அத்தியாயம் – 14
ஸ்ரீ கிருஷ்ணரின் மறைவு
பதம் 1.14.1
ஸூத உவாச
ஸம்ப்ரஸ்திதே தீவாரகாயாம் ஜிஷ்ணௌ பந்து-தித்ருக்ஷயா
ஞாதும் ச புண்ய-ஸ்லோகஸ்ய க்ருஷ்ணஸ்ய ச விசேஷ்டிதம்

ஸூத உவாச-ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; ஸம்பரஸ்திதே-அங்கு சென்றார்; த்வாரகாயாம்- துவாரகாபுரி நகரம்: ஜிஷ்ணெள—அர்ஜுனன்; பந்து-நண்பர்களையும், உறவினர்களையும்; தித்ருக்ஷயா—அவர்களைச் சந்திக்க; ஞாதும்-அறிய; ச-மேலும்; புண்யஸ்லோகஸ்ய-வேத மந்திரங்களால் புகழ்ந்து பாடப்படுபவர்; க்ருஷணஸ்ய-பகவான் ஸ்ரீகிருஷ்ணரின்; ச-மேலும்; விசேஷ்டிதம்-அடுத்தநடவடிக்கைகளை.

ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைக் கண்டு அவரது அடுத்த நடவடிக்கைகளை அறியவும், மற்ற நண்பர்களைக் காணவும் அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றார்.

பதம் 1.14.2
வ்யதீதா:கதிசின் மாஸாஸ் ததா நாயாத் ததோ ‘ர்ஜுன :
ததர்ச கோர-ரூபாணி நிமித்தானி குரூத்வஹ:

வ்யதீதா:-கழிந்த பிறகு: கதிசித்-சில; மாஸா-மாதங்கள்; ததா- அச்சமயத்தில்; ந ஆயாத்-திரும்பி வரவில்லை; தத:-அங்கிருந்து; அர்ஜுன—அர்ஜுனன்; ததர்ச—கண்டார்; கோர-கோரமான; ரூபாணி- ரூபங்களை; நிமித்தானி—பல காரணங்கள்; குரு-உத்வஹ:-யுதிஷ்டிர மகாராஜன்.

சில மாதங்கள் கழிந்தன. அர்ஜுனன் திரும்பி வரவில்லை. யுதிஷ்டிர மகாராஜன் பிறகு, அச்சமூட்டும் சில கெட்ட சகுனங்களைக் காண ஆரம்பித்தார்.

பதம் 1.14.3
காலஸ்ய ச கதிம் ரௌத்ராம் விபர்யாஸ்தர் து-தர்மின:
பாபீயஸீம் ந்ருணாம் வார்தாம் க்ரோத – லோபன்ருதாத்மனாம்

காலஸ்ய- நித்திய காலத்தின்; ச-மேலும்; கதிம்- போக்கு: ரௌத்ராம்-பயங்கரமான; விபர்யஸ்த-மாறிவிட்டதை; ருது-பருவகால; தர்மின:-ஒழுங்குமுறைகள்; பாபீயஸீம்-பாவகரமான; ந்ருணாம்-மனிதனின்; வார்தாம்-வாழ்க்கைத் தேவைக்கான வழிகள்; க்ரோத-கோபம்; லோப-பேராசை; அன்ருத- நேர்மையற்ற; ஆத்மனாம் மக்களின்.

நித்திய காலத்தின் போக்கு மாறிவிட்டதை அவர் கண்டார். இது நினைக்கவே பயங்கரமாக இருந்தது. பருவகால ஒழுங்குமுறைகளில் பிளவுகள் ஏற்பட்டன. பொதுமக்கள் பெரும் பேராசைக்காரர்களாகவும், கோபக்காரர்களாகவும், ஏமாற்றுபவர்களாகவும் மாறியிருந்தனர். மேலும் அவர்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக தீய வழிமுறைகளைக் கையாள்வதையும் அவர் கண்டார்.

பதம் 1.14.4
ஜிஹ்ம-ப்ராயம் வ்யவஹ்ருதம் சாத்ய-மிஸ்ரம் ச ஸௌஹ்ருதம்
பித்ரு-மாத்ரு-ஸுஹ்ருத்-ப்ராத்ரு தம்-பதீனாம் ச கல்கனம்

ஜிஹ்ம-ப்ராயம்- ஏமாற்று; வ்யவஹ்ருதம்- சாதாரண விவகாரங்களிலும்; மிஸ்ரம்- களங்கமடைந்து விட்டன; சாத்ய—வஞ்சனை; ச-மேலும்; ஸௌஹ்ருதம் நண்பர்களின் விஷயத்திலும்; பித்ரு-தந்தை; மாத்ரு- தாயின் விஷயத்திலும்; ஸுஹ்ருத்—நலனில் கணவன், மனைவி விவகாரத்திலும்; ச-மேலும்; கல்கனம்—பரஸ்பர சண்டை சச்சரவுகள்.

நண்பர்களுக்கு இடையிலுள்ள விவகாரங்கள் உட்பட, எல்லா சாதாரண விவகாரங்களிலும் வஞ்சகம் நிறைந்துவிட்டது. மேலும் குடும்ப விவகாரங்களிலும் கூட தாய், தந்தையர், மகன்கள், சகோதரர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோருக்கு இடையில் எப்பொழுதும் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. கணவன், மனைவிக்கிடையிலும் கூட எப்பொழுதும் அவநம்பிக்கையும், சண்டையும் இருந்து வந்தது.

பதம் 1.14.5
நிமித்தானி அத்யரிஷ்டானி காலே து அனுகதே ந்ருணாம்
லோபாதி-அதர்ம-ப்ரக்ருதிம் திருஷ்டவோசானுஜம் ந்ருப:

நிமித்தானி-ஏற்படுத்துகிறது; அதி- மிகவும் மோசமான; அரிஷ்டானி—கெட்ட சகுனங்கள்; காலே-காலப்போக்கில்; து- ஆனால்; அனுகதே-கடந்து செல்லும்; ந்ருணாம்-மனித குலத்தின்; லோப-ஆதி-பேராசை போன்றவை; அதர்ம-மதப்பற்றில்லாமை; ப்ரக்ருதிம்-பழக்கங்கள்; திருஷ்ட்வா—கண்ட பிறகு; உவாச-கூறினார்; அனுஜம்—இளைய சகோதரர்; ந்ருப:-அரசர்.

பொதுமக்களும் நாளடைவில் பேராசை, கோபம், கர்வம் போன்றவைகளுக்கு பழக்கப்பட்டுவிட்டனர். இந்த சகுனங்களை எல்லாம் கவனித்த யுதிஷ்டிர மகாராஜன், அவரது இளைய சகோதரரிடம் பின்வருமாறு கூறினார்.

பதம் 1.14.6
யுதிஷ்டிர உவாச
ஸம்ப்ரேஷிதோ த்வாரகாயாம் ஜிஷ்ணுர் பந்து-தித்ருக்ஷயா
ஞாதும் ச புண்ய-ஸ்லோகஸ்ய க்ருஷ்ணஸ்ய ச விசேஷ்டிதம்

யுதிஷ்டிர உவாச-யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்; ஸம்ப்ரேக்ஷித சென்றிருக்கிறான்; ஜிஷ்ணு-அர்ஜுனன்; த்வாரகாயாம்- துவாரகைக்கு; பந்து—நண்பர்கள்; தித்ருக்ஷயா—சந்திக்க; ஞாதும்- அறிய; ச-மேலும்; புண்ய-ஸ்லோகஸ்ய-பரம புருஷரின்; க்ருஷ் ணஸ்ய -பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; சமேலும்; விசேஷ்டிதம் — செயற்திட்டம்.

யுதிஷ்டிர மகாராஜன் தமது இளைய சகோதரனான பீமசேனனிடம் கூறினார்: அர்ஜுனனை அவனது நண்பர்களை சந்திக்கவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து அவரது செயற்திட்டத்தை அறிந்து வரவும் நான் துவாரகைக்கு அனுப்பி வைத்தேன்.

பதம் 1.14.7
கதா: ஸப்தா துனா மாஸா பீமஸேன தவானுஜ:
நாயாதி கஸ்ய வா ஹேதோர் நாஹம் வேதேதம் அஞ்ஜஸா

கதா:- சென்று; ஸப்த:- ஏழு; அதுனா-இன்றோடு; மாஸா- மாதங்கள்; பீமசேன-ஓ பீமசேன; தவ-உன்; அனுஜ-இளைய சகோதரன்; ந-இல்லை; ஆயாதி-திரும்பி வர; கஸ்ய-ஏன்; வா-அல்லது; ஹேதோ:-காரணம்; ந-இல்லை; அஹம்-நான்; வேத அறிவேன்; இதம்—இந்த; அஞ்ஜஸா-உண்மையாக.

அவன் சென்று ஏழு மாதங்கள் ஆகியும் இன்னும் திரும்பவில்லை. அங்கு என்ன நடக்கிறதென்பது உண்மையாகவே எனக்குப் புரியவில்லை.

பதம் 1.14.8
அபி தேவர்ஷிணா திஷ்ட: ஸ காலோ ‘யம் உபஸ்தித:
யதாத்மனோ ‘ ங்கம் ஆக்ரீடம் பகவான் உத்ஸிஸ்ருக்ஷதி

அபி—அதுவோ; தேவ-ருஷிணா—தேவரிஷியால் (நாரதர்): ஆதிஷ்ட:-உபதேசித்த; ஸ-அந்த; கால-நித்திய காலம்; அயம்- இந்த: உபஸ்தித-வந்துவிட்டது;யதா—எப்போது; ஆத்மன—அவரது; அங்கம்— விரிவங்கம்; ஆக்ரீடம்-தோற்றம்; பகவான்-பரம புருஷ பகவான்; உத்ஸிஸ்ருக்ஷதி-முடித்துக் கொள்ளப் போகிறார்.

தேவரிஷி நாரதர் சுட்டிக்காட்டியதைப் போல், அவரது மண்ணுலக லீலைகளை அவர் முடித்துக் கொள்ளப் போகிறாரா? அந்த நேரம் வந்துவிட்டதா?

பதம் 1.14.9
யஸ்மான் ந: ஸம்பதோ ராஜ்யம் தாரா: ப்ராணா: குலம் ப்ரஜா:
ஆஸன் ஸபத்ன-விஜயோ லோகாஸ் ச யத்அனுக்ரஹாத்

யஸ்மாத்-யாரிடமிருந்து; ந:-நமது; ஸம்பத-செல்வம்; ராஜ்- இராஜ்ஜியம்; தாரா:- நல்ல மனைவிகள்; ப்ராணா:-உயிர்; குலம்- வம்சம்; ப்ரஜா:-குடிமக்கள்; ஆஸன்- சாத்தியம் ஆகியுள்ளது; ஸபத்ன- எதிரிகள்; விஜய:-வெல்லுதல்; லோகா:- எதிர்காலத்தில் உயர் கிரகங்களில் வாழும் வசதி; ச-மேலும்; யத்-யாருடைய; அனுக்ரஹாத்—கருணையால்.

அவரிடமிருந்துதான், நம்முடைய ராஜபோக வாழ்வு, மனைவிகள், உயிர்கள், சந்ததியினர், பிரஜைகளை ஆளும் சக்தி, நல்ல எதிரிகளை வெல்லும் சக்தி மற்றும் எதிர்காலத்தில் உயர் கிரகங்களில் வாழும் வசதி ஆகிய அனைத்தும் சாத்தியமாகியுள்ளன. நம் மீதான அவரது தனிப்பெருங்கருணையே இதற்குக் காரணமாகும்.

பதம் 1.14.10
பஸ்யோத்பாதான் நர-வ்யாக்ர திவ்யான் பௌமான் ஸதைஹிகான்
தாருணான் சம்ஸதோ ‘தூராத் பயம் நோ புத்தி-மோஹனம்

பஸ்ய-பார்; உத்பாதான்-தொல்லைகள்; நர-வ்யாக்ர-ஒரு புலியின் பலம் கொண்டவனே; திவ்யான்-ஆகாயத்தில் நடப்பவை; பௌமான்-பூமியில் நடப்பவை; ஸதைஹிகான்-—உடலாலும் மனதாலும் நடப்பவைகள்; தாருணான்-மிகவும் பயங்கரமான; சம்ஸ்த:- சுட்டிக்காட்டும்; அதூராத்-சமீப காலத்தில்; பயம்- ஆபத்து: ந:நமது; புத்தி—புத்தி: மோஹனம்-மயக்கும்.

ஒரு புலியின் பலத்தைப் பெற்றவனே, உயர் கிரகங்களின் ஆதிக்கத்தாலும், பூமியில் விளையும் பிரதிபலன்களாலும் மற்றும் உடலால் விளையும் துன்பங்களாலும் எத்தனை இன்னல்கள் விளைந்துள்ளன பார். இவை அனைத்தும், வெகுவிரைவில் நம் புத்தியைக் கெடுத்து ஆபத்தை விளைவிக்கப்போகும் கெட்ட சகுனங்களாகும்.

பதம் 1.14.11
ஊரு-அக்ஷி-பாஹவோ மஹ்யம் ஸ்புரந்தி அங்க புன: புன:
வேபதுஸ் சாபி ஹ்ருதயே ஆராத் தாஸ்யந்தி விப்ரியம்

ஊரு-தொடைகள்; அக்ஷி—கண்கள்; பாஹவ-கரங்கள்: மஹ்யம் -எனது; ஸ்புரந்தி-நடுங்குகின்றன; அங்க-உடலின் இடப்புறம்; புன:-புன:-மீண்டும் மீண்டும்; வேபது—துடிப்புகள்; ச-மேலும்; அபி-நிச்சயமாக; ஹ்ருதயே-இதயத்தில்; ஆராத்-பயத்தால்; தாஸ்யந்தி—சுட்டிக்காட்டும்; விப்ரியம்-விரும்பத்தகாதவை.

என்னுடைய உடலின் இடப்புறம், என் தொடைகள், கரங்கள் மற்றும் கண்கள் ஆகியவற்றில் அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறது. பயத்தால் இதயம் அடித்துக் கொள்கிறது. விரும்பத்தகாத நிகழப்போவதையே இவை சுட்டிக்காட்டுகின்றன.

பதம் 1.14.12
சிவைஷோத்யந்தம் ஆதித்யம் அபிரௌதி அனலானனா
மாம் அங்க ஸாரமேயோ ‘யம் அபிரேபதி அபீருவத்

சிவா- நரி; ஏஷா-இந்த; உத்யந்தம்—உதயமாகும்; ஆதித்யம்- சூரியனை; அபி-நோக்கி: ரௌதி- அழுகிறது; அனல – நெருப்பு: ஆனனா—முகம்; மாம்- என்னை; அங்க-ஓ பீம; ஸாரமேய-நாய்; அயம்-இந்த; அபிரேபதி-பார்த்து குரைக்கிறது; அபீரு-வத்- பயமில்லாமல்.

பீமா, அந்த பெண் நரி எப்படி அழுதுகொண்டு நெருப்பைக் கக்குகிறது, இந்த நாய் எப்படி என்னைப் பார்த்து பயமில்லாமல் குரைக்கிறது என்பதைப் பார்.

பதம் 1.14.13
சஸ்தா: குர்வந்தி மாம் ஸவ்யம் தக்ஷிணம் பசவோ ‘பரே
வாஹாம்ஸ் ச புருஷ-வ்யாக்ர லக்ஷயே ருததோ மம

சஸ்தா:-பசுவைப் போன்ற பயனுள்ள மிருகங்கள்; குர்வந்தி- செல்கின்றன; மாம்-என்னை; ஸவ்யம்-இடப்பக்கம்; தக்ஷிணம்- வலம் வருகின்றன; பசவ-அபரே—கழுதைகளைப் போன்ற பிற தாழ்ந்த மிருகங்கள்; வாஹான்-குதிரைகள் (வாகனங்கள்); ச-மேலும்; புருஷ வ்யாக்ர-மனிதரில் புலியே; லக்ஷயே-நான் காண்கிறேன்; ருதத- கண்ணீர் விடுகின்றன; மம—எனது.

மனிதரில் புலியான பீமசேனா, இப்பொழுது பசுவைப் போன்ற உபயோகமுள்ள மிருகங்கள் இடப்புறமாக என்னைக் கடந்து செல்கின்றன. கழுதைகளைப் போன்ற தாழ்ந்த மிருகங்கள் என்னை வலம் வருகின்றன. என்னைக் கண்டதும் என் குதிரைகள் அழுவனபோல் காணப்படுகின்றன.

பதம் 1.14.14
ம்ருத்யு-தூத: கபோதோ ‘யம் உலூக: கம்பயன் மன:
ப்ரத்யுலூகஸ் ச குஹ்வானைர் விஸ்வம் வை சூன்யம் இச்சத:

ம்ருத்யு – மரணம்; தூத:-நூதன்; கபோத :- புறா; அயம்- இந்த; உலுக:- ஆந்தை: கம்பயன்-நடுங்குகிறது: மன:-மனம்; ப்ரத்யுலூக-ஆந்தைகளின் எதிரிகள் (காகங்கள்); ச-மேலும்; குஹ்வானை:-வீறிட்டு அலறும்: விஸ்வம்-பிரபஞ்சம்; வை- ஏதேனும்; சூன்யம்—சூன்யம்; இச்சத:-விரும்பும்.

இப்புறா ஒரு மரணத் தூதனைப் போல காணப்படுவதைப் பார். ஆந்தைகளின் வீறிட்டலறல்களும், அவற்றுடன் போட்டியிடும் காகங்களும் என் இதயத்தை நடுங்கச் செய்கின்றன. பிரபஞ்சத்தையே சூனியமாகச் செய்துவிட விரும்புவதைப் போல் இவை காணப்படுகின்றன.

பதம் 1.14.15
தூம்ரா திச: பரிதய: கம்பதே பூ: ஸஹாத்ரிபி:
நிர்காதஸ் ச மஹாம்ஸ் தாத ஸாகம் ச ஸ்தனயித்னுபி:

தூம்ரா – புகை சூழ்ந்த; திச:-எல்லா திசைகளும்; பரிதய:-சூழ்ந்து கொண்ட ; கம்பதே-துடிக்கின்றன; பூ:-பூமி; ஸஹ அத்ரிபி-மலை, குன்றுகளுடன்; நிர்காத:-நீல வானத்திலிருந்து இடி; ச-மேலும்; மஹான்-மிகச்சிறந்த ; தாத -ஓ பீம; ஸாகம்- உடன்; ச-மேலும்; ஸ்தனயித்னுபி—மேகமில்லாத இடியோசை.

புகை எப்படி வானத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார். பூமியும், மலைகளும் துடிப்பதைப் போல் காணப்படுகின்றன. மேகமில்லாத நீல வானிலிருந்து இடியோசை கேட்பதைப் பார்.

பதம் 1.14.16
வாயுர் வாதி கர-ஸ்பர்சோ ரஜஸா விஸ்ருஜம்ஸ் தம:
அஸ்ருக் வர்ஷந்தி ஜலதா பீபத்ஸம் இவ ஸர்வத:

வாயு-காற்று; வாதி-வீசும்; கர-ஸ்பர்சு-சுரீரென்ற; ரஜஸா- தூசியால்: விஸ்ருஜன்-உண்டாக்கும்; தம:-இருள்; அஸ்ருக்- இரத்தம்; வர்ஷந்தி-பொழிகிறது; ஜலதா-மேகங்கள்; பீபத்ஸம்- நாசகரமான; இவ-போல்; ஸர்வத:-எல்லா இடங்களிலும்.

வேகமாக வீசும் காற்று மண்ணை வாரியடித்து இருளடறச் செய்கிறது. எல்லா இடங்களிலும் மேகங்கள் மழையைப் பொழிந்து இரத்தம் சிந்தச் செய்யும் நாசத்தை விளைவிக்கின்றன.

பதம் 1.14.17
ஸூர்யம் ஹத-ப்ரபம் பஸ்ய க்ரஹ-மர்தம் மிதோ திவி
ஸஸங்குலைர் பூத-கணைர் ஜ்வலிதே இவ ரோதஸீ

ஸூர்யம்- சூரியன்; ஹத-ப்ரபம்—அதன் கதிர்கள் சிதைகின்றன; பஸ்ய-பார்; க்ரஹ-மர்தம்-நட்சத்திரங்களின் மோதல்கள்; மித-ஒன்றோடொன்று; திவி-ஆகாயத்தில்; ஸஸங்குலை:-உடன் கலந்து; பூத-கணை:-ஜீவராசிகளால்; ஜ்வலிதே-தீப்பற்றிக் கொண்ட; இவ-அதுபோல்; ரோதஸீ-அழுகிறது.

சூரிய கதிர்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று சண்டை செய்வதாகக் காணப்படுகிறது. குழம்பிய ஜீவராசிகள் எரிவது போலும், அழுவது போலும் காணப்படுகின்றன.

பதம் 1.14.18
நத்யோ நதாஸ் ச க்ஷுபிதா: ஸராம்ஸி ச மனாம்ஸி ச
ந ஜ்வலதி அக்னிர் ஆஜ்யேன காலோ ‘யம் கிம் விதாஸ்யதி

நத்ய:-நதிகள்; நதா: ச-மற்றும் உபநதிகள்; க்ஷுபிதா:-அனைத்தும் கலங்கி; ஸராம்ஸி—நீர்த்தேக்கங்கள்: ச-மேலும்; மனாம்ஸி-மனம்; சமேலும்; ந-இல்லை; ஜ்வலதி—தீப்பற்ற; அக்னி:-தீ; ஆஜ்யேன- நெய்யின் உதவியுடன்; கால:– காலம்; அயம்-அசாதாரணமாக இருக்கிறது; கிம்-என்ன; விதாஸ்யதி-நடக்கப் போகிறது.

நதிகள், உபநதிகள், குட்டைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் மனம் ஆகிய அனைத்தும் கலங்கியுள்ளன. நெய்யினால் அக்னி ஜொலிக்கவில்லை. என்ன அசாதாரணமான நேரம் இது? என்ன நடக்கப் போகிறதோ!

பதம் 1.14.19
ந பிபந்தி ஸ்தனம் வத்ஸா ந துஹ்யந்தி ச மாதர:
ருதந்தி அஸ்ரு-முகா காவோ ந ஹ்ருஷ்யந்தி ருஷபா வ்ரஜே

ந-இல்லை; பிபந்தி- கறக்க; ஸ்தனம்- முளைக் காம்பு; வத்ஸா- கன்றுகள்; ந—இல்லை; துஹ்யந்தி- பால் கொடுக்க அனுமதிக்க; ச-மேலும்; மாதர:-பசுக்கள்; ருதந்தி-அழுகின்றன; அஸ்ருமுகா- கண்ணீர் ததும்பும் முகத்துடன்; காவ:-பசுக்கள்; ஹ்ருஷ்யந்தி—மகிழ்ச்சியடைய; ருஷபா-காளைகள்; ந-இல்லை; வ்ரஜே- மேய்ப்பு நிலங்களில்.

கன்றுகள் பசுக்களின் பால் காம்புகளை உறிஞ்சிக் குடிக்கவில்லை; பசுக்களும் பால் கறக்கவில்லை. அவை கண்களில் நீர் மல்க அழுது கொண்டு நிற்கின்றன. மேலும் காளைகளும் மேய்ப்பு நிலங்களில் இன்பங்காணவில்லை.

பதம் 1.14.20
தைவதானி ருதந்தீவ ஸ்வித்யந்தி ஹி உச்சலந்தி ச
இமே ஜன-பதா க்ராமா: புரோத்யானாகராஸ்ரமா:
ப்ரஷ்ட-ஸ்ரீயோ நிரானந்தா: கிம் அகம் தர்சயந்தி ந:

தைவதானி- ஆலயங்களிலுள்ள விக்கிரகங்கள்; அழுவனபோல் காணப்படுகின்றன; இவ-அவ்வாறு; ஸ்வித்யந்தி- சொரிகின்றன; ருதந்தி உச்சலந்தி— வியர்வை வெளியேறுவதுபோல்; ஹி- நிச்சயமாக; ச-மேலும்; இமே- இந்த; ஜன-பதா-நகரங்கள்: க்ராமா:-கிராமங்கள்; புர-புரங்கள்; உத்யான— நந்தவனங்கள்; ஆகர-அரங்கங்கள்; ஆஸ்ரமா:-ஆஷ்ரமங்கள், முதலானவை; ப்ரஷ்ட-இழந்து; ஸ்ரீய:—அழகு: நிரானந்தா-மகிழ்ச்சி இல்லாமல்; கிம்-எந்த வகையான; அகம்- துன்பங்களை; தர்சயந்தி- தெரிவிக்கின்றனவோ; ந:-நமக்கு.

ஆலயத்திலுள்ள விக்கிரகங்கள் அழுவனபோலும், வியர்வை சொரிவன போலும் அங்கிருந்து வெளியேற நினைப்பது போலும் காணப்படுகின்றன. நகரங்கள், கிராமபுரங்கள், நந்தவனங்கள், சுரங்கங்கள் மற்றும் ஆஷ்ரமங்கள் ஆகிய அனைத்தும் பொலிவிழந்தும், மகிழ்ச்சியற்றும் காணப்படுகின்றன. எத்தகைய துன்பங்கள் நமக்காகக் காத்திருக்கின்றனவோ நானறியேன்.

பதம் 1.14.21
மன்ய ஏதைர் மஹோத்பாதைர் நூனம் பகவத: பதை:
அனன்ய-புருஷ-ஸ்ரீபிர் ஹீனா பூர் ஹத-ஸௌபகா

மன்யே-நான் நினைக்கிறேன்; எதை- இவைகளால்; மஹா- பெரும்; உத்பாதை-பாதங்கள்; நூனம்-இல்லாமல்; பகவத- பரம புருஷரின்; பதை-பாதக்குறிகள்; அனன்ய-அசாதாரணமான; புருஷ-பரம புருஷரின்; ஸ்ரீபி:-மங்களகரமான அடையாளங்களால்; ஹீனா-இழந்து; பூ;-பூமி; ஹத-ஸௌபகா—அதிர்ஷ்டம் இல்லாமல்.

இந்த மண்ணுலகக் குழப்பங்களெல்லாம், உலகின் நல்லதிர்ஷ்டத்தில் பெரும் இழப்பைச் சுட்டிக்காட்டுவதாகவே நான் நினைக்கிறேன். உலகம் பகவானின் தாமரைப் பாத சுவடுகளால் அலங்கரிக்கப்படும் பாக்கியத்தைப் பெற்றிருந்தது. இந்நிலை நீடிக்காது என்பதையே இந்த அறிகுறிகள் சுட்டிக்காட்டுகின்றன.

பதம் 1.14.22
இதி சிந்தயதஸ் தஸ்ய த்ருஷ்டாரிஷ்டேன சேதஸா
ராஜ்ன: ப்ரத்யாகமத் ப்ரஹ்மன் யது-புர்யா: கபி-த்வஜ:

இதி-இவ்வாறு; சிந்தயத-தனக்குள் சிந்தித்துக் கொண்டு இருக்கும்பொழுது; தஸ்ய-அவர்; த்ருஷ்டா-கண்டு; அரிஷ்டேன- கெட்ட சகுனங்கள்; சேதஸா-மனதால்; ராஜ்ன:—அரசர்; ப்ரதி— திரும்பி: ஆகமத்- வந்தார்; ப்ரஹ்மன்-பிராமணரே; யது-புர்யா- யதுபுரியிலிருந்து; கபி-த்வஜ:-அர்ஜுனன்.

பிராமணரான சௌனகரே, அச்சமயத்தில் பூமியில் காணப்பட்ட கெட்ட சகுனங்களைக் கண்டு, யுதிஷ்டிர மகாராஜன் தமக்குள் சிந்தித்தவராய் இருக்கையில், யதுபுரியிலிருந்து (துவாரகை) அர்ஜுனன் திரும்பி வந்தார்.

பதம் 1.14.23
தம் பாதயோர் நிபதிதம் அயதா-பூர்வம் ஆதுரம்
அதோ-வதனம் அப்-பிந்தூன் ஸ்ருஜந்தம் நயனாப்ஜயோ:

தம்—அவரை (அர்ஜுனன்); பாதயோ:-பாதங்களில்; நிபதிதம்— சிரம் தாழ்த்தி வணங்கும் பொழுது; அயதாபூர்வம்-புதுமையான; ஆதுரம்- சோகம்; அத: வதனம்- கீழ்நோக்கிய முகம்; அப்-பிந்தூன்— நீர்த்துளிகள்; ஸ்ருஜந்தம்—உண்டாக்கும்; நயனஅப்ஜயோ-தாமரைப் போன்ற கண்களிலிருந்து.

தமது பாதங்களில் அவர் சிரம்தாழ்த்தி வணங்கியபொழுது, அவரது சோகம் புதுமையாக இருப்பதை அரசர் கவனித்தார். அவரது சிரம் தாழ்ந்திருந்தது, அவரது தாமரைக் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது.

பதம் 1.14.24
விலோக்யோதவிக்ன-ஹ்ருதயோ விச்சாயம் அனுஜம் ந்ருப:
ப்ருச்சதி ஸ்ம ஸுஹ்ருன் மத்யே ஸ்ம்ஸ்மரன் நாரதேரிதம்

விலோக்ய-கண்டதால்; உத்விக்ன- வருத்தம்; ஹ்ருதய:-இதய; விச்சாயம் – பொலிவிழந்த தோற்றம்; அனுஜம்—அர்ஜூனன்; ந்ருப: அரசர்; ப்ருச்சதி ஸ்ம-வினவினார்; ஸூஹ்ருத்-நண்பர்கள்; மத்யே- இடையில்; ஸம்ஸ்மரன்- நினைவுகூர்ந்து; நாரத-நாரத முனி; ஈரிதம்- சுட்டிக்காட்டப்பட்ட.

மனவருத்தத்தினால் அர்ஜுனனின் பொலிவிழந்த தோற்றத்தைக் கண்ட அரசர் யுதிஷ்டிரர், நாரத முனியின் குறிப்புகளை நினைவுகூர்ந்து, நண்பர்களுக்கிடையில் இருந்த அவரிடம் வினவினார்.

பதம் 1.14.25
யுதிஷ்டிர உவாச
கச்சித் ஆனர்த-புர்யாம் ந: ஸ்வ-ஜனா:ஸுகம் ஆஸதே
மது-போஜ தசார்ஹார்ஹ ஸாத்வதாந்தக-வ்ருஷ்ணய:

யுதிஷ்டிர உவாச-யுதிஷ்டிரர் கூறினார்; கச்சித்-உள்ளனரா; ஆனர்த புர்யாம்-துவாரகையைச் சேர்ந்த; ந:- நமது; ஸ்வஜனா:-உறவினர்கள்; ஸுகம்- சுகமாக; ஆஸதே – நாட்களைக் கழிக்கின்றனர்; மது-மது; போஜ-போஜ; தசார்ஹ- தசார்ஹ; ஆர்ஹ-ஆர்ஹ; ஸாத்வத- சாத்வத; அந்தக—அந்தக ; வ்ருஷ்ணய-விருஷ்ணி குடும்பத்தின்.

யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்: அன்புள்ள சகோதரனே, மது, போஜ, தசார்ஹ, ஆர்ஹ, சாத்வத, அந்தக மற்றும் யது வம்ச அங்கத்தினர்கள் போன்ற நமது நண்பர்களும், உறவினர்களும் அவர்களது நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்து வருகின்றனரா என்று தயவுசெய்து என்னிடம் கூறு.

பதம் 1.14.26
சூரோ மாதாமஹ: கச்சித் ஸ்வஸ்தி ஆஸ்தே வாத மாரிஷ:
மாதுல: ஸானுஜ: கச்சித் குசலி ஆனகதுந்துபி:

சூர-சூரசேனர்; மாதாமஹ:-தாய்வழிப் பாட்டன்; கச்சித் ஸ்வஸ்தி- அனைவரும் நன்றாக இருக்கிறார்களா; ஆஸ்தே—அவரது நாட்களைக் கழிக்கிறார்; வா—அல்லது; அத—எனவே; மாரிஷ்:-மரியாதைக்குரிய; மாதுல:-தாய்மாமன்; ஸ-அனுஜ:-அவரது இளைய சகோதரர்களுடன்; கச்சித் குசலீ—அனைவரும் நலமா; ஆனதுந்துபி:-வசுதேவர்.

மரியாதைக்குரிய எனது பாட்டனார் சூரசேனர் மகிழ்ச்சியுடன் இருக்கிறாரா? எனது தாய் மாமனான வசுதேவரும், அவரது இளைய சகோதரர்களும் நலமா?

பதம் 1.14.27
ஸப்த ஸ்வ-ஸாரஸ் தத்-பத்ன்யோ மாதுலான்ய: ஸஹாத்மஜா:
ஆஸதே ஸஸ்னுஷா: க்ஷேமம் தேவகீ-ப்ரமுகா: ஸ்வயம்

ஸப்த-ஏழு; ஸ்வ-ஸார:-சொந்த சகோதரிகள்; தத்-பத்ன்ய:-அவரது மனைவிகள்; மாதுலான்ய:-அத்தைகள்; ஸஹு-அவர்களுடன்; ஆத்மஜா:-மகன்களும், பேரன்களும் ; ஆஸதே-அனைவரும் இருக்கிறார்களா; ஸஸ்னுஷ:-அவர்களது மருமகள்களுடன்; சேமம்- நலமாக; தேவகீ- தேவகி; ப்ரமுகா:- தலைமையாகக் கொண்ட; ஸ்வயம்-சுயமாக.

தேவகியை தலைமையாகக் கொண்ட அவரது ஏழு மனைவிகளும் சகோதரிகளாவர். அவர்களும், அவர்களது மகன்களும், மருமகள்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

பதங்கள் 1.14.28 – 1.14.29
கச்சித் ராஜாஹுகோ ஜீவதி அஸத்-புத்ரோ ‘ஸ்ய சானுஜ:
ஹ்ருதீக: ஸஸுதோ ‘க்ரூரோ ஜயந்தோ-கத-ஸாரணா:

ஆஸதே குசலம் கச்சித் யே ச சத்ருஜித்-ஆதய:
கச்சித் ஆஸ்தே ஸுகம் ராமோ பகவான் ஸாத்வதாம் ப்ரபு:

கச்சித்-எப்படி: ராஜா—அரசர்; ஆஹுக:—உக்ரசேனரின் மற்றொரு பெயர்; ஜீவதி—இன்னும் வாழ்கிறார்; அஸத்-தீயவன்; புத்ர— மகன்: அஸ்ய-அவரது; ச-மேலும்; அனுஜ-இளைய சகோதரன்; ஹ்ருதீக-இருதீகர்; ஸஸுத-மகன், க்ருதவர்மனுடன்; அக்குர- அக்குர்; ஜயந்த—ஜயந்தர்; கத-கத; ஸாரணா—சாரணர்; ஆஸதே- அவர்கள் அனைவரும் இருக்கிறார்களா; குசலம் கச்சித்-மகிழ்ச்சியாக இருக்கிறார்களா; யே-அவர்கள்; ச-மேலும்; சத்ருஜித்- சத்ருஜித்; ஆதய:- தலைமையாகக் கொண்ட; கச்சித் ஆஸ்தே—அவர்கள் இருக்கிறார்களா; ஸுகம்—சுகமாக; ராம:-பலராமர்; பகவான்—பரம புருஷரான; ஸாத்வதாம்—பக்தர்களின்; ப்ரபு:- பாவலர்.

தீயவனான கம்சனை மகனாகப் பெற்ற உக்ரசேனரும், அவரது இளைய சகோதரரும் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா? இருதீகரும், அவரது மகன் க்ருதவர்மனும் மகிழ்ச்சியுடன் உள்ளனரா? அக்ரூரர், ஜயந்தர், கத, சாரணர் மற்றும் சத்ருஜித் ஆகிய அனைவரும் நலமா? பரம புருஷரும், பக்தர்களின் காவலருமான பலராமர் எப்படி இருக்கிறார்?

பதம் 1.14.30
ப்ரத்யும்ன: ஸர்வ-வ்ருஷ்ணீனாம் ஸுகம் ஆஸ்தே மஹா-ரத:
கம்பீர-ரயோ ‘நிருத்தோ வர்ததே பகவான் உத

ப்ரத்யும்ன.—பிரதியும்னர் (பசுவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு மகன்); வ்ருஷ்ணினாம் -விருஷ்ணி குடும்பத்தினரின்; லகம்- மகிழ்ச்சி: ஆஸ்தே-இருக்கிறார்கள்; மஹாரத:—மகா தளபதி: கம்பீர- மிகவும்: ரய:-சாமர்த்தியம்; அநிருத்த-அநிருத்தர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு பேரன்); வர்ததே-செழிப்புடன் இருக்கிறார்; பகவான்–பரம புருஷ பகவால்: உத- வேண்டும்.

விருஷ்ணி குடும்பத்தின் பெருந்தளபதியான பிரதியும்னர் எப்படி இருக்கிறார். அவர் மகிழ்ச்சியுடன் இருக்கிறாரா? மேலும் பரம புருஷரின் விரிவங்கமாகிய அநிருத்தர் நலமா?

பதம் 1.14.31
ஸுஷேணஸ் சாருதேஷ்ணஸ் ச ஸாம்போ ஜாம்பவதீ-ஸுத:
அன்யே ச கார்ஷ்ணி-ப்ரவரா: ஸபுத்ரா ருஷபாதய:

ஸுஷேண:-சுஷேணர்; சாருதேஷ்ண:சாருதேஷ்ணர்; ச-மேலும்; ஸாம்ப:- சாம்ப; ஜாம்பவதீ-ஸுத:-ஜாம்பவதியின் மகன்; அன்யே- மற்றவர்கள்; ச-மேலும்; கார்ஷ்ணி- ஸ்ரீ கிருஷ்ணரின் மகன்கள்; ப்ரவரா:—எல்லா தலைவர்களும்; ஸ-புத்ரா-அவர்களது மகன்களுடன்; ருஷப-ரிஷபர்; ஆதய:-முதலானவர்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரது மகன்களின் தலைவர்களான சுஷேணர், சாருதேஷ்ணர் போன்றவர்கள், ஜாம்பவதியின் மகனான சாம்பன் மற்றும் ரிஷபர் ஆகிய அனைவரும் அவர்களது மகன்களுடன் நலமாக இருக்கிறார்களா?

பதங்கள் 1.14.32 – 1.14.33
ததை வானுசரா: சௌரே ஸ்ருததேவோத்தவாதய:
ஸுனந்த-நந்த-சீர்ஷண்யா யே சான்யே ஸாத்வதர்ஷபா:

அபி ஸ்வஸ்தி ஆஸதே ஸர்வே ராம-க்ருஷண-புஜாஸ்ரயா:
அபி ஸ்மரந்தி குசலம் அஸ்மாகம் பத்த-ஸௌஹ்ருதா;

ததா ஏவ—அதைப் போலவே; அனுசரா: இணைபிரியா சகாக்கள்: சௌரே:-போன்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; ஸ்ருததேவட- சுருததேவர்; உத்தவ-ஆஸதே-உத்தவரும் மற்றவர்களும்; ஸுனந்த- சுனந்தர்; நந்த—நந்தர்; சீர்ஷண்யா-மற்ற தலைவர்கள்; யே-அவர்கள் அனைவரும்; ச-மேலும்; அன்யே- மற்றவர்கள்; ஸாத்வத- முக்தியடைந்த ஆத்மாக்கள்; ருஷபா-மிகச்சிறந்த; அபி- என்றால்; ஸ்வஸ்தி ஆஸதே- நலமாக இருக்கிறார்களா; ஸர்வே-அவர்கள் அனைவரும்; ராம—பலராமர்; க்ருஷ்ண பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; புது ஆஸ்ரயா:-பாதுகாப்பின் கீழ்; அபி-தவிரவும்; ஸ்மரந்தி- நினைவு வைத்திருக்கிறார்கள்; குசலம்-நன்மை; அஸ்மாகம்—நம்முடைய; பக்தஸௌஹ்குதா:-நித்தியமான நட்பால் பிணைக்கப்பட்டுள்ள.

மேலும், சுருததேவர், உத்தவர் போன்ற மற்றவர்களும், பகவானின் இணைபிரியா சகாக்களும், பகவான் ஸ்ரீ பலராமராலும், கிருஷ்ணராலும் பாதுகாக்கப்படும், முக்திபெற்ற ஆத்மாக்களின் தலைவர்களான நந்த, சுனந்த போன்றவர்களும், மற்றவர்களும் அவரவர் நன்கு செயற்படுகின்றனரா? நித்தியமான நட்பால் கடமைகளில் நம்முடன் பிணைக்கப்பட்டுள்ள அவர்கள் நம்முடைய நலனைப் பற்றி ஞாபகம் வைத்திருக்கிறார்களா?

பதம் 1.14.34
பகவான் அபி கோவிந்தோ ப்ரஹ்மண்யோ பக்த வத்ஸல:
கச்சித் புரே ஸுதர்மாயாம் ஸுகம் ஆஸ்தே ஸுஹ்ருத்-வ்ருத:

பகவான்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; அபி-மேலும்; கோவிந்த- பசுக்களுக்கும், புலன்களுக்கும் உற்சாகம் அளிப்பவர்; ப்ரஹ்மண்ய- பிராமண பக்தர்களுக்கு இரங்குபவர்; பக்த-வத்ஸல:-பக்தர்களிடம் அன்பு கொண்டவர்; கச்சித்-இருக்கிறாரா; புரே- துவாரகாபுரியில்; ஸுதர்மாயாம்—பக்தர்களின் சபையில்; ஸுகம்- சுகம் ; ஆஸ்தே- அனுபவிக்கிறார்; ஸுஹ்ருத்-வ்ருத- நண்பர்கள் சூழ.

பசுக்களுக்கும், புலன்களுக்கும், பிராமணர்களுக்கும் இன்பம் அளிப்பவரும், பக்தர்களிடம் மிகவும் அன்பு கொண்டவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகாபுரியில் பக்தர்களாலும், நண்பர்களாலும் சூழப்பட்டவராய் சுகமாக இருக்கிறாரா?

பதங்கள் 1.14.35 – 1.14.36
மங்களாய ச லோகானாம் க்ஷேமாய ச பவாய ச
ஆஸ்தே யது-குலாம்போதாவ் ஆத்யோ ‘நந்த-ஸக: புமான்

யத் பாஹூ-தண்ட-குப்தாயாம் ஸ்வ-புர்யாம் யதவோ ‘ர்சிதா:
க்ரீடந்தி பரமானந்தம் மஹா-பௌருஷிகா இவ

மங்களாய-முழு நன்மைக்காக; ச-மேலும்; லோகானாம்- அனைத்து கிரகங்களின்; க்ஷேமாய-சேமத்திற்காக; ச-மேலும்; பவாய—உயர்த்துவதற்காக; ச-மேலும்; ஆஸ்தே-அங்கிருக்கிறது; யது- குல-அம்போதௌ—யது வம்சமெனும் சமுத்திரத்தில்; ஆத்ய:-ஆதி; அநந்த-ஸக:-அநந்தனின் (பலராமர்) சகவாசத்தில்; ஸ்வ – புர்யாம் புமான்—பரம அனுபவிப்பாளர்; யத்-யாருடைய; பாஹுதண்ட குப்தாயாம்—அவரது கரங்களால் காக்கப்பட்டு; ஸ்வ-புர்யாம்-அவரது சொந்த நகரத்தில்; யதவ:-யது குடும்பத்தினர்; அர்சிதா-அவர்களின் தகுதிக்கேற்ப; க்ரீடந்தி- சுவைத்து அனுபவிக்கின்றனர்; பரமஆனந்தம்- பரம ஆனந்தத்தை; மஹாபௌரிஷிகா-ஆன்மீக உலகவாசிகள்; இவ-போல்.

அனுபவிப்பவரான மூல முழுமுதற் கடவுளும், ஆதியான பகவான் அநந்தராகிய பலராமரும், முழு பிரபஞ்சத்தின் நன்மைக்காகவும், பாதுகாப்புக்காகவும் மற்றும் பொதுவான முன்னேற்றத்திற்காகவும், யது வம்சமெனும் சமுத்திரத்தில் தங்கியிருக்கின்றனர். மேலும் பகவானுடைய கரங்களால் பாதுகாக்கப்படும் யது வம்சத்தினர் ஆன்மீக உலகவாசிகளைப் போல் வாழ்வை அனுபவிக்கின்றனர்.

பதம் 1.14.37
யத்–பாத-கஸ்ரூஷண-முக்ய-கர்மணா
ஸத்யாதயோ த்வி-அஷ்ட-ஸஹஸ்ர-யோஷித:
நிர்ஜித்ய ஸங்க்யே த்ரி-தசாம்ஸ் தத்-ஆசிஷோ
ஹரந்தி வஜ்ராயுத வல்லபோசிதா:

யத்—யாருடைய; பாத-பாதங்கள்: சுஸ்ரூஷ்ண-சுகபோகங்களை அளித்தல்; முக்ய-மிக முக்கியமான; கர்மணா—செயல்களால்; ஸத்ய-ஆதய-சத்தியபாமாவை தலைமையாகக் கொண்ட ராணிகள்; த்வி-அஷ்ட-ஈரெட்டு; ஸஹஸ்ர-ஆயிரம்; யோஷித:-மாதர் குலம்; நிர்ஜித்ய-தோற்கடித்து; ஸங்க்யே-போரில்; த்ரி-தசான்— ஸ்வர்கவாசிகளின்; தத்-ஆசிஷ:—தேவர்களால் அனுபவிக்கப்படுவது; ஹரந்தி-பறித்துக் கொண்டனர்; வஜ்ர-ஆயுத-வல்லபா—வஜ்ராயுதத்தை ஆள்பவரின் மனைவிகள்: உசிதா- உசிதமான.

சத்தியபாமா முதலான துவாரகாபுரி ராணிகள், சேவைகளிலேயே மிக முக்கியமானதான பாத சேவையை பகவானுக்குச் செய்து அவரைத் திருப்திப்படுத்துவதாலேயே, தேவர்களைத் தோற்கடிக்கும்படி அவர்கள் பகவானைத் தூண்டினர். இவ்வாறாக, வஜ்ராயுதங்களை ஆள்பவருடைய மனைவிகளின் தனிப்பட்ட உரிமைகளையும் ராணிகள் அனுபவித்தனர்.

பதம் 1.14.38
யத் பாஹு-தண்டாப்யுதயானுஜீவினோ
யது-ப்ரவீரா ஹி அகுதோபயா முஹு:
அதிக்ரமந்தி அங்ரிபிர் ஆஹ்ருதாம் பலாத்
ஸபாம் ஸுதர்மாம் ஸுர-ஸத்தமோசிதாம்

யத் -யாருடைய; பாஹு -தண்ட கரங்கள்; அப்யுதய- நடத்தப்பட்ட; அனுஜீவின:-எப்பொழுதும் வாழும்; யது-யது வம்சத்தினர்; ப்ரவீரா—சிறந்த வீரர்கள்; ஹி அகுதோபயா- எல்லா விஷயங்களிலும் பயமின்றி; முஹு:-எப்பொழுதும்; அதிக்ரமந்தி- குறுக்கிடும்; அங்ரிபி:-பாதத்தால்; ஆஹ்ருதாம்- ஏற்படுத்தினர்; பலாத்- பலாத்காரமாக; ஸபாம்-ராஜசபை; ஸுதர்மாம்—சுதர்மா; ஸுர ஸத்தம— தேவர்களில் சிறந்தவர்கள்; உசிதாம்-ஏற்ற.

யது வம்சத்தின் சிறந்த வீரர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கரங்களால் எப்பொழுதும் பாதுகாக்கப்பட்டிருப்பதால், எந்த விஷயத்திலும் அவர்களுக்கு அச்சமில்லை. எனவே மிகச்சிறந்த தேவர்களுக்குச் சொந்தமான சுதர்மா எனப்படும் தேவலோக ராஜசபையை அவர்களிடமிருந்து பறித்து, அதை அவர்கள் அலட்சியமாக தங்களது பாதங்களால் மிதித்தனர்.

பதம் 1.14.39
கச்சித் தே “நாமயம் தாத ப்ரஷ்ட-தேஜா விபாஸி மே
அலப்த-மானோ ‘வஜ்னாத: கிம் வா தாத சிரோஷித:

கச்சித்— எப்படி; தே-உனது; அனாமயம்—உடல் நலம்: தாத- எனதன்புள்ள சகோதரனே; ப்ரஷ்ட—இல்லை; தேஜா-ஒளி; விபாஸி- காணப்படுகிறாய்; மே- எனக்கு; அலப்தமான:-மதிக்காமல்; அவஜ்னாத-கிம்—அலட்சியம் செய்தனரா; வா—அல்லது; தாத—அன்பு சகோதரனே; சிரோஷித- நீண்ட காலம் தங்கியிருந்ததால்.

அன்புள்ள சகோதரனே அர்ஜுனா, உனக்கு உடல் நலம் சரிதானே? நீ பொலிவிழந்தவன்போல் காணப்படுகிறாயே நீண்ட காலமாக நீ துவாரகையில் தங்கியதால் பிறர் உன்னை அலட்சியத்தால் அவமரியாதை செய்ததால் இந்நிலை ஏற்பட்டதா?

பதம் 1.14.40
கச்சின் நாபிஹதோ ‘பாவை: சப்தாதிபிர் அமங்களை:
ந தத்தம் உக்தம் அர்திப்ய ஆசயா யத் ப்ரதிஸ்ருதம்

கச்சித் ந- இயலாமற் போயிற்றா; அபிஹத:- அழைக்கப் பட்ட; அபாவை:-அன்பில்லாத; சப்தஆதிபி:-வார்த்தைகளால்; அமங்களை;—அமங்களமான; ந—இல்லை; தத்தம்- தானம் கொடுக்க; உக்தம் -கூறப்படுகிறது; அர்திப்ப-கேட்டவருக்கு; ஆசயா— ஆசையாக; யத்—என்ன; ப்ரதிஸ்ருதம்- கொடுப்பதாக வாக்களித்ததை.

யாராவது உன்னை அன்பில்லா வார்த்தைகளால் அழைத்தார்களா? அல்லது உன்னை பயமுறுத்தினார்களா? கேட்டவருக்கு உன்னால் தானம் கொடுக்க முடியாமற் போயிற்றா? அல்லது உன்னுடைய வாக்குறுதியைக் காப்பாற்ற இயலவில்லையா?

பதம் 1.14.41
கச்சித் த்வம் ப்ராஹ்மணம் பாலம் காம் வ்ருத்தம் ரோகிணம் ஸ்த்ரியம் சரணோபஸ்ருதம் ஸத்வம் நாத்யாக்ஷீ: சரண-ப்ரத:

கச்சித் – இயலவில்லையா; த்வம்-உன்னால்; ப்ராஹ்மணம் – பிராமணர்கள்; முதியோர்; பாலம்- குழைந்தைகள்; காம்-பசு: வ்ருத்தம்-முதியோர் ;ரோகிணம் நோய்வாய்ப்பட்டவர்; ஸ்த்ரியம்- பெண்: சரண- உபஸ்ருதம்-பாதுகாப்பைத் தேடி வந்த; ஸத்வம்- எந்த ஜீவராசிக்காவது; ந அத்யாக்ஷீ—பாதுகாப்பு அளிக்கவில்லையா; சரண ப்ரத:-பாதுகாக்கப்பட வேண்டியவர்.

பிராமணர்கள், குழந்தைகள், பசுக்கள், பெண்கள் மற்றும் நோய் வாய்ப்பட்டவர்கள் போன்ற ஜீவன்களை எப்பொழுதும் காப்பவனாக நீ இருக்கிறாய். உன்னிடம் பாதுகாப்பைத் தேடி வந்த அவர்களுக்கு உன்னால் பாதுகாப்பளிக்க இயலவில்லையா?

பதம் 1.14.42
கச்சித் த்வம் நாகமோ ‘கம்யாம் கம்யாம் வாஸத்-க்ருதாம் ஸ்த்ரியம்
பராஜிதோ வாத பவான் நோத்தமைர் நாஸமை: பதி

கக்சித் த்வம்—உன்னால் இயலவில்லையா; ந-இல்லை; அகம- சந்தித்த; அகம்யாம்- தீய: கம்யாம்—ஏற்கத்தக்க; வா அஸத்-க்ருதாம்- முறைகேடாக நடத்தினாயா; ஸ்த்ரியம்- ஒரு பெண்ணை; பராஜித:வா- தோற்றுப் போனாயா; அத-கடைசியில்; பவான்-நல்லவனான நீ; ந-அல்லது; உத்தமை:-உயர்ந்த சக்தியால் ; ந – இல்லை; அஸமை- சமமானவர்களால்; பதி- வழியில்.

தீயொழுக்கமுள்ள ஒரு பெண்ணுடன் நீ தொடர்பு கொண்டாயா அல்லது தகுதியுள்ள ஒரு பெண்ணை நீ முறையாக நடத்தவில்லையா? அல்லது வழியில் உன்னை விட தாழ்ந்த அல்லது உனக்குச் சமமான ஒருவரால் தோற்கடிக்கப்பட்டாயா?

பதம் 1.14.43
அபி ஸ்வித் பர்ய-புங்க்தாஸ் த்வம் ஸம்போஜ்யான் வ்ருத்த-பாலகான் ஜுகுப்ஸிதும் கர்ம கிஞ்சித் க்ருதவான் ந யத் அக்ஷமம்

அபி ஸ்லித்—அப்படியானால்; பர்ய-ஒதுக்கி வைத்து விட்டு; புங்க்தா:-உணவருந்தினாயா; த்வம் – நீ: ஸம்போஜ்யான்-ஒன்றாக உணவருந்தத் தகுதி பெற்ற; வ்ருத்த—முதியோர்; பாலகான்—சிறுவர்கள்; ஜுகுப்ஸிதம் -வெறுக்கத்தக்க; கர்ம-செயல்; கிஞ்சிந்—எதையேனும்; க்ருதவான்-நீ செய்திருக்க வேண்டும்; ந-இல்லை; யத்- எது; அக்ஷமம்—மன்னிக்க முடியாத.

உன்னுடன் உணவருந்தத் தகுதியுடையவர்களான முதியோர்களையும், சிறுவர்களையும் உதாசீனப்படுத்திவிட்டு, நீ மட்டும் தனியாக உணவருந்தினாயா? ஏதேனும் மன்னிக்க முடியாத, வெறுக்கத்தக்க குற்றத்தை நீ செய்தாயா?

பதம் 1.14.44
கச்சித் ப்ரேஷ்டதமேனாத ஹ்ருதயேனாத்ம-பந்துனா
சூன்யோ ‘ஸ்மி ரஹிதோ நித்யம் மன்யஸே தே ‘ன்யதா ந ருக்

கச்சித்—என்ன: ப்ரேஷ்ட-தமேனா- மிகப் பிரியமானவரை; அத- என் சகோதரனே அர்ஜுனா; ஹ்ருதயேன- மிகவும் நெருங்கிய; ஆத்ம பந்துனா—ஆத்ம நண்பரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; சூன்ய:-சூனியம்; அஸ்மி—என்னால்; ரஹித:- இழந்துவிட்டதால்; நித்யம்—நிரந்தரமாக; மன்யஸே—நீ நினைக்கிறாய்; தே—உனது; அன்யதா—இல்லையெனில்: ந-ஒருபோதும் இல்லை; ருக்—மனவேதனை.

அல்லது உன்னுடைய மிகவும் நெருங்கிய நண்பரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நீ இழந்திருக்கக்கூடும் என்பதால், நிரந்தரமான சூனியத்தை நீ உணர்கிறாயா? எனதன்பு சகோதரனே, அர்ஜுனா, உன்னுடைய பெரும் சோகத்திற்கான வேறெந்த காரணத்தையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.


ஸ்ரீமத் பாகவதம், 14 ஆம் காண்டத்தின் “ஸ்ரீ கிருஷ்ணரின் மறைவு” எனும் தலைப்பைக் கொண்ட, 14 ஆம் அத்தியாயத்திற்கான பக்தி வேதாந்தப் பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare