அத்தியாயம் – 18
முடிவு - துறவின் பக்குவம்
B.G 18.1 :
அர்ஜுனன் கூறினான்: பலம் பொருந்திய புயங்களை உடையவரே, தியாகம் மற்றும் சந்நியாசத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள நான் விரும்புகிறேன், கேசி அசுரனைக் கொன்றவரே, புலன்களின் அதிபதியே.

B.G 18.2 :
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: ஜட ஆசைகளை அடிப்படையாகக் கொண்ட செயல்களைத் துறத்தல், சந்நியாசம் என்று சான்றோர்களால் அழைக்கப்படுகின்றது. மேலும், எல்லாச் செயல்களின் பலன்களைத் துறப்பதை தியாகம் என்ற அறிஞர்கள் அழைக்கின்றனர்.

B.G 18.3 :
எல்லாவிதமான பலன்நோக்குச் செயல்களையும் தோஷமாக எண்ணி, அவற்றை துறக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் அறிவிக்கின்றனர்; இருப்பினும் யாகம், தானம், மற்றும் தவத்தின் செயல்களை என்றுமே கைவிடக் கூடாது என்று சில சாதுக்கள் கூறுகின்றனர்.

B.G 18.4 :
பாரதர்களில் சிறந்தவனே, தியாகத்தைப் பற்றிய எனது முடிவை தற்பொழுது கேள். மனிதர்களில் புலி போன்றவனே, சாஸ்திரங்களில் மூன்று விதமான தியாகம் அறிவிக்கப்பட்டுள்ளன.

B.G 18.5 :
யாகம், தானம், மற்றும் தவத்தின் செயல்களை என்றுமே துறக்கக் கூடாது; அவற்றை செய்ய வேண்டியது அவசியம். உண்மையில் யாகம், தானம், தவம் ஆகியவை மிகச்சிறந்த ஆத்மாக்களையும்கூட தூய்மைப்படுத்துகின்றன.

B.G 18.6 :
இத்தகு செயல்கள் அனைத்தும், பற்றுதலின்றி, எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் செய்யப்படவேண்டும். இவற்றை ஒரு கடமையாகச் செய்ய வேண்டும், பிருதாவின் மைந்தனே, இதுவே எனது முடிவான அபிப்பிராயம்.

B.G 18.7 :
விதிக்கப்பட்ட கடமைகளை என்றுமே துறக்கக் கூடாது. ஆனால், மயக்கத்தினால் ஒருவன் தன்னுடைய கடமைகளைத் துறந்தால், அத்தகு துறவு தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

B.G 18.8 :
தொல்லை நிறைந்தவை என்று கருதியோ, உடல் அசெளகரியத்திற்கான பயத்தினாலோ, விதிக்கப்பட்ட கடமைகளைத் துறப்பவன், ரஜோ குணத்தில் துறப்பதாக கூறப்படுகின்றது. அத்தகு செயல், துறவின் பலனை ஒருபோதும் வழங்க இயலாது.

B.G 18.9 :
ஓ, அர்ஜுனா, ஒருவன் தனது விதிக்கப்பட்ட கடமையை, செய்யப்பட வேண்டும் என்பதற்காகச் செய்து, பெளதிக சங்கத்தையும் பலனுக்கான பற்றுதலையும் முழுமையாக துறக்கும்போது, அவனது துறவு ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

B.G 18.10 :
ஸத்வ குணத்தில் நிலைபெற்றிருக்கும் புத்திசாலி துறவிகள், அமங்களமான செயல்களை வெறுப்பதில்லை, மங்களமான செயல்களில் பற்றுக் கொள்வதும் இல்லை, செயலைப் பற்றிய ஐயங்களும் அவர்களிடம் இல்லை.

B.G 18.11 :
உடலை உடையவன் எல்லாச் செயல்களையும் துறப்பது என்பது உண்மையில் அசாத்தியம். ஆனால் செயலின் பலன்களைத் துறப்பவன் உண்மையான துறவி என்று கூறப்படுகின்றான்.

B.G 18.12 :
இவ்வாறு தியாகம் செய்யாதவர்கள் தங்களது மரணத்திற்குப் பின், விரும்புவை, விரும்பாதவை, இரண்டும் கலந்தவை என மூன்று விதமான கர்ம விளைவுகளை சேகரித்துக் கொள்கின்றனர். ஆனால் அத்தகு இன்ப துன்பத்திற்கான பலன்கள் சந்நியாசிகளுக்குக் கிடையாது.

B.G 18.13 :
பலம் பொருந்திய புயங்களையுடைய அர்ஜுனா, செயல்கள் அனைத்தும் நிறைவேற்றுவதற்கு வேதாந்தத்தின்படி ஐந்து காரணங்கள் உள்ளன. அவற்றை தற்போது என்னிடமிருந்து அறிந்துகொள்.

B.G 18.14 :
செயலுக்கான இடம் (உடல்), செய்பவன், பல்வேறு புலன்கள், பலதரப்பட்ட முயற்சிகள், இறுதியாக பரமாத்மா—இவையே செயலுக்கான ஐந்து காரணங்களாகும்.

B.G 18.15 :
மனிதன் தன்னுடைய உடல், மனம், அல்லது வார்த்தைகளால், நல்லதோ கெட்டதோ, எந்தவொரு செயலைச் செய்தாலும் அதற்கு இந்த ஐந்தும் காரணங்களாகும்.

B.G 18.16 :
எனவே, இந்த ஐந்து காரணங்களைக் கருதாமல், தன்னை மட்டுமே செயலாற்றுபவனாகக் கருதுபவன் விஷயங்களை உள்ளபடி காண முடியாது, அவன் நிச்சயமாக அறிவுடையவன் அல்ல.

B.G 18.17 :
எவனுடைய நோக்கம் அஹங்காரமின்றி உள்ளதோ, எவனுடைய புத்தி பற்றுதலிலிருந்து விடுபட்டுள்ளதோ, அவன் இவ்வுலகிலுள்ள மனிதர்களைக் கொலை செய்தாலும் கொல்பவன் அல்ல. தனது செயல்களால் அவன் பந்தப்படுவதும் இல்லை.

B.G 18.18 :
அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் ஆகிய மூன்றும் செயலைத் தூண்டுபவை; புலன்கள், செயல், செய்பவன் ஆகிய மூன்றும் செயலை உண்டாக்குபவை.

B.G 18.19 :
ஜட இயற்கையின் மூன்று வேறுபட்ட குணங்களுக்கு ஏற்ப, அறிவு, செயல், செய்பவன் ஆகியவற்றிலும் மூன்று வகைகள் உள்ளன. தற்போது அவற்றை என்னிடமிருந்து கேட்பாயாக.

B.G 18.20 :
உயிர்வாழிகள் எண்ணற்ற உருவமாக பிரிக்கப்பட்டிருந்தாலும், அவர்களை பிரிக்கப்படாத ஆன்மீக இயற்கையாக, எந்த அறிவின் மூலம் ஒருவன் காண்கின்றானோ, அந்த அறிவு ஸத்வ குணத்தில் இருக்கும் அறிவாகும்.

B.G 18.21 :
எந்த அறிவின் மூலம், வெவ்வேறு உடல்களில் வெவ்வேறு விதமான உயிர்வாழிகள் இருப்பதாக ஒருவன் காண்கின்றானோ, அந்த அறிவு ரஜோ குணத்தில் இருப்பதாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

B.G 18.22 :
எந்த அறிவின் மூலம், உண்மையைப் பற்றிய அறிவின்றி, ஒரே விதமான செயலில் பற்றுதல் கொண்டு அதையே எல்லாமாக அறிகின்றானோ, அந்த அற்பமான அறிவு தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

B.G 18.23 :
எந்தவொரு செயல், ஒழங்குபடுத்தப்பட்டு, பற்றின்றி, விருப்பு வெறுப்பின்றி, பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படுகின்றதோ, அது ஸத்வ குணத்தின் செயல் எனப்படுகிறது.

B.G 18.24 :
ஆனால், எந்தவொரு செயல், ஆசைகளைத் திருப்தி செய்வதற்காக பெரும் முயற்சியுடனும் அஹங்காரத்துடனும் செய்யப்படுகின்றதோ, அந்தச் செயல் ரஜோ குணத்தின் செயல் என்று கூறப்படுகின்றது.

B.G 18.25 :
எந்தவொரு செயல், எதிர்கால பந்தத்தையும் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தையும் கருத்தில் கொள்ளாமல், சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து, மயக்கத்தில் செய்யப்படுகின்றதோ, அந்தச் செயல் தமோ குணத்தின் செயலாகக் கூறப்படுகின்றது.

B.G 18.26 :
எவனொருவன், இயற்கை குணங்களின் தொடர்பின்றி, அஹங்காரமின்றி, உற்சாகம் மற்றும் மனவுறுதியுடன், வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது தனது கடமைகளைச் செய்கின்றானோ, அத்தகு செயலாளி ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

B.G 18.27 :
எவனொருவன், தனது உழைப்பின் பலன்களில் பற்றுதல் கொண்டு, அந்த பலன்களை அனுபவிக்க விரும்பி, பேராசை கொண்டு, எப்போதும் பொறாமையுடன், தூய்மையின்றி, இன்ப துன்பங்களால் பாதிக்கப்படுகின்றானோ, அத்தகு செயலாளி ரஜோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

B.G 18.28 :
எவனொருவன், சாஸ்திர விதிகளுக்கு எதிரான செயலில் எப்போதும் ஈடுபட்டு, பெளதிகவாதியாக, பிடிவாதக்காரனாக, ஏமாற்றுபவனாக, பிறரை அவமதிப்பதில் நிபுணனாக, சோம்பேறியாக, எப்போதும் வருத்தம் தோய்ந்தவனாக, மற்றும் காலந்தாழ்த்துபவனாக உள்ளானோ, அத்தகு செயலாளி தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

B.G 18.29 :
செல்வத்தை வெல்வோனே, ஜட இயற்கையின் முக்குணங்களுக்கு ஏற்ப பலதரப்பட்ட புத்தியையும் உறுதியையும் பற்றி விவரமாக நான் தற்போது உனக்குக் கூறுவதைக் கேட்பாயாக.

B.G 18.30 :
பிருதாவின் மைந்தனே, செய்யத்தக்கது எது, செய்யத்தகாதது எது, பயப்படத்தக்கது எது, பயப்படத்தகாதது எது, பந்தப்படுத்துவது எது, விடுதலை செய்வது எது, ஆகியவற்றை அறியக்கூடிய புத்தி, ஸத்வ குணத்தில் இருப்பதாகும்.

B.G 18.31 :
பிருதாவின் மகனே, தர்மம், அதர்மம், செய்யத்தக்க செயல், செய்யத்தகாத செயல் இவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை அறிய இயலாத புத்தி, ரஜோ குணத்தில் இருக்கின்றது.

B.G 18.32 :
அறியாமை மற்றும் இருளின் மயக்கத்தின் கீழ், தர்மத்தை அதர்மமாகவும், அதர்மத்தை தர்மமாகவும் அறிந்து, எப்போதும் தவறான வழியில் முயற்சி செய்யும் புத்தி, பார்த்தனே, தமோ குணத்தில் இருப்பதாகும்.

B.G 18.33 :
பிருதாவின் மைந்தனே, உடைக்க முடியாததும், யோகப் பயிற்சியால் நிலையாக பாதுகாக்கப்படுவதும், மனம், வாழ்வு மற்றம் புலன்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதுமான மனவுறுதி ஸத்வ குணத்தைச் சார்ந்ததாகும்.

B.G 18.34 :
எந்த மனவுறுதியின் மூலம், ஒருவன், அறம், பொருள், மற்றும் இன்பத்தின் பலன்களின் மீது பற்றுதல் கொண்டுள்ளானோ, ஓ அர்ஜுனா, அத்தகு மனவுறுதி ரஜோ குணத்தைச் சார்ந்தது.

B.G 18.35 :
பிருதாவின் மைந்தனே, கனவு, பயம், கவலை, வருத்தம் தோய்ந்த நிலை, மயக்கம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டுச் செல்ல இயலாத, அறிவற்ற மனவுறுதி, தமோ குணத்தில் இருப்பதாகும்.

B.G 18.36 :
பாரதர்களில் சிறந்தவனே, மூன்று விதமான சுகத்தை அனுபவிக்கக்கூடிய கட்டுண்ட ஆத்மா, சில சமயங்களில் அதன் மூலம் துன்பத்தின் முடிவை அடைகின்றான். இவற்றைப் பற்றி தற்போது என்னிடமிருந்து கேட்பாயாக.

B.G 18.37 :
ஆரம்பத்தில் விஷத்தைப் போன்று இருந்தாலும் இறுதியில் அமிர்தத்தைப் போன்றதும், தன்னுணர்விற்கு ஒருவனை எழுப்புவதுமான சுகம், ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

B.G 18.38 :
எந்த சுகம், புலன்களும் புலனின்பப் பொருள்களும் தொடர்பு கொள்வதால் அடையப்படுகின்றதோ, ஆரம்பத்தில் அமிர்தம் போன்று தோன்றினாலும் இறுதியில் விஷமாகிவிடுகின்றதோ, அந்த சுகம், ரஜோ குணத்தின் தன்மையைக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.

B.G 18.39 :
தன்னுணர்வைக் காண இயலாத, ஆரம்பம் முதல் இறுதி வரை மயக்கமாக இருக்கின்ற, உறக்கம், சோம்பல், மற்றும் மாயையினால் வருகின்ற சுகம், தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

B.G 18.40 :
இவ்வுலகிலோ, உயர்லோகத்திலுள்ள தேவர்களின் மத்தியிலோ, ஜட இயற்கையிலிருந்து பிறந்த இந்த மூன்று குணங்களிலிருந்து விடுபட்டவர்கள் எவருமில்லை.

B.G 18.41 :
எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே, தங்களது சுபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்ற தன்மையின் அடிப்படையில், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் வேறுபடுத்தப்படுகின்றனர்.

B.G 18.42 :
அமைதி, சுயக்கட்டுப்பாடு, தவம், தூய்மை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, பகுத்தறிவு, ஆத்திகம் ஆகிய இயற்கையான தன்மைகளில் பிராமணர்கள் செயல்படுகின்றனர்.

B.G 18.43 :
சூரத்தனம், வலிமை, மனவுறுதி, வளமை, போரில் தைரியம், கொடை, ஆளும் தன்மை ஆகியவை சத்திரியர்களின் சுபாவத்திலிருந்து பிறந்த செயல்கள்.

B.G 18.44 :
விவசாயம், பசுக்களைப் பராமரித்தல், வியாபாரம் ஆகியவை வைசியர்களின் இயற்கையான செயல்கள். உழைப்பாளிகளான சூத்திரர்களின் சுபாவம் மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதாகும்.

B.G 18.45 :
தனது குணத்திற்குத் தகுந்த கடமைகளைப் பின்பற்றுவதால் ஒவ்வொரு மனிதனும் பக்குவமடைய முடியும். அதை எவ்வாறு செயலாற்றுவது என்பதை தற்போது என்னிடமிருந்து கேட்பாயாக.

B.G 18.46 :
யாரிடமிருந்து எல்லா உயிர்வாழிகளும் தோன்றினரோ, யார் எல்லா இடங்களிலும் பரவியுள்ளாரோ, அந்த இறைவனை தனது சொந்த கடமையைச் செய்வதால் வழிபட்டு மனிதன் பக்குவத்தை அடைய முடியும்.

B.G 18.47 :
மற்றவரது கடமையை ஏற்று அதனைப் பக்குவமாகச் செய்வதை விட, முறையாக செய்யாவிட்டாலும் தனது சொந்த கடமையில் ஈடுபட்டிருப்பதே சிறந்தது. ஒருவனது இயற்கைக்கு ஏற்ப விதிக்கப்பட்டுள்ள கடமைகள், பாவ விளைவுகளால் என்றும் பாதிக்கப்படுவதில்லை.

B.G 18.48 :
நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பதைப் போல, ஒவ்வொரு முயற்சியும் ஏதேனும் ஒரு தோஷத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே, குந்தியின் மகனே, முழுவதும் தோஷம் நிறைந்ததாக இருந்தாலும், தனது இயற்கையிலிருந்து தோன்றிய தொழிலை ஒருவன் துறக்கக் கூடாது.

B.G 18.49 :
சுயக் கட்டுப்பாடுடைய, பற்றற்ற, மற்றும் எல்லா பெளதிக சுகத்தையும் புறக்கணிக்கக்கூடிய ஒருவன், துறவைப் பயிற்சி செய்வதால், ‘கர்ம விளைவுகளிலிருந்து விடுதலை’ என்னும் மிகவுயர்ந்த பக்குவநிலையை அடைகிறான்.

B.G 18.50 :
குந்தியின் மகனே, இந்த பக்குவத்தை அடைந்தவன், பிரம்மன் எனப்படும் ஞானத்தின் மிகவுயர்ந்த நிலையினை, திவ்யமான பக்குவநிலையினை எவ்வாறு அடைய முடியும் என்பதை நான் தற்போது சுருக்கமாக கூறுகிறேன், இதனை என்னிடமிருந்து கேட்பாயாக.

B.G 18.51 – 18.53 :
தனது புத்தியினால் தூய்மையடைந்து, உறுதியுடன் மனதைக் கட்டுப்படுத்தி, புலனுகர்ச்சிப் பொருள்களைத் துறந்து, விருப்பு வெறுப்பிலிருந்து விடுபட்டு, தனியிடத்தில் வாழ்ந்து, குறைவாக உண்டு, உடல், மனம் மற்றும் பேச்சினைக் கட்டுப்படுத்தி, எப்போதும் தியானத்தில் ஆழ்ந்து, பற்றுதலின்றி, அஹங்காரம், பொய்யான வலிமை, பொய்யான பெருமை, காமம், கோபம் மற்றும் ஜடப் பொருள்களை ஏற்பதிலிருந்து விடுபட்டு, உரிமை உணர்வின்றி, அமைதியாக இருக்கும் மனிதன், தன்னுணர்வின் நிலைக்கு நிச்சயமாக உயர்த்தப்படுகின்றான்.

B.G 18.54 :
இவ்வாறு தெய்வீகமாக நிலைபெற்றவன், உடனடியாக பரபிரம்மனை உணர்ந்து இன்பம் நிறைந்தவனாகின்றான். அவன் என்றும் கவலைப்படுவதில்லை, எதையும் அடைய வேண்டும் என்று விரும்புவதுமில்லை. எல்லா உயிர்வாழிகளிடமும் அவன் சமநோக்கு கொள்கிறான். அத்தகு நிலையில் அவன் எனது தூய பக்தித் தொண்டை அடைகின்றான்.

B.G 18.55 :
பக்தித்தொண்டால் மட்டுமே என்னை, முழுமுதற் கடவுளாக, உள்ளது உள்ளபடி, அறிந்துகொள்ள முடியும். என்னைப் பற்றிய முழுமையான உணர்வை அத்தகு பக்தியினால் அடையும்போது, இறைவனின் திருநாட்டிற்குள் நுழைய முடியும்.

B.G 18.56 :
எல்லாவிதமான செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், எனது தூய பக்தன், எனது பாதுகாப்பின் கீழ், எனது கருணையால், நித்தியமான அழிவற்ற இடத்தை அடைகிறான்.

B.G 18.57 :
எல்லாச் செயல்களிலும் என்னையே சார்ந்து, எனது பாதுகாப்பின் கீழ் எப்போதும் செயல்படுவாயாக. இத்தகு பக்தித் தொண்டில் என்னைப் பற்றிய உணர்வில் ஆழ்ந்துவிடு.

B.G 18.58 :
நீ என்னைப் பற்றிய உணர்வில் நிலைபெற்றால், எனது கருணையின் மூலம், கட்டுண்ட வாழ்வின் எல்லாத் தடங்கல்களையும் கடந்துவிடுவாய். ஆனால், அத்தகு உணர்வின்றி, அஹங்காரத்துடன், நான் சொல்வதைக் கேட்காமல் செயல்பட்டால், நீ அழிந்துவிடுவாய்.

B.G 18.59 :
நீ எனது வழிகாட்டுதலின்படி போரிட வேண்டும்; இல்லையேல் தவறாக வழிநடத்தப்படுவாய். உனது இயற்கையின்படி நீ போரில் ஈடுபட வேண்டியவனே.

B.G 18.60 :
மயக்கத்தின் காரணத்தால் எனது வழிகாட்டுதலுக்கு ஏற்ப செயல்பட நீ மறுக்கின்றாய். ஆனால், குந்தியின் மகனே, உனது சுபாவத்தினால் வற்புறுத்தப்பட்டு, நீ அதன்படியே செயல்படுவாய்.

B.G 18.61 :
ஓ அர்ஜுனா, ஜட சக்தியால் செய்யப்பட்ட இயந்திரத்தில் அமர்ந்துள்ள எல்லா உயிர்வாழிகளின் பயணங்களையும், அவரவர் இதயத்தில் வீற்றுள்ள முழுமுதற் கடவுளே வழிநடத்துகின்றார்.

B.G 18.62 :
பரத வழித் தோன்றலே, அவரிடம் முழுமையாக சரணடைவாயாக. அவரது கருணையால் தெய்வீக அமைதியையும், உன்னதமான நித்திய இடத்தையும் நீ அடைவாய்.

B.G 18.63 :
இவ்வாறு இரகசியமானதைக் காட்டிலும் மிகவும் இரகசியமான ஞானத்தை உனக்கு நான் விளக்கியுள்ளேன். இதனை முழுமையாக கவனமாகச் சிந்தித்து, நீ செய்ய விரும்புவதைச் செய்.

B.G 18.64 :
நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பன் என்பதால், என்னுடைய அறிவுரைகளில் மிகவும் உன்னதமான, எல்லாவற்றிலும் மிகமிக இரகசியமான ஞானத்தை நான் உனக்குக் கூறுகின்றேன். இஃது உனது நன்மைக்காக என்பதால் என்னிடமிருந்து கேட்பாயாக.

B.G 18.65 :
எப்போதும் என்னைப் பற்றி நினைத்து, எனது பக்தனாக ஆகி, என்னை வழிபட்டு, உனது வணக்கங்களை எனக்கு சமர்பிப்பாயாக. இவ்வாறு நீ என்னை வந்தடைவாய் என்பதில் ஐயமில்லை. நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பன் என்பதால், இந்த சத்தியத்தை நான் உனக்கு அளிக்கின்றேன்.

B.G 18.66 :
எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே.

B.G 18.67 :
இந்த இரகசிய ஞானம், தவமில்லாதவருக்கோ, பக்தியில்லாதவருக்கோ, பக்தித் தொண்டில் ஈடுபடாதவருக்கோ, என் மீது பொறாமையுள்ளவருக்கோ ஒருபோதும் விளக்கப்படக் கூடாது.

B.G 18.68 :
இந்த பரம இரகசியத்தை எனது பக்தர்களிடம் விளக்குபவனுக்கு, தூய பக்தித் தொண்டு உறுதிப்படுத்தப்படுவதோடு, அவன் இறுதியில் நிச்சயமாக என்னிடம் திரும்பி வருகின்றான்.

B.G 18.69 :
அவனைவிட எனக்கு பிரியமான தொண்டன் இவ்வுலகில் யாரும் இல்லை. அவ்வாறு அவனைவிட பிரியமானவனாக யாரும் ஆகவும் முடியாது.

B.G 18.70 :
மேலும், நமது இந்தப் புனிதமான உரையாடலைக் கற்பவன், தனது அறிவால், என்னை வழிபடுவான் என்று நான் அறிவிக்கின்றேன்.

B.G 18.71 :
மேலும், நம்பிக்கையுடனும் பொறாமையின்றியும் இதனை யாரொருவன் கேட்கின்றானோ, அவன் பாவ விளைவுகளிலிருந்து விடுபட்டு, புண்ணியம் செய்தவர்கள் வாழும் மங்களகரமான லோகங்களை அடைகின்றான்.

B.G 18.72 :
பிருதாவின் மகனே, செல்வத்தை வெல்வோனே, நீ இதனை கவனமான மனதுடன் கேட்டாயா? உனது அறியாமையும் மயக்கமும் தற்போது நீங்கிவிட்டதா?

B.G 18.73 :
அர்ஜுனன் கூறினான்: எனதன்பு கிருஷ்ணரே, வீழ்ச்சியடையாதவரே, எனது மயக்கம் தற்போது நீங்கிவிட்டது. தங்களது கருணையால் நான் எனது நினைவை மீண்டும் பெற்று விட்டேன். எல்லா சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டு, நான் தற்பொழுது உறுதியுடன் உள்ளேன், தங்களது உபதேசங்களின்படிச் செயல்பட தயாராக உள்ளேன்.

B.G 18.74 :
சஞ்ஜயன் கூறினான்: இவ்வாறு, கிருஷ்ணர், அர்ஜுனன் என்னும் இரு மஹாத்மாக்களுக்கு இடையிலான உரையாடலை நான் கேட்டேன். அதன் அற்புதமான விஷயங்களினால் எனக்கு மயிர்கூச்சம் ஏற்படுகின்றது.

B.G 18.75 :
வியாசரின் கருணையால், யோகங்களின் இறைவனான கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தாமே நடத்திய இந்த மிகமிக இரகசியமான உரையாடலை நான் நேரடியாகக் கேட்டேன்.

B.G 18.76 :
மன்னனே, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்குமிடையில் நடந்த இந்த அற்புதமான புனித உரையாடலை மீண்டும் மீண்டும் நினைத்து, ஒவ்வொரு கணமும் உணர்ச்சிவசப்பட்டு நான் இன்பமடைகின்றேன்.

B.G 18.77 :
மன்னனே, பகவான் கிருஷ்ணருடைய அந்த அற்புத ரூபத்தை நினைத்து நினைத்து, நான் மேன்மேலும் வியப்பில் மூழ்கி, மீண்டும் மீண்டும் இன்பமடைகிறேன்.

B.G 18.78 :
யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்கின்றாரோ, உன்னத வில்லாளியான அர்ஜுனன் எங்கெல்லாம் இருக்கின்றானோ, அங்கெல்லாம் நிச்சயமாகச் செல்வமும் வெற்றியும் அசாதாரணமான வலிமையும் நியாயமும் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare