அத்தியாயம் – 6
புருஷ - சூக்தம் நிலை நாட்டப்பட்டது
பதம் 2.6.1 : பிரம்ம தேவர் கூறினார்: விராட் புருஷரின் (பகவானின் பிரபஞ்ச ரூபம்) வாய், குரலின் பிறப்பிடமாகும். நெருப்பு அதை ஆளும் மூர்த்தியாகும். அவரது தோலும் மற்ற ஆறு அடுக்குகளும் வேத மந்திரங்களின் உற்பத்தி ஸ்தானங்களாகும். மேலும் தேவர்கள், முன்னோர்கள் மற்றும் பாமர மக்கள் ஆகியோருக்குரிய வெவ்வேறு உணவு வகைகளுக்கு பிறப்பிடமாக இருப்பது அவரது நாக்காகும்.

பதம் 2.6.2 : அவரது நாசித்துவாரங்கள், நம் சுவாசத்திற்கும் மற்றெல்லா காற்றுகளுக்கும் பிறப்பிடங்களாகும். அவரது முகரும் சக்தி, தேவர்களான அஸ்வினி குமாரர்களையும், எல்லா வகையான மருந்து மூளிகைகளையும் உண்டு பண்ணுகிறது. அவரது சுவாசம் எல்லா வகையான வாசனைகளையும் உண்டாக்குகிறது.

பதம் 2.6.3 : அவரது கண்கள் எல்லா வகையான உருவங்களுக்கும் உற்பத்தி ஸ்தானங்களாக இருக்கின்றன. அவை மினுமினுப்பாகவும், பிரகாசிப்பவையாகவும், உள்ளன. அவரது கண்விழிகள் சூரியனைப் போன்றும், சுவர்க்க லோகங்களைப் போன்றும் உள்ளன. அவரது செவிகள் எல்லாப் புறங்களிலிருந்தும் கேட்பதுடன், வேதங்களுக்கும், அவை பாதுகாப்பு இடங்களாகவும் உள்ளன. மேலும் அவரது கேட்கும் புலன் ஆகாயத்திற்கும் எல்லா வகையான ஓசைகளுக்கும் பிறப்பிடமாகும்.

பதம் 2.6.4 : அவரது உடலின் வெளிப்பரப்பானது, எல்லா சாராம்சங்களுக்கும், அடிப்படை உண்மைகளுக்கும், மங்களகரமான சந்தர்ப்பங்களுக்கும் உற்பத்தி ஸ்தானமாக இருக்கிறது. அவரது தோல், அசையும் காற்றைப் போன்ற எல்லா வகையான ஸ்பரிச உணர்வுகளுக்கும் பிறப்பிடமாக இருப்பதுடன், எல்லா வகையான யாகங்களை இயற்றும் இடமாகவும் உள்ளது.

பதம் 2.6.5 : அவரது உடலிலுள்ள ரோமங்கள் எல்லா வகையான தாவரங்களுக்கும் காரணமாக உள்ளன. குறிப்பாக யாகங்களுக்குத் தேவையான பொருட்களாக உபயோகப்படும் மரங்களுக்கு அவை காரணமாக உள்ளன, அவரது தலை மீதும், முகத்தின் மீதும் உள்ள ரோமங்கள் மேகங்களின் பிறப்பிடமாக உள்ளன. மேலும் அவரது நகங்கள், மின்சாரம், கற்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றிற்குப் பிறப்பிடங்களாகும்.

பதம் 2.6.6 : பகவானின் கரங்கள், சிறந்த தேவர்களுக்கும், ஜீவராசிகளை காப்பவர்களான பிற தலைவர்களுக்கும் உரிய பிறப்பிடங்களாகும்.

பதம் 2.6.7 : இவ்வாறாக பகவானின் முன்னேறும் அடிகள், மேல், கீழ் மற்றும் ஸ்வர்க்க லோகங்களுக்கும், நமக்குத் தேவையான அனைத்திற்கும் புகலிடமாகும். அவரது தாமரைப் பாதங்கள் எல்லா வகையான பயத்திலிருந்தும் பாதுகாப்பு வழங்கக் கூடியதாகும்.

பதம் 2.6.8 : பகவானின் பாலுறுப்புக்களிலிருந்து நீர், விந்து, ஸ்தானங்கள், மழை மற்றும் சந்ததியை உற்பத்தி செய்பவர்கள் ஆகியவை தோன்றுகின்றன. அவரது பாலுறுப்புக்கள், சந்ததி உற்பத்தியால் விளையும் துன்பத்தை மறக்கடிக்கக் கூடிய சுகத்திற்கு காரணமாக விளங்குகின்றன.

பதம் 2.6.9 : ஓ நாரதா, பகவானுடைய பிரபஞ்ச உருவின் மலத்துவாரம், மரண தேவனான மித்திரனின் வசிப்பிடமாகும். பகவானின் மலத்துவாரமும், மலக்குடலும், பொறாமை, துரதிர்ஷ்டம், மரணம், நரகம் போன்றவைகளுக்குரிய இடங்களாகும்.

பதம் 2.6.10 : பகவானின் முதுகு எல்லா வகையான ஏமாற்றம், அறியாமை மற்றும் அதர்மம் ஆகியவற்றுக்குரிய இடமாகும். அவரது இரத்தக் குழாய்களிலிருந்து பெரும் நதிகளும், சிற்றாறுகளும் பாய்ந்தோடுகின்றன. அவரது எலும்புகளின் மீது பெரும் மலைகள் குவிந்துள்ளன.

பதம் 2.6.11 : பகவானின் அருவ அம்சம் சமுத்திரங்களின் இருப்பிடமாகும். அவரது வயிறு பௌதிக அழிவுக்குட்பட்ட ஜீவராசிகளின் இளைப்பாறும் இடமாகும். அவரது இதயம் சூட்சுமமான ஜட உடல்களைக் கொண்ட ஜீவராசிகளின் வசிப்பிடமாகும். நுண்ணறிவு படைத்தவர்கள் இதை இவ்வாறு அறிகின்றனர்.

பதம் 2.6.12 : தவிரவும், நான், நீ மற்றும் நான்கு பிரம்மச்சாரிகளான சனகர், சனாதனர், சனத் குமாரர் மற்றும் சனந்தனர் ஆகியோருடைய சமயக் கொள்கைகளின் இருப்பிடமாக அந்த மகா புருஷரின் உணர்வு இருக்கின்றது. அதே உணர்வுதான் உண்மைக்கும், உன்னத அறிவிற்கும் கூட இருப்பிடமாகும்.

பதங்கள் 2.6.13- 2.6.16 : என்னிலிருந்து (பிரம்மா) துவங்கி, நீ, பவன் (சிவன்) உனக்கு முன் பிறந்த பெரும் முனிவர்கள், தேவர்கள், அசுரர்கள், நாகர்கள், மனிதர்கள், பறவைகள், மிருகங்கள் மற்றும் ஊர்வன போன்றவை, மேலும் பிரபஞ்சங்களிலுள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள், சிறிய கிரகங்கள், ஒளிரும் கிரகங்கள், மின்னல், இடி போன்றவை, மேலும் வெவ்வேறு கிரக அமைப்புக்களின் வாசிகளான சுந்தர்வர்கள், அப்சரர்கள், யக்ஷர்கள், ரக்ஷர்கள், பூதகணங்கள், உரகர்கள், பசுக்கள், பிதாக்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள் போன்றவர்கள், உட்பட மற்றெல்லா வகையான ஜீவராசிகள், மேலும் மற்றெல்லா பொருட்கள் வரையுள்ள அனைத்தும் கடந்த, நிகழ் மற்றும் எதிர் காலமெனும் எல்லாக் காலங்களிலும் பகவானின் பிரபஞ்ச ரூபத்தால் மூடப்பட்டுள்ளன. பகவான் ஒன்பது அங்குலங்களைக்கடந்துவிடாத ஓர் உருவில் நித்தியமாக வாழ்பவராகவும், மேற்குறிப்பிட்ட அனைத்திற்கும் மேற்பட்டவராகவும் இருப்பினும் அவர் அனைத்தையும் தமக்குள் அடக்கிக் கொண்டுள்ளார்.

பதம் 2.6.17 : சூரியன் அதன் ஒளிக்கதிர்களை விரிவடையச் செய்வதன் மூலமாக, உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் ஒளிமயமாக்குகிறது; அதுபோலவே, பரமபுருஷ பகவான் தமது பிரபஞ்ச ரூபத்தை விரிவடையச் செய்வதன் மூலமாக, படைப்பிற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள அனைத்தையும் பராமரிக்கிறார்.

பதம் 2.6.18 : பரமபுருஷர், மரணம் மற்றும் அச்சமின்மை ஆகிய நிலைகளை ஆள்பவராகவும், ஜட உலக செயல் விளைவுகள் மற்றும் மரணம் ஆகியவற்றிற்கு மேற்பட்டவராகவும் உள்ளார். எனவே ஓ நாரதா, ஓ பிராமணா, பகவானின் பெருமைகளை அளந்தறிவது கடினம்.

பதம் 2.6.19 : எதில் எல்லா ஜீவராசிகளும் உயிர் வாழ்கின்றனவோ, அந்த நான்கிலொரு பகுதி கொண்ட பகவானின் சக்தியில், எல்லா பௌதிகச் செல்வங்களும் உறைகின்றன. மரணம், பயம், முதுமை மற்றும் நோய் ஆகிய கவலைகளிலிருந்து விடுபட்டுள்ள பகவானின் இராஜ்யம், மூன்று உயர்கிரக அமைப்புகளுக்கும், பௌதிக அடுக்குகளுக்கும் (திரை) அப்பாற்பட்டதாகும்.

பதம் 2.6.20 : பகவானின் சக்தியில் முக்கால் பாகத்தைக் கொண்ட ஆன்மீக உலகம் இந்த ஜட உலகிற்கப்பால் அமைந்துள்ளது. அது பிறப்பற்றவர்களுக்குரிய உலகாகும். குடும்ப வாழ்வில் பற்றுடையவர்களும், பிரம்மச்சரிய விரதத்தை முறையாகப் பின்பற்றாதவர்களுமான, பிறர் மூன்று ஜட உலகங்களிலேயே வாழ வேண்டும்.

பதம் 2.6.21 : சர்வ வியாபகமுள்ளவரான முழுமுதற் கடவுள், அவரது சக்திகளின் மூலமாக, ஆட்சி புரியும் செயல்களுக்கும், பக்தித் தொண்டிற்கும் எஜமானராவார். எல்லா சூழ்நிலைகளிலும் அறியாமைக்கும், உண்மை அறிவிற்கும் அவரே முடிவான எஜமானராக இருக்கிறார்.

பதம் 2.6.22 : முழுமுதற் கடவுளிடமிருந்து, பிரபஞ்ச கோளங்கள், மற்றும் பௌதிக மூலப் பொருட்கள், குணங்கள், புலன்கள் ஆகியவற்றுடன் கூடிய பிரபஞ்ச ரூபம் ஆகியவை உற்பத்தியாகின்றன. இருப்பினும், சூரியன் அதன் கதிர்கள் மற்றும் வெப்பம் ஆகியவற்றிலிருந்து பிரிந்திருப்பதைப் போலவே, அத்தகைய ஜடத் தோற்றங்களில் இருந்து அவர் பிரிந்திருக்கிறார்.

பதம் 2.6.23 : இந்த மகா புருஷருடைய (மஹா-விஷ்ணு) நாபிக் கமலத்திலிருந்து நான் பிறந்த பொழுது, இப்புருஷருடைய அங்கங்களைத் தவிர அவரை ஆராதிப்பதற்குரிய எந்த பொருளும் என்னிடம் இருக்கவில்லை.

பதம் 2.6.24 : யாகச் சடங்குகளை நிறைவேற்றுவதற்கு, மலர்கள், இலைகள்,வைக்கோல், யாகபீடம் மற்றும் உகந்த காலம் (வசந்த காலம்) போன்ற யாகப் பொருட்கள் தேவைப்படுகின்றன.

பதம் 2.6.25 : பாத்திரங்கள், தானியங்கள், நெய், தேன், தங்கம், மண், நீர், ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம் மற்றும் நான்கு வேதியர்கள் ஆகியவை யாகத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான பிற பொருட்களாகும்.

பதம் 2.6.26 : தேவர்களின் வெவ்வேறு நாமங்களை எழுந்தருளச் செய்வது எஞ்சியுள்ள தேவைகளில் ஒன்றாகும். இதை, குறிப்பிட்ட நோக்கங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட முறைகளுடனும், குறிப்பிட்ட சாஸ்திரத்திற்கு இணங்கவும் நிறைவேற்ற வேண்டும்.

பதம் 2.6.27 : இவ்வாறாக யாகத்திற்குத் தேவையான பொருட்களை முழுமுதற் கடவுளின் சொந்த உடலுறுப்புக்களிலிருந்தே நான் ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. தேவர்களின் நாமங்களை ஏழுந்தருளச் செய்வதன் மூலமாக, முடிவான இலக்காகிய, விஷ்ணுவை படிப்படியாக அடைய முடிந்தது. இவ்வாறாக பிராயச்சித்தமும், முடிவான நிவேதனமும் முற்றுப்பெற்றன.

பதம் 2.6.28 : இவ்வாறாக யாகத்தை அனுபவிப்பவரான, பரமபுருஷரின் உடலுறுப்புக்களிலிருந்து யாகத்தை நிறைவேற்றுவதற்குரிய பொருட்களை நான் படைத்தேன். பிறகு பகவானை திருப்திப்படுத்துவதற்காக யாகத்தையும் நான் நிறைவேற்றினேன்.

பதம் 2.6.29 : எனதருமை மகனே, அதன் பின், ஜீவராசிகளின் தலைவர்களான உன்னுடைய ஒன்பது சகோதரர்கள், தோன்றியும் தோன்றாமலும் உள்ள புருஷர்களை திருப்திப்படுத்துவதற்காக, முறையான சடங்குகளுடன் யாகத்தை நிறைவேற்றினர்.

பதம் 2.6.30 : அதற்குப்பின், மனிதகுலத் தந்தைகளான மனுக்கள், சிறந்த முனிவர்கள், முன்னோர்கள், கற்றறிந்த பண்டிதர்கள், தைதியர்கள், மனித குலத்தினர் ஆகியோர் பரமபுருஷரை மகிழ்விப்பதற்கான யாகங்களை இயற்றினர்.

பதம் 2.6.31 : எனவே ஜடப் பிரபஞ்சங்களின் எல்லாத் தோற்றங்களும் அவரது சக்திவாய்ந்த பௌதிக சக்திகளில் அமைந்திருக்கின்றன. அவர் பௌதிக குணங்களால் ஒரு பொழுதும் கவரப்படாதவராக இருப்பினும், பௌதிக சக்திகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.

பதம் 2.6.32 : அவரது விருப்பத்தால், நான் சிருஷ்டிக்கிறேன், சிவபெருமான் அழிக்கிறார். அவரது நித்தியமான முழுமுதற் கடவுளின் ரூபத்தில் அவர் அனைத்தையும் காக்கிறார். அவரே இம்மூன்று சக்திகளையும் அடக்கியாளும் சக்தி பெற்றவராவார்.

பதம் 2.6.33 : எனதருமை மைந்தனே, எதை எல்லாம் நீ என்னிடமிருந்து விசாரனை செய்தாயோ, அவற்றை எல்லாம் உனக்கு நான் விளக்கிக் கூறினேன். மேலும் (ஜட மற்றும் ஆன்மீக உலகங்களில், காரணமாகவோ அல்லது விளைவாகவோ உள்ள) அனைத்துமே பரமபுருஷ பகவானின் தயவையே நம்பியுள்ளன என்பதை உறுதியாக நீ அறிய வேண்டும்.

பதம் 2.6.34 : ஓ நாரதா, பரமபுருஷ பகவானாகிய ஹரியின் தாமரைப் பாதங்களை நான் பெரும் சிரத்தையுடன் பற்றிக் கொண்டிருப்பதால், நான் கூறுவதனைத்தும் இதுவரை பொய்யென நிரூபிக்கப்பட்டதே இல்லை. என் மனதின் முன்னேற்றமும் இதுவரை தடைப்பட்டதில்லை. நிலையற்ற பற்றினால் எனது புலன்கள் ஒருபோதும் இழிவடைந்ததே இல்லை.

பதம் 2.6.35 : நான் சீடப் பரம்பரையின் வேத ஞானத்தில் பூரணத்துவம் பெற்ற சக்தி வாய்ந்த பிரம்மா என்று அறியப்பட்டிருப்பினும், மேலும் எல்லாத் தவங்களையும் நான் செய்திருப்பதுடன், யோக சித்திகளிலும், தன்னுணர்விலும் நிபுணனாய் இருப்பினும், ஜீவராசிகளின் முன்னோர்களால் நான் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டு இருப்பினும், அவர்கள் என்னிடம் மரியாதைக்குரிய வணக்கங்களை சமர்ப்பித்த போதிலும் என் பிறப்பிற்கு மூலமாகிய பகவானை நான் இன்னமும் அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறேன்.

பதம் 2.6.36 : எனவே அவரது (பகவான்) பாதங்களில் நான் சரணாகதியடைவது எனக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகும். அது மட்டுமே ஒருவரை பிறவிச் சக்கரத்தின் துன்பங்களிலிருந்து விடுவிக்கக் கூடியதாகும். இத்தகைய சரணாகதி சர்வ மங்களம் பொருந்தியது மட்டுமல்லாமல், ஒருவன் எல்லா இன்பங்களையும் உணரவும் அவனுக்கு உதவுகிறது. ஆகாயத்தால் கூட அவன் சொந்த பரப்பளவை மதிப்பிட முடியாது. ஆகவே தமது சொந்த எல்லைகளை பகவானாலேயே மதிப்பிட முடியவில்லை என்றால் பிறரால் என்ன செய்ய முடியும்?

பதம் 2.6.37 : சிவபெருமானோ, நீயோ அல்லது நானோ ஆன்மீக ஆனந்தத்தின் எல்லைகள் ஆராய்ந்தறிய முடியாதென்றால், மற்ற தேவர்களால் படைக்கப்பட்ட எப்படி முடியும்? மேலும் பரமபுருஷரின் மாயையான புறச் சக்தியால் நாமனைவரும் குழப்பம் அடைந்திருப்பதால், இப்பிரபஞ்சத்தை மட்டுமே நம்முடைய தனிப்பட்ட ஆற்றலுக்கு ஏற்றவாறு நம்மால் காண முடியும்.

பதம் 2.6.38 : பகவானை உள்ளவாறு பூரணமாக அறிவது கடினம் என்றாலும், யாருடைய அவதாரங்களையும், செயல்களையும் நாம் போற்றிப் புகழ்கிறோமோ, அப்பரமபுருஷரை மரியாதையுடன் வணங்குவோமாக.

பதம் 2.6.39 : அந்த மூல முழுமுதற் கடவுளாகிய, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், முதல் அவதாரமான மஹா-விஷ்ணுவாக விரிவடைந்து இப்பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறார். ஆனால் அவர் பிறப்பற்றவராவார். இருந்தாலும் அவருக்குள் சிருஷ்டியும் நிகழ்கிறது. மேலும் ஜடப் பொருள் மற்றும் தோற்றங்கள் ஆகிய அனைத்தும் அவரேயாகும். அவற்றை அவர் சில காலம் பராமரித்த பின், மீண்டும் அவற்றை தமக்குள் கிரகித்துக் கொள்கிறார்.

பதங்கள் 2.6.40 – 2.6.41 : முழுமுதற் கடவுள் எல்லா ஜடக்களங்கங்களிலிருந்தும் விடுபட்டவராக இருப்பதால், அவர் தூய்மையானவராவார். அவர் பரம சக்தியாகவும், முழுமையும், பூரணமும் கொண்ட அறிவு சொரூபமாகவும் விளங்குகிறார். அவர் ஆரம்பமும், முடிவும் இல்லாதவரும், இணையற்றவரும், எங்கும் பரவி இருப்பவரும் ஆவார். ஓ நாரத, சிறந்த ரிஷியே, பெரும் முனிவர்கள் ஜட ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு, புலன்களின் தொல்லையற்ற நிலையை அடையும் பொழுது பகவானை அவர்களால் அறிய முடியும். இல்லையெனில், அர்த்தமற்ற தர்க்கங்களால் அனைத்தும் நிலைகுலைந்து பகவான் நம் பார்வையிலிருந்து மறைந்து விடுகிறார்.

பதம் 2.6.42 : பரமபுருஷரின் முதல் அவதாரம் காரணார்ணவசாயி விஷ்ணு ஆவார். நித்திய காலம், விண்வெளி, காரண விளைவுகள், மனம், மூலப் பொருட்கள், ஜட அகங்காரம், இயற்கைக் குணங்கள், புலன்கள், பகவானின் விஸ்வரூபம், கர்போதகசாயீ விஷ்ணு மற்றும் அசைவன அசையாதன எனும் பிரிவுகளிலுள்ள ஜீவராசிகள் ஆகிய அனைத்திற்கும் அவரே எஜமானராவார்.

பதங்கள் 2.6.43 – 2.6.45 :
நான் (பிரம்மா), சிவ பெருமான், பகவான் விஷ்ணு, ஜீவராசிகளை உற்பத்தி செய்யும் தட்சன் மற்றும் பிரஜாபதியைப் போன்றவர்கள், நீங்கள் (நாரதரும் குமாரர்களும்), இந்திரன், சந்திரனைப் போன்ற சுவர்க்கலோக தேவர்கள், பூலோக, மண்ணுலகங்களின் தலைவர்கள், மற்றும் கந்தர்வ வித்யாதர, சாரண லோகங்களின் தலைவர்கள்; யக்ஷர்கள், ரக்ஷர்கள் மற்றும் உரகர்களின் தலைவர்கள், சிறந்த முனிவர்கள், பெரும் அசுரர்கள், பெரும் நாத்திகர்கள், விண்வெளிப் பயணிகள், உயிரற்ற உடல்கள், பிசாசுகள், சைத்தான்கள், பூதங்கள், கூஷ்மாண்டர்கள், பெரும் நீர்ப்பிராணிகள், வலிமையுள்ள மிருகங்கள் மற்றும் சக்தி வாய்ந்த பறவைகள் போன்றவை பகவானின் விசேஷ தன்மையாகவும், அல்லது ரூபமாகவும் தோன்றக்கூடும். உருவத்துடனோ அல்லது உருவற்ற நிலையிலோ உள்ள ஐசுவரியம், மனோ பலம் மற்றும் நிலையான பலம், வலிமை, மன்னிப்பு, அழகு, அடக்கம், மற்றும் நன்நடத்தை ஆகியவை பகவானின் விசேஷமான தன்மையாகவும், அவரது ரூபமாகவும் தோன்றக் கூடும், ஆனால் உண்மையில் அவை பகவானுடைய உன்னதமான ஆற்றலில் ஒரு துணுக்கு மட்டுமேயாகும்.

பதம் 2.6.46 : ஓ நாரதா, பகவானின் உன்னதமான லீலா-அவதாரங்களைப் பற்றி இப்பொழுது ஒவ்வொன்றாக நான் கூறுகிறேன். அவர்களின் லீலைகளைக் கேட்பதால், செவிகளில் சேர்ந்துள்ள அழுக்காறுகள் மறையும், இந்த லீலைகள் கேட்பதற்கு இனிமையானவையும் சுவைத்து அனுபவிக்கப்பட வேண்டியவையும் ஆகும் என்பதால், அவை என் இதயத்தில் உள்ளன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare