அத்தியாயம் – 8
குந்தி மகாராணியின் பிரார்த்தனைகள்
பதம் 1.8.1
ஸூத உவாச
அத தே ஸம்பரேதானாம் ஸ்வானாம் உதகம் இச்சதாம்
தா தும் ஸக்ருஷ்ணா கங்காயாம் புரஸ்க்ருத்ய யயு: ஸ்த்ரிய:

ஸூதஉவாச – சூதர்கூறினார்; அத—இவ்வாறாக; தே-பாண்டவர்கள்; ஸம்பரேதானாம்-இறந்தவர்களின்; ஸ்வானாம்- உறவினர்களின்; உதகம் -நீர்; இச்சதாம்- பெற விரும்பிய; தாதும்- தர்ப்பணம் செய்ய; ஸக்ருஷ்ணா-திரௌபதியுடன்; கங்காயாம்- கங்கையில்; புரஸ்க்ருத்ய-முன்வைத்து; யயு:-சென்றனர்; ஸ்த்ரிய: பெண்களை.

சூத கோஸ்வாமி கூறினார்: அதன் பிறகு, நீரைப் பெற விரும்பிய மரணமடைந்த உறவினர்களுக்கு நீரை தர்ப்பணம் செய்யும் விருப்பத்துடன், பெண்கள் முன்னால் நடந்து செல்ல, பாண்டவர்கள் திரௌபதியுடன் கங்கையை நோக்கிச் சென்றனர்.

பதம் 1.8.2
தே நினீயோதகம் ஸர்வே விலப்ய ச ப்ருசம் புன:
ஆப்லுதா ஹரி-பாதாப்ஜ—ரஜ: பூத—ஸரிஜ்—ஜலே

தே- அவர்கள் அனைவரும்; நினீய- தர்ப்பணம் உதகம் – நீர;, ஸர்வே-அவர்களில் ஒவ்வொருவரும; விலப்ய- விசனப்பட்டு; ச-மேலும்; ப்ருசம்-போதுமான அளவிற்கு; புன- மீண்டும்; ஆப்லுதா-குளித்தனர்; ஹரி-பாதாப்ஜ-பகவானின் மலர்ப்பாதங்கள்; ரஜ,-தூசு; பூத-புனிதமடைந்த; ஸரித்—கங்கையின்; ஜலே-நீரில்.

அவர்களை நினைத்து விசனப்பட்டு, போதுமான அளவு கங்கை நீரை அவர்களுக்கு அர்ப்பணம் செய்தபின், கங்கையில் அவர்கள் நீராடினர். அந்த கங்கை நீர் பகவானுடைய மலர்ப்பாதங்களின் தூசுகளுடன் கலந்து புனிதம் அடைந்திருந்தது.

பதம் 1.8.3
தத்ராஸீனம் குரு-பதிம் த்ருதராஷ்ட்ரம் ஸஹானுஜம்
காந்தாரீம் புத்ர-சோகார்தாம் ப்ருதாம் கிருஷ்ணாம் ச மாதவ:

தத்ர —அங்கு; ஆஸீனம்—அமர்ந்து; குரு-பதிம்— குரு வம்சத்திர அரசன்; த்ருதராஷ்ட்ரம்—திருதராஷ்டிரர்; ஸஹ-அனுஜம்-அவரது இளைய சகோதரர்களுடன; காந்தாரீம்- காந்தாரி; புத்ர-மகள்; சோகஅர்தாம்.—சோகம் மேலிட; ப்ருதாம்- குந்தி; க்ருஷ்ணாம்—திரெபைதி; ச-மேலும்; மாதவ-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

அந்த இடத்தில், குரு வம்சத்தின் அரசரான யுதிஷ்டிர மகாராஜன் தமது இளைய சகோதரர்களுடனும், திருதராஷ்டிரர், காந்தாரி, குந்தி மற்றும் திரௌபதி ஆகியோருடனும் துக்கத்தில் ஆழ்ந்தவராய் அமர்ந்திருந்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் கூட அங்கு இருந்தார்.

பதம் 1.8.4
ஸாந்த்வயாம் ஆஸ முனிபிர் ஹத-பந்தூன் சுசார்பிதான்
பூதேஷு காலஸ்ய கதிம் தர்சயன் ந ப்ரதிக்ரியாம்

ஸாந்த்வயாம் ஆஸ—சமாதானப்படுத்தினார்; முனிபி:-அங்கிருந்த முனிவர்களுடன்; ஹத-பந்தூன்—தங்களது நண்பர்களையும்; உறவினர்களையும் இழந்தவர்கள்; சுசார்பிதான்—அதிர்ச்சியும்; பாதிப்பும் அடைந்திருந்த அனைவரும்; பூதேஷு- ஜீவராசிகளை; காலஸ்ய-சர்வ சக்தி படைத்தவருடைய பரம ஆணையின்; கதிம்-பிரதிபலன்கள்; தர்சயன்—சுட்டிக்காட்டினர்; ந- இல்லை; ப்ரதிக்ரியாம்- பரிகாரங்களை.

சர்வ சக்தி படைத்தவரின் கடுமையான சட்டங்களும், அவற்றின் பிரதிபலன்களும் எப்படி ஜீவராசிகளிடம் செயற்படுகின்றன என்பதை எடுத்துக்கூறி, அதிர்ச்சியும், பாதிப்பும் அடைந்திருந்தவர்களை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், முனிவர்களும் சமாதானப்படுத்த ஆரம்பித்தனர்.

பதம் 1.8.5
ஸாதயித்வாஜாத-சத்ரோ: ஸ்வம் ராஜ்யம் கிதவைர் ஹ்ருதம்
காதயித்வாஸதோ ராஜ்ன: கச-ஸ்பர்ச க்ஷதாயுஷ:

ஸாதயித்வா-நிறைவேற்றியதும்; அஜாத-சத்ரோ:-எதிரியற்றஒருவரின்; ஸ்வம் ராஜ்யம்- சொந்த இராஜ்ஜியம்; இதவை- கெட்டிக்காரர்களால் (துரியோதனனும், அவனது குழுவினரும்); ஹ்ருதம்-ஆக்கிரமித்தனர்; காதயித்வா- கொன்றதும்; அஸத- அயோக்கியர்களான; ராஜ்ன:-ராணியின்; கச-கூந்தல்; ஸ்பர்ச- முரட்டுத்தனமாக கையாளப்பட்ட; க்ஷத-குறைந்து போனது; ஆயுஷ:- ஆயுளால்.

எதிரியற்றவரான யுதிஷ்டிரரின் இராஜ்யத்தை வஞ்சகர்களான துரியோதனனும், அவனது குழுவினரும் தந்திரமாக அபகரித்துக் கொண்டனர். பகவானின் கருணையால், இழந்தது திரும்பப் பெறப்பட்டது. மேலும் துரியோதனனுடன் இணைந்து கொண்ட யோக்கியமற்ற அரசர்கள் பகவானால் கொல்லப்பட்டனர். ராணி திரௌபதியின் கூந்தலை முரட்டுத்தனமாக கையாண்டதற்காக மற்றவர்களும்கூட ஆயுள் குறைக்கப்பட்டு மரணமடைந்தனர்.

பதம் 1.8.6
யாஜயித்வாஸ்வமேதைஸ் தம் த்ரிபிர் உத்தம-கல்பகை:
தத்-யச: பாவனம் திக்ஷு சத-மன்யோர் இவாதனோத்

யாஜயித்வா—செய்வதால்; அஸ்வமேதை:-குதிரையொன்று பலியிடப்படும் யாகம்; தம்- அவரை (யுதிஷ்டிர மகாராஜன்); த்ரிபி- மூன்று; உத்தம-மிகச்சிறந்த; கல்பகை:-தேவையான பொருட்கள் அனைத்தும் அளிக்கப்பட்டு, தகுதியுள்ள ப்ரோகிதர்களால் நிறை வேற்றப்பட்ட; தத்-அந்த; யச:-புகழ்; பாவனம்- நேர்மையான; திக்ஷு—எல்லா திசைகளிலும்; சத-மன்யோ:-இதைப் போன்ற நூறு யாகங்களைச் செய்தவரான இந்திரன்; இவ-போல்; அதனோத்— பரவியது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நன்கு இயற்றப்பட்ட மூன்று அஸ்வமேத யாகங்களை நடத்தும்படி யுதிஷ்டிர மகாராஜனைத் தூண்டினார். இவ்வாறாக, இத்தகைய நூறு யாகங்களைச் செய்ததால் எல்லா திசைகளிலும் போற்றப்படும் இந்திரனின் புகழைப் போல் யுதிஷ்டிர மகாராஜனின் நேர்மையான புகழும் எல்லாத் திசைகளிலும் போற்றப்படுவதற்கு பகவான் காரணமாக இருந்தார்.

பதம் 1.8.7
ஆமந்த்ரிய பாண்டு-புத்ராம்ஸ்ச சைனேயோத்தவ-ஸம்யுத:
த்வைபாயனாதிபிர் விப்ரை: பூஜிதை: ப்ரதிபூஜித:

ஆமந்த்ரிய—அழைத்து; பாண்டு-புத்ரான்-பாண்டுவின் மகன்களையும்; ச-மேலும்; சைனேய—ஸாத்யகி; உத்தவ-உத்தவர்; ஸம்யுத:-சூழப்பட்டவராய்; த்வைபாயன-ஆதிபி:-வேத வியாசரைப் போன்ற ரிஷிகளால்; விப்ரை:-பிராமணர்களால்; பூஜிதை:— வழிபடப்பட்டு; ப்ரதிபூஜித:-பகவானும் அதற்குச் சமமான அன்பைக் காட்டினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறகு புறப்படுவதற்குத் தயாரானார். ஸ்ரீல வியாசதேவரை தலைமையாகக் கொண்ட பிராமணர்களால் வழிபடப்பட்ட பின், பாண்டு புத்திரர்களை அவர் அழைத்தார். பகவானும் அவர்களுடன் அன்புப் பரிமாற்றம் செய்து கொண்டார்.

பதம் 1.8.8
கந்தும் க்ருதமதிர் ப்ரஹ்மன் த்வாரகாம் ரதம் ஆஸ்தித:
உபலேபே ’பிதாவந்தீம் உத்தராம் பய-விஹ்வலாம்

கந்தும்— புறப்பட விரும்பியதும்; க்ருதமதி:- முடிவு செய்து; ப்ரஹ்மன்-பிராமணரே; த்வாரகாம்-துவாரகையைநோக்கி; ரதம்—இரதத்தில்;ஆஸ்தித:- அமர்ந்ததும்; உபலேபே -கண்டார்; அபிதாவந்தீம்—அவசரமாக வருவதை; உத்தராம்—உத்தரா; பய-விஹ்வலாம்- அச்சங்கொண்டு.

துவாரகையை நோக்கிப் புறப்பட அவர் இரதத்தில் அமர்ந்த உடனேயே, உத்தரா பயத்துடன் தன்னை நோக்கி அவசரமாக வருவதை அவர் கண்டார்.

பதம் 1.8.9
உத்தரோவாச
பாஹி பாஹி மஹா-யோகின் தேவ- தேவ ஜகத்- பதே
நான்யம் த்வத் அபயம் பஸ்யே யத்ர ம்ருத்யு: பரஸ்பரம்

உத்தரா உவாச—உத்தரா கூறினாள்; பாஹிபாஹி-காப்பாற்றுங்கள்; காப்பாற்றுங்கள்; மஹா-யோகின்-மகாயோகி; தேவ – தேவ தேவர்களாலும் வணங்கப்படுபவர்; ஜகத்பதே-அகில லோக நாயகனே; ந—இல்லை; அன்யம்—வேறு ஒருவரும்; த்வத்—உங்களைத் தவிர; அபயம்—அபயம்; பஸ்யே-என்னால் காண முடிகிறது; யத்ர— எங்கு இருக்கிறார்; ம்ருத்யு:-இறப்பு; பரஸ்பரம்-இருமையுடைய இவ்வுலகில்.

உத்தரா கூறினாள்: தேவ தேவனே, அகில லோக நாயகனே, தாங்கள் யோகிகளிலெல்லாம் மிகச்சிறந்தவராவீர். இருமையுடைய இவ்வுலகில், மரணத்தின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றக்கூடியவர் வேறொருவரும் இல்லை என்பதால், தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்.

பதம் 1.8.10
அபித்ரவதி மாம் ஈச சரஸ் தப்தாயஸோ விபோ
காமம் தஹது மாம் நாத மா மே கர்போ நிபாத்யதாம்

அபித்ரவதி-நோக்கி வருகிறது; மாம்-என்னை; ஈச- பகவானே; சர:- அம்பு; தப்த- தீ போன்ற; அயஸ-இரும்பு; விபோ-மகத்தானவரே; காமம்-விருப்பம்; தஹது-எரிக்கட்டும்; மாம்- என்னை; நாத-காவலரே; மா-வேண்டாம்; மே-எனது ; கர்ப:-கரு; நிபாத்யதாம்—சிதைக்கப்பட.

எம்பெருமானே, தாங்கள் சர்வசக்தி படைத்தவராவீர். இரும்பாலான, தீப்போன்ற அம்பு ஒன்று என்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறது. பெருமானே, தாங்கள் விரும்பினால் அது என்னை எரித்துவிடட்டும். ஆனால் அது என் கருவை எரித்து, அதைச் சிதைத்துவிட அனுமதிக்க வேண்டாம். பகவானே, தயவுசெய்து எனக்கு இவ்வுதவியைச் செய்யுங்கள்.

பதம் 1.8.11
ஸூத உவாச
உபதார்ய வசஸ் தஸ்யா பகவான் பக்த-வத்ஸல:
அபாண்டவம் இதம் கர்தும் த்ரௌணேர் அஸ்த்ரம் அபுத்யத

ஸூத உவாச-சூத கோஸ்வாமி கூறினார்; உபதார்ய—அவள் கூறியதை பொறுமையாகக் கேட்டதன் மூலமாக; வச:-வார்த்தைகள்; தஸ்யா—அவளது; பகவான்-பரம புருஷ பகவான்; பக்த-வத்ஸல:-தமது பக்தர்களிடம் எப்பொழுதும் மிகவும் பிரியம் கொண்டவரான அவர்; அபாண்டவம்-பாண்டவர்களின் வம்சத்தை இல்லாமல்; இதம்—இந்த; கர்தும்-செய்துவிட; த்ரௌணே— துரோணாச்சாரியரது மகனின்; அஸ்த்ரம்-ஆயுதம்; அபுத்யத-புரிந்துகொண்டார்.

சூத கோஸ்வாமி கூறினார்: அவளது வார்த்தைகளைப் பொறுமையாகக் கேட்டபின், பாண்டவ வம்சத்தின் கடைசி குழந்தையையும் கொன்று விடுவதற்காக, துரோணாச்சாரியரின் மகனான அஸ்வத்தாமன் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்திருக்கிறான் என்பதை, தமது பக்தர்களிடம் எப்பொழுதும் மிகவும் பிரியம் கொண்டவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் உடனடியாக புரிந்துகொள்ள முடிந்தது.

பதம் 1.8.12
தர்ஹி ஏவாத முனி-ஸ்ரேஷ்ட பாண்டவா: பஞ்ச ஸாயகான்
ஆத்மனோ ’பிமுகான் தீப்தான் ஆலக்ஷ்யாஸ்த்ராணி உபாதது:

தர்ஹி-பிறகு; ஏவ-தவிரவும்; அத-ஆகவே; முனி-ஸ்ரேஷ்ட முனிவர்களில் முக்கியமானவரே; பாண்டவா:- பாண்டுவின் எல்லா மகன்களும்; பஞ்ச-ஐந்து; ஸாயகான்- ஆயுதங்கள்; ஆத்மன -அவரவர்களுக்குச் சொந்தமான; அபிமுகான்-நோக்கி; தீப்தான்- மிகப்பிரகாசமான; ஆலக்ஷ்ய —அதைக் கண்டு ; அஸ்த்ராணி- ஆயுதங்களை; உபாதது:-கையில் எடுத்தனர்.

மிகச்சிறந்த முனிவர்களுள் முதன்மையானவரே (சௌனகர்), மிகப்பிரகாசமான பிரம்மாஸ்திரம் தங்களை நோக்கி வருவதைக் கண்ட பாண்டவர்கள், தங்களுடைய ஐந்து ஆயுதங்களைக் கையிலெடுத்தனர்.

பதம் 1.8.13
வ்யஸனம் வீக்ஷ்ய தத் தேஷாம் அனன்ய-விஷயாத்மனாம்
ஸுதர்சனேன ஸ்வாஸ்த்ரேண ஸ்வானாம் ரக்ஷாம் வ்யதாத் விபு:

வ்யஸனம்—பேராபத்தை; வீக்ஷ்ய-கண்டு; தத்-அந்த; தேஷாம்- அவர்களுடைய; அனன்ய- வேறெந்த; விஷய-வழிகளும்; ஆத்மனாம்—அவர்களுக்கு ஆதரவாக; ஸுதர்சனேன—ஸ்ரீ கிருஷ்ணரின் சக்கரத்தினால்; ஸ்வ-அஸ்தரேண—ஆயுதத்தினால்; ஸ்வானாம்- அவரது சொந்த பக்தர்களின்; ரக்ஷாம்—பாதுகாப்பு; வ்யதாத்—அதைச் செய்தார்; விபு:-சர்வ வல்லமையுள்ளவர்.

சர்வ வல்லமையுள்ள பரமபுருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணர், பூரண சரணாகதி அடைந்த ஆத்மாக்களாகிய அவரது தூய பக்தர்களுக்கு பேராபத்து சம்பவிக்கப்போவதைக் கண்டு, அவர்களைக் காப்பாற்றுவதற்காக உடனே தமது சுதர்சன சக்கரத்தைக் கையிலெடுத்தார்.

பதம் 1.8.14
அந்த:ஸ்த: ஸர்வ-பூதானாம் ஆத்மா யோகேஸ்வரோ ஹரி:
ஸ்வ-மாயயாவ்ருணோத் கர்பம் வைராட்யா குரு-தந்த வே

அந்தஹ்ஸ்த:-உள்ளே இருப்பதால்; ஸர்வ-எல்லா; பூதானாம்-ஜீவராசிகளின்; ஆத்மா-ஆத்மா; யோக-ஈஸ்வர:-எல்லா யோக சக்திகளுக்கும் இறைவனான; ஹரி:-பரம புருஷர்; ஸ்வ-மாயயா- சுய சக்தியினால்; ஆவ்ருணோத்-மூடினார்; கர்பம்- கர்பத்தை; வைராட்யா:-உத்தராவின்; குருதந்தவே-குரு மகாராஜனின் சந்ததிக்காக.

பரம யோக சக்திகளுக்கும் இறைவனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக இருக்கிறார். அவ்வாறாக, குரு வம்சத்தின் சந்ததியைக் காப்பாற்றுவதற்காக, தமது சுய சக்தியினால் அவர் உத்தரையின் கர்ப்பத்தை மூடிவிட்டார்.

பதம் 1.8.15
யத்யபி அஸ்த்ரம் ப்ரஹ்ம-சிரஸ் து அமோகம் சாப்ரதிக்ரியம்
வைஷ்ணவம் தேஜ-ஆஸாத்ய ஸமசாம்யத் ப்ருகூத்வஹ

யத்யபி—என்றபோதிலும்; அஸ்த்ரம் -ஆயுதம்; ப்ரஹ்ம-சிர:- பரம; து-ஆனால்;
அமோகம்-தடுக்கமுடியாத;ச-மேலும்;அப்ரதிக்ரியம்–தோற்கடிக்கமுடியாத;
வைஷ்ணவம்-விஷ்ணுவின்; தேஜ-பலம்; ஆஸாத்ய—எதிர்க்கப்பட்டு;
ஸமசாம்யத் – நிஷ்பலமாக்கப்பட்டது; ப்ருகு-உத்வஹ:— பிருகுகுடும்பத்தின் பெருமைக்குரியவரே.

சௌனகரே, அஸ்வத்தாமனால் விடப்பட்ட இணையற்ற பிரம்மாஸ்திரத்தை தடுக்கவோ, வெல்லவோ அல்லது முறிக்கவோ முடியாது என்றபோதிலும், விஷ்ணுவின் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்) பலத்தினால் எதிர்க்கப்பட்டபொழுது அது தடுக்கப்பட்டு, முறியடிக்கப்பட்டது.

பதம் 1.8.16
மா மம்ஸ்தா ஹி ஏதத் ஆஸ்சர்யம் ஸர்வாஸ்சர்யமயே ’ச்யுதே
ய இதம் மாயயா தேவ்யா ஸ்ருஜதி அவதி ஹந்தி அஜ:

மா-வேண்டாம்; மம்ஸ்தா-நினைக்க; ஹி-நிச்சயமாக; ஏதத்-இவை அனைத்தும்; ஆஸ்சர்யம்—ஆச்சரியமானவை; ஸர்வ-அனைத்தும்; ஆஸ்சர்யமயே—சர்வ ஆச்சரியமயமான; அச்யுதே- குறையற்றவர்; ய-யாரொருவர்; இதம் – இந்த (சிருஷ்டி); மாயயா- அவரது சக்தியால்; தேவ்யா-தெய்வீக; ஸ்ருஜதி-படைக்கிறார்; அவதி—காக்கிறார்; ஹந்தி-அழிக்கிறார்; அஜ:-பிறப்பற்றவர்.

பிராமணர்களே, அதிஅற்புதமானவரும், குறையற்றவருமான பரமபுருஷ பகவானின் செயல்களில், இச்செயல் மிகவும் அற்புதமானதென்று நினைக்க வேண்டாம். பகவான் பிறப்பற்றவர் என்றபோதிலும் தமது சொந்த தெய்வீக சக்தியினால் எல்லா பௌதிகப் பொருட்களையும் காத்து, அழிக்கிறார்.

பதம் 1.8.17
ப்ரஹ்ம-தேஜோ-வினிர்முக்தைர் ஆத்மஜை: ஸஹ க்ருஷ்ணயா
ப்ரயாணாபிமுகம் க்ருஷ்ணம் இதம் ஆஹ ப்ருதா ஸதீ

ப்ரஹ்ம-தேஜே:-பிரம்மாஸ்திரத்தின்வெப்பக்கதிர்; வினிர் முக்தை:- அதிலிருந்து காப்பாற்றப்பட்டு; ஆத்மஜை:-அவளது மகன்களுடன்; ஸஹ-உடன்; க்ருஷ்ணயா-திரௌபதி; ப்ரயாண- வெளியேறும்; அபிமுகம் – நோக்கி; க்ருஷ்ணம் – பகவான் கிருஷ்ணரிடம்; இதம்-இந்த; ஆஹ-கூறினாள்; ப்ருதா-குந்தி; ஸதீ-பகவானின் தூய பக்தர்.

இவ்வாறாக பிரம்மாஸ்திரத்தின் வெப்பக் கதிர்களிலிருந்து காப்பாற்றப்பட்டதும், பகவானின் விசுவாசமுள்ள பக்தரான குந்தியும், அவளது ஐந்து மகன்களும் மற்றும் திரௌபதியும், வீடு திரும்பத் தயாரயிருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து பின்வருமாறு கூறினர்.

பதம் 1.8.18
குந்தி உவாச
நமஸ்யே புருஷம் த்வாத்யம் ஈஸ்வரம் ப்ரக்ருதே: பரம்
அலக்ஷ்யம் ஸர்வ-பூதானாம் அந்தர் பஹிர் அவஸ்திதம்

குந்தி உவாச-ஸ்ரீமதி குந்தி கூறினாள்; நமஸ்யே-நான் தலை வணங்குகிறேன்; புருஷம்-பரம் புருஷராவீர்; த்வா- தாங்களே; ஆத்யம்-ஆதியான; ஈஸ்வரம்- ஆளுநர்; ப்ரக்ருதே:-ஜடப் பிரபஞ்சத்தின்; பரம்- அப்பால்; அலக்ஷ்யம்- கண்களுக்குத் தெரியாதவர்; ஸர்வ-எல்லா; பூதானாம்- ஜீவராசிகளின்; அந்த:- உள்ளும்; பஹி:-புறமும்; அவஸ்திதம்-இருக்கிறீர்கள்.

ஸ்ரீமதி குந்தி கூறினார்: கிருஷ்ணா, தாங்கள் ஆதி புருஷரும் ஜட இயற்கைக் குணங்களினால் பாதிக்கப்படாதவருமாவீர். எனவே தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். அனைத்திற்கும் உள்ளேயும், வெளியேயும் தாங்கள் இருப்பினும், யாருக்கும் புலப்படாதவராகவே இருக்கிறீர்கள்.

பதம் 1.8.19
மாயா-ஜவனிகாச்சன்னம் அக்ஞாதோக்ஷஜம் அவ்யயம்
ந லக்ஷ்யஸே மூட-த்ருசா நடோ நாட்யதரோ யதா

மாயா:- மாயமான; ஜவனிகா-திரை; ஆச்சன்னம் – மறைக்கப் பட்டு; அக்ஞா—அறிவில்லாதவர்; அதோக்ஷஜம்—பௌதிக எண்ணத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவர் (உன்னதமானவர்); அவ்யயம்:- குற்றங்காண முடியாதவர்; ந-இல்லை; லக்ஷ்யஸே-நோக்கிய; மூட த்ருசா-முட்டாள் பார்வையாளர்களால்; நட:-நடிகர்; நாட்ய-தர:— ஒரு நடிகரைப் போல் உடையணிந்த ; யதா-போல்.

நீங்கள் குறையுடைய புலன் உணர்வின் எல்லைக்கு அப்பாற்பட்டவராவீர். நீங்கள் மாயச் சக்தியின் திரையால் மூடப்பட்டுள்ள, குறையற்றவராகவே என்றும் இருக்கிறீர்கள். நடிகரைப் போல் உடை அணிந்திருப்பவரை அடையாளம் காண முடியாததைப் போலவே, முட்டாள்களின் கண்களுக்கு நீங்கள் புலப்படாதவராகவே இருக்கிறீர்கள்.

பதம் 1.8.20
ததா பரமஹம்ஸானாம் முனீனாம் அமலாத்மனாம்
பக்தி-யோக-விதானார்தம் கதம் பஸ்யேம ஹி ஸ்த்ரிய:

ததா- தவிரவும்; பரமஹம்ஸானாம்- முன்னேறிய ஆன்மீகிகளின்; முனீனாம்—சிறந்த தத்துவவாதிகள் அல்லது மனக் கற்பனையாளர்களின்; அமல-ஆத்மனாம்—ஜடத்தையும், ஆன்மீகத்தையும் பகுத்தறியும் திறமையுடைய மனங்களைக் கொண்டவர்கள்; பக்தி யோக:— பக்தி தொண்டைப் பற்றிய விஞ்ஞானம்; விதான-அர்தம்:— நிறைவேற்றுவதற்கு; கதம்-எப்படி; பஸ்யேம-அறிய முடியும்; ஹி- நிச்சயமாக ; ஸ்த்ரிய:-பெண்கள்.

ஜடத்தையும், ஆன்மீகத்தையும் பகுத்தறிந்ததால் தூய்மை பெற்று முன்னேறியுள்ள ஆன்மீகிகள் மற்றும் மனக் கற்பனையாளர்கள் ஆகியோரின் இதயங்களில், பக்தித் தொண்டைப் பற்றிய தெய்வீக விஞ்ஞானத்தை விருத்தி செய்வதற்காக தாங்களே வந்து அவதரிக்கிறீர்கள். அப்படியிருக்கும்பொழுது, பெண்களான எங்களால் எப்படி உங்களைப் பூரணமாக அறியமுடியும்?

பதம் 1.8.21
க்ருஷ்ணாய வாஸுதேவாய தேவ கீ-நந்தனாய ச
நந்த-கோப-குமாராய கோவிந்தாய நமோ நம:

க்ருஷ்ணாய -பரம புருஷர்; வாஸுதேவாய—வாஸுதேவரின் புதல்வருக்கு; தேவகீ-நந்தனாய:— தேவகியின் மைந்தனுக்கு; ச-மேலும் ; நந்த-கோப—நந்த மகாராஜனும், இடையர்களும் ; குமாராய- அவர்களுடைய புத்திரனுக்கு; கோவிந்தாய- பசுக்களுக்கும், புலன்களுக்கும் உற்சாகம் அளிப்பவரான பரம புருஷ பகவானுக்கு; நம:— மரியாதையான வணக்கங்கள்; நம:- வணக்கங்கள்.

எனவே, வசுதேவரின் புதல்வரும், தேவகியின் இன்பமும், நந்தருக்கும், விருந்தாவனத்தின் மற்ற இடையர்களுக்கும் செல்வனும், மேலும் பசுக்களுக்கும், புலன்களுக்கும் உற்சாகம் அளிப்பவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எனது மரியாதையான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 1.8.22
நம: பங்கஜ–நாபாய நம: பங்கஜ-மாலினே
நம: பங்கஜ-நேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே

நம:- பணிவான வணக்கங்கள்; பங்கஜ-நாபாய:— தாமரைப் பூவையொத்த நாபியைக் கொண்டவரான பகவானுக்கு; நம: வணக்கங்கள்; பங்கஜ-மாலினே-எப்பொழுதும் தாமரை மலர்களாலான மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருப்பவருக்கு; நம: வணக்கங்கள்; பங்கஜநேத்ராய- தாமரையைப் போன்ற குளிர்ந்த பார்வையைக் கொண்டவருக்கு; நம: தே -தங்களுக்கு பணிவான வணக்கங்கள்; பங்கஜ-அங்க்ரயே:—தாமரைப் பூக்கள் பொறிக்கப்பட்ட பாதங்களை உடையவரான (தாமரைப் பாதங்களை உடையவர் என்று அழைக்கப்படுபவரான) உங்களுக்கு.

எம்பெருமானே, தாமரையைப் போன்ற நாபியையும், எப்பொழுதும் தாமரைப் பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பவரும், தாமரையைப் போல் குளிர்ந்த பார்வையை உடையவரும், தாமரைகள் பொறிக்கப்பட்ட பாதங்களை உடையவருமான தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

பதம் 1.8.23
யதா ஹ்ருஷீகேச கலேன தேவகீ
கம்ஸேன ருத்தாதிசிரம் சுசார்பிதா
விமோசிதாஹம் ச ஸஹாத்மஜா விபோ
த்வயைவ நாதேன முஹுர் விபத்-கணாத்

யதா—இருந்தது போல; ஹ்ருஷீகேச-புலன்களுக்கு அதிபதியான; கலேன- பொறாமை கொண்டவனால்;தேவகீ- தேவகி (ஸ்ரீ கிருஷ்ணரின் தாய் ); கம்ஸேன – கம்ச மகாராஜனால்; ருத்தா-சிறைப்படுத்தப்பட்டு; அதி-சிரம்—நீண்ட காலமாக ; சுச-அர்பிதா :— துன்பத்தில் இருந்தாள்; விமோசிதா-விடுதலை செய்தீர்கள்; அஹம் ச:— என்னையும் கூட; ஸஹ-ஆத்மஜா—என் மகன்களுடன்; விபோ-சிறப்புடையவரே; த்வயா- ஏவ-பகவானாகிய தங்களால்; நாதேன:— காவலராக; முஹு:—இடைவிடாமல்; விபத்- கணாத் -தொடர்ச்சியான ஆபத்துக்களில் இருந்து.

இறைவற்கிறைவனும், புலன்களுக்கு அதிபதியுமான ஹ்ரிஷிகேசனே, பொறாமை கொண்ட கம்ச மன்னனால் சிறைப்படுத்தப்பட்டு, துன்பத்திற்கு ஆளாகியிருந்த உங்களுடைய தாயான தேவகியையும், என்னையும், என் மகன்களையும் கூட தொடர்ச்சியான பல அபாயங்களில் இருந்து தாங்கள் விடுவித்தீர்கள்.

பதம் 1.8.24
விஷான் மஹாக்னே: புருஷாத தர்சனாத்
அஸத் – ஸபாயா வன வாஸ-க்ருச்ரத:
ம்ருதே ம்ருதே ’நேக மஹாரதாஸ்த்ரதோ
த்ரௌணி-அஸ்த்ரதஸ் சாஸ்ம ஹரே’பிரக்ஷிதா:

விஷாத்-விஷத்திலிருந்து; மஹா-அக்னே:-பெருந்தீயிலிருந்து; புருஷ-அத:—நர மாமிசம் உண்ணும் மனிதர்கள்; தர்சனாத்— சண்டையிட்டு; அஸத்- துஷ்டர்களின்; ஸபாயா-சபை; வனவாஸ:— வனவாசம்; க்ருச்ரத: துன்பங்கள்; ம்ருதே ம்ருதே-திரும்பத் திரும்ப போரில்; அனேக-பல; மஹாரத—வல்லமையுடைய தளபதிகள்; அஸ்த்ரத:—ஆயுதங்கள்; த்ரௌணி—துரோணாச்சாரியரின் மகனின்; அஸ்த்ரத:-ஆயுதத்திலிருந்து; ச-மேலும்; ஆஸ்ம—இறந்த காலத்தைக் குறிக்கும்; ஹரே-எம்பெருமானே; அபிரக்ஷிதா-முழுமையாகக் காப்பாற்றினீர்கள்.

எனதருமை கிருஷ்ணா, பகவானாகிய தாங்கள் விஷப் பலகாரத்திலிருந்தும், பெருந் தீயிலிருந்தும், நரபட்சணிகளிடமிருந்தும், துஷ்டர்களின் சபையிலிருந்தும், எங்களுடைய வன வாசத்தின்போது ஏற்பட்ட துன்பங்களில் இருந்தும் மற்றும் பெருந்தளபதிகள் போர் செய்த யுத்தக்களத்திலிருந்தும் எங்களைக் காப்பாற்றினீர்கள். இப்பொழுது அஸ்வத்தாமனின் ஆயுதத்திலிருந்தும் எங்களைக் காப்பாற்றி இருக்கிறீர்கள்.

பதம் 1.8.25
விபத: ஸந்து தா: சஸ்வத் தத்ர தத்ர ஜகத்-குரோ
பவதோ தர்சனம் யத் ஸ்யாத் அபுனர் பவ-தர்சனம்

விபத:-விபத்துக்கள்; ஸந்து- ஏற்படட்டும்; தா:-எல்லா; சஸ்வத் -திரும்பத் திரும்ப; தத்ர-அங்கு; தத்ர-அங்கு; ஜகத்-குரோ:— பிரபஞ்சத்தின் இறைவனே; பவத:-உங்களுடைய ; தர்சனம்- தரிசனம்; யத்—எது; ஸ்யாத் -இருக்கிறது; அபுன:-இனிமேல் மாட்டோம்; பவ தர்சனம்—பறிப்பு; இறப்பெனும் தொடர்ச்சியைக் காண.

அந்த விபத்துக்கள் அனைத்தும் திரும்பத் திரும்ப நிகழவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதனால் உங்களையும் திரும்பத் திரும்ப எங்களால் காண முடியும். ஏனெனில், உங்களைக் காண்பதென்றால் பிறப்பு, இறப்பெனும் தொடர்ச்சியை இனி நாங்கள் காணமாட்டோம் என்பதாகும்.

பதம் 1.8.26
ஜன்மைஸ்வர்ய-ஸ்ருத-ஸ்ரீபிர் ஏதமான-மத: புமான்
நைவார்ஹதி அபிதாதும் வை த்வாம் அகிஞ்சன-கோசரம்

ஜன்ம-பிறப்பு; ஐஸ்வர்ய-செல்வம்; ஸ்ருத- கல்வி ; ஸ்ரீபி- அழகைப் பெற்றிருப்பதால்; ஏதமான-படிப்படியாக அதிகரிக்கும்; மத:-மது மயக்கம்; புமான்- மனிதன்; ந- ஒருபோதும் இல்லை ; ஏவு- எப்பொழுதாவது; அர்ஹதி—தகுதியைப் பெற்றிருப்பவர்; அபிதாதும்- மனபூர்வமாக விண்ணப்பிக்க; வை-நிச்சயமாக; த்வாம்- உங்களை; அகிஞ்சனகோசரம்—பௌதிக வாழ்வில் சோர்வடைந்தவரால் சுலபமாக அணுகப்படக்கூடியவர்.

எம்பெருமானே, பகவானாகிய தங்களை சுலபமாக அணுகிவிட முடியும். ஆனால் பௌதிக வாழ்வில் முற்றிலும் விரக்தி அடைந்தவர்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும். கௌரவமான குடும்பம், பெரும் செல்வம், உயர்ந்த கல்வி மற்றும் உடலழகு ஆகியவற்றில் தன்னை முன்னேற்றிக் கொள்ள முயலும் ஒருவரால் உண்மையான உணர்வுடன் உங்களை அணுக முடியாது.

பதம் 1.8.27
நமோ ‘கிஞ்சன-வித்தாய நிவ்ருத்த-குண-வ்ருத்தயே
ஆத்மாராமாய சாந்தாய கைவல்ய-பதயே நம:

நம:-தங்களுக்கு சர்வ வணக்கங்கள்; அகிஞ்சன-வித்தாய:— பௌதிக ஏழ்மையில் உள்ளவர்களின் செல்வத்துக்கு; நிவ்ருத்த—பௌதி குணங்களில் இருந்து முற்றிலும் விடுபட்ட; குண-பௌதிக குணங்கள்; வ்ருத்தயே—அன்பானவர்; ஆத்ம-ஆராமய—சுயதிருப்தியுடையவர்; சாந்தாய-மிகவும் சாந்த குணம் உள்ளவர்; கைவல்ய -பதயே அத்வைதிகளின் எஜமானருக்கு; நம:-தலை வணங்குகிறேன்.

பௌதிக ஏழ்மையில் உள்ளவர்களின் செல்வமாகிய தங்களுக்கு எனது வணக்கங்கள். ஜட இயற்கைக் குணங்களின் செயல் விளைவுகளுடன் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. நீங்கள் சுயதிருப்தியுடையவர் என்பதால், சாந்த சொரூபியாகவும், அத்வைதிகளின் தலைவராகவும் இருக்கிறீர்கள்.

பதம் 1.8.28
மன்யே த்வாம் காலம் ஈசானம் அனாதி-நிதனம் விபும்
ஸமம் சரந்தம் ஸர்வத்ர பூதானாம் யன் மித: கலி:

மன்யே-நான் கருதுகிறேன்; த்வாம்- பகவானாகிய தாங்கள்; காலம்—நித்தியமானகாலம்; ஈசானம்-பரம புருஷர்; அனாதி-நிதனம்—துவக்கமோ; முடிவோ இல்லாதவர்; விபும்-எங்கும் பரவியிருப்பவர்; ஸமம்-சமமான கருணை கொண்டவர்; சரந்தம்-விநியோகிப்பதில்; ஸர்வத்ர-எல்லா இடங்களிலும்; பூதானாம்-ஜீவராசிகளின்; யத் மித:- சம்பந்தத்தினால்; கலி:-சண்டை சச்சரவுகள்.

எம்பெருமானே, தங்களை நான் நித்திய காலமாகவும், பரம ஆளுநராகவும். துவக்கமோ முடிவோ, இல்லாதவராகவும், எங்கும் பரவியிருப்பவராகவும் கருதுகிறேன். உங்களுடைய கருணையை விநியோகிப்பதில் நீங்கள் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்கிறீர்கள். ஜீவராசிகளுக்கு இடையிலுள்ள சண்டை சச்சரவுகளுக்கு சமூக தொடர்புகளே காரணம்.

பதம் 1.8.29
ந வேத கஸ்சித் பகவம்ஸ் சிகீர்ஷிதம்
தவேஹமானஸ்ய ந்ருணாம் விடம்பனம்
ந யஸ்ய கஸ்சித் தயிதோ ‘ஸ்தி கர்ஹிசித்
த்வேஷ்யஸ் ச யஸ்மின் விஷமா மதிர் ந்ருணாம்

ந—இல்லை; வேத- அறிய; கஸ்சித்-ஒருவரும்; பகவன்- பகவானே; சிகீர்ஷிதம்-லீலைகள்; தவ—உங்களுடைய; ஈஹமானஸ்ய -பௌதிகவாதிகளைப் போல்; ந்ருணாம் – பொதுமக்களின்; விடம்பனம்:— தவறான வழியில் திருப்புகின்ற; ந -ஒருபோதும் இல்லை; யஸ்ய—அவரது; கஸ்சித்- ஒருவரும்; தயித:- பிரத்தியேக அன்பிற்குரிய பொருள்; அஸ்தி—உள்ளது; கர்ஹிசித்—எங்காவது; த்வேஷ்ய:-பொறாமைக்குரிய பொருள்; ச-மேலும்; யஸ்மின் – அவருக்கு; விஷமா – பாராபட்சம்; மதி:-எண்ணம்; ந்ருணாம்- மக்களின்.

பகவானே, மனித செயலைப் போல் காணப்படும் உங்களுடைய திவ்யமான லீலைகளை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. எனவே அவை வழிதவறச் செய்கின்றன. உங்களால் ஆதரிக்கப்படும் பொருளோ அல்லது வெறுக்கப்படும் பொருளோ எதுவுமில்லை என்றாலும், வெறும் கற்பனையால், நீங்கள் பாரபட்சம் கொண்டவரென மக்கள் நினைக்கின்றனர்.

பதம் 1.8.30
ஜன்ம கர்ம ச விஸ்வாத்மன் அஜஸ்யாகர் துர் ஆத்மன:
திர்யன்-ந்ரூஷிஷு யாதஹ்ஸு தத் அத்யந்த-விடம்பனம்

ஜன்ம-பிறப்பு; கர்ம செயல்; ச-மேலும்; விஸ்வ ஆத்மன் -பிரபஞ்ச ஆத்மாவே; அஜஸ்ய-பிறப்பற்றவரின்; அகர்து— செயலற்றதின்; ஆத்மன:-ஜீவ சக்தியின்; திர்யக்-மிருகம்; ந்ரு-மனிதன்; ருஷிஷு-ரிஷிகளில்; யாதஹ்ஸு-நீரில்; தத் – அந்த; அத்யந்த—உண்மையான; விடம்பனம்—திகைக்கச் செய்வதாகும்.

பிரபஞ்சத்தின் ஆத்மாவே, தாங்கள் செயலற்றவர் என்றபோதிலும் செயற்படுகிறீர்கள். தாங்கள் பிறப்பற்றவராகவும், ஜீவசக்தியாகவும் இருப்பினும், பிறப்பை ஏற்கிறீர்கள். நீங்கள் மிருகங்கள், மனிதர்கள், முனிவர்கள் மற்றும் நீரினங்கள் ஆகியோருக்கிடையில் அவதரிக்கிறீர்கள். உண்மையில் இது திகைப்பூட்டுவதாகும்.

பதம் 1.8.31
கோபி ஆததே த்வயி க்ருதாகஸி தாம தாவத்
யா தே தசாஸ்ரு-கலிலாஞ்சன-ஸம்ப்ரமாக்ஷம்
வக்த்ரம் நினீய பய-பாவனயா ஸ்திதஸ்ய
ஸா மாம் விமோஹயதி பீர் அபி யத் பிபேதி

கோபி-இடைப்பெண் (யசோதா); ஆததே-எடுத்தாள்; த்வயி- உங்களை; க்ருதாகஸி—(வெண்ணெய்ப் பாத்திரங்களை உடைத்து) தொல்லைகளை விளைவித்த; தாம- கயிறு; தாவத்- அச்சமயத்தில்; யா—அது; தே—உங்களது ; தச-சூழ்நிலை; அஸ்ரு-கலில:- கண்ணீரால் நிரம்பி வழிந்தது; அஞ்சன-மை; ஸம்ப்ரம-அமைதியிழந்த; அக்ஷம் கண்கள்; வக்த்ரம்-முகம்; நினீய- கீழ்நோக்கி; பய-பாவனயா:— அச்சத்தினால்; ஸ்திதஸ்ய-சூழ்நிலையின்; ஸா — அந்த; மாம்- என்னை; விமோஹயதி—திகைப்படையச் செய்கிறது; பீ: அபி- பயமே உருவானவனும்; யத்-யாரை; பிபேதி-அஞ்சுகிறான்.

எனதன்புள்ள கிருஷ்ணா, நீங்கள் ஓரு குற்றத்தைச் செய்துவிட்டபொழுது, உங்களை கட்டிப்போடுவதற்காக யசோதை ஒரு கயிற்றைக் கையிலெடுத்தாள். இதனால் அமைதியிழந்த உங்களுடைய கண்களிலிருந்து பெருகி வழிந்த கண்ணீர், கண்ணிமையில் பூசப்பட்டிருந்த மையை அழித்தது. மேலும் பய சொரூபியே உங்களைக் கண்டு அஞ்சியபோதிலும், நீங்கள் அதனால் அச்சத்திற்கு உள்ளானீர்கள். இக்காட்சி என்னை குழப்பமடையச் செய்கிறது.

பதம் 1.8.32
கேசித் ஆஹுர் அஜம் ஜாதம் புண்ய-ஸ்லோகஸ்ய கீர்தயே
யதோ: ப்ரியஸ்யான்வவாயே மலயஸ்யேவ சந்தனம்

கேசித்—யாரோ ஒருவர்; ஆஹு:- கூறுகிறார்; அஜம்-பிறப்பற்றவர்; ஜாதம்-பிறந்து; புண்ய- ஸ்லோகஸ்ய:—புண்ணியவானாகிய அரசரின்; கீர்தயே-போற்றுவதற்கு; யதோ:-யது மகாராஜனின்; ப்ரியஸ்ய- பிரியமானவரின்; அன்வவாயே—அவரது குடும்பத்தில்; மலயஸ்ய- மலய மலைகள்; இவ-போல்; சந்தனம்-சந்தனம்.

பிறப்பற்றவர், புண்ணியர்களான அரசர்களை மேன்மைப் படுத்துவதற்காக பிறக்கிறார் என்று சிலர் கூறுகின்றனர். மற்றும் சிலர் உங்களுடைய பிரியமான பக்தர்களில் ஒருவரான யது மகாராஜனை சந்தோஷப்படுத்துவதற்காக அவர் பிறக்கிறார் என்று கூறுகின்றனர். மலய மலைகளில் சந்தனம் தோன்றுவதைப் போலவே, அவரது குடும்பத்தில் நீங்கள் தோன்றுகிறீர்கள்.

பதம் 1.8.33
அபரே வஸுதேவஸ்ய தேவக்யாம் யாசிதோ ’ப்யகாத்
அஜஸ் த்வம் அஸ்ய க்ஷேமாய வதாய ச ஸுர-த்விஷாம்

அபரே-மற்றவர்கள்; வஸுதேவஸ்ய-வசுதேவரின்; தேவக்யாம்-தேவகியின்; யாசித:-வேண்டியதால்; அப்யகாத்—பிறந்தீர்கள்; அஜ: பிறப்பற்றவரான; த்வம்- தாங்கள்; அஸ்ய-அவருடைய; க்ஷேமாய- நன்மைக்காக; வதாய-கொல்லும் நோக்கத்திற்காக; ச-மேலும்; ஸுர-த்விஷாம்—தேவர்களிடம் பொறாமை கொண்டவர்களை.

வசுதேவர் மற்றும் தேவகி ஆகிய இருவரும் உங்களுக்காக பிரார்த்தனை செய்ததால், அவர்களுடைய மகனாக நீங்கள் பிறந்தீர்கள் என்று மற்றவர்கள் கூறுகின்றனர். சந்தேகமின்றி தாங்கள் பிறப்பற்றவர்தான். எனினும் அவர்களுடைய நன்மைக்காவும், தேவர்களிடம் பொறாமை கொண்டுள்ளவர்களை அழிப்பதற்காகவும் நீங்கள் பிறக்கிறீர்கள்.

பதம் 1.8.34
பாராவதாரணாயான்யே புவோ நாவ இவோததௌ
ஸீதந்த்யா பூரி-பாரேண ஜாதோ ஹி ஆத்ம-புவார்தித:

பார-அவதாரணாய-உலகச் சுமையை குறைப்பதற்காகவே; அன்யே- மற்றவர்கள்; புவ:-உலகின்; நாவ-படகு; இவ-போல்; உததெள- கடல் மீது; ஸீதந்த்யா-பாதிக்கப்பட்ட; பூரி- மிகவும்; பாரேண-சுமையால்; ஜாத:- நீங்கள் பிறந்தீர்கள்; ஹி- நிச்சயமாக; ஆத்ம-புவா:—பிரம்மாவால்; அர்தித:-வேண்டப்பட்டு.

கடலிலுள்ள படகைப் போல் அதிக சுமை ஏற்றப்பட்ட உலகம் மிகவும் பாதிப்படைந்தது என்றும், உங்களது மகனான பிரம்மா உங்களிடம் வேண்டியதால், தொல்லைகளைக் குறைப்பதற்காக நீங்கள் தோன்றினீர்கள் என்றும் மற்றவர்கள் கூறுகின்றனர்.

பதம் 1.8.35
பவே ‘ஸ்மின் க்லிஸ்யமானானாம் அவித்யா-காம-கர்மபி:
ஸ்ரவண-ஸ்மரணார்ஹாணி கரிஷ்யன் இதி கேசன

பவே-ஜட படைப்பில்; அஸ்மின்-இந்த; க்லிஸ்யமானானாம்- துன்பப்படுபவர்களின்; அவித்யா—அறியாமை; காம-ஆசை; கர்மபி:- பலன் கருதும் செயலை நிறைவேற்றுவதன் மூலமாக; ஸ்ரவண-கேட்டு; ஸ்மரண-நினைவிற்கொண்டு; அர்ஹாணி—வழிபட்டு; கரிஷ்யன்-செய்யக்கூடும்; இதி—இவ்வாறாக; கேசன – மற்றவர்கள்.

பௌதிக துன்பங்களினால் துன்புறும் பந்தப்பட்ட ஆத்மாக்கள் கேட்டல், நினைவிற் கொள்ளுதல் மற்றும் வழிபடுதல் முதலான பக்தித் தொண்டு முறைகளைப் பின்பற்றி முக்தியடைய வேண்டும் என்பதற்காக, அம்முறைகளைப் புதுப்பிப்பதற்காகவே நீங்கள் தோன்றினீர்கள் என்று மற்றும் சிலர் கூறுகின்றனர்.

பதம் 1.8.36
ஸ்ருண்வந்தி காயந்தி க்ருணந்தி அபீக்ஷ்ணச:
ஸ்மரந்தி நந்தந்தி தவேஹிதம் ஜனா:
த ஏவ பஸ்யந்தி அசிரேண தாவகம்
பவ-ப்ரவாஹோபரமம் பதாம்புஜம்

ஸ்ருண்வந்தி-கேட்டு; காயந்தி-பாடி; க்ருணந்தி – ஏற்று; அபீக்ஷ்ணச- இடைவிடாமல்; ஸ்மரந்தி-நினைவிற் கொண்டு; நந்தந்தி- மகிழ்ச்சி அடைகின்றவர்கள்; தவ – உங்களுடைய; ஈஹிதம்- செயல்களை; ஜனா:-பொதுமக்கள்; தே—அவர்கள்; ஏவ—நிச்சயமாக; பஸ்யந்தி—காண முடியும்; அசிரேண-மிக விரைவில்; தாவகம் உங்களுடைய; பவப்ரவாஹ-பிறவிச் சுழல்; உபரமம்—நிறுத்தம்; அம்புஜம் பத- தாமரைப் பாதங்களை.

கிருஷ்ணா; உங்களுடைய தெய்வீக செயல்களைப் பற்றி எப்பொழுதும் கேட்டு; பாடி அதைத் திரும்பவும் சொல்பவர்களால் அல்லது மற்றவர்கள் அவ்வாறு செய்வதில் ஆனந்தம் அடைபவர்களால் நிச்சயமாக உங்களுடைய தாமரைப் பாதங்களைக் காண முடியும். அப்பாதங்கள் மட்டுமே தொடர்ந்த பிறவிச் சக்கரத்தை நிறுத்தக் கூடியவையாகும்.

பதம் 1.8.37
அபி அத்ய நஸ் த்வம் ஸ்வ-க்ருதேஹித ப்ரபோ
ஜிஹாஸஸி ஸ்வித ஸுஹ்ருதோ நுஜீவின:
யேஷாம் த சான்யத் பவத: பதாம்புஜாத்
பராயணம் ராஜஸு யோஜிதாம்ஹஸாம்

அபி-என்றால், அத்ய-இன்று; ந-எங்களிடம்; த்வம்- தாங்கள்; ஸ்வ-க்ருத-நீங்களாகவே நிறைவேற்றினீர்கள்; ஈஹித – எல்லா கடமைகளையும்; ப்ரபோ-எம்பெருமானே; ஜிஹாஸஸி- கைவிட்டு; ஸ்வித்—அநேகமாக; ஸுஹ்ருத:-நெருங்கிய நண்பர்கள்; அநு ஜீவின: கருணையால் வாழும்; யேஷாம்-யாருடைய; ந-அல்லது ; ச-மேலும்; அன்யத்-வேறொருவர்; பவத:-உங்களது; பத-அம்புஜாத்— தாமரைப் பாதங்களில் இருந்து; பராயணம் – நம்பியிருக்கிறோம்; ராஜஸு—அரசர்கள்; யோஜித-கொண்டுள்ள; அம்ஹஸாம்-விரோதம்.

எம்பெருமானே, இதுவரை எல்லாக் கடமைகளையும் நீங்களாகவே நிறைவேற்றினீர்கள். இப்பொழுது எல்லா அரசர்களும் எங்களிடம் விரோதம் கொண்டுள்ளனர். எங்களைப் பாதுகாக்கக்கூடியவர் வேறொருவரும் இல்லாத இச்சமயத்தில், உங்களுடைய கருணையையே நாங்கள் முற்றிலும் நம்பியிருக்கிறோம் என்ற போதிலும், இன்று எங்களைப் புறக்கணித்து விட்டு நீங்கள் சென்றுவிடப் போகிறீர்களா?

பதம் 1.8.38
கே வயம் நாம-ரூபாப்யாம் யதுபி: ஸஹ பாண்டவா:
பவதோ ’தர்சனம் யர்ஹி ஹ்ருஷீகாணாம் இவேசிது:

கே-அவர்கள்; வயம்- நாங்கள்; நாம-ரூபாப்யாம்:— புகழும் திறமையும் இல்லாமல்; யதுபி:-யாதவர்களுடன்; ஸஹ- அவர்களுடன்; பாண்டவா-மற்றும் பாண்டவர்களும்; பவத:-உங்களுடைய; அதர்சனம்-இல்லாமை ; யர்ஹி—அதுபோல்; ஹ்ருஷீ காணாம்-புலன்களின்; இவ -போல;
ஈசிது-ஜீவராசியின்.

ஓருடலிலிருந்து உயிர் மறைந்துவிடும் பொழுது, அக்குறிப்பிட்ட உடலின் பெயரும், புகழும் முடிந்து விடுகின்றன. அதைப் போலவே, எங்களுடனேயே நீங்கள் இருக்காவிட்டால், பாண்டவர்களுடையதும், யாதவர்களுடையதும் மற்றும் எங்களுடையதுமான எல்லாப் புகழும், செயல்களும் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

பதம் 1.8.39
நேயம் சோபிஷ்யதே தத்ர யதேதானீம் கதாதர
த்வத்-பதைர் அங்கிதா பாதி ஸ்வ-லக்ஷண-விலக்ஷிதை:

ந-இல்லை; இயம்-எங்களுடைய இராஜ்ஜியமாக உள்ள இந்நிலம்; சோபிஷ்யதே-அழகாகத் தோன்றும்; தத்ர-பிறகு; யதா—தற்போது உள்ளதைப் போல்; இதானீம்—எப்படி; கதாதர-ஓகிருஷ்ணா ; த்வத்:- உங்களுடைய; பதை:-பாதங்களால்; அங்கிதா-குறிக்கப்பட்டு உள்ள; பாதி—பிரகாசிக்கிறது; ஸ்வ-க்ஷண—உங்களது சொந்த அடையாளங்கள்; விலக்ஷிதை:-அடிச்சுவடுகளால்.

ஓ கதாதர (கிருஷ்ணா), எங்களது இராஜ்ஜியம் இப்பொழுது உங்களுடைய பாத சுவடுகளின், அடையாளங்களால் பொறிக்கப்படுவதால் அது அழகாக காட்சியளிக்கிறது. ஆனால் நீங்கள் பிரிந்து சென்றபின் இந்நிலை நீடிக்காது.

பதம் 1.8.40
இமே ஜன-பதா: ஸ்வ்ருத்தா: ஸுபக்வௌஷதி-வீருத:
வனாத்ரி-நதி-உதன்வன்தோ ஹி ஏதந்தே தவ வீக்ஷிதை:

இமே-இவ்வெல்லா; ஜன-பதா:-மாநகரங்களும்; நகரங்களும்;
ஸ்வ்ருத்தா:- செழிப்படைந்தன; ஸுபக்வ- முழு; ஒளஷதி – மூலிகைகள்; வீருத:-காய்கறிகள்; வன-வனங்கள்; அத்ரி—குன்றுகள்; நதி-நதிகள்; உதன்வந்த:-கடல்கள்; ஹி-நிச்சயமாக; ஏதந்தே- அதிகரிக்கும்; தவ-உங்களால் ; வீக்ஷிதை- காணப்படும்.

மூலிகைகளும், தானியங்களும் ஏராளமாக விளைகின்றன. மரங்களில் கனிகள் நிறைந்தும், நதிகள் ஓடியவாறும், குன்றுகளில் தாதுப்பொருட்கள் நிறைந்தும், சமுத்திரங்களில் செல்வம் நிறைந்தும் காணப்படுகினை. இதனால் இவ்வெல்லா நகரங்களும், கிராமங்களும், எல்லா விதத்திலும் செழிப்புடன் விளங்குகின்றன. அவற்றின் மீதுள்ள உங்களுடைய அருட்பார்வையே இவையனைத்திற்கும் காரணமாகும்.

பதம் 1.8.41
அத விஸ்வேச விஸ்வாத்மன் விஸ்வ-மூர்தே ஸ்வகேஷு மே
ஸ்னேஹ-பாசம் இமம் சிந்தி த்ருடம் பாண்டுஷு வ்ருஷ்ணிஷு

அத-ஆகவே; விஸ்வ-ஈச:— அகில லோகநாயகனே;
விஸ்வ – ஆத்மன்—அகிலத்தின்ஆத்மாவே; விஸ்வ-மூர்தே:—விஸ்வரூப மூர்த்தியே; ஸ்வகேஷு—எனது சொந்த உறவினர்களிடம்; மே- எனக்குள்ள; ஸ்நேஹ-பாசம்:—பாசப் பிணைப்பை; இமம்-இந்த; சிந்தி-துண்டித்து விடுங்கள்; த்ருடம்- ஆழ்ந்த; பாண்டுஷு- பாண்டவர்களிடம்; வ்ருஷ்ணிஷு- விருஷ்ணிகளிடமும் கூட.

ஆகவே, அகில லோக நாயகனே, அகிலத்தின் ஆத்மாவே, விஸ்வரூப மூர்த்தியே, எனது உறவினர்களான பாண்டவர்களிடமும், விருஷ்ணிகளிடமும் எனக்குள்ள பாசப் பிணைப்பை தயவுசெய்து துண்டித்து விடுங்கள்.

பதம் 1.8.42
த்வயி மே ’நன்ய-விஷயா மதிர் மது-பதே ’ஸக்ருத்
ரதம் உத்வஹதாத் அத்தா கங்கேவெளகம் உதன்வதி

த்வயி- உங்களிடம்; மே-எனது ; அனன்-யவிஷயா— கலப்படமற்ற; மதி:-கவனம்; மதுபதே-மதுவின் இறைவனே; அஸக்ருத்—தொடர்ச்சியாக; ரதிம்—கவர்ச்சி; உத்வஹதாத் -நிறைந்து வழியக்கூடும்; அத்தா—நேரடியாக; கங்கா—கங்கை; இவ-போல்; ஓகம் – ஓடுகிறது; உதன்வதி-கடலை நோக்கி.

மதுவின் இறைவனே. கங்கை தடையில்லாமல் எப்பொழுதும் கடலை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பதைப் போலவே, என்னுடைய கவனம் வேறு யாரிடமும் திசை மாறிச் சென்றுவிடாமல், எப்பொழுதும் உங்களால் கவரப்பட்டதாகவே இருக்க அருள்புரியுங்கள்.

பதம் 1.8.43
ஸ்ரீ-க்ருஷ்ண க்ருஷ்ண-ஸக வ்ருஷ்ணி-ருஷபாவனி- த்ருக்
ராஜன்ய-வம்ச-தஹனானபவர்க வீர்ய
கோவிந்த கோ-த்விஜ-ஸுரார்தி-ஹராவதார
யோகேஸ்வராகில-குரோ பகவன் நமஸ்தே

ஸ்ரீ க்ருஷ்ண-ஸ்ரீகிருஷ்ணா; க்ருஷ்ண-ஸக:— அர்ஜுனனின் நண்பரே; வ்ருஷ்ணி-விருஷ்ணி வம்சத்தினரின்; ருஷப- தலைவரே; அவனி-பூமி; த்ருக்-கீழ்ப்படியாத; ராஜன்ய-வம்ச:—ராஜ வம்சங்கள்; தஹன-அழிப்பவரே; அனபவர்க—சீரழிந்து விடாமல்; வீர்ய—வீரியம்; கோவிந்த-கோலோகத்தின் உரிமையாளரே; கோ-பசுக்களின்; த்விஜ பிராமணர்கள்; ஸுர—தேவர்கள்; அர்தி-ஹர:—துன்பத்தைப் போக்க; அவதார—அவதரிக்கும் பகவானே; யோக-ஈஸ்வர:— யோகேஸ்வரர் அல்லது எல்லா யோக சக்திகளுக்கும் எஜமானர்; அகில-பிரபஞ்சத்தின்; குரோ-குருவே; பகவன்—எல்லா ஐஸ்வர்யங்களையும் உடையவரே; நம: தே:-தங்களுக்கு பணிவான வணக்கங்கள்.

அர்ஜுனனின் நண்பரே, கிருஷ்ணா, விருஷ்ணி வம்சத்தினரில் முதன்மையானவரே, இந்த பூமியின் மீது விளையும் தொல்லைகளுக்கு மூல காரணமாகவுள்ள அந்த அரசியல் கட்சிகளை அழிப்பவர் தாங்களே. உங்களுடைய வீரியம் ஒருபோதும் குறைவதில்லை. நீங்கள் ஆன்மீக உலகின் உரிமையாளராவீர். மேலும் பசுக்கள், பிராமணர்கள் மற்றும் பக்தர்களின் துன்பங்களைப் போக்குவதற்காகவே நீங்கள் அவதரிக்கிறீர்கள். எல்லா யோக சக்திகளையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். முழு பிரபஞ்சத்தின் குருவும் நீங்களே. நீங்கள் தான் சர்வ வல்லமையுடைய பகவானாவீர். எனது பணிவான வணக்கங்களை உங்களுக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 1.8.44
ஸூத உவாச
ப்ருதயேத்தம் கல-பதை: பரிணூதாகிலோதய:
மந்தம் ஜஹாஸ வைகுண்டோ மோஹயன் இவ மாயயா

ஸூத உவாச-சூதர் கூறினார்; ப்ருதயா- பிருதாவினால் (குந்தி); இத்தம்—இந்த; கல-பதை:-தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால்; பரிணூத-வழிபடப்படும்; அகில-பிரபஞ்சபூர்வமான; உதய:-பெருமைகள்; மந்தம்—இலேசாக; ஜஹாஸ—புன்முறுவல் செய்தார்; வைகுண்ட:-பகவான்; மோஹயன்-வசியப்படுத்தும்; இவ-போல்; மாயயா—அவரது மாயா சக்தி.

சூத கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக பகவானைப் புகழ்ந்து பாடுவதற்காக மிகச் சிறந்த வார்த்தைகளால் இயற்றப்பட்ட குந்திதேவியின் பிரார்த்தனைகளைக் கேட்ட பகவான் இலேசான புன்முறுவல் செய்தார். அவரது மாயா சக்தியைப் போலவே அந்த புன்முறுவலும் வசியப்படுத்துவதாக இருந்தது.

பதம் 1.8.45
தாம் பாடம் இதி உபாமந்த்ரிய ப்ரவிஸ்ய கஜஸாஹ்வயம்
ஸ்த்ரியஸ் ச ஸ்வ-புரம் யாஸ்யன் ப்ரேம்ணா ராஜ்னா நிவாரித:

தாம்—அவர்கள் அனைவரும்; பாடம் — ஏற்றார்; இதி—இவ்வாறாக; உபாமந்த்ரிய—அதைப் பின்தொடர்ந்து கூறினார்; ப்ரவிஸ்ய—நுழைந்து; கஜஸாஹ்வயம்—அஸ்தினாபுர அரண்மனை; ஸ்த்ரிய:ச- மற்ற பெண்கள்; ஸ்வ-புரம்:— சொந்த வசிப்பிடத்திற்கு; யாஸ்யன்—செல்லத் துவங்கும்பொழுது; ப்ரேம்ணா—அன்புடன்; ராஜ்னா-ராஜனால்; நிவாரித:-தடுக்கப்பட்டார்.

இவ்வாறு ஸ்ரீமதி குந்திதேவியின் பிரார்த்தனைகளை ஏற்ற பகவான், அதைப் பின்தொடர்ந்து, அஸ்தினாபுர அரண்மனைக்குள் பிரவேசிப்பதன் வாயிலாக, மற்ற பெண்களுக்கும் தாம் புறப்படப் போவதைப் பற்றி அறிவித்தார். ஆனால் புறப்படத் தயாராகும் வேளையில், அவர் யுதிஷ்டிர மகாராஜனால் அன்புடன் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பதம் 1.8.46
வ்யாசாத்யைர் ஈஸ்வரேஹாக்ஞை: க்ருஷ்ணேனாத்புத-கர்மணா
ப்ரபோதிதோ ’பிதிஹாஸைர் நாபுத்யத சுசார்பித:

வ்யாஸ-ஆத்யை:-வியாசரை தலைமையாகக் கொண்ட பெரும் முனிவர்களால்; ஈஸ்வர-சர்வவல்லமையுடைய பகவான்; ஈஹா- விருப்பத்தினால்; க்ஞை:-கற்றறிந்தவர்களால்; க்ருஷ்ணேன— கிருஷ்ணராலேயே; அத்புத கர்மணா – எல்லா அமானுஷ்யமான செயல்களையும் செய்யும் ஒருவரால்; ப்ரபோதித:-ஆறுதல் கூறப்பட்ட; அபி-போதிலும்; இதிஹாஸை:-சரித்திர ஆதாரங்களினால்;
ந- இல்லை;அபுத்யத—திருப்தியடைந்தார்; சுசா அர்பித:- துக்கத்திலிருந்த.

எல்லா சரித்திர ஆதாரங்களும் இருந்த போதிலும், வியாசரை தலைமையாகக் கொண்ட பெரும் முனிவர்களின் உபதேசங்களினாலோ, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களினாலோ கூட, பெருந்துயரில் ஆழ்ந்துவிட்ட யுதிஷ்டிர மகாராஜனை வாதித்து வழிப்படுத்த இயலவில்லை.

பதம் 1.8.47
ஆஹ ராஜா தர்ம-ஸுதஸ் சிந்தயன் ஸுஹ்ருதாம் வதம்
ப்ராக்ருதேனாத்மனா விப்ரா: ஸ்நேஹ-மோஹ-வசம் கத:

ஆஹ-கூறினார்; ராஜா—யுதிஷ்டிர மகாராஜன்; தர்மஸுத—தருமரின் (யமராஜன்) மகன்; சிந்தயன்—சிந்தித்து; ஸுஹ்ருதாம்-நண்பர்களின்; வதம்-கொலை; ப்ராக்ருதேன—பௌதிக எண்ணத்தினால் மட்டுமே; ஆத்மனா- ஆத்மாவினால்; விப்ரா:—ஓபிராமணரே; ஸ்நேஹ-பாசம்; மோஹ-மாயை ; வசம்-உணர்ச்சிவசப்பட்டு;கத:-சென்றுவிட்டதால்.

தருமரின் (யமராஜன்) மகனான யுதிஷ்டிர மகாராஜன், அவரது நண்பர்களின் மரணத்தினால் அதிர்ச்சியடைந்து, ஒரு சாதாரண பௌதிகவாதியைப் போலவே பாதிப்படைந்தார். முனிவர்களே, இவ்வாறாக பாசத்தினால் உணர்ச்சிவசப்பட்ட அவர் பேசத் துவங்கினார்.

பதம் 1.8.48
அஹோ மே பஸ்யதாக்ஞானம் ஹ்ருதி ரூடம் துராத்மன:
பாரக்யஸ்யைவ தேஹஸ்ய பஹ்வ்யோ மே ’க்ஷவ்ஹிணீர்ஹதா:

அஹோ-ஓ; மே- எனது ; பஸ்யத- சற்றே கவனியுங்கள்; அஞ்ஞானம்—அறியாமை; ஹ்ருதி- இதயத்தில்; ரூடம்-அமைந்துள்ள; துராத்மன:- பாவியின்; பாரக்யஸ்ய – பிறருக்கென உள்ள; ஏவ-நிச்சயமாக; தேஹஸ்ய-உடலின்; பஹ்வ்ய:- பற்பல; மே-என்னால்; அக்ஷெளணீ—படைகளின் வியூக அமைப்பு; ஹதா:- கொன்றுவிட்டேன்.

யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்: என் விதியே! நான் மிகப் பெரிய பாவியாவேன்! அறியாமை நிரம்பியுள்ள என் இதயத்தைப் பார்! முடிவாக பிறருக்காகவே இருக்க வேண்டிய இவ்வுடல், பற்பல படைப்பிரிவுகளைக் கொண்ட வீரர்களைக் கொன்று குவித்துள்ளது.

பதம் 1.8.49
பால-த்விஜ-ஸுஹ்ருன்-மித்ர பித்ரு-ப்ராத்ரு-குரு-த்ருஹ:
ந மே ஸ்யான் நிரயான் மோக்ஷோ ஹி அபி வர்ஷாயுதாயுதை:

பால-சிறுவர்கள்; த்விஜ—இருபிறப்பு எய்தியவர்கள்; ஸுஹ்ருத்- பிறர் நலம் விரும்புபவர்கள்; மித்ர-நண்பர்கள்; பித்ரு-பெற்றோர்கள்; ப்ராத்ரு-சகோதரர்கள்; குரு-ஆசான்கள்; த்ருஹ:- கொன்றவன்; ந- ஒருபோதும்; மே- எனது; ஸ்யாத் – விளையும்; நிரயாத்—நரகத்திலிருந்து; மோக்ஷ:- மோட்சம்; ஹி- நிச்சயமாக; அபி- என்றபோதிலும்; வர்ஷ- வருஷங்கள்; ஆயுத-லட்சக்கணக்கான; ஆயுதை-கூட்டப்பட்டு.

பல சிறுவர்கள், பிராமணர்கள், பிறர் நலம் விரும்புவோர், நண்பர்கள், பெற்றோர்கள், ஆசான்கள் மற்றும் சகோதரர்கள் ஆகியோரை நான் கொன்றேன். என்னுடைய இப்பாவங்களுக்கெல்லாம் எனக்காக காத்திருக்கும் நரகத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகள் நான் வாழ்ந்தாலும் அதிலிருந்து எனக்கு விடுதலை கிடைக்காது.

பதம் 1.8.50
நைனோ ராஜ்ன: ப்ரஜா-பர்துர் தர்ம-யுத்தே வதோ த்விஷாம்
இதி மே ந து போதாய கல்பதே சாஸனம் வச:

ந-ஒருபோதும் இல்லை; ஏன-பாவங்கள்; ராஜ்ன:-ராஜனின்; ப்ரஜா-பர்து:-மக்களைப் பராமரிப்பதில் ஈடுபட்டுள்ள ஒருவரின்; தர்ம-சரியான காரணத்திற்காக; யுத்தே-போரில்; வத: வதம்செய்வது; த்விஷாம்-எதிரிகளை; இதி:— இவையெல்லாம்; மே:—எனக்கு; ந -ஒருபோதும் இல்லை; து- ஆனால்; போதாய:— திருப்திக்காக; கல்பதே—அவர்கள் நிர்வாகத்திற்கென உள்ளவர்களாவர்; சாஸனம்-உத்தரவு; வச:-வார்த்தைகள்.

குடிமக்களைப் பராமரிப்பதில் ஈடுபட்டுள்ள ஓர் அரசர் சரியான காரணத்திற்காக கொலை செய்வாரானால் அதில் பாவமில்லை. ஆனால் இவ்வுத்தரவு எனக்குப் பொருந்தக் கூடியதல்ல.

பதம் 1.8.51
ஸ்த்ரீணாம் மத்-தத-பந்தூனாம் த்ரோஹோ யோ ’ஸாவ் இஹோத்தித:
கர்மபிர் கிருஹமேதீயைர் நாஹம் கல்போ வ்யபோஹி தும்

ஸ்த்ரீணாம்—பெண்களின்; மத்- என்னால்; ஹத-பந்தூனாம்:— கொலையுண்ட நண்பர்களின்; த்ரோஹ:-துரோகம்; ய: அந்த; அஸௌ—அவ்வெல்லா; இஹ:-இத்துடன்; உத்தித:- சம்பவித்துள்ளது; கர்மபி:-செயல் பலத்தினால்; க்ருஹமேதீயை:-பௌதிக ஈடுபட்டுள்ளவர்களால்; ந-ஒருபோதும் இல்லை; அஹம்-நான்; கல்ப:-எதிர்பார்க்க முடியும்; வ்யபோஹிதும் —அதே நன்மையில் செயலை மாற்றியமைக்க.

நான் பல நண்பர்களையும், பெண்களையும் கொன்றிருக்கின்றேன். இவ்வாறாக, பௌதிகமான பொதுநல சேவையினால் அதை மாற்றியமைப்பதற்குச் சாத்தியமில்லாதபடி, அளவுக்கதிகாமன விரோதத்தை நான் ஏற்படுத்திக் கொண்டேன்.

பதம் 1.8.52
யதா பங்கேன பங்காம்ப: ஸுரயா வா ஸுராக்ருதம்
பூத-ஹத்யாம் ததைவைகாம் ந யஜ்ஞைர் மார்ஷ்டும் அர்ஹதி

யதா—அதைப் போலவே; பங்கேன- சேற்றினால்; பங்கஅம்ப:— சேற்றுடன் கலந்த நீரை; ஸுரயா— சாராயத்தால்; வா-அல்லது; ஸுராக்ருதம்—சாராயத்தினால் இலேசாகத் தொடப்பட்டதால் உண்டான அசுத்தம்; பூத-ஹத்யாம்:—மிருகவதை; ததா—அதைப் போலவே; ஏவ —நிச்சயமாக; ஏகாம்—ஒன்று; ந:—ஒருபோதும் இல்லை; யக்ஞை:— நியமிக்கப்பட்ட யாகங்களினால்; மார்ஷ்டும்-நிஷ்பலமாக; அர்ஹதி:— பயனுள்ளதாகும்.

சேற்றை சேற்று நீரால் வடிகட்டுதல் சாத்தியமல்ல, அல்லது ஒரு சாராயப் பாத்திரத்தை சாராயத்தினால் தூய்மைப்படுத்துதல் சாத்தியமல்ல என்பதைப் போலவே, மனித வதையை மிருக பலியினால் நிஷ்பலப்படுத்த இயலாது.


ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “குந்தி மகாராணியின் பிரார்த்தனைகள்” எனும் தலைப்பைக் கொண்ட, எட்டாம் அத்தியாயத்திற்கான பக்திவேதாந்தப் பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare