அத்தியாயம் – 22
கர்தம முனிவருக்கும் தேவ கீதிக்கும் திருமணம்
பதம் 3.22.1 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: அரசனின் பலவித குணங்களின் செயல்களின் சிறப்பை வர்ணித்த பிறகு, முனிவர் அமைதியானார். மன்னர் தன் அடக்கத்துடன் பின்வருமாறு அவரை அழைத்தார்.

பதம் 3.22.2 : மனு பதிலுரைத்தார்: வேதத்தின் உருவமாகிய பகவான் பிரம்மா, வேத அறிவில் தன்னை விரிவுபடுத்திக் கொள்ள, தவம், அறிவு, அறிவு கடந்த ஆற்றல், புலன் நுகர்ச்சியில் வெறுப்பு இவை நிறைந்த பிராம்மணர்களாகிய உங்களைத் தன் முகத்திலிருந்து படைத்தார்.

பதம் 3.22.3 : பிராம்மணர்களின் பாதுகாப்பிற்காக, ஆயிரம் பாதங்களை உடைய பரமன், அவருடைய ஆயிரம் கரங்களிலிருந்து க்ஷத்ரியர்களாகிய எங்களைப் படைத்தார். எனவே, பிராம்மணர்கள் அவருடைய மனமாகவும், க்ஷத்ரியர்கள் அவருடைய கரங்களாகவும் சொல்லப்படுகின்றனர்.

பதம் 3.22.4 : அதனாலே பிராம்மணர்களும் க்ஷத்ரியர்களும் தங்களையும் பாதுகாத்து, ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்கிறார்கள். காரணம் மற்றும் விளைவு இரண்டுமாக இருப்பினும், மாற்ற முடியாதவராக இருக்கும் பகவானே, ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம் அவர்களைப் பாதுகாக்கிறார்.

பதம் 3.22.5 : இப்பொழுது உங்களைச் சந்தித்ததனால் என்னுடைய எல்லாச் சந்தேகங்களிலிருந்தும் தெளிவு பெற்றேன். ஏனென்றால், தன் மக்களைக் காப்பாற்ற விரும்பும் அரசனுடைய கடமையை பகவானாகிய தாங்கள் கருணையுடனும் தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள்.

பதம் 3.22.6 : உங்களைப் பார்க்க முடிந்தது என் நல்ல வாய்ப்பாகும். ஏனெனில் தங்கள் மனத்தையும், புலன்களையும் அடக்காத மனிதர்களால் இறைவன் பார்க்க இயலாதவர். உங்களின் ஆசிர்வதிக்கப்பட்ட பாதங்களின் தூசி என் தலையில் படுவதற்கு நான் மேலும் அதிர்ஷ்டம் செய்துள்ளேன்.

பதம் 3.22.7 : உங்களால் அறிவுறுத்தப்படும் அதிர்ஷ்டமும், தங்களது ஆதரவும் யான் பெற்றுள்ளேன். நான் உங்கள் புனித சொற்களை, என் காதுகளால் தெளிவாகக் கேட்டதற்காக பகவானுக்கு நன்றி கூறுகிறேன்.

பதம் 3.22.8 : ஓ சிறந்த முனிவரே, என் மனம் என் மகள் மீது வைத்த பாசத்தால் குழம்பியிருக்கிறபடியால், தாழ்மையான என் விருப்பத்தைக் கேட்டு மகிழ்ந்து அருள் புரியவேண்டும்.

பதம் 3.22.9 : ப்ரியவ்ரதனுக்கும் உத்தானபாதனுக்கும் என் மகள் சகோதரி ஆவாள். அவள் வயது, நடத்தை, நல்ல குணங்கள் ஆகியவற்றில் தனக்குப் பொருந்திய கணவனைத் தேடிக் கொண்டிருக்கிறாள்.

பதம் 3.22.10 : நாரத முனிவரிடமிருந்து உங்களின் உயர் நடத்தை, கல்வி, அழகிய தோற்றம், இளமை மற்றும் பிற குணங்களைப் பற்றிக் கேட்ட மாத்திரத்தில் அவளது சிந்தனை அல்லது எண்ணம் தங்களை நாடலாயிற்று.

பதம் 3.22.11 : ஓ பிராம்மணர்களில் சிறந்தவரே, நான் அவளை மனப்பூர்வமாகக் கொடுப்பதால், தயவு செய்து அவளை ஏற்றுக் கொள்ளுங்கள். அவள் எல்லாவிதத்திலும் உங்களுக்கு மனைவியாக இருக்கத் தகுதியானவள். உங்கள் குடும்பக் கடமைகளை ஏற்கும் பொறுப்பையும் அவள் எடுத்துக் கொள்ளத் தகுதியானவள்.

பதம் 3.22.12 : எல்லாப் பிடிப்பிலிருந்தும் முழுவதுமாக விடுதலை அடைந்தவர் கூட, தானாகவே வரும் காணிக்கை ஒன்றை மறுப்பது பாராட்டத்தக்கதல்ல. புலனின்பத்திற்கு அடிமையானவர்களோ நிச்சயம் இதற்குக் குறைந்தவர் அல்லர்.

பதம் 3.22.13 : தானாகவே வரும் காணிக்கையை மறுத்துவிட்டுப் பின்னர் கஞ்சனிடமிருந்து வரத்தைக் கெஞ்சிக் கேட்பவர், தன் பரவலான மதிப்பை இழக்கிறார்; அவர் பெருமை பிறரது புறக்கணிக்கும் நடத்தையால் தாழ்த்தப்படுகிறது.

பதம் 3.22.14 : ஸ்வாயம்புவ மனு தொடர்ந்தார்: அறிவிற் சிறந்தவரே- நீங்கள் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக நான் கேள்வியுற்றேன். நீங்கள் நிலையான பிரம்மச்சரியம் மேற்கொள்ளும் உறுதி எடுக்காததால், தயவு செய்து என்னால் அளிக்கப்படும் இவளது கரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.

பதம் 3.22.15 : சிறந்த முனிவர் பதில் கூறினார்: எனக்கு மணந்து கொள்ளும் விருப்பம் நிச்சயம் உள்ளது. உங்கள் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அல்லது அவள் யாருக்கும் வாக்களிக்கவில்லை. அதனால் வேத முறைப்படி எங்கள் திருமணம் நடக்கலாம்.

பதம் 3.22.16 : வேத நூல்களில் விதிக்கப்பட்ட நியதிகளின்படி, திருமண விருப்பம் நிறைவேறட்டும். யார் தான் அவளை ஏற்றுக் கொள்ள மாட்டார்? அவள் அணிந்திருக்கும் ஆபரணங்களின் அழகை மிஞ்சும் ஒளி பொருந்திய அவள் மிகுந்த பேரழகு வாய்ந்தவள்.

பதம் 3.22.17 : சிறந்த கந்தர்வனாகிய விஸ்வாவஸூ, தங்கள் பெண் அரண்மனையின் மேன்மாடத்தில் பந்துடன் விளையாடுவதைப் பார்த்த பிறகு, மோகத்தால் அறிவு மழுங்கி, விமானத்திலிருந்து கீழே விழுந்தான். ஏனென்றால் அவள் கண்கள் அங்கும் இங்கும் அலைந்தன. அவள் கால்களில் ஒளிர்ந்து மிளிர்ந்து ஓசையெழுப்பிய கொலுசுகளுடன் அவள் மிகவும் அழகாக இருந்தாள்.

பதம் 3.22.18 : ஸ்வாயம்புவ மனுவின் அன்பு மகளும், உத்தானபாதாவின் சகோதரியும், பெண்மைக்கு அணிகலனாக விளங்குபவளுமான இவளை, எந்த விவேகி வரவேற்கமாட்டான்? அதிர்ஷ்ட தேவதையின் சிறப்பான திருப்பாதங்களை வணங்காதவர்களால், அவளை மனத்தாலும் உணர இயலாது. ஆயினும் அவள் என் கரம் பற்ற விரும்பி தானாகவே வந்திருக்கிறாள்.

பதம் 3.22.19 : அதனால் நான் இந்தக் கற்புள்ள பெண்ணை ஒரு நியதியோடு என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். அவள் என் உடலிலிருந்து வரும் விந்துவைப் பெற்றுக்கொண்ட பிறகு, நான் பெரும்பாலான பரிபூரண மனிதர்கள் ஏற்றுக்கொண்ட பக்தித் தொண்டை ஏற்றுக் கொள்வேன். அதன் செயல்முறை பகவான் விஷ்ணுவால் பலபடப் பேசப்பட்டுள்ளது. அப்பணி பொறாமைக்கும் அப்பாற்பட்ட சீரிய செயலாகும்.

பதம் 3.22.20 : எனக்கு மிகவும் உயர்ந்த அதிகாரி, எல்லையற்ற பரம் பொருளாகிய பகவான் ஆவார். அவரிடமிருந்து இந்த அற்புதமான உலகப் படைப்பு தோன்றியது. அவரிடமே அதன் ஆக்கமும், அழிவும் உள்ளது. இந்த உலகில் வாழும் உயிர்ப் பொருள்களை உருவாக்குபவர்களான எல்லா பிரஜாபதிகளுக்கும் அவர் முழுமுதற் காரணமாவார்.

பதம் 3.22.21 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: ஓ சிறந்த வீரரான விதுரரே. கர்தம முனிவர் இவ்வளவு தான் கூறினார். பின்னர் மௌனமானார். நாபியில் தாமரை உள்ள அவரின் வணங்கத் தகுந்த பகவான் விஷ்ணுவைப் பற்றி நினைத்தார். அவர் மௌனமாகச் சிரித்தபோது, அவர் முகம், சிறந்த முனிவரைத் தியானிக்கத் தொடங்கிய தேவஹூதியின் மனத்தைப் பற்றிக் கொண்டது.

பதம் 3.22.22 : இராணியின் முடிவைக் குற்றமில்லாமல் தெரிந்து கொண்ட பிறகு, தேவஹூதியின் முடிவைத் தெரிந்து கொண்ட பிறகு, மன்னர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் மகளை, நல்ல குணங்களில் எல்லாம் அவளுக்குச் சமமாக இருந்த முனிவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

பதம் 3.22.23 : இராணி சதரூபா, மணமகளுக்கும் மணமகனுக்கும், அந்த வேளைக்குத் தகுந்தவாறு, நகைகள், ஆடைகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் போன்ற மிகவும் விலையுயர்ந்த பரிசுகளை அன்புடன் கொடுத்தாள்.

பதம் 3.22.24 : இவ்வாறு தன் மகளை, தகுந்த மனிதருக்குக் கொடுத்ததன் மூலம் தன் பொறுப்பிலிருந்து விடுபட்ட ஸ்வாயம்புவ மனுவின் மனம் மகளைப் பிரிகிறோம் எனும் துன்பத்தால் வாடியது. எனவே தன் இரு கரங்களாலும் தன் அன்பு மகளை அணைத்துக் கொண்டார்.

பதம் 3.22.25 : மன்னர் மன்னரால் தன் மகளின் பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அதனால் அவர் கண்களிலிருந்து மீண்டும் மீண்டும் கண்ணீர் வழிந்து அவர் மகளின் தலையை நனைத்தது. அவர், “என் அன்பு அன்னையே- என் அன்பு மகளே!” என்று கதறினார்.

பதங்கள் 3.22.26 – 3.22.27 : செல்வதற்கு, சிறந்த முனிவரிடம் அனுமதி கேட்டுப் பெற்ற பிறகு, மன்னர் தன் மனைவியுடன் தேரில் ஏறி, தன் பரிவாரங்கள் பின்தொடர, தன் தலைநகர் நோக்கிச் செல்லத் தொடங்கினார். வழியெங்கும், அவர் முனிவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஸரஸ்வதி நதியின் அழகிய கரைகளில் இருந்த அழகான ஆசிரமக் குடில்களில் அமைதியான வளமையினைக் கண்டார்.

பதம் 3.22.28 : அவர் வரவை அறிந்து மிகவும் மகிழ்ந்து, அவர் குடிமக்கள் பாட்டுகள், போற்றுதல்கள், வாத்திய இசையுடன், திரும்பி வரும் மன்னரை வரவேற்க, பிரம்மாவர்த்தத்திலிருந்து வந்தார்கள்.

பதங்கள் 3.22.29 – 3.22.30 : எல்லாவித செல்வமும் நிறைந்த நகரமாகிய பர்ஹிஷ்மதீ, அப பெயரால் அழைக்கப்பட்டது. ஏனென்றால், பகவான் விஷ்ணுவின் முடி, அவர் வராக அவதாரமாக வெளிப்பட்ட போது அவர் உடலில் இருந்து அங்கு விழுந்தது. அவர் தன் உடலைக் குலுக்கியபோது, இந்த முடி விழுந்தது. அது குசாப் புல்லாகவும் காசா புல்லாகவும் (பாய்க்காக பயன்படும் மற்றொரு புல் வகை) என்றும் பசுமையானதாக மாறியது. அதைக் கொண்டு முனிவர்கள் அவர்களின் வேள்விச் சடங்கில் தலையிட்ட தீயவர்களைத் தோற்கடித்த பின்னர் பகவான் விஷ்ணுவை வழிபட்டார்கள்.

பதம் 3.22.31 : மனு, குச மற்றும் காச புல்லால் ஆன இருக்கையைப் பரப்பி பரமபுருஷ பகவானை வணங்கி, அவர் அருளால் இந்த நிலவுலக உருண்டையின் ஆட்சியைப் பெற்றார்.

பதம் 3.22.32 : மனு தாம் முன்னால் வாழ்ந்த நகரமாகிய பர்ஹிஷ்மதீயில் நுழைந்ததும் ஜடவுலக இருப்பின் மூவிதத் தொல்லைகளை அழித்ததும் நல்ல சூழல் நிறைந்ததுமான தன் அரண்மனைக்குள் நுழைந்தார்.

பதம் 3.22.33 : மன்னர் ஸ்வாயம்புவ மனு மதத்தின் நடைமுறைக்கு எதிரானதும் வேண்டாததும் ஆன கொள்கைகளால் தொல்லைக்கு ஆளாகாமல், தன் மனைவியுடனும், குடிமக்களுடனும் வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருந்தார். அவருடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டார். விண்ணுலகப் பாடகர்கள் தங்கள் மனைவிகளுடன், மன்னரின் தூய பெருமதிப்பைப் பற்றி விடியற்காலையில் கூட்டமாகப் பாடினர். அவர் அன்பான மனத்துடன் பரமபுருஷ பகவானின் திருவிளையாடல்களைப் பற்றி அன்றாடம் கேட்பது வழக்கம்.

பதம் 3.22.34 : ஸ்வாயம்புவ மனு ஒரு ராஜரிஷி. மண்ணுலக இன்பத்தில் ஆழ்ந்திருந்தாலும் அவர் வாழ்வின் கடைநிலைக்கு இழுத்துச் செல்லப்படவில்லை. ஏனெனில் அவர் உலக இன்பத்தை கிருஷ்ண உணர்வுச் சூழலில் எப்போதும் அநுபவித்தார்.

பதம் 3.22.35 : அதன் விளைவாக, ஒரு மன்வந்தர ஊழி அடங்கிய அவரது நெடிய வாழ்வு ஒரு முடிவுக்கு படிப்படியாக வந்த போதிலும், அந்த வாழ்வு வீணாகக் கழிக்கப்படவில்லை. ஏனெனில், எப்போதும் பகவானின் திருவிளையாடல்களை உச்சரிப்பதிலும் எழுதுவதிலும், ஆழ்ந்து நினைப்பதிலும் கேட்பதிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

பதம் 3.22.36 : அவர் நான்கு யுகங்களின் 71 சுழற்சிகளாக இருந்த அவர் காலத்தை, எப்போதும் வாசுதேவனை நினைப்பதிலும், வாசுதேவர் தொடர்பான நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு இருப்பதிலும் கழித்தார். இவ்வாறு அவர் மூன்று பயண இலக்குகளின் எல்லையைக் கடந்தார்.

பதம் 3.22.37 : அதனால் ஓ விதுரரே, இறை பணி செய்து கொண்டு பகவான் கிருஷ்ணரின் பாதுகாப்பில் முழுமையாக உள்ளவர்களின் உடல் மனம், இயற்கை, பிற மனிதர் இவற்றோடு உயிரினங்களின் தொடர்பு பட்ட அனைத்தும் எவ்வாறு துன்பங்களுக்கு ஆளாக இயலும்.

பதம் 3.22.38 : குறிப்பிட்ட முனிவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடையாக, அவர் (ஸ்வாயம்புவ மனு) எல்லாப் பொருள்களிடம் உள்ள அன்பினால், பொதுவாக மனிதர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றியும் வேறுபட்ட வர்ணங்கள், ஆசிரமங்களின் பணிகளைப் பற்றியும் கற்பித்தார்.

பதம் 3.22.39 : வர்ணிக்கத் தகுதியானவரும் மதிப்புடையவரும் உண்மையான அரசரும் ஆகிய ஸ்வாம்புவ மனுவின் அற்புதமான குணத்தைப் பற்றி நான் உங்களிடம் கூறினேன். அவரின் செழுமையான பெண் தேவகீதி பற்றியும் தான் கூறப்போவதைத் தயவு செய்து கேளுங்கள்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare