அத்தியாயம் – 7
துரோணரின் மகன் தண்டிக்கபடுதல்
பதம் 1.7.1 : சௌனக ரிஷி வினவினார்: சூதரே, மிகச்சிறந்தவரும் உன்னத சக்தி வாய்ந்தவருமான வியாசதேவர், ஸ்ரீ நாரத முனிவரிடமிருந்து அனைத்தையும் கேட்டறிந்தார். எனவே நாரதர் சென்றபிறகு வியாசதேவர் என்ன செய்தார்?

பதம் 1.7.2 : ஸ்ரீ சூதர் கூறினார்; வேதங்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ள சரஸ்வதி நதியின் மேற்குக் கரையில், முனிவர்களின் உன்னதமான செயல்களை உற்சாகப்படுத்தக்கூடிய சம்யாப்ராஸம் என்னுமிடத்தில், தியான குடில் ஒன்றுள்ளது.

பதம் 1.7.3 : ஸ்ரீலவியாசதேவர், அந்த இடத்தில் சிறு பழ மரங்களால் சூழப்பட்டிருந்த அவரது சொந்த அஷ்ரமத்தில், நீரைத் தொட்டு தம்மை புனிதப்படுத்திக் கொண்ட பின், தியானம் செய்வதற்காக கீழே அமர்ந்தார்.

பதம் 1.7.4 : இவ்வாறாக அவர் எவ்வித பௌதிக களங்கமும் இல்லாமல், தமது மனதை பக்தித் தொண்டில் (பக்தி யோகத்தில்) முழுமையாக ஈடுபடுத்தி நிலைபெறச் செய்தார். இதனால் அவர் பூரணமான முழுமுதற் கடவுளையும், அவரது முழு கட்டுப்பாட்டிலுள்ள அவருடைய பகிரங்க சக்தியையும் கண்டார்.

பதம் 1.7.5 : ஜீவராசி ஜட இயற்கையின் முக்குணங்களுக்கும் மேற்பட்டவன் என்றபோதிலும், இந்த பகிரங்க சக்தியின் காரணத்தால், தன்னை பெளதிகத்தின் ஒரு விளைபொருள் என்று எண்ணுகிறான். இதனால் அவன் பெளதிக விளைவுகளின் துன்பங்களுக்கு ஆளாகிறான்.

பதம் 1.7.6 : ஜீவராசிகளின் தேவையற்ற பௌதிக துன்பங்களை, பக்தி தொண்டுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் முறையால் குறைத்துவிட முடியும். ஆனால் மக்கள் இதை அறிந்திருக்கவில்லை. எனவே, கற்றுணர்ந்தவரான வியாசதேவர், பரம சத்தியத்துடன் தொடர்பு கொண்டுள்ள இந்த வேத இலக்கியத்தைத் தொகுத்தார்.

பதம் 1.7.7 : இந்த வேத இலக்கியத்தைக் கேட்பதாலேயே, பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணருக்கு உன்னத அன்புத் தொண்டு செய்யும் உணர்வு உடனடியாக ஏற்பட்டு வருத்தம், மாயை மற்றும் பயம் எனும் நெருப்பை அது அணைத்துவிடுகிறது.

பதம் 1.7.8 : மாமுனிவரான வியாசதேவர், ஸ்ரீமத் பாகவதத்தைத் தொகுத்து, அதிலுள்ள பிழைகளைத் திருந்தியபின், ஏற்கனவே தன்னுணர்வுப் பாதையில் ஈடுபட்டிருந்த, அவரது சொந்த மகனான ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமிக்கு அதைக் கற்பித்தார்.

பதம் 1.7.9 : ஸ்ரீ சௌனகர் சூத கோஸ்வாமியிடம் வினவினார்; ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி ஏற்கனவே தன்னுணர்வுப் பாதையில் ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் சுயதிருப்தி கொண்டவராக இருந்த அவர் ஏன் இத்தகைய ஒரு பரந்த நூலைக் கற்பதெனும் சிரமத்தை மேற்கொண்டார்?

பதம் 1.7.10 : சூத கோஸ்வாமி கூறினார்: எல்லா வகையான ஆத்மாராமர்களும் (ஆன்மீக ஆத்மாவில் இன்பம் காண்பவர்கள்), முக்கியமாக தன்னுணர்வுப் பாதையில் நிலைபெற்றவர்கள், எல்லா வகையான பௌதிக பந்தத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டிருந்தபொழுதும் பரம புருஷ பகவானுக்கு கலப்படமற்ற தூய பக்தித் தொண்டைச் செய்ய விரும்புகின்றனர். அதாவது, பகவான் உன்னதமான குணங்களைப் பெற்றிருப்பதால், அவர் முக்திபெற்ற ஆத்மாக்கள் உட்பட அனைவரையும் கவர்ந்திழுக்கிறார் என்பதையே இது குறிக்கிறது.

பதம் 1.7.11 : இப்படியாக, ஸ்ரீல வியாசதேவரின் புதல்வரும், தெய்வீக சக்தி பெற்றவரும், பகவத் பக்தர்களுக்குப் பிரியமானவருமான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி இச்சிறந்த வரலாற்றையும் (ஸ்ரீமத் பாகவதம்) கற்றறிந்தார்.

பதம் 1.7.12 : சௌனகரை தலைமையாகக் கொண்ட ரிஷிகளிடம் சூத கோஸ்வாமி இவ்வாறு கூறினார்! பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றியும் அரசர்களுக்கிடையில் ரிஷியாக விளங்கிய பரீட்சித்து மகாராஜனின் பிறப்பு, செயல்கள் மற்றும் முக்தி பற்றியும், பாண்டு புத்திரர்கள் உலகைத் துறந்த விஷயங்கள் பற்றியுமான உன்னத வர்ணணைகளை இப்பொழுதுதான் நான் துவங்கப் போகிறேன்.

பதங்கள் 1.7.13 – 1.7.14 : குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் கொல்லப்பட்ட கௌரவ மற்றும் பாண்டவ வீரர்கள் அவரவர்களுக்கு தகுதியான இலக்குகளை அடைந்தனர். மேலும் திருதராஷ்டிரரின் மகன், பீமசேனரின் கதாயுதத்தால் அடிபட்டு, தொடை எலும்பு முறிந்து, தரையில் விழுந்து புலம்பிக் கொண்டு இருக்கும் வேளையில், துரோணாச்சாரியரின் மகன் (அஸ்வத்தாமன்), உறங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் ஐந்து மகன்களை சிரச்சேதம் செய்துவிட்டான். பிறகு, இத்தலைகளைக் கண்டு தலைவன் மகிழ்ச்சியடைவான் என்றெண்ணி அவற்றை அவனிடம் பரிசாக அளித்தான். ஆனால் துரியோதனனோ, அக்கொடிய செயலை ஆட்சேபித்ததுடன், அதனால் கொஞ்சங்கூட திருப்தியும் அடையவில்லை.

பதம் 1.7.15 : பாண்டவர்களுடைய ஐந்து புத்திரர்களின் தாயாகிய திரௌபதி, தனது ஐந்து புத்திரர்களின் படுகொலையைப் பற்றி கேள்விப்பட்டதும், பெரும் இழப்பினால் கண்களில் கண்ணீர்மல்க துயரத்துடன் அழத் துவங்கினாள். அவளை சமாதானப்படுத்த முயன்ற அர்ஜுனன் அவளிடம் பின்வருமாறு கூறினார்:

பதம் 1.7.16 : நற்குணப் பெண்ணே, எனது காண்டீவத்திலிருந்து செலுத்தப்படும் அம்பினால் அந்த பிராமணனின் தலையைக்கொய்து, அதை உனக்குப் பரிசாக அளித்த பிறகு, உன் கண்ணீரைத் துடைத்து உனக்கு நான் ஆறுதல் கூறுவேன். அதன் பிறகு உன் மகன்களின் உடல்களை தகனம் செய்ததும், அவனுடைய தலை மீது நின்றுகொண்டு உன் ஸ்நானத்தை நீ முடிப்பாயாக.

பதம் 1.7.17 : இவ்வாறாக வெல்ல முடியாத பகவானையே நண்பராகவும், தேரோட்டியாகவும் கொண்ட அர்ஜுனன், தனது அன்பிற்குரியவளை இனிய வாத்த்தைகளால் திருப்திப்படுத்தினார். பிறகு கவசமணிந்து, கொடிய ஆயுதங்களுடன் இரதத்திலேறி, தனது யுத்த குருவின் மகனான அஸ்வத்தாமனைப் பின்தொடர்ந்து சென்றார்.

பதம் 1.7.18 : இளவரசர்களைக் கொன்றவனான அஸ்வத்தாமன், வெகுதூரத்தில் தன்னை நோக்கி வெகுவேகமாக அர்ஜுனன் வருவதைக் கண்டதும், சிவனுக்கஞ்சி ஓட்டம் பிடித்த பிரம்மாவைப் போன்று, பீதியடைந்து தன்னுயிரை காப்பாற்றிக் கொள்ள இரதத்திலேறி ஓட்டம் பிடித்தான்.

பதம் 1.7.19 : தன் குதிரைகள் களைத்துவிட்டதைக் கண்ட பிராமணரின் மகன் (அஸ்வத்தாமன்), தன்னை காப்பாற்றிக் கொள்ள, பிரம்மாஸ்திரத்தை (அணுஆயுதத்தை) பிரயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதினான்.

பதம் 1.7.20 : அவனுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், நீரைத் தொட்டு புனிதமடைந்த அவன், அணு ஆயுதங்களை திரும்பப் பெறும் கலையை அறித்திராதபோதிலும், அவற்றை பிரயோகிப்பதற்கான மந்திரங்களை உச்சரிப்பதில் மனதை ஒருமுகப்படுத்தினான்.

பதம் 1.7.21 : அதன் பிறகு, எல்லா திசைகளிலும் மிகப்பிரகாசமான ஒளி பரவியது. அது மிகக் கொடூரமானதாக இருந்ததால், தனது சொந்த உயிருக்கே ஆபத்து வந்துவிட்டது என்றெண்ணிய அர்ஜுனன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்யத் துவங்கினார்.

பதம் 1.7.22 : அர்ஜுனன் கூறினார்: எம்பெருமானே ஸ்ரீ கிருஷ்ணா, தாங்கள் சர்வ வல்லமையுடைய பரம புருஷ பகவானாவீர். தங்களுடைய பல்வேறு சக்திகளுக்கு எல்லையே இல்லை. ஆகவே தாங்கள் ஒருவர்தான் உங்களுடைய பக்தர்களின் இதயங்களுக்கு அபயமளிக்கும் திறமை பெற்றவராவீர். பௌதிக துன்பமெனும் தீயில் கருகிக் கொண்டிருக்கும் அனைவரும் உங்களிடம் மட்டுமே முக்திக்கான வழியைக் காணமுடியும்.

பதம் 1.7.23 : தாங்களே மூல முழுமுதற் கடவுளாவீர், தாங்கள் சிருஷ்டி முழுவதிலும் விரிவடைந்திருப்பவரும், பௌதிக சக்திக்கு மேற்பட்ட வருமாவீர். உங்களுடைய ஆன்மீக சக்தியின் பலத்தினால் பௌதிக சக்தியின் விளைவுகளை நீங்கள் விலக்கி விடுகிறீர்கள். நீங்கள் எப்பொழுதும் நித்திய ஆனந்தத்திலும், உன்னத அறிவிலும் நிலை பெற்று இருக்கிறீர்கள்.

பதம் 1.7.24 : தாங்கள் பௌதிக சக்திக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்த போதிலும், பந்தப்பட்ட ஆத்மாக்களின் முடிவான நன்மைக்காக மதம் முதலான முக்திக்கான நான்கு கொள்கைகளை செயற்படுத்துகிறீர்கள்.

பதம் 1.7.25 : இவ்வாறாக, உலகின் பாரத்தை நீக்குவதற்காகவும், முக்கியமாக உங்கள் மீது ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருப்பவர்களும், உங்களது நண்பர்களும், உங்களுக்கே சொந்தமானவர்களுமான உங்களுடைய பக்தர்களின் நன்மைக்காகவுமே நீங்கள் இவ்வுலகில் அவதரிக்கிறீர்கள்.

பதம் 1.7.26 : தேவ தேவனே, எப்படி இந்த ஆபத்தான பிரகாசம் சுற்றிலும் பரவுகிறது? அது எங்கிருந்து வருகிறது? அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பதம் 1.7.27 : பரம புருஷ பகவான் கூறினார்; இது துரோணருடைய மகனின் செயல் என்பதை என்னிடமிருந்து அறிந்துகொள். பிரம்மாஸ்திரத்திற்கான (அணுஆயுதம்) மந்திரங்களை அவன் ஏவியிருக்கிறான். மேலும்அந்த அஸ்திரத்தை திரும்பப் பெறும் முறையை அவன் அறிந்திருக்கவில்லை. உடனடியாக நிகழப்போகும் மரணத்திற்கு அஞ்சி, வேறுவழியின்றி இப்படிச் செய்துவிட்டான்.

பதம் 1.7.28 : ஓ அர்ஜுனா, இந்த ஆயுதத்தை மற்றொரு பிரம்மாஸ்திரத்தால் மட்டுமே செயலிழக்கச் செய்ய முடியும். போர்க் கலையில் நீ சாமர்த்தியமுள்ளவன் என்பதால், உன்னுடைய சொந்த ஆயுதத்தின் சக்தியால் இந்த ஆயுதத்தின் பேரொளியை அடக்கிவிடு.

பதம் 1.7.29 : ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: பரம புருஷரிடமிருந்து இதைச் கேட்ட அர்ஜுனன், நீரைத் தொட்டு புனிதமடைந்தபின், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வலம் வந்தார். பிறகு அவர் தமது பிரம்மாஸ்திரந்தை பிரயோகித்து மற்றதை செயலிழக்கச் செய்தார்.

பதம் 1.7.30 : இரு பிரம்மாஸ்திரங்களின் கதிர்களும் இணைந்தபொழுது சூரிய வட்டத்தைப் போன்றதொரு மிகப்பெரிய தீவட்டம், எல்லா கிரகங்களையும் உள்ளடக்கிய விண்வெளி முழுவதையும் மறைத்தது.

பதம் 1.7.31 : மூவுலகங்களிலும் உள்ள மக்கள் அனைவரும், ஆயுதங்களின் மொத்த வெப்பத்தினால் தகிக்கப்பட்டனர். அது அழிவு காலத்தில் தோன்றும் சாம்வர்தக நெருப்பை அனைவருக்கும் நினைவூட்டியது.

பதம் 1.7.32 : இவ்வாறு பொதுமக்களின் துன்பத்தையும், உலகங்கள் அழியும் தறுவாயில் இருப்பதையும் கண்ட அர்ஜுனன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விருப்பப்படி, அவ்விரு பிரம்மாஸ்திரங்களையும் உடனடியாக திரும்பப் பெற்றார்.

பதம் 1.7.33 : அர்ஜுனன் சிவந்து தாமிர குண்டுகளைப் போல் கோபத்தால் காட்சியளித்த சீற்றமடைந்த கண்களுடன், கௌதமியின் மகனை சாமர்த்தியமாக கைது செய்து, அவனை ஒரு மிருகத்தைப் போல் கயிறுகளால் கட்டினார்.

பதம் 1.7.34 : அஸ்வத்தாமனைக் கட்டிய பிறகு, அர்ஜுனன் அவனை இராணுவ முகாமிற்குக் கொண்டு செல்ல விரும்பினார். பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணர் தமது கமலக் கண்களுடன் நோக்கியவாறு, கோபாவேஷத்துடன் இருந்த அர்ஜுனனிடம் பேசினார்.

பதம் 1.7.35 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: ஓ அர்ஜுனா, ஒரு பிராமணரின் உறவினனான (ப்ரஹ்ம-பந்து) இவன், குற்றமற்ற சிறுவர்கள் உறங்கும்பொழுது, அவர்களைக் கொன்றவன் என்பதால், இவனுக்குக் கருணை காட்டி இவனை நீ விடுவித்துவிடக் கூடாது.

பதம் 1.7.36 : மதக் கொள்கைகளை அறிந்துள்ள ஒருவன் அஜாக்கிரதையாக உள்ளவனையோ, குடி மயக்கத்திலோ, பைத்தியமாகவோ, உறக்கத்திலோ, அச்சத்துடனோ அல்லது இரதத்தை இழந்த நிலையிலோ உள்ளவர்களையும், ஒரு பெண்ணையோ, சிறுவனையோ, முட்டாளாக உள்ள ஒரு பிராணியையோ அல்லது சரணடைந்த ஓர் ஆத்மாவையோ கொல்லமாட்டான்.

பதம் 1.7.37 : தனது வாழ்வை நடத்துவதற்காக மற்றவர்களைக் கெடுக்கும் இரக்கமற்றவனும், பாதகனுமான ஒருவனை அவனது சொந்த நன்மைக்காக கொன்று விடுவது நல்லது. இல்லையெனில் அவனுடைய தீய செயல்களினால் அவன் இன்னமும் தாழ்ந்து விடுவான்.

பதம் 1.7.38 : மேலும், திரௌபதியிடம் அவளுடைய மகன்களைக் கொன்றவனின் தலையைக் கொண்டு வருவதாக நீ வாக்களித்ததை நான் நேரடியாகக் கேட்டேன்.

பதம் 1.7.39 : இவன் உனது சொந்த குடும்ப அங்கத்தினர்களை வஞ்சித்துக் கொலை செய்தவனாவான். தவிரவும், அவனது தலைவனையும் கூட அவன் அதிருப்தியடையச் செய்திருக்கிறான். இவன், எரிந்துபோன இவனது குடும்பத்தின் சாம்பலேயாவான். எனவே உடனடியாக இவனைக் கொன்றுவிடு.

பதம் 1.7.40 : சூத கோஸ்வாமி கூறினார்: மதக் கொள்கைகளை அர்ஜூனன் பின்பற்றுகிறாரா என்பதைச் சோதித்துக் கொண்டிருந்த கிருஷ்ணர், துரோணாச்சாரியரின் மகனைக் கொன்றுவிடும்படி அர்ஜுனனை உற்சாகப்படுத்தினார். அஸ்வத்தாமன் அர்ஜுனனின் குடும்பத்தினரைக் கொன்ற வெறுக்கத்தக்க கொலைகாரன் என்றபோதிலும், அவனைக் கொன்றுவிடும் கருத்தை மகாத்மாவான அர்ஜுனன் விரும்பவில்லை.

பதம் 1.7.41 : அர்ஜூனன் அவரது மிகப்பிரியமான நண்பணும், சாரதியுமான ஸ்ரீ கிருஷ்ணருடன் தமது சொந்த முகாமை அடைத்தார். பிறகு கொலையுண்ட தனது மகன்களுக்காக புலம்பிக் கொண்டிருந்த, அவரது அன்பான மனைவியிடம் கொலைகாரனை ஒப்படைத்தார்.

பதம் 1.7.42 : ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: பிறகு ஒரு மிருகத்தை போல் கயிறுகளால் கட்டப்பட்டும், மிகவும் அமங்களமான கொலையைச் செய்துவிட்டதால் மௌனமாகவும் இருந்த அஸ்வாத்தாமனை திரரௌபதி நோக்கினாள், அவளது பெண் சுபாவத்தினாலும், நன்டைத்தை கொண்ட அவளது இயற்கையான நற்குணத்தினாலும். ஒரு பிராமணருக்குரிய மரியாதையை அவனுக்கு அவள் காட்டினாள்.

பதம் 1.7.43 : அஸ்வத்தாமன் கயிறுகளால் கட்டப்பட்டிருப்பதை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மேலும் கற்புடைய பெண்ணென்பதால், அவள் கூறினாள்: அவர் ஒரு பிராமணர், நமது ஆன்மீக குரு. எனவே அவரை விட்டுவிடுங்கள்.

பதம் 1.7.44 : துரோணாச்சாரியரின் கருணையால்தான் நீங்கள் வில் வித்தையையும், ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் இரகசிய கலையையும் கற்றறிந்தீர்கள்.

பதம் 1.7.45 : நிச்சயமாக அவர் (துரோணாச்சாரியர்) அவரைப் பிரதிநிதிக்கும் அவரது மகனின் உருவில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரது மனைவியான க்ருபீக்கு ஒரு மகன் இருப்பதால் அவருடன் அவள் உடன்கட்டை ஏறவில்லை.

பதம் 1.7.46 : மதக் கொள்கைகளை அறிந்த பேரதிர்ஷ்டம் வாய்ந்தவரே, எப்பொழுதும் வணக்கத்திற்கும், மரியாதைக்கும் உரிய கௌரவமான குடும்பத்தினருக்கு வருத்தத்தை விளைவிப்பது உங்களுக்கு நல்லதல்ல.

பதம் 1.7.47 : என் தலைவா, துரோணாச்சாரியரின் மனைவியையும் என்னைப் போல் அழ வைக்காதீர்கள். என் மகன்களின் மரணத்திற்காக நான் துயரப்படுகிறேன். அவளும் நிரந்தரமாக என்னைப் போல் அழ வேண்டாம்.

பதம் 1.7.48 : புலனடக்கத்தில் கட்டுப்பாடற்ற அரசாளும் குலத்தினர், பிராமணர் குலத்தினருக்குத் தீங்கிழைத்து அவர்களைக் கோபமூட்டுவார்களானால், அந்த கோபத்தீ அரச குடும்பம் முழுவதையுமே எரித்து அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திவிடும்.

பதம் 1.7.49 : சூத கோஸ்வாமி கூறினார் பிராமணர்களே, மதக் கொள்கைகளுக்கு இசைந்தவையும், நியாயமென நிரூபிக்கப்பட்டவையும், பெருமை மிக்கவையும், கருணை மற்றும் சமத்துவம் நிறைந்தவையும், மற்றும் வஞ்சகம் இல்லாதவையுமான அரசியின் கூற்றுக்களை யுதிஷ்டிர மகாராஜன் முழுமையாக ஆதரித்தார்.

பதம் 1.7.50 : நகுலன் மற்றும் ஸஹதேவன் (ராஜனின் இளைய சகோதரர்கள், மேலும் ஸாத்யகி, அர்ஜுனன், தேவகி புத்திரரான பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பெண்கள் மற்றும் பிறர் அனைவரும் ஏகமனதாக அரசரின் கருத்தை ஆதரித்தனர்

பதம் 1.7.51 : ஆயினும், பீமன் அதற்குச் சம்மதிக்கவில்லை, சுயநலனுக்காகவோ அல்லது தலைவனின் நன்மைக்காகவோ கூட அதைச் செய்யாமல், எந்த பிரயோஜனமும் இல்லாமல், உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை கோபத்துடன் கொலை செய்தவனான இக்குற்றவாளியைக் கொன்று விடும்படி பீமன் கூறினார்.

பதம் 1.7.52 : சதுர்புஜ (நான்கு கரங்களைக் கொண்ட) மூர்த்தியான பரம புருஷ பகவான், பீமன், திரௌபதி முதலானவர்களின் வார்த்தைகளைக் கேட்டபின், அவரது பிரிய நண்பனான அர்ஜுனனின் முகத்தை நோக்கியவாறு. நகைப்பதுபோல் பேசத் துவங்கினார்.

பதங்கள் 1.7.53 – 1.7.54 : பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்; ஒரு பிராமணரின் நண்பனை கொல்லக் கூடாது. ஆனால் அவன் வலிய தாக்குபவனாக இருந்தால் அவனைக் கொல்லத்தான் வேண்டும். இத்தீர்ப்புகள் அனைத்தும் சாஸ்திரங்களில் உள்ளன. அவற்றிற்கேற்ப நீ செயற்பட வேண்டும். உன் மனைவிக்கு நீயளித்த வாக்குறுதியை நீ காப்பாற்ற வேண்டும். அதேசமயம் பீமஸேனனையும், என்னையும் கூட நீ திருப்திப்படுத்த வேண்டும்.

பதம் 1.7.55 : இரு பொருள்படும் உத்தரவுகளின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்ட பகவானின் உள்ளெண்ணத்தை அர்ஜுனனால் உடனே புரிந்துகொள்ள முடிந்தது. இவ்வாறாக அர்ஜுனன், அஸ்வத்தாமனின் தலையிலிருந்து முடி மற்றும் மணி ஆகிய இரண்டையுமே தனது வாளால் வெட்டியெறிந்தார்.

பதம் 1.7.56 : குழந்தைகளைக் கொன்றதால் அவன் (அஸ்வத்தாமன்) ஏற்கனவே உடலின் பொலிவை இழந்துவிட்டவனாக இருந்தான். இப்பொழுது தலையிலுள்ள மணியையும் இழந்ததால், இன்னும் அதிக பலத்தை அவன் இழந்துவிட்டவனானான். இவ்வாறாக கட்டவிழ்த்து விடப்பட்ட அவன் முகாமிலிருந்து வெளியே துரத்தப்பட்டான்.

பதம் 1.7.57 : தலை முடியைக் கத்தரிப்பது, செல்வத்தைப் பறிமுதல் செய்வது மற்றும் வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றுவது ஆகியவையே ஒரு பிராமணரின் உறவினனுக்கு விதிக்கப்படும் தண்டனைகளாகும். உடலைக் கொல்வதைப் பற்றிய உத்தரவு எதுவும் அளிக்கப்படவில்லை.

பதம் 1.7.58 : அதன் பிறகு பாண்டு புத்திரர்களும், திரௌபதியும் புத்திரசோகம் மேலோங்க, அவர்களது இறந்த உறவினர்களின் உடல்களுக்குச் செய்ய வேண்டிய முறையான சடங்குகளைச் செய்தனர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare