும் கொண்டு மிகவும் அழகாக விளங்கியது. அவரது சாந்தமான கண்கள் உதயசூரியனைப் போல் சிவந்து காணப்பட்டன. அவரது நான்கு கரங்களில் வெவ்வேறு சின்னங்களை ஏந்தி இருந்ததையும், மஞ்சள்நிற பட்டாடையை அவர் அணிந்திருந்ததையும் கொண்டு, அவர்தான் பரமபுருஷர் என்பதை உடனேயே என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.

பதம் 3.4.8 : பகவான் தமது வலது தாமரைப் பாதத்தை இடது தொடையின் மீது பொருத்தியவாறு, ஒர் இளம் அரசமரத்தின் மீது சாய்ந்தபடி, அதற்கடியில் ஓய்வாக அமர்ந்திருந்தார். அந்நிலையில் இருந்த அவர், இல்லற சுகபோகங்களை எல்லாம் துறந்து விட்டவராக இருந்த போதிலும், மிகவும் ஆனந்தமாகக் காணப்பட்டார்.

பதம் 3.4.9 : அப்பொழுது உலகின் பல பாகங்களில் பிரயாணம் செய்தபின், மாமுனிவரான கிருஷ்ண துவைபாயன வியாசரின் நண்பரும், சிறந்த பக்தருமான மைத்ரேயர் தாமாகவே அங்கு வந்து சேர்ந்தார்.

பதம் 3.4.10 : அவரிடம் (பகவானிடம்) மிகவும் பற்றுக் கொண்டிருந்த மைத்ரேய முனிவர், தம் தோள்களை தாழ்த்தியவாறு, இன்பமான ஒரு மனநிலையில் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். நான் இளைப்பாறும் வரைக் காத்திருந்த பகவான், கருணையுடனும், புன்சிரிப்புடனும் என்னை நோக்கி பின்வருமாறு பேசலானார்.

பதம் 3.4.11 : உன் மனதின் அந்தரங்க ஆசையை நான் அறிவேன். புராதன காலத்தில் பிரபஞ்ச விவகாரங்களை விரிவடையச் செய்யும் பொறுப்பை ஏற்றிருந்த வசுக்களும், பிற தேவர்களும் யாகங்களைச் செய்தனர். அச்சமயத்தில், என் சகவாசத்தைப் பெற நீ விரும்பினாய். மற்றவர்களால் இதை அடைவது மிகவும் கடினம் என்றாலும், உனக்கு நான் இதை அளிக்கிறேன்.

பதம் 3.4.12 : நேர்மையானவனே, உன் பிறவிகளின் இதுவே கடைசியும், மிகச் சிறந்ததுமாகும். ஏனெனில், இப்பிறப்பில் உனக்கு நான் பூரண அனுக்கிரகத்தை அளித்திருக்கிறேன். இப்பொழுது, பந்தப்பட்ட ஜீவராசிகளுக்குரிய இப்பிரபஞ்சத்தை விட்டு, எனது ஆன்மீக உலகான வைகுண்டத்திற்கு நீ செல்லலாம். உனது உறுதியான தூய பக்தித் தொண்டின் காரணத்தால், என்னை இத்தனிமையான இடத்தில் காண வந்திருப்பது உனக்குக் கிடைத்துள்ள பெரும் பாக்கியமாகும்.

பதம் 3.4.13 : உத்தவா, பத்ம கல்பத்தின் ஆரம்பத்தில், படைப்பின் துவக்கத்தில் எனது நாபிக் கமலத்தில் வீற்றிருந்த பிரம்ம தேவருக்கு, ஸ்ரீமத் பாகவதம் என்று மாமுனிவர்களால் விவரிக்கப்படும் எனது உன்னத பெருமைகளைப் பற்றி நான் உபதேசித்தேன்.

பதம் 3.4.14 : உத்தவர் கூறினார் இவ்வாறாக: விதுரரே, பெரும் பாசத்துடன் பகவானால் உபதேசிக்கப்பட்டு, ஒவ்வொரு கணமும் அவரால் நான் ஆட்கொள்ளப்பட்ட பொழுது, மெய் சிலிர்த்து, கண்ணீரால் பேச்சற்று நின்றேன். என் கண்ணீரை துடைத்துக் கொண்டபிறகு, கூப்பிய கரங்களுடன் நான் இவ்வாறு பேசினேன்.

பதம் 3.4.15 : எம்பெருமானே, தங்களுடைய தாமரைப் பாதங்களின் உன்னத அன்புத்தொண்டில் ஈடுபட்டுள்ள பக்தர்களுக்கு மதம், பொருளாதார முன்னேற்றம், புலனின்பம் மற்றும் முக்தி எனும் நான்கு கொள்கைகளுக்கு உட்பட்டுள்ள எதையும் அடைவதில் எந்தக் கஷ்டமும் இல்லை. ஆனால் பெரும் புகழுக்குரியவரே, என்னைப் பொறுத்தவரை, தங்களுடைய தாமரைப் பாதங்களில் பணிசெய்து கிடக்கவே நான் விரும்புகிறேன்.

பதம் 3.4.16 : எம்பெருமானே, விருப்பற்ற தாங்கள் பலன் கருதும் செயல்களில் ஈடுபடுவதையும், பிறப்பற்ற தாங்கள் பிறவி எடுப்பதையும், வெல்ல முடியாத காலத்தை ஆளும் தாங்கள் பகைவருக்கஞ்சி ஒரு கோட்டைக்குள் புகலிடம் கொண்டதையும், மற்றும் தங்களுக்குள்ளேயே தாங்கள் இன்பம் அனுபவிப்பவராக இருந்தும் பல பெண்களால் சூழப்பட்டவராய் இல்லறவாழ்வில் இன்பம் அனுபவிப்பதையும் கண்டு கற்றறிந்த முனிவர்களும் புத்தி தடுமாறுகின்றனர்.

பதம் 3.4.17 : எம்பெருமானே, நித்திய புருஷரான தாங்கள் காலத்தின் ஆதிக்கத்தினால் பிரிக்கப்படுவதில்லை. தங்களுடைய பூரண அறிவிற்கு ஒரு எல்லையும் இல்லை. சுயமாக முடிவெடுக்கக் கூடிய போதுமான தகுதியுடையவராக தாங்கள் இருந்தும், குழப்பம் அடையாதவரான தாங்கள், குழப்பம் அடைந்தவர் போல் என்னுடன் கலந்து ஆலோசிப்பதற்காக என்னை அழைத்தீர்கள். தங்களுடைய இச்செயல் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

பதம் 3.4.18 : எம்பெருமானே, உங்களைப் பற்றிய ஆத்ம ஞானத்தை அளிக்கக் கூடியதும், முன்பு பிரம்மதேவருக்கு நீங்கள் விளக்கியதுமான அந்த உன்னத ஞானத்தை, நாங்கள் பெறத் தகுதியுடையவர்கள் என்று நீங்கள் நினைத்தால், எங்களுக்கு விளக்கியருள வேண்டுகிறேன்.

பதம் 3.4.19 : இவ்வாறு இதயப்பூர்வமான எனது ஆசைகளை பரமபுருஷரிடம் நான் வெளிப்படுத்தியதும், தாமரைக் கண்களையுடைய பகவான் தமது உன்னத நிலையைப் பற்றி எனக்கு உபதேசித்தார்.

பதம் 3.4.20 : எனது ஆன்மீக குருவான பரமபுருஷரிடமிருந்து ஆத்ம ஞானத்தை அறியும் மார்க்கத்தைக் கற்று, அவரை வலம் வந்தபின், அவரது பிரிவினால் பெரும் துயருக்குள்ளான நிலையில், இந்த இடத்திற்கு நான் வந்திருக்கிறேன்.

பதம் 3.4.21 : அன்பிற்குரிய விதுரரே, அவரது தரிசனத்தால் கிடைக்கும் ஆனந்தத்தைப் பெற முடியாமல் இப்பொழுது நான் பித்தனைப் போல் ஆகியிருக்கிறேன். இதைத் தவிர்ப்பதற்காகவே, பகவானால் உபதேசிக்கப்பட்டபடி, இப்பொழுது நான் இமாலயத்திலுள்ள பத்ரிகாஸ்ரமத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்.

பதம் 3.4.22 : பத்ரிகாஸ்ரமத்தில் நர, நாராயண ரிஷிகளாக அவதரித்த பரமபுருஷர், அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக புராதன காலத்திலிருந்து கடுந் தவங்களை மேற்கொண்டு வருகிறார்.

பதம் 3.4.23 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அழிவைப் பற்றி கேள்விப்பட்டதும், விவேகியான விதுரர், தமது உன்னத அறிவின் வலிமையினால் தம் சோகத்தை போக்கிக் கொண்டார்.

பதம் 3.4.24 : பகவத் பக்தர்களுக்கிடையில் முக்கியமானவரும், மிகவும் அந்தரங்கமானவருமான உத்தவர் புறப்பட்டுச் செல்லும் பொழுது, விதுரர் அன்புடனும், வினயத்துடனும் அவரிடம் கேள்விகள் கேட்டார்.

பதம் 3.4.25 : விதுரர் கூறினார் உத்தவரே, பகவான் விஷ்ணுவின் தொண்டர்கள் பிறருக்கு நன்மை புரிவதற்காக சஞ்சரிப்பதால், பகவானாலேயே உங்களுக்கு உபதேசிக்கப்பட்ட அந்த ஆத்ம் ஞானத்தை தயவுசெய்து எனக்கு விவரிக்கும்படி வேண்டுகிறேன்.

பதம் 3.4.26 : ஸ்ரீ உத்தவர் கூறினார்: உன்னத ஞானத்தைப் பெற்றதால் வழி பாட்டுக்குரியவரும், அருகாமையில் இருப்பவருமான கற்றறிந்த மாமுனிவரான மைத்ரேயரிடமிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ளலாம். பரம புருஷர் நிலையற்ற இவ்வுலகை விட்டுச் செல்லத் தயாராக இருந்தபொழுது, அவராலேயே நேரடியாக மைத்ரேயருக்கு உபதேசிக்கப்பட்டது.

பதம் 3.4.27 : சுகதேவ கோஸ்வாமி கூறினார் அரசே, யமுனைக் கரையில் பகவானின் உன்னத ஞானம், புகழ், குணங்கள் முதலியவற்றை விதுரருடன் விவாதித்த பின், பிரிவாற்றாமையில் ஆழ்ந்து விட்ட உத்தவர், இரவை ஒரு கணம் போல் கழித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

பதம் 3.4.28 : அரசர் வினவினார்: மூவுலகங்களுக்கும் இறைவனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகள் முடிவடைந்த பிறகும், சேனாதிபதிகளிலேயே சிறந்தவர்களான விருஷ்ணி மற்றும் போஜ வம்சத்தினரின் மறைவுக்குப் பிறகும் உத்தவர் மட்டும் ஏன் எஞ்சியிருந்தார்?

பதம் 3.4.29 : சுகதேவ கோஸ்வாமி பதிலளித்தார்: அன்புள்ள அரசே, பிராமணர்களின் சாபம் ஒரு சாக்குப்போக்கு மட்டுமே. ஆனால் பகவானின் உன்னதமான விருப்பம்தான் நிஜ உண்மையாகும். பகவான், எண்ணற்ற தமது குடும்ப அங்கத்தினர்களை அனுப்பிய பிறகு, தாமும் இந்த மண்ணுலகிலிருந்து மறைந்துவிட விரும்பினார். எனவே தமக்குள் அவர் பின்வருமாறு சிந்தித்தார்.

பதம் 3.4.30 : இப்பொழுது இந்த ஜட உலகிலிருந்த நான் மறைந்த பிறகு, எனது பக்தர்களிலேயே முக்கியமானவனான உத்தவனிடம் தான், என்னைப் பற்றிய அறிவை நான் நேரடியாக ஒப்படைக்க முடியும் என்பதாகத் தெரிகிறது.

பதம் 3.4.31 : உத்தவன் ஜட இயற்கைக் குணங்களினால் பாதிப்படைவதே இல்லை என்பதால், அவன் எவ்விதத்திலும் எனக்குக் குறைந்தவனல்ல. என்னைப் (பரமபுருஷரை) பற்றிய அறிவைப் பரப்புவதற்காக இவ்வுலகிலேயே அவன் இருக்கட்டும்.

பதம் 3.4.32 : அனைத்து வேத ஞானத்திற்கும் மூலமான பரமபுருஷரால் இவ்வாறு உபதேசிக்கப்பட்ட உத்தவர், பத்ரிகாசிரமம் என்ற புண்ணிய தீர்த்தத்தை அடைந்து, பகவானை திருப்திப்படுத்தவதற்காக அங்கு சமாதியில் ஆழ்ந்தார் என்று சுகதேவ கோஸ்வாமி, அரசரிடம் அறிவித்தார்.

பதம் 3.4.33 : பரமாத்மாவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஜட உலக தோற்றத்தையும், மறைவையும் பற்றி விதுரரும் உத்தவரிடமிருந்து கேள்விப்பட்டார். இவை மாமுனிவர்களாலும் பயபக்தியுடன் நாடிச் செல்லப்படும் விஷயங்களாகும்.

பதம் 3.4.34 : அசாதாரணமான லீலைகளை ஜட உலகில் நிகழ்த்துவதற்காக பகவானால் ஏற்கப்படும் பல்வேறு உன்னத ரூபங்களும், புகழுக்குரிய அவரது செயல்களும், பகவத் பக்தர்களைத் தவிர பிறரால் புரிந்து கொள்ளப்படுவது மிகக் கடினம். மேலும் மிருகங்களுக்கோ, அவை மனத் தொந்தரவுகளை மட்டுமே விளைவிக்கின்றன.

பதம் 3.4.35 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (இவ்வுலகை விட்டுச் செல்லும்பொழுது) தன்னை நினைவு கூர்ந்ததை அறிந்த விதுரர், பிரேமையினால் மனங்குழைந்து, வாய்விட்டு அழத் துவங்கினார்.

பதம் 3.4.36 : யமுனை நதிக்கரையில் சில நாட்களைக் கழித்தபின், முக்தி பெற்ற ஆத்மாவான விதுரர், மைத்ரேய மாமுனிவர் இருந்த கங்கைக் கரையை அடைந்தார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare