அத்தியாயம் – 13
திருதராஷ்டிரரின் துறவு
பதம் 1.13.1.
ஸூத உவாச
விதுரஸ் தீர்த யாத்ராயாம் மைத்ரேயாத் ஆத்மனோ கதிம்
ஞாத்வாகாத் தாஸ்தினபுரம் தயாவாப்த-விவித்ஸித:

ஸூத உவாச- ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; விதுர–:விதுரர்; தீர்த–யாத்ராயாம்—தீர்த்த யாத்திரையை மேற்கொண்டிருந்தபொழுது; மைத்ரேயாத் – மாமுனிவரான மைத்ரேயரிடமிருந்து; ஆத்மன: –ஆத்ம: கதிம்: –கதி: ஞாத்வா—அதை அறிந்ததால்; ஆகாத்-திரும்பிச் சென்றார்; ஹாஸ்தினபுரம்-ஹஸ்தினாபுர நகரம்; தயா-அந்த அறிவால்; அவாப்த-நல்ல பயனடைந்தார்: விவித்ஸித:–ஆத்ம ஞானத்தில் நன்கு தேர்ச்சி பெற்று.

ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: தீர்த்த யாத்திரையை மேற்கொண்டிருந்த பொழுது விதுரர், மாமுனிவரான மைத்ரேயரிடமிருந்து ஆத்ம கதியைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொண்டதும் ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பிச் சென்றார். அவர் விரும்பியதைப் போலவே அவ்விஷயத்தில் அவர் நன்கு தேர்ச்சி பெற்றவரானார்.

பதம் 1.13.2
யாவத: க்ருதவான் ப்ரஸ்னான் க்ஷத்தா கௌஷாரவாக்ரத:
ஜாதைக-பக்திர் கோவிந்தே தேப்யஸ் சோபரராம ஹ

யாவத:-அவ்வெல்லா; க்ருதவான்—அவர் கேட்டார்; ப்ரஸ்னான்— கேள்விகளையும்; க்ஷத்தா—விதூரின் ஒரு பெயர்; கௌஷாரவ — மைத்ரேயரின் ஒரு பெயர்: அக்ரத:-முன்னிலையில்; ஜாத– முதிர்ந்ததும்; ஏக- ஒரு; பக்தி:-உன்னத அன்புத் தொண்டு: கோவிந்தே -பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு; தேப்ய-தொடர்ந்து கேள்விகள் கேட்பதை; ச-மேலும்; உபரராம—நிறுத்திக் கொண்டார்; ஹ- கடந்த காலத்தில்.

பற்பல கேள்விகளைக் கேட்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத அன்புத் தொண்டில் நிலைபெற்றபின், மைத்ரேய முனிவரிடம் மேற்கொண்டு கேள்விகளைக் கேட்பதை நிறுத்திக் கொண்டார்.

பதங்கள் 1.13.3 – 1.13.4
தம் பந்தும் ஆகதம் த்ருஷ்ட்வா தர்ம-புத்ர: ஸஹானுஜ:
த்ருதராஷ்ட்ரோ யுயுத்ஸுஸ் ச ஸூத: சாரத்வத: ப்ருதா

காந்தாரீ திரௌபதீ ப்ரஹ்மன் ஸுபத்ரா சோத்தரா க்ருபீ
அன்யஸ் ச ஜாமய: பாண்டோர் ஞாதயா: ஸஸுதா: ஸ்த்ரிய:

தம்—அவரை: பந்தும்-உறவினர்கள்; ஆகதம்—அங்கு வந்து சேர்ந்ததும்: த்ருஷ்ட்வா—அதைக் கண்டு: தர்ம-புத்ர:—யுதிஷ்டிரர்; ஸஹ-அநுஜ—அவரது இளைய சகோதரர்களுடன்; த்ருதராஷ்ட்ர- திருதராஷ்டிரர்; யுயுத்ஸு:—ஸாத்யகி; ச-மேலும்; ஸூத:-சஞ்ஜயன்; சாரத்வத:-கிருபாச்சாரியர்; ப்ருதா-குந்தி: காந்தாரீ–காந்தாரி; த்ரௌபதீ-திரௌபதி; ப்ரஹ்மன்—ஓ பிராமணர்களே; ஸுபத்ர– சுபத்ரா; ச-மேலும்; உத்தரா-உத்தரா; க்ருபீ–_கிருபீ; அன்யா- மற்றவர்கள்; ச-மேலும்; ஜாமய:-மற்ற குடும்ப அங்கத்தினர்களின் மனைவிகள்; பாண்டோ:-பாண்டவர்களின்; ஞாதய-குடும்ப அங்கத்தினர்கள்; ஸஸுதா:—அவர்களுடைய மகன்களுடன்; ஸ்தீர்ய – பெண்கள்.

விதூரர் அரண்மனைக்கு திரும்பி வந்ததைக் கண்டதும், யுதிஷ்டிர மகாராஜன், அவரது இளைய சகோதரர்கள், திருதராஷ்டிரர், ஸாத்யகி, சஞ்சயன், கிருபாச்சாரியர், குந்தி, காந்தாரி, திரௌபதி, சுபத்ரா, உத்திரா, கிருபீ, கௌரவர்களின் மற்ற பல மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் கூடிய மற்ற பெண்கள் ஆகிய அனைவரும் பெரும் மகிழ்ச்சியுடன் அவரை நோக்கி விரைந்தனர். நீண்ட காலத்திற்கும் பிறகு உணர்வை திரும்பப் பெற்றவர்களைப் போல் அவர்கள் காணப்பட்டவர்.

பதம் 1.13.5
ப்ரத்யுஜ்ஜக்மு: ப்ரஹர்ஷேண ப்ராணம் தன்வ இவாகதம்
அபிஸங்கம்ய விதிவத் பரிஷ்வங்கா பிவாதனை:

ப்ரதி-நோக்கி; உஜ்ஜக்மு:-சென்றனர்; ப்ரஹர்ஷேண–பெரு மகிழ்ச்சியுடன்; ப்ராணம்–உயிர்; தன்வ–உடலின்; இவ- போல்; ஆகதம்–திரும்பி வந்ததை; அபிஸங்கம்ய—அணுகி: விதிவத்- ஏற்ற முறையில்; பரிஷ்வங்க-தழுவிக்கொண்டு; அபிவாதனை-வணக்கங்களால்.

உயிர் திரும்பி வந்ததைப் போல் பெரும் மகிழ்ச்சியுடன் அவர்கள் அனைவரும் அவரை நோக்கிச் சென்றனர். அவர்கள் வணக்கங்களை பரிமாறிக் கொண்டபின் ஆலிங்கனத்தால் ஒருவரையொருவர் வரவேற்றுக் கொண்டனர்.

பதம் 1.13.6
முமுசு: ப்ரேம – பாஷ்பௌகம் விரஹௌத் கண்ட்ய—காதரா:
ராஜா தம் அர்ஹயாம் சக்ரே க்ருதாஸன பரிக்ரஹம்

முமுசு:– வெளிப்பட்டது; ப்ரேம-பாசமான; பாஷ்ப – ஒகம்– ஆனந்தக் கண்ணீர்;
விரஹ-பிரிவு; ஒளட்கண்ட்ய-ஆவல்; காதரா –துன்பப்பட்டு; ராஜா-யுதிஷ்டிர
மகாராஜன்; தம்—அவரிடம் (விதுரர்); அர்ஹயாம் சக்ரே—அளித்தார்; க்ருத-செயல்; ஆஸன—ஆசனங்கள்; பரிக்ரஹம்- ஏற்பாட்டை.

நீண்ட பிரிவு மற்றும் பெரும் ஆவல் ஆகியவற்றினால் அவர்கள் அனைவரும் பாசத்துடன் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர், யுதிஷ்டிர மகாராஜன் பிறகு ஆசனங்களுக்கும் ஒரு உபசரணைக்கும் ஏற்பாடு செய்தார்.

பதம் 1.13.7
தம் புக்தவந்தம் விஸ்ராந்தம் ஆஸீனம் ஸுகம் ஆஸனே
ப்ரஸ்யாவனதோ ராஜா ப்ராஹ தேஷாம் ச ஸ்ருண்வதாம்

தம்-அவரை (விதுரர்); புக்தவந்தம்-அவருக்கு விருந்துபசாரம் செய்தபின்; விஸ்ராந்தம்-மேலும் ஒய்வெடுத்துக் கொண்டபின், ஆஸீனம்- அமர்ந்ததும்: ஸுகம் ஆஸனே-சுகமான ஓராசனத்தில்; ப்ரஸ்ரய–ஆவனத: — இயல்பாகவே சாந்தமும், அடக்கமும் கொண்ட; ராஜா– யுதிஷ்டிர மகாரஜன்; ப்ராஹ–பேசத் துவங்கினார்; தேஷாம் ச– மேலும் அவர்களால்; ஸ்ருண்வதாம்– கேட்கப்பட்டது.

விதுரர் விருதுண்டு, போதுமான ஓய்வு எடுத்துக் கொண்டபின், சுகமாக ஆசனத்தில் அமர்ந்திருந்தார். பிறகு அரசர் அவரிடம் பேசத் துவங்கினார். அங்கு கூடியிருந்தவர்களும் அவர் பேசுவதைக் கேட்டனர்.

பதம் 1.13.8
யுதிஷ்டிர உவாச
அபி ஸ்மரத தோ யுஷ்மத்-பக்ஷ– ச்சாய-ஸமேதிதான்
விபத்–கணாத் விஷக்ன்யாதேர் மோசிதா யத் ஸமாத்ருகா:

யுதிஷ்டிர உவாச–யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்; அபி ஸ்மாத—தங்களுக்கு நினைவிருக்கிறதா; ந—எங்களை; யுஷ்மத்– உங்களிடமிருந்து: பக்ஷ- ஒரு பறவையின் சிறகுகளைப் போல் எங்களிடம் பாரபட்சம் கொண்ட: சாயா-பாதுகாப்பு: ஸமேதிதான் –உங்களால் வளர்க்கப்பட்ட நாங்கள்; விபத்கணாத்–பல்வேறு விபத்துக்களில் இருந்து; விஷ–விஷம் கொடுப்பதாலும்; அக்னி ஆதே–தீ வைப்பதாலும்; மோசிதா—விடுவித்தீர்கள்; யத்—என்ன காரியம் செய்தீர்கள்; ஸ்மாத்ருகா: — எங்கள் தாயாருடன்.

யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்: சிற்றப்பா, நீங்கள் எப்படி எங்களையும் எங்கள் தாயாரையும் எல்லா வகையான பேராபத்துக்களில் இருந்து பாதுகாத்து வந்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்களுடைய பாராபட்சம், ஒரு பறவையின் இறகுகளைப் போல், கொடிய விஷத்திலிருந்தும், அநியாயமான தீ விபத்திலிருந்தும் எங்களைக் காப்பாற்றியது.

பதம் 1.13.9
கயா வ்ருத்யா வர்திதம் வஸ் சரத்பி: க்ஷிதி மண்டலம்
தீர்தானி க்ஷேத்ர-முக்யானி ஸேவிதானீஹ பூதலே

கயா-எந்த: வ்ருத்யா-வழிகளில்; வர்திதம்-வாழ்க்கைத் தேவைகளை கவனித்துக் கொண்டீர்கள்; வ:–மேன்மைக்குரியதாங்கள்; சரத்பி:-யாத்திரையின் போது; க்ஷிதி மண்டலம்–பூமி மீது; தீர்தானி– புனித யாத்திரை ஸ்தலங்கள்; க்ஷேத்ரமுக்யானி-முக்கிய க்ஷேத்திரங்கள்: ஸேவிதானீ – உங்களால் சேவிக்கப்பட்ட; இஹ – இவ்வுலகில்; பூதலே-இக்கிரகத்தின் மீது;

பூமி மீது பிரயாணம் செய்யும்பொழுது, உங்களுடைய வாழ்க்கைத் தேவைகளை எப்படி நீங்கள் கவனித்துக் கொண்டீர்கள்? எந்தெந்த புண்ணிய ஸ்தலங்களிலும், புனித இடங்களிலும் நீங்கள் சேவை செய்தீர்கள்?

பதம் 1.13.10
பவத்-விதா பாகவதாஸ் தீர்த-பூதா: ஸ்வயம் விபோ
தீர்தீ-குர்வந்தி தீர்தானி ஸ்வாந்த-ஸ்தேன கதாப்ருதா

பவத்-மேன்மை பொருந்திய தாங்கள்; விதா—போல்; பாகவதா –பக்தர்கள்; தீர்த-புண்ணிய தீர்த்தங்கள்; பூதா: – மாற்றப்படுகின்றன. ஸ்வயம்—உங்களைப் பொறுத்தவரை; விபோ-சக்தி படைத்தவரே; தீர்தீ-குர்வந்தி-புண்ணிய தீர்த்தமாக மாற்றுகிறீர்கள்; தீர்தானி-புண்ணிய ஸ்தலங்கள்: ஸ்வ-அந்த-ஸ்தேன-இதயத்தில் இருப்பதால்; கதா-ப்ருதா—பரம புருஷ பகவான்.

என் பெருமானே, தங்களைப் போன்ற மேன்மையுள்ள பக்தர்கள் புண்ணிய ஸ்தலங்களே சொரூபமாக விளங்குகின்றனர். பரம புருஷரை உங்களது இதயத்தில் ஏந்திச் செல்வதால் எல்லா இடங்களையும் தாங்கள், புண்ணிய தீர்த்தங்களாக மாற்றிவிடுகிறீர்கள்.

பதம் 1.13.11
அபி ந: ஸுஹ்ருதஸ் தாத பாந்தவா: க்ருஷ்ண-தேவதா:
த்ருஷ்டா: ஸ்ருதா வா யதவ: ஸ்வ-புர்யாம் ஸுகம் ஆஸதே

அபி-இருக்கிறார்களா; ந—நமது; ஸுஹ்ருத:–நலம் விரும்பிகள்; தாத–சிற்றப்பா; பாந்தவா:-நண்பர்கள்; கிருஷ்ண-தேவதா- எப்பொழுதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தொண்டில் ஆழ்ந்து கிடப்பவர்கள்; த்ருஷ்டா:—அவர்களைக் கண்டதன் மூலம்; ஸ்ருதா— அல்லது அவர்களைப் பற்றி கேள்விப்பட்டதன் மூலம்; வா-எப்படி: யதவ:—யது வம்சத்தினர்; ஸ்வ-புர்யாம்—அவர்களது வசிப்பிடங்களில்; ஸுகம் ஆஸதே—அவர்கள் சுகமாக இருக்கிறார்களா.

சிற்றப்பா, துவாரகைக்கு நீங்கள் நிச்சயமாக சென்றிருப்பிர் புனிதமான அந்த இடத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவையில் மெய்மறந்துள்ள நமது நண்பர்களும், நம் நலத்தில் அக்கறையுள்ளவர்களான யது வம்சத்தினரும் உள்ளனர். நீங்கள் அவர்களை கண்டிருக்கக்கூடும் அல்லது அவர்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கக்கூடும். அவர்களனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்களா?

பதம் 1.13.12
இதி உக்தோ தர்ம-ராஜேன ஸர்வம் தத் ஸமவர்ணயத்
யதானுபூதம் க்ரமசோ வினா யது-குல-க்ஷயம்

இதி-இவ்வாறாக; உக்த—கேட்கப்பட்டதால்; தர்ம-ராஜேன–யுதிஷ்டிர மகாராஜனால்; ஸர்வம்—எல்லா; தத்— அந்த: ஸமவர்ணயத்– முறையாக விளக்கினார்; யதா-அனுபூதம்—அவர் அனுபவித்ததைப் போல்; க்ரமச—ஒவ்வொன்றாக; வினா-இல்லாமல்; யது குல க்ஷயம்–யது வம்சத்தின் அழிவு.

யுதிஷ்டிர மகாராஜனால் இவ்வாறு கேள்விகள் கேட்கப்பட்ட விதுரர், தாம் அனுபவித்த அனைத்தையும் படிப்படியாக விளக்கினார். யது வம்சத்தின் அழிவைப் பற்றிய செய்தியை மட்டும் அவர் விளக்கவில்லை.

பதம் 1.13.13
நனு அப்ரியம் துர்விஷஹம் ந்ருணாம் ஸ்வயம் உபஸ்திதம்
நாவேதயத் ஸகருணோ துஹ்கிதான் த்ரஷ்டும் அக்ஷம:

நனு- உண்மையில்; அப்ரியம்-விரும்பத்தகாத: துர்விஷஹம்– சகிக்க முடியாத; ந்ருணாம்-மனித வர்க்கத்தின்: ஸ்வயம்– அதற்கே உரிய வழியில்; உபஸ்திதம்-தோற்றம்: ந-இல்லை; ஆவேதயத்-விவரித்தார்; ஸ-கருண:-கருணையுள்ள: துஹ்கிதான் துக்கப்படுவதை; த்ரஷ்டும்-காண; அக்ஷம:—முடியவில்லை.

கருணையுள்ளவரான மகாத்மா விதுரரால் எந்த சமயத்திலும் பாண்டவர்களின் துக்கத்தைக் கண்டு அதை சகித்துக்கொள்ள முடியவில்லை. எனவே துன்பங்கள் தானாகவே வருகின்றன என்பதால், விரும்பத்தகாததும், சகிக்க இயலாததுமான இச்சம்பவத்தை அவர் வெளிப்படுத்தவில்லை.

பதம் 1.13.14
கஞ்சித் காலம் அதாவாத்ஸீத் ஸத் க்ருதோ தேவவத் ஸுகம்
ப்ரா துர் ஜ்யேஷ்டஸ்ய ஸ்ரேயஸ் க்ருத் ஸர்வேஷாம் ஸுகம் ஆவஹன்

கஞ்சித் – சில நாட்கள்; காலம்– காலம்; அத-இவ்வாறாக அவாத்ஸீத்-வசித்தார்; ஸத்-க்ருத;-நன்குஉபசரிக்கப்பட்டு; தேவவத்– ஒரு தெய்வீக புருஷரைப் போலவே; ஸுகம்—சௌகரியங்கள்; ப்ராது— சகோதரரின் ; ஜ்யேஷ்டஸ்ய-மூத்தவரின்; ஸ்ரேய:-க்ருத்—அவருக்கு நன்மை செய்ய; ஸர்வேஷாம்- மற்றனைவரையும் ; ஸுகம்—மகிழ்ச்சி: ஆவஹன்—அதைச் சாந்தியமாக்கினார்.

இவ்வாறாக உறவினர்களால் ஒரு தெய்வீக புருஷரை போலவே உபசரிக்கப்பட்ட மகாத்மா விதுரர், அவரது தமையனின் மனோபாவத்தை சீர்படுத்தி மற்றனைவரையும் மகிழ்விப்பதற்காகவே குறிப்பிட்ட காலம்வரை அங்கேயே தங்கினார்.

பதம் 1.13.15
அபிப்ரத் அர்யமா தண்டம் யதாவத் அக-காரிஷு
யாவத் ததார சூத்ரத்வம் சாபாத் வர்ஷ–சதம் யம:

அபிப்ரத்—நிர்வகித்தார்; அர்யமா—அர்யமா; தண்டம்-தண்டனை; யதாவத்-அதற்குப் பொருத்தமான முறையில்: அககாரிஷு- செய்தவர்களுக்கு; யாவத்—அதுவரை; தகார்—ஏற்றிருந்த; சூத்ரத்வம்- ஒரு சூத்திரரின் பாகத்தை; சாபாத்-ஒரு சாபத்தால்;வர்ஷசதம்–நூறு ஆண்டு காலம்: யம- யாமராஜன்

மந்தவ்ய முனிவரால் சபிக்கப்பட்ட யமராஜன் ஒரு சூத்திரரின் பாகத்தை ஏற்றிருந்த காலம்வரை, பாவிகளைத் தண்டிக்கும் யமராஜனின் பதவியை அர்யமா ஏற்று நடத்தினார்.

பதம் 1.13.16
யுதிஷ்டிரோ லப்த-ராஜ்யோ த்ருஷ்ட்வா பௌத்ரம் குலன்-தரம்
ப்ராத்ருபிர் லோக-பாலாபைர் முமுதே பரயா ஸ்ரீயா

யுதிஷ்டிர:- யுதிஷ்டிரர்; லப்த-ராஜ்ய:-தகப்பன் வழிவந்த இராஜ்ஜியத்தை உடைமையாகக் கொண்டு; த்ருஷ்ட்வா—கண்டதன் மூலமாக; பௌத்ரம் – பேரன்; குலம்-தரம்—வம்சத்திற்கு ஏற்ற; ப்ராத்ருபி:- சகோதரர்களால்; லோக-பாலாபை-அனைவரும் நிர்வகிப்பதில் கைதேர்ந்தவர்கள்; முமுதே- வாழ்வை அனுபவித்தார்; பரயா-அசாதாரணமான; ஸ்ரீயா–செல்வம்.

இராஜ்ஜியத்தைக் கைப்பற்றியபின், அவரது உயர்ந்த பரம்பரை வழக்கத்தைத் தொடரக்கூடிய தகுதியுள்ள ஒரு பேரனைக் கண்ட யுதிஷ்டிர மகாராஜன் அமைதியாக ஆட்சி புரிந்தார். மேலும் பொதுமக்களை நன்கு நிர்வகிக்கக் கூடியவர்களான அவரது இளைய சகோதரர்களின் ஒத்துழைப்புடன் அவர் அசாதாரணமான ஐஸ்வர்யத்தை அனுபவித்து வந்தார்.

பதம் 1.13.17
ஏவம் க்ருஹேஷு ஸக்தானாம் ப்ரமத்தானாம் தத்–ஈஹயா
அத்யக்ராமத் அவிக் நாத: கால:-பரமதுஸ்தர:

ஏவம்— இவ்வாறாக; க்ருஹேஷு–குடும்ப விவகாரங்களில்; ஸக்தானாம்– அதிகமான பற்றுக் கொண்டவர்களின்; ப்ரமத்தானாம்— தீவிர பற்றுக் கொண்ட; தத்ஈஹயா—அத்தகைய சிந்தனைகளில் ஆழ்ந்து; ஆத்யக்ராமத்—கடந்தனர்; அவிக் ஞாத:-காண முடியாதபடி; கால: — நித்திய காலம்; பரம– பரமான; துஸ்தர:—வெல்ல முடியாத;

குடும்ப விவகாரங்களில் தீவிர பற்றுக் கொண்டு, அச்சிந்தனையிலேயே எப்பொழுதும் ஆழ்ந்திருப்பவர்களை, வெல்ல முடியாததான நித்திய காலம் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களை வென்றுவிடுகிறது.

பதம் 1.13.18
விதுரஸ் தத் அபிப்ரேத்ய த்ருதராஷ்ட்ரம் அபாஷத
ராஜன் நிர்கம்யதாம் சீக்ரம் பஸ்யேதம் பயம் ஆகதம்

விதுர–மகாத்மா விதூரர்; தத்-அந்த: அபிப்ரேத்யது-இதை நன்கறித்து; த்ருதராஷ்ட்ரம்- திருதராஷ்டிரரிடம்: அபாஷத-கூறினார்; ராஜன்–ஓ ராஜனே; நிர்கம்யதாம்–தயவுசெய்து உடனடியாக வெளியேறுங்கள்; சீக்ரம்—சீக்கிரமாக; பஸ்ய-நீங்களே பாருங்கள்; இதம்- இந்த : பயம்-பயம்: ஆகதம்—வந்துவிட்டது.

மகாத்மா விதுரர் இதையெல்லாம் அறிந்திருந்தார். எனவே அவர் திருதராஷ்டிரரைப் பார்த்து கூறினார்: அன்புள்ள அரசே இங்கிருந்து சீக்கிரமாக வெளியேறுங்கள். தாமதிக்க வேண்டாம். பயம் எப்படி உங்களைப் பற்றிக் கொண்டது என்பதை நீங்களே சற்று கவனித்துப் பாருங்கள்.

பதம் 1.13.19
ப்ரதிக்ரியா ந யஸ்யேஹ குதஸ்சித் கர்ஹிசித் ப்ரபோ
ஸ ஏஷ பகவான் கால: ஸர்வேஷாம் ந: ஸமாகத:

ப்ரதிக்ரியா-சரிப்படுத்த; ந – ஒருவரும் இல்லை; யஸ்ய—எதன்; இஸ-இந்த ஜடவுலகில்; குதஸ்சித்—எந்த வழியாலும்; கர்ஹிசித்- அல்லது யாராலும்; ப்ரபோ-ஓ பிரபு: ஸ—அந்த ; ஏஷ -நன்கு: பகவான் – பரம புருஷ பகவான்: கால:-நித்திய காலம்; ஸர்வேஷாம் ந-நம் அனைவரின்; ஸமாகத-அடைந்துள்ளது.

அச்சமூட்டும் இச்சூழ்நிலையை இந்த ஜடவுலகிலுள்ள ஒருவராலும் சரிப்படுத்த முடியாது. ஓ பிரபு, நம் அனைவரையும் நெருங்கியிருப்பவர் காலனாகிய பரம புருஷ பகவானேயாவார்.

பதம் 1.13.20
யேன சைவாபிபன்னோ ‘யம் ப்ராணை: ப்ரியதமைர் அபி
ஜன: ஸத்யோ வியுஜ்யேத கிம் உதான்யைர் தனாதிபி:

யேன-அத்தகைய காலத்தால் இழுக்கப்பட்டு; ச-மேலும்; ஏவ-நிச்சயமாக: அபிபன்ன:-கைப்பற்றப்பட்டு: அயம்—இந்த: ப்ரானனை- உயிருடன்: ப்ரிய-தமை:—அனைவருக்கும் மிகப்பிரியமானதாக இருக்கும்: அபி-என்றபோதிலும்; ஜன:-நபர்; ஸத்ய:-உடனே; வியுஜ்யேத–கைவிடுகிறான்: கிம்-உத-அன்யை—மற்ற பொருட்களைப் பற்றி என்னவென்று சொல்வது; தன ஆதிபி-தனம், மரியாதை, குழந்தைகள், நிலம் மற்றும் வீடு போன்ற.

பரம காலனின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் தங்களுக்கும் பிரியமான உயிரையே தியாகம் செய்ய வேண்டியுள்ளது. செல்வம், மரியாதை, குழந்தைகள், நிலம் மற்றும் இல்லம் போன்ற மற்ற பொருட்களைப் பற்றி என்னவென்று கூறுவது.

பதம் 1.13.21
பித்ரு-ப்ராத்ரு-ஸுஹ்ருத்-புத்ரா-ஹதாஸ் தே விகதம் வயம்
ஆத்மா ச ஜரயா க்ரஸ்த: பர-கேஹம் உபாஸஸே

பித்ரு-தந்தை; ப்ராத்ரு—சகோதரர்; ஸுஹ்ருத்—நண்பர்கள்: புத்ரா-புத்திரர்கள்; ஹதா-அனைவரும் இறந்துவிட்டனர்; தே- உங்களுடையது; விகதம்– கழித்துவிட்டீர்கள்: வயம்-வயதை; ஆத்மா-உடல்; ச–மேலும்; ஜரயா-முதுமையால்; க்ரஸ்த– பிடிக்கப்பட்டது; பரகேஹம்- வேறொருவரின் வீட்டில்; உபாஸஸே- நீங்கள் வாழ்கிறீர்கள்.

உங்களுடைய தந்தை, சகோதரர், நண்பர்கள் மற்றும் மகன்கள் ஆகிய அனைவரும் இறந்து விட்டனர். நீங்களும் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்து விட்டீர்கள். உங்களுடைய உடலும் முதுமை அடைந்துவிட்டது. மேலும் வேறொருவரின் வீட்டில் நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள்.

பதம் 1.13.22
அந்த: புரை வதிரோ மந்த-ப்ரக்ஞாஸ் ச ஸாம்பரதம்
விசீர்ண-தந்தோ மந்தாக்னி: ஸராக: கபம் உத்வஹன்

அந்த:- குருடர்; புரா-ஆரம்பத்திலிருந்தே; ஏவ-நிச்சயமாக; வதிர:-காதும் சரியாகக் கேட்கவில்லை; மந்த-ப்ரக்ஞா:-ஞாப சக்தியும் குறைந்துவிட்டது; ச-மேலும்: ஸாம்ப்ரதம்-சமீப காலத்தில், விசீர்ண—தளர்ந்து விட்ட; தந்த:-பற்கள்; மந்த-அக்னி:-கல்லீரலின் வேகம் குறைந்துவிட்டது; ஸ-ராக:-ஓசையுடன்; கபம்-இருமலால் அதிகமான சளியும்: உத்வஹன்-வெளிவருகிறது.

பிறப்பிலிருந்தே நீங்கள் குருடர், சமீப காலத்திலிருந்து உங்களுக்கு காதும் சரியாகக் கேட்கவில்லை. உங்களுடைய ஞாபக சக்தி குறைந்து விட்டதுடன் புத்தியும் தடுமாறுகிறது. உங்களுடைய பற்கள் தளர்ந்துவிட்டன. உங்களுடைய கல்லீரல் பாதிப்படைந்துள்ளது, மேலும் உங்களுக்கு இருமல், சளித்தொல்லையும் இருக்கிறது.

பதம் 1.13.23
அஹோ மஹீயஸி ஜந்தோர் ஜீவிதாசா யதா பவான்
பீமாபவர்ஜிதம் பிண்டம் ஆதத்தே க்ருஹ-பாலவத்

அஹோ- ஐயோ; மஹீயஸி–சக்தி வாய்ந்தவை; ஜந்தோ—ஜீவராசிகளின்; ஜீவித–ஆசா-உயிர்வாழும் ஆசை: யதா–எவ்வளவு அதிகம்: பவான்-நீங்கள்; பீம-பீமசேனரின்; அபவர்ஜிதம் – மிச்சம்; பிண்டம்—உணவுகள்; ஆதத்தே-உண்ணப்படுகிறது; க்ருஹ-பாலவத்–வீடு காக்கும் நாய் போல்.

ஐயோ, ஒரு ஜீவராசிக்கு உயிர் வாழும் ஆசை எவ்வளவு சக்தி வாய்ந்ததாக உள்ளது. அதனாலல்லவா நீர் ஒரு வீடு காக்கும் நாய் போல் வாழ்ந்து, பீமன் உண்ட மிச்ச உணவை ஏற்றுக் கொள்கிறீர்.

பதம் 1.13.24
அக்நிர் நிஸ்ருஷ்டோ தத்தஸ் ச கரோ தாராஸ் ச தூஷிதா:
ஹ்ருதம் க்ஷேத்ரம் தனம் யேஷாம் தத்-தத்தைர் அஸுபி: கியத்

அக்நி- தீ: நிஸ்ருஷ்ட:-வைத்தீர்; தத்த : -கொடுக்கப்பட்டது; ச—மேலும்; கர:-விஷம்: தாரா-மனைவியை; ச-மேலும்; தூஷிதா–அவமானப்படுத்தினீர்; ஹ்ருதம்-ஆக்ரமித்துக் கொண்டீர்; க்ஷேத்ரம்– இராஜ்ஜியத்தை: தனம்—தனத்தையும்: யேஷாம்– அவர்களுடைய; தத்–அவர்களின்; தத்தை- கொடுக்கப்பட்ட: அஸுபி:-உயிர்வாழ; கியத்–தேவையில்லை.

யாரை தீ வைத்தும், விஷம் கொடுத்தும் நீர் கொல்ல முயன்றீரோ,யாருடைய மனைவியை நீர் அவமானப்படுத்தினீரோ, யாருடைய செல்வத்தையும், இராஜ்ஜியத்தையும் நீர் ஆக்கிரமித்துக் கொண்டீரோ, அவர்களுடைய தயவில் வாழவேண்டிய இழிவான வாழ்வு இனி தேவையில்லை.

பதம் 1.13.25
தஸ்யாபி தவ தேஹோ ‘யம் க்ருபணஸ்ய ஜிஜீவிஷோ:
பரைதி அனிச்சதோ ஜீர்ணோ ஜரயா வாஸஸீ இவ

தஸ்ய-இதில்: அபி—என்றாலும்; தவ-உமது; தேஹ-தேகம்: அயம் – இந்த: க்ருபணஸ்ய-பேராசைக்காரனின்; ஜிஜீவிஷோ- வாழ விரும்பும் உமது: பரைதி-தேய்ந்து போய்விடும்; அநிச்சத:– விரும்பாவிட்டாலும்: ஜீர்ண-சீரழிந்த; ஜரயா-பழைய; வாஸஸீ — உடைகள்; இவ-போல்.

இறக்க மனமில்லாமல், மதிப்பையும், கௌரவத்தையும் தியாகம் செய்து வாழவும் நீர் தயாராக இருந்தபோதிலும், உம்முடைய இந்த உடல் பழைய உடையைப் போல் அழிந்தே தீரும்.

பதம் 1.13.26
கத-ஸ்வார்தம் இமம் தேஹம் விரக்தோ முக்த-பந்தன:
அவிக்ஞாத-கதிர் ஜஹ்யாத் ஸ வை தீர உதாஹ்ருத:

கத-ஸ்வ-அர்தம்-நன்கு உபயோகிக்கப்படாமல்; இமம்-இந்த; தேஹம் -ஜடவுடல்; விரக்த:- பாராபட்சமில்லாமல்; முக்த–விடுபட்டு; பந்தன:–எல்லா கடமைகளிலிருந்தும்; அவிக்ஞாத-கதி:–அறிந்திராத இடம்; ஜஹ்யாத்-இவ்வுடலைக் கைவிட வேண்டும்; ஸ– அத்தகைய ஒருவன்; வை-நிச்சயமாக; தீர-தீரன்; உதாஹ்ருத:-என்று கூறப்படுகிறான்.

எல்லா கடமைகளிலிருந்தும் விடுபட்டு, யாருமறியாத ஓரிடத்திற்குச் சென்று, அங்கு ஜடவுடல் பயனற்றுப் போகும்போது அதைக் கைவிடுபவன் தீரன் எனப்படுகிறான்.

பதம் 1.13.27
ய: ஸ்வகாத் பரதோ வேஹ ஜாதநிர்வேத ஆத்மவான்
ஹ்ருதி க்ருத்வா ஹரிம் கேஹாத் ப்ரவ்ரஜேத் ஸ நரோத்தம:

ய:-யாரொருவர்; ஸ்வகாத்—சுயமாக விழிப்புறச் செய்து கொள்வதால்; பரத: வா- அல்லது பிறரிடமிருந்து கேட்பதால்; இஹ-இவ்வுலகில்; ஜாத-ஆகிறார்; நிர்வேத-ஜடப்பற்றில் சிரத்தையற்றவராக; ஆத்மவான்–உணர்வு; ஹ்ருதி—இதயத்திற்குள்; க்ருவா- எடுத்துக் கொள்ளப்பட்டு; ஹரீம்–பரம புருஷர்; கேஹாத்- வீட்டிலிருந்து: ப்ரவ்ரஜேத்- வெளியேறிவிடுகிறார்; ஸ—அவர்; நர உத்தம-முதல் தரமான மனிதனாவான்.

எவன் தானாகவோ பிறர் உபதேசத்தாலோ இந்த ஜடவுலக இன்பத்தையும், நிலையற்ற தன்மையையும் அறிந்து, இதயத்தில் வாழும் பாம புருஷரிடம் முழு நம்பிக்கைக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறுகிறானோ அவன் முதல் தரமான மனிதனாவான்.

பதம் 1.13.28
அதோதீசீம் திசம் யா து ஸ்வைர் அஞ்ஞாத-கதிர் பவான்
இதோ ‘ர்வாக் ப்ராயச: கால: பும்ஸாம் குண-விகர்ஷண:

அத- எனவே; உதீசீம் — வடக்கு: திசம்-திசை; யாது-சென்று விடுங்கள்; ஸ்வை:—உமது உறவினர்களால்; அஞ்ஞாத- தெரியாமல்; கதி:—அசைவுகள்; பவாள்—உங்களின்; இத:-இதன் பிறகு ; அர்வார்- வழிகாட்டுவேன்; ப்ராயா:-பொதுவாக; கால-காலம்: பும்ஸாம்- மக்களின்; குண-குணங்கள்; விகர்ஷண:-குறைந்து போகும்.

எனவே, மக்களின் நற்குணங்களை குறைத்துவிடப் போகும் அக்காலம் விரைவில் வரப் போகிறது என்பதால், உறவினர்களுக்கு அறிவிக்காமல், தயவுசெய்து உடனே வடக்கு நோக்கிப் புறப்படுங்கள்.

பதம் 1.13.29
ஏவம் ராஜா விதுரேணானு ஜேன
ப்ரக்ஞா- சக்ஷுர் போதித ஆஜமீட:
சித்வா ஸ்வேஷு ஸ்னேஹ-பாசான் த்ரடிம்னோ
நிஸ்சக்ராம ப்ராத்ரு-ஸந்தர்சிதாத்வா

ஏவம்- இவ்வாறாக; ராஜா-திருதிராஷ்டிர மகாராஜன்; விதுரேண- அனுஜேன-அவரது தம்பியான விதுரரால்; ப்ரக்ஞ-தற்சோதனை அறிவு; சக்ஷு- கண்கள்; போதித-புரிந்துகொண்டதால்;ஆஜமீட- குலத் தோன்றலான திருதராஷ்டிரர்: சித்வா-துண்டிப்பதன் மூலமாக: ஸ்வேஷு -உறவினர்கள் சம்பந்தமான; ஸ்நேஹ- பாசான்-உறுதியான கிநேக பாசத்தை; த்ரடிம்ன:–தளராத நிலையினால்: நிஸ்சக்ராம- வெளியேறினார்; ப்ராத்ரு-அவரது சகோதரரால்; ஸந்தர்சித வழிகாட்டப்பட்டு : அத்வா-முக்திக்கான வழி.

இவ்வாறாக அஜமீட குலத்தில் பிறந்த திருதராஷ்டிர மகாராஜன், தற்சோதனை அறிவின் (ப்ரக்ஞா) மூலமாக உறுதியான நம்பிக்கை வரப் பெற்றவராய், தனது பின்வாங்காத மன உறுதியால், திடமான குடும்பப்பற்றை உடனே களைந்தெறிந்தார். இவ்வாறாக தம்பி விதுரரின் உத்தரவுப்படி முக்திப் பாதையை ஏற்பதற்காக அவர் உடனே வீட்டை விட்டு வெளியேறினார்.

பதம் 1.13.30
பதிம் ப்ரயாந்தம் ஸுபலஸ்ய புத்ரீ
பதி-வ்ரதா சானுஜகாம ஸாத்வீ
ஹிமாலயம் ஞஸ்த-தண்ட-ப்ரஹர்ஷம்
மனஸ்வினாம் இவ ஸத் ஸம்ப்ரஹார:

பதிம்- அவளது கணவன்; ப்ரயாந்தம்- வீட்டை விட்டு வெளியேறும்பொழுது; ஸுபலஸ்ய-சுபல ராஜனின்; புத்ரீ-தகுதியுள்ள மகள்; பதி-வ்ரதா—பதிவிரதை; ச-மேலும்; அனுஜகாம- பின்தொடர்ந்தாள்; ஸாத்வீ-சிறந்த குணவதி; ஹிமாலயம்- இமயமலையை நோக்கி: ஞஸ்த-தண்ட-துறவியின் தண்டத்தை ஏற்றவர்; ப்ரஹர்ஷம்-மகிழ்ச்சிக்குரிய பொருள்; மனஸ்வினாம்- சிறந்த வீரர்களின்; இவ-போல்; ஸத்-நியாயமான; ஸம்ப்ரஹார-நல்ல சவுக்கடி.

கந்தஹர் (அல்லது காந்தார்) தேசத்து சுபல ராஜனின் மகளும், சிறந்த குணவதியும், பதிவிரதையுமான காந்தாரி, தம் கணவர் இமயமலையை நோக்கிச் செல்வதைக் கண்டு அவரைப் பின்தொடர்ந்தாள். வீரர்களுக்கு சூரர்களான எதிரிகளின் சாட்டையடி எப்படி மகிழ்ச்சியளிக்குமோ, அப்படி துறவு வாழ்வை ஏற்றவர்களுக்கு இமாலயம் மகிழ்ச்சியை அளிக்கும்.

பதம் 1.13.31
அஜாத- சத்ரு: க்ருத-மைத்ரோ ஹுதாக்னிர்
விப்ரான் நத்வா தில-கோ-பூமி-ருக்மை:
க்ருஹம் ப்ரவிஷ்டோ குரு-வந்தனாய
ந சாபஸ்யத் பிதரௌ ஸௌபலீம் ச

அஜாத -பிறக்காத: சத்ரு: எதிரி: க்ருத- நிறைவேற்றியபின்: மைத்ர- தேவர்களின் வழிபாட்டை: ஹுத-அக்னி- அக்னியில் நெய் வார்த்து; விப்ரா ன் -பிராமணர்களை; நத்வா-வணங்கி; தில-கோ-பூமி -ருக்மை- தானியங்கள். பசுக்கள், நிலம் மற்றும் ஆகியவற்றுடன்: க்ருஹம்- மாளிகைக்குள்; ப்ரவிஷ்ட— பிரவேசித்தபின்: குரு-வந்தனாய-முதியோரை வணங்க; ந-இல்லை; உ-மேலும்; அபஸ்யத்- காணப்பட: பிதரென்-அவரது மூத்த இளைய தந்தையர்களையும்: இளையலிம்—காந்தாரியையும்: பிதரெள-அவரது மூத்த, இளைய தந்தையர்களையும்: ஸௌபலீம்-காந்தாரியையும்; ச-கூட.

எதிரியே இல்லாத யுதிஷ்டிர மகாராஜன், சூரிய தேவனை வணங்கி, பிராமணர்களுக்கு தானியங்கள், பசுக்கள், நிலம் மற்றும் தங்கம் ஆகியவற்றை அளித்து அவர்களை வணங்கி, சந்தியாவந்தனத்தையும், கொண்டபின், அக்னி ஹோத்திரத்தையும் முடித்துக் வயது முதிர்ந்தவர்களை வணங்குவதற்காக அரண்மனைக்குள் பிரவேசித்தார். ஆனால் அவரது மூத்த, இளைய தந்தையர்களையும், சுபல ராஜனின் மகளான அவரது பெரியம்மாவையும் அங்கு காணவில்லை.

பதம் 1.13.32
தத்ர ஸஞ்சயம் ஆஸீனம் பப்ரச்சோத்விக்ன-மானஸ:
காவல்கணே க்வ நஸ் தாதோ வ்ருத்தோ ஹீனஸ் ச நேத்ரயோ:

தத்ர—அங்கு: ஸஞ்சயம்-சஞ்சயனிடம்: ஆஸீனம்—அமர்ந்திருந்த; பப்ரச்ச- அவர் வினவினார்; உத்விக்னமானஸ:—கவலையுடன்; காவல்கணே-கவல்கணரின் மகனான சஞ்சயன்; க்வ— எங்கே; த- நமது; தாத:-பெரியப்பன்; வ்ருத்த:-வயது முதிர்ந்த; ஹீனச- இல்லாதவரும்; நேத்ரயோ:-கண்கள்.

யுதிஷ்டிர மகாராஜன், அங்கு அமர்ந்திருந்த சஞ்சயனை நோக்கித் திரும்பி, கவலையுடன் வினவினார்: ஓ சஞ்சயா, வயது முதிர்ந்தவரும், குருடருமான நம் பெரியப்பா எங்கே?

பதம் 1.13.33
அம்பா ச ஹத-புத்ரார்தா பித்ருவ்ய: க்வ கத ஸுஹ்ருத்
அபி மய் அக்ருத- ப்ரக்ஞே ஹத- பந்து ஸ பார்யயா
ஆசம்ஸமான: சமலம் கங்காயாம் துஹ்கிதோ ‘பதத்

அம்பா- பெரியம்மா; ச-மற்றும்; ஹத-புத்ரா-எல்லா இழந்துவிட்டவளான; ஆர்தா—வருத்தத்துடன்; கத:-சென்றனர்; ஸுஹ்ருத்- நலம்விரும்பியான; அபி—அல்லது: மயி-என்னிடம்: அக்ருத ப்ரக்ஞே-மனதிற்குப் பிடிக்காத; ஹத- பந்து-எல்லா மகன்களையும் இழந்து விட்டவரான; ஸ—திருதராஷ்டிரர்; பார்யயா—அவரது மனைவியுடன்; ஆசம்ஸமான:-சந்தேகத்துடன்; சமலம்—குற்றங்கள்: கங்காயாம்-கங்கை நீரில்; துஹ் கித:-மனக் கவலையுடன்; அபதத்— விழுந்து விட்டனர்.

என் நலனில் அக்கறை கொண்டிருந்த சிற்றப்பா விதுரரும், மகன்களின் மரணத்தால் பெருந்துன்பத்திற்கு உள்ளாகியிருந்த பெரியம்மா காந்தாரியும் எங்கே? என் பெரியப்பாவான திருதராஷ்டிரர், அவரது எல்லா மகன்களும், பேரன்களும் மரணமடைந்ததால் அதிக வருத்தத்திற்கு உள்ளாகி இருந்தார். நான் மனதிற்குப் பிடிக்காதவன் ஆகிவிட்டேன் என்பதில் சந்தேகமில்லை. எனவே என் குற்றங்களைப் பெரிதாக எடுத்துக் கொண்டு, மனைவியுடன் அவரும் கங்கையில் மூழ்கினாரா?

பதம் 1.13.34
பிதரி உபரதே பாண்டௌ ஸர்வான் ந: ஸுஹ்ருத: சிசூன்
அரக்ஷதாம் வ்யஸனத: பித்ருவ்யெள க்வ கதாவ் இத:

பிதரி- என் தந்தை; உபரதே-இறந்ததும்: பாண்டௌ-பாண்டு மகாராஜன்; ஸர்வான்—அனைவரும்; ந:நாங்கள்: ஸுஹ்ருத:-நலம் விரும்பிகள்; சிசூன்-சிறு குழந்தைகள்: அரக்ஷதாம்—காப்பாற்றினர்; வ்யஸனத- எல்லா வகையான ஆபத்துகளிலிருந்தும்; பித்ருவ்யௌ- தந்தையர்; க்வ- எங்கே; கதௌ-கிளம்பிச் சென்றனர்; இத- இங்கிருந்து.

தந்தை பாண்டு இறந்தபொழுது, நாங்கள் அனைவரும் சிறு குழந்தைகளாக இருந்தோம். இவ்விரு தந்தையரும் எல்லா துன்பங்களிலிருந்தும் எங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் எப்பொழுதும் எங்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தனர். ஐயோ, அவர்கள் எங்கே சென்று விட்டனர்!

பதம் 1.13.35
சூத உவாச
க்ருபயா ஸ்நேஹ-வைக்லவ்யாத் ஸூதோ விரஹ-கர்சித:
ஆத்மேஸ்வரம் அசக்ஷணோ ந ப்ரதியாஹாதி பீடித:

சூதஉவாச-சூத கோஸ்வாமி கூறினார்; க்ருபயா-இரக்கத்தின் காரணத்தால், ஸ்நேஹ-வைக்லவ்யாத்—ஆழ்ந்த அன்பினால் ஏற்படும் மனக் கலவரம்; ஸூதே:சஞ்சயன்; விரஹ-கர்ரித:-பிரிவினால் துன்பப்பட்டார்; ஆத்மேஸ்வரன்—அவரது தலைவர்; அசக்ஷாண: காணாததால்; ந-இல்லை; ப்ரத்யாஹு பதிலளித்தார்; அதி-பீடித: பெருந்துன்பத்தினால் பீடிக்கப்பட்டு.

சூத கோஸ்வாமி கூறினார்; தன் தலைவராகிய திருதராஷ்டிரரைக் காணாததால் இரக்கமும், மனக் குழப்பமும் அடைந்த சஞ்சயன் துன்பத்திற்குள்ளானார். மேலும் யுதிஷ்டிர மகாராஜனுக்கு அவரால் தகுந்த பதிலையும் கூற இயலவில்லை.

பதம் 1.13.36
விம்ருஜ்யாஸ்ருணி பாணிப்யாம் விஷ்டப்யாத்மானம் ஆத்மனா
அஜாத-சத்ரும் பிரத்யூசே ப்ரத்யூசே ப்ரபோ: பாதாவ் அனுஸ்மரன்

விம்ருஜ்ய-துடைத்துக் கொண்டு; அஸ்ருணி- கண்ணீரை; பாணிப்யாம்- அவரது கரங்களால்; விஷ்டப்ப- நிறுத்தினர்; ஆத்மானம்- மனதை: ஆத்மனா- புத்தியால்; அஜாத சத்ரும்-யுதிஷ்டிர மகாராஜனிடம்;ப்ரத்யூசே- பதிலளிக்கத்துவங்கினார்; ப்ரபோ தலைவரின்; யாதெள பாதங்களை: அனுஸ்மரன்-சிந்தித்தபின்,

தம் முதலில் மெதுவாக புத்தியல் சமதானப்படுத்தினார். பிறகு கண்ணீரை துடைத்துக் கொண்டு, தலைவரான இருதாாஷ்டிரின் பாதங்களை சிந்தித்தவாறு, மகாரஜனுக்கு பதிலளிக்கத் துவங்கினார்.

பதம் 1.13.37
சஞ்சய உவாச
நாஹம் வேத வ்ய-வஸிதம் பித்ரோர் வ: குலநந்தன
காந்தார்யாவா மஹா-பாஹோ முஷிதோ ‘ஸ்மி மஹாத்மபி

ஸஞ்சய உவாச-சஞ்சயன் கூறினார்; ந-இல்லை: அஹம்_ நான்: வேத-அறிய; வ்யவஸிதம் தீர்மானம்; பித்ரோ:-உங்கள் தந்தையரின்: வ:-உங்கள்: குல-நந்தன.-குரு காந்தார்யா-காந்தாரியின்; வா—அல்லது; அரசரே; முஷித:- ஏமாற்றப்பட்டேன்; ஆத்மபி_அச்சிறந்த ஆத்மாக்களால். வம்சத்தவரே; மஹா-பாஹோ—சிறந்த அஸ்மி- நான்; மஹா ஆத்மபி_அச்சிறந்த ஆத்மாக்களால்.

சஞ்சயன் கூறினார்: எனதன்புள்ள குரு வம்சத்தவரே, உங்களுடைய இரு தந்தையர் மற்றும் காந்தாரி ஆகியோரின் நோக்கத்தைப் பற்றி எனக்கொன்றும் தெரியாது. அரசே, அச்சிறந்த ஆத்மாக்களால் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன்.

பதம் 1.13.38
அதாஜகாம பகவான் நாரத: ஸஹ-தும்புரு:
ப்ரத்யுத்தாயாபிவாத்யாஹ ஸானுஜோ ‘ப்யர்சயன் முனிம்

அத – அதன் பிறகு ; ஆஜகாம-வந்து சேர்ந்தார்; பகவான்- தெய்வீக் புருஷரான; நாரத:-நாரதர்; ஸஹ-தும்புரு-அவரது தம்புராவுடன்: ப்ரத்யுத்தாய-தங்கள் ஆசனங்களிலிருந்து எழுந்து; அபிவாத்ய- தகுந்தவாறு வணங்கினர்: ஆஹ-கூறினார்;ஸ-அனுஜ-தம்பிகளுடன்; அப்யர்சயன்—இவ்வாறு சரியான மனநிலையுடன் வரவேற்கும்பொழுது; முனிம்- முனிவரை.

சஞ்சயன் இவ்வாறு பேசிக் கொண்டு இருக்கும்பொழுது, பகவானின் தூய பக்தரான ஸ்ரீ நாரதர், அவரது தம்புராவுடன் அங்கு எழுந்தருளினார். யுதிஷ்டிர மகாராஜனும் அவரது சகோதரர்களும் ஆசனங்களிலிருந்து எழுந்து, வணங்கி, அவரை முறையாக வரவேற்றனர்.

பதம் 1.13.39
யுதிஷ்டிர உவாச
நாஹம் வேத கதிம் பித்ரோர் பகவான் க்வ கதாவ் இத:
அம்பா வா ஹத-புத்ரார்த க்வ கதா ச தபஸ்வினீ

யுதிஷ்டிர உவாச- யுதிஷ்டிரமகாராஜன் கூறினார்; -இல்லை; அஹம்- எனக்கு; வேத- அது தெரியும்; கதிம்-சென்றது; பித்ரோ- தந்தையரின்; பகவான்-தெய்வீக புருஷரே; க்வ- எங்கே; கதௌ- சென்றனரோ; இத-இங்கிருந்து; அம்பா-பெரியன்னை; வா- அல்லது: ஹதபுத்ரச-மகன்களை இழந்து; ஆர்தா-துயரப்படும்; க்வ- எங்கே; கதா-சென்றாளோ; ச-கூட: தபஸ்வினீ-தபஸ்வினி.

யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்: தெய்வீக புருஷரே, எனது இரு தந்தையரும் எங்கு சென்றனரோ தெரியவில்லை. எல்லா மகன்களையும் இழந்து தவிக்கும், தபஸ்வினியான என் பெரியன்னையையும் காண முடியவில்லை.

பதம் 1.13.40
கர்ண-தார இவாபாரே பகவான் பாரதர்சக
அதாபபாஷே பகவான் இமாமுனிவரான நாரதோ முனி-ஸத்தம:

கர்ண-தார—கப்பலோட்டி; இவ- போல்; அபாரே – பரந்த சமுத்திரங்களில்; பகவான்-பகவானின் பிரதிநிதி; பாரதர்சக: அக்கரைக்குச் செல்ல வழிகாட்டக்கூடியவர்; அத- இவ்வாறு; ஆப்பாஷே – கூறத் துவங்கினார்; பகவான்—தெய்வீக சக்தியுள்ளவர்; நாரத:- மாமுனிவரான நாரதர்; முனி-ஸத்-தம:-பக்தி வேதாந்திகளுள் மிகச்சிறந்தவரான.

தாங்கள் கரை காணாத சமுத்திரத்தைக் கடக்கும் கப்பலோட்டிபோல் விளங்குகிறீர்கள். உங்களால் எங்களைக் கரைசேர்க்க முடியும். இவ்வாறு வரவேற்கப்பட்ட, தெய்வீக புருஷரும், பக்திவேதாந்திகளில் மிகச்சிறந்தவருமான தேவரிஷி நாரதர், பேசத் துவங்கினார்.

பதம் 1.13.41
நாரத உவாச
மா கஞ்சன சுசோ ராஜன் யத் ஈஸ்வர-வசம் ஜகத்
லோகா: ஸபாலா யஸ்யேமே வஹந்தி பலிம் ஈசிது:
ஸ ஸம்யுனக்தி பூதானி ஸ ஏவ வியுனக்தி ச

நாரத உவாச-நாரதர் கூறினார்; மா-ஒருபோதும் வேண்டாம்; கஞ்சன- எல்லா வழிகளிலும்; சுச:- நீங்கள் கவலைப்பட; ராஜன்-ராஜனே; யத்—ஏனெனில்; ஈஸ்வர-வசம்- பரம புருஷரின் கட்டுப்பாட்டில்; ஜகத்-உலகமும்; லோகா:-எல்லா ஜீவராசிகளும்; ஸபாலா-அவர்களது தலைவர்கள் உட்பட; யஸ்ய-யாருடைய ; இமே-இவ்வெல்லா; வஹந்தி—பொறுத்துக் கொள்ளுங்கள்; பலிம்-வழிபட வேண்டும்; ஈசிது:-காப்பாற்றப்படுவதற்கு; ஸ-அவர்; ஸம்யுனக்தி—இணைக்கிறார்; பூதானி—எல்லா ஜீவராசிகளும்; ஸ-அவர்; ஏவ—தவிரவும்; வியுனக்தி—பிரிக்கிறார்; ச-மேலும்.

ஸ்ரீ நாரதர் கூறினார்: பக்தியுள்ள ராஜனே, அனைவரும் பரம புருஷரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், யாருக்காகவும் வருந்த வேண்டாம். ஆகவே எல்லா ஜீவராசிகளும், அவர்களது தலைவர்களும் நன்கு காப்பாற்றப்படுவதற்கு பகவானைத் தொடர்ந்து வழிபட வேண்டும். அவர்களை இணைப்பவரும், பிரிப்பவரும் அவரே.

பதம் 1.13.42
யதா காவோ நஸி ப்ரோதாஸ் தந்த்யாம் பத்தாஸ் ச தாமபி:
வாக்-தந்தியாம் நாமபிர் பத்தா வஹந்தி பலிம் ஈசிது:’

யதா-எப்படி; காவ:-பசு; நஸி-மூக்கினால்; ப்ரோதா-கட்டப்பட்டு; தந்த்யாம்—கயிற்றினால்; பத்தா:-பந்தித்து; ச-மேலும்; தாமபி:-கயிறுகளால்; வாக்-தந்த்யாம்-வேத மந்திரங்களின் வலையில்; நாமபி:-பெயர்களால்; பத்தா-பாதிக்கப்படுகின்றனர்; வஹந்தி—ஏற்கின்றனர்; பலிம்—கட்டளைகள்; ஈசிது:—பரம புருஷரால் ஆளப்படுவதற்கு.

ஒரு பசு கடிவாளத்தால் கட்டுப்படுத்தப்படுவதைப் போலவே, மனிதனும் வேதக் கட்டளைகளால் பிணைக்கப்பட்டு, பகவானின் உத்தரவுகளை மதித்து நடக்கும்படி கட்டுப்படுத்தப்படுகிறான்.

பதம் 1.13.43
யதா க்ரீடோபஸ்கராணாம் ஸம்யோக-விகமாவ் அஹ
இச்சயா க்ரீடிது: ஸ்யாதாம் ததை வேசேச்சயா ந்ருணாம்

யதா – அதைப் போலவே; க்ரீட-உபஸ்கராணாம்—விளையாட்டுப் பொருட்களை; ஸம்யோக-சேர்த்து; விகமௌ—பிரித்து; இஹ – இவ்வுலகில்; இச்சயா—விருப்பத்தால்; க்ரீடிது:-விளையாட்டாக; ஸ்யாதாம்-நிகழ்கிறது ; ததா—அவ்வாறே; ஏவ—நிச்சயமாக; ஈச-பரம் புருஷர்; இச்சயா-விருப்பத்தால்; ந்ருணாம்-மனிதர்களின்.

விளையாடுபவன், தன் சொந்த விருப்பப்படி விளையாட்டுப் பொருட்களை அடுக்கி அடுக்கி பிறகு கலைத்துவிடுகிறான். அவ்வாறே பகவானின் உன்னதமான விருப்பமும் மக்களை இணைத்து பிறகு பிரித்துவிடுகிறது.

பதம் 1.13.44
யன் மன்யஸே த்ருவம் லோகம் அத்ருவம் வா ந சோபயம்
ஸர்வதா ந ஹி சோச்யாஸ் தே ஸ்நேஹாத் அன்யத்ர மோஹஜாத்

யத்—என்றபோதிலும்; மன்யஸே-நீர் நினைக்கிறீர்; த்ருவம்-பரம் சத்தியம்; லோகம்—நபர்கள்; அத்ருவம்- உண்மையல்லாத; வா – எதுவானாலும் ; ந—இல்லை என்றாலும்; ச-மேலும்; உபயம்—அல்லது இரண்டுமாக; ஸர்வதா-எல்லாச் சூழ்நிலைகளிலும்; ந- ஒருபோதும் இல்லை; ஹி-நிச்சயமாக; சோச்யா:-துக்கத்திற்குக் காரணம்; தே- அவர்கள்; ஸ்நேஹாத்-பாசத்தினால்; அன்யத்ர—அல்லது வேறொரு முறையில் ; மேஹஜாத்- திகைப்பினால்.

ராஜனே, ஆத்மா நித்தியமானதென்றோ, அல்லது ஜடவுடல் அழியக்கூடியதென்றோ அல்லது அனைத்தும் அருவ பிரம்மத்தில் உள்ளன என்றோ, அல்லது அனைத்தும் ஜடம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் புரியாத சேர்க்கை என்றோ நீர் கருதினாலும் எல்லாச் சூழ்நிலைகளிலும், உமது பிரிவுணர்ச்சிக்குக் காரணம் பொய்யான பாசமேயன்றி வேறில்லை.

பதம் 1.13.45
தஸ்மாஜ் ஜஹி அங்க வைக்லவ்யம் அஞ்ஞான-க்ருதம் ஆத்மன:
கதம்து அநாதா: க்ருபணா வர்தேரம்ஸ் தே ச மாம் வினா

தஸ்மாத்- எனவே; ஜஹி-கைவிடுவீராக; அங்க-ராஜனே; வைக்லவ்யம்—மன
வேற்றுமை; அஞ்ஞான-அறியாமை; க்ருதம்— காரணத்தால்; ஆத்மன:-உமது;
கதம்- எப்படி; து—ஆனால்; க்ருபண:- பரிதாபகரமான ஜீவன்கள்; அனாதா: அனாதையாக; க்ருபண: வர்தேரன்—உயிர் வாழ முடியும்; தே-அவர்கள்; ச -மேலும்; மாம்- நான்: வினா—இல்லாமல்.

எனவே ஆத்மாவை அறியாததால் ஏற்பட்ட மனக் கவலையைவிடும் தீனமான அனாதைகளாகிவிட்ட அவர்கள் இப்பொழுது உமது துணையின்றி எப்படி வாழப்போகிறார்கள் என்று நீர் நினைக்கிறீர்.

பதம் 1.13.46
கால-கர்ம-குணாதீனோ தேஹோ ‘யம் பாஞ்ச-பெளதிக:
கதம் அன்யாம்ஸ் து கோபாயேத் ஸர்ப-க்ரஸ்தோ யதா பரம்

கால-நித்திய காலம்; கர்ம- செயல்; குண—இயற்கைக் குணங்கள்; அதீன:-கட்டுப்பாட்டின் கீழ்; தேஹ-பௌதிக உடல் மற்றும் மனம்; அயம்-இந்த; பாஞ்சபௌதிக:-பஞ்ச பூதங்களாலான; கதம்-எப்படி; அன்யான்—பிறருக்கு; து-ஆனால்; கோபாயேத்-பாதுகாப்பு அளிக்க முடியும்; ஸர்ப-க்ரஸ்த:-பாம்பால் கடிக்கப்பட்டவன்; யதா- அவ்வாறே; பரம்-மற்றவர்களை.

பஞ்ச பூதங்களாலான ஸ்தூலமான இந்த ஜடவுடல், காலம், கர்மா மற்றும் ஜட இயற்கைக் குணங்கள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே ஏற்கனவே பாம்பின் வாய்க்குள் அகப்பட்டுக் கொண்டுள்ள இதனால் எப்படி பிறரைக் காப்பாற்ற இயலும்?

பதம் 1.13.47
அஹஸ்தானி ஸஹஸ்தானாம் அபதானி ச துஷ்-பதாம்
ஃபல்கூனி தத்ர மஹதாம் ஜீவோ ஜீவஸ்ய ஜீவனம்

அஹஸ்தானி-கைகள் இல்லாதவைகள்; ஸ-ஹஸ்தானாம்— கைகளைப் பெற்றுள்ளவைகளின்; அபதானி-கால்கள் இல்லாதவைகள்; சது:-பதாம்—நான்கு கால்களைக் கொண்டவைகளின்; ஃபல்கூனி வலிமையற்றவைகள்; தத்ர—அங்கு; மஹதாம்—வலிமை உள்ளவர்களின்; ஜீவ:—ஜீவராசி; ஜீவஸ்ய—ஜீவராசியின்; ஜீவனம்—பிழைப்பு (உணவு)

கைகள் இல்லாதவை கைகள் உள்ளவைகளுக்கு இரையாகின்றன; கால்கள் இல்லாதவை நாலு கால் மிருகங்களுக்கு இரையாகின்றன. வலிமையற்றவை வலிமை உள்ளவைகளுக்கு இரையாகின்றன. எனவே ஒரு ஜீவன் மற்றொரு ஜீவனுக்கு உணவு என்பதே பொதுவான விதியாகும்.

பதம் 1.13.48
தத் இதம் பகவான் ராஜன் ஏக ஆத்மாத்மனாம் ஸ்வ-த்ருக்
அந்தரோ ‘நன்தரோ பாதி பஸ்ய தம் மாயயோருதா

தத்-எனவே ; இதம்—இத்தோற்றம்; பகவான்-பரம புருஷ பகவான்; ராஜன்-ராஜனே; ஏக-இரண்டற்ற ஒருவர்; ஆத்மா-பரமாத்மா; ஆத்மனம்—அவரது சக்திகளால்; ஸ்வ-த்ருக்—அவரைப் போன்ற குணமுடைய; அந்தர-இல்லாமல்; அனன்தர-புறமும், உள்ளும்; பாதி—அப்படித் தோன்றுகிறார்; பஸ்ய-காண வேண்டும்; தம்- அவரை மட்டுமே; மாயயா-வெவ்வேறு சக்திகளின் தோற்றங்களால்; உருதா- பலவாகத் தோன்றுகிறார்.

எனவே, அரசே இரண்டற்ற ஒருவரும், வெவ்வேறு சக்திகளின் வாயிலாக உள்ளும், புறமும் விளங்குபவருமான பரம புருஷரை மட்டுமே நோக்க வேண்டும்.

பதம் 1.13.49
ஸோ ‘யம் அத்ய மஹாராஜ பகவான் பூத-பாவன:
கால-ரூபோ ‘வதீர்ணோ ‘ஸ்யாம் அபாவாய ஸுர-த்விஷாம்

ஸ-அந்த பரம புருஷர்; அயம்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; அத்ய-தற்போது; மஹாராஜ-மகாராஜனே; பகவான்—பரம புருஷ பகவான்; பூதபாவன-சிருஷ்டிகர்த்தா; காலரூப:—அனைத்தையும் விழுங்கிவிடும் கால ரூபமாக; அவதீர்ண:-அவதரித்துள்ளார்; அஸ்யாம்-உலகில்; அபாவாய—துடைத்தொழிப்பதற்காக; ஸுரத்விஷாம்—பகவானின் விருப்பத்திற்கு எதிராக உள்ளவர்களை.

பரமபுருஷ பகவானாகிய ஸ்ரீகிருஷ்ணர், பொறாமை கொண்டவர்களை துடைத்தொழிப்பதற்காக, அனைத்தையும் விழுங்கிவிடும் கால ரூபமாக இப்பொழுது பூமியில் அவதரித்துள்ளார்.

பதம் 1.13.50
நிஷ்பாதிதம் தேவ-க்ருத்யம் அவசேஷம் ப்ரதீக்ஷதே
தாவத் யூயம் அவேக்ஷத்வம் பவேத் யாவத் இஹேஸ்வர:

நிஷ்பாதிதம்—நிறைவேற்றினார்; தேவ-க்ருத்யம்-தேவர்களின் சார்பாக செய்ய வேண்டியது என்ன உள்ளது; அவசேஷம்-மிச்சம்; ப்ரதீக்ஷதே—காத்திருந்து; தாவத்-அதுவரை; யூயம்—பாண்டவர்களான நீங்கள் அனைவரும்; அவேக்ஷத்வம்-நோக்கிக் காத்திருங்கள்; பவேத்-கூடும்; யாவத்-அதுவரை; இஹ-இவ்வுலகில்; ஈஸ்வர:-பரம் புருஷர்.

தேவர்களுக்கு உதவ வேண்டிய தம் கடமைகளை பகவான் ஏற்கனவே செய்து முடித்துவிட்டார். மிச்சத்துக்காக அவர் காத்திருக்கிறார். பகவான் இந்த பூமியில் உள்ளவரை பாண்டவர்களான நீங்களும் காத்திருங்கள்.

பதம் 1.13.51
த்ருதராஷ்ட்ர: ஸஹ ப்ராத்ரா காந்தார்யா ச ஸ்வ-பார்யயா
தக்ஷிணேன ஹிமவத ருஷீணாம் ஆஸ்ரமம் கத:

த்ருதராஷ்ட்ர: திருதராஷ்டிரர்; ஸஹ-உடன்; ப்ராத்ரா-அவரது சகோதரர் விதுரர்; காந்தார்யா-காந்தாரியும் கூட; ச-மேலும்; ஸ்வ பார்யயா -அவரது சொந்த மனைவியான; தக்ஷிணேன—தெற்குப்புறம்; ஹிமவத- இமயமலைகளின்; ருஷீணாம்-ரிஷிகளின்; ஆஸ்ரமம்-ஆஷ்ரமம்; கத:—அவர் சென்றுவிட்டார்.

ராஜனே, திருதராஷ்டிரர் அவரது தம்பி விதுரருடனும், மனைவி காந்தாரியுடனும், இமயமலையின் தென்பகுதியிலுள்ள பெரும் ரிஷிகளின் ஆஷ்ரமங்களை அடைந்துவிட்டார்.

பதம் 1.13.52
ஸ்ரோதோபி: ஸப்தபிர் யா வை ஸ்வர் துனீ ஸப்ததா வ்யதாத்
ஸப்தானாம் ப்ரீதயே நானா ஸப்த-ஸ்ரோத: ப்ரசக்ஷதே

ஸ்ரோதோபி:-நீரோட்டத்தால்; ஸப்தபி:- ஏழு பிரிவுகளாக; யா — நதி; வை-நிச்சயமாக; ஸ்வர்துனீ-புனித கங்கை; ஸ்ப்ததா-ஏழு கிளைகள்; வ்யதாத்—உண்டாக்கப்பட்டது; ஸப்தானாம்-ஏழின்; ப்ரீதயே-திருப்திக்காக; நானா—வெவ்வேறான; ஸப்த-ஸ்ரோத:-ஏழு ஊற்றுகள்; ப்ரசக்ஷதே—எனும் பெயரால் அழைக்கப்படுகிறது.

அந்த இடம் ஸப்தஸ்ரோத (“ஏழு பிரிவுகளைக் கொண்டது”) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அங்குள்ள கங்கை நதி ஏழு கிளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏழு பெரும் ரிஷிகளின் திருப்திக்காகவே இவ்வாறு செய்யப்பட்டது.

பதம் 1.13.53
ஸ்நாத்வானுஸவனம் தஸ்மின் ஹுத்வா சாக்னீன் யதா-விதி
அப்பக்ஷ உபசாந்தாத்மா ஸ ஆஸ்தே விகதைஷண:

ஸ்நாத்வா-குளிப்பதன் மூலமாக; அனுஸவனம்-மும்முறை (காலை, நண்பகல் மற்றும் மாலை); தஸ்மின்- ஏழு கிளைகளைக் கொண்ட அந்த கங்கையில்; ஹுத்வா—அக்னிஹோத்ர யாகத்தைச் செய்வதன் மூலமாக; ச-மேலும்; அக்னீன்—அக்னியில், யதாவிதி-சாஸ்திரவிதிகளின்படி; அப்பக்ஷ—நீரை மட்டுமே பருகுவதன் மூலம் உபவாசம் இருந்து; உபசாந்த-முற்றிலும் அடக்கினார்; ஆத்மா- ஸ்தூல புலன்களும், சூட்சும மனதும்; ஸ-திருதராஷ்டிரர்; ஆஸ்தே-நிலைபெற்றிருப்பார்; விகத-இல்லாமல்; ஏஷண- குடும்பத்தைப் பற்றிய எண்ணங்கள்.

இப்பொழுது திருதராஷ்டிரர், ஸப்தஸ்ரோத கரைகளில், தினமும் காலை, நடுப்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகள் குளிப்பதன் மூலமாகவும் அக்னிஹோதிர யாகத்தைச் செய்வதன் மூலமாகவும் மற்றும் நீரை மட்டுமே பருகுவதன் மூலமாகவும், அஷ்டாங்க யோகத்தைத் துவங்குவதில் ஈடுபட்டுள்ளார். இது மனதையும், புலன்களையும் அடக்க உதவி செய்வதுடன், குடும்பப் பாசத்தைப் பற்றிய எண்ணத்திலிருந்தும் ஒருவரை முழுமையாக விடுவிக்கிறது.

பதம் 1.13.54
ஜிதாஸனோ ஜித-ஸ்வாஸ: ப்ரத்யாஹ்ருத-ஷட்-இந்த்ரிய
ஹரி-பாவனயா-த்வஸ்த-ரஜ:-ஸத்வ-தமோ-மல:

ஜித-ஆஸ்ன – ஆசனத்தைக் கட்டுப்படுத்தியவர்: ஜித-ஸ்வாஸ:– சுவாசத்தைக் கட்டுப்படுத்தியவர்; ப்ரத்யாஹ்ருத-திருப்பி; ஷட்-ஆறு; இந்த்ரிய-புலன்கள்; ஹரி-பரம புருஷ பகவான்: பாவனாயா – அதிலாழ்ந்து; தீவஸ்த-வென்றவர்; ரஜ:-ராஜசம்; தம-தாமச; மல:-களங்கங்கள்.

ஆசனங்களையும் (யோக ஆசனங்கள்), சுவாச முறைகளையும் கட்டுப்படுத்தியவனால், புலன்களை பரம புருஷ பகவானை நோக்கித் திருப்பி, பௌதிகமான சத்வம், ரஜஸ், தமஸ் எனும் ஜட இயற்கைக் குணங்களின் களங்கங்களால் பாதிக்கப்படாமல் இருக்க முடியும்.

பதம் 1.13.55
விஞ்ஞானாத்மனி ஸம்யோஜ்ய க்ஷேத்ரக்ஞே பரவிலாப்ய தம்
ப்ரஹ்மணி ஆத்மானம் ஆதாரே கடாம்பரம் இவாம்பரே

விஞ்ஞான—தூய்மையடைந்த சொரூபம்; ஆத்மனி—புத்தியில்; ஸம்யோஜ்ய-பக்குவமாக நிலைப்படுத்தி; க்ஷேத்ரக்ஞே—ஜீவராசியின் விஷயத்தில்; ப்ரவிலாப்ய- ஐக்கியமாக; தம்—அவரை; ப்ரஹ்மணி-பரமனில்; ஆத்மானம் —தூய ஜீவராசி; ஆதாரே-ஆதார மூலத்தில்; கட-அம்பரம்-தடுப்புக்கு உட்பட்ட ஆகாயம்; இவ-போல் ; அம்பரே- ஆன்மீக வானில்.

அறிவின் உதவியால், ஒரு ஜீவராசியான தான் பரபிரம்மத்துடன் தன்மையில் ஒன்றானவர் என்ற அறிவுடன், அப்பரபிரம்மத்தில் திருதராஷ்டிரர் தமது தூய சொரூபத்தை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். மறைக்கப்பட்டுள்ள ஆகாயத்திலிருந்து விடுபட்டு, ஆன்மீக வானிற்கு அவர் உயர வேண்டும்.

பதம் 1.13.56
த்வஸ்த-மாயா-குணோதர்கோ நிருத்த-கரணாசய:
நிவர்திதா கிலாஹார ஆஸ்தே ஸ்தாணுர் இவாசல:
தஸ்யாந்தராயோ மைவாபூ: ஸன்யஸ்தாகில-கர்மண:

த்வஸ்த—அழிக்கப்பட்டபின்; மாயா-குண:-ஜட இயற்கைக் குணங்கள்; உதர்க—பின்விளைவுகள்; நிருத்த—நிறுத்தியபின்; கரணஆசய:-புலன்களும், மனமும்; நிவர்தித:-நின்றுவிட்டன; அகில-எல்லா; ஆஹார-புலன்களுக்கான ஆகாரங்கள்; ஆஸ்தே-அமர்ந்திருக்கிறார்; ஸ்தாணு:-அசையாத; இவ-போல்; அசல: உறுதியாக; தஸ்ய-அவரது; அந்தராய- தடைகள்; மாஏவ-ஒருபோதும் அப்படி இல்லை; அபூ:-இருக்கிறார்; ஸன்யஸ்த-துறந்தவராக; அகில- எல்லா வகையான; கர்மண:-பௌதிக கடமைகளையும்.

அவர் புலன்களின் எல்லா புறச்செயல்களையும் கூட நிறுத்தி, ஜட இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படாதவராகவும் இருக்க வேண்டியிருக்கும். எல்லா பௌதிக கடமைகளையும் துறந்தபின், இவ்வழியிலுள்ள தடைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக அவர் அசையாமல் நிலைபெற்றிருக்க வேண்டும்.

பதம் 1.13.57
ஸ வா அத்யதனாத் ராஜன் பரத: பஞ்சமே ‘ஹனி
கலேவரம் ஹாஸ்யதி ஸ்வம் தச் ச பஸ்மீபவிஷ்யதி

ஸ-அவர்; வா—சம்பவிக்கும் வாய்ப்பு; அத்ய—இன்றில்; தனாத்- இருந்து; ராஜன்—ராஜனே; பரத:-முன்னுள்ள; பஞ்சமே-ஐந்தாவது; அஹனி-நாள்; கலேவரம் – உடல்; ஹாஸ்யதி- விட்டுவிடுவார்; ஸ்வம்-அவரது சொந்த; தத் ச-அதுவும்; பஸ்மீ-சாம்பல்; பவிஷ்யதி- ஆகிவிடும்.

ராஜனே, அவர் இன்றிலிருந்து ஐந்தாம் நாளில் உடலை விட்டுவிடுவார். அது சாம்பலாகிப் போய்விடும்.

பதம் 1.13.58
தஹ்யமானே ‘க்னிபிர் தேஹே பத்யு: பத்னீ ஸஹோடஜே
பஹி: ஸ்திதா பதிம் ஸாத்வீ தம் அக்னிம் அனு வேக்ஷ்யதி

தஹ்யமானே-அது எரியும்பொழுது; அக்னிபி:-தீயால்; தேஹே- உடல்; பத்யு:-கணவரின்; பத்னீ—மனைவி; ஸஹஉடஜே- பர்ணசாலையுடன்; பஹி:-வெளியில்; ஸ்திதா-இருந்த; பதிம்-கணவரின்; ஸாத்வீ-பதிவிரதை; தம்-அந்த; அக்னிம்-தீ; அனு வேஷ்யதி- ஆழ்ந்த கவனத்துடன் நோக்கியவாறு அத்தீயினுள் பிரவேசிப்பாள்.

யோக சக்தியினால் உண்டாகும் தீயில், பர்ண சாலையுடன் தன் கணவரின் தேகம் எரிக்கப்படும் போது, வெளியிலிருந்து அதைக் கவனித்துக் கொண்டிருக்கும் பதிவிரதையான அவரது மனைவியும் ஆழ்ந்த கவனத்துடன் அத்தீயில் பிரவேசிக்கப் போகிறாள்.

பதம் 1.13.59
விதுரஸ் து தத் ஆஸ்சர்யம் நிசாம்ய குரு-நந்தன
ஹர்ஷ-சோக-யுதஸ் தஸ்மாத் கந்தா தீர்த-நிஷேவக:

விதுர:- விதுரரும் கூட; து-ஆனால்; தத்-அச்சம்பவத்தை; ஆஸ்சர்யம்—ஆச்சரியமான; நிசாம்ய-கண்டு; குருநந்தன-குரு நந்தனரே; ஹர்ஷ- மகிழ்ச்சி; சோக-துக்கம்; யுத:-பாதிப்படைந்து; தஸ்மாத்-அவ்விடத்திலிருந்து; கந்தா- சென்றுவிடுவார்; தீர்த-புண்ணிய யாத்திரைத் தலம்; நிஷேவக:- உற்சாகம் பெற.

விதுரர், அந்த ஆச்சரியத்தைக் கண்டு மகிழ்ச்சியும், துன்பமும் மேலிட, அப்புண்ணிய தீர்த்தத்திலிருந்து கிளம்பிச் சென்றுவிடுவார்.

பதம் 1.13.60
இதி உக்த்வாதாருஹத் ஸ்வர்கம் நாரத: ஸஹ-தும்புரு:
யுதிஷ்டிரோ வசஸ் தஸ்ய ஹ்ருதி க்ருத்வாஜஹாச் சுச:

இதி- இவ்வாறாக; உக்த்வா கூறியதும்; அத- அதன் பிறகு; ஆருஹத்-மேலே கிளம்பினார்; ஸ்வர்கம்—ஆகாயத்தில் நாரத:-மாமுனிவரான நாரதர்; ஸஹ-உடன்; தும்புரு:-அவரது தம்பிரா வாத்தியக் கருவி; யுதிஷ்டிர-யுதிஷ்டிர மகாராஜன்; வச:-உபதேசங்கள்; தஸ்ய-அவரது; ஹ்ருதி க்ருத்வா—இதயத்தில் நிறுத்தி; அஜஹாத் கைவிட்டார்; சுச:- எல்லா கவலைகளையும்.

இப்படி கூறிவிட்டு, மாமுனிவரான நாரதர் தமது வீணையுடன் ஆகாயத்தில் கிளம்பினார். யுதிஷ்டிரர் அவரது உபதேசத்தை உள்ளத்தில் நிறுத்தியதால், எல்லா கவலைகளையும் அவரால் போக்கிக்கொள்ள முடிந்தது.


ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “திருதராஷ்டிரரின் துறவு” எனும் தலைப்பைக் கொண்ட, பதின்மூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare