அத்தியாயம் – 3
பிருந்தாவனத்திற்கு வெளியில் பகவானின் லீலைகள்
பதம் 3.3.1 : ஸ்ரீ உத்தவர் கூறினார்: பிறகு ஸ்ரீ பலதேவருடன் மதுராபுரிக்குச் சென்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தம் பெற்றோர்களை மகிழ்விக்கும் பொருட்டு. பொதுஜன எதிரிகளின் தலைவனான கம்சனை பெரும்பலத்துடன் அவனது அரியாசனத்திலிருந்து கீழே இழுத்துத்தள்ளிக் கொன்றார்.

பதம் 3.3.2 : பகவான் அவரது குருவான சாந்தீபனி முனிவரிடமிருந்து ஒரே ஒருமுறை கேட்டதாலேயே எல்லா வேதங்களையும், அவற்றின் வெவ்வேறு பிரிவுகளையும் கற்றறிந்தார். இதனால் மரணமடைந்த அவரது மகனை யமலோகத்திலிருந்து திரும்பக் கொண்டுவந்து, அவருக்குப் பரிசாக அளித்தார்.

பதம் 3.3.3 : பீஷ்மக ராஜனின் மகளான ருக்மிணியின் அழகாலும், செல்வத்தாலும் கவரப்பட்ட பல சிறந்த இளவரசர்கள் அவளை மணந்து கொள்வதற்காகக் கூடியிருந்தனர். ஆனால் அமுதத்தினைத் தூக்கிச் சென்ற கருடனைப்போல், மற்ற போட்டியாளர்களின் நம்பிக்கையை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சிதறடித்து, அவளை தமது பங்காக அங்கிருந்து தூக்கிச் சென்றுவிட்டார்.

பதம் 3.3.4 : சுயம்வரச் சடங்கில் மூக்கணாங்கயிறு பூட்டப்படாத ஏழுகாளைகளை அடக்கிய பகவான், நாக்னஜிதி இளவரசியை மணந்தார். பகவான் வெற்றியடைந்த போதிலும், இளவரசியைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி அவரது போட்டியாளர்கள் கேட்டனர். இவ்வாறாக அவர்களுக்கிடையில் போர்மூண்டது. ஆயுதபாணியான பகவான், அவர்களனைவரையும் கொன்றார் அல்லது காயப்படுத்தினார், ஆனால் அவர் காயப்படவில்லை.

பதம் 3.3.5 : ஒரு சாதாரண மனிதனைப்போல், தம் பிரிய மனைவியை மகிழ்விப்பதற்காக பகவான் சுவர்க்கத்திலிருந்து பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்தார். ஆனால் (தன்மனைவிகளுக்கு அடங்கி நடக்கிற) சுவர்க்க ராஜனான இந்திரன், தன் மனைவிகளால் தூண்டப்பட்டு, பகவானுடன் சண்டை செய்ய முழுபலத்துடன் அவர்பின் ஒடினார்.

பதம் 3.3.6 : தரித்ரி எனும் பூமியின் மகனான நரகாசுரன், ஆகாய வெளி முழுவதையும் கைப்பற்ற முயன்றான். இதற்காக அவன் பகவானால் போரில் கொல்லப்பட்டான். அவனுடைய தாய் பிறகு பகவானிடம் வேண்டினாள். இவ்வாறாக ராஜ்யத்தை நரகாசுரனின் மகனிடம் திருப்பிக் கொடுத்த பகவான், அசுரனின் வீட்டிற்குள் புகுந்தார்.

பதம் 3.3.7 : நரகாசுரனால் கடத்தப்பட்டு, அவனுடைய வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த இளவரசிகள் அனைவரும், துன்புற்றவர்களின் நண்பரான பகவானைக் கண்டவுடனேயே உற்சாகம் அடைந்தனர். அவரைப் பெரும் ஆவலுடனும், ஆனந்தத்துடனும், வெட்கத்துடனும் கண்ட அவர்கள், அவருடைய மனைவிகளாக தங்களையே அவரிடம் ஒப்படைத்தனர்.

பதம் 3.3.8 : அந்த இளவரசிகள் அனைவரும் வெவ்வேறு அறைகளில் வைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு இளவரசிக்கும் பொருந்தும் வகையில், பகவான் தமது உடலை வெவ்வேறாக விரிவடையச் செய்து கொண்டார். தமது அந்தரங்க சக்தியின் மூலமாக முழுசடங்குகளுடன் அவர்களை அவர் ஏற்றுக்கொண்டார்.

பதம் 3.3.9 : தமது உன்னத அம்சங்களுக்கேற்ப தம்மை விரிவடையச்செய்து கொள்வதற்காக, அவர்கள் ஒவ்வொருவரிடமும், தமது சொந்த குணங்களையொத்த பத்து மகன்களை பகவான் பெற்றார்.

பதம் 3.3.10 : மகத ராஜனான காலயவனனும், சால்வனும் மதுராபுரியைத் தாக்கினர். ஆனால் பகவான் தமது சொந்த ஆட்களின் வீரத்தைக் காட்டுவதற்காக, நகரத்தைச் சூழ்ந்து கொண்டிருந்த அவர்களுடைய வீரர்களைத்தாமே கொல்வதிலிருந்து பகவான் விலகி இருந்தார்.

பதம் 3.3.11 : சம்பரன், துவிவிதன், பாணன், முரன், பல்வலன் முதலான அரசர்களிலும், தந்தவக்ரன் முதலான பல அசுரர்களிலும், சிலரை பகவானே நேரடியாகக் கொன்றார். சிலரை (ஸ்ரீ பலதேவர் முதலான) மற்றவர்களால் கொல்லும்படி செய்தார்.

பதம் 3.3.12 : விதுரரே, பிறகு, எதிரிகள் பக்கமும், உங்களுடைய சகோதர புத்திரர்கள் பக்கமும் உள்ள எல்லா அரசர்களையும், குருட்சேத்திரப் போர்க்களத்தில் கொல்லப்படும்படி பகவான் செய்தார். அந்த அரசர்கள் அனைவரும் பெரும் பலசாலிகள் என்பதால், போர்க்களத்தில் அவர்கள் சஞ்சரித்த பொழுது, பூமியே அதிர்வது போல் காணப்பட்டது.

பதம் 3.3.13 : கர்ணன், துச்சாதனன் மற்றும் சௌபலன் ஆகியோரின் துர்போதனைகளின் காரணத்தால், துரியோதனன் அதிர்ஷ்டத்தையும், ஆயுளையும் இழந்தவனானான். சக்திவாய்ந்தவன் என்றபோதிலும் தொடைகள் உடைபட்டு தன் ஆதரவாளர்களுடன் தரையில் அவன்விழுந்து கிடப்பதைக்கண்ட பகவான் மகிழ்ச்சியடையவில்லை.

பதம் 3.3.14 : (குருக்ஷேத்திர யுத்தத்தின் முடிவில் பகவான் கூறினார்): துரோணர், பீஷ்மர், அர்ஜுனன் மற்றும் பீமன் ஆகியோரின் உதவியால், பூமிக்கும் பெரும்பாரமாக இருந்த பதினெட்டு அக்ஷெளணிகளைக் கொண்ட படைபலம் இப்பொழுது குறைக்கப்பட்டது. ஆனால், என்ன இது? அதிக பூ பாரத்தை ஏற்படுத்தக் கூடியதும், என்னிலிருந்து பிறந்தததுமான யதுவம்சம் இன்னமும் இருக்கிறதே.

பதம் 3.3.15 : குடிபோதையினால் கண்கள் சிவந்து தங்களுக்கிடையில் அவர்கள் சண்டையிட்டுக் கொள்வார்கள். இதன் மூலமாகத்தான் அவர்களால் மறைய முடியும். இல்லையெனில் அது சாத்தியமல்ல. நான் மறைந்ததும் இச்சம்பவம் நிகழும்.

பதம் 3.3.16 : தமக்குள் இவ்வாறு எண்ணிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தர்ம வழியில் செல்லும் சீரிய அரசாட்சியை காட்டுவதற்காக யுதிஷ்டிர மகாராஜனை உலகின் மிக உயர்ந்த ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்.

பதம் 3.3.17 : பூரு வம்சத்தின் மகாவீரரான அபிமன்யுவால், அவரது மனைவி உத்தரையின் கர்ப்பத்தில் பெறப்பட்ட கரு, துரோண புத்திரனின் ஆயுதத்தால் எரிக்கப்பட்டது. ஆனால் பிறகு அது பகவானால் மீண்டும் காப்பாற்றப்பட்டது.

பதம் 3.3.18 : பரமபுருஷர் தர்மபுத்திரரை மூன்று அசுவமேத யாகங்களைச் செய்யும்படி தூண்டினார். யுதிஷ்டிர மகாராஜன் எப்பொழுதும் பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணரைப் பின்தொடர்ந்து சென்று, தமது தம்பிகளின் உதவியுடன் பூமியைப் பாதுகாத்து, அதை அனுபவித்து வந்தார்.

பதம் 3.3.19 : அதே சமயத்தில், பகவானும் வேத விதிகளுக்கேற்ப துவாரகாபுரியில் வாழ்வை அனுபவித்து வந்தார். ஸாங்க்ய தத்துவத்திற்கேற்ப பகவான் துறவிலும், ஞானத்திலும் நிலைபெற்றிருந்தார்.

பதம் 3.3.20 : அவர் அதிர்ஷ்ட தேவதையின் (லக்ஷ்மியின்) வசிப்பிடமான தமது உன்னத உடலில், வழக்கம்போல் அமைதியான இனிய புன்னகை பூத்த முகத்துடனும், அமுதம் போன்ற வார்த்தைகளுடனும், குறையற்ற குணத்துடனும் விளங்கினார்.

பதம் 3.3.21 : பகவான், யாதவர்களின் சகவாசத்துடன் இவ்வுலகிலும், பிற உலகங்களிலும், (உயர்கிரகங்கள்) நிகழ்த்திய லீலைகளை நன்கு அனுபவித்தார். இரவில் கிடைத்த ஓய்வு நேரத்தில் அவர் பெண்களுடனான நட்பில் மாதுரிய அன்பை அனுபவித்தார்.

பதம் 3.3.22 : இவ்வாறாக பகவான் பற்பல ஆண்டுகளாக இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தார். ஆனால் இறுதியில், நிலையற்ற பாலுறவு வாழ்விலிருந்த அவரது பற்றற்ற நிலை முழுமையாக வெளிப்பட்டது.

பதம் 3.3.23 : ஒவ்வொரு ஜீவராசியும் ஒரு தெய்வீகமான சக்தியால் ஆளப்படுகிறான். இதனால் அவனது புலன்நுகர்வும் கூட அத்தெய்வீக சக்தியின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது. எனவே பக்தித்தொண்டின் மூலம் பகவானின் ஒரு பக்தராக மாறியிருப்பவரைத் தவிர, வேறுயாராலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னதமான புலன் செயல்களில் நம்பிக்கை வைக்க முடியாது.

பதம் 3.3.24 : ஒரு சமயம் துவாரகாபுரியில் யாதவ மற்றும் போஜ வம்சத்து அரச குமாரர்களின் விளையாட்டான செயல்களால் கோபமூட்டப்பட்ட முனிவர்கள், பகவானின் திருவுள்ளக் குறிப்புப்படி அவர்களைச் சபித்தனர்.

பதம் 3.3.25 : ஒரு சில மாதங்கள் கடந்தபின், தேவர்களின் அவதாரங்களான விருஷ்ணி, போஜ மற்றும் அந்தக வம்சத்தினர் அனைவரும் கிருஷ்ணரால் (விதியால்) மதியிழந்து, பிரபாஸத்திற்குச் சென்றனர். அதே சமயம் பகவானின் நித்திய பக்தர்கள் அங்கு செல்லாமல் துவாரகையிலேயே இருந்தனர்.

பதம் 3.3.26 : அந்த இடத்தை அடைந்த அவர்கள், அப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடி மூதாதையர்களுக்கும், தேவர்களுக்கும் பெரும் முனிவர்களுக்கும் தர்ப்பணம் செய்தும், சிறந்த பசுக்களை பிராமணர்களுக்குத் தானம் செய்தும், அவர்களை திருப்திப்படுத்தினர்.

பதம் 3.3.27 : பிராமணர்களுக்கு, சிறந்த பசுக்கள் மட்டுமல்லாமல் வாழ்க்கைக்குத் தேவையான தங்கம், தங்கக்காசுகள், படுக்கை, உடை, மிருகத்தோல் ஆசனங்கள், போர்வைகள், குதிரைகள், யானைகள், பெண்கள் மற்றும் போதுமான நிலம் ஆகிய பொருட்களும் கூட அளிக்கப்பட்டன.

பதம் 3.3.28 : அதன் பிறகு, பகவானுக்கு முதலில் அர்ப்பணம் செய்யப்பட்ட அறுசுவை உணவு வகைகளை பிராமணர்களுக்கு அளித்த அவர்கள், தங்கள் தலைகள் பூமியைத் தொட, பணிவுடன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தினர். பசுக்களையும், பிராமணர்களையும் பராமரித்து பக்குவமாக அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare