அத்தியாயம் – 2
தெய்வீகமும் தெய்வீகத் தொண்டும்
பதம் 1.2.1 : வியாசர் கூறினார் :ரோமஹர்ஷணரின் புதல்வரான உக்ரஸ்ரவர் (சூத கோஸ்வாமி), பிராமணர்களின் பக்குவமான கேள்விகளினால் முற்றிலும் திருப்தியடைந்து, அவர்களுக்கு நன்றி கூறி, பதிலளிக்க முற்பட்டார்.

பதம் 1.2.2 : ஸ்ரீல சூத கோஸ்வாமி கூறினார்: எல்லோருடைய இதயத்திற்குள்ளும் புகக்கூடியவரான அந்த மாமுனிவரிடம் (சுகதேவ கோஸ்வாமி) எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். உயர்ந்த வகுப்பினரால் அனுஷ்டிக்கப்படுவதான பூணூல் அணியும் சீர்திருத்தச் சடங்கை மேற்கொள்ளாமல், துறவு வாழ்வை (சந்நியாசம்) ஏற்பதற்காக வீட்டை விட்டு அவர் வெளியேறிய போது, அவரது தந்தையான வியாசதேவர், அவருடைய பிரிவுக்கு அஞ்சி, “மகனே!” என்று கதறினார். உண்மையில், அதேபோன்ற பிரிவுணர்ச்சிகளில் லயித்துப்போன மரங்கள் மட்டுமே துயரத்தில் ஆழ்ந்த தந்தைக்கு மறுமொழியாக எதிரொலித்தன.

பதம் 1.2.3 : முனிவர்களுக்கெல்லாம் ஆன்மீக குருவும், வியாசதேவரின் புதல்வருமான அவர் (சுகர்) பௌதிக வாழ்வின் இருள் சூழ்ந்த பிரதேசங்களை கடக்கப் போராடும் ஆழ்ந்த பௌதிகவாதிகளின் மீதுள்ள பெருங்கருணையினால் வேத அறிவின் சாரமாகிய இந்த மிக இரகசியமான புராணத்தை சுயமாக கிரகித்து அனுபவித்த பின் பேசினார். அவரை நான் வணங்குகிறேன்.

பதம் 1.2.4 : வெற்றி பெறுவதற்கு மிகச் சிறந்த வழியாகிய இந்த ஸ்ரீமத் பாகவதத்தைப் படிக்கும் முன்பாக, பரம புருஷராகிய நாராயணருக்கும் தெய்வீகத் தன்மை பெற்ற மனிதரான நர-நாராயண முனிவருக்கும், கல்விக்கு அதிபதியாகிய சரஸ்வதி தேவிக்கும் மற்றும் ஆசிரியராகிய ஸ்ரீல வியாசதேவருக்கும் தனது பணிவான வணக்கங்களை ஒருவர் அளிக்கவேண்டும்.

பதம் 1.2.5 : முனிவர்களே, உங்களுடைய கேள்விகள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றியவையாக இருப்பதால், அவை உலக நன்மையுடன் தொடர்பு கொண்டவையாகி, மிகச்சிறந்த கேள்விகளாக விளங்குகின்றன. இத்தகைய கேள்விகளால் மட்டுமே முழு ஆத்ம திருப்தியைத் தர முடியும்.

பதம் 1.2.6 : எதனால் மனிதன் பரம புருஷரின் உன்னதமான பக்தித் தொண்டைப் பெற முடியுமோ, அதுவே மனித வர்க்கம் முழுமைக்கும் தர்மமாகும். ஆத்மாவை பூரண திருப்திப்படுத்துவதற்கு, இத்தகைய பக்தித் தொண்டு உள்நோக்கம் இல்லாததாகவும், இடையறாததாகவும் இருக்க வேண்டும்.

பதம் 1.2.7 : பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டாற்றுவதால், ஒருவருக்கு உடனடியாக உன்னத அறிவும், உலக பற்றிலிருந்து விடுதலையும் கிடைக்கிறது.

பதம் 1.2.8 : ஒருவரின் சொந்த நிலைக்கேற்றவாறு செய்யும் தொழிற் கடமைகள், பரம புருஷ பகவானைப் பற்றிய செய்திகளிடம் கவர்ச்சியைத் தூண்டவில்லை என்றால் அவை அனைத்தும் பயனற்ற உழைப்பேயாகும்

பதம் 1.2.9 : எல்லாவித உத்தியோக ஈடுபாடுகளும் நிச்சயமாக முடிவான முக்திக்காகவே உள்ளன. அவை ஜட இலாபத்துக்காக செய்யப்படவே கூடாது. மேலும், முனிவர்களின் கருத்துப்படி, முடிவான உத்தியோகத் தொண்டில் ஈடுபட்டிருப்பவர் புலனின்பத்தை வளர்ப்பதற்காக ஐட இலாபத்தை பயன்படுத்தவே கூடாது.

பதம் 1.2.10 : வாழ்வின் விருப்பங்கள் புலனின்பத்தை நோக்கி செலுத்தப்படவே கூடாது. ஒரு மனிதன் பரபிரம்மத்தைப் பற்றிய விசாரணையில் ஈடுபட வேண்டியவனாகையால், ஒருவர் ஆரோக்கியமான வாழ்வுக்கு அல்லது சுய பராமரிப்புக்கு மட்டுமே ஆசைப்பட வேண்டும். வேறெதுவும் தொழிலின் நோக்கமாக இருக்கக் கூடாது.

பதம் 1.2.11 : பரபிரம்மத்தை அறிந்தவர்களான கற்றறிந்த ஆன்மீகிகள் இந்த இரண்டற்ற மெய்ப்பொருளை பிரம்மம், பரமாத்மா அல்லது பகவான் என்று அழைக்கின்றனர்.

பதம் 1.2.12 : அறிவும், துறவும் நன்கு கைவரப் பெற்று, பகவானை அறிவதில் தீவிர ஆர்வம் கொண்டுள்ள மாணவர் அல்லது முனிவர், வேதாந்த சுருதியிலிருந்து தாம் கேள்விப்பட்டதற்கேற்ப பக்தித் தொண்டாற்றுவதன் மூலம் பரபிரம்மத்தை அறிகிறார்.

பதம் 1.2.13 : இரு பிறப்பு எய்தியவர்களில் சிறந்தவரே, வாழ்வின் சமூகப் பிரிவுகளுக்கும், வகுப்புகளுக்கும் ஏற்றவாறு நியமிக்கப்பட்டுள்ள ஒருவரது சொந்த கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் பரமபுருஷரை திருப்திப்படுத்துவதே அவரால் அடையப்படக்கூடிய மிகவுயர்ந்த பக்குவம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பதம் 1.2.14 : எனவே, ஒரே எண்ணத்துடன் பக்தர்களைக் காப்பவரான பரம புருஷ பகவானைப் பற்றி எப்போதும் ஒருவர் கேட்டுக்கொண்டும், அவரைப் போற்றிக்கொண்டும், ஞாபகத்தில் நிறுத்தியும் மற்றும் அவரை வழிபாடு செய்துகொண்டும் இருக்க வேண்டும்.

பதம் 1.2.15 : புத்திசாலிகள் பகவானை நினைவிற் கொள்வதன் மூலமாக, பந்தப்படுத்தும் முடிச்சுகள் எனப்படும் கர்ம வினைகளை வெட்டி வீழ்த்துகின்றனர். ஆகையால் அவரைப் பற்றிய செய்திகளில் யார்தான் கவனம் செலுத்தாமல் இருப்பார்?.

பதம் 1.2.16 : பிராமண சிரேஷ்டர்களே, எல்லா மாசுகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டுள்ள பக்தர்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம், மிகப்பெரிய சேவை செய்யப்படுகிறது. அத்தகைய தொண்டினால், வாசுதேவனைப் பற்றிய செய்திகளை கேட்பதற்குரிய சுவையை ஒருவர் பெறுகின்றார்.

பதம் 1.2.17 : எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பவரும், உண்மையான பக்தர்களை ஆதரிப்பவரும், பரமபுருஷ பகவானுமாகிய ஸ்ரீ கிருஷ்ணர், முறையாகக் கேட்பதாலும், பாடுவதாலுமே புண்ணியம் தரக்கூடியவையான அவரது செய்திகளை கேட்பதிலும், பாடுவதிலும் உள்ள ஆவலை வளர்த்துக் கொண்டுள்ள பக்தனின் இதயத்திலிருந்து ஜட இன்பங்களுக்கான ஆசைகளை அகற்றிவிடுகிறார்.

பதம் 1.2.18 : பாகவத வகுப்புக்களில் ஒழுங்காக பங்கேற்பதாலும், தூய பக்தருக்கு தொண்டு புரிவதாலும், இதயத்திற்கு தொந்தரவாக இருப்பவை எல்லாம் முற்றிலும் அழிக்கப்பட்டு, உன்னத பாடல்களால் போற்றப்படுபவரான பரமபுருஷ பகவானுக்குச் செய்யும் அன்புத் தொண்டு நிலைநிறுத்தப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

பதம் 1.2.19 : அசைக்க முடியாத பக்தித் தொண்டு இதயத்தில் நிலைநிறுத்தப்பட்ட உடனேயே, இயற்கையின் தீவிர மற்றும் அறியாமை குணங்களால் விளையும் காமம், விருப்பம் மற்றும் பேராசை போன்றவை இதயத்திலிருந்து மறைந்து விடுகின்றன. அதன்பின் பக்தன் நற்குணத்தில் நிலைபெற்று, பூரண மகிழ்ச்சியடைகின்றான்.

பதம் 1.2.20 : இவ்வாறாக, பகவானின் பக்தித் தொண்டுடன் கொண்ட தொடர்பினால் மனம் தெளிவடைந்து, கலப்படமற்ற நற்குணத்தில் நிலைபெற்று எல்லா பௌதிகத் தொடர்பிலிருந்தும் விடுபட்ட நிலையிலுள்ள மனிதன், பரமபுருஷ பகவானைப் பற்றிய உண்மையான அறிவைப் பெறுகிறான்.

பதம் 1.2.21 : இவ்வாறாக இதயத்திலுள்ள முடிச்சு அவிழ்க்கப்பட்டு, எல்லா சந்தேகங்களும் அறுத்தெறியப்படுகின்றன. ஒருவர் ஆத்மாவை எஜமானராகக் காணும்போது, பலன்நோக்குச் செயல்களின் தொடருக்கு ஒரு முடிவு கட்டப்படுகிறது.

பதம் 1.2.22 : எனவே கற்பனைக் கெட்டாத காலத்திலிருந்து எல்லா ஆன்மீகிகளும் பரமபுருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டு ஆற்றி வந்துள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், அத்தகைய பக்தித் தொண்டு ஆத்மாவை உற்சாகப்படுத்தும்.

பதம் 1.2.23 : தெய்வீக புருஷராகிய பகவான், ரஜோ குணம், சத்வ குணம் மற்றும் தமோ குணம் ஆகிய ஜட இயற்கையின் முக்குணங்களுடன் மறைமுகமாக தொடர்பு கொண்டிருக்கிறார். மேலும் ஜடவுலகின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் எனும் முத்தொழில்களுக்காக அவர் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று குண அவதாரங்களை ஏற்றுக்கொள்கிறார். இம்மூவருள், நற்குண (சத்வ) ரூபமான விஷ்ணுவிடமிருந்தே மக்களனைவரும் முடிவான நன்மைகளைப் பெற முடியும்.

பதம் 1.2.24 : விறகு மண்ணின் உருமாற்றமாகும். ஆனால் புகை பச்சையான விறகைவிட சிறந்தது. மேலும் நெருப்பு அதைவிடச் சிறந்ததாகும். ஏனெனில், நெருப்பால் தெய்வீக அறிவின் நன்மைகளை நாம் பெற முடியும் (வேத யாகங்களின் மூலம்). அதைப் போலவே, தீவிர உணர்ச்சி (ரஜஸ்) அறியாமையை (தமஸ்) விட சிறந்ததாகும். ஆனால் நற்குணம் (ஸத்வம்) அனைத்திலும் சிறந்ததாகும். ஏனெனில், நற்குணத்தினால் பரபிரம்மத்தை உணரும் நிலைக்கு ஒருவரால் உயர முடியும்.

பதம் 1.2.25 : பரமபுருஷர், ஜட இயற்கையின் முக்குணங்களுக்கு மேலானவராக இருப்பதால் மாமுனிவர்கள் அனைவரும் முன்பு அவருக்குத் தொண்டாற்றினர். ஜடச் சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்காக அவர்கள் அவரை வழிபட்டதனால், உயர்ந்த நன்மையை அடையப் பெற்றனர். அத்தகைய சிறந்த அதிகாரிகளைப் பின்பற்றுபவர் யாராக இருந்தாலும், அவரும் ஐடவுலகிலிருந்து முக்தி பெற தகுதியுள்ளவராகின்றார்.

பதம் 1.2.26 : முக்தி பெறுவதில் உறுதியாக இருப்பவர்கள் நிச்சயமாக பொறாமையின்றி அனைவரையும் மதிப்பவர்களாக இருப்பார்கள். இருப்பினும் தேவர்களின் பயங்கரமான கோர உருவங்களை அவர்கள் விலக்கி, பகவான் விஷ்ணுவையும் அவரது விரிவங்கங்களின் ஆனந்தமயமான சொரூபங்களையும் மட்டுமே வழிபடுகின்றனர்.

பதம் 1.2.27 : ரஜோ மற்றும் தமோ குணங்களில் உள்ளவர்கள், பெண்கள், செல்வம், அதிகாரம் மற்றும் குழந்தைப்பேறு ஆகிய ஆசைகளால் உந்தப்படுவதால், அவர்கள் முன்னோர்களையும், பிற ஜீவராசிகளையும் மற்றும் பிரபஞ்ச இயக்கங்களின் பொறுப்பாளர்களான தேவர்களையும் வழிபடுகின்றனர்.

பதங்கள் 1.2.28 – 1.2.29: வேத நூல்களின்படி, அறிவின் இறுதி நோக்கமாக இருப்பவர் முழுமுதற் கடவுளான, ஸ்ரீ கிருஷ்ணரேயாவார். அவரைத் திருப்திப்படுத்துவதே யாகங்கள் செய்வதன் நோக்கமாகும். அவரை உணர்வதற்காகவே வேதம் உள்ளது. எல்லா கிரியைகளும் கிருஷ்ணருக்கே அர்பணம். அவரே பரம ஞானமாவார். அவரை அறிவதற்காகவே எல்லா கடுந்தவங்களும் இயற்றப்படுகின்றன. மதம் (தர்மம்) அவருக்கு அன்புத் தொண்டாற்றுகிறது. வாழ்வின் மிகவுயர்ந்த இலக்கும் அவரே.

பதம் 1.2.30 : பௌதிக படைப்பின் ஆரம்பத்தில், தெய்வீக நிலையில் உள்ளவரான பூரண முழுமுதற் கடவுள் (வாசுதேவன்), தமது சுய அந்தரங்க சக்தியால், காரணம், மற்றும் விளைவு எனப்படும் சக்திகளைப் படைத்தார்.

பதம் 1.2.31 : ஜடப் பொருளை படைத்த பின், பகவான் (வாசுதேவன்) விரிவடைந்து அதற்குள் பிரவேசிக்கிறார். அவர் ஜட இயற்கைக் குணங்களுக்குள் இருந்தபோதிலும், படைக்கப்பட்ட ஜீவன்களுள் ஒருவராகத் தோன்றியபோதிலும், அவர் எப்பொழுதும் பரிபூரண ஞானத்தைப் பெற்ற உன்னத நிலையிலேயே இருக்கிறார்.

பதம் 1.2.32 : விறகில் நெருப்பு பரவியிருக்கிறது. அதைப் போலவே, பகவான் பரமாத்மாவின் உருவில் எல்லா பொருட்களிலும் பரவியிருக்கின்றார். எனவே இரண்டற்ற ஒரே பரம்பொருளாக அவர் இருந்தபோதிலும் பல வகைப்பட்டவராக காட்சியளிக்கிறார்.

பதம் 1.2.33 : ஐட இயற்கைக் குணங்களினால் வசீகரிக்கப்படும் ஜீவன்களின் உடல்களுக்குள் பரமாத்மா பிரவேசித்து, ஜீவன்கள் தங்களது சூட்சும மனதினால், இந்த ஐட இயற்கைக் குணங்களின் பலன்களை அனுபவிக்கும்படி செய்கிறார்.

பதம் 1.2.34 : இவ்வாறு தேவர்கள், மனிதர்கள் மற்றும் மிருகங்கள் வசிக்கும் எல்லா கிரகங்களையும் பிரபஞ்சங்களின் எஜமானரான பகவான் பராமரிக்கிறார். அவர் அவதாரங்களை ஏற்று, தூய சத்வகுணத்தில் இருப்போரை மீட்பதற்காக லீலைகளைப் புரிகிறார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare